Tuesday, 5 January 2016

தென்கொரியச் சிறுகதை - குடிநோய் (Drunkard)

குடிநோய் (The Drunkard)
தென்கொரிய ஆங்கிலம் : சாய் இன்-ஹோ CHOI IN-HO (தென் கொரியா)
தமிழில் ச.ஆறுமுகம் 

 சியோலில் 1945 – ல் பிறந்த, தென்கொரிய எழுத்தாளர் சாய் இன்-ஹோ, யோன்சீ பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் பட்டம் பெற்ற உடனேயே புனைகதைப் படைப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். 1963ல் அவரது முதல் படைப்பான `சுவர்த் துளை ஒன்றின் வழியாக` என்ற குறுநாவல் உள்ளூர் இதழ் ஒன்றின் பரிசினைப் பெற்றது. அதிவிற்பனைப் புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ள அவர் 1970 களில் கொரியாவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராகிவிட்டார். உலகத் திறனாய்வுக் களங்களைப் போலவே, கொரியத் திறனாய்வுக் களங்களிலும், அதிவிற்பனைப் படைப்புகள் சீரிய இலக்கியத் தன்மை கொண்டனவை அல்ல என்ற அணுகுமுறை பொதுத்தளத்தில் இருந்தாலும், தீவிர இலக்கியப் படைப்புகளையும் அளிக்கின்ற திறன் கொண்டவராக சாய் இருந்தார். இருப்பினும் அவருடைய அனைத்துப் படைப்புகளுமே  மனித வாழ்க்கையைப் பற்றிய அவரது பார்வையின் ஒரே அடிப்படை கொண்டவையாகவே உள்ளன. மனித சமூகம் உடன் பாடற்ற முரண்பாடுகள், ஒழுக்கச் சீர்கேடுகள், மற்றும் போலித்தனமுடையதாகவே உள்ளது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். கொரியாவில் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்த சர்வாதிகாரத்தின் அலுவல் பூர்வமான கருத்தியலும் அதனையே வெளிப்படுத்துவதாகவும், அது தோற்றுவிக்கும் எதிர் விளைவுகளான பராதீனப்படுதல் அல்லது ஒழுக்கத்துறையின் அனைத்தையும் எதிர்க்கின்ற உள்ளீடற்ற மறுப்புவாதம் என்பன, உண்மையில் துன்பியல் ஆழங்களிலிருந்தும் தப்பிக்க முயற்சிக்கிற தப்பித்தல் வாதத்தின் மறு வடிவங்களே என அவர் கூறுகிறார்.  அவற்றிலிருந்தும் மீண்டெழ முயற்சித்தலும் எதிரெதிர் நிலைகளின் உண்மையான மீளிணக்கமாக இல்லாமல் ஒரு சமரசத்திற்கே இட்டுச் செல்வதாகவும் கூறுகிறார். அதே நேரத்தில் என்ன விலை கொடுத்தாகிலும், எத்தகைய வேதனை அனுபவித்தாலும், தனிநபர்கள்,  அவர்களது மனிதநேயத்தினை தக்கவைத்துக்கொள்வதன் மூலமே இச்சூழலினை வெற்றிகரமாக முறியடிக்க இயலுமென அவரது சில படைப்புகளில் குறிப்பிடுகிறார்.
அவரது முதல் நாவல் `நட்சத்திரத்தின் சொந்த நகரம்` 1972 ல் வெளியாகி பரபரப்பான விற்பனையைக் கண்டது. அதே ஆண்டிலேயே அதைத் தொடர்ந்து வெளி வந்த இரண்டாவது நாவல் `அன்னியனின் அறை`. 1980க்குள் இருபது நாவல்களைப் படைத்துள்ள அவர் அடுத்த பத்தாண்டுகளில் மேலும் பத்து நாவல்கள் படைத்துள்ளார். `மாபெரும் கண்டுபிடிப்பாளர் தோதானி` என்ற கதைத் தொகுப்பு 1992ல் வெளிவந்தது. அவரது 68 வது வதில் 25.09.2013 ல் மறைந்தார்.    
தற்போது தமிழாக்கப்படும் `drunkard` சிறுகதை அவரது சிறந்த படைப்புகளில் ஒன்று எனக் குறிப்பிடப்படுகிறது.
@@@@@@
 
மதுவகத்தில் சிறுவன் ஒருவனின் தலை திடீரென முளைத்தது.
‘’மாலை வணக்கம்.’’
அந்தச் சிறு பையன் கதவருகில் அமர்ந்திருந்த பெருங்குடியர்களுக்கு வணக்கம் தெரிவித்தான்.
அவர்களில் பலராலும் அவனைப் பார்க்க முடியவில்லை; ஆனாலும், அவர்களில் ஒருவர் மட்டும் அவனைத் தற்செயலாகக் காணநேர்ந்தது.
‘‘இங்கே பாருங்கள், மக்களே! அந்தப் பையனைப் பாருங்களேன்!’’
முதலில் அவனைப் பார்த்தவனுக்கும் அப்போது காலியாகியிருந்த தொடுகறியைப் பற்றித்தான் அதிகம் பேசத்தோன்றியது.
போதை மிகுந்த மதுவுடன் எங்கோ, வெகு உயரத்துக்குச் சென்றுவிட்டிருந்த அந்தக் குடியர்களின் கண்கள் நெருப்புத் துண்டங்களாய்ச் சிவந்து தோன்றினாலும் மயக்கத்தில் மங்கிப்போன பார்வையால், திறந்திருந்த வாசல் வழியாகப் பனிக்காலக் குளிருடன் உள்ளே நுழைந்துவிட்ட அந்தச் சிறுவன் எந்த மாதிரியான பையன்  என்பதைக் கண்டுகொள்வது கடினமாகத்தானிருந்தது.
‘‘ யார்? அந்தப் பயல்!’’
போதையில் தடுமாறும் ஐந்தாறு பார்வைகள் அந்தக் கந்தல் சிறுவன் மீது நிலைத்தன.  எல்லாப்பார்வைகளும் அவன் மீதே குவியக் குவிய, குப்பைக் குவியலைக் கிளறும்போது பிடிபட்டவனைப்போல், அவன் தடுமாற்றமும் குழப்பமுமாகப் பின்வாங்கும் முயற்சியில் பின்பக்கமாக நெளிந்தான். அவன் மிகமிக அருவருக்கத்தக்க ஒரு சிறுவனாக இருந்தான்.
சொறி சிரங்குகள் நிறைந்த அவன் தலை விளம்பரத்தட்டியைப்போல் ஒழுங்கற்றிருந்தது; சீன பாணிக் குட்டைக்கைச் சட்டைக்குள்ளிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவனது சிறு கைகள் அழுக்காகிக் கெட்டிதட்டி, துப்பாக்கிக் குண்டுகளின் பளபளக்கும் கவசம் போலக் கறுத்துத் தோன்றின.
‘’டேய், பையா, நாம், ஒரு வாய் குடிக்கலாமா?’’ சிறுவனை முதலில் பார்த்தவன் மதுப் புட்டியை உயரத் தூக்கி ஆட்டிப் பையனுக்கு ஆசை காட்டினான்.
‘’இல்லை. வேண்டாம். உங்களுக்கு நன்றி.’’
திடீரென்று அவன், எந்நேரமும் வெடித்து அழத்தொடங்கிவிடுவான் போல  அவனுடைய வடமேற்கத்தியப் பரந்த உச்சரிப்பில் சத்தமாக உரக்கக் கத்தினான்.
‘’என் அப்பாவை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.’’
‘’அது எனக்குத் தெரியுமடா, பயலே!’’
அதே மனிதன் தான் பதிலுக்குப் பேசினான்.
‘’எனக்குத் தெரியும். நீ உன் அப்பாவைக் கூட்டிப்போகத்தான் வந்திருக்கிறாய். எங்களுக்கு எல்லாம் தெரியும், ஹஹ் ஹஹ் ஹா! எங்களை மாதிரி பெரியவர்களுக்கு எல்லாமே தெரியும். அப்படித்தானே, நண்பர்களே?’’
தோள்களைக் குலுக்கிக் கொண்ட அவன், நண்பர்களின் ஒப்புதலைக் கோரினான். அவர்களும் இந்த வித்தியாசமான பையன் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தனர். அரை வேக்காட்டு ஏமாற்றுக்காரனைப்போல ஒரு கோமாளிச் சிரிப்பினை வெடிப்பாகச் சிரித்து, ஒரு நண்பன் அதை ஆமோதித்தான்.
‘’ ஹேய் , எங்கள் வயது ஆட்களுக்கு எல்லாமே தெரியும். பையா, உலகம்  ஏன் சுற்றுகிறது, தெரியுமா?’’
‘’ எனக்குத் தெரியாது.’’
எல்லாரையும் குடிக்கச் சொல்லித்தான் உலகம் சுற்றுகிறது. சிறு குழந்தாய்! எல்லோரையும், `குடி! குடி!` என்று குடிக்கச் சொல்வதற்காகத்தான் இந்த பூமிக்கோளம் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. நன்றாகப் புரிந்துகொள். சரிதானா?’’
‘’சரி.’’
‘’ நான், உனக்கு வேறொன்றும் சொல்லித் தருவேன், புத்திசாலிப் பையா!
முதல் மனிதன் குழந்தையைக் குனிந்து நோக்கிக் குழறினான்.
‘’சிறுநீர் கழிக்கும்போது நாய் ஏன் காலை மேலே தூக்கிக்கொள்கிறதென்று உனக்குத் தெரியுமா?’’
‘’அது எனக்குத் தெரியும்.’’
அந்தச் சிறு குழந்தை ஏளனமாகப் புன்னகைத்தது.
‘’அது, இரண்டு கால்களையும் தூக்கினால் கீழே விழுந்துவிடும்.’’
‘’சரிதான். நிச்சயமாக நீ ஒரு அறிவாளிக் குழந்தை தான். ஒருமுறை சொல்லிக்கொடுத்ததை எப்போதுமே மறக்காத திறமைசாலிதான்.’’
‘’உன் அப்பா என்ன வேலை பார்க்கிறார்?’’ இன்னொரு வேற்று மனிதன் அவனுடைய உணவுக்குச்சிகளால் பச்சை–பீன் இனிப்பு அடையைத்  துண்டுபடுத்திக்கொண்டே, அந்தச் சிறுவனிடம் கேட்டான்.
‘’சமையல் சிங் ஹ்யூன். அவர், சமையல் சிங் ஹ்யூன்’’
திடீரென அக் குழந்தையின் முகம் கலைக்களஞ்சியப் பக்கம் போல நெருக்கமான வரிகளாக மாறியது. அவன் ஒரு பொம்மைப் படைவீரனைப் போல முன்பக்கமாக நெளிந்து முன்னேறினான்.
‘’நீங்கள் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். அவரது புருவங்களுக்கு மேலாக ஒரு பெரிய கழலைக்கட்டி இருக்கிறது. அவர் மீது எப்போதும் ஒரு வெங்காய நாற்றம் இருக்கும். அவர் எப்போதும் அவருடைய இடுப்புப் பையில் வெள்ளைப் பூண்டுகளை வைத்திருப்பார். அதோடு குடிக்கின்ற ஒவ்வொரு முறையும் அழுகின்ற வழக்கம் கொண்டவர்.’’
‘’அது சரி, நீ ஏன் உன் அப்பாவைத் தேடிக்கொண்டிருக்கிறாய்?’’
அமைதியாக அவனது மதுவை கிண்ணத்திலிருந்தும் அருந்திக்கொண்டிருந்த வண்ணச் சாயம் தோய்ந்த படைவீரர் சீருடையிலிருந்தவன் அந்தப் பையனை இடைமறித்தான்.
‘’ஆ! ஆ!
ஒரு நிமிடம் அந்தக்குழந்தைப் பையன் தலையை மேல்நோக்கி, உயர்த்தி, அந்தரத்தில், வெற்றிடத்தை வெறித்து, நாடக நடிப்புச் சுழிப்புடன் நோக்கினான்.
‘’என் அம்மா செத்துக்கொண்டிருக்கிறாள்.’’
மதுவகத்தினுள் மெதுமெதுவாக முன்னகர்ந்த அவன், இப்போது முழுவதுமாக, அருந்தகக்கூடத்தின் வெதுவெதுப்பான குளிரற்ற பகுதிக்கு வந்துவிட்டிருந்தான். அந்த அருவருப்பான பையனின் முகத்தில் 30 வாட் மின்சக்தி கொண்ட விளக்கு  ஒன்று மிகச்சரியான வெளிச்சத்தை வீசிக்கொண்டிருக்க, தீக்கங்குகளிலிருந்தும் எழுந்த மெல்லிய புகை ஒரு கருமண்டலமாக மாறி அருந்தகக்கூடத்தின் உட்பக்க நிறத்தைக் கண்ணீர்ப் புகைக்குண்டு வெடிக்கப்பட்ட இடம் போல, மந்திர மாய உலகம்போல வண்ணமிழந்த சாம்பல் நிறத்துக்கு மாற்றியிருந்தது.
‘’ஒரு நிமிடம் முன்புதான் அவள் இரத்த வாந்தியெடுத்ததைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக ஓடிவருகிறேன். என் அப்பா என்னை இங்கே வரச்சொல்லியிருந்தார்; ஏனென்றால், என் அம்மா இறந்துவிட்டால், போதை ஏற்றிக்கொள்ள, இந்த மதுக்கூடத்துக்குத்தான் வருவதாகச் சொன்னார்.’’
‘’உன் அப்பா ..........’’
முதலில் அவனைப் பார்த்தவன், அணைந்த சிகரெட் துண்டு ஒன்றைப் பற்றவைத்துக்கொண்டே, வெற்றுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
‘’போய்விட்டார். ஏய், போயிட்டார்டா.’’
‘’போய்விட்டாரா? அப்படியானால், அவர், எங்கு போவதாகச் சொன்னார்?’’
‘’’நீ வந்தால், யாங்யாங் மதுக்கடைக்கு அனுப்புமாறுதான் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாரென நினைக்கிறேன்.’’
அந்தப் பையனின் உடலமைப்பு சுவிட்சர்லாந்து கைக்கடிகாரம் போல மிகவும் மெல்லிய பாகங்களாலமைந்த மிகச் சிறிய ஒன்று. அவனது மார்பில், அமெரிக்க இராணுவம் என்பதைக் குறிக்கும் US ARMY என மின்னும் அடையாளவில்லை ஏதோ ஒரு பதவித்தரத்தைக் குறிக்கும் முத்திரை போல ஒளிர்ந்தது. அவனது முகத்தில் மட்டும் வெல்வெட் போல ஒரு பளபளப்பு. மனம்போன போக்கில்,  அணிந்திருந்த ஆடைகளின் அடுக்குகளில், அவன் கவசமாகக் கெட்டிப்பட்ட மேற்தோலுடனான ஒரு பூச்சியின வண்டு போலத் தோன்றினான்.
‘’இதோ! யாங்யாங் கடைக்கு இப்போதே ஓடுகிறேன்.’’ 
அவன் ஒரு நிமிடம் சிறிது தயங்கினான். இருட்டுத் தனிமை போல ஏதோ ஒன்று அக்கணத்தில் அவன் முகத்தில், கடைசிக் கிண்ணத்தையும் காலிசெய்து, முடித்துவிட்டு, மதுக்கூடத்தைவிட்டு வெளியேறும் குடியர்களின் முகத்தில் காணப்படுமே ஒரு வெற்றுப்பார்வை, அதுபோல ஒன்று படிந்தது. முதலில் அவனிடம் பேசிய அதே மனிதன், ஒரு காலிக் கிண்ணத்தை மதுவால் நிறைத்து, அவனிடம் நீட்டினான்.
‘’நீ போவதற்கு முன்னால், இந்த ஒரே ஒரு கிண்ணத்தை மட்டும் குடித்துவிட்டுப் போடா, சின்னப்பயலே!’’
‘’”மாட்டேன். என் அப்பாவைத் தேட வேண்டும்.’’
‘’நீ அங்கு போவதற்குள் உன் அப்பா, அந்த மதுக்கடையைவிட்டு வேறு மதுக்கடைக்குப் போயிருக்கலாம், யாருக்குத் தெரியும்?’’
‘’ஆனாலும், நான் அவரைக் கண்டுபிடித்துவிடுவேன். இரவு முழுவதுங்கூட நான் அவரைத் தேடுவேன்.’’
‘’அதற்கிடையில் உன் அம்மா இறந்துவிட்டாலுமா?’’
‘’என் அப்பா மட்டும் கிடைத்துவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். என் அப்பா உங்களை மாதிரியெல்லாம் இல்லை; அவர் வேறு மாதிரியானவர், தெரியுமா? அவர் எப்போதும் குடிக்க விரும்புகிறவர்தான், ஆனால், அவர் நினைப்பதையெல்லாம் சாதித்துக்காட்டுவார். ஹா! அவர் செம்பிலிருந்து தங்கம் செய்பவர். நான் தங்கம், தங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்!’’
அவனது சீன பாணிச் சட்டையின் தோளணிப்பட்டைக்குள்ளிருந்து  ஒரு கம்பளிப்புழுவைப் போல நகர்ந்து நீண்ட அவனது கரம், சட்டென்று ஒரு கிண்ணத்தைப் பற்றித்  திருடியதையும், அதை அவன் ஒரே மடக்கில், சந்தைக் கூட்டங்களில், பிக்பாக்கெட் திருடர்கள், சட்டைப்பைகளைக் காலியாக்குவார்களே, அது போலக் காலியாக்கி முடித்ததையும் யாரும் கவனிக்கவில்லை. அந்தக் கிண்ணம் முழுவதுமாக நிரம்பியிருந்த மதுவை ஒரு துளிகூடச் சிந்தாமல், ஒரு மந்திரவாதியைப்போலப் படக்கென்று விழுங்கிவிட்டான். அவனது சிறிய வாய் முழுதும் நிறைந்த ஒரு குறிப்பிட்ட வகைத் திருப்தியாலோ என்னவோ, அவன், முள்ளங்கி ஊறுகாயில் ஒரு துண்டினை நன்றி நிறைந்த பாவனையோடு எடுத்துக்கொண்டான்.
‘’கூடவே, உனக்கு ஒரு சிகரெட் வேண்டுமா?’’
‘’என்னை வைத்து வேடிக்கை காட்டாதீர்கள், தயவுசெய்து.’’
அவன் அவனது சட்டையின் கழுத்துப் பட்டையை இழுத்துச் சரிசெய்துகொண்டே தோள்களைச் சிறிது குன்னிக் குறுக்கிக்கொண்டான். அந்தக் குழந்தைப்பையன்  எச்சரிக்கை மிகுந்த விழிப்புடன், வார்களாலும் சுருங்கிவிரியுந் தன்மை கொண்ட தோற்தசைகளாலுமான  அவனது முதுகுத் தசையை இறுக்கிக்கொண்டு ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்காகத் காத்திருக்கும் மின்னல் ஓட்டக்காரனைப்போலப் பரபரப்பாகவே நின்றான்.
‘’தயவு செய்து, மறந்துவிடாதீர்கள். நான், என் அப்பாவின் பெயரைச் சொன்னேன். சமையல், சிங்  ஹ்யூன். ஏதாவது ஒரு மதுக்கடையில், நீங்கள் அவரைப் பார்க்க நேர்ந்தாலும் நான் குடிப்பதைப்பற்றி அவருக்குச் சொல்லிவிடாதீர்கள். தயவுசெய்து, நான் அதைத்தான் திரும்பவும் சொல்கிறேன்.’’
பேச்சு, மூச்சற்றுப்போன பெருங்குடியர்கள், அவர்களது வெற்று விழிகளாலேயே அவனை வழியனுப்பினார்கள்.  பின்னிரவின் வெளிறிய நிலவொளி    போன்ற குளிர்காலப் பனிக்காற்றின் தன்னந்தனியான அலை ஒன்று, அவன் முகத்தில் படர்ந்து கடந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோருமே மதுவின் போதை மிகுந்து, வீட்டினை, மனைவியை, மூத்த மகனை, இளைய மகனைத் திட்டி முடித்துவிட்டு, வாழ்க்கையை, எதிர்கால நம்பிக்கையை, கைக்கும் வாய்க்குமே பற்றாத அற்பக் கூலியை, இந்த உலக வாழ்க்கையைத் திட்டித் தீர்த்துக் கடைசியில், தங்களைத் தாங்களே  திட்டிக்கொள்ளத் தொடங்கினார்கள்.
பனிக்காலத்தின் கொடிய குளிர்காற்று சந்தை வழி முழுவதிலும் கிழிந்த செய்தித்தாள்த் துண்டுகளை அடித்துப் பரப்பிக் கொண்டு சென்றது. அந்தக் கொடிய குளிர் காற்று, பாலைவனத்தின் மணற்புயலைப்போல முகத்தில் அறைந்து  தோலைக் கவ்வித் துளைத்தது. காற்சட்டைப்பைக்குள் கைகளை நுழைத்தவாறே, எதையோ முணுமுணுத்துக்கொண்டு அவன் நடந்துகொண்டிருந்தான். சூரியன் மறைந்த நேரத்திலிருந்து, அவன் ஏற்கெனவேயே ஐந்து மதுக்கூடங்களுக்குள் நுழைந்து, வந்ததில், குறைந்த அளவில் என்றாலும் ஏழு கிண்ணங்களுக்கு மதுவினை விழுங்கிவிட்டிருந்தான். அவன் எல்லாவிதமான மதுவகைகளையும் உள்ளே தள்ளியிருந்தான்: எதுவுமே கலக்காத மது, மேகமூட்டமாக இருக்கும் கச்சா ஒயின், சுத்திகரிக்கப்பட்ட அரிசி ஒயின் எனப் பலரகங்கள். தொண்டை வரையிலும் விறுவிறுப்பதாக, அவன் தலைக்குள்ளிருந்து வாழ்க்கையை எங்கோ ஒரு மூலைக்கு நகர்த்திவிடுகிற அளவுக்கான போதை ஏறுகிற அளவுக்குக் குடித்துவிட்டான். ஆனாலும் வயிறு ஏதோ இன்னும் காலியாக இருப்பது போல அவனுக்குத் திருப்தியாகாத ஒரு நிலை. அவனுடைய அப்பாவைக் கண்டுபிடிக்கும் வரையில், மேற்கொண்டும் ஐந்தோ ஆறோ கிண்ணங்கள் மதுவை அவனால் குடித்துவிடமுடியும்.
சந்தைக்குள் இந்த மூலையிலிருந்து அந்த மூலை வரைக்கும் கசப்பினைத் தருவதாகவே, காற்று வீசியது. சந்தைக்குள் நுழைகிற ஒவ்வொருவரின் பின்னாலும் குளிர்காலம் பல்லைக் காட்டி இளித்துக்கொண்டு நின்றது. மேல்மட்டத்தைப் பொறுத்தவரையிலும், தெரு விளக்குகள் தூய்மையான ஒளியைப் பொழிந்துகொண்டிருந்தன. எங்கேயோ ஒரு பூனை மியாவெனக் கத்தியது. சுற்றுக் கட்டுச் சந்தை வளாகத்தினுள், பழைய வெயிற்கூரைகள் காற்றில் அடித்து, அவன் தலைக்கு மேலே பேய்கள் போலப் பறந்துசென்றன. கடைசியில், ஒருவழியாகப் போதையளிக்கும் உள்ளடக்கச் சேர்மம்  அவன் மீது இரக்கம் கொண்டதனாலோ என்னவோ சட்டென விழித்துக்கொண்டது. அவனது சிறு உடல் பொத்தானுடனான மின்னடுப்புச் சமையல் பாத்திரம் போலக் கொதிக்கத்தொடங்கியது.
(ஆ! ஆ! இந்தச் சனியன் பிடித்த தலை ஒழிந்து போகட்டும்.)
ஒரு கணத்திற்கு, அவன் தலை, அவனது உடம்பைக்காட்டிலும் பலமடங்குக்குப் பயங்கரமாக எடை கூடிவிட்டது போல அவன் உணர்ந்தான். அவனால் தூக்க முடியாத அளவுக்குக் கனமுள்ள தலையைத் தூக்கிக்கொண்டு எப்படி நடமாடுவதென்ற பயம் அவனுக்குத் திடீரெனத் தோன்றவே, அவன் வெறுப்படைந்து, கோபத்தில் முறைக்கவும் தொடங்கினான்.
சந்தை வளாகத்தின் ஒரு கோடி முனையில்தான் யாங்யாங் மதுக்கடை  இருந்தது. மதுக்கூடத்தை நிறைத்து வெளியிலும் பரந்து ஒளிர்ந்த இனிய  ஒளி காலியாகக் கிடந்த சந்தைவெளியில் நடனமாடியது. சிறுவன் மவுனமாகக் கண்ணாடித் தடுப்பின் வழியே தனக்குத் தெரிந்த முகங்கள் ஏதேனும் தென்படுகிறதாவென நோட்டமிட்டான். அங்கே தெரிந்த முகமாக ஒருவர் கூட இல்லையெனில், அவனால் மேற்கொண்டு குடிக்கவோ, அல்லது அவனது தந்தையைச் சந்திக்கவோ முடியாது.
நல்லவேளையாக, அவனுக்குத் தெரிந்த முகங்களாக இருவர், கைகளில் மது நிறைந்த கண்ணாடிக் கோப்பைகளை ஏந்தி அமர்ந்திருந்தனர். காற்பெருவிரல்களில்  ஊன்றி நின்ற அவன், பாதங்களைக் கீழிறக்கிச் சமநிலைக்குக் கொண்டுவந்துவிட்டு, அந்தக் காற்று வெளியில் தன்னைத் தானே திட்டிக்கொள்ளத் தொடங்கினான்.
(பாழாய்ப்போன குடி, ஒழிந்து போகட்டும்.)
அனுபவத்தில் மூத்த, மாபெருங் குடியர்கள் எல்லோருக்குமே ஏதோ ஒரு நேரத்திலாவது தமக்கு வயதாகிவிட்டதோ, மிதமாக இருக்கிறோமா இல்லையா என எழக்கூடிய ஐயப்பாடு போன்றதொரு கணநேர மனக்கசப்பும் துயரமும் மனச்சோர்வுமாக அவனது சிறிய முகத்தில் ஒரு, தயக்கம் கலந்த இருட்தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தன. 
எனினும், சன்னல் வழியாக மதுநிறைந்த பளிங்குநிறக் கோப்பைகளைப் பார்த்ததிலும், உரக்கச் சிரிக்கும் பெருங்குடியர்களின் நகைச்சுவை நையாண்டிகளுமாக, களிமகிழ்வொலிப் பெருஞ்சப்தத்தைக் கேட்டதிலும், அவனது அருவருப்பான முகம் வியக்கத்தக்கதாக மாறியது. ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்ற சிறைக்கைதியிடம் வெளிப்படுகின்ற திடமான முனைப்போடு, அவன் மதுக்கூடத்தின் வாயிற்கதவினை மெல்ல அடைந்தான். அதன் கைப்பிடி, அவன் கைகளுக்குப் பழக்கமானதாயிற்றே!
‘’மாலை வணக்கம்.’’
அவன் வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டே, நோட்டமிடுவதற்காகத் தலையை உள்ளே நுழைத்தான். அவனை வேறு யாருமே பார்க்கவில்லையென்றாலும், பரிமாறும் பணிப்பெண் பார்த்துவிட்டாள்.
‘’ஹேய், உங்க அப்பால்லாம் போயாச்சு.’’
‘’. . . . .’’
‘’அவரு, முண்டச்சி வீட்டுக்குப் போய்ட்டாரு.’’
அந்தக் குழந்தைப்பையன் அவளை வெறுமனே, ஏறிட்டுப் பார்த்தான்.
‘’உண்மைதான், பையா.’’  
பின்னர், உள்ளே கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த இரு பெருங்குடியர்கள் அவனைக் கண்டுகொண்டார்கள். கிருதாக்களுடனிருந்த மனிதன் சத்தமாகச் சிரித்தான். அவன் குடிக்கிறபோதெல்லாம் சிரித்தான்; அவன் போர்க்களத்தைவிட்டு ஓடியதை, ஒரு குண்டு அவனுடைய மனைவியின் வயிற்றைத் துளைத்ததில், பெரிய துளை ஏற்பட்டு, அவள் இறந்ததையும்,  இப்போது அவன் வேறுவழியின்றித் தனிமையில் வசிப்பதையும் சொல்லிக்கொண்டிருக்கும்போது கூடச் சிரித்தான். அவன் ஐம்பதாவது வயதினை  அடைவதற்குள் தற்கொலை செய்து மரணிக்கப்போவதாகச் சொல்லும்போது கூடச் சிரித்தான். சிரிப்பதைத்தவிர அவனுக்கு இந்த உலகத்தில், வேறெதுவுமே  தெரியாது போலத் தோன்றியது. அவன் தொடர்வண்டிச்சாலையிலுள்ள ரயில்வே கரிக்கிடங்குக்குள் நுழைந்து கரிக்கட்டிகளைத் திருடி விற்பதையே அவனது தொழிலாகக் கொண்டிருந்தான்.
ஒருமுறை, காவலர் ஒருவர் அவனைப்பிடித்து அவனுடைய முகத்தின் சாயலே மாறிவிடுகிற அளவுக்கு அடித்துத் துவைத்தார்; ஆனாலும், குடிக்கும்போதெல்லாம் சிரிக்கிற அவன்,  வாய் வீங்கிக் குடிக்க முடியாமல் போனால், மூக்கு வழியாகக் குடிப்பேனென்று, அதையும் சிரித்துக்கொண்டே சொன்னான். மூளை ஏதாவது பிசகியிருக்குமோ, ஒருவேளை எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல், எல்லாவற்றையும் எளிதாகக்கொள்ளும் போக்கின் உச்சமோவென நினைக்குமளவுக்கு அப்படியொரு வித்தியாசமான மனிதன், அவன். அந்தக் குடியர்கள், அவனது முகத்தைத் தெரிந்துகொள்ள முடியாதபடி, மறந்துபோகிற அளவுக்குப் போதை ஏறும் முன்பாகவே, அவனைக் கண்டுகொண்டதற்காகக் பேரளவோ, குறைந்தளவோ எந்த அளவென்றாலும், அவன் அவர்களுக்கு எப்போதும் நன்றியோடிருப்பான்.
‘’ஹேய், அவனைப் போல ஒரு குறுகுறு பையனைப் பார்க்கும்போதெல்லாம் ஹ ஹஹ் ஹா, எனக்கு இறந்துபோன என் மகன் ஞாபகம் வந்துவிடுகிறது, ஹ ஹஹ் ஹா. அவன், இவனே இவன் அளவுக்கான குறுகுறுப்பையன். ஹ ஹஹ் ஹா. அவனும் என்னைப் போலவே அழகு, புத்திகூர்மை எல்லாமே; படுசுட்டிப்பயல். ஹ ஹஹ் ஹா. அவன் மட்டும் உயிரோடிருந்து, வளர்ந்திருந்தால் எங்கேயோ, எப்படியோ இருந்திருப்பான், ஹ ஹஹ் ஹா’’
இவனோடு ஒப்பிடும்போது, அடுத்த மனிதன் முற்றிலும் வேறுமாதிரி. அவன் போதை ஏறியபோதெல்லாம் ஊமையைப் போல அமைதியாகிவிடுவான். அவனுடைய முழுக்கைச் சட்டையின் கைகளை மடித்து உருட்டும் போது, அனது முழங்கையில் கறுப்பு நிறத்தில் பச்சைகுத்தியிருப்பது தெரியும். மரண அமைதியில் உட்கார்ந்திருக்கும்போது, சட்டென்று கத்தியை எறிந்துவிடுவான். ஒரே ஒரு முறைதான், அவன் சிரிப்பதை அந்தச் சிறுவன் பார்த்திருக்கிறான். ஒருமுறை சிறுவன், அவனுக்கு ‘’காலை வணக்கம்’’ சொன்னானோ, இல்லையோ, ஏதோ ஒன்று அவன் முகத்தைக் கடந்து விசுக்கென வெள்ளிமீன் போல மின்னிக் காற்றைக் கிழித்துச்சென்றது. அது, வாசற்கதவு நிலையில் குத்தி நின்றதையும் அதற்கும் அவன் தலைக்கும் சாண் அளவு தூரம்கூட இல்லையென்பதையும் சிறுவன் கண்டான். அது, அந்த மனிதனின் கத்திதான். கத்தியை எறிந்த வலதுகை போரில் அவன் இழந்த கைக்கு மாற்றாகப் பொருத்தப்பட்ட ஒன்று.
‘’பார், பையா.’’
அங்கே உட்கார்ந்திருந்த மனிதன், பீற்றிப் பெருமையடித்தான்.
‘’என் வலது கையைப் பார். என்ன ஒரு விரைவும் வீச்சும், பார்த்தாயா ....’’
அப்போதுதான் அந்த, அபூர்வமான, பழைய சிரிப்பு அவன் வாயில் நுரைத்துத் தெரிந்தது. அந்த ஒரே முறைதான், அவன் சிரித்து, அந்தச் சிறுவன் பார்த்தது.
அவன் மரத்திலான விளையாட்டுப் பொம்மைகள் செய்து பிழைப்பு நடத்தினான்.  அவன், மரத்தாலான படைவீரர் பொம்மைகளை இடது கையால் மட்டுமே,  செதுக்கிக்கொண்டிருந்ததை, ஒருமுறை சிறுவன் பார்த்தான்.  அது, சென்ற வருட கோடைகால மத்தியிலொரு நாள் மதியம்; தரையடிக்குடிசைக்கு வெளியே சூரியக் கதிர்கள் சுட்டெரித்துக் கொண்டிருந்தன. பொம்மைகளைச் செதுக்கிக் கொண்டிருக்கும்போது, அவன் ஆடைகளற்று முண்டக்கட்டையாகவே இருந்தான்; திடீரென்று கத்தியைத் தூக்கி, தூரத்திலிருந்த மரத்தாலான தடுப்புச்சுவர் மீது எறிந்துவிடுவான். அந்தச் சிறுவனுக்கு அது இப்போதும், அவன் கண்ணிலேயே இருக்கிறது. மரத்தடுப்புச் சுவர் மீது கிறுக்கலாக வரையப்பட்டிருந்த ஆண்களின் அந்தரங்க உறுப்புகள் அல்லது இதயங்களின் கோட்டுப்படங்களை நோக்கிக்  காற்றைக் கிழித்துக்கொண்டு, பளபளவெனப் பறந்து சென்றது, அந்தக் கத்தி.  அது, பலகையைத் துளைத்தபோது எழுந்த வீற்றொலி வெறுமையான காற்றைக் கடந்து மறைந்தது. குடிசைக் கதவின் வழியே, அவன் பார்த்த அந்த மதிய வேளையில் பூமியிலிருந்து கிளம்பிய ஆவி, சுத்திகரிக்காத பெட்ரோலிய எண்ணெயின் ஆவியைப் போலச் சூடாக, வெக்கை நிறைந்ததாக இருந்தது; அது, மூச்சுத் திணறச் செய்வதாக அந்தக் கோடையின் பைத்தியம் பிடிக்கவைக்கும் வியர்வை நாற்றத்துடன் இருந்ததோடு எந்தக் காரணமும் இல்லாமலேயே  சினமூட்டியது.
அந்த மனிதன், சிறுவனைத் தாழ்ந்த குரலில் ‘’என் மகனே’’ எனப் பிரியத்துடன் அழைத்து கத்தியைப் பிடுங்கிக் கொண்டு வருமாறு கேட்ட போதும் கூட, அந்த மனிதனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லையென, அந்தக் குழந்தைப்பையனுக்குத் தெரிந்திருந்தது. அவன் சிறுவனை நோக்கியபோதெல்லாம், வெளித்தெரிகின்ற அந்த வெறுப்பு அவன் கண்களில் பளீரிட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால், ஒருமுறை அந்தச்சிறுவன் சாலைவழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த மனிதன் அவனது வேலையிடத்திலிருந்தும் தலையை நீட்டி எட்டிப் பார்த்து ரகசியக்குரலில் ஆசை காட்டினான். அவன் கையில் ஒரு மதுப்புட்டி இருந்தது. அவன் ஏற்கெனவேயே நல்ல போதையிலிருந்தான்.
‘’ஹேய், என்னுடன் கொஞ்சம் குடிக்கிறாயா? சும்மா கொஞ்சமாக, நான் சொல்வது, நேற்றைய இரவின் மதுச்சோர்வை விரட்டுவதற்குத்தான்.
சிறுவன் அந்தத் தரையடிக்குடிசைக்குள், அவனுடைய எப்போதுமான முன்னெச்சரிக்கை விழிப்புநிலையைக் கைவிட்டு, அசட்டுச் சிரிப்புடன், நுழைந்தானோ இல்லையோ, அந்த மனிதனிடம் மிச்சமாக இருந்த அந்த ஒரே இடதுகை சிறுவனின் தொண்டைக்குழியைப் பற்றிக்கொண்டு நெரிக்கத் தொடங்கியது. அந்த மனிதனின் இடதுகையின் விடாப்பிடி குரங்குப்பிடியாக இறுகிக்கொண்டேயிருக்க, சிறுவன், அந்தக்கையை பலம் கொண்ட மட்டும் கடித்தான். கையின் பிடி இலேசாகத் தளர்ந்ததுமே, அந்தச் சின்னஞ்சிறிசு, கையை விலக்கிவிட்டுச் சாலையில் பாய்ந்துவிட்டான். பின்னர், அந்த மனிதன் ஒரு முட்டாளைப் போல அடக்கமுடியாமல் கேவிக்கேவி அழுதுகொண்டிருந்தான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் எந்த மதுக்கூடங்களிலும் ஒருவரையொருவர் நேரில் எதிர்கொள்ளவேயில்லை. அதன் பிறகு, இருவருக்கும் நடக்கும் முதல் சந்திப்பு இன்றுதான்.
‘’என் அப்பாவைத் தேடி வந்திருக்கிறேன்.’’
சிறுவனின் அடங்கிய குரல் அந்த ஒற்றைக்கை மனிதனை நோக்கியதாக இல்லாமல், கிருதாக்கள் வைத்திருந்தவனைப் பார்த்தே இருந்தது.
‘’அவரைப் பார்த்தேனே, ஹ ஹஹ் ஹா, கொஞ்ச நேரம் முன்னாலேதான் அவரைப்பார்த்தேன், ஹ ஹஹ் ஹா அவ்வளவுதான்னு நினைத்தாயா, ஹ ஹஹ் ஹா, அவரோடு நானும் சேர்ந்து குடித்தேன், ஹ ஹஹ் ஹா.’’
‘‘அம்மா,... என் அம்மா,......’’
முட்டும் அழுகை, அவனது குரலை அடைப்பது போன்ற நடிப்புடன் அவன் பேசினான்.
‘‘அவள் செத்துக்கொண்டிருக்கிறாள். அவள் இரத்த வாந்தியெடுத்ததைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நேராக ஓடிவருகிறேன்.’’      
 தயங்கித் தயங்கி, அவன் மேஜையை நெருங்கினான். அவனுடைய ஒடுங்கிய, சிறு கண்கள், போதையூட்டும் உள்ளடக்கச் சேர்மத்தின் வேகக்கொதிப்பினால்   கடுமையாகச் சிவந்து நீர் கோர்த்துப் பிசின் போலப் பீளை கட்டத் தொடங்கின. மேஜையில் ஸ்படிகம் போலக் கடுந்தேறல் வீற்றிருக்கிறது. அது புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு புட்டி; அநேகமாக நிறைந்தே இருந்தது.
அந்த மதுவின் ருசி ஏற்கெனவே அவனுக்குத் தெரியும். அவன் இப்போதிருக்கும் நிலையில் அதில் ஒரு கிண்ணம் அருந்தினாலும் அது அவனிடம் எப்படிப்பட்ட ஒரு மாற்றத்தைக் கொடுக்குமென்றும் அவனுக்குத் தெரியும்.
அவன் அந்த பெஞ்சின் விளிம்பில் அமர்ந்தான். இருபக்கமும் கிருதா வளர்த்திருந்த மனிதன், வாயை முழுக்கத் திறந்து நீண்ட ஒரு கொட்டாவி விட்டதோடு, கைகால்களை நீட்டிச் சோம்பல் முறித்தான்.
‘‘இன்று இரவு நீ உன் அப்பாவைக் கண்டுபிடிக்கப் போவதில்லை.’’
‘’நான் கண்டுபிடித்து விடுவேன். அது என்னால் முடியும்.’’
சிறுவன் மிகத் தீர்மானமாகப் பேசினான்.
‘’நிச்சயமாகச் சொல்கிறேன். நான் அவரைக் கண்டுபிடித்துவிடுவேன்.’’
‘’ஹ ஹஹ் ஹா, நீ இன்று பார்க்காவிட்டாலும், நாளை பார்த்தால் பரவாயில்லையா?’’
‘’இல்லை. இன்று நான் அவரைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். என் அம்மா இறந்துகொண்டிருக்கிறாள். அவள் வாய்க்குள்ளிருந்து இரத்த வாந்தியெடுத்துக் கீழே விழுந்து கிடக்கிறாள். அவள் தான் அப்பாவைக் கூட்டி வருமாறு மிகவும் இயலாத ஒரு குரலில் சொன்னாள்.’’
சமயம் பார்த்துக் காத்திருந்த சிறுவன் மிகச்சரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, மேஜையிலிருந்த மதுக்கோப்பையை எடுத்து, அவசர,அவசரமாக அதிலிருந்த மதுவை, அவன் வாய்க்குள் கவிழ்த்துக்கொண்டான்.
‘‘என் அப்பா ஒரு குடிகாரர், ஆனாலும் அவர் எங்களைவிட வித்தியாசமானவர், மாமா. ஆங்ஹ்! செம்பிலிருந்து அவரால் தங்கத்தை உருவாக்க முடியும். நான் தங்கம், தங்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்.’’
அந்த ஒரு கிண்ணம் மது அவனைக் கட்டற்றவனாக்கியது. பிரிந்து செல்லும்போது, கடைசியாக விழுங்கும் ஒரு கோப்பை மதுவைப்போல, அந்த ஒரு கிண்ணம் மது அவனுக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது. அவன் உணவுக்குச்சிகளை எடுத்து அவற்றை மேஜையில் தட்டிக்கொண்டே பாடத் தொடங்கினான்.
வெகுகாலம் முன்பு,            
அழகிய மகளைப் பெற்ற ஒரு தகப்பன்,
கிராமச் சதுக்கத்தில் அறிவித்தான்.
நீ குடிக்கவும் பாடவும் முடிகிற ஒரு மருமகனாக இருந்தால்,
இங்கே வந்து ஒருமுறை முயற்சித்துப் பாரேன்!  
கிருதா மனிதன், செம்மறியாடு ஒன்று அதன் தாடிக்குள் சிக்கியிருக்கும் தாளினைத் தின்றுகொண்டிருப்பதைப்போல, எந்தவித வியப்புக்கான அடையாளமும் காட்டிவிடாமல் அமைதியாகச் சிரித்தான். அவனுடனிருந்தவனோ, உணர்ச்சிகளற்ற வெற்றுக் கண்களோடு மதுக்கூடத்தின் கூரையையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனைத் தொல்லைப்படுத்தாமல் விட்டுவிட்டால்,  அப்படியே நாட்கணக்கில்கூட உட்கார்ந்திருப்பான் போலத் தெரிந்தான். அருமையான அந்த வாய்ப்பில், அந்தச் சிறுவன் கையை நீட்டிப் புட்டியை எடுத்துச் சரித்து, இன்னும் கொஞ்சம் மதுவை ஊற்றிக்கொண்டான்.
‘’ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் என் அப்பா அழுவார்.’’
யாருமே அவனைக் கவனிக்கவில்லை. கிருதா மனிதன் கூடச் சிரிப்பதை நிறுத்திவிட்டான். இரவுப் பூனை ஒன்று எங்கிருந்தோ கத்தியது; மாளாச் சோர்வும் துயரமும் கூரைக்குள்ளிருந்து கொட்டியது. மது ஊற்றிக்கொண்ட கோப்பையை  உதட்டில் பொருத்திச் சிறிது சிறிதாக நாக்கால் அதன் விளிம்பைத் தட்டித் துளாவிக்கொண்டே, கண்களை உயர்த்தி, அடுத்து என்ன நடக்குமோவெனக் கவனித்துக்கொண்டிருந்தான். மதுக்கூடப் பணிப்பெண் புகைபிடித்துக்கொண்டே அவ்வப்போது அங்கும் ஒரு பார்வையை ஓடவிட்டவாறிருந்தாள்; சந்தேகத்துக்குரிய வகையில் வித்தியாசமாகச் சேர்ந்திருந்த அந்தக் கூட்டணியிலிருந்த மூவரையும் அவள் மேலுங்கீழுமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் முள்ளங்கி போல் கீழ்ப்பாகம் சுருங்கி மேற்பாகம் பெருத்துத் தோன்றிய அந்தச் சிறுவன் இப்போது விக்கிப் பேசத் தொடங்கினான்.
‘’உங்களுக்கு வேடிக்கையான புதிர் ஒன்றைச் சொல்லட்டுமா, ம்! உங்களுக்குத் தெரியுமா? சிறுநீர் கழிக்கும்போது, நாய் ஏன் ஒற்றைக் காலைத் தூக்கிக்கொள்கிறது?’’
‘’எனக்குத் தெரியாது.’’
‘’ம்ஹ்க், ரண்டு காலையும் தூக்கினால், அது விழுந்துவிடும். ம்ஹ்க்.’’
இப்போது, மது அவனது உடல் முழுவதிலும் போதை ஏற்றியிருந்தது. மிகுந்த மகிழ்ச்சியில், அவன் குடியை ஒரு விளையாட்டாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்குக் கீழே எல்லாமே அவனை நீந்திக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அவனது உணவுக்குச்சிகளை மீண்டும் எடுத்து, மேசையைத் தட்டிக்கொண்டே, அருவருப்பான பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான்.
நிலவின் ஒளிமிக்க இரவு ஒன்றில்,
வழுக்கையாகிப் போன மணமாகாதவன் ஒருவன் வந்தான்.
டுவைங், டுவைங், டுவைங்-டி-டிங்; உன் பிடில் கேட்க அருமைதான்,
ஆனாலும், நீ ரொம்ப அருவருப்பு; அதனால் உன்னைப் பிடிக்கவில்லை.
மதுக்கூட மூலை ஒன்றின் மேசை மீது தட்டிக் கொண்டே குடிக்கும் அந்தச் சிறுவனின் மெய்யுடல் மிகச் சிறியதுதான்; ஆனால், உயிரைக் கொடுத்துப் பாடுவதான வியத்தகு தோற்றத்தைக் கொண்டிருந்த அவனது அடவுகள், அசைவுகள் அனைத்தும் அனுபவமிக்கவை.
பையன் பாடி முடித்து, சிகரெட் புகைக்கத் தொடங்கினான். கனலும் சிகரெட் நுனி அவன் நாக்கில் பட்டு ஒருவித ஒலியெழுப்பி அணைந்தது. சர்க்கஸ் குழுவின்  கோமாளிப் பையனைப்போல் அவன் காட்சியளித்தான்.
அந்தக் கணத்தில்தான், அந்த மனிதன், தூக்கத்தில் விழித்தவனைப்போலப் பாய்ந்து எழுந்து திடீரெனக் கத்தியை உருவிக் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனின் தொண்டையை நோக்கிக் குறிவைத்தான். சிறுவன் அவனை வெற்றாகப் பார்த்து, மலங்க மலங்க விழித்தான். அந்த மனிதனின் கண்களில் மின்னல் ஒன்று தோன்றி விரிய, அவனது மடித்துச் சுருட்டிய இதழ்களில் தீமையின் அறிகுறியாகப் புன்சிரிப்பொன்று  வெண்மையாகத் தெரிந்தது.
‘’டேய், குடிகாரக் குள்ளா’’
அந்த மனிதன் உறுமினான்.
‘’வாரேய் வா, இன்றைக்கு என் கையால் உனக்குச் சுகமான சாவு.’’
சிறுவன் எப்படியாவது தடுத்துவிட முயற்சித்தான்; ஆனால், வாயைத் திறப்பது வீண்தானென்பது அவனுக்குத் தெரியும்.
‘’அசையாதே, அப்படியே நில், மாய்மாலக் குள்ளா.’’
தொண்டையைக் குறிபார்த்த அந்தக் கத்தி, அந்த மனிதனின் இடது கையில் மின்னிப்பளீரிடுவதைச் சிறுவன் கண்டான்;. தொண்டை அருகில் சிறிது வலிப்பதாக உணர்ந்தான்; தனது உயிரின் பெருமூச்சினை அவன் தன் காதாலேயே கேட்டான்.
(இழவெடுத்த தொண்டை ஏன்தான் இப்படி வலிக்கிறதோ!)
`புறப்படு` எனச் சொல்லும் அடையாளமாகத் தடகளப்பயிற்சி ஆசிரியரின் விரைத்தெழும் கை போல அந்த மனிதனின் கை உயர்ந்தது. அவனது உள்ளங்கையில் கத்தி ஒரு சிறு பறவையாக  மிளிர்ந்தது. பின்னர், சக்கிமுக்கிக்கல்லின் உரசலில் வெளிப்படும் கணநேர வெளிச்சம் போல், அந்தக் கத்தியின் மின்னல்,  வெட்டவெளியில் ஒரு கோடாக உயர்வதைப் பார்த்த சிறுவன் அதே கணத்தில் , அது காற்றைக்கிழித்த ஒலியையும் கேட்டான்; பின்னர், அந்த மனிதன், அவனது மார்பிலேயே குத்திக்கொண்டு மேசை மீது சரிந்து விழுவதைக் கண்டதும் துப்பாக்கியிலிருந்து வெளியேறும் குண்டாக, மதுவகத்திலிருந்தும் பாய்ந்து ஓடினான்.
(முட்டாள், தேவடியா மகன்.)
தெரு முழுவதும் இருட்டாக இருந்தது. அது ஒவ்வொரு மூலையிலிருந்தும் பரவியது. கண்ணில் தெரிந்த வானம் உயிரற்றிருந்தது. சிறுவனுக்குக் குளிர் நன்கு பழகிப்போன ஒன்று தான். எங்கும், எப்போதும், அவன் இந்தக் குளிரோடு போராட வேண்டியதாகத்தான் இருந்தது. சந்தை வளாகம் ஏற்கெனவே காலியாகியிருந்தது. அவனுடைய மூச்சுக்காற்றாக, மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளியேறிய வெள்ளைப்புகை இருட்டில் கரைந்தது. விக்கல் இன்னும் நின்றபாடாக இல்லை; அவன் இன்னும் உயிரோடிருப்பதே அதிர்ஷ்டம்தான். இன்று வழக்கத்தைவிட அதிகமாக குடித்திருக்கிறான்; எல்லாம் ஒன்று தான்; அப்படியொன்றும் அதிகமென்று சொல்லிவிடமுடியாது. குளிரில் விரைத்திருந்த ஒரு சுவரில் மோதி நின்று, அவனது தொங்கல் திரைகளின் பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தான். அவன் ஒன்று மேல் ஒன்றாகப் பலவற்றை அணிந்து கொண்டிருந்ததால் அவனது சிறிய வெப்பநிலைக் காப்பாளனைக் கண்டுபிடித்து, வெளியே எடுப்பது கஷ்டமாக இருந்தது. சிறுநீர் கழித்து முடித்ததும் அடங்கிய குரலில் பாடத் தொடங்கினான்.
நிலவின் ஒளிமிக்க இரவு ஒன்றில்,
வழுக்கையாகிப் போன மணமாகாதவன் ஒருவன் வந்தான்.
டுவைங், டுவைங், டுவைங்-டி-டிங்; உன் பிடில் கேட்க அருமைதான்,
ஆனாலும், நீ ரொம்ப அருவருப்பு; அதனால் உன்னைப் பிடிக்கவில்லை
அவன் போகின்ற இடம் அவனுக்கு நன்கு தெரிந்த ஒன்று. அவன் எவ்வளவு குடித்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையே அல்ல; அவன் ஒருநாள் கூட வழிதவறியதே இல்லை.
(என் அம்மா இற்துகொண்டிருக்கிறாள்; என் அப்பா என்னதான் செய்துகொண்டிருக்கிறார்?)
அவன் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான்; கறுப்புச் சாயம் ஒன்று உருகிப் படர்ந்திருந்தது போலிருந்தது. அவனது அப்பாவைக் கண்டுபிடிக்கும் வழி இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவனது கடைசி முயற்சியை விட்டுவிடுவதாக இல்லை.
 தள்ளாடிக்கொண்டே அவன் நடக்கத் தொடங்கினான். சந்தை வளாகத்தின் எல்லை முடிவில் குடிகாரன் ஒருவன் தெருவில் உடல் முழுதும் மண்பட விழுந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். சிறுவன் அருகில் நெருங்கிச் சென்று, குடிகாரனின் முகத்தை நன்கு உற்றுப் பார்த்தான்; பின்னர், அவன் சட்டைப்பைகளைத் தொட்டுத் தேடத் தொடங்கினான். அதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல், விடிவதற்குள் அந்த மனிதன் குளிரில் விறைத்து இறந்துவிடுவான் போலத் தொடர்ந்து செய்தான். சட்டைப் பைகள் காலி. இடது பக்கப் பையிலிருந்து ஒரு சில சிகரெட் துண்டுகளும், காய்ந்து போன பொள்ளாக் மீன்துண்டின் மிச்சங்களும் வலப்புறப் பையிலிருந்து தெருக்கார்களில் பயணம் செய்வதற்கான இரு பயணச்சீட்டுகளுமே வெளிவந்தன.
இப்போது, அந்தச் சிறுவன் உட்புறப் பையில் தேடத் தொடங்குகிறான். அவனது விரல் காகிதப் பணம் ஒன்றை உணர்ந்தது; அவன் இரண்டு காகிதப் பணங்களைக் கடின மூச்சுகளுடன் வெளிக்கொணர்ந்தான். அவற்றோடு அவன் மீண்டும் நடக்கத் தொடங்கினான். மேற்கொண்டும் குடிக்கக் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில், அவனது இதயம் அடித்துக்கொள்ளத் தொடங்கியது. அந்த இரண்டு நோட்டுகளைக்கொண்டு, இரண்டு கோப்பைகள் போதைமிக்க மதுவை வாங்கிக் குடிக்க முடியுமென்பது அவனுக்குத் தெரியும். அந்த இரண்டு கோப்பை மதுவினை பயந்துகொண்டே அல்ல, ஆவல்தீரக் குடிக்கும்போது அவன் எப்படியாக மாறுவானென்றும் அவனுக்குத் தெரியும். அவனது இருபுறங்களிலும் எவ்வித வலியுமின்றி இறக்கைகள் தோன்றி ஒரு பறவையைப்போல எடையைக் குறைத்து, அவனை மிதக்கச் செய்யுமென்பதையும் என்பதையும் அவன் அறிவான்.
பிந்திய இரவுகளிலுங்கூடத் திறந்திருக்கும் மதுக்கூடங்களை அவன் அறிவான். ஆனால், எவ்வளவுதான் பிந்திய நேரத்திற்கு அவை திறந்திருக்குமென்றாலும், இப்போது அநேகமாக அவையும் பூட்டப்படும் நேரமாகிவிட்டிருந்தது. அதனால் அவன், ஓடத் தொடங்கினான். அந்தப் பனியடிப்புலம் முழுவதும் அவனது காலடிகள் எழுப்பும் ஓசை எதிரொலித்தது. அவன் எந்த மதுக்கூடத்தை நினைத்து ஓடிவந்தானோ அதுவும் மூடப்பட்டிருந்தது.
மதுக்கூடத்தின் முன்புறக் கதவருகில், வெளிச்சம் வடிந்திருந்த விளக்கடியில், மூச்சைப்பிடித்துக்கொண்டு ஒரு பூனையைப்போல் நின்ற அவன் கதவுப் பிளவு வழியே வந்துகொண்டிருந்த மது வாசனையை இழுத்து நுகர்ந்தான். காற்று அவன் தலைமுடியைக் கலைத்தது. அவன் உடலைக் குலுக்கிக் குறுக்கிக்கொண்டான். என்ன செய்வதென்று சிறிது யோசித்த அவன், திடமாக முடிவெடுத்துவிட்டது   போல விரைவிலேயே சன்னல் கதவைத் தட்டத் தொடங்கினான். அந்தக் கதவு, பனித்தகடு ஒன்று கீறி உடைவது போல ஒலியெழுப்பியது. அந்தக் கதவின் மீது ஏதோ ஒரு பூ வேலைப்பாடு போல உறைபனியின் வெண்மை படர்ந்திருந்தது. அச்தச் சிறுவன் மீண்டும் மீண்டுமாகச் சிறிது நேரம் தட்டிவிட்டுக் கதவோரமாகக் காதை வைத்து கவனித்துக்கேட்டான். அவன் கவனித்துக் கேட்டபோதெல்லாம் வெகுதூரத்தில் வீசும் குளிர் காற்றின் ஒலிதான் கேட்டது. சிறிது நேரத்திற்குப்பின் ஏதோ உயிர் பெற்றதான அடையாளங்கள் உள்ளுக்குள் தெரிந்தன. கடைசியாக ஒரு நபர் சன்னலருகில் வந்ததும், அவர் உள்ளுக்குள்ளிருந்தே பனிப்படலத்தைச் சுரண்டத் தொடங்கியதும் தெரிந்தது. சிறிது நேரத்தில் ஒரு நாணயம் அளவுக்கான பார்வைத் துவாரம் ஒன்று ஏற்பட்டு, அதன் வழியே கண் ஒன்று நோக்கியது.
‘’மாலை வணக்கம்.’’
சிறுவன் மிகவும் கனிவோடு பண்பட்ட முறையில் வணங்கினான். பின்னர் சுவரிலிருந்த துவாரம் ஒன்று திறக்கப்பட, அதில் மதுக்கடைப் பணிப்பெண் களைத்த முகமும் கலைந்த முடியுமாகத் தோற்றமளித்தாள்.
‘’இங்கு வரவில்லை. உன் அப்பா இங்கு வரவில்லை.’’
‘’அது எனக்குத் தெரியும்.’’
குளிர் உறைக்கவே, அவன் கைகளை உரசிக்கொண்டான்.
‘’அது எனக்கு ஏற்கெனவே, நன்றாகவே தெரியும்.’’
’’பின்னே ஏன் தூங்காமல் இங்கே வந்திருக்கிறாய்?’’
‘’இனிமேல் அப்பா எனக்குத் தேவையில்லை.’’
பையன் இறுக்கமாக, ஆனால் தெளிவாகவே பேசினான். பின்னர் அவன் கன்னத்துச் சதைகளை அசைக்க, அவையோ, அவன் கண்களில் கண்ணீர் வெடிக்கப்போவது போல், சுருங்கி இறுக்கமாகத் தோன்றின. அவன் குரல், மறையும் கதிரைநோக்கிக் கூவும் பெருவாத்து போலக் கம்மிக் கரகரத்து ஒலித்தது.
‘’அக்கா, நான் ஒரு வாய் குடிப்பதற்காக வந்தேன். ஒரே ஒரு வாய்,’’
அவன் பேச்சை நம்புமாறு கெஞ்சுவது போல அவள் முகத்தையே பார்த்தான்.
‘’குட்டீ, உனக்கென்ன புத்தி கெட்டுப் போச்சா?’’
‘’இரண்டே இரண்டு கோப்பை தான் குடிப்பேன். என்னிடம் பணம் இருக்கிறது.’’
அவன் இரண்டு நோட்டுகளைக் காட்டினான்.
‘’எனக்கு போதை வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும். என்னால் எவ்வளவு குடிக்க முடியுமென்று எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு கோப்பை குடித்தால், இரண்டே இரண்டு தான், அதற்கு மேல் வேண்டாம், சொப்பனம் எதுவுமில்லாமல் தூங்கிவிடுவேன். இப்படியே நிறுத்திவிட்டால், ஒன்றுமே குடிக்காமலிருப்பதை விட மோசமாக இருக்கும். என்னால் தூங்க முடியாது; அதனால்தான் சொல்கி....’’
அந்தக் குழந்தை, நன்னீர்க் குளத்து மீன் போலச் சிரித்தான். அடுக்களையிலிருந்து கையளவு அகல வெளிச்சம், துணையேதுமின்றிச் சாய்வாக அவன் முகத்தில் விழுந்தது. அந்தப் பெண் சிறிது யோசித்ததாகத் தோன்றியது. பின்னர், அவனுக்காகக் கதவைத் திறந்தாள்; அப்போதும் அவளைப் போன்ற பெண்களின் முகங்களில் எப்போதுமிருக்கும் ஒருவிதக் கலக்கம் அவளிடமும் தெரிந்தது. அவன் தள்ளாடியபடியே மதுக்கூடத்தினுள் நுழைந்தான். அந்தப் பெண் கொட்டாவியுடன் அடுக்களைக்குள் நுழைந்து, ஒரு புட்டியை எடுத்து வந்தாள்.
சிறுவன் மேசை மீது அமர்ந்தான்; மேசையும் குளிர்ந்திருந்தது. புட்டியிலிருந்த மதுவை, அவள் கோப்பையில் அவனுக்காக ஊற்றினாள். எதுவும் கலக்காத மது மண்ணெண்ணெய் வாசத்துடன் அவன் முன்பிருக்க, அவன் ஒரு நிமிடம் மூச்சினை இழுத்து நிறுத்தினான். அந்த மங்கலான வெளிச்சத்தில் கோப்பையைப் பார்த்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த தோற்றம், ஏதோ ஒரு தீர்க்கமான முடிவோடிருப்பதாகத் தோன்றியது. அவன் ஒவ்வொரு முறையும் கோப்பையை உயர்த்தியபோது, வெளிச்சம், விட்டிற் பூச்சியின் வெள்ளிய சிறகுகளாகச் சிதறியது; அவனோ விதைகளைத் தூவி விதைக்கும் சிறுவனைப் போலத்தோன்றினான். ஒரு கோப்பை காலியானது; அவன் மேசையின் மீது விரல்களால் மெல்லத் தாளமிட்டான். அவள் புட்டியை உயர்த்தி, கோப்பையின் விளிம்பில் தளும்பும் வரைத் தாராளமாகவே ஊற்றினாள்.
‘’ஒவ்வொரு முறையும் என் அப்பா குடிக்கும்போது அழுவார். ஆனால், நான் அழுவதில்லை; நீங்கள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே.’’
உள் அறை ஒன்றிலிருந்து குழந்தை ஒன்று அழும் சப்தம் கேட்டது. ஆனால், அந்தப் பெண், அதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அது தானாகவே அழுகையை நிறுத்திக்கொள்ளும் போலும். கோப்பையை மீண்டும் எடுத்தபோது, சிறுவனின் கரம், முடக்குவாதம் பீடித்த கை போல் நடுங்கியது; அவன் அப்படியே மதுவை விழுங்கிவிட்டான். அது ஒரு மிகக்குறுகிய நேரக் குதூகலம். சிறுவன் மெல்ல எழுந்தான்.
‘’அக்கா, நான் வளர்வதற்கு முன்னால், தயவு செய்து இறந்து விடாதே. ஆனால், அந்தப் பற்களை மட்டும் வெளிக்காட்டாதே, மூடிக்கொள்ளப் பார்.முயற்சி செய்துதான் பாரேன்.’’
அவன் வாசலின் முன்பு குனிந்து வணங்கினான். கதவைச் சாத்திய அந்தப் பெண் ஏதோ கத்தினாள்.
‘’நல்லது; ஒழிந்து போ, இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப் பார், தெரியும்.’’
 விசை தளர்ந்த பொம்மையாக அவன் நடந்துகொண்டிருந்தான். அவன் செல்ல வேண்டிய இடம் எதுவென்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவன் சரிவில் ஏறத் தொடங்கினான். பாழடைந்த வீட்டின் இடிபாட்டுக் குவியலொன்று இருட்டில் ஒரு மிருகம் போல் படுத்திருந்தது. இரவுப் பூனை ஒன்று கத்தியது. இந்த நேரத்தில் எப்போதுமே ஒரு பூனை அந்த வெளிச்சமற்ற குவியலில், வானத்தில் ஒரு வலை போலத் தோன்றவைக்கும் துருவேறிய இரும்புச் சட்டங்கள் கிடக்கும் இடத்தில் கத்துகிறது.
மலைக்குன்று மீதான காற்று இன்னும் அதிகக் குளிரோடிருந்தது. காற்சட்டைப் பைக்குள் கைகளை நுழைத்தவாறே அவன் மலைச் சரிவில் ஏறிக்கொண்டிருந்தான்.
மலைக்குன்று மீதுதான் அநாதை இல்லம் இருக்கிறது. விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருந்தன; குளிரிலிருந்து காத்துக்கொள்ளச் சிறுபந்து போலச் சுருண்டுகொண்ட குழந்தைகள் தூக்கத்திலிருந்தனர். யாராவது ஒரு பையன் பல்லைக் கடித்துக்கொண்டிருக்கலாம்; வேறொருவன் எப்போதும் போல இருட்டுக்குப் பயந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருக்கலாம்.
(ஆஹ்! ஆஹ்! இந்த இரவின் நள்ளிருட்டில் என் அப்பா உண்மையிலுமே எங்கே இருப்பார்?)
அவன் சிறிது தள்ளாடினான். இப்போது போல் குடித்திருந்தாலும், சுற்றுக் கம்பி வேலியில் நுழைவுத் துவாரமிருக்கும் இடத்தை அவன் ஒருபோதும் மறப்பதில்லை.
வெல்வெட்டாக மினுமினுக்கும் இருட்டில், செவிலியிடம் பிடிபடாமல் வெதுவெதுப்பான அவனது படுக்கைக்கு எப்படிப் பாதுகாப்பாக, ஊர்ந்து செல்வதென்று ஒரு கணம் அவன் கவலைகொண்டான். இருந்தாலுங்கூட, அவன் தன்னிறைவோடு, போதையின் எளிதான நன்னம்பிக்கை முனைப்பில் தன்னை ஒப்புக்கொடுத்தான்.
மலை அடிவாரத்திலிருந்து குளிர்ந்த காற்று தூசி மணத்துடன் வீசியது. அதை நுகர்ந்த அவன், பற்களை இறுக மூடிக்கொண்டே, அடுத்த நாள் அவனது அப்பாவைத் தவறாமல் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவதென்று தீர்மானித்தான்.
  


அடவி செப்டம்பர் 2015 இதழில் வெளியானது

No comments:

Post a Comment