Friday, 15 January 2016

நியூசிலாந்து சிறுகதை - இறந்தவர்களின் நகரம் (Necropolis by Eleanor Catton)

இறந்தவர்களின் நகரம் (Necropolis)


எலீனார் கேட்டன் (Eleanor Catton) நியூசிலாந்து

தமிழில் ச. ஆறுமுகம்

download (19)

  எலீனார் கேட்டன் (1985 ல் பிறந்தவர்) நியூசிலாந்து புனைகதைப் படைப்பாளர். கான்டர்பரி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலம் கற்றார். வெலிங்டனிலுள்ள விக்டோரியா பல்கலைக் கழகத்தின் நவீன இலக்கியப் பயிலகத்தில் (Institute of Modern Letters) படைப்பிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் (Masters in Creative Writing) பெற்றார். 2007ல் இவரது சிறுகதை இறந்தவர்களின் நகரம் (Necropolis) சண்டே ஸ்டார் – டைம்ஸ் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்றது. 2009 ல் அந்த ஆண்டின் `புனைகதைத் தங்க மங்கை` (Golden Girl of Fiction) எனப் புகழப் பெற்றார். இவரது இரண்டாவது நாவல் லூமினரீஸ் இவருக்கு 2013 ஆம் ஆண்டின் மான் பன்னாட்டு புக்கர் பரிசினைப் பெற்றுத் தந்தது.  
********
‘’என்னுடைய கோப்பைக்குள்ளிருக்கும் காப்பிக் கறையைப் பாரேன்!’’ என்றாள், ஷரோன். ‘’அதில் என் வரலாறே தெரிகிறது, பார். இந்த இடம் என்னை மணிக்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் இத்தனை காலமாக,  என் இரத்தத்தை உறிஞ்சுவதன் காலநிலை வரைபடம் தான், இது. அதை நன்றாகப் பார். தேவாங்காக இளைத்து வீணாகிப்போன என் வாழ்க்கையின் சமஅழுத்தக்கோடுகள்1 தான் அவை.’’
அவள் சொல்லுக்கு இன்னும் அழுத்தம் கூட்டுவதாக அந்த காப்பிக் கோப்பையை வேகவேகமாக ஆட்டிக்காட்டினாள். ‘’ நான் இதை மட்டுமல்ல எல்லாவற்றையும் எல்லா நாட்களிலும் சுரண்டித் தான் தேய்க்கிறேன். கடை முகப்புக்குத் திரும்பியபடியே, அங்கு நின்றிருந்த வாடிக்கையாளரிடம்  சொன்னாள், ‘’அங்கே போய் உங்கள் சீட்டு எண்ணைப் பெற்றுக்கொண்டீர்களா? அப்புறம், உங்கள் முதல் பெயர் என்ன?’’ அவருக்கு, அவள் ஒருமுறை கனிவான பார்வையினை, மறுமுறை  புன்னகை ஒன்றினைப் பரிசாக அளித்தாள்; ஆனால் இரண்டும் ஒரே நேரத்திலாக ஒருபோதும் இருந்ததில்லை. அதன் விளைவு குழப்புவதாகவே இருந்தது.  
 அந்த மனிதன் பைக்குள் துழாவிக்கொண்டே `ரிச்சர்டு` என்றான். அவனது ஆஸ்திரேலிய உச்சரிப்பில் அது ‘’ரெட்ச்செட்’’ (wretched) எனக் கேட்டது. அவள் கணினியில் தட்டச்சு செய்தாள். பின்னர், அவனது தலைக்கு மேலாகத் தொங்கிய விளக்கு மாட்டும் அழகமைப்பினை நோக்கிப் புன்னகைத்தாள். அவன் ரசீதினை எடுத்துக்கொண்டான். ஷரோன் புன்னகையை அணைத்தாள். அவன் வெளியேறுவதைக் கவனித்தாள்.

‘’கடவுளே, இது எந்த மாதிரியான ஒரு நரகக் குழி,’’ கதவு மூடியதும் அவள் சொன்னாள். ‘’செத்துத் தொலைந்துவிடலாமென்று தான் நினைக்கிறேன்.’’ நான் என்ன சொல்கிறேன் என்பது போல், அவள் என்னைப் பார்த்தாள்.  
‘’நானுந்தான்,’’ என்றேன், நான். ‘’நானும் செத்துப்போயிருக்கக்கூடாதா என்றுதான் நினைக்கிறேன்.  
‘’நாம் இன்னும் இங்கேயே ஒட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை,‘’ என்றாள் ஷரோன். ‘’ இரண்டு ஆண்டுகள், ஆனாலும் நாம் இங்கேயே இருக்கிறோம்.’’
 ‘’என்னாலுந்தான் நம்பமுடியவில்லை’’ வேடிக்கைக்காகத் தான் நானும்  ஒத்து ஊதினேன். ‘’இங்கிருக்கிற சலிப்பில், நாம் எப்படி இன்னும் சாகாமலிருக்கிறோம்?’’
 ஷரோன் வரிந்து கட்டிப் பேச விரும்புகிற விஷயங்கள் சலிப்பும், உடல் நோயும் தான்; அதிலும் ஏகப்பட்ட முகபாவங்களோடு. சிலர் குறுக்கெழுத்துப் புதிர்களை நேசிப்பது போலவே அவள் முகபாவனைகளை நேசித்தாள். முக பாவனைகள் தான் அவளுக்கேயான  தனி முத்திரை.
மரைத் திருகாணியும் வெப்பத்தடுப்புப் பலகைகளும் கேட்டு ஒரு பெண் வந்து சென்ற பிறகு, ‘’வயிறு உப்புசம், பியூலிமிக் மாதிரி’’ என்றாள், ஷரோன், வயிற்றைத் தடவிக்கொண்டே. ‘’ ஐந்து டாலர் பந்தயம், எப்படியென்று சொல், பார்க்கலாம்! உலர்ந்த உதடுகள், செதில் செதிலாக மூட்டுகள். அப்புறம், கண்களுக்குக் கீழே கருவளையங்கள்.’’
 ஆனால், அது ஒருமணி நேரத்துக்கு முன்னால். இப்போது நாங்கள் அந்தப் பேச்சை விட்டு வெகுதூரம் வந்திருந்தோம்.
‘’பத்து நிமிடம் புகைபிடிக்கும் இடைவேளை,’’ என்றேன், நான்.
 ஷரோனும் நானும் குப்பைத் தொட்டி அருகிலிருந்த நீளிருக்கைப் பலகையில் அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தோம். வாகனம் நிறுத்தும் இடத்துக்குள் டிரக்குகள் நுழையும்போதும்,  வெளியேறும் போதும், அவற்றிலிருந்த கட்டிடத் தொழிலாளர்கள் எங்களைப் பார்த்துக் கையசைத்தனர். அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியில் காய்ந்து சருகாகிப்போன புகையிலைக் கறை படிந்த இளஞ்சிவப்பும் கருஞ்சாம்பல் நிறத்திலுமிருந்தனர். ஒருசில நிமிடத்திலேயே, ஷரோன் உதடுகளில் பொருத்தியிருந்த சிகரெட்டை எடுத்து விரல்களில் இடுக்கிக்கொண்டே, ‘’அது என்னது?’’ என்றாள். 
 அவள் காட்டிய இடத்தைப் பார்த்து நானும் திரும்பினேன். அது, ஒரு போகன்வில்லாப் புதர்; டிரக்குகள் நெடுஞ்சாலையிலிருந்து திரும்பி, உள்நுழைகிற வாயில் மூலையில், தொலைபேசிப்பெட்டி அருகில் எப்போதோ ஒரு காலத்தில் நட்டு, பெரிதாக வளர்ந்து முற்றி, முதிர்ந்து, இப்போது டீசல் புகையும், தூசும் புள்ளி புள்ளிகளாகப் படிந்து, கொஞ்சம் கொஞ்சமாக உயிர் விட்டுக்கொண்டிருந்தது. அந்த போகன்வில்லாவின் கீழே ஒரு சடலம் கிடந்தது.
‘’அதைப் பார், தலையே இல்லாத, ஒரு நாய்,’’ என்றாள் ஷரோன், சிகரெட்டை ஆழமாக இழுத்துக்கொண்டே. அவள் குரலில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கித் தெரிந்தது. ‘’வா,வா, யாரையாவது கூட்டி வந்து சொல்லலாம். அட, கடவுளே, தலையே இல்லாமல் ஒரு நாய்!’’
அவள், கடைக்குள்ளிருந்த மரவேலைப் பையன்களைக் கைகாட்டி அழைத்தாள். அவ்வளவுதான், கடைக்குள்ளிருந்த எல்லோருமே வெளியே வந்துவிட்டனர். நாங்கள் அந்தப் புதருக்குக் கீழே தெரிந்த சடலத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம். ஹமீஷ் பளுஏற்றி இயக்குவதை நிறுத்தினான். தலையில்லாத நாயை ஒருமுறை பார்த்துவிடுவதென்று கணக்காளினிப் பெண்கள் அலுவலகத்திலிருந்தும் இறங்கி வந்தனர். எல்லோருமே குனிந்து கண்களை இடுக்கி அதையே பார்த்து மலைத்து நின்றோம். ஆனால், நாங்கள் நெருங்கிப் போகவில்லை. ஒரு ஐந்து அல்லது ஆறு மீட்டர் தொலைவுக்குத் தள்ளியே தான் நின்றோம், என்ன இருந்தாலும், சாவு என்றால் சாவு தானே!
‘’நாயின் தலையைப் போய் யார் வெட்டியிருப்பார்கள்?’’ எல்லோரும் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர். ‘’யாராவது நோயாளியோ!’’ நன்றாகப் பார்ப்பதற்கு வசதியாகப் புருவத்துக்கு மேலாகக் கையை உயர்த்திக் கவசமாக்கி, தலை இருந்த இடத்தில் வெட்டுப்பட்ட கறையாவது தெரிகிறதா என்று அந்த விரைத்த குட்டை மயிர்க் குவியலையே பார்த்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தோம். அந்த நாய் வெள்ளையாக விரைத்துப்போன குட்டைமயிர் கொண்டதாக இருந்தது.
‘’விலங்குப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுக்குத் தொலைபேசியில் சொல்லவேண்டும்,’’ என்றார், காட்சியடுக்கு2க்குப் பொறுப்பான கிளென். அவருடைய இடுப்புக் கச்சையிலிருந்து, அளக்கும் உலோக நாடாச் சிறுபெட்டியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, நாடாவை  இழுத்து, இழுத்துவிட்டு, அது, நெகிழி உறைக்குள் போய் முட்டும் `டக், டக்` ஒலியைக் கிளப்பிக்கொண்டிருந்தார். ‘’அவர்கள் ஒரு வண்டி கொண்டு வருவார்கள். வந்ததும் இதை அள்ளிக் கொண்டுபோய்விடுவார்கள்.’’               
நாங்கள் அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் நின்றோம். நானும் ஷரோனும் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட் கடைசிக்கு வந்துவிட்டது. இருந்தாலும், நாங்கள் அதை உறிஞ்சி, இழுத்துக்கொண்டிருந்தோம். 
 ‘’இது எவ்வளவு நேரமாக இங்கே கிடக்கிறதோ, தெரியவில்லையே,’’ என்றாள், ஷரோன், ஒருவித இகழ்ச்சி தொனிக்க.
‘’எனக்கு நாய்களைப் பிடிக்கும்.’’  என்றார், கிளென். இந்த உலகம்  சரியில்லை என்பதை, அப்போதுதான் உணர்ந்துகொண்டது போல் அவரது குரலை நிரம்பவும்தான் சோகமாக்கிக்கொண்டிருந்தார். அவர் மீண்டும் உலோக நாடாவை இழுத்து ஒலியெழுப்பிக்கொண்டே, ‘’நான் ஒரு நாய்ப்பிரியன்’’ என்றார்.
விலங்குப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டினர், இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கிருப்பதாகச் சொல்லினர். எங்கள் புகைக்கும் இடைவேளை முடிந்துவிட்டது. ஷரோனும் நானும் திரும்பிச் சென்று  முன் வாயிலின் இரண்டு பக்கங்களிலுமாக அமைக்கப்பட்டிருந்த   சிறிய நீலநிற வாடிக்கையாளர் சேவைக்கான, அவரவர் முகப்பிடங்களுக்குள், புகுந்துகொண்டோம். நாங்கள் இரப்பர் நாடாக்களை இழுத்துச் சொடுக்கிக்கொண்டு கடைக்குள் வருகின்ற மாந்தையன்3களை நோக்கிப் புன்னகைத்தோம். அப்படிப் பெண்கள் வரவேற்றுச் சேவை செய்வதை அவர்கள் விரும்பினர். அது, அவர்களுக்கு மேற்கொண்டு கடைக்குள் செல்வதற்கான ஏதோ ஒரு திருப்தியைக் கொடுத்தது. நான் அதிகமாகத் தான் புன்னகைத்தேன், ஆனால், எல்லோருக்குமே ஷரோனைத்தான் அதிகம் பிடித்திருந்தது.
‘’அது முதலிலேயே செத்துப் போயிருக்கும். பிறகுதான் தலையை வெட்டியிருப்பார்கள். செத்தபிறகு தலையை வெட்டுவது எளிதாயிருந்திருக்கும் தானே!’’ என்றேன், நான்.
‘’போதும், நாய், நாயென்று ஒரேயடியாகச் சலித்துவிட்டது.’’ என்ற ஷரோன், பெருமூச்சு ஒன்றை `ம்ம்` என்று கச்சிதமாக வெளியிட்டாள்.
ஒரு வயதான பெண்மணி அவளை நெருங்கி, ‘’திருகிடைத் தகடு4’’ என்றாள். ஷரோன், அவளது கவட்டுப்பக்கம் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே, ஒருகையைக் குறிப்பாக என்றில்லாமல் காட்டி ‘’நான்காவது வரிசை. இடதுபக்கம் துத்தநாகம், வலதுபக்கம் துத்தநாகப் பூச்சு.’’ என்றாள். அந்தப் பெண் இழுத்துத் தேய்த்து நகர்ந்ததும் ஷரோன் மீண்டும் `ஹ்ம்` என்று ஒரு பெருமூச்சினை விடுத்தாள்.‘’ ‘’வர்த்தகப் பிரிவு சார்லி மீது ஆறு பாலியல் தொந்தரவு வழக்குகளாம்!’’ என்றாள். அவள் இரப்பர் நாடாவைச் சொடுக்குவதை விட்டுவிட்டு இடைவெளி அடைக்கும் கூம்புக்குழல்5 கொண்டு ஒரு கோபுரம் அமைக்க, அதாவது, கூம்புக்குழல்களை ஒன்றின் மேலொன்றாக வைத்து, கனம் தாங்காமல் சாய்ந்து ஆடும் வரைக்கும் அடுக்கிக்கொண்டிருந்தாள்.
‘’உனக்குச் சொன்னது யார்?’’
‘’வில்லி’’
 ஷரோனின் கோபுரம் சாய்ந்துவிட்டது. அவள் ஒரு வெறுப்புடன் அத்தனை கூம்புகளையும் ஒருசேரத் தள்ளிவிட்டு, ‘’கல்லறை மேட்டில் வேலைசெய்வது போல இருக்கிறது.’’ என்றாள். ‘’அடுத்த கோடைகாலம் முழுவதற்கும், எப்படி, இப்படியே நின்றுகொண்டிருக்க   முடியும்? எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கப்போகிறது.’’
 ‘’நாயின் தலையை யார் வெட்டியிருப்பார்கள்?’’ என்றேன், நான். ‘’உண்மையில் அதை யார் எடுத்துக்கொண்டு போயிருப்பார்கள்? எனக்கு அது தெரிந்தேயாகவேண்டும்.’’
‘’தலையில்லாத நாயா?’’ விலங்குப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பெண் தொலைபேசியில்  அதிர்ந்தாள். ‘’அப்படியென்றால் இது, ஏதோ ஒரு வன்முறைக் கும்பலின் வேலைதான், வன்முறை. அதாவது மிக மோசமான வன்முறை. தலையில்லாத ஒரு நாய் என்பது மிகக் கோரம். இது மிகப் பயங்கரம். நாங்கள் இப்போதே ஒரு வண்டி அனுப்புகிறோம்.’’ அவள் தொலைபேசியைத் துண்டிக்கும் முன்பாகவே, ‘’ஹேய் மர்லீன்!’’ எனக் கத்துவது எனக்குக் கேட்டது.
 வண்டி வந்தபோது, ஷரோன் மாடியிலுள்ள தேநீர் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். வேறு யாரும் முந்திவிடாதபடி, அவர்களை முறையாக வரவேற்க நான் கார் நிறுத்துமிடத்திற்கு ஓடினேன். வந்திருந்தவள், மணிக்கட்டைச் சுற்றி தோல் கவசம் அணிந்த குட்டை முடி, இளம்பெண்ணாக இருந்தாள். ‘’எங்கே, அந்தத் தலையில்லாத நாயைப் பார்ப்போம்,’’ என்ற அவள் உள்ளங்கைகளை ஒருசேரத் தேய்த்து இருமுறை தட்டிக் கொண்டாள்.
 நாங்கள் போகன்வில்லாப் புதரை நோக்கி நடந்தோம். அப்போது பிற்பகலின் இறுதி நேரமாக இருந்ததால் வியாபாரம் மிகமிக மந்தமாகக் குறைந்திருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒன்றிரண்டு டிரக்குகளே நின்றிருந்தன. விளம்பரப் பலகைகள், மேம்பாலம், டிராம் கம்பிகளுக்கு அப்பால், கதிர் மூழ்க மூழ்க, அது, வட்டமாக ஒளிரும் தங்க நிறத்துக்கு மாறிக்கொண்டிருந்தது. காட்சியடுக்குக் கூடத்தைப் பெருக்கிய கிளென், வெள்ளை சிமென்ட் தூசு மேகம் ஒன்றை எங்களுக்குப் பின்னால் உயர்ந்து சென்றுகொண்டிருந்த சாய்வுப்பாதையில் மேலும் மேலும் கீழாகத் தள்ளிக் கருங்காரைத் தளம் வழியாகக் கால்வாயில் தள்ளிக்கொண்டிருந்தார்.    
 நாங்கள் போகன்வில்லாப் புதரை நெருங்கிவிட்டோம். விலங்குப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பெண் நேராகப் புதருக்குப் போய் தலையில்லாத நாயை நன்கு பார்ப்பதற்காக, ஒருகையால் புதர்க் கிளைகளையும் இலைகளையும் ஒருபுறமாகத் தள்ளினாள். நான் பின்தங்கி நின்று, நோய் பீடித்த அந்த போகன்வில்லா அழுக்குப் புதரின் இலைகள் அவள் முகத்தில் படவே, அவள் அவற்றைத் தன் உடலாலேயே ஒதுக்கித் தள்ளிப் பிடித்துக்கொண்டதைப் பார்த்தேன். ஈக்கள் கூட்டம் ஒன்று மேலெழும்பிப் புகை மூட்டம் போலப் பரந்தது. அவள் ஒரு நிமிடம் நின்று பெருமூச்சு விட்டாள். விரைப்பான ஒரு கையால் மூக்கின் முன் விசிறிக்கொண்டே, அந்தப் பெண் எல்லோரையும் கூப்பிட்டாள், ‘’இங்கே வந்து பாருங்கள்!’’
 நான் மிகுந்த மரியாதையுடன், மெதுவாகக் காலெடுத்து, முன்னே சென்று, தட்டையாகிப்போன நெகிழித் தம்ளர்கள், இலைச் சருகுகள், வெள்ளி நிறப் பொதிதாள்கள் உதிர்ந்து, ஈசல் சிறகுகளாகப் படிந்து புதைந்தும் புதையாமலும் அழுக்காகிக் கிடக்க அதனுள் ஒரு பக்கமாகச் சுருண்டு கிடந்த தலையில்லாத நாயைக் குனிந்து பார்த்தேன். 
அது ஒரு நாயே அல்ல. அது ஒரு பூனை, ஒரு பெரிய விரைப்பான முடி அடர்ந்த உள்ளூர் வகை வளர்ப்புப் பூனை; அதன் தலையின் ஒரு பக்கத்தில் பரவலாக இரத்தம் வழிந்த கறை; அதன் கண்கள் திறந்தே இருந்தன. அது இறந்திருந்தது.
‘’ஓ,’’ அந்த ஒரு கணத்தில் எனக்குச் சொல்லத்தோன்றியது அது மட்டுமே.
‘’நீங்கள் அதை அருகில் சென்று பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.’’ என்ற அந்தப் பெண், ‘’வாருங்கள், நெருக்கமாக வந்து நன்றாகப் பாருங்கள்.’’ என அழைத்தாள்.
‘’வேண்டாம், எங்களுக்கு, அது வேண்டாம், என்றேன், நான்.
 ஒரு சில தப்படிகள் பின்வாங்கிய நான், ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்து அந்தப் பூனையை மீண்டும் பார்த்தேன். அது தலையில்லாத இறந்த பூனை அல்ல; போகன்வில்லாப் புதரடியில் ஒரு பக்கமாகச் சாய்ந்து இறந்து கிடக்கும் ஒரு சாதாரணப் பூனை.
‘’ஓ, உங்கள் தலையை இப்படிச் சாய்த்துப் பார்த்தால், அதன் நெற்றிப் பக்கம் தட்டையாக அறுத்தெடுக்கப்பட்டது போல் இல்லையா? பாருங்கள், அது தலையில்லாத ஒரு நாயைப் போலவே தெரிகிறது, பாருங்கள்.’’
அந்தப் பெண் போகன்வில்லாப் புதரை விடுவித்துவிட்டு, ஒரு சில காலடிகள் பின்வாங்கினாள். அவள் என்னைப்போலவே, என் கோணத்தில் பார்க்க, நாங்கள் இருவரும் அங்கேயே ஒரு தோளைப் பாதி சாய்த்து மாறு கண்ணாகப் பார்த்து ஒரு நிமிடம் நின்றோம்.
 ‘’ஆமாம். நானும் பார்த்தேன்,’’ என்றாள், அவள் சிறிது நேரம் கழித்து. ‘’பூனையின் தலை நாயின் தலையைவிட மிகவும் சிறியது. அந்த நீள மூஞ்சியும் கிடையாது, பாருங்கள்.’’
‘’ஆமாமாம்,’’ என்றேன், விரைவாக. ‘’நீளமூக்கு அல்லது அதுமாதிரி எதுவும் இல்லை.’’
அந்தப் பெண் நேராக நிமிர்ந்து, முகத்தைக் கைகளால் தேய்த்துக் கொண்டாள். அவள் களைப்படைந்ததாகத் தோன்றினாள்.
‘’உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை,’’ என்று நிறுத்திய அவள் மீண்டும் தொடர்ந்தாள். ‘’அதாவது, தலையில்லாத நாய் என்பது  கொஞ்சம் அதிர்ச்சி தரக்கூடியது. நான் சொல்ல வருவது என்னவென்றால், தலையில்லாத நாய் என்பது ஒரு வன்முறை. நாங்கள் காவல்துறைக்குச் சொல்லவேண்டும்; ஏனென்றால் அதுவேகூட தகவல் தெரிவிக்கும் ஒரு துப்பாக மாறும். இறந்த பூனை அப்படியொரு துப்பாகாது. இறந்த பூனையென்றால், அது ஒரு செத்த பூனை, அவ்வளவு தான். அது சாலையில் அடிபட்டு, யாராவது ஒருவர் எடுத்து வேலி ஓரமாக இழுத்து எறிந்திருக்கலாம். அது மிகவும் சாதாரணமானது.’’
 நான் ஆமாம், ஆமாம் என மீண்டும் மீண்டுமாகத் தலையசைத்துக் கொண்டிருந்தேன்
 ‘’ஒரு செத்த பூனையோடு, நான் அலுவலகத்துக்குத் திரும்பிப் போகவேண்டியிருக்கிறது.’’ என அந்தப் பெண் முழுமையான ஒரு அவலம் தோய்ந்த குரலில் சொன்னாள். ‘’எரியடுப்புக்கு இன்னொரு செத்த பூனை. ஓக்--- ‘’   
எங்களுக்கு மேலாக டிரக்குகள் முக்கி முனகிக்கொண்டு, வானத்து நீலத்துக்குள் சென்று மறைந்தன. மணிக்கட்டினைச் சுற்றிக் கட்டியிருந்த தோல் கவசத்தைத் தன்னினைவில்லாமலேயே  அந்தப் பெண் அவிழ்த்தாள். பின்னர் பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி,  மீண்டும் கைதட்டிக்கொண்டாள். பின்னர், ‘’இதை எடுத்துப் போவதற்கு உங்கள் கடை நெகிழிப்பைகள் ஒன்றிரண்டு எனக்குக் கிடைக்குமா?’’ என்றாள்.
 எங்கள் ஒளிர் நீல வன்பொருளகக் கடைச் சின்னம் பொறித்த மளிகைப்பை மாதிரியான இரண்டு நெகிழிப்பைகளை எடுத்து வந்து அவளிடம் தந்தேன். அவள் ஒரு பையை விரித்துக் குனிந்து மற்றொன்றால் பூனையின் பாதத்தைப் பற்றிப் பிடித்தாள். அது மிக மோசமாக நாற்றமடித்தது. நான் சில தப்படிகள் பின்வாங்கினேன். அவள் முரட்டுத்தனமாகப் பூனையைப் பைக்குள் தள்ளிப் பின்னர் இரண்டாவது பைபையும் ஒரு உறுதிக்காக மாட்டினாள். பையின் நெகிழிக்கைப்பிடிகளை விரியப் பிடித்துக்கொண்டு, அவள் நிமிர்ந்து மேலெழுந்தபோது, பூனையின் பின்புறக் கால்கள் மேலே வானத்தை நோக்கி விரைத்து நீட்டித் தெரிந்தன. எப்படியிருந்தாலும், அவள் பூனையின் தலையை முதலில் பைக்குள் நுழைத்துத் தலைகீழாகத் தூக்கிப் பிடித்திருந்தது எனக்கு வித்தியாசமாகப்பட்டது. அது சரியில்லையெனத் தோன்றியது.    
காட்சியடுக்குக் கூடத்தைத் தாண்டிக் கடைக்குள் திரும்பிச் செல்லும் போது, நான் கிளென்னிடம், ‘‘அது ஒரு பூனைதான். ஏதோ ஒரு வண்டியில் அடிபட்டுச் செத்திருக்கிறது.. அதற்கு இப்போதும் தலை இருக்கிறது. கோணம் சரியில்லாததால்தான் அதை நம்மால் பார்க்க முடியாமல் போயிற்று.’’ என்றேன்.
‘’அது பூனையா?’’ என்றார், கிளென். அவருக்கு மகிழ்ச்சி என்பது போலச் சொன்னார், ‘‘அப்பாடா, அது ஒரு பூனைதான். நல்லது, நிரம்ப நல்லது.’’ அவர் அப்போதும் பெருக்கிக் கொண்டே அங்குமிங்குமாக உலவிச்சென்றார்.
 நான் கடைக்குள் நுழைந்தபோது, அநேகமாகக் கடை மூடும் நேரம் ஆகிவிட்டது. ஷரோன் பணப்பெட்டியிலிருந்தவற்றை எண்ணிக் கொண்டிருந்தாள். இரண்டு கைகளிலும் பத்து- சென்ட் நாணயங்கள் நிறைந்திருக்க, அவளுக்கேயுரிய தனியான ஆள் கணிக்கும் குரலில் சொன்னாள், ‘’அந்தப் பெண் ஒரு தன்பால் புணர்ச்சிக்காரி6.’’
ஷரோன் மீண்டும் சொன்னாள், ‘’அவள் ஒரு தன்பால் புணர்ச்சிக்காரி என்பதற்கு நான் ஐந்து டாலர் பந்தயம் கட்டுகிறேன். எப்படித் தெரியுமென்று சொல், பார்க்கலாம்?’’   



இக்கதை வேடிக்கையாக, கூர்மையாக, உண்மையாக இருக்கிறது. ஷரோன் வேடிக்கையானவளாக, அதேநேரம் ஒரு கதாபாத்திரமாக நம்பும்படியானவளாக இருக்கிறாள். வன்பொருளகக் கடைப் பின்னணி மிகத் திறமையாகப் பொருளாதார அடையாளங்களோடு அருமையாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு மிகச் சிறிய கதையாக, ஆனாலும் மொழித்திறத்தால் ஒரு நிகழ்கதையாக, மனித இயல்புகளைக் கூர்ந்து கவனித்துத் தேர்ந்து மேற்கொண்ட ஒரு சிறந்த பதிவாக இருக்கிறது. வாசகன் எப்போதும் அதிகம் விரும்புபவன்; அது ஒரு நல்ல அடையாளமும் கூட. இக்கதை மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
-    இக்கதையைப் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்த நீதிபதி ஓவென் மார்ஷல்
குறிப்பு :-  
  1. சம அழுத்தக்கோடுகள் – isobars
  2. காட்சியடுக்கு       - dry store
  3. மாந்தையன்        - punter – கடையில் பணிபுரியும் பெண்கள் வாடிக்கையாளர்களை இழிவாக அழைக்கும் சொல்
  4. திருகிடைத் தகடு   - washer
  5. இடைவெளி அடைக்கும் கூம்புக்குழல் - Cauking nozzle
  6. தன்பால் புணர்ச்சிப்பெண் - lesbian 
மலைகள் இணைய இதழ், நவம்பர் 02, 2015, இதழ் எண் 85 இல் வெளியானது.







No comments:

Post a Comment