Sunday 10 January 2016

சீனச் சிறுகதை - இரும்புக் குழந்தை Iron Child by Mo yan

இரும்புக் குழந்தை  Iron Child


சீனம் : மோ யான் Mo yan


ஆங்கிலம் : ஹோவர்டு கோல்டுபிளாட்


 தமிழாக்கம் : ச.ஆறுமுகம்


index(2012 ம் ஆண்டின் நோபல் பரிசினை வென்றுள்ள மோ யான் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைச் சீனமொழியில் படைத்துள்ளார். அவற்றில் எட்டுகதைகளைத் தெரிவுசெய்து `ஷிஃபு, ஒரு சிரிப்புக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்வாய்` என்ற தலைப்பில் ஹோவர்டு கோல்டுபிளாட் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் IRON CHILD என்ற பெயரிலுள்ள கதை மலைகள். காம் இதழுக்காகத் தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கதையினை fable நீதிக்கதை வகைப்பட்டதாகக் கொள்ளுமாறு முன்னுரையில் மோ யான் குறிப்பிட்டுள்ளார். )

முன்னோக்கிய மாபெரும் பாய்ச்சலில் உருக்குதல் வேகப்பணி யின் போது அரசு ஒரு பன்னிரண்டு மைல் தூரத்துக்கான தண்டவாளப் பாதை அமைக்கும் பணிக்காக இரண்டு லட்சம் தொழிலாளர்களைத் திரட்டியது. அந்தப்பணி இரண்டரை மாதத்துக்குள் செய்து முடிக்கப்பட்டது. அந்தப் பாதையின் மேல் முனை காவ்மி ரயில்நிலையத்தில் ஜியாவ்ஜி டிரங் பாதையுடன் இணைக்கப்பட்டது; கீழ்முனை பல ஏக்கர் பரப்புள்ள வடகிழக்கு காவ்மி நகரியப் புதர்நிலத்தின் மத்தியில் அமைக்கப்பட்டது.
எங்களுக்கு அப்போது நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும். பொது உணவகத்தின் பின்புறம் அவசரமாக அமைக்கப்பட்டிருந்த மழலையர் பள்ளி ஒன்றுக்குள் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம். ஓலைக்கூரையும் இடிந்த மண் சுவர்களுமான ஐந்து கட்டிடங்கள் கொண்ட ஒரு வரிசை தான் அந்தப் பள்ளிக்கூடம். அதைச் சுற்றிலும் ஆறு அல்லது ஏழடி உயரமுள்ள மரக்கன்றுகள் நெருக்கமாக நட்டு அவற்றை ஒரு கனத்த கம்பியால் இணைத்துச் சேர்த்துக் கட்டியிருந்தார்கள். எங்களை மாதிரிக் குழந்தைகளை விட்டுவிடுங்கள்; அந்த வேலியைத் திடமிக்க, வலுவான பெரிய நாய்களால் கூட எம்பித் தாண்ட முடியாது. எங்கள் அப்பா, அம்மா, மூத்த குழந்தைகள் – உண்மையைச் சொல்வதென்றால், மண்வெட்டி அல்லது ஏதாவது ஒரு மண்கிளறும் கருவியைத் தூக்கிப் பயன்படுத்த முடிகின்ற யாராக இருந்தாலும் – தொழிலாளர் அணியில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். அவர்கள் கட்டுமானப் பணிநடைபெறும் இடத்திலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கியதால் நாங்கள் நீண்ட நாட்களாக அவர்களில் எவரையுமே பார்க்கவில்லை. எலும்புந்தோலுமாக, முதிய பெண்கள் மூவர் மழலையர் பள்ளிச் சிறையின் பொறுப்பிலிருந்தார்கள். மூவருக்குமே பருந்து மூக்கும் குழி விழுந்த கண்களும் இருந்ததால் அவர்கள் எங்களுக்கு ஒரே அச்சாகக் குளோன்களாகத் தோற்றமளித்தார்கள். அவர்கள் ஒவ்வொருநாளும் காட்டுக் கீரைகளைக் கொண்டு மூன்று கொப்பரை கஞ்சி காய்ச்சினர். ஒன்று காலையில், அடுத்தது மதியம், மூன்றாவது மாலையில். எங்கள் அடிவயிறுகள் சிறிய பானைகளாகப் பெருக்கும் அளவுக்கு நாங்கள் கஞ்சியை விழுங்கு,விழுங்கென விழுங்கி நிரப்பிக்கொண்டோம். சாப்பிட்டு முடிந்ததும், வேலிக்கு வெளியே தெரியும் காட்சிகளைப் பார்க்க நாங்கள் வேலிக்குச் சென்றுவிடுவோம். வேலியில் வில்லோக்களும் பாப்லார்களும் துளிர்த்தன. பசுமை இலைகள் இல்லாதவை ஏற்கெனவே அழுகத் தொடங்கிவிட்டன. அவை உடனடியாக அகற்றப்படாவிட்டால், வெள்ளைக் காளான்களோ அல்லது மச்சள் நிற மரக்காதுப் பூஞ்சானங்களோ பூக்கத் தொடங்கிவிடும்.
நாங்கள் சிறு காளான்களைத் தின்றுகொண்டே, அருகிலிருந்த சாலை வழியாக வெளியூர்த் தொழிலாளர்கள் போய்வருவதைப் பார்த்துக் கொண்டிருப்போம். அவர்கள் அழுக்கடைந்து, சோர்ந்து, எதிலும் அக்கறையில்லாதவர்களாகத் தோன்றினர். அவர்களின் தலைமுடி குப்பைக்கூடை போல இருந்தது. அந்தத் தொழிலாளர் மத்தியில் எங்கள் சொந்தக்காரர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது வருவார்களா எனத் தேடிக்கொண்டிருந்ததால், கண்ணீர் பொங்க, அவர்களைக் கேட்போம் :
‘’ மாமா, மாமா, நல்ல மாமா, என் அப்பாவைப் பார்த்தீர்களா?’’
‘’ மாமா, மாமா, நல்ல மாமா, என் அம்மாவைப் பார்த்தீர்களா?’’
‘’ மாமா, மாமா, நல்ல மாமா, என் அண்ணனைப் பார்த்தீர்களா?’’
‘’ மாமா, மாமா, நல்ல மாமா, என் அக்காவைப் பார்த்தீர்களா?’’
அவர்களில் சிலர், என்னவோ காது கேட்காதது போல எங்களைக் கண்டு கொள்ளவேயில்லை. வேறு சிலர் சேவற்கோழிகளைப் போலத் தலையைச் சிலிர்த்துக் கழுத்தை நீட்டி ஒரு அவசரப் பார்வை பார்த்துவிட்டுத் தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டிப் போய்க்கொண்டேயிருந்தனர். ஆனால், சிலர் எங்களை, ‘’ கிட்டத்தில வாங்கடா, சின்னத் தேவடியாப் பயல்களா?’’ எனக் காட்டுமிராண்டித்தனமாகத் திட்டிக் குதறிக் கிழித்தனர் :
அந்த மூன்று வயதான பெண்களும் வாசற்படியிலேயே சும்மா, வெறுமனே அமர்ந்திருந்தனர். அவர்கள் எங்களைக் கவனிப்பதேயில்லை. அந்த வேலி எங்களால் ஏற முடியாதபடி ஆறடி உயரத்திலிருந்தது; நாங்கள் அதன் ஊடே புகுந்து நெளிந்து செல்லமுடியாதபடி மிக நெருக்கமாகவும் இருந்தது.
வேலிக்குப் பின்னால் எங்கள் சிம்மாசனத்திலிருந்து, தூரத்து வயல்வெளியில் ஒரு மண் டிராகன் மெல்ல உயர்வதையும், அதில் புற்றின் மீது எறும்புகள் சாரைசாரையாக ஊர்வது போல கூட்டம் கூட்டமான மனிதர்கள் வேகவேகமாக ஏறி, இறங்குவதையும் கண்டோம். எங்கள் வேலி ஓரமாகக் கடந்து சென்ற தொழிலாளர்கள் அதனைத் தண்டவாளம் அமைப்பதற்கான சாலைப் படுகை என்றனர். எங்கள் இரத்த உறவுகள், சொந்த பந்தங்கள் அந்த எறும்புக் காலனியில் ஒரு பகுதியாக இருந்தனர். ஒவ்வொரு நாளில் அந்த மண் டிராகன் மீது திடீர் திடீரென ஆயிரக்கணக்கான சிவப்புக் கொடிகளை நட்டனர். வேறு நாட்களில், திடீரென வெள்ளைக் கொடிகளைச் செருகினர். ஆனால் அநேக நாட்களிலும் அங்கே கொடிகள் ஏதும் இல்லாமல்தான் இருந்தது. சில நாட்களுக்குப்பின் டிராகனின் உச்சிப் பரப்பில் கண்ணைப் பறிக்கும் தோற்றத்தில் பெருநீளப் பளபளப்புப் பொருட்கள் நிறையத் தோன்றின. கடந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை எஃகுத் தண்டவாளங்கள் என்றனர்.
ஒரு நாள், அந்தச் சாலை வழியாக மணல்நிறத்தலை இளைஞன் ஒருவன் இறங்கி வந்தான். அவனுடைய நீளமான கைகளில் ஒன்றைச் சும்மா, அப்படி உயர்த்தினாலே போதும், எங்கள் வேலி உச்சியைத் தொட்டுவிடுவான் போல உயரமென நாங்கள் பேசிக்கொண்டோம். எங்கள் உறவினர்களைப் பற்றி நாங்கள், அவனைக் கேட்டபோது, அவன் வேலிக்கே வந்து, குந்தியமர்ந்து, மகிழ்ச்சியோடு எங்கள் மூக்குகளைப்பிடித்து ஆட்டி, அடிவயிறுகளை ஒற்றை விரலால் குத்தியமுக்கி, குஞ்சு மணிகளைப் பிடித்தாட்டி மெல்ல இழுத்துக் கிள்ளி வியப்படைய வைத்தான். எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொன்ன முதல் மனிதன் அவன் தான். வாய் முழுக்கப் புன்னகையுடன், அவன் கேட்டான் :
‘’ உன் அப்பாவின் பெயர் என்ன? சொல்.’’
‘’ வாங் ஃப்யூகி’’
‘’ ஹா, வாங் ஃப்யூகி. ‘’ நாடியைத் தேய்த்துக்கொண்டே, அவன், ‘’ எனக்குத் தெரியும், வாங் ஃப்யூகியைத் தெரியும்.’’ என்றான்.
‘’அவர் எப்போது வந்து என்னைக் கூட்டிப் போவார், உங்களுக்குத் தெரியுமா?’’
‘’அவர் வரமாட்டார். அன்றைக்கொரு நாள், எஃகுத் தண்டவாளங்களைச் சுமந்து போகும்போது அவர் நசுங்கிவிட்டார்.’’
‘’ ஆ……..’’ எங்களில் ஒரு குழந்தை கத்தியழுதது.
‘’ நீ என் அம்மாவைப் பார்த்தாயா?’’
‘’ உன் அம்மாவின் பெயர் என்ன? சொல்.’’
‘’ வான் க்சியூலிங்’’
‘’ஹா, வான் க்சியூலிங். ‘’ நாடியைத் தேய்த்துக்கொண்டே, அவன், ‘’ எனக்குத் தெரியும், வான் க்சியூலிங்கைத் தெரியும்.’’ என்றான்.
‘’அவள் எப்போது வந்து என்னைக் கூட்டிப்போவாள், உங்களுக்குத் தெரியுமா?’’
‘’ அவர் வரமாட்டார். அன்றைக்கொரு நாள், தண்டவாளப் படுக்கைக் கட்டைகளைச் சுமந்து போகும்போது நசுங்கிவிட்டார்.’’
‘’ ஆ……..’’ எங்களில் இன்னொரு குழந்தை கத்தியழுதது.
சிறிது நேரத்திலேயே, நாங்கள் எல்லோரும் கத்தி, அழுதுகொண்டிருந்தோம். அந்த மணல்நிறத்தலை இளைஞன் எழுந்து, விசிலடித்துக்கொண்டே நடந்து போய்விட்டான்.
நாங்கள் மத்தியானத்திலிருந்து சாயங்காலம் வரையிலும் அழுதோம். அந்த வயதான பெண்கள் எங்களை இரவுக் கஞ்சிக்கு அழைக்கும்போதும் நாங்கள் அழுதுகொண்டுதானிருந்தோம். ‘’ எதற்காக அழுதுகொண்டிருக்கிறீர்கள்?’’ என்று உறுமினார்கள், அந்தப் பெண்கள். ‘’ இப்போது அழுகையை நிறுத்தாவிட்டால், உங்கள் எல்லோரையும் `செத்தவன் குழி`க்குள் பிடித்துத் தள்ளிவிடுவோம்.’’ என்று பற்களைக் கடித்துக் கண்களை அகல உருட்டிக் காட்டினார்கள்.
`செத்தவன் குழி` என்றால் என்ன? அது எங்கே இருக்கிறதென்று எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், நிச்சயமாக அது ஒரு அதிபயங்கரமான இடமாக இருக்குமென்று நாங்கள் நினைத்தோம். அதனால் அழுகையை நிறுத்தினோம்.
அடுத்த நாள், நாங்கள் வேலியின் பின்னாலிருந்து மறுபக்கக் காட்சிகளை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். நடுக்காலையில் சில, பல தொழிலாளர்கள் இரத்தம் கொட்டும் ஒருவர் படுத்துக் கிடந்த கதவைச் சுமந்துகொண்டு எங்களை நோக்கி ஓடி, ஓடி வந்துகொண்டிருந்தார்கள். அது ஆணா பெண்ணா என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அந்தக் கதவிலிருந்து இரத்தம் சொட்டித் தரையில் விழுந்து சிதறுவதைப் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.
குழந்தைகளில் ஒன்று அழத் தொடங்கியதோ இல்லையோ, கதவின் மீது படுத்திருப்பவர் எங்கள் சொந்தக்காரர் போல நாங்கள் எல்லோரும் அழுதோம்.
மத்தியானம் கஞ்சியைக் குடித்து முடித்ததும், நாங்கள் மீண்டும் வேலிக்குச் சென்றாம். அப்போது உயரமும் சதையுமாகக் கறுப்புநிறத்திலான இருவரின் துப்பாக்கிக் காவலில் அந்த மணல்நிறத்தலை இளைஞன் எங்களை நோக்கி நடந்துவருவதைக் கண்டோம். அவன் முதுகின் பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டிருந்தன. அவன் கண்களில், மூக்கில் இரத்தச் சிராய்ப்புகளும் வீக்கங்களும் இருந்தன. அவன் உதடுகளில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. எங்கள் முன்புறமாகக் கடந்து செல்கையில், இதைவிட எதுவும் மகிழ்ச்சியாக இருக்கமுடியாது என்பதைப்போல, அவன் எங்களைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.
நாங்கள் எல்லோரும் ஒன்றாகக் கத்தி அவனைக் கூப்பிட்டோம்; ஆனால், காவலர்களில் ஒருவர் அவன் விலாவிலேயே துப்பாக்கி முனையால் இடித்து, ‘’ போய்க்கொண்டே இரு!’’ என விரட்டினார்.
வேறொரு நாள் காலையில், நாங்கள் வேலிமீது சாய்ந்திருக்கையில், தூரத்து ரயில்வே படுகை திடீரென்று சிவப்புக் கொடிகளால் உயிர்பெற்றதைக் கண்டோம். மணிகள், சேகண்டிகள் ஒலித்தன. முரசுகள், பறைகள் அதிர்ந்தன. அங்கிருந்த எல்லோரும் எதற்காகவோ மகிழ்ச்சிக் கூக்குரலிட்டனர். மத்தியான உணவின்போது, அந்த வயதான பெண்கள் எங்கள் கைகளில் ஆளுக்கொரு முட்டையைத் தந்துவிட்டு, ‘’ குழந்தைகளே, ரயில்வே பாதை முடிந்துவிட்டது. முதல் தொடர்வண்டி இன்று வரப்போகிறது. அதாவது உங்கள் அம்மா, அப்பாக்கள் உங்களைக் கூட்டிப் போக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். உங்களைக் கவனித்துக் கொள்ளும் பணியை நாங்கள் பொறுப்புடன் செய்து முடித்திருக்கிறோம். ரயில்வே வேலை வெற்றியாக முடிவடைந்ததன் கொண்டாட்டமாகத்தான் இந்த முட்டைகள்.’’ என்றனர்.
நாங்கள் மெய்மறந்து நின்றோம். எங்கள் சொந்த பந்தங்கள் யாரும் சாகவில்லை. அந்த மணல்நிறத் தலையன் எங்களிடம் பொய் சொல்லிப் புளுகியிருக்கிறான். அவனைக் கட்டி இழுத்துச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.
முட்டைகள் எங்களுக்கு எப்போதாவது கிடைக்கக் கூடிய மிகப் பெரிய விருந்து; முதலில் அதன் தோலை எப்படி உரிக்கவேண்டுமென்று அந்த வயதான பெண்கள் எங்களுக்குச் சொல்லித்தர வேண்டியிருந்தது. அதன் ஓடுகளை அலங்கோலமாக நாங்கள் உடைத்தபோது அதற்குள் இறக்கை முளைத்த சிறிய கோழிக்குஞ்சுகளைத்தான் கண்டோம். நாங்கள் அவற்றைக் கடித்த போது அவை கீச்சிட்டன; அதோடு இரத்தம் பொங்கியது. நாங்கள் தின்பதை நிறுத்தியபோது அந்த வயதான பெண்கள் கம்புகளை எடுத்து ஓங்கி அவற்றைத் தின்றேயாகவேண்டுமென்றார்கள். நாங்கள் தின்று முடித்தோம்.
அடுத்த நாள் நாங்கள் வேலியில் சாய்ந்திருக்கும்போது, ரயில்பாதையில் இன்னும் அதிகமான சிவப்புக்கொடிகளைக் கண்டோம். அந்தப் பிற்பகலுக்குப் பின் பாதையின் இருபக்கங்களிலும் ஏராளமான மக்கள் நின்று `ஹோ ஹோ` `ஹூ ஹூ` எனக் கும்மாளமிட்டுக் கத்தினர். அப்போது தலையிலிருந்து அடர்த்தியாகப் புகை கக்கிக்கொண்டு, மாபெரும் இராக்கதப் பொருள் ஒன்று வந்தது. நீளமாகவும் கறுப்பாகவும் மிகமிகப் பெரியதாகவும் இருந்த அது, தென்மேற்கிலிருந்து ஊளையிட்டுக்கொண்டே வந்தது. அது குதிரையைவிட வேகமானது. எங்களுக்குத் தெரிய, அது ஒன்றுதான், நாங்கள் பார்த்திருந்ததிலேயே வேகவேகமானது. எங்கள் கால்களுக்கடியில் பூமி அசைவதைப் போல உணர்ந்து நாங்கள் பயந்து, பதறிப் போனோம். பின்னர், வெள்ளை நிறத்தில் ஆடையணிந்த நிறையப் பெண்கள் எங்கிருந்தோ வந்து குதித்தனர்; கைகளைத்தட்டி, ஆரவாரத்தோடு கத்தினர் : ‘’தொடர்வண்டி! தொடர்வண்டி வருகிறது! இதோ, இங்கேயே, தொடர்வண்டி!’’
தடதடத்த தொடர்வண்டி வடகிழக்கை நோக்கிப் பாய்ந்தது. அதன் கடைசி வால் முடிய எங்கள் கண்களிலிருந்து மறையும்வரை அதையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
தொடர்வண்டி கடந்து சென்றபின், வாக்குறுதியளித்தபடி, பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைக் கூட்டிச் செல்ல வந்தனர். மட் அழைத்துச் செல்லப்பட்டுவிட்டான். அப்படியே ஆட்டுக்குட்டி, தூண், பீன்ஸ் எல்லோரும். கடைசியாக நான் ஒருத்தன் மட்டும் தனியாக நின்றேன்.
அந்த மூன்று வயதான பெண்களும் வேலிக்கு வெளியே கொண்டு போய் என்னை நிறுத்தி, ‘’வீட்டுக்குப் போ!’’ என்றார்கள்.
என் வீடு எங்கேயென்று எனக்கு மறந்துவிட்டது. அந்த மூன்று பேரில் ஒருத்தியிடம் என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு கேட்டுக் கெஞ்சினேன். ஆனால், அவள் என்னை ஒருபக்கமாக ஒதுக்கிவிட்டு வாயிற் கதவை மூடி, உள் கதவைத் திறந்து உள்ளே சென்றாள். பின்னர், திரும்பி வந்து ஒரு பெரிய பித்தளைப் பூட்டால் வாயிற்கதவைப் பூட்டினாள். நான் வேலிக்கு வெளியே நின்று அழுது ஓலமிட்டுக் கெஞ்சினேன். ஆனால், அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. வேலியிலிருந்த ஒரு இடுக்கு வழியாக உள்ளே பார்த்தேன். அந்த, ஒரே அச்சான மூன்று வயதான பெண்களும் முற்றத்தில் அடுப்பு ஒன்றைக் கூட்டி, அதில் சிறிய சட்டி ஒன்றை வைத்துச் சில சுள்ளிகளை அதன் கீழ் கொளுத்திப் பானையில் இளம்பச்சை நிற எண்ணெயில் கொஞ்சத்தை ஊற்றினர். சுள்ளிகள் பற்றி விறகு எரிய, எரிய தீச்சுவாலைகள் மேலெழுந்தன. எண்ணெய் சூடாகி நுரைக்கத் தொடங்கியது. நுரை அடங்கியதும், சட்டியைச் சுற்றி அதன் விளிம்புகளிலிருந்து வெள்ளைப் புகை எழும்பியது. அந்த வயதான பெண்கள் சில முட்டைகளை உருட்டி ஓடுகளை உடைத்து, மென்மயிர்ச் சிறு குஞ்சுகளைத் தனியே எடுத்து உணவுண்ணும் கோல்களால் சட்டிக்குள் இட்டனர். அவை `உஸ்` சென்ற சத்தத்தோடு எண்ணெய்க்குள் சுழலச் சுழல இறைச்சி வேகும் மணம் கிளம்பிப் பரந்தது. பின்னர், அந்தக் கிழவிகள் வெந்த கோழிக்குஞ்சுகளை சட்டியிலிருந்து வெளியே எடுத்து, ஒன்றிரண்டு முறை வாயால் ஊதி, வாய்க்குள் போட்டுக் கொண்டனர். அவர்களின் கன்னங்கள் முதலில் ஒரு பக்கமும், பின்னர் இரண்டு பக்கமும் புடைத்தன. அவர்களின் உதடுகள் சிறு சத்தமெழுப்பி அசைந்தன. அவர்களின் கண்கள் மூடியே இருக்க, அவற்றில் நீர் பெருகி வழிந்துகொண்டிருந்தது. நான் என்னதான் அழுதாலும் கத்தினாலும் அவர்கள் கதவைத் திறக்கப் போவதில்லை. விரைவிலேயே என் கண்ணீர் வற்றி உலர்ந்தது. என் குரல் எனக்கே கேட்காமலானது. ஒரு எண்ணெய்க்கறுப்பு மரத்தின் அடியில் சிறிது சேற்றுநீர் தேங்கிக் குட்டையாகக் கிடந்ததைக் கண்டேன். என் தாகத்தைத் தீர்க்க அங்கே சென்றேன். தண்ணீரைக் குடிக்கக் குனியும்போதுதான் குட்டை அருகிலேயே ஒரு மஞ்சள்நிறத் தேரையைக் கண்டேன். கூடவே வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய ஒரு கறுப்புப் பாம்பும் என் கண்ணில் பட்டது. தேரை பாம்பிடம் மாட்டிக்கொண்டு போராடிக்கொண்டிருந்தது. நான் பயந்துவிட்டேன்; என்னால், தாகத்தை அடக்கவும் முடியவில்லை. அதனால், பயத்தை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு, மண்டியிட்டுக் குனிந்து என் கையால் கொஞ்சம் தண்ணீரை அள்ளினேன். அது என் கைவிரல்களுக்கிடையே ஒழுகியது. பாம்பின் வாய்க்குள் தேரையின் ஒரு கால் இருந்தது. தேரையின் தலையில் வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் கசிந்து கொண்டிருந்தது. தண்ணீர் உப்பாகச் சிறிது குமட்டலாகவும் இருந்தது. நான் எழுந்து நின்றேன். எங்கே போவதென்று தெரியவில்லை. அழவேண்டுமென்று தோன்றியது. அதனால் அழுதேன். ஆனால், கண்ணீர் வரவில்லை.
மரங்கள், தண்ணீர், மஞ்சள் நிறத் தேரை, கறுப்புப் பாம்பு, சண்டை, பயம், தாகம், மண்டியிடல், கையைக் குவித்தல், தண்ணீரை அள்ளுதல், உப்புத் தண்ணீர், குமட்டல், நான் அழுதேன். ஆனால், கண்ணீர் இல்லை….. ஏய், எதற்காக அழுகிறாய்? உன் அப்பன் செத்துவிட்டானா? அல்லது உன் அம்மாதான் செத்துவிட்டாளா? உன் குடும்பத்தில் எல்லோருமே செத்துவிட்டார்களா? நான் தலையைத் திருப்பினேன். என்னைக் கேள்வி கேட்ட அந்தக் குழந்தையைப் பார்த்தேன். அவன், என் உயரமே இருந்ததைக் கண்டேன். அவன் உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லையென்பதைக் கண்டேன். அவன் தோலில் துருப்பிடித்திருந்ததை நான் கண்டேன். அவன் கண்கள் கறுப்பாக இருந்ததைக் கண்டேன். அவனும் என்னைப் போன்ற ஒரு பையன்தான் என்பதையும் கண்டுகொண்டேன்.
மரப்பாச்சியே, எதற்காக அழுகிறாயென அவன் கேட்டான். நானொன்றும் மரத்தில் இழைக்கப்படவில்லையென்றேன். எப்படியானாலும், நான் உன்னை மரப்பாச்சி என்றுதான் கூப்பிடப் போகிறேனென்றான். மரப்பாச்சி, வா, விளையாடலாம். அந்தத் தொடர்வண்டிப்பாதையில் போய் விளையாடலாம், அங்கே, பார்ப்பதற்கும், தின்பதற்கும், விளையாடவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவென்று அவன் கூறினான்.
ஒரு பாம்பு தேரையை விழுங்கவிருப்பதாக நான் கூறினேன். அதற்கு அவன், அப்படியே இருக்கட்டும், விட்டுவிடு, கவலைப்படாதே, குழந்தைகளின் எலும்பு மஜ்ஜையைக்கூடப் பாம்புகளால் உறிஞ்சிவிட முடியுமென்றான்.
அவன் என்னைத் தொடர்வண்டிப்பாதையின் திசையை நோக்கிக் கூட்டிச் சென்றான். அது அருகிலிருப்பதாகத்தான் தோன்றியது. என்றாலும், எப்போதும் போல, வெகுதூரத்திலேயே இருந்தது. நாங்கள் நடக்கும் போதெல்லாம் அதுவும் நடந்து அகல்வது போல இருந்தது. நிறையவே கஷ்டப்பட வேண்டியிருந்தது. என்றாலும் கடைசியில் நாங்கள் அதைச் செய்து முடித்துவிட்டோம். அப்போது என் கால் பாதங்களே என்னைக் கொல்வது போலிருந்தது. அவன் பெயரைக் கேட்டேன். என் பெயர் எப்படி இருக்க வேண்டுமென நீ விரும்புவாயோ, அதுவேதான் என் பெயரென்றான். துருப்பிடித்த இரும்புத்துண்டு போல் இருக்கிறாயென்றேன். இரும்பென்று நீ சொன்னால், அதுதான் நான், என்றான். நான் சொன்னேன், `இரும்புக்குழந்தை`. அவன், பதிலாக ஒரு உறுமலைத் தந்துவிட்டுச் சிரித்தான்.
நான் இரும்புக்குழந்தையைத் தொடர்வண்டிப் பாதைவரையிலும் தொடர்ந்து சென்றேன். பாதையின் சாய்வுப் படுகை மிகச் செங்குத்தாக இருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து ஊர்ந்து வரும் இரண்டு மிகமிகப்பெருநீளப் பாம்புகளாகத் தண்டவாளங்களை நான் கண்டேன். அவற்றில் ஒன்றின் மீது நான் கால் வைத்து, அது உடனேயே நெளிந்து, தலையில்லாத அதன் மரவாலால் என் கால்களைச் சுற்றிவளைத்துக்கொண்டது போல ஒரு காட்சியை எனக்குள் கண்டேன். நான் ஒன்றின் மீது மிகுந்த எச்சரிக்கையோடு காலை வைத்தேன். இரும்பு குளிர்ந்திருந்தது; ஆனால் நெளியவோ அதன் வாலைச் சுழற்றவோ இல்லை.
மலையின் பின்புறமாகச் சூரியன் மறையவிருப்பதைக் கண்டேன். அது மிகப் பெரியது; நிரம்ப, நிரம்பச் சிவப்பு. வெள்ளைப் பறவைகள் கொஞ்சமாகத் தேங்கியிருந்த தண்ணீர் அருகில் கூட்டமாகத் தரையிறங்கியது. ஈஈ…. ஈஈ.. க்ரீச்.. க்ரீச்…சென ஒரு பயங்கர சத்தத்தைக் கேட்டேன். தொடர்வண்டி வந்துகொண்டிருப்பதாக இரும்புக்குழந்தை சொன்னான். அதன் இரும்புச் சக்கரங்களைச் சிவப்பாக, அவற்றை இரும்புக் கரங்கள் சுழற்றுவதாக, நான் கண்டேன். சக்கரங்களுக்கிடையே குமுறிக்கொண்டிருந்த காற்று ஒரு மனிதனை உள்ளே இழுத்துக்கொள்ளுமென எனக்குத் தோன்றியது. இரும்புக்குழந்தை தொடர்வண்டிக்குக் கையசைத்தான், அது என்னவோ அவன் நண்பன் போல.
அந்த இரவில், பசி என்னைப் பிறாண்டியது. இரும்புக்குழந்தை துருப்பிடித்த இரும்புக் கம்பி ஒன்றை எடுத்தான்; அதைத் தின்னுமாறு சொன்னான். நான் சொன்னேன், நானொரு மனிதக் குழந்தை; என்னால் எப்படி இரும்பைத் தின்ன முடியும்? மனிதனால் ஏன் இரும்பைச் சாப்பிட முடியாதெனக் கேட்டான். நானுந்தான் மனிதன். என்னால் அதைச் சாப்பிட முடிகிறது. நம்பிக்கை இல்லையென்றால், இப்போது பாரென்றான். நான் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, இரும்புக் கம்பியை வாய்க்குள் திணித்துக் கடுக், மொடுக்கென்று கடித்துத் தின்னத் தொடங்கினான். பார்ப்பதற்கு, அந்த இரும்புக் கம்பி நல்லப் பொருபொருவென, மொறுமொறுப்பாக, நல்ல ருசியாக இருக்குமென்றுதான் தோன்றியது. நான் ஏதாவது பேசவேண்டுமேயென `ஓ` எனத் தொடங்கினேன். இரும்பைத் தின்ன எங்கே கற்றுக்கொண்டானெனக் கேட்டதற்கு, இரும்பை எப்படிச் சாப்பிட வேண்டுமென நீ எப்போது கற்றுக்கொள்ளப் போகிறாயென்றான். என்னால் அது முடியாதென்றேன். அவன் ஏனென்று கேட்டான். என் மீது நம்பிக்கை இல்லையென்றால் முயற்சித்துப் பாரென்றான். அந்தக் கம்பியின் தின்னாத பாதியை என் முன்னால் நீட்டித் தின்று பாரென்றான். என் பல் உடைந்துபோகுமென்று பயமாயிருப்பதாக நான் சொன்னேன். அவன் ஏனென்று கேட்டுவிட்டு, மனிதர்களின் பற்களைவிடக் கடினமானது எதுவுமேயில்லை, நீ தின்று பார்த்தால், நான் சொல்வது என்னவென்று புரியுமென்றான். நான் தயங்கித் தயங்கி, இரும்புக் கம்பியைக் கையில் எடுத்து வாய்க்குள் வைத்து, ருசி பார்ப்பதற்காக நாக்கால் அதைத் தொட்டுப் பார்த்தேன். உவர்ப்பாக, புளிப்பாக, நாட்பட்ட கருவாடு போன்ற ஒரு நாற்றத்தில் அருவருப்பாக இருந்தது. ஒரு கடி, கடியென்றான் அவன். ஒரு துண்டாகக் கடித்தெடுக்க முயன்றேன். ஆச்சரியம்! ஒரே கடியில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் முடித்துவிட்டேன். நான் மென்று அரைக்கத் தொடங்கியதும் அதன் மணம் என் வாய்க்குள் நிறைந்து மெல்ல மெல்லச் சுவையாகி அந்த ருசி முழுவதுமாகத் தெரியும் முன்னரே மொத்தத்தையும் ஆசைஆசையாக மென்று விழுங்கிவிட்டேன். நன்றாகத்தானே இருந்தது? நானொன்றும் பொய் சொல்லிவிடவில்லையே? என்றான் இரும்புக்குழந்தை. இல்லை, நீ பொய் சொல்லவில்லை. நீ ஒரு நல்ல குழந்தை. இரும்பை எப்படிச் சாப்பிட வேண்டுமென எனக்குச் சொல்லித் தந்தாய். நான் இனிமேல் தழைகளை வேகவைத்த தண்ணீரைக் குடிக்க வேண்டியதில்லையென்றேன். யார் வேண்டுமானாலும் இரும்பைச் சாப்பிட முடியும், ஆனால் மக்களுக்கு அது தெரியாதென்றான், அவன். அது தெரிந்துவிட்டால், இனிமேலும் பயிர்களைச் சாகுபடி செய்ய வேண்டியிருக்காது, இல்லையா, என்ன? என்றேன், நான். இரும்பை உருக்குவது பயிர் சாகுபடியைவிட எளிதானதென்றா நினைக்கிறாய். உண்மையில், அது இன்னும் கடினமானது. இரும்பு எவ்வளவு ருசியானதென்று யாரிடமும் சொல்லிவிடாதே. அதைத் தெரிந்துகொண்டால், பிறகு அவர்களும் இரும்பைத் தேடித்தேடிச் சாப்பிடத் தொடங்கி, உனக்கும் எனக்கும் எதுவும் மிச்சமில்லாமல் போய்விடுமென்றான். இந்த ரகசியத்தை என்னிடம் மட்டும் எப்படிச் சொன்னாயென்று கேட்டேன். ஒற்றையில், தனியாகச் சாப்பிடுவதில் ருசி எதுவும் இல்லையெனக் கண்டுகொண்டதால் எனக்கு ஒரு நண்பன் தேவைப்பட்டானென்றான், அவன்.
வடகிழக்கு நோக்கிச் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் நான் அவனைப் பின்தொடர்ந்தேன். இப்போது எனக்கு இரும்பை எப்படிச் சாப்பிடுவதென்று தெரியும். அதனால் தண்டவாளங்களைப் பார்த்து நான் இனிமேலும் பயப்படப் போவதில்லை. நான் எனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டேன். `தண்டவாளங்களே, தண்டவாளங்களே, இரும்புத் தண்டவாளங்களே, பெருமை கொழிக்காதீர்கள், இறுமாப்பில் நீங்கள் அப்படிக் கொழித்தால், நான் உங்களைத் தின்றுவிடுவேன்.`
நான் இப்போது ஒரு இரும்புக் கம்பியின் பாதியைத் தின்று முடித்துவிட்டேன். இப்போது எனக்குப் பசியில்லை; என் கால்களும் வலிமை பெற்றுவிட்டன. இரும்புக்குழந்தையும் நானும் தண்டவாளங்களில் ஆளுக்கொன்றாக நடக்கத் தொடங்கினோம். நாங்கள் வேகமாக நடந்து, மிகக் குறுகிய நேரத்திலேயே, வானம் சிவப்பாக மாறியிருந்த ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். அங்கே ஏழு அல்லது எட்டு பெரிய வெப்ப உலைகள் தீப்பிழம்புகளைக் கக்கிக்கொண்டிருந்தன. நாவூறச் செய்கின்ற இரும்பின் புத்தம் புதிய மணத்தை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அங்கே, அங்கேயேதான் இரும்பையும் எஃகையும் உருக்குகிறார்கள். யார் கண்டது, ஒருவேளை உன் அப்பாவும் அம்மாவும் அங்கே இருக்கலாமென்றான், இரும்புக்குழந்தை. அவர்கள் அங்கே இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லையென்றேன், நான்.
அந்தத் தொடர்வண்டிப்பாதை `அம்போ`வென்று முடிகிற இடம் வரையில் நடந்துகொண்டேயிருந்தோம். எங்களைச் சுற்றித் தலை உயரத்துக்கு வளர்ந்திருந்த காட்டுச் செடிகள், அதுதான் வேண்டாத, துருப்பிடித்த எஃகு, இரும்பு ஓட்டை உடைசல்களைக் குவியல் குவியல்களாய்க் குவித்துச் சேர்த்திருக்கும் இடம். நசுங்கிப்போன பல ரயில் பெட்டிகள் பக்கவாட்டில் கவிழ்ந்து கிடந்தன. அவை ஏற்றிவந்த எஃகு இரும்பு ஓட்டை உடைசல்கள், பெட்டிகளின் அருகிலேயே மைதானத்தில் சிதறிக்கிடந்தன. இன்னும் கொஞ்சம் நடந்தபோது எஃகு, இரும்புகளின் நடுவே கூட்டங்கூட்டமாகக் குந்தியமர்ந்து, சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களைக் கண்டோம். உருக்கும் உலைகளிலிருந்து கிளம்பிய தீப்பிழம்புகள் அவர்களது முகங்களை ஒளிரும் சிவப்பாக மாற்றியிருந்தது. அது சாப்பாட்டு நேரம். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இறைச்சி மோதகம், சர்க்கரைவள்ளிக் கிழங்கோடு முட்டைகள். அவர்களின் கன்னங்கள் பொன்னுக்குவீங்கி போலப் புடைத்துப் பருத்திருந்ததைப் பார்க்கையில் அவர்களின் உணவு மிகவும் ருசியாக இருந்திருக்குமென்று தெரிகிறது. ஆனால், அந்த இறைச்சி மோதகம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, முட்டையிலிருந்து எழுந்த வாசம் எனக்கு நாய் மலத்தை விட மோசமானதாக இருந்தது. அது எனக்கு வயிற்றைப் புரட்ட, அதைத் தவிர்க்க நான் காற்றின் எதிர்த்திசையில் ஓடினேன். அப்பொழுதுதான் ஒரு ஆணும் பெண்ணும் அந்தக் கூட்டத்திலிருந்து எழுந்து நின்று கத்தினார்கள் : ‘’ கௌஷெங்! ’’
முதலில் அவர்களைப் பார்த்ததும் நான் பயந்துவிட்டேன். ஆனால், அவர்கள் என் அப்பாவும் அம்மாவுமெனப் பிறகுதான் தெரிந்தது. அவர்கள் என்னை நோக்கித் தட்டுத் தடுமாறி வந்துகொண்டிருந்தார்கள். அவர்களென்ன, அய்யோ, அவ்வளவு கோரமாக, பயமுறுத்துவதாக இருக்கிறார்களெனத் தோன்றியது. குறைந்தபட்சம், அந்த `மழலையர் பள்ளி`யின் மூன்று வயதான பெண்களைப் போலவாவது அச்சமூட்டும் தோற்றத்திலிருந்தனர். அவர்களின் உடல் நாற்றம், நாய் மலத்தைவிட மோசமானதாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதனாலேயே, அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபோது நான் அப்படியே திரும்பி ஓடத் தொடங்கினேன். அவர்கள் என் பின்னாலேயே விடாமல் துரத்தி வந்தனர். அவர்களைத் திரும்பிப் பார்க்கும் துணிச்சல் எனக்கு இல்லை. அதனால் நான் திரும்பவே திரும்பாமல் ஓடிக்கொண்டே யிருந்தேன். ஆனால், அவர்களின் கைகள் என் உச்சந்தலையில் பட்டதை உணர்ந்தேன். அப்போதுதான், என்னுடைய நல்ல நண்பன், இரும்புக்குழந்தை என்முன்னால் எங்கேயோ கொஞ்சம் தள்ளிநின்று என்னைக் கூப்பிடும் குரல் கேட்டது : ‘’மரப்பாச்சி, டேய், மரப்பாச்சி, உடைசல் இரும்புக்குவியலுக்குள் ஓடிவிடு!’’
அவனுடைய கருஞ்சிவப்பு உடல் ஓட்டை உடைசலிரும்புக் குவியலில் ஒரு கணம் மின்னித்தெரிந்தது. ஆனால் மறுகணமே மறைந்துவிட்டது. நான் அந்த இரும்புக் குவியலுக்கு ஓடி வாணலிகள், களைக்கொத்திகள், கலப்பைக் கொழுக்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் இன்னும் பலவற்றின் மீது மிதித்து, ஏறி அந்தக் குவியலின் உச்சிக்கு வந்துவிட்டேன். இரும்புக்குழந்தை ஒரு குழாய்க்குள்ளிருந்து கைகளை அசைத்துக் காட்டி அங்கே வந்துவிடுமாறு அழைத்தான். சட்டெனத் தோள்களைக் குறுக்கி அதனுள் புகுந்துவிட்டேன். அங்கு இரவைப்போல் இருட்டாக இருந்தது; துருவின் நறுமணம் என்னைச் சுற்றிச்சூழ்ந்தது. என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. ஆனால், ஒரு பனிக்கட்டியாகக் குளிர்ந்த ஒரு கை என் கையைப்பிடித்து இழுப்பதை என்னால் உணரமுடிந்தது. அது இரும்புக்குழந்தைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். ‘’ பயப்படாதே, என் பின்னாலேயே வா, இங்கே அவர்களால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது.’’ என அவன் கிசுகிசுத்தான்.
அதனால், நான் அவன் பின்னாலேயே தவழ்ந்தேன். அந்தக் குழாய் வளைந்தும் நெளிந்தும் திரும்பியும் என்னை எங்கே கொண்டுசேர்க்குமென எனக்குத் தெரியவில்லை. அதனாலேயே வெளிச்சம் கண்ணில்படுகிற வரை அவனைத் தொடர்ந்து தவழ்ந்துகொண்டிருந்தேன். குழாய் முடிந்த இடத்தில் இரும்புக் குழந்தையைத் தொடர்ந்து நானும் வெளியேறினேன். அது ஒரு கைவிடப்பட்ட இராணுவ டாங்கியின் மிதிகட்டைப் படிக்கட்டுகளாக இருந்தது. அதிலேயே நாங்கள் ஊர்ந்து ஊர்ந்து கோபுர மேற்கூரையிட்ட கூண்டுக்கு ஏறினோம். வெள்ளை நிறத்தில் ஐந்துமுனை நட்சத்திரங்கள் தீட்டப்பட்டிருந்த அந்தக் கோபுரக் கூண்டிலிருந்து துருவேறிப்போன ஒரு பீரங்கியின் குழித்தழும்புகள் அடர்ந்து, பரந்திருந்த குழாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் குறிபார்த்து நீட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சிறுகோபுரக்கூண்டுக்குள் சென்றுவிட விரும்புவதாக இரும்புக்குழந்தை கூறினான். ஆனால், அதன் தாழ்ப்பாள் துருவேறி அடைத்துக்கொண்டிருந்தது. ‘’அந்தத் திருகாணிகளைக் கடித்து எடுத்துவிடலாம்.’’ என்றான், இரும்புக்குழந்தை.
முட்டுக்கை, முழங்கால் மூட்டுகளில் நின்றுகொண்டிருந்த நாங்கள் அந்தத் தாழ்ப்பாளைச் சுற்றி, அதிலிருந்த துருப்பிடித்த ஆணிகள் அனைத்தையும் கடித்தெடுத்து, மென்று தின்றுவிட்டோம். கடைசியாக அந்தத் தாழ்ப்பாளை உடைத்துச் சுழற்றி எறிந்தோம். அந்தக் கோபுரக் கூண்டு, நன்கு முற்றிப் பழுத்த பீச் பழங்கள் போன்ற மென்மையான ஒரு உலோகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒருவாறாக உள்ளே நுழைந்ததும், மென்மையான, பஞ்சு போன்ற இரும்பு இருக்கைகளில் அமர்ந்தோம். அதிலிருந்த ஒரு சிறு திறப்பினை, அது வழியாக என் பெற்றோரைப் பார்க்க முடிவதை, இரும்புக் குழந்தை காட்டினான். அவர்கள் தூரத்திலிருந்த ஒரு ஓட்டை உடைசல் இரும்புக் குவியலின் மீது தவழ்ந்து ஏறிக்கொண்டிருந்தனர். ஏறும்போதே, கையில் கிடைத்த பொருட்களைச் சுற்றிவர எறிந்ததில் ஏற்பட்ட `க்ளங்கிளாங்` சத்தத்தோடு அவர்களின் கண்ணீர்க் கூச்சலும் கலந்து ஒலித்தது.
‘’ கௌஷெங், கௌஷெங், வந்துவிடு மகனே, வெளியே வந்துவிடு, இந்த இறைச்சி மோதகம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முட்டை … எல்லாவற்றிலும் கொஞ்சம் சாப்பிடு….’’
அவர்கள் யாரோ வேற்றாட்களாக எனக்குத் தோன்றினர். அதிலும் இறைச்சி மோதகம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முட்டையைச் சாப்பிடத் தூண்டி, என்னை ஆசைகாட்டி மயக்க முயற்சித்தபோது, எனக்கு வெறுப்பும், ஏளனமும் தான் தோன்றியது.
கடைசியாக என்னைத் தேடுவதை விட்டுவிட்டுத் திரும்பிச்சென்றனர்
கோபுரக்கூண்டுக்குள்ளிருந்து தவழ்ந்து வெளியேறிய நாங்கள், பீரங்கிக் குழாயின் மீது இருபக்கமும் கால் போட்டு அமர்ந்தோம். அங்கிருந்து சில உலைகள் அருகிலும், இன்னும் சில தூரத்திலுமாக அமைந்திருந்தன. அவற்றிலிருந்து தீப்பிழம்புகள் குதித்தெழுவதையும் உலைகளைச்சுற்றி தொழிலாளர்கள் சுறுசுறுப்பாக, வேகவேகமாகச் சுற்றி இயங்குவதையும் காண்பதற்கு ஒரு மிகமிக அருமையான இடமாக அது இருந்தது. அவர்கள் இரும்பு வாணலிகளை எடுத்து, ஒன்று, இரண்டு, மூன்று எனச்சொல்லிவிட்டு, மேலே தூக்கியெறிந்து, பின்னர், அவை கீழே தரையில் மோதி உடைந்து சிதறுவதைக் கவனித்தார்கள். பின்னர், அவற்றைச் சம்மட்டிகளால் அடித்து நொறுக்கிச் சிறுசிறு துண்டுகளாக்கினார்கள். சுட்டெடுக்கப்பட்ட இரும்புத் துகள்களின் இனிய மணம் காற்றில் மிதந்து வந்தது. என் வயிறு மெல்ல உறுமி இரைந்தது. என் மனத்துக்குள் என்ன ஓடுகிறதெனச் சரியாக உணர்ந்த இரும்புக்குழந்தை, ‘’ ஏய், மரப்பாச்சி, வா, அந்த வாணலிகளில் ஒன்றை எடுத்து வருவோம். இரும்பு வாணலிகள் மிகமிகச் சுவையானவை.’’ என்றான்.
ஒரு பெரிய இருப்புவாணலியைத் தேர்வுசெய்த நாங்கள் அந்த இடத்தின் உலைவெளிச்சத்துக்குள், மெல்லப் பதுங்கி நுழைந்து, வாணலியைத் தூக்கிக்கொண்டு ஓடும்போது பார்த்த மனிதர்களின் அதிர்ச்சியில் அவர்கள் கைச்சம்மட்டிகள் தாமாகவே தரையில் அதிர்ந்து விழுந்தன. அவர்களில் சிலர் ஓட்டம் பிடித்தனர்.
‘’ இரும்புப் பேய்கள்!’’ அவர்கள் ஓடிக்கொண்டே கத்தினார்கள். ‘’ இரும்புப் பேய்கள் வந்துவிட்டன!’’
அதற்குள்ளாக, நாங்கள் ஓட்டை உடைசல் இரும்புக் குவியலின் உச்சிக்கு அதைக் கொண்டுவந்து சாப்பிடக்கூடிய அளவுக்கான துண்டுகளாகவும் உடைத்துத் தின்னவும் தொடங்கிவிட்டோம். அது இரும்புக் கம்பியை விடவும் அதிக ருசியாக இருந்தது.
இரும்புவாணலியை நாங்கள் விரும்பித் தின்றுகொண்டிருந்தபோது, உறையிட்ட கைத்துப்பாக்கி ஒன்றை இடுப்பில் செருகி ஊனமுற்ற காலுடன் ஒருச்சாய்த்து நின்ற ஒருவன் `இரும்புப்பேய்கள்` எனக்கத்தியவர்களைச் சவுக்காலடிக்காத குறையாகத் திட்டுவதைக் கண்டோம்.
‘’வேசை மகன்களா,’’ எனத் திட்டினான். ‘’ உங்கள் பாழாய்ப்போன வதந்திகளால் பெரிய தொல்லை! ஒரு நரி பேயாக மாறலாம், அப்படியே மரமும் ஆகலாம். இரும்பு பேய்களாக மாறியதென்று யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா?’’
அந்த மனிதர்கள் ஒரே குரலில் பதிலளித்தார்கள் :
‘’ அரசியல் ஆசிரியர் அவர்களே, நாங்கள் பொய் சொல்லவில்லை. நாங்கள் சில இரும்பு வாணலிகளை நொறுக்கிக் கொண்டிருக்கும்போது முழுவதுமாகத் துருவேறியிருந்த ஓரிணை இரும்புக் குழந்தைகள் நிழலிலிருந்து பாய்ந்து வந்து ஒரு வாணலியைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டனர். அவர்கள் அப்படிக்கப்படியே மறைந்துவிட்டார்கள்.’’
‘’ அவர்கள் எந்தப் பக்கமாக ஓடிப் போனார்கள்?’’ எனக் கேட்டான், அந்த ஊனக்கால் மனிதன்.
‘’ ஓட்டை உடைசல் இரும்புக் குவியல்’’ எனப் பதிலளித்தனர், அந்த மனிதர்கள்.
‘’ அடங்கோக்….. வதந்திக் கும்பல்களா!’’ என்றான், அந்த ஊனக்கால் மனிதன். ‘’இந்த மாதிரிக் குடியிருப்பேயில்லாத பாழாங்கரையில் குழந்தைகள் எப்படி இருக்க முடியும்?’’
‘’ அதனால்தானே நாங்களும் பயந்துகிடக்கிறோம்.’’
அந்தக் காலூன மனிதன் துப்பாக்கியை உருவி ஓட்டை உடைசல் இரும்புக் குவியல் மீது மூன்று முறை சுட்டான் – க்ளாங், க்ளாங், க்ளாங். ஓட்டை உடைசல் இரும்புகளிலிருந்து பொன்னிறப் பொறிகள் பறந்தன.
இரும்புக் குழந்தை சொன்னான் :
‘’ மரப்பாச்சி, அவனிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கித் தின்றுவிடலாமா, நீ என்ன சொல்கிறாய்?’’
நான் சொன்னேன் :
‘’ அவனிடமிருந்து பிடுங்க முடியாமல் போனால்?’’
இரும்புக் குழந்தை சொன்னான் :
‘’ இங்கேயே இரு, அதைக் கொண்டுவர நான் போகிறேன்.’’
ஓட்டை உடைசல் இரும்புக் குவியலிலிருந்து இரும்புக் குழந்தை சிறிது இறங்கிக் காட்டுச்செடிகளினூடே வயிற்றாலேயே ஊர்ந்து சென்றான். வெளிச்சத்தில் நின்றவர்களால் அவனைக் காண முடியாது; ஆனால், என்னால் அவனைப் பார்க்க முடிந்தது. அந்தக் காலூன மனிதனின் பின்னால் அவன் ஊர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும், நான் ஒரு இரும்புத் தட்டினை எடுத்து வாணலிமீது `டமாரெ`ன அடித்து ஒலியெழுப்பினேன்.
‘’ கேட்டீர்களா?’’ காலூன மனிதன் கூச்சலிட்டான். ‘’ இரும்புப் பேய்கள் அங்கேதான் இருக்கின்றன!’’
அந்தக் காலூன மனிதன் சுடுவதற்காகக் கைத்துப்பாக்கியை உயர்த்தவும், இரும்புக்குழந்தை துள்ளிப்பாய்ந்து அதைப் பறித்தான்.
அங்கிருந்த மனிதர்கள் கூச்சலிட்டார்கள் : ‘’ இரும்புப் பேய்!’’
காலூன மனிதன் அப்படியே பின்னால் சாய்ந்து விழுந்தான். ‘’ தூக்கு! தூக்குங்கய்யா!’’ என அவன் வெறிக்கூச்சலிட்டான். ‘’ பிடி, பிடி, அந்த வேவுகாரனைப் பிடி……’’
கையில் துப்பாக்கியுடன் இரும்புக்குழந்தை தவழ்ந்தே என் பக்கத்தில் வந்துவிட்டான்.
‘’ அருமைதானே?’’ அவன் கேட்டான்.
அவன் எவ்வளவு பெரிய மாவீரனென, நான், கூறியதில் அவனுக்கு ஏக மகிழ்ச்சி. அவன் துப்பாக்கிக் குழலை மட்டும் தனியாகக் கடித்தெடுத்து என்னிடம் நீட்டித் ‘’தின்னு’’ என்றான்.
நான் ஒரு கடி கடித்தேன். அது துப்பாக்கி மருந்தைப் போலச் சுவைத்தது. அதைத் துப்பிவிட்டு, ‘’ இதன் சுவை பயங்கர மோசமாக இருக்கிறது. இது நல்லதே இல்லை.’’ எனக் குற்றம் சொன்னேன்.
அவனும் சுவைத்துப் பார்ப்பதற்காகத் துப்பாக்கியின் கைப்பிடியில் நன்கு பெரியதாக ஒரு கடி கடித்தான். ‘’ நீ சொன்னது சரிதான்’’ என்ற அவன், ‘’ அது நல்லதில்லை தான். நான் அதை அவனிடமே விட்டெறியப் போகிறேன், ‘’ என்றும் கூறினான்.
அவன் கையிலிருந்த துப்பாக்கியைக் காலூன மனிதனின் காலடியில் விழுமாறு சுழற்றியெறிந்தான்.
நானும் பாதி தின்றிருந்த குழலை அதே இடத்தை நோக்கி விட்டெறிந்தேன்.
காலூன மனிதன் துப்பாக்கியின் இரண்டு துண்டுகளையும் கையிலெடுத்துப் பார்த்துவிட்டு `ஹா` என வாய்பிளந்தான். பின்னர் அய்யோ, அய்யோவென ஊளையிடத் தொடங்கினான். அவற்றைத் தூக்கியெறிந்துவிட்டு, காலை இழுத்து இழுத்து அவனால் முடிந்த அளவு வேகமாக ஓடத் தொடங்கினான். ஓட்டை உடைசல் குவியலில், உட்கார்ந்த இடத்திலிருந்தே தலையைத் தூக்கி அவனின் ஓட்டவேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.
பின்னிரவில், ஒடுக்கமான வெளிச்சக் கதிர் ஒன்று இருட்டைக் கிழித்துத் தென்மேற்கை நோக்கி, தடதடக்கும் பேரொலியோடு வந்தது. இன்னொரு தொடர்வண்டி வந்துகொண்டிருந்தது.
அந்தத் தொடர் வண்டி புகை கக்கிக்கொண்டே பாதையின் முடிவுக்குச் சென்று அங்கே நின்றிருந்த மற்றொரு தொடர்வண்டியோடு மோதியதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். தொடர் பெட்டிகள் ஒன்றோடொன்று மோதி அக்கார்டியனாகச் சப்பிப் பக்கவாட்டில் சரிந்து அவற்றில் ஏற்றப்பட்டிருந்த இரும்பினைப் பெருஞ்சத்தத்தோடு பாதையின் இருமருங்கும் கொட்டிச் சிதறின.
அதன் பிறகு அங்கே வேறு தொடர் வண்டி வராது. தொடர்வண்டியின் பாகங்களில் நுசியானது ஏதாவது இருக்கிறதாவெனக் கேட்டேன். சக்கரங்கள்தாம் மிகமிக அருமையானவையென்றான், அவன். அதனால், நாங்கள் அவற்றில் ஒன்றை எடுத்துத் தின்னத் தொடங்கிப் பாதி முடித்த வேளையில் நிறுத்தினோம்.
உருக்கிய புதிய இரும்பு ஏதாவது கிடைக்குமாவென உலைகளில் சென்று தேடினோம். ஆனால், அவற்றிலெதுவும், நாங்கள் எப்போதும் வழக்கமாகச் சாப்பிடும் துருப்பிடித்த இரும்பின் சுவையளவுக்கு நன்றாக இல்லை.
நாங்கள் பகலில் உடைசலிரும்புக் குவியலின் மேலேயே படுத்துறங்கினோம். இரவில் இரும்பு உருக்குபவர்களைப் பயமுறுத்து ஓடச்செய்து, அவர்கள் வாழ்க்கையே வெறுத்துப்போகுமாறு தொல்லைகொடுத்தோம்.
ஒரு இரவில் வாணலிகளை நொறுக்கிக்கொண்டிருந்தவர்களைப் பயமுறுத்துவதற்காக வெளியில் சென்றோம். உலையொன்றின் தீப்பிழம்புகளுக்குள் ஒரு துருப்பிடித்த சிவப்பு வாணலியைக் கண்டுவிட்டு அதை நோக்கி ஓடினோம். அதன் மீது கைவைத்தோமோ இல்லையோ, `ஹுஸ்` ஸென்ற சத்தத்தோடு ஒரு கயிற்று வலை எங்கள் மீது விழுந்தது.
நாங்கள் அந்த வலையைப் பல்லால் கடித்துத் தாக்கினோம். ஆனால், எவ்வளவுதான் கடுமையாக முயற்சித்தாலும் எங்களால் கயிற்றைக் கடித்தெறிய முடியவில்லை.
‘’ நாங்கள் பிடித்துவிட்டோம்,’’ அவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் கத்தினார்கள். ‘’ அவற்றைப் பிடித்தே விட்டோம்!’’
அதன்பின்னர், எங்கள் துருப்பிடித்த உடல்மீது உப்புத்தாளை வைத்துத் தேய்க்கத் தொடங்கினர். அது வலித்தது, வலித்தது, எங்களுக்குப் பெரிய நரகமாக இருந்தது.


மலைகள் இணைய இதழ் பிப்ரவரி 16, 2013 இல் வெளியானது.


கோடையில் ஒரு மழை, ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014 முதல் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.





‘’









No comments:

Post a Comment