Monday, 15 January 2018

பொங்கல் நினைவுகள் - அபுனைவு - 4

பொங்கல் நினைவுகள்
எனக்கு விவரம் தெரிந்து, விவசாயிகளான எங்கள் குடும்பத்தில் தீபாவளி, பொங்கல் கொண்டாடாத ஆண்டு இல்லையென்றே கூறிவிடலாம். அப்பா 30.01. 1970 இல் இறந்து ஓராண்டுக்குள் வந்த 1971 பொங்கல் 2012.1994 இல் அம்மா இறந்ததால் 1995 பொங்கலும் தான் கொண்டாடப்படாமல் தவிர்த்ததாக இருக்கும்.
1984 வரையிலும் நாஞ்சில் நாட்டிலேயே குடியிருந்தோம். அதற்குப் பின்புதான் குடும்பத்தோடு வேலூரில் குடிபுகுந்தோம்.
நான் சிறுவனாக இருந்தபோது பொங்கலுக்கு ஒன்று, ஒன்றரை மாதம் முன்பாகவே வீட்டில் பொங்கலுக்கான முன் தயாரிப்புகள் தொடங்கிவிடும். முதலில் வீடு வெள்ளையடிப்பதற்காக சுண்ணாம்பு வாங்க வடசேரி கனகமூலம் சந்தைக்குச் செல்ல வேண்டும். சந்தை வியாழன் மற்றும் ஞாயிறுகளில் மட்டுமே கூடும். சந்தையின் முன் வாயிலிலேயே
காளவாயிலிட்டு சுட்ட சுண்ணாம்புக் கற்கள் விற்பார்கள்.
எங்கள் கிராமத்திலிருந்து தோவாளை செல்லும் சாலையில் பருப்புவிளை அருகி்ல்சாலைக்கு வலது புறமாக காளவாய் ஒன்று இருந்தது. ஆனாலும் அப்பா அங்கு சென்று வாங்குவதில்லை.
சிப்பிச் சுண்ணாம்பு வாங்கி வந்து அதை ஒரு மண் தொட்டியிலிட்டு நீர் ஊற்றினாலே போதும். அது அப்படியே கொதிக்கத் தொடங்கி ஒரு மணி நேரத்துக்குள் `பாண்ட்ஸ் ஸ்நோ` மாதிரி வெண்மை நிறத்தில் மென்மையான சுண்ணாம்பு கிடைத்துவிடும். அதை நீரில் கரைத்து சுவற்றுக்கு வெள்ளை அடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
வீட்டுக்கு வெள்ளையடிப்பது என்றால் முதலில் அறைகளை ஒவ்வொன்றாகப் பொருட்களை ஒதுங்கவைத்து, ஒழித்துக் கொடுக்க வேண்டும். வாசக் கால்கள், கதவுகள் கழுவ வேண்டும். ஜன்னல் கம்பிகள் கண்ணாடிகள், மர நாற்காலிகள், மேசைகள் எல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். வெள்ளையடிப்பதற்கு இரண்டு நாட்களாகுமென்றால் அதன் பிறகும் வேலை இருந்துகொண்டேதானிருக்கும். காவிக்காக செம்மண் கொண்டு வருவதுண்டு. பழைய மண்பாண்டங்களை ஒழிப்பதற்காக புதிய மண்பாண்டங்கள் வாங்க வேண்டும். பொங்கல் பானையில் பால் பொங்கும் வரையில் பனை ஓலைத் தீ தான் போடவேண்டும். அதற்காக காய்ந்த பனை ஓலை வாங்கிவைக்கவேண்டும்.
பொங்கலுக்குப் படைப்பதற்காக காய்கறிகள் வாங்கவேண்டும். காய்கறிகளில் எதுவுமே விடப்பட்டுவிடக்கூடாது என்பதில் அப்பா மிகவும் கவனமாக இருப்பார். பொங்கல் வரும் நாளுக்கு முந்தைய சந்தை நாளில் வடசேரிக்குப் போய் இரண்டு கோணிச் சாக்கு நிறைய வாங்கி வடசேரி வண்டிப்பேட்டையில் கொண்டுபோய் வைத்துவிடுவார். அங்கிருந்து வாடகை மாட்டு வண்டியில் அன்று சாயங்காலமே வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும். பூசணிக்காய், இளவங்காய், சேனை போன்றவற்றை கூடிய வரையில்சிறிதாகப் பார்த்து வாங்குவார். பொங்கலுக்கு காய்களை முழுதாகப் படைக்காமல் சிறு துண்டு படைப்பது அப்பாவுக்குச் சம்மதமில்லை. அந்தப் பருவத்தில் கிடைக்கும் கருணை, சேம்பு, பிடிகிழங்கு, சிறுகிழங்கு, காய்ச்சிக் கிழங்கு, சீனிக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு என அத்தனை வகைகளையும் வாங்குவார். சந்தைக்குச் செல்லும் போது என்னையும் உடன் அழைத்துச் செல்வார். வாங்குகிற ஒவ்வொரு பொருளும் முழு விளைச்சலுள்ளதாக நல்ல பொருளாக இருக்கவேண்டும். மாடத்தியக்கா தான் சொல்லுவாள் “ சங்கரனுக்கு என்று எங்க தான் கிடைக்குமோ காய்கறிகள், கண்ணைப் பிடுங்கிக்கொண்டு வந்த மாதிரி” என்பாள். அப்பா விலையைப்பற்றி அதிகம் கவலைப்படமாட்டார். வியாபாரிகளிடம் அதிகம் கசடுவதுமில்லை. எப்போதும் பதிவான வியாபாரிகள் தான் இருப்பார்கள்; அநேகமாக அப்பாவுக்குத் தெரிந்த முகமாகத்தானிருப்பார்கள். விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும் போலிருக்கிறதே என்றால் அவன் சாப்பிட்டுவிட்டுப் போகட்டும், கோட்டையா கட்டிவிடுவான் என்பார்.
பொங்கலுக்கு முதல் நாளிலேயே அம்மா, பொங்கலுக்கான கோதாவரிக் குண்டு எனப்படும் வெண்கலப் பானை, சர்க்கரைப் பொங்கலுக்கான ஈயம் பூசிய பித்தளைப் பானை, வெங்கலக் கரண்டிகள், விளக்கு, சூடந்தட்டு, சாம்பிராணிப் புகை காட்டும் தூபக்கால், நிறைநாழி, தாம்பாளம் எல்லாவற்றையும் முதலில் சாணி போட்டுத் தேய்த்துக் கழுவிப் பின்னர் புளிபோட்டு விளக்கிக் கழுவியபின்னும் விரும்பிய நிறம் கிடைக்கவில்லையெனில் உமியும் சாம்பலும் கொண்டு துலக்கித் துடைத்து வைத்துவிடுவாள். பொங்கலிடும் முற்றம் மட்டுமில்லாமல் இடைவழி, பட்டாலை, இரண்டாம் கட்டு, அடுக்களை, பெரை மட்டுமில்லாமல், பின் வாசல், மாட்டுத் தொழுவம் எல்லாவற்றையும் கழுவிக் கோலமிட்டுவிடுவாள். முற்றத்தில் தேர்க் கோலம். முன் வாசலில் இதயக்கமலம். அறைகளின் நான்கு சுவர் ஓரங்களிலும் கோலத் தொடர்களால் பார்டர் கட்டப்பட்டிருக்கும். கோலம்சா எப்மிபோதுமே மாக் கோலம் தான். சுண்ணாம்புக் கரைசலிலும் கூட கோலமிடலாம். ஆனால், கையெல்லாம் பொத்துப் போகும். படங்கள் அத்தனையையும் துடைத்து, சட்டங்களில் உருக்கிய மெழுகும் எண்ணெயும் கலந்து துணியில் தோய்த்துத் தடவி புதுச் சட்டம் மாதிரி பளிச்சென்றிருக்கும்.
பொங்கல் அன்று விடிகாலை நான்குமணிக்கு அம்மாவும் அவள் தோழிகளுமாகக் குடத்துடன் குளிக்கக் கிளம்புவார்கள். கூடவே என்தங்கைகளோடு என்னையும் எழுப்பிக் கூட்டிக்கொண்டு போவார்கள். கல்லாற்றுப் பாலத்தில் வலது பக்கமிருக்கும் துறை தான் அம்மாவுக்குப் பிடிக்கும். எங்களை ஆற்றில் முக்கியெடுத்துத் தலைதுவட்டி மேல்படியில் நிற்கவைத்துவிடுவார்கள். இடுப்பில் ஈரத் துண்டுடன் கிடுகிடுவென ஆடிக்கொண்டு பல்லைக் கடித்து நின்ற அனுபவம் இப்போதும் நினைவிலிருக்கிறது. எல்லோரும் குளித்து முடித்து குடத்தில் தண்ணீரெடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்வார்கள். வந்ததுமே பொங்கலுக்கான தயாரிப்புகள் நடக்கும். அ ம்மா ஈரச் சேலையோடேயே விளக்கைக் கொண்டு வந்து முற்றத்தில் வைத்து தலைவாழை இலையை, தும்பு விளக்கின் வலப்புறம் வருமாறு பரப்பி நிறைநாழியில் கூம்பு வடிவத்திலிருக்குமாறு நெல் முகந்துவைத்து, சாணிப்பிள்ளையார் வைத்து அதற்குத் திருநீறும் பொட்டுமிட்டு, திருவிளக்குக்கும் பொட்டிட்டு, அனைத்துக் காய்களையும் கொண்டு வந்து இலையில் படைப்பார்கள்.
பொங்கலுக்கான அடுப்புக்கட்டிகள் புதிதாகச் செய்யப் பட்டிருக்கும். அப்படியே புதிதில்லாவிட்டாலும் பழைய கட்டிகளுக்கு புதிதாக வெள்ளையடித்து காவிக் கோடிட்டுப் புனிதத்தோற்றத்துடனிருக்கும். சிலர் செங்கோட்டை ஒற்றையடுப்புகளும் பயன்படுத்துவதுண்டு. எங்கள் வீட்டில் அடுப்புக்கட்டிகள் தான்.
பானைகளுக்குத் திருநீறு குழைத்து பட்டையிட்டு குங்குமப் பொட்டு இ்டுவார்கள். விளக்குக்குத் தேங்காய் உடைக்கும் போதே தண்ணீரைத் தனியே எடுத்து வைத்திருப்பார்கள். நிறைகுடத்திலிருந்து தண்ணீர் எடுத்து வெண்கலப்பானையில் தேங்காய்த் தண்ணீருடன் சேர்த்து ஊற்றி பானையை அடுப்பில் ஏற்றுவார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கான பித்தளைப் பானையில் அரிசியோடு பாசிப்பருப்பும் இட்டு அடுத்த அடுப்பில் ஏற்றுவார்கள். பானைகளில் பச்சரிசி களைந்து போட்டு பனை ஓலையில் தீ போடவேண்டும். எரிய எரிய பனை ஓலையை அடுப்பில் வைக்கும் வேலை எனக்கு. அடுப்பின் பிழம்புகளில் வெளிப்படும் வெப்பம் குளிருக்கு இதமாகவும் இருக்கும். சிறிது நேரத்தில் பால் பொங்கும். அம்மாவும் ஆச்சியும் குலவையிடுவார்கள். பால் பொங்கிய பின் விறகுத்தீதான் நிதானமாக எரியவேண்டும். சர்க்கரைப் பொங்கல் பானையில் சர்க்கரை சேர்ப்பார்கள். பாலும் நெய்யும் சேர்ப்பதுண்டு.
பொங்கல் தயாராவதற்குள் ஊறவைத்த பச்சரிசி, பாசிப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து காப்பரிசி கலந்து விளக்கு முன் படைப்பார்கள். பொங்கல் தயாரானதும் இறக்கி மஞ்சள் குலை கட்டி விளக்கு முன் வைப்பார்கள்.
பின் படையல் தயாரிக்க வேண்டும். வாழை இலையில் ஒரு அகப்பை பொங்கல், ஒரு அகப்பை சர்க்கரைப் பொங்கல், பழத்தை உரித்து ஒரு துண்டு, தேங்காய் துருவலில் சிறிது வைப்பார்கள். அது போல ஐந்து படையல்கள் செய்வார்கள். அத்தோடு விளக்குக்கு பூஜை. கற்பூர தீபம், சாம்பிராணி அனைத்தும் விளக்கு முன்பும் காட்டிப் பின் சூரியனை நோக்கியும் காட்டுவார்கள். ஆச்சி குலதெய்வமான சுடலைமாடனைக் கூப்பிடுவாள். அத்துடன் பூஜை முடிந்தது. ஒவ்வொருவராக வந்து சாமி கும்பிட்டு திருநீறு பூசிக்கொள்ளவேண்டும். ஆச்சி `என் குடும்பத்தை நல்லபடியா வையப்பா, சுடலை மாடா, இந்த வருசமும் வழக்கம் போல உன் ஊருக்கு வந்து பொங்கலிடுகன்` என்று சொல்லிக் கும்பிடுவாள்.
அடுத்து படையலில் ஒன்றை எடுத்து காக்காய்க்கு வைத்து அழைப்பார்கள். அது உடனேயே வந்துவிடும். இன்னொரு படையலைக் கொண்டு போய் தொழுவில் மாட்டுக்குக் கொடுப்பார்கள்.
காப்பரிசி, படையலில் மிச்சமிருப்பதை எங்களுக்குத் தருவார்கள். அடுத்தாற்போல் காலைச் சாப்பாட்டுக்காக அம்மா சிறுபயற்றம்பருப்புத் துவையலும் தேங்காய்த் துவையலும் அம்மியில் அரைப்பார்கள். வெண்பொங்கல் சோற்றில் முதலில் சிறுபயிற்றம்பருப்புத் துவையல் போட்டு கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிட வேண்டும். அடுத்து தேங்காய்த் துவையலைப் போட்டு விரவி நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடவேண்டும். அடுத்து சர்க்கரைப் பொங்கல். அவ்வளவுதான். பொங்கல் முடிந்த து.
அன்று மதியத்துக்கு எல்லாக் காய்கறிகளும் போட்டு சாம்பார் வைப்பார்கள். கூடவே கூட்டவியல். அப்பளம்.
சாம்பாரும் அவியலும் நிச்சயமாக மிஞ்சும். மிஞ்சியதை ஒன்றாக்கி அடுப்பில் ஏற்றிச் சுண்டக்கறியாக்கிவிடுவார்கள். அது கிடக்கும் நான்கு நாட்களுக்கு.
இந்தப் பொங்கலுக்கு மகன், மருமகள், பேரன், மகள், மருமகன் பேத்தி எல்லோரும் வந்திருக்கிறார்கள். இனிமையான பொங்கல்.
மதியத்துக்கு சாம்பார், அவியல், ஊரிலிருந்து கொண்டுவந்த மரச்சீனிக்கிழங்கு அப்பளம், வற்றல்.
அம்மாவும் அப்பாவும் தான் இல்லை. அவர்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கிறார்களே.
முகநூல் பதிவு 14 .01.2018   விருப்பம் 193 பகிர்வு 6 

Saturday, 13 January 2018

சங்க இலக்கியத் துளிகள் - 11

சங்க இலக்கியத் துளிகள் - 11
மயங்காதே தோழி
கற்பிடைப் பிரிவு ; தலைவன் வினைமேற்செல்லும் போது, கார்காலத்தில் வந்துவிடுவேன், அதுவரை பொறுத்திருப்பாயாக, எனச் சொல்லிச் சென்றான். கற்புத் தலைவியும் அவன் சொற்படி ஆற்றியிருக்கிறாள்.
திடீரென மேகங்கள் ஒலித்து மழை பெய்கிறது; கார்கால மழையைக் கண்டமயிலினம் அகவி ஆலுகிறது; பிடவமும் பூக்கிறது. தலைவன் சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டதே, தலைவனை இன்னும் காணோமேயென தலைவி உள்ளுக்குள் படபடக்கிறாள். இதைக் கண்ணுறும் தோழி
“ தோழியே, நீ வாழ்வாயாக; இடிமுழக்க மழையைக் கண்டு மயில்கள் ஆடி அகவியதோடு பிடவம் பூக்கவும் செய்தன; உண்மையில் இப்போது மழையைப் பெய்த மேகங்கள் நம்நாட்டுக்குரியவை இல்லை; அவை கடந்த மாரியில் கொட்ட மறந்த பழைய நீரைக் கொட்டிவிட்டு, புது நீரை முகந்துகொள்ள வந்த அயலின நொதுமல் மேகங்கள்; இது தெரியாத மயில்கள் ஆலவும் பிடவம் பூக்கவும் செய்துள்ளன. உண்மையில் இது கார்காலமன்று. தோழியே நீ கலங்காதிருப்பாயாக என்று ஆற்றுவிக்கிறாள்.
பாடல் :
மடவ வாழி - மஞ்ஞை மா இனம் காலமாரி பெய்தென, அதன் எதிர் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; கார் அன்று - இகுளை! - தீர்க உன் படரே! கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் புதுநீர் கொளீஇய, உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.
- இடைக்காடன், குறுந்தொகை 251. (முல்லை)
எப்படியிருக்கிறது பாருங்கள்; புலவன் தோழி மீது ஏற்றிய கற்பனைப் புனைவு.
கார்காலத்தின் முதல் மழை பெய்கிறது. அதைக் கண்டு மயில் ஆடுகிறது. கார்காலப் பிடவம் பூக்கிறது.
தோழி சொல்கிறாள், அந்த மழை உண்மையான கார்கால மழை இல்லையாம்; மழையைக் கொட்டிய மேகங்கள் அவர்கள் நாட்டு மேகங்கள் அல்லவாம்; அவை வேற்று நாட்டு மேகங்களாம்! அதுவும் எப்படி? சென்ற கார்காலத்தில் கொட்டியிருக்க வேண்டிய நீரைக் கொட்டாமல் ஒளித்து வைத்திருந்ததாம்; புதிய நீரை மொண்டுகொள்வதற்காக பழைய நீரை ஒழிக்கவேண்டுமல்லவா? அதனால் அப்பழைய நீரை, அதற்குச் சொந்தமான நாட்டில் கொட்டாமல் இவர்கள் நாட்டில் கொண்டு வந்து கொட்டியனவாம்; இது தெரியாமல் ஆடிய மயிலும் பூத்த பிடவமும் அறியாமை மிக்கனவாம்.
அஃதாவது, தலைவன் என்று வருகிறானோ, அன்றுதான் கார்காலம் தொடங்கும்.

மருத மரம் மீது கொண்ட நேசம் - அபுனைவு - 3

மருத மரம் மீது கொண்ட நேசம்

மினுமினுப்புடன் கூடியவொரு வெண் சாம்பல் நிறம்: குறுகிய வளைவுடனான நீள்சதுரப் பசுமை இலைகள், கண்கவரும் கருஞ்சிவப்புத் தளிர்கள்; அடிப்பாகத்தில் திமிசுக் கட்டையின் எஃகுச் சட்டம் போல, திடமாகப் படர்ந்து ஓங்கி வளர்ந்து முதிர்ந்தாலும், இளமைத் தோற்றத்துடன் நிமிர்ந்து நிற்கும் மருத மரங்களைப் பார்த்ததுமே மகிழ்ச்சி ஊற்றெடுத்து, வாழ்வின் மேல் தீரவே தீராத ஒரு பற்றுணர்ச்சி மேலிடுகிறது. மரங்கள் எல்லாமே அழகுதான். சமமான தகுதி கொண்டோரிலும் முதல் நபர் (First among the equals) என்றொரு கருத்து பொது நிர்வாக நடைமுறையிலுள்ளதைப் போல, மரங்களில் மருதமரம் எனக்கு முதன்மையானதாகத் தெரிகிறது. சங்ககால நக்கீரரால் திருமருது என அடைமொழியிட்டுச் சிறப்பிக்கப்பட்ட இம்மரத்தின் பட்டை, இலை பூ, காய் எல்லாமே மருத்துவ குணமுடையவை. வேம்பின் நிழல் போலவே மருதின் நிழலும் மகிழுணர்வைத் தருவது.
விக்கிரமசிங்கபுரம் – பாபநாசம் சாலையில் சந்தன மாரியம்மன் கோவில் நிறுத்தம் அடுத்த வாய்க்கால் பாலம் தாண்டியதுமே மருத மரங்களின் ஆட்சி தொடங்கிவிடும். அங்கிருந்து பாபநாசம் கோவில் வரையிலான இரண்டு கி.மீ தூரத்துக்கு இருமருங்கிலும் மருதமரங்கள் தாம். வெயில் நுழைய முடியாது. சோம்பேறி மடம் என்று நாங்கள் பெயர் வைத்த சாமியார் மடம் அருகில் மருதநிழலில் ஒரு சுமைதாங்கி இருக்கும். அதன் பக்கத்தில் எங்கள் தாத்தாவுக்கு ஒரு நெல் வயல் இருந்தது. அறுவடை மற்றும் விவசாய காலங்களில் மதினி, தம்பியுடன் தாத்தாவுக்கு உணவு கொண்டு செல்வதும், அவர் சாப்பிட்டுவிட்டு, போணிச்சட்டியைத் திருப்பித் தரும் வரை சுமைதாங்கியில் ஏறியும் குதித்தும் விளையாடி மருத மர நிழலை அனுபவித்த காலங்கள் என்றும் பசுமையானவை.
வீட்டிலிருந்து பாபநாசம் ஆற்றுக்குத் தினமும் நடந்தேதான் மருத மரங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே குளிக்கச் சென்று திரும்புவது வழக்கம். மருத மரங்களில் கிளிகள் கூட்டம் கூட்டமாக வாழும். அவை எழுந்து படபடவெனப் பறந்து மீண்டும் அமரும் ஒலியும், அவை பேசிக்கொள்ளும் மொழியும் அற்புதமானவை. அடிப்பாகத்தில் திண்டு திண்டாக நீண்டிருக்கும் முண்டு முடிச்சுகளின் மீது கூட ஆடுகள் வாக்காக ஏறி நின்று தளிர்களை மேயும். அப்போதிருந்தே மருத மரங்களைக் கண்டதும் மகிழ்ச்சிகொள்வதென்பது பழக்கமாகிப் போனது.
பேருந்துப் பயணங்களின் போது மருத மரங்களைக் கண்டதுமே ஒரு புத்துணர்வு கொள்வதுண்டு. கல்லிடைக் குறிச்சி பாலத்திலிருந்து அம்பாசமுத்திரம் கனடியன் கால்வாய்த் திருப்பம் வரையிலான சாலையின் இருமருங்கும் பெரும்பெரும் வெள்ளித்தூண்கள் நட்டு பச்சை விதானமைத்தது போன்ற தோற்றம். சாலையின் வலது புறம் விரிந்து கிடக்கும் நெல்வயல்களின் நடுவில் பெரிய கோவில் என்றழைக்கப்படும் காசி விசுவநாதர் கோவிலும் தாமிரப்பரணிப் படுகையும் கண்கொள்ளாக் காட்சி. பேருந்து அச்சாலைக்குள் நுழைந்ததுமே நாமும் அகன்றுவிரிந்து காற்றோடு காற்றாய்க் கலந்து பிரபஞ்சமெங்கும் பரவிநிற்பது போல ஒரு மகிழுணர்வில் மனம் மிதக்கத்தொடங்கிவிடும்.
அம்பாசமுத்திரம், மேலப்பாளையம் கீழரதவீதியில் சித்தியின் வீடு. 70 – 72 ல் அங்குதான் வாசம். வீட்டிலிருந்து மிகக்குறைந்த நடைதூரத்திலேயே ரயில்வே பாலம்; உயர்ந்த மேடான கரைகளின் நடுவே, அகன்று விரிந்து, பாறைகளை மூழ்கடித்தும் தாவியும் சுழித்தும் ஓடும் தாமிரபரணியின் இடது கரையில் வானத்து மேகங்களைத் தடுத்தே தீர்வேனெனச் சவால் விட்டு ஓங்கி நிற்கும் மருத மரங்கள்; மரங்களில் தாவும் குரங்குக் கூட்டம். ஆற்றின் இடது கரையில் ஆள் அரவமில்லாத ஒரு சிறிய பிள்ளையார் கோவில். கோவிலைச் சுற்றியிருக்கும் புல்வெளியில் பெரிய பெரிய கீரிப்பிள்ளைகள். தண்ணென்ற காற்று; அமைதி; மனதுக்குள் பேரமைதியைத் தந்தன மருத மரங்கள்; இப்படித்தான் இளமைக் காலம் அங்கே இயற்கையோடு இயற்கையாக, மருதமரங்களோடு கழிந்தது.
பயணங்களின் போதெல்லாம் மருத மரங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. வேலூர் விழுப்புரம் சாலையில் ஆரணி அருகில் ஒரு மருதமரம் கண்ணில் படும். அதைவிட்டால் திருநெல்வேலி நகருக்குள் தான். கீரிப்பாறை செல்லும் வழியில் நாவல் காடு அருகில் மருத மரமொன்று என்னிடம் நலம் விசாரிக்கும்.
நம் முன்னோர்கள் நட்டு வளர்த்தார்கள்; இப்போது மருத மரம் நட்டு வளர்க்க யாருக்கும் ஆர்வமில்லை. நதியே பாழ்பட்டு அலங்கோலமாகக் காட்சியளிக்கும் போது மருதமரங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு எங்கே இடமிருக்கிறது?
Image may contain: tree, plant, sky, outdoor and nature
Image may contain: plant, nature and outdoor
Image may contain: plant, tree, outdoor and nature
Image may contain: tree, plant, sky, outdoor and nature





மு

Thursday, 11 January 2018

சங்க இலக்கியத் துளிகள் - 10.

சங்க இலக்கியத் துளிகள் – 10 

தூக்கணாங்குருவிக் கூட்டுக்கு மயங்காதாரும் உளரோ! 

களவுக் காதல்; தலைவியின் ஊர் வாய்க்கு வந்தபடி அலர் பேசுகிறது. தக்க சமயத்தில் தோழி, தலைவியின் பெற்றோருக்குக் தலைவியின் காதலைத் தெரிவித்து அறத்தொடு நிற்கிறாள். காதல் விவரம் வெளிப்படத் தெரிந்ததும் தலைவன் தமரோடு வந்து தலைவியின் பெற்றோரிடம் பெண் கேட்கிறான். இந்த நல்லதொரு திருமணத்தைச் செய்து வையுங்களென ஊர் ஒன்றுபட்டுச் சொல்கிறது. முன்னர் அலர் பேசிய அதே ஊர் இப்போது நன்றுபுரி கொள்கையென ஒன்றுபட்டு நிற்பதை தூக்கணாங்குருவிக் கூடுகளை விடவும் அதிகமாக மயக்கம் தருவதான ஊர் என தோழி தலைவிக்கு தெரிவிக்கிறாள்.
பாடல் :
எந்தையும் யாயும் உணரக் காட்டி, 

ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், 
மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப, 
நன்றுபுரி கொள்கையின் ஒன்றாகின்றே – 
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ, 
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த 
கூடினும் மயங்கிய மையல் ஊரே. 

- உறையூர்ப் பல்காயனார் (குறுந்தொகை, குறிஞ்சி, 374)

இப்பாடல் நமக்குத் தரும் செய்திகள்
1. களவுக் காதல் என்றதுமே ஊர் திரண்டு அலர் பேசுகிறது.
2. உரிய முறைப்படி பெண் கேட்டு வந்ததும் ஊர் ஒன்றுபட்டு திருமணம் செய்விக்கவேண்டுமென்ற நல்ல கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
3. அறம் சார்ந்த செயலுக்கு ஆதரவளிக்கும் ஊரின் பொது இயல்பு.
4. பெண் பனையில் தூக்கணாங் குருவிகள் கூடுகள் கட்டுவதுண்டு. அக்கூடுகள் வியப்பானவைதாம்; அவற்றை விடவும் ஒன்றுபடும் ஊரின் இயல்பு அதிக வியப்புக்குரியது.

வலம்புரிச் சங்கினைக் கண்டதும் ஒரு புலவருக்கு தூக்கணாங் குருவிக்கூடு நினைவுக்கு வருகிறது.
தூக்கணங்குரீஇத் தொங்கு கூடு ஏய்ப்ப ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி (வரி 11 மற்றும் 12) புறம் 225 - ஆலத்தூர் கிழார் 


Image may contain: plant, sky, outdoor and nature  

முகநூல் பதிவு நாள் ஜனவரி 8, 2018. விருப்பம் 59, பகிர்வு 12, பின்னூட்டம் 15. 

Tuesday, 2 January 2018

சங்க இலக்கியத் துளிகள் -9



 சங்க இலக்கியத் துளிகள் - 9
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை 
நீ இனிது முயங்குமதி, காதலோயே.
-அம்மூவனார், 148, ஐங்குறுநூறு, நெய்தல் – ஞாழற்பத்து
உரை : காதல் மிக்க தோழியே! மணற்பரப்பில் நிற்கும் ஞாழல் மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையின் விரிந்த மலர்கள் இனிதே மணம் பரப்புகிற கடல் துறையினைக் கொண்ட தலைவனை இனி நீ நின் விருப்பப்படியே இனிது தழுவி இன்புறுவாயாக.
கூற்றும் விளக்கமும் - களவில் கலந்து, அலர் பரவிப் பல்வேறு இடையூறுகளை அனுபவித்து, இனி என்னாகுமோவெனப் பயந்திருந்த காலத்தில் இரு தரப்புப் பெற்றோர் சம்மதிக்க, மணச் சடங்கு முடிந்து, மணநாளின் இரவில் மணமக்கள் இருவரையும் தனித்திருக்கச் செய்கையில் தோழி, தலைவிக்குக் கூறுவதான கூற்று.
உரைவிளக்கம் : `ஊரறியச் சான்றோர் முன்னிலையில் தலைவனோடு மணமுடித்து ஒன்றுபட்டமையின் முன் களவுக்காலத்தில் நெஞ்சத்தை அலைத்த அச்சத்தின் சுவடு ஏதுமின்றி நின் கணவனைத் தழுவி இன்புறுவாயாக` என்று தோழி வாழ்த்தினாள் என்க. நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சியாதலின் ஐயத்திற்கும் அச்சத்திற்கும் சிறிதும் இடமில்லையாதலை அறிக.
களவுக்காலத்துப் புணர்ச்சியிலும் காதல் உண்டெனினும் அதில் அச்சமும் உண்டென்பதால் அக்காதலாற் பெறும் இன்பம் முழுமையன்றாதலின், இப்போது அச்சமற்ற முழுமையான இன்பத்தைப் பெறுவாயாக என்னும் பொருளில் `இனிது முயங்குதி` என்றாள்.
எளிய கவிதை; `இனிது முயங்குதி` என்ற இரண்டே சொற்களில் எத்துணைக் கனத்தை ஏற்றி, பெரும் மனப்பாரம் இறங்கிய கதையை, உளவியல் நிலைகளைச் சொல்லிச் சென்ற எம் முன்னோரின் தனித்திறம் இன்றும் பெருமைக்குரியதுதான்.

எளிதாக ஒரு புளிக்கறி - அபுனைவு - 2

எளிதாக ஒரு புளிக்கறி
அம்மா இறந்து (20.12.94) இருபத்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அவளது வாசம் கணமேனும் நெஞ்சை விட்டகலுவதில்லை. அம்மா கைப் புளிக்கறிக்குத் தனிமணம்.
இந்தப் புளிக்கறி நாஞ்சில் நாட்டுப் பேச்சு வழக்கில் புளிக்கேரி, புளிக்காரி என உருமாறும். ’வெறுங்குழம்பு` என்றும் சொல்வதுண்டு என இணையப்புள்ளிகள் சிலர் பதிவுசெய்திருக்கின்றனர்.. நெல்லைச் சீமையில் வெள்ளைக்கறி என்றும் வெள்ளைக் குழம்பு என்றும் அறியப்படுகிறது. நாஞ்சில் நாடு அளவுக்கு நெல்லையில் இக்குழம்பு பிரபலம் இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பயன்பாட்டிலுள்ளது. இராமநாதபுரம், மதுரை, செட்டிநாடு, நடுநாடு, கொங்குநாடு, தொண்டைநாடு மற்றும் உணவு மண்டலங்களில் இதன் சிறப்பு பற்றி அதிகமாக அறியப்படவில்லையென்றே அறிக்கைப் பதிவுகள் கூறுகின்றன.
மற்ற குழம்பு வகைகளைப் போலில்லாமல் எல்லாக் காய்களுக்கும் பொருந்திப் போவதும் அதில் சேர்க்கப்பட்டிருக்கின்ற காயின் தனிச்சுவை, மணத்தினை மகிமைப்படுத்துவதுந்தான் புளிக்கறியின் தனிச்சிறப்பு. காய்களை ருசித்து அதிகமாகச் சாப்பிடுவதற்கு இந்தக் குழம்பில் சேர்த்துச் சமைப்பதுதான் ஆகச் சிறந்த வழி என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. சாம்பாராவது பரவாயில்லை, புளிக்குழம்பு, வத்தக்குழம்பு, காரக்குழம்பு, மோர்க்குழம்பு, குருமாக்குழம்பு போன்றவற்றிலுள்ள காய்கள் சுவையாகவேயிருந்தாலுங்கூட குறைவாகவே உண்ண முடியும். ஆனால், புளிக்கறிக் காய்களை ஒரு வெட்டு வெட்டலாம், திகட்டுவதில்லை. அடுத்து, நாஞ்சில் நாட்டு கட்டிச் சம்பா சிவப்பு, வாசறுமுண்டான் வெள்ளை, செந்தி, அறுபதாங் குறுவை, பனங்குறுவை, டொப்பி, பிற்கால அறிவியல் கண்டுபிடிப்புகளான ஐ.ஆர் 8, 20, நெல்லையின் ஆனைக்கொம்பன், சிறுமணி, முகவையின் மிளகி, இறங்கான், ஆற்காட்டுக் கிச்சிலி, பொன்னி, சீரகச்சம்பா, நியாயவிலைக்கடை ரப்பர் என மொக்கையோ, சன்னமோ, சிவப்போ வெள்ளையோ, பழுப்போ, புழுங்கலாக இருந்தால் அதற்கும் இந்தப் புளிக்கறி ஒத்துப் போகும். பச்சரிசி, பொங்கல் சாதத்துக்குச் சரிப்படுவதில்லை. பழைய சாதத்துக்கோ மிகவும் பொருத்தம். அதிலும் மிளகாய்ப்பச்சடியும் கூடவேயிருந்தால், ஊன்துவை அடிசில் கூட அதன் பக்கத்தில் வரமுடியாது. புளிக்கறியின் செய்முறையோ மிகமிக எளிது. புளிக்கறியைப்பற்றிப் பேசுவதென்றால் பேசிக்கொண்டேயிருக்கலாம். சரியான ஆள் மட்டும் கிடைத்து விட்டால், நமக்குள் உறைந்துகிடக்கிற எந்தச்சுவையாக இருந்தாலும் அதைப் பேசிக்களிப்பது தனி சுகமே.
புளிக்கறிக்கு ஏதாவது ஒரு ஒற்றைக்காய் சேர்ப்பதுதான் உத்தமம். முருங்கைக்காய், கீரைத் தண்டோடு மாங்காய் கூட்டு சேரும் தான்; இப்போதைக்கு ஒற்றைக்காய்ப் புளிக்கறியை மட்டும் பேசுவோம். மொந்தன் வாழைக்காய், கத்திரி, வழுதுணை, வெண்டை, சீனியவரை, கோழியவரை, பாடவரை, சதுர அவரை, வெள்ளைப் பூசணி அல்லது கல்யாணப் பூசணி என்றும் அழைக்கப்படுகிற தடியங்காய் ( நாஞ்சில் நாட்டு இளவன் காய்), மஞ்சள் பூசணி, புடலங்காய், வெள்ளரிக்காய் (வேலூர் கீரைக்காய்) சுரைக்காய், தக்காளிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முஷ்டைக்கீரை, தண்டங்கீரை, கீரைத் தண்டு, வாழைத் தண்டு, மாங்காய், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, காய்ச்சிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சக்கை என்ற பலாக்காய், பிடிகிழங்கு என எந்தக் காய் கிடைக்கிறதோ அதை புளிக்கறிக்குப் பயன்படுத்தலாம். பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்துள்ள காரட், பீன்ஸ், முள்ளங்கி, நூல்கோல், சௌசௌ, டர்னிப், ப்ரக்கோலி போன்றவற்றையுங்கூட சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாகக் காய்களை ஒன்று அல்லது ஒன்றரை செ.மீ கனசதுரங்களாக வெட்டிக்கொள்வது பொருத்தம். முருங்கைக்காய், கீரைத்தண்டு போன்றவற்றை இரண்டு அல்லது மூன்று செ.மீ நீளத்துக்கு வெட்டிக்கொள்ளலாம். தண்டங்கீரையை வேர்ப்பகுதியை மட்டும் கழித்துவிட்டு தண்டோடோ அல்லது தனியாகக் கீரை மட்டுமோ அரிந்து கொள்ளலாம். முருங்கைக் கீரையை முடிந்தமட்டில் காம்புகள் இல்லாமல் தனித்தனியாக உருவிக்கொள்ளவேண்டும். வாழைத் தண்டெனில் வட்டு வட்டாகச் சீவி நாரெடுத்துப் போடலாம். வட்டுகள் பெரிதாக இருந்தால் அரைவட்டுகளாக ஒடித்துப் போடலாம். சீனியவரைக் காயெனில் முழுதாகப் போட்டு வேகவைத்துப் பின்னர் காம்புகளைக் கிள்ளி, இருபக்க நாரும் உரித்துப் போடவேண்டும். கைவசமுள்ள காயை முதலில் கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக இரண்டு சிட்டிகை உப்பு சேர்த்து வேகப் போட்டுவிடலாம். கொஞ்சமாக மஞ்சள்பொடி கூடச் சேர்த்துக்கொள்ளலாம். கிழங்கு வகையெனில் கொஞ்சம் புளி சேர்த்து அதன் அரிப்புத்தன்மையைப் போக்கிவிடலாம். வெண்டை(நாடன் வெண்டை காணாமற்போனது மிகப்பெரிய இழப்பு), பீர்க்கு, பூக்கோசு, முள்ளங்கி, நூல்கோல், ப்ரக்கோலி போன்றவையெனில் முதலில் எண்ணெயில் அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கிய பின்பு தண்ணீர் ஊற்றி வேகவைப்பதே நல்லது. அரைமுறி தேங்காய் (அதாவது முழுத்தேங்காயில் பாதியிலும் பாதி) (தேங்காய், தேங்காயெண்ணெய் சேர்க்கக்கூடாதென்ற துரோகக்குறிப்புகளை, அவியல் மற்றும் புளிக்கறிக்கு மட்டும் விதிவிலக்காகக்கொண்டு, ஒதுக்கித் தள்ளுங்கள், கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ளலாம், அவ்வளவுதான்.) நான்கு மிளகாய் வற்றல், அரை தேக்கரண்டி, சீரகம், கால் தேக்கரண்டி வெந்தயம் மட்டும் அரைத்துக்கொள்ளலாம். கொட்டைப் பாக்கு அளவுக்கு புளி ஊறப் போடவேண்டும். புளி பழசாகிக் கறுத்ததாக இல்லாமல் வெள்ளைப் புளியாக இருந்தாலே, புளிக்கறியின் நிறமும் சுவையும் விரும்பத்தக்கதாக அமையும். அரைவையோடு தேவையான அளவு தண்ணீர், உப்பு, புளிக்கரைசலும் சேர்த்துக் கரைத்து (குழம்புக்குக் கரச்சு ஊத்தியாச்சா) இரண்டு சொட்டு எடுத்துச் சுவை பார்த்து, மீண்டும் மீண்டுமாகப் பார்த்து, தேங்காய், சீரகம், மஞ்சள் மணம் கெடாமல் நமக்குத் தேவையான சுவையளவுக்கு புளி கரைத்து, கரைத்துச் சேர்க்கலாம். புளி அதிகமானால் சேர்மானத்தின் ருசி குறைந்துவிடும். காய்களிலும் சிறிது புளிப்புச் சுவை உண்டென்பதால் புளி சேர்ப்பதில் கவனம் தேவை. இந்தக் குழம்புக் கரைசலை வேகவைத்த காயோடு சேர்த்து மீண்டும் கொதிக்கவைக்கவேண்டும். காய்கள் ஏற்கெனவே வெந்திருப்பதால் ஒரு கொதி வந்ததுமே (இதற்கு அம்மாவின் மொழியில் மகிழ்ந்து வருதல், மகுந்து வருதல் எனப்பெயர்) தீயைக்குறைத்து இரண்டு நிமிடத்தில் இறக்கி விடவேண்டும். அதிகம் கொதித்தால் கடுத்துவிடுமென அம்மா சொல்வார்கள். மூன்று அல்லது நான்கு உள்ளியைப் பொடியாக அரிந்துகொள்ளவும். வாணலியில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி தேங்காயெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை இருந்தால் அதுவும் சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை கிடைப்பதெல்லாம் அந்தக் காலத்தில் கொஞ்சம் அரிதுதான். அதனோடு அரிந்து வைத்த உள்ளியையும் பொன்னிறத்தில் வறுத்து குழம்பில் போட்டால் புளிக்கறி தயாராகிவிட்டது. தாளிப்பில் கறிவேப்பிலை சேர்க்கிறோமோ இல்லையோ, வெந்தயம் கண்டிப்பாக வேண்டும். அதன் கருகிய மணமும் மென்கசப்பும் குழம்புக்கு அவசியம் தேவை. அதற்காக அதிகம் போட்டுவிட்டால், வாயில் வைக்கமுடியாமலாகிவிடும்.
சக்கைப் புளிக்கறிக்கு சக்கையின் மேல்பகுதி முட்தோலும் கொட்டையை ஒரு உறைபோலச் சுற்றியிருக்கும் வெண்மஞ்சள் தோலையும் தவிர மீதிப்பகுதி மடல், பூஞ்சி என்ற வைக்கோல், சுளை, விதை எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் போடலாம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சுவை உண்டு. சக்கைப் புளிக்கறிக்கு தொடுகறி எதுவும் தேவையில்லை. வெறும் குழம்புச் சோறும் அதிலுள்ள கசணமும் தான். கசணம் என்றால் குழம்பில் ஊறிக்கிடக்கும் காய்களுக்கான பொதுப்பெயர். அது இடுகுறிப்பெயராகத்தான் இருக்கும். காரணப் பெயராகக்கூட இருக்கலாம். தெளிவாகத் தெரியவில்லை. அதுபற்றி ஆரய்ச்சி முடிவுகள் எதுவும் இதுகாறும் வரப்பெறவில்லை.
மஞ்சள் பூசணி, தடியங்காய், வெள்ளரிப்பழம் மூன்றையும் சேர்த்துப் புளிக்கறி செய்யலாமென ரிஷிகேஷ் நிறுவனத்தின் தலைமைச் சமையலறிஞர் ஒருவர் வாரமலர் தொடர் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்புளிக்கறிக்கு வெந்தயம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்தரைக்க வேண்டும். . அவ்வளவுதான்.
காய் எதுவுமேயில்லாமல் புளிக்கறி செய்யலாந்தான். ஆனால், இரண்டு மூன்று சின்ன உள்ளியாவது உரித்துப் போடாமல் மொட்டைக்குழம்பாக சமைப்பது வன்முறையென்றே தோன்றுகிறது. மொட்டக்கறி வைப்பது பாவமென்பாள் என் அம்மா.
புளிக்கறிக்கு தேங்காயோடு சேர்த்தரைக்கும் வெஞ்சனமாக சீரகமும், வெந்தயமும் தான். வேறெதுவும் இல்லை. இவ்வளவு குறைவான வெஞ்சனம் சேர்க்கும் குழம்புவகையாக வேறு எதுவும் இல்லையென்றுதான் நினைக்கிறேன். பிற்காலத்தில் தேங்காயைக் கொஞ்சம் குறைக்கும் முயற்சியில் சிறிதளவு விதைக் கொத்தமல்லி மற்றும் இரண்டு மூன்று உள்ளி சேர்த்தரைக்கலாமென, மகளிர் மாநாட்டில் முடிவெடுத்தார்கள். கூடவே, இஞ்சி, மிளகு, ஒரு தக்காளி சேர்த்துவிட்டால் அதற்குப் பெயர் காரக்குழம்பாகிவிடும்.
பொதுவாகவே புளிக்கறிக்கு, துவட்டல், துவரன், உப்பேரி, பொரியல், அவியல், பச்சடி, கிச்சடி, கூட்டுக்கறி, இஞ்சிக்கறி, கடலைக்கறி, பால்கறி, மசால்கறி என எல்லாத் தொடுகறியும் பொருத்தம்தான் என்றாலும் அவையெல்லாம் அதிகபட்சம்தான். ஒரே ஒரு வற்றல், அதுதான் காய்ந்த மிளகாயும் உப்புமாகச் சேர்த்தரைத்த வெறும் காணத்துவையல் (கொள்ளு) அல்லது, பயத்தம்பருப்புத் துவையல் அல்லது பொரிகடலைத்துவையலே போதுமானதென்பதுதான் பெரும்பான்மைக் கருத்தாக இருக்குமென்பது எனது தீர்க்கமான முடிவு. அரைக்கீரை அல்லது தண்டங்கீரையை சிறிது உப்பு மட்டும் போட்டு வேகவைத்து, கொஞ்சம் காயம் அல்லது இரண்டேயிரண்டு பல் பூண்டு மட்டும் போட்டுக் கடையும் கீரைக் கடைசலும் மிகப் பொருத்தமே. இந்தக் கீரைக்கடைசலோடு ஒரு துளி நெய் ஊற்றி சாதம் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினால் விரும்பிச் சாப்பிடும். அதில் ஒரு உருண்டையை நம் புளிக்கறியில் அல்லது வத்தக்குழம்பில் முக்கி உள்ளே தள்ளினால், அதுதான் தேவாமிர்தம்.
உண்மையில் புளிக்கறி நாஞ்சில் நாட்டு ஏழைவீட்டு எளிய கறிதான். ஆனாலும் அதன் சுவை பெரிது.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் புத்தகப்பையை வீட்டில் எறிந்துவிட்டு எல்லோரும் திருவாச மூட்டில் (நூலகம் முன்புள்ள மைதானம்) கூடி, என்ன விளையாட்டு, அல்லது எங்கு போகலாமென முடிவெடுப்போம். அந்தக் கூடுகைக்கு எப்போதுமே கடைசியில் வந்து சேரும் திரவியத்திடம் கேட்டால் அவன் சொல்வான். ”ஏய், பசிக்கிற மாதிரியிருந்து. அடுப்பாங்கரையில் என்னன்னு பார்த்தேன். தடியங்காப் புளிக்காரி இருந்து, தட்டத்துல சோத்தப் போட்டு, புளிக்காரிய ஊத்தி, ஒரு வெட்டுவெட்டிற்று வாரேன்” என்று நெஞ்சு நிமிர்த்திப் பேசுவான். ஒவ்வொரு நாளைக்கும் இப்படித்தான் ஏதாவதொரு கதை இருக்கும். அது கனாக்காலந்தான். வகைவகையாக சூப்புகள், சீன, இத்தாலிய கிரேவி வகைகள், பீஸ்சா, பர்கர், ஹாங்காங் காளான் கிடைக்கும் இந்தக்காலத்தில், அமாவாசைக்கும் பிற சமயச்சடங்குகளுக்கும் மூடைமூடையாக உடைத்தெறியப்படும் திருஷ்டிப் பூசணிக்காய் கொண்டு சமைக்கப்படும் தடியங்காய்ப் புளிக்கறி பற்றி முகநூலில் கதைப்பது கிருத்துருவமென்றுகூடச் சொல்லலாம்.
முற்காலம் ஒரு பொற்காலமென இதுமாதிரி பழங்கதை பேசுவதை nostalgia (ஏக்கம், இழப்புத்துயரம்) என்கிறார்கள். படைப்பாளர்கள் இதையெல்லாம் விட்டு வெளியே வரவேண்டுமென்கிறார்கள், பின்நவீனத்துவவாதிகள். Nostalgia பழங்கதை பேசி, எழுதிப் பொழுதைப் போக்காதே, திசைதிருப்பாதே, என்று கொடிபிடிக்கிறார்கள், புரட்சியாளர்கள். அதுவும் உண்மைதான். நாம் அதைப்பற்றியும் சிந்திக்கலாம்தான். என்ன சொல்கிறீர்கள்?
ச.ஆறுமுகம். 

https://www.facebook.com/photo.php?fbid=1570398966382636&set=pcb.1570403373048862&type=3&theater 

முகநூல் பதிவு  டிசம்பர் 27, 2017.   விருப்பம் - 165, பகிர்வு 40, பின்னூட்டம் 56.

ஈரேழ்வரி உணர்ச்சிப்பா - SONNET By ELIZABETH BISHOP தமிழாக்கம்.



ஈரேழ்வரி உணர்ச்சிப்பா - SONNET
பற்றிக்கொண்டேன் – நீர்க்குமிழியை
ஆர்வத்தின் அபூர்வ நிலையில்
பிளவுற்ற ஒரு உயிர்;
கூடவே திசைகாட்டி முள்
அப்படியும் இப்படியுமாக அலைபாயும்
தீர்மானமற்று.
விடுவித்தேன் – உடைந்த
வெப்பமானியின் பாதரசம்
சிதறி ஓடுமாறு;
கூடவே வானவில் பறவையையும்
வெற்றுக் கண்ணாடியின்
ஒடுக்கச் சரிவுக்குள்ளிருந்து
எங்கெங்கும் பறக்கட்டுமென
அதன் விருப்பத்துக்கு, ஹே!
ELIZABETH BISHOP 
தமிழில் ச.ஆறுமுகம்