இறைச்சி Meat
பிரேசிலியன் : செர்ஜியோ டவாரெஸ் SÉRGIO TAVARES
ஆங்கிலம் : ராஃபா லம்பார்டினோ RAFA LOMBARDINO தமிழில் ச.ஆறுமுகம்
செர்ஜியோ டவாரெஸ் பிரேசிலின் ரியோ டி ஜெனிரா மாநிலத்தில் நிட்டெரோய் நகரத்தில் 1978ல் பிறந்தவர். அவர் ஒரு பத்திரிகையாளர், புத்தகத் திறனாய்வாளர் மற்றும் புனைகதைப் படைப்பாளர். அவரது படைப்புகள் பிரேசில் நாளேடுகள் மற்றும் சிற்றிதழ்களில் வெளியாகின்றன. இரண்டு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. அவற்றில் Cavala (“Mackerel,” 2010), ‘’கானாங்கெழுத்தி’’ தொகுதி National Sesc Literary Award தேசிய இலக்கிய விருதினை வென்றுள்ளது. ரியோ டி ஜெனிராவிலுள்ள School of Public Service Foundation (Fesp) என்ற அமைப்பு 2005ல் நிகழ்த்திய இலக்கியப் போட்டியிலும் இவர் வெற்றி பெற்றுள்ளார்.
பிறந்தநாளை மையக்கருத்தாகக் கொண்டு உலகம் முழுவதும் எண்ணிலடங்காத சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஜப்பானிய எழுத்தாளர் முரகாமி `பிறந்தநாள் கதைகள்` என்ற பெயரில் ஒரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அந்த நூலுக்காகவே ஒரு பிறந்தநாள் கதை எழுதி அத்தொகுப்பில் சேர்த்தார். தற்போது தமிழாக்கம் செய்யப்படுகிற கதையும் பிறந்தநாள் கதைதான் என்றபோதிலும், இக்கதை ஏற்படுத்துகின்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டுவருவது அத்தனை எளிதல்ல.
*******
ஏனெனில், அது, அவனது பிறந்த நாளாக இருந்தது. `இது வேண்டும், அது வேண்டும்` எனத் தேர்வுசெய்வதற்கான வாய்ப்புக்கே இடமில்லாமலாகிப்போன வாழ்க்கையில் அவன் அப்படியொன்றுக்கு முன்னுரிமை கொடுத்ததற்கான ஒரே காரணம், அதுதான். எந்தப் பொம்மையும் தேவையில்லையென்று அவன் அவனது அப்பாவிடம் சொல்லிவிட்டான்; தினமும் பீன்சும் சோறும், தின்று, தின்று அலுத்துப் போயிருந்தான்; ஏன், சிலநேரம் முட்டைகள் கூடச் சாப்பிட்டிருக்கிறோமே என்று அவனது அப்பா வாதிட முயற்சித்தார். ஆனால், அது எப்போதாவது அபூர்வமாக இடம்பெறுகின்ற ஒன்று : மதியத்துக்கும் சரி, இரவுக்கும் சரி, சோறும் பீன்சும்தான்.
பையன் இறைச்சி கேட்டான். அதுவே அவன் கேட்ட பிறந்தநாள் பரிசு. நல்ல, பெரிய, கட்டித் துண்டாக வாட்டிய இறைச்சி –– வெங்காயமும் இதர பொரிப்புகளும் சேர்ந்த ஸ்டீக். தெருவில் மிட்டாய் விற்கும்போது, அவன் ஒருநாள் அதைப் பார்த்திருந்தான். தோள்வார் காற்சட்டை அணிந்த ஒரு பருத்த மனிதர் சிற்றுண்டி விடுதியின் கண்ணாடிச் சுவற்றுக்குப் பின்புறமாக அதைத் தின்றுகொண்டிருந்தார். அந்தப் பருத்த மனிதர் அதை வெள்ளிக் கரண்டி, கத்தி மற்றும் முட்கரண்டிகளால் ஒவ்வொரு அசைவிலும் திருப்தியை வெளிப்படுத்திக்கொண்டு, சாப்பிட்டார்; இறைச்சித் துண்டினைக் கத்தியால் வெட்டும்போது, அதிலிருந்து வடிந்த செம்பழுப்புநிறக் குழம்புச்சாறு அந்தச் சோற்றுப் படுக்கையின் மீது ஊறிப் படிந்தது. கைக்கும் திறந்த வாய்க்குமாகக் கையசைவுகள் மற்றும் மணிக்கட்டு மூட்டு வளைவுகள்; மெல்லுதல் மற்றும் சுவைத்தலின் இயக்க அசைவுகள்; பையன், கண்களை மூடிக்கொண்டு, எச்சில் ஊறும் நாக்கைச் சுழற்றி, அவனது பருத்த உதடுகளை ஈரமாக்கி, காரத்தின் ஆனந்தச் சுவையை அனுபவித்து, அவனறியாத அந்த அசைவுகளை மெதுவாக மீண்டும் மீண்டுமாகச் செய்து, அவனது அப்பாவிடம் ஒவ்வொரு கணத்தையும் விவரித்துக்கொண்டிருந்தான்.
அதனால்தான், அவன் கூடுதல் நேரம் வேலைசெய்யத் தீர்மானித்தான். பையனுக்காக; மகனின் பிறந்த நாள் பரிசாக வாட்டிய ஒரு இறைச்சித் துண்டு- ஸ்டீக் – கொடுப்பதற்காக. காலை 6.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை அவன் வேலைசெய்யத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. திங்கள் முதல் சனிவரை. பையனின் பிறந்தநாள் முடியும் வரையிலான இரண்டு வாரங்களுக்கு இரு பணி நேரங்களும், அவன் வேலைசெய்கிற மாதிரி, மளிகைக்கடை உரிமையாளர், திருவாளர் நோட்டாவிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக அவன் கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க நினைத்தான்; யாருக்குத் தெரியும், கொஞ்சம் கேக்குகளும் – பிறந்த நாளுக்காகத் தயாரிக்கப்படும் தட்டுக்கேக் வகைகளில் ஒன்று கூட – கிடைக்கலாம். காது மடலில் பென்சில் செருகியிருந்த அந்த வயதான போர்த்துக்கீசியர், அவரது பணியாளின் கன்னத்தில் செல்லமாக இரண்டுமுறை தட்டிவிட்டு, ‘’நல்லது, இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் பணம் கொடுக்கிற நீ ஒரு நல்ல அப்பா.’’ என்றார்.
அதனால், அது அப்படியானது: அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து, பல்விளக்கவோ, காப்பி குடிக்கவோ நேரம் இல்லாமல், தொடர்வண்டியைப் பிடிக்க ஓடி, மளிகைக் கடைக்குப் போய், சரக்கு ஊர்திகளிலிருந்து பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மாவு மூட்டைகள் எல்லாச் சுமைகளையும் வளைந்த முதுகில், அவனது முரட்டுத் தோள்களில் ஏற்றி, கடைக்குள் இறக்கவேண்டும். பொருட்களையெல்லாம் அதனதன் இடத்தில் அடுக்கி வைத்துவிட்டு, தரையைப் பெருக்கிச் சுத்தம்செய்து, முதல் வாடிக்கையாளர்களுக்கு உதவி, அரைப் பவுண்டு வெள்ளைக் காராமணியும், அரைப் பவுண்டு மக்காச்சோளமும் அந்தப் பெண்ணுக்கு எடைபோட்டுவிட்டு, மளிகைப்பொருட்களை சில வீடுகளுக்குக் கால்நடையாகவும் வேறு சில வீடுகளுக்கு மிதிவண்டியிலுமாகக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, ஆறி அவலாகக் குளிர்ந்திருக்கும் சோற்றையும் பீன்சையும் வழக்கமான பாத்திரத்திலிருந்து தின்றுவிட்டு, இது எல்லாவற்றையும் பிற்பகலும் மீண்டுமொருமுறை செய்யவேண்டும். திங்கள் முதல் சனி வரை இப்படியேதான். களைப்பும் சோர்வும் சொல்லமுடியாதபடி அவனை அழுத்தும்போது, எல்லாம், பையனுக்காகத் தானே என்று அவன் நினைத்துக்கொண்டான். ஏனென்றால், அது அவனது பிறந்தநாள். அவ்வளவுதான். அவன் உடம்பு வலிக்கு அப்படியொரு அடி வேண்டியிருந்தது.
இன்று வரைக்கும். அப்பாடா, இன்றுதான் அந்த நாள். வேலைக்குக் கிளம்பும் முன், அவன் படுக்கையறைக்குள் முன் பாதங்களால் நடந்து, பையனின் சுருட்டை முடியில் முத்தமிட்டான். பையன் அவனது ஐந்து சகோதரர்களோடு பாயில் பங்கு போட்டுப் படுத்திருந்தான். மகிழ்ச்சியான பிறந்தநாள், மகனே! அவன் எழுந்து ஓடினான். விரைவிலேயே தூக்கத்தை உதறித் தள்ளிவிட்டு, உணவுப் பாத்திரத்தைக் கால்களில் இடுக்கிக்கொண்டு, தொடர்வண்டியில் அமர்ந்திருந்தான். சுமை இறக்குதல், அந்தந்த இடங்களில் பொறுப்பாக அடுக்கிவைத்தல், பெருக்குதல், உதவுதல், எடையிடுதல், வீடுகளுக்குக் கொண்டுபோய்க் கொடுத்தல், மதியத்துக்குச் சோறும் பீன்சும். திருவாளர் நோட்டாவ், மீசையில் ஒட்டிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றை மென்றுகொண்டே, உன்னிடம் சிறிது பேசவேண்டுமென்று சொல்லிக்கொண்டே வந்தபோதுதான், அவன் நான்காவது கரண்டிச் சோற்றினை வாய்க்குள் போட்டான். அவன் தரையில் அமர்ந்திருக்க, அவனது மடியில் டப்பா இருந்தது; வயதான அந்த போர்த்துக்கீசியர், ஏற்கெனவே சொன்னது போலப் பணம் கொடுக்கமுடியாதெனச் சொல்லிக்கொண்டிருந்ததை, ஆறிப்போன சோறும் வாயுமாக, அவன் கவனித்துக்கொண்டிருந்தான். சரக்குதார்களுக்குத் தீர்க்கவேண்டிய கடன், வானளவுக்கு ஏறிவிட்ட தக்காளி விலை, இன்னும் என்னென்னவோ சாக்குப்போக்குகள். அவனால் மேற்கொண்டு சாப்பிடமுடியவில்லை. அவன் கோபத்தின் நெருப்பில் எரிந்துகொண்டிருந்தான். முறிந்துபோன ஒப்பந்தத்திற்காக அல்ல; பையனின் ஏமாற்றத்தின் முன் நிற்கப்போகின்ற கையாகாலாகாத்தனத்திற்காக. கயிற்றுச் சுருணைக்கு விரைந்து நடந்து, கத்தியை எடுத்து காற்சட்டைப்பைக்குள் மறைவாக வைத்தான்.
சுட்டெரிக்கும் கோபம் போய்விடவில்லை. நெருப்பு அவனை எரிக்க, எரிக்க, அவன் கோபத்திற்குத் தூபம் போட்டுக்கொண்டிருந்தான். வேலைநாளின் முடிவில், அந்த வயதான போர்த்துக்கீசியரின் மனைவி எட்டுமணித் தொலைக்காட்சித் தொடர்நாடகம் பார்க்க உள்ளே போனாள். மளிகைக்கடைக்குள் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே தனியாக இருந்தார்கள். திருவாளர் நோட்டாவ் நோட்டுப் புத்தகமும் பென்சிலுமாக, அவனுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, அன்றைய கணக்கைக் கூட்டிக் கழித்துக்கொண்டிருந்தார். அவர் அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கு மட்டுந்தான் அறை முழுவதுக்குமான வெளிச்சமாக இருந்தது. அவன் நிழலில் மறைந்து, கைநகங்கள் உள்ளங்கையில் அழுந்திப் பதியுமாறு, கத்தியின் கைப்பிடியை இறுக்கிப் பிடித்து உருட்டிக்கொண்டிருந்தான். அவன் கணக்கை முடித்துவிட எண்ணினான்.
உட்கார்ந்திருந்த மேசை விளிம்பின் நீட்சியை உரசிக்கொண்டிருந்த அவன், பையனின் முகத்தின் எடையில் நொறுங்கிக்கொண்டிருந்தான். தீ கொழுந்து விட்டெரிகிறது. படைத்தவனே இல்லாமற்போகும்படி, அவனை அழித்துவிட நினைக்கிறான்; அந்தத் தடித்த கழுத்தை நோக்கி, கத்தியின் கூர்முனையோடு நகர்கிறான். இருந்தாலும், அந்த மனிதரின் அருகில் செல்லச்செல்ல, அவனுடைய ஆறு மகன்களும் அவன் நெஞ்சுக்குள் எழுகின்றனர்; அவன் கைதாகிவிட்டால், அவர்களுக்கு என்னவாகும்? குற்றம் ஒன்றினைச் செய்யும்போது கொல்லப்பட்டுவிட்ட அவனது சகோதரனின் மகன்களுக்கு நேர்ந்த கதிதானே அவர்களுக்கும் ஆகும்: பையன்களும் குற்றவாளிகள் ஆனாகிப்போனார்கள், விடாமல் தொடரும் சுற்று வட்டம். அவன், அவனது குழந்தைகளுக்கும், அதையேதான் விரும்புகிறானா? அவன் கத்தியை மடக்கித் தூரமாக வைத்துவிட்டு, காசாளரைவிட்டும் அகன்றான். மூடியிருந்த இரும்பு உருளைக் கதவிலிருந்த சிறிய வாசல் வழியாக அவன் வெளியே காலெடுத்து வைக்கும்போது, அவனைப் பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டான். அவன் தலையைத் திருப்பி, நோக்கியபோது, பத்து ரியால் நோட்டு ஒன்றைக் கண்டான். ‘’எடுத்துக்கொள், இப்போதைக்கு இதுதான் என்னால் கொடுக்கமுடிந்தது. போயி, பையனுக்கு எதாவது வாங்கிக்கொடு.’’
பத்து ரியால்களை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யமுடியும்? தொடர்வண்டிச் சீட்டுக்கும் ஒரு வாய்க் கச்சகா1வுக்கும் போக என்னதான் மிஞ்சிவிடும்? கச்சகா உள்ளே போகாமல், அவனால் முகம் காட்டமுடியாது. வேறு வழியில்லாமல், கழுத்தில் சங்கிலி மாட்டி, இழுக்கப்படும் நாய் தரையோடு தரையாக நகர்வதைப் போல, அவனும் நகர்ந்து செல்கிறான். சந்தைக்குள் நுழைந்து, உருளைக்கிழங்கு, வெங்காயம், துண்டு கேக் பொதி ஒன்று மற்றும் கொஞ்சம் ரொட்டி போண்டாக்கள்2 வாங்குகிறான். கடையில், காட்சிக்காகத் தொங்கவிட்டிருக்கும் இறைச்சித் துண்டுகளைப் பார்க்கிறான்; ஆனால், அவனிடம் ஸ்டீக் வாங்குவதற்கு – இரண்டாம் தர ஸ்டீக் – வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லை. பையனுக்கு ரொட்டி போண்டா பிடிக்கலாமென அவன் நினைக்கிறான். பையன், நிச்சயமாக, வாழ்க்கையில் ரொட்டி போண்டா சாப்பிட்டேயிருக்கமாட்டான்; புதிதாக எதையாவது கொடுத்து, ஸ்டீக்கின் ருசியை மறக்கச் செய்துவிடலாமென அவன் நம்பினான். அது மட்டுமல்ல; ரொட்டி போண்டாக்களைத் துண்டுகளாக்கி எல்லோருக்குமாகக் கொஞ்சம் அதிகமாகவே பங்குபோட்டுக் கொடுக்கமுடியும். விரைவிலேயே மாறிவிடக்கூடியதென்றாலும் போதையின் மயக்கத்தில், அவன், தொடர்வண்டி நிலையத்துக்கு ஒரு சில அடிகள் தூரத்திலேயே இருந்ததால், அதே நம்பிக்கையைப் பிடித்துத் தொங்கினான். வாகனங்களின் போக்குவரத்து மற்றும் சட்டவிரோத வணிகம் தொடர்ந்து மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. அவனால் பையனுக்காக வேறு எதுவும் செய்யமுடியாமலாகிவிட்டது.
அந்த இடத்திலிருந்தும் சென்றுவிடவேண்டுமென, அவன் ரோட்டைக் கடந்து முடித்த பின்னர் தான், அதனைப் பார்த்தான். முதலில் அது, `ஆண்` என்றே நினைத்தான்; ஆனால், பின்னர் தான் அது `பெண்` என்பதைக் கண்டுகொண்டான். அவன் அதைப் பார்த்தான். இருட்டில் மூழ்கியிருந்த சந்து முன்பாக இருந்த ஒரு குப்பைத் தொட்டியின் பின்னால், கிடந்த பெரிய, பெரிய நெகிழிப்பைகளை ஆர்வமாகக் கிளறிக்கொண்டிருந்தது; அவற்றில் சில, ஏற்கெனவேயே ஆக்ரோஷமாகக் கிழிக்கப்பட்டுச் சின்னாபின்னமாகியிருந்தன. அது ஒரு பெரிய நாய். பெரிய இனங்களின் தன்னிச்சையான, கூட்டுக்கலப்பில், தடித்த ஒரு அங்கி போல அடர்ந்த கறுப்பு முடியைப்பெற்றிருந்த அது, சரியான வளர்ப்பிலிருந்தால், இன்னும் அழகாகத் தோன்றியிருக்கும். அதன் மடி, காம்புகள் உப்பி, அதன் முன்னங்கால்களுக்கும் பின்னங்கால்ளுக்கும் இடைப்பட்ட அடிப்பாகம் ஒரு இளஞ்சிவப்புச் சட்டை போலத் தோன்றியது. ஒரு சில நாட்களுக்கு முன்பே குட்டிகளை ஈன்றிருக்குமெனத் தோன்றியது.
அவன், யாராவது இருக்கிறார்களாவெனச் சுற்றிலும் பார்த்துக்கொள்கிறான்; அதனை எச்சரிக்கையுடனேயே அணுகுகிறான். அது நட்புணர்வுடனேயே தோன்றுகிறது. அவன் பையைத் திறந்து ஒரு ரொட்டி போண்டாவை எடுக்கிறான். அதை நாயை நோக்கி, அதன் மீது பட்டுவிடாமல் கவனமாக எறிகிறான். அந்தப் பெண்நாய் எழுந்து நின்று, ஒரு சில தப்படிகளை நிச்சயமில்லாமலே எடுத்து வைத்து, சுற்றிலுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பின் கடைசியில் அதற்கு அளிக்கப்பட்ட உணவினை முகர்ந்துவிட்டு, ஒரு கடி கடித்துப் பார்க்கிறது. அவன் மீண்டும் மீண்டும் ஒவ்வொன்றாக எறிந்து, கடைசியில் மொத்தத்தையும் அதற்கே கொடுக்கிறான். விருந்தினை நாய் சுவைக்கச் சுவைக்க, அவன் சுற்றுமுற்றும் கவனிக்கிறான். ஒரு நீள் வடிவிலான பெரிய உருட்டுக்கல் ஒன்றைக் காணுகிறான். அவன் அதை எடுத்துக்கொண்டு நாயை நோக்கி அரவமில்லாமல் நகர்கிறான். அந்தப் பெண்நாயின் மிக அருகில் நின்றுகொண்டு, கல்லைத் தலைக்கு மேல் உயர்த்தி, மிகச்சரியாக, நாயின் தலையில் போடுகிறான். நாய் அப்படியே கீழே சாய்கிறது; இரத்தம் பீறிட்டுக் குமிழியிடக் கூக்குரலிடுகிறது. அதன் நாக்கு வெளித்தள்ளி, அதன் நுனி, மூக்கின் மேலாக வளைகிறது. அவன் கல்லை மீண்டும் தூக்கிப் போடும் முன் எதிர்க்க முனைகிறது. பின்னர் அவன் வெங்காயத்தோடு உருளைக்கிழங்கையும் தூர எறிந்துவிட்டு, அந்தக் காலிப்பையையே கையுறையாக்கி, நாயைச் சந்துக்கு உட்தள்ளுகிறான்; கையைச் காற்சட்டைப் பைக்குள் நுழைத்து, கத்தியை எடுத்து, அந்தக் கொஞ்ச வெளிச்சத்திலேயே வேலையைத் தொடங்குகிறான்.
வீட்டில் ஒரு விருந்து நடந்தது. பையன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததை அவன் பார்த்ததேயில்லை. வெங்காயம் மற்றும் இதர பொரிப்புகளோடு அப்படிப் பொரித்து வாட்டிய கனத்த இறைச்சித்துண்டினை அவன் சாப்பிட்டான்; வியப்பில் வாய்பிளந்து நின்றான். ஒருவர் தவறாமல் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்; எப்படிப்பட்ட ஒரு விருந்து! அது மாதிரி ஒன்று இதுவரை நிகழ்ந்ததேயில்லை! மீதி கூட ஆயிற்று! பின்னர் அவர்கள் பாடினார்கள்: இனிய பிறந்த நாள்,’’ தட்டுக்கேக் மீது மெழுகுதிரி ஏற்றவில்லையே என்று கூட நினைத்தார்கள். குடும்பம் மேசையின் முன் கூடியது. பையன் முதல் துண்டினைத் தந்தைக்கு அளித்தான். இறுக்கம் நிறைந்த ஒரு தழுவல், பையனின் உடம்பிலிருந்த மென்மையான எலும்புகள் ஒவ்வொன்றையும் அவன் உணர்ந்தான். மிக்க நன்றி, அப்பா! பையனின் உதடுகளிலிருந்து தந்தையின் காதுக்கு. அவன் பையனிடம், உறுதி அளித்தான்: இறைச்சி சாப்பிடுவதற்காக அடுத்த பிறந்தநாள் வரை காத்திருக்கவேண்டியிருக்காது. மீண்டும் அப்படி நிகழாது.
••••••••
குறிப்புகள் :-
கச்சகா1 – கரும்புச் சாற்றில் தயாரிக்கப்படும் மலிவான வெண்ணிற ரம்.
ரொட்டி போண்டா2 –இரண்டு வட்ட ரொட்டிகளின் நடுவில் இறைச்சித் துண்டுகள் சேர்த்தும் சேர்க்காமலும் காய்கறிகள், மசாலா கலந்த பூரணம் வைத்து தயாரிக்கப்படுவது. ஆங்கிலத்தில் இது hot dogs எனப்படுகிறது.
நன்றி : http://www.brazilianshortstories.com/brazilian-stories/meat
மலைகள் இணைய இதழ் பிப்ரவரி01, 2016 இதழ் 91 ல் வெளியானது.
No comments:
Post a Comment