Thursday, 14 January 2016

போஸ்ட்வானா சிறுகதை - அந்தத் தாளின் வெற்றுப் பகுதி The Empty space on the paper By Lauri Kubuitsile

அந்தத் தாளின் வெற்றுப் பகுதி The Empty space on the paper

லாவ்ரி குபுய்ட்சிலே (போஸ்ட்வானா) ( Lauri Kubuitsile) தமிழில் ச.ஆறுமுகம்

download (46)
(லாவ்ரி குபுய்ட்சிலே, போஸ்ட்வானாவின் அழகிய ஸ்வாபாங் மலைப்பகுதியில் வசிக்கிறார். அவரது சிறுகதைகள் நியூ காண்ட்ராஸ்ட்ஸ், ஆதர் ஆப்பிரிக்கா 2007 மற்றும் ஸ்லெக்சியா போன்ற இதழ்களில் வெளியாகின்றன. The Fatal Payout (Macmillan 2005) என்ற குறுநாவல் வெளியாகியுள்ளது. புனைவுகள் படைப்பதல்லாமல் போஸ்ட்வானாவின் ஒரே தனியார் செய்தி இதழான Mmegi என்ற இதழில் எழுதும் சுதந்திர எழுத்தாளராகவும் இயங்குகிறார். வானொலி ஒலிபரப்பும் கல்விப்புலப் பாடங்கள் எழுதுகிறார். திருமணமாகி இரண்டு பதின்பருவக் குழந்தைகள் உள்ளனர்.)
••••
நான் அன்று சாய்மெத்தையின் மூலையில் என் தம்பியைக் கைகளால் அணைத்துக்கொண்டு, சுருட்டி மடக்கி அமர்ந்திருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். செய்தி சொல்லவந்த ஆள் குளிர்ந்து போயிருந்த ஒரு கறுப்புக் கோட்டு அணிந்திருந்தான். மழையில் நனைந்த தொப்பியை அவனது முன்கையில் தொங்கவிட்டிருந்தான். அதிலிருந்து சொட்டிய தண்ணீர் பலகைத்தரை மீது விழுந்து கொண்டிருந்தது. அவன் பாதங்களில் தண்ணீர் ஒரு சிறிய குட்டையாகத் தேங்க, அவன், என் அப்பாவிடம் `எல்லாம் முடிந்துபோனது` என்றான். என் அப்பா அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். வயதில் பெரியவர்கள் இதுபோன்ற செய்திகளை அப்படித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அந்த மனிதன் பேசுவதை நிறுத்திவிட்டு, வெளியில் செல்வதற்காகத் திரும்பும்போதும் கூட `ஆம்` கொட்டுவதுபோலத் தலையை அசைத்துக்கொண்டிருந்தார்.
‘’ நேரில் வந்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் பிறர் கஷ்டத்தை உணர்பவர் என்பது தெரிகிறது.’’ என்றார், அப்பா, வாசலில்.
அந்த ஆள் நின்றார். ‘’ நான் மறந்தே போனேன்.’’ என்றவாறே, வீட்டுக்குள் வந்து என் தம்பிக்கும் எனக்குமாக அருகில் வந்தார். அந்தக் குளிர்ந்த கோட்டுப் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தாளை எடுத்து, ‘’ உங்கள் இருவரிடமும் இதைக்கொடுக்குமாறு சொன்னார்கள்.’’ என்றார்.
நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். தாமஸ், அவன் சிறு கைகளை நீட்டி அவரிடமிருந்து தாளைப் பெற்றுக்கொண்டான். பின்னர் அந்தக் கறுப்பு ஆடை மனிதர் போய்விட்டார்.
எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. தம்பிக்கு எட்டு. அந்த நாளுக்காக, கொஞ்சநாட்களாகவே, எல்லோரையும் போல நாங்களும் காத்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு அம்மாவைத் தூக்கில் போடுவதில்லை, அதிலும் எங்கள் சிறிய நகரத்தைப் போன்ற ஒன்றில்.
கறுப்பு ஆடை மனிதர் சென்றபின், அப்பா சாப்பாட்டு அறையின் ஓக்மர மேஜையின் முன்பிருந்த நேராக உட்காரும் நாற்காலிகளில் ஒன்றின் மீது அமர்ந்தார். அவரது இருகைகளும் தளர்வாகத் தொங்க அவர் நேர் எதிராக இருந்த வெறுமைச் சுவரை அமைதியாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தாமசின் கையைப் பிடித்துக்கொண்டேன். இருவரும் மாடியிலிருந்த எனது படுக்கையறைக்குச் சென்றோம்.
படுக்கையின் விளிம்பில் நாங்கள் உட்கார்ந்தோம். தாமஸ் சத்தமில்லாமல் அழத்தொடங்கினான். ‘’ நீ அழுவதை அப்பா பார்த்தால் கோபப்படுவார்.’’ வறண்ட கண்களோடு நான் சொன்னேன். சிறுமிகள் மற்றும் பையன்கள் பற்றிய அப்பாவின் கண்டிப்பான விதிமுறைகள் தாமஸ் அழுவதை அனுமதிக்காது. அவன் கையில் அப்போதும் பிடித்திருந்த தாளைப் பார்த்தேன். அதைக்கண்டு நான் பயந்துபோனேன். அவள் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பினாள். நாங்கள் அவளுடைய குழந்தைகள். அவளுக்கு அது நினைவிருந்ததாவென்று எனக்கு வியப்பாக இருந்தது.
நடுங்கும் கைகளை நீட்டி, நான் அந்தத்தாளை வாங்கினேன். நான் அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்க்க முயற்சித்தேன். நாங்கள் அவளைப் பார்த்து வெகுகாலம் ஆகிவிட்டது. அவளது மேல்முறையீடுகளெல்லாம் முடிந்தபின், பார்வை அனுமதி நாட்களில் குழந்தைகளைச் சிறைக்குக் கூட்டிவரவேண்டாமென்று, அவள் அப்பாவிடம் கெஞ்சினாள். எங்களை அத்தை கார்மென் வீட்டில் விட்டுவிட்டு அவர் தனியாகவே போனார். மறுநாள் அவர் வீட்டுக்கு வருவார். முகம் வெளிறி, உடை முழுதும் பீர் நாற்றத்துடனிருக்கும். அப்பாவின் அக்காவான அத்தை கார்மென் எப்போதும் ஒரே மாதிரிதான் கேட்பார்.
‘’ பயணமெல்லாம் நல்லபடியாகத்தானே?’’
‘’ஆமாமாம். நல்லபடியாகத்தான்.’’ அப்பா சொல்வார். பின்னர் நாங்கள் வீட்டுக்குத் திரும்புவோம். இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் அப்பா மேனி அவரது சரியான நிறத்துக்கு மீண்டு, யாரும் வார்த்தைகளை எடுத்துக்கொடுக்காமலேயே இயல்பான நிலையில் பேசத் தொடங்குவார்.
தாமஸ் என் அருகில் அழுதுகொண்டிருக்கையில், படுக்கை மீது அமர்ந்தவாறே அம்மாவின் முகத்தை மனத்துக்குள் கொண்டுவர முயற்சித்தேன். அந்தக் கடிதத்தைப் படிக்கும் முன் அம்மாவின் முகம் என் நெஞ்சிலிருக்க வேண்டுமென விரும்பினேன். ஆனால், அது என் நெஞ்சுக்குள் வரவேயில்லை. நான் தெளிவாகப் பார்க்க முடிந்தது அவளுடைய கைகளை மட்டுந்தான். நான் எவ்வளவோ முயற்சித்தும் அந்தக் கைகள் மட்டுமே அங்கே இருந்தன. விரல்கள் குட்டையாகத் தடித்துச் சுருக்கங்களுடனான மூட்டுகளுடனிருந்தன. அவைதாம் அவளது உடலின் மிக அசிங்கமான பாகம் என்று அடிக்கடி சொல்வார். அவை அசிங்கமானவையென நான் ஒருபோதும் நினைக்கவில்லை. மாறாக அவை எனக்கு நட்போடும் உதவும் தன்மையோடும் தெரிந்தன. பின்னர், அம்மாவின் மரண தண்டனை நிறைவேற்றத்தின் பின், தாமஸ் அல்லது எனக்கு அவள் கைகள் இருக்கவேண்டுமென, அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாமேயென்று நினைத்து ஆசைப்பட்டேன். ஆனால், நாங்கள் அப்பாவின் கைகளை, நீள விரல்களும் சிறிய, மெலிந்த சிறிய மூட்டுக் கணுக்களுமாகப் பெற்றிருந்தோம்.
எவ்வளவு பொருத்தமற்ற விவரங்கள் நினைவில் கிடக்கின்றன பாருங்களேன். வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்தத் தாளின் நிறம் போன்ற விஷயங்கள். அது அரைவெள்ளை, அநேகமாக மஞ்சள் என்றே சொல்லிவிடலாம். அதில் நீல எழுத்துக்கள் கோடிழுத்தாற்போல தெரிந்தன. அது ஒரு பழைய பயிற்சி நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்தது போலத் தோன்றியது. எழுத்துக்களை இடது பக்கமாகச் சாய்த்து, நெட்டையாக, தாளில் இடப் பற்றாக்குறை போல நெருக்கி நெருக்கி, அந்தப் பக்கம் முழுவதுமே காலியாக இருந்தாலும் ஒரே ஒரு வரி மட்டும் உச்சியில் எழுதியிருந்தது. அவள் நிறைய எழுத நினைத்திருப்பாளென்றுதான் நம்புகிறேன். யாராவது அவளை நிறுத்தச் சொல்லியிருக்கலாம், அல்லது சரியான வார்த்தைகளை அவளால் கண்டுபிடிக்க முடியாமலிருக்கும்போது, அவள் நினைத்தபடி எழுதுவற்கு நேரம் கடந்திருக்கலாம். நான் எப்போது இப்படி அறப்பண்புத் தொண்டுள்ளம் கொண்டவளாகினேனென்று நினைத்துப் பார்க்கிறேன்.
பயிற்சி நோட்டிலிருந்து கிழிக்கப்பட்ட அந்த மஞ்சள் படிந்த தாளைத் திறந்தபோது நான் அம்மாவின் நட்புடனான அந்தக் கைகளைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவள் பேனாவை எடுத்து அவளுக்கே உரிய தனித்தன்மையில் பேனாவை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வரியின் உச்சியிலிருந்து கீழாக எழுதுவதை நான் பார்த்தேன். அந்த வார்த்தைகளைச் சத்தமாக, அழுதுகொண்டிருக்கும் தாமசும் கேட்கும்படியாக வாசித்தேன்.
‘’ என்னையும் என்னால் நேர்ந்திருக்கிற துயரத்தையும், எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்.’’
அவ்வளவுதான். என் செல்லக் குழந்தைகளே எனத் தொடக்கமோ அல்லது ` நான் உங்களை நேசிக்கிறேன்` என்று முடித்தலோ இல்லை. பின்பக்கம் ஏதாவது இருக்குமா என்று தாளைத் திருப்பிப் பார்த்தேன். எதுவும் இல்லை. ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்திருந்தேன். ஒருவேளை அது எங்களுக்கான கடிதமாக இருக்காதோ என்று நினைத்தேன். இது வேறு யாருக்காவது இருந்து, எங்களுக்கானது அந்தக் கறுப்புக் கோட்டுக்குள்ளிருந்து மழையில் விழுந்திருக்குமோ என்றுகூட நினைத்தேன்.
தாமசின் அழுகைச் சத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்தக் கறுப்பு ஆடை நபர், இந்த மாதிரியான ஒரு முக்கியமான விஷயத்தில் தவறு செய்ய மாட்டாரென நான் நினைத்துக்கொண்டேன். அந்த மஞ்சள் தாளை என் இருகைகளிலுமாகப் பிடித்துக்கொண்டு இரண்டாகக் கிழித்தேன். பின்னர், அதனை மீண்டும் கிழித்தேன். கிழி, கிழி, கிழியென மீண்டும் கிழிக்க முடியாதபடிக்குச் சுக்கல் சுக்கலாகும்வரை கிழித்தேன். வேறு வார்த்தைகள் இல்லை. மேற்கொண்டு எதற்கும் எந்த நம்பிக்கையும் இல்லை., அங்கொன்றும் இங்கொன்றுமாக மைத்துளிகள் கொண்ட ஒழுங்கற்ற, துன்பம் விளைவிக்காத வெறும் மஞ்சள் துண்டுகள். பின்னர் அந்தச் சுக்கல்களை என் தலைக்கு மேலே உயர்த்தி, விருந்துகளில் வண்ணக் காகிதத் துண்டுகளைப் பொழிவார்களே அதுபோல் மழையாகத் தரையில் விழுமாறு என் தலையில் போட்டுக்கொண்டேன்.
Source : http://www.african-writing.com/kubuitsile.htm      

மலைள் இணைய இதழ், மார்ச் 02, 2014, இதழ் 45 இல் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment