Saturday, 9 January 2016

தைவான் தேவதைக்கதை - சூரிய சந்திர ஏரி - The Sun Moon Lake

சூரிய சந்திர ஏரி


வெகு காலத்துக்கு முன் தைவானின் மத்தியப் பகுதி அருகிலுள்ள மலைக் குன்றுகளில் ஷாவோ என்னும் உள்ளூர்ப் பழங்குடி மக்கள் வாழ்ந்தனர். அவர்கள், ஆண்களும் பெண்களும் நல்ல உழைப்பாளிகளாக இருந்தனர். நிலத்தில் விவசாய வேலை செய்வது அவர்களுக்கு எப்போதுமே பிடித்தமானதாக இருந்தது. உழைக்கும் மக்களை யாருக்குத்தான் பிடிக்காது? அதனாலேயே, சூரியனுக்கும் அந்த மக்களை வெகுவாகப் பிடித்திருந்தது. அவன் எப்போதும் மிதமான வெப்பத்தை அந்த மலைகளின் மீது அள்ளி வீசிக் கொண்டிருந்தான். நிலவுக்கோ அந்த மலைகள் மீதும் ஷாவோ மக்கள் மீதும் கொள்ளை அன்பு. அது அங்கு பொன்னிறக் கதிர்களை மட்டுமே வீசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. முழுநிலவு நாட்களில் மலைகளின் அழகில் மயங்கி நிலவு தயங்கித் தயங்கி நகரும். தூரத்துக் கடலுக்கும் அந்த மலைகள் மீதும் மக்கள் மீதும் அலாதிப் பிரியம். அது எப்போதும் ஷா……வோ…..என இசைத்துக்கொண்டேயிருந்தது. மழையும் அந்த மக்கள் மீது எப்போதும் கருணை கொண்டிருந்தது. ஷாவோக்கள் அவர்களுக்கு விருப்பமான நாட்களில் மீன் பிடிக்கச் செல்வார்கள்; அல்லது  வேட்டைக்குச் செல்வார்கள். வேட்டையாடுவதற்குப் பெரும் விசிறிக் கொம்பு கடமான்களோடு தோற்கொம்புச் செரோ மான்களும் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. கடமான்கள் கோடையில் செம்பழுப்பாக இருக்கும் தங்கள் நிறத்தைப் பனிக்காலத்தில் இருண்ட பழுப்பாக்கிக் கொண்டு திரியும். அவற்றின் இறைச்சியைச் சமைத்த பிறகும்கூட மயக்கும் புல்வாசம் சுண்டி இழுக்கும். நீர்நிலைகளில் வண்ணவண்ணப் பெரு மீன்கள் எப்போதும் நீந்திக்கொண்டிருந்தன. ஷாவோக்கள் தூண்டில்களை எறிந்தாலே போதும்; பெரிய பெரிய மீன்கள் மாட்டின. அவர்கள் வீசிய வலைகளில் விதம் விதமான மீன்கள் தாமாகவே வந்து விழுந்து, நிறைந்தன.  கள்ளம், கபடமற்ற அந்த மக்கள் எந்தத் துன்பமும் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
அந்த மலைமக்களில் டாஜியான்ஜே என்ற இளைஞனும் அவன் மனைவி ஷுய்ஷீஜீயும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்குக் கொஞ்சி மகிழ ஒரு குழந்தை இல்லையென்ற குறையைத் தவிர வேறெந்தக் குறையும் இல்லை. குழந்தை ஏக்கம் அவர்கள் இதயத்தைத் துளைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் தங்கள் சோகத்தை ஒருபோதும் வெளிக் காட்டியதில்லை. அவர்கள் தங்கள் இனமக்களைப் பெரிதும் நேசித்தார்கள். யாரைக் கண்டாலும் ஏதாவது ஓரிரு வார்த்தைகளாவது பேசாமல் செல்வதில்லை. குறைந்தபட்சம் ஒரு புன்னகையாவது அவர்கள் முகத்தில் ஒளி வீசி முகமன் கூறும். இனிய சொற்களை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தார்கள். கடுஞ்சொற்கள் பேசி யாருமே கேட்டதில்லை.  அந்த இன்முகத் தம்பதிகளை ஷாவோ மக்கள் எல்லோரும் நேசித்தனர்.
அந்தத் தம்பதிகள் அவர்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் மக்காச் சோளம், சேப்பங்கிழங்கு, நெல் பயிரிட்டனர். அவர்கள் எந்தக் காரியம் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யும் பழக்கமுள்ளவர்கள். அந்த மலைக்குன்றுகளில் அவர்களின் வயல்கள் மட்டும் தனித்த அழகுடன் காட்சியளித்தன. அந்த வழியாகச் செல்லும் யாராக இருந்தாலும் ஒரு நிமிடம் நின்று அதன் அழகைக் கண்டு வியந்து அந்தத்  தம்பதிகளின் உழைப்புத் திறனை மனத்துக்குள்ளாவது பாராட்டாமல் செல்ல முடியாது. அவர்கள் மக்காச் சோளம், சேம்பு நடுவதற்காகப் பாத்தி பிடிக்கும் அழகே தனிதான். மற்ற வயல்களின் பாத்திகளைவிட ஒரு அங்குலமாவது உயரம் அதிகமாகத்தான் இருக்கும். அதோடு பாத்திகள் எல்லாமே ஒரே உயரத்தில் ஒரே கனத்தில் கற்கள் கட்டிகள் இல்லாமல் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும். பயிருக்குள் ஒரு களையைக்கூடக் காண முடியாது. அவர்கள்தான் அவ்வப்போது களைகளைப் பிடுங்கிவிடுவார்களே, பின் எங்கிருந்து களை முளைக்கும்? விலங்குகளின் கழிவுகள், தழைகள் என உரமிடுவதிலும் அவர்கள் எப்போதும் சளைப்பதில்லை. இளம்பயிர் செழித்துக் கிளைத்திருக்கும்போது அந்த வயல்களை நீங்கள் பார்த்தீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன், அது உங்கள் கண்களுக்குள்ளேயே ஆண்டாண்டுக்கும் நிலைத்திருக்கும். அவர்களின் உழைப்பில் தங்கநிற மக்காச் சோளங்கள் பெரிய பெரிய கதிர்களாக விளைந்தன. மாலைச் சூரியனின் பொற்கிரணங்களில் அந்த மஞ்சள் கதிர்களைப் பார்க்கும்போது மண்ணுக்குள்ளிருந்த தங்கம் முழுவதையும் இந்தச் செடிகள் இழுத்துக்  கொண்டனவோ என  எண்ணத் தோன்றும். யானைக்காதுச் சேப்பங்கிழங்குச் செடிகளில் நல்ல கை மூட்டு அளவுக்குப் பெரிய கிழங்குகளாக ஊழ்த்தன. சேம்பு அறுவடைக்காலத்தில் கிழங்குகளைக் குவித்து வைத்திருப்பார்கள், பாருங்கள், அத்தனை அழகாக இருக்கும். அதைக் காணும் எல்லோருக்குமே ஒரு மகிழ்ச்சி, பெருமிதம் தோன்றும். அவர்கள் நிலங்களில் விளைந்த நெல்மணிகள் பொன்னைத் தோற்கடித்தன. அந்த நெல்லைக் குத்திக் கிடைத்த அரிசி வேகும்போது அப்படியொரு மணம்; அப்படியொரு ருசி; வெறும் சோற்றை அப்படியே மென்று விழுங்கச் சொல்லும். அவர்கள் பகல் முழுவதும் அநேகமாக நிலத்தில் வேலை செய்வதிலேயே கழித்தனர். கதிரவன் மேற்கில் மறையும் அழகைக் கண்டு களித்த பிறகுதான் வீட்டுக்குத் திரும்புவார்கள். முழுநிலவு நாட்களில் இருவரும் வெளியே அமர்ந்து மலையின் அழகைக் கண்டு மகிழும்போது ஷுய்ஷீஜீ சொல்வாள். ‘’ நான் உன்னைக் காதலிப்பது போலவே நிலவுக்கு நம் மலையின் மீது பெருங்காதல்.’’ டாஜியான்கே சொல்வான்: உன் கண்களில் சூரிய உதயத்தைக் காண்கிறேன். ஷாவோ மக்களைப் போலவே சூரியனுக்கும் மலர்ந்த முகம்.  
கதிரொளி பரந்து விரிந்து, மகிழ்ச்சியை விதைத்த ஒரு நாள் காலையில் ஷாவோ மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வயல் வேலைகளில் மூழ்கியிருந்தபோது ஒரு பயங்கரமான காதைப்பிளக்கும் சத்தம் கேட்டது. ‘’பூம்!’’ பூமி படு வேகத்தில் அதிர்ந்தது. எல்லோரும் நிலத்தில் அப்படியப்படியே குப்புற விழுந்து மண்ணோடு மண்ணாகத் தலைவைத்துப் படுத்துக்கொண்டனர். தலையைத் தூக்கிப் பார்த்தனர்; ‘’ஐயோ, இதென்ன, சூரியனைக் காணவில்லை.’’ யாருக்கும் எதுவும் புரியவில்லை. எல்லோரும் பயத்தில் அலறினர். அவர்களின் கண் முன்னாலேயே அந்த ஒளிமிகுந்த பிரகாசிக்கும் சூரியன் மறைந்துபோனதை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. நில அதிர்ச்சி நின்றதும் எழுந்தனர். இருட்டின் நடுவில் அவரவர் வீடுகளைக் கண்டு பிடிக்கத் தட்டுத் தடுமாறினர். ஒருவருக்கொருவர் உதவி, எப்படியோ வீடுகளைச் சென்று சேர்ந்து கதவை மூடிக்கொண்டனர். வேறென்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்துகொள்ள முடியவில்லை.
நல்ல வேளையாக இரவில் முழுநிலவு வந்தது. எல்லோரும் வீடுகளிலிருந்து வெளியே வந்தனர். நிலவின் வெளிச்சத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் காண முடிந்தது. ஏதோ கொஞ்சம் வேலையும் செய்யமுடிந்தது. திடீரென்று ஒரு பெருஞ்சத்தம் கேட்டது. ‘’பூம்!’’ அந்தப் பயங்கர சத்தத்தில் அநேகமாக எல்லா வீடுகளும் அதிர்ந்து விழுந்தன. ‘’ஐயோ, இதென்ன, நிலவையும் காணவில்லை! நாம் என்ன செய்ய முடியும்?’’ எல்லோரும் பெருங் கூச்சலிட்டு அலறினர். அச்சத்தில் விதிர்விதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நின்றனர். இது ஏன், இப்படி நிகழ்ந்ததென்று யாருக்கும் எதுவும் புரியவில்லை. `ஓ` வென்று அழுதனர்.
அன்றிலிருந்து வானத்தில் கதிரையும் காணவில்லை; நிலவையும் காணவில்லை. அவை வானத்தில் தோன்றும் இடமும் தெரியவில்லை; மறையும் இடமும் தெரியவில்லை. அவை தோன்றினால்தானே தெரிவதற்கு?  உலகம் முழுவதையும் இருள் மூடிக்கொண்டது. உயிர் பிழைத்தாக வேண்டுமே! மங்கித் தெரியும் கைவிளக்குகள் கொண்டு திசைகளைத் தேடினார்கள்; திசைகளுமா மறைந்துபோய்விட்டன! வயல்களிலிருந்த பயிர்கள் சிறிது சிறிதாக வாடி, அழியத் தொடங்கின; நீர்நிலைகளில் மீன்கள் ஆழத்துக்கும் ஆழமாகச் சென்று பதுங்கி விட்டன; பூக்கள் எதுவும் மலரவில்லை; புல் பூண்டுகள் கருகித் தரையோடு தரையாகிவிட்டன; மரங்கள் விரைத்துப் பாறி நின்றன. காடுகளில் விலங்குகளே இல்லை போல் தோன்றியது. ஒன்றிரண்டு கண்ணில் பட்டாலும் அவை உயிரற்றுத் தெரிந்தன. சப்தங்கள் கூடக் கேட்கவில்லை! காற்று கூட அசைந்ததாகத் தெரியவில்லை. எத்தனை நாட்களுக்குத்தான் கையிருப்பு உணவைக்கொண்டு சமாளிக்க முடியும்? அவர்களிடம் அப்படியொன்றும் பெரிய அளவுக்கு உணவு சேமிக்கும் பழக்கமும் இல்லை. ஷாவோக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர்:  ‘’ சூரிய வெளிச்சம் இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்துவிட முடியும்? சூரிய வெளிச்சம் இல்லாமல் எந்தப் பயிர் வளரும், எந்த உயிர் செழிக்கும்?’’
இனிமேல் மக்காச் சோளப் பயிரில் தங்கநிற மணிச்சோளங்கள் தோன்றுமா என்ன? எல்லாமே இருண்டு, மனம் தொய்ந்த ஒரு நாளில் ஷுய்ஷீஜீ, ‘’ இப்படியே போனால், நாமெல்லாம் எதைத் தின்பது? எப்படி உயிர் பிழைப்பது? உடனடியாகச் சூரியன் வரவேண்டும். இல்லையென்றால், நம் கிராமத்து மக்கள் எல்லோரும் பசியால் இறந்துவிடுவார்கள். நாம் எதையாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.’’ என்றாள், அவள் கணவனிடம்.
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த டாஜியான்ஜே, தலையை உயர்த்தி ஆமென அசைத்து, ‘’ சூரியனும் சந்திரனும் எங்காவது ஆழ்ந்த பள்ளத்தாக்கில் விழுந்திருக்க வேண்டும். நாம் போய்த் தேடுவோம்.’’ என்றான்.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் அவர்கள் இருவரும் அடர்ந்த காட்டை நோக்கிக் கதிரையும் நிலவையும் கண்டுபிடித்தே தீர்வது என்ற முடிவுடனேயே கிளம்பினர். இருவரும் ஆளுக்கொரு சிறிய தீப்பந்தத்தை விளக்காகக் கையில் பிடித்துக்கொண்டு அதன் வெளிச்சத்தில் தைரியமாகச் சென்றனர். பந்தம் அணையும் நேரத்தில் புற்களைக்கொண்டு மற்றொரு பந்தம் தயாரித்துச் சென்று கொண்டேயிருந்தனர். எத்தனையோ மலைகள் ஏறி, ஆறுகள், காடுகளைக் கடந்தும் போய்க்கொண்டேயிருந்தனர். கதிரையும் நிலவையும் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்ற வெறி அவர்கள் நெஞ்சில் கனன்று கொண்டேயிருந்தது. அதனாலேயே அவர்கள் அத்தனை துன்பங்களையும் எதிர்கொண்டு போய்க்கொண்டேயிருந்தனர். பந்தங்கள் மேல் பந்தமாக எண்ணற்ற பந்தங்களைத் தயாரித்துத் தேடிச் சென்றனர். அவர்கள் கையில் கிடைத்த இலை தழை, கிழங்கு, பூச்சி, பொட்டுகளைத் தின்றனர். உலகம் இன்னும் இருட்டாகவே இருந்தது. கதிரும் நிலவும் மறைந்து கிடக்கும் இடம் குறித்து அவர்களுக்கு எந்த அடையாளமும் தெரியவில்லை.
கடைசியாக அவர்கள் இருவரும், ஒரு பெரிய மலை உச்சிக்கு வந்து சேர்ந்தனர். அங்கும் ஒரு உயரமான பாறை மீது ஏறி நின்று சுற்றிலும் பார்த்தனர். ஷுய்ஷீஜீ  வெகு தூரத்தில் மங்கலாக ஒரு வெளிச்சப் புள்ளியைக் கண்டாள்.
அவள் இருட்டுக்குள் கூர்ந்து பார்த்தபோதும் அந்தப் புள்ளியைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. சிறிது நேரம் சென்றதும்  வெகு தூரத்தில் அந்த வெளிச்சப்புள்ளி தெரிந்த இடம் ஒரு ஏரி எனக் கண்டுகொண்டாள். அவள், கணவனிடம் மலைக்கு எதிர்த்திசையைச் சுட்டிக் காட்டி, ‘’ பார்! அது ஒரு ஏரி. அந்த ஏரியில் மின்மினிப் பூச்சியைப்போல் ஒரு வெளிச்சம் மினுங்குவது தெரிகிறது பார். சூரியனும் சந்திரனும் அந்த ஏரிக்குள்தான் இருக்க வேண்டும். நான் நிச்சயமாகச் சொல்கிறேன். சூரியனும் சந்திரனும் அந்த ஏரிக்குள் தான் இருக்கின்றன.’’ என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
டாஜியான்ஜேக்கும் அந்த மினுங்கும் வெளிச்சம் புலப்படத்தொடங்கியதும் அவன்  அதிர்ந்து உற்சாகத்தில் கத்தினான். ‘’ ஆமாம்! ஆமாம்! அப்பாடா, ஒருவழியாகக் கண்டுபிடித்துவிட்டோம்.’’ என்றான். அவர்கள் ஏரியை நோக்கி ஓடினார்கள். நெருங்க, நெருங்க இரண்டு வெளிச்சப்புள்ளிகள் தெரிந்தன. அதுவும் அங்குமிங்குமாக மாறி, மாறி நட்சத்திரம் உருகி ஓடும்போது ஒரு வெளிச்ச ரேகை புலப்படுவது போலும் தோன்றியது. அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது. கடைசியாகத் தான் தெரிந்தது: கடல் போல் பரந்து கிடந்த அந்த ஏரியின் எதிரெதிர்க் கரையில் மலை உயரத்துக்கு எழும்பி நின்ற இரண்டு அதிபயங்கர டிராகன்கள் இரண்டு நெருப்புப்பந்துகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தன. சூரியனும் சந்திரனும்தான் அந்த நெருப்புப் பந்துகள்! அதைத் தான் அப்படி எறிந்து விளையாடிக்கொண்டிருந்தன!
‘’ இந்த டிராகன்களுக்கு விளையாட வேறு எதுவுமே கிடைக்கவில்லையா? இப்போதல்லவா தெரிகிறது, கதிரும் நிலவும் ஏன் மறைந்தனவென்று! இந்த டிராகன்கள் விளையாடுவதற்காகவே கதிரையும் நிலவையும் திருடியிருக்கின்றன.’’ இருவரும் பொருமினர். அவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே பைத்தியம் பிடித்தது போலாகியது. கடுமையான கோபம் மேலோங்கியது. அந்த டிராகன்களிடமிருந்து கதிரையும் நிலவையும் பிடுங்க வேண்டுமென ஆவேசம் கொண்டனர். என்றாலும் டிராகன்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. அந்த டிராகன்களைக் கொன்றுவிடவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அவற்றின் பயங்கரத் தோற்றம் அவர்களைப் பயமுறுத்தியதே! அருகில் சென்றால் நிச்சயம் அவர்களை விழுங்கிவிடும். அவர்கள் தங்கள் ஊர் மக்களை நினைத்தனர். கதிரையும் நிலவையும் மீட்காமல் ஊர் திரும்புவதில்லையென உறுதிகொண்டனர்.
இந்த டிராகன்களிடமிருந்து கதிரையும் நிலவையும் எப்படிக் கைப்பற்றுவதென நினைத்து நினைத்து மாய்ந்தனர். கடைசியில் ஒரு பாறை மீது அமர்ந்து நிதானமாக யோசிக்கத் தொடங்கினர். ஆனாலும் அவர்களுக்கு எந்த வழியும் புலப்படவில்லை. திகைத்துச் சோர்ந்தனர்.
திடீரென அவர்கள் அமர்ந்திருந்த பாறையின் அடியிலிருந்து வெண்புகை கிளம்பிக் கொண்டிருப்பதைக் கண்டு, அது வெடித்துவிடுமோவெனப் பயந்து, பதறி ஓடினர். சிறிது தூரம் சென்றதும் ‘’ ஏன் பயப்பட வேண்டும்’’ எனத் தைரியம் கொண்டு, மீண்டும் பாறைக்கே திரும்பி வந்தனர். அப்போதும் வெண்ணிறப்புகை வந்துகொண்டிருந்தது. டாஜியான்ஜே வெறி கொண்டதுபோல் திடீரென அந்தப் பாறையை நகர்த்த முயற்சித்தான். பாறை அசையவேயில்லை. சிறிது மூச்செடுத்துக் கொண்டு இருவரும் சேர்ந்து பலங்கொண்ட மட்டும் முயன்று தள்ளினர். பாறை அசைந்து நகர்ந்தது.
பாறை இருந்த இடம் ஒரு வளையின் நுழைவாயில் போலத் தெரிந்தது. அதன் வழியாகத்தான் புகை வந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் புகை வருவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அது ஒரு ஆழமான நீண்டு ஒடுங்கிய  சுரங்கப் பாதை என்பது பின்னர் தான் தெரிந்தது. அந்தச் சுரங்கப் பாதை முடியும் இடத்தில் யாராவது வசிக்கலாமென டாஜியான்ஜேக்குத் தோன்றியது. அவன், ‘’ வா, ஷீஜீ, பாதைக்குள் போய்ப் பார்ப்போம்.’’ என்றான்.
இருவரும் சுரங்கப்பாதையினுள் மிகுந்த எச்சரிக்கையும் திகிலுமாக அடியெடுத்து நடந்தனர். அந்தப் பாதை வளைந்தும் நெளிந்தும் ஆழமாகப் போய்க்கொண்டே இருந்தது. இருவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு மெதுவாக முன்னேறினர். ஆழம் செல்லச் செல்ல இருட்டு அதிகமானது. காற்றில் ஈரம் மிகுந்திருந்தது. தரை வழுக்கலாக இருந்தது. அந்தப் பாதை ஏரியின் அடியில் செல்கிறதோ என இருவரும் எண்ணினர். சிறிது தூரம் சென்றபின் வெகு தூரத்தில் நெருப்பு எரிவதையும் அதிலிருந்து எழுந்த சிவந்த வெளிச்சமும் அவர்கள் கண்களுக்குப் புலனாகியது.
மீண்டும் புகை மண்டலமாகத் தோன்றியது. திருமணம் மற்றும் விழாக்களின்  போது உணவு மொத்தமாகச் சமைக்கும்போது ஏற்படும் மணத்தை அவர்கள் நுகர்ந்தனர். அப்படி ஏராளமான உணவு வகைகள் சமைக்கப்படுவதன் காரணமும் அவர்களுக்கு விளங்கவில்லை. அவர்கள் நெருங்கிச் செல்லச் செல்ல அவர்கள் ஒரு பெரிய சமையலறைக்குள் நிற்பதையும் அங்கு தலை முழுதும் நரைத்த மூதாட்டி ஒருவர்  மட்டும் சமைத்துக் கொண்டிருப்பதையும் கண்டனர். அந்த முதியவள் இவர்கள் இருவரும் வந்ததைக் கவனிக்கவேயில்லை.
ஷுய்ஷீஜீ, மிகமிக மென்மையாக, அன்பு கனிய, ‘’ எங்கள் தாய் போலிருக்கும் அன்பு  மூதாட்டியே, எப்படி இருக்கிறீர்கள், நலமா?’’ என்றாள்.        
அந்தப் பாட்டிக்கு ஒரே ஆச்சரியம். அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தால், ஆணும் பெண்ணுமாக இரண்டு இளையர்கள் அவள் முன்னே நிற்கின்றனர். அவள் சமையல் பானையை இறக்கி வைத்துவிட்டு, ‘’ ஆ! எங்கிருந்து வருகிறீர்கள்? நான் மனிதர்களைப் பார்த்து நிரம்பக் காலமாகிவிட்டது. ‘’ என்றாள்.
மேலுமாக, அந்தப் பாட்டி, ‘’ பல வருடங்களுக்கு முன்னால், நான் வயலில் வேலைசெய்துகொண்டிருந்தேனா, அப்போது டிராகன்கள் என்னைப் பிடித்து இங்கே கொண்டுவந்துவிட்டன. இந்த இடத்திலிருந்து என்னைப் போக விட மாட்டேனென்கின்றன. என்னைக் கட்டாயப்படுத்தி அவற்றுக்காக உணவு சமைக்கச் செய்துவிட்டன. அன்றிலிருந்து இங்கு டிராகன்களுக்காகச் சமைக்கிறேன்.’’ என்றாள்.
அந்த இளைய தம்பதியினர் பாட்டியிடம் கதிரும் நிலவும் காணாமல் போனதையும், , இப்போது ஏரியில் அவற்றைக் கண்ட கதையையும்  சொன்னார்கள். அந்த மூதாட்டி தலையைக் குலுக்கிவிட்டு, ‘’ ஊகூம், அந்த இரண்டு டிராகன்களும் பயங்கரமானவை; கொடியனவுங்கூட. உங்களால் அவற்றைத் தோற்கடிக்க முடியாது.’’ என்றாள்.
‘’ என்ன ஆனாலும் சரி, நாங்கள் அந்த டிராகன்களிடமிருந்து கதிரையும் நிலவையும் பிடுங்கியே தீருவோம்.’’ என்று அந்தத் தம்பதிகள் தீர்மானமாகச் சொன்னார்கள்.
‘’ அந்த டிராகன்கள் தங்கக் கத்திரிக்கும் தங்கக் கோடரிக்கும் மட்டுந்தான் பயப்படுமென்று சொல்லிக்கொள்வார்கள். அந்தக் கத்திரியும் கோடரியும் அலி மலையில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த இரண்டையும் கொண்டுவந்துவிட்டால் அந்த டிராகன்களை, அந்தக் கத்திரியும் கோடரியுமே கொன்றுவிடும். பிறகு நீங்கள் கதிரையும் நிலவையும் எடுத்துச் செல்லலாம்.’’ என்றாள், அந்தப் பாட்டி.
‘’ நாங்கள் அந்தத் தங்கக் கோடரியையும் கத்திரியையும் எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிடுவோம். அவற்றால் டிராகன்களைக் கொன்றுவிட்டு உங்களையும் வந்து காப்பாற்றுகிறோம்.’’ என்று நம்பிக்கையோடு சொன்னான், டாஜியான்ஜே.
டாஜியான்ஜேயும் ஷுய்ஷீஜீயும் பாட்டியிடம் விடைபெற்று அலி மலையை நோக்கிப் போனார்கள்.
அவர்கள் அலிமலையின் அடிவாரத்தை அடைந்தபோது, இருவரும் வலுவான இரண்டு மரக்குச்சிகளைக் கண்டெடுத்தனர். அவற்றைக் கொண்டு இருவரும் மலையைத் தோண்டத் தொடங்கினர். அங்கேதான் இரவும் பகலும் தெரியாதே! அவர்கள் தோண்டிக்கொண்டேயிருந்தனர். தங்கக்கோடரியும் தங்கக்கத்திரியும் கிடைக்கும்வரை அவர்கள் நிறுத்தப்போவதில்லையெனத்  தீர்மானமாகத் தோண்டினார்கள்.
நாட்கள் கடந்துகொண்டிருந்தன. எத்தனை நாட்களாகத் தோண்டிக் கொண்டிருக்கிறோமென அவர்களுக்கே தெரியவில்லை. அப்படிப் பல நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அலிமலை ஒரு பெரிய பொந்து போலாகிவிட்டது. திடீரென ஒருநாள் அதற்குள்ளிருந்து பளபளவென ஒரு கோடரியும் ஒரு கத்திரியும் மண்ணுக்குள்ளிருந்து எழும்பிக் குதித்துவந்தன.
‘’  தங்கக் கோடரி! தங்கக் கத்திரி! ’’ இருவரும் ஆச்சரியத்தில் கத்தினர்.
இரண்டையும் எடுத்துக்கொண்டு அவர்கள் ஏரியை நோக்கிச் சென்றார்கள். அங்கே போனால், அப்போதும் அந்த டிராகன்கள் அவற்றின் `தீப்பந்துகளை` எறிந்து  விளையாடிக்கொண்டிருந்தன. ஷுய்ஷீஜீ தங்கக்கத்திரியை முதல் டிராகனைக் குறிவைத்து எறிந்தாள். அது சரியாகப் போய் முதல் டிராகனைத் துண்டு துண்டுகளாக வெட்டித்தள்ளிவிட்டது.
இரத்தம் பயங்கரமான ஊற்றாகப் பொங்கிப் பொங்கி வழிந்தது. உடனேயே டாஜியான்ஜே தங்கக் கோடரியை இரண்டாவது டிராகனைக் குறிவைத்து எறிந்தான் அந்த இரண்டாவது டிராகனிடமிருந்து பயங்கரமான ஒரு அலறல் வெளிப்பட்டது. அதன் தலை வெகுதூரம் தள்ளித் தனியாக விழுந்தது.
டிராகனின் இரத்தத்தால் ஏரியின் நிறமே சிவப்பாகிவிட்டது. கதிரும் நிலவும் அந்தப் பிரகாசமாக மினுங்கும் சிவப்பு ஏரியில் மிதந்தன.
டிராகன்களைக் கொன்ற பிறகு அவர்கள் இருவருமாகச் சென்று பாட்டியை அழைத்துவந்தார்கள். அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரும் பிரச்னை :  சூரியனையும் சந்திரனையும் எப்படி வானத்தில் கொண்டுபோய் பொருத்துவது? அவர்கள் இடிந்து போய் உட்கார்ந்தார்கள். சந்திரனும் சூரியனும் ஏற்கெனவே இரத்தத்தால் சிவந்த ஏரியில் தீப்பிடித்தாற்போல் கனன்றுகொண்டிருந்தன.
மூன்று பேரும் யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் பாட்டி, திடீரென்று, ‘’ எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது, டிராகனின் கண்களைச் சாப்பிட்டவர்கள் மிக உயரமாக வளர்ந்து மிகுந்த வலிமையும் பெற்றுவிடுவார்களெனச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் இருவரும் அந்த டிராகன்களின் கண்களைத் தோண்டித் தின்றுவிடுங்கள். நீங்கள் உயரமாக வளர்ந்துவிடுவீர்கள். சூரியனையும் சந்திரனையும் தூக்கும் பலசாலிகளாவடுவீர்கள். பின்னர் அந்த இரண்டையும் தூக்கி உயர்த்தி வானத்தில் வைத்துவிடலாம்.’’ என்றாள்.
அந்த இளந்தம்பதிகள் இருவரும் உடனேயே ஏரிக்குள் குதித்து நீந்திச் சென்று மிதக்கும் டிராகன்களின் தலைகளிலிருந்து கண்களைத் தோண்டியெடுத்துத் தின்றனர். அவர்கள் டிராகன் கண்களைத் தின்றதுமே, இருவரும் வளரத் தொடங்கிவிட்டனர். அவர்களின் உயரம் அங்குலம், அங்குலமாக உயர்ந்தது. அவர்கள் ஏரியிலிருந்தும் எழுந்து கரையேறி நின்றபோது இரண்டு மலைகளைப் போலத் தோன்றினார்கள்.
இருவரும் சேர்ந்து சூரியனைத் தூக்கி பெருத்த சக்தியோடு வானத்தை நோக்கி எறிந்தார்கள். வானத்துக்கும் பூமிக்கும் நடுவில் அந்தரத்தில்  சிறிது நேரம் மிதந்த சூரியன் பொத்தென்று ஏரிக்குள் விழுந்துவிட்டது. அவர்கள் சூரியனை எடுத்து மீண்டும் ஒருமுறை எறிந்தார்கள். அப்போதும் அது கீழேயே விழுந்தது. சந்திரனின் கதையும் அதுவேதான். அவர்களின் கீழே ஒரு எறும்பு போல நின்றிருந்த பாட்டி, ‘’ பிள்ளைகளா, ஏரிக்கு அந்தப் பக்கம் இரண்டு பெரிய பனைமரம் இருக்கிறது பாருங்கள். அவற்றைக்கொண்டு சூரியனையும் சந்திரனையும் தூக்கிப் பிடித்து உயர்த்துங்கள்.’’ எனக் கத்தினாள்.
இரண்டு பேரும் அந்தப் பக்கமாகத் திரும்பிக் குனிந்து ஒரு பனைமரத்தைப் பிடுங்கி எடுத்துக்கொண்டனர். அவர்கள் சூரியனைத் தூக்கிப் பனை உச்சியில் வைத்து மெல்லமெல்ல பனைமரத்தை உயர்த்தத் தொடங்கினர். சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. ஒரு நாள் முழுக்கக் கஷ்டப்பட்டுத் தூக்கியபிறகு பிரகாசிக்கும் சிவப்புச் சூரியன் வானத்தில் இயங்கத் தொடங்கியது. அதேவழியில், அவர்கள் சந்திரனையும் வானத்தில் ஏற்றிவிட்டனர்.
உலகம் அதன் ஒளியை மீண்டும் பெற்றபின் தாவரங்கள் உயிர்க்கத் தொடங்கின. மக்கள் மீண்டும் புன்னகைக்கத் தொடங்கினர். சூரியன் ஒருமுறை பூமியை வலம் வந்து அதன் பணியைத் தொடர்ந்தபோது சந்திரனும் அதன் பணியைத் தொடங்கியது.
டாஜியான்ஜேக்கும் ஷுய்ஷீஜீய்க்கும் என்னவென்றால், டிராகன்கள் மீண்டும் வந்து சூரிய சந்திரப் பந்துகளைத் திருடிவிடுமோவெனப் பயந்தனர். அதனால் அவர்கள் அந்த ஏரிக்கரையிலேயே நின்று காவல் காக்கத் தொடங்கினர். பல வருடங்களானதும் அவர்களின் மாபெரும் உடல்கள் இரண்டு மலைகளாகவே மாறிவிட்டன. அந்த இரண்டு மலைகளில் ஒன்றை டாஜியான் ஷான் என்றும் அடுத்ததை ஷுய்ஜீ ஷான் என்றும் அழைக்கிறார்கள். அந்த ஏரியின் பெயர்தான் ` சூரிய சந்திர ஏரி`.
அந்த இளந்தம்பதிகளின் நினைவாக, அவர்களுக்குத் தம் நன்றியறிதலைக் காட்டும் விதமாக காவ் ஜு மக்கள் ஒரு வருடாந்திர நடனத்தை டாஜியான்ஜேக்கும் ஷுய்ஷீஜீக்குமாகச் சமர்ப்பணம் செய்கின்றனர். அந்த நடனம் இப்போது ‘’ பந்து உயர்த்தும் நடனம்’’ The Holding Ball Dance என அழைக்கப்படுகிறது. இந்த நடனத்தில் மக்கள் அழகிய வண்ணப் பந்து ஒன்றினை உயரத்தில் எறிந்து ஒரு மூங்கில் கம்பால் அதனை விழாமல் தூக்க முயற்சிக்கின்றனர். இந்த நடனம், அன்று கதிரையும் நிலவையும் மீட்டு உலகைக் காத்த அந்த இளந்தம்பதிகளின் துணிச்சலான செயல்களையும் தியாகத்தையும் அடையாளப்படுத்துகிறது.
நன்றி ; தைவான் நாட்டுப்புறக்கதைகள் என்ற தளம் www.taiwandc.org/folk-sun.htm 

a  


No comments:

Post a Comment