Monday, 4 January 2016

அமெரிக்கச் சிறுகதை - மிரியம் - Miriam - Truman Capote (America)

மிரியம் - Miriam
ட்ரூமன் கபோட் - Truman Capote (America)
தமிழில் ச.ஆறுமுகம்
Image result for truman capoteImage result for truman capote
Image result for truman capote booksTruman Capote (1925-1984)
ட்ரூமன் கபோட்  (செப்டம்பர் 30, 1924 – ஆகஸ்ட் 25, 1984) அமெரிக்காவில் பிறந்து, சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் புனைவுகளற்ற படைப்புகளை வழங்கிய ஒரு நடிகர். அவரது பல படைப்புகள் செவ்வியல் இலக்கியங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.  அவருடைய புனைவுகளிலிருந்து  இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களும் தொலைக்காட்சி நாடகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.   
பெற்றோர்களின் மணவிலக்கினால் சிக்கலுக்காளான குழந்தைப்பருவத்தில், அம்மாவுடன் நீண்ட காலம் வசிக்க இயலாமற்போன கபோட் பலமுறை வசிப்பிடம் மாற்றவேண்டியிருந்திருக்கிறது.  மிரியம் சிறுகதை வெளியான பின் அவரது படைப்புகள் இலக்கிய கவனம் பெறத் தொடங்கின. இவரது my side of the matter மற்றும் shut a final door ஆகிய சிறுகதைகளும் புகழ்பெற்றவை.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கர்கள் கொண்டாடும் To kill a mocking bird நாவல் படைப்பாளர் ஹார்ப்பர் லீ`யும் கபோட்டும் சிறுவயது நண்பர்கள். அந்த நாவலின் `டில்` என்ற பாத்திரம்,  கபோட்டின் சிறுவயது சித்திரம் தான்.  
 1957 ல் பாரீஸ் ரெவியூ இதழுக்காக கபோட் அளித்துள்ள நேர்காணலில்  சிறுகதை நுட்பம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு சிறுகதையும் அதனதன் படைப்புச் சிக்கல்களைக்  கொண்டுள்ளதால், அவையெல்லாவற்றையும் இரண்டும் இரண்டும் நான்கு என்ற அடிப்படையில் பொதுமைப்படுத்திவிடமுடியாது. உங்கள் சிறுகதைக்குரிய சரியான வடிவத்தைக் கண்டுபிடிப்பதென்பது மிக எளிது. அதிகபட்சம் இயற்கையான முறையில் கதை சொல்லல் என்பதை உணர்வதுவே, அது. ஒரு படைப்பாளர், அவரது கதைக்கான இயற்கை உருவத்தைக் கண்டடைந்தாரா இல்லையா என்பதை அறிவதற்கான தேர்வு இதுதான்:  கதையைப் படித்து முடித்த பின், அதனை வேறு மாதிரியாக உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா, அல்லது, உங்கள் கற்பனைக்குப் பூட்டுப் போட்டுவிட்டு, அதுவே ஒரு ஆரஞ்சுப்பழத்தைப் போல முற்று முழுமையானதென, முடிவானதெனத் தோன்றச்செய்கிறதா? ஒரு ஆரஞ்சுப் பழம் போல் என்பது ஏதேனும் ஒன்றை இயற்கை அதன்போக்கில் மிகச் சரியானதாகச் செய்ததாகும்.
*****

 நியூயார்க் நகரத்தின் கீழாறு நீரிணைப்புக் கரையில் புதுப்பிக்கப்பட்ட புதிய பழுப்பு நிறக் கட்டிடம் ஒன்றின் மகிழ்ச்சியான அடுக்ககக் குடியிருப்பு ஒன்றில் (சமையலறையுடன் இரண்டு அறைகள்) திருமதி. எச்.டி.மில்லர் பல ஆண்டுகளாகத் தனிமையில் வசித்தார். அவர் ஒரு விதவை: அவருக்காக, திரு.எச்.டி.மில்லர் பெரிய அளவிலான காப்பீட்டுத் தொகையினை விட்டுச் சென்றிருந்தார். திருமதி. மில்லரது விருப்பங்கள் மிகக் குறைவானவை; பகிர்ந்துகொள்வதற்கு நண்பர்களும் இல்லை. மளிகைக்கடை மூலை தாண்டி அவர் செல்வதென்பது மிகமிக அபூர்வமான ஒன்று. அக்குடியிருப்பின் இதர நபர்களும் அவரைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவரது ஆடைகள் வழக்கமானவை; குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதுவுமில்லை. அவரது தலைமுடி இரும்புச் சாம்பல் நிறம்; கிராப் கத்திரிக்கப்பட்டு, மிகச் சாதாரணமாகக் குலுங்கி அலைபாய்வதாக இருந்தது; அவர் ஒப்பனைப் பொருட்கள் எதுவும் பயன்படுத்துவதில்லை; அவரது தோற்றம் மற்றும் இயல்புகள் எளிமையாக, எவ்வித முனைப்புமற்றவையாக இருந்தன. அவரது கடைசி பிறந்த நாளில் அவர் 61 வயதாகியிருந்தார். அவரது செயல்பாடுகள் மிக மிக அபூர்வமாகத்தான் தன்னெழுச்சியாக அமைந்தன; இரண்டு அறைகளையுமே மாசு, மறு காணப்படாத அளவுக்குத் தூய்மையாகப் பராமரித்தார். எப்போதாவது ஒரு சிகரெட் புகைத்தார். அவரது உணவை அவரே தயாரித்துக் கொண்டார்; மஞ்சள் வண்ணப் பாடும் பறவை (canary) ஒன்றும் வளர்த்தார்.
பின்னர், அவர் மிரியத்தைச் சந்தித்தார். அந்த இரவில் பனி பெய்துகொண்டிருந்தது. திருமதி. மில்லர் இரவு உணவுத்தட்டுகளை எல்லாம் கழுவி உலரச்செய்து முடித்துவிட்டு, மாலைச் செய்தித்தாள் ஒன்றைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, பக்கத்துத் திரையரங்கம் ஒன்றின் திரைப்பட விளம்பரத்தைப் பார்த்தார். படத்தின் பெயர் நன்றாக இருப்பதாகத் தோன்றவே முழுநீள பீவர் கோட்டுக்குள் தட்டுத் தடுமாறி நுழைந்து, பனிக்காலப் புதைமிதி அரணத்தின் இழைவார்களை இறுகக் கட்டி முடிச்சிட்டுப் பின்னறையில் மட்டும் ஒரு விளக்கை எரியவிட்டு, குடியிருப்பிலிருந்தும் கீழே இறங்கினார். இருளின் உணர்வைத் தவிர வேறு எதையும் அவர் உணரவில்லை.
பனி மிக அருமையானதாக, மெதுமெதுவாகப் பெய்துகொண்டிருந்தது. பனியின் தடங்கள் எதுவும் நடைமேடையில் அதுவரை படிந்திருக்கவில்லை. சாலையின் குறுக்குத் தெருக்களைக் கடக்கும்போது மட்டுமே ஆற்றிலிருந்து வீசும் காற்று எதிர்ப்பட்டது. குருட்டுப் பாதையில் எந்தக் கவலையுமின்றிக் குழிபறிக்கும் மூஞ்சூறு போலத் திருமதி. மில்லர் தலைகுனிந்தவாறு, அவசர அவசரமாக விரைந்தார். ஒரு மருந்துக் கடையில் நின்று புதினா மணக்கும் இனிப்பு வில்லைத் திரள் ஒன்று வாங்கிக்கொண்டார்.
நுழைவுச்சீட்டு வழங்கும் அறை முன்பாக நீண்ட வரிசை ஒன்று நின்றிருந்தது. அவர் கடைசியாகப் போய் நின்றுகொண்டார். எல்லா வகுப்புகளுக்குமே சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. களைத்துப்போன குரலொன்று முனகியது. நுழைவுச் சீட்டுக்குச்  சரியான சில்லறை கிடைக்கும் வரையில் அவரது தோல் கைப்பையைக் குடைந்துகொண்டிருந்தார். வரிசை, அதன் விருப்பம் போல் நெடுநேரத்துக்கொருமுறை மெல்லவே நகர்வதாகத் தோன்றியது.   சிந்தனை மாற்றாகக் கண்கள் சுற்றுமுற்றும் தாமாக நகர்ந்தபோது, அரங்கத்தின் முகப்பு நீட்சிக் கூரை விளிம்பின் கீழாக ஒரு சிறுமி நிற்பதைத் திடீரென உணர்ந்தார்.
அவளது கூந்தல், திருமதி மில்லர் இதுவரை பார்த்திருந்தவற்றிலேயே மிக நீளமானதாக, இயல்பு மீறியதாக, வெளிறிய வெள்ளை உயிரி போல் முழுக்க முழுக்கச் சொக்க வெள்ளியின் பளபளப்பில்  இருந்தது. அது இடுப்பு நீளத்திற்கு மென்மையான, தளர்ந்த படுகைக் கோடுகளாக வழிந்திறங்கியது. ஒடிந்து விழுந்துவிடுவது போன்று மெலிந்த உடற்கூட்டு;  வடிவாகத் தைக்கப்பட்டிருந்த செம்பழுப்புப் பிளம் நிற வெல்வெட் கோட்டின் பைகளுக்குள் பெருவிரல்களை நுழைத்து அவள் நின்ற அழகில் எளிமையான ஒரு மேன்மைத் தோற்றம் மிளிர்ந்தது.
திருமதி மில்லர் எப்போதுமில்லாத அகவெழுச்சி ஒன்றினை உணர்ந்தார். அந்தச் சிறுமி அவரை நோக்கிக் கண்களை விரித்த போது அவர் இன்முகம் காட்டிப் புன்னகைத்தார். அந்தச் சிறுமி அவரை நோக்கி நடந்து வந்து, ‘’ சிரமம் பார்க்காமல் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?’’ எனக் கேட்டாள்.
‘’என்னால் செய்யமுடிகிற ஒன்றென்றால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.’’ என்றார், திருமதி. மில்லர்.
‘’ஓ, அது மிக எளிது. எனக்கும் ஒரு டிக்கெட் வாங்கத்தான் கேட்டேன்; இல்லையென்றால் என்னை உள்ளே விட மாட்டார்கள். இதோ, என்னிடம் பணம் இருக்கிறது.’’ என்றவள் இரு நோட்டுகளையும் ஒரு நிக்கல் நாணயத்தையும் பண்புநயம் வெளிப்படும் பாங்கோடு திருமதி மில்லரிடம் கொடுத்தாள்.
இருவரும் ஒன்றாகவே சேர்ந்து திரையரங்கினுள் நுழைந்தனர். வழிகாட்டும் பணிப்பெண் ஒருவர் அவர்களைக் காத்திருப்பு அறைக்கு வழிநடத்தினார். ஓடிக்கொண்டிருக்கும் காட்சி இன்னும் இருபது நிமிடங்களில் முடிந்துவிடும்.
‘’நான் உண்மையில் ஒரு குற்றவாளி போலவே உணர்ந்தேன்.’’ என மகிழ்ச்சிக் குரலில் கூறிய திருமதி மில்லர் இருக்கையில் அமர்ந்ததும், ‘’இது மாதிரியான விஷயங்கள் சட்டத்துக்குப் புறம்பானவைதாம்,    அப்படித்தான், இல்லையா? இருந்தாலும் நான் எந்தவொரு தவறும் செய்துவிடவில்லையென்று நம்புகிறேன். நீ எங்கிருக்கிறாயென்று உன் அம்மாவுக்குத் தெரியுமில்லையா? அன்பே! அவருக்குத் தெரிந்திருக்குமென்றுதான் நான் சொல்ல வருகிறேன். அவருக்குத் தெரியுமில்லையா?’’ என்றார்.
அந்தச் சிறுமி எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவள் பொத்தான்களை அவிழ்த்து, கோட்டைக் கழற்றி மடித்து மடியில்  வைத்துக்கொண்டாள். அவளுடைய உடை முழுமையான அடர் நீலத்திலிருந்தது. தங்கச் சங்கிலியொன்று அவள் கழுத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்க, இசையறிந்த அவளது மென் விரல்கள் அதனைச் சீண்டி விளையாடிக் கொண்டிருந்தன. அவளை மீண்டும் மீண்டும் கூர்மையாக நோக்கிய  திருமதி. மில்லர் அவளுடைய தனித்துவம் அவளது தலைமுடியில் இல்லையென்றும் அவளது கண்களிலேயே உள்ளதென்றும், இறுதியான முடிவுக்கு வந்தார். அவற்றின் மங்கலான செம்மை கலந்த பழுப்பு நிறம், படபடப்பற்ற நிலைத்த சமநிலை, எந்தவகையான குழந்தைத் தன்மையும் இல்லாமை என்பதோடு பெரியனவாக அந்தச் சிறிய முகத்தை முழுவதுமாக அடைத்துக் கொண்டதான தோற்றம்.              
திருமதி. மில்லர் ஒரு புதினா மண இனிப்பு வில்லையினை நீட்டிக்கொண்டே, ‘’உன் பெயரென்ன, அன்பே?’’ என்றார்.
‘’மிரியம்.’’ என்றாள், அவள். இருந்தாலும் அது ஒரு வியப்பாக, அவருக்கு ஏற்கெனவே தெரிந்த ஒன்றாகத் தோன்றியது.
‘’இது வேடிக்கையாக இல்லையா? - என் பெயரும் மிரியம் தான். அது அப்படியொன்றும் பொதுவாக வழங்கும் பெயரும் இல்லை. அது சரி, இப்போது, உன்னுடைய கடைசிப் பெயரும் மில்லர் என்று சொல்லிவிடாதே!’’
‘’வெறும் மிரியம் மட்டும்தான்.’’
‘’ஆனாலும் இது வேடிக்கைதான், இல்லையா?’’
“மாடரேட்லி,” என்ற மிரியம் புதினா மண இனிப்பு வில்லை ஒன்றினை நாக்கால் உருட்டினாள்.
திருமதி. மில்லர் முகம் சிவந்து, ஏதோ அசௌகரியம் போல, நெளிந்து   நிலைமாற்றி அமர்ந்தார். ‘’இந்தச் சின்ன வயதில் இப்படியொரு  சொல்லாட்சியா! என்னவொரு சொல்வளம்! உன்னுடைய சொற்களஞ்சியம் மிகவும் பெரிதுதான்.’’
‘’என்னையா சொல்கிறீர்கள்?’’
‘’ஆமாம், உன்னைத்தான்,’’ என்ற மில்லர் அவசர அவசரமாகப் பேச்சை மாற்றினார்: ‘’உனக்கு திரைப்படங்கள் பிடிக்குமா?’’
‘’உண்மையிலேயே எனக்குத் தெரியாது. இதற்கு முன்னர் நான் திரைப்படத்துக்குப் போனதேயில்லை.’’
காத்திருப்பு அறைக்குள் பெண்கள் நிரம்பத் தொடங்கினர்; செய்திக் கதிர் வெடிக்கும் ஒலி தூரத்தில் கேட்டது. திருமதி. மில்லர் அவரது கைப்பையை அக்குளில் இடுக்கிக்கொண்டு, ‘’இடம் பிடிக்க வேண்டுமானால், இப்போதே ஓடுவதுதான் நல்லது. உன்னைச் சந்தித்தது இனிமையானது.’’ என்றார்.
எவ்வளவு மென்மையாக இயலுமோ, அவ்வளவுக்கு மிரியம் தலையசைத்தாள்.
வாரம் முழுவதும் பனி பெய்தது. வெளிறிப்போன, ஆனால்  பார்வைகள் துளைக்கமுடியாத திரைக்குப் பின்னால், இரகசியம் போலத் தொடரும் வாழ்க்கை அசைவுகளாகச் சக்கரங்கள் சப்தமின்றித் தெருவில் ஊர்ந்தன; காலடிகளும் மௌனமாக நகர்ந்தன. பருவகாலத்தின் அமைதியான  பனிப் பொழிவில் பூமியும் தெரியவில்லை;  வானமும் தெரியவில்லை; பனிக்காற்றில் வெண்துகள்கள் மேலெழுவதும் சாளரக் கண்ணாடிகள் உறைவதும், அறைகள் குளிர்வதும்  ‘’உஷ்’’ என அதட்டி நகரம் அடக்கப்படுவதும் தான் தெரிந்தது. பொழுதுக்கும் ஒரு விளக்கினை ஏற்றி வைத்திருக்கவேண்டியது அவசியமாயிற்று. திருமதி. மில்லருக்கு வாரநாட்களின் பெயர்த் தொடர்ச்சிகூட விட்டுப்போயிற்று. வெள்ளிக்கிழமை சனிக்கிழமையிலிருந்து வேறுபட்டதாகத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல; அவர் ஞாயிற்றுக்கிழமையன்று மளிகைக்கடைக்குச் சென்றார். அதுவோ மூடியிருந்தது.
அன்று இரவுக்கு அவர் முட்டைப் பொரியலும் ஒரு கிண்ணம் தக்காளி சூப்பும் தான் எனத் திட்டமிட்டிருந்தார். பின்னர், கம்பளி அங்கி ஒன்றைப் போர்த்துக்கொண்டு முகத்துக்கான குழைமம் தடவியபின், பாதங்களுக்கு அடியில் வெந்நீர்ப் புட்டியினை வைத்துப் படுக்கையில்  அமர்ந்தார். அழைப்பு மணி அடித்தபோது அவர் `டைம்ஸ்` வாசித்துக் கொண்டிருந்தார். யாராவது தவறாக அடித்திருப்பார்கள், அவர்களாகவே போய்விடுவார்களென்றுதான் முதலில் நினைத்தார். ஆனால், அது மீண்டும் மீண்டுமாக அடித்து, இடைவிடாமல் தொடர்ந்தது. அவர் கடிகாரத்தை உற்றுப் பார்த்தார்; பதினொன்றைச் சிறிது தாண்டியிருந்தது. ‘’அவ்வளவா ஆகிவிட்டது, வழக்கமாகப் பத்து மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேனே!’’ என முணுமுணுத்துக்கொண்டார்.
படுக்கையிலிருந்தும் இறங்கி, வசிப்பறையை வெறுங்கால்களாலேயே தாவுநடையாகக் கடந்தார். ‘’வருகிறேன். தயவுசெய்து பொறுமையாக இருங்கள்.’’ தாழ்ப்பாள் முனை தட்டுப்பட அதனை இப்படியும் அப்படியுமாக அசைத்துத் திருப்பினார். அழைப்பு மணி ஒரு நொடிகூட நிற்கவில்லை. ‘’நிறுத்து.’’ என அவர் கத்தினார். ஒருவழியாகத் தாழ்ப்பாள் விலகியதும் அவர் கதவை ஒரு அங்குலம் மட்டும் திறந்தார். ‘’என்ன வேண்டும்? வானமா இடிந்துவிட்டது?’’
‘’ஹலோ,’’ என்றாள், மிரியம்.
‘‘ஓஹ்…..எதற்காக……ஹலோ,’’ என்ற திருமதி. மில்லர் தயக்கத்தோடேயே அறைக்கூடத்தில் காலெடுத்துவைத்தவாறு, ‘’நீ, அன்றைக்கு, அந்தச் சின்னப் பெண் தானே.’’ என்றார்.
‘’நீங்கள் பதில் சப்தம் ஏதும் கொடுக்கவில்லையே என்று நினைத்தேன். அதனால், பொத்தான் மீது வைத்த கையை எடுக்கவில்லை; நீங்கள் வீட்டில்தான் இருக்கிறீர்களென்று எனக்குத் தெரியும். என்னைப் பார்த்ததில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே?’’
திருமதி. மில்லருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அன்று அணிந்திருந்த அதே பிளம் வெல்வெட் கோட்டினையே அவள் இப்போதும் அணிந்திருப்பதை அவர் கவனித்தார்; இப்போது அதற்குப் பொருத்தமாக ஒரு வட்ட வடிவ அழகுத் தொப்பியும் அணிந்திருந்தாள். அவளது வெள்ளைத் தலைமுடி பளபளக்கும் இரு சடைகளாகப் பகுத்துப் பின்னலின் நுனியில் பெரிதாக அகன்ற வெண்ணிறப் பட்டுத் துணிகளால் முடிச்சிடப்பட்டிருந்தன.
‘’எவ்வளவு நேரமாக நின்றுகொண்டிருக்கிறேன், குறைந்தபட்சம் உள்ளேயாவது கூப்பிடமாட்டீர்களா?’’ - அவள் கேட்டாள்.
‘’இப்போது இரவு, மிகவும் பிந்திய நேரம் ……..’’
மிரியம் அவரை ஏறிட்டுப் பார்த்தாள். ‘’இருக்கட்டுமே, அதனாலென்ன ஆகிவிடும்? என்னை உள்ளே விடுங்கள். வெளியே குளிர்கிறது. நான் அணிந்திருப்பது பட்டாடை.’’ பின்னர், மெலிதான ஒரு கையசைப்பில், திருமதி மில்லரை விலகுமாறு செய்து, வீட்டினுள் நுழைந்து விட்டாள்.
அவளது கோட்டினையும் வட்டத் தொப்பியினையும் அங்கிருந்த ஒரு நாற்காலி மீது வைத்தாள். அவள் உண்மையிலேயே பட்டாலான ஒரு ஆடையைத்தான் அணிந்திருந்தாள். வெள்ளைப் பட்டு, பெப்ருவரி குளிரில் வெண்பட்டு! அவளது பாவாடை அழகழகான மடிப்புகளுடன் நேர்த்தியானதாக இருந்தது.  சட்டையின் கைத் தொங்கல்கள் நீளமாக இருந்தன. அறைக்குள் அவள் நடக்கும்போது மயக்கும் சலசலப்பொலி எழுந்தது. ‘’உங்கள் வீடு எனக்குப் பிடித்திருக்கிறது.’’ என்றாள், அவள். ‘’இந்த விரிப்பும் எனக்குப் பிடித்திருக்கிறது, எனக்கு மிகவும் பிடித்த நீல நிறம்.’’ காப்பி மேசையின் மேலிருந்த பூக்கிண்ணத்திலிருந்த ஒரு காகித ரோஜாவைத் தடவிப்பார்த்துவிட்டு, ‘’ப்பூ! இமிட்டேஷன்!’’ என முகம் சுழித்தாள். ‘’எவ்வளவு துயரம், போலி என்றாலே சோகம் தான், இல்லையா?’’ பட்டுப் பாவாடை அப்படியொரு நேர்த்தியான அழகோடு விரியுமாறு அவளாகவே சாய்மெத்தையில் அமர்ந்தாள்.
‘’உனக்கு என்னதான் வேண்டும்?’’ திருமதி. மில்லர் வினவினார்.
‘’உட்காருங்கள். யாராவது நின்றுகொண்டிருந்தால், எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.’’ என்றாள், மிரியம்.
திருமதி. மில்லர் முழந்தாள்த் திண்டில் பட்டென்று அமர்ந்துவிட்டு, ‘’உனக்கு என்னதான் வேண்டும்?’’ என மீண்டும் வினவினார்.
‘’நான் வந்திருப்பதில் நீங்கள் மகிழ்வீர்கள் என்று நான் நினைக்கவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா?’’
ஒரு நிமிடம் திருமதி. மில்லர் திகைத்துப் போனார்; அவரிடம் பதில் எதுவுமில்லை; அவரது கைகள் வெறுமனே பிசைந்தன. மிரியம் ஒரு எள்ளல் சிரிப்போடு, எம்பிக் குதித்து, சாய்மெத்தையின் உயரமான தலையணைத் திண்டுகள் அமுங்க, அமர்ந்தாள். முன்னர் வெளுத்திருந்ததைப் போல் இப்போது அவள் வெளுப்பாக இல்லையென்பதைத் திருமதி மில்லர் ஞாபகத்துடன் கவனித்தார். அவரது கன்னங்கள் சிவந்தன.
‘’நான் இங்கே இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?’’
‘’அதெல்லாம் இப்போது கேள்வியே இல்லை,’’ என்ற மிரியம் பளிச்சென்று கேட்டாள், ‘’உங்கள் பெயர் என்ன? என் பெயர் என்ன?’’
‘’தொலைபேசித் தொகுப்பில் கூட என் பெயர் இல்லையே!’’ 
‘’ஓஹ், நாம் வேறு ஏதாவது பேசலாமே.’’
  ‘’இரவான இரவில், உன் அம்மா, இப்படி ஒரு குழந்தையை, அதுவும் இது போல ஒரு பித்துக்குளி உடையில் அலையவிட்டிருக்கிறாள் என்றால் அவள் பைத்தியமாகத்தான் இருக்கவேண்டும்.’’
மிரியம் எழுந்து, திரையிட்ட பறவைக்கூண்டு தொங்கிக் கொண்டிருந்த மூலை நோக்கி நகர்ந்தாள். திரையை விலக்கிப் பார்த்து, ‘’இது கேனரி - மஞ்சள் வண்ணப் பாடும் பறவை’’ என்றவள், தொடர்ந்து ‘’நான் அவனை எழுப்பினால், நீங்கள் கோபப்படுவீர்களா? அவன் பாடுவதைக் கேட்க எனக்குப் பிடிக்கும்.’’ என்றாள்.
‘’டாமியை நிம்மதியாகத் தூங்க விடு.’’ எனப் படபடத்த திருமதி.மில்லர் ‘’அவனை எழுப்பித் தொலைக்காதே!’’ என்று கடிந்தார்.
‘’செர்ட்டன்லி, நிச்சயமாக,’’ என்ற மிரியம், ‘’ஆனால், அவன் பாடுவதை நான் ஏன் கேட்கக்கூடாதென்பதுதான் எனக்குப் புரியவில்லை.’’ என்றவள், ‘’சாப்பிடுவதற்கு ஏதாவது வைத்திருக்கிறீர்களா? கொலைப் பட்டினி! பழக்கூழ் பொதிரொட்டியும் பாலுமென்றாலும் கூடப் போதும், அருமையாகவும் இருக்கும்.’’ என்றாள்.
‘’இங்கே பார்,’’ என்ற திருமதி.மில்லர் முழங்கால் திண்டிலிருந்து எழுந்துகொண்டே, ‘’கவனமாகக் கேட்டுக்கொள், நான் உனக்கு அருமையான பொதிரொட்டி செய்து தருகிறேன். ஆனால், அதைத் தின்றுவிட்டு, நல்லபிள்ளையாக வீட்டைப் பார்த்து ஓடிவிடவேண்டும். இப்போதே நடு ராத்திரி தாண்டிவிட்டது. எனக்கு நிச்சயமாகத் தெரியும்.’’
‘’பனி எப்படிப் பெய்துகொண்டிருக்கிறது, அதுவுமில்லாமல் பயங்கரக் குளிர், இருட்டு வேறு!’’ எனப் பழிப்புக் காட்டினாள், மிரியம்.
‘’சொல்லப் போனால், நீ இங்கு வந்திருக்கவே கூடாது,’’ என்ற திருமதி. மில்லர், குரலைச் சரிப்படுத்த முடியாமல் திக்கித் திணறி, ‘’குளிருக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. உனக்குத் தின்பதற்கு ஏதாவது வேண்டுமென்றால், இடத்தைவிட்டுப் போய்விடுவதாக வாக்குக்கொடு.’’ என்றார்.
மிரியம் ஒரு சடையை எடுத்து அதன் நுனியால் கன்னத்தில் தட்டிக்கொண்டாள். அவள் கண்கள், நிலைமையை எடை போடுவதான பாவனையில் சிந்தனை வயப்பட்டதாகத் தெரிந்தன. அவள் பறவைக் கூண்டினை நோக்கித் திரும்பி, நின்றுகொண்டு, ‘’ம், சரி, நான் வாக்களிக்கிறேன்.’’ என்றாள்.
என்ன வயதிருக்கும் அவளுக்கு? பத்தா? பதினொன்றா? சமையலறையில் ஸ்ட்ராபெர்ரி பழக்கூழ்ப் புட்டியினைத் திறந்த பின்னர், திருமதி. மில்லர் நான்கு ரொட்டித் துண்டுகளை வெட்டிவைத்தார். ஒரு தம்ளரில் பாலை ஊற்றிவிட்டு, சிகரெட் ஒன்றைப் பற்றவைப்பதற்காகச் சிறிது நின்றார். அவள் எதற்காக வந்திருக்கிறாள்? கவனம் சிதற,  எரியும் தீக்குச்சியைப் பிடித்திருந்த அவரது கை நடுங்கி, விரலும் சுட்டது. கேனரி பாடிக்கொண்டிருந்தது; காலையில் பாடியது போலவே. வேறு நேரங்களில் தான் அவன் பாடுவதில்லையே. ‘’மிரியம்’’ எனக் கடுகடுத்த  அவர், ‘’மிரியம், டாமியைத் தொந்தரவு செய்யாதே என்று சொல்லியிருந்தேனே.’’ என்றார். பதில் எதுவும் இல்லை. அவர் மீண்டும் அழைத்தார். பதிலாக அவருக்குக் கிடைத்ததெல்லாம் கேனரியின் பாடல் மட்டுமே. அவர் சிகரெட்டை உள்ளிழுத்த போதுதான் சிகரெட்டின் தக்கை-முனையைப் பற்றவைத்திருந்தது தெரியவந்தது – ஓ, உண்மையில், அவர்  இவ்வளவுக்கு நிதானமிழந்திருக்கக்கூடாது!
அவர் உணவுத் தட்டினை ஏந்திச் சென்று, காப்பி மேசை மீது  ஒழுங்குபடுத்தி வைத்தார். பறவைக்கூண்டின் திரை மூடியே இருந்ததைத் தான் அவர் முதலில் கவனித்தார். ஆனாலும் டாமி பாடிக்கொண்டிருந்தான். அது அவருக்கு ஒருவிதப் புதிர் உணர்வைத் தோற்றுவித்தது; அறை வேறு காலியாக இருந்தது. திருமதி. மில்லர் அவரது படுக்கையறைக்குச் செல்லும் இரண்டாம் கட்டு வழியாகச் சென்றார்; அறை வாயிலில்தான் அவருக்கு மூச்சு திரும்பியது. 
‘’இங்கே என்ன செய்கிறாய்?’’ அவர் கேட்டார்.
மிரியம் தலையை உயர்த்திப் பார்த்தாள்; அவள் கண்களில் தெரிந்த பார்வை சாதாரணமானதாக இல்லை. அவள் நிலையடுக்கின் அருகாக நின்றுகொண்டிருந்தாள்; நகைப்பெட்டி ஒன்று திறந்து கிடந்தது. ஒரு கணம் திருமதி மில்லரை ஓரக்கண்ணால் எடையிட்டுப் பார்த்தபின்,  அவள் கண்களை நேருக்கு நேராகக் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் புன்னகைத்தாள். ‘’இங்கே, எதுவுமே நல்லதாக இல்லை. இருந்தாலும் இது எனக்குப் பிடிக்கிறது.’’ என்றவள் பன்னிறச் செதுக்கு மணிப்பதக்கம் ஒன்றை எடுத்துக் காட்டி, ‘’இதுதான் கண்ணைப் பறிக்கிறத!’’ என்றாள்.
‘’வேண்டாம் – அதை உள்ளே வைத்துவிடு. அதுதான் உனக்கு நல்லது, சொல்லிவிட்டேன்,’’ என்ற திருமதி. மில்லர், எதன் மீதாவது சாய்ந்துகொள்ள வேண்டும் போலத் திடீரென உணர்ந்தார். அவர் கதவு நிலையின் மீது சாய்ந்துகொண்டார்; அவரது தலை தாங்கமுடியாதபடி பயங்கரமாகக் கனத்தது; அவரது நெஞ்சுக்குள், ஏதோ ஒன்று அடைத்து,  இதயத் துடிப்பின் சீரொழுங்கினைக் குலைத்தது. அவரது கண்களுக்கு வெளிச்சம்  நடுங்கிப் படபடப்பதாகத் தோன்றியது. ‘’குழந்தை! தயவுசெய்து, ….அது என் கணவர் தந்த பரிசு.’’
‘’அது சரி, ஆனால், அது அழகாக இருக்கிறதே! அது எனக்கு வேண்டுமே!.’’ என்ற மிரியம், ‘’அதை எனக்குக் கொடுத்துவிடுங்கள்.’’ என்றாள். 
அந்தப் பதக்கத்தை மீட்கக்கூடிய ஒரு சொல்லைத் தேடித் திணறிக்கொண்டிருந்தபோதுதான், சமயத்துக்கு உதவ, ஒரு சப்தம் கொடுப்பதற்குக் கூடத்  தனக்கென்று யாருமே இல்லை என்பது அவருக்குத் தெரிந்தது; அவர் தனிமரம்; அது நீண்ட காலமாக அவரது சிந்தனைக்குத் தட்டுப்படாத ஒரு உண்மையுங்கூட. அதன் முற்று முழுதான முக்கியத்துவம் உறைத்தபோது, அதிர்ச்சி தருவதாயிருந்தது. ஆனால், அந்த அதட்டி அடக்கப்பட்ட காட்சி நகரத்தில், அவரது சொந்த அறையிலேயே, அந்த உண்மையைப் புறந்தள்ள முடியாத அளவுக்கு, அல்லது தெள்ளத் தெளிவாக அவருக்குத் தெரிந்தும், அதனைத் தடுக்கமுடியாத சான்றுகள் இருந்தன.
மிரியம் உணவினை வேகவேகமாக விழுங்கினாள்; பொதிரொட்டியும் பாலும் காலியானதும், அவளது விரல்கள் உணவுத்தட்டில் மிச்சம் மீதிகளைத் தேடிப் பல்வேறு கோலங்களை வரைந்துகொண்டிருந்தன. அவளது ரவிக்கையில் மினுங்கிய பதக்கத்தின் புடைப்பு மணிகள்  ஒளிவட்டம் போன்ற ஒரு பொன்னிறத்தைத் தோற்றுவித்தன. ‘’நிரம்பவும் அருமையாக இருந்தது,’’ எனப் பெருமூச்சிட்ட அவள், ‘’இருந்தாலும் இப்போதைக்கு ஒரு வாதுமை கேக் அல்லது செர்ரி இன்னும் மேலாக இருந்திருக்கும். இனிப்புகள்தாம் எப்போதும் அருமை என உங்களுக்குத் தோன்றுவதில்லையா?’’   
திருமதி. மில்லர், சிகரெட் ஒன்றினைப் புகைத்தவாறே முழங்கால்த் திண்டு விளிம்பில் தொற்றினாற்போல் தன்னினைவின்றி அமர்ந்திருந்தார். அவரது கூந்தல் வலை ஒருபக்கமாகச் சாய்ந்திருக்க, விடுபட்ட  கற்றைகளில் ஒன்றிரண்டு நெற்றியில் கவிழ்ந்து அவர் முகத்தின் மீது அசைந்தன. அவரது கண்கள் முட்டாள்தனமாக,  வெட்டவெளியில் நிலைத்திருந்தன. பலத்த அடியொன்றினால் கன்றிப் பதிந்த தடங்கள் கறுத்து விட்டதுபோல், சிவப்பு மச்சங்கள் அவரது கன்னம் முழுவதும் திட்டுத்திட்டாகப் பரவிக் கிடந்தன.    
‘’மிட்டாய் அல்லது கேக் கிடைக்குமா?’’
திருமதி மில்லர், சிகரெட்டைத் தட்டினார். அதன் சாம்பல் விரிப்பின் மீதே விழுந்தது. பார்வையை அவளை நோக்கிச் செலுத்த அவர் முயற்சித்தபோது, அவரது தலை சிறிது திரும்பியது. நான் பொதிரொட்டி கொடுத்ததும், நீ போய்விடுவதாகத் தானே வாக்குத் தந்தாய்?’’ என்றார், அவர்.
‘’என்னையா சொல்கிறீர்கள் அன்பே, நானா சொன்னேன்?’’
‘’அது, நிச்சயமாக ஒரு உறுதிமொழி தான். எனக்குக் களைப்பாக இருக்கிறது. இதெல்லாம் நல்லதற்கில்லையென்றுதான் சொல்வேன்.’’
‘’எரிச்சல் படாதீர்கள்,’’ என்ற மிரியம், ‘’சும்மா, வேடிக்கை, விளையாட்டாகச் சொன்னேன்.’’ என்றாள்.
மிரியம், கோட்டினை எடுத்து முழங்கையில் தொங்கவிட்டு,  கண்ணாடியின் முன்நின்று வட்டத்தொப்பியைச் சரிப்படுத்திக் கொண்டாள்; பின்னர், திருமதி. மில்லரின் மிக அருகாகக் குனிந்து, பணிவாகக் கன்னத்தைக் காட்டி, ‘’நல்லிரவு முத்தமிடுங்கள்’’ என்றாள்.
‘’தயவுசெய்து போய்த்தொலை – என்னால் ஒருபோதும் முடியாது.’’ என்றார், திருமதி. மில்லர்.
மிரியம் ஒரு தோளை மட்டும் உயர்த்தி, ஒற்றைப் புருவத்தைச் சுளித்தாள். ‘’உங்கள் விருப்பம்,’’ என்றவள் நேராகக் காப்பி மேசைக்குச்  சென்றாள்; காகித ரோஜாக்கள் இருந்த பூச்சாடியை எடுத்து, விரிப்பில்லாத தரைக்குக் கொண்டுவந்து, ஓங்கிக் கீழே எறிந்தாள். கண்ணாடிச் சில்லுகள் நாலாதிசையிலும் பரந்தன. காகிதப் பூங்கொத்தினைக் காலால் மிதித்து நசுக்கினாள்.
பின்னர், மெதுவாகக் கதவை நோக்கிச் சென்றாள்; ஆனால், கதவை மூடும் முன்பு திருமதி. மில்லரைத் திரும்பிப் பார்த்து, எதுவுமே தெரியாதது போல முகத்தைக் காட்டும் குறும்புப் பார்வை ஒன்றினை வீசிவிட்டுத்தான் சென்றாள்.
அடுத்த நாள் முழுவதும் திருமதி. மில்லர் படுக்கையிலேயே படுத்திருந்தார்; ஒரே ஒருமுறை மட்டும் ஒரு தம்ளர் தேநீருக்காகவும் கேனரிக்கு உணவிடவுமாகவும் எழுந்தார்; உடல் வெப்பத்தை அளந்து பார்த்தார்; காய்ச்சல் ஏதுமில்லை; ஆனாலும் அவரது கனவுகள் கொதித்தன; அவர் விரிந்த கண்களோடு கூரையை வெறித்துக் கொண்டிருந்த போதுங்கூட கனவுகள் ஏற்படுத்திய பதற்ற நிலை அவரைவிட்டுப் போய்விடவில்லை. கனவுகள் ஒன்றுக்குள் ஒன்று இழையோடிப் புகுந்து, சிக்கலான சேர்ந்திசை ஒன்றின் கண்டுபிடிக்க இயலாத புதிர்க் கருத்து போலத் தோன்றின. அவை தோற்றுவித்த காட்சிகளோ, திறமை கைவரப்பெற்ற ஒரு கரத்தால் தீட்டப்பட்டது போல் மிகத் துல்லியமாகக் கட்டமிடப்பட்டிருந்தன: திருமண ஆடை அணிந்து மலர் வளையம் ஒன்றினைச் சுமந்த சிறிய பெண் ஒருவள் மலைப்பாதையிலிருந்து கீழிறங்கும் மரண ஊர்வலம் ஒன்றினை வழிநடத்திக்கொண்டிருந்தாள்; ஊர்வலத்தின் பின்னாலிருந்த பெண் ஒருத்தி, ‘’நம்மை அவள் எங்கே அழைத்துச் செல்கிறாள்?’’ எனக் கேட்கும் வரையில் அந்த ஊர்வலத்தில் அசாதாரணமான ஒரு மவுனம்  மரணமென உறைந்து கிடந்தது; முதலாவதாகச் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர், ‘’யாருக்கும் தெரியாது.’’ என்றார். ‘’ ஆனால், அவள் அழகாயிருக்கிறாள், இல்லையா?’’ என மூன்றாவதாக ஒரு குரல் உதவிக்கு வந்தது. ‘’அவள் ஒரு உறைந்த பனிமலர் போல….. அவ்வளவு வெண்மையாகப் பளீரென இருக்கிறாள், இல்லையா?’’
செவ்வாய்க்கிழமை காலையில் சிறிது பரவாயில்லை போல் உணர்ந்த அவர் எழுந்தார். வெனிஷியன் பலகணிக் கதவின் சாய்வான இடைவெளிகள் வழியே சினம் மிக்க சூரிய ஒளிப்பாளங்கள் நுழைந்து, அவரது தேவையற்ற கற்பனைத் தோற்றங்களை அழிக்கின்ற வெளிச்சத்தைப் பாய்ச்சின. பனி உருகுவதை, இளவேனில் போன்ற மெல்லிய வெதுவெதுப்பினைக் காணவே, அவர் சாளரத்தை முழுவதுமாகத் திறந்தார். பருவகால வானத்தின் நீலமெங்கும் புத்தம் புதிய தூய வெள்ளை மேகங்கள் குவியல் குவியல்களாகப் பரந்து விரிந்து கிடந்தன. தாழ்ந்த கூரைகளின் ஊடாக அவரால் ஆற்றையும் இழுவைப்படகுகளின் புகைபோக்கிகளிலிருந்து வெதுவெதுப்பான காற்றில்  சுழன்று எழும் புகைச் சுருள்களையும் பார்க்க முடிந்தது. வெள்ளி நிறத்தில் மாபெரும் டிரக் ஒன்று இருபுறமும் பனிமலைகள் குவிந்த சாலையை உழுது சென்றது. அதன் எந்திரம் எழுப்பிய சப்தம் காற்றில் சீரான முரலொலியாக மிதந்தது.
குடியிருப்பிலிருந்து, நேராகக் கீழிறங்கி, காசோலை ஒன்றைக் காசாக்கிய அவர், மளிகைக் கடைக்குச் சென்ற பின்,  ச்ராஃப்ட் உணவகத்துக்குச் சென்றார்; அங்கேதான் பரிமாறும் பணிப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் காலை உணவினை முடித்துக்கொண்டார். ஓ, அது ஒரு விடுமுறை நாளுக்கும் மேலான அற்புதமான நாள் – இப்படியொரு நாளில் வீட்டில் அடைபட்டுக்கிடப்பது முட்டாள்தனம்.
லெக்சிங்டன் நிழற்சாலைப் பேருந்து ஒன்றில் ஏறி, எண்பத்தாறாவது தெரு வந்ததும் எழுந்தார். இங்கேதான் கடைவீதியில் கொஞ்சம்  பொருட்களை வாங்கலாமென, அவர், கருதியிருந்தார்.
அவருக்கு என்ன வேண்டுமென்றோ, அல்லது என்ன தேவையென்றோ    எதுவும் நினைவில் இல்லை. ஏதோ தலை போகிற வேலைபோல, வேகவேகமாகச் செல்வதோடு  அவரைத் தனியொரு ஆளாக்கித்  தொல்லைப்படுத்துகின்ற உணர்வினை வீசிச்செல்லும் மனிதர்களைச் சும்மா வேடிக்கை பார்ப்பதொன்றே அவரது எண்ணம்.
மூன்றாவது நிழற்சாலையின் மூலையில் நின்றிருந்தபோதுதான் அவர் அந்த மனிதனைக் கண்டார்; வில் போல வளைந்த கால்கள்; பிதுங்கும் மூட்டை முடிச்சுகளைத் தூக்கமுடியாமல் தூக்கி இளைத்து நிற்கும் வயதான மனிதன்; பழுப்புநிறத்தில் கந்தலான ஒரு கோட்டும் கட்டங்களிட்ட தொப்பியும் அணிந்திருந்தான். அவர்கள் இருவரும்  ஒருவருக்கொருவர் புன்னகை பரிமாறிக்கொண்டதாகத் திடீரென அவர் நினைத்தார். அந்தப் புன்னகையில் நட்பாக எதுவும் இல்லை; அணைகின்ற இரு சுடர்கள் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்வது போன்றதுதான். ஆனால், ஒன்று மட்டும் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது; அவனை அவர் இதற்குமுன் கண்டதேயில்லை, என்பதுதான், அது.
அவன் ஒரு மின்கம்பத்தினை ஒட்டி நின்றுகொண்டிருந்தான்; அவர் தெருவைக் குறுக்காகக் கடந்தபோது, அவனும் திரும்பி, அவரைப் பின்தொடர்ந்தான். அவன் அவருக்கு மிக அருகாகவே நடந்தான்; அவனது நிழலுருவம் கடைகளின் சாளரக் கண்ணாடிகளில் பிரதிபலித்து அசைந்ததை அவர் ஓரக்கண்ணால் கண்டார்.
தெருவின் நடுப்பகுதியில் நின்று, அவனைத் திரும்பிப்பார்த்தார். அவனும் நின்று, ஒரு சேவற்கோழியைப்போலத் தலையை நீட்டிக் கடுகடுத்துப் பல்லைக் கடித்தான். ஆனால், அவர் என்ன சொல்ல முடியும்? அல்லது என்னதான் செய்ய முடியும்? அதுவும் இந்தப் பட்டப்பகலில், எண்பத்தாறாவது தெருவில்? ஒன்றும் செய்யமுடியாது, ஒரு பயனும் இல்லை;. அவரது இயலாமையை நினைத்து மறுகி, முனகிக்கொண்டே, கால்களை  எட்டிப் போட்டு விரைந்தார்.
இரண்டாவது நிழற்சாலை இப்போது இருள் படர்ந்து ஓட்டை உடைசல், குப்பை, கூளங்களாலான ஒரு தெருவாக  இருக்கிறது; பகுதிப் பாவு கற்களும், ஒரு பகுதி தார்ச் சாலையும் மீதி காங்கிரீட் தெருவுமாக இருந்தாலும் அதன் ஆளரவமற்ற தோற்றம் நிரந்தரமாகிவிட்டது. திருமதி. மில்லர் ஐந்து கட்டிடங்கள் தாண்டும்வரையில் யாருமே கண்ணில்படவில்லையென்றாலும், அந்த மனிதனின் காலடிகளில் பனிக்கட்டிகள் நொறுங்கும் சப்தம் தொடர்ந்து அவரது காதுகளில் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. ஒரு பூக்கடை வாசலுக்கு அவர் வந்தபோதும் அந்த சப்தம் கேட்கத் தான் செய்தது. அவர் விரைந்து உள்ளே நுழைந்தபோது, அந்த வயதானவன் பாதையைக் கடந்து சென்றதை, கடையின் கண்ணாடிக் கதவில் கவனித்தார்; அவன் கண்கள் என்னவோ, பாதையைத்தான் நேராகப் பார்த்திருந்தன; அவன் நடையைத் தளர்த்தவில்லையென்றாலும், செய்தி உணர்த்தும் காரியம் ஒன்றினை விசித்திரமாகச் செய்தான்: தொப்பியை உயர்த்தி, இலேசாகச் சாய்த்துக் காட்டினான்.
‘’ஆறு வெள்ளைப் பூக்கள், அப்படித்தானே நீங்கள் சொன்னீர்கள்?’’ எனக்கேட்டார், பூக்கடைக்காரர். ‘’ஆமாம்’’ என்ற அவர், ‘’வெள்ளை ரோஜாக்கள்’’ என மீண்டும் சொன்னார். அங்கிருந்து அவர் கண்ணாடிப்பொருட்கள் கடை ஒன்றுக்குச் சென்று, பூச்சாடி ஒன்றினைத் தேர்ந்து கையிலெடுத்தார்; விலை நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு அதிகமாயிருக்கிறதே என்று நினைத்த அவர், அந்தப் பூச்சாடியேகூட ஏதோ ஒரு அம்சக் குறை போல முரண்கலவையாகக் களையின்றித் தெரிவதாக நினைத்தார். என்றாலும்  மிரியம் உடைத்து விட்டதற்கு மாற்று ஒன்று வேண்டுமேயென்பதற்காகத்தான் அதை வாங்க நினைத்திருக்க வேண்டும். ஆனாலும் முன்னேற்பாடு எதுவுமில்லாமலே, வாங்கவேண்டுமென்று எந்தச் சிறு நினைவோ அல்லது முன்திட்டமோ எதுவுமின்றி ஒன்றை அடுத்து இன்னொன்று, பின்னும் இன்னொன்று என நிறையத்தான் வாங்கத் தொடங்கிவிட்டார்.
அவர் பதப்படுத்தப்பட்ட பளபளப்புச் செர்ரி ஒரு பை வாங்கியதோடு, நிக்கர்பாக்கர் என அழைக்கப்படும் அடுமனையில் நாற்பது சென்ட்டுக்கு ஆறு வாதுமை கேக்குகள் வாங்கினார். 
கடைசி ஒருமணிநேரத்தில் வானிலை மாறி மீண்டும் குளிராகிவிட்டது; குளிர்கால மேகங்கள் மங்கலான கண்ணாடிகளாகிக் கதிரவன் மேலொரு நிழற்பிம்பத்தை உருவாக்க, முதற்கால் அந்தியின் நுழைவுச் சட்டகம், வானத்தின் மீது நிறங்களை வாரியிறைத்தது; காற்றில் கலந்த ஈர மூடுபனி தனிமைத் துயரோடும் வடிகால் பனிமலைகளின் உச்சியில் எற்றி விளையாடும் குழந்தைகளின் குரல்  மகிழ்ச்சியற்றதாகவும் தோன்றியது. விரைவிலேயே முதல் துகள்ச் சிதறல் தொடங்கியது. திருமதி. மில்லர் பழுப்புநிறக்கல் வீட்டைச் சென்றுசேரும் முன்பாகவே பனி ஒரு நகரும் திரையாக மறைக்கத் தொடங்கியது. காலடித் தடங்களோ, பதிந்த உடனேயே காணாமற்போய்விட்டன.
பூச்சாடியில் வெள்ளை ரோஜாக்கள் அழகாக வீற்றிருந்தன. பீங்கான் தட்டில், பளபளப்புச் செர்ரிகள் ஒரு குவியலாக ஒளிவீசின. சர்க்கரை தூவிய வாதுமைக் கேக்குகள் பரபரத்துப் பாய்ந்து எடுக்கும் கையொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தன. மஞ்சள் வண்ணப் பாடும் பறவை அதன் ஊஞ்சலில் சிறகசைத்து, மணிக்கதிர் ஒன்றினைக் கவ்வி நின்றது.
மிகச்சரியாக ஐந்து மணிக்கு அழைப்புமணி அடித்தது. அது யாரென்று திருமதி. மில்லருக்குத் தெரியாதா என்ன? அவர் அறையைக் கடந்தபோது அவரது வீட்டிலணியும் கோட்டின் விளிம்பு தரையில் இழுத்துக்கொண்டு வந்தது. ‘’நீ தானே?’’ என்றார், அவர்.
‘’நேச்சுரலி’’ என்ற மிரியத்தின் `கிறீச்` குரல் அறை முழுதும் எதிரொலித்தது. ‘’கதவைத் திறங்கள்’’ என்றாள்.
‘’போய்விடு,’’ என்றார், திருமதி. மில்லர்.
‘’தயவு செய்து சீக்கிரமாகத் திறங்கள், நான் தலையில் கனமான சுமையோடு நிற்கிறேன்.’’
‘’போய்விடு,’’ என்றார், திருமதி. மில்லர். அவர் வசிப்பறைக்குத் திரும்பி, ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தார்; அமைதியாக உட்கார்ந்து அழைப்பு மணியின் ஒலியைக் கேட்டார்; கேட்டார், கேட்டுக்கொண்டேயிருந்தார்.
‘’நீ போய்விடுவது தான் நல்லது. நான் உன்னை உள்ளேவிடுவதாக இல்லை. அந்த எண்ணம் மட்டும் கிடையவே கிடையாது.’’
சிறிது நேரத்தில் மணி நின்றது. அநேகமாக ஒரு பத்து நிமிடங்கள் இருக்கலாம், திருமதி. மில்லர் இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. சப்தம் எதுவும் கேட்காமலிருக்கவே, அவள் போயிருப்பாளென அவர் நினைத்துக்கொண்டார்; கால்விரல்களை மட்டும் ஊன்றி நடந்து கதவினை அடைந்தார்; பார்வைத் திறப்பினை மட்டும் திறந்தார். மிரியம், தலைமீது ஒரு அட்டைப் பெட்டியைச் சுமந்துகொண்டு, கையில் அழகான ஒரு பிரெஞ்சு பொம்மையை அணைத்தவாறு கதவில் சாய்ந்தும் சாயாமலுமாக நின்றாள்.
“ நீங்கள் வரவேமாட்டீர்களென்று தான் நான் உண்மையிலேயே நினைத்தேன்.’’ என நயந்த குரலில் குறையிரந்தாள். ‘’பாருங்கள், இது அநியாயத்திற்கு ரொம்பவும் கனம்; தலையே போய்விடும் போலிருக்கிறது, உள்ளே வைக்க உதவுங்கள்.’’
திருமதி. மில்லர் உணர்ந்தது, வார்த்தைகளாலான கட்டாயத்தை அல்ல,   ஆனால், ஒரு உள்ளார்ந்த ஆர்வத்தோடு கீழ்ப்படியும் மனநிலை; அவர் பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றார். மிரியம் பொம்மையுடன் உள்ளே நுழைந்தாள். அழகுத்தொப்பி மற்றும் கோட்டினைக் கழற்றுவதைப்பற்றிக்கூடக் கவலைப்படாமல்  சாய்மெத்தையின் மீது ஏறிச் சுருண்டுகொண்ட மிரியம், பெட்டியை இறக்கிவைத்துவிட்டு, நடுக்கத்துடன்  மூச்சுவிட முயற்சித்த திருமதி. மில்லரை ஆர்வம் ஏதுமின்றிக் கவனித்துக்கொண்டிருந்தாள்.
‘’நன்றி, உங்களுக்கு’’ என்றாள், அவள். வெயிலில் அவள் களைத்துச் சோர்வாகத் தோன்றினாள்; அவளது தலைமுடியும் அவ்வளவு பளபளப்பாக இல்லை. அவள் கொஞ்சிக்கொண்டிருந்த பிரெஞ்சுப் பொம்மை அப்படியொரு அழகும் நுணுக்கமுமான செயற்கைத் தலைமுடியைக் கொண்டிருந்தது; அதன் முட்டாள் தனம் பொருந்திய கண்ணாடிக் கண்கள் மிரியத்தின் கண்களில் அன்பினையும் ஆறுதலையும் கேட்டுக் கெஞ்சிக்கொண்டிருந்தன. ‘’என்னிடம் ஆச்சரியமான ஒரு விஷயம் இருக்கிறது,’’ என்று புதிர்போட்ட அவள் ‘’என் பெட்டிக்குள் பாருங்களேன்!’’ என்றாள்.
திருமதி. மில்லர் கால் மூட்டுக்களை மடக்கி நின்று, பெட்டியின் மேல்மூடிகளைப் பிரித்தார்; உள்ளிருந்து இன்னொரு பொம்மையை எடுத்தார்; பின்னர் ஒரு நீல ஆடை; முதன்முதலாகத் திரையரங்கில் பார்த்த இரவில் அவள் அணிந்திருந்த ஆடையாயிற்றே என அவருக்கு நினைவு வந்தது. மீதியையெல்லாம் பார்த்துவிட்டு, ‘’எல்லாமே துணிகள் தான், அதிலென்ன, இப்போது?’’ என்றார்.
‘’என்ன என்றால், நான் உங்களோடு இருக்க வந்திருக்கிறேன்.’’ எனச் செர்ரி ஒன்றினைத் திருகிப் பிட்டுக்கொண்டே சொன்ன  மிரியம், ‘’ எனக்காகச் செர்ரி வாங்கிவைத்திருக்கும் நீங்கள் அருமையானவர் இல்லையா?........’’ என்றாள்.
‘’ஆனால், அது நடக்காது, உன்னை விடமாட்டேன்! கடவுள் நன்றாக இருப்பார், தயவுசெய்து போய்விடு – என்னைத் தனிமையில் விட்டுப் போய்த்தொலை!’’
‘’…………அதுமட்டுமா? இந்த ரோஜாக்கள், வாதுமை கேக்! உண்மையிலேயே என்னவொரு தாராளம், பெருந்தன்மை! உங்களுக்குத் தெரியாதில்லையா, இந்தச் செர்ரிப் பழங்கள் அருமையாக இருக்கின்றன. இதற்கு முன்னர் கடைசியாக நான் ஒரு வயதான மனிதனுடன் வசித்து வந்தேன்; அவன் மிகவும் பயங்கரமான ஒரு ஏழை; நாங்கள் உண்பதற்கு நல்லதாக எதுவும் கிடைத்ததேயில்லை. ஆனால், இங்கே மகிழ்ச்சியாக இருக்கலாமென நினைக்கிறேன்.’’ அப்படித்தானே, என் செல்லம் எனப் பொம்மையை அணைத்துக்கொள்வதற்காக ஒரு கணம் நிறுத்திய அவள், ‘’இப்போதைக்கு என் பொருட்களையெல்லாம் எங்கே வைக்கட்டுமென மட்டும் காட்டுங்கள், போதும்…..’’ என்றாள். 
திருமதி. மில்லரின் முகம் அருவருப்பான சிவப்புக் கோடுகளாலான முகமூடியணிந்ததாக  மாறிப்போயிற்று; அவர் அழுவதற்கு முயற்சித்தார்; ஆனால், அது இயற்கைக்கு மாறான ஒரு கண்ணீரற்ற  அழுகையாக இருந்தாலும், அது நெடுநேரம் நீடிக்காமலிருந்தது எப்படியென்று அவருக்கு மறந்துபோனது. மிகக் கவனமாகப் பின்னோக்கி நகரத்தொடங்கிய அவர் கதவைத் தொட்டதும் ஒரு கணம் நின்றார்.
அவர் அறைவழியினைத் தாவிப் படிகளில் இறங்கினார்; எதிரில் தெரிந்த முதல் குடியிருப்பின் வாசலில் பொட்டென்று குதித்தார்; அங்கே நின்று பதில் சொன்ன சிவப்புத் தலைக் குள்ள மனிதரை வேகமாகத் தள்ளிவிட்டு உள்நுழைந்தார். ‘’சொல்லுங்கள், என்ன இழவுக்கு இப்படி?’’ என்றார், அந்த மனிதர். ‘’ஏதாவது சிக்கலா, அன்பே?’’ எனக் கேட்ட  இளம்பெண் ஒருவள் சமையலறையிலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்தாள். அவளை நோக்கித்தான் திருமதி. மில்லர் திரும்பினார்.
‘’கேளுங்கள்,’’ எனக் கத்திய அவர், நிதானமாகிப் பின்னர், ‘’இப்படி நடந்துகொள்வதற்கு எனக்கு அவமானமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பாருங்கள் – நான் திருமதி. மில்லர். மேல்மாடியில்தான் வசிக்கிறேன். அப்புறம் வந்து……’’ எனச் சொல்லி முகத்தைத் தன் கைகளால் அழுந்தத் துடைத்துக்கொண்டார். ‘’இது சுத்த அபத்தமாகத்தான் தோன்றும்….’’ என்றார்.
அந்தப்பெண் அவரை ஒரு நாற்காலிக்கு அழைத்துச் சென்றபோது, அந்தமனிதர் சட்டைப்பைக்குள் கிடந்த சில்லறைகளைக் கிளறிக்கொண்டே ‘’யேஹ்?’’ என்றார்.
‘’நான் மேல்மாடியில் வசிக்கிறேன். என்னைப் பார்க்கச் சிறிய பெண் ஒருத்தி வருகிறாள்; எனக்கு அவளைப் பார்க்கப் பயமாக இருக்கிறது. அவள் போகவும் மாட்டேனென்கிறாள். என்னால் அவளைப் போகவைக்கவும் முடியவில்லை – அவளால் எனக்கு ஏதோ ஒன்று பயங்கரமாக நிகழப் போகிறது. அவள் ஏற்கெனவே என்னுடைய பதக்கத்தைத் திருடிக்கொண்டாள்; அவள் எனக்கு இன்னும் மோசமான ஒன்றை – இன்னும் பயங்கரமான ஒன்றைச் செய்யத்தான் போகிறாள்.’’
அந்த மனிதர் கேட்டார், ‘’அவள் என்ன, உங்களுக்கு உறவா, ஹ்ஹு?’’
திருமதி. மில்லர் தலையை அசைத்து மறுத்தார். ‘’அவள் யாரென்றே எனக்குத் தெரியாது. அவள் பெயர் மிரியம், ஆனால், நிச்சயமாக அவள் யாரென்று எனக்குத் தெரியாது.’’
‘’நீங்கள் அமைதியாக இருங்கள், தேனே,’’ என்ற அந்தப் பெண் திருமதி. மில்லரின் முழங்கையில் மெல்லத் தடவிக்கொடுத்தாள். ‘’ஹேர்ரி அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்வார். போய்ப்பாருங்கள், அன்பே.’’ எனவும் திருமதி மில்லர், ‘’கதவு திறந்துதான் இருக்கிறது – 5ஏ’’ என்று கூறினார்.
அந்த மனிதர் கிளம்பிச் சென்றதும், அந்தப்பெண் ஒரு துவாலையைக் கொணர்ந்து திருமதி. மில்லரின் முகத்தைக் கழுவி, அழுந்தத் துடைத்தார். ‘’நீங்கள் மிகவும் அன்பானவர்,’’ என்றார், திருமதி. மில்லர். ‘’இப்படி முட்டாள் தனமாக நடந்துகொள்வதற்காக வருந்துகிறேன், அதுவும் இந்தக் கொடிய குழந்தையால்தான்.’’ என்றார்.
‘’அப்படித்தான், தேனே,’’ என ஆறுதல் சொன்ன அப்பெண், ‘’இப்போது நீங்கள் அதைக் கொஞ்சம் இலேசானதாக எடுத்துக்கொண்டால் நல்லது.’’ என்றாள்.
திருமதி. மில்லர், அவரது தலையை அந்தப் பெண்ணின் முழங்கை மடிப்பில் சாய்த்துக்கொண்டார்; தூக்கத்தை உணருமளவுக்கு அமைதியாகிவிட்டார். அந்தப் பெண் வானொலியைத் திருகினார்; பியானோவின் இசையும் ஒடுங்கிய குரலொன்றும் அமைதிக்குள் புகுந்து நிறைந்தது. அந்தப்பெண், இசைக்கேற்பக் கால்களால் தட்டித் தாளமிட்டு அந்த நேரத்தை அதியற்புதமானதாக்கினாள். ‘’நாமும் மேலே போயிருக்கலாமோ,’’ என்றாள், அவள்.
‘’இல்லை. நான், அவளை மீண்டும் பார்க்க விரும்பவில்லை. அவள் இருக்கும் இடத்தின் பக்கத்தில் கூட போகமாட்டேன்.’’
‘’அய்யோ, அது சரி, ஆனால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டுமென்றால், ஒரு காவலரைக் கூப்பிட்டிருக்கவேண்டும்.’’
அப்போது அந்த மனிதர் படிக்கட்டில் இறங்கும் சப்தத்தை இருவரும் கேட்டனர். கடுகடுத்த முகத்துடன் வேகமாக உள்ளே வந்த அவர் கழுத்தின் பின்பக்கம் சொரிந்துகொண்டே, ’’அங்கு யாருமேயில்லை,’’ என   உண்மையாகவே சங்கடப்பட்டுச் சொன்னார். ‘’அவள் எப்படியோ தப்பித்துப் போயிருக்கவேண்டும்.’’
‘’ஹேர்ரி, நீ ஒரு முட்டாளேதான்,’’ என்றாள், அந்தப்பெண். ‘’நாங்கள் முழு நேரமும் இங்கேதானே உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் பார்த்திருக்க மாட்டோமா, என்ன….’’ என்றவள், அந்த மனிதரின் பார்வை உக்கிரமாவதைக் கண்டு, அப்படியே நிறுத்திக்கொண்டாள்.
‘’எல்லா இடமும் தேடிவிட்டேன்,’’ என்றவர், ‘’அங்கு யாருமே இல்லை. ஒருத்தர் கூட இல்லை, புரிந்ததா?’’ எனக் காட்டமாகவே சொன்னார்.
‘’என்னிடம் பேசுங்கள்,’’ என்ற திருமதி. மில்லர், ‘’அங்கு ஒரு பெட்டி இருந்ததா? ஒரு பொம்மை இருந்திருக்குமே, அதையாவது பார்த்தீர்களா? சொல்லுங்கள்.’’ என்றார்.
‘’இல்லையம்மா, அப்படி எதையும் பார்க்கவில்லை.’’
தீர்ப்புச் சொல்வது போல, அந்தப்பெண், ‘’சரி, நல்லாயிருப்பீர்கள், விட்டுத்தொலையுங்கள்….’’ என்றாள்.
திருமதி. மில்லர் அவரது குடியிருப்புக்குள் மென்மையாகக்  காலெடுத்து வைத்தார். அறையின் நடுப்பகுதிக்கு நடந்துசென்ற அவர், அப்படியே அசையாமல் நின்றார். இல்லை, ஒருவிதத்தில் பார்த்தால் எந்த மாற்றமும் இல்லை: ரோஜாக்கள், கேக்குகள், செர்ரி எல்லாமே அதனதன் இடத்தில் வைத்த மாதிரியே இருந்தன. ஆனால், இது ஒரு வெறுமையான அறை, அறைகலன்களும் வழக்கமானவைகளும் இல்லாதது போல உயிரற்றிருந்தது. ஈமச்சடங்குக்காகச் சவம் கிடத்தப்படும் அறையைப் போலப் பயமுறுத்துவதாக இருந்தது. சாய்மெத்தை எப்போதுமில்லாத ஒரு வேற்றுத்தன்மையுடன் அவர் முன்பு வாய்பிளந்து கிடந்தது;. மிரியம் அதன்மீது சுருண்டு படுத்திருந்தால் மீதிக் காலியிடம் இந்த அளவுக்குப் பயங்கரமாகவும் நெஞ்சைத் துளைப்பதாவும் இருந்திருக்காது. மிரியம் உட்கார்ந்திருந்த இடத்தைக் குறிப்பாக வெறித்துக்கொண்டிருந்த அவர், ஒரு கணம், திண்டின் வெல்வெட் மென்மையைக் கையற்றுப் பார்த்தார். அவர் சாளரம் வழியாகப் பார்த்தார்; நிச்சயமாக அந்த ஆறு உண்மையானது தான், பனி பெய்துகொண்டிருப்பதும் மெய்யானதுதான் – அப்படியென்றால், ஒருவர் எல்லாவற்றுக்கும் குறிப்பிட்டதொரு சாட்சியாக இருந்துவிடமுடியாது: மிரியம், அங்கே உயிர்க்களை மிளிர அமர்ந்திருந்தாள்.  ஆனாலும், இப்போது அவள் எங்கே? எங்கே? எங்கே?
கனவில் நகர்வது போல், அவர் நகர்ந்து ஒரு நாற்காலியில் விழுந்தார். அந்த அறை அதன் வடிவத்தை இழந்துகொண்டிருந்தது; இருட்டாக இருந்தது. இருள் மேலும் மேலும் இருளாகிக்கொண்டிருந்தது. அதற்கு என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்யமுடியாது. ஒரு விளக்கினை ஏற்றுவதற்குக்கூட அவரது கைக்கு அவரால் உயிர்கொடுக்க முடியவில்லை.
திடீரெனக் கண்களை மூடியதும், நீரின் ஆழத்திலிருந்து, கண்காணா ஆழத்துக்குள்ளிருந்து மேலெழும் நீர்மூழ்கு வீரனைப் போல், அவர் மேல்நோக்கி எழும் உந்துதலைப் பெற்றார். திகில் அல்லது மாளாத்துயரின்போது, சிந்தனை முழுதும் மவுனவலை பின்னி, அசைவற்றுக் கிடக்கையில், தேவ வாக்கினைப் போலொன்றினை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கணங்கள் உள்ளன; அது தூக்கம் போன்ற ஒரு நிலை அல்லது இயற்கை மீறிய ஒரு பரவசம்; அந்தத் தாலாட்டின் போது அமைதியான ஒரு பகுத்தறிவின் வெளிச்சத்தினை உணரமுடியும்: நல்லது, மிரியம் என்ற பெயருள்ள ஒரு உண்மையான சிறுமியை அவருக்குத் தெரியாமலிருந்தால்தான் என்ன? தெருவில் முட்டாள்தனமாகப் பயந்துவிட்டால்தான் என்ன? முடிவில், எல்லாவற்றையும் போலவே அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. மிரியத்திடம் அவர் இழந்தது, அவரது அடையாளத்தை மட்டுமே, ஆனால், இப்போது, அந்த அறையில் ஏற்கெனவே வசித்த ஒருவரை, தனக்குத் தானே சமைத்துக்கொண்டும், கேனரி ஒன்றை வளர்த்துக்கொண்டும், அவர் மனம்  நம்பத்தக்க வகையிலான ஒருவரை அவர் இப்போது அறிவார்: அவர்தான் திருமதி. எச்.டி.மில்லர்.
நிம்மதியாக, அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இரட்டைச் சப்தம் ஒன்று கேட்பதாக அவர் உணர்ந்தார்: நிலையடுக்கின் இழுப்பறை ஒன்றினை இழுத்துத் திறப்பதும் அடைத்து மூடுவதுமான சப்தம், திறப்பதும் மூடுவதும் முடிந்து, சிறிது நேரம் கழிந்தபின்னரே அவருக்குக் கேட்பதுபோலத் தோன்றியது. பின்னர் மெதுமெதுவாக, அதன் கடுத்த சப்தம், பட்டாடை ஒன்றின் முணுமுணுப்பினால் அகற்றப்பட்டதாக, அதுவும் நுண்ணிய மெல்லிழையாகத் தொடங்கி அருகில் வர, வரத் தீவிரமாகி, சுவர்கள் நடுங்கும் அதிர்வுகளாகி, முடிவில் அந்த அறை ரகசியச் சலசலப்பொலி நிறைந்த குகை போலானது. திருமதி. மில்லர் இறுகிப்போய், ஒளியற்று வெறிக்கும் பார்வையோடு, கண்களைத் திறந்தார். 
‘’ஹல்லோ’’ என்றாள், மிரியம்.     

நன்றி : http://literaryfictions.com/fiction-1/miriam-by-truman-capote/

அடவி, நவம்பர் 2015 இதழில் வெளியாகியுள்ளது. 


No comments:

Post a Comment