Friday 8 January 2016

நைஜீரியச் சிறுகதை -அப்பல்லோ (Apollo) சிமமாண்டா நகோஜி அடிச்சி

அப்பல்லோ (Apollo)  சிமமாண்டா நகோஜி அடிச்சி (நைஜீரியா)

 தமிழில் ச. ஆறுமுகம்


images (6)








(நைஜீரிய நாவலாசிரியர் மற்றும் சிறுகதை படைப்பாளரான சிமமாண்டா அடிச்சி, எனுகுவில் 15.09.1977ல் பிறந்தவர். ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு புதிய தலைமுறை வாசகர்களை ஈர்த்துக் கொண்டுவரும் இளம் ஆங்கிலமொழிப் படைப்பாளர் வரிசையில் மிக மிக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தை ஜேம்ஸ் நவோயே அடிச்சி, நசுக்கா நகரிலுள்ள நைஜீரியாப் பல்கலைக் கழகத்தில் புள்ளியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்; தாயார் கிரேஸ் இஃபியோமா அதே பல்கலைக் கழகத்தின் முதல் பெண் பதிவாளராகப் பணியாற்றியவர். இவர்களது குடும்பத்தினரின் முன்னோர் கிராமம் அனம்பரா மாநிலத்தின் அபாவிலுள்ளது. புகழ் பெற்ற பெண்ணியவாதியான சிமமாண்டா அடிச்சி தற்போது அமெரிக்காவிலும் நைஜீரியாவிலுமாக வசிக்கிறார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் சிறுகதை அப்பல்லோ என்ற தலைப்பிலேயே 13.04.2015 நியூயார்க்கர் ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. ஞானம், ஒளி, கவிதை, மருந்து, கால்நடை, வில்வித்தை, வருபொருள் உரைத்தல் அனைத்துக்கும் கடவுளான கிரேக்க அப்பல்லோவின் கண்கள் கதிரைப் போலச் சிவந்து விளங்குவதால் கானா, நைஜீரியா போன்ற நாடுகளில் கண்கள் சிவந்து எரியும் கண்வலியை அப்பல்லோ எனப் பெயரிட்டிருக்கிறார்கள் போலும்.)
*******
எனுகுவில் இருக்கும் எனது அப்பா, அம்மாவைப் பார்ப்பதற்காகப் பொறுப்புள்ள ஒரு மகனாக, தட்டுமுட்டுச் சாமான்கள் அடைந்து கிடக்கின்ற, பிற்பகலிலேயே இருண்டு விடுகின்ற, அவர்களது வீட்டிற்கு மாதம் இருமுறை போய்க்கொண்டிருந்தேன். பணி ஓய்வும் சும்மாவே உட்கார்ந்திருப்பதும் அவர்களை வீழ்த்திவிட்டது; ஆம், கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுகொண்டிருந்தது. எண்பதுகளின் இறுதியை மெதுமெதுவே கடந்துகொண்டிருந்த அவர்கள் இருவருமே உடல் சிறுத்து, கருங்காலி மரத்தின் நிறத்தில் கறுத்து, நிமிர்ந்து நிற்காமல் முன்பக்கமாக வளைந்து குனியவே விரும்பும் முதுகுமாக இருந்தனர். நாளாக, நாளாகக் காலம், அவர்களது தனித்தன்மைகளை ஒன்றுக்குள் ஒன்றாகக் குருதியோடச் செய்து மழுங்கடித்துக் கொன்றுவிட, இருவரும் பெரும்பாலும் ஒன்றுபோலவே, தோன்றினர். வாசனையும் கூட இருவரிடமும் ஒன்று போலவே – ஒருவருக்கொருவர் கைமாற்றிக்கொண்ட விக்ஸ் வேபரப் பச்சை டப்பியிலிருந்து கவனமாக எடுத்து மூக்கு நுனிகளிலும், வலிக்கும் மூட்டுகளிலும் தேய்த்துக் கொண்ட மென்தால் வாசனை எப்போதும் இருந்தது.
நான் உள்ளே நுழையும்போது, அவர்கள் வெளி வராந்தாவில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டோ, சாய்மெத்தைக்குள் அமிழ்ந்து அனிமல் பிளானெட் பார்த்துக்கொண்டோ நேரத்தைக் கொல்வதைத் தான் பார்த்திருக்கிறேன். அவர்கள் இப்போது புதிதாக எதற்கெடுத்தாலும் ஆச்சரியப்படுகிற மனநிலை ஒன்றைக் கொண்டிருந்தார்கள். ஓநாய்களின் சூழ்ச்சியைக் கண்டு மலைத்தும், மனிதக்குரங்குகளின் அறிவுத்திறமையைக் கண்டு வியந்தும் ஒருவருக்கொருவர் ‘’அடேங்கப்பா! இதைப் பார்த்தியா?’’ என்று கேட்டுக்கொள்கின்றனர். நம்பமுடியாத கதைகளைக் கூட நம்மால் புரிந்துகொள்ள இயலாத அளவுக்கான அக்கறையுடன் கேட்டனர். எங்கள் முன்னோர்கள் கிராமமான `அபா`விலிருக்கும் எங்கள் பக்கத்து வீட்டு நோயாளி ஒருவர் உயிருள்ள வெட்டுக்கிளி ஒன்றை வாந்தியெடுத்ததாகவும், இது அவரது கெடுமதி உறவினர்கள், அவருக்கு நஞ்சினை ஊட்டியிருக்கிறார்கள் என்பதற்கு வலுவான ஆதாரம் என்றும் அம்மா ஒருமுறை என்னிடம் சொன்னாள், ‘’அந்த வெட்டுக்கிளியின் படத்தைக்கூட யாரோ காட்டினார்கள்.’’ என்றார், அப்பா. அவர்கள் எப்போதுமே ஒருவர் கதைக்கு அடுத்தவர் முட்டுக் கொடுப்பதாக இருந்தனர். தலைவர் ஒகேக்கேயின் வீட்டு இளம் வேலைக்காரப் பெண் மர்மமான முறையில் இறந்தபோது, அந்தத் தலைவர், அந்தப் பதின்வயதுச் சிறுமியைக் கொன்று, அவளது ஈரலைப் பணம்பண்ணும் சடங்கு1களுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக, நகரத்தில் வலம் வந்த கதையை அப்பா என்னிடம் கூறியபோது, அம்மா சொன்னாள், ‘’அவர், அவளுடைய இதயத்தையும் கூட அதற்குப் பயன்படுத்திக்கொண்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்.’’
ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், இது போன்ற கதைகளின் முகத்திலேயே என் பெற்றோர் காறி உமிழ்ந்திருப்பார்கள். அரசியல் அறிவியல் பேராசிரியரான என் அம்மா, ‘’சுத்த முட்டாள்த்தனம்’’ எனக் கடுமையாகச் சாடியிருப்பார்; கல்வியியல் பேராசிரியரான என் அப்பாவோ, ‘’த்தூஉ, இதுவெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குக் கூடப் பேசத் தகுதியானதில்லை’’ என்றிருப்பார். அவர்களுக்கேயான பழைய தனித் தன்மைகளையெல்லாம் இழந்துவிட்டு, புனிதத் தீர்த்தம் குடித்ததாலேயே நீரிழிவு நோய் குணமாகிவிட்டதென்று கதை சொல்லும் சாதாரண நைஜீரியர்களைப் போல அவர்கள் மாறியிருப்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது.
ஆனாலும், அவர்கள் சொல்லும் கதைகளைப் பாதி கேட்டும் கேட்காமலும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தேன். அது ஒரு எளிமையான வெகுளித்தனம்; முதுமையில் ஒரு புதிய குழந்தைமை. கடந்துசெல்லும் காலத்தினூடாகவே அவர்களும் மெதுமெதுவாக வளர்ந்து முதுமைக்கு வந்துவிட்டனர். என்னைக் கண்டதும் அவர்கள் முகத்தில் ஒரு ஒளி தோன்றித் தெரியும். அது மட்டுமல்ல, ‘’எப்போது எங்களுக்குப் பேரக்குழந்தை பெற்றுத்தரப் போகிறாய்? ஒரு பெண்குழந்தையைக் கொண்டுவந்து எப்போது என் கையில் கொடுக்கப்போகிறாய்?’’ போன்ற அவர்களின் வறுத்தெடுக்கும் கேள்விகள் கூட இப்போதெல்லாம் என் நரம்புகளை முன்பு போல இறுக்கமடையச் செய்வதில்லை. ஒவ்வொரு ஞாயிறு பிற்பகலிலும், அரிசிச் சோறும் கறிச்சாறு2மாக ஒரு மதியப் பெருவிருந்துக்குப் பிறகு, அவர்களைப் பிரிந்து செல்கையில், இதுதான் அவர்கள் இருவரையும் ஒருசேர உயிரோடு, நான் கடைசியாகப் பார்ப்பதோ, அடுத்த முறை நான் இங்கு வருவதற்கு முன்னாலேயே, உடனே புறப்பட்டு வருமாறு தொலைபேசிச் செய்தி வந்துவிடுமோ எனப் பயந்திருக்கிறேன். பழங்கால ஏக்கங்களாக என்னுள் நிரம்பும் அந்த நினைவுகள், நான் ஹார்கோர்ட் துறைமுகத்தைச் சென்றடையும் வரை எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கும். எனக்கும் குடும்பமென்று ஒன்று இருந்தால், அவர்களின் நண்பர்களின் மகன் அல்லது மகள் குறைப்படுவதுபோல் கல்விக்கட்டணம் ஏறுவதுபற்றிக் குறைப்பட்டுக்கொண்டு, வழக்கமான ஒரு ஒழுங்குமுறையாக இப்படி இங்கு வந்துகொண்டிருப்பதை, நான் குறைத்துக் கொள்வேனோ, அது எனக்குத் தெரியவில்லை. இதில் மாற்றம் சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை.
நவம்பர் மாதத்தில் ஒருமுறை நான் இங்கு வந்திருந்த நேரத்தில், கிழக்குப்பகுதி முழுவதிலுமாக பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொள்ளையடிப்பது அதிகமாகிக்கொண்டு வருவதாக அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தார்கள். திருடர்களுக்கும் தான் கிறித்துமஸ் செலவு இருக்கிறது. ஒனிட்சாவில் ஒரு கூட்டம், சில திருடர்களைப் பிடித்து, அடித்து, அவர்களின் ஆடைகளையெல்லாம் கிழித்து, அவர்களின் கழுத்துகளில் மாலையாக, பழைய டயர்களை மாட்டிப் பெட்ரோலைக் கொண்டுவா, தீப்பெட்டியைக் கொண்டுவா என்று பெரும் ஆர்ப்பாட்டம் செய்தபோது, காவல்படையினர் அங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தித்தான் கொள்ளைக்காரர்களை மீட்டுச் செல்ல முடிந்ததை அம்மா என்னிடம் கதைகதையாக விவரித்தாள். அம்மா சிறிது நிறுத்திப் பெருமூச்சு வாங்கினாள்; அந்தக் கதைக்கு விறுவிறுப்பு சேர்க்கும் கடைசி மாயமந்திர வருணனைக்காக, நான் காத்திருந்தேன். அது, அவர்கள் காவல் நிலையத்துக்குச் சென்று சேர்ந்ததும், அந்தக் கொள்ளையர்கள், கழுகுகளாக மாறிப் பறந்துசென்றுவிட்டனர் என்பதாகக்கூட இருக்கலாம்.
‘‘உனக்குத் தெரியுமா?’’ என்ற அம்மா தொடர்ந்தாள். ‘’ ஆயுதம் வைத்திருந்த அந்தப் பயங்கரக் கொள்ளைக்காரர்களில் ஒருவன், ராஃபேல், உண்மையில் சொல்லப்போனால், அவன்தான் அந்தக் கூட்டத்துக்கே தலைவனாம்! அவன் சில வருடங்களுக்கு முன் நம் வீட்டில், வேலைக்காரப் பையனாக இருந்தான். உனக்கு அவனை நினைவிருக்காதென்று நினைக்கிறேன்.’’
நான் அம்மாவையே உறுத்து நோக்கினேன். ’’ராஃபேல்?’’
‘‘அவன் இப்படியானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவன் அப்போதே சரியாக இல்லைதான்.’’ என்றார், அப்பா.
கதை சொல்லுதலின் இடைவெளிப் பனிமூட்டமாக என் பெற்றோர் நிறுத்திய மவுனத்தில் மூழ்கியிருந்த நான், நினைவுகளின் கூர்முனைத் தாக்குதலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்.
அம்மா மீண்டும் சொன்னாள், ‘‘உனக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை. அப்போது நீ நிரம்பவும் சின்னப்பிள்ளை, அதிலும் அவனைப்போலப் பல பையன்கள் இருந்திருக்கிறார்களே!’’
ஆனால், எனக்கு நினைவிருக்கிறது. மற்றதெல்லாம் இல்லையென்றாலும் ராஃபேலை நன்கு நினைவிருக்கிறது.
வேலைக்காரப்பையனாக, ராஃபேல் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கியபோது முதலில் எதுவுமே மாறிவிடவில்லை. அவன் எல்லோரையும் போல, பக்கத்து கிராமத்திலிருந்து வந்த சாதாரணத் தோற்றமளிக்கும் ஒரு பதின்வயது சிறுவனாகத்தான் தோன்றினான். அவனுக்கு முன்பிருந்த வேலைக்காரப்பையன் ஐஜினஸ் என் அம்மாவை அவமதித்ததால் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். ஐஜினசுக்கு முன்பிருந்த ஜான், அவன் வீட்டுக்கு அனுப்பப்படவில்லையென்பது எனக்கு நினைவிருக்கிறது. அவன் பாத்திரம் கழுவும்போது ஒரு சாப்பாட்டுத் தட்டினை உடைத்துவிட்டான்; அம்மாவின் கோபத்துக்குப் பயந்து, அவள் வேலையிலிருந்து வருவதற்கு முன்பாக, அவனாகவே மூட்டை கட்டிக்கொண்டு, ஓடிப் போய்விட்டான். என் அம்மாவை வெறுத்த, எல்லா வேலைக்காரப் பையன்களும் என்னையும் வேண்டா வெறுப்போடேயே நடத்தினர். ‘’தயவுசெய்து வந்து சாப்பிட்டுவிட்டுப் போ, முதலாளியம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியாது.’’ என்பார்கள். அம்மா எப்போதுமே அவர்களை, வேலையில் மந்தமாக இருப்பதாக, முட்டாள்த் தனமாக நடந்துகொள்வதாக, செவிடர்கள் எனத் திட்டித் தீர்ப்பாள்; அவளது பெருவிரல் அழைப்புமணியின் சிவப்புப் பொத்தானை அழுத்தி, எழுகின்ற வீட்டை உலுக்கும் மணிச் சப்தம் கூட அவர்கள் மீதான கூச்சல் போல, `விர்`ரென்று காதைத் துளைத்து மரத்துப்போகச் செய்வதாக இருக்கும். அப்பாவுக்கு எதுவும் சேர்க்காமல் வெறுமனாகவும் அம்மாவுக்கு வெங்காயம் சேர்த்தும் முட்டைகளை விதவிதமாகப் பொரிப்பதை, தூசி தட்டித் துடைத்த ருஷ்யப் பொம்மைகளை அதே அலமாரியில் அதே இடத்தில் வைப்பதை அல்லது எனது பள்ளிச் சீருடைகளைத் ஒழுங்காக, சரியாகத் தேய்த்து வைப்பதை எப்போதும் நினைவுவைத்துக் கொள்வதென்பது, அவர்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருந்திருக்கும்?
நான், எனது பெற்றோருக்கு, ஒரே பிள்ளை; பிற்காலத்தில் பிறந்த செல்லக் குழந்தை. ‘’நான் உன்னைக் கருக்கொண்ட போது, மாதாந்திரத் தீட்டு என்றே நினைத்துவிட்டேன்.’’ என்றாள் ஒருநாள், அம்மா, என்னிடம். எனக்கு அப்போது எட்டு வயதுதான் இருக்கும்; `மாதாந்திரத் தீட்டு` என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்பாவைப் போலவே அம்மாவும் வெடுக்கெனப் பேசுபவளாக, இருந்தாள்; அவர்கள், பிறர் சொல்வதை உடனுக்குடன் புறந்தள்ளிவிடும் இயல்பினராகவே இருந்தனர். அவர்கள் இபதான் பல்கலைக் கழகத்தில் சந்தித்து, இருவரது குடும்ப விருப்பத்துக்கும் எதிராக – அதிகம் படித்தவளென அவர் நினைப்பு, நல்ல வசதியான மாப்பிள்ளை என்பது அவள் தேர்வு – திருமணம் செய்துகொண்டவர்கள்; வாழ்க்கை முழுவதையும், யார் அதிகப் புத்தகம் எழுதி வெளியிடுவது, யார் பூப்பந்தாட்டத்தில் ஜெயிப்பது? வாக்குவாதத்தில் கடைசியாக வெல்வது யாரென ஒருவரோடு ஒருவர் கடுமையாக, உளப்பூர்வமாகப் போட்டி போட்டுக்கொண்டு கழித்தவர்கள். அவர்கள் மாலை நேரங்களில், வீட்டின் முன்னறையில் உட்காராமல், நின்றுகொண்டு, சிலநேரங்களில் மெதுவான உலவுதலாக முன்னும் பின்னுமாக நடந்துகொண்டு, ஏதோ புதியதொரு கருத்தினைக் கண்டுபிடித்துவிட்டதைப் போல செய்தித் தாள்களிலிருந்தோ, இதழ்களிலிருந்தோ, ஒருவர் மற்றவருக்கு உரக்க வாசித்துக் காட்டிக்கொண்டிருப்பார்கள், அவர்கள் மேட்டியஸ் ரோஸ்3 அருந்தினர்; அந்த இருண்டநிற, அழகிய புட்டி எப்போதும் அவர்கள் அருகே மேசையில் இருந்து கொண்டேயிருந்தது; அவர்கள் அருந்தி முடித்த சிவப்பு நிற எச்சத்துடன் மங்கலாகத் தெரியும் கண்ணாடிக் கோப்பைகளை மேசையின் மீது அப்படி அப்படியே விட்டுச் சென்றனர். எனது குழந்தைப்பருவ நாட்கள் முழுவதுமே, அவர்கள் என்னோடு பேசும் தருணங்களில், உடனடியாகப் பதில்பேசத் தெரியாமல் விழித்துநின்று வருந்திய நாட்களே அதிகம்.
எனது மற்றொரு கவலை, புத்தகங்கள் மீது நான் அதிகம் ஈர்ப்புகொள்ள முடியாமலிருந்தது பற்றித்தான். வாசிப்பு எனது பெற்றோருக்கு ஏற்படுத்திய கொந்தளிப்பினை அல்லது அவர்களை நேரம் போவதே தெரியாமல் அமிழ்ந்துகிடக்கும் வெற்று உயிரிகளாக மாற்றியதைப் போல, நான் எப்போது வருகிறேன், எப்போது போகிறேன் என்பதைக்கூடக் கவனிக்காத ஒரு நிலையை, எனக்கு அளிக்கவில்லை. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும், உணவின் நடுவே வந்துவிழும்– `பிப்4` பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஜியுலு5 செய்தது சரிதானா? போன்ற எதிர்பாராத கேள்விகளைச் சமாளிப்பதற்காகவுமே புத்தகங்களை வாசித்தேன். பலநேரங்களில் எங்கள் வீட்டுக்குள்ளேயே நான், வேண்டாத விருந்தாளி போல, தலைகாட்டியிருக்கக்கூடாத அல்லது பொருத்தமற்ற ஒரு நபரோ என உணர்ந்திருக்கிறேன். எனது படுக்கை அறையில் வழிந்து நிறையும் புத்தக அடுக்குகளை வரிசையாக நிறுத்தி, அவற்றுக்குள் பொருந்திச் சேராதவற்றை நடைபாதையிலுமாக அடுக்கி, நான் இருக்கவேண்டிய நிலையில் இல்லையென்பதுபோல, எனது இருப்பு நிலைப்படுத்தப்படாத ஒன்றென எனக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தனர். ஒரு புத்தகத்தைப் பற்றி நான் பேசியபோது, அவர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்ட பார்வையிலிருந்து அவர்கள் ஏமாற்றமடைந்திருப்பதை உணர்ந்துகொண்டேன். ஆனாலும் நான் சொன்னதில் தவறில்லையென்றும் ஆனால், அது மிகச் சாதாரணமானதென்றும், அவர்களது அசல் முத்திரை விளங்கித் தோன்றுவதாக இல்லையென்றும் எனக்குத் தெரிந்தது. அவர்களோடு அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் செல்வதென்பது மிகப்பெரும் சித்திரவதையாக இருந்தது. பூப்பந்து என்னைச் சலிப்படையச் செய்வதாக, இறகுப்பந்து, முடிவற்ற ஒன்றாக, அந்த விளையாட்டைக் கண்டுபிடித்தவர் முழுவதும் முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தியிருக்க வேண்டுமென்பது போல எனக்குத் தோன்றியது.
நான் விரும்பியது குங்ஃபூ. `என்டர் த டிராகன்` படத்தைப் பலமுறை பார்த்தேன். அதன் ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம். நான் புரூஸ் லீயாக விழித்தெழ வேண்டுமென விரும்பினேன். எனது கற்பனைக் குடும்பத்தைக் கொன்ற, கற்பனை எதிரிகளை அடித்துத் துவைப்பதாகக் காற்றில் உதைப்பதும் விளாசுவதுமாக இருப்பேன். என்னுடைய மெத்தையைத் தரையில் இழுத்துப் போட்டுப் பரப்பி, இரண்டு கனத்த புத்தகங்கள் (வழக்கமாகக் கனத்த அட்டை கொண்ட கறுப்பு அழகு6 மற்றும் தண்ணீர்க் குழந்தைகள்7 புத்தகங்களாக இருக்கும்) மீது நின்று, புரூஸ் லீயைப் போல `ஹாஆஆஆ` எனக் கத்திக்கொண்டு, மெத்தையில் குதிப்பேன். ஒருநாள் குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, ராஃபேல், வாசலில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்; திட்டுவானோ என நினைத்தேன்; காலையில் தான் எனது படுக்கையைத் தட்டி, உதறிச் சீர்படுத்தியிருந்தான்; இப்போது அறை அமளியாகிக் கிடக்கிறது. ஆனால், அவனோ சிரித்து, அவனுடைய மார்பைத் தொட்டு, அதே விரலை, இரத்தத்தைச் சுவைப்பதுபோல வாய்க்குள் வைத்தான். எனக்குப் பிடித்தமான காட்சி. எதிர்பாராத மகிழ்ச்சியின் இன்ப அதிர்ச்சியில் நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘’நான் வேலைபார்த்த ஒரு வீட்டில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.’’ என்றான், ராஃபேல்.
‘’இங்கே பார்.’’
அவன் சிறிது ஊன்றி நின்று, காலை நேராக நீட்டி, உயர்த்தி, மேலாக எழும்பிக் குதித்து, அவனது மொத்த உடம்புமே திண்ணென ஒரு அழகாக, உதைத்தான். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது; அதுவரையிலும் மற்றொருவருக்குள் என்னை அடையாளங் காண்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லை.
ராஃபேலும் நானும் என்வீட்டுப் பின்பக்கத்தில் உயரமான காங்கிரீட் கழிவுநீர்த் தொட்டி மீதிருந்து புல்தரைக்குக் குதித்துக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்தோம். அடிவயிற்றை எக்கிக் கால்களை நீட்டி நிமிர்த்து, விரல்களைத் துல்லியமாக விரித்து விரைக்குமாறு ராஃபேல் எனக்குச் சொன்னான்; எப்படி மூச்சடக்கி, எப்படி மூச்சுவிடவேண்டுமென்று கற்றுக்கொடுத்தான். எனது மூடிய அறைக்குள்ளான முந்தைய முயற்சிகள் அனைத்தும் கருவிலேயே இறந்து பிறந்தனவாக நான் உணர்ந்தேன். இப்போது, வெளியே ராஃபேலுடன், என் கைகளால் காற்றை வெட்டிக் கிழித்தபோது, எனது பயிற்சி உண்மையானதாக, கீழேயிருந்த மெல்லிய புற்களிலிருந்து, மேலே உயர்ந்த வானம் முதல் எல்லைகளேயற்ற இந்த விண்வெளியையும் கூட என்னால் வெற்றிகொள்ளமுடியும் என்பதை உணரவைப்பதாக இருந்தது. இதுவேதான் உண்மையில் நிகழ்ந்தது. ஒருநாள் நானும் கறுப்பு பெல்ட் வாங்கிவிட முடியும். சமையலறை வாசலுக்கு வெளியே உயரமாக ஒரு திறந்த மேடைத் திண்டும் அதிலிருந்து இறங்க ஆறு படிகளும் இருந்தன. அந்த மேடையிலிருந்து அதன் ஆறு படிகளையும் தாண்டிப் பறந்து குதித்து, பறக்கும் நிலையிலேயே உதைக்கும் ஒரு முறையினைச் செய்து பார்க்க விரும்பினேன். ‘’வேண்டாம், அந்த மேடை மிகவும் உயரமானது’’ என்றான் ராஃபேல்.
வார விடுமுறை நாட்களில், அம்மாவும் அப்பாவும் என்னை விட்டுவிட்டு, அலுவலர் மகிழ் மன்றத்துக்குச் சென்றுவிட்டால், நானும் ராஃபேலும் புரூஸ் லீ காணொலிப்படங்களை, ‘’பார், பார், அதை நன்றாகக் கவனித்துப் பார்’’ என ராஃபேல், சுட்டிக்காட்டிப் பரபரத்துச் சொல்லச் சொல்லப் பார்த்துக்கொண்டேயிருப்போம். அந்தப் படங்களை அவனது கண்கொண்டு பார்க்கும்போது, அவை புதிதாகத் தெரிந்தன. நான் வெறுமனே திறமையானவை என்று நினைத்திருந்த சில அசைவுகள், அவன் `கவனித்துப் பார்` என்று சொன்னபோது ஒளிமிக்கதாக மிளிர்ந்தன. உண்மையில் எது முக்கியமானதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவனுடைய அறிவுநுட்பம் அவனது மேனி முழுவதிலுமே எளிதாகப் படர்ந்திருந்தது. சங்கிலிக்கட்டை8 ஆயுதத்தை புரூஸ் லீ சுழற்றும் காட்சிகளை, காணொலி நாடாவைப் பின்பக்கமாகச் சுழலச் செய்து, மீண்டும் ஓடவிட்டுக் கண்கொட்டாமல் பார்த்து, அந்த மரக்கட்டை மற்றும் உலோக ஆயுதம் பலமாகத் தாக்குகின்ற தன்மையை, அவன் உள்வாங்கிக்கொண்டிருப்பான்.
‘’எனக்கும் ஒரு சங்கிலிக்கட்டை வைத்துக்கொள்ளவேண்டுமென்று ஆசையாக இருக்கிறது,’’ என்றேன், நான்.
‘’அதைப் பயன்படுத்துவது மிகக் கடினம்,’’ என ராஃபேல் உறுதியாகச் சொன்னான். அப்படியொன்றின் மீது ஆசைப்பட்டதற்காக நான் சிறிது வருத்தப்பட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.
அதற்குப் பின்னர், சில நாட்களிலேயே, ஒருநாள் நான் பள்ளியிலிருந்து திரும்பியபோது, ‘’இங்கே பார்’’ என்றான், ராஃபேல். நிலையடுக்கிலிருந்து சங்கிலிக்கட்டை ஒன்றை – பழைய தரை துடைக்கும் கோலிலிருந்து வெட்டியெடுத்த இரண்டு மரக்கட்டைகளைச் சீவித் தேய்த்து, இழைத்துப் பளபளப்பாக்கி, இரண்டையும் ஒரு கம்பிச் சுருளால் பிணைத்திருந்ததை, வெளியே எடுத்தான். வீட்டு வேலையெல்லாம் செய்து முடித்துவிட்டு, ஒழிந்த நேரத்தில் குறைந்தது ஒரு வாரமாகவாவது அதைச் செய்திருக்கவேண்டும். அதை எப்படிச் சுழற்றுவதென்று எனக்குச் செய்து காட்டினான். அவனது அங்க அசைவுகள் புரூஸ் லீயைப் போலில்லாமல் அலங்கோலமாகத் தோன்றின. சங்கிலிக்கட்டையை எடுத்துச் சுழற்றினேன், ஆனால், அது நேராக எனது மார்பில் தாக்கிவிட்டுத்தான் நின்றது. ராஃபேல் சிரித்தான். ‘’கையில் எடுத்ததும் அப்படியே ஆட்டம் ஆடிவிடலாமென நினைத்தாயா? அதற்கெல்லாம் நிரம்பநாள் பழகவேண்டும்.’’ என்றான், அவன்.
பள்ளியில், வகுப்புகளில் உட்கார்ந்திருக்கும்போது சங்கிலிக் கட்டையின் வழவழப்பான மென்மையை என் உள்ளங்கைகளில் உணர்ந்தேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பின், ராஃபேலுடன்தான் எனது உண்மையான வாழ்க்கை தொடங்கியது. நானும் ராஃபேலும் எவ்வளவுக்கு நெருக்கமாக இருந்தோம் என்பதை என் அப்பா,அம்மா கவனிக்கவில்லை. நான் வீட்டுக்கு வெளிப்பக்கமாக, விளையாடத் தொடங்கியிருந்தேன் என்பதாகவும், பின்புறத் தோட்டத்தில் ராஃபேல் களையெடுத்துக்கொண்டோ, தண்ணீர்த் தொட்டியில் பாத்திரம் கழுவிக்கொண்டோ இருந்ததாகவுந்தான் நினைத்திருந்தனர்.
ஒருநாள் பிற்பகலில், கோழி ஒன்றை உரித்து முடித்திருந்த ராஃபேல், புல்வெளியில் தனியாகக் குங்ஃபூ பழகிக்கொண்டிருந்த என்னை இடைமறித்தான். ‘’ம், அடி!’’ என்றான். இருவருக்குமான குங்ஃபூ தொடங்கியது. அவன் வெறுங்கைகளோடு; நான் எனது புதிய ஆயுதத்தைச் சுழற்றிக்கொண்டு. அவன் என்னைக் கடுமையாக நெருக்கித் தள்ளினான். சங்கிலிக்கட்டையின் ஒரு முனை அவனது முழங்கையில் தாக்கியதும், வியப்படைந்ததாகத் தோன்றிய அவன், அதைச் சுழற்றும் திறமை எனக்கில்லையென்ற நினைப்பினை விட்டுவிட்டது போல் திருப்தியைக் காட்டினான். நான் மீண்டும் மீண்டுமாகச் சுழற்றினேன். அவன் விளையாட்டாக, தாக்குவதுபோல் ஏமாற்றிப் பொய்யாக உதைத்தான். நேரம் போனதே தெரியவில்லை. முடிவில் இரண்டு பேரும் மூச்சு வாங்கி, இளைத்துக்கொண்டே சிரித்தோம்.; அந்தப் பிற்பகல் மாலையில் அவன் அணிந்திருந்த அரைக்காற்சட்டை அவனுக்கு எவ்வளவு சிறியதாக இருந்ததென்றும், அவனது திண் தசைகள் கால்களோடு எப்படிக் கயிறு, கயிறாக முறுக்கிக் கிடந்தன என்பதும் எனக்கு இப்போதும் நன்கு நினைவிருக்கிறது
வார இறுதி விடுமுறை நாட்களில் நான் பெற்றோருடன் தான் மதிய உணவு சாப்பிட்டேன். நான் எப்போதுமே அவர்களுடைய தேர்வுக்கேள்விகள் என்னை நோக்கித் திருப்பும் முன் தப்பித்துவிடும் கனவுகளோடு, வேகவேகமாக உண்பேன். ஒருநாள் மதிய உணவின்போது, ராஃபேல் வேகவைத்த சேனைக்கிழங்கின் வெள்ளை வட்டுகளைக் கீரைப்படுகையின் மேலாக அடுக்கிப் பரிமாறினான்; பின்னர் கனசதுரங்களாக வெட்டிய அன்னாசியும் பப்பாளியும்.
‘‘காய்கறிகள் கல்,கல்லாக இருக்கின்றன.’’ என்றாள், அம்மா. ‘’நாங்கள் என்ன, புல் மேய்கிற ஆடுகளா?’’ அம்மா அவனை ஏறிட்டு நோக்கிவிட்டுக் கேட்டாள். ‘’உன் கண்ணில் என்னடா, கோளாறு?’’
சமையலறையில் ஏதாவது மோசமான வாடையை அவள் கண்டுவிட்டால், அவள் கேட்பாள், ‘’உங்கள் மூக்கில் என்ன இழவு பெரிதாக அடைத்துக்கொண்டிருக்கிறது?’’ இது, அதைப்போன்ற, வழக்கமான, குத்திக் காயப்படுத்தும் சாடல் இல்லையென்பதை உணர்ந்துகொள்ள எனக்கு ஒரு நிமிடம் பிடித்தது. ராஃபேலின் கண்களின் வெண்திரைகள் சிவந்து தோன்றின. வழக்கமற்ற, வேதனைமிக்க சிவப்பு. பூச்சி ஏதோ கண்ணில் விழுந்துவிட்டதென அவன் முனகினான்.
‘’இது அப்பல்லோ மாதிரி இருக்கிறது,’’ என்றார், அப்பா.
அம்மா, நாற்காலியைப் பின்பக்கமாகத் தள்ளிவிட்டு, அவன் முகத்தைக் கூர்ந்து பாத்தாள். ‘’ஆமா! அதேதான். உன் அறைக்குப் போய்விடு. அங்கேயே இரு.’’ என்றாள்.
தட்டுகளை எடுத்துவிட்டுச் சுத்தம் செய்துவிடலாமேயென, ராஃபேல் சிறிது தயங்கினான்
‘‘போய்த் தொலை!’’ ‘’அந்த இழவை எங்களுக்கெல்லாம் கொடுத்துத் தொலைக்கும் முன் போய்ச்சேர்.’’ என்றார், அப்பா.
குழம்பிப் போனவனாகத் தோன்றிய ராஃபேல், மேசையிலிருந்தும் சிறிது விலகினான். அம்மா, அவனை மீண்டும் அழைத்துக் கேட்டாள், ‘’ஏய், இங்கே வா, இதற்கு முன்னால் இது போல வந்திருக்கிறதா?’’
‘’இல்லை, அம்மை.’’
‘’இது, கன்ஜங்க்டிவா9, அதுதான் உன் கண்ணுக்கு மேலாக மூடிப் படர்ந்திருக்கும் படலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று.’’ என்றாள், அம்மா. அவளது இக்போ10 வார்த்தைகளின் நடுவே ` கன்ஜங்க்டிவா` அழுத்தமாகவும் அபாயமாகவும் ஒலித்தது. அம்மா தொடர்ந்தாள், ‘’உனக்காக மருந்து வாங்கப் போகிறோம். தினமும் மூன்று முறை அதைக் கண்களில் போட்டுக்கொண்டு, உன் அறையிலேயே அடைந்துகொள். முழுவதும் குணமாகும் வரை சமைக்காதே, வெளியேயும் வராதே.’’ பின்னர் என்னிடம் திரும்பி, ‘’ஒகென்வா11, அவன் அருகில் போய்விடாதே, அப்பல்லோ மிக மோசமாகத் தொட்டதும் தொற்றிக்கொள்ளக் கூடியது.’’ என்றாள். பேருக்குச் சொல்வதான அம்மாவின் தொனியிலிருந்து நான், ராஃபேலின் அருகில் போவதற்கு எந்த அவசியமும் இருப்பதாக அவள் கணித்திருக்கவில்லையென்பது தெளிவாகவே தெரிந்தது.
பின்னர், அப்பாவும் அம்மாவும் நகருக்குள்ளிருந்த மருந்தகத்துக்குக் காரில் போய், கண்ணுக்கான ஒரு புட்டி சொட்டு மருந்தோடு வந்தனர். அப்பா அதை எடுத்துக்கொண்டு வீட்டின் பின்புறம் வேலைக்காரப் பையன்களுக்கென இருந்த குடியிருப்பில் ராஃபேலின் அறைக்கு ஏதோ வேண்டாவெறுப்போடு போருக்குச் செல்பவரைப் போலப் போனார்.
அன்று மாலை, என் பெற்றோருடன் ஓபல்லோ சாலை13யில் இரவு விருந்துக்காக `அகாரா12 (வடை) வாங்கச் சென்றேன்; நாங்கள் திரும்பி வந்தபோது, முன்கதவைத் திறக்கவும், வசிப்பறையின் திரைகளை இழுத்து மூடவும், விளக்குகளை அணைக்கவும் ராஃபேல் இல்லாதது எப்படியோ இருந்தது. அமைதியான சமையலறையில் எங்கள் வீடு, அதன் வாழ்க்கையை இழந்து விட்டது போலத் தோன்றியது. அப்பாவும் அம்மாவும் அவர்களுக்குள்ளாகவே மூழ்கிப்போனதும், நான் பையன்களின் குடியிருப்புக்குப் போய், ராஃபேலின் அறைக்கதவைத் தட்டினேன். அது, சிறிதாகத் திறந்தேயிருந்தது. அவன் மல்லாந்து படுத்திருந்தான். அவனது சிறிய படுக்கை, சுவரினை ஒட்டி நெருக்கித் தள்ளப்பட்டிருந்தது. நான் உள்ளே வந்ததும், திரும்பி வியந்தவன் எழுந்துவிட முயற்சித்தான். அவனுடைய அறைக்குள் இதற்கு முன் நான் போனதேயில்லை. கூரையில் தொங்கிய விளக்கின் வெளிச்சம் மங்கலான நிழல்களைத் தோற்றுவித்திருந்தது.
‘’என்ன, இது?’’ அவன் கேட்டான்.
‘‘ஒன்றுமில்லை. எப்படியிருக்கிறாயென்று பார்க்க வந்தேன்.’’
அவன் தோள்களைக் குலுக்கி, மீண்டும் படுக்கையில் படுத்தான். ‘’இது எப்படி வந்து சேர்ந்ததென்று எனக்குத் தெரியாது. என் பக்கத்தில் வராதே.’’ என்றான்.
ஆனால், நான் அவனை நெருங்கிச் சென்றேன்.
‘‘தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பிலிருக்கும்போது எனக்கும் அப்பல்லோ வந்திருந்தது.’’ என்றேன். ‘’சீக்கிரம் போய்விடும், கவலைப்படாதே, இப்போது, இரவுக்குச் சொட்டு மருந்து போட்டாயா?’’
அவன் தோள்களை மட்டும் குலுக்கிவிட்டு, எதுவுமே கூறவில்லை. சொட்டு மருந்துப் புட்டி திறக்கப்படாமலேயே மேசை மேல் இருந்தது.
‘‘இன்னும் போடவே ஆரம்பிக்கவில்லையா?’’ எனக் கேட்டேன், நான்.
‘‘இல்லை.’’
‘’ஏன்?’’
அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ‘’எனக்குப் போடத் தெரியாது. என்னால் முடியவில்லை.’’
ஒரு வான்கோழியைக் கிழித்துக் குடலெடுக்கிற ராஃபேலுக்கு, ஒரு மூட்டை அரிசியை ஒற்றை ஆளாகத் தூக்கிவிடுகிற ராஃபேலுக்குக் கண்ணில் சொட்டு மருந்து இட முடியவில்லை. முதலில் நான் மலைத்து வியப்புற்றேன்; பின்னர் வேடிக்கையாகத் தோன்றியது; அதற்கும் பின்னர் தான் இரக்கமாக உணர்ந்தேன். அவனது அறையைச் சுற்றிப் பார்த்தேன்; அது எவ்வளவு வெறுமையாக இருந்ததென்று அதிர்ச்சியாக இருந்தது. சுவரோடு நெருக்கிப் போடப்பட்டிருந்த ஒரு படுக்கை, நீண்டு ஒடுங்கிய ஒரு மேசை, மூலையில் இருந்த ஒரு சாம்பல் நிறத் தகரப்பெட்டி, அதற்குள் தான் அவனது அனைத்து உடைமைகளும் இருக்குமென்று யூகித்துக் கொண்டேன்.
‘‘உன் கண்ணில் நான் மருந்து போட்டுவிடுகிறேன்.’’ என்று சொல்லிப் புட்டியை எடுத்து அதன் மூடியைத் திருகித் திறந்தேன்.
‘‘என் பக்கத்தில் வராதே,’’ என மீண்டும், மீண்டும் சொன்னான், அவன்.
நான் ஏற்கெனவேயே அவனை நெருங்கிவிட்டிருந்தேன். அவன் மீது குனிந்தேன். அவன் கட்டுப்படுத்த முடியாத பயத்தில் விழிக்கத் தொடங்கினான்.
‘’குங்ஃபூ போல மூச்சு எடு,’’ என்றேன், நான்.
அவன் முகத்தைத் தொட்டு, இடது கண்ணின் கீழ்ப்பக்க இமையை மெதுவாக இழுத்து, சொட்டு மருந்தினை அவன் கண்ணுக்குள் இட்டேன். அடுத்த இமையை நான் மேலும் அழுத்தமாகப் பிடித்திழுக்கவேண்டியிருந்தது; அவ்வளவுக்கு இறுக மூடியிருந்தான், அவன்.
‘‘அவ்வளவுதான்,’’ என்றேன், நான். ‘’மன்னித்துக்கொள்’’ என்றான், அவன்.
அவன் கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான்; அவனது முகத்தில் ஏதோ ஒன்று அற்புதமாகச் சுடர்விட்டது. அதற்கு முன்புவரையில், நான் அப்படியொரு போற்றுதலுக்குரிய ஒருவனாக என்னை ஆட்படுத்திக்கொண்டதில்லை; அப்படி உணர்ந்ததுமில்லை. அது எனக்கு அறிவியல் வகுப்பினை, ஒளியை நோக்கிப் பசுமையாகத் துளிர்க்கும் புதிய சோளக்கதிரை நினைவூட்டியது. அவன் எனது கையைத் தொட்டான். நான் எனது அறைக்குச் செல்வதற்காகத் திரும்பினேன்.
‘’பள்ளிக்குச் செல்லும் முன்னால், வந்து பார்க்கிறேன்.’’ என்றேன், நான்.
காலையில் அவனது அறைக்குள் மறைவாக நுழைந்து, கண்ணுக்கு மருந்து போட்டுவிட்டு, மறைவாக வெளியேறி, பள்ளிக்குச் செல்வதற்காக, அப்பாவின் காரில் போய் உட்கார்ந்துவிட்டேன்.
மூன்றாவது நாள், ராஃபேலின் அறை எனக்குப் பரிச்சயம் மிக்கதாக, என்னை வரவேற்பதாக, பொருட்களின் ஆரவாரக் கூச்சல் இல்லாததாக இருந்தது. அவனுக்கு மருந்து போடும்போதுதான், அவனைப்பற்றிய சில விஷயங்களைக் கண்டுகொண்டேன். மேலுதட்டின் மீது கருமை படரத் தொடங்கியிருந்தது; கழுத்துக்கும் தாடைக்கும் நடுவிலிருந்த இடைவெளியில் ஒரு தேமல். நான், அவனது படுக்கையின் விளிம்பில் அமர்ந்திருக்க, இருவரும் `குரங்கின் நிழலுக்குள் பாம்பு` திரைப்படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்தப்படத்தைப் பற்றி எத்தனையோ முறை பேசியிருக்கிறோம்; என்றாலும் ஏற்கெனவே பேசிய விஷயங்களை, அப்போது அவனது அறையின் அமைதியில் பேசியபோது இரகசியங்கள் போலத் தோன்றியது. எங்கள் குரல்கள் அநேகமாக, ஓசையடங்கி, மிகத் தாழ்ந்திருந்தன அவனது உடலின் வெப்பம் என் மீதும் வெப்பத்தை ஏற்படுத்தியது.
` பாம்பு` பாணிக்குச் செயல்விளக்கமளிக்க, அவன் எழுந்தான்; பின்னர், இருவரும் சிரித்தோம்; அவன் என் கைகளைப் பிடித்துக்கொண்டான்; பின்னர் என்னைப் போக அனுமதித்து, என்னிடமிருந்தும் சிறிது விலகினான்.
‘’இந்த அப்பல்லோ ஒழிந்துவிட்டது,’’ என்றான், அவன்.
அவன் கண்கள் தெளிவாக இருந்தன. அவன் இவ்வளவு சீக்கிரம் குணமாகிவிட்டானேயென்று எனக்குத் தோன்றியது.
ஒரு திறந்த வெளியில் ராஃபேல் மற்றும் புரூஸ் லீயோடு நானும் சேர்ந்து ஒரு சண்டைக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டுகொண்டிருந்தேன். நான் தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும் கண்களைத் திறக்கமுடியவில்லை. கைகளால் இமைகளை விலக்கிப் பிரித்தேன். கண்கள் எரிந்து அரிப்பெடுத்தன. இமைத்துத் திறந்த ஒவ்வொரு முறையும், வெளிறிய நிறத்தில் அருவருப்பான திரவம் சுரந்து இமைமுடிகளை நனைத்து, ஒரு படலமாகப் படிந்தது. கண் இமைகளுக்குள் சூடான வறுத்த மணல் சிக்கிக்கொண்டது போல் உறுத்தியது. என் உடலுக்குள்ளே வெப்பமாகக் கூடாத ஒன்று, வெப்பமாகிக்கொண்டிருப்பதாக நான் பயந்தேன்.
‘’இந்த இழவை எதற்காக என் வீட்டுக்குள் கொண்டுவந்தாய்? ஏன் கொண்டுவந்தாய்?’’ அம்மா, ராஃபேலைத் திட்டினாள். அவளுடைய மகனுக்கு அப்பல்லோவைக் கொடுக்கவேண்டுமென்பதற்காகவே, சதி செய்து, ராஃபேல் போய் அப்பல்லோவைப் பிடித்துக்கொண்டு வந்ததாக அவள் சொல்வது போலிருந்தது. ராஃபேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அம்மா திட்டும்போது, அவன் எந்தப் பதிலும் சொல்வதில்லை. அவள் படிக்கட்டின் உச்சியில் இருந்தாள்; ராபேல் கீழ்மட்டத்தில் நின்றிருந்தான்.
‘‘அறைக்குள்ளிருந்த அவன் எப்படி உனக்கு அப்பல்லோவைக் கொடுத்தான்?’’ அப்பா என்னைக் கேட்டார்.
‘’அது ராஃபேல் இல்லை. என் வகுப்பில் யாரிடமிருந்தோ வந்திருக்குமென்று நினைக்கிறேன்.’’ என்றேன், நான்.
‘‘அது யார்?’’ அம்மா கேட்கிறாளென்று எனக்குப் புரிந்தது. ஆனால், அந்த ஒரு கணத்தில் என் வகுப்புத் தோழர்கள் எல்லோருடைய பெயரையும் நான் மறந்திருந்தேன்.
‘’யார்?’’ அம்மா மீண்டும் கேட்டாள்.
‘’சிடி ஓபி,’’ என்று முதலாவதாக நினைவுக்கு வந்த பெயரைச் சொன்னேன். அவன் எனக்கு முன்வரிசையில் அமர்பவன். அவனிடம் எப்போதும் பழந்துணிகளின் வாடைதான் வீசும்.
‘’தலை வலிக்கிறதா?’’ எனக்கேட்டாள், அம்மா.
‘’ஆமாம்.’’
பனடால்14 எடுத்துவந்து என்னிடம் தந்தார், அப்பா. மருத்துவர் இக்போக்வேக்கு அம்மா தொலைபேசினாள். அப்பாவும் அம்மாவும் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். அப்பா கலக்கிக் கொண்டுவந்த மைலோ15 வை நான் குடிப்பதை அறை வாசலிலேயே நின்று இருவரும் கவனித்தார்கள். நான் விரைவாகக் குடித்து முடித்தேன். நான், மலேரியாவில் விழும் ஒவ்வொரு முறையும், கசக்கும் நாக்குடன் கண்களைத் திறக்கும்போதெல்லாம், அவர்களில் ஒருவர் என் பக்கத்திலேயே ஒரு நாற்காலியைப் போட்டு, அமர்ந்து ஏதாவது ஒரு புத்தகத்தை அமைதியாக வாசித்துக்கொண்டிருப்பதைக் காண்பேன். அவர்களை அந்த இக்கட்டிலிருந்தும் விடுவிப்பதற்காகவாவது, எனக்கு சீக்கிரம் குணமாகக்கூடாதாவென நினைப்பேன். இப்போது, அப்படி ஒரு கைவைத்த நாற்காலியை என் அறைக்குள் இழுத்துக் கொண்டுவந்துவிட மாட்டார்கள் என்று நம்பினேன்.
மருத்துவர் இக்போக்வே வந்து எனது கண்களில் கைமின் விளக்கொளியைப் பாய்ச்சினார். அவரது கிருமிகொல்லி மருந்து (யுடிகோலன்) நாற்றம் நிரம்பவே அதிகமாக இருந்தது. அவர் சென்றபிறகும் கூட மிக மோசமாகக் குமட்டுவதென நான் நினைக்கும் சாராய நாற்றத்தைப் போன்றதான, தலைவலியைக் கொண்டுவருகிற அந்த நாற்றத்தை உணர முடிந்தது. அவர் சென்ற பிறகு என் பெற்றோர் என் படுக்கை அருகிலேயே நோயாளிக்கான புனிதமேசை ஒன்றை – வெள்ளைத் துணி விரித்த ஒரு மேசை, அதன் மீது ஆரஞ்சு லூகோஜேடு15 புட்டி ஒன்று, நீலநிற குளுகோஸ் டப்பா ஒன்று, நெகிழித்தட்டில் புதிதாக உரித்த ஆரஞ்சுச் சுளைகள் – அமைத்தனர். அறைக்குள் அவர்கள் கைவைத்த நாற்காலியைக் கொண்டுவந்துவிடவில்லை; ஆனாலும் எனக்கு அப்பல்லோ இருந்த அந்த வாரம் முழுவதும் அவர்களில் யாராவது ஒருவர் வீட்டிலிருப்பது போல் பார்த்துக்கொண்டனர். என் கண்ணில் மருந்து ஊற்றுவதற்கு அவர்கள் முறைவைத்துக் கொண்டனர்; அம்மாவைவிட அப்பா, அநியாயத்துக்கு மோசமாக, அந்தப் பிசுபிசு திரவம் என் கன்னங்களில் வழியுமாறு ஊற்றினார். அவர்கள் ஒவ்வொரு முறையும் மருந்து போடுவதற்காக, அந்தப் புட்டியை என் முகத்துக்கு மேலாகப் பிடித்தபோதும், முதன் முதலாக ராஃபேலுக்கு மருந்து போடும்போது, அவன் கண்களில் தோன்றிய பார்வை என் நினைவுக்கு வந்து, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
அவர்கள், திரைகளை இழுத்து மூடி, எனது அறையை இருட்டாக்கினர். படுத்தே கிடந்ததில் நான் அலுத்துப் போனேன்; ராஃபேலைப் பார்க்க விரும்பினேன். ஆனால், என் நிலைமையை அவன் மோசமாக்கிவிடுவானென்று, அவனை என் அறைப்பக்கமே வரக்கூடாதென, அம்மா தடை விதித்திருந்தாள். அவன் வந்து என்னைப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்பினேன். ஒரு படுக்கை விரிப்பினை அப்புறப்படுத்துவதாக அல்லது குளியலறைக்கு ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வருவதான பாவனையில் உள்ளே, வந்துவிடலாம் தான். ஆனால், அவன் ஏன் வரவில்லை? அவன் ஒரு பேச்சுக்குக்கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. அவன் வார்த்தை ஒலிகளைக் கேட்டுவிட வேண்டுமென்று முயற்சித்தேன்; ஆனால், சமையலறை தூரத்திலிருந்தது; அதுவுமில்லாமல், என் அம்மாவோடு அவன் பேசும்போது, குரலை மிகவும் தாழ்த்திப் பேசுவான்.
ஒருமுறை கழிவறைக்குச் சென்றுவந்த பின், சமையலறைப் படிக்கட்டில் இறங்க முயற்சித்தேன். ஆனால், படிக்கட்டின் கீழாக அப்பா அங்கும் இங்குமாக உலவிக்கொண்டிருந்தார்.
‘’கேது16?’’ எனக்கேட்டார், அவர். ‘’சரியாகத் தானே இருக்கிறாய்?’’
‘’தண்ணீர் வேண்டும்.’’ என்றேன்.
‘’நான் கொண்டுவந்து தருகிறேன். நீ போய்ப் படுத்துக்கொள்.’’
ஒருவழியாக, என் அப்பாவும் அம்மாவும் ஒன்றாக வெளியே சென்றார்கள். தூங்கிக்கொண்டிருந்த நான், விழித்ததும், வீட்டின் வெறுமையை உணர்ந்தேன். சமையலறைப் படிக்கட்டில் ஓட்டமாக இறங்கினேன். அதுவும் வெறுமையாக இருந்தது. பையன்கள் குடியிருப்புக்குப் போயிருப்பானோ, அவன் பகலில் அங்கே போகக்கூடாதே, இப்போது அம்மா,அப்பா இல்லாததால், அங்கு போயிருப்பானோ என நான் நினைத்தேன். திறந்தவெளி மேடைத் திண்டுக்கு வந்தேன். என் பார்வையில் அவன் படும் முன்பாகவே, அவன் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்தது. தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில், ஒரு காலால் மண்ணில் அளைந்துகொண்டு, பக்கத்து வீட்டுப் பேராசிரியர் நவோசுவின் வீட்டு வேலைக்காரி ஜோசபினோடு பேசிக்கொண்டிருந்தான். பேராசிரியர் நவோசு, அவரது பண்ணையிலிருந்து அவ்வப்போது, முட்டைகள் அனுப்புவது வழக்கம். ஆனால், அதற்கான காசு மட்டும் பெற்றுக்கொள்ளவே மாட்டார். ஜோசபின் முட்டை கொண்டுவந்திருப்பாளோ? அவள் உயரமும் சதையுமாக இருந்தாள்; இப்போது, போகச்சொல்லிவிட்ட பிறகும் போக மனமில்லாமல் ஒட்டி, உரசுவது போன்ற மனநிலையில் இருந்ததாகத் தோன்றினாள். அவள் பக்கத்தில் ராஃபேல், வித்தியாசமாக – வளைந்து நெளியும் முதுகும், நடுங்கும் கால்களுமாக நின்றான். அவன் வெட்கத்தில் நின்றான். அவள், அவனுக்குள் அவளை மகிழ்ச்சிப்படுத்தும் விஷயங்களைக் காண்பதாக, ஒருவகையான அதிகாரம் செலுத்துவதான நோக்கில் பேசிக்கொண்டிருந்தாள். எனது பகுத்தறிவு மங்கி உய்த்துணர்வினை இழந்தது.
‘’ராஃபேல்,’’ நான் கத்தினேன்.
அவன் திரும்பினான். ‘’ஓ, ஒகென்வா, நீ கீழே வருவதற்கு அனுமதி கொடுத்துவிட்டார்களா?’’
நான் ஏதோ குழந்தை மாதிரி, நாங்கள் அவனுடைய மங்கலான அறையில் சேர்ந்து, உட்காராதது போலப் பேசினான்.
‘’பசி! எனக்குச் சாப்பாடு எங்கே?’’ அதுதான் முதலில் என் வாயில் வந்தது. ஆனால், அதிகாரத்தைக் காட்டுவதற்காக உரத்துக் கத்தினேன்.
வெகுவாகச் சிரித்துக்கொண்டிருக்கையில், நடுவிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் போல, ஜோசஃபின் முகம் சிறுத்தது. ராஃபேல் என் காதுகளில் விழாதபடி ஏதோ சொன்னான்; ஆனால், அது ஏமாற்றுவதான துரோகத்தின் ரகசியக் குரலாகத் தோன்றியது. அப்பா,அம்மாவின் கார் அப்போது உள்ளே நுழையவும், ராஃபேலும் ஜோசபினும் தூக்கிவாரிப்போட்டது போலாயினர். ஜோசபின் சுற்றுச் சுவருக்கு வெளியே ஓட, ராஃபேல் என்னை நோக்கி வந்தான். அவனது சட்டையின் முன்புறத்தில் சூப்பிலிருந்த தெறித்த பாமாயில் பட்டது போல ஆரஞ்சு நிறத்தில் ஒரு கறை தெரிந்தது. அப்பா,அம்மா மட்டும் வராமலிருந்திருந்தால், நான் அங்கே நிற்பதைப் பொருட்படுத்தாமலேயே, அவன் அப்போதும் தொட்டியின் அருகிலேயே நின்று அவளோடு ரகசியம் பேசிக் கொண்டிருந்திருப்பான்.
‘’உனக்குச் சாப்பிட என்ன வேண்டும்?’’ அவன்தான் கேட்டான்.
‘’ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?’’
‘’உன் பக்கத்திலேயே வரக்கூடாதென்று அம்மா சொல்லியிருந்தது, உனக்குத் தெரியும் தானே!’’
இதுபோலச் சாதாரண விஷயங்களையெல்லாம், அவன் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னையுந்தான், அவன் அறைக்குப் போகக் கூடாதென்று சொல்லியிருந்தார்கள். ஆனாலும், நான் போய்த் தினமும் அவன் கண்ணுக்கு மருந்து போட்டேனே!
‘’இந்த அப்பல்லோவை எனக்குத் தந்ததே, நீதான்,’’ என்றேன், நான்.
அவன், ‘‘சாரி,’’ என உயிரற்று உதிர்த்தபோது, அவன் கவனம் நிச்சயமாக வேறெங்கேயோ இருந்தது.
அம்மாவின் குரல் கேட்டது. அவர்கள் திரும்பி வந்ததிலும் எனக்குக் கோபம். ராஃபேலுடனான எனது நேரம் குறைக்கப்பட்டுவிட்டது; ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டுவிட்டது போலானதொரு உணர்வு எனக்குள் தோன்றியது.
‘’உனக்கு வாழைப்பழம் வேண்டுமா? அல்லது சேனைக்கிழங்கா?’’ என்னைச் சமாதானம் செய்வதற்காக அல்ல, எதுவுமே நடக்காதது போல, அவன் கேட்டான். என் கண்கள் மீண்டும் எரியத் தொடங்கின. அவன் படிகளின் மேல் ஏறி வந்தான். நான் அவனிடமிருந்து விலகுவதாக, விரைந்து மேடைத்திண்டின் விளிம்புக்குச் சென்றுவிட, எனது ரப்பர் செருப்புகள் தடுக்கி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன். குப்புற விழுந்து விடாமல் சமாளித்துக் கை கால்களை ஊன்றி நான்கு காலில் நின்றேன். எனது உடம்பின் கனத்தையே என்னால் தாங்கமுடியவில்லை; அழுகையை அடக்கமுயன்றாலும் அதையும் மீறிக் கண்ணீர் வழிவதை உணர்ந்தேன். அவமானத்தில் குறுகி, நான், அசையாமல் நின்றேன்.
என் பெற்றோர் வந்தனர்.
‘’ஒகென்வா,’’ அப்பா கத்தினார்.
என் கால் மூட்டில் கல் ஒன்று குத்திவிட, நான் தரையிலேயே நின்றேன். ‘’ராஃபேல் என்னைத் தள்ளிவிட்டான்.’’
‘’வாட்?’’ அப்பாவும் அம்மாவும் ஒருசேர, ஆங்கிலத்தில் கேட்டார்கள், ‘’வாட்?’’
நேரம் என்னவோ, இருக்கத்தான் செய்தது. அப்பா, ராஃபேலை நோக்கித் திரும்புவதற்கு முன்பாக, அம்மா, அவனை அடிப்பது போல் பாய்வதற்கு முன்பாக, எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு உடனே வீட்டுக்குப் போய்ச் சேரென்று கத்துவதற்கு முன்பாக, போதிய நேரம் இருக்கத்தான் செய்தது. நான் பேசியிருக்க முடியும். அந்த அமைதியைக் குலைத்து, இரண்டாக வெட்டிப் பிளந்திருக்க முடியும். அது ஒரு விபத்து எனச் சொல்லியிருக்க முடியும். நான் பொய் சொன்னதைச் சொல்லி, என் பெற்றோரை, இவன் ஏன் இப்படிச் செய்தானென்று ஆச்சரியத்தில் வாய்பிளக்கச் செய்திருக்கலாம்.♦

நன்றி : – http://www.newyorker.com/magazine/2015/04/13/apollo
குறிப்பு :-
பணம்பண்ணும் சடங்கு1 – moneymaking ritual – நரபலி கொடுத்தல் போன்றவை
கறிச்சாறு2 – stew காய்கறிகள், அவரை, போன்ற பயறுவகைகள், இறைச்சி, மீன் போன்றவை சேர்த்துச் செய்யப்படும் குழம்பு வகை
மேட்டியஸ் ரோஸ்3 – Mateus Rose போர்ச்சுக்கல் நாட்டு ஒயின்.
பிப்4 – Pip –ஏழு வயது அனாதைச் சிறுவன் வளர்ந்து பெரியவனாகின்ற கதையான, டிக்கன்ஸ் படைத்த `பெரும் எதிர்பார்ப்புகள்` (Great Expectations) நாவலின் கதைசொல்லும் பாத்திரம்.
ஜியுலு5 – Ezeulu – இக்போ மொழி பேசும் ஆப்பிரிக்க (நைஜீரியா) மக்கள் மத்தியில் கிறித்துவம் பரவிய வரலாற்றினை விவரிக்கும் சினுவா அச்செபேயின் `கடவுளின் அம்பு` (Arrow of God) என்ற யதார்த்த நாவலின் மையப் பாத்திரம்.
கறுப்பு அழகு6 – Black Beauty – அன்னா சீவெல் என்பவரால் 1877 ல் எழுதப்பட்ட ஆங்கில நாவல். 5 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்த நாவல் அதிக விற்பனை படைத்துள்ளதோடு, உலகின் அதிகம் படிக்கப்பட்ட நூல்களின் வரிசையில் 58 ஆக இடம் பிடித்துள்ளது. இந்த நாவல் விலங்குகள் நலத்தினைப் பாதுகாக்க வேண்டியது மற்றும் மனிதர்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.
தண்ணீர்க் குழந்தைகள்7 – The Water-Babies, A Fairy Tale for a Land Baby – 1862 – 63ல் ரெவரெண்ட் சார்லஸ் கிங்ஸ்லி என்பவரால் மேக்மில்லன் இதழில் ஆங்கிலத்தில் தொடராக எழுதப்பட்ட குழந்தைகள் நாவல். இங்கிலாந்தில் இப்போதும் படிக்கப்படும் இந்நாவல் குழந்தைகள் இலக்கியத்தில் அதன் இடத்தினை இன்றளவும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சங்கிலிக்கட்டை8 – nunchaku (Japanese: “chainsticks” in English) சங்கிலி அல்லது கயிற்றால் பிணைக்கப்பட்ட இரு மரக்கட்டைகள் . இது ஒரு ஜப்பானியப் போராயுதம்.
கன்ஜங்க்டிவா9 – Conjunctiva – இமையையும் விழிக் கோளத்தையும் இணைக்கும் படலம்
இக்போ10_ Igbo – நைஜீரியாவில் பேசப்படும் ஒரு மொழி
ஒகென்வா11 – Okenwa – நைஜீரியாவின் இக்போ மொழியிலுள்ள ஆண்பாற் பெயர்களில் ஒன்று.
அகாரா12 – akara – ஊற வைத்த பீன்ஸ் பயற்றினை அரைத்தெடுத்த மாவோடு, நறுக்கிய வெங்காயம், பொடித்த மிளகு, உப்பு மற்றும் பொடியாக அரிந்த இறால் அல்லது ஏதாவதொரு உயிரிப் புரோட்டீன் கலந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் நைஜீரிய வகை பீன்ஸ்-எறா வடை.
ஓபல்லோ சாலை13 – Obello Road, Nsukka, Enugu, Nigeria – ஓபல்லோ சாலை, நைஜீரியாவின் எனுகு மாநிலத்திலுள்ள நசுக்கா நகரிலுள்ளது.
பனடால்14 – Panadol – வலி மற்றும் காய்ச்சல் குறைக்கும் மருந்தான பாரசெட்டமால் (மெட்டாசின்) என்பதன் கிளாக்சோஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பின் வணிகப்பெயர்.
லூகோஜேடு15 – Lucozade – (Glucozade என்பதிலிருந்து உருவானது.) விளையாட்டு மற்றும் சக்திக்கான பானம்.
கேது16 – Kedu –`என்ன` என்பதற்கான இக்போ மொழிச் சொல்.
மலைகள் இணைய இதழ் மே. 02 2015,  இதழ் 73ல் வெளியாகியுள்ளது.
ச.ஆறுமுகம் - அலைபேசி 9442944347 மின்னஞ்சல் arumughompillai@gmail.com

No comments:

Post a Comment