Tuesday, 5 January 2016

தென்கொரியச் சிறுகதை - கோடையில் ஒரு மழை (A Shower)

கோடையில் ஒரு மழை

கொரியன் : ஹ்வாங் சுன்-வன்   Hwang Sun-wun  (March 26, 1915 - September 14, 2000)
Image result for Hwang Sun-won

ஆங்கிலம் : ப்ரதர் அந்தோணி ஆஃப் டெய்ஜ்  
தமிழில் : ச.ஆறுமுகம்.
ஹ்வாங் சுன்-வன் :  ஜப்பானியக் காலனியாதிக்கத்தின் கீழ் கொரியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் தற்போது வடகொரியாவிலுள்ள டேவ்டாங் என்னும் ஊரில் 1915ல் பிறந்தவர். பிற்காலத்தில் கொரியப் போரின் விளைவாக தென்கொரியா, வடகொரியா எனப் பிரிந்தபோது அவர் தென்கொரியாவுக்கு வந்து க்யூங்கி பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். கொரியப் போர்க்காலத்தில் குடும்பத்துடன் அகதியாக வாழ்ந்த காலத்தில் அவர் இந்தக் கதையை எழுதினார்.
ஹ்வாங் பல கவிதை நூல்களையும் எட்டு நாவல்களையும் படைத்திருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் முக்கியக் கொரிய இலக்கிய வகையான சிறுகதைக்காகவே மிகவும் பாராட்டப்படுபவராகவும் என்றும் நினைவுகொள்ளப்படுபவராகவும் உள்ளார். கொரிய இலக்கிய உலகில் அவரது இன்னொரு பெருமை ஆதிக்கமொழியான ஜப்பானில் எழுத மறுத்ததுதான். கொரியாவின் நவீன இலக்கியத்தில் அவரது மிகச்சிறந்த படைப்புகளாக நட்சத்திரங்கள், முதியவர் ஹ்வாங், முதிய குயவர், மேகங்களின் வெடிப்பு, கொக்குகள் மற்றும் தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள சொனாகி என்ற சிறுகதையும் கொண்டாடப்படுகின்றன.
கொரிய மொழியில் சொனாகி என்பது வெப்பம் மிகுந்த  கோடைகாலத்தின் ஒரு மாலையில் திடீரெனப் பெய்து பெருமழையாகக் கொட்டிச் சிறிது நேரத்தில் அடங்கிவிடும் கோடை மழையைக் குறிக்கும் சொல். இக்கதையில் கோடை மழை குமரப்பருவத்துச் சிறுவன் ஒருவனுக்கும் சிறுமி ஒருத்திக்கும் இடையே ஏற்படுகின்ற குறுகியகால ஆனால், மனதைத் தொடும் காதலின் குறியீடாகிறது.
ஹ்வாங்கின் சிறுகதைகள் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவையென்றாலும் சொனாகி காலத்தை வெல்லுகின்ற கொரியச் செவ்விலக்கியமாக கொரியர்களால் கருதப்படுகிறது. கொரியாவின் அனைத்து வயதினரும் இந்தக் கதையைப் பற்றித் தெரிந்திருப்பவர்களாயிருக்கின்றனர். கொரியாவின் கிராமப்புற அழகும் கள்ளங்கபடமற்ற குழந்தைப் பருவக் காதலும் இக்கதையில் அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொரிய மொழிச் சிறுகதையைப் போல வேறு எந்தச் சிறுகதையும் நேசிக்கப்படவில்லையென இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார். இந்தக் கதை பெருமதிப்புடன் எல்லோராலும் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம் மொழியின் எளிமையும் கதையின் உள்ளடக்கமும் தான். இது பள்ளிச் சிறுவர்களாலும் எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது; அவர்களின் மனதையும் தொடுகிறது. பிற கொரியக் கதைகளைப் போலவே இறந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்குமாக அடிக்கடி மாறி உடனடி உணர்வைக் கொடுப்பதாக இருக்கிறது.  கடந்த காலத்தில்  இழந்துவிட்ட வெகுளித்தன்மை இணைந்த பழங்கால நினைவுகளின் ஏக்கம், மனித வாழ்க்கையின் எளிதில் உடைந்துபோகும் தன்மை, பழங்காலக் கிராம வாழ்முறைகளுக்கும் தற்கால  நகரக் கடின வாழ்க்கைக்குமுள்ள முரண்பாடுகள், உண்மையான மகிழ்ச்சியின் எளிமை அனைத்தையும் உள்ளடக்கியதாக அடிக்கருத்து உள்ளது.)

நீரோடையின் அருகில் அந்தச் சிறுமியைக் கண்டதுமே,  அவள் மாஸ்டர் யுன் அவர்களின் கொள்ளுப் பேத்தியாகத்தான் இருக்கவேண்டுமென , அந்தச் சிறுவனுக்குத் தோன்றியது. அவள் தண்ணீருக்குள் கைகளை அமிழ்த்தி, அதனை வாரியிறைத்துக்கொண்டிருந்தாள். சியோல் நகரத்தில் அவள்,  இதைப் போன்ற ஒரு நீரோடையை அநேகமாகப் பார்த்திருக்க மாட்டாளாக இருக்கலாம்.
அவள் அதைப்போலவே பல நாட்கள் பள்ளியிலிருந்து திரும்பும்போது  தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தாள். நேற்று வரையிலுங்கூட அவள் நீரோடையின் விளிம்பிலேயே விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால், இன்று  நடைக் கற்களில் ஒன்றின்மீது நின்றுகொண்டிருந்தாள்.
அந்தச் சிறுவன் கரையில் உட்கார்ந்திருந்தான்.  அவள் வழியை விட்டு நகரும் வரை அங்கேயே காத்திருப்பதென அவன் தீர்மானித்தான்.
அப்படியாகக் காத்திருக்கும்போது யாரோ ஒருவர் வரவே அவள் வழிவிட்டாள்.
அடுத்த நாள், அவன் ஓடைக்குக் கொஞ்சம் தாமதமாகவே வந்து சேர்ந்தான். இந்தத் தடவை அவள் நடைக்கற்களின் மத்தியில் அமர்ந்து முகம் கழுவிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். கைகளை மேலேற்றிச் சுருட்டியிருந்த  இளஞ்சிவப்பு மேற்சட்டையின் எதிர்நிறத்தில் அவளின் பின்புறக் கழுத்து அதிவெண்மையாக இருந்தது. 
 முகத்தைச் சிறிது கழுவிவிட்டு, அவள் தண்ணீருக்குள் குனிந்து நோக்கினாள். தண்ணீரில் தெரியும் அவளுடைய பிம்பத்தைத்தான் அவள் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். அவள் திடீரெனத் தண்ணீரைக் கையில் அள்ளினாள். சில மீன் குஞ்சுகள் நீந்திக் கொண்டிருந்திருக்கலாம்.
அந்தச் சிறுவன் கரையில் உட்கார்ந்திருப்பதை அவள் அறிந்திருந்தாளா,  இல்லையா, எனத் தெரியவில்லை. அவள் அக்கறையாகத் தண்ணீரைக் கையில் அள்ளிக்கொண்டேயிருந்தாள். ஆனால் ஒவ்வொருமுறையும் பயனின்றித்தான் போனது. சும்மா ஒரு வேடிக்கை போல, அதற்காகவே தண்ணீரை அள்ளியள்ளிச் சிந்திக்கொண்டிருந்தாள். நேற்றுப் போல யாராவது குறுக்காக வந்தால் மட்டுமே வழியை விட்டு நகர்வாள்போலத் தோன்றியது.
பின்னர், அவள் தண்ணீருக்குள்ளிருந்து எதையோ குனிந்து எடுத்தாள். அது ஒரு வெள்ளைக் கூழாங்கல்.  அதன்பின் அவள் நடைக்கற்களின் குறுக்காக மெல்ல உந்தி உந்திக் குதித்தாள்.
ஒருமுறை, அப்படியே திரும்பினாள்: ‘’ ஹேய், நீ.’’
வெள்ளைக் கூழாங்கல் அவனை நோக்கிப் பறந்து வந்தது.
அவன் அனிச்சையாக எழுந்து நின்றான்.
குறுக வெட்டிய தலைமுடியைக் குலுக்கிக்கொண்டு, அவள் ஓட்டத்திலேயே போய்க்கொண்டிருந்தாள்; நாணற் படுகைகளுக்கிடையிலான பாதையைத் தேர்ந்து, அதிலேயே சென்றாள். பின்னர்,  அந்த இலையுதிர் காலத் தெள்ளிய வெயிலில் நாணல்களின் வெளிறியத் தலை உச்சிகளைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
நாணல்களுக்கப்பால் தூரத்தில் அவள் மறுபடியும் விரைவிலேயே தோன்றுவாள். அவள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதாகப் பின்னர், அவன் நினைக்கத் தொடங்கினான். அப்போதுங்கூட அவள் தென்படவில்லை. அவன் கால் பெருவிரல்களில் நின்று உன்னிப் பார்த்தான். அவள் மிகமிக அதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாக நினைக்கத்தொடங்கினான்.
நாணற் திட்டுகளுக்கு மறுபுறம் வெகுதூரத்தில், நாணற் கூட்டமொன்று அசைந்துகொண்டிருந்தது. அந்தச் சிறுமி நாணல்களை அணைத்து        நின்றுகொண்டிருந்தாள். பின், அவள் மெதுவாக நடந்து கொண்டிருந்தாள். எப்போதுமில்லாதபடி, மிக அதிகமான வெளிச்சத்துடன் வெயில் அவளின் நாணற் தலைமுடிமீது ஒளிவீசிக்கொண்டிருந்தது.  அது, ஒரு பெண்ணாக இல்லாமல், வயல்களின் குறுக்காக ஒரு நாணல் நடந்துசெல்வது போலத் தோன்றியது.
நாணல் கண்ணிலிருந்து மறையும்வரை அங்கேயே நின்றுகொண்டிருந்தான். அவள், அவன் மீது எறிந்த கூழாங்கல்லைத் திடீரெனக் குனிந்து நோக்கினான்; அதை எடுத்துச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டான்.
மறுநாளிலிருந்து அவன் தினமும் நீரோடைக்குச் சிறிது தாமதமாகவே வரத் தொடங்கினான். அவள் வந்து போனதாக எந்தத் தடயமும் தெரியவில்லை. ஒருவிதத்தில் அதுவும் நல்லதுதான்.
இருந்தாலும் அது கொஞ்சம் வியப்பானதுதான். அவளுக்கான அடையாளம் ஏதும் இல்லாமலிருந்தும் நாட்கள் செல்லச் செல்லச் சிறுவனின் நெஞ்சுக்குள் தனிமை உணர்வொன்று தோன்றிப் படர்ந்தது. அவன் காற்சட்டைக்குள்ளேயே கூழாங்கல்லை விரல்களால் வருடும் பழக்கத்துக்காளானான்.
ஒருநாள், அவன், நீரோடை நடைக்கற்களின் நடுவில் அந்தச் சிறுமி எங்கே அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாளோ, அங்கேயே போய் அமர்ந்தான். அவன் கைகளைத் தண்ணீரில் நனைத்து, முகத்தைத் துடைத்தான்; மீண்டும் தண்ணீருக்குள் நோக்கினான். நிறம் மாறி இருண்டிருந்த அவனது முகம் அவனைத் திருப்பி நோக்கியது. அவன் அந்த முகத்தை வெறுத்தான்.  
அந்தச் சிறுவன் தண்ணீருக்குள்ளிருந்த முகத்துக்கு மேலாகத் தண்ணீரை இரண்டு கைகளாலும் அள்ளினான். மீண்டும் மீண்டுமாகப் பலதடவைகள் அள்ளினான். பின்னர், திடீரெனத் துள்ளியெ.ழுந்தான்; அவனுக்குள் வியப்பான வியப்பு! அவள் வந்துகொண்டிருந்தாள்; அதுவும் அவனிருந்த திசையிலேயே!
‘’அவள் ஒளிந்துநின்று, நான் என்ன செய்கிறேனெனப் பார்க்கிறாள்.’’ அவன் ஓடத் தொடங்கினான். ஒரு கல் தவறித் தொலைத்தது.  கால் தண்ணீருக்குள் அமிழ்ந்தது. இழுத்துக்கொண்டு அவன் விரைவாக ஓடினான்.
ஏதாவது ஒரு இடம் மட்டும் கிடைத்தால் போதும், அவன் ஒளிந்து கொள்வான். அந்தப்பக்கம் நாணல்கள் இல்லை.  பக்வீட் வயல்கள் மட்டுமே.

பக்வீட் பூக்களின் வாசம் அப்போது அவன் மூக்கை உறுத்தியதுபோல் வேறு எப்போதும் உறுத்தியதில்லையென அவன் நினைத்தான். அவனுக்குத் தலை சுற்றியது. உதட்டிலிருந்து உப்புக் கரிக்கும் திரவம் ஒன்று அவன் நாக்கில் பட்டது. அவன் மூக்கில் இரத்தம் வந்துகொண்டிருந்தது.
இரத்தம் வரும் மூக்கை ஒரு கையால் அமுக்கிப் பிடித்துக்கொண்டு, அவன் ஓடிக்கொண்டிருந்தான். `முட்டாள் பையா, முட்டாள் பையா` என ஒரு குரல்   அவனைத் துரத்தித் துரத்தித் தொடர்வதாக அவனுக்குள்ளேயே ஒரு நினைவு.
சனிக்கிழமை வந்தது.
அவன் நீரோடைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, பல நாட்களாகக் கண்ணில் தென்படாத அந்தச் சிறுமி நீரோடையின் பக்கமாக உட்கார்ந்து தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவன் அவளைத் தவிர்ப்பதான நடிப்பில் நடைக்கற்களின் குறுக்காகச் செல்லத்தொடங்கினான். ஒரு சில நாட்கள் முன்பு அந்தச் சிறுமியின் கண்முன்னாலேயே, அவன்  ஒரு முட்டாளைப் போலக் காட்டிக்கொண்டான். அதனால், மிகுந்த கவனத்தோடு அது ஒரு நெடுஞ்சாலையாக இருந்தால் எப்படிக் கடப்பானோ, அதுபோல நடந்தான்.
‘’ ஹேய்!’’
அவன் கேட்காதது போலச் சென்றான்; ஆனாலும் கரை மீது ஏறியதும் நின்றான்.
‘’ ஹேய், இது என்ன சிப்பி?’’
தன் நினைவின்றியே திரும்பினான். அவளின் ஒளிவீசும் கறுப்புக் கண்களுக்கு எதிரில் நேருக்கு நேராகத் தான் நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். உடனேயே பார்வையை அவளின் உள்ளங்கைக்குத் தாழ்த்தினான்.
‘’ இதுவா, பட்டாம்பூச்சிக் கிளிஞ்சல்’’
‘’ ஆஹா, என்ன ஒரு அழகான பெயர்!’’
அவர்கள் பாதை பிரியும் இடத்துக்கு வந்துசேர்ந்துவிட்டார்கள். அங்கிருந்து அவள் ஒரு மைல் தூரம் அல்லது அந்த அளவுக்குக் கீழே இறங்க வேண்டும். அவன் இரண்டு அல்லது மூன்று மைலுக்கு மலை மீது ஏற வேண்டும்.
அவள் நின்றாள். ‘’ நீ எப்போதாவது அந்த மலைக்கும் அப்பால் போயிருக்கிறாயா?’’
அவள் வயல்களின் முடிவுக்கும் அப்பால் சுட்டிக்கொண்டிருந்தாள்.
‘’ இல்லவே இல்லை. ஒருதடவை கூடப் போனதில்லை.’’
‘’ நாம் ஏன் போகக் கூடாது? கீழே கிராமத்தில் எல்லாம் ஒரே மாதிரி, சலிப்பாக இருக்கிறது, என்னால் தாங்கவே முடியவில்லை.’’
‘’ ஆனால், எப்படிப் பார்த்தாலும், அது நிரம்பத் தூரந்தான்.’’  
‘’ நிரம்பத் தூரம் என்று  எந்த அர்த்தத்தில் சொல்கிறாய்? நாங்கள் சியோலில் புறவெளி விருந்தயர்தல்களின் போது மிகமிக நீண்ட தூரத்துக்கு நடப்போம்.’’ அவளின் கண்கள், ‘’ முட்டாள் பையன்! முட்டாள் பையன்!’’ எனச் சொல்வது போலத் தோன்றியது.
அவர்கள் நெல் வயல்களுக்கு நடுவிலான பாதையில் சென்றார்கள். இலையுதிர்கால அறுவடை நடந்துகொண்டிக்கும் வயல்களின் அருகாகக் கடந்து சென்றார்கள்.
அங்கே பறவை ஓட்டும் கோமாளிப் பொம்மை (கண் திருஷ்டி பொம்மை)  ஒன்று நின்றுகொண்டிருந்தது.  அதன் வைக்கோல் கயிற்றைப் பிடித்திழுத்து அசைத்தான். அதனுள்ளிருந்து சில குருவிகள் பறந்தன. அப்போதுதான் அவனுக்கு நினைவு வந்தது. அவர்களின் தலைமை வயலுக்கு அவன் முன்னதாகவே போய்க் குருவிகளை விரட்டிக்கொண்டிருப்பதாக வீட்டில் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
‘’ இது நல்ல வேடிக்கை!’’
அவள் அந்தக் கோமாளிப்பொம்மையின் வைக்கோல் கயிற்றைப் பிடித்து வெட்டிவெட்டி, இழுத்துக்கொண்டிருந்தாள். அந்தப் பொம்மை அப்படியும் இப்படியுமாக அசைந்து நாட்டியம் காட்டியது.  அவளின் இடது கன்னத்தில் ஒரு சிறு குழி விழுந்தது.
சிறிது தூரம் தள்ளி இன்னொரு கோமாளிப்பொம்மை இருந்தது. அவள் அதை நோக்கி ஓடுகிறாள். அவள் பின்னாலேயே அவனும் ஓடுகிறான். இன்று அவன் சீக்கிரமாகவே வீட்டுக்குப் போய் வேலையில் உதவ வேண்டுமென்பதை மறந்துவிட முயற்சிப்பது போலவே இருந்தது.
அவன் வெறுமனே அவளுக்கு நெருக்கமாக, அவள் அருகாகவே ஓடுகிறான். வெட்டுக்கிளிகள் அவர்கள் முகத்தில் அப்பிக் கறித்துத் துள்ளிவிழுகின்றன. இலையுதிர்காலக் களங்கமற்றத்  தூயநீலவானம் அவன் கண்களின் முன்பாக அப்படியே உருண்டு, உருண்டு சுழலத்தொடங்குகிறது. அவன் கிறக்கமாக உணர்கிறான். ஏதோ ஒன்று பருந்துபோல மேலே மேலே மேலுக்கும்மேலாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அங்கே மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 
பின்னால் திரும்பியபோது, அவன் அப்போதுதான் ஓடிக்கடந்திருந்த கோமாளிப்பொம்மையை அவள் இழுத்திழுத்து அசைத்துக்கொண்டிருந்தாள். அது முந்தையதைவிட நன்றாக அசைந்தாடியது. நெல்வயல்கள் முடிகின்ற இடத்தில் ஒரு கால்வாய் இருந்தது. முதலில் அவள்தான் அதைத் தாண்டிக் குதித்தாள்.
அங்கிருந்து மலையடிவாரம் வரைக்கும் வயல்கள், வயல்கள், வயல்கள்தான்.
சிறுதான்ய வைக்கோல் குவிக்கப்பட்டிருந்த வயல் மேட்டினைக் கடந்தார்கள்.
‘’ அது என்ன?’’
‘’ ஒரு காவல் குடில். ‘’
‘’ அங்கே பார், மஞ்சள் முலாம். முளைவிட்டிருக்கிறது, அதெல்லாம் நல்லதா?’’
‘’ஆமாம், அவை நன்றாகவே இருக்கும், ஆனால் தர்ப்பூசணிகள்தாம் இனிப்பு. 
‘’ எனக்கு மட்டும் ஒன்று கிடைத்தால் முழுவதையும் தின்று விடுவேன்.….’’
‘’ அவன் முலாம்பழக் கொடியழிவுகளின் நடுவே பயிராகியிருந்த வெள்ளை முள்ளங்கிகளில் இரண்டைப் பிடுங்கிக்கொண்டு திரும்பி வந்தான். அவை இன்னும் முழுதாகப் பருக்கவில்லை. அவற்றின் இலைகளைத் திருகித் தூர எறிந்துவிட்டு, ஒன்றை அவளிடம் நீட்டினான். பின்னர் ‘இப்படித்தான் சாப்பிடவேண்டும்` எனச் சொல்வது போல் அதன் பருத்த முனையில் இலேசாகப் பல் பதித்துப் பின்னர், நகத்தால் தோலை உரித்து அடியிலிருந்த வெள்ளைப்பகுதியைத் திண்ணமாய்க் கடித்தான்.
அவளும் அவனைப் பார்த்து அதுபோலவே கடித்தாள். ஆனால் மூன்று வாய் மெல்லும் முன்பே, ‘’ ஓ, இது காரம், விறுவிறுவென்கிறது’’ எனச் சொல்லித் தூர எறிந்தாள்.
‘’ ஆமாம். தாங்கவில்லை, மோசம், என்னாலும் முடியவில்லை.’’ அவன் இன்னும் தூரமாக விட்டெறிந்தான்.
மலை நெருங்கிவிட்டது.
இலையுதிர்காலத்தின் பழுப்பு இலைகள் அவர்களின் கண்களை ஈர்த்தன.
‘’ய்ய்யா!’’
அவள் மலையை நோக்கி ஓடினாள். அப்போது அவன் அவள் பின்னால் ஓடிக்கொண்டிருக்கவில்லை. பதிலாக, அவள் சேர்த்திருந்ததைவிடவும் அதிகமாகப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தான்.
`இது கிரைசாந்தியம், இது புஷ் க்ளோவர், இது மணிப்பூ ….`
‘’ மணிப்பூக்கள் இவ்வளவு அழகாயிருக்குமென நான் நினைக்கவேயில்லை. எனக்கு ஊதா பிடிக்கும்! …. ஆனால், இந்தப்பூ சன்னலின் நிழற்தட்டுப் போல இருக்கிறது, இது என்ன பூ?’’
‘’ அது…, வெலேரியன்.’’ அவள் வெலேரியனைக் குடைபிடிப்பதுபோல் பாவனை காட்டினாள். அப்போது மெல்லச் சிவந்த அவளின் அழகு முகத்தில் மெல்லிய அந்தச் சிறுகுழி அழகாகத் தோன்றியது.
பின்னும் அவன் கை நிறையப் பூக்களைப் பறித்தான். அவளுக்குத் தருவதற்காக அவன் புத்தம் புதிய மலர்களை மட்டுமே தெரிந்தெடுத்தான். 
ஆனால், அவளோ, ‘’ அதில் ஒன்றைக்கூடத் தூர எறிந்துவிடாதே.’’ என்றாள்.
அவர்கள்  முகட்டின் வழியாக மேலேறிக்கொண்டிருந்தார்கள்.
எதிரில் தெரிந்த பள்ளத்தாக்கின் சரிவுகளில், சில ஓலைக் குடிசைகள் இணக்கமான கூட்டமாகத் தெரிந்தன.
எதுவும் பேசிக்கொள்ளாமல் இருவரும் ஒரு பாறையின் மீது அருகருகாகக் கால்பரப்பி அமர்ந்தனர். அவர்களைச் சுற்றிலும் வழக்கமற்ற ஒரு அமைதி சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது.  அங்கிருந்ததெல்லாம், வெப்பத்தில் காயும் புல்லின் மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்த இலையுதிர்காலக் கதிரொளி மட்டுமே.
‘’ அது என்ன மாதிரியான பூ?’’  
மிகச்செங்குத்தான ஒரு சரிவில் பின்னிக்கிடந்த ஆரோரூட் கூவைக்கிழங்கின் படர்கொடி ஒன்றில் அந்தப் பருவத்தின் கடைசிப்பூக்கள் இதழ்பரப்பியிருந்தன.
‘’இது விஸ்டீரியா போலவே இருக்கிறது. சியோலில் எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு பெரிய விஸ்டீரியா இருந்தது. அந்த மரத்தின் கீழ் என்னோடு விளையாடிய தோழிகளை இந்தப் பூக்கள் இப்போது நினைவுபடுத்துகின்றன.’’  
அவள் எழுந்து சரிவை நோக்கிச் சென்றாள். நிறையப் பூக்கள் மலர்ந்து கிடந்த ஒரு கொடியைப் பிடித்து இழுக்கத் தொடங்கினாள். அது எளிதில் அறுவதாக இல்லை. மேலதிகமான முயற்சி அவள் சறுக்கியதில் முடிந்தது. அவள் ஒரு கூவைக்கொடியைப் பற்றிக்கொண்டாள்.
அவன் பதறி ஓடினான். அவள் ஒரு கையை நீட்டினாள். அவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே, அந்தப்பூவை அவனே பறித்துக் கொடுத்திருக்க வேண்டுமெனச் சொல்லி மன்னிக்கும்படி வேண்டினான். அவளின் வலது கால் மூட்டிலிருந்து இரத்தம் கசிந்தது. அதைக்கண்டதும் உடனடியாகத் தானாகவே சிராய்ப்பில் உதட்டைப்பொருத்தி உறிஞ்சத் தொடங்கிவிட்டான். பின்னர், திடீரென ஏதோ நினைவு தட்டியவனாக, எழுந்து சிறிது தூரம் ஓடினான்.
கண நேரத்தில் திரும்பியவன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, ‘’ இதைத் தடவிக்கொண்டால் வலி கொஞ்சம் சரியாகிவிடும்.’’ என்றான்.
சிராய்ப்பின் மீது பைன் மரப்பிசினை அவன் தடவி முடித்ததும் கூவைக் கொடிகள் கிடந்த இடத்துக்கு ஓடி நிறையப்பூக்கள் பூத்திருந்த கொடியாகப் பார்த்துப் பலமுறை பல்லால் கடித்து இழுத்தான். அவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்தான். பின்னர், அவன், ‘’ அங்கே ஒரு கன்றுக்குட்டி இருக்கிறது. வா, பார்க்கலாம்.’’ என்றான்.
அது ஒரு வெளிறிய மஞ்சள் நிறக் கன்று. அதன் மூக்கில் இன்னும் வளையம் செருகப்படவில்லை.
அதன் மூக்கணாங்கயிற்றைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, அதன் முதுகைத் தடவிக்கொடுக்கும் பாவனையில் ஒரே எம்பில் அதன் மீது ஏறியமர்ந்தான். கன்று உதைத்து, வட்டமிட்டுச் சுழலத் தொடங்கியது.
அவளது வெளிறிய முகம், இளஞ்சிவப்புச் சட்டை, கருநீலப் பாவாடை, அவள் கையிலிருந்த பூக்கள் எல்லாம் மங்கலாகத் தெளிவற்றதாகின. எல்லாமாகச் சேர்ந்து ஒரு மாபெரும் பூங்கொத்து போலத் தோன்றியது. அவன் சிறிது மயக்கமாகத் தலை சுற்றுவதாக உணர்ந்தான். ஆனாலும் அவன் இறங்கப் போவதில்லை. அவனுக்குப் பெருமையாக இருந்தது. அது, அவனால் மட்டுமே முடிகிற அந்தச் சிறுமியால் செய்துகாட்ட முடியாத ஒன்று,
‘’ அடேய், என்ன செய்வதாக நினைப்பு?’’ உழவர் ஒருவர் உயரமான புற்களின் நடுவேயிருந்து வந்துகொண்டிருந்தார்.
சிறுவன் கன்றின் முதுகிலிருந்தும் குதித்தான். இன்று கடுமையாகத் திட்டு கிடைக்கப் போகிறதென நினைத்தான். - `கன்றுக்குட்டி மேலா ஏறுகிறாய்,  அதன் முதுகை உடைக்கப் பார்க்கிறாயா, பின்னே, அப்படியில்லாமல் வேறென்ன?` என்கிற மாதிரி.
ஆனால், அந்த நெடுந்தாடி உழவர் சிறுமியை நோக்கி வெறுமனே ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கன்றின் கயிற்றை அவனிடமிருந்து பறித்து, இழுத்துப் பிடித்துக்கொண்டு, ‘’ எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக வீட்டுக்கு ஓடி விடுங்கள்.  மழை  வந்துகொண்டிருக்கிறது.’’ என்றார்.
உண்மையிலேயே ஒரு பெரிய கருமேகம் அவர்கள் தலைக்கு மேலாகச் சுருண்டுகொண்டிருந்தது. அவர்களைச் சுற்றிலும் திடீரென்று பலத்த சப்தம் சூழ்ந்துவிட்டதை அவர்கள் உணர்ந்தனர். காற்று  படபடத்து வேக வேகமாக வீசிற்று. ஒரு மின்னலில் அவர்களைச் சுற்றியிருந்த எல்லாமே இருண்டு கருஊதாவாக மாறின. அவர்கள் கீழே இறங்கத் தொடங்கியதுமே ஓக்மர இலைகளின் மீது மழைத்துளிகள் விழுவதைக் கேட்டனர். பெரிய பெரிய துளிகள். கழுத்தின் பின்புறம் குளிர்வதாக அவர்கள் உணர்ந்தனர். பின் ஒரு கணத்தில் மழைக்கம்பிகளின் திரை ஒன்று வழியை மறைத்து நின்றது. அதன் ஊடாகவே வயல் ஒன்றில் மேட்டுக்கூரை ஒன்றினை அவர்களால்  காணமுடிந்தது. அவர்கள் அங்கே சென்று தங்கமுடியும். ஆனால், அதன் தூண்கள் சாய்ந்தும் கூரை அங்கங்கே பிய்ந்தும் தெரிந்தது. குறைவாக ஒழுக்கிருந்த ஒரு இடத்தைச் சுட்டியவாறே அவள் மேலே ஏறுவதற்கு உதவினான்.
அவளது உதடுகள் நீலமாகின; தோள்கள் நடுங்கிக்கொண்டேயிருந்தன.
அவன், தன் பருத்தி மேலாடையைக் கழற்றி அவள் தோள்களின் மேலாகப் போர்த்தினான். அவள் கண்களை உயர்த்தி அவனை வெறுமனே பார்த்தாள். அவன் விருப்பம்போல் செய்துகொள்ளட்டுமென அமைதியாக இருந்தாள். அடுத்து, அவள் அணைத்துக்கொண்டிருந்த பூங்கொத்திலிருந்து ஒடிந்த தண்டுகளும் கசங்கியதுமான பூக்களை அவள் காலடியில் பரப்பினான். சிறிது நேரத்திலேயே அவள் நின்றுகொண்டிருந்த இடத்திலும் மழை சொட்டத் தொடங்கியது. அவர்கள் மேற்கொண்டு அங்கே தங்கவியலாது போனது.
வெளியே சுற்றுமுற்றும் பார்த்தபின் ஏதோ நினைவு வந்தவனாக, அவன் சோளக்கொல்லையை நோக்கி ஓடினான். சோளத்தட்டைகளை நேராக ஒன்றோடொன்றாகச் சேர்த்து நிறுத்தி வைத்திருந்த கூம்புக்குவியலில் ஒன்றைச் சிறிது அகலமாக்கிப் பின்னர் அதனோடு இன்னொரு குவியலை எடுத்துவந்து சேர்த்தான். பின்னர் அதனை மீண்டும் அகலமாக்கியபின் அங்கே வந்துவிடுமாறு அவளை நோக்கிக் கைகளை அசைத்தான்.
அந்த சோளத்தட்டைக் கூம்புக்குள் மழை நுழையவில்லை. அது இருட்டாக மிக ஒடுங்கியதொரு இடமாக இருந்தது. அவன் கூம்பின் பின்புறமாக அவள் மீது மழை படாதவாறு அமர்ந்தான். ஆனால், அவன் மழையில் நனைவதாக இருந்தது. அவன் தோள்களிலிருந்து ஆவி எழும்பியது.
அவனை உள்ளே வந்து அமருமாறு ஒருவித இரகசியக்குரலில் அவள் சொன்னாள். எனக்கொன்றுமில்லை, சரியாகத்தான் இருக்கிறேனென்றான்.  மீண்டும் அவள், அவனை உள்ளே வந்து அமருமாறு சொன்னாள்.
பின்வழியாக அவன் உள்நுழைவதைத் தவிர வேறு வழியில்லாமலாயிற்று. ஆனால், அப்படி அவன் நுழைகையில் நெருக்கமாகி அவள் கையிலிருந்த பூக்கள் கசங்கி விட்டன. ஆனால், அவள் அதைக் கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.  அவனின் நனைந்த உடம்பிலிருந்த எழுந்த வாசனை அவள் மூக்கை உறுத்தியது. ஆனாலும் அவள் வேறுபக்கமாகத் திரும்பிக் கொள்ளவில்லை. அவனின் உடம்புச் சூட்டில் அவளது உடல் நடுக்கம் குறைவதாகவும் அவள் உணர்ந்தாள்.
சோளத்தட்டைகளின் மீதான சப்தம் திடீரெனச் சுத்தமாக நின்றுபோனது. வெளியே இருள் விலகி, ஒளி மெல்லப் பரந்துகொண்டிருந்தது.
அவர்கள் சோளத்தட்டைக் குவியலுக்குள்ளிருந்து தலை நீட்டி, மெல்ல, வெளிவந்தார்கள். அப்படியொன்றும் வெகுதூரமெனச் சொல்லமுடியாத ஒரு தூரத்தில், கதிரொளி அவர்கள் எதிரிலேயே கண் கூசுமளவுக்குப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டிருந்தது. அவர்கள் கால்வாயை அடைந்தபோது அதில் தண்ணீர் நிரம்பிச் சென்றது. சேறு கலந்த அந்தப் புதுவெள்ளம் கதிரொளியில் செக்கச் செவேலெனத் தோன்றியது. அவர்களால் அதனைத் தாண்டிக்குதித்துவிட முடியாது.
அவன் திரும்பி முதுகைக் காட்டி நின்றான். அவள் மிகுந்த பணிவோடு, தன்னை அவன் முதுகில் ஏற்றிக்கொள்ள அனுமதித்தாள். அவன் தொடைக்கு மேலாக ஏற்றிச் சுருட்டியிருந்த அரைக்காற்சட்டை வரைக்கும்கூடத் தண்ணீர் உயர்ந்துவிட்டது.
அவள் சத்தமிட்டுக் கதறி, அவனது கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள்.
அவர்கள் நீரோடையை அடையும் முன்னராகவே இலையுதிர்கால வானம் முழுவதுமாகத் தெளிந்து எதுவுமே எப்போதுமே நடந்திராதது போல மேகங்களற்ற நீலமாகிவிட்டிருந்தது.
அதன்பின் அவளைப்பற்றி எதுவுமே தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அவளைப் பார்த்துவிட வேண்டுமென்று அவன் நீரோடைக்கு ஓட்டமாக ஓடி வருவான்; ஆனால், அவளைப் பார்க்க முடியவில்லை. பள்ளிக்கூட இடைவேளை நேரத்தில் விளையாட்டு மைதானத்தில் தேடிப் பார்ப்பது அவனது வழக்கமானது. அவன் ஐந்தாம் வகுப்புப் பெண்கள் அறையைக்கூட நோட்டமிட்டுப் பார்த்துவிட்டான். ஆனாலும் அவள் தென்படவில்லை.
அன்றும் கூட அவன் நீரோடைப் பக்கமாகக் காற்சட்டைப்பைக்குள் வெள்ளைக் கூழாங்கல்லை உருட்டிக்கொண்டே வந்தான். நல்லவேளை, அவன் கவனித்துவிட்டான். அந்த நீரோடைக்கரையில் அவள் மட்டும் இல்லாமல் போயிருந்தால்!
அவன் இதயம் வேகமெடுக்கத் தொடங்கியதை உணர்ந்தான்.
‘’இவ்வளவு நாளும் உடம்பு சரியில்லாமலிருந்தது.’’
நிச்சயம், அவள் முகம் அதிகமாகத்தான் வெளிறியிருந்தது.
‘’அன்று மழையில் நனைந்ததால்தான் இப்படியானது, இல்லையா?’’
அவள் ஆமென்று அமைதியாகத் தலையாட்டினாள்.
‘’ இப்போது கொஞ்சம் பரவாயில்லையா?’’
‘’ இல்லை, இன்னும் சரியாக, இல்லை….’’
‘’ அப்படியென்றால் நீ படுக்கையில் தானே இருக்கவேண்டும்.’’
‘’ அது… நிரம்பவும் அலுப்பாக இருக்கிறது. அதனால்தான் வெளியே வந்தேன்….. அன்றைக்கு நிரம்பவும் நன்றாக, நல்ல விளையாட்டாக இருந்ததில்லையா? உனக்குத் தெரியுமா? அன்று……. அன்றைக்குத்தான், இது எங்கேயோ பட்டுக் கறையாகிவிட்டது. அது போக மாட்டேனென்கிறது.’’
அவள் குனிந்து இளஞ்சிவப்பு ரவிக்கையின் முன்பக்கத்தில் பார்த்தாள். அது  இருண்ட செம்மண் சேற்றுக்கறை போலத் தோன்றியது.
‘’இது என்ன கறையாக இருக்கும்?’’ என அவள் கேட்கும்போது அவளது கன்னத்தில் அந்தச் சிறிய சுழிப்பு மெல்லத் தோன்றியது.
அவன் எதுவும் பேசாமல் அந்தச் சிவப்பு ரவிக்கையின் முன்புறத்தையே  பார்த்துக்கொண்டிருந்தான்.
‘’ இங்கே பார், நான் கண்டுபிடித்துவிட்டேன், அன்றைக்கு நாம் அந்தக் கால்வாயைக் கடக்கும்போது நீ என்னை முதுகில் ஏற்றிக் கொண்டாயே, இந்தக் கறை உன் முதுகிலிருந்துதான் பட்டிருக்க வேண்டும்
அவன் முகத்தில் குப்பென்று இரத்தம் ஏறுவதை உணர்ந்தான்.
பாதை பிரிகின்ற இடத்திற்கு வந்தபோது, ‘’ இங்கே பாரேன், வீட்டில், இன்று காலையில் இலந்தைப்பழம் பறித்தோம்… நாளை முன்னோர்களுக்குப் படையல் …. ‘’ என்றவள், ஒரு கை நிறைய இலந்தைப்பழங்களை, இந்தா, எடுத்துக்கொள்ளென்று நீட்டினாள். அவன் தயங்கினான்.
 ‘’ ஒன்றைச் சாப்பிட்டுத்தான் பாரேன். என்னுடைய கொள்ளுத் தாத்தா, அவரே நட்டு, வளர்த்த மரமென்று சொல்கிறார். நிரம்ப இனிப்பாக இருக்கும்.’’
‘’அதற்கென்ன, உண்மையிலேயே நிரம்பப் பெரியவைதாம்.’’ எனச் சொல்லிக் கொண்டே, உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் குழித்து நீட்டினான்.
‘’ அப்புறம், முன்னோர்களுக்கான சடங்குகளுக்குப் பின், வேறும் சில இருக்கின்றன. நாங்கள் வீட்டைக் காலிசெய்து போகப்போகிறோம்.’’
அவளின் குடும்பம் இங்கே வருமுன்னர் எப்படியிருந்தார்களென அவனுடைய பெற்றோர் பேசிக்கொண்டிருந்ததை அவன் கேட்டிருந்தான். சியோலில் மாஸ்டர் யுன்னுடைய பேரன்களின் வியாபாரம் படுத்துவிட்டது. அதனால் அவரால் வீட்டுக்குத் திரும்பிச் செல்லமுடியாமலாகிவிட்டது. அவர்களது குடும்ப வீடும் வேறு கைக்கு மாறிவிடும் போலிருக்கிறது.
‘’எனக்கு என்னவோ வீட்டை விட்டுவிட்டுப் போகப் பிடிக்கவேயில்லை. ஆனால், அது அப்பா அம்மா முடிவு, அதனால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. ..’’ முதல் தடவையாக அவளது கறுப்புக்கண்கள் துக்கம் தோய்ந்து தெரிந்தன.
அவளைப் பிரிந்து, வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, ‘ அவள் வீட்டைவிட்டுப் போகிறாள்` எனப் பலதடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருப்பதை உணர்ந்தான். அதில் குறிப்பாக வருத்தமோ  துக்கமோ  எதுவுமில்லை. ஆனாலும், அவன் மென்றுகொண்டிருந்த இலந்தைப் பழத்தின் சுவைதான், அவனுக்குத் தெரியவேயில்லை.
அன்று மாலை அவன் பழைய தியோக்சோயின் வாதுமைத் தோட்டத்துக்குள் ரகசியமாக நுழைந்தான்.
பகலிலேயே அவன் பார்த்துவைத்திருந்த அந்த வாதுமை மரத்தில் ஏறினான். அதில் அவன் ஏற்கெனவேயே பார்த்துவைத்திருந்த கிளையை ஒரு கம்பால் தட்டத் தொடங்கினான். வாதுமைக் கொட்டைகள்  கீழே விழுகின்ற சப்தம் அநியாயத்திற்கு வினோதமாக இருந்தது. அவன் இதயம் உறைந்துபோனது. ஆனால், அடுத்த கணத்தில் அவன் மூச்சைப் பிடித்துக்கொண்டு எதிர்பாராத வேகத்தில் கம்பை வீசத் தொடங்கினான். ‘’ அடப்,  பெரிய பெரிய காய்களா, எக்கச்சக்கமாகக் காய்த்துத் தொங்குகிறீர்கள்,  எல்லோரும் வந்துவிடுங்கள், ஆமாம், வந்துவிடுங்கள்,  ஒன்றாகக் கீழே விழுங்கள், ஆமாம், எல்லோரும் விழுந்துவிடுங்கள்.’’
திரும்பும் வழியில், கிட்டத்தட்ட முழுநிலாவாகப் போகிற நிலவு நீட்டிய நிழல்களுக்குள்ளாகவே வந்துவிட்டான். இன்னும் இரண்டு நாட்களில் அது இலையுதிர்காலப் பூரண முழுநிலவாக இருக்கும். நிழல்கள் மீது தனக்கு நன்றியுணர்வு ஏற்படுவதை அவன் அன்றுதான் முதல்முதலில் உணர்ந்தான்.
புடைத்துப் பருத்திருந்த காற்சட்டைப்பையை இதமாகத் தடவிக்கொண்டான். வாதுமைகளை வெறுங்கையால் உரித்தால் கொப்புளங்கள் உண்டாகுமெனச் சொல்வதைப்பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை. அவன் விரும்பியதெல்லாம், அந்தக்கிராமத்திலேயே மிகச்சிறந்ததான பழைய தியோக்சோய் தோட்டத்து மரங்களின் வாதுமைப் பருப்புகளை அவளிடம் கொடுத்து ருசிக்கச் செய்யவேண்டுமென்பதுதான்.
அந்தக்கணத்தில்தான்  பொறியிலடித்தது போல ஒரு எண்ணம் தோன்றியது. குணமாகி, அவர்கள் வீட்டைக் காலிசெய்து போகும் முன்பாக ஒருநாள் கடைசி, கடைசியாக நீரோடைப் பக்கம் வருமாறு அவளிடம் சொல்லாமல் விட்டிருந்தான். சரியான ஆள்! ஆம், சரியான முட்டாள்.
அடுத்தநாள் பள்ளியிலிருந்து வந்தபோது, வீட்டில் அவனது அப்பா இருப்பதிலேயே நல்லதாக ஆடை அணிந்து, கையில் ஒரு கோழியைப் பிடித்துக்கொண்டு நின்றார்.
அவர் எங்கே போகிறாரெனக் கேட்டான்.
பதில் சொல்லக் கவலைப்படாத, அவனது அப்பா கையிலிருந்த கோழியைத் தூக்கி எடைபார்த்துக்கொண்டே ‘’ இந்தப் பருமன் போதுமா?’’ எனக்கேட்டார்.
அவனுடைய அம்மா அவரிடம் ஒரு வலைப்பையைக் கொடுத்து, ‘’ அது ஏற்கெனவேயே சிலநாட்களாகக் `க்ளக், க்ளக்கென்று சத்தம் எழுப்பிக்கொண்டு முட்டையிடத் தோதாக இடம் தேடிக்கொண்டிருந்தது. அது பார்வைக்குப் பெரிதாக இல்லாமலிருக்கலாம்; ஆனால் அது நல்லக் கொழுத்ததுதான்.’’ இப்போது அவன், அப்பா எங்கே போகிறாரென அம்மாவிடம் தெரிந்துகொள்ள முயற்சித்தான்.
 ‘’ ஏன், அவர் கீழே சமவெளியில், பழைய பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் மாஸ்டர் யுன் வீட்டுக்குப் போகிறார். அவர் இதனைப் பிரார்த்தனைக்கு( பிண்டம் போட)ப் பயன்படுத்திக் கொள்வார்…..’’. அப்படியென்றால் இன்னும் நல்லப் பெரிதாகக் கொண்டுபோக வேண்டும். அந்த முத்துச்சேவல் …..’’ அதைக்கேட்டதும் அவனுடைய அப்பா பெரிதாகச் சிரித்துக்கொண்டே, ‘’ஹேய், இதிலேயே நல்ல கறி இருக்கிறது.’’ என்றார்.
எந்தக் காரணமும் இல்லாமலே, அவனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டதாக, உணர்ந்தான். அதனால், அவன் புத்தகங்களைக் கீழே எறிந்துவிட்டு, தொழுவத்துக்குள் சென்றான். அங்கே மாட்டு ஈ ஒன்றை அடிப்பது போன்ற பாவனையாகப் பசுவின் முதுகில் ஓங்கி அறைந்தான்.
நீரோடையில் தினமும் தண்ணீர் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அவன் பாதை பிரியும் இடத்தில் போய், நின்று கீழ்ப்பக்கமாகத் திரும்பி நின்றான். பழைய பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருந்த கிராமம் தெளிந்த நீலவானத்தின் கீழாக அருகாமையில்தான் தெரிந்தது. நாளை அவள் குடும்பம் யாங்ப்யாங்குக்குச் செல்வதாகவும் அவர்கள் அங்கே ஒரு சிறு மளிகைக்கடை வைக்கப் போகிறார்களென்றும் அவன்  பெற்றோர் பேசிக் கொண்டனர்.
அவன், நினைவுகள் எதுவுமின்றியே, காற்சட்டைப்பைக்குள்ளிருந்த வாதுமைக் கொட்டைகளை வருடிக்கொண்டிருந்தான்; இன்னொரு கையால் ஒரு பிடி நாணல்களைப்பற்றி வளைப்பதும் ஒடிப்பதுமாக இருந்தான்.
அன்று மாலையிலும், தூக்கம் வராமல் உருண்டுகொண்டிருக்கும்போதும், மீண்டும் மீண்டுமாக ஒரே எண்ணம் மட்டுமே அவனுக்குள் எழுந்தது: நாளை,  அவளின் குடும்பம் செல்வதைப் பார்க்க நானும் போகலாம்.  அப்படி நான் போனால், ஒருவேளை அவளை நான் பார்க்கவும் முடியலாம்.
அப்புறம், தூக்கம் அவனைத் தழுவியிருக்கக் கூடும்.
ஆனால், அப்புறம்,‘’ உம்…, என்ன வாழ்க்கை இது, உண்மையிலேயே, என்ன மாதிரியான ஒரு உலகத்தில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம்….ச்சே..’’ அப்பா கிராமத்திலிருந்து வந்துவிட்டிருக்கிறார். ‘’ மாஸ்டர் யுன்னின் குடும்பத்தைத்தான் பாரேன்,  வயல் எல்லாவற்றையும் விற்றுத் தலைமுறை, தலைமுறையாகக் குடியிருந்த வீட்டையும் விற்றுவிட்டார்கள்.  அப்புறமும் பெற்றவர்களின் கண் முன்னாலேயே குழந்தை இறக்கிறது…..’’  விளக்குவெளிச்சத்தில் அமர்ந்து தைத்துக்கொண்டிருக்கும் அவனுடைய அம்மா, ‘’ அந்தக் கொள்ளுப் பேத்தி ஒரே குழந்தையாயிற்றே, இல்லையா?’’ எனக் கேட்கிறாள்.
 ‘’ ஆமாம், இரண்டு பையன்கள் இருந்தார்கள்; ஆனால் இன்னும் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போதே அதுகளையும் மண்ணுக்குக் கொடுத்துவிட்டார்கள். குழந்தைகளில் கூட ஒரு குடும்பம் இப்படிச் சபிக்கப்பட்டிருந்தால் பின்னர் எப்படித்தான்?’’
‘’அது உண்மைதான். அந்தப் பெண்குழந்தை சில நாட்களாகவே உடம்புக்குச் சரியில்லாமல் இருந்திருக்கிறாள். அவர்களால் மருந்து கூடச் சரியாக வாங்கிக் கொடுக்கமுடியாமலிருந்திருக்கிறது.’’
 ‘’ இப்போது அந்தக் குடும்பத்தின் சல்லிவேர்கூட இல்லாமல் வாரிசு அற்றுப்போயிற்று….. ஆனால், ஒன்று பார்த்துக்கொள், அந்தச் சிறுபெண், சிறிது வித்தியாசமானவளென்று நினைக்கமாட்டாயா, என்ன? அதாவது, அவள் இறப்பதற்கு முன்னால், நம்பினால் நம்பு, நம்பாவிட்டால் போ, அவள் இறந்தால், அவள் அணிந்திருந்த ரவிக்கை, பாவாடை, எப்படி இருந்ததோ அப்படியே அதோடு அவளைப் புதைக்கவேண்டுமெனச் சொல்லியிருந்தாளாம்.’’


http://hompi.sogang.ac.kr/anthony/Shower.htm

திசை எட்டும் மற்றும் மலைகள் இணைய இதழில் வெளியானது.

`கோடையில் ஒரு மழை`, ஆதி பதிப்பகம் ஏப்ரல் 2014 முதல் பதிப்பில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment