Sunday 10 January 2016

பர்மா குறித்த ஆங்கிலச் சிறுகதை - யானையைச் சுட்டு வீழ்த்தல் - Shooting an Elephant by George Orwell

யானையைச் சுட்டு வீழ்த்தல் Shooting an Elephant 


ஆங்கிலம் : ஜார்ஜ் ஆர்வெல் (இங்கிலாந்து) George Orwell


 தமிழாக்கம் ச. ஆறுமுகம்.

download

விலங்குப் பண்ணை, 1984 ஆகிய நாவல்களைப் படைத்ததன்  மூலம் உலக இலக்கியத்தில்  நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளவரான  ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து  நாட்டவர். பர்மாவில் பிரித்தானியப்  பேரரசின் காவல்துறையில்  துணைக்கோட்ட காவல் அதிகாரியாகப் பணியாற்றி மிகக் குறைந்த காலத்துக்குள்ளாகவே பணியை இராஜினாமா செய்தவர். அவரது கட்டுரைகள் உலகப் புகழ் பெற்றவை. யானையைச் சுட்டு வீழ்த்துதல்,(Shooting an Elephant) தூக்கு (A Hanging) ஆகிய இரு கட்டுரைகள் சிறுகதைகளெனவும் போற்றப்படுபவை.

யானையைச்  சுட்டு வீழ்த்துதலில், அன்றைய பர்மாவில் நிலவிய ஐரோப்பிய எதிர்ப்புணர்வு, வாழ்க்கைநிலை, ஏகாதிபத்தியத்தை வெறுக்கும் ஆர்வெலின் மனநிலை, நீதி, காவல்நிர்வாகம் போன்ற பல தகவல்கள் பதிவாகியுள்ளன.

கீழ் பர்மாவின் மோல்மெயினில், நான் பெருவாரியான மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்தேன் – அப்படியான ஒன்று என் மீது ஏற்படுகிற அளவில் முக்கியமானவனாக என் வாழ்க்கையில் அந்த ஒருமுறை மட்டுமே இருந்தேன். நான் நகரத்தின் துணைக் கோட்டக் காவல் அதிகாரியாக இருந்தேன். அங்கே ஐரோப்பிய எதிர்ப்புணர்வு, குறிப்பிட்ட நோக்கமென்று எதுவுமில்லாமல் அற்பத்தனம் வகைப்பட்டதாக மிகக் கசப்பானதாக இருந்தது. அங்கே ஒரு கலகத்தை ஏற்படுத்திவிடக்கூடிய துணிச்சல் யாருக்கும் இல்லையென்ற போதிலும் ஒரு ஐரோப்பியப் பெண் கடைவீதி வழியே தனியாகச் சென்றாலும் யாராவது ஒருவர் வெற்றிலை மென்ற எச்சிலை அவள் ஆடைமீது உமிழ்ந்துவிடுவதாக இருந்தது. காவல் அதிகாரியாக நான் அவர்களின் கண்ணுக்குத் தெரியும் எளிய இலக்காக இருந்தேன். அவர்கள் மாட்டிக்கொள்ள இயலாதவாறு பாதுகாப்பான சமயம் வாய்க்கும்போதெல்லாம் நான் அவர்களுக்கு ஒரு இரையாக, வேட்டைப் பொருளாக  நேர்ந்தது. கால்பந்து மைதானத்தில் வேகமான ஒரு பர்மியன் என் காலைத்தட்டி இடறச்செய்கையில், நடுவர் (மற்றொரு பர்மியன்) வேறுபக்கம் பார்த்திருப்பார். கூட்டமோ அவமதிக்கும் எள்ளல் சிரிப்பில் ஆரவாரிக்கும். இது எப்போதோ ஒருமுறையல்ல, பலமுறை நிகழ்ந்திருக்கிறது. முடிவில் என்னை ஏளனப்படுத்திச் சிரிக்கும் இளைஞர்களின் மஞ்சள் முகங்களையே எல்லா இடங்களிலும் கண்டேன். நான் தூரத்தில் தள்ளி நிற்கும்போது அவர்கள் என் மீது உமிழ்ந்த அவமானங்கள் என் நரம்புகளைக் கொதிக்கச் செய்தது. அதிலும் இளம் புத்த பிக்குகள்தாம் மிகமிக மோசமானவர்கள். நகரத்தில் அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். அவர்களுக்கு தெருமுனைகளில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களைப் பார்த்து இகழ்ந்து பேசுவதைத் தவிர வேறு வேலை எதுவுமே இல்லாதது போலத்தான் தோன்றியது.

இது எல்லாமும் என்னைக் குழப்பி, நிலைகுலையச் செய்வதாகவும் இருந்தது. இத்தனைக்கும் நான் அந்தச் சமயத்தில் ஏகாதிபத்தியம் என்பது கெடுதல் விளைக்கும் விஷயமென்றும் சீக்கிரமே என் வேலையைத் துறந்துவிட்டுச் செல்வதே நல்லதென்ற மனநிலைக்கும் வந்திருந்தேன். கருத்தியலாக, ரகசியமாகத்தான், நான் பர்மியர்களுக்கு ஆதரவாக, அவர்களின் அடக்குமுறையினரான பிரித்தானியர்களுக்கு எதிராகத்தான் இருந்தேன். நான் பார்த்த வேலையை, என்னதான் தெளிவாக விவரித்துச் சொல்வதென்றாலும், அதைவிடக் கடுமையான கசப்பாகத்தான் உணர்ந்தேன். அதுபோன்ற வேலையில் பேரரசின் மிகமிகக் கேவலமான காரியங்களையும் நீங்கள் அருகிருந்து காணுவதாக இருக்கும். லாக்-அப்களின் நாற்றமெடுக்கும் கூண்டுகளுக்குள் அடைந்துகிடக்கும் விதியற்ற சிறைவாசிகளும் நீண்டநாள் கைதிகளின் அடிமைப்பட்டுத் தொங்கிப்போன சாம்பல் முகங்களும் மூங்கில் பிரம்புகளால் அடிபட்டுத் தளும்பேறிப்போன புட்டங்களுமாக என்னைத் தாங்கமுடியாத குற்றவுணர்வில் அழுத்தின. ஆனால் தீர்மானமான உள்ளக்கருத்தாக என்னால், எதையும் புரிந்துகொள்ள இயலவில்லை. நான் இளையவனாகத் தவறான கல்வியைப் பெற்றவனாக இருந்தேன். என்னுடைய பிரச்னைகளை – கீழைநாட்டு ஐரோப்பியர்கள் ஒவ்வொருவர்   மீதும் திணிக்கப்பட்டிருந்த  பிரச்னைகள்தாம் – நான் மவுனமாக மட்டுமே நினைத்துப் பார்க்கவேண்டியதாக இருந்தது. பிரித்தானியப் பேரரசு மரணமடையும் தருவாயிலிருந்ததென்பதைக்கூட நான் தெரிந்து கொண்டிருக்கவில்லை.  இதைவிட மோசமானதாக, அதனைக் குப்புறத் தள்ளவிருக்கும் இளம் பேரரசுகள் விவகாரம் இன்னும் பெரிதென்பது குறித்து எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்திருந்ததெல்லாம், நான் பணிபுரிந்துகொண்டிருந்த பேரரசின் மீதான வெறுப்புக்கும் என்னுடைய பணியைச் செய்ய இயலாமலாக்கிய அந்தக் கெடுதல் புத்திச் சிறுமிருகங்கள் மீதான கோபத்திற்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டேன்  என்பதுதான். என் மனத்தின் ஒரு பக்கத்தில் இந்தப் பிரித்தானிய ஆட்சி, வீழ்ந்துகிடக்கும் மக்களின் விருப்பத்தின் மீது கால காலத்துக்குமாகப் பிணைக்கப்பட்ட ஏதோ ஒன்றைப்போல உடைத்தெறியமுடியாத ஒரு கொடுங்கோன்மையாக இருப்பதாக நினைத்தேன். மற்றொரு பக்கத்தில் இந்த உலகத்திலேயே மிகமிக மகிழ்ச்சியான விஷயமென்றால் அது ஒரு புத்த பிக்குவின் குடல் வாய்க்குள் துப்பாக்கியின் ஈட்டி முனையைச் செருகுவதுதான் என்றும் நினைத்தேன். இது போன்ற உணர்வுகள் ஏகாதிபத்தியத்தின் மிகச்சாதாரணமான உடன்விளைவுகள்தாம்; பணிநேரத்தில் இல்லாத யாராவதொரு ஆங்கிலோ இந்திய அதிகாரி கிடைத்தால் கேட்டுப் பாருங்களேன்.

ஒருநாள் நிகழ்ந்த விஷயம் சுற்றிவளைத்தென்றாலும்  ஒரு புத்துணர்வளிப்பதாக இருந்தது. அது ஒரு சிறிய சம்பவமேதான் என்றாலும், அதுவே எனக்கு ஏகாதிபத்தியத்தின் உண்மையான முகத்தை, அடக்குமுறை ஆட்சிச் செயல்பாடுகளின் உண்மையான நோக்கங்களைப் புரிந்துகொள்ள ஒளிபாய்ச்சியதாக இருந்தது. நகரின் மறுமுனையிலிருந்த  காவல் நிலையமொன்றின் காவல் உதவி ஆய்வாளர் ஒருநாள் அதிகாலையில், யானை ஒன்று கடைவீதியில் புகுந்து மிகுந்த அழிவேற்படுத்திக் கொண்டிருப்பதாக, தொலைபேசியில் கூறினார். நான் அங்கே சென்று ஏதாவது செய்யமுடியுமாவென்றும் கேட்டார். என்னால் என்ன செய்யமுடியுமென்று எனக்குத் தெரியாதுதான். இருந்தாலும் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள விரும்பி, மட்டக்குதிரை ஒன்றின் மீதேறிப் புறப்பட்டேன். என்னுடைய பழைய 44. வின்செஸ்டர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன். அது ஒரு யானையைக் கொல்வதற்கு, மிகமிகச் சிறியதென்றாலும் பயமுறுத்தும் சப்தம் எழுப்புவதற்கு உபயோகமாக இருக்குமே என நினைத்துத்தான் அதை எடுத்துச் சென்றேன். வழியிலேயே பர்மியர் பலரும் என்னை நிறுத்தி, யானையின் அட்டூழியங்களை எனக்குச் சொன்னார்கள். அது ஒன்றும் காட்டு யானை அல்ல; பழக்கப்படுத்திய வளர்ப்பு யானைதான், ஆனால் மதம்பிடித்திருந்தது. மதம்பிடித்த வளர்ப்பு யானைகள் வழக்கமாகக் கட்டிவைக்கப்படுவது போல் இந்த யானையும் சங்கிலியால் பிணைத்துக் கட்டப்பட்டுத்தானிருந்தது. ஆனால் முந்தைய நாளிரவில் அது சங்கிலியை அறுத்துத் தப்பிவிட்டது. மதம்பிடித்த அந்த நிலையிலும் யானையைக் கட்டுப்படுத்தக் கூடிய பாகன் ஒருவன் இருந்தான். அவன் அதைத் தேடிப் புறப்பட்டுமிருந்தான். ஆனால் தவறான திசையில் போய் பன்னிரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்கப்பாலிருந்தான். காலையில் யானை திடீரென்று நகருக்குள் நுழைந்துவிட்டது. பர்மியர்களிடம் ஆயுதங்கள் எதுவும் கிடையாது. இதுபோன்ற நேரங்களில் அவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்களாக இருந்தார்கள். யானை ஏற்கெனவே ஒருவருடைய மூங்கில் குடிசையை அழித்து, ஒரு பசுவைக் கொன்று, சில பழக்கடைகளில் புகுந்து இருப்பிலிருந்த பழங்களையெல்லாம் தின்று தீர்த்துவிட்டது. நகராட்சி குப்பையள்ளும் வேன் ஓட்டுநர், யானையை எதிரில் கண்டதும், குதித்து ஓட்டம் பிடிக்க, வேனைக் குப்புறக் கவிழ்த்த யானை  வன்முறை அனைத்தையும் அதன்மீது நிகழ்த்தியது.

யானை இருந்த பகுதியில், பர்மிய காவல் உதவி ஆய்வாளரும் சில இந்திய காவலர்களும் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அது பனை ஓலை வேய்ந்த, அழுக்கடைந்த மூங்கில் குடிசைகள் ஒரு புதிர்வழிப் புழை போல, ஒரு செங்குத்தான மலைப்பகுதியைச் சுற்றிலுமாகக் கிடந்த ஒரு மிக ஏழ்மையான பகுதி. எனக்கு நன்கு நினைவிருக்கிறது, அது ஒரு மழைக்காலத் தொடக்கத்தின் மேகமூட்டத்துடனான சிடுசிடுக்கவைக்கும் காலை நேரமாக இருந்தது. நாங்கள் எதிர்ப்பட்டவர்களிடம் யானை சென்ற வழியை விசாரிக்கத் தொடங்கினோம்; ஆனால், வழக்கம் போலவே எந்தத் தீர்மானமான தகவலும் கிடைக்கப்பெறாமல் தோற்றுப்போனோம். அதுதான்   கிழக்குநாடுகள் ஒன்றுவிடாமல் எல்லாவற்றிலுமான நிலை; தூரத்தில் கேட்கும்போது தெளிவானதாகக் தெரியும் சம்பவக் காட்சி, அருகில் போகப் போக  மங்கலாகத் தெளிவற்றுத் தெரியத் தொடங்கும். யானை ஒரு குறிப்பிட்ட திசையில் சென்றதாகச் சிலர் சொல்ல, வேறுசிலர் அதை மாற்றிச் சொல்ல, இன்னும் சிலரோ அதுபோல யானை பற்றிய எந்தச் செய்தியும் கேள்விப்படவேயில்லை என்றனர். மொத்தக் கதையுமே புளுகுகளின் மூட்டையென நான் நினைக்கத் தொடங்கிய நேரத்தில், சிறிது தூரத்திலேயே கூச்சல்களைக் கேட்டோம். ஒரு குரல் மட்டும் உரத்து  ‘’ போய்விடுங்கள், பிள்ளைகளா, இங்கிருந்து ஓடிவிடுங்கள்!’’ என  அசிங்கமாகத் திட்டுவது கேட்டது. கையில் ஒரு சுள்ளிக் கம்புடன் ஒரு குடிசையைச் சுற்றிச் சுற்றி ஒரு கிழவி, அம்மணச் சிறுவர்களின் கூட்டத்தைக் கடுமையாக விரட்டிக்கொண்டிருந்தாள். வேறுசில பெண்களும் அப்படியே அய்யோ பாவமெனச் `சூள்` கொட்டி, முகம் சுழித்து நின்றனர். அங்கே குழந்தைகள் பார்க்கக்கூடாத ஏதோ ஒன்று இருப்பது நிச்சயமாகத் தெரிந்தது. நான் அந்தக் குடிசையைச் சுற்றி வளைத்தேன். அங்கே ஒரு மனிதனின் பிரேதம் சேற்றில் கிடந்தது. அவன் ஒரு இந்தியன், கறுப்புநிற திராவிடக்கூலி. அநேகமாக நிர்வாணமாக இருந்தான். அவன் இறந்து சில நிமிடங்களே  ஆகியிருக்கும். யானை திடீரென்று வந்து குடிசையின் மூலையில் அவனைச் சுற்றி வளைத்துத் தும்பிக்கையால் பிடித்து, அவன் முதுகில் மிதித்துத் தரையோடு தரையாக்கியிருக்கிறது. அது மழைக்காலமாக இருந்ததால்   சேறாகியிருந்த தரையில் அவன் முகம் பதிந்து ஒரு அடி ஆழத்திற்கு, சில கஜ நீளத்திற்கு ஒரு பள்ளமாகும்படி இழுபட்டிருக்கிறது. அவன் கைகள் பரக்க விரிந்து கிடக்கக் குப்புற விழுந்து தலை முழுவதுமாக ஒருபக்கத்திற்குத் திரும்பியிருந்தது. அவன் முகம் முழுக்கச் சேறாகிக் கண்கள் விரிந்து திறந்திருக்க, பற்கள் வெளிக்காட்டி தாங்கமுடியாத வலியின் வேதனையில் கடித்து இறுகியிருந்தன. ( அப்புறம், இறந்தவர்கள் அமைதியான தோற்றத்திலிருந்ததாக யாரும் என்னிடம் சொல்லாதீர்கள். நான் பார்த்த அநேக பிணங்களும் கொடூரத் தோற்றத்தில்தான் இருந்தன.)  ஒரு முயலைத் தோலுரிப்பது போல அந்தப் பெரிய மிருகத்தின் பாதங்கள் அவன் தோலை உரித்திருந்தன. அந்த இறந்த மனிதனைக் கண்டதும் நான் ஏவலாள் ஒருவனை நண்பர் ஒருவர் வீட்டுக்கு யானைத் துப்பாக்கியைப் பெற்று வருமாறு அனுப்பினேன். யானையின் வாசத்தை உணர்ந்ததும் என்னுடைய மட்டக்குதிரை பயந்து கிறுக்குப் பிடித்து என்னைக் கீழே தள்ளுவதிலிருந்தும் தப்பிக்க, அந்தக் குதிரையை ஏற்கெனவேயே திருப்பியனுப்பியிருந்தேன்.

ஒரு சில நிமிடங்களிலேயே அந்த ஏவலாள் துப்பாக்கியோடும் ஐந்து தோட்டாக்களுடனும் திரும்பிவந்தான்.இதற்கிடையில் சில பர்மியர்கள் வந்து, மலையடிவாரத்திலிருந்த நெல் வயல்களில் சில நூறு கஜங்கள் தூரத்தில் யானை நிற்பதாகக் கூறினர். நான் அதை நோக்கி நகரத் தொடங்கியதும், அந்தப் பகுதியிலிருந்த மொத்தப்பேரும், சொல்லப்போனால், ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோருமே வீடுகளிலிருந்து வெளிப்பட்டுக் கூட்டமாக என்னைப் பின்தொடர்ந்தார்கள். துப்பாக்கியைக் கண்ட அவர்கள், நான் யானையைச் சுடப்போவதாக நினைத்து மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர். அந்த யானை அவர்களின் வீடுகளைத் தாக்க வருவதிலொன்றும் அவர்களுக்கு அக்கறையில்லை; ஆனால் இப்போது நிலைமையே வேறு. நான் அதனைச் சுடப்போகிறேன். ஆங்கிலேயக் கூட்டத்திற்கு அது எப்படியான ஒரு வேடிக்கையோ அப்படியேதான் அவர்களுக்கும்; அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு யானையின் இறைச்சி வேண்டும். அது ஏதோ ஒருவகையில் என்னைப் பாதித்து, எரிச்சலூட்டியது. எனக்கு யானையைச் சுடவேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. தேவைப்பட்டால் ஒரு பாதுகாப்புக்காக இருக்கட்டுமேயென்றுதான் துப்பாக்கியைக் கொண்டுவரச் சொன்னேன். அதிலும் யாரையும் ஒரு கூட்டம் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தால், அது எப்போதுமே பதற்றம்கொள்ள வைப்பதுதான்.  தோளில் துப்பாக்கியும், பின்னால் முண்டியடித்து நெருக்குகின்ற ஒரு பெருங் கூட்டத்துடனும் ஒரு முட்டாள் தோற்றத்துடன் அப்படியேயான ஒரு உணர்வுடன், குன்றிலிருந்தும் கால்நடையாகக் கீழிறங்கினேன். அடிவாரத்தில் குடிசைகளிலிருந்தும் சிறிது தூரம் தாண்டி ஒரு கப்பிச்சாலையும் அதற்கப்பால் ஆயிரம் கஜங்கள் அகலத்தில் குறுக்காகப் பரந்த சேற்றுத் தரிசு நிலங்களும் கிடந்தன. அந்த நெல் பயிரிடும் வயல்கள் இன்னும் உழப்பட்டிருக்கவில்லை. ஆனால் முதல் மழையினால் சேறாகிக் கரடு முரடான புற்கரணைகளுடனிருந்தன. சாலையிலிருந்தும் எட்டு கஜ தூரத்தில் யானை, அதன் இடது பக்கம் தெரிய நின்றுகொண்டிருந்தது. நெருங்கிவருகிற கூட்டத்தை அது சிறிதும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. புல்லைக் கொத்தாகப் பிடுங்கி, அதன் கால்களில் அடித்து, உதறி, வாய்க்குள் திணித்துக்கொண்டிருந்தது.

நான் சாலையிலேயே நின்றுகொண்டேன். யானையைப் பார்த்ததுமே, அதைச் சுடவேண்டியதில்லையென்பது எனக்கு நிச்சயமாகிவிட்டது. பணிசெய்யும் வளர்ப்பு யானை ஒன்றைச் சுடுவதென்பது பெரும் பிரச்சினையாகக்கூடிய ஒரு விஷயம். ஒப்பீட்டளவில் அது, விலைமதிப்புடைய மாபெரும் இயந்திரம் ஒன்றை அழிப்பதற்குச் சமமானது. அதிலும் சுடுவதைத் தவிர்ப்பதற்கான சிறிய அளவு சாத்தியமிருக்குமானால்கூட  அதைச்   சுடக்கூடாது. தூரத்தில் அமைதியாகப் புல்தின்றுகொண்டிருந்த அந்த யானை ஒரு பசுமாட்டை விட அபாயகரமானதாகத் தோன்றவில்லை. நான் அப்படித்தான் அப்போது நினைத்தேன். அதைப் பீடித்திருந்த மதம் குறைந்துகொண்டிருந்திருக்க வேண்டும்; அதனால், அதன் பாகன் வந்து அழைத்துக்கொண்டு போகும் வரையில், அது அப்பகுதியில் எத்துன்பமும் விளைக்காமல் அலைந்து கொண்டிருந்திருக்குமென்று இப்போதும் நினைக்கிறேன். அதுவுமல்லாமல், அதைச் சுடவேண்டுமென்ற எந்தக் கட்டாயத்திலும் நான் இல்லை. அது மீண்டும்  மதங்கொண்டு, ஆபத்தாக மாறுமாவென, மேலும் சிறிது நேரம் கவனிப்பதென்றும் பிறகு வீட்டுக்குச் செல்வதென்றும் தீர்மானித்தேன்.

ஆனால், அந்தக் கணத்தில் என்  பின்னால் வந்த கூட்டத்தைச்  சுற்றிலுமாக ஒரு கண்ணோட்டமிட்டேன். அது ஒரு பெருங்கூட்டம், குறைந்தபட்சம் இரண்டாயிரம் பேராவது இருப்பார்கள். ஒவ்வொரு நிமிடமும் மேலும் மேலுமாகக் கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. அந்தக் கூட்டம் சாலையின் இருபக்கமும் நெடுந்தூரத்துக்குப் பாதையை அடைத்துக்கொண்டு நின்றது. கண்ணைப்பறிக்கும் வண்ண ஆடைகளுக்கு மேலாகத் தெரிந்த மஞ்சள் முகங்களின் கடலைப் பார்த்தேன். யானை சுடப்படப் போகின்றதென்ற நிச்சயத்தில், அதைக் காணும் மகிழ்ச்சியும் பரபரப்புமாகத் தெரிந்த முகங்கள். வித்தை காட்டப்போகும் ஒரு வித்தைக்காரனைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒன்றும் என்னை விரும்பிப் பார்க்கவில்லை; ஆனால், மந்திரத் துப்பாக்கியும் கையுமாக அந்தக் கணத்திற்கு நான் அவர்களின் கவனிப்புக்குத் தகுதியானவனாகியிருந்தேன். நான் யானையைச் சுட்டேயாகவேண்டுமென்பதைத் திடீரென்று உணர்ந்தேன். நான் அதைச் செய்யவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்; நான் அதைச் செய்தேயாக வேண்டும். அந்த இரண்டாயிரம் பேரின் விருப்பமும் தடைகளையெல்லாம் மீறி என்னை உந்தித் தள்ளுவதை உணரமுடிந்தது. தோளில் துப்பாக்கியுடன் நின்ற அந்தக் கணத்தில் கிழக்குநாடுகளில் வெள்ளையர்களின் ஆட்சியதிகாரம் வெறுமையாகி, உள்ளீடற்றுப்போவதை, நான் முதன்முதலாக உணர்ந்தேன். இங்கே நான், வெள்ளை மனிதன், துப்பாக்கியும் கையுமாக ஆயுதங்கள் எதுவுமற்ற சுதேசிக் கூட்டத்தின் முன் அமைதியைக் காக்கும் முன்னணிப் பொறுப்பாளனாக நிற்கிறேன்; ஆனால், உண்மையில் பின்னாலிருந்து இயக்கும் அந்த மஞ்சள் முகங்களால் முன்னும் பின்னுமாக இழுக்கப்படும் முட்டாள்தனமான கைப்பாவையாகத் தான் இருக்கிறேன். ஒரு வெள்ளையன் கொடுங்கோலனாக மாறுவதென்பது அவனுடைய சுதந்திரத்தை அவனே அழித்துக்கொள்வது என்பதை, நான் அந்தக்கணத்தில் உள்ளுணர்ந்தேன். அவன் சாதாரணமான மரபுவழிப்பட்ட ஒரு சாகிபின் (எஜமான்) உருவமாக, வெற்றுத் தோற்றம் காட்டும் ஒருவகை உள்ளீடற்றவனாக ஆகிவிடுகிறான். சட்டம் அல்லது விதிமுறை என்ன சொல்கிறதென்றால், சுதேசிகளின் மனத்தைக்கவர முயற்சிப்பதில், அவன் தன் வாழ்நாளைச் செலவழிக்கவேண்டுமென்கிறது. அதனால் நெருக்கடியான ஒவ்வொரு நிலையிலும் சுதேசிகள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதன்படியே அவன் செயலாற்ற வேண்டும். அவன் ஒரு முகமூடி அணிந்தவனாகிறான். அந்த முகமூடிக்குப் பொருந்துமாறு அவனது முகம் வளர்கிறது. நான் அந்த யானையைச் சுட்டேயாக வேண்டியிருக்கிறது. துப்பாக்கியை எடுத்துவருமாறு ஆளனுப்பிய போதே நான் அதைச் செய்வதாக உறுதியளித்ததாகிவிட்டது. சாகிப், ஒரு சாகிபாகத்தான் செயலாற்ற வேண்டும். அவர் முழுவதுமாகத் தன்னை அறிந்தவராக, தீர்மானமாக, உறுதியுடன் செயலாற்றுபவராகத் தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு தூரத்துக்குத் துப்பாக்கி எடுத்து இரண்டாயிரம் பேர் பின்தொடர வந்துவிட்டு, எதுவுமே செய்யாமல் வந்த நோக்கத்தைவிட்டு விலகுவதென்பது – இல்லை, அது முடியாதது. அத்தனைபேர் கொண்ட கூட்டமும் என்னைப் பார்த்துச் சிரிப்பாகச் சிரிக்கும். அதோடு, என் வாழ்க்கை, ஏன் ஒவ்வொரு வெள்ளை அதிகாரியின் கீழைத்தேச வாழ்க்கையும் அத்தனை நீண்ட, கடினமான முயற்சியும் சிரிப்புக்காளாகக் கூடாது.

ஆனால், நான் யானையைச் சுட  விரும்பவில்லை. முழு ஈடுபாடு மிக்க ஒரு முதிய பாட்டியாகவே தோற்றமளிக்கும் யானைகளுக்கேயான அந்த அமைதியான கண்ணியம் மிக்க மதிக்கத்தக்க இயல்பில், அது, புற்களைத் தன் காலில் அடித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். அதைச் சுடுவதென்பது ஒரு கொலையாகவே எனக்குத் தோன்றியது. என்னுடைய அந்த வயதில் மிருகங்களைக் கொல்வதில் தயக்கமோ, அருவருப்போ இருந்ததில்லை. ஆனாலும், நான் ஒருபோதும் யானையைச் சுட்டுக் கொன்றதில்லை; சுடவிரும்பியதும் இல்லை. (எப்படியானாலும் ஒரு பெரிய மிருகத்தைக் கொல்வதென்பது மிகவும் மோசமானதுதான்.) அது மட்டுமல்லாமல் அதன் உரிமையாளர் பற்றியும் யோசிக்கவேண்டியிருக்கிறது. உயிருடனிருக்கும்போது, யானை குறைந்தது, ஒரு நூறு பவுண்டுகளாவது விலைபெறும்; இறந்துவிட்டாலோ, அதன் தந்தங்களின் மதிப்பாக, ஒரு ஐந்து பவுண்டு பெறுமாகலாம். ஆனால், நான் விரைந்து செயல்படவேண்டியதாக இருக்கிறது. நாங்கள் அங்கு வருமுன்பாகவே அங்கே நின்றுகொண்டிருந்த அனுபவம் மிக்கவர்களாகத் தெரிந்த சில பர்மியர்கள் பக்கமாகத் திரும்பி, யானை எப்படி இருக்கிறதெனக் கேட்டேன். அவர்கள் எல்லோரும் ஒரே பதிலைத்தான் சொன்னார்கள்: நீங்கள் அதைத்  தனிமையில் விட்டுவிட்டால், அது உங்களைக் கவனிப்பதில்லை. ஆனால், அருகில் சென்றாலோ, உங்களைத் தாக்க வரும்.

நான் என்ன செய்யவேண்டுமென்று  எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. கொஞ்சம் அருகில், அதாவது யானைக்கு ஒரு இருபத்தைந்து கஜங்கள் தூரம் வரை சென்று அதன் நடத்தையைச் சோதிக்கவேண்டும். அது தாக்கவந்தால் நான் சுடலாம்; அது என்னைக் கவனத்தில்கொள்ளவில்லையென்றால், பாகன் வந்து அழைத்துச்  செல்லும் வரை அதை விட்டுவிடுவதுதான்  நல்லது. ஆனால், அதுபோல எதையும்  நான் செய்யப்போவதில்லையென்றும் எனக்குத் தெரிந்தது. துப்பாக்கியால் குறிபார்த்துச் சுடுவதில் நான் தேர்ந்தவன் அல்ல. நிலம் வேறு இளகிய சேறாக, ஒவ்வொரு அடியும் ஆழப் புதைவதாக இருந்தது. என் குறி தவறி, யானை தாக்கினால் ரோடு உருளையின் கீழ் மாட்டிய தவளைக்கு நேரும் கதிதான் எனக்கும் ஆகும். அப்போதுங்கூட நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வது பற்றி நினைக்கவில்லை. என் எண்ணம் முழுதும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் மஞ்சள் முகங்கள் தாம் நிறைந்திருந்தன. அந்தக் கணத்தில், என்னைக் கவனிக்கும் கூட்டத்தின் முன்பாக, சாதாரணமாகச் சொன்னால், நான் தனியாக இருந்தால் பயப்படுமளவுக்கு பயப்படவில்லைதான்; ஒரு வெள்ளை மனிதன் சுதேசிகளின் முன்னால் பயப்படக்கூடாது; அதனால் பொதுவாக அவன் பயப்படக்கூடாது. என் மனதில் ஓடியதெல்லாம், ஏதாவது தவறிவிட்டால், அந்த இரண்டாயிரம் பர்மியர்களும் நான் விரட்டப்படுவதை, பிடிபடுவதை, நசுக்கப்பட்டு, அந்த மலையில் கிடக்கும் இந்தியனைப் போல ஒரு கோரமான பிணமாக்கப்படுவதைக் காண்பார்கள். அப்படி நடந்தால், அவர்களில் சிலர் சிரிக்கவும் கூடும். அப்படி ஒருபோதும் ஆகக்கூடாது.

அப்படியாகாமலிருக்க, எனக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. துப்பாக்கியில் தோட்டாக்களைக் கிட்டித்துவிட்டு, சரியான இலக்குக்காகச் சாலையில் குப்புறப் படுத்துக் குறிபார்த்தேன். கூட்டம் சிறிதும் அசையாமல், ஆழமான ஒரு சிறு மகிழ்ச்சிப் பெருமூச்சினை, திரையரங்கத்தில், ஒருவழியாகத் திரை உயர்வதைக் காண்பவர்களின் எண்ணற்ற சுவாசக்குழல்கள் வெளியிடுமே அதுபோல வெளியிட்டது. அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த காட்சியை இப்போது காணப்போகிறார்களே! அந்தத் துப்பாக்கி, மயிரிழைப் பார்வைகள் கொண்ட ஒரு அழகிய ஜெர்மன் தயாரிப்பு.  யானையைச் சுடும்போது அதன் இரண்டு காதுத் துவாரங்களுக்கிடையே ஓடும் கற்பனை  ரேகையினைத் துண்டிக்குமாறு சுடவேண்டுமென்று எனக்குத் தெரியாது. யானை பக்கவாட்டில் நின்றதால், நேராக அதன் காதுத் துவாரத்தைக் குறிவைக்க வேண்டியதாக இருந்தது. உண்மையில் நான் அதற்கும் பல அங்குலங்கள் முன்னதாக மூளை தாக்கப்படவேண்டுமென நினைத்துக் குறிபார்த்தேன்.

நான் துப்பாக்கியின் விசையினை இழுத்தபோது, அது வெடிக்கும் ஓசையைக் கேட்கவோ, அல்லது துப்பாக்கி பின்நோக்கி உதைப்பதை உணரவோ இல்லை – குண்டு அதன் இலக்கை அடைந்துவிட்டால் சுடுபவர் ஒருபோதும் அதனைப் பெறுவதில்லை – ஆனால், ஆரவாரப் பேரொலி கூட்டத்தினின்று வானளவுக்கு உயர்ந்து எழுந்ததைக் கேட்டேன். மிகக்குறுகிய நேரத்தில், குண்டு யானையைத் துளைத்திருக்குமோ இல்லையோ எனச் சந்தேகிக்கிற அந்த நிகழ்வில், ஒரு மிகப்பெரிய புதிராக யானையிடம் பயங்கரமான மாறுதல்கள் தோன்றின. அது சிறிதும் ஆடவோ, அசையவோ, கீழே விழவோ இல்லை; ஆனால் அதன் உடல் ரேகைகள் முழுதும் மாற்றமடைந்தன. அதன் மீது பாய்ந்த துப்பாக்கிக் குண்டின் பயங்கரத் தாக்கம் அதைக் கீழே விழத் தள்ளவில்லை. ஆனால்  அதன் உடல் இயக்கத்தை முற்றிலும் முடக்க, அது திடீரென்று மிகவும் வயதாகி, குன்றி, நோய்ப்பட்டதாகத் தோன்றியது. கடைசியில், நெடுநேரமென எங்களுக்குத் தோன்றியதன்பின்னர் – மிஞ்சிப்போனால் ஐந்து விநாடிகள் இருக்கலாம் – யானையின் மூட்டுகள் மடங்க அசிங்கமாகத் தொய்ந்து முழங்காலில் நின்றது. அதன் வாயிலிருந்தும் கோழை கொட்டியது. முதுமையின் மிக மோசமான இயலாமை முழுவதுமாக அதைப் பற்றிக்கொண்டது போலிருந்தது. அந்த நிலையில் அதனைக் காண்பவர்கள், அதற்கு ஒரு ஆயிரம் வயதிருக்கலாமென்றுதான் கூறுவார்கள். அதே இடத்தில் நான் மீண்டும் சுட்டேன். இரண்டாவது குண்டிலும் அது கீழே விழுந்துவிடவில்லை; மாறாக மிகமிக மெதுவாக நிமிர்ந்து, தொய்வான நான்கு கால்களிலுமாக,  மிகுந்த மெலிவும் தொங்கிய தலையுமாக எழுந்து நின்றது. நான் மூன்றாவது குண்டினைப் பாய்ச்சினேன். அதுதான் யானையைக் கீழே தள்ளியதாக இருந்தது. அதன் முழு உடலையும் குலுக்கிய வேதனையும், அதன் கால்களின் கடைசித்துளி வலிமையையும் பறித்த உதறலும், அப்பப்பா! நீங்களும் உணர முடியும். ஆனால், விழுகையில், அது ஒரு கணம் எழுவதைப்போலத் தோன்றியது. அதன் பின்கால்கள் வளைந்து சரியவே, அது ஒரு பெரும்பாறை அசைந்து மேலுயர்வது போல அதன் தும்பிக்கை வானத்தை நோக்கி உயரும் ஒரு மரத்தைப் போலத் தோன்றியது. அது பிளிறியது. அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது. பின்னர், அதன் அடிவயிறு என்பக்கமாகத் தெரியும்படி, வேகமாக வீழ்ந்தபோது, நான் குறிபார்த்துப் படுத்துக்கிடந்த இடத்திலும் பூமி அதிர்ந்தது.

நான் எழுந்து நின்றேன். அதற்கும் முன்பாகவே பர்மியர்கள்  என்னைக் கடந்து, சேற்றின் குறுக்கே, ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். யானை மீண்டும் எழுந்திருக்கப் போவதில்லையென்பது நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. ஆனால், அது இறந்திருக்கவில்லை. நீண்ட, படபடப்பான மூச்சுத் திணறல்களோடு, அதன் குன்று போன்ற வயிற்றுப்பகுதி வலியும் வேதனையுமாக வீங்கி உயர்வதும் வீழ்வதுமாக ஒரே சீராக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. அதன் வாய் விரியத் திறந்து, அதன் வெளிறிய இளஞ்சிவப்புத் தொண்டையின் குகைச் சுவர்களை அதன் அடியாழம் வரை என்னால் பார்க்க முடிந்தது. அது மரணமடையட்டுமென நான் நீண்ட நேரம் காத்திருந்தேன். ஆனால், அதன் சுவாசம் குறைவதாகத் தெரியவில்லை. கடைசியாக, மீதியிருந்த இரண்டு குண்டுகளையும் அதன் இதயம் இருக்குமிடமென நான் யூகித்த இடத்தில் பாய்ச்சினேன். கட்டியான இரத்தம் சிவப்பு வெல்வெட் போலக் குளமாகப் பாய்ந்தது. ஆனாலும் அது இறக்கவில்லை. குண்டுகள் அதன் மீது பாய்ந்த போதும், அது, உடலைச் சிறிதளவும் அசைக்கவில்லை. அதன் சிரமப்பட்ட சுவாசம் இடைவெளியின்றித் தொடர்ந்தது. அது மிகுந்த வேதனையில் மிகமிகத் தாமதமாக, ஆனால், என்னிடமிருந்தும் வெகுதூரத்தில், என்னுடைய குண்டுகளில் ஒன்றுகூட அதை மேலும் பாதிக்காத, வேறு ஏதோ ஒரு உலகத்தில் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருந்தது. அந்தப் பயங்கரமான மூச்சுக்காற்றின் ஒலிக்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென உணர்ந்தேன். அந்த மாபெரும் விலங்கு அசைவதற்குக் கூடச் சக்தியற்று, விழுந்துகிடப்பதை, இறப்பதற்குக் கூட முடியாமலிருப்பதைக் காணவும், அதன் வாழ்வை முடிப்பதற்குக் கூட என்னால் இயலாமலிருப்பதும் மிகவும் துக்ககரமாக இருந்தது. என்னுடைய சிறிய துப்பாக்கியைக் கொண்டுவரச் செய்து அதன் இதயத்திலும் தொண்டையின் கீழாகவும் குண்டுகளுக்கு மேல் குண்டுகளாகப் பொழிந்தேன். அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. அதன் சிரமப்பட்ட சுவாசம், ஒரு கடிகாரம் `டிக், டிக்` ஒலிப்பது போல நிலையாகத் தொடர்ந்தது.

கடைசியில், மேலும் அங்கே  நிற்க இயலாமல் அங்கிருந்தும்  நகர்ந்தேன். அது இறப்பதற்கு மேலும் அரைமணி நேரம் ஆகியதெனப் பின்னர் கேள்விப்பட்டேன். நான் அங்கிருந்து அகலும் முன்பே பர்மியர்கள் அண்டாக்களையும் வாளிகளையும் கொண்டுவந்துகொண்டிருந்தனர். அன்று பிற்பகலுக்குள்ளாகவே அவர்கள் அதை உரித்தெடுத்து வெறும் எலும்புக் குவியலாக்கிவிட்டதாக எனக்குச் சொன்னார்கள்.

அதன் பின்னரென்னவோ, யானையைச் சுட்டுக்கொன்றது குறித்து அங்கே முடிவற்ற விவாதங்கள் தொடர்ந்தன தாம். உரிமையாளர் வெகுவாகக் கோபம் கொண்டாரென்றாலும் ஒரு இந்தியரான அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதுவுமல்லாமல், நான் சட்டப்படி சரியான ஒரு காரியத்தையே செய்திருந்தேன். மதம்பிடித்த யானையின் உரிமையாளர் அதைக் கட்டுப்படுத்தத் தவறினால், அந்த யானை, ஒரு பைத்தியம் பிடித்த நாயைப் போலக் கொல்லப்படவேண்டியதுதான். ஐரோப்பியர்கள் மத்தியில் அபிப்பிராயங்கள் இரண்டுபட்டன. நான் செய்தது சரியென மூத்தவர்களும், ஒரு கூலியைக் கொன்றதற்காக ஒரு யானையைச் சுட்டுக் கொல்வதென்பது பெருத்த அவமானமென்று இளையவர்களும் கூறினர். ஒரு பாழாய்ப்போன கறுப்பினத் தெலுங்குக் கூலியைவிடவும் யானை மதிப்புடையதாயிற்றே! அந்தக் கூலி, யானையால் கொல்லப்பட்டிருந்ததற்காக நான் ஒருவிதத்தில் மகிழ்ச்சியடைந்தேன். அது என்னைச் சட்டப்படி சரியான நிலைக்குக் கொண்டுசேர்த்தது. நான் யானையைச் சுட்டதற்குப் போதுமான முன்காரணியாக அதுவே அமைந்தது. அந்த மஞ்சள் முகங்களின் முன், நான் ஒரு முட்டாளாகத் தோன்றாமலிருப்பதற்காகவே யானையைச் சுட்டேன் என்பதை யாராவது புரிந்துகொண்டிருப்பார்களா என அடிக்கடி வியந்துகொள்வதுண்டு.
மலைகள் இணைய இதழ் பிப்ரவரி 17, 2014 இதழ் 44 இல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment