Monday, 4 January 2016

போஸ்ட் மார்ட்டம்
பாபநாசப்பெருமாள்
காலை 7.00 மணிக்கு நீதிபதியும் அதிகாரிகளும் வந்துவிட்டனர். நிபுணர்கள் வந்திருக்கவில்லை. பாலத்தின் மீதும் ஆற்றினுள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்த காலனியும் அங்கே கூடிவிட்டதாகத் தோன்றியது. எல்லோர் முகத்திலும் ஆவேசமும் ஆர்வமும் பரபரப்பும் தெரிந்தது. காற்றில் துயரம் கலந்திருந்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவியது. கடப்பாரைமண்வெட்டிகளுடன் தோண்டுபவர்கள் இருவர் தயாராக இருந்தனர். புதிதான சவப்பெட்டியுடன் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சி வீடியோ கிராபர்களும் தாமதமாவதற்காக அலுத்துக்கொண்டனர். டாட்டா-சுமோ ஒன்றில் நிபுணர்கள் மூவர் வந்திறங்கினர். ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராக இருந்தார். மற்ற இருவரும் கொங்கணி பேசும் கோவானியர்கள். நீதிபதிஅதிகாரிகள்நிபுணர்கள் எல்லோரும் கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டார்கள். வாய்மூக்கை மறைக்கும் வெள்ளைத் துணிகளைக் கட்டிக் கொண்டார்கள். சீருடைக் காவலர்கள் இல்லாததைக் கவனித்த நீதிபதிஅதிகாரியிடம் அது பற்றி வினவினார். காவல் நிலையத்தில் சித்திரவதைச் செய்துக் கொன்றுவிட்டதாகப் புகார் செய்திருக்கும் நிலையில் பிணத்தை எடுக்கும்போது காவலர்கள் இருந்தால்,பதற்றம் அதிகமாகிஏதாவது பிரச்சனை ஏற்படலாம் என்பதால் காவலர்கள் அங்கே செல்லவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததையும்சாதாரண உடையில் அதிரடிப் படையினர் கும்பலோடு கும்பலாகக் கலந்து நிற்பதாகவும்பத்திரிகைதொலை காட்சியினரும்கூட சடலத்தைப் படம்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படியும்,நிர்வாகம் வாய்மொழியாக எச்சரித்திருந்தது எனவும் அதிகாரி நீதிபதிக்கு மட்டும் கேட்கும் தணிந்த குரலில் விளக்கிக் கூறினார். ஆனால் அது எல்லோரும் அறிந்த ரகசியமாகவே இருந்தது.
இறந்தவனின் மனைவி காட்டிய இடத்தில் தோண்ட ஆரம்பிக்கும்போது,காலை ஒன்பது மணியாகிவிட்டது. சிலர், ‘அந்த இடம் இல்லைவேறு இடம்என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். வெட்டியான் உறுதியாகச் சொன்ன அந்த இடத்திலேயே தோண்ட ஆரம்பித்தார்கள். கிராம நாட்டாமை போலத் தெரிந்த ஒருவர் அப்படி தோண்டுமண்ணை எட்டிப் போடு எனக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றவர்களும் ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல ஆரம்பித்தனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ‘இது அக்கறையோடும் பொறுப்போடும் கவனமாகச் செய்ய வேண்டிய வேலை;மிகவும் சென்ஸ்டிவ்வான விவகாரம்என்று கையை நீட்டி நீட்டிப்பேசிக் கொண்டிருந்தார். வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் என்ற அட்டையைச் சட்டையில் அணிந்திருந்த ஒருவரும் அங்கிருந்தார். ஆளுங்கட்சியின் உள்ளூர்ச் செயலாளர்எதிர்க்கட்சிப் பிரமுகர்ஊராட்சித் தலைவர்பிரதிநிதிகள்இன்னும் பலரும் இருந்தனர். இறந்தவனின் மனைவிகாவல் துறையை அசிங்கம் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே இருந்தாள். அவளது அழுகையும் ஓலமும் இரங்கத்தக்கதாக இருந்தது.
கேமராக்களும் வீடியோக்களும் உன்னிப்பாகப் பதிவு செய்யத் தொடங்கின. சுற்றி நின்று சலசலத்தவர்களை அதிகாரிகாரியொருவர் தள்ளிநிற்குமாறு வேண்டியபடி இருந்தார். யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சுமார் மூன்றடி ஆழம் தோண்டுவதற்குள்ளாகவே இரு தொழிலாளிகளும் கலைத்துப்போனார்கள். அவர்கள் போதையில் தள்ளாடி விழுந்தார்கள். நிர்ப்பந்தத்தின் பேரில் சிப்பந்திகள் தோண்ட ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டடி தோண்டியபோதுதுர்நாற்றம் எழத் தொடங்கியது. எல்லாரும் மூக்கைப் பிடிப்பதும் தேய்ப்பதும் பொத்திக் கொள்வதும், ‘ச்சைஎன்று அருவெறுப்பதுமாக நின்றனர். சவப்பெட்டியின் மூடி தட்டுப் படுவதுபோல் உணர்ந்தனர். வழக்குரைஞர் பதற ஆரம்பித்தார். பெட்டியை மிதித்துவிடாமல் இருக்குமாறு எச்சரித்தார். எல்லோருமே, ‘மெதுவா…மெதுவா… எனப் பதைத்தனர். நாற்றமும் வீச்சமும் அதிகரித்தது. சிப்பந்திகள் குழியிலிருந்து மேலேறி ஓடினார்கள். என்னமோ ஏதோ என்று எல்லோரும் விலகி ஓடினார்கள். ஒன்றுமில்லை என்றதும் திரும்பி வந்தார்கள். மேற்கொண்டு தோண்ட சிப்பந்திகள் மறுத்தனர். ஊராட்சித் தோட்டிகளும், ‘முடியாது என்று தட்டிக் கழித்தனர். எல்லோரும் அலுத்துக் கொண்டார்கள். நிபுணர்கள் அவசரப்படுத்தினார்கள். நீதிபதி, ‘இன்னும் நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கலாமே என்று அங்கலாய்த்தார். பார்வையாளர் ஒருவர் உதவ முன்வந்தார். அதிகாரி அனுமதித்ததால் குழிக்குள் இறங்கினார். பெட்டி மூடியின் மேலிருந்து சிறிது மண் எடுத்துசோதனைக்காகநிபுணர்களின் ஆலோசனையின்படிசோதனைக்குப்பியில் பத்திரப்படுத்தப்பட்டது. மூடியின் மேலிருந்த மண் முழுவதையும் கைகளால் அவர் விலக்கினார். பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் சிலுவைக்குறியும் தெரிந்தன. கடப்பாரையின் மெல்லிய கூர்ப்பகுதியை மூடியின் அடியில் கொடுத்து மெல்ல நெம்பி எடுக்க எடுக்க தாங்க முடியாத வீச்சம் மேலெழுந்தது. நின்றவர்கள் அருவெறுத்து ஓடிமீண்டும் வந்து சுற்றி நின்றனர். மேல் மூடியை அகற்றிஅதனுள்ளிருந்த நீலநிற பிளாஸ்டிக் மூட்டையைப் பிளேடால் கிழித்து விரிக்கதலை தெரிந்தது. கருப்புத் தலைமயிரும் மீசை முடிகளும் அப்படியே இருந்தன. ஒரு பல்லின் சிறுபகுதி வெளியே துருத்தி நின்றது. அவன் தான்.. அவன்தான்… என்று ஒருவர் கூச்சலிட்டார். குழியிலிருந்து பரவிய நாற்றம்சகிக்கமுடியாமல் இருந்தது. இறந்தவனின் மனைவியின் ஓலம் காற்றைப் பிளந்தது. அவளை வேறு பக்கமாகச் சிலர் அழைத்துச் சென்றனர்.
பிரேதத்திற்குச் சிறுசேதமும் இல்லாமல் வெளியே எடுக்கவேண்டும் என்று வழக்கறிஞர் எச்சரித்துக்கொண்டே இருந்தார். பெட்டியோடு எடுக்க முயன்றார்கள். முடியவில்லை. தாம்புக் கயிறுகள் கொண்டுவந்து பெட்டியைச் சுற்றிக் கட்டிஇழுக்க முயற்சித்தும்இயலவில்லை. பெட்டி நொறுங்க ஆரம்பித்ததை உணர்ந்தார்கள். பிரேதத்தை மட்டும் அலாக்காகத் தூக்கிவிடுமாறு எல்லோரும் ஊக்குவித்தார்கள். அந்தப் பார்வையாளன் இரண்டு கைகளையும் பெட்டிக்குள்பிளாஸ்டிக் மூட்டைக்குக் கீழாகக் கொடுத்துஅதனை ஒரு பயில்வானைப் போலத் தூக்கிப் பிடித்தான். மேலே,வாங்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. சதைத் துண்டுகள் உருகி வழிய ஆரம்பித்தன. வீசிய கெட்ட வாடையில்எல்லோரும் ஓடிப்போய்த் தூரமாக நின்றுக் கொண்டார்கள். அதிகாரி, ‘பிடி…பிடி.. என்று கூச்சலிட்டுக் கொண்டே.,ஓடிச் சென்றுதுண்டுகள் கீழே விழாதப்படிஒரு மூலையைத் தாங்கிப் பிடித்தார். வி.ஏ.ஓவும் சிப்பந்திகளும் ஓடிவந்துமற்ற மூன்று மூலைகளையும் பிடித்தனர். காடாத் துணியில் வைத்து மூடினார்கள். துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. அனைத்தும் அழுகிகூழாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். அதனைப் புதிய பெட்டிக்குள் வைத்துமூடிஆணிகள் அடித்துஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். பிரேதக் குழியில் இருந்த பெட்டியின் அடிமண்ணைக் கொஞ்சமாக எடுத்துபரிசோதனைக்குப் பத்திரப்படுத்தினார்கள்.
நிபுணர்கள் டாடா-சுமோவில் ஏறிக்கொண்டனர். ஸ்கார்ப்பியோவின் முன்னிருக்கையில் நீதிபதி அமரஅதிகாரிகள் பின்னிருக்கைகளில் அமர்ந்தனர். சுமோஆம்புலன்ஸ்ஸ்கார்பியோ மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகத் கிளம்பின.
நீதிபதி, ‘கிராமத்தில் ஏன் இவ்வளவு பதற்றம் என வினவினார். அவரவருக்குத் தெரிந்ததைப் பேசிக் கொண்டார்கள். இறந்தவன் கேபிள் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நகரத்தில் நான்கு கொலைகள் நடந்துவிட்டிருந்தன. வங்கி ஒன்றைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்திருந்ததாகவும் வதந்தி உலவியது. குடியிருப்புப் பகுதிகளிலும்பூட்டிய வீடுகளில் திருட்டுகள் நடந்தன. ஒரு இரவு கூட ஆளில்லை என்றால்,வீட்டில் புகுந்து விடுகின்றனர். இரு சக்கர வாகனங்கள்தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன. குடியிருப்பு நலச் சங்கத்தினர் வீட்டிற்கு ஒரு ஆள் என முறை வைத்துநான்கு பேராக இரவுகளில் கம்புகளுடன் ரோந்து சுற்றி,திருட்டைத் தடுக்க முயன்றனர். நடந்த கொள்ளைகளில் துப்புக் கிடைக்கவில்லை. பக்கத்து மாநிலத்தில் ஜெயிலிலிருந்து விடுதலையாகியிருந்த ஒரு கொள்ளைக் கூட்டம் இங்கு வந்து கைவரிசை காட்டுவதாகப் பேசிக் கொண்டார்கள். காவல்துறை மீதுவெறுப்பும் அவநம்பிக்கையும் மிகுதியானது. ஒரு சில விஷமிகள் திருட்டிலும் கொள்ளையிலும் காவல்துறைக்கும் பங்கு கிடைக்கிறது என்ற அளவிற்குக் கதை கட்டினார்கள். சிலர் புதிய அதிகாரியின் ராசி சரியில்லை என்றார்கள். அவர் அமாவாசைக்கு மறுநாளான அரைமுட்டில் பணிப் பொறுப்பேற்றதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று ஒருவர் விசனப்பட்டார். நெருக்கமான நகரக் குடியிருப்பொன்றில் பட்டப் பகலிலேயே ஒரு தாயும் அவளது பத்துவயது மகளும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் அவனுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் காவல்துறை சந்தேகப்பட்டது. கொலை நடந்த நாளில்அந்த வீட்டிற்கு அவன் சென்றிருந்ததைக் காவல்துறை புலனறிந்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள். முதல் விசாரணையில் குற்றத்தை அவன் மறுத்தான். ஊர்க்காரர்கள்,நாட்டாமையுடன் காவல்நிலையத்திற்குச் சென்று அவனை மீட்டு வந்தனர். அப்போதே அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அவனது உடலில் காயங்கள் இருக்கவில்லை. மூன்று நாட்களுக்குப்பின்காவல்நிலையத்திற்கு அவனை மீண்டும் அழைத்துப்போய் காவல் ஆய்வாளர் விசாரித்துக் கொண்டிருந்தார். அவனோ அப்போதும் மறுத்தான். அவன் மனைவியும் நாட்டாமையும் உள்ளூர் பிரமுகர் சிலருமாகச் சென்றுஉயர் அதிகாரியைச் சந்தித்து, ‘ஒரு பாவமும் அறியாத வாயில்லாப் பூச்சியைக் கொடுமைப் படுத்துவதாகப் புகார் செய்தனர். அவனை விடுவிக்கக் கோரினர். அவரோ, ‘விசாரணை தானே செய்கிறார்கள். சாட்சி இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். இப்போது ஒன்றும் செய்யமுடியாதுஎன்று சமாதானம் சொல்லி அனுப்பினார். மறுநாள்கிராம நாட்டாமையிடம் அந்தச் சரகக் காவல் ஆய்வாளர், ‘அவன்தான் குற்றத்தைச் செய்தவன். எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. குற்றத்தை ஒத்துக் கொள்ளச் சொல்.. இல்லை என்றால் காலனி தாங்காது என்று மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார்.
மறுநாளே அவனை விசாரணைக்காகக் கொலை நடந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போதுஅவன் தப்பியோட முயற்சித்ததாகவும்தடுத்த காவலர்களைத் தாக்கியதாகவும்அப்போது நடந்த மோதலில் அவன் சுடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அவனது நெஞ்சில்இடது புறம் குண்டு பாய்ந்திருந்ததாகச் சொன்னார்கள். தலைநகர மருத்துவமனையின் பிரேத பரிசோதனையிலும்ஆர்.டி.ஓ. விசாரணையிலும் காவல்துறையின் செயல்பாட்டில் குற்றம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்களும் இறந்தவனின் மனைவியும் மனித உரிமை ஆணையத்திற்கும் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வாழ்வுரிமைச் சங்கத்தின் சார்பில்உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதுதான் இப்போதைய மறுபிரேத விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டது. காவல்துறையினர் இப்போதும்,’இறந்தவன்தான்இரு நண்பர்களை அழைத்துச் சென்றுமூன்று பேராகக் கற்பழித்துக் கொன்றார்கள்என்று சாதிக்கிறார்கள். காவல்நிலையத்தில் அடித்துக் கொன்றதை மறைப்பதற்காகமோதல் என்றும்துப்பாக்கிச் சூடு என்றும் கதை பரப்புவதாக ஊர்மக்கள் நம்புகின்றனர்.
பயணத்துக்கு நடுவே ஊர்திகள் ஓரிடத்தில் நின்றன. அப்போதே மணி இரண்டாகியிருந்தது. யாரும் சாப்பிடவில்லை. குடிப்பதற்குத் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வாங்கிக் கொண்டு விரைந்தனர். பக்கத்து மாநிலத் தலைநகரில் உள்ள அந்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்குக் கொண்டு போய் நிறுத்திய போது மாலை மணி ஐந்தாகியிருந்தது. இறந்தவனின் மனைவிஉறவினர்கள்கிராம நாட்டாண்மைவாழ்வுரிமைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆக மொத்தம் இருபது பேராக ஒரு வேனில் முன்னமேயே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தனர்.
ஆம்புலன்ஸிலிருந்து பெட்டியை இறக்கிமருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைவாயிலில் வைத்தார்கள். பெட்டியைத் திறந்து பிண மூட்டையை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிச் சென்று பரிசோதனை மேசை மீது வைத்தனர். எல்லோருமே பிணப்பரிசோதனையைப் பார்வையிட அனுமதி கேட்டனர். இரண்டு பேரை மட்டுமே அனுமதிக்க முடியுமென்றார் நிபுணர். வாழ்வுரிமைச் சங்கத்தைச் சேர்ந்தவர் இறந்தவனின் மனைவியிடம்‘‘நீங்கள் மிகப்பெரிய அதிகார அமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். தைரியமாகச் செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம்’’ என்று உணர்ச்சி வசப்பட்டார். இறந்தவனின் மனைவியுடன் நாட்டாமை மட்டும் பிரேத பரிசோதனை அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். நீதிபதியும் அவருடன் ஒரு அதிகாரியும்பரிசோதனை அறைக்குள் நுழைந்தனர்.
தமிழ் பேசும் மருத்துவ நிபுணர் இறந்தவன் மனைவியிடம் சடலத்தைப் பார்த்த பிறகும் தைரியமாக இருப்பதற்காக அவளைப் பாராட்டினார். வேறு சிலர் உள்ளே வந்து மயங்கி விழுந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார். அந்த மருத்துவமனையிலுள்ள பிரேத பரிசோதனை அறை மிக நவீன கருவிகள் கொண்டதென்றும் பரிசோதனை நேர்மையாக நடத்தப்படும் என்றும்பரிவுடன் பேசினார். அவள் இறந்த தனது கணவன் நிரபராதி என்று சொல்லி அழுதாள். போலீஸ் அவனை அடித்துச் சித்தரவதை செய்ததில்தான் இறந்துவிட்டான் என்றாள்உறுதியாக. குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தச் கசிவு இல்லை என்றாள். அதனால் இறந்த உடலில் தான் சுட்டிருக்கிறார்கள் என்றும் உடம்பு பூராவும் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சொன்னாள். கன்னம் வீங்கியிருந்ததென்றும் நகக்கண்களில் ஊசி ஏற்றிய அடையாளங்கள் இருந்ததென்றும் சொன்னாள். இடது கைச்சுண்டுவிரலில் நகமே இல்லாமலிருந்ததென்றும் உடலில் சில இடங்களில் தோல் கருகிப் புண்ணான அடையாளம் கூட இருந்ததென்றும்விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவன் அணிந்திருந்த ஜட்டி பிரேதத்துடன் வரவில்லையென்றும் வேறு ஜட்டி இருந்ததென்றும் ஆண்குறியிலும்,விதைகளிலும் கூட ரத்தம் கசிந்திருந்ததாகவும் அழுது கொண்டே சொன்னாள். ‘‘எனக்கு நியாயம் கொடுதெய்வமே’’ என்று அவரின் கால்களில் விழப்போனாள். அவர் தடுத்தார். ‘‘தப்பு செய்த போலீசுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று வாய்குழறினார் நாட்டாமை. பிரேதம் இருந்த மூட்டையைக் கிழித்தார்கள் . தலையைத் தவிர மீதிப்பகுதி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே குவியலாக இருந்தது. மண்பாண்டம் செய்ய மிதித்துப் பிசைந்து சக்கரத்தில் சுற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் சேறு போல் இருந்தன. அந்தச் சேற்றினுள்ளிருந்து ஒவ்வொரு எலும்பாக எடுக்க ஆரம்பித்தார்கள். விலா எலும்புகள்முழங்கை எலும்புகள்தோள்பட்டை எலும்புகள்,இடுப்பெலும்புதொடை கால் எலும்பு எல்லாமே தந்த நிறத்தில் ரத்தம் பூசியது போல் ஈரத்துடன் இருந்தன. சகிக்க முடியாத நாற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பிணம் முழுவதுமாக அழுகிக் கூழ் போலாகி விட்டிருந்ததால் உடலில் இருந்ததாக அந்தப்பெண் கூறிய காயங்கள் பற்றியெல்லாம் சோதனை இடமுடியாததைக் கூறிய அந்த நிபுணர் தலையை மட்டும் தனியாகக் கையில் எடுத்துக் காட்டினார். வெளிப்பக்கமாக கபால எலும்புகள்தாடை போன்றவற்றில் முறிவோகாயமோ இல்லாததைக் கூறினார். ‘‘வாய்க்குள் இரும்புக் கம்பி போன்றவற்றை நுழைத்துதொண்டைக்குழியில் இடித்திருந்தால் மண்டை ஒட்டின் உட்புறம் பல்லியின் வால்போல ஒரு கீறல் தெரிய வாய்ப்புண்டு. அதுபோல ஏதாவது இருக்குமா,பார்க்கலாம்.’’ சொல்லிக் கொண்டே அவர் சிறிய ஆக்சாவினால் நெற்றிப்பகுதியில் அறுக்க ஆரம்பித்தார். ஏற்கனவே அறுத்து ஒட்ட வைக்கப்பட்டிருந்த அது உடனேயே பிளந்து கொண்டது. மூளை என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மண்டையின் மேல்பகுதியை மட்டும் தனியாக எடுத்து உட்புறத்தைத் தடவிக் காட்டினார். எவ்வித கீறலும் இல்லாமலிருந்தது.
பற்களிலும் ரத்தக்கறை இருந்ததென்றும்உதடுகள் கிழிந்திருந்ததென்றும் வாயில் குத்தியிருப்பார்கள் என்றும் அப்பெண் கூறியதும் ‘‘ஒரு பல் இல்லாமலிருந்தால் அல்லது சிதைந்திருந்தால் கூட அது கொடுங்குற்றம்’’எனப் பதிவு செய்யலாம் எனச் சொன்ன நிபுணர் மேல் தாடையையும் கீழ்த்தடையையும் கைகளால் பிளக்க முயற்சித்தார்கிட்டிப்போயிருந்தது. சிறிய இரும்புத் தகடு எடுத்து பற்களுக்கிடையில் வைத்து நெம்பித் திறந்து அதன் வாய்க்குள் விரலை நுழைத்து ஒவ்வொரு பல்லாக அசைத்துக் காட்டினார் எல்லாப் பற்களும் சரியாக இருக்கின்றன’’ என்று சொன்னார். நாற்றம் குடலைப்பிடுங்குவதாக இருந்தது. அறுவை சிகிச்சை அறைக்குள் இயங்குவது போல் ஊழியர்கள் எலும்புகளைச் சேகரிப்பதும் எக்ஸ்ரே கருவியில் வைத்து படம் எடுப்பதுமாக இருந்தனர். சேறாகக் குவிந்திருந்த சதைப்பகுதியிலிருந்து ஒரு துளி எடுத்து ‘‘விஸ்ரா’’ சோதனைக்கெனப் பத்திரப்படுத்தினர்.
நேர் பார்வையில் எலும்புகளில் கீறலோ முறிவோ தெரியவில்லையென்றாலும் எக்ஸ்ரே படத்தில் தெரிந்துவிடுமென்றும் படமெடுத்து முடித்தபின் எக்ஸ்ரே நிபுணர் படங்களை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பாரென்றும் அதில் ஏதாவது தெரிவரலாமென்றும் சமாதானம் சொன்னார்.
பரிசோதனைகள் முடிந்தன. எல்லாவற்றையும் மீண்டும் பிளாஸ்டிக் தாளால் மூட்டையாகக் கட்டி சவப்பெட்டியில் போட்டு மூடியபின் படிவங்கள் நிரப்புவதும் கையொப்பம் வாங்குவதுமான சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவேறின.
‘‘தினசரி இப்படித்தானா சார்வாரத்திற்கு ஒன்றிரண்டு சோதனைகள் இருக்குமா’’ என்று கேட்ட அதிகாரிக்குநிபுணர்’’ இந்த வெட்டியான் வேலை எப்போதும் உண்டு’’ என்று சலிப்புடன் சொன்னார். ‘‘பேண்ட் போட்ட சயின்ஸ் வெட்டியான்’’ என்று சொல்லிச் சிரித்தார். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு சவப்பெட்டியை ஆம்புலன்ஸில் ஏற்றிப்புறப்படும்போது இரவு 9.00ஆகிவிட்டிருந்தது. வரும் வழியில் எல்லோருக்கும் பசித்தது. நகர விளிம்பில் சாலையோர உணவகம் ஒன்றில் கிடைத்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு கிளம்பி ஆற்றங்கரைக்கு வரும் போது மணி மூன்றாகியிருந்தது. எடுத்த இடத்திலேயே வைத்து மீண்டும் அவனுடைய சடலத்தைப் புதைத்தார்கள். இறந்தவனின் மனைவி பாலத்தின் மீதிருந்து சாபமிட்டுக் கொண்டிருந்தாள். ஊர்க்காரர்கள்அதிகாரிகள் எல்லோரும் அங்கிருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளுடைய அழுகை மிகுந்துஅதுவும் தேய்ந்து கரைந்து கொண்டிருந்தது. அங்கே இருள் மட்டுமே மிச்சமிருந்தது. வெறும் இருள்.
வனம் 6. சிற்றிதழில் வெளிவந்தது.

No comments:

Post a Comment