Thursday, 18 February 2016

இந்தோனேசியன் சிறுகதை - அதிகாலைக் கருக்கலில் பிறந்தவன் (IN TWILIGHT BORN) ப்ரமோத்யா ஆனந்த டோயர் ( Pramoedya Ananta Toer)

அதிகாலைக் கருக்கலில் பிறந்தவன் (IN TWILIGHT BORN) 

இந்தோனேசியன் : ப்ரமோத்யா ஆனந்த டோயர்            ( Pramoedya Ananta Toer) 

ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn)  தமிழில் : ச.ஆறுமுகம்


Image result for pramoedya ananta toer

ப்ரமோத்யா ஆனந்த டோயர் (1925 – 2006) புகழ்பெற்ற இந்தோனேசிய படைப்பாளர். மனித உரிமைப் போராளி. இலக்கியம் மற்றும் கலைத் தொடர்புப் படைப்பூக்கத்திற்காக 1995 ஆம் ஆண்டின் ராமன் மாக்சசே விருது பெற்றவர். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக இலக்கியத்தில் நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவரது நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் உலக அளவில் புகழ்பெற்றவை. இவரது படைப்புகள் மிகவும் எளிமையான எழுத்து நடையும் நேரடியாகக் கருத்தினைத் தெரிவிப்பதாகவும் உள்ளன. 1947 – 49 ஆம் ஆண்டுகளில் டச்சு காலனிய ஆதிக்க அரசாலும், 1965 – 1979 வரையிலான பதினான்கு ஆண்டுகளில் சுகர்த்தோவின் ஆட்சியாலும் விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதியாக புரு தீவில் சிறையில் அடைபட்டிருக்க வேண்டியதாயிருந்தது. சுகர்த்தோவின் 33 ஆண்டுகால ஆட்சியில் இவரது படைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. அவரது சிறை அனுபவங்கள் வெளிப்படும் This Earth of Mankind, Child of All Nations, Footsteps, House of Glass (all republished in English by Penguin) என்ற நான்கு நாவல்களும் Mute`s soliloquy என்ற நினைவுக்குறிப்புகளும் உலகப் புகழ் பெற்றன. அவரது தாய்மொழி ஜாவானியம். இருப்பினும் அவரது படைப்புகள் அனைத்தும் இந்தோனேசிய மொழியிலேயே உள்ளன. ’’ இந்தோனேசிய மொழியில் எழுதுவதென்பது இந்தோனேசியாவை ஒரே தேசமாகக் கட்டும் செயல்பாடு (nation building act)” என, அவர் தெரிவித்துள்ளார். இனெம் (INEM) என்ற நாவல் இந்தோனேசிய ஆணாதிக்கச் சமூத்தில் பெண்ணின் நிலையைச் சித்திரிக்கிறது.
எழுதுவது குறித்த கேள்விக்கு, ‘’நான் வாசகர்களை மகிழ்விப்பதற்காக எழுதுவதில்லை; ஆனால் அவர்களுக்கு ஒரு நேர்மை உணர்வினை ஏற்படுத்தவேண்டும்.’’ என ப்ரமோத்யா, ஒரு நேர்முகப் பேட்டியில் தெரிவித்தபோது ‘’மகிழ்விப்பதற்காக எழுதுபவர்கள் போலி நம்பிக்கைகளை விதைப்பதாக எண்ணுகிறீர்களா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‘’மகிழ்விப்பதற்காக எழுதுபவர்களைப்பற்றித் தீர்ப்பு சொல்லும் உரிமை எனக்கு இல்லை; ஆனால், எழுதுவது என்பது நேர்மை உணர்வுள்ள ஒரு மனச்சாட்சியை உருவாக்குவதற்கான போராட்டமே தவிர மகிழ்ச்சியளிப்பதற்கானதல்ல.’’ (It is a stuggle to give conscience not joy) எனப் பதிலளித்தார். (http://progressive.org/news/1999/04/3334/pramoedya-ananta-toer-interview)
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள IN TWILIGT BORN சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் தான் இவரது படைப்புகள் உலக கவனம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது சுன்னத்து (Circumcision) என்ற சிறுகதை குறும்படமாக இணையத்தில் கிடைக்கிறது.
*********
நான் சிறுவனாக இருந்தபோது, என் குடும்பத்து வீடு இளைஞர்களால் – அவர்களில் சிலர் எனது மூத்த வளர்ப்பு சகோதரர்கள், மற்றவர்கள் எங்கள் வீட்டில் தங்கிப்படித்த மாணவர்கள் – நிரம்பியிருந்தது. எனது வளர்ப்பு சகோதரர்களில் ஒருவர் ஹூரிப்; அவர் அப்போதுதான் மாநிலத் தலைநகர் செமராங்கில் மாநில இளநிலை உயர் பள்ளியில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்தார். இளைஞர்களின் மிகப்பொதுவான வழக்கப்படி, எங்களில் ஒரு குழுவினருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு, கூட்டமாகக் காற்று வாங்குவதுதான். அவர்கள் பேசிக்கொள்வதில் பல விஷயங்கள் எனக்குப் புரியவில்லையென்றாலும் அவர்கள் என்ன சொன்னார்களென்பது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. உரைவீச்சில் எப்போதுமே வல்லவரான ஹூரிப் ஒருநாள் இப்படி ஒரு வியாக்கியானத்தைச் சொன்னார் : ‘’இந்த நாட்டுக்கு இப்போது என்ன தேவை தெரியுமா, சுறுசுறுப்பு -டைனமிசம் தான். காலத்தால் நம் மக்கள் உறைந்துபோயுள்ளனர். முதலும் கடைசியுமாக ஒரே வார்த்தையில் சொல்கிறேன், அரசாங்க ஊழியனாகப் பணிபுரிவதே நமது இலட்சியமாக இருக்கவேண்டுமென்ற கருத்தினை மறுக்கின்ற ஊக்கத்தினை நாம் பெற வேண்டும்!’’
நான் அதீத ஆர்வமுள்ள ஒரு சிறுவனாக இருந்த காரணத்தால், என் பெற்றோரின் புத்தகங்கள் அல்லது என் தந்தையின் மேசையில் என் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் சிரமத்தை மேற்கொள்ளத் தயங்கியதேயில்லை. நான் கேள்விப்பட்டதன் பொருளைத் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தபோது, என் கருத்து சரியானதுதானா என்று அம்மாவிடம் கேட்டுச் சரிபார்த்துக்கொள்வேன். இப்படியாகத்தான் ஹூரிப் சொன்னதன் பொருளை அம்மாவிடம் கேட்க வந்தேன்.
‘’நீ வளரும்போது புரிந்துகொள்வாய்,’’ என என் கேள்விக்கு எந்தவிதத்திலும் பதிலேயாகாத ஒன்றைப் புன்னகையுடன் சொன்னாள், அம்மா. பின்னர், என் விளையாட்டுத் தோழர்களிடம், அவர்கள் என்ன நினைக்கிறார்களெனக் கேட்டேன்; ஆனால், அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை. குடும்பத்தின் வேலைக்காரர், என்னுடைய மதிப்பில் மிகப் பண்டைக்காலத்தவரான, அவராலும் கூட எனக்குத் திருப்தியான விளக்கத்தினைத் தர இயலவில்லை.
டச்சு மொழி இளநிலை உயர்பள்ளியின் பட்டதாரியாக ஹூரிப் எங்கள் இல்லத்தில் ஒரு தனியிடம் பெற்றிருந்தார். என் அம்மாவும் கூட அவருக்குத் தனிமரியாதை கொடுத்தார். அதனால், ஹூரிப் பேசுவதற்காகக் குரலை உயர்த்திய போதெல்லாம், ஒவ்வொருவரும் கவனித்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு விவாதத்தின்போதும் அசைக்கமுடியாத அதிகாரம் பெற்றவராக அவரே இருந்தார்.
ஹூரிப் ஒரு அரசியல்வாதியென, ஒருநாள் அம்மா என்னிடம் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியோடு வியப்பாகவும் இருந்தது. அப்போது `அரசியல்` என்பதன் பொருள் எனக்குத் தெரியாமலிருந்தது, தான்; ஹூரிப் ஒரு `காவல்துறை காவலர்’’ என அவள் சொல்வதாகப் புரிந்துகொண்டேன். சிறுவனாக இருந்த அந்தக் காலத்தில், குடும்பத்தின் வெறுப்பு முழுவதும் காவலர்கள் மீது இருந்ததென்பதும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது.
‘’அவர் ஒரு காவலராக இருப்பது குறித்து உனக்கு அவர் மீது வெறுப்பில்லையா?’’ நான் அம்மாவிடம் கேட்டேன்.
அம்மா புன்னகைத்துவிட்டு, `அரசியல்` என்பதன் பொருளை விளக்கத் தொடங்கிப் பின்னர் எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இந்தோனேசியனும் காவல் துறைக்கு எதிரிதானென்றுப் பிற்குறிப்பு ஒன்றும் தெரிவித்தாள்.
இந்தத் தகவலைக் கேட்டுத் திருப்தியோடு மகிழ்ச்சியான நான் என் நண்பர்களுக்கு `அரசியல்` என்பதன் அர்த்தம் சொல்ல ஓடினேன்; ஆனால், அவர்கள் என் விளக்கத்தைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மட்டும் செய்தார்கள். வேலைக்காரர் கூடச் சந்தேகமாகத்தான் பார்த்தார்.
இன்னொரு முறை நிகழ்ந்தது எனக்கு நினைவுக்குவருகிறது – ஒருநாள் மாலையில் நாங்கள் குளித்து முடித்தபின், வளர்ந்த பையன்கள் சதுரங்கம் விளையாடத் தொடங்குவதற்கு அல்லது அவர்களது பள்ளிப் பாடங்களைச் செய்வதற்கு முன்னால் – வீட்டுப்பாடங்களைச் செய்யும் உயரம் குறைந்த மேசையைச் சுற்றிலும் நாங்கள் வட்டமாக அமர்ந்திருந்தோம்.
ஹூரிப் திடீரென்று அரசாங்க வேலைபற்றிப் பேசத்தொடங்கும் போது, நான் அவருக்கு நேராகப் பின்னால் அமர்ந்திருந்தேன். ‘’ஒரு அரசு ஊழியனின் வேலை என்பது சலிப்பானது,’’ என அவர் அறிவித்தார். ‘’ஒரு அரசு ஊழியன் ஒவ்வொரு நாள் காலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலைக்குப் புறப்பட்டுப் போகிறான், அவனுடைய மேசையின் பின்னால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் அமர்கிறான், அதோடு ஒவ்வொரு நாள் மாலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வீட்டுக்கு வருகிறான். அங்கே மனைவியோடு சிறிது சிரித்து மகிழ்ந்துவிட்டு, மனைவியைக் கருத்தரிக்கச் செய்து, இப்படியாக, இந்த உலகத்துக்கு எப்படியாவது இன்னுமொரு குழந்தையைக் கொண்டுவருகிறான். வருடா வருடம், நாள் தவறாமல் இதுதான் நடக்கிறது – மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு கற்றை வைக்கோல், ஒரு வாளி தண்ணீர், படுப்பதற்கு ஒரு இடம் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத ஒரு வண்டிக்குதிரையை விடச் சிறப்பொன்றுமில்லாத, முழுவதுமாக ஒரு சலிப்பான அனுபவம்.
‘’ஒரு அரசு ஊழியன் நல்ல சம்பளம் கிடைக்குமென்ற கனவிலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறான். அவனது மேலதிகாரி நாய்க்கு எலும்புத் துண்டு போடுவது போல, ஏதாவது ஒரு பாராட்டு தெரிவித்தால், ஏதோ பதவி உயர்வு கிடைக்கப்போகிறதென்று மகிழ்ச்சியில் எம்பிக்குதிக்கிறான். ஆனால், மேலதிகாரி கடிந்து விழும்போது, அறுத்துவிட்ட விலங்கு ஓடுவது போல், இருக்கிற பதவியும் போய்விடுமோவெனப் பயந்து வாலைக் கால்களுக்கிடையே நுழைத்துக்கொண்டு, ஓடுகிறான்.’’
பிற பையன்கள் ஹூரிப்பின் மீது கவனம் செலுத்தியது போலவே நானும் கவனித்தேன். அவர் சொன்னது எல்லாமே புரியவில்லையென்ற போதிலும் நான் கவனமாகக் கேட்டேன். எப்படியானாலும், என் வளர்ப்புச் சகோதரரின் வியாக்கியானமான, ஒரு மனிதன் அவன் மனைவியிடம் சிரித்து மகிழும்போது, அது எப்போதுமே குழந்தை ஒன்றினைப் பெறுவதாகவே முடியும் என்கிற ஒரு விஷயம் என் மனத்தில் தெளிவாகப் பதிந்துவிட்டது.
நாங்கள் இரவு சாப்பிட்டபின், ஒரு மனிதன் அவன் மனைவியோடு சிரித்து மகிழும்போதெல்லாம், அவள் குழந்தை பெறுவதாக முடிகின்றதென, ஹூரிப் சொன்னது உண்மையா என அம்மாவிடம் கேட்டேன். அம்மா உடனே பதில் சொல்லவில்லை; ஹூரிப்பைக் கூப்பிடுமாறு சொல்லும்போதும், அதன் பின்னர் என்னை வீட்டுப் பாடத்தைச் செய்யுமாறு சொல்லும்போதும் அவள் முகபாவனை சிறிதும் மாறவில்லை. நான் அவள் சொல்லியதை உடனடியாகச் செய்யாமல், பதிலை எதிர்பார்த்து அங்கேயே நின்றபோது, என்னை வீட்டுப்பாடம் செய்யச்சொல்லி மீண்டும் கூறினாள்.
அப்படியொரு அழுத்தமான பையனாக, நான் என் கேள்வியை மீண்டுமொருமுறை சொன்னபோது, அம்மா மிவும் கோபமாகிவிட்டாள். அவளது முகத்திலிருந்த அசைவற்ற பாவனையைக்கண்டு, கடைசியில் நான் என் புத்தகங்களை எடுக்கக் கிளம்பினேன்.
நான், அந்த அறையைவிட்டு வந்த பின், அம்மாவே ஹூரிப்பைப் பெயர் சொல்லி அழைப்பதை நான் கேட்டேன். அம்மா, ஹூரிப்பிடம் பேசிய அன்றைய இரவுக்குப் பின், அவர் உரையாடல்களைக் குறைந்தபட்சம் நான் இருக்கும்போதாவது குறைத்துக்கொண்டதை நான் கவனித்தேன். அதுவே, அவர் பிற பையன்களுடன் கடினமான விவாதமாக இருந்தாலும், அறைக்குள் நான் சென்றதும் டக்கென விஷயத்தை மாற்றவோ அல்லது வேடிக்கைப் பேச்சுக்கள் சொல்லவோ தொடங்கிவிடுவார்.
* * *
வாழ்க்கை என் சொந்த ஊரில் எளிமையாக இருந்தது; ஆனால், ப்ளோராவிலும், ஒரு மாற்றம் வந்தது. அந்த நேரத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்பதை நான் புரிந்துகொண்டிருந்தேன் என்பதல்ல; ஆனால் என்னால் மாற்றத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. என் காதுகளில் விழுந்த துண்டு உரையாடல்களிலிருந்து அரசு ஊழியர், வியாபார அலுவல் மனிதர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் போன்றவர்களின் செயல்பாடுகள் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஹூரிப்பிடமிருந்து, குறிப்பாக, முதன்மையான, புதிய, வினோதமான சில வார்த்தைகள் மற்றும் கருத்தாக்கங்களைக் கேட்டேன்: எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தொடங்கியிருந்த சுதேசி, சுய-சார்பு இயக்கம் மற்றும் ஜப்பானும் ஆசியாவும் எப்படி முன்னேற்றத்திலிருக்கின்றன என்பவை பற்றி.
ஹூரிப் அதுபோன்ற விஷயங்களைப் பேசியபோது, என் அப்பா பொதுக் கூட்டங்களில், ‘’இந்த நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளர்ச்சியுற்றதிலிருந்தே ஆளும்வர்க்கம் தகுதியற்ற அதிகாரக் குவியலை அனுபவித்துவருகிறது,’’ எனப் பேசுவதைப் போலவே அனல் பறக்கும் குரலில் பேசினார். ஹூரிப் அறிவித்தார். ‘’ அவர்கள், இது அவர்களது உரிமையெனப் பேசுகிறார்கள்; ஆனாலும், நினைவில்கொள்ளுங்கள், அவர்களது வர்க்கத்துக்கு வெளியிலுள்ள எவரும் அதனை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அந்த உரிமையென்று சொல்லப்படுவதை வரன்முறைசெய்யவோ இல்லை. அவர்கள், அவர்களது வர்க்கத்துக்கு வெளியே உள்ள மக்கள் அவர்களுக்கு இணங்கிப்போக வேண்டியது இயற்கையானதென்று ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுடைய காலம் தொந்தரவுகள் ஏதுமின்றி மிக எளிதானதாக இருக்கிறது; ஏனென்றால், அவர்களுடைய வர்க்கத்துக்கு வெளியே நிகழ்வது எதுவும் அவர்களுக்குத் தொடர்பற்றதென்று நினைக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் முழுவதும் அவர்களுடைய பதவி உயர்வு, அதிகாரம் மற்றும் சொத்துசேர்ப்பது ஆகியவற்றிலேயே உள்ளது. சில நேரங்களில், அவர்களுடைய சொந்த மேலதிகாரிகள் அவர்ளுக்கெதிராகத் திரும்பி, அவர்களது ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறைத்துவிடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்; ஆனால், அத்தகைய கவலைக்கு அடிப்படை ஏதுமில்லையென்பதைக் கடந்தகாலம் நிரூபிக்கிறது. ஆனால், இப்போது, நாடு எழுச்சியிலிருப்பதால், அவர்கள் இயக்கத்தில் சேரவில்லையானால், அவர்களது வர்க்கம் இல்லாமல்போவதை அவர்கள் சொந்தக் கண்களாலேயே காணப்போகிறார்கள்.’’
* * *
எனது சொந்தச் சிறிய ஊரின் அன்றாட வாழ்க்கை ஒரு வகையான உற்சாக வெள்ளத்தால் தாக்கம்பெற்றதை நான் கண்டேன்: மக்கள் கால்பந்து குழுக்களை நிறுவத் தொடங்கினர்; உதாரணமாக, நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மூன்றுக்குக் குறையாத கால்பந்துக் குழுக்கள், கண்ணிமைக்கும் முன்பு தோன்றிவிட்டன; அவற்றில் சில குழந்தைகளுக்கெனவே தனியாகத் தொடங்கப்பட்டவை. மேல் வகுப்பினர் மத்தியில், கலை தொடர்பான சங்கங்கள் – மரபார்ந்த நாடகம் முதல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம் வரையிலும், ஜாவானிய நாடகம் முதல் ஜாவானிய வாய்ப்பாட்டு மற்றும் இசைக்குழு வரையிலும் கூட முகிழ்த்து வேர்விடத் தொடங்கின. இளைஞர்கள் மத்தியில், திடீரென மேலைநாட்டு நாடகம் மற்றும் இசைக்குழு மோகம் பெருமளவில் தோன்றியது. என் தந்தை அதுபோன்ற அமைப்புகள் பலவற்றுக்கும் ஆதரவு அளித்தார். அம்மாவும் பல பெண்கள் குழுவில் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார்.
நகரத்தின் எங்கள் பகுதியில் இளைஞர்களில் பலர் காவல் துறையில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசு காவல் படையின் அளவைப் பெருக்குவதற்குத் தீவிரமாக முயன்றது என்பதை அவர்களிடமிருந்துதான் நாங்கள் தெரிந்துகொண்டோம். அதுவுங்கூட, எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த இளம் தேசியவாதி சுகர்ணோ, ப்ளோராவுக்குப் பேச வந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகப் பெருவாரியான பொதுமக்கள் திரளுவதைத் தடுக்கவில்லை.
அதிகாலைகளில், நகரத்துச் சாலைகளில் மக்கள் துருப்புகள் அணி அணியாக ஓடிக்கொண்டிருந்தன. சிறுவர் இசைக்குழுக்கள் இராணுவ பாணியில் பாட்டிசைத்தன. ‘’இப்போது கிழக்கில் கதிரவன் ஒளிர்கிறது. விழித்தெழுந்து நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து கை உயர்த்துவோம்…..’’
வீட்டிலுள்ள சிறுவர்கள் எல்லோரும் சாணரர் இயக்கத்தில் சேருமாறு அப்பா உத்தரவிட்டார். ஒருநாள் இரவில், கொழுந்து விட்டெரியும் கணப்புத் தீயைச் சுற்றிநின்று, சாணரர்களின் பெற்றோர் பலர் என் அப்பா உட்பட, கவுரவ சாணரர்களாக உறுதிமொழியேற்றதை நான் பார்த்தேன். இந்தோனேசிய சாணர இயக்கத்தில் ஒரு நான்கு முனை வளர்ச்சிக்கான உந்துதலில் இன்னும் இரண்டு சாணர இயக்கங்கள் – ஒன்று மதத்தோடு தொடர்புடையது, மற்றொன்று அலுவல் மொழியாக டச்சு மொழி பயன்பாட்டிலிருந்தது – ஏற்படக் காரணமானது.
இந்தக் காலத்தில், டச்சு மீதான வெறுப்பும் வளர்ந்தது. மெதுவாக, ஆனால், நிச்சயமாக, இந்த உணர்வு, மொத்த மக்கள்தொகையும் டச்சு மீதான வெறுப்பினைப் பகிர்ந்துகொண்டதாகத் தோன்றியது. என்கு அப்போது ஏழு வயதுதான், ஆனால் எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஒருநாள் அப்பா, என் அம்மாவிடம், ‘’மேற்கத்தியர்கள் எப்போதும் இங்கே உயர்பதவிகளில் இருப்பார்கள் என்று நம்பாதே.’’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் அம்மாவைப் பார்த்தேன்; அமைதியாகப் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தெரிந்த ஒளியைக் கண்டு, எனது தந்தையின் வார்த்தைகளிலிருந்து அவள் பெற்றிருந்த மகிழ்ச்சியின் அளவினை என்னால் தெரிந்துகொள்ளமுடிந்தது. பின்னர், மேலும் நெருக்கமாகப் பார்த்தபோது அவள் வயிறு பருத்திருந்ததைக் கவனித்தேன். அவள் ஒரு குழந்தை பெறவிருக்கிறாள்!
அப்பாவை நோக்கிப் பார்த்துவிட்டுப் பின் அம்மா என்னிடம், ‘’ஒரு அலுவலகத்தில் வேலைசெய்வது மட்டுமே பிழைப்புக்கு வழியென்று நினைத்துவிடாதே. நீ வளர்ந்த பிறகு என்னவாக வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?’’ என்றாள்.
‘’ஒரு விவசாயி!’’ என்றேன், நான், உடனடியாக.
‘’என்ன விவசாயியா?’’ கேட்டார், என் தந்தை.
நான் என் பதிலை மீண்டும் உறுதியாகச் சொன்னபோது, அம்மா, என்னிடம், ‘’நீ உண்மையிலேயே ஒரு விவசாயியாக விரும்பினால், இப்போது மாதிரி சும்மா சுற்றித் திரிய முடியாது.’’ என்றாள். அவளது பதில் எனது ஆர்வத்தை திடப்படுத்தி, வீட்டின் முன்பக்கத்தில் என் பெற்றோர் எனக்காக ஒதுக்கிவைத்திருந்த சிறிய அளவிலான பாத்தியில் விவசாயம் செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டியது. சில நேரங்களில் அம்மா எனக்கு உதவி செய்வதற்காக, வெளியே பாத்திக்கு வந்து, ஒருமுறை நாங்கள் சீனிக் கிழங்கு நடவுசெய்துகொண்டிருந்தபோது, முழு நம்பிக்கை தொனித்த அவளது குரலில் குறிப்பிட்டாள்: ஒருவரின் சொந்த உழைப்பின் கனிகள் அதிக இனிப்பு கொண்டவை. உன்னையே பாரேன்; வியர்வையில் குளிக்கிறாய்! இது உனது இரத்தத்துக்கும் உனது உடல் நலத்துக்கும் நல்லது.’’ ‘’நமது நாடு ஒருநாள் நமது சொந்த இந்தோனேசியர்களால் ஆளப்படும்; இனிமேலும் டச்சுக்காரர்களால் அல்ல,’’ என அவள் மேலும் சொன்னாள். ‘’இப்போது நீ ஒரு சிறிய பையன், ஆனால் பள்ளி முடித்த பின்னர், உன் அப்பா படிக்கும் புத்தகங்களையெல்லாம் நீயும் படிக்கமுடிகிறபோது, இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதோடு, நீ நடுகிற சீனிக் கிழங்கு வளர்ந்து மேலும் மேலும் பெருகித் துளிர்த்துத் தழைக்கும்…. எனக்குத் தெரியும், அவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு நீ இன்னும் சிறுவனாக இருக்கிறாய், ஆனால் அதற்கான சரியான காலம் வரும். உன் தந்தை ஒரு ஆசிரியர், ஆனால், உண்மையில் அவர் என்ன செய்கிறாரென்று உனக்குத் தெரியுமா?’’ என்றாள்.
நான் தலையை அசைத்து மறுத்தேன். ‘’எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர் அநேகமாக வீட்டில் ஒருபோதும் இருப்பதில்லை, என்பதுதான்.’’
‘’அது எதற்கென்றால், இனிவரும் வருடங்களில் உனது சொந்தத்திற்கான கிழங்கின் வரவு என்றென்றும் குறைவுபடாமலிருப்பதற்காக, அவர் வெளியே சீனிக்கிழங்கு நடவுசெய்கிறார்.’’
அவள் என்ன சொல்கிறாள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.
‘’ நீ சாப்பிடுகிற சீனிக் கிழங்குகள் அல்ல, அவை,’’ என அவள் விளக்கமாகச் சொன்னாள். ‘’ நீ வளர்ந்த பிறகு சாப்பிடக்கூடிய கிழங்கின் வகைகளைப்பற்றி –உனக்கும், உனது நண்பர்களுக்கும் இன்றைய நிலையைவிட மேலானதாக இருக்கப்போகிற ஒரு நிலையைப் பற்றி நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.’’
என்ன பதில் சொல்வதென்று எதுவுமே புரியாமல், நான் வேலைசெய்வதை நிறுத்திவிட்டு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
* * *
எனது சொந்த ஊரின் உற்சாக வெறிபிடித்த சூழ்நிலை எனது வளர்ப்புச் சகோதரர், ஹூரிப்பின் வாழ்க்கையை மிகவும் பாதித்தது; அதுவும் அப்பா முதல்வராயிருக்கும் பள்ளியில் அவரை வேலைக்குச் சேர்த்தபின்னர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பணியில்லாத நேரம் என்பதே இல்லாமலாகிவிட்டது. பகல் நேரம் முழுவதும் பள்ளியில் இருந்தார்; மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் வீட்டுப் பாடங்களைத் திருத்தினார்; இரவில் அவர் படித்தார். இப்போதெல்லாம் அவர் எதைப்பற்றிப் பேசினாலும் உணர்ச்சி மிக்க தொனியிலேயே பேசினார். குறிப்பாக, ஒரு விஷயம் என் நினைவிலிருப்பது, வரிகள் பற்றியானது. ‘’அரசாங்க வரிகள் நம்மைக் கொல்கின்றன.’’ என ஒருநாள் இரவில் மற்ற மாணவர்களிடம் அவர் அறிவித்தார். ‘’இப்போதெல்லாம், எல்லாவற்றுக்கும் வரிகள்; நாம் அவற்றின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கிறது. வாங்குகிற ஒவ்வொரு மீட்டர் துணிக்கும் வரி; தார்ச்சாலையில் எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடிக்கும் வரி கொடுக்கிறோம்.’’
அவர் என்ன சொல்கிறாரென்று எனக்குப் புரியவில்லையென்றாலும், வரி கொடுக்கவேண்டியில்லாவிட்டால், மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்களென்பதை மட்டும் என்னால் நிச்சயமாக உணரமுடிந்தது.
நம் எல்லோரையும் அரசாங்க உயர் அலுவலர்களாக்குவதற்காக ஒன்றும் டச்சுக்காரர்கள் இங்கு வரவில்லை,’’ என்று அவர் தொடர்ந்தார். ‘’ வரிகள் மூலம் பெரும் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காவே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நாம் வரிகொடுக்க மறுத்தால், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வன்முறையாக வசூல் செய்ய முயற்சிக்கிறார்கள்; அப்போதும் நாம் எதிர்த்தால் அவர்கள் நம்மைக் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் சாமின் மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கு ஜாவாப் பழங்குடியினரான அவர்கள் வரி செலுத்துவது உட்பட வெளி உலகத்துடன் அனைத்து விதத் தொடர்பினையும் மறுத்தனர். நான் அவர்களுக்கு உற்சாக வாழ்த்துக் கூறுகிறேன்.’’
ஹூரிப் அப்படியான ஒரு உணர்ச்சிமிக்கத் தொனியிலேயே எப்போதும் பேசியதால், பிற பையன்கள் எல்லோரும், அவர் சொன்னதை அப்படியே நம்பியதில் வியப்பு ஏதுமில்லை.
* * *
நான் கவனித்த மற்றொரு மாற்றம், கொஞ்சம் சிறந்த ரகம் வாங்குவதற்கு வசதியானவர்கள் எப்போதாவது பயன்படுத்துகிற, ஆனால், கிராமத்து மக்கள் வழக்கமாக அணிகின்ற, வீட்டிலேயே தயாரிக்கப்படும் முரட்டு ரக லூரிக் ஆடைகளை அதிகமான மக்கள், உயர்நிலை மக்களும்கூட அணியத் தொடங்கியிருந்தனர் என்பதுதான். நான் ஒன்றும் நற்பேற்றின் வாரிசு இல்லைதான்; ஆனால் லூரிக் அணிவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது சொரசொரப்பாக, உடலை உறுத்துவதோடு, வெகு விரைவிலேயே, ஒன்று அல்லது இரண்டே சலவைக்குப் பின், நிறம் மங்கிப்போகும். இருந்தபோதிலும் என் தந்தை வீட்டில் அணிவதற்காக ஒரு ஜோடி லூரிக் பைஜாமாவும் தினசரி அணிவதற்காக சாரங் என்னும் லுங்கியும் மேற்சட்டையும் வாங்கினார். அதன் பிறகு ஒருநாள், வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் அப்படியான ஓரிணை ஆடை வாங்கிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது.
ஹூரிப் தான் அந்த நடைமுறை குறித்து விளக்கினார். ‘’அது இந்தியாவில் போல,’’ என அவர் சொன்னார். ‘’அங்கே மக்கள் வீட்டில் நெய்யும் துணிகளை அணிவதுடன் இறக்குமதித் துணிகளை நெருப்பிட்டுக் கொளுத்துகின்றனர்.’’ ,
உடனடியாகத் தன்னிச்சையாக, நான், ‘’அடக் கடவுளே, எனக்குச் சில அயல்நாட்டு ஆடைகள் வேண்டுமென்றல்லவா ஆசைப்பட்டேன்!’’ எனக் கூறினேன். ஆச்சரியப்படும்படியாக, என் பேச்சு அங்கிருந்த ஒவ்வொருவரையும் சிரிக்கவைத்து, அதன் விளைவாக, விவாதங்களின்போது, என்னுடைய பணி வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பது மட்டுமே தவிர, கருத்து தெரிவிப்பதல்ல என்ற சங்கடமான நிலையை எனக்கு உணர்த்தியது.
ஹூரிப் என்னை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு, அவரது பேச்சைத் தொடர்ந்தார். ‘’உள்ளூர்த் துணிகளாலான ஆடைகளையே அணிவது போன்ற விஷயங்கள் சுதேசி முறைக்கான பங்களிப்பாகும். இதனுடைய முழுப் பரிமாணம் சுய சார்பு வாழ்க்கை என்பதோடு, நமது மக்களுக்கு வேலைகளை உருவாக்குவதுமாகும். உயிர் பிழைத்திருப்பதற்கு நமது மக்களுக்குத் தொழில் வேண்டும் என்னும்போது, நீ அயல்நாட்டுத் துணிகளை அணிந்தால், அவர்களுக்கு வருமானமும் வேலையும் கிடைக்கவிடாமல் செய்து அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடிப்பதாகும். முடிவில் அனைத்து இலாபங்களையும் அயல்நாட்டினர் அள்ளிக்கொண்டுவிடுகின்றனர்.’’
அந்த நேரம் தான், நெசவுத் தொழிலாளியான ஒரு கிராமத்துப் பெண், என் அம்மாவைச் சந்தித்தபோது, என்னுடைய அம்மா உடனேயே வீட்டிலிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒன்றாகப் பன்னிரண்டு லூரிக் இணை ஆடைகள் தயாரிக்குமாறு தெரிவித்தது எனக்கு நினைவுவந்தது. இருந்தாலும், அம்மா, அவளுக்கென ஒரு ஆடை தயாரிக்குமாறு சொல்லவில்லையென்பதை நான் கவனித்துக்கொண்டேன். அதாவது இந்த ஆடை விஷயத்தில் அம்மா என் கருத்தைத் தான் கொண்டிருந்தாள் என்பது உறுதியாகத் தெரிந்தது.
பணி ஆணை பெற்றதில் அந்த நெசவுத்தொழிலாளி மகிழ்ச்சியடைந்தது இயல்புதானே. ‘’ இப்போதெல்லாம் நிறைய ஆட்கள் லூரிக் ஆடை தயாரிக்கச் சொல்கிறார்கள்,’’ என அவள் சொன்னாள்.
‘’ நல்லது தானே, இது சுதேசி யுகம்,’’ என அம்மா பதில்சொன்னாள்.
அந்தப் பெண்ணும் தலையசைத்தாள். ‘’ஆமாம், சுதேசி – எங்கள் ஊரிலும் எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். பணி ஆணைகளை உடனுக்குடன் செய்துகொடுப்பதற்காக என் வீட்டு அக்கம்பக்கத்து ஆட்களெல்லாம் இரவும் பகலும் உழைக்கிறார்கள். நான் சிறுமியாக இருந்த காலம் போலவே இப்போது மாறியிருக்கிறது.’’ என வாயெல்லாம் சிரிப்பாகச் சொன்னாள். ‘’மக்கள் சொந்தமாகப் பருத்தி பயிரிடுகிறார்கள். தேய்ந்து போன கார் டயர்களிலிருந்து செருப்பு தயாரிக்கும் உள்ளூர் செருப்புத் தொழிலாளிக்கும் செய்து கொடுக்க முடியாத அளவுக்குப் பணி ஆணைகள் குவிகின்றன. இப்போது அவனிடம் பதினைந்து பேர் கூலிக்கு வேலை செய்கின்றனர்.’’
இந்தச் செய்தியால் நெஞ்சு நிமிர்த்திய அம்மா, அந்த நெசவுத்தொழிலாளிப் பெண் சென்ற பிறகு, தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்; ஆனால், அவளது கண்கள் என்மீதே நிலைத்திருந்தன. ‘’சுதேசி இயக்கம் கைவினைப் பொருட்கள் உற்பத்திக்குப் புதியதொரு உயிர்ப்பினைக் கொடுத்திருக்கிறது; கிராமத்தினருக்கும் பிழைப்புக்கு வழிசெய்திருக்கிறது.’’ அவள், பிழைப்புக்காகக் மூங்கில் பொருட்கள் முடைந்துகொடுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பாக் க்ரோமோவின் வீட்டைச் சுட்டிக்காட்டினாள். ‘’நாம் மட்டும் இந்த இயக்கத்தை இன்னுமொரு பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாக்குப் பிடித்து, நீடித்துவிட்டால், பாக் க்ரோமோ இப்போதைய சிரமப்படும் வாழ்க்கையைக் காட்டிலும் நல்லதான ஒரு வாழ்க்கையைப் பெற்றுவிடுவார். எட்டு குழந்தைகள்; ஒரு கூடைக்கு அவருக்கு என்ன கிடைத்துவிடும்? ஒரு கூடை முடைவதற்கு ஒன்றரை நாள் ஆகிறது; ஆனால் இரண்டரை சென்ட்தான் கிடைக்கும்!’’
* * *
இதற்கிடையில், வாரங்கள் செல்லச் செல்ல, அம்மாவின் பேறுகாலம் நெருங்கி, அவளால் அதிக உழைப்புள்ள வேலைகளைச் செய்யமுடியவில்லை. மூன்று மாதங்ளுக்கு முன்பு அம்மா ஒரு தறியை வாங்கி, அதை எப்படிப் பயன்படுத்துவதெனக் கற்றுக்கொள்வதற்காக ஒரு நெசவுத் தொழிலாளியையும் கூலிக்கு அமர்த்தினார். ஆனால், இப்போது அவள் வயிறு பெரிதாக இருப்பதால், அவளால் சேர்ந்தாற்போல மூன்றுமணி நேரத்துக்கு மேல் வேலைசெய்யமுடியவில்லை. அது உடம்பு முழுவதையும் அடித்துப் போட்டாற்போல் குலுக்கிவிடுகிறது என்றாள், அவள். அதனால், தறி பழைய சாமான்கள் கிடங்குக்குப் போய்விட்டது; அவள் பெரும்பாலும் முன் மண்டபத்தின் மேலாக ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து வாசிப்பதிலும் தோட்டத்துக்கும் அப்பால் பார்த்துக்கொண்டிருப்பதுமாக நேரத்தைச் செலவழித்தாள்.
அப்பா எப்போதாவதுதான் வீட்டிலிருந்தார். அப்பாவைப்பற்றி நான் அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம், அப்பா எதிர்காலத்திற்காக சீனிக் கிழங்கு நடுவதற்காகப் போயிருக்கிறார் எனத்தான் சொல்வாள். அப்பா வீட்டுக்கு வந்த போதெல்லாம், பெரும்பாலும் லூரிக் ஆடையணிந்து, வெறுங்கால்களோடு அல்லது தேய்ந்த டயர் செருப்பு அணிந்த மூன்று அல்லது நான்கு பேர்களையும் கூடவே இழுத்துக்கொண்டுதான் வந்தார். அவர்களுடைய பேச்சு – பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியதாக, வெடிச்சிரிப்புகளும், கிசுகிசுக்கும் இரகசியங்களுமாக – பெரும்பாலும் என் அறிவுக்குப் புரிந்துகொள்ள இயலாததாக இருந்தது; ஆனால், `கூட்டுறவு`, மக்கள் வங்கி`, `ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி`, `மக்கள் வாசிப்பு இயக்கத்திற்கான மூலங்கள்` மற்றும் `அடித்தள ஈர்ப்பு இயக்கம்` போன்ற வார்த்தைகளை அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.
காலம் செல்லச்செல்ல, மேலும், மேலுமாக மக்கள் எங்கள் வீட்டைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத என் பக்கத்து வீட்டுக்காரர்கள் கையெழுத்திடக் கற்கும் வகுப்புகளில் சேர்வதற்காக வந்தார்கள். மற்றவர்களும் – அந்தப் பகுதியிலிருந்த தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் சிறந்த மாணவர்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர பாடங்களில் ஆசிரியர்களாகப் பயிற்சிபெற அல்லது ஏதாவது ஒரு தொழிலில் தேர்ச்சி பெறுவதற்காக வந்தனர். அப்பா தொடங்கிய பயிற்சிவகுப்புகளில் பாடம் நடத்தும் பொறுப்பு என்னுடைய மூத்த வளர்ப்பு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் அதிகமாக, அதிகமாக, வெற்றி மின்னும் கண்களுடன் அப்பா வகுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். எழுதப் படிக்கக் கற்கும் வகுப்புகளில் முன்னூறு பேரையும் ஆசிரியப் பயிற்சியில் நாற்பது பேரையும் தொழிற்கல்வியில் முப்பது பேரையும் பொதுப் பயிற்சி வகுப்புகளில் ஐம்பது பேரையும், மழலையர் பள்ளிக்கு பதினைந்து மாணவர்களையும் ஆங்கில மொழிப்பாடம் கற்பதற்காக இருபது மாணவர்களையும் சேர்த்திருந்தார். அவர் ஏற்படுத்தியிருந்த டச்சு மொழிப் பாடத்திட்ட வகுப்புகளுக்கு பதினொரு மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்தனர்.
பிறகு, இரண்டு நகலெடுக்கும் கருவிகள், ஐந்து தட்டச்சு எந்திரங்கள், ஒரு பெரிய காகித மூட்டை அனைத்தும் வாசலில் தென்பட்டன. எங்கள் வீடு, திடீரென ஒரு அலுவலகம் போலத் தோன்றியது. பகல் முழுவதும் தட்டச்சு எந்திரங்களின் தட்,தட் ஒலியும் நகலெடுப்புக் கருவிகள் உருளும் ஓசையும் பாடத் திட்டங்கள் வகுப்பது குறித்த பேச்சொலியும் தான் கேட்க முடிந்தது.
அப்பாவோடு அவரது பணியும் அந்தச் சிறிய ஊரில் முக்கிய கவனம் பெற்றது. அவர் எப்போதுமே அலுவல் அவசரமாகவே காணப்பட்டார்; ஆனால், அவர் வீட்டைவிட்டுச் செல்வதும் அதிகமாகவே இருந்தது. அவர் திருத்தவேண்டிய வீட்டுப் பாடங்கள் மலை, மலையாகக் குவிந்ததால், வளர்ப்புச் சகோதரர்கள் எல்லோரும் உதவிசெய்யுமாறு பணிக்கப்பட்டனர். அம்மாவிடம் ஆலோசனை கோரி வரும் பெண்கள் அதிகமானதால், அம்மா மனம் மகிழ்ந்ததாகத் தோன்றியது. அவர்களின் வேண்டுகோள்களை அம்மாவால் ஒருபோதும் நிராகரிக்க இயலாது. மகப்பேற்று நிலை ஒருவிதத்தில் அவளுக்குச் சிரமமாக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு அவர்களின் கூட்டங்களுக்குச் சென்று வந்தாள்.
அப்பா வீட்டிலிருந்த நேரங்களில், காவல்துறையின் காவலர்கள், அவர்களின் மிதிவண்டிகளில் எங்கள் மீது சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டே, எங்கள் வீட்டுக்கு அடிக்கடி சோதனைக்கு வந்தனர். அவர்கள் கண்காணிப்பதற்கான காரணத்தை நான் அம்மாவிடம் கேட்டதற்கு, ‘’உன் அப்பா எதுவுமே செய்யாமல் இருப்பதைத்தான் மொத்தத்தில் அவர்கள் விரும்புவார்கள்.’’ என்று சொன்னாள்.
‘’ஆனால், அவர் ஒரு ஆசிரியராயிற்றே,’’ என நான் சூழ்நிலையை உணராமல் எதிர்ப்பு தெரிவித்தேன்.
‘’அது சரிதான், ஆனாலும் மக்களைக் கல்வியறிவு அற்றவர்களாக, அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகிறது.’’ என அம்மா சொன்னாள்.
எனது சொந்த ஊரில், அந்த நேரம், என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்பதை நான் தெரிந்துகொள்வதற்குப் பல ஆண்டுகள் ஆயின; ஆனால், என் அப்பாவின் மதிப்பு உயர்ந்துகொண்டிருந்தது என்பது எனக்கு அடிக்கடி உணர்த்தப்பட்டது. பல வேளைகளில், அந்தப் பக்கமாகச் செல்வோர், என்னை அவர்களது கூட்டாளிகளுக்குக் காட்டி, ‘’அவருடைய மகன்,’’ என அவர்கள் சொல்வது என் காதில் விழும். முற்றிலுமான அந்நியர்கள் என்னை நிறுத்தி, அப்பாவைப் பற்றிக் கேட்பார்கள். சிலர் என் செலவுக்குப் பணம் கூடத் தருவார்கள்; அது எனக்கு மிக மகிழ்வினைத் தந்தது. இத்தகைய கவனங்களிலிருந்து, என் தந்தை எங்கள் ஊரின் மிக முக்கியமான மனிதரென்பது எனக்குப் புரிந்தது; அது எனக்கு மிகவும் பெருமிதத்தை அளித்தது.
ஆனால், ஒருநாள், பள்ளியிலிருந்து அப்பா திரும்பி வந்தபோது, அவர் எப்போதுமான சாந்த உணர்வுடனான அப்பாவாக இல்லை. மதிய உணவுக்காக, அவர் மேசையில் அமர்ந்தபோது, அவரது முகத்தில் இறுக்கமும் கோபமும் கலந்த பார்வையினைக் கண்டேன். என்ன விஷயமென்று தெரிந்துகொள்வதற்காக, நான் அந்த அறைக்குள்ளேயே வளைய வளையச் சுற்றிவந்தேன்.
‘’நிரம்பவும் கடினமாக உழைக்கிறீர்கள்,’’ என்றாள், அம்மா, உணவைப்பரிமாறிக்கொண்டே. ‘’உடம்பு சரியாக இருக்கிறதா?’’
நான் ஒரு மாதிரியாக இருப்பதற்கு, வேலையல்ல, காரணம்.’’ எனப்பதில் சொன்ன அப்பா, ‘’விஷயம் என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப் பார்த்ததில்லை. முன்பெல்லாம், ஒரு மனிதனுடைய சொந்த வீட்டில், அவன் விரும்புவதைச் செய்ய முடியும். அவன்தான் அந்த வீட்டுக்கு முதலாளி.’’
அம்மா திகைத்தது போல் தோன்றினாள். ‘’எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?’’ எனக் கேட்டாள்.
‘’ஒரு கடிதம் வந்திருக்கிறது.’’ அப்பா வெடுக்கென்றார்.
‘’என்ன சொல்கிறீர்கள்?’’ அவள் அதிர்ச்சியோடு கேட்டாள்.
‘’அரசாங்கத்திடமிருந்து வந்திருக்கிறது.’’ அப்பா சத்தமாக, உரத்துக் கோபத்தோடு சொன்னார்.
‘’என்ன மாதிரி கடிதம்?’’
‘’மிரட்டல், அல்லது நினைவூட்டு என்றும் சொல்லிக்கொள்ளலாம்.’’ அவர் பெருமூச்சிட்டார். ‘’பள்ளிக்கூடத்தை மூடுடா என்கிறார்கள்.’’
அம்மா நம்பிக்கை இல்லாமலேயே அப்பாவை உறுத்துப்பார்த்தாள்.
மேற்கொண்டும் பொறுமையில்லாமல், அப்பா சொன்னதை ஹூரிப்புக்குச் சொல்வதற்காக நான் அவரது அறைக்கு ஓடினேன். அவர் அதைக்கேட்டு வியப்படைந்ததாகவே தோன்றவில்லை என்பதுதான் எனக்கு வியப்பாக இருந்தது. அவரும் கவலையும் சோர்வுமாகத் தோன்றினார்.
பின்னர், நான் அடுக்களைக்குச் சென்று, சமையற்கார அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னேன்.
‘’என்ன சொல்கிறாய்?’’ என்று அவள் வெறுப்புடன் கேட்டாள். ‘’கற்றுக்கொடுப்பதிலிருந்தும் உன் அப்பாவை யார் தடுக்க முடியும்? அப்படியான துணிவு யாருக்கு இருக்கிறது? மாவட்ட அதிகாரி கூட உன் அப்பாவோடு வைத்துக்கொள்ளமாட்டார், புரிந்துகொள்.’’
சமையற்கார அம்மா சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே, பிறரிடம் சொல்வதற்காக மனப்பாடமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முயன்றேன்; ஆனால் அப்பாவின் முகத்தில் நான் பார்த்த இறுக்கம் என் நினைவுகளின் மேலாக உறைந்தது. நான் கேள்விப்பட்டதைச் சொல்வதற்காக இன்னொரு வளர்ப்பு சகோதரரைத் தேடி விரைந்தேன்.
‘’எனக்கு ஏற்கெனவே தெரியும்,’’ என்றார், அவர். ‘’உன் அப்பா, எனது குடிமையியல் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதுதான் அவர்கள் வந்தார்கள். ஐந்து காவலர்களும் ஒரு ஆய்வாளரும்! முதல் மற்றும் இரண்டாம் நிலைக்குரிய அனைத்துப் பாடப் புத்தகங்களையும் வாரியெடுத்துக் கொண்டுபோனார்கள். குறைந்தது 700 புத்தகங்கள் இருக்கும். அவற்றைத் தயாரிப்பதற்காக, உன் தந்தை ஏகப்பட்ட பணத்தையும் உழைப்பினையும் காலத்தினையும் செலவிட்டிருந்தார்! அதன் பிறகு, எல்லா ஆசிரியர்களையும் ஒன்றாக அழைத்துக் கூட்டிவைத்து, வகுப்புகள் முடிந்ததாக அறிவித்தார்கள். அவர்கள் வெளியேறும் முன்பு பள்ளிக்கான மின்சார இணைப்பினைத் துண்டித்தனர். எனவே இனிமேல் மாலை வகுப்புகள் கிடையாது.’’
இந்தச் செய்தியால் நான் திகைத்துப் போனேன். உணவு அறைக்கு நான் திரும்பி வந்தபோது, அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டு முடித்திருந்தனர்; ஆனாலும் அப்பா தோற்றுவித்திருந்த ஒரு கடன் வசதி வங்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘’வங்கியில் நீங்கள் போட்டிருந்த ஐயாயிரம் ரூபாயும் என்னவாகும்?’’ அம்மா கேட்டாள்.
அப்பா வெறுமனே தலையசைத்தார். ‘’அதெல்லாம் போய்விட்டது……’’. பின்னர், அவர் மெதுவாக, மிகக் கவனமாக வார்த்தைகளை நிறுத்தித் தெளிவாகப் பேசினார். ‘’இப்போது நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் இன்னும் கடினமாக உழைப்பதுதான். நாம் நம்பியபடியான சூழ்நிலை அமையவில்லை என்பதற்காக, நாம் கைசோர்ந்துவிடக் கூடாது.’’
அம்மா ஒரு பெருமூச்சினை வெளியிட்டார். ‘’நான் எப்போதுமே உங்கள் பாதுகாப்பிற்காகவும் உங்கள் உழைப்புக்கான வெற்றிக்காகவுமே பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், கேடு வருமென்றால், நம்மால் அதுபற்றி எதுவும் செய்யமுடியாது என்றுதான் சொல்கிறேன்.’’ அவளுடைய குரல், அதற்கு முன்னர் நான் கேட்டிராத ஒரு நிச்சயமற்ற தொனியில் நடுங்கியது.
* * *
அந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது; என்னுடைய விளையாட்டுத் தோழர்கள் கூட என்னிடமிருந்தும் விலகிச்சென்றனர். பாலைவனச் சோலையாக இருந்த எங்கள் வீடு இப்போது எங்கேயோ வெகுதொலைவிலுள்ள ஒரு சிறிய தீவு போலாகிவிட்டது. அம்மா எப்போதாவதுதான் பேசினாள். ஹூரிப் வீட்டிலேயே கையில் எப்போதும் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தார்; ஆனால் அதைப் படிக்காமல், எப்போதும் சிந்தனையில் மூழ்கியவராகவே தெரிந்தார்.
ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, அப்பாவின் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை நானூறிலிருந்து இருபத்தெட்டாகக் குறைந்துவிட்டது. எப்போதும் உயிர்ப்போடு, சுறுசுறுப்பாகத் தோன்றும் அப்பாவின் பள்ளி மந்தமாகக் காலியாகக் காணப்பட்டது. அப்பாவின் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்த அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டதாக அரசு ஊழியர் ஒருவரின் மகனான எனது வகுப்புத் தோழன் என்னிடம் சொன்னான்.
ஒரு நாள் இரவு பக்கத்து அறையில் கேட்ட பேச்சுக்குரல்களால் நான் தூக்கம் கலைந்து எழுந்தேன். ஹூரிப் தான் பேசிக்கொண்டிருந்தார்; அவருடைய குரலிலிலிருந்தே அவர் கோபமாக இருக்கிறாரென என்னால் சொல்ல முடியும். அடுத்த நாள் காலையில் அவர் துணிமணிகளைப் பையில் அடைத்துக்கொண்டு, அப்பாவிடம் வீட்டைவிட்டுச் செல்வதற்கான அனுமதி கேட்கப் போனார். ‘’ நம்முடைய குரல்வளையைப் பிடித்து நெறிக்கிறார்கள்.’’ அவர் சொன்னார். ‘’ இதற்கு மேலும் இந்த ஊரில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது.’’
விடைபெற்றபின், ஹூரிப் புறப்பட்டுப் போனார். அதன் பிறகு அவரைப் பற்றி எங்கள் குடும்பம் கேள்விப்படவேயில்லை.
என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்று எனக்கு முற்றிலும் தெரியாதுதான், ஆனால், அதனால்தான் அப்பா வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறாரென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில வேளைகளில், மூன்று அல்லது நான்கு நாட்கள் கூட, அவரது பள்ளிக்கூடம் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் காணாமல் போய்விடுவார். வீட்டில் இருக்கும்போதும், புத்தகம் படிக்கவோ அல்லது மாணவர்களின் வீட்டுப்பாடங்கள் திருத்தவோ இல்லை; என்னுடைய தோட்டத்துச் செடிகளைப் பார்ப்பதற்காகவும் வெளியில் வரவில்லை; காலையில் அவரோடு நடைப்பயிற்சிக்கு வருமாறும் என்னை அழைக்கவில்லை. அவர் எப்போதாவது தான் சிரித்தார். பேசியது கூட எப்போதாவது ஒருமுறை தவிர்க்கமுடியாத அவசியமென்றால் மட்டுமே பேசினார்.
இதற்கிடையில் அம்மா அடுக்களையில் சமைக்கவோ, தோட்டத்தில் செடிகளைப் பேணவோ இல்லாமல் எப்போதும் படுக்கையில் படுத்தே இருந்தார். ஊழ்வலியின் திடீர்த் திருப்பத்தால், என் பெற்றோர் வாழ்க்கையில் நிகழ்வனவற்றிற்கு என்னால் உதவமுடியாதென்பதை, ஆனால் நடப்பதெல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறியவை என என்னுடைய முழுதும் வளர்ச்சிபெற்றிராத அப்பாவி மனத்தாலும் உணரமுடிந்தது.
ஒருநாள், அம்மா என்னை அருகே அழைத்து, அறிவுரை கூறினாள். ‘’உன் பாடங்களை நீ நன்றாகப் படிக்கவேண்டும். ஹூரிப் ஒரு அறிவார்ந்த இளைஞன்; ஆனால் இக்காலச் சூழ்நிலைக்கு அவனால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால்தான், அவன் வெளியே போய்விட்டான். உன் அப்பாவும் திறமையானவர் தான். ஆனால் இப்போதைய விஷயங்களை மாற்றும் வலிமையும் அதிகாரமும் அவருக்கு இல்லை. அதனால்தான், நீ நன்றாகப் படிக்கவேண்டும். அவர்கள் இருவரை விடவும் நீ திறமையானவனாக வேண்டும். எனக்குத் தெரியும் நீ அப்படி வருவாய். நீ எவ்வளவோ பெரிய அறிவுள்ளவன்; உன் செயலில் நீ தோற்கமாட்டாய்.’’
அம்மா என்ன சொல்கிறாளென்று உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்; ஆனாலும், அவளுடைய குரலில் தெரிந்த மென்மை என் கண்ணீரை அடக்க உதவியது. அவள் என்னை அணைத்து, என் கழுத்தில் முத்தமிட்டபோது, அவளது கண்ணீரின் வெப்பத்தினை என் மேனியில் உணரமுடிந்தது – என்றாலும் இன்னொரு நிகழ்வினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.
‘’அப்பாவால் வேலை செய்ய முடியவில்லை; சரி. ஆனால், அவர் ஏன் எப்போதும் வெளியே போய்விடுகிறார்?’’ எப்படியோ சமாளித்துக், கேட்டுவிட்டேன்.
அம்மா என் முகத்தை அவரது இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு, என் கண்களுக்குள் நோக்கினாள். ‘’அப்பா இப்போது மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். நான் சொல்வது என்னவென்று நிச்சயமாக உனக்குப் புரியாது. நீ இன்னும் சின்னப் பையன் தானே, வளர்ந்த ஒருவரின் ஏமாற்றத்தை இன்னும் நீ உணர்ந்திருக்க முடியாது. ஆனால், உன் அப்பா வெளியே போவது எதற்காகவென்றால், மனத்திலிருப்பதையெல்லாம் ஒழித்துவிடத்தான்.’’
ஒரு சிறுவனாக, ஊர்ப்புறத்தைத் தெரிந்துகொள்வதற்காக, நானும் அடிக்கடி வீட்டிலிருந்தும் காணாமற்போவதுண்டு. எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று உள்ளூர்ச் சந்தை; சிலவேளைகளில், அங்கு செல்வதும் திரும்புவதுமான நடைகளில் அப்பாவும் அவரது நண்பர்களும் சீட்டாடுவது அல்லது அந்த ஆட்களில் ஒருவரின் வீட்டு முன் தாழ்வாரத்தில் வேறு ஏதாவது சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது என் கண்களில் தட்டுப்படுவதுண்டு. ‘’அப்பாவின் மனத்திலிருப்பதையெல்லாம் ஒழித்துவிடுவதன் அவசியம்’’ பற்றி அம்மா சொன்னதன் பொருள் இதுதானா என்று அப்போது நான் நினைத்தேன்.
அப்பாவின் பள்ளி கிட்டத்தட்ட தோல்வியடைந்துவிட்டபோது, அவரைப் பற்றியும், சூதாட்டத்தில் நேரத்தைப் போக்கடிக்கவே அவர் தேசிய இயக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் மக்கள் பேசுவதை நான் கேட்பதுண்டு. நான் இளையவன் என்ற போதிலும் அந்த வார்த்தைகளின் எதிர்மறைக் குறிப்பைப் புரிந்துகொள்ள இயன்றவனாகத்தான் இருந்தேன். அதனால்தான், அப்பாவைப் பற்றிய எனது யூகங்கள் சரியானவைதானாவென அம்மாவிடம் நான் கேட்கவில்லை. அதனாலேயே, அப்பா எங்கிருக்கிறாரென்று தெரியுமாவென அம்மா கேட்டபோது தெரியாதெனப் பாவனைசெய்யவும் என்னால் இயலாமற்போயிற்று.
‘’அப்படியென்றால், அவரைத் தேடிக் கண்டுபிடித்து, வீட்டுக்கு வருமாறு சொல்.’’ என்றாள், அம்மா.
என் அப்பாவைத் தேடி வீட்டைவிட்டுப் புறப்பட்டதும், உண்மையிலேயே அவரது வழக்கமான அரட்டையிடம் ஒன்றில் அவரைக் கண்டுவிட்டேன். அவர் என்னைக் கண்டதும், கோபமான பார்வை ஒன்றை என்மீது வீசினாலும், அது, அம்மாவின் செய்தியை நான் அவருக்குத் தெரிவிப்பதிலிருந்தும் என்னைத் தடுத்துவிடவில்லை.
‘’ இன்னும் ஒரு நிமிடத்தில் வீட்டில் இருப்பேனென்று உன் அம்மாவிடம் சொல்,’’ என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.
வீட்டுக்கு நான் திரும்பி அதிக நேரமாகும் முன்பாகவே, அப்பா வாசலுக்கு வந்து நின்றார். அம்மா அவரிடம் மிகவும் கொஞ்சமாகவே பேசினாள். அவரும் மவுனம் காத்தார்; ஆனாலும், அன்று இரவு, நான் எனது அறைக்கு வந்த பின், அம்மா, அவரிடம் பேசுவது எனக்குக் கேட்டது: ‘’ உங்கள் ஏமாற்றத்தை விட்டொழிப்பதற்காகத் தொலைத்த நேரம் போதுமென்று நினைக்கிறேன்.’’
அடுத்த இரண்டு நாட்கள் இரவும் பகலும் வீட்டுச் சூழ்நிலை இயல்புக்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றியது; பள்ளி வேலை முடிந்ததும் வேறு எங்கும் வெளியே போகாமல், அப்பா நேராக வீட்டுக்கு வந்தார். ஆனால், மூன்றாவது நாள், அவர் படபடப்பாகவும் பதட்டமாகவும் காணப்பட்டார்; அன்று இரவில் எங்கு செல்கிறார் என்ற விவரம் ஏதும் கூறாமலேயே திடீரென்று வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார். அன்றும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் அவர் வீட்டைவிட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு அம்மா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை; எந்த வார்த்தையும் பேசவுமில்லை. பின்னர், ஒருமுறை, ஒரேயடியாக, நான்கு நாட்களாக அவர் வீட்டுக்கு வராமலிருந்தபோது, மறுநாள் அவள், என்னை அவளது படுக்கையறைக்கு அழைத்து, ஒரு பென்சிலும் வெள்ளைத்தாளும் எடுத்துக்கொண்டு வருமாறு சொன்னாள். நான் அவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்ததும் அவள் கடிதம் ஒன்றை எழுதத் தொடங்கினாள்.
அவள் எழுத, எழுத, வார்த்தைகளைத் தாளில் எழுதுவதென்பது அம்மாவுக்கு எவ்வளவு சிரமமாக இருந்ததென்பதை, நான் கவனித்தேன். குறிப்பினை மடித்த பிறகு எதுவும் சொல்லாமல் என்னிடம் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.
‘’இதை அப்பாவிடம் கொடுத்துவிடச் சொல்கிறாயா?’’ நான் கேட்டேன்.
பதில் சொல்வதற்குப் பதிலாக, அவள் என் கண்களில் உறுத்துப் பார்த்து, அமைதியாக, ஆமெனத் தலையாட்டினாள்.
முந்தைய முறை நான் அப்பாவைத் தேடியதுபோலில்லாமல், இப்போது, எங்கு தேடினாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கமாக, அவர் செல்கின்ற வீடுகள் எதிலும் அவரைக் காணவில்லை. நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக, நான் ஊரைச் சல்லடையிட்டுத் தேடியும் எந்தப் பயனுமில்லை; ஆனால், அம்மாவின் முகம் என் கண்களிலேயே நின்றதால், அப்பாவைத் தேடிக் கண்டுபிடிக்காமல் என்னால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. கடைசியில் மொத்த நம்பிக்கையும் இழந்து, களைப்புடன் ஓய்வெடுப்பதற்காக, சாலையோரப் புளியமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தேன்.
துயரமான எண்ணங்கள் எழுந்து மனம் முழுதும் நிறைத்தன: அப்பாவின் புத்தகங்களைக் காவல் துறை பறிமுதல் செய்தது, அப்பா முதலீடு செய்திருந்த வங்கி மூடப்பட்டது, திவாலான கூட்டுறவுகள், அப்பாவின் பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்தது, மவுனமாகிப்போன நகலெடுப்புக் கருவிகள், ஊமையாகிப்போன தட்டச்சு எந்திரங்கள்…. பிம்பங்களின் படையெடுப்பு மேலும் மேலுமாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. கெட்ட காலத்தின் உணர்வு திடீரென மேலெழுந்து என்னை அழுத்தி வீழ்த்தவே, நான் மரத்தின் அடிப்பக்கமாகச் சாய்ந்து, அதன் திடத்தன்மையில் கொஞ்சத்தினையாவது உறிஞ்சி எடுத்துக்கொள்வதுபோல, அடிமரத்தில் முதுகு அழுந்திப்படுமாறு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
காற்சட்டைப் பைக்குள் துளாவி, அம்மா எழுதிய கடிதத்தை வெளியே எடுத்தேன். அதைப் பிரித்து வாசிப்பதற்கு நான் முழுவதுமாகவே பயந்தேன்; என்றாலும் என்னால் அதைப் படிக்கும் எண்ணத்தினை என்னால் தடுக்கமுடியவில்லை:
என் வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பற்றி உங்களுக்குக் கவலையே கிடையாதா? தயவுசெய்து வீட்டுக்கு வாருங்கள்!
பிறக்கப்போகும் உங்கள் குழந்தை அறிவும் மதிப்பும் மிக்க ஒரு மனிதனாக வேண்டுமென, எல்லாம் மிகுந்த வல்லமையின் முன் தலை தாழ்த்திப் பிரார்த்தனை செய்து குழந்தையைக் கவுரவியுங்கள்.
இந்தக் கடிதம் கிடைத்தபிறகும் வீடு வந்து சேர உங்களுக்கு விருப்பமில்லையெனில், நான் மரணிக்கட்டுமென்றும், பிறக்கப்போகும் குழந்தையை நான் கல்லறைக்கு என்னுடன் எடுத்துப்போகவுமாக எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
நான் அழத் தொடங்கினேனென்றாலும், திடீரென்று, கடிதத்தைத் திரும்பவும் மடித்துப் பைக்குள் திணித்துவிட்டு மீண்டும் ஒருமுறை அப்பாவைத் தேடுவதெனத் தீர்மானித்தேன். முடிவில், ஒரு சீன மனிதனின் வீட்டின் பின்புறம் சூதாடிக்கொண்டிருந்த அப்பாவை நான் கண்டுவிட்டேன்.
முன்பு போலவே என்னைப் பார்த்ததும் அப்பா கோபமாகத் தோன்றினாலும், நான் நீட்டிய கடிதத்தை வாங்கிக்கொண்டார்.
அன்றைய இரவில் அப்பா வீட்டுக்கு வந்தும் அம்மாவின் அறைக்கு நேரடியாகச் செல்லவில்லை. பதிலாக, முன் அறையிலேயே தங்கி குழந்தைகளுடன் பேசினார். அவரது குரல் இயற்கையாக இல்லாமல், எங்களுக்காக இல்லாமல், அம்மாவுக்குக் கேட்கவேண்டுமென்பதற்காகவே, வலிந்து உரத்துச் சத்தமாகப் பேசுவதாக என் காதுகளில் கேட்டது.
இரவுகளில் அப்பா வெளியில் செல்லாமல் ஒரு வாரம் கழிந்தது. அந்த வாரம் முழுவதும் அவர் இரவுகளில் வீட்டிலிருந்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எழுதவும் படிக்கவும் உதவி செய்தார். ஆனால், அடுத்த வாரத்தில் ஒரு நாளில் அப்பாவின் நண்பர்கள் மூன்று பேர் வீட்டில் தலைகாட்டினர். அந்த நேரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: அது பிற்பகல் இரண்டு மணி. விருந்தினருக்குச் சிற்றுண்டி அளிக்குமாறு அப்பா என்னைப் பணித்தார். குடிப்பதற்காக எதையோ கொண்டுவந்து, கொடுத்துவிட்டு, நான் அந்த அறையையே, இயல்பாகச் சுற்றிவந்தேன்.
கால் மணிநேரம் போல அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா, அவர்களிடம் இதோ வருகிறேனென்று அனுமதி கேட்டுக்கொண்டு, அம்மாவைப் பார்ப்பதற்காக அவளது அறைக்குச் சென்றார். அம்மாவிடம் அவர் என்ன சொன்னாரென்பதை நான் கேட்கவில்லை; ஆனால், வழிக்கூடத்தில் நடைபயின்றுகொண்டிருந்த, என் காதுகளில் அம்மா கோபமாக, உரத்துச் சொன்னது கேட்டது: “ குழந்தைகள் இருக்கும் வீடு, இது. இதைச் சூதாட்டக் கூடமாக்க நான் அனுமதிக்கமாட்டேன்.’’
விருந்தினர் அமர்ந்திருந்த முன்னறைக்குத் திரும்பிவந்த அப்பா, அங்கிருந்து நானூறு மீட்டர் தொலைவில் எங்களுக்குச் சொந்தமாக இருந்த ஒரு காலி வீட்டிற்கு அவர்களை அழைத்துச்சென்றார்.
எனக்குத் தெரிந்தவரையில், அப்பாவின் விருந்தினர்களை அம்மா வரவேற்று உபசரிக்காமலிருந்தது, அந்த ஒருமுறை மட்டுமே. அதைவிடவும் வியப்பாக நான் கண்டது என்னவென்றால், அன்று, அப்பாவும் அவரது விருந்தினர்களும் அவர்களாகவே காலிவீட்டுக்குச் சென்ற பின்னர், அம்மா படுக்கையிலிருந்தும் விரைவாக எழுந்து, சமையலறைக்குள் புகுந்து, உணவுக்குப் பிந்தைய இனிப்பு வகைகளில் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ரொட்டிப் புட்டு செய்யத் தொடங்கினாள். கூடுதல் ருசிக்காக மாவுடன் பாலாடைக்கட்டியை அதிகமாகச் சேர்த்துப் பிசைந்தாள். மாலையில், உலை அடுப்பிலிருந்து புட்டினை வெளியே எடுத்தபின், என்னிடமும் நான்கு வளர்ப்புச் சகோதரர்களிடமும் அதனைக் கொண்டுபோய் அப்பாவும் அவரது விருந்தினர்களும் சூதாடிக்கொண்டிருக்கும் வீட்டில் கொடுத்துவரச் சொன்னாள்.
புட்டு மற்றும் அம்மா அனுப்பியிருந்த இதர உணவு வகைகளுடனான தட்டுகளைப் பார்த்ததும் அப்பா மிகவும் வியப்படைந்ததாக எங்களுக்குத் தோன்றியது. உணவு வகைகளைப் பரிமாறி முடித்த உடனேயே நாங்கள் கிளம்பிவிட்டோம்; ஆனால், எதனாலோ தெரியவில்லை, அன்று மாலை நாங்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்களுக்குள் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை.
* * *
சற்றும் எதிர்பாராத ஒரு நாளில், அந்த வயதான லூரிக் நெசவுப்பெண் அம்மாவைப் பார்ப்பதற்காகக் கிராமத்திலிருந்து வந்தாள். அம்மா, அவளது விருந்தாளியை வரவேற்பதற்காக முன் வாசலுக்குச் சென்றபோது, நானும் அவள் பின்னாலேயே தொற்றிக்கொண்டு சென்றேன்.
அம்மாவைப் பார்த்தவுடனேயே ‘’ லூரிக், இப்போது, அவ்வளவாக விற்க மாட்டேனென்கிறது,’’ என்றாள், அந்த வயதான பெண். ‘’எங்களுக்கு எந்தப் பணி ஆணையும் கிடைக்கவில்லை. எங்கள் கையிலிருக்கும் இருப்பு கூட விற்கவில்லை; கிராமத்து ஆட்கள் மட்டுமே வாங்குகிறார்கள்; அவர்களிடமும் செலவுக்குப் பணம் இல்லை. நீங்கள் கொஞ்சம் பணி ஆணை கொடுக்க விரும்புவீர்களா?’’ என அவள் கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அம்மா, அவளால் எவ்வளவு முடியுமோ, அந்தளவுக்கு மென்மையாக மறுத்து, அணியப்படாத லூரிக் ஆடைகள் அலமாரியில் நிறையவே அடுக்கியிருப்பதை விவரித்தாள்.
‘’சுதேசி நாட்களெல்லாம் முடிந்து விட்டதென்றுதான் நினைக்கிறேன்,’’ என்று கண்களில் நீர் தளும்பச் சுரத்தேயில்லாமல் சொன்னாள், அம்மா. அவளைப் பார்க்க வருபவர்களிடம் நேரம் காலமில்லாமல் பேச விரும்பும் அம்மா, இப்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் நின்றதாகத் தோன்றினாள்.
நெசவுப்பெண் ஆமெனத் தலையாட்டினாள். குனிந்த தலையும், குறுகிய தோள்களுமாகத் திரும்பிய அவள் தளர்ந்த நடையில் வீட்டைவிட்டும் மெதுவாக வெளியேறினாள்.
அம்மா சொன்னது சரி – அல்லது அப்படித் தோன்றியது, சுதேசி நாட்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதும் முடிந்து போயின. இப்போது சோகம் பீடித்த உணர்வு எங்கள் சிறிய நகரம் முழுக்கப் பரவியது. இப்போதெல்லாம், மக்கள், உதயமாகப்போகும் எங்கள் தேசம் குறித்த கனவுகள், பெருமைகளைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. மேற்கொண்டும் ஐம்பது காவலர்களை அரசு தேர்வு செய்யவிருப்பதாகச் செய்தி பரவியது. களவும் கொலையும் சூதும் கூடிக்கொண்டே போயின.
வீட்டில், நகலெடுப்புக் கருவிகளும் தட்டச்சு எந்திரங்களும் அவற்றின் பெட்டிகளில் மீண்டும் வைத்துக் கட்டப்பட்டன. சில நாட்கள் கழிந்ததும், வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றையும் எடுத்துப்போகச் சிலர் வந்தனர். நம் வீட்டுப் பொருட்களுக்கு என்னவாகிறதென நான் அம்மாவைக் கேட்டபோது, அவளால் தலையை மட்டுமே குலுக்கிக்கொள்ளமுடிந்தது. பிற்காலத்தில்தான், அந்தப் பொருட்களெல்லாம் என் அப்பா செலுத்தவேண்டிய கடன்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிந்துகொண்டேன். இதற்கிடையில், அவர் மீண்டும் ஒருமுறை காணாமல் போனார்.
அதே நாள் இரவில் அம்மாவின் பனிக்குடம் உடைந்தது. அது நிகழ்ந்ததும், அம்மா, குழந்தைகளையெல்லாம் அழைத்து, என் வளர்ப்பு சகோதரர் ஒருவரிடம் அப்பாவைத் தேடிப்பிடிக்குமாறு கூறினாள். இன்னொருவரை பேறுகால மருத்துவப்பெண்ணை அழைத்துவரச் சொன்னாள். வேலைக்காரர் தண்ணீர் கொதிக்கவைக்க உதவுமாறு என்னிடம் கூறினாள்.
இரண்டு மணி நேரமான பிறகும், அம்மாவின் ஆணைகளை நாங்கள் இருவர் மட்டுமே நிறைவேற்றியிருந்தோம். அப்பாவைத் தேடிப்பிடிக்குமாறு கூறப்பட்ட வளர்ப்புச் சகோதரர் தனியாகவே வீட்டுக்கு வந்தார். ஆனால், குழந்தை பிறக்கத் தயாராக இருந்தது. எனவே வீட்டில் அப்பா இல்லாமலேயே எனது புதிய சகோதரன் பிறந்தான். அவன் வீலெனக் கத்தியபோது, நாங்கள் எல்லோருமே விடுதலைப் பெருமூச்சினை வெளியிட்டோம். அவனது கத்தல் ஆரோக்கியமான அழுகையாக இருந்தது.
அடுத்த நாள் காலை, நான் முன்பாதங்களில் நடந்து, என் தம்பியைப் பார்ப்பதற்காக அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது, அவள் புன்னகையோடு வரவேற்றாள். என் தம்பி, அம்மாவின் அணைப்பிலேயே அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அம்மாவின் முகத்திலிருந்து, அத்தனை துயரமும் வேதனையும் வடிந்துபோனதாகத் தோன்றியது.
என் தம்பியை முத்தமிடுவதற்காக, நான் குனிந்த போது, அப்பா திடீரென்று அறைக்குள் விரைந்து நுழைந்தார்.
‘’ஆம்பளைப் பிள்ளை’’ அவர் மகிழ்ச்சியில் உரக்கவே கத்தினார். ‘’ அப்பா, அம்மாவை விடவும் பெரியவனாக, நல்லவனாக வளரப்போகிற ஒரு ஆண்மகன்.’’
அம்மா, அவரை இறுக்கமாகவே உறுத்து நோக்கினாள். பின்னர், அவள் வலிமையெல்லாம் இழந்துவிட்டதாகத் தோன்றிய ஒரு மெல்லிய குரலில், ஆனால் வித்தியாசமான பெருமிதம் தொனிக்கும் வகையில், சொன்னாள் : ‘’ஆமாம், உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான். மகன், உங்களிடமிருந்தோ, இந்தக் காலம் அல்லது இடத்திலிருந்தோ எதுவுமே பெற்றுக்கொள்ளாமல், அவனாகவே வளரப்போகிற ஒரு மகன்.’’
அம்மா வேறு என்ன சொன்னாளென என் காதுகளில் கேட்கவில்லை; அமைதியாக, அறையிலிருந்தும் நழுவி வெளியேவந்தேன்.
* * *
ஆக, என் பெற்றோரின் நான்காவது குழந்தை பிறந்த நேரத்தில், நாட்டின் சுயசார்புத் தன்னிறைவுக் கனவு இறந்துகொண்டிருந்தது. முடிவில், அனைத்துமே முன்பிருந்தது போலவே, திரும்பி, என் சொந்த ஊரான ப்ளோராவில் அமைதியும் சமாதானமும் நிலவியது. உதயத்தின் மெல்லொளிக் கருக்கல் நேரம் பிறந்தது; காலைக் கதிரவன் உதயமாகும் முன்னர் முதலில் இருள்தான் விலகுமென்பதைத்தான் நாம் அறிவோமே!
நன்றி : http://www.warscapes.com/retrospectives/indonesia/twilight-born
மலைகள்  Feb. 01, 2016இதழ் 91 பிப்ரவரி இதழில் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment