Thursday 14 January 2016

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - கறி - Curry

கறி ஒரு சொல் - கறி
 கறுப்பாக இருப்பதாலும் உருண்டையாக இருப்பதாலும் கறகற என உடைவதாலும் சங்க காலத்தில் கறி என்ற சொல் மிளகுக்குப் பெயராகிப் பின்னர் கறியிட்ட இறைச்சிக்கும் கறி என்றே பயன்பட்டுப் பிற்காலத்தில் மிளகு பயன்படுத்திச் செய்யப்பட்ட இறைச்சி, மீன், காய்கள், இலைகள், பூக்கள், தண்டுகள், கிழங்குகள் போன்றவற்றாலான, குழம்பு, கூட்டு, பொரியல், அவியல் பச்சடி போன்ற துணை உணவு வகைகளுக்கும் பொதுப்பெயராகப் புழங்கி வருகிறது. கறித்தேங்காய், கறிச்சக்கை, (கறிப்பலா) கறிமாங்காய், கறி மீன், கறிவேப்பிலை, கறிகாய், கறிமசாலை, கறி உப்பு, (உணவுக்குப் பயனாகும் உப்பு) எனக் கறி வைக்கப் பயன்படும் பொருட்களைக் குறிக்கவும் முன்னொட்டானது. உப்பிட்ட கறி, புளிக்கறி, புளியிலாக்கறி, கீரைக்கறி, மீன்கறி, இறைச்சிக்கறி என கறியில் சேர்க்கப்பட்டுள்ள முக்கியப் பொருளைப் பின்னொட்டாக நின்று உணர்த்துவதாயிற்று. மீன் மாமிசம் போன்ற உணவு வகைகளுக்கு மச்சக்கறி என்றும் தாவர வகை உணவுவகைகளுக்கு மரக்கறி என்றும் வழங்குவதாயிற்று. கறியின் ருசியிலும் மணத்திலும் மயங்கிப் போன ஆங்கிலேயர் கறியை விட்டுவிட மனமின்றி curry ஆக்கி ஃபிஷ்கறி, மட்டன்கறி, சிக்கன்கறி என்றே அழைக்கின்றனர்

No comments:

Post a Comment