உறுத்து நோக்கல் (THE STARE - BY DORIS LESSING)
ஆங்கிலம் : டோரிஸ் லெஸ்ஸிங்
தமிழில் ச. ஆறுமுகம்
(தனது 87 ம் வயதில் புனைவிலக்கியத்துக்காக 2007ம் ஆண்டில் நோபல்
விருது பெற்ற டோரிஸ் மே லெஸ்ஸிங் இங்கிலாந்து நாட்டின் நாவலாசிரியர், கவிஞர்,
நாடகப் படைப்பாளர், தன்வரலாற்றாசிரியர், சிறுகதைப் புனைவாளராகக் கொண்டாடப்படுபவர்.
1950ல் வெளியான `புல் பாடிக்கொண்டிருக்கிறது` நாவல் முதல் 2008ல் வெளியான `ஆல்ஃப்ரெட்டும்
எமிலியும்` நாவல் உட்பட 28 நாவல்கள், நூற்றுக்கணக்கான கவிதைகள்,
நினைவுக்குறிப்புகள், சிறுகதைகள் படைத்தவர். மிகவும் முதிய வயதில் (87) நோபல் விருது பெற்றவர் இவரே. விருது வழங்கியபோது சுவீடிஷ் கழகம்
இவரை ‘’ பிளவுபட்ட பண்பாட்டு நாகரீகத்தை ஐயுறவுக் கோட்பாட்டுடன் நெருப்புக்கண் கொண்டு
தொலைநோக்குப் பார்வையில் பரிசீலனைக்கு உட்படுத்திப் பெண்ணின அனுபவங்களைக்
காப்பியமாக்கியவர்’’ எனப் புகழ்ந்து குறிப்பிட்டது.
டைம் இதழ் தயாரித்த 1945
முதல் 2008 ம் ஆண்டு வரையிலான மிகச் சிறந்த 50 பிரித்தானிய எழுத்தாளர்களின் பட்டியலில்
டோரிஸ் லெஸ்ஸிங் ஐந்தாவதாக இடம் பிடித்துள்ளார். அவரது 94 ஆம் வயதில் கடந்த 17. 11.
2013 அன்று மறைந்தார்.
‘’அவனையே பார்’’ என்கிறாள், ஹெலன்.
‘’நான் எதுவும்
சொல்லாமல், அவனை விடாமல் தொடர்ச்சியாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். சரி, அப்புறம்,
அவன் என்னதான் செய்வான்?’’ என்கிற மேரி, ஹெலனிடம் ஏதோ ஒன்று அல்லது பல ரகசியம் புதைந்திருப்பதாக
நினைத்து அடிக்கடி செய்வதுபோல அவளை அண்ணாந்து நோக்குகிறாள்.
‘’அப்புறமென்ன, அவன் சரணாகதிதான்,’’ எனச்சொல்லிச்
சிரிக்கிறாள், ஹெலன். அந்தச் சிரிப்பு எப்போதும் போல மேரியைச்
சிறைப்பிடிக்கிறது. இம்முறை அது அவளுக்குள்ளேயே புகுந்து தாக்கியதுபோலிருக்கிறது.
ஹெலன் வேறு ஏதோ ருசிகரமான ஒன்றை நினைவுகொள்வதைப்போலத் தோன்றுகிறது. ஏனென்றால்,
அவள் சிரித்துக்கொண்டேயிருக்கிறாள்.
ஹெலன், டாம் என்ற
ஆங்கிலேயக் குடிமகனின் கிரேக்க மனைவி. நாக்சோஸ் நகரிலுள்ள உணவுவிடுதியில்
பரிமாறும் பெண்ணாக, அவள் ஏதோ அவனுக்காகவும் அயல்நாட்டுப் பயணிகளுக்காகவும்
பெருமளவில் தொண்டு செய்வதுபோலப் பரிசாரகப் பணி செய்துகொண்டிருந்தபோதுதான் அவன்,
அவளைப் பார்த்துக் காதல்கொண்டு, அவளைத் தன்னோடு இங்கிலாந்துக்கு வருமாறு
செய்துவிட்டான். இங்கிலாந்து அவளுக்கு முழுதுமாக அயல்நாடென்று கூறிவிடமுடியாது.
ஏனென்றால், காம்டென் நகரின் பரந்த கிரேக்க மற்றும் சைப்ரியாட் சமூகத்தில் அவளுக்கு
உறவினர்கள் இருந்ததோடு, ஒரு கோடையில்
அவர்களைச் சந்திப்பதற்காக அவள் இங்கு வந்துமிருக்கிறாள். மேரி,
திமித்ரியாஸின் ஆங்கிலேய மனைவி. அவள் ஒரு விடுமுறையின் போது ஆன்ட்ரோஸ் நகரிலுள்ள
ஒரு சிற்றுண்டியகத்தில் தோழியுடன் கடலைப் பார்த்து வியந்து கொண்டிருந்தபோது, அங்கு
பரிமாறும் பணியாளான திமித்ரியாஸ் அவள் மீது காதல்கொண்டான். அவனுக்கும் லண்டனில்
உறவினர்கள் இருந்தனர். அவன் இப்போது அர்கோனாட்ஸ் என்ற கிரேக்க உணவுவிடுதியில்
பரிமாறும் பணியாளாக இருக்கிறான். விரைவிலேயே அவனது சொந்த உணவகத்தைத் திறக்கவிருக்கிறான்.
அவன் அந்த உணவகத்திற்கு `திமித்ரீஸ்` எனப் பெயரிடுவான். ஏனென்றால், மேரி, அவனை
திமித்ரி என்றுதான் அழைக்கிறாள். அவர்கள் இருவரும் ஹெலனின் டாமுக்குச் சொந்தமான
மளிகைக்கடையின் மேல்தளத்திலுள்ள இரண்டு அறைகளில்தான் குடியிருக்கிறார்கள்.
அந்த இருபெண்களும்
காலைநேரங்களில், நட்பாக அளவளாவிப் பேசுவது அல்லது ஏதாவது பொருட்கள் வாங்கக்
கடைகளுக்குச் செல்வதெனச் சேர்ந்தேயிருக்கிறார்கள். இப்போது ஹெலனுக்கு ஒரு
குழந்தையிருக்கிறது. அதனால், அவர்கள் கைக்குழந்தைத் தள்ளுவண்டியை ஏதாவது ஒரு
நிழலில் நிறுத்திவிட்டு, அருகிலுள்ள பெஞ்சு ஒன்றில் அமர்வதற்காக பிரிம்ரோஸ்
குன்றுக்குச் செல்கிறார்கள். அங்கே வேறு கிரேக்க மற்றும் சைப்ரியாட்
இல்லத்தரசிகளும் வருகிறார்கள். சிலநேரங்களில் எல்லோருமாகச் சேர்ந்து அது, ஒரு
பெண்கள் சமூகமாகமாகவே மாறிவிடுகிறது. ஆனால் அங்கே எப்போதும் முக்கியத்துவம்
வாய்ந்தவர்களாகச் சிறப்பான தோழிகளாக ஹெலனும் மேரியுமே கருதப்பட்டனர்.
சில மாலைகளில் ஏதாவது
ஒரு அருந்தகத்திலோ, சிற்றுண்டியகத்திலோ, அல்லது உணவுவிடுதியிலோ இந்த இரண்டு
இணைகளுமாகச் சேர்ந்து நால்வராகிவிடுகிறார்கள். மேரி, வாழ்க்கையில் எப்போதுமே சரியான
தேர்வினை மேற்கொண்டதாக, இதுபோன்ற மாலை நேரங்களில் தனக்குத் தானே மெச்சிப் பாராட்டிக்
கொள்வதுண்டு. அதனால்தானே சலிப்புதரும் க்ரோய்டோனிலிருந்து இங்கே எளிதில்
சிரிக்கிற, பாடத் தொடங்குகிற, மேஜைகளிலேயே கூட உடனடியாக நடனமாடி மாலையை
மகிழ்ச்சியாக முடிக்கிற மனிதர்களோடு இருக்கமுடிகிறது. அதனால்தான் அவளுடைய அம்மா,அப்பா
எவ்வளவோ சொல்லியும் அவள் கிரீசுக்குச் செல்லமுடியாதென திமித்ரியாஸிடம் மறுத்துச் சொல்லிவிட்டாள்.
இன்று மேரி வீட்டுக்குப்
பரபரப்பும் பரவசமுமாகச் சென்று கண்ணாடி முன் அமர்ந்து ஆராய்கிறாள். அவள் அதுபோல
அடிக்கடி செய்வதுண்டு. நன்கு உருண்டு, அழகாகச் சிவந்த கன்னம், கறுத்துச் சுருளும்
கேசம், மிகச் சரியான இடங்களில் செல்வச் சிறுகுழிகளுமாக, அவள் அழகாக இருக்கிறாள்.
திமித்ரி, கூட அவளை ‘என் சின்னக் கறுப்புத் திராட்சையே’ என்றுதான் அழைக்கிறான்.
ஆனால், அவளது கண்கள் சாம்பல் நிறம். அவளுக்கு மட்டும் அந்தக் குளுமை தவழும்
ஆங்கிலேயக் கண்கள் இல்லையென்றால், அவளை கிரேக்க இரத்தமென்றுதான் நம்பியிருப்பேனென
அவன் சொல்கிறான். அவனுடைய கறுப்புக் கண்கள் எளிதில் கனன்று தீப்பிழம்பாகிப் பழிதீர்ப்பவை. நறுமணச் சிறு
புட்டிகள், உதட்டுச் சாயக் குச்சிகள், கண்மைச் சிமிழ்களுக்கிடையே முன்கை மூட்டுகளை
ஊன்றி முற்சாய்ந்து, பல்வேறு முக பாவனைத் தோற்றங்களில் மேரி முயன்று பார்த்தாள்.
அவள் புன்னகையற்ற, இமைமூடாத உறுத்து நோக்கும் பார்வையொன்றைப் பதிக்க, அது, அவளையே
பயமுறுத்துவதாக இருக்கின்றது. அவள், ஹெலன் முகத்தின் உறுத்தும் பார்வையைக்
காண்பதற்காகக் கண்களை மூடுகிறாள். ஆனால் தோல்வியடைகிறாள். ஏனென்றால் ஹெலன்
சிரிக்கமட்டுமே செய்கிறாள். மேரி ஹெலனை நினைத்து வியக்கிறாள். அப்படிச் சொல்வது
மிகமிகக் குறைத்து இலேசாக்கிச் சொல்வதுதான். ஒருநாள் திமித்ரி ஏதோ சொன்னானென்று,
மேரி ஒரு நூலகத்துக்குச் சென்று `குழந்தைகளுக்கான கிரேக்க புராணங்கள்` என்ற
புத்தகத்தில், ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னால், ஹெலன் என்ற ஒரு பேரழகி இருந்ததாகவும், அவளுக்காக ஆண்கள் ஒரு பெரிய
யுத்தமே தொடங்கினார்களென்றும் படித்தாள். கிரீசில் பெற்றோர்கள் அவர்களின் சிறு
பெண்குழந்தைகளை, சர்வ சாதாரணமாக பெற்றி, ஜோன் என்பதுபோல ஹெலன் என்றுதான் அழைக்கிறார்களாம்.
மேரிமாதா கடவுளின் அன்னையாயிற்றேயென ஹெலன், மேரிக்குச் சொன்னாள். ஆனால், மேரி, மதத்திற்குள்ளெல்லாம்
புகுந்து உண்மையிலேயே அவ்வளவாகப் பார்ப்பதில்லையென்றாள்.
அது சரி, ஹெலனின் அமைதியான கண்கொட்டாப் பார்வையென்கிற
யோசனையை திமித்ரியாஸின் மீது பரிசோதித்துப் பார்க்கவேண்டுமென்று மேரிக்கு ஏன் தோன்றிற்று?
அதுதான் பிரச்சினை. மேரிக்கு, வாழ்க்கைமீது மட்டுமல்லாமல், தன்மீதுமேகூட நிறைவற்ற, குடைந்துகொண்டிருக்கிற ஒரு அதிருப்தி.
அது அவளது கணவனுக்கு எதிராக, ஒரு குற்றச்சாட்டு போல மாறுகிறது. அவள் இப்படி ஏன்
நினைக்க வேண்டுமெனத் தனக்குத் தானே வினவிக்கொள்கிறாள். இருந்தாலும், தான்
நினைப்பதையே சார்ந்திருப்பதென முடிவுசெய்கிறாள். திமித்ரிக்குத் திருப்தியில்லை.
அவன் குடும்பத்தை உடனடியாகத் தொடங்கவேண்டுமென்கிறான். அதிலும் நண்பர்கள் டாமும்
ஹெலனும் குழந்தையோடிருப்பதைப் பார்த்து, இப்போதே குழந்தை வேண்டுமென்கிறான். ஆனால்,
மேரியோ, ‘’ முடியாது, குழந்தைக்கு இப்போது என்ன அவசரம்? கொஞ்சம் பொறுக்கலாம்.’’
என்கிறாள். அவள் உண்மையிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறாளா? அதுவும் விரைவில்.
ஆனால், அவள், தன் அழகு பறிபோய்விடுமோவெனப் பயப்படுகிறாள். அவள் தினந்தோறும்
கவனிக்கிற பெண்களுக்கு அப்படித்தானேயாகிறதென அவள் நினைக்கிறாள். அந்தப்
பெண்களுக்குக் குழந்தை இருக்கிறது….. நல்லது, நான் அப்படியெல்லாம்
இருக்கப்போவதில்லை. ஆனால், ஹெலன் அப்படியா ஆகியிருக்கிறாள்? இல்லைதானே! அவள் அச்சு
அசலாக, அப்படியே இருக்கிறாளே! அந்தக்
குழந்தை ஏதோ ஆகாயத்திலிருந்து வந்தது போல, யாரோ அவளை நோக்கித் தூக்கியெறிந்த
பரிசினை அவள் `கேட்ச்` பிடித்துக்கொண்டது போல அல்லவா இருக்கிறது! மேரி மாத்திரை
சாப்பிடுகிறாள். அதற்கு மட்டும் அவள் மறப்பதேயில்லை. ‘’ ஒருநாளைக்கு இதுகளையெல்லாம் தூக்கிக்
குப்பைத் தொட்டிக்குள் எறிகிறேனா, இல்லையா, பார்!’’ என்கிற மாதிரி, திமித்ரி
என்னென்னவோ சொல்கிறான். அந்த நேரங்களில் அவனுடைய குரல் கரகரத்து, முரட்டுத்தனமாகி
எரித்துவிடுவதுபோல் கண்கள் கனலும் கணங்கள் அவளைத் திகிலடையச் செய்வதோடு
முன்காலத்து நாட்களையும் நினைவூட்டுகிறது.
அவள் ஹெலனிடம், ‘’
டாம், இப்போதும் உன்னிடம் முன்னைப் போல, அப்படியே இருக்கிறாரா?’’ என்று கேட்கிறாள். ஹெலன் உடனேயே
புரிந்துகொண்டு, களிமண்ணைக்கூட மேலானதென்றாக்கிவிடுகிற மேரியால்
புரிந்துகொள்ளமுடியாத, மயக்குகின்ற வாழ்க்கை ரகசியம் ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதை
ஒப்புக்கொள்வது போல, ஒரு சிரிப்புடன் ‘’ என்ன இருந்தாலும், அவர் ஒரு ஆங்கிலேயராயிற்றே,
இல்லையா? நாங்கள் முதன்முதலில் தொடங்கியபோது எப்படியிருந்தாரோ அப்படியேதான்
இப்போதும் இருக்கிறார்.’’ என்றாள். அவள்
திறந்த மனதோடு மேரியிடம் சில கேள்விகளைக் கேட்க, அது சாமர்த்தியமற்ற செயலென மேரி நினைத்துக் கொண்டிருக்கும்போது, ‘’ சில
விஷயங்களை நீ புரிந்து கொள்வதில்லை, மேரி. கிரேக்கத்து ஆண்கள் காதல் விளையாட்டில் உணர்ச்சிகளைக் கொட்டித் திக்குமுக்காடச் செய்பவர்கள்.
அவர்கள் தாராளமாக முத்தமழை பொழிவார்கள். அதோடு நிறையப் பரிசளிப்பவர்கள். ஆனால்,
திருமணமாகிவிட்டால், நீ அவர்களுக்கு வெறும் மனைவியாகிவிடுகிறாயே.’’ என்கிறாள்,
ஹெலன்.
கோடையில் மேரி
ஆண்ட்ராசிலிருந்தபோது, திமித்ரியாஸ் மலர்கள், நறுமண சோப்புகள், சாக்லேட்டுகளைக் கொண்டுவந்து
குவித்தான். அதோடு அவள் அழகாயிருப்பதாகச் சொன்னான். அவளைப்போல வேறு எந்த ஒன்றையும்
அவன் கண்டதேயில்லையென்றான். அவளை நிலவொளியில் முத்தமிட்டான்; அதிலும் ஒரு இரவில்
அவள் கைகளை முத்தங்களாலேயே மூடி நிறைத்தது மட்டுமல்லால் கொதிக்கின்ற கண்ணீராலும்
கழுவினான். அதுவே அவள் வாழ்க்கையில் நிகழ்ந்த அல்லது நிகழவிருக்கிற
எல்லாவற்றையும்விட அற்புதமானதென அப்போதே மேரிக்குத் தெரிந்தது. அதுதான்
இப்படியாகிவிட்டதேயென அவள் அமைதியைக் குலைத்தது. திமித்ரியாஸ் அப்போது எப்படி,
என்னவாக இருந்தான்? அவன் இப்படியாவானென யார் கண்டது – என்றே அவள் உள்ளுக்குள் மறுகினாள்.
அவன் தூங்கும் போது, அவனைப்
பார்த்துக்கொண்டே, இது ஏன் இப்படியானதென நினைத்தாள். ஆனாலும், மூன்று வருடங்களுக்கு முன்
அந்தக் கோடையில் அவன் எப்படி நடந்துகொண்டானென்று அடிக்கடி நினைப்பாள். இப்போது
அவன் எந்த ஒரு ஆங்கிலேயனையும் போல, டாமைப் போல, விவேகமானவனாகிவிட்டான். டாம் ஹெலனை
முன்புபோல் காதலிக்கவில்லையென மேரி நினைத்து விடாமலிருப்பதற்காகவே, டாம் படுக்கை விளையாட்டை மிகவும் விரும்புவது
அதிர்ஷ்டமானதென ஹெலன் சொல்லிச் சிரித்தாலும், அவளும் டாமை நினைத்துப் பெருமூச்சு
கொள்வதாகவே மேரி நினைத்தாள்.
இது எல்லோருக்கும்
நடக்கிற கதைதானே என நினைத்த மேரி, ஹெலன் ஏன் டாமின் காதலை ஒப்புக்கொண்டாளென
வியந்தாள். அவன் நன்றாக, எல்லாம் சரியாக இருக்கிறான்; பார்வைக்கும் மோசமான
தோற்றமில்லை. அவன் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறான் என்கிறாள், ஹெலன். ஆனால், நிச்சயமாக
அவளும் ஏதோ ஒரு கட்டத்தில் டாம் சலிப்பூட்டுவதாக நினைத்திருப்பாள்?
ஆனால், திமித்ரி
இப்போதும் மேரியைக் காதலிக்கிறானா?
அன்று இரவு, அவன்
படுக்கையில் அவளை நோக்கி உருண்டு திரும்பியபோது, அவள், ‘’ இல்லை, நான் அதை
விரும்பும் நிலையில் இல்லை.’’ என ஹெலன் கேலி,
கிண்டலாகப் பேசுவது போன்ற குரலில் முயற்சித்துச் சொன்னாள். ஆனால், அவள் அதில்
வெற்றி பெறவில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். அவள் அதற்கு முன்பு, எப்போதுமே `
வேண்டாம் ` எனச் சொன்னதில்லை; அவள் படுக்கை விளையாட்டை விரும்பவும் செய்தாள். அவள்
என்னவோ மணவிலக்கு கேட்டுவிட்டது போல, அவன் ஆச்சரியப்பட்டுப்போனான். உனக்கு என்னவாகி
விட்டதென அவன் கேட்டான். அவன் என்ன கேட்டிருக்கவேண்டுமென்றால், ‘’ நான் என்ன தவறு
செய்தேன்?’’ என்றுதான். அவன் ஒருவேளை
அப்படிக் கேட்டிருந்தாலுங்கூட அதற்கு என்ன பதில்சொல்வதென அவள் தெரிந்திருக்க வில்லையென்றாலும்
அவன் அப்படித்தான் கேட்டிருக்க வேண்டும். அவள் அவனுக்கு முதுகைக் காட்டித் திரும்பிப்
படுத்துக்கொண்டாள். அப்படிச் செய்வது அவளை எந்தளவுக்குத் துன்புறுத்துமோ அதே
அளவுக்கு அவனையும் துன்பங்கொள்ளச்செய்யுமெனத் தெரிந்தும் அவள் அப்படித்தான்
செய்தாள். அவளது தோள்களின் மீது அவனது குழம்பிப்போன, காயம்பட்ட பார்வையை அவளால்
உணரமுடிந்தது. அவன் எதையோ முணுமுணுத்தான்; அது அவள் காதுகளில் விழவில்லையென்பதே
அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவனும் அவளைப் போலவே விழித்துக்கொண்டுதான்
படுத்திருந்தான்; ஆனால் இருவருமே தூங்குவது போன்ற நடிப்பிலிருந்தனர்.
அடுத்த நாள் காலையில்
அவன் பெருமூச்சுவிட்டுக்கொண்டு அவளை நோக்கிக் குற்றம் சுமத்தும் பார்வைக்கணைகளை
வீசிக் கொண்டேயிருந்தான். அது நிகழ்ந்த அன்று சனிக்கிழமை. அன்று இரவு இரண்டு
இணைகளுமாக ஒரு அருந்தகத் தோட்டத்துக்குச் சென்று மது அருந்தினர். பின்னர்,
அவர்கள், திமித்ரி பரிமாறும் பணியாளாகப் பணிபுரிகிற விடுதிக்கே இரவு உணவுக்குச்
சென்றனர். ஆனால், அன்று அவனுக்கு இரவு ஓய்வு. குடும்பச் செலவுக்குத் தேவைப்படும்
சிறிய அளவு பணத்துக்காகச் சில வேளைகளில் அந்த விடுதியில் பரிமாறுபவர்களாகப்
பெண்கள் பணிபுரிந்தனர். எல்லோருக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர்கள்
கையசைத்தனர்; அல்லது வாழ்த்துச் சொல்லினர்; அல்லது அருகில் வந்து தள்ளுவண்டியில்
தூங்கும் குழந்தையைப் பார்த்து முகமலர்ந்து, மெச்சிப் புகழ்ந்து பாராட்டினர்.
டாமின் தோளில் ஹெலன் எப்படித் தோய்ந்து, தொங்குகிறாளெனப் பார்த்துக் கொண்டிருந்த
மேரி, அவர்கள் இருவரும் வீடுபோய்ச் சேர்ந்த நிமிடத்திலேயே காதல்விளையாட்டைத்
தொடங்கிவிடுவார்களென நினைத்தாள்.
திமித்ரியாசும்
மேரியும் வீட்டுக்குச் சென்றதும் அவன், ‘’இன்று இரவுக்கு நீ அதை விரும்பாத நிலையில்
இருக்கமாட்டாயென நினைக்கிறேன்.’’ என்றான். அந்தக் கிண்டலை அவன் விகாரமான வசையாகச்
சொல்லவே, ‘’ இருப்பேன் அல்லது இருக்கமாட்டேன்’’ என அவள் அலட்டிக்கொள்ள வசதியாக
அமைந்தது. ஆனாலும், படுக்கைக்கு வந்ததுமே அவள் தனக்குத்தானே ஏதும் குற்றம்சொல்லிப்
புலம்ப முயற்சிக்காதபடி அவன், அவள் மீது பாய்ந்தான். ஆனால், அவள் அதை விரும்பாத
உணர்வில் இருப்பதாகச் சொல்வதனால் பயனொன்றுமில்லையென இருவருக்குமே நன்கு
தெரிந்திருந்தும் அவள் அதைத்தான் சொன்னாள். பிற்பாடு அவன், ‘’ எனக்கு எப்போதுதான்
குழந்தை பெற்றுத் தரப்போகிறாய்?’’ எனக் கேட்கும்போது அவள் எப்போதுமே பயப்படுவதும்
உணர்ச்சிவசப்படுவதுமாகிய ஒரு காரியத்தை, அவன் செய்துகொண்டிருந்தான்: அவள் கைகளிலிருந்த
திருமண மோதிரத்தை, அவன் எங்கே கழற்றியெறிந்துவிடுவானோ என அவள் பயப்படுகின்ற
அளவுக்குத் திருகித் திருகிச் சுழற்றிக்கொண்டிருந்தான். இதற்கு முன்பு ஒருபோதும்
அவன் இந்த அளவுக்குப் பொறுமையிழக்கின்ற மாதிரி அவள் நடந்துகொண்டதில்லையென்று
அவளுக்குத் தெரிந்திருந்த போதிலும் ‘’பார்க்கலாம்.’’ என்றுதான் அவள் பதில்
சொன்னாள். அடுத்த கணம், தான் வன்புணர்வுக்கு ஆளாகிக் கற்பழிக்கப்பட்டுக்கொண்டிருந்ததை
அவள் கண்டாள். அதற்கு வேறு வார்த்தை அல்லது மாற்று ஏதும் இல்லை. அவள் அண்மையில்
பாலுறவுகளிலிருந்தும் நழுவிச் சென்றிருந்ததால், அந்தப் புணர்வில் சிலிர்த்து
முழுதுமாக உருகிக் கரைந்துபோயிருந்ததை அறியாமல், அவள் காதில் ‘’ பொட்டை நாயே,
எனக்குக் குழந்தை வேண்டும். இப்போதே! பத்தாண்டுக்குப் பிறகல்ல!’’ என்று மட்டும் அவன்
கரகரக்காமலிருந்திருந்தால், ‘’ சரி, ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என
எளிதில் கூறியிருப்பாள்.
அடுத்த நாள் காலை
உணவின்போது அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவனும் அதைக் கவனிக்கவில்லை. அவன்
அவனுடைய டோஸ்ட், பழப்பாகு மற்றும் காப்பியில் கண்ணாக இருந்தான். பதினோரு மணி
வரையிலும் அவன் விடுதிக்குச் செல்ல வேண்டியதில்லை. இதுதான் அந்த நாளின்
அவர்களுக்கான மிகச் சிறந்த நேரம்; அவன் பணிக்குச் செல்வதற்கு முந்தைய மணிப்
பொழுது. அவர்கள் பேசுவார்கள்; அப்படிப் பேசாமலிருந்தாலும் செய்தித்தாள்
வாசிப்பார்கள்; சில நேரங்களில் மீண்டும் படுக்கைக்குச் செல்வார்கள். குழந்தை
பிறந்தபிறகு காலை நேரங்கள் மீண்டும் இதுபோல இருக்கப்போவதில்லை. இதை அவள் அவனிடம்
கூற, அவன் சொன்னான், ‘’ சரி. அதனாலென்ன?’’ அவன் இப்படிச் சொன்னது, அவன் அவளைக்
காதலிக்கவில்லையென நினைக்கச் செய்தது. காலை உணவு முடியும் வரைக்கும் அவன் அவளது
மவுனத்தை உணரவில்லை என்பதல்ல இதன் பொருள். அவன் தலையைத் தூக்கி அவளைக் கடுமையாக
நீண்டநேரம் நோக்கியபோது, அவள் பதிலுக்குத் திருப்பி இதமற்று நோக்கினாள். பின்னர்,
அவள் அதை அப்படியே, முன்பு கண்ணாடியில் பழகியதுபோல இமைக்காமல் அவனை உறுத்துவதைப்
போல் நோக்குவதைத் தொடர்ந்தாள். ‘’என்ன இழவு?’’ என்று அவன் கேட்டான். ‘’ என்ன…..?’’
அவள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் முன்னே அமர்ந்து அப்படியே அவனை உறுத்துப்
பார்த்துக்கொண்டிருந்தாள். அது அவனை வெறிகொள்ளச் செய்ததைக் கண்டு, உள்ளுக்குள் பரவசம் கொண்டு
சிலிர்த்தாள். அவள் எதை நினைத்து என்ன செய்து கொண்டிருக்கிறாளென அவன் வியந்து,
குற்றம் சொல்லிக் கேட்டதற்கும் அவள் ஒரு வார்த்தைகூடப் பதில் சொல்லாதபோது, அவன் ‘’
பொட்ட நாயே!’’ எனக் கத்திவிட்டு வேலைக்குப் போய்ச் சேர்ந்தான்.
ஒரு அருந்தகத்தின்
வெளியில், இதமான வெயிலில், தள்ளுவண்டிக் குழந்தை நடுவிலிருக்க, மேரி, ஹெலனோடு
சென்று அமர்ந்தாள். உண்மையில் நானொன்றும் குழந்தை பற்றிப் பெரிதாக எண்ணவில்லையென
அவள் நினைத்துக்கொண்டாள். மாத்திரை சாப்பிடுவதை விட்டுவிடப்போகிறேன்; என்னதான்
ஆகிறதென்று பார்த்துவிடலாமே! ஆனால், இதை திமித்ரிக்குச் சொல்லப் போவதில்லை. குழந்தைக்காக என்று சொல்லி,
நான் ஒன்றும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை.
‘’நீங்கள் எவ்வளவு
நேரத்துக்கு அப்படியிருப்பீர்கள்? ‘’ அவள் மிக இயல்பாகத் தெரியவேண்டுமென
முயற்சித்துக் கேட்டாள். ஆனால், ஹெலன் உடனேயே புரிந்துகொண்டு, ‘’ ஓ, அது ரொம்ப
நேரத்துக்கில்லை – எவ்வளவு நேரம் என்னால் முடியுமென்று பார்ப்பேன். ஏனென்றால் நான்
விட்டுக்கொடுக்க விரும்புவேன். அதனால் அதனைத் தொடர்வதில்லை.’’
எல்லாவற்றையும் ஹெலன்
எப்படி, இப்படி மிக எளிமையானதாக எடுத்துக் கொள்கிறாள்? எதுவானாலும்
ஒன்றுமேயில்லையென்பதுபோல் ஏதோ ஒரு வேடிக்கைப் பேச்சு போலப் பேசுகிறாள். எனக்கு ஏன்
அப்படி எளிய ஒன்றாகத் தெரியவில்லை? மேரி அமைதியாக, ஹெலனின் நீண்டு மெலிந்த இளம்பழுப்புநிறக்
கால்கள், மெலிந்த இளம்பழுப்புக் கைகள், அந்தக் கறுப்பு உடை அவள் மீது பொருந்தும் அழகு, தோள்களில் தளர்வாகத் தொங்கிப் பளபளக்கும்
கறுப்புக் கேசம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே கனக்கும் இதயத்தோடு
எண்ணிப்பார்க்கிறாள். அந்த உடை என்மீதென்றால் ஒரு குப்பலாகத் தெரியும் …. குழந்தை
சிணுங்கத் தொடங்கியது. ஹெலன், எந்தச் சிக்கலுமில்லாமல், குழந்தையைத் தூக்கி,
அணைத்து இயல்பான பார்வையில் ஏதோ ஒரு கிரேக்க மழலைப் பாட்டினை அவளுடைய ஆழ்ந்த
கவர்ச்சிக்குரலில் பாடுகிறாள். குழந்தை அழுகையை நிறுத்தியது. அதன் மென்மையான சிறிய
தலை மேரியின் அருகில் ஒருசில அங்குல தூரத்திற்குள்ளேயே இருந்தது. மென்மையும்
இனிமையும் இதயத்துக்கு நெருக்கமுமான குழந்தை மணம், அவளை அழவேண்டும்போலச் செய்தது. ‘’ஓ,
இல்லை, நான் அழக்கூடாது, ஓ, இல்லை’’ யென அவள் நினைக்க – ஹெலன் மிக இயல்பாக,
அணைத்திருந்த குழந்தையை அவளிடம் நீட்டி, ‘’ நான் கழிவறைக்குச் செல்கிறேன்.’’
என்றதோடு, கறுப்பு லினன் அவளைச் சுற்றி
அசைய ஓரடி கூட எடுத்து வைத்துவிட்டாள்.
எங்கள் குழந்தைக்கு,
திமித்ரி கிரேக்கப் பாடல்களைப் பாடுவானென எண்ணுகிறேனென மேரி நினைத்துப்பார்த்தாள்.
ஹெலனும் திமித்ரியாசும் `கிரீக்`கில் பேசிக்கொள்ளும்போது மேரி கவனித்திருக்கிறாள்.
கபாப், தரமசால், ரெட்சினா போன்றவற்றையல்ல அவள் பேசுவது, அவையெல்லாம் இங்கே,
லண்டனிலேயே கிடைக்கின்றன; ஆனால், அந்த ஆழ்நீலக் கடல் மீதான வெயில், வெதுவெதுப்பான பாறைகள்,
ஆலிவ் மரங்கள், பாடல்கள்! அந்த இரண்டு கிரேக்கர்களும் பேசிக்கொள்ளும்போது, டாமும்
மேரியும் – இருவருக்குமே ஒரு சில கிரீக் வார்த்தைகளைத் தவிர வேறு ஏதும் புரியாது –
அவர்கள் இருவரும் மணம் செய்துகொண்டிருக்கும் இந்த இருநபர்களும் சிலவேளைகளில்
அவர்களுக்கும் அந்நியர்களோவெனச் சிறு புன்னகையைப் பரிமாறிக் கொள்வார்கள்.
வழக்கம்போலத் தாமதமாக,
திமித்ரியாஸ் நடுஇரவும் தாண்டி வீட்டுக்கு வந்தபோது, மேரி அவனிடம் பேசவில்லை.
ஆனால் படுக்கையில் உட்கார்ந்து, அவன் அறைக்குள் தட்டுத்தடுமாறி, திட்டிக்கொண்டே
அவனது உடைகளைக் கழற்றியெறிந்து, பின்னர் படுக்கையில் விழுந்து அவளுக்கு முதுகைக்காட்டித்
திரும்பிப் படுக்கும்வரை அவனையே உறுத்துப் பார்த்தாள். பின்னாலிருந்து அவனை இரண்டு
கைகளாலும் சுற்றி வளைத்து, எப்போதும் அவன் விரும்பிச் செய்யச்சொல்கிறபடி, அவன்
காதைக் கரம்பிப் பின் முத்தமிட்டு, அவன் கழுத்தைக் கௌவிக் கடிக்க விரும்பினாள். முதல்முறையாக
அவள் அப்படிச் செய்தபோது, அது ஒரு வேலியைத் தாண்டி இருட்டுக்குள் குதிப்பதாக
இருந்தது. அது ஏனென்றால், அதுவரையிலும் இல்லாத ஒரு செயலாக – அவள் எப்போதுமே `சரி`
என்று சொல்பவளாக இருக்கவே விரும்பினாள் -
அவளாக முன்முயற்சி யெடுத்திருந்தாள். ஆனால், அதன் தொடர்ச்சியாக ஒரு
புயல்வேகப் புணர்ச்சி நடந்தேறியது. ஆனால், அது எப்போதுமே அப்படித்தான்
நடக்குமென்பதில்லை: ஒருமுறை, எல்லாவற்றுக்கும்
நான் `ஆமாம்` போடுவேனென்று நீ நினைத்துக் கொள்ளும்படி நான் விட்டுவிடப் போவதில்லை,
என்றான், அவன். அது குத்தல் பேச்சு என அவள் நினைத்தாள். அவன் ஒரு கரடுமுரடான, சண்டைப்
பேர்வழியென நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அதையே எளிதில் உணர்ச்சிவசப்படுகிற,
தொட்டாற்சிணுங்குகிற அவனுடைய மென்னயப் போக்கு என அவள் கண்டு, வியக்கவும் செய்தாள்.
சாதாரணமான ஒரு அணைப்பினை, தழுவிக் கொள்ளுதலை எதிர்பார்க்கிற அவள், பாலுறவுக்கு ஆசைப்படுகிறாளோவென
அவன் நினைத்துவிடக்கூடாதென அவள் வெட்கப்படவோ அச்சங்கொள்ளவோ செய்யலாமென அவனுக்குத் தோன்றியதால்,
அவளாகவே ஒரு முடிவுக்கு வரட்டுமென அவன் அசையாதிருந்தான். ஹெலனின் சிறுசிறு தொடுகைகள் மற்றும் வருடல்கள்,
டாமின் முகத்தில் வியப்பு மற்றும் ஆர்வம்
விளைவிப்பதை மேரி கண்டிருக்கிறாள். அதையே – ஹெலனைப் பார்த்திராவிட்டால் அப்படியான
ஒன்றைப்பற்றி அவள் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டாள் – திமித்ரியிடம் முயற்சிக்க நினைத்தாள், அவ்வளவுதான். இப்போது
அவள் திமித்ரியின் அருகில் விறைப்புடன் படுத்திருக்கையில், ஒருநாள் இரவு கணவனைச்
சுற்றிக் கைகளைப் போட்டுக்கொண்டு காலைவரையிலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது;
அடுத்தநாள் இரவிலோ அவனைக் கைகளால் தொடக்கூட முடியாமல்போகிறது; பிறகெங்கே
முத்தமிடுவதும், கவ்விக்கடிப்பதுமென நினைக்கிறாள்.
இரவு முழுவதற்கும்
அமைதியாகவே இருந்தாள்; அடுத்த நாள் காலை வரையிலும்கூட அவள் தூங்கவேயில்லை. காலை
உணவின்போதும் அமைதியாக இருந்தாள். ஆனால், இப்போது அவள் பயந்திருந்தாள். அவள்,
அமைதியாகக் கண்கொட்டாமல் அவனையே பார்த்திருக்க, அவள் விழிகளைப் பார்ப்பதைத்
தவிர்த்த அவன் சிலமுறை அவளை நோக்கியபோது, அவன் கண்களில் அச்சம், கோபத்தோடு
என்னவென்று புரியாத வியப்புமிருந்தது. ஆனால், அவளின் அதிருப்தி கண்டு வெருண்டுபோன
அவனையே குற்றம் சொல்வதுபோல், அவன் மீது
மட்டுமல்லாமல் எதிலுமே திருப்தியில்லாத அவள் நிலை, ஒவ்வொரு நிமிடமும் அவன் பயத்தை
அதிகப்படுத்திக் கொண்டிருந்தது. அவளது செய்கை அதற்கு அப்படி எரியூட்டிக்கொண்டிருந்தது.
அவன் இன்னும் நல்லதாகச் சீர்கொள்ள வேண்டும்.
அவள் கைகளில் முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்து, வருத்தம் சொல்லியிருக்கவேண்டும்.
அன்று இரவு அவன்
உணவகத்திலிருந்து வந்தபோது, தூங்கிவிட்டது போலக் மிகக்கவனமாகக் காட்டிக்கொண்டாள். தூங்கும்போது
ஒருவேளை அவன் முத்தமிடலாம் - அவள் தூங்கும்போது, பலமுறை அப்படிச் செய்பவன்தான் -
அவள் அவனைக் கைகளால் சுற்றிக்கட்டித் தன்னிடம் இழுத்துக்கொள்வாள். ஆனால், அன்று அவன் முத்தமிடவேயில்லை.
மறுநாள் காலை
உணவின்போது, அங்கே உட்கார்ந்திருந்த அவளது வெறிக்கும் முகம் ஒரு ரேடாரின் வட்டவடிவ
அலைவாங்கியைப் போல அறை முழுதும் அவன்
பின்னாலேயே செல்வதை அவளால் உணர முடிந்தது. ஆனாலும், அவன் அவள் மீது பார்வையைத்
திருப்பவேயில்லை. அவன் முட்டாள்தனமாக நடந்துகொள்வதாக அவள் நினைத்தாள். என்
முகத்தில் ஒரு புன்சிரிப்பு இல்லையென்பதற்காக, நான் பேசவில்லை யென்பதற்காகவா
இப்படி? – ஆனால், நான் உள்ளுக்குள் அப்படியேதானே இருக்கிறேன், இல்லையா, என்ன?
அதற்கிடையில் அவன் தடுமாறி எது எதையோ கீழே விழத் தள்ளினான். அவள் ஏதோ ஒரு சாபத்தை அவன் மீது ஏவிவிட்டதைப்போல
அவன் தோன்றினான். அவன் காப்பியைக் குடிக்காமலே வீட்டைவிட்டுச் சரேலென
வெளியேறினான். மறுநாள் காலையில் அவன் விழிக்கும் முன்பாகவே அவள் விழித்து, அது
எந்தமுறையில் நடக்குமென்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாளோ, அப்படி அது
நடக்கவிடாமல், படுக்கையை விட்டும் நழுவவிருக்கும்போது, அவன் படுக்கையிலிருந்தும்
எழுந்து நிமிர்ந்து உட்கார, அவள் அந்த அன்னத்தூவி மெத்தையின் ஓரத்தில் அமர்ந்த
அவனையே நோக்கி வெறிக்குமாறு தன்முகத்தை நேர்செய்து கொண்டிருந்தாள். அவன் ஏதோ
திகில் கனவு கண்டதுபோல் கூச்சலிட்டுப் பின் தேம்பத் தொடங்கினான், ‘’ நீ ஒரு
குரூரமான பெண், மேரி. நீ ஒரு கொடூரமான, மிகக் கடுமையான பெண்.’’ அன்று இரவில் அவன் பெருமூச்சும்
முனகலுமாகப் புரண்டுகொண்டிருந்தவன், திடீரென கிரீக் மொழியில் கத்தினான். அது ஏதோ
சாபமிடுவதுபோலத் தோன்றியது. அவள் பயந்துவிட்டாள். அவன் அவளைக் கொன்றுவிடுவான்.
இல்லை, அப்படி அவள் நினைத்தாள். பின்னர், இல்லை, அவளொன்றும் மன நடுக்கத்தின்
அருகில்கூட இல்லை. ஆனால் `இதற்கு நான் முடிவு கட்டுவேன்` எனத் தீர்மானித்தாள்.
அதுவே போதுமானது. ஆனால், அதை அவளால் நிறுத்த முடியவில்லை. எதற்கும் மசியாத,
குற்றம் சுமத்தும் வெறித்த பார்வை அவள் முகத்தில் ஒட்டிக்கொண்டது. சரி, நான்
நல்லதை நினைத்துத்தானே இப்படித் தொடங்கினேன், அப்புறமென்ன? என அவள் நினைத்தாள்.
நாட்கள் கடந்தன.
ஒருநாள் மாலை நான்குபேரும் ஒன்றாக இருக்கும்போது,
திமித்ரியை, தான் பொருட்படுத்தாமலிருப்பதையும், அவன் அவள் பார்வையைத் தவிர்க்க,
என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்து கொண்டிருப்பதையும் யாரும்
கவனிக்கமாட்டார்களென மேரி நினைத்தாள். ஆனால், எல்லாவற்றையும் ஹெலன் கண்டுகொண்டாள்.
அடுத்த நாள் மேரி, ‘’
எவ்வளவு நாட்கள்தான் நீங்கள் அதைத் தொடர்ந்து
செய்வீர்கள்?’’ என ஹெலனிடம்
கேட்டாள்.
‘’ ஒரு பகற்பொழுதுக்கும்
மேலாக நான் ஒரு போதும் அதைத் தொடர்வதில்லை. நல்லது, நான் அவரை நேசிக்கிறேனில்லையா?’’
பிடி கொடுக்காமல் பேசித் தவிர்க்க
முயற்சிப்பது போல அவள் குரல் ஒலித்தது.
மேரி அந்தச்
சிகிச்சையைத் தொடங்கி, இப்போது மூன்று வாரங்களாகி விட்டன. அவள் கலவரப்பட்டுப்
போனாள்; வெளியே எங்கும் செல்வதில்லை; ஆனால், உட்கார்ந்து அழுதுகொண்டேயிருந்தாள்.
பின்னர் அமைதியாக உட்கார்ந்து வெறித்துக்கொண்டிருந்தாள்; திமித்ரியைப் பார்த்து
அல்ல; அவன் எங்கே அங்கிருக்கிறான்? சுவரைப்பார்த்துத்தான்
வெறித்துக்கொண்டிருந்தாள். என்ன நடக்கிறதென்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அது
பயங்கரமாக இருந்தது. அவள் கணவனை இழந்துவிட்டாளா? அவன் மிகவும் பின்னிரவு ஆகாமல்
வீட்டுக்கு வருவதில்லை. ஏனென்றால்
பொழுதுக்கும் குடித்துக் கொண்டேயிருந்தான். அவன் வீட்டுக்குள் சுழன்று
தடுமாறியபோது அவள்மீது வசைமாரி பொழிந்துகொண்டிருந்தான் – கிரீக்கில். பின்னர் ஒரு
நாள் இரவில் வீட்டுக்கு வரவேயில்லை.
‘’ உனக்கும்
திமித்ரிக்கும் என்னதான் நடக்கிறது?’’ தெருவில் பார்த்த மேரியிடம் கேட்டான், டாம்.
‘’ உங்களுக்குள் என்ன சண்டையா?’’
‘’ அப்படியெல்லாம்
ஒன்றுமில்லையே.’’ எனப் புன்னகையோடு மேரி
சொன்னாள். ஆனால் உள்ளுக்குள், அவள் வாழ்க்கை பொடிப்பொடியாகச் சிதறிப் பாழாகிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
அன்று இரவு
படுக்கையில் அவளது குடிமயக்கக் கணவன் மீது கைகளைச் சுற்றிப் பின்பக்கமாக ஒன்றி
அணைத்து, முகர்ந்து சொன்னாள், ‘’ வா, திமித்ரி, சண்டை வேண்டாம்.’’ ‘’ எங்கேயாவது,
நரகத்தில் போய்விழு, சனியனே!’’ என்று அவன்
கத்திச் சத்தமாகத் தேம்பித்தேம்பி அழுதான். அதுவே அவளை வெறுப்புகொள்ளச் செய்தது.
பின்னர் திடீரென்று அப்படியே விழுந்து உறங்கிப்போனான். காலையில் அவள்
படுக்கையிலிருந்தும் முன்னமே எழுந்து காலைக்கான உணவைத் தயாரித்து மேஜையில்
வைத்தாள். அவன் குளியலறையிலிருந்தே வெளியே செல்லுவதற்கான உடையணிந்து வந்தான். அவன்
தலை தெரிந்த உடனேயே, வாசலிலேயே மறித்து, ‘’ உனக்காக அற்புதமான உணவு
தயாரித்திருக்கிறேன்’’ என்றாள்.
அதைக் கேட்டதும் அவன்
சிரித்தான், ஆனால், அது குரைப்பதைப் போலிருந்தது. அவளைப் பார்த்து ஒருவிரலைக்
கிண்டலாக அசைத்து, ‘’ அட, பேசுகிறாயே! உனக்குத்தான்
என்னைக் கண்டதும் வார்த்தைகளெல்லாம் எங்கேயோ போய் முடங்கிக்கொள்ளுமே, வாயை மூடு,
நான் எதையும் கேட்கத் தயாரில்லை.’’ என்றான். அத்தோடு வெளியேறினான்.
ஹெலனைத் தேடிப்
போனாள், மேரி. இல்லத்தரசிகளும் குழந்தைகளுமாகக் குழுமியிருந்தவர்களின் நடுவில்
குழந்தையும் கையுமாக அவள் அமர்ந்திருந்தாள். அவர்கள் பேசிச்
சிரித்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் குதியும் கும்மாளமுமாக
மெல்லோட்டமோடிக்கொண்டிருந்தார்கள். அது ஹெலன் தானா? அவளுக்கென்ன உடம்பு
சரியில்லையா? அல்லது வேறெதுவுமா? அவள் மெலிந்திருப்பதாகத் தோன்றினாள். பாலூட்டுகிற
மார்பு மொத்தையாக, ஏன், அசிங்கமாகக்கூடத்தான் தெரிகிறது. ஹெலனைப் பார்த்தபடி நின்று
அவள் நினைத்துக்கொண்டிருக்க, ஆனால், உண்மையில் ஹெலன் அப்படியொன்றும் தெரியவில்லை.
இப்போதெல்லாம் திமித்ரி வீங்கிச் சிவந்த குடிகார முகத்துடன் அசிங்கமாகப் பருத்துவிட்ட
மனிதனாகத் தெரிவதாக ஹெலன் நினைத்தாள். மேரி அந்தக் கூட்டத்தோடு சேர்வதற்காகச்
சென்றாள். ஆனால், ஹெலன் பெஞ்சில் அவளுக்கு இடம் கொடுக்கச் சிறிதும்
நகராமலிருப்பதைக் கண்டாள். மேரி நெருக்கித் தள்ளி இடம் பிடித்தாள். தீர்மானமாக
அவளிருந்ததைக் கண்ட பெண்கள், ஒவ்வொருவராக அவர்களின் கைக்குழந்தைத் தள்ளுவண்டி
மற்றும் தள்ளு நாற்காலிகளைத் தள்ளிக்கொண்டு அகன்று சென்றனர்.
இப்போது மேரி, அவளின்
முழுக்கதையையும் ஹெலனுக்குச் சொன்னாள். அவள் ஒரு பைத்தியக்காரியைப் போலப் பேசுவதை
அவளே உணர்ந்தாள். ஹெலன் கைக்குழந்தைத் தொட்டில் வண்டியை முன்தள்ளுவதும்
பின்னுக்கிழுப்பதுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதை ஒருபக்கமாகத் தள்ளிவிட்டு
மேலும் கீழுமாகத் தூக்கி ஆட்டுவதும், பின் தன்னை நோக்கிப் பின்னிழுத்து நீண்ட
நேரச் சிந்தனைக் கணங்களுக்கு ஆட்டிஅசைப்பதும், பின் மறுபடியும் முன்னுக்குத்
தள்ளுவதுமாக இருந்தாள். அது மேரிக்கு அந்தக் கைக்குழந்தைத் தள்ளு வண்டியும் அவள்
கதையைக் கேட்பதிலும் முடிவுசொல்வதிலும் பங்குவகிப்பதாகத் தோன்றியது.
‘’ நீ, மூன்று
வாரங்கள் அப்படியே செய்திருக்கிறாய்?’’ கடைசியாக ஹெலன் சொன்னாள். அவள் அதை
அழுத்தந்திருத்தமாக உச்சரித்த விதம், அவள் ஒரு உச்சபட்ச வெறுப்பினைக்
கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதாக மேரிக்கு உணர்த்தியது. அவள் முகம் மிகக்
கடுமையாகியிருந்தது. அவள் இனிமேலும் மேரியின் சிறந்த தோழியாக இருக்கப் போவதில்லை.
‘’ மூன்று வாரங்கள்,’’ தலையை ஆட்டித் திடமாக மொழிந்தாள், ஹெலன். ‘’ திமித்ரியாஸ் நோய்ப்பட்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்
இல்லை.’’
‘’அவர்
நோய்ப்பட்டிருக்கிறாரா என்ன?
‘’ உனக்கே அது தெரியவில்லையா?’’
எனச் சொன்னது நிச்சயமாக வேறு, ஹெலன்தான். இவள்
புதியதொரு ஹெலன். அவள் முகம் இறுகி இருண்டு, அழகாகவே இல்லை. அவர்கள் ஒரு உணவு
விடுதிக்கு வெளியே வர்ணம் பூசவேண்டிய, ஒரு அழகற்ற பெஞ்ச் மீது அமர்ந்திருந்தனர்.
அங்கே வாசலின் இருபுறமும் சிறிய இடைவெளிகளில் அழகுக்கு வளர்க்கப்படும் சிறுமரங்கள்
இருந்தாலும் அவை மனத்தை ஈர்ப்பதாக இல்லை. மரங்களுக்குத் தண்ணீர் ஊற்ற
வேண்டியிருந்தது. அவை தூசி படிந்து தோன்றின.
‘’ வேலைசெய்ய முடியாதபடி நேற்று திமித்ரியாஸ் அளவுக்கதிகமாகக்
குடித்திருந்ததாக டாம் சொன்னார். அவர் கவனமாக இல்லையென்றால் வேலையை இழக்க
வேண்டியிருக்கும்.’’
‘’ ஆனால், நீதானே அந்த ஐடியா கொடுத்தாய் ‘’ என்ற வார்த்தைகள் தொண்டை
வரைக்கும் வந்துவிட்டாலும் மேரியின் வாயை விட்டு வெளிவரவில்லை. அதுவே அவளுடைய
நிரந்தர நிலையாகிவிடுமோ என்ற கலவரத்தின் பிடிக்குள் இருந்த அவள் தன்னைத்தானே
கேட்டுக்கொண்டாள் – `அவள் சொன்னதை நான் ஏன் அப்படியே எடுத்துக்கொண்டு அதே வழியில்
செய்து பார்த்தேன்?`
‘’ முடிந்த அளவுக்கு இன்னும் நன்கு முயற்சிசெய். எப்படியாவது அவனைச்
சரிக்கட்டப் பார்’’ என அழுத்தமாக உச்சரித்த ஹெலன், பெஞ்சிலிருந்து குழந்தையுடன்
எழுந்து, மேரியைப் பார்த்து ஒரு சிரிப்புகூடச் சிரிக்காமல், சரி, நாளைக்குப் பார்க்கலாமென்று ஒரு
ஒப்புக்குக்கூடச் சொல்லாமல் போய்விட்டாள்.
`நான் ஹெலனையுங்கூட இழந்துவிட்டே`னென மேரி நினைத்தாள். திமித்ரி வேலை
செய்த விடுதியின் வெளிப்பக்கம் போய் அமரலாமெனச் சென்றாள். பிற்பகலில் அவனுக்கு ஒரு
மணிநேரம் இடைவேளை உண்டு. அவன் வெளியே வந்ததும் அவனை நோக்கி ஓடி அவன் கையைப்
பிடித்துக்கொண்டு, ‘’ வருந்துகிறேன், திமித்ரி, நான், வருந்துகிறேன்.’’ என்றாள்.
அவள் அழ, அழ, அவன் திரும்பிக்கொண்டு, ‘’ ஓஹோ, வருத்தம் சொல்லிவிட்டாய். அவ்வளவு தானா,
இவ்வளவும் எதனால் வந்தது? நான் என்ன கேட்டுவிட்டேன், ஒரு குழந்தை, இதற்குப்போய்..,
ஆனாலும், நீ ரொம்ப, ரொம்ப மோசமான பெண், மேரி.’’ என்றான். அவசரமாக ஏறிட்ட அவனது ஒரு
பார்வையிலேயே, அவனது பயத்தை, அவளது முகத்தில் அந்த வெறிக்கின்ற, இறுகிய கோபப்
பார்வை எங்கே மீண்டும் தோன்றிவிடுமோவென அவன் அச்சம் கொண்டதை அவள் பார்த்திருக்க
முடியும். அவளிடமிருந்தும் கையை விடுவித்துக் கொள்ள அவன் பின்னிழுத்தான். ஆனால்,
அவள், அவன் கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘’ திமித்ரி, திமித்ரி,
திமித்ரி.’’ எனக் கெஞ்சிக் கெஞ்சித் திக்கினாள். அவன் பாதி திரும்பிய நிலையில்,
பக்கப் பார்வையாகத் துடிக்கும் கண்களால் அவளை நோக்கினாலும் அவனைத்
துயர்ப்படுத்தும் அவளது கண்களை
நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவன் அவளை முழுவதுமாக என்றென்றைக்கும் வெறுத்துவிடுவானென
அவள் நினைத்து, ‘’ வா, திமித்ரி, வீட்டுக்குப் போகலாம், ப்ளீஸ், ’’ என அழைத்தாள். இருவரும்
நடைமேடையில் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தனர். அந்த வழியே வந்தவர்கள் அவர்களைக்
கண்டு ஒதுங்கி, விரைந்து அகன்றனர். இப்போது
அவள் ஆருயிர் வாழ்க்கைக்காக அவன் தோள்களில் தொற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். ஆம். வாழ்க்கையை, அவள் அப்படித்தான் உணர்ந்தாள்.
ஏனென்றால் இப்போது எல்லாமே பறிபோவதாக இருந்தது. அவள் சத்தமாகத் தேம்பி அழுதாள்.
அவனோ கொதித்துச் சிவந்து பரிதாபமாக நின்றான்.
வீடு கூப்பிடு தூரத்தில், ஒருசில நிமிட இடைவெளியில்தான் இருந்தது.
அவள் நெருக்கத்தில், அவன் தள்ளாடிச் சென்றான். அவள் அவனை இறுக்கிப்
பிடித்திருந்தாள். விட்டால், ஓடிவிடுவானென்பது மட்டுமில்லை; மீண்டும் அவனைப்
பார்க்க முடியாமலாகிவிடலாம்.
வீட்டில் அவனைப் படுக்கையறைக்கு இழுக்க அவள் முயற்சித்தாள். ஆனால்,
அவனோ மேஜை மீது, தலைக்கு முட்டுக்கொடுத்துக் கைகளில் தாங்கியபடி உட்கார்ந்துவிட்டான்.
‘’இப்போது என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?’’ எனக் கேட்டான்,
அவன். ‘’சரி. இப்போது உடலுறவு கொண்டால் அத்தோடு எல்லாம் சரியாகி விடுமா?.’’
‘’ மாத்திரை சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன், திமித்ரி.’’
‘’ ஆக, நீ மாத்திரையை நிறுத்திவிட்டாய்.’’
‘’ வா, திமித்ரி, கெஞ்சிக் கேட்கிறேன், வா, படுக்கைக்குப் போகலாம்.’’
‘’ குழந்தைக்கு என்ன வழி?’’
அவனை இழுப்பதற்காக, அவள், அவன் கையைப் பற்றினாள். கூடவே அவனோடு கடைசியாகப் படுக்கையில் எப்போது
பேசினோமென்றும் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் இழுத்த இழுப்புக்கு, அவன் இணங்கிப்
படுக்கைக்கு அவளோடு தள்ளாடிச் சென்றான்.
அவன் அவ்வப்போது அசிங்கமாக, வேதனைமிக்க தேம்பல் ஒலிகளோடு அழுதுகொண்டிருந்தான்.
அவள் அவனை உடைத்து நொறுக்கியிருந்தாள். சிறிதளவுகூட வெற்றியின் சிலிர்ப்பு அல்லது
அவர்களது பாலுறவு விளையாட்டுகளின் மகிழ்வெச்சம் போன்ற எதனையும் அவள் உணரவில்லை. உள்ளுக்குள்ளாகவே,
‘’ அவன் சரியாகி விடுவான். எல்லாவற்றையும் மறந்துவிடுவான். நாங்கள் முன்பிருந்த
மாதிரியே மகிழ்ச்சியாகிவிடுவோம்.’’ என்று அவள் பிதற்றிக்கொண்டிருந்தாள். முன்னர், வாழ்க்கை
அற்புதமான ஒன்றாக இருந்ததென இப்போது
அவளுக்குத் தோன்றியது. ஆனால், அந்த மகிழ்ச்சியை அவள் ஏன் தூக்கி யெறிந்தாளென்பதை
இப்போதும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இதற்கிடையில், அவர்கள் காதலில் ஈடுபடுவார்களா அல்லது பாலுறவு
கொள்வார்களா என்ற ஒரு கேள்வி அங்கு எழவேயில்லை. ஏனென்றால், வலுவற்று, வாடித்
துவண்டு, சுருங்கிப்போன, சிறிய தசைத் துண்டு ஒன்றைத்தான் அவள் கையில்
பிடித்திருந்தாள். இதைப்போன்ற எந்த ஒன்றும் எப்போதும் நிகழ்ந்ததேயில்லை.
‘’ இனிமேல் மீண்டும் அப்படிச் செய்யாதே,’’ என அவன் கடுமையாகப் புதியதான
ஒரு துன்பக் குரலில் சொன்னான். ‘’ இனிமேலும் அப்படிச் செய்யாதே. இப்போது
சொல்கிறேன் கேளு, திரும்பவும் நீ அப்படிச் செய்தால், உன்னைக் கொன்றுவிடுவேன்.
ஒரேயடியாக வெளியே போய்விடுவேன். வீட்டுக்கு வரவே மாட்டேன். அதுதான் சொல்கிறேன்,
அதை மீண்டும் செய்துவிடாதே.’’
அவன் படுக்கையில் விழுந்தான்; ஆனால் முதுகைத் திருப்பிக் கொள்ளாமல்
மல்லார்ந்துதான் படுத்திருந்தான். அவள், அவளாகவே, அவன் கைகளுக்குள் முடிந்த அளவு
நெருக்கமாகத் தன்னை நுழைத்துக்கொண்டாள். ‘’ ஓ, திமித்ரி, வருந்துகிறேன்.’’ அவள்
நெடுநேரம் அழுதுகொண்டிருந்தாள்; ஆனாலும் அவளை மன்னிக்கும் விதமாக அவன் சொன்னபடியே,
இனிமேல் நடக்கப்போவதாகத் தீர்மானித்தாள். அதனாலேயே அப்போதைக்குக் கொஞ்சம்
பரவாயில்லாதது போலும் உணர்ந்தாள். அவள் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டாள் : ’’
நாங்கள், ஒன்றிரண்டு நாட்களில் இது எல்லாவற்றையும் மறந்துவிடுவோம். எல்லாமே
முன்னர்ப் போலவே சரியாகிவிடும்.’’
****
மலைகள் இணைய இதழ், டிசம்பர் 17, 2013, இதழ் 40 இல் வெளியானது.
No comments:
Post a Comment