Thursday 14 January 2016

ஜப்பானியச் சிறுகதை - பனிமனிதன் The Ice Man by Haruki Murakami

பனிமனிதன் The Ice Man

ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami  

ஆங்கிலம் : பிலிப் கேப்ரியேல் Philip Gabriel

தமிழில் ச. ஆறுமுகம்


எனது கணவர் ஒரு பனிமனிதன்.

பனிச்சறுக்கு மகிழ்விடத்தின் உணவுவிடுதி ஒன்றில்தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். பனிமனிதனைச் சந்திக்க இதைவிடப் பொருத்தமான ஒரு இடத்தைக் கற்பனை செய்யமுடியுமா என்ன? அந்த உணவுவிடுதியில், கும்பல் கும்பலான இளைஞர்களால் இரைச்சலும் சந்தடியும் மிகுந்திருந்த முகப்பிடத்தில், கணப்பிலிருந்து கூடியவரையில் அதிகத் தூரத்திலிருந்த ஒரு மூலையில் அமர்ந்து ஒரு புத்தகத்தில் மூழ்கியிருந்தார். அப்போது மதியம் நெருங்கிக்கொண்டிருந்தாலும், குளிர்ந்த காலையின் தெள்ளத்தெளிவான வெளிச்சம் அவர் மீது மட்டும் பிரகாசித்ததாகத் தோன்றியது. ‘’ அதோ ஒரு பனிமனிதன்,’’ என் தோழிகளில் ஒருத்தி கிசுகிசுத்தாள். அந்த நேரத்தில் பனிமனிதன் எப்படிப்பட்ட ஒரு ஆணாக இருப்பானென எனக்கு எந்த வகையான கருத்துமில்லை; எனது தோழிக்கும் இந்த வகையில் எனக்கு உதவி செய்யமுடியவில்லை. அவளுக்குத் தெரிந்திருந்ததெல்லாம் பனிமனிதன் அவனது பெயருக்குத் தக்கபடியான ஒரு மனிதனாக இருப்பான் என்பதுதான். ‘’ அவன் பனியால் செய்யப்பட்டிருப்பதால் அப்படி அழைக்கிறார்களாயிருக்கும்’’ என்று வேறு சொன்னாள், முகத்தைக் கூர்மையாக்கிக்கொண்டு.  அந்த விஷயம் ஒரு பனிமனிதனைப் பற்றியதாக இல்லாமல், மிகக்  கடுமையான ஒன்றாக, ஒரு பேய் அல்லது வேறு ஏதோ ஒரு தொற்றுநோய் பிடித்தவன் போன்ற விஷயம்போல.
பனிமனிதனின் தலையில் கம்பி, கம்பியாகக் குத்திட்டு அடர்ந்திருந்த முடியில் எஞ்சிய பனித்திட்டுகள் போல அங்கங்கே வெள்ளிக் கம்பிகள் தோன்றத் தொடங்கிக் கலந்திருந்தாலும், அவர்  இளமையாகத் தோன்றினார். அவர் உயரமாக, அவரது கன்னங்கள் உறைந்த செங்குத்துப்பாறை முகடு போல, உளிகொண்டு கூர்மையாகச் செதுக்கப்பட்டதாக, அவரது விரல்களை  மூடியிருந்த தடிப்பான உறைபனிப் படிமம் ஒருபோதும் உருகவே உருகாது போலத் தோன்றியது. இது ஒன்றைத்தவிர அவர் முழுக்க முழுக்க ஒரு சாதாரண மனிதராகத் தோன்றினார். சிலர் அவரை மிகவும் கவர்ச்சியானவராகக் கருதலாமென்றாலும், மிகச்சரியாகச் சொல்வதென்றால் அவர் அழகானவராக இல்லைதான். ஆனால், அவரிடமிருந்த ஏதோ ஒன்று, குத்திக் கிழித்து, உங்களுக்குள் நேரடியாக ஊடுருவுவதாக இருந்தது. குறிப்பாக, அவரது கண்கள் , குளிர்காலக் காலையில்  உருகிச் சொட்டும்  உறைபனிப் படிகமாகப் பளபளக்கும்  அந்தச் சலனமற்ற அமைதிநிறைந்த, வெளிப்படையான பார்வை – மற்றபடிச் சாதாரணமான அந்த உடலினுள்  உயிரின் முழுத்துடிப்பு. நான் அங்கே சிறிது நின்று, முகப்புக் கூடத்தின் ஊடாக பனிமனிதனைக் கூர்ந்து நோக்கினேன். அவர் ஒருமுறைகூட அசையாமல், ஆடாமல், வேறெங்கும் பார்க்காமல், அங்கே அவர் மட்டுமே  முழு, முற்றிலுமான தனிமையில் அமர்ந்திருப்பதாகத் தன்னைத் தானே திருப்திப்படுத்திக்கொள்ள முயற்சிப்பதாகத் தோன்றுமாறு புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்தார்.
அடுத்தநாள் பிற்பகலும் அவர் அதே இடத்தில் முன்பு போலவே, அவரது புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். நான் மதிய உணவுக்காகச் சாப்பாட்டு அறைக்குச் சென்றபோது, தோழிகளுடன் பனிச்சறுக்கு விளையாடித் திரும்பி வந்தபோது, அவர் எப்போதும் அங்கேயே, அதே நாற்காலியில் முன்பு போலவே, அதே புத்தகத்தின் பக்கங்களைத் துருவித் துருவி அலகிடுவது போன்ற பார்வையோடு அமர்ந்திருந்தார். அடுத்த நாளும் அச்சு அசலாக  அதுவேதான். காலை முதல் இருட்டும் வரை அவர் தனிமையில், அமைதியாக வாசித்துக்கொண்டு, உலகம் என்னவோ, அறைக்கு வெளியே, எல்லாமே  குளிர்காலத்தின் உறைபனிக்காட்சியே  போல  அமர்ந்திருந்தார்.
நான்காம் நாள் பிற்பகலில் நான் ஏதோ சாக்குப் போக்கு சொல்லி, பனிச் சறுக்குக்கு யாருடனும் சேர்ந்துகொள்ளவில்லை. பதிலாக, உணவு விடுதியிலேயே  இருந்துகொண்டு, முகப்புக்கூடத்தின் பக்கமாக உலவினேன். எல்லோரும் பனிச்சறுக்குக்குச் சென்றிருக்கவே, முகப்புக்கூடம் கைவிடப்பட்ட நகரம் போலிருந்தது. பிசுபிசுவென ஒட்டுவதாக, வெப்பத்தோடிருந்த காற்றில்,   உணர்வுகளை மங்கச்செய்யும் ஒரு வினோத வாசம் – அரணக்காலணிகளின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டு அறைக்குள் வந்திருந்த பனிச்சேறு கணப்பின்  முன்பக்கம் அருகில் மெல்ல உருகும் வாசம் – நிறைந்திருந்தது. நான் ஒரு செய்தித்தாளைக் கையில் பிடித்துக்கொண்டு, ஜன்னல் வழியே வியந்து நோக்கும் பார்வையை, அவர் மீது செலுத்திக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒருவழியாக என்னைத் தேற்றிக்கொண்டு, பனிமனிதனிடம் போய்ப் பேசினேன். அதிகமாக வெட்கப்படும் நான், அதற்கு முன்னர் ஒரு அந்நிய மனிதரிடம் போய் நானாக ஒருபோதும் உரையாடலைத் தொடங்கியதில்லை.   ஆனாலும் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. நான் அவரிடம் பேசியே ஆகவேண்டும். நான், அந்த விடுதியில் இருக்கப்போகும் கடைசி இரவு, அது. அந்த வாய்ப்பைத் தவறவிட்டால், இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலே போகலாம்.                      
‘’நீங்கள் பனிச்சறுக்குவதில்லையா?’’ குரலை இயல்பானதாக்க முயன்று கொண்டே, நான் கேட்டேன். பனிமனிதன் மெல்லத் தலையை உயர்த்தி, எங்கோ வெகுதூரத்தில் வீசும் காற்றின் ஓசையைக் கவனமாகக் கேட்கும் பாவனையில் பார்த்தார். அவர் வியப்புடன் என்னைக் கூர்ந்து நோக்கிப் பின் அமைதியாகத் தலையைக் குலுக்கிக்கொண்டார்.
‘’ நான் பனிச்சறுக்குவதில்லை. ’’ அவர் சொன்னார். ‘’ வாசிப்பதிலும் பனியைப் பார்த்துக்கொண்டிருப்பதிலுமே நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.’’ அவரது வார்த்தைகள் ஒரு நகைச்சுவைச் சித்திரச் சுவடியின் வெள்ளை வட்டமிடப்பட்ட உரையாடல்களின் சொற்பலூன்களாக, ஒவ்வொரு வார்த்தையும் என் கண்ணில் தெரிவதாகக்  காற்றில் மிதந்தன. அவர் விரல்களில் துளிர்த்திருந்த உறைபனித்துகள்களை மெல்லத் துடைத்தகற்றினார்.
அடுத்து என்னசொல்வதென்று எனக்கு எதுவும் முன்யோசனை இல்லை. வெட்கத்தில் முகம் சிவந்து, அந்த இடத்திலேயே, ஆணியடித்தாற்போல் நின்றேன். பனிமனிதன் என் கண்களுக்குள் நேராகப் பார்த்து, வறண்ட புன்னகை போன்ற ஒன்றை வெளிப்படுத்தியதாகத் தோன்றியது. அது அப்படித்தானிருந்ததா? உண்மையில் அவர் புன்னகைத்தாரா? நானாகவே அப்படிக் கற்பனைசெய்து கொண்டதாகவும் இருக்கலாம்.
‘’ சிறிது அமர விரும்புவீர்களா?’’ என்றார், அவர். ‘’ எனக்குத் தெரியும். நீங்கள் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறீர்கள். அதனால் கொஞ்சம் பேசலாமே. உங்களுக்கு, பனிமனிதன் எப்படிப்பட்டவனென்று தெரிந்துகொள்ளவேண்டும், அப்படித்தானே?’’ அவர் `களுக்`கென்று சிரித்துக்கொண்டார். பரவாயில்லை என்றும் சொல்லிக்கொண்டவர், ‘’பயப்படுவதற்கு எதுவுமில்லை. என்னிடம் பேசுவதால், உங்களுக்கொன்றும் நீர்க்கோர்வை பிடித்துவிடாது.’’ என்றார்.
முகப்புக் கூடத்தின் ஒரு மூலையிலிருந்த சாய்மெத்தை ஒன்றில் நாங்கள் உட்கார்ந்து, வெளியே சுழன்றுகொண்டிருக்கும் பனிப்புகையைப் பார்த்தவாறு, தயக்கத்துடனேயே பேசிக்கொண்டிருந்தோம். நான் சூடான ஒரு கொக்கோ பானம் கொண்டுவரச் சொன்னேன். பனிமனிதன் எதையும் குடிக்கவில்லை. அவரும் என்னைப் போலவே வெட்கப்படுபவராக இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களிடையே பொதுவாகப் பேசிக்கொள்வதற்கு எதுவுமே இல்லாமலிருந்தது. வானிலை பற்றி முதலில் பேசினோம், பின்னர் உணவகத்தைப் பற்றி. ` இங்கு தனியாகவா வந்திருக்கிறீர்கள்?` என நான் கேட்டேன். `அப்படித்தான்` என அவர் பதில்சொன்னார்.  `பனிச்சறுக்குவது உங்களுக்குப் பிடித்தமானதா?` அவர் கேட்டார். `குறிப்பாக அது மட்டும் தான் என்றில்லை` என்றேன், நான். `என் தோழிகள் சிலர் என்னை இங்கே இழுத்துவந்துவிட்டனர். சுமாராகத்தான் பனிச்சறுக்குவேன்.` பனிமனிதன் பற்றிய எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆவலில் நான் செத்துக்கொண்டிருந்தேன். அவர் உண்மையிலேயே பனியில் செய்யப்பட்டவரா? அவர் என்ன சாப்பிடுவார்? கோடையில் அவர் எங்கு வசிப்பார்? அவருக்குக் குடும்பம் உள்ளதா? இந்த மாதிரி கேள்விகள். துரதிர்ஷ்டவசமாக அவர் தன்னைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்த கேள்விகளை அவரிடம் கேட்பதற்கு எனக்குத் துணிவில்லை. அதுபோன்ற விஷயங்களைப் பேச அவர் விரும்பவில்லையென நானாகவே நினைத்துக்கொண்டேன்.
மாறாக, நான் யார், என்ன, ஏது என்பதுபற்றி அவராகவே பேசினார். நம்பவே முடியவில்லை, ஆனால் என்னைப்பற்றிய எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. என் குடும்பத்தில் யார், யார், என் வயது, எனது விருப்பங்கள், எனது ஆரோக்கியம், நான் படிக்கும் பள்ளிக்கூடம், என் தோழிகள் என எல்லாமே அவருக்குத் தெரிந்திருந்தது. நான் என்றைக்கோ, எப்போதோ மறந்துபோன விஷயங்கள் பற்றிக்கூட அவருக்கு எல்லாமே தெரிந்திருந்தது.
இது எப்படியென்று புரியவேயில்லையென, நான் முகம் சிவந்தேன். எல்லோர் முன்பாகவும் என் ஆடைகளை இழந்து அம்மணமானது போல் உணர்ந்தேன். என்னைப்பற்றி இவ்வளவு விபரங்கள் உங்களுக்கு எப்படித் தெரியுமென்று நான் கேட்டேன். ‘’ நீங்கள் என்ன, பிறர் நினைப்பதைச் சொல்லும் மனமறிநிபுணரா?’’
இல்லை, என்ற பனிமனிதன், என்னால் மனங்களையெல்லாம் அறியமுடியாதென்றார். எனக்கு இந்த விஷயங்கள் தெரிகின்றன, அவ்வளவுதான். தெளிவான ஒரு பனிப்படிகத்தினுள் கூர்ந்து பார்க்கும்போது தெரியுமே, அதுபோல. உங்களை ஆழமாகப் பார்க்கும்போது உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் என்னால் பார்க்கமுடிகிறது.
‘’என்னுடைய எதிர்காலத்தையும் உங்களால் பார்க்க முடியுமா?’’ நான் கேட்டேன்.
‘’இல்லை, எதிர்காலம் தெரிவதில்லை, ’’ அவர், தலையை மெல்ல அசைத்துக் கொண்டே, எந்த உணர்ச்சியுமில்லாமல் சொன்னார். ‘’ எதிர்காலத்தில் எனக்கு ஆர்வமில்லை. எனக்கு எதிர்காலம் பற்றிய கருத்தாக்கம் எதுவும் இல்லை. பனிக்கட்டிக்கு எதிர்காலம் எதுவுமில்லை, கடந்தகாலம் மட்டுமே, அதுவும் மூடி முத்திரையிடப்பட்ட ஒன்று. கடந்தகாலம் பனிக்கட்டிக்குள் உயிரோட்டத்தோடிருப்பது போலவே பூமியில் எல்லாவற்றின் கடந்தகாலமும் அவற்றுக்குள், தெளிவாக, பிரத்தியேகமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டிகள் அந்தவிதமாக  எல்லா வகையான பொருட்களையும் தெளிவாக, அழுக்குப்படாமல் பாதுகாக்க முடியும். அதுதான் பனிக்கட்டியின் சாராம்சம், அது ஆற்றும் பங்களிப்பு.
எனக்கு மிக்க மகிழ்ச்சியெனப் பதிலளித்துப் புன்னகைத்தேன். எனக்கு ஆறுதலாக இருந்தது – என்னுடைய எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள எந்த வாய்ப்பும் இல்லை.
நாங்கள் டோக்யோவுக்குத் திரும்பியபின் ஒருசில முறை ஒவ்வொரு வார இறுதியிலும் மணநோக்குச் சந்திப்பாகவே சேர்ந்திருந்தோம். நாங்கள் எல்லோர் மாதிரியான மணநோக்குச் சந்திப்பாக, திரைப்படம் பார்த்தல் அல்லது காபியகங்களில் அமர்ந்து பேசுவது என்றில்லை. நாங்கள் வெளியே எதுவும் சாப்பிடக்கூடப் போவதில்லை. அவர் எப்போதும் எதுவுமே சாப்பிடவுமில்லை.  பதிலாக, நாங்கள் ஒரு பூங்கா பெஞ்சில் அருகருகாக அமர்ந்து பேசுவதிலேயே நேரத்தைச் செலவிட்டோம். நாங்கள் எல்லாவிதமான பொருட்கள், துறைகள் எனப் பேசிவிட்டோமென்றாலும், பனிமனிதன் ஒருமுறைகூட அவரைப்பற்றிய பேச்சினை எடுக்கவேயில்லை. ஏன் இப்படி? நான் ஒருமுறை கேட்கவே செய்தேன். ஏன் உங்களைப் பற்றி மட்டும் எப்போதுமே பேசமாட்டேனென்கிறீர்கள்? உங்களைப் பற்றி எனக்கு இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் – எங்கு பிறந்தீர்கள்? உங்கள் அப்பா, அம்மா எப்படியானவர்கள்? எப்படிப் பனிமனிதன் ஆகினீர்கள்? – பனிமனிதன் என்னையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டுப் பின்னர் மெல்லத் தலையைக் குலுக்கிக்கொண்டார். இவற்றிற்கெல்லாம் எனக்கு எந்தப் பதிலும் தெரியாது என அமைதியாகத் தீர்மானமாக, அவரது கடினமான வெண்மூச்சினை வெளியிட்டுக்கொண்டே கூறினார். ‘’ எனக்குக் கடந்தகாலம் இல்லை. எல்லாவற்றினுடைய கடந்த காலத்தையும் நான் அறிவேன். அவற்றை எனக்குள் பத்திரப்படுத்திக்கூட வைத்திருக்கிறேன். ஆனால், எனக்கென்று தனியாகக் கடந்தகாலம் எதுவும் இல்லை. நான் எங்கே பிறந்திருப்பேனென்பதற்கு என்னிடம் உத்தேசமாகக்கூட நினைவுக்கருத்து  ஏதும் இல்லை. என்னுடைய அப்பா, அம்மா எப்படி இருப்பார்கள், அல்லது எனக்குப் பெற்றோர் உண்டுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை. எனக்கு எத்தனை வயதாகிறது அல்லது எனக்கு வயதென்று ஒன்று உண்டுமா என்பதும் எனக்குத் தெரியவில்லை.’’
இருட்டில் மிதக்கும் ஒற்றைப் பனிப்பாறை போல, பனிமனிதன் கூட்டத்தினின்றும் விலகித் தனியாகியிருந்தார்.
அவர் மீது ஆழமான காதல் கொண்டேன். அவர் என்னை, கடந்தகாலம் மட்டுமல்லாது எதிர்காலத்திற்கும் அப்பாற்பட்டு, நிகழ்காலத்திய என்னைக் காதலிக்கிறார். அதுபோலவே நானும் பனிமனிதனை, தற்போதிருப்பவரை, கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்கு அப்பாற்பட்டு நேசிக்கிறேன். இது ஒரு அற்புதமான விஷயம். திருமணம் செய்துகொள்வது குறித்து பேசத் தொடங்கினோம். எனக்கு அப்போதுதான் இருபது வந்திருந்தது. நான் உண்மையாகக் காதலித்தவர்களில் பனிமனிதன் தான் முதலாமவர். அந்த நேரத்தில் அவரைக் காதலிப்பதென்பதன் பொருள் என்னவாக இருந்ததென்றால், அது என்னை மீறியதாக இருந்தது. நான் காதலில் வீழ்ந்திருந்த அவர் பனிமனிதனாக இல்லாவிட்டாலுங்கூட அதுதான் உண்மை.
என்னுடைய அம்மாவும் அக்காவும் எங்கள் திருமணத்திற்கு முற்றிலும் எதிராக இருந்தார்கள்.
திருமணம் செய்துகொள்வதற்கு நீ மிகவும் இளையவள் என்று அவர்கள் வாதிட்டனர். ‘’ அந்த நபரின் பின்புலம் – எங்கு அல்லது எப்போது அவர் பிறந்தாரென்று கூட உனக்குத் தெரியாது. நமது உறவினர்களுக்கு இதை நாங்கள் எப்படி விளக்குவோம்? நன்றாகக் கேட்டுக்கொள் என்ற அவர்கள் மேலும் மேலுமாகப் பேசிக்கொண்டேயிருந்தார்கள், அவர் ஒரு பனிமனிதன், அதனால் அவர் உருகிவிட்டால் என்ன செய்வாய்? இதை நீ புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை, ஆனால், திருமணம் என்று செய்துகொள்ளும்போது சிலபல பொறுப்புகள் உள்ளன. ஒரு பனிமனிதன் கணவன் என்ற வகையில் அவரது கடமைகளை எப்படி நிறைவேற்றுவார்? அது முடிகிற ஒன்றா?’’
ஆனாலும் அவர்களது அச்சத்திற்கு எவ்வித அடிப்படையுமில்லை. பனிமனிதன் உண்மையில் பனியால் செய்யப்பட்டவரல்ல. அவர் பனியைப் போல குளிர்ந்திருக்கிறார், அவ்வளவுதான். அதனால் வெப்பம் மிகுந்தாலுங்கூட அவரொன்றும் உருகிவிடப்போவதில்லை. அவர் குளிர்ந்திருக்கிறார், சரிதான், ஆனால், அது அடுத்தவருடைய உடல் வெப்பத்தினை உறிஞ்சிக் குறைத்துவிடக்கூடிய அளவுக்கானதல்ல.
அதனால் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் திருமணத்தை யாருமே கொண்டாடவில்லை. யாருமே – என் நண்பர்கள், உறவினர்கள் அல்லது என் குடும்பத்தினர்கூட – நாங்கள் திருமணம் செய்துகொண்டதில் மகிழ்ச்சியாக இல்லை.
திருமணச் சடங்கென்று கூட நாங்கள் எதுவும் செய்துகொள்ளவில்லை. பனிமனிதனுக்கு குடும்பப் பதிவு என எதுவுமில்லை. அதனால் சட்டபூர்வமான உரிமையியல் சடங்கும் இல்லாமலாயிற்று. நாங்கள் இருவரும் திருமணமானவர்களென்று நாங்களே தீர்மானித்துக்கொண்டோம், அவ்வளவுதான். நாங்கள் ஒரு சிறிய இனிப்புரொட்டியை வாங்கி நாங்கள் இருவர் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டோம். அதுவேதான் எங்கள் திருமணச் சடங்காக இருந்தது. நாங்கள் ஒரு சிறிய அடுக்ககக் குடியிருப்பினை வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். பனிமனிதன் இறைச்சிக் குளிர்பதனக் கிடங்கொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். குளிர் அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை. எவ்வளவு வேலைசெய்தாலும் அவர் களைப்படையவே இல்லை. அவர் எப்போதுமே அதிகம் சாப்பிடுவதும் இல்லை. அதனால் அவரது முதலாளிக்கு உண்மையிலேயே அவரைப் பிடித்துப்போயிற்று. அதனால் இதர பணியாட்களைவிட அதிகமாகவே சம்பளம் கொடுத்தார். நாங்கள் இருவர் மட்டுமே என்பதால், பிறரைப்பற்றி எந்தக் கவலையுமில்லாமல், யாரையும் தொந்தரவுபடுத்தாமல் ஒரு அமைதியான வாழ்க்கையை, வாழ்ந்தோம்.
நாங்கள் காதலில் ஈடுபட்டபோது, நான் எப்போதும், எங்கேயோ தனிமையில் மிதக்கும் மவுனப் பனிப்பாறை ஒன்றின் வடிவத்தை மனக்கண்ணில் கருக் கொண்டேன். அகில உலகத்திலும் மிகமிகப் பெரியதான அந்தக் கடினமான பனிப்பாறை எவ்வளவு இறுகியிருக்கமுடியுமோ அவ்வளவுக்குக் இறுகியதாக இருந்தது. அது எங்கேயோ வெகுதூரத்தில் இருந்ததென்றாலும், அந்தப் பனிப்பாறையின் இருப்பிடம் குறிப்பாகப் பனிமனிதனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர் செய்ததெல்லாம் அந்தப் பனிக்கட்டி பற்றிய நினைவுக்குள் என்னைப் புகுத்தியதுதான். நாங்கள் காதலில் ஈடுபட்ட முதல் சிலமுறை நான் குழம்பிப்போயிருந்தேன், ஆனாலும் விரைவிலேயே அதற்குப் பழக்கப்பட்டுவிட்டேன். அவர் என்னைக் கைகளில் ஏந்திக்கொண்டபோது நான் அதை விரும்பத் தொடங்கிவிட்டேன். எப்போதும்போலவே, அவர் அவரைப்பற்றி எதுவுமே, அவர் ஏன் ஒரு பனிமனிதனானாரென்றுகூடச் சொல்லவில்லை. நானும் அதுபற்றி அவரை ஒருபோதும் கேட்டதில்லை. நாங்கள் இருவரும் இருட்டின் தனிமைக்குள் உலகின் கோடிக்கணக்கான வருடங்கள் மதிப்புள்ள கடந்த காலத்துக்குள் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள அந்த மிகப்பெரிய பனிக்கட்டியைப் பகிர்ந்தவாறே ஒருவரை ஒருவர் அணைத்துச் செயலற்றுக் கிடந்தோம்.
எங்கள் திருமண வாழ்க்கை அற்புதமாக இருந்தது. நாங்கள் ஒருவரை யொருவர் காதலித்தோம். எல்லோரும் எங்களைத் தனியே விட்டு அகன்றுசென்றனர். பனிமனிதனை இயல்பான ஒருவராக ஏற்றுக்கொள்வது மக்களுக்கு முதலில் கடினமாக இருந்தது. ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் அவரோடு பேசத்தொடங்கினர். பனிமனிதன் மற்ற மனிதர்களோடு ஒன்றும் அதிகமாக வேறுபடவில்லையென்ற முடிவுக்கு வந்தனர். ஆனால்,  இன்னும் அவர்கள் அவரை உள்ளூற ஏற்றுக்கொள்ளவில்லையென்பது எனக்குத் தெரிந்தது. நான் அவரைத் திருமணம் செய்திருப்பதால் அவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் அவர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்ற முடிவுக்கே அவர்கள் வந்தனர். எங்களையும் அவர்களையும் பிரித்த இடைவெளி ஒருபோதும் நிரப்பப்படப் போவதில்லை.

ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள நாங்கள் முயன்றும் முடியவில்லை. ஒருவேளை மனிதர்களுக்கும் பனிமனிதர்களுக்குமான ஈனியல் வேறுபாடுகள் காரணமாக மகப்பேறு உண்டாவதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுவதாக இருக்கலாம்.
எப்போதும் ஓயாத வேலையில் ஈடுபட்டிருக்க, ஒரு குழந்தை இல்லாததால்  மிகுந்த ஓய்வு நேரம் என் கைகளில் இருப்பதை, நான் கண்டேன். முற்பகல் முழுவதும் வீட்டுவேலைகளில் மூழ்கிவிடுவேன். ஆனால், அதன் பிறகு என்னைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கக்கூடிய எதுவுமில்லை. பேசுவதற்கோ அல்லது வெளியில் செல்வதற்கோ நண்பர்கள் யாரும் இல்லை. அந்தப் பகுதியில் யாரையும் எனக்குத் தெரியவும் செய்யாது. நான் பனிமனிதனைத் திருமணம் செய்துகொண்டதில், என் அம்மாவும் அக்காவும் அப்போதும் கோபம் தீராமல், என்னோடு எந்தத் தொடர்பும் கொள்ள மறுத்தனர். தொலைபேசியில் கூட பேசிக்கொள்ள யாருமே இல்லை. பனிமனிதன் குளிர்பதனக் கிடங்கில் பணிபுரியும்போது நான் வீட்டில் தனியாக வாசித்துக்கொண்டோ அல்லது இசை கேட்டுக்கொண்டோ இருந்தேன். என்ன இருந்தாலும், நான் ஓரளவுக்கு வீட்டுப்பூச்சி தான் என்பதால் அப்படி வீட்டிலேயே அடைந்துகிடப்பது குறித்து அதிகமாகக் கவலைப்படவில்லை.
நான் அப்போதும் இளமையோடிருந்ததால் நீண்டநாட்களுக்கு அப்படியான ஒரு சலிப்புதருகின்ற அன்றாட நடைமுறைக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் அப்படியேயான ஒன்றாகத் திருப்பித்திருப்பி நிகழ்வதைவிட, சலிப்பு ஒன்றும் என்னை அதிகம் தொந்தரவுபடுத்திவிடவில்லை. அந்த அன்றாட நடைமுறைக்குள் மீண்டும் மீண்டும் நிகழ்கிற ஒரு நிழலுக்கும் மேலான ஒன்றாக நான் இல்லையென உணரத் தொடங்கினேன்.
அதனால், ஒருநாள் நான் எனது கணவரிடம் நடைமுறை அலுப்பினை  உடைக்கும் விதமாக எங்கேயாவது ஒரு சிற்றுலா சென்று வரலாமேயெனக் கேட்டேன். ‘’சிற்றுலா?’’ புருவங்களைச் சுருக்கிக்கொண்டே பனிமனிதன் கேட்டார். ‘’ நீ ஏன் சிற்றுலா செல்ல விரும்புகிறாய்? நாம் இருவர் மட்டுமே இருப்பதால், நமது வாழ்முறை உனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இல்லையா?’’
‘’இல்லை, அப்படி இல்லை, ‘’ என்ற நான், ‘’ முழு மகிழ்ச்சியோடிருக்கிறேன். நாம் இருவரும் இணக்கமாக, அருமையாக இருக்கிறோம்.’’ என்றேன்.
‘’ கொஞ்சம் சலிப்பாக இருக்கிறது, அவ்வளவுதான். வெகுதூரத்திலுள்ள ஏதாவது ஒரு இடத்துக்குப் போய், இதுவரை பார்க்காத புதியனவற்றைப் பார்க்க, புதிய அனுபவங்கள் பெற விரும்புகிறேன். நான் சொல்வது என்னவென்று உங்களுக்குத் தெரிகிறதா?’’
‘’ அதுவுமல்லாமல், நாம் தேனிலவுக்கென்று எங்குமே செல்லவில்லை. போதுமான அளவுக்கு சேமித்திருக்கிறோம். உங்களுக்கும் விடுமுறைக்காலம் நிறையவே இருக்கிறது. ஒருமுறை சாவதானமாக விடுமுறையைக் கழிப்பது நன்றாக இருக்குமே.’’
பனிமனிதன் ஆழமான, காற்றில் படிகமாவதைக் கேட்கின்ற வகையில் உறையவைக்கும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, பின்னர் உறைபனி மூடிய அவரது நீண்ட விரல்களை மடியில் சேர்த்து மடக்கிக்கொண்டார். நல்லது என்ற அவர், ‘’ உண்மையிலேயே ஒரு சிற்றுலா செல்ல நீ அந்த அளவுக்கு விரும்பும்போது, அது வேண்டாமென நானும் நினைக்கவில்லை. பயணம் அவ்வளவுக்கு மகத்தானதென நான் நினைக்கவில்லை; ஆனால் உன்னை மகிழ்ச்சிப்படுத்துகிற எந்த ஒன்றையும் நான் மேற்கொள்வேன். நீ எங்கெங்கே விரும்புகிறாயோ அங்கெல்லாம் போகலாம். குளிர்பதனக் கிடங்கில் கடுமையாகப் பணி செய்திருக்கிறேன். அதனால் கொஞ்சகாலம் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். அது ஒன்றும் பிரச்சினையாக இருக்காது. அது சரி, நீ எங்கே போக விரும்புகிறாய்?’’
‘’ தென் துருவம் எப்படி?’’ என்றேன், நான். நான் தென் துருவத்தைச் சொன்னது எதற்காகவென்றால், அங்கு செல்வதில் அவர்   ஆர்வமாக இருப்பாரென்பது எனக்கு நிச்சயமென்பதால்தான். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், நான் எப்போதுமே அங்கு சென்று, அதைப் பார்க்க விருப்பமாயிருந்தேன். பெங்குவின் பறவைகளையும் தென்முனைச் சுடரொளி வண்ணங்களையும் காண்பதற்கு.
அந்தத் தென்முனைச் சுடரொளியின் கீழ், தலைக்கவிகையுடனான எக்ஸிமோ ஆடை அணிந்த நான் பெங்குவின்களோடு விளையாடுவதான ஒரு  அற்புத மனக்காட்சியை அவ்வப்போது கண்டுகொண்டிருந்தேன்.
பனிமனிதன் இமைக்காமல், என் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தார். அவரது பார்வை கூர்முனையுள்ள உறைபனிக்கதிரொன்று என் மூளைக்குள் ஆழமாகப் பாய்வதைப் போல இருந்தது. அவர் சிறிது நேரம் அமைதியாகச் சிந்தனையிலிருந்து, பின்னர், குரலில் ஒரு மகிழ்ச்சிக் கீற்று மின்னலிட, ‘’அதெல்லாம் சரிதான். உண்மையிலேயே நீ தென்துருவம் செல்ல ஆசைப்பட்டால், அங்கேயே நாம் செல்வோம். எங்கே போக வேண்டுமென்று உறுதியாகத் தீர்மானித்துவிட்டாயா?’’ எனக் கேட்டார்.
நான் தலையை ஆட்டினேன்.
‘’ ஒன்றிரண்டு வாரத்தில், நான் நீண்ட விடுமுறை வாங்கிக்கொள்ள முடியும். அதற்குள் பயணத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் நீ தயார்செய்து விடலாம். அவ்வளவுதான், உனக்கும் எல்லாம் சரிதானே?’’ என்றார்.
என்னால் பதில் சொல்லமுடியவில்லை. அவரது கூரான பனிக்கதிர்ப் பார்வை என் மூளையை உறையச்செய்துவிட்டது. என்னால் சிந்திக்க முடியவில்லை.
நாட்கள் செல்லச்செல்ல, என் கணவரிடம் ஏன்தான் தென்துருவத்துக்குப் போகலாமென்ற யோசனையைக் கூறினோமோ என வருத்தப்படத் தொடங்கினேன். அது ஏனென்று எனக்குத் தெரியவில்லை.  `தென் துருவம்` என்ற பெயரை நான் உச்சரித்ததுமே அவரிடம் பெரிய மாற்றம் நிகழ்ந்து விடுகிறது. அவரது கூரிய பனிக்கதிர்க் கண்கள் வழக்கத்தைவிட அதிகமாகத் துளைத்தன. அவரது வெண்புகை மூச்சுக்காற்று மேலும் அடர்த்தியாகி, அவரது விரல்களில் அதிகப்படியான பனி உறைந்து மூடியது. அவர் முன்பை விடவும் அமைதியாக, ஆனால் அசைக்க முடியாத பிடிவாதங் கொண்டவரானார். அவர் தொடர்ந்து எதுவுமே சாப்பிடாமலிருந்ததுதான் என்னை அதிகக் கவலைகொள்ளச் செய்தது. நாங்கள் புறப்பட ஐந்து நாட்கள் இருக்கும்போது நான் அவரிடம் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டுமென்று தீர்மானமாக நினைத்தேன். ‘’ நாம் தென்துருவமெல்லாம் ஒன்றும் போகவேண்டாம். அங்கே ரொம்பக்குளிராக இருக்கும். அது நம் இருவருக்குமே நல்லதல்ல. ஐரோப்பா அல்லது ஸ்பெயின் மாதிரி எங்காவது சாதாரணமான இடமாகப் போவதுதான் நல்லது. நாம் கொஞ்சம் ஒயின் அருந்தி, பெய்ல்லா சாப்பிட்டு, ஒன்று அல்லது இரண்டு எருதுச்சண்டை  பார்க்கலாம்.’’ என்றேன். என் கணவரோ என்னை முழுவதுமாக அலட்சியப்படுத்தினார். எங்கேயோ பார்ப்பது போன்ற பார்வையுடன் சிறிது நேரத்துக்குத் தோன்றிப் பின் என் பக்கமாகத் திரும்பி, என் கண்களுக்குள் ஆழமாக நோக்கினார். அவரது கூரிய பார்வையின் பனிக்கணை என்னுள் ஆழமாகத் துளைத்ததில், அங்கேயே, அப்பொழுதே என் உடல் அழிந்துவிடுமோவென உணரத்தொடங்கினேன்.
‘’ இல்லை, ஸ்பெயின் எனக்கு ஆர்வமூட்டுவதாக இல்லை. மன்னித்துக்கொள், ஆனால், அங்கு அதிக வெக்கை, தூசியுங்கூட. உணவிலும் மசாலா ஒரேயடியாக அதிகம். அதோடு தென் துருவத்துக்காக இரண்டு டிக்கெட்டுகள் மற்றும் உனக்காக ஒரு மயிர்த்தோல் கோட்டும் மயிர்த்தோல் வரியிட்ட அரணக்காலணிகளும் ஏற்கெனவேயே வாங்கிவிட்டேன். அவற்றை வீணாக்க முடியாது. இப்போதுபோய் பின் வாங்க முடியாது.’’
உண்மையில் சொல்கிறேன், நான் ரொம்பவே பயந்துவிட்டேன். தென் துருவத்துக்குப் போனால், எங்களுக்கு நிச்சயம், ஏதோ ஒரு பயங்கரத் தீங்கு விளையுமென நான்  உணர்ந்தேன். ஒவ்வொரு இரவிலும் நான் ஒரே மாதிரியான பயங்கரக் கனவுக்கு ஆட்பட்டேன். எங்கேயோ ஓரிடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு ஆழமான குழிக்குள் விழுந்துவிடுகிறேன். யாருமே என்னைப் பார்க்கவில்லை. அதோடு அப்படியே நானொரு திடப்பொருளாக உறைந்துபோகிறேன். நான் ஆகாயத்தைப் பார்த்தபடியே பனிக்குள் உறைந்துபோகிறேன். நான் உணர்வோடுதான் இருக்கிறேன், ஆனாலும் என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடியவில்லை. அது அப்படியான ஒரு பயங்கரத் திகிலாக இருந்தது. நகர்ந்து செல்லும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் நான் கடந்தகாலத்தின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருந்தேன்.
எனக்கு எதிர்காலமே இல்லை. கடந்தகாலம் மட்டுமே மேலும்மேலும் நிதானமாக ஒன்றின் மேலொன்றாக அடைசேர்ந்து கனமாகிக்கொண்டிருந்தது. எனக்கு இப்படி நிகழ்ந்துகொண்டிருப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் கடந்த காலத்தை, நான் மேலும்மேலுமாக நழுவித் தூரமாக விலகிச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் நான் விழித்து, பனிமனிதன் என் அருகிலேயே தூங்குவதைப் பார்க்கிறேன். தூங்கும்போது அவர், ஏதோ ஒன்று உறைந்து இறந்து போனது போல எந்தச் சப்தமும் இல்லாமல் தூங்குகிறார். ஆனாலும் நான் அவர்மீது காதலாக இருக்கிறேன். நான் அழத்தொடங்கி, என் கண்ணீர் அவரது கன்னங்களை நனைத்தது. அவர் விழித்து, என்னை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார். பயங்கரமான திகில் கனவு, என்றேன் நான். இருட்டில் அவர் தலையை மெல்லக் குலுக்கிக்கொள்கிறார்.
‘’அதென்ன, வெறுங்கனவுதானே,’’ என்கிறார், அவர். ‘’ கடந்தகாலத்திலிருந்து தான் கனவுகள் பிறக்கின்றன, எதிர்காலத்திலிருந்தல்ல. கனவுகள் உன்னை ஆட்டுவிக்கக்கூடாது – நீதான் அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.’’
`நீங்கள் சரியாகச் சொல்கிறீர்கள்` என்றேன் நான். ஆனால் எனக்கு அதில் எந்தவித உடன்பாட்டு உறுதியும் இல்லை.
ஆகவே, நாங்கள் தென்துருவத்துக்கான விமானம் ஒன்றில் ஏறினோம். எங்கள் பயணத்தை நிறுத்துவதற்கான எந்தக் காரணத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. விமானிகளும் பணிப்பெண்களும் மொத்தப் பயணத்தின் போதும் எங்களிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. விமானத்தில் பறக்கும்போது அழகிய காட்சிகளைக் கண்டு மகிழலாமென நான் நினைத்தேன். ஆனால், நான் எதையும் பார்க்க முடியாத அளவுக்கு மேகங்கள்  அடர்த்தியாக இருந்தன. சிறிது நேரம் சென்றதுமே சன்னல்கள் அனைத்திலும் அடர்த்தியான ஒரு பனிப்படலம் மூட எல்லாமே மறைந்தன. இதெல்லாம் ஒருபுறமிருக்க, என் கணவரோ, விமானத்தில் ஏறியதிலிருந்தே அமைதியாக ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு சுற்றுலாப் பயணம் புறப்பட்டுப் போகும்போது எல்லோருக்கும் வழக்கமாகக் கிளர்ந்தெழுகிற  ஆர்வத்தை, புத்துணர்ச்சியை நான் உணரவேயில்லை. நாம் நினைத்த ஒரு காரியத்தைச் செய்கிறோமென்ற உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது.
சாய்தளப் பாதையில் இறங்கி, தென் துருவத்தில் முதன்முதலாகக் கால்பதித்ததும் என் கணவரின் உடல் முழுவதும் ஏற்பட்ட நடுக்கத்தை என்னால் உணரமுடிந்தது. அது கண் இமைக்கும் நேரத்தில், ஒரு உடனடிக்கணத்தின் பாதியாக நிகழ்ந்தது. அவரது முகபாவம் ஒரு இம்மியளவு கூட மாறவில்லை. அதனால் அதனை வேறு யாருமே கவனித்திருக்கவில்லை. ஆனால், நான் அதைத் தவறவிடவில்லை. அவருக்குள்ளேயிருக்கிற ஏதோ ஒன்று, அமைதியான ஆனால், கடுமையான   ஒரு அதிர்ச்சி விசையைச் செலுத்தியிருக்கிறது. நான் அவரது முகத்தை வெறித்துப் பார்த்தேன். அவர் அங்கேயே, அப்படியே நின்று, மேலே வானத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அவரது உள்ளங்கைகளுக்குள் பார்த்தார். பின்னர் ஒரு நீண்ட ஒரு பெரும் மூச்சினை வெளியிட்டார். அவர் என்னைப் பார்த்ததும் புன்னகைத்துவிட்டு, ‘’ ஆக, நீ இங்கேதானே வர விரும்பினாய்?’’ எனக் கேட்டார்.
`ஆமாம், அது சரிதான்` என்று  பதில் சொன்னேன்.
தென்துருவம்  தனிமை நிரம்பிய ஒரு இடமாகத்தான் இருக்குமென்பது எனக்குத் தெரிந்ததுதான். இருந்தாலும் கற்பனைக்கடங்காத வகையில் ஒரு ஆளரவமற்ற இடமாக இருந்தது. அங்கே யாரொருவரும் வசிப்பதாகத் தெரியவில்லை. அங்கே  எத்தகைய ஒரு சிறப்புமில்லாத, மிகச்சிறிய ஒரு நகரம், அதேபோல எத்தகைய ஒரு சிறப்புமில்லாத ஒரு சிறிய உணவகத்துடன் இருந்தது.
தென்துருவம் ஒரு சுற்றுலாத்தலம் போல இல்லை. அது சிற்றுலாத்தலமும் இல்லை. அங்கே எந்த பெங்குவின்களுமே இல்லையென்கிறபோது, தென்முனைச் சுடரொளி பற்றி நினைக்க என்ன இருக்கிறது?
எப்போதோ ஒருமுறை, என்னைக் கடந்து செல்லும் வழிநடை நபரை நிறுத்தி பெங்குவின்கள் எங்கேயெனக் கேட்பேன். ஆனால், அவர்களோ தலையைமட்டும் அப்படியும் இப்படியுமாக அசைத்துவிட்டுச் சென்றனர். அவர்களுக்கு நான் பேசும் வார்த்தைகள் புரியவில்லை. அதனால் ஒரு காகிதத் துண்டில் பெங்குவினைக் கோட்டுப்படமாக வரைந்து காட்டினேன். அப்போதும் எனக்கு முன்னர் கிடைத்த பதில்தான் – அமைதியான ஒரு தலைகுலுக்கல். நான் மிகவும் தனிமைப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். குடியிருப்பைவிட்டுக் காலடியெடுத்து வைத்தால் நீங்கள் காண்பதெல்லாம் பனிப்பகுதி மட்டும்தான். மரம், பூக்கள், ஆறு, குளம், குட்டை எதுவுமில்லை.
பனி மட்டுமே வேறெதுவுமில்லை – கண்கள் எட்டும் தொலைவுக்கு உறைந்த பனிப்பாலை தான்.
மறுபக்கத்தில் என் கணவரோ, அவரது வெண்பனி மூச்சுக்காற்றும், உறைபனி  விரல்களும், கூரிய பனிக்கதிர்க் கண்களில் வெறித்த பார்வையுமாக இங்கும் அங்கும் சோர்வில்லாமல் திரிந்துகொண்டிருந்தார். உள்ளூர் மொழியைக் கற்றுக்கொண்டு அவர்களுடன் கடினமான பனிக்குரலில்  பேசுவதற்கு அவருக்கொன்றும் நெடுநாள் பிடிக்கவில்லை. அவர்கள் மணிக்கணக்கில் முகத்தில் தீவிரம் பொங்கப் பேசினார்கள். ஆனால், அவர்கள் எதைப் பற்றிப் பேசியிருப்பார்களென்பதற்கு என்னிடம் எந்த ஒரு சிறிய தடயக் குறிப்பும் இல்லை. அந்த இடம் முழுவதுமே என் கணவரைப் பரவசப்படுத்திவிட்டது. அது குறித்த ஏதோ ஒன்று அவரைக் கவர்ந்துவிட்டது. அது என்னை முதலில் நிலைகுலையச் செய்துவிட்டது. அதோடு, புறந்தள்ளப்பட்டதைப் போல,  துரோகம் இழைக்கப்பட்டதைப் போல, கைவிடப்பட்டதைப் போல நான் உணரத் தலைப்பட்டேன்.
கடைசியாக, இந்த மௌனப் பனி உலகின் மத்தியில் என் சக்தி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, முழுதுமாக வெளியேறிற்று. ஆனாலும் கடைசியில், என் நிலை இப்படியாகிப்போனதேயென வருந்தும் சக்தி எஞ்சி நின்றது. என்னுடைய உணர்ச்சிவேகத்தின் திசைகாட்டி அழிந்துபோனது. திசை, காலம், நாம் யாரென்கிற உணர்வு எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். எப்போது இருட்டியது, எப்போது விடிந்ததென்றெல்லாம் எனக்குத் தெரியாது; ஆனால், இந்தப் பனி உலகின் மரத்துப்போகச்செய்யும் முடிவற்ற குளிர்காலத்துக்குள் நான் மட்டும் தனிமையில் பூட்டிவைக்கப்பட்டுள்ளேன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. எல்லா உணர்வுகளையும் அநேகமாக இழந்துவிட்ட நிலையிலும் எனக்கு ஒரு விஷயம் மட்டும் இப்போதும் தெரிகிறது : தென் துருவத்திலிருக்கும் இப்போதய என் கணவர் வழக்கமாக, எனக்குத் தெரிந்த கணவரல்ல. அவர் இப்போதும் என்மீது சிந்தனை யுள்ளவராக, எனக்கான அன்பு வார்த்தைகளைக் கொண்டவராக இருப்பதால், குறிப்பாக அவர் எந்த வகையில் மாறியிருக்கிறாரென்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆனால், இப்போது இங்கிருக்கும் பனிமனிதன், நான் பனிச்சறுக்கு மகிழ்வகத்தில் முதன்முதலில் சந்தித்த பனிமனிதனல்ல என்பது மட்டும் எனக்குத் தெரிகிறது. ஆனால், இதை நான் யாரிடம் போய்க் குறைசொல்லிப் புலம்புவது? தென்துருவ ஆட்கள் எல்லோருமே அவரை மிகமிக நேசிக்கின்றனர். நான் சொல்கிற ஒரு வார்த்தையைக் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. வெண்பனி மூச்சுக்காற்றும் உறைபனி முகமுமாக அவர்கள் பேசுவதும், நாளெல்லாம் வேடிக்கை பேசிச் சிரிப்பதும் அவர்களின் தனித்தவகையான உற்சாக மொழியில் பாட்டுப் பாடி மகிழ்வதுமாக இருந்தனர். நான் உணவக அறைக்குள் அடைத்துக்கொண்டு, மாதக்கணக்கில் மூட்டம் அகலாது  இருண்டு கிடக்கும் சாம்பல்நிற வானத்தை வெறித்துக்கொண்டு, தென்துருவ மொழியின் சிக்கலான இலக்கணத்தை – நான் ஒருபோதும் அதைக் கற்றுத் தேறப் போவதில்லையென்று உள்ளூற எனக்குத் தெரிந்தாலும் – அதை நான் கற்பதற்குத் தலையை உடைத்துக்கொண்டிருக்கிறேன்.
விமான நிலையத்தில் விமானங்கள் எதுவும் இல்லை. எங்களை இங்கு கொண்டுவந்து சேர்த்த விமானம் புறப்பட்டுச் சென்ற பின்னர் வேறெந்த விமானமும் இங்கு தரையிறங்கவில்லை. விமானம் ஓடும் தளம், கடினமான பனிப்பாளத்துக்கடியில் புதைந்துகிடக்கிறது என் இதயத்தைப் போல.
குளிர்காலம் வந்துவிட்டது, என்றார், என் கணவர். நீண்ட, மிக நீண்ட குளிர்காலம். விமானங்கள் ஏதும் வராது. கப்பலுங்கூடத் தான் வராது. எல்லாமே கட்டியாக உறைந்துபோனது என்றார், என் கணவர். நம்மால் செய்யக் கூடியது, வசந்தம் வரும்வரை காத்திருப்பது ஒன்றுதான்.
தென்துருவத்துக்கு வந்து மூன்று மாதங்களான பிறகுதான், நான் கருவுற்றிருப்பதை உணர்ந்தேன். எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது : எனக்குப் பிறக்கப் போகிற குழந்தை ஒரு இத்தனூண்டு குட்டிப் பனிமனிதனாகத்தான் இருக்கப்போகிறது. என் கருப்பைத் திரவத்துக்குள் கலந்துவிட்ட ஒரு மெல்லிய பனித்தகட்டால் என் கருப்பை உறைந்துபோனது. அதன்  குளிரினை அடிவயிற்றின் ஆழத்தில் என்னால் உணர முடிகிறது. எனக்கு இதுவும் தெரிகிறது : என் குழந்தை அதன் அப்பாவைப்போல் அதே பனிப்படிகக் கதிர்க் கண்கள், அதே உறைபனி மூடிய விரல்களுடன்தான் இருக்கப் போகிறது. எனக்கு இன்னொரு விஷயமும் தெரிகிறது : எங்களுடைய புதியச் சிறு குடும்பம் தென் துருவத்துக்கு வெளியே மீண்டும் காலெடுத்து வைக்கப் போவதில்லை. என்றுமே அழிவற்ற கடந்தகாலத்தின் தாங்கமுடியாத பளு எங்ளை இழுக்கிறது, அது எங்களை விட்டுவிடப்போவதில்லை. நாங்கள் சுதந்திரமாக ஒருபோதும் அசைந்துவிடமுடியாது.
எனது இதயம் இப்போது என்னிடமிருந்து பிரிந்து எங்கோ வழிதவறிச் சென்றுவிட்டது. வழக்கமான உயிரின் கதகதப்பு எங்கோ வெகுதூரம் பின்தங்கிவிட்டது. அந்தக் கதகதப்பு என்னிடமிருந்ததென்பதையே சிலநேரங்களில் மறந்துவிடுகிறேன். ஆனாலும் என்னால் அழமுடிகிறது. உலகத்தின் மிகமிகக் குளிரான, ஆளரவமற்ற தனிமைப்பகுதிக்குள் நான் மட்டும் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டேன். நான் அழும்போது எனது கணவர் என் கன்னங்களில் முத்தமிடுகிறார். என் கண்ணீரும் பனிக்கட்டியாக மாறிவிடுகிறது. அந்த உறைந்த கண்ணீரை உரித்தெடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்கிறார், என் கணவர். நான் உன்னைக் காதலிக்கிறேனென்பது உனக்குத் தெரியும் என்கிறார், அவர். அது நூற்றுக்கு நூறு உண்மைதான் என்பதை நானும் அறிவேன். பனிமனிதன் என்னைக் காதலிக்கத்தான் செய்கிறார்.
ஆனால், அவரது உறைந்த வார்த்தைகளைப் பனிக்காற்று வெகுதூரத்திற்கு, இன்னும் வெகுதூரத்திற்குக் கடந்தகாலத்துக்குள் வீசியெறிந்து, அடித்துச்செல்கிறது. நான் இன்னும் அதிகமாக அழ, அழ, வெகுதூரத்திலுள்ள தென்துருவத்தில் உறைந்த எங்கள் சிறு இல்லத்தில் பனியாகக் குளிரும் எனது கண்ணீர் முடிவில்லாமல் பெருகிக்கொண்டேயிருக்கிறது.
•••

 ( இக்கதை குறித்த தத்துவார்த்தப் பின்புலம் ( நீட்சே, ழீன் லுக் நான்சி போன்றோர்)  தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் http://scholar.oxy.edu/cgi/viewcontent.cgi?article=1003&context=ecls_student  என்ற தளத்திலுள்ள ஆக்சிடென்டல் கல்லூரியின் ஆங்கிலம் மற்றும் ஒப்பிலக்கியத் துறையின் ரியான் பார் என்பவரது முரகாமி : காதலும் வெறுமையும் என்ற கட்டுரையைப் படித்துப் புரிந்துகொள்ளலாம்.)

 மலைகள் இணைய இதழ், ஏப்ரல் 02, 2014  இதழ் 47 இல் வெளியானது.

No comments:

Post a Comment