Tuesday 5 January 2016

ஜப்பானியச் சிறுகதை - தூக்கம் (sleep) - ஹாருகி முரகாமி

தூக்கம் (Sleep)

ஜப்பான் : ஹாருகி முரகாமி 

ஆங்கிலம் : ஜே ரூபின் 

தமிழில் ச. ஆறுமுகம்

mur
இன்று, தொடர்ச்சியாகத் தூக்கமற்ற, எனது பதினேழாவது நாள்.

நான் இன்சோம்னியா என்ற தூக்கமின்மை நோயைப் பற்றிப் பேசவில்லை. இன்சோம்னியா என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அது போன்ற ஒன்று எனக்குக் கல்லூரி நாட்களில் இருந்தது – அதுபோன்ற ஒன்று – ஏனென்றால் பொதுவாக மக்கள் இன்சோம்னியா எனக் குறிப்பிடுவதுதான் அப்போது எனக்கு வந்திருந்ததா என்பதும் எனக்கு நிச்சயமில்லை. ஒரு மருத்துவர் அப்படி எனக்குச் சொல்லியிருந்தாரென்று நினைக்கிறேன். ஆனால், நான் மருத்துவரைப் பார்த்திருக்கவில்லை. அது ஒன்றும் இப்போது எனக்கு உதவப்போவதில்லை என்பதும் எனக்குத் தெரியும். அப்படி நினைப்பதற்கு எனக்கு எந்தக் காரணங்களும் இல்லையென்பதல்ல. பெண்மையின் உள்ளுணர்வு என்று வைத்துக்கொள்ளுங்களேன் – அதெல்லாம் எனக்கு உதவியாயிருக்கப் போவதில்லையென உணர்வதால் தான், நான் மருத்துவரிடம் போகவில்லை. என்னுடைய பெற்றோர், நண்பர்கள் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனென்றால், அவர்கள் என்னை என்ன செய்யச் சொல்வார்களென்பதை மிகச்சரியாக நான் தெரிந்திருந்ததுதான்.
அப்புறம், என்னுடைய அந்த இன்சோம்னியா போன்ற  ஒன்று ஒருமாதம் நீடித்தது. அந்த ஒரு மாத காலம் முழுக்க  உண்மையாகவே எனக்குத் தூக்கம்  வரவில்லை; நான் தூங்கவேயில்லை. இரவில் படுக்கையில் படுத்து, எனக்கு நானே, ‘’ இப்போது எல்லாம் சரியாக இருக்கிறது. இது,  தூங்குவதற்கான நேரம்.’’ எனச் சொல்லிக் கண்மூடுவேன்; அவ்வளவுதான், அதுவே என்னை எழுப்பிவிடப் போதுமானதாயிருந்தது. அது உடனடியாக, அந்தக் கணத்திலேயே, தானாக நிகழ்வது – பட்டுத் தெறிப்பதான வினை, நிலைமையைப் போன்றது. தூக்கத்துக்காக நான் எவ்வளவுக்கெவ்வளவு கடுமையாக முயற்சிக்கிறேனோ, அதற்கும் அதிகமாக விழித்திருப்பேன். மது உபயோகித்துப் பார்த்தேன், தூக்க மாத்திரைகளையும் விழுங்கித் பார்த்தேன், ஆனால், அதனாலெல்லாம் சிறிதளவுகூடப் பயன் இல்லை.
இறுதியாகக் காலையில் வானம் வெளுக்கத் தொடங்கும்போது, நான், அப்படியே இலேசாக இழுத்துக்கொண்டு போவதுபோல உணர்வேன். ஆனால், அது உறக்கமல்ல. தூக்கத்தின் கடைசிக் கடைசி வெளிப்புற விளிம்பினை எனது விரல் நகங்கள் இலேசாகத் தொட்டு உரசியிருந்தன, அவ்வளவுதான். அதுவுமில்லாமல், அந்த நேரம் முழுவதுமாக எனது மனம் அகல விழித்தேதான் இருந்தது. நான் தூக்கக் கலக்கத்தின் ஒரு சிறிய தீண்டுதலை உணர்வேன், ஆனால், என் மனம் அதற்கான அறையில் ஒளி ஊடுருவும் சுவரின் மறுபுறம் அமர்ந்து என்னையே கவனித்துக்கொண்டிருந்தது. என்னுடைய உடல்தான் அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் இலேசாக இழுத்துச்சென்றது; ஆனால், அந்த நேரம் முழுவதுமாக, என்னுடலை அணைத்து, அதன் அருகிலேயே என் மனம் வெறித்து நோக்குவதை, சுவாசிப்பதை நான் உணரமுடிந்தது. தூக்கத்தின் வாசலில் உடலும், விழித்தேயிருப்பதெனத் தீர்மானித்துவிட்ட மனமுமாக நான் இருந்தேன்.

இந்த முடிவற்ற தூக்கமயக்கம் நாள் முழுக்க விடாமல் தொடர்வதாக  இருந்தது. என் தலைக்குள்  எப்போதும் பனிமூட்டமாகவே இருந்தது. என்னைச் சுற்றியிருந்தவை குறித்து, அவற்றின் தூரம், பருமன், காலம், அளவு போன்ற எதையும் என்னால் சரியாக நிச்சயிக்க முடியாமலிருந்தது. சுரங்கப்பாதை, வகுப்பறை, உணவு மேஜை, என எந்த இடமென்றில்லாமல் இந்தத் தூக்கமயக்கம் என்னை ஆட்கொண்டது. அது அலைகளைப்போல, ஒரு சீரான இடைவெளியில், விட்டுவிட்டு, என்மேல் கவிந்து கொண்டேயிருந்தது. உடலிலிருந்து என் மனம்  நழுவித் தனியே நிற்கும். வார்த்தைகள் சப்தமேயின்றிக் கண்முன் ஊசலாடும். பொருட்களைக் கைதவற விட்டுவிடுவேன். என் பென்சில், பணப்பை, கரண்டி, என ஏதாவதொன்று தரையில் விழுந்து கணீரென ஒலிக்கும். அப்போது நான் நினைத்ததெல்லாம், அப்படியே படுத்துத் தூங்கிவிடவேண்டுமென்று தான். ஆனால், முடியவில்லை. விழிப்பு எப்போதும் என் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டிருந்தது. பனியாகக் குளிர்ந்த அதன் நிழலை என்னால் உணர முடிந்தது. அது என்னுடைய நிழலேதான். என்னுடைய நிழலுக்குள் நானிருப்பதாகத் தூக்க மயக்கத்தில், நானே நினைத்துக்கொள்வது, என்ன ஒரு கெட்டநேரம்! மயக்கத்திலேயே நடப்பேன், உண்பேன், எல்லோரோடும் பேசுவேன். அதை யாருமே கவனிக்கமாட்டார்களென்பதுதான் வினோதம். நான் அந்த மாதத்தில் பதினைந்து பவுண்டு எடை குறைந்துவிட்டேன்; அதையும் யாருமே கவனிக்கவில்லை; என் குடும்பத்தில், என் நண்பர்கள் அல்லது வகுப்புத்தோழர்களில் எவருமே நான் தூங்காமலே இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவேயில்லை.

இது எழுத்து பூர்வமான உண்மை: நான் தூங்காமலேயே  வாழ்ந்து கொண்டிருந்தேன். ஒரு மூழ்கடிக்கப்பட்ட பிணத்துக்கும் மேலாக என்னுடைய உடம்பில் எந்த உணர்வுமில்லை. இந்த உலகத்தில் என்னுடைய வாழ்க்கை, என்னுடைய இருப்பேகூட ஒரு மாயத்தோற்றம் போலத் தோன்றியது. இந்தப் பூமியின் முடிவில், என் உடலையும் மனத்தையும் நிரந்தரமாகத் தனித்தனியே பிரிக்கக்கூடிய, நான் பார்த்தோ கேட்டோயிராத ஒரு இடத்துக்கு, என் உடலை, வலிமையான காற்று ஒன்று அடித்துச் சென்றுவிடுமோவென என்னை எண்ணச் செய்யும்.   ‘’கெட்டியாகப் பிடித்துக்கொள்’’ என எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆனால், பற்றிக்கொள்வதற்குத்தான் எதுவுமே இல்லாமலிருந்தது.

பின்னர், இரவு வரும்போது, முழு விழிப்பும் வந்துசேரும். அதைத் தடுப்பதற்கு எந்தச் சக்தியுமில்லாமல் நான் இருந்தேன். விழிப்பின் மையத்திற்குள் நான் எல்லையற்ற ஒரு சக்தியால் பூட்டப்பட்டிருந்தேன். என்னால் செய்ய முடிந்ததெல்லாம், காலை வரையிலும் இருட்டுக்குள் கொட்டக்கொட்ட விழித்திருப்பதுதான். சிந்தனை செய்யக்கூட என்னால் முடியவில்லை. படுக்கையில் கிடந்து, கடிகாரம் நொடித்து நொடித்துக் காலத்தைத் தள்ளும் `டிக்` ஒலியைக் கேட்டுக்கொண்டு, இருட்டு மெல்ல அடர்வதையும், பின்னர் மெல்ல மெல்லக் காணாமலாவதையும்  பார்த்துக் கொண்டிருந்ததைத்தவிர வேறெதுவும் செய்யவில்லை. .
அப்புறமாக, அந்த மயக்கம் முன்தகவல் எதுவுமின்றி, வெளிப்படையான  முயற்சி எதுவுமில்லாமல், அதுவாகவே ஒருநாளில் முடிவுக்கு வந்தது. அன்று நான் காலையுணவின் போது மேஜையிலேயே உணர்விழக்கத் தொடங்கினேன்; எதுவும் பேசாமல் எழுந்து நின்றேன்; மேஜையிலிருந்தும் எதையாவது தட்டிக் கீழே தள்ளியிருப்பேன்; யாரோ என்னிடம் ஏதோ பேசினார்களென நினைக்கிறேன். ஆனால், அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. என்னுடைய அறைக்குத் தள்ளாடிச் சென்று, அதே ஆடையோடு, படுக்கையில் விழுந்து தூங்கிவிட்டேன். நான் அப்படியே இருபத்தேழு மணி நேரம் கிடந்திருக்கிறேன். என்னுடைய அம்மா பயந்து என்னை உலுக்கி எழுப்ப முயற்சித்து, உண்மையில் என் கன்னத்திலேயே அறைந்திருக்கிறாள். ஆனால் நான் அலுங்காமல், குலுங்காமல், எந்த இடைவெளியுமில்லாமல் இருபத்தேழு மணி நேரம் தூங்கிக்கொண்டே யிருந்திருக்கிறேன். கடைசியாகக் கண்விழித்து எழுந்தபோது, எல்லாவற்றுக்கும் முன்பிருந்த பழைய நானாக மாறிவிட்டேன். அப்படித்தானிருக்கவேண்டும்.

நான் அப்போது எப்படி, இப்படியொரு ஒரு இன்சோம்னியாப் பேர்வழி யானேனென்றோ, பின்னர் திடீரென்று எப்படிக் குணமடைந்தேனென்றோ எனக்கு எதுவும் தெரியவில்லை. அது, எனக்குத் தெரிந்தேயிராத தீய அறிகுறிகள் நிரம்பியிருந்த ஒரு கருமேகத்தைக் காற்று எங்கிருந்தோ அடித்துக் கொண்டுவந்தது போலிருந்தது. அப்படியான ஒன்று எங்கிருந்து வருகிறதென்றோ அல்லது அது, எங்கே போகிறதென்றோ எவருக்கும் தெரியாது. அது ஒரு குறிப்பிட்டகாலத்துக்கு என்மீது இறங்கிக் கவிந்து, பின் கலைந்து சென்றுவிட்டது என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

அது எப்படியானாலும், இப்போது எனக்கு வந்திருப்பது அந்த இன்சோம்னியாவைப் போன்றதல்ல; அப்படியானது இல்லவேயில்லை. என்னால் தூங்கமுடியவில்லை; அவ்வளவுதான்.  ஒரு நிமிடம் கூடத் தூக்கமில்லை, அந்த ஒரு சின்ன விஷயம் தவிர மற்றபடி என்னுடைய இயல்புநிலையில் எந்தக் குறையுமில்லாமல், பரிபூரணமாக இருக்கிறேன். நான் தூக்கமாகவும் உணரவில்லை. என்னுடைய மனமும் எப்போதும் போல் தெளிவாக இருக்கிறது, இன்னும் சொல்லப்போனால், நல்ல தெளிவாகவே. உடலளவிலுங்கூட, நான் இயல்பாகவே இருக்கிறேன். பசியும் செரிமானமும் நன்றாக இருக்கின்றன. சோர்வு எதுவும் இல்லை. அன்றாட இயல்பில் என்னிடம் தவறுதல் அல்லது குறை, என்று எதுவுமே இல்லை. என்னால் தூங்க முடியவில்லை, அவ்வளவுதான்.

என்னுடைய கணவரோ, அல்லது என் மகனோ நான் தூங்காமலிருப்பதைக் கவனிக்கவில்லை. நானும் அவர்களிடம் இது பற்றிச் சொல்லவில்லை.  மருத்துவரைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. அது எந்த நன்மையையும் விளைவித்துவிடப் போவதில்லையென எனக்குத் தெரியும். அது எனக்குத்தெரியும், அவ்வளவுதான். இது முன்பு மாதிரியே. இதுதான் நான்!

அதனால், என்னிடம், யாரும் எதையும் சந்தேகப்படவில்லை. எங்கள் வாழ்க்கை மேலோட்டமாக, எந்த மாற்றமும் இன்றி ஓடுகிறது. அமைதியாக, வழக்கம் போல. காலையில் எனது கணவர், வெளியே சென்றதைப் பார்த்த பிறகு, எனது காரை நானே ஓட்டிக் கடைக்குச் செல்கிறேன். எனது கணவர் ஒரு பல் மருத்துவர். அவரது அலுவலகம் எங்கள் குடியிருப்பிலிருந்து பத்து நிமிட கார்ப்பயணம், அவ்வளவுதான். அவரும் பல்மருத்துவக் கல்லூரி நண்பர் ஒருவரும் கூட்டுச்சேர்ந்து அதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒரு தொழில்நுட்பப் பணியாளருக்கும் வரவேற்பாளருக்கும் ஊதியம் அளிக்கமுடிகிறது. இருவரும் பங்குதார்களாக ஒருவருக்கொருவர் தோள் கொடுத்துக் கொள்கின்றனர். இருவருமே நல்லவர்கள், என்பதால்தான், அந்த மருத்துவ மனை திறந்து ஐந்து வருடங்களே ஆனாலும், செல்வாக்கான தொடர்புகள் ஏதும் இல்லாமலேயே நல்லமுறையில் சென்றுகொண்டிருக்கிறது. அநேகமாக, மிகச் சிறப்பாகவே இருக்கிறது. எனது கணவர், ‘’ நான் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்று நினைத்திருக்கவே யில்லை. என்றாலும், சொல்கிற மாதிரி, எந்தக் குறையும் எனக்கு இல்லை.’’ என்கிறார்.

அதற்கு நான் எப்போதும்  சொல்வது, ‘’ உண்மைதான், உங்களால் முடியாது.’’ அந்த மருத்துவ மனையைத் திறப்பதற்கு நாங்கள் வங்கியில் சரியான ஒரு தொகை கடன் வாங்க வேண்டியிருந்தது. பல் சிகிச்சைக் கருவிகள், உபகரணங்களுக்காகப் பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. அதிலும் கடுமையான போட்டி வேறு. நீங்கள் திறப்புவிழா நடத்தியதும், நோயாளிகள் வந்து குவிந்து விடப் போவதில்லை. ஏகப்பட்ட பல் மருத்துவமனைகள் போதிய நோயாளிகள் இல்லாமல் நொடித்துக் கிடக்கின்றன.

அப்புறம், நாங்களும் இளையவர்கள்; வறியவர்கள். எங்களுக்கு அப்போதுதான் பிறந்த கைக்குழந்தை வேறு இருந்தது. இது போன்ற கடின உலகில் நாங்கள் தாக்குப்பிடிப்போமென எவரும் உத்திரவாதம் தரமாட்டார்கள். ஆனாலும் நாங்கள் எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டோம். ஐந்து வருடங்கள். நாங்கள் வாங்கிய கடனில் மூன்றில் இரண்டுபங்கு . செலுத்தப்படாமலிருக்கிறது; இருந்தாலும் உண்மையில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

‘’ உங்களுக்கு எப்படி இத்தனை நோயாளிகள் கிடைக்கிறார்களென எனக்குத் தெரியும்.’’ என்று அவரிடம் சொல்வேன். ‘’ அது ஏன் தெரியுமா? நீங்கள் அப்படியொரு அழகுத் தோற்றமுள்ள இளைஞர்.’’
அது எங்களுக்கிடையிலான ஒரு சின்னக் கிண்டல். அவர் ஒன்றும் அவ்வளவு அழகானவரல்ல. உண்மையில் அவர் ஒரு வினோதமான தோற்றமுள்ளவர். இப்போதுங்கூட, நான் இப்படியொரு வினோதமான தோற்றமுள்ள மனிதரை ஏன் திருமணம் செய்துகொண்டேனென நினைக்கிறேன். இன்னும் நல்ல, அழகழகான ஆண் நண்பர்கள் எனக்கு இருந்தார்கள்.
அவருடைய முகத்தை அப்படி வினோதமாக்குவது எது? என்னால்  உண்மையில் சொல்லமுடியாது. அது ஒரு அழகிய முகமல்ல, ஆனால், அதற்காக அருவருப்பானதுமல்ல. பொதுவாகச் சிலர் சொல்வார்களே, ‘’பண்பின் வடிவம்“ என்று, அந்த வகைப்பட்டதுமல்ல. நேர்மையாகச் சொன்னால்,  ‘’ வினோதமானது’’ என்பதுதான் எல்லாவற்றுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அல்லது இன்னும் குறிப்பாகச் சரியாகச் சொல்வதென்றால், அந்த முகத்துக்கென தனியாக வேறுபடுத்திச் சொல்கிற அளவுக்கு எந்தத்தன்மையும் இல்லை. இப்போதும் அப்படி வேறுபடுத்திச் சொல்கிற அளவுக்கு எந்தத்தன்மையுமில்லாமலாக்குகிற ஏதோ ஒரு தனி அம்சம் அதில் இருந்துதானாக வேண்டும். அதைமட்டும் நான் சரியாகக் கண்டுகொண்டேனென்றால், அந்த முழுமையின் வினோதத்துக்கான அடிப்படையை நான் புரிந்துகொள்ளமுடியும்.

ஒருமுறை அவரது படத்தை வரைய முயற்சித்தேன், ஆனால், அது என்னால் முடியவில்லை. அப்போது அவர் எதைப்போலத் தோற்ற மளித்தாரென இப்போது நினைவில்லை. நான் தாளின் மீது வரைகோலை வைத்தவாறே உட்கார்ந்திருந்தேன். அடையாளம் தெரிகிற மாதிரியில் ஏதோ ஒன்றைக்கூட என்னால் தீட்ட முடியவில்லை. நான் திடுக்கிட்டுத் திகைத்துப்போனேன். இவ்வளவு நீண்ட நாட்களாகச் சேர்ந்து வாழும் ஒரு மனிதனின் முகத்தைக்கூட மனதுக்குள் கொண்டுவர முடியவில்லை யென்றால் எப்படி? ஆனால், அவரை எப்படி இனங்கண்டு உணர்ந்து கொள்வதென்று எனக்குத் தெரிகிறது. அவ்வப்போது சில நேரங்களில் அவருடைய பிம்பத்தைக்கூட என் மனத்தில் உருவாக்க முடிகிறது. ஆனால், படமாக வரையத் தொடங்கும்போது, அவருடைய முகத்தைப் பற்றி எனக்கு எதுவுமே நினைவில் இல்லையென்பதை உணர்கிறேன். நான் என்னதான் செய்வது? அது, கண்ணுக்குப் புலனாகாத ஒரு சுவற்றில் முட்டிக்கொள்வதுபோலிருந்தது. என்னால் நினைவு கொள்ளக்கூடிய ஒரே விஷயம், அவரது முகம் வினோதமாகத் தோற்றமளித்தது என்பது மட்டுந்தான்.
அதன் ஞாபகமே அடிக்கடி என் நரம்புகளில் பதற்றத்தை  ஏற்படுத்தி, அமைதியிழக்கச்  செய்கிறது.

இத்தனைக்கும், அவர் எல்லோரும் விரும்புகிற  மாதிரியான ஒரு நபர் தான். அதுவே அவருடைய அலுவலில் ஒரு மிகப்பெரிய அளவிலான கூடுதல் அம்சம் என்பது தெளிவாகவே தெரிகிறது. ஆனால், அவர் எதுவாக இருந்தாலும் வெற்றிகண்டுவிடுவாரென்றே நான் நினைக்கிறேன். அவரிடம் பேசும்போது மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இது மாதிரியான ஒருவரை இதற்குமுன் நான் ஒருபோதும் சந்தித்ததேயில்லை. என் தோழிகள் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கிறது. ஏன், நானுங்கூட அவர்மீது ஆசையாகத்தான் இருக்கிறேன். நான் அவரை இப்போதுங்கூடக் காதலிப்பதாகவும் நினைக்கிறேன். ஆனால் கண்டிப்பாக, மிகச்சரியாகச் சொல்வதென்றால், உண்மையில் அவரை எனக்குப் பிடிக்கவில்லை.

அது எப்படியானாலும், அவர் எளியவகையில், குழந்தையைப்போன்ற அவருக்கேயான இயல்புடன்  புன்னகைக்கிறார். வளர்ந்துவிட்ட  மனிதர்கள் பலருக்கும் அது  இயலாத ஒன்று. ஒரு பல்  மருத்துவர் அழகிய பற்களை உடையவராக இருக்கவேண்டுமென  நீங்கள் எதிர்பார்ப்பீர்களென  நான் எண்ணுகிறேன். அவரும் அப்படியேதான்.
‘’ அழகாயிருப்பது என்னுடைய குற்றமல்ல,’’ என்பதுதான், நாங்கள் எங்கள் சின்னக் கிண்டலை ரசிக்கும் நேரங்களில், அவருடைய பதில். அதன் பொருள் என்னவென்று தெரிந்தவர்கள் நாங்கள் இருவர் மட்டுமே. அது உண்மையான நடப்பினை, இருப்பினை ஏற்றுக்கொள்வது –  இப்படியோ, அல்லது அப்படியோ, ஏதோ ஒரு வழியில் தாக்குப்பிடித்து வாழ்வதற்காக நாங்கள் மேற்கொள்ளும் வழிமுறைதான் அது என்பதே உண்மை, கூடவே, எங்களைப் பொறுத்தவரையில் அது ஒரு முக்கியமான சடங்கு.
எங்கள் அடுக்ககக்  குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்திலிருந்து  ஒவ்வொரு நாள் காலையிலும் எட்டரை மணிக்கு அவருடைய சென்ட்ராவை அவரே ஓட்டிப் புறப்படுகிறார். எங்கள் மகன் அவருக்கு அடுத்த இருக்கையில் இருப்பான். தொடக்கப்பள்ளி அவரது மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலேயே உள்ளது. ‘’ பத்திரம்’’ என்பேன், நான். ‘’ ஒன்றும் கவலைப்படாதே’’ இது, அவர். எப்போதுமே ஒரேமாதிரியான இந்தப் பரிமாற்றம், அவ்வளவுதான். என்னால் அதை நிறுத்த முடியாது. அதைச் சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது. ‘’பத்திரம்.’’ பதிலுக்கு, ‘’ஒன்றும் கவலைப்படாதே’’ என என் கணவர் சொல்லவேண்டியிருக்கிறது. அவர்  காரின் இயந்திரத்தை இயக்கிவிட்டு, ஹேடின் அல்லது மொசார்ட் ஒலிநாடாவை அதற்கான கருவியில் பொருத்திவிட்டு அந்த இசையோடு சேர்ந்து முரலொலிக்கிறார். என்னுடைய இரண்டு `ஆண்`களும் வெளியில் செல்லும்போது எனக்குக் கையசைக்கின்றனர். அவர்களின் கைகள் அச்சு அசல் ஒரேமாதிரியாக அசைகின்றன. அது அநேகமாக இயல்பு மீறிய ஒன்று. அவர்களது தலைகளை இருவரும் ஒரே கோணத்தில் சாய்த்து, உள்ளங்கைகளை என்னைப் பார்த்திருக்குமாறு திருப்பி, மெதுவாக ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு யாரோ நடனக்கலைஞரிடம் பயிற்சி பெற்றது போல கொஞ்சங்கூட வேறுபாடில்லாமல் ஒரே மாதிரியில் அசைக்கிறார்கள்.

எனக்குச் சொந்தமாகப் பழைய விலையில் கிடைத்த ஒரு  ஹோண்டா சிவிக் கார், இருக்கிறது. அதை இரண்டாண்டுகளுக்கு  முன்பு என்னுடைய தோழி ஒருத்தி  ஒன்றுமில்லையென்பதற்குப்  பதிலாக அதற்கடுத்த விலைக்கு எனக்குத் தந்தாள். அதன் முட்டுத்தாங்கி ஒன்று நசுங்கிப் போயிருக்கிறது. அதன் உடல் வடிவம் பழங்காலத்துப் பாணியிலானது; அதோடு துருப்பிடித்த புள்ளிகளை வெளிக்காட்டிக்கொண்டிருக்கும். தூரங்காட்டும் மீட்டர் ஒரு லட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான கிலோமீட்டர்களைக் காட்டுகின்றது. சில நேரங்களில் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை காரைக் கிளப்புவது முடியாததாகிவிடும். வேறொன்றும் இல்லை; இயந்திரம்  பற்றிக்கொள்ளாது. இருந்தாலும் அதைச் சரிசெய்வது ஒன்றும் அவ்வளவு மோசமானதல்ல. அதை ஒரு குழந்தையை அமைதிப்படுத்துவது போலத் தட்டிக்கொடுத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஓய்வெடுக்கச் செய்தால், பின்னர் அருமையாகத் திடமான உறுமலுடன் இயங்கத் தொடங்கிவிடும். ஓ, நல்லது, ஒவ்வொன்றும் – ஒவ்வொருவரும்  மாதத்தில் ஒரு முறையோ இருமுறையோ அடிபடுவது அல்லது இடிபடுவதிலிருந்தும் வெளிவருகின்றனர். அதுதான் வாழ்க்கை. என் கணவர் எனது காரை, ‘’ உன் கழுதை’’ என்றுதான் சொல்கிறார். நான் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அது, அது என்னுடையது!
நான் என்னுடைய சிவிக்கை பல்பொருள் அங்காடிக்கு ஓட்டிச்செல்கிறேன்.  தேவையானவற்றை வாங்கி வந்த பிறகு, நான் வீட்டைச் சுத்தம் செய்து, துணி துவைக்கிறேன். பின்னர் மதிய உணவைத் தயாரித்து முடிக்கிறேன். காலை வேலைகளையெல்லாம் சுறுசுறுப்பாக, வேகமாகச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் இரவு உணவுக்கான தயாரிப்புகளையுங்கூடக் காலையிலேயே முடித்துவிட விரும்புகிறேன். பிறகு, பிற்பகல் முழுவதும் எனக்கே எனக்கானதாகி விடும்.
என் கணவர் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருகிறார். அவர் வெளியே சாப்பிடுவதை விரும்புவதில்லை. உணவுவிடுதிகளில் கூட்டம் அதிகம்; உணவும் நன்றாக இல்லையென்பதோடு சிகரெட் புகை நாற்றம் அவர் ஆடைகளுக்குள் புகுந்து விடுவதாகவும் அவர் கூறுகிறார். வீட்டுக்கு வந்து போவதற்கு அதிக நேரமானாலும் கூட அவர் வீட்டில் சாப்பிடுவதையே விரும்புகிறார். இருந்தாலும் நான் மதிய உணவுக்கெனச் சிறப்பாக எதுவும் செய்வதில்லை. மிச்சம் மீதியிருந்தால் அவற்றை மைக்ரோ ஓவனில் சூடுபடுத்திவிடுவேன். அப்படியும் இல்லையென்றால் ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் கொதிக்கவைத்துவிடுவேன். அதனால் அதற்கெனச் செலவாகும் நேரம் குறைவாகிவிடுகிறது. பேசுவதற்கு யாருமில்லாமல் எப்போதும் தனிமையில் தவிக்கும் எனக்கு, என் கணவரோடு சாப்பிடுவது ஆர்வம் தரக்கூடிய ஒன்று தானே.

மருத்துவமனை தொடங்கிய காலத்தில், பிற்பகலின் முற்பொழுதில் அநேகமாக நோயாளிகள் யாரும்  வருவதில்லை. அதனால், மதிய உணவு சாப்பிட்டதும் நாங்கள் சிறிது நேரம் படுக்கலாமெனச் செல்வோம். அவரோடு இருந்த மிக அழகிய காலங்கள் அவை. அனைத்தும் `உஷ்!` என மிரட்டி அடக்கப்பட்டன. பிற்பகலின் மெல்லிய கதிரொளி அறைக்குள் கசியும். அப்போது நாங்கள் அதிக இளமையாக, மகிழ்ச்சியாக இருந்தோம்.
இப்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். உண்மையில் நான் அப்படித்தான் நினைக்கிறேன். குடும்பப் பிரச்னைகளென எதுவும் எங்கள் வீட்டில்  நிழல்கூடக் காட்டுவதில்லை. நான் அவரைக் காதலிக்கிறேன்; அவர் மீது நம்பிக்கையோடிருக்கிறேன். அதேபோலத்தான் அவரும் என்னைப்பற்றி உணர்வாரென்ற நிச்சயத்தில்தான் நான் இருக்கிறேன். ஆனால், வருடங்களும் மாதங்களும் செல்லச் செல்லக் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மாற்றமடைகிறது. அது அப்படித்தான் ஆகிறது. அதற்காக, அதைத் தடுக்க நீங்கள் எதுவும் செய்துவிட முடியாது. இப்போது பிற்பகல் நேரங்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டுவிட்டன. நாங்கள் சாப்பிட்டு முடிந்ததும் என் கணவர் பல் துலக்கிவிட்டு, மருத்துவமனை செல்வதற்காகக் காருக்கு ஓடுகிறார். அங்கே அவருக்காக நோய்ப்பட்ட பற்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அதெல்லாமே சரிதான். எல்லாவற்றையும் அவரவருக்கு விருப்பமான சொந்தப் பாதையிலேயே தக்கவைத்துக்கொள்ள முடியாதென எங்கள் இருவருக்கும் தெரியும் தான்.
என் கணவர் மருத்துவ மனை சென்றபின், நீச்சலுடையும் ஒரு துண்டும்  எடுத்துக்கொண்டு அருகிலுள்ள தடகளக் கழகத்திற்குக் காரை நானே ஓட்டிச் செல்கிறேன். அரைமணி நேரம் நீந்துகிறேன். நான் கடுமையாக நீந்துகிறேன். எனக்கு நீச்சலில் ஒன்றும் பெரியளவுக்கு ஆர்வம் இல்லை. உடல் தொளதொளவென்றாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நான் எப்போதும் என் உருவத்தை நேசிக்கிறேன். எனக்கு உண்மையில் என் முகத்தை எப்போதுமே பிடிப்பதில்லை. அது மோசமாக இல்லை; ஆனாலும் அதை எனக்குப் பிடித்தமான ஒன்றாக ஒருபோதும் உணர்ந்ததில்லை. என் உடம்பின் விஷயம் வேறு. கண்ணாடியின் முன்பு நிர்வாணமாக நிற்பதை நான் விரும்புகிறேன். என் உடலின் மெல்லிய புறக்கோட்டினை, அதில் தெரிகிற சமநிலை உயிர்ப்புத்திறனை கூர்ந்து பார்ப்பது எனக்குப் பிடிக்கிறது. அது என்னவென என்னால் நிச்சயித்துச் சொல்லமுடியவில்லை. ஆனால், உள்ளுக்குள் ஊறுகின்ற அந்த ஏதோ ஒன்று எனக்கு மிகமிக முக்கியமென்று படுகிறது. அது என்னவாக இருந்தாலும் சரி, அதை இழக்க நான் விரும்பவில்லை.
எனக்கு முப்பது நடக்கிறது. உங்களுக்கு முப்பது வயதாகும்போது அதையே வாழ்க்கையின் முடிவாக உணர்வதில்லை. அதிலும் குறிப்பாக, வயதாவதில் எனக்குக் கொஞ்சமும் மகிழ்ச்சி இல்லை. ஆனால், அது சில விஷயங்களை எளிதாக்கத்தான் செய்கிறது. அது மனநிலை சம்பந்தப்பட்ட ஒன்று. என்றாலும் ஒரு விஷயத்தில் நான் நிச்சயமாக இருக்கிறேன்: முப்பது வயதுப் பெண் ஒருத்தி, தன் உடலை நேசிப்பவளாகவும், அதிலும் உடல் எப்படி இருக்கிறதோ அப்படியே காப்பாற்றிக்கொள்ளும் அக்கறை மிகுந்தவளாகவும் இருந்தால், அதற்காகத் தனிப்பட்ட வகையில் முயற்சி மேற்கொள்ளத்தான் வேண்டும். நான் அதை என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவள் மெலிந்த ஒரு அழகிய பெண்ணாகத்தான் இருந்தாள், ஆனால் இப்போது அப்படி இல்லை. என் விஷயத்திலும் அப்படி நிகழ்வதை  நான் விரும்பவில்லை.

நீச்சலை முடித்த பிறகு, மீதியிருக்கும் என்னுடைய பிற்பகல் நேரத்தைப் பலவழிகளிலும் பயன்படுத்திக்கொள்கிறேன். சிலசமயம் ரயில்நிலைய வெளியங்காடியில் அல்லது கடை, கண்ணிகளில் காட்சிப் பொருட்களைக் கண்ணில் வாங்கித் திரிந்துகொண்டிருப்பேன். சில வேளைகளில் வீட்டுக்கு வந்து சாய்மெத்தையில் சாய்ந்து எதையாவது படிப்பேன், அல்லது எப்.எம். வானொலி கேட்பேன் அல்லது சும்மா ஓய்வெடுப்பேன். அதற்குள் என் மகன் பள்ளியிலிருந்து வந்துவிடுவான். அவன் ஆடை மாற்றி விளையாட்டுக்கான ஆடை அணிய உதவித் தின்பண்டம் ஏதாவது கொடுப்பேன். அவன் அதைத்தின்றுகொண்டே, நண்பர்களோடு விளையாட வெளியில் செல்வான். பிற்பகல் தனிப்பள்ளிக்கு அனுப்புவதற்கு அவன் மிகவும் சிறியவன். பியானோ வகுப்புகள் அல்லது வேறு எதற்கும் அவனை அனுப்புவதில்லை.   .
‘’ அவன் விளையாடட்டும்’’, ‘’தானாகவே வளரட்டும்.’’ என்பார், எனது கணவர். என் கணவரிடம் பேசுவது போலவே என் மகன் வெளியே செல்லும்போதும் அந்தச் சின்ன உரையாடல், ‘’ பத்திரம்’’ என்பேன். அவனும் ‘’ கவலைப்படாதே’’ என்பான்.
மாலை நெருங்குகிறபோது, நான் இரவு உணவுக்கான தயாரிப்பினைத்  தொடங்குவேன். என் மகன் எப்போதும்  ஆறுமணிக்குத் திரும்பிவிடுவான். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்ப்பான். அவசர நோயாளிகள்  யாரும் வரவில்லையெனில், என்  கணவர் ஏழுமணிக்குள் வந்துவிடுவார். அவர் ஒரு துளிகூடக் குடிப்பதில்லை. எந்த நோக்கமுமில்லாத சமூக அரட்டையிலும் அவருக்கு விருப்பமில்லை. வேலை முடிந்ததும் அநேகமாக, எப்போதுமே நேராக வீட்டுக்கு வந்துவிடுவார்.
இரவு உணவின் போது மூவரும் பேசுவோம்; அநேகமாக அன்று என்னென்ன செய்தோம் என்பதைப்பற்றித்தான் இருக்கும். என் மகனிடம் தான் பேசுவதற்கு அதிகமிருக்கும். அவன் வாழ்க்கையில் நிகழ்வது எல்லாமே புத்தம் புதியதாகப் புதிர் நிறைந்ததாகவும் இருக்கின்றன. அவன் பேச, நாங்கள் கருத்துரைப்போம். இரவு உணவுக்குப் பின்னர் அவனுக்குப் பிடித்தமானதை, தொலைக்காட்சி பார்ப்பான், அல்லது ஏதாவது வாசிப்பான் அல்லது என் கணவருடன் சில விளையாட்டுக்கள் விளையாடுவான். அவனுக்கு வீட்டுப்பாடங்கள் இருந்தால் அறைக்குள் அடைந்துகொண்டு, அவனே செய்து முடிப்பான். எட்டரை மணிக்கெல்லாம் படுக்கைக்கு வந்துவிடுவான். நான் அவனைப் படுக்கவைத்து, தலையைக் கோதி, நல்லிரவு வாழ்த்துச் சொல்லி விளக்குகளை அணைப்பேன்.
பின்னர், கணவனும் மனைவியும் தான். அவர் சாய்மெத்தையில் அமர்ந்து செய்தி இதழ் வாசிப்பதும், இடையிடையே என்னிடம் நோயாளிகள் பற்றி அல்லது பத்திரிகையிலிருந்து ஏதாவது பற்றிப் பேசுவதுமாக இருப்பார். பின்னர் ஹைடின் அல்லது மொசார்ட் கேட்பார். எனக்கு இரண்டும் ஒன்று போலவே இருக்கின்றன. அதை என் கணவரிடம் சொல்லும்போது, அது ஒரு விஷயமே கிடையாதென்பார். ‘’ அழகாக இருக்கிறதா. அவ்வளவு தான்.’’ என்பார்.
‘’ உங்களை மாதிரியே.’’ என்பேன், நான்.
‘’ என்னைப் போலவா,’’ என்பார், வாய் முழுக்க விரிந்த ஒரு, பெரிய புன்னகையுடன். அவர் மிகுந்த திருப்தியாகிவிடுவார்.

ஆக, இதுதான் என்  வாழ்க்கை –அல்லது நான் தூங்குவதை  நிறுத்துவதற்கு முன்பிருந்த  வாழ்க்கை – ஒவ்வொரு நாளும் அதற்கு முன்பிருந்ததே மீண்டும் திரும்புவதன்றி வேறில்லை. நான் நாட்குறிப்பினை எளிமையாக எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஆனால், இரண்டு மூன்று நாட்கள் எழுத மறந்துவிட்டால், என்று என்ன நிகழ்ந்த தென்ற தொடர்ச்சியைத் தவறவிட்டுவிடுவேன். நேற்று, முந்தா நாள் போல அல்லது அதற்குமுன் ஒன்றுமாற்றி ஒன்றானதாக இருக்கும். சில நேரங்களில் எனக்கு இது என்ன வாழ்க்கையென்று வியப்பாக இருக்கும். அப்படிச் சொல்வதற்கில்லையென்றாலும் நான் அதை வெறுமையாக உணர்ந்தேன். மிகவும் எளிமையாகச் சொல்வதென்றால், ஒரு நாளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகின்ற அல்லது எல்லைகாட்டுகிற ஏதும் இல்லாமலிருப்பதைக் கண்டு வியந்துபோனேன். உண்மையில், அப்படியானதொரு வாழ்க்கை, என்னை முழுவதுமாக விழுங்கிவிட்ட ஒரு வாழ்க்கையின் அங்கமாக நான் இருந்திருக்கிறேன். நான் மீண்டும் என் காலடித் தடங்களைத் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்பினைப் பெறுமுன்பாகவே அவை அழிக்கப்பட்டுவிட்டன என்பதுதான் உண்மை.

அப்படியாக நான் உணரும்போதெல்லாம், மனம் முழுக்கக் காலியாக,
குளியலறையின் கண்ணாடியில் என் முகத்தை ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அப்படியே வெறுமனே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான், என் முகத்தை ஒரு திடப்பொருளாகப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அது என்னிடமிருந்தும் மெதுமெதுவாகப் பிரிந்து, என்னைப் போலவே இருப்புள்ள ஒன்றாக உருவாகிக்கொண்டிருந்தது. அதோடு எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது: இது இங்கே இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காலடிச் சுவடுகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அந்தக் கணத்தின் உண்மையான வாழ்வும், நானும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். அதுவே மிக முக்கியமான விஷயம்.

ஆனால், இப்போதுமுதல், இனிமேல் என்னால் தூங்க  இயலாது. நான் தூங்குவதை நிறுத்தியதும்  நாட்குறிப்பு எழுதுவதையும் நிறுத்திவிட்டேன்.

நான் தூங்கும் சக்தியை  இழந்த முதல்நாள் இரவினை அவ்வளவு தெளிவாக நினைவில் கொண்டிருக்கிறேன். அன்று ஒரு வெறுக்கத்தக்க கனவினை, இருண்ட தெளிவற்ற கனவு ஒன்றினைக் கண்டேன். அது எதைப்பற்றியதென்று எனக்கு இப்போது நினைவில் இல்லை; ஆனால், அது ஏற்படுத்திய பயங்கர உணர்வும் தீய அறிகுறித் தோற்றங்களும் நன்றாக ஞாபகத்திலுள்ளன. ஒரு பேரழிவுக்கான திருப்பத்தின் இறுதிக் கணத்தில் என்னை ஏதோ ஒன்று பிடித்திழுத்து மீட்டு வந்தது போல அதன் இறுதிக்கட்ட நேரத்தில் துள்ளி எழுந்து விழித்துக்கொண்டேன். நான் மட்டும் கூடுதலாக ஒரு நொடி நேரம் அந்தக்கனவில் மூழ்கியிருந்தேனோ, அவ்வளவுதான் நான் என்றென்றைக்குமாகத் தொலைந்துபோயிருப்பேன். நான் விழித்துக்கொண்ட பிறகும், நிரம்ப நேரத்துக்கு மிகவும் கடும் வேதனையுடனான மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கிக்கொண்டிருந்தேன். என் கைகளும் கால்களும் செயலிழந்து விட்டதான உணர்விலிருந்தேன்.   என்னை ஒரு பெருங்குகைக்குள் தரையில் முழுநீளத்துக்கும் நீட்டிக் கிடத்தப்பட்டிருப்பது போல், நிலைகுலைந்து, மூச்சுத்திணறுவதை என் காதாலேயே கேட்டபடி கிடந்தேன்.
‘’ அது ஒரு கனவுதான்.’’ எனக்கு நானே சொல்லிக்கொண்டு, என் பெருமூச்சு தன்னாலேயே அடங்கட்டுமெனக் காத்திருந்தேன். நீட்டி நிமிர்ந்து, மல்லார்ந்து படுத்திருந்த நான், என் இதயம் கடும் வேகத்தில் துடிக்க, விரையும் இரத்தத்திற்கேற்ப என் நுரையீரல் ஊதுலைபோலப் பெரிதாகி, விரிந்து, பின்னர் சுருங்கியதை உணர்ந்தேன். அப்போது நேரம் என்னவாக இருக்குமென நினைக்கத் தொடங்கினேன். என் தலையணை அருகிலிருந்த கடிகாரத்தைப் பார்க்க விரும்பினேன். ஆனால், தலையை அதற்கேற்ப முழுவதுமாகத் திருப்ப முடியவில்லை. அப்போதுதான் என் காலடியில் தெளிவற்ற கறுப்பாக ஏதோ ஒன்று, நிழலாடுவதை என் கண்ணில் கண்டது போல் தோன்றியது. நான் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டேன். அந்தக் கணத்திலேயே என் இதயம், நுரையீரல், ஏன், எனக்குள்ளிருந்த எல்லாமே உறைந்து போனதாகத் தோன்றியது. அந்தக் கறுப்பு நிழலை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென முயன்றேன்.

அதன் மீது என்  பார்வை முழுவதையும் குவிக்க  முனைந்த கணத்தில், அதற்காகவே  காத்திருந்தது போல, அந்த நிழல் திடமான ஒரு உருவம் கொள்ளத் தொடங்கியது. அதன் புறக்கோடு நன்கு காட்சியாகிப் பின் உள்ளீடு நிரம்பத்தொடங்கி, இறுகி, அதன்பின் கை, காலெனத் தனித்த கூறுகள் தோன்றின. அது ஒட்டி உலர்ந்த ஒரு கிழவன்; இறுக்கிப் பிடிக்கும் கறுப்புச் சட்டையணிந்திருந்தான். அவன் கன்னங்களில் குழிவிழுந்து, குட்டையான தலைமுடி முழுவதுமாக நரைத்திருந்தது. அவன் என் கால் பாதங்களருகில் சிறிதுகூட அசைவின்றி நின்றிருந்தான். அவன் எதுவுமே பேசவில்லை; ஆனால், அவன் துளைக்கும் கண்கள் என்னை ஊடுருவி நோக்கின. அந்தப் பெரிய கண்களில் சிவந்த நரம்புப் படலத்தின் பின்னலை என்னால் காண முடிந்தது. அந்தக் கிழவனின் முகத்தில் எந்த உணர்வுகளுமே இல்லை. அது எதையுமே வெளிப்படுத்தவில்லை. இருட்டுக்குள் அது ஒரு துவாரம் போல இருந்தது.
அது  ஒரு கனவின் நீட்சியாக இல்லையென எனக்குத் தெரிந்தது. அதிலும், நான் ஏற்கெனவேயே விழித்து விட்டிருந்தேன். மேலும் அது தூக்கக் கலக்கத்திலேயேயான விழிப்பல்ல; என் கண்கள் ஏற்கெனவே அகலத் திறந்துவிட்டன. இல்லை, அது கனவல்ல; உண்மை நடப்பு. நான் பார்த்தேயிராத ஒரு கிழவன் என் படுக்கையின் காலடியில் உண்மை நிகழ்வாக நின்றுகொண்டிருக்கிறான். நான் ஏதாவது செய்தாக வேண்டும் – விளக்கைப் போட, என் கணவரை எழுப்ப, வீலெனக் கத்த- ஏதாவது செய்யவேண்டும். நான் அதற்காக எழ முயற்சித்தேன். என் கைகால்களை அசைக்க முயற்சித்தேன், ஆனால், எதுவும் முடியவில்லை. ஒரு விரலைக்கூட என்னால் அசைக்க முடியவில்லை. என்னால் அசையக்கூட முடியவில்லையென்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்ததும், நம்பவியலாத ஒரு பயங்கரம், அதுவரை அனுபவித்தறியாத ஒரு உயிரச்சம், அடியாழமே தெரியாத கிணற்றுக்குள்ளிருந்து மெல்ல எழுந்து பரவும் பனிக் குளிரைப் போல என்னுள் நிரம்பி நிறைந்தது. நான் ஓலமிட்டுக் கத்த முற்சித்தேன். ஆனால், என்னால் எந்தச் சப்தத்தையும் எழுப்ப, ஏன் என் நாவைக்கூட அசைக்க முடியவில்லை. நான் செய்ய முடிந்ததெல்லாம், அந்தக் கிழவனைப் பார்த்துக்கொண்டிருக்க முடிந்தது மட்டுமே.     .
உயரமாக ஒடுங்கி, உருளைபோல வெண்மையாக மிளிர்கின்ற, ஏதோ ஒன்றை அவன் கையில் பிடித்திருப்பதை என்னால் இப்போது காண முடிகிறது. நான் அதைக் கூர்ந்து நோக்கி அது என்னவாக இருக்குமென வியந்து கொண்டிருந்தபோது, ஏற்கெனவேயே நிழல் உருவங்கொண்டதைப் போன்ற அதேமாதிரியில் இதுவும் திட உருவங்கொள்ளத் தொடங்கியது. அது ஒரு பெரிய பரணி வகைப்பட்ட ஜாடி. பழங்காலப் பாணியிலான பீங்கான் பரணி. சிறிது நேரத்தில் அந்தக் கிழவன் பரணியைத் தூக்கிப் பிடித்து உயர்த்தி, அதிலிருந்த தண்ணீரை என் கால் பாதங்களில் ஊற்றத் தொடங்கினான். என்னால் தண்ணீரை உணர முடியவில்லை. என்னால் அதைப் பார்க்க முடிந்தது; தண்ணீர் என் கால் பாதங்களில் சிதறி விழுவதைக் கேட்க முடிந்தது; ஆனால், என் கால்களில் ஈரம் பட்டதாக எந்த உணர்வுமில்லை.
அந்தக் கிழவன் என்  கால் பாதங்களில் தண்ணீரைச் சிறிதும் நிறுத்தாமல், ஊற்றிக்கொண்டேயிருந்தான். வினோதம், அவன் எவ்வளவு ஊற்றினான் என்பது கணக்கேயில்லை, அந்தப்பரணி காலியாகவேயில்லை. இப்படியே நீடித்தால், என் கால் பாதங்கள் அழுகிக் கரைந்துவிடுமென நான் பயப்படத் தொடங்கினேன். ஆம். அது இயற்கைதானே, அவை அழுகும். அவற்றின் மீது அவ்வளவு தண்ணீரை ஊற்றிக் கொண்டேயிருந்தால், அழுகாமல் வேறென்ன செய்யும்? என் பாதங்கள் அழுகிக் கரையப்போகின்றதென எனக்குள் தோன்றிய போது, அதை என்னால் பொறுத்துக்கொண்டிருக்க  முடியவில்லை .
நான் கண்களை இறுக மூடிக்கொண்டு, என் வலிமையெல்லாம் திரட்டி `ஓ`வென ஒரு பெருங்கதறலை வெளிப்படுத்தினேன். ஆனால், அது என் உடலை விட்டு வெளியேறவேயில்லை. அது எனக்குள்ளேயே சப்தமின்றி எதிரொலித்துக் கிழித்துச் சென்று என் இதயத்தை நிறுத்தியது. அந்தக் கதறல் என்னுடைய ஒவ்வொரு அணுவுக்குள்ளும் பாய்ந்ததில் ஒரு கணத்திற்கு என் தலைக்குள்ளிருக்கும் எல்லாமே வெண்மையாக மாறிவிட்டது. எனக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று மரித்துப்போனது. ஏதோ ஒன்று உருகியோடி, வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. வெடித்துச் சிதறடிக்கும் மின்னலொன்று என் இருப்பு சார்ந்த அடிப்படைகள் அனைத்தையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டது.
நான் கண்களைத் திறந்த போது, அந்தக் கிழவன் போய்விட்டிருந்தான். அந்தப் பரணியும் போய்விட்டிருந்தது. படுக்கை விரிப்பு ஈரமற்று, என் கால் பாதங்களுக்கருகில் எங்குமே, எதிலுமே ஈரம்பட்ட அறிகுறி எதுவும் இல்லாமலிருந்தது. இருப்பினும் என் உடல் வியர்வையில் நனைந்து ஊறிப்போயிருந்தது. ஒரு மனிதனுக்கு எவ்வளவுதான் வியர்க்குமென்ற என் கற்பனைக்கும் மிக அதிகமாகப் பயங்கரமாக வியர்த்திருந்தது. இருந்தாலும் அது என் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைதான் என்பதை மறுக்கமுடியாது.
நான் ஒரு விரலை அசைத்தேன். பின்னர், அடுத்த விரல், அதன்பின் அடுத்தது, அதற்கும் பின்னர் மீதியிருந்த எல்லாவற்றையும். அடுத்து, என் கைகளை, அதன்பின் கால்களை மடக்கி நிமிர்த்தினேன். கரண்டைகளைச் சுழற்றி, மூட்டுகளை அசைத்துப் பார்த்தேன். அவை எவ்வளவுக்கு அசைய வேண்டுமோ அந்த அளவுக்கு அசையவில்லை. இருந்தாலும் அவற்றை அசைக்க முடிந்தது. உடம்பின் எல்லா உறுப்புகளும் இயங்குகின்றனவா எனக் கவனமாகப் பரிசோதித்த பின்னர், உட்கார்கிற ஒரு நிலையில் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். படுக்கையறையின் இனிய இரவுவிளக்கிலிருந்து கசிந்த மங்கலொளியில் அறை முழுவதும் ஒரு மூலைகூட விடாமல் நுணுகிப் பார்த்தேன். அந்தக் கிழவன் நிச்சயமாக அறைக்குள் எங்கும் இல்லை.
என் தலையணை அருகிலிருந்த கடிகாரம் பன்னிரண்டரையைக் காட்டியது. நான் ஒன்றரை மணி நேரம் மட்டுமே தூங்கியிருக்கிறேன். என் கணவர் அவரது படுக்கையில் நல்ல தூக்கத்திலிருந்தார். அவரின் சுவாசம் வெளிப்படும் சப்தம் கூடக் கேட்கவில்லை. அவரின் மன அசைவுகள் எல்லாமே முற்றிலுமாக நின்றுவிட்டது போலத்தான் அவர் எப்போதுமே தூங்குகிறார். எதுவுமே அவரை எழுப்பிவிட முடியாது.
நான் படுக்கையிலிருந்தும்  எழுந்து குளியலறைக்குச் சென்றேன். வியர்வை ஊறிப்போயிருந்த இரவு ஆடையைக் கழற்றிச் சலவை எந்திரத்துக்குள் எறிந்துவிட்டு, நீர்ப்பொழிவில் குளித்தேன். புதிய சலவை பைஜாமா இணையொன்றை அணிந்து, முன்னறைக்குச் சென்று, சாய்மெத்தை அருகிலிருக்கும் தள விளக்கை ஒளிரவிட்டு, அங்கேயே அமர்ந்து, ஒரு முழு கண்ணாடிக்குவளை நிறைய பிராந்தியை அருந்திக் கொண்டிருந்தேன். அநேகமாக நான் எப்போதுமே குடிப்பதில்லை. என் கணவரைப்போல மது என் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்பதில்லை. உண்மையில் நான் நிறையவே குடித்துக்கொண்டிருந்தேன், ஆனால், திருமணத்திற்குப்பின் வெறுமனே நிறுத்திவிட்டேன். தூங்குவது ஒரு பிரச்னையாக இருக்கும் சிலவேளைகளில் மட்டும் ஒரு மடக்கு பிராந்தி குடிப்பேன், ஆனால், அன்று இரவு மிதமிஞ்சிப் பதறிக்கொண்டிருந்த என் நரம்புகளை அமைதிப்படுத்த ஒரு முழுக்குவளை தேவைப்படுமென நான் உணர்ந்தேன்.
வீட்டில் மதுவென்று, சுவர்மாடத்தில் நாங்கள் வைத்திருந்த ஒரே ஒரு புட்டி ரெமி மார்ட்டின் மட்டுமே இருந்தது. அது எங்களுக்கு ஒரு பரிசாக வந்திருந்தது. அதுவும் கூட யார் கொடுத்ததென்பது நினைவில்லாதளவுக்கு நீண்ட நாட்களாகி விட்டது. புட்டிமீது இலேசான படலமாகத் தூசி அடர்ந்திருந்தது. எங்களிடம் பிராந்திக்கான குவளைகள் இல்லை; அதனால் வழக்கமான குவளையிலேயே பிராந்தியை ஊற்றி மெதுமெதுவாக உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.
நான் தன்னைமறந்த ஒரு மிதப்புநிலையில் இருந்திருக்கவேண்டுமென, நினைத்தேன். அதுபோன்ற ஒருநிலை எனக்கு எப்போதுமே வந்ததில்லை. ஆனால், அதிலிருந்த மீண்ட ஒரு கல்லூரித்தோழியிடம் மிதப்புநிலை பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். எல்லாமே வியக்கத்தக்க அளவுக்கு, அப்படியொரு தெளிவாக இருக்குமென அவள் சொல்லியிருந்தாள். ‘’ அது ஒரு கனவென்று நம்பவே முடியாது. அது நிகழ்ந்துகொண்டிருந்தபோதும் அதனை ஒரு கனவென்று நான் நம்பவில்லை. ஏன், இப்போதும் அது ஒரு கனவென்ற நம்பிக்கை எனக்கு இல்லை.’’ நான் எப்படி உணர்ந்தேனோ, அப்படியேதான் அவள் சொன்னதும். உள்ளபடிக்கென்றால், அது ஒரு கனவாக – கனவு போல உணரப்படாத ஒரு வகைக் கனவாக இருந்திருக்க வேண்டும்.
பயங்கரத் திகில் என்னைவிட்டு அகன்றுவிட்ட போதிலும் என் உடலின் நடுக்கம் நின்றபாடில்லை. நிலநடுக்கத்திற்குப் பின்பும், தண்ணீரில் உருவாகும் சிற்றலை வட்டங்களைப் போல அது என் உடம்புக்குள் தோலுக்கடியில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. இலேசான நடுக்கத்தை என்னால் பார்க்கவும் முடிந்தது. அந்தக் கதறல்தான் அதைச் செய்திருந்தது. சத்தத்தை, அதன் குரலையே காணாத கதறல்தான் என் உடம்புக்குள் அடைபட்டுக்கொண்டு, நடுக்கத்தை ஏற்படுத்தியது.
கண்களை மூடிக்கொண்டு மற்றொரு வாய் பிராந்தியை விழுங்கினேன். தொண்டைக்குள்ளிருந்து, கதகதப்பு வயிற்றுக்குள் இறங்கிச் செல்வதை, அத்துணை இயல்பாக, அதியற்புதமாக உணரமுடிந்தது.
திடுமென, என் மகனை நினைத்தேன். மீண்டும் என் இதயம் படுவேகமாகத் துடிக்கத் தொடங்கியது. நான் சாய்மெத்தையிலிருந்து எழுந்து அவனது அறைக்கு ஓடினேன். ஒரு கையால் குறுக்காக வாயை மூடி, மறுகையை எதிராக நீட்டி, என் கணவரைப் போலவே தூக்கத்தில் அமைதியையும் பாதுகாப்புணர்வையும் பெறுவதாக, அவன் நல்ல தூக்கத்திலிருந்தான். அவனது போர்வையை இழுத்துச் சரிப்படுத்தினேன். அவ்வளவு கடுமையாக என் தூக்கத்தைக் குலைத்தது எதுவாக இருந்தாலும், அது என்னை மட்டுமே தாக்கியிருந்தது. அவர்கள் இருவரில் யாருக்கும் எதுவும் இல்லை; அவர்கள் எதையும் உணரவுமில்லை.
நான் வசிப்பறைக்குத் திரும்பி அங்கேயே அப்படியும் இப்படியுமாக நடந்து கொண்டிருந்தேன்; மிகச் சிறிய அளவில் கூடத் தூக்கமாக உணரவில்லை.
இன்னொரு குவளை பிராந்தி அருந்தலாமாவென நினைக்கத் தொடங்கினேன். உண்மையில், சாராயத்தை உடலுக்குள்  இன்னும் அதிகமாக்க விரும்பினேன். என் உடம்பினை மேலும் கதகதப்பாக்க வேண்டும்; உதறும் நரம்புகளை அமைதிப்படுத்த வேண்டும். அதற்கு, என் வாய்க்குள் மீண்டும் அந்த வலிமையாக ஊடுருவும் மதுவின் மணத்தை உணர வேண்டும். சிறிது தயக்கத்தின் பின்னால், அதற்கெதிராக முடிவெடுத்தேன். முதல் நாளை ஒரு போதைநாளாகத் தொடங்க எனக்கு விருப்பமில்லை. பிராந்திப் புட்டியை மீண்டும் சுவர்மாடத்திலேயே வைத்துவிட்டு, குவளையைச் சமையலறைக் கழுவுதொட்டிக்குக் கொணர்ந்து கழுவிவைத்தேன். குளிர்பெட்டியில் சில ஸ்ட்ராபெர்ரிகளைக் கண்டேன்; அவற்றை எடுத்துத் தின்றேன்.
தோலுக்கடியிலிருந்த  உதறல் அநேகமாக நின்றுவிட்டதாக உணர்ந்தேன்.

கறுப்பு உடையிலிருந்த அந்தக்கிழவன்! அது என்ன? நான் என்னையே கேட்டுக் கொண்டேன். என் வாழ்க்கையில், அவனை இதற்குமுன் எப்போதும் கண்டதில்லை. அந்தக் கறுப்பு ஆடை, உடம்பை ஒட்டிப் பிடிக்கும் நீச்சலுடை போல, ஆனால், மிகப்பழங்காலப் பாணி, அவ்வளவு வினோதமாகத் தோன்றியது. அதைப்போன்ற எதையும் நான் ஒருபோதும் பார்த்ததேயில்லை. அப்புறம், அந்தக் கண்கள் – இரத்தம் பாய்ந்து, சிவந்து இமைக்கவேயில்லை. அவன் யார்? என் கால்களில் அவன் ஏன் தண்ணீரை ஊற்றினான்? எதனால் அப்படியான ஒரு செயலை அவன்  செய்தாக வேண்டியிருந்தது?

என்னிடம் கேள்விகள்  மட்டுமே இருந்தன. பதில்கள் இல்லை.
என் தோழி மிதப்புநிலைக்குள் விழுந்தபோது, அவளுக்கு விருப்பமானவன் வீட்டில் இரவைக் கழித்துக்கொண்டிருந்தாள். அவள் படுக்கையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது, சினங்கொண்ட தோற்றத்தில், ஐம்பதுகளின் முற்பருவத்திலிருந்த மனிதர் ஒருவர் அவளை வீட்டைவிட்டு வெளியே போகுமாறு சத்தமிட்டிருக்கிறார். அது நிகழ்ந்துகொண்டிருந்த போது, அவளால் ஒரு நரம்பைக்கூட அசைக்க முடியாமலிருந்துள்ளது. அப்புறம், என்னைப் போலவே வியர்வையில் மூழ்கி, ஊறிப்போயிருக்கிறாள். அவளை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்னது, அவளுடைய அந்த விருப்பமானவனின் அப்பாவின் ஆவியாகத்தானிருக்க வேண்டுமென அவள் உறுதியாகச் சொல்லியிருக்கிறாள். ஆனால், மறுநாள் அவளிடம் அந்த அப்பாவின் புகைப்படத்தைக் காட்டியபோது, அது முழுவதுமாக வேறு மனிதராக இருந்தது. ‘’ நான் பதற்றத்தில் இருந்திருப்பேன்.’’ என அவள் முடித்தாள். ‘’ அதுதான் மிதப்புநிலைக்குக் காரணமாயிருக்க வேண்டும்.’’
ஆனால், எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. மேலும், அது என்னுடைய சொந்த வீடு. இங்கே என்னைப் பயமுறுத்துவதற்கு எதுவும் இல்லை. அப்படியிருக்கும் போது, எனக்கு ஏன் மிதப்புநிலை ஏற்படவேண்டும்?
நான் தலையை உலுக்கிக்கொண்டேன். `நினைத்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ளென எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அதனால் எந்த நன்மையும் இல்லை. நான் கண்டது ஒரு உண்மையான கனவு; அதற்குமேல் எதுவும் இல்லை. நான் ஏதோ ஒருவிதத்தில் மிதமிஞ்சிய சோர்வினை அடைந்திருக்கவேண்டும். நேற்றுக்கு முதல்நாள் நான் ஆடிய மட்டைப்பந்து விளையாட்டினால்தான் அப்படி ஆகியிருக்கவேண்டும். நான் கழகத்தில் நீச்சல் முடித்தபிறகு ஒரு தோழியைச் சந்தித்தேன். அவள் என்னை மட்டைப்பந்து விளையாட அழைத்தாள். நான் கொஞ்சம் அதிகமாகத்தான் விளையாடிவிட்டேன். அவ்வளவுதான். ஆமாம். – அதற்குப் பிறகு கொஞ்ச நேரத்துக்குக் கை,கால்கள் எல்லாம் சோர்வாகிக் கனத்துத் தெரிந்தன.

நான் ஸ்ட்ராபெர்ரிகளைத்  தின்றுமுடித்து, சாய்மெத்தையிலேயே நீட்டிப் படுத்து, களைப்பில்  கண்களை மூடினேன்.

எனக்குத் தூங்கும் நினைப்பே இல்லை. ‘’அய்யோ! உண்மையாகவே எனக்குத் தூங்கும் நினைப்பு வரவேயில்லை.’’
மீண்டும் களைப்பாகும்வரை ஏதாவது ஒரு புத்தகம் வாசிக்கலாமென நினைத்தேன். படுக்கை அறைக்குச்  சென்று, நூல் அடுக்கிலிருந்து  ஒரு நாவலை எடுத்தேன். நான் அதைத் தேடுவதற்காக விளக்கை  எரியவிட்ட போதுங்கூட என்  கணவரிடம் எந்த அசைவும் இல்லை. நான் அன்ன கரீனாவைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு நீண்ட ருஷ்ய நாவலை வாசிக்கும் மனநிலையில் இருந்தேன். நான் அதனை ஒரே ஒருமுறை மட்டுமே, அதுவும் நிரம்ப நாட்களுக்கு முன்னால், அநேகமாக உயர்நிலைப்பள்ளி நாட்களில் படித்த்திருந்தேன். அந்த நாவலின் சில விஷயங்களை நினைத்துப் பார்த்தேன். அதன் முதல் வரி, ‘’ மகிழ்ச்சியான எல்லாக் குடும்பங்களும், ஒன்றைப் போலவே மற்றதும் இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் அதனதன் சொந்த வழியிலேயே மகிழ்ச்சி யற்றிருக்கின்றன.’’ அதன் கதாநாயகி கடைசியில் ரயில் முன் பாய்ந்து விடுவாள். முடிவில் தற்கொலைதான் என்பதற்குத் தொடக்கத்திலேயே ஒரு குறிப்பு இருந்தது. பந்தயப் பாதையில் ஒரு காட்சி இருந்ததே, இல்லையோ? அது வேறொரு நாவலிலோ?
என்னவாயிருக்கட்டுமே. நான் சாய்மெத்தைக்குத் திரும்பிச் சென்று, நாவலைத் திறந்தேன். இது போல ஒரு புத்தகத்தில் ஆழ்ந்து, சாவதானமாக ஆசுவாசப்பட்டு, எத்தனை வருடங்கள் ஆகி விட்டன? உண்மைதான், நான் பிற்பகலில் தனியான எனது பொழுதில் ஒரு  அரைமணி நேரமோ, ஒருமணி நேரமோ, ஒரு புத்தகத்தைத் திறந்துவைத்துக்  கொண்டு கழிப்பதுண்டு. ஆனால், அதை வாசிப்பென்று சொல்லிவிட  முடியாது. எப்போதுமே எனக்குள் ஏதாவது ஒரு சிந்தனை– என் மகன் அல்லது, வாங்கவேண்டிய பொருட்கள் அல்லது, குளிர்பெட்டியின் உறைபகுதியை நிறுத்துவது அல்லது, உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு எந்த ஆடை அணிந்து செல்வது அல்லது, என் தந்தை சென்ற மாதம் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டது, என ஏதோ ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். அது மாதிரியான ஒன்று என் மனத்துக்குள் இலேசாக அசைந்து, பின்னர் வளர்ந்து, பல கோடித் திசைகளில் பறக்கும். சிறிது நேரம் சென்றபின்பு தான் கவனித்திருப்பேன், நேரம் போனதுதான் மிச்சமே தவிர ஒரு பக்கத்தைக் கூடத் தாண்டியிருக்க மாட்டேன்.
புத்தகங்கள் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு, அப்படியாகிப்போகிற  கவனம் இல்லாமலேயே, பழக்கப்பட்டுப் போயிருக்கிறேன். எப்படியான ஒரு முரண்பாடு, ஆச்சரியம் பாருங்கள், அதைப்பற்றி இப்போது நினைக்கிறேன். என் இளமைக்காலத்தில், வாசிப்பது ஒன்றே வாழ்க்கையின் மையமாக இருந்தது. என் பள்ளிக்கூட நூலகத்திலிருந்த அத்தனை புத்தகங்களையும் ஒன்று விடாமல் வாசித்திருக்கிறேன். எனக்கு கிடைக்கிற படித்தொகை (allowance) முழுவதும் அநேகமாகப் புத்தகங்களுக்காகவே செலவானது. நான் வாசிக்கவிரும்பிய புத்தகங்களை வாங்குவதற்காக மதிய உணவுகளைக் கூடத் தியாகம் செய்திருக்கிறேன். இது, அப்படியே இளநிலை, மற்றும் உயர்நிலைப் பள்ளியிலும் தொடர்ந்தது. வேறு யாரும் என்னைப்போல அல்லது என்னளவுக்கு வாசித்தவர்கள் இல்லை. ஐந்து குழந்தைகளில், நான், நடுவில் பிறந்தவள். எங்கள் பெற்றோர் இருவருமே வேலைக்குச் சென்றனர். அதனால் என் மீது யாருக்குமே அதிகக் கவனம் இல்லை. தனிமையில் நான் விரும்பிய அளவுக்கு வாசிக்க முடிந்தது. நூல்கள் பற்றிய கட்டுரைப்போட்டிகளில் நான் எப்போதுமே கலந்து கொள்வேன்; நிறையப் புத்தகங்கள் குறித்துப் பரிசுச் சான்றுகளையும் பெற்றுவிடுவேன். வழக்கமாக நான் வெற்றிபெற்றுவிடுவேன். கல்லூரியில் நான் ஆங்கில இலக்கியத்தை முக்கிய பாடமாக எடுத்து அதில் நல்ல மதிப்பெண் குறியீடுகளைப் பெற்றிருக்கிறேன். என்னுடைய பட்டப் படிப்புக்கான காதரீன் மான்ஸ்பீல்டு பற்றிய எனது ஆய்வு உயர் மதிப்பினை வென்றெடுத்தது. என்னுடைய ஆய்வு அறிவுரையாளர் என்னை உயராய்வுக்கு மனுச் செய்யுமாறு கூறினார். நான் அதைவிட்டு வெளி உலகத்திற்கு வர விரும்பினேன். அதோடு, நான் ஒரு திறமையாளர் அல்லவென்பது எனக்குத் தெரியும்; புத்தக வாசிப்பில் மகிழ்ச்சி கொண்டேன், அவ்வளவுதான். அதிலும் நான் மேற்கொண்டு படிக்க விரும்பினாலும் என் குடும்பப் பொருளாதார நிலை என்னை உயர் படிப்புக்கு அனுப்புமளவுக்குத் தாராளமாக இல்லை. நாங்கள் எந்த வகையிலும் ஏழைகள் இல்லை யென்றாலும் என்னோடு சேர்ந்து இரண்டு தங்கைகள் வளர்ந்து கொண்டிருந்தார்கள். அதனால், நான் கல்லூரிப் படிப்பு முடித்ததும் என் பொறுப்பை நானே பார்த்துக் கொள்ளவேண்டியதாயிற்று. .
கடைசியாக நான் ஒரு  புத்தகத்தை உண்மையிலேயே  வாசித்தது எப்போது? அது  என்ன புத்தகம்? என்னால் எதையும்  நினைவுகொள்ள முடியவில்லை. ஒரு மனிதனின் தனிவாழ்க்கை இப்படித் தலைகீழாக ஏன் மாற வேண்டும்? பழைய நான், பேய் பிடித்தது போலப் புத்தகம் வாசிக்கும் நான், எங்கே காணாமற்போனேன்? அந்த நாட்கள், அசாதாரணமான அந்தத் தீவிர ஆர்வம், எனக்கு என்னவாக இருந்தது?
.
அன்று இரவு, இடையறுபடாத ஒன்றிப்புடன் அன்ன கரீனாவை  என்னால் வாசிக்க முடிந்ததை, நான் கண்டுகொண்டேன். மனத்தில் வேறு சிந்தனை ஏதுமின்றிப் பக்கம், பக்கமாகப் படித்துக்கொண்டேயிருந்தேன். ஒரே இருப்பில், மாஸ்கோ ரயில் நிலையத்தில் அன்னாவும் விரான்ஸ்கியும் முதல் முதலாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்களே, அதுவரை வந்துவிட்டேன். அந்த இடத்தில் புத்தக அடையாளத்தைச் செருகிவிட்டு, இன்னொரு குவளை பிராந்தியை எனக்குள் ஊற்றிக்கொண்டேன்.
இதுபோல் எனக்கு முன்னர் தோன்றியதில்லையென்றாலும், அது என்ன மாதிரி ஒரு நாவல், தனிப்பட்ட வகைதானென்று நினைக்காமலிருக்க முடியவில்லை. முதல் பதினெட்டு அத்தியாயங்கள் வரை, கதாநாயகி அன்னாவைப் பார்க்க முடியாது. டால்ஸ்டாய் காலத்து வாசகர்களுக்கு இது வழக்கமற்ற ஒன்றாகத் தோன்றியிருக்காதாவென வியந்தேன். அந்த நாவலில், வெறுமனே உட்கார்ந்து, அழகிய கதாநாயகியின் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு சாதாரணப் பாத்திரமான ஒப்லான்ஸ்கியின் வாழ்க்கையைப் பற்றி விளக்கமான விவரணைகள் பக்கம் பக்கமாகச் சென்றுகொண்டிருக்கும்போது, வாசகர்கள் பாவம், என்ன செய்வார்கள்? அது இப்படியாக இருக்கலாம். அந்தக் காலச் சமூகத்தில் மக்களுக்கு – குறைந்தபட்சம், நாவல் வாசிக்கின்ற பகுதியினருக்காவது, கடத்தித் தொலைக்கவேண்டிய நேரம் கொள்ளை, கொள்ளையாக இருந்திருக்கலாம்.
அப்புறமாகத்தான், நேரம் கடந்துவிட்டதைக் கவனித்தேன். அதிகாலை மூன்று மணி. ஆனாலும், அப்போதுங்கூட எனக்குத் தூக்கம் வரவில்லை.
நான், என்ன செய்யலாம்? கண்ணுக்குத் தூக்கம் வரவேயில்லையேயென நான் நினைத்தேன்; வெறுமே வாசித்துக் கொண்டேயிருக்கலாம்.கதையில் என்ன நிகழ்கிறதெனக் கண்டுபிடிக்க ஆசைப்படலாம். ஆனால், நான் தூங்க வேண்டியிருக்கிறதே!

இன்சோம்னியாவுடனான எனது போராட்ட காலத்தை, எப்படி ஒவ்வொரு நாளையும் புகைமூட்டத்துக்குள் கழித்துத் தொலைத்தேனென நினைத்துப் பார்த்தேன். முடியாது, திரும்பவும் அதுபோல முடியாது. அப்போது நான் ஒரு மாணவியாக இருந்தேன். அதுமாதிரியான ஒன்றோடு காலத்தைக் கழிக்க முடிந்தது. ஆனால், இப்போது அப்படியல்லவென நான் நினைத்தேன். இப்போது நான் ஒரு மனைவி, ஒரு தாய். எனக்கெனப் பொறுப்புகள் இருக்கின்றன. என் கணவருக்கான உணவை நான்தான் தயாரிக்கவேண்டும்; என் மகனைக் கவனித்து, வளர்க்கவேண்டும்.
ஆனால், இப்போது படுக்கையில் படுத்தாலும், ஒரு இமைப்பொழுது கூடக் கண்மூடித் தூங்கமுடியாதென எனக்குத் தெரிகிறது.
நான் தலையை உலுக்கிக்கொண்டேன்.
நாம் இதையும் எதிர்கொள்வோம். என்ன, தூக்கம் வரவில்லை, அவ்வளவு தானேயென எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; அதோடுகூட அந்த நாவலின் மீதியையும் வாசித்து முடிக்க ஆவல்கொண்டேன்.
நான் பெருமூச்சு கொண்டேன்; மேஜையில் கிடந்த அந்தப் பெரிய புத்தகத்தை ஒரு பார்வை பார்த்தேன்; அவ்வளவுதான். அன்ன கரீனாவுக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, மூழ்கினேன்; கதிரொளி மேலெழுகின்ற வரையில் படித்துக் கொண்டேயிருந்தேன். அன்னாவும் விரான்ஸ்கியும் பாலே நடனத்தின் போது ஒருவரையொருவர் நோக்கி, அவர்களின் நாசமாய்ப் போன காதலுக்குள் விழுந்தனர். பந்தயப் பாதையில் விரான்ஸ்கியின் குதிரை இடறிக் கீழே விழுந்தபோது அன்னா சுக்கு நூறாக உடைந்து போனாள். ( ஆகக் கடைசியில் அங்கே ஒரு பந்தயப்பாதைக் காட்சி இருந்தது.) அவள் கணவனிடம் தான் கற்பு தவறியதை ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவிக்கிறாள். தடைமதில்களில் விரான்ஸ்கி, அவருடைய குதிரையை உதைத்து முடுக்கும்போது நானும் இருந்தேன். கூட்டம் அவரை உற்சாகப்படுத்தியதை நானும் கேட்டேன். அவருடைய குதிரை கீழே விழுந்தபோது, நானும் அங்கே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். காலை ஒளியில் சன்னல் பிரகாசம் பெற்றபோது நான் நாவலைக் கீழே வைத்துவிட்டுச் சமையலறைக்கு ஒரு வாய் காபிக்காகச் சென்றேன். என் மனம் முழுக்க நாவலின் காட்சிகள். வேறு நினைவுகள் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கிவிட்டுப் பெரும்பசி எழுந்தது. ரொட்டி யிலிருந்து இரண்டு துண்டுகளை வெட்டியெடுத்து வெண்ணெயும் கடுகும் பரவலாகத் தடவி, ஒரு பாலாடைப் பொதியப்பத்தைச் செய்து, தின்று முடித்தேன். என் பசியின் தாக்குதல் தாங்க முடியாததாக இருந்தது. அத்தகைய பசியை எப்போதோ ஒரு முறை, வெகு அரிதாகத்தான் உணர்ந்திருக்கிறேன். மூச்சுவிடச் சிரமமாகிற  அளவுக்குப் பசி இருந்தது. ஒரு பொதியப்பம் எனக்கு ஒன்றுமேயில்லாதது போலிருந்தது. அதனால், இன்னொன்றைச் செய்து, அதோடு இன்னொரு காப்பியும் சாப்பிட்டேன்.
எனக்கு நேர்ந்த மிதப்புநிலை பற்றியோ, அல்லது இரவில் தூங்காதது பற்றியோ என் கணவரிடம் எதுவும் கூறவில்லை. அதற்காக, அதை அவரிடமிருந்து மறைக்கிறேனென்று அர்த்தமல்ல. அவரிடம் சொல்வதற்கு அதில் எதுவுமில்லையென ஏனோ எனக்குத் தோன்றியது, அவ்வளவுதான். அப்படிச் சொன்னாலும், அதனால் என்ன நன்மை விளைந்து விடப் போகிறது? அது மட்டுமல்ல, நான் ஒரு நாள் தூங்கவில்லை, அவ்வளவுதானே, இது எல்லோருக்கும் அவ்வப்போது நடப்பதுதானே..
என் கணவருக்காக வழக்கமான காப்பி தயாரித்தேன். என் மகனுக்கு ஒரு கோப்பைச் சூடான பால் கொடுத்தேன். என் கணவர் வாட்டிய ரொட்டியும் என்மகன் ஒரு கிண்ணம் மக்காச்சோள அவலும் சாப்பிட்டனர். என் கணவர் காலைச் செய்தித்தாளைக் கடைந்துகொண்டிருக்க, என் மகன் பள்ளியில் கற்றிருந்த ஒரு பாடலை முரலொலித்துக்கொண்டிருந்தான். இருவரும் சென்ட்ரோவில் ஏறினார்கள், சென்றுவிட்டார்கள். ‘’பத்திரம்’’ நான் என் கணவருக்குச் சொன்னது. ‘’ கவலைப்படாதே’’ அவர் எனக்குச் சொன்னது. இருவரும் கையசைத்தார்கள். எப்போதும் போல, வழக்கமான ஒரு காலை.
அவர்கள் சென்ற பின், சாய்மெத்தையில் அமர்ந்து மீதி நாளை எப்படிக் கழிப்பதென யோசித்தேன். என்ன செய்யலாம்? செய்வதற்கானவை என்னென்ன? சமையலறைக்குச் சென்று குளிர் பெட்டியில் என்னென்ன இருக்கின்றதெனப் பார்த்தேன். கடைக்குப் போகாமலேயே, சமாளித்துக் கொள்ளலாம். ரொட்டி, பால், முட்டை எல்லாம் இருக்கிறது. பனியுறைப் பகுதிக்குள் இறைச்சி இருக்கிறது. தேவைக்கு மேலாகவே காய்கறிகளும் இருக்கின்றன. நாளை மதியம் வரைக்கும் கூட எல்லாம் போதிய அளவுக்கு இருக்கின்றன.
வங்கியில் எனக்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது. ஆனால், அதுவும் உடனடியாகக் கவனித்தேயாக வேண்டுமென்பதில்லை. ஒரு நாள் தள்ளிப் போடுவதால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.
நான் சாய்மெத்தைக்குத் திரும்பி, அன்ன கரீனாவின் மீதியை வாசிக்கத் தொடங்கினேன். அதை வாசிக்கும் வரையில், அந்த நாவல் நிகழ்வுகளை எவ்வளவு கொஞ்சமாக நினைவு வைத்திருக்கிறேனென்பதை, நான் உணர்ந்திருக்கவில்லை. கதாபாத்திரங்கள், காட்சிகள், என எதையுமே, சொல்லப்போனால் நான் ஒன்றுமே உணர்ந்திருக்கவில்லை என்பதுதான். புதிதாக ஒரு முழுப் புத்தகத்தையும் நான் வாசித்துக் கொண்டிருப்பது போலத்தான். என்ன ஒரு வினோதம்! முதல்முறை அதை நான் படித்த காலத்தில் நிரம்பவும் தான் உருகிப் போயிருப்பேன். ஆனால், இப்போதும் எதுவும் விடுபடவில்லை. எனக்குள் கிடந்த நடுங்கவைக்கும் நினைவுகள், பொங்கிப் பீறிடும் உணர்வுகள் எல்லாமே என் கவனமில்லாமலேயே, நழுவிக் காணாமலாகின.
அப்படியானால், முன்னர், நான் புத்தகங்கள் படிப்பதில், ஏராளமான பொழுதுகள் செலவிட்டதில், என்னதான் பயன்? அவற்றுக்கெல்லாம் எந்தப் பொருளும் இல்லையா?
நான் படிப்பதை நிறுத்திவிட்டு அதைப்பற்றிச்சிறிது யோசித்தேன். எதுவுமே எனக்கு அறிவுபூர்வமாகத் தெரியவில்லை; இருந்தாலும் விரைவிலேயே நான் எதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனென்ற பாதையைக்கூடத் தவறவிட்டுவிட்டேன். சன்னலுக்கு வெளியே நின்ற ஒரு மரத்தை நான் வெறித்துக்கொண்டிருந்தது சட்டென்று உறைத்தது. நான், தலையை உலுக்கிவிட்டு, மீண்டும் நாவலில் ஆழ்ந்தேன்.
மூன்றாம் தொகுதியின் பாதிக்குக் கொஞ்சம் தள்ளி, சில பக்கங்களின்  நடுவில் சாக்லேட் துகள்கள், அவலாகக் காய்ந்து ஒட்டியிருந்ததைக் கண்டேன். உயர்நிலைப் பள்ளிக்காலத்தில், நான் இந்த நாவலைப்  படிக்கும்போது, சாக்லேட் தின்றுகொண்டிருந்திருக்கவேண்டும். நான் மென்றுகொண்டே படிப்பதை விரும்பினேன். இப்போது நினைத்துப் பார்த்தால், திருமணத்திற்குப் பிறகு நான் சாக்லேட்டைத் தொட்டதுகூட இல்லையென்பதை உணர்கிறேன். எனது கணவர் நான் இனிப்பு சாப்பிடுவதை விரும்புவதில்லை. நாங்கள் அநேகமாக எங்கள் மகனுக்கும் அவற்றைக் கொடுப்பதில்லை. அதுபோன்ற பொருளை நாங்கள் வீட்டில் வைத்திருப்பதும் இல்லை.
பத்து வருடங்களுக்கும்  மேலாகி, வெண்மையாகிவிட்ட அந்தச் சாக்லேட் துகள்களைப் பார்க்கப் பார்க்க, எனக்கு அதனை உண்மையிலேயே சாப்பிட்டுப் பார்க்க அடக்கமுடியாத ஆவல் கிளம்புவதை உணர்ந்தேன். முன்பு போலவே அன்னா கரீனாவைப் படித்துக்கொண்டிருக்கும்போதே சாக்லேட் சாப்பிட விரும்பினேன். அதைச் சாப்பிட மேற்கொண்டும் ஒரு கணம் கூட தாமதிப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் சாக்லேட் மீதான பெரும் ஆவலில் மூச்சுத் திணறுவது போலத் தோன்றியது. .

நான் ஒரு கம்பளிச் சட்டையை எடுத்துத் தோள் மேல் போட்டுக்கொண்டு மின்னேற்றியில் கீழே சென்றேன். அருகிலிருந்த ஊரக மிட்டாய்க்கடைக்கு நேராக நடந்து, அங்கிருந்தவற்றிலேயே அழகாகத் தோற்றமளித்த பால் சாக்லேட்களில் இரண்டு நீளமான பொதிகளை வாங்கினேன். கடையை விட்டு வெளியே வந்ததுமே அதில் ஒன்றின் மேற் காகிதத்தைக் கிழித்துத் திறந்தேன். வீட்டுக்கு நடந்துகொண்டே அதைச் சுவைக்கத் தொடங்கினேன். பால் சாக்லேட்டின் அற்புதச் சுவை என் வாயெங்கும் நிறைந்து பரந்தது. என் உடம்பின் ஒவ்வொரு பகுதியும் அந்த இனிமையை நேரடியாக உள்வாங்குவதை என்னால் உணர முடிந்தது. மின்னேற்றியிலும் நான் அதைத் தின்பதைத் தொடர்ந்து, அந்தச் சிறு பரப்புக்குள் நிறைந்த அற்புத மணத்தில் முழுவதுமாக ஆழ்ந்து, நனைந்தேன்.

நேராகச் சாய்மெத்தைக்கு நடந்து, அன்ன கரீனாவைப் படித்துக்கொண்டே சாக்லேட்டை மென்று சுவைக்கத் தொடங்கினேன். நான் சிறு அளவில் கூடத் தூக்கமாக உணரவில்லை. உடம்பில் சோர்வும் இல்லை. என்னால் அப்படியே எப்போதும் படித்துக்கொண்டே இருந்துவிட முடியும். முதல் சாக்லேட்டைத் தின்று முடித்ததும் நான் இரண்டாவதைத் திறந்து அதில் பாதியைத் தின்றேன். மூன்றாம் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நடந்துகொண்டிருக்கும் போது, என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், பதினொன்று நாற்பது.

பதினொன்று நாற்பது!
என் கணவர் சிறிது நேரத்தில் வந்து விடுவார். நான் நாவலை மூடிவிட்டு சமையலறைக்கு விரைந்தேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, எரிவாயுக் குழாயைத் திறந்து அடுப்பைப் பற்ற வைத்தேன். பசுமையான வெங்காயத்தாள்கள் சிலவற்றைச் சிறுசிறுதுண்டுகளாக அரிந்து பக்வீட் நூடுல்ஸில் ஒரு கை அள்ளிக் கொதிக்கப் போட்டேன். தண்ணீர் சூடாகும் போதே காய்ந்த கடற்பாசிகளை ஊறவைத்து அரிந்து, அதன் மேல் வினிகர் ஊற்றி அழகுபடுத்தினேன். குளிர் பெட்டியிலிருந்து சோயாத் தயிர்க் கட்டி ஒன்றை எடுத்துக் கனசதுரங்களாக வெட்டி வைத்தேன். கடைசியாகக் குளியலறைக்குச் சென்று,  சாக்லேட் மணத்தை  ஒழித்துக் கட்டப் பல் துலக்கினேன்.

தண்ணீர் கொதித்து முடித்த  சரியான கணத்தில் என் கணவர்  உள்ளே வந்தார். வழக்கத்தைவிடவும் கொஞ்சம் முன்னதாகவே வேலை முடிந்துவிட்டதாக அவர் சொன்னார்.

இருவரும் சேர்ந்து பக்வீட் நூடுல்ஸ்களைச் சாப்பிட்டோம். அவருடைய மருத்துவமனைக்கு அவர் வாங்கலாமாவென நினைக்கிற, நோயாளிகளின் பற்களின் கறையழுக்கைத் தற்போதிருப்பவற்றைவிடத் துப்புரவாகவும் குறைந்த நேரத்திலும் செய்து முடிக்கும் ஒரு இயந்திரத்தைப்பற்றிப் பேசினார். மற்றெல்லாக் கருவிகளையும் போலவே, இதுவும் விலை அதிகமென்றாலும், இப்போதெல்லாம் அதிகமான நோயாளிகள் வெறுமே சுத்தம் செய்வதற்கு மட்டுமென்று வருவதால், அதற்குரிய பலன் விரைவிலேயே திரும்பக் கிடைத்துவிடுமென்றார்.

நீ என்ன நினைக்கிறாயென  என்னைக் கேட்டார்.

மனிதர்களின் பற்களிலுள்ள கறைகளைப் பற்றி நான் எதுவும் நினைக்க விரும்பவில்லை; அதுவும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, அதைப் பற்றிப் பேசவோ, கேட்கவோ அல்லது நினைக்கவோ வேண்டுமா? என் மனத்தில் விரான்ஸ்கி, குதிரையிலிருந்தும் விழுகின்ற புகைப்படலப் பிம்பங்கள் நிறைந்திருந்தன. ஆனால், அதைப் போய் என் கணவரிடம் சொல்ல முடியாதுதான். அதிலும் அவர் அந்தக்கருவி குறித்து நிரம்பவே அக்கறையோடிருந்தார். நான் அவரிடம் அதன் விலையைக் கேட்டுவிட்டு, அதைப் பற்றிச் சிந்திப்பதாகப் பாவனைகாட்டினேன். ‘’அது உங்களுக்குத் தேவையாக இருக்கும்பட்சத்தில் ஏன் வாங்கிக்கொள்ளக்கூடாது?’’ எனக் கேட்டேன். ‘’பணம் ஒரு வழியில் இல்லாவிட்டால் இன்னொரு வழியில் எப்படியும் பலன் தரும். நீங்கள் ஒன்றும் வேடிக்கைக்காக வாங்கவில்லையே.’’
‘’ அது உண்மைதான். என்றார் அவர். ‘’நான் வேடிக்கைக்காக ஒருநாளும் செலவு செய்யமாட்டேன்’’. பின்னர், நூடுல்ஸ்களை அமைதியாகச் சாப்பிட்டார்.
சன்னலுக்குவெளியே, மரக்கிளையில் பெரியபறவைகளின் இணை  ஒன்று அமர்ந்து கத்தியது. நான் அவற்றைக் கவனமின்றிக் கவனித்தேன். எனக்குத் தூக்கமில்லை. கொஞ்சங்கூடத் தூக்கமில்லை. ஏன் அப்படி?
நான் மேஜையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, என் கணவர் சாய்மெத்தையில் சாய்ந்து செய்தித் தாளை வாசித்துக்கொண்டிருந்தார். `அன்ன கரீனா` அவர் அருகிலேயே கிடந்தாலும், அவர், அதைக் கவனிக்கவேயில்லை. நான் புத்தகம் படிக்கிறேனா என்பதில் அவருக்கு ஆர்வமும் இல்லை.
நான் பாத்திரங்களையெல்லாம் கழுவி முடித்ததும் என்  கணவர், ‘’ இன்று என்னிடம் மிகவும் ஆச்சரியமான ஒன்று இருக்கிறது. அது என்னவாக இருக்குமென்று நீ சொல், பார்க்கலாம்.’’ என்றார்.

‘’ எனக்குத் தெரியவில்லையே.’’ என்றேன், நான்.
‘’ இன்று பிற்பகலின் முதல் நோயாளி வரமாட்டார், சந்திப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டார். ஒன்று முப்பது வரையில், நான் மருத்துவ மனைக்குப் போகவேண்டுமென்றில்லை.’’ என்றார், புன்னகையோடு.
அது அழகான ஆச்சரியமென ஏன் கருதப்பட்டதென்பதற்கான எதையும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. அது ஏனென்று எனக்கு வியப்பாக இருக்கிறது.
என் கணவர் எழுந்து, என்னைப் படுக்கையறை நோக்கி இழுத்தபோதுதான் அவர் மனதில் என்ன இருக்கிறதென்பதைப் புரிந்து கொண்டேன். எனக்கு அப்போது அதற்கான மனநிலையே இல்லை. அந்த நேரத்தில் நான் ஏன் பாலுறவு கொள்ளவேண்டுமென்று எனக்கு விளங்கவில்லை. எனக்கு, மீண்டும் நாவலுக்குள் புகுந்துவிட வேண்டும்; சாய்மெத்தையில் நீட்டிப் படுத்து, அன்ன கரீனாவின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, சாக்லேட்டை மென்று சுவைக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த போதெல்லாம் என் நினைவு முழுக்க விரான்ஸ்கியும், டால்ஸ்டாய் போன்ற படைப்பாளர் ஒருவர், அவருடைய பாத்திரங்களை எப்படி இத்தனை திறமையாகக் கையாண்டு, கட்டுக்குள் வைக்கமுடிந்தது என்பதும் மட்டுமே; அவர்களை அத்தனை அற்புதமாகத் துல்லியமாக விவரிக்கிறார். ஆனால், அந்தத் தெளிவுதான் அவர்களுக்கு ஒரு விடிவுகாலத்தைத் தரத் தவறிவிட்டது. அது கடைசியில் …..
நான் கண்களை மூடி, விரல்நுனிகளால் நெற்றிப்பொட்டை அழுத்தினேன்.
‘’  அய்யய்யோ, இன்று முழுவதும் ஒரு மாதிரியான தலைவலி. என்னமாதிரியான நேரம், பாருங்கள்’’
எனக்குச் சில நேரங்களில், அவ்வப்போது பயங்கரமான தலைவலி வருவதுண்டு. அதனால், எந்த முணுமுணுப்பும் இல்லாமல், என்னுடைய விளக்கத்தை ஏற்றுக்கொண்டார்.
‘’ கொஞ்ச நேரம் கீழே நீட்டிப்படுத்து ஓய்வெடுத்துக்கொள்.’’ என்றார், அவர். ‘’ நிரம்பக் கடினமாகத்தான் வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறாய்.’’
‘’ அந்தளவுக்கொன்றும் மோசமாக இல்லை,’’ என்றேன், நான்.

அவர் சாய்மெத்தையில் ஒரு மணி வரை சாவகாசமாக அமர்ந்து இசை கேட்பதும் செய்தித்தாள் வாசிப்பதுமாக இருந்தார். பின்னர், அந்தப் பல் மருத்துவக் கருவி பற்றி மீண்டும் பேசினார். இன்றைக்கான உயர்ந்த தொழில் நுட்பமென்று வாங்குகிறோம், இரண்டு அல்லது மூன்று வருடத்தில் அது பழையதாகி வழக்கொழிந்து விடுகிறது. ஆக, பிற்பாடும் எல்லாவற்றையும் மாற்றவேண்டியதாக இருக்கிறது. இதில் பணம் சம்பாதிக்கிற ஒரே நபர் அந்த உபகரணத் தயாரிப்பாளர்கள்தான் – இந்த மாதிரிப்பேச்சு. நான் சில `களுக்` சிரிப்புகளை உதிர்த்தேன், ஆனால், அவர் பேசியது எதையும் கவனிக்கவில்லை.
என் கணவர் மருத்துவ மனை சென்ற பிறகு, செய்தித் தாளை மடித்து வைத்து, சாய்மெத்தையை இலேசாகத் தட்டிக் குத்திப், பழையபடி உப்பி, மெத்தென்றாகச் செய்தேன். பின்னர் சன்னல் திறப்பில் சாய்ந்து நின்று அறையை நோட்டமிட்டேன். என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று என்னால் ஒன்று திரட்டிப் பார்க்க முடியவில்லை. எனக்கு ஏன் தூக்கமாக இல்லை? முன்புங்கூட எத்தனையோ முறை முழு இரவுக்கும் விழித்திருக்கிறேன். ஆனால், இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக ஒருபோதும் விழித்ததில்லை. சாதாரணமாக, நீண்ட நேரம் தொடர்ந்து விழித்தால், நன்றாக அயர்ந்து தூங்கிவிடுவேன், அப்படித் தூங்கவில்லையானால் சோர்வில்லாமல் இருப்பதென்பது முடியாதது. ஆனால், நான் கொஞ்சங்கூடத் தூக்கமாக இல்லை. என் மனம் முழுமையான தெளிவோடிருக்கிறது.
நான் சமையலறைக்குள்  சென்று கொஞ்சம் காப்பியைச் சூடுபடுத்தினேன். இப்போது  என்னென்ன செய்யலாமென யோசித்தேன். அன்ன கரீனாவின் மீதியைப் படிக்கத்தான் விரும்பினேனென்றாலும், நீச்சல் குளம் செல்லவும் விரும்பினேன். நீண்டநேர ஊசலாட்டத்துக்குப் பின், நீச்சலுக்குச் செல்வதென்று தீர்மானித்தேன். அதை எப்படி விளக்குவதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், எனக்கு, என் உடம்பிலுள்ள ஏதோ ஒன்றை உடற்பயிற்சி மூலம் அடக்கி, ஒரு கட்டுக்குள் வைக்கவேண்டும். அடக்குவது? எதை? சிறிது நேரம் அதைப்பற்றியே யோசித்து வியந்தேன். எதை அடக்கவேண்டும்?
எனக்குத் தெரியவில்லை.
ஆனால், இது, அது என்னவாக இருந்தாலும், பனிமூட்டம் போன்ற ஒன்று என் உடம்பினுள் ஒரு குறிப்பிட்ட வகையிலான உயிராற்றலின் ஊற்றுக்கண் போல அங்கே இருந்துகொண்டேயிருக்கிறது. அதற்கு ஒரு பெயரைச் சூட்டிவிட விரும்பினேன், ஆனால், சரியான அந்த வார்த்தை நினைவுக்கு வர மறுக்கிறது. சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க நான் கடுமையாக முயல்கிறேன். மிகப் பொருத்தமான வார்த்தையைக் கொண்டுவந்துவிட டால்ஸ்டாயால் முடியுமென நான் நிச்சயமாகச் சொல்வேன்.
இருந்தாலும், எப்படியோ, நீச்சலுடையை என் பைக்குள் வைத்து, எப்போதும்போல என்னுடைய சிவிக்கை தடகளக் கழகத்திற்கு ஓட்டிச் சென்றேன். நீச்சல் குளத்துக்குள் இரண்டு பேர் – ஒருவன் இளைஞன், இன்னொன்று நடுவயதிலான ஒரு பெண் – மட்டுமே இருந்தனர். அவர்களில் யாரையும் எனக்குத் தெரியாது. சலிப்பான தோற்றமுள்ள ஒரு உயிர்க்காப்பாளர் பணியிலிருந்தார்.
நான் நீச்சலுடைக்கு  மாறி, கண்ணாடி அணிந்து. என்னுடைய வழக்கமான முப்பது நிமிடங்கள் நீச்சலடித்தேன். ஆனால், முப்பது  நிமிடங்கள் போதுமானதாக இல்லை. மேற்கொண்டும் பதினைந்து நிமிடங்கள் நீந்தி, கடைசி இரண்டு முழுநீளத்தையும் அதிகபட்ச வேகத்தில் சென்று முடித்தேன். மூச்சு முட்டியது. இருந்தாலும் என் உடம்புக்குள் ஒரு சக்தி திரண்டெழுவதாக உணர்ந்தேனே தவிர வேறெதுவும் இல்லை. நான் நீச்சல்குளத்திலிருந்தும் கிளம்பிய போது, அங்கிருந்தவர்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போதும், மூன்று மணிக்கு இன்னும் சிறிது நேரம் இருந்தது. அதனால், நான் வங்கிக்குச் சென்று என் வேலையை முடித்தேன். பல்பொருள் அங்காடியில் சில பொருட்கள் வாங்கலாமாவென யோசித்தேன். ஆனாலும் நேராக வீட்டுக்குச் சென்றேன். மீதியிருந்த சாக்லேட்டைத் தின்று கொண்டே, அன்ன கரீனாவை விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். என் மகன் நான்குமணிக்கு வந்தான். நான் தயாரித்த பழக்கூழ்வற்றலையும் ஒரு கோப்பை பழச்சாற்றையும் அவனுக்குக் கொடுத்தேன். பின்னர் இரவு உணவு தயாரிப்பினைத் தொடங்கினேன். கொஞ்சம் இறைச்சியைப் பனியுறைப் பகுதியிலிருந்தும் எடுத்துச் சூடுபடுத்திச் சில காய்கறிகளையும் வெட்டி, வறுப்பதற்காகத் தயார் செய்தேன். அரிசியைச் சமைத்தேன். மிசோ சூப் செய்தேன். இந்த வேலைகள் எல்லாவற்றையும் கடுமையான உடலியக்க ஆற்றலோடு கவனமாகச் செய்தேன்.

மீண்டும் அன்ன கரீனாவுக்குச்  சென்றேன்.

நான் சோர்வு ஏதும்  அடையவில்லை.
பத்து மணிக்கு, என் கணவர் அருகில், தூங்குவதான பாவனையில் படுக்கையில் படுத்திருந்தேன். விளக்கை அணைத்த அதே கணத்தில், விளக்குக்கும் அவரது மூளைக்கும் ஏதோ கம்பியிணைப்பு இருப்பதுபோல, நேரடியாகச் சட்டென்று, நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.
ஆச்சரியம். இது மாதிரி ஆட்கள் அபூர்வந்தான். நல்ல தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் என் அப்பாவும் ஒருவர். அவர் எப்போதுமே அவரது தூக்கம் எவ்வளவு மேலோட்டமாக இருக்கிறதெனக் குறைப்பட்டுக்கொண்டே இருப்பார். தூக்கத்தை வரவழைக்க அவர் எவ்வளவு கடினமாக முயன்றார் என்பது மடுமல்ல, ஒரு சிறிய சப்தம் அல்லது அசைவு கூட மீதி இரவு முழுவதற்கும் அவரை விழித்திருக்கச் செய்துவிடும்.
என் கணவர் அப்படியல்ல. அவர் தூங்கிவிட்டால், காலைவரையிலும்  அவரை எதுவுமே எழுப்பிவிட முடியாது. நாங்கள் புதிதாகத்  திருமணம் செய்துகொண்ட நாட்களிலேயே, இது எவ்வளவு வித்தியாசமானதென  எனக்குத் தோன்றியது. அவரை எதுதான் எழுப்புமென்று பார்த்து விடுவோமென நான் சோதிக்கக்கூடச் செய்துவிட்டேன். அவர் முகத்தில் தண்ணீரைத் தெளிப்பேன், தூரிகையால் தேய்த்து மூக்கில் கூச்சமுண்டாக்குவேன்,  அல்லது இது மாதிரி ஏதாவதொன்றைச் செய்வேன். ஒருமுறைகூட அவரை விழிக்கவைக்க முடிந்ததில்லை. நான் அப்படியே தொடர்ந்து செய்தால், அவரை ஒருவேளை முனகவைக்க முடியும், அவ்வளவுதான். அதோடு, அவர் கனவு கண்டதேயில்லை. குறைந்தபட்சம் அவரது கனவுகள் எதைப்பற்றியானவை என்றுகூட அவருக்கு நினைவிலில்லை. அவருக்கு ஒருமுறைகூடச் செயலிழக்கச் செய்யும் மிதப்புநிலைகள் நேர்ந்ததில்லையென்பதைச் சொல்லவும் வேண்டுமா? அவர் தூங்கினார். அவர் சேற்றுக்குள் புதைந்து கிடக்கும் ஆமையைப் போலத் தூங்கினார்
ஆச்சரியந்தான். ஆனால், விரைவிலேயே அது எனக்குத் தினமும், இரவு வாடிக்கையாகிவிட்டது.
அவரருகில் பத்து நிமிடங்கள் படுத்திருந்த பின், நான் படுக்கையிலிருந்து இறங்கிவிடுவேன். வசிப்பறைக்குச் சென்று தளவிளக்கை ஒளிரச்செய்து, ஒரு தம்ளரில் பிராந்தியை ஊற்றி, எடுத்துக்கொண்டு, சாய்மெத்தையில் அமர்ந்து, பிராந்தியைச் சிறிதாக உறிஞ்சி, அந்த வழவழப்பான திரவம் என் நாக்கின் மேலாகக் கீழிறங்குமாறு செய்துகொண்டே, எனது புத்தகத்தை வாசிப்பேன். எதையாவது தின்ன வேண்டுமென்று தோன்றினால், சுவர் மாடத்தில் மறைவாக வைத்திருக்கும் குக்கியில் ஒன்று அல்லது சாக்லேட்டில் ஒரு துண்டு எடுத்துத் தின்பேன். அப்படியே கொஞ்சம் கடந்துவிட்டால் காலை வந்துவிடும். அது நிகழ்ந்ததும், என் புத்தகத்தை மூடிவிட்டு, எனக்கான காப்பியைத் தயாரிப்பேன். பின்னர் ஒரு பொதியப்பம் செய்து அதையும் சாப்பிடுவேன்.
என் நாட்கள் இப்படியாக  வழக்கமான ஒழுங்குமுறையாகிவிட்டன.
வீட்டு வேலைகளையெல்லாம் விரைந்து முடித்துவிட்டு, மீதிக் காலை நேரத்தை வாசிப்பதில் கழிப்பேன். மதியத்திற்குக் கொஞ்சம் முன்னால்  என் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, என் கணவருக்கான மதிய உணவைத் தயாரித்துவிடுவேன். ஒரு மணிக்குள் அவர் கிளம்பியதும், கழகத்துக்குக் காரை ஓட்டிச் சென்று, நீச்சலில் ஈடுபடுவேன். ஒரு மணி நேரம் முழுமையாக நீந்துவேன். நான் தூங்குவதை நிறுத்திய பிறகு, முப்பது நிமிட நீச்சல் போதுமானதாக இல்லை. தண்ணீருக்குள் இருக்கும்போது, என் மனத்தை முழுமையாக நீச்சலில் செலுத்துவேன். வேறு எதைப்பற்றியும் நினைக்காமல், என் உடலை எவ்வளவு அதிகப் பயனுள்ளதாகத் திறமையாக அசைத்து இயக்கமுடியுமென்பதிலேயே இருப்பேன். சரியான ஒழுங்கு முறையில் மூச்சினை உள்வாங்கி, வெளிவிடுவேன். எனக்குத் தெரிந்த யாராவது எதிர்ப்பட்டாலும், அடிப்படை நாகரீகமாக, மரியாதை நிமித்த வார்த்தைகள் தவிர வேறு ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டேன். எல்லா அழைப்புகளையும் மரியாதை நிமித்த வருத்தம் கூறி மறுத்துவிடுவேன். ‘’ நான் இன்று நேராக வீட்டுக்குச் செல்கிறேன். வீட்டில் கொஞ்சம் வேலையிருக்கிறது.’’ என்பேன். நான் யாரோடும் ஒட்டிக்கொள்ள விரும்பவில்லை. முடிவில்லாத அரட்டையில் என் நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை. முடிந்த அளவுக்குக் கடுமையாக நீந்தும்போதும், வீட்டுக்குச் சென்று வாசிக்க வேண்டுமென்றே நான் விரும்பினேன்.
கடைக்குப் போய்த் தேவையானவற்றை வாங்கி வருவது, சமையல் செய்வது, மகனோடு விளையாடுவது, கணவரோடு பாலுறவு கொள்வது என எல்லாச் செயலசைவுகளோடும்தான் இருந்தேன். முதலில் தொடங்க வேண்டும். அவ்வளவுதான், பின்னர், எளிதாகிவிடும். நான் செய்யவேண்டி யிருந்ததெல்லாம், உடம்புக்கும் மனத்துக்குமான தொடர்பினை அறுத்து விடுவதுதான். உடல் அதன் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது, மனம் அதனுடைய உள்வெளியில் மிதந்துகொண்டிருக்கும். என் மகனுக்குத் தின்பண்டம் தந்துகொண்டு, என் கணவரோடு உரையாடிக்கொண்டு, தனியாக அதற்கென்று எந்தச் சிந்தனையும் இல்லாமல், நான் என் வீட்டை நடத்திக் கொண்டிருந்தேன்.
தூங்குவதை நான் விட்டுவிட்டபின், நடப்பு என்பது எத்துணை எளிய விஷயமென்றும், அதனை இயங்கச்செய்வது எத்துணை எளிது என்றும்  எனக்குத் தோன்றியது. அதுதான்  நடப்பு. வெறுமனே வீட்டு வேலை. வெறுமனே ஒரு வீடு. ஒரு எளிய கருவியை இயக்குவது போல. அதை மட்டும் ஒருமுறை கற்றுவிட்டால், பின்னர் ஒன்றுமேயில்லை. அதை அப்படியே திருப்பித் திருப்பிச் செய்யவேண்டும். அவ்வளவுதான். அந்தப் பொத்தானை அழுத்த, அல்லது விசைக்கோலை இழுக்க வேண்டும். அளவுமானியைச் சரிப்படுத்தி, மூடியைப் போட்டு மூடி, நேரத்தை அளவுபார்த்துத் திருகியமைக்கிறோம். ஒரே விஷயம், மீண்டும் மீண்டும்.
அவ்வப்போது சில மாறுதல்கள் இருக்கும் தான். என் மாமியார் எங்களோடு இரவு உணவு அருந்தினார். ஞாயிற்றுக்கிழமை நாங்கள் மூவரும் உயிர்க்காட்சிச் சாலைக்குச் சென்றோம். என் மகனுக்கு மோசமான வயிற்றுப் போக்கு இருந்தது.
ஆனால், இந்த நிகழ்வுகளெல்லாம் என் இருப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. ஒரு அமைதியான தென்றல் என்னைக் கடப்பது போல, அவை என்னை விரைந்து கடந்தன. மாமியாருடன் அளவளாவிப் பேசினேன். நான்கு பேருக்கு இரவு உணவுக்கான விருந்து சமைத்தேன். கரடிக் கூண்டின் முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் மகன் வயிற்றின் மேல் சுடுநீர்ப்பை வைத்து, மருந்து கொடுத்தோம்.
நான் நடப்பிலிருந்தும் மாறியிருந்ததை, என் நேரம் முழுவதையும் வாசித்தே செலவிட்டுத் தூக்கத்தை முழுமையாக அகற்றியிருந்ததை, என் மனம் நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால், நூறு ஆண்டுகளுக்கும் முன் எங்கேயோ இருந்ததை, எவருமே கவனிக்கவில்லை. நான் எவ்வளவு இயந்திரத்தனமாக வேலைசெய்கிறேனென்பதை, நடப்பைக் கையாள்வதில்  எந்த அளவுக்கு அன்பும் உணர்ச்சியும் இல்லாமலுள்ளேனென்பதை, என் கணவரும் என் மகனும் என் மாமியாரும் ஒரு பொருட்டாக எண்ணாமல், வழக்கம்போல என் விஷயங்களை ஒப்பிட்டுப் பேசிக்கொண்டேயிருந்தனர். ஏதாவது மாற்றமென்றால், அவர்கள் முன்னைவிட இப்போது என்னிடம் நன்றாக, நட்பாக இருப்பதாகத் தோன்றினார்கள்.
அப்படியே ஒரு வாரம் கடந்தது.

என்னுடைய தூக்கமற்ற தொடர்விழிப்பு இரண்டாவது வாரத்துக்குள் நுழைந்தபோது, அது என்னைக் கவலைப்படுத்தத் தொடங்கியது. வேறொன்றுமில்லை; அது வழக்கமற்றதாக இருக்கிறது, அவ்வளவுதான். மனிதர்கள் என்றால், தூங்க வேண்டும். எல்லோரும் தூங்குகிறார்கள்.  தூங்கவிடாமல் தடுத்து ஆட்களைக் கொடுமைப்படுத்தும் ஒரு வகைச் சித்திரவதையைப் பற்றிச் சில வருடங்களுக்கு முன்பு, படித்திருக்கிறேன். அதுமாதிரிதான் நாஜிகள் செய்தார்களென்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு மிகச் சிறிய அறைக்குள் ஆளைப் பூட்டிவைத்து, இமைகள் திறந்தே இருக்குமாறு இழுத்து ஒட்டியபின், முகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சி, இடைவிடாமல் பயங்கர சத்தம் அவன் காதில் விழுமாறு செய்து  கொண்டேயிருப்பார்களாம். அந்த மனிதன், தானாகவே பைத்தியம் பிடித்து இறந்து விடுவான்.

அப்படிப் பைத்தியம்  பிடிக்க எவ்வளவு நாளாகுமென்று அந்த வரைவுச் செய்தியில் குறிப்பிட்டிருந்ததென்று  இப்போது எனக்கு நினைவில்லை; ஆனால், மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேலாகாது. என்னுடைய நேர்வில் ஒரு முழு வாரமும்  கடந்துவிட்டது. எளிதாகச் சொல்வதெனில், இது அதிகபட்சம்தான். இப்போதும்  என் உடல் ஆரோக்கியம் கெடவில்லை. அதற்கும் மேலாக, முன் எப்போதையும் விட அதிக உயிராற்றலோடு இருக்கிறேன்.
ஒருநாள், நீர்ப்பொழிவில் குளித்தபின், கண்ணாடி முன்பு நிர்வாணமாக நின்றேன். என் உடம்பின் உயிராற்றல் பெருகி, அநேகமாக வெடித்துச் சிதறப் போவது போல், தளும்பி நிற்பதை, நான் கண்டபோது, அப்படியே ஆச்சரியமாகி விட்டேன். தலை முதல் பாதம் வரை ஒரு அங்குலம் கூட விடாமல், என்னையே அலசி ஆராய்ந்தேன். ஆனாலும், மிகைச்சதைக்கான ஒரு சிறு அறிகுறி கூடத் தென்படவில்லை. ஒரு சிறு மடிப்பு அல்லது சுருக்கம் எதுவும் இல்லை. ஒரு இளம் நங்கையின் உடலாக, இப்போதும் இருக்கமுடியாதுதான் என்றாலும், என் தோல் முன்னெப்போதையும் விட அதிகப் பளபளப்பாக, இறுக்கமாக, ஆனால், மென்மை கூடித் தோன்றியது. என் இடுப்பின் அருகில் சதையைக் கொஞ்சம் கிள்ளி இழுத்துப் பார்த்தேன்;  கடினமாகத்தான் தோன்றியது; ஆனால் வியக்கத்தக்கவகையிலான   ஒரு நெகிழ்வுமிருந்தது.

அது கடைசியில், நான் நினைத்திருந்ததைவிடவும் அழகாயிருப்பதான ஒரு உணர்வைக் கொண்டுவந்தது. முன்பைவிடவும் இளமையாக  நான் தோன்றியதால், அது எனக்குக் கடும் அதிர்ச்சியாக இருந்தது. நான், ஒரு இருபத்து நான்கு வயதுக்கு மதிக்கப்படலாம். என் தோல் மென்மையாக, வழவழப்பாக  இருந்தது. என் கண்கள் மிகுந்த ஒளியோடும் இதழ்கள் ஈரம் தோய்ந்தும் இருந்தன. மேடாகத் தெரியும் கன்னத்தில் எலும்புகளின் கீழாகவுள்ள நிழற்பகுதி ( எனக்கு நானே வெறுத்த ஒரே வடிவத்தோற்றம்) இப்போது இருந்த இடம் தெரியாமலாயிற்று. நான் அப்படியே அமர்ந்து, சரியாக ஒரு அரைமணி நேரத்துக்குக் கண்ணாடியில் தெரியும் என் முகத்தையே பார்த்தேன். ஒரு புறப்பொருள் ஆய்வாக, அதனை எல்லாக் கோணத்திலும் கூர்ந்து நோக்கினேன். இல்லை, நானொன்றும் தவறு செய்துவிடவில்லை. உண்மையிலேயே நான் நல்ல அழகாக, அழகுகூடித்தான் இருந்தேன்.
என்னவாகிக்கொண்டிருக்கிறது, எனக்கு?
ஒரு மருத்துவரைப் பார்க்கலாமாவென யோசித்தேன்.
நான் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே என்னைக் கவனித்துச் சிகிச்சை தரும் மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவரோடு நானும் நெருக்கந்தான், இருந்தாலும் அவரிடம் சொல்வதற்கு, நானே அவ்வளவாக விருப்பப்படாத என்னுடைய கதையைக் கேட்டு அவர் எப்படி நடந்து கொள்வாரென்பதைப்பற்றித்தான் அதிகமாக யோசித்தேன். அவர், என் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொள்வாரா? ஒரு வாரமாகத் தூங்க வில்லையென்றதும், பித்துப்பிடிக்கும்நிலையென, நினைக்கலாம்; அல்லது அதை நரம்பு சம்பந்தமான ஒரு வகைப்பட்ட இன்சோம்னியா என முடிவெடுக்கலாம். ஆனால், நான் உண்மையைச் சொல்வதாக அவர் நம்பினாரென்றால், நுண்சோதனைக்காக என்னைப் பெரிய ஒரு ஆராய்ச்சி மருத்துவ மனைக்குத்தான் அனுப்புவார்.
அப்புறம் என்ன நடக்கும்?
நான் மாட்டிக்கொள்வேன். சோதனைகள் என்ற பெயரில் ஒன்று விட்டு இன்னொன்று என ஆய்வகங்களுக்குப் பந்தாடப்படுவேன். இ.இ.ஜிக்கள்., இ.கே.ஜிக்கள், சிறுநீர்ப் பகுப்பாய்வுகள், இரத்தப் பரிசோதனைகள், உளவியல் திரைக்காட்சிகள், இன்னும் என்னென்ன செய்வார்களோ? யாருக்குத் தெரியும்?
அதற்கெல்லாம் என்னால் ஆகாது. நான் சாதாரணமாக, நானாகவே இருந்து, நீச்சலுக்கான எனது தினசரி நேரம் எனக்குக் கிடைக்கவும் அமைதியாக என் புத்தகத்தை வாசிக்கவும் விரும்பினேன். எனக்கான சுதந்திரம் எனக்கு வேண்டும்; வேறு எதையும் விட அதுவே எனக்கு மிகமிக வேண்டியதான ஒன்று. நான் எந்த மருத்துவ மனைக்கும் செல்ல விரும்பவில்லை. அப்படியே மருத்துவ மனையில் என்னைச் சேர்த்தாலும், அவர்கள் என்ன பெரிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்? மலையளவுக்கு ஏகப்பட்ட சோதனைகளை மேற்கொள்வார்கள்; பின்னர் மலையளவுக்கான கருதுகோள்களை உருவாக்குவார்கள்; அதோடு எல்லாம் முடிந்து போகும். அதுமாதிரியான ஒரு இடத்தில் போய் அடைபட்டுக்கிடக்க நான் விரும்பவில்லை.
ஒருநாள் பிற்பகலில் நான் நூலகத்துக்குச் சென்று, தூக்கம் தொடர்பான சில புத்தகங்களை வாசித்துப் பார்த்தேன். என்னால் கண்டுபிடிக்க முடிந்த சில புத்தகங்களும் அப்படியொன்றும் பெரிதாக உதவிடவில்லை. அவை எல்லாவற்றிலும், உண்மையில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது: தூக்கம் என்பது ஓய்வு. அது ஒரு காரின் இயந்திரத்தை நிறுத்தி வைப்பது போல. ஒரு மோட்டாரைத் தொடர்ச்சியாக ஓடவிட்டால், அது இப்போதோ அல்லது சிறிது கழித்தோ, நின்று போகும். இயங்குகிற ஒரு இயந்திரம் வெப்பத்தை உண்டாக்கும்; தொடர்ந்து சேகரமாகும் வெப்பம் அந்த இயந்திரத்தையே சோர்வுறச் செய்யும். அதனால்தான் இயந்திரங்கள் குளிர்ச்சியாகுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குளிர வையுங்கள். இயந்திரத்தை நிறுத்திவையுங்கள், அதுவேதான், கடைசியில், தூக்கம் என்பதும். மனிதர்களில் தூக்கம், தசைகளுக்கும் உயிருக்கும் ஒருசேர ஓய்வு அளிக்கிறது. ஒரு நபர் சமநிலையாகப் படுத்து அவரது தசைகளுக்கு ஓய்வளிக்கும்போது, அவர் தன் கண்களை மூடித் தன் சிந்தனைச் செயல் பாடுகளிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறார். அதேநேரத்தில் மிகைச் சிந்தனைகள் வெளிப்படுத்தும் மின் ஆற்றல்களால் கனவுகள் வடிவம் கொள்கின்றன.
ஒரு புத்தகம், ஈர்ப்புக்குரிய கருத்து ஒன்றை ஆர்வமூட்டும் வகையில் கையாண்டிருந்தது.  மனிதர்கள் அவரவர் இயல்பிலேயே, அவரவருக்கான உடல் அசைவுகள் மற்றும் சிந்தனைச் செயல்பாடுகள் என்ற இரண்டிலுமே சில குறிப்பிட்ட தனிமுரண்பாட்டுத் தூண்டுதல்களிலிருந்தும் தப்பிக்க முடியாதென்பதை அந்த ஆசிரியர் நிலையாகக் கொள்கிறார். மக்கள், தங்கள் சொந்தச் செயல்பாட்டுமுறைகளையும், சிந்தனைத்தளத்தில் உந்துதல்களையும் தன்னுணர்வின்றியே உருவாக்கிக்கொள்கின்றனர்; அவை சாதாரணச் சூழ்நிலைகளில் ஒருபோதும் மறைந்துவிடுவதில்லை. அதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மக்கள் அவர்களது தூண்டுதல்கள் என்னும் சிறைக் கொட்டடிக்குள் வசிக்கிறார்கள். காலணியின் குதிகால் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் தேய்வதுபோல, உயிரியக்கம் சோர்ந்து ஊறுபடாமலிருக்குமாறு, இந்தத் தூண்டுதல்களைச் சமனப்படுத்திக் கட்டுக்குள் வைப்பது, அந்த ஆசிரியர் கூறுவதன்படி, தூக்கமே தவிர வேறு எதுவுமில்லை. தூக்கம், அதன் நோயாற்றுந் தன்மையில், விழைவுகள் மற்றும் இயற்சாய்வுகளுக்கெதிராக வினையாற்றுகிறது. ஒரே திசையில் மட்டுமே தொடர்ந்து இயக்கப்படுகிற உடற்தசைகள் தூக்கத்தில் இயற்கையாகவே தளர்த்தப்படுகின்றன. அதைப்போலவே, ஒரே திசையில் இயக்கப்படுகிற சிந்தனை இயக்கச் சுற்றுநெறிகளைத் தூக்கமே அமைதிப்படுத்துவதுடன் ஒரு வடிகாலாகவும் செயல்படுகிறது. இப்படித்தான் மக்கள் குளிர வைக்கப்படுகிறார்கள். மனித இயங்கமைப்பில் தூக்கமென்ற செயல், கர்மாவின் தவிர்க்கமுடியாப் பண்போடு பிணைத்து ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து யாரும் விலகிச்சென்றுவிட முடியாது. அப்படி யாரேனும் விலகிச்சென்றால், அது அந்த நபரின் அடிப்படையான இருப்புக்கே உலைவைத்ததாகிவிடும்.

தூண்டுதல்கள்? என்னை  நானே கேட்டுக்கொண்டேன்.
என்னுடைய ஒரே தூண்டுதலென்று  நான் நினைப்பது வீட்டு வேலைதான். ஒரு உணர்வற்ற இயந்திரம்  போல ஒவ்வொரு நாளும் நான் செய்கிற இந்த இழவு வேலைகள்  தாம். சமைத்தல், கடைக்குச்  சென்று வருதல், துணிதுவைத்தல், குழந்தை பேணுதல்: இவை `தூண்டுதல்கள்` அல்லாமல், வேறென்ன? நான் கண்ணை மூடிக்கொண்டே இந்த வேலைகளைச் செய்து விடுவேன். பொத்தான்களை அமுக்குங்கள். விசைக்கோலை இழுங்கள். அவ்வளவுதான். சிறிது நேரத்திலேயே உண்மை நடப்பு ஓடிப் பாய்ந்து செல்கிறது. திரும்பத் திரும்ப அதே உடல் அசைவுகள். தூண்டுதல்கள். அவை என்னை விழுங்கிவிடுகின்றன; காலணியின் குதிகால் போல ஒரு பக்கமாக என்னைத் தேய்த்து ஊறுபடுத்துகின்றன. என்னைச் சரிப்படுத்திக் கொள்ள, குளிரச் செய்ய, எனக்குத் தினமும் தூக்கம் வேண்டும்.
அது, அப்படித்தானே?

அந்தப் பகுதியை, நான் மீண்டும் ஒருதடவை தீவிர  கவனத்துடன் வாசித்துவிட்டு, ஆமென்று தலையை ஆட்டிக்கொண்டேன். ஆம். அதுதான் நிச்சயமாக  அதுதான். என்னுடைய தூண்டுதல்களால் விழுங்கப்பட்ட நான், அதனால் ஏற்பட்ட தேய்மானத்தைச் சரிசெய்திடத் தூங்கினேன். என் வாழ்க்கை, இந்தச் சுழற்சியின் தொடர்நிகழ்வுகளேயன்றி வேறில்லை. அது வேறெங்கும் செல்வதில்லை.

நூலக மேஜைமுன்னிருந்த  நான், தலையை உலுக்கிக்கொண்டேன்.

நான் தூக்கத்தைக்  கடந்துவிட்டேன். அதனால், எனக்குப் பித்துப் பிடித்தால் தான் என்ன? என்னுடைய அடிப்படையான  இருப்பினை இழந்தால்தான் என்ன? என்னுடைய `தூண்டுதல்`களால்  விழுங்கப்பட மாட்டேன். தூக்கம் என்பது தேய்ந்து போன பாகங்களை அவ்வப்போது சீர்செய்வதற்கும் மேலாக எதுவுமில்லையெனில், எனக்கு இனிமேலும் தூக்கம் வேண்டாம். இனியும் அது எனக்குத் தேவையில்லை. என் தசைகள் வேண்டுமானால், விழுங்கப்படலாம். ஆனால், என் மனம் எனக்கே உரியது. அதை நான் என்வசமே எனக்கானதாக வைத்துக்கொண்டுள்ளேன். அதை வேறு யாரிடமும் கொடுத்துவிட மாட்டேன். `பழுதுபார்க்கப்பட` நான் விரும்பவில்லை. நான் தூங்கமாட்டேன்.

தீர்க்கமானதொரு புதியமுடிவோடு, நான் நூலகத்தினின்றும் கிளம்பினேன்.
இப்போது என்னுடைய தூங்கவியலாமை, என்னைப் பயமுறுத்துகிற விஷயம் முடிந்துபோனது. இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? அதன் நற்பலன்களை எண்ணிப் பாருங்கள்! இப்போது இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரையிலான நேரம் எனக்கு மட்டுமே உரியது. இதுவரையிலும் ஒரு நாளின் மூன்றிலொரு பங்கினைத் தூக்கம் பயன் படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், இனிமேல் அப்படியில்லை. ஆம். இனிமேல் அப்படிக் கிடையாது. இப்போது அது என்னுடையது. எனக்கே எனக்கானது. வேறு யாருடையதும் இல்லை, எல்லாமே எனக்குத்தான். நான் விரும்புகிறபடி அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். என் வழிக்கு யாரும் வரமாட்டார்கள். யாரும் என்னை எதுவும் கேட்க மாட்டார்கள். ஆம். அப்படித்தான். என் வாழ்க்கையை நான் விரிவுபடுத்திக்கொண்டேன். அதனை மேற்கொண்டும் மூன்றிலொரு பங்கு அதிகப்படுத்திக்கொண்டேன்.
உயிரியல் அடிப்படையில் இது  இயற்கைக்கு மாறானதென ஒருவேளை நீங்கள் எனக்குச் சொல்ல நினைக்கலாம். அந்த வகையில் நீங்கள் சரியாகவும் இருக்கலாம். இப்படி இயற்கைக்கு மாறானதொரு நிலையைத் தொடர்ந்து நான் உருவாக்கிவருவதற்காக எதிர்காலத்தில் ஏதோ ஒரு நாளில் இதற்கான பலனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டியுமிருக்கலாம். இப்போது எனக்கு முன்முதலீடாகத் தந்திருக்கிற விரிவுபடுத்தப்பட்ட பகுதிக்கானதை வாழ்க்கை என்னிடமிருந்து வசூலிக்க முயற்சிக்கலாம். இது ஒரு அடிப்படையற்ற கருதுகோள். ஆனால், இதை முழுவதுமாக நிராகரிப்பதற்கு எதுவுமில்லை என்பது மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் அது சரியென நான் உணர்கிறேன். அதாவது, முடிவில், கடன் வாங்கிய நேரத்துக்கான வரவும் செலவும் சரிசெய்யப்படும்.
மிகவும் நேர்மையாகச்  சொல்கிறேன், இளமையிலேயே இறந்துபோவதாக இருந்தாலும், அதற்காக நான் இதைக் காவுகொடுத்துவிடமாட்டேன். ஒரு கருதுகோளை வைத்துக்கொண்டு செய்கிற ஒரு மிகச் சிறப்பான காரியம் எதுவென்றால், அதை அதன் போக்கிலேயே, அது விரும்புகிறவரையில் ஓடுமாறு விட்டுவிடுவதுதான். இப்போது, குறைந்த பட்சம் என்னுடைய வாழ்க்கையை விரிவுபடுத்திக்கொண்டுள்ளேன் என்பதோடு, அது அற்புதமானதாகவும் இருக்கிறது. என் கைகள் இனிமேலும் வெறுமையாக இருக்கப் போவதில்லை. இங்கே, என் இருப்பு உயிருள்ளதாக, அதை நான் உணரும்படியாக இருக்கிறது. இது உண்மையான இருப்பு. நான் இனிமேலும் விழுங்கப்படப் போவதில்லை. அல்லது குறைந்தபட்சம் விழுங்கப்படாத என்னுடைய ஒரு பகுதியேனும் உயிர்வாழ்ந்திருக்கும். அதுதான் எனக்கு உயிரோடிருப்பதான இந்தத் தீவிர உணர்வை உண்மையிலேயே ஏற்படுத்துகிறது. இப்படியான ஒரு உணர்வு ஏற்படாமல் கூட வாழ்க்கை நீடித்து, எப்போதும் தொடர்ந்துகொண்டேயிருக்கலாம். ஆனால், அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது. அதை நான் இப்போது முழுமையான தெளிவோடு காண்கிறேன்.

என் கணவர் தூங்கிவிட்டாராவெனச்  சரிபார்த்தபின் நான் வசிப்பறைச் சாய்மெத்தைக்குச் சென்றமர்ந்து, என்னுடைய பிராந்தியை அருந்திக்  கொண்டு, என் புத்தகத்தைத் திறப்பேன். அன்ன கரீனாவை  மூன்று முறை வாசித்தேன். ஒவ்வொரு  முறையும் புதிய புதிய திறப்புகளைக் கண்டேன். இந்த மிகப்பெரிய நாவல் முழுவதும் வெளிப்பாடுகளும் புதிர்களுமாகத் தாம் நிறைந்து கிடக்கின்றன. நாவலின் உலகம், ஒரு சீனப்பெட்டியைப் போல, சின்னச் சின்ன உலகங்களையும் அதற்குள் இன்னும் சிறிய உலகங்களையும் கொண்டுள்ளது. இந்த உலகங்கள் எல்லாமாகச் சேர்ந்து  ஒரு ஒருங்கிணைந்த பிரபஞ்சமாக வாசகரால் கண்டறியப்படக் காத்திருக்கிறது. அதன் மிகமிகச் சிறிய துண்டு ஒன்றை மட்டுமே பழைய நான் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் இப்போதய புதிய நான், கூரிய நோக்கில் மிகச் சரியான புரிதலுடன் அதன் மையத்திற்குள்ளேயே நுழைய முடிந்தது. அந்த மகத்தான டால்ஸ்டாய் இந்த நாவலிலிருந்து வாசகர் என்ன பெற்றுக்கொள்ளவேண்டுமென விரும்பினாரென்றும், அவர் என்ன சொல்லவிரும்பினாரென்றும் நான் மிகச்சரியாகத் தெரிந்திருக்கிறேன். அவருடைய வெளியீட்டுச்செய்தி எப்படி அங்ககப் படிகமாகி, ஒரு நாவலாக உருப்பெற்றுள்ளதென்றும், அந்த நாவலில் படைப்பாளரையே கடந்து சென்றிருப்பது எதுவென்றும் என்னால் காண முடிகிறது.
நான் எவ்வளவு ஆழமாக அதில் மூழ்கினாலும், ஒருபோதும் நான் களைப்படைந்ததில்லை. அன்ன கரீனாவை என்னால் எத்தனை முறை படிக்க முடியுமோ அத்தனைமுறை படித்த பின் தாஸ்த்யோவெஸ்கியைப் படித்தேன். என்னால் ஒன்றன் பின் ஒன்றாகப் புத்தகங்களைத் தீவிரமாகப் படிக்க முடிந்தது. அதில் ஒருபோதும் களைப்படையவில்லை. எல்லாக் கடினமான பகுதிகளையும் எந்தச் சிறப்பு முயற்சியுமில்லாமல் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதோடு ஆழமான உணர்ச்சிகளும் என்னுள் பிரதிபலித்தன.
இதுபோல, எப்போதும் இப்படி இருப்பதே எனக்குப் பொருத்தமென உணர்ந்தேன். தூக்கத்தைக் கைவிட்டதன் மூலம் என்னையே நான் விரிவாக்கிக் கொண்டேன். ஒன்றுவதற்கான வலிமை என்பது மிக முக்கியமான விஷயம். இந்த வலிமை இல்லாமல் வாழ்வதென்பது எதையுமே பார்க்காமல் கண்களைத் திறந்திருப்பது போன்றது.
மேற்கொண்டு, எனது பிராந்திப் புட்டி காலியாகிவிட்டது; முழுவதையும் நானே குடித்துத் தீர்த்திருக்கிறேன். ரெமி மார்ட்டின் புட்டி இன்னொன்று வாங்குவதற்காக ஒரு பெரிய விற்பனைக்கூடத்தின் மதுச்சுவை வல்லுநர் பிரிவுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்தவாறே சிவப்பு ஒயின் புட்டி ஒன்று வாங்கினால் நல்லதெனக் கற்பனை கொண்டேன்; அப்படியே ஒரு அழகுப் படிகத்திலான பிராந்திக் குவளை, சாக்லேட்கள், இனிப்பு அப்பங்கள்.
வாசித்துக்கொண்டிருக்கும்போது சிலவேளைகளில் நான் அதிக மனக்கிளர்ச்சி கொண்டுவிடுவேன். அப்படியாகும்போது, நான் புத்தகத்தை மூடிக் கீழே வைத்துவிட்டு உடற்பயிற்சி செய்வேன்; கட்டழகுப்பயிற்சி அல்லது அறைக்குள்ளேயே வெறுமே சுற்றிச்சுற்றி நடப்பேன். அந்தந்த மனநிலைக்கேற்ப, இரவுநேரக் கார்ப்பயணமும் செல்வதுண்டு. ஆடை மாற்றி, என்னுடைய சிவிக்கில் ஏறி, இலக்கு ஏதுமின்றி ஊரைச் சுற்றுவேன். சிலநேரங்களில் முழுஇரவுத் துரித உணவகத்தில் ஒரு காப்பிக்காக நிறுத்துவேன். ஆனால், காரிலேயே அமரும் வழக்கத்தினால், பிறரைக் கையாள்வதில் அது அப்படியொரு சிரமமாக இருக்கும். அதனால், பாதுகாப்பான பார்வையிடங்கள் ஏதாவது ஒன்றில் நிறுத்தி, மனத்தை அப்படியே அலையவிடுவேன். அல்லது அவ்வளவு தூரம் கடந்து, துறைமுகம், போய்ப் படகுகளைக் கவனித்துக்கொண்டிருப்பேன்.
ஒருமுறை ஒரு காவலரால்கூட  நான் மடக்கி விசாரிக்கப்பட்டேன். அப்போது காலை இரண்டு முப்பது. கடற்கரைச் சரக்குமேடை அருகிலுள்ள ஒரு தெருவிளக்கின் அடியில் நிறுத்தி, காரின் ஒலிக்கருவியில் இசை கேட்டுக்கொண்டு, கடந்து செல்லும் கப்பல்களின் விளக்குகளைப் பார்த்துக்கொண்டு நின்றேன். அவர் என் கார் சன்னலைத் தட்டினார். நான் கண்ணாடியை இறக்கினேன். அவர் இளமையாக ஆண்மையழகோடு இனிய பண்புள்ளவராக இருந்தார். நான் தூங்கமுடியாமலிருப்பதை அவருக்கு விளக்கினேன். அவர் என் உரிமத்தை வாங்கிக் கொஞ்ச நேரம் அதையே ஆய்வு செய்தார். ‘’ கடந்த மாதம் இங்கே ஒரு கொலை நிகழ்ந்தது.’’ என்றார். ‘’ மூன்று இளைஞர்கள் ஒரு தம்பதியைத் தாக்கிக் கணவனைக் கொலைசெய்துவிட்டு, அந்தப் பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள்.’’ அந்தச் சம்பவம் பற்றி நானும் படித்திருந்தது என் நினைவுக்கு வந்தது. நான் தலையாட்டினேன். ‘’ அம்மையே, உங்களுக்கு எதுவும் இங்கே வேலை இல்லையெனில், இரவுகளில் இந்தப்பக்கம் வராமலிருப்பது நல்லது.’’ நான் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு, அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவர் என் உரிமத்தைத் திருப்பிக் கொடுத்தார். நான் கிளம்பி வந்துவிட்டேன்.
அந்த ஒரேமுறைதான்  எவரொருவரும் என்னோடு பேசியது. வழக்கமாக இரவில் தெருக்களில்  நான் ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக அலைந்துகொண்டிருப்பேன். இருந்தாலும் எவரும் என்னைப்பற்றிக் கவலைப்பட்டதில்லை. பின்னர், காரை கீழ்தளத்திலுள்ள நிறுத்துமிடத்தில்  நிறுத்திவிடுவேன். என் கணவரின்  வெள்ளை சென்ட்ராவை அடுத்து  வலதுபக்கம்; அவர் மேல்மாடியில் இருட்டில் நன்கு தூங்கிக் கொண்டிருப்பார். சூடான இயந்திரத்தின் க்ள,க்ள சப்தம் ஆறுகிற வரையில் கேட்டுக்கொண்டு நிற்பேன். சப்தம் நின்றபின் நான் மாடிக்குச் செல்வேன்.
உள்ளே வந்ததும் முதலில் போய், எனது கணவர் தூங்குகிறாரா எனச் சரிபார்த்துவிடுவேன். எப்போதும் அவர் தூங்கிக்கொண்டுதான் இருப்பார். பின் என் மகனைச் சென்று பார்ப்பேன். அவனும் நல்ல தூக்கத்தில்தான் இருப்பான். அவர்களுக்கு எதுவும் தெரியாது. உலகம் எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் அப்படியே இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால், அவர்கள் தவறாகப் புரிந்திருக்கிறார்கள். அது அவர்கள் நினைத்திருக்க முடியாத அளவுக்கு மாறிக்கொண்டிருக்கிறது; நிரம்பவும் மாறிக் கொண்டிருக்கிறது; வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அது மீண்டும் முன்புபோல் இனி ஒருபோதும் ஆகாது.
ஒருமுறை நின்று, தூங்கும் என் கணவரின் முகத்தை வெறித்துப் பார்த்தேன். படுக்கையறையில் ஏதோ சப்தம் கேட்டு உள்ளே ஓடினேன். அலாரம் கடிகாரம் கீழே தரையில் கிடந்தது. தூக்கத்தில் அவர்தான் தட்டிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் என்ன செய்தோமென்று தெரியாமலே எப்போதும்போல ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த மனிதரை எதுதான் எழுப்பும்? கடிகாரத்தை எடுத்து இரவு மேஜை மீது மீண்டும் வைத்தேன். பின்னர் என் கைகளைக் கட்டிக்கொண்டு என் கணவரை வெறித்துப் பார்த்தேன். எவ்வளவு காலம் ஆகியிருக்கும் – வருடங்கள்? – தூங்கும் அவரின் முகத்தை இதுபோல் கடைசியாகப் பார்த்துப் படித்து?

நாங்கள் திருமணமான  புதிதில் இதுபோல் நிறைய  முறைகள் செய்திருப்பேன். அது என்னை தளர்த்திக்கொள்ளவும்  அமைதியான ஒரு மனநிலைக்குக் கொணரவும் செய்தது. ‘’அவர் இதுபோல்  அமைதியாகத் தூங்கும் வரை  நான் பாதுகாப்பாக இருப்பேன்.’’ என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். அதனாலேயே அவர் தூங்குவதைப்  பார்த்துக் கொண்டு நான் நெடுநேரம்  செலவழித்தேன்.

ஆனால், எங்கேயோ, எப்போதோ, போகிறபோக்கில் அந்தப் பழக்கத்தை விட்டு விட்டேன். அது எப்போது நிகழ்ந்தது? நான் நினைவுகொள்ள முயன்றேன். அது என் மாமியாரும் நானும் என் மகனுக்கு என்ன பெயர்வைப்பதெனச் சண்டை மாதிரியான ஒன்றில் ஈடுபட்டபோதுதான் அப்படி நிகழ்ந்திருக்க வேண்டும். அவர் மதப்பிரிவு மாதிரியான ஒன்றில் அதிக ஆர்வமாக இருந்ததோடு, அவருடைய மதகுருவிடம் என் மகனுக்கு ஒரு பெயரைச் `சூட்டுமாறு` கேட்டுக்கொண்டிருந்தார். அவர் சொல்லியிருந்த பெயர் என்னவென எனக்கு இப்போது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால், யாரோ ஒரு குரு என் குழந்தைக்கு ஏதோ ஒரு பெயரைச் `சூட்டுவதில்` எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. அந்த நேரத்தில் எங்களுக்குள் சூடான சில விவாதங்கள் நிகழ்ந்தன. ஆனால், என் கணவரால் யார் பக்கமும் எதுவும் சொல்லமுடியவில்லை. அவர் வெறுமனே நின்றுகொண்டு, எங்களை அமைதிப்படுத்த முயன்றார்.

அதன்பின் எனது கணவர்தான்  எனக்குப் பாதுகாவலர் என்ற உணர்வை இழந்தேன். அவரிடமிருந்து  எனக்குக் கிடைக்கும் என எண்ணியிருந்த அந்த ஒரே விஷயத்தையும் அளிக்கத் தவறிவிட்டார். சமாளிப்பதற்கென  அவர் மேற்கொண்ட செயல்களெல்லாம் என்னைக் கோபம் கொள்ளச்  செய்தன. இதெல்லாம் நடந்து நீண்டகாலமாகிவிட்டதுதான். மாமியாரும் நானும் எப்போதோ சமாதானமாகி விட்டோம். என் மகனுக்கு நான் விரும்பிய பெயரைத்தான் வைத்தேன். என் கணவரும் நானுங்கூட அப்போதே சமாதானமாகிவிட்டோம்.
எனக்கு நல்ல நிச்சயமாகத் தெரிகிறது, தூங்கும்போது அவரை நான் கவனிப்பதற்கு, எமனாக அமைந்தது, அதுதான். .
அப்படியே அங்கே நின்று எப்போதும்போல் அவர் ஆழ்ந்து தூங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வெற்றுக்கால்களில் ஒன்று மூடிய போர்வைக் குள்ளிருந்து ஒரு வித்தியாசமான கோணத்தில் நீட்டிக்கொண்டிருந்தது. அது வேறு யாரோ ஒருவருடைய கால் பாதம் போன்றொரு வினோதமாக இருந்தது. அது ஒரு பெரிய மொத்தையான பாதம். என் கணவரின் வாய் பிளந்திருக்க அவரது கீழ் உதடு தொங்கியிருந்தது. அடிக்கொரு முறை அவரது மூக்கு விரிந்துகொண்டிருந்தது. அவரது கண்ணுக்குக் கீழிருந்த மறு ஒன்று என்னைக் கவலைகொள்ளவைத்தது. அது அவ்வளவு பெரிதாக அசிங்கமாகத் தெரிந்தது. அவரது கண்கள் மூடியிருந்த விதத்தில் ஏதோ ஒரு இழிதன்மை இருந்தது. இமைகள் தளர்வாக வெளிறிய மனிதத் தசையால் போர்த்தப்பட்டிருந்தது. அவர் ஒரு முழுமுட்டாள் போலத் தோன்றினார். இதைத்தான் `இந்த உலகத்தைப் பொறுத்தவரை இறந்ததாக` எனப் பொருள் கொள்கிறார்களோ! நம்பமுடியாத அளவுக்கு எவ்வளவு அருவருப்பாக! அவர் அப்படியொரு அருவருப்பான முகத்தோடு தூங்குகிறார். அது மிகவும் கோரமாக இருப்பதாக நான் நினைத்தேன். பழைய நாட்களில் அவர் இப்படித் தோன்றியிருக்கவில்லை. எங்களுக்குத் திருமணமாகியிருந்த புதிதில் அவரது முகம் அழகானதாக, மென்மையும் வழவழப்பும் கூடியதாக விழிப்பும் சுறுசுறுப்பும் தெரிவதாக இருந்ததென நிச்சயமாகச் சொல்வேன். நல்ல தூக்கத்தில் கூட அவர் இப்படியொரு தடித்த உதடுள்ளவராக இருந்ததில்லை.
முன்னர், தூங்கும்போது அவருடைய முகம்  எப்படித் தோன்றியதென நினைவுக்குக் கொண்டுவரப்பார்த்தேன், ஆனால், எவ்வளவுதான் கடினமாக முயற்சித்தாலும் என்னால் முடியவில்லை. என்னால் நிச்சயப்படுத்திக் கொள்ளமுடிந்ததெல்லாம் அவருக்கு இவ்வளவு பயங்கரமான முகம் இருந்திருக்க முடியாதென்பதுதான். அல்லது நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேனோ? தூக்கத்தில் எப்போதுமே அவர் இப்படித்தான் இருந்திருக்கலாம். நான் தான் ஏதோ ஒரு வகையில் உணர்ச்சிகளைப் பெரிதுபடுத்துகிறேனாகவும் இருக்கலாம். என் அம்மா அதைத்தான் சொல்வாளென எனக்கு நிச்சயமாகத்தெரியும். அந்த மாதிரிச் சிந்திப்பது தான் அவளுடைய தனிவகைச்சிறப்பு. ‘’ இந்தக் கண்ணே மணியே சமாச்சாரமெல்லாம் இரண்டு வருடங்கள்தான், மிஞ்சிப்போனால் மூன்று வருடம்’’ என்று அவள் எப்போதும் சொல்வதுண்டு. இப்போதென்றால், அவள் எனக்கு, ‘’ நீ மட்டும் புதுப்பெண்ணாக இருந்தால், உன்னுடைய சின்னக் கணவன் தூக்கத்திலும் ஒரு கண்ணாளனாகத் தெரிவான்.’’ என்றுதான் சொல்வாளென்று எனக்கு நிச்சயந்தான், .
அவள் அதுமாதிரி தான் ஏதாவது சொல்வாளென்பது எனக்கு எவ்வளவு நிச்சயமோ, அந்தளவுக்கு நிச்சயம், அவள் சொல்வது தவறு என்பதும். வயதுகள் கடந்ததில் அவர் அழகற்று, அருவருப்பாகிவிட்டார். அவர் முகத்திலிருந்தும் உறுதித்தன்மை வெளியேறிவிட்டது. அதுதான் வயதில் முதுமையடைவதென்பது. அவர் முதுமையடைந்து விட்டார்; களைத்துத் தெரிகிறார். தேய்மானம் ஏற்பட்டிருக்கிறது. வருகின்ற வருடங்களில் அவர், இன்னும் அழகற்றவராகிவிடுவார்; அது மட்டும் நிச்சயம். அதன் போக்கில் அதனோடு செல்வதைத் தவிர, எனக்கு வேறு வழி இல்லை; நான் அதனோடு கட்டப்பட்டுவிட்டேன். அதை நான் ஏற்றுக்கொண்டேயாக வேண்டியிருக்கிறது.
அங்கே நின்றவாறே அவரைக் கவனித்துக்கொண்டிருந்த என்னிடமிருந்து பெருமூச்சொன்று கிளைத்து வெளியானது. அது ஒரு ஆழமான பெருமூச்சு, அதிலும் வெளியேறும்போது சப்தம் கொஞ்சம் அதிகமாகவே எழுப்பியது. இருந்தாலும் அவரது உடலில் எந்த ஒரு சிறு அசைவும் இல்லை. இந்த உலகத்தின் மிகமிக அதிகமான சப்தமுள்ள பெருமூச்சால் கூட அவரை எழுப்பிவிட முடியாது.
நான் படுக்கையை  விட்டு வெளியே வந்து வசிப்பறைக்குத் திரும்பிச் சென்றேன். எனக்குள் பிராந்தியை ஊற்றிக்கொண்டு  வாசிக்கத் தொடங்கினேன். ஆனால், ஏதோ ஒன்று என்னை அதில் கவனம் செலுத்த விடாமல் தடுத்தது. நான் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, என் மகனின் அறைக்குச் சென்றேன். கதவைத்திறந்து, அறைவழியிலிருந்து சிதறிய வெளிச்சம் படர்ந்திருந்த அவன் முகத்தையே வெறித்துப் பார்க்கத் தொடங்கினேன். அவனும் என் கணவரைப் போலவே ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்; எப்போதும் போலவே. தூக்கத்திலிருந்த அவனை, அநேகமாக எவ்விதத் தனித்தன்மையுமில்லாத, வழவழப்பான அவன் முகத்தைக் கவனித்தேன். அது என் கணவரின் முகத்தைப் போலல்லாமல் மாறுபட்டிருந்தது; இன்னும் ஒரு குழந்தையின் முகந்தானே; மேனியில் இப்போதும் பளபளப்பிருந்தது. அதில் இழிதன்மையைக் காட்டுகின்ற எதுவும் இல்லை.
இருந்தாலும் என் மகனுடைய  முகம் தொடர்பான ஏதோ ஒன்று  என்னை எரிச்சல் கொள்ளவைத்தது. இதற்கு முன்பு, அவன் குறித்து இதைப்போல நான் ஒருபோதும் உணர்ந்ததில்லை. இதைப்போல உணர்வுகொள்ள வைத்தது எதுவாக இருக்கும்? நான் என் கைகளைக் கட்டிக்கொண்டு, அவனைப் பார்த்தவாறு அங்கேயே நின்றேன். ஆம். நான் என் மகனை நேசிக்கிறேன், கொள்ளை, கொள்ளையாகப் பெருமளவில் நேசிக்கிறேன். இருந்தாலும் ஏதோ ஒன்று என்னைக் கவலைகொள்ளச் செய்கிறது, என் நரம்புகளில் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. .
நான் தலையை உலுக்கிக்கொண்டேன்.
என் கண்களை மூடி இமைகளைத் திறக்காமலேயே வைத்திருந்தேன். பின்னர், கண்களைத் திறந்து, என் மகனின் முகத்தை மீண்டும் உற்றுப் பார்த்தேன். அப்போது தான் எனக்குள் பொறி தட்டியது. என் மகனின் முகத்தில் என்னைக் கவலையுறச் செய்தது, எதுவென்றால், அவன் முகம் என் கணவரின் முகத்தைப் போலவே தோற்றமளித்ததுதான். என் மாமியாரின் முகத்தைப் போலவுமே தான். எளிதில் மசியாத இறுக்கம். தனக்குத்தானே மனநிறைவு கொள்ளும் அகந்தை. அது அவர்களின் இரத்தத்திலேயே ஊறிப்போனதும் என் கணவரின் குடும்பத்திலேயே நான் வெறுக்கக் கூடியதுமான ஒரு வகைப்பட்ட திமிர்த்தனம். என் கணவர் எனக்கு நல்லவர், உண்மைதான். எனது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதில் கவனமுடையவர்.  பெருந்தன்மையும் இனிமையும் மிக்கவர். கடுமையாக உழைக்கிறார். வேறு பெண்களோடு ஒருபோதும் சுற்றாதவர். பணியில் உள்ளார்ந்த அக்கறையுள்ளவர். எல்லோரிடமும் அன்பு காட்டுபவர். நான் அவரைப் பெற்றிருப்பது என்னுடைய நற்பேறென என் நண்பர்கள் எல்லோருமே சொல்கிறார்கள். அவரை நான் எந்தக் குறையும் சொல்லமுடியாது. அதுதான் சிலநேரங்களில் என்னை, என் நெஞ்சினைப் பிராண்டுகிறது. அவருடைய, எந்தக் குற்றமுமற்ற அந்தத் தன்மைதான் கற்பனையைத் தவிர்க்கின்ற ஒரு வினோதமான நெகிழ்வற்ற கடினத் தன்மையை உருவாக்குகிறது. அந்தக் கடினத்தன்மைதான் என்னை நறநறவெனப் பல்லைக் கடிக்கச் செய்கிறது. அந்த வகையான கடினத் தன்மை கொண்ட உணர்வுதான், என் மகனின் முகத்தில் தூங்கும் போதும் அப்படியே இருக்கிறது.
நான் தலையை மீண்டும் உலுக்கிக் கொள்கிறேன். கடைசியில்  இந்தச் சிறு பையனும் எனக்கு அந்நியமாகி விட்டான். அவன் வளர்ந்த பின்புங்கூட, நான் இப்போது, என்ன உணர்கிறேனென்பதை என் கணவரால் எப்படிப் புரிந்துகொள்ள முடியவில்லையோ, அப்படியே, என் மகனும், ஒருகாலும் என்னைப் புரிந்துகொள்ள முடியப்போவதில்லை.

நான், என் மகனை நேசிக்கிறேன். அதில் எந்தக் கேள்விக்கும் இடமில்லை. ஆனால், ஏதோ ஒரு  நாளில் இப்போது போல, இதே தீவிரத்துடன் நான், அவனை நேசிக்கமுடியாமற்போகுமென நினைக்கிறேன். அப்படித்தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. இது ஒரு தாய்மைச்சிந்தனையல்லதான். அநேகமாக எந்தத்தாயும் இப்படி நினைக்கமாட்டாள். ஆனால், அங்கே தூக்கத்திலிருக்கும் அவனைக் கவனித்துக்கொண்டிருந்த போது, ஒருநாள் அவனை வெறுக்கிறநிலைதான் வரப்போகிறதென எனக்கு முழுமையான உறுதிப்பாடாகத் தெரிந்தது.
அந்த எண்ணமே என்னைப் பெருந்துயரத்தில் வீழ்த்தியது. அறைக் கதவைச் சார்த்தி, கூடத்து விளக்கை அணைத்துவிட்டு, வசிப்பறையின் சாய்மெத்தைக்குச் சென்று, உட்கார்ந்து, என் புத்தகத்தைத் திறந்தேன். சில பக்கங்களை வாசித்ததும், அதை மீண்டும் மூடினேன். கடிகாரத்தைப் பார்த்தேன். மூன்று மணிக்கு இன்னும் சிறிது நேரமிருக்கிறது.
நான் தூங்குவதை நிறுத்தி எத்தனை நாளாகின்றன என்று வியந்தேன். கடந்த செவ்வாய்க்கும் முந்தைய செவ்வாய்க் கிழமையில்தான் தூங்காமை தொடங்கியது. ஆக, இன்று பதினேழாவது நாள். பதினேழு நாட்களில் ஒரு இமைப்பொழுது கூடத் தூங்கவில்லை. பதினேழு இரவு கள், பதினேழு பகல்கள். நீண்ட, மிக நீண்ட காலம். தூக்கம் எப்படியிருக்குமென என்னால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை
நான் கண்களை மூடித் தூக்க உணர்வினை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டுவர முயற்சித்தேன். ஆனால், எனக்குள்ளே இருந்ததெல்லாம், ஒரு விழிப்பு நிறைந்த இருட்டுதான். ஒரு விழிப்பு நிறைந்த இருட்டு: அப்படியென்றால் மனத்தின் மரணம் எனப் பொருள்.

நான் சாகப் போகிறேனா?

நான் இப்போது இறந்தால், என்னுடைய மொத்த வாழ்க்கையின் மதிப்பும் என்னவாக இருக்கும்?
அதற்குப் பதில் சொல்ல எனக்கு எந்த வழியுமில்லை.
எல்லாம் சரி. அப்படியானால், மரணம்தான் என்ன?

இப்போதுவரையிலும், தூக்கம் என்பதை மரணத்துக்கு  ஒரு வகை மாதிரி எனத்தான் நான் புரிந்து வைத்திருக்கிறேன். மரணத்தைத் தூக்கத்தின் நீட்சியென்றுதான் கற்பனை செய்திருக்கிறேன். சாதாரணத் தூக்கத்தைக் காட்டிலும் ஆழ்ந்து போகிற ஒரு தூக்கம். எல்லா உணர்வுகளையும் இழந்த ஒரு தூக்கம். நிலைத்த ஓய்வு. முழுமையான இருட்டடிப்பு.

ஆனால், இப்போது, நாம்  அப்படித் தவறாக நினைத்திருந்தோமோவென வியக்கிறேன். ஒருவேளை மரணம் என்பது தூக்கத்திற்கு முற்றிலுமாக மாறுபட்ட, வேறொரு வகைப்பிரிவைச் சேர்ந்த ஏதோ ஒன்றாக, இப்போது நான் காண்கிற ஆழ்ந்து தோய்ந்த, முடிவற்ற, விழிப்பு நிறைந்த இருட்டாக இருக்கலாம்.

இல்லை, அது மிகமிகப் பயங்கரமானதாக இருக்கும். மரணம்  நமக்கு ஒரு ஓய்வாக இருக்கப்போவதில்லையெனில், வெறுமையும் மனச்சோர்வுமே எஞ்சியிருக்கிற, நம்முடைய இந்த அரைகுறை வாழ்க்கையிலிருந்தும்  மீட்சியைத் தரப்போவதுதான் எது? மரணம் என்றால் என்னவென்று யாருக்குமே தெரியாது என்பதுதான் முடிவாகத் தெரிகிறது. மரணத்தை யாராவது உண்மையிலேயே பார்த்திருக்கிறார்களா? ஒருவர் கூட இல்லை. இறந்துபோனவர்களைத் தவிர. உயிரோடிருக்கிற யாருக்குமே மரணம் எதைப்போன்றதெனத் தெரியாது. அவர்களால் யூகிக்க மட்டுமே முடியும். மிகச் சிறந்த யூகமென்பது இப்போதும் யூகமாகவே இருக்கிறது. மரணமென்பது ஒரு வகை ஓய்வாக இருக்கலாம். ஆனாலும் பகுத்தறிவு அதை அவ்வாறு சொல்லாது. மரணம் எப்படியானதெனத் தெரிந்து கொள்வதற்கு ஒரே வழி, மரணமடைவதுதான். மரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கமுடியும்.
அப்படி நினைத்த மாத்திரத்திலேயே, பயங்கரமான திகிலொன்று கிளம்பி என்னை மூழ்கடித்தது. என்னுடைய முதுகெலும்பில் உறையவைக்கின்ற பனிக்குளிர் மேலிருந்து கீழ்வரை பரவியது. என் கண்கள் அப்போதும் இறுக மூடியேயிருந்தன. அவற்றைத் திறப்பதற்கான சக்தியை நான் இழந்துவிட்டிருந்தேன். என் முன்னால் நிலையாக நின்றிருந்த அடர்ந்த இருட்டினை, அவ்வளவு ஆழமாகப் பரந்தும், விரிந்தும், எதுவுமே செய் இயலாத அண்டவெளியாகவே தோற்றமளித்த, அந்த இருட்டை வெறித்து நோக்கினேன். நான் மட்டும் தனியாகத்தான் இருந்தேன். என் மனம் மிகமிகத் தீவிர அக்கறையோடு ஒருநிலைப்பட்டிருந்தது. அது விரிந்து கொண்டுமிருந்தது. நான் மட்டும் விரும்பியிருந்தால், அண்டத்தின் அதீத ஆழங்களைக் கூடப் பார்த்திருக்கமுடியும். ஆனால், அப்படிப் பார்ப்பதில்லையென்ற முடிவிலிருந்தேன். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை.
மரணம் இப்படியானதாக இருந்தால், இறப்பதென்பது நிலைத்த  விழிப்பும் இப்போதுபோல இருட்டுக்குள்  வெறிப்பதுமாக இருந்தால்  நான் என்ன செய்யவேண்டும்?
கடைசியாக, ஒருவழியாகச் சமாளித்து என் கண்களைத் திறந்துவிட்டேன். குவளையில் மீதியிருந்த பிராந்தியை ஒரே மடக்கில் விழுங்கினேன்.
என்னுடைய பைஜாமாவைக் கழற்றிவிட்டு, ஜீன்ஸ் காற்சட்டை, டி-சர்ட்டுடன் வின்ட்பிரேக்கர் கோட்டும் அணிந்துகொள்கிறேன். தலைமுடியைப் பின்பக்கமாக வாரிச்சீவி இறுக்கமான ஒரு குதிரை வாலாகக் கட்டி, வின்ட்பிரேக்கருக்கு அடியில் தள்ளுகிறேன். என் கணவருடைய (baseball)அடிப்பந்தாட்டத் தொப்பியை அணிந்துகொள்கிறேன். கண்ணாடியில் நான் ஒரு பையனைப் போல் தோன்றுகிறேன். நல்லது தான். நடைப்பயிற்சிக் காலணிகளுக்குள் கால்களை நுழைத்து, மாட்டிக்கொண்டு கார்நிறுத்துமிடத்திற்குச் செல்கிறேன்.
ஓட்டும் சக்கரத்தின் பின்னாக நழுவியமர்ந்து, சாவியைத் திருப்பி, இயந்திரத்தின் உறுமலைக் கவனிக்கிறேன். அது சாதாரணமாகத் தான் ஒலிக்கிறது. ஓட்டும் சக்கரத்தின் மீது கைகளிருக்கச் சிலதடவைகள் ஆழ்ந்து மூச்சிழுத்துக்கொள்கிறேன். பின்னர் பற்சக்கரத்தை மாற்றிக் கட்டிடத்தை விட்டும் வெளியே ஓட்டுகிறேன். வழக்கத்தை விடவும் நன்றாகவே, கார் ஓடுகிறது. அது பனித்தரை மீது சறுக்கிச் செல்வது போலிருக்கிறது. அதை உயர்வேகப் பற்சக்கரத்தில் இன்னும் எளிதாக்கி, ஊர்ப்பகுதிக்கப்பால் சென்று, யோக்கஹாமா நெடுஞ்சாலையில் நுழைகிறேன்.
இப்போது, மணி மூன்றுதான் ஆகிறது. ஆனால், சாலையில் கார்களின் எண்ணிக்கை எந்தவிதத்திலும் குறைவென்று சொல்லமுடியாது. கிழக்கு நோக்கிச் செல்லும் பெரிய பெரிய டிரக்குகள் தரை அதிரும்படி வேகவேகமாக உருண்டு செல்கின்றன. அந்த டிரக் நபர்கள் இரவில் தூங்குவதில்லை. அவர்கள் பகலில் தூங்குகிறார்கள்; அதிகச் செயல் திறனுக்காக இரவில் பணிபுரிகிறார்கள்.
எத்தனை பெரிய வீண் இழப்பு! இரவும் பகலும் என்னால் வேலை செய்ய முடியும். நான் தூங்க வேண்டியதில்லை.
இது உயிரியல் நடைமுறையில் இயற்கையானதல்ல என எனக்குப் புரிகிறது. ஆனால், எது இயற்கையானதென்று உண்மையில் யாருக்குத் தெரியும்? அவர்கள் வெறுமனே உய்த்துணர்ந்து அனுமானிக்கிறார்கள். நான் அதையெல்லாம் தாண்டி விட்டேன். படிமுறை வளர்ச்சியில் தாண்டிக்குதிப்பதான ஒரு நிலை. முன்னறிநிலை. படிமுறைத் தாண்டல். எப்போதுமே தூங்காத ஒரு பெண். உணர்தலின் விரிவாக்கம்.
நான் சிரிக்கத்தான்  வேண்டும். முன்னறிநிலை. படிமுறைத்  தாண்டல்.
கார் வானொலியைக் கேட்டுக்கொண்டே, துறைமுகத்துக்கு ஓட்டினேன். எனக்கு கர்நாடக இசை வேண்டும், ஆனால், இந்த இரவில் அதை ஒலி  பரப்புகின்ற ஒரு நிலையத்தை  என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. முட்டாள் தனமான ஜப்பானிய ராக் இசை. உங்கள் பற்களைக் கெடுக்கும் அளவுக்கு இனிப்பாக காதல் பாடல்கள். நான் தேடுவதை  விட்டுவிட்டு, அவற்றைக் கேட்கிறேன். அவை என்னை, மொசார்ட் மற்றும் ஹைடினிலிருந்து வெகுதூரத்தில் நானிருப்பதான ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன.

நீர்ப்புறப் பூங்காவில், பரந்த கார்நிறுத்துமிடத்தின் வெண்கோட்டுக் கட்டம் ஒன்றுக்குள் கொண்டுபோய்க் காரைப் பொருத்தி, இயந்திரத்தை நிறுத்தினேன். அது, அந்தக் கார்நிறுத்துமிடத்திலேயே விளக்கின் கீழ் மிக அதிகமான வெளிச்சம் நிறைந்த பகுதி என்பதுடன் சுற்றிலும் விரியத் திறந்த ஒன்றுமாக இருக்கிறது. அங்கே நிறுத்தப் பட்டிருந்த ஒரே மற்றொரு கார், இளைஞர்கள் ஓட்ட விரும்புகிற ஒரு பழைய இரட்டைக் கதவு கூபே வகைப்பட்டது. அநேகமாக ஓட்டல் அறைக்குப் பணமில்லாத ஒரு ஜோடி இப்போது, அதனுள் காதல் செய்துகொண்டிருக்கலாம். வீண் தொந்தரவைத் தவிர்ப்பதற்காக, ஒரு பெண்ணாகத் தெரியாதவாறிருக்கச் செய்யும் முயற்சியில், என் தொப்பியை இழுத்துத் தாழ்த்துகிறேன். என் காரின் கதவுகள் பூட்டியிருக்கின்றனவாவெனச் சரிபார்க்கிறேன்.

எந்த கவனமுமில்லாமலேயே, சுற்றிலுமுள்ள இருட்டுக்குள்  என் கண்களை அலையவிடுகிறேன். நான் கல்லூரியில் சேர்ந்த வருடத்தில், புதியவர்களாக இருக்கும்போதே ஒரு நண்பனோடு மேற்கொண்ட சிறுநேரக் கார்ப்பயணம் ஒன்று சட்டென நினைவுக்கு வருகிறது. நாங்கள் காரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தன்னை மறந்து, கொஞ்சிக்கொள்வதில் ஈடுபட்டிருந்தோம். `அவனால் நிறுத்த முடியவில்லை` யெனச் சொன்ன அவன், எனக்குள்ளே நுழைய, அவனை அனுமதிக்குமாறு கெஞ்சினான். நான் மறுத்துவிட்டேன். கைப்பிடிச் சக்கரத்திலேயே கைகள் இருக்க, இசையைக் கேட்டுக்கொண்டே நான் அந்தக் காட்சியை மீண்டும் மனதில் கொண்டுவர முயல்கிறேன். ஆனாலும், அவன் முகத்தை நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அது எல்லாமே அந்த அளவுக்கு நீண்ட காலத்துக்கு முன் நடந்ததுபோல் தோன்றுகிறது.

நான் தூங்குவதை  நிறுத்துவதற்கு முன் எனக்குள்ளிருந்த  நினைவுகள் முழுமையாக என்னைவிட்டுத் திடீரென வேகமெடுத்து அகலுவதாகத் தோன்றுகிறது. வழக்கமாகத் தினமும் தூங்கிக் கொண்டிருந்த பழைய நான், உண்மையான நான் இல்லையென்றும் அந்த நினைவுகளெல்லாம் உண்மையிலேயே என்னுடையவை அல்லவென்றும், நான் மிக்க வினோதமாக உணர்கிறேன். இப்படித்தான் மனிதர்கள் மாறுகிறார்கள். ஆனால், யாருமே அதை உணர்வதில்லை. யாரும் கவனிப்பதில்லை. என்ன நிகழ்கிறதென்று நான் மட்டுமே உணர்ந்து அறிகிறேன். நான் இதைப் பிறருக்குச் சொல்ல முயற்சிக்கலாம். ஆனால், அவர்கள் என்னை நம்பமாட்டார்கள். அப்படியே நம்பினாலும், நான் என்ன உணர்கிறேன் என்பதைப்பற்றி  எந்த ஒரு சிறு கருத்தும்கூட அவர்களுக்குத் தெரியப்போவதில்லை. அவர்களுடைய உய்த்தறியும் உலகப் பார்வைக்கு நான் ஒரு அச்சுறுத்தலாக, இருப்பதாகத்தான் நினைப்பார்கள்.

ஆனாலும் நான் மாறிக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே மாறிக்கொண்டிருக்கிறேன்.
நான் எவ்வளவு நேரமாக இங்கேயே உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்? திருப்பும் கைப்பிடிமேல் கைகள். கண்கள் மூடித் தூக்கமற்ற இருட்டுக்குள் வெறித்துக்கொண்டிருக்கின்றன.
யாரோ ஒருவர் அங்கிருப்பதைத் திடீரென உணர்கிறேன். நான் மீண்டும் எனக்குள்ளேயே திரும்பி, நானாகிறேன். யாரோ வெளியே இருக்கிறார்கள். நான் கண்களைத் திறந்து, வெளியே சுற்றிலும் பார்க்கிறேன். காருக்கு வெளியே யாரோ ஒருவர் நிற்கிறார். கதவைத் திறக்க முயற்சிக்கிறார். ஆனால், கதவுகள் மூடியிருக்கின்றன. காரின் இரண்டு பக்கமும், கதவுக்கு ஒன்றாக இரண்டு கறுப்பு நிழல்கள். இரண்டு கறுப்பு நிழல்கள் மட்டுமே அங்கே நிற்கின்றன.
அவர்களுக்கிடையில் நசுங்கும் பொதியப்பமாக எனது சிவிக் சிறிய ஒரு தின்பண்டப் பெட்டி போல, மிகச்சிறியதாகத் தோன்றுகிறது. அது அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாக அசைக்கப்படுகிறது. வலது சன்னலில் மடக்கிய மணிக்கட்டு ஒன்று குத்திக்குத்தித் தட்டிக்கொண்டிருக்கிறது. அது ஒரு காவல்துறை நபரல்லவென எனக்குப் புரிகிறது. ஒரு காவலர் கார்க்கண்ணாடியை இப்படிப்போட்டு இடிக்கமாட்டார். அதுவும் இதுபோல் ஒருநாளும் காரைக் குலுக்க மாட்டார். நான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன். நான் என்ன செய்யட்டும்? என்னால் அதைப்பற்றிச் சிந்திக்க முடியவில்லை. அக்குள்கள் வியர்வையில் ஊறி நனைந்தன. நான், இங்கிருந்து போய்விடவேண்டும். சாவி. சாவியைத் திருப்பு. சாவியைப் பிடித்து வலதுபக்கமாகத் திருப்புகிறேன். ஸ்டார்ட்டர் முனகுகிறது.

இயந்திரம் பற்றிக்கொள்ள மறுக்கிறது. என் கைகள்  நடுங்குகின்றன. நான் கண்களை மூடி, மீண்டும் சாவியைத் திருப்புகிறேன். ஒன்றும் சரியில்லை. ஒரு பெரிய இராக்கதச் சுவற்றில் கை விரல் நகங்கள் பிராண்டுவது போன்ற சப்தம். மோட்டார் மீண்டும் மீண்டும் உறுமுகிறது. அந்த ஆண்கள் – இருண்ட நிழல்கள் – காரைக் குலுக்கிக் கொண்டேயிருக்கின்றனர். அசைவுகள் அதிகமாகிப் பெரிதாகி இன்னும் பெரிதாகிக்கொண்டிருந்தன. அவர்கள் என்னைக் கவிழ்த்துவிடத்தான் போகிறார்கள்.
ஏதோ ஒன்று தவறாகியிருக்கிறது. அமைதியாகி, சிந்தித்துப்பார், எல்லாம் சரியாகிவிடும். சிந்தித்துப்பார். வெறுமனே  சிந்திக்க மட்டும். மெதுவாக, மெது மெதுவாக. கவனமாக. ஏதோ  ஒன்று, தவறாகியிருக்கிறது.

ஏதோ ஒன்று, தவறாகியிருக்கிறது.

சரி, எது? என்னால் சொல்ல  முடியவில்லை. என் மனம் முழுக்க  இருள் மண்டிக் கனத்துக்கிடக்கிறது. அது எனக்கு எந்த வழியையும் காட்டவில்லை. என் கைகள் நடுங்குகின்றன. நான் சாவியை இழுத்து வெளியே எடுத்து, மீண்டும் செலுத்த முயற்சிக்கிறேன். ஆனால்,நடுங்கும் என் கையால் துவாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் முயற்சித்ததில், சாவியைத் தவற விடுகிறேன். நான் குனிந்து அதை எடுக்க முயல்கிறேன். ஆனால், அதை என்னால் எடுக்க முடியவில்லை. கார் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருக்கிறது. திருப்பும் வட்டக் கைப்பிடியில் என் தலை இடிக்கிறது. .
எனக்குச் சாவி கிடைக்கப் போவதில்லை. நான் இருக்கையில் சரிந்து விழுகிறேன். கண்களை மூடிக்கொள்கிறேன். அழுகிறேன். அழ மட்டுமே என்னால் முடிகிறது. கண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருக்கிறது. இந்தச் சிறிய பெட்டிக்குள் அடைபட்டுப் பூட்டிக்கொண்டுள்ள நான் எங்கும் போக முடியாது. நேரமோ நடு இரவு அந்த ஆண்கள் காரை முன்னும் பின்னுமாக அசைத்து, ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் அதைக் கவிழ்த்துவிடத்தான் போகிறார்கள்.

மலைகள் இணைய இதழ் , மே 3, 2013 இல் வெளியானது.
யானை காணாமலாகிறது, தொகுப்பாசிரியர், சிபிச் செல்வன், 2013

No comments:

Post a Comment