Monday, 18 January 2016

நேர்காணல் - ஹாருகி முரகாமி HARUKI MURAKAMI JAPAN

ஹாருகி முரகாமியுடன் ஒரு நேர்காணல் 


தமிழில் ச. ஆறுமுகம்


download (26)



ஈடிபஸ் தொன்மத்தை மீண்டும் சொல்லுமாறு உங்களைத் தூண்டியது எது? `கடற்கரை மீதினில் காஃப்கா` எழுதத் தொடங்கும்போதே இதைச் சொல்லும் திட்டம் இருந்ததா அல்லது படைப்பின்போது இடையில் தோன்றியதா?
எத்தனையோ கதைக்கருக்களில் ஈடிபஸ் தொன்மமும் ஒன்று. அது நாவலின் மையக் கருத்தாக அமைய வேண்டுமென நினைக்கவில்லை. ஒரு பதினைந்து வயதுப் பையன் அவனது கெடுநோக்கு அப்பாவை விட்டுப்பிரிந்து ஓடுவதையும் அவனது அம்மாவைத் தேடும் பயணத்தை மேற்கொள்வதையும் குறித்து எழுத வேண்டுமெனத்தான் தொடக்கத்தில் திட்டமிட்டேன். இது இயற்கையாகவே ஈடிபஸ் தொன்மத்தோடு தொடர்புடையது. ஆனால், இந்தத் தொன்மத்தை ஆரம்பத்தில் மனத்துக்குள் கொண்டிருக்கவில்லையென்பதை இப்போது நினைவுகொள்கிறேன்.
தொன்மங்கள் எல்லாக் கதைகளுக்குமே மூலப்படிமங்களாக இருக்கின்றன. நாம் ஒரு கதையை நாமாகப் புனையும் போது தொன்மங்கள் பயன்படுவதில்லை; ஆனால், கதையை எல்லா வகையான தொன்மங்களோடும் தொடர்புபடுத்த முடிகிறது. தொன்மங்கள் எல்லாக் கதைகளையும் உள்ளடக்கியிருக்கிற சேமக் களஞ்சியம் போன்றவை. .
நார்வேஜியன் உட் தவிர, உங்கள் நாவல்கள் அனைத்தும், குறிப்பாக இந்தப் புதிய நாவல் உட்பட, முழுக்கக் கனவு போன்றதொரு மீமிகைக் கற்பனைப் புனைவினைக் கொண்டதாகவே உள்ளன. இந்த வெளிக்குள் உங்களை எதுதான் கொண்டுசேர்த்தது?
நீங்கள் குறிப்பிட்டது போல, நார்வேஜியன் உட் மட்டுமே யதார்த்த நடையில் எழுதப்பட்டுள்ளது. அதை வேண்டுமென்றேதான் அப்படித் திட்டமிட்டு எழுதினேன். நூற்றுக்கு நூறு விழுக்காடு, யதார்த்த நாவல் ஒன்றை என்னால் படைக்கமுடியுமென்று எனக்கு நானே நிரூபித்துக்கொள்ள விரும்பினேன்.
நான் எதிர்பார்த்தபடியே அந்த அனுபவம் எனக்குப் பிற்காலத்தில் உதவியாக இருந்தது. இந்த முறையில் என்னால் எழுத முடியுமென்ற தன்னம்பிக்கையை நான் வென்றெடுத்தேன். இல்லையென்றால் பின்னால் வந்த படைப்புகளைச் செய்துமுடிப்பது எனக்கு மிகவும் கடினமாகப் போயிருக்கும். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நாவலைப் படைப்பதென்பது கனவுக்குள் நிகழ்வதைப்போன்றதுதான். நாவலைப் படைக்கும் செயல் என்னை வேண்டுமென்றே கனவுக்குள் புகுத்துகிறது; அதுவும் நான் விழித்துக்கொண்டிருக்கும்போதே. நேற்றைய கனவை விட்ட இடத்திலிருந்து மறுநாள் மீண்டும் தொடர என்னால் முடியும். உங்களால் அதுபோன்ற ஒன்றைத் தினசரி வாழ்க்கையில் சாதாரணமாகச் செய்துவிடமுடியாது. அதுதான் என்னுடைய ஆழ்மன உணர்வுகளுக்குள் என்னை இன்னும் ஆழமாக அமிழ்த்திக்கொள்வதற்கான செயல்முறை வழியாகவும் அமைகிறது. ஆக, நான் ஒன்றைக் கனவு போலக் காணுகின்ற போது, அது கற்பனை உருவாக்கமல்ல. கனவு போன்ற அது, எனக்கு மிகமிக யதார்த்தமானது.
ஒரு அவசரமான கூகிள் தேடல்கூட, அமெரிக்காவிலுள்ள உங்கள் வாசகர்கள் எல்லோருமே உங்களின் அடுத்த நாவலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பதைத் தெளிவுபடக் காட்டுகிறது. உங்கள் புனைவுகள் அமெரிக்க வாசகர்களிடம் ஏன் இந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன? இது குறித்து ஒரு ஜப்பானிய நாவலாசிரியராக, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்னுடைய கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறவர்களால் என்னுடைய நாவல்களை வாசிப்பதில் மகிழ்ச்சிகொள்ளமுடியுமென நினைக்கிறேன். அது ஒரு அற்புதமான விஷயமாகவும் அமைகிறது. தொன்மங்கள் கதைகளின் சேமக் களஞ்சியங்கள் போன்றவையெனச் சொன்னேனில்லையா, அதுபோன்றதொரு களஞ்சியமாக மட்டும் நான் செயல்பட முடிந்தால், எளிய ஒன்றாக இருந்தாலுங்கூட அது என்னை மகிழ்ச்சிகொள்ளச் செய்யும்.
உங்கள் நாவல்களிலிருந்து, வாசகர் ஒருவர் ஜப்பானியப் பண்பாட்டின் எது மாதிரியான சில அம்சங்களைப் பெற முடியுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் நூல்களை வாசிக்குமுன் நாங்கள், அமெரிக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டிய தன்மைகளென நீங்கள் விரும்புபவை ஏதேனும் உள்ளனவா?
ஒரு நாவலை எழுதும்போது, எனக்குள்ளிருக்கும் எல்லாத் தகவல்களையும் அதற்குள் ஊடாடுமாறு செய்துவிடுகிறேன். அது ஜப்பானியச் செய்திகளாகவும் இருக்கலாம் அல்லது மேலைநாட்டதுவாகவும் இருக்கலாம் இரண்டுக்குமிடையில் நான் எந்தச் சிறப்பினையும் விதந்து காட்டவில்லை. அமெரிக்க வாசகர்கள் இதற்கு என்ன எதிர்வினையாற்றுவார்களென என்னால் கற்பனை செய்ய இயலவில்லை. ஆனால், ஒரு நாவலில் கதை மட்டும் மனத்தைக் கவர்வதாக அமைந்துவிட்டால், நாவலுக்குள்ளிருக்கும் அனைத்து விவரங்களையும் ஒருவர் புரிந்துகொள்ளாவிட்டாலும் அது ஒரு பெரிய விஷயமாவதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டு லண்டனின் புவியியல் விபரங்களில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லையென்ற போதிலும் டிக்கன்ஸை என்னால் படித்து அனுபவிக்க முடிகிறது.
பின்நவீனத்துவம், ஒரு அதிர்வேற்படுத்தும் சொல்லாவதற்கு முன்பாகவே, ஃப்ரான்ஸ் காஃப்கா பின்னணுவியல் காலப் புதிய புத்தாயிரம் உலகில், சாதாரண மனிதன் தனிமைப்பட்டிருப்பதான குறிப்பிட்ட நிலை குறித்துப் புத்தாய்வு செய்திருக்கிறார். இந்தக் கருத்தாக்கங்களை வெளிக்கொணர, உங்கள் கதைசொல்லிக்கு, காஃப்காவின் தொடர்ச்சியாகப் பெயர் சூட்டுவீர்களா, அல்லது அதற்கு வேறு அடிப்படைகள் உள்ளனவா?
இதற்கான பதிலை, காஃப்கா என்னுடைய அபிமானப் படைப்பாளர்களில் ஒருவர் என்பதைச் சொல்லாமலேயே, சொல்லிவிடமுடியும். என்னுடைய நாவல்களோ அல்லது கதாபாத்திரங்களோ காஃப்காவின் நேரடி பாதிப்பு கொண்டவை அல்ல. நான் சொல்வது என்னவென்றால், காஃப்காவின் படைப்புலகம் ஏற்கெனவேயே முழுமைபெற்றுவிட்டது. அவரது காலடித் தடங்களைப் பின்தொடர முயற்சிப்பது வெறுமே அர்த்தமற்றது என்பது மட்டுமல்லாமல், முழுக்க இடர்பாடு மிக்கதும் கூட. நான் என்ன செய்கிறேனென்றால், நாவல்களை என்னுடைய சொந்த வழியில், எழுதுவதன் மூலம், ஏற்கெனவே நடைமுறையிலிருந்த நாவலாக்க முறையை காஃப்கா உடைத்தெறிந்ததுபோல, காஃப்காவின் கற்பனை உலகத்தை நான் உடைத்தெறிகிறேன். இதை காஃப்காவுக்குச் செய்கிற ஒருவித அஞ்சலி எனவும் கொள்ளமுடியுமென நான் நினைக்கிறேன் உண்மையைச் சொல்வதென்றால், பின்நவீனத்துவம் உணர்த்துகின்ற பொருளை நான் உண்மையில் முற்றாக உள்வாங்கிடவில்லை, ஆனாலும் நான் செய்ய முயற்சித்துக்கொண்டிருப்பது பின்நவீனத்துவத்திலிருந்தும் சிறிது வேறானது என்ற உணர்வும் எனக்கிருக்கிறது. எப்படியிருந்தாலும், நான் மற்ற எந்தப் படைப்பாளரையும் விட வேறுபட்ட ஒரு தனிவகைப் படைப்பாளியாக விளங்க வேண்டுமென விரும்புகிறேன். இதர படைப்பாளர்களைப் போல் அல்லாமல், வேறுபட்டுக் கதைசொல்கிற ஒரு படைப்பாளியாக நான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
இந்த நாவல் முழுவதிலும் நீங்கள் ‘’ சோற்றுக் கிண்ண மலை நிகழ்வு` பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அந்த நிகழ்வில் மலைவளம் காணச் சென்ற பள்ளிக் குழந்தைகள் தன் நினைவை இழக்கிறார்கள். இந்த நிகழ்வு குறித்த கற்பனை விசாரணைகள் உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளை அல்லது செய்திகளை அடிப்படையாகக் கொண்டனவா?
அதற்குள் செல்லாமலிருப்பதையே நான் விரும்புவேன்.
அந்தப் பள்ளிப் பேர்விபத்தில் பலியான நகாதா, எல்லோராலும் விரும்பப்படுகிற இன்னொரு முக்கியப் பாத்திரம். அவன், அவனைச் சுற்றியிருப்பவர்களைப் போல இல்லை.

இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தைப் படைக்கவேண்டுமென உங்களை வழிநடத்தியது எது?
சமூக ஓட்டத்தில் பின்தங்கி, அதிலிருந்தும் தம்மைத்தாமே வலியப் பின்னிழுத்துக்கொண்டவர்கள் குறித்து எப்போதுமே நான் அக்கறை கொண்டவனாக இருக்கிறேன். `கடற்கரை மீதினில் காஃப்கா`வின் அநேக மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் முக்கிய நீரோட்டத்திற்கு வெளியில் இருப்பவர்களாகவே இருக்கின்றனர். நகாதாவும் நிச்சயமாக, அவர்களில் ஒருவனே தான். இது போன்ற ஒரு பாத்திரத்தை நான் ஏன் படைக்க வேண்டும்? அவனை நான் விரும்புகிறேன் என்பதுதான் அதற்கான காரணமாக இருக்க முடியும். அது ஒரு பெரிய நாவல். அதில் நூலாசிரியர் எவ்வித நிபந்தனையுமற்று விரும்புகிற பாத்திரங்களில் ஒன்றே ஒன்றையாவது இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உங்கள் புனைவுகளில் பூனைகள் அடிக்கடி தலைகாட்டுகின்றன. இந்த நாவலிலும் பூனைகள் குறிப்பாக, எளிதில் மறக்க முடியாத பாத்திரங்களாக இருக்கின்றன. அதிலும் அந்த நிலைகுலைந்து, கீழிறங்கிப்போன சிற்பி ஒருவர் பூனைகளை எப்படிக் கொன்றுதின்கிறார் என்பதன் அதிகபட்ச விவரணை, மறக்கக்கூடியதா என்ன? உங்கள் கதைகளுக்கும் சரி, உங்கள் பாத்திரங்களுக்கும் சரி, எதனால் பூனைகள் அவ்வளவு முக்கியமாகின்றன?

தனிப்பட்டமுறையிலும் எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கிறதென்பதுதான் அதற்கான காரணமாக இருக்க வேண்டும். நான் சிறியவனாக இருக்கும் போதிலிருந்தே, என்னைச் சுற்றி எப்போதும் பூனைகள் இருக்கின்றன. ஆனால், பூனைகளுக்கு வேறு ஏதேனும் முக்கியத்துவம் இருக்கின்றனவா என எனக்குத் தெரியாது.

உங்கள் கதைசொல்லி காஃப்கா, ‘’ கடற்கரை மீதினில் காஃப்கா’’ என்ற பாடலைக் கண்டெடுத்து, அதன் தன்னுணர்ச்சிப் பொருளை அந்தக் கவிதை எழுதிய பெண் அறிவாளோ என வியக்கிறான். ‘’ தேவையில்லை. குறியீட்டுமுறை உணர்த்தல் என்பதும் பொருளுணர்த்தல் என்பதும் வெவ்வேறு விஷயங்கள்.’’ என மற்றொரு பாத்திரம் சொல்கிறது. உங்கள் நாவலும் அந்தக் கவிதையும் ஒரே தலைப்பைக் கொண்டிருப்பதால், மேற்குறித்த விளக்கக் கூற்று, நாவலைப் பொறுத்தவரையில் எந்த அளவுக்குப் பொருத்தமானது? நாவலின் குறியீடுகள் இன்னும் விரிந்த பொருளைக் கொண்டுள்ளனவா?

குறியீட்டு முறை குறித்து எனக்கு முழுமையாகத் தெரியாது. குறியீட்டு முறையில் ஒரு பெருத்த அபாயம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. உவம உவமேயங்களைக் கையாளுவதே எனக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. ஒரு பாடலின் தன்னுணர்ச்சி வரிகள் என்பதன் பொருள் என்னவென, அது ஏன், முதலில் அவற்றுக்கு ஏதாவது பொருள் இருக்கின்றதா என்பதே உண்மையில் எனக்குத் தெரியாது. தன்னுணர்ச்சிப் பாடல்களை யாராவது இசையமைத்துப் பாடினால், புரிந்து கொள்வதற்கு மிக எளிதாக அமையும்.
உங்கள் ஜப்பானியப் பதிப்பாளர், இந்த நாவலின் பொருளை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கென்றே ஒரு வலைத்தளத்தை உருவாக்கியிருப்பதாகக் கேள்விப்படுகிறோம். எங்களால் அந்தத் தளத்தில் வாசிக்கமுடியாதென்பதால், இந்த நாவலின் ரகசியங்களில் சிலவற்றையாவது உங்கள் வார்த்தைகளில் எங்களுக்கு விவரித்துச் சொல்வீர்களா?

அந்த வலைத்தளத்தில், மூன்றே மாதங்களில் வாசகர்களிடமிருந்து 8000 கேள்விகள் வரப்பெற்றேன். அவற்றில் 1200 கேள்விகளுக்கு நானே தனிப்பட்ட முறையில் பதிலனுப்பினேன். அது அதிக பட்ச வேலைதான்; என்றாலும், உண்மையில் நான் அதில் மகிழ்ச்சிகொண்டேன். இந்தப் பரிமாற்றத்திலிருந்து, இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்கான திறப்பு வழி அதனைப் பலமுறை வாசிப்பதில்தான் கிடைக்கிறது என்பதே நான் சொல்கிற தீர்வு. இது எனது சுயநல வெளிப்பாடாகத் தோன்றலாமெனினும், அதுதான் உண்மை. மக்கள் வேறு வேலைகளில் அவசரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், அதுமட்டுமல்லாமல், அப்படி வாசிக்க வேண்டுமென விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்ததாகவும் அது அமைகிறது என்பதையும் நான் அறிவேன். ஆனால், உங்களுக்கு நேரம் கிடைக்குமெனில், ஒரு முறைக்கும் மேலாக அந்த நாவலை வாசிக்குமாறு நான் கூறுவேன். இரண்டாவது சுற்றிலேயே உங்களுக்கு விஷயங்கள் விளங்கத் தொடங்கிவிடும். அதைத் திருத்தி மீள எழுதும்போது, பல டஜன் தடவைகள் நான் அதை வாசித்திருக்கிறேன். அப்படிச் செய்யும் ஒவ்வொரு முறையும், மெதுவாக என்றாலும், நிச்சயமாக, எல்லாமே இன்னும் கூரான பார்வைக்கு முன்வைக்கப்பட ஆயத்தமாகும்..
`கடற்கரை மீதினில் காஃப்கா` பல புதிர்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான தீர்வுகள் எதுவும் தரப்படவில்லை. பதிலாக, பல புதிர்கள் ஒன்றாக இணைந்து, அவற்றின் செய்வினை மற்றும் எதிர்வினைச் செயல்பாடுகளால், ஒரு தீர்வுக்கான சாத்தியப்பாடு உருக்கொள்கிறது. இந்தத் தீர்வு உருவாகும் முறை ஒவ்வொரு வாசகருக்கும் வேறுபடும். இதையே இன்னொரு வழியில் சொல்வதானால், புதிர்களே தீர்வுக்கான ஒரு பகுதியாகச் செயல்படுகின்றன. இதை விவரிப்பது கடினம். ஆனால், இந்த வகையான நாவலைத்தான் நான் எழுதத் திட்டமிட்டுத் தொடங்கினேன்.

இந்த நாவலிலும் இதற்கு முந்தைய நாவல்களிலும் உங்கள் கதாபாத்திரங்கள் அனைவருமே ஜாஸ், ராக் மற்றும் செவ்வியல் இசையின் மீதான உண்மையிலேயே ஆர்வமூட்டுகிற ரசனையை வெளிக்காட்டுகிறார்கள். உங்கள் படைப்புகளில் குறிப்பிடப்படவேண்டுமென்று தயாரிக்கப்படுகிற முரகாமியின் இசைத்தட்டுப் பட்டியலில் எந்தெந்த இசை வெளியீடுகள் சேர்க்கப்படும்?
இசை, எனது வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒரு பகுதி. ஒரு நாவலை நான் எழுதும்போது, இசை இயற்கையாகவே உள்நுழைந்துவிடுகிறது. (பூனைகள் எப்படி நுழைகின்றனவா அது போலவே என நான் நினைக்கிறேன்.) என்னுடைய தற்போதய புதிய நாவல் AFTER DARK எழுதிக்கொண்டிருந்தபோது குர்ட்டிஸ் ஃபுல்லரின் (Curtis Fuller) ` ஃபைவ் ஸ்பாட்ஸ் ஆஃப்டர் டார்க்` ( Five Spots After Dark) இராகம் என் தலைக்குள் சுழன்றுகொண்டேயிருந்தது. இசை, எப்போதுமே எனது கற்பனையைத் தூண்டுவதாக இருக்கிறது. நான் எழுதும்போது பாரூக் இசையை மெலிதாக, பாச், டெல்மான் மற்றும் அது போன்றோரின் அரங்கப் பின்னணி இசை போல வழக்கமாகக் கேட்கிறேன்.
மொழிபெயர்ப்பில் வாசிக்கப்படும் ஆசிரியராக இருக்கும் நீங்கள், ஒரு நல்ல மொழிபெயர்ப்பை உருவாக்குவது எதுவென நீங்கள் நினைப்பது குறித்து ஒரு சிறிது பேசமுடியுமா?
நான் ஏராளமான அமெரிக்க இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறேன். ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரை உருவாக்குமென எல்லாவற்றுக்கும் மேலானதாக நான் கருதுவது, மொழி மீதான பற்றும் புரிதலும் கொண்ட ஒரு உள்ளுணர்வு (எல்லோருக்கும் நன்கு தெரிந்த கருத்து) மற்றும் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் படைப்பின் மீதான பெரும் ஈர்ப்பு என்ற இரண்டுமே. இவற்றில் ஒன்று குறைந்தாலும் மொழிபெயர்ப்பு அவ்வளவு தகுதியானதாக இருக்காது. ஏதாவது சில காரணங்கள் இருந்தாலொழிய, என்னுடைய முந்தைய படைப்புகளை ஜப்பான் மொழியில் நான் மீள வாசிப்பதில்லை. ஆனால், சில நேரங்களில் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன். அப்படி வாசிப்பதை நான் சுவாரசியமாக உணர்வதற்கு மூலப்பிரதியிலிருந்து அவை விலகியிருக்கும் தூரமே காரணம். அநேக இனங்களிலும் இவற்றை வாசிப்பதில் நான் உண்மையிலேயே சுவாரசியம் கொள்கிறேன்.
உங்கள் அடுத்த படைப்பு என்ன?

2004 இலையுதிர்காலத்தில் புதிய நாவல் After Dark வெளியிட்டேன். அமெரிக்காவில் 2006ல் ஆங்கிலத்தில் என்னுடைய இரண்டாவது சிறுகதைத்தொகுதி வெளியிட இருக்கிறோம். `யானை காணாமலாகிறது` தான் இதுவரையிலும் முதல் தொகுதியாக இருக்கிறது. ஆகவே அதை எதிர்நோக்கி , இந்த இலையுதிர் காலத்திலும் குளிர் காலத்திலும் சில புதிய சிறுகதைகள் எழுதுவதில் கவனம்செலுத்துவேன்.
மொழிபெயர்ப்புப் பணியில், தற்போது கிரேஸ் பாலேயின் சிறுகதைத் தொகுதி ஒன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அவரது படைப்புகளை உண்மையிலேயே விரும்புகிறேன். அவரது கதைகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினமானது. ஆனால், நான் எப்போதுமே என்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்துவிடுவேன்.

••• 
Interview originally published at HarukiMurakami.com, and reproduced at Book Browse.

மலைகள் இணைய இதழ், அக்டோபர் 31, 2013 இதழ் 37 இல் வெளியானது.


No comments:

Post a Comment