Tuesday, 12 January 2016

ஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - நீலப் பூங்கொத்து The Blue Bouquet - Octavia Paz

நீலப் பூங்கொத்து The Blue Bouquet 
மெக்சிகன் : ஆக்டேவியா பாஸ் Octavia Paz 
 தமிழில் ச. ஆறுமுகம்
download (31) 
( ஆக்டேவியா பாஸ் (மார்ச் 31, 1914 – ஏப்ரல் 19, 1998) அவர்களின் நூற்றாண்டினை மெக்சிகோ அரசு மார்ச் 31, 2014ல் சிறப்பாகக் கொண்டாடி அந்தக் கவிஞனுக்கு உரிய மரியாதை செலுத்தியுள்ளது. இத்தருணத்தில் அவரது சிறுகதை ஒன்றின் தமிழாக்கத்தை அவரது நினைவாக மலைகள் வெளியிடுகிறது.)
வியர்வையில் நனைந்து விழித்தேன். செங்கல் தளத்தின் மீது பூந்தூவலாகத் தெளிக்கப்பட்டிருந்த புதிய சிவப்பு வண்ணத்திலிருந்து வெக்கையான ஆவி எழுந்தது. சாம்பல் நிற இறகுகளுள்ள வண்ணத்துப்பூச்சி ஒன்று திகைக்கும் படபடப்போடு விளக்கின் மஞ்சள் ஒளியை வட்டமிட்டது. நான் ஏணையிலிருந்தும் குதித்து, மறைவிடத்திலிருந்து புதிய காற்று தேடி வெளிவரும் தேள் எதையேனும் மிதித்துவிடாமல் கவனமாக வெறுங்கால்களிலேயே, அறையைக் கடந்து, சிறிய ஜன்னலருகில் போய் கிராமத்துக் காற்றினை உள்வாங்கினேன். அந்த இரவின் மாபெரும் பெண்மைச் சுவாசத்தை யாரொருவரும் கேட்கமுடியும். அறையின் மையத்திற்குத் திரும்பி, ஜாடியிலிருந்த தண்ணீரை வெள்ளைக் காரீய வட்டிலில் கொட்டி, எனது மேல்துண்டை நனைத்து, மார்பு, கால்களைத் துடைத்து, வியர்வையைச் சிறிது ஆற்றிக்கொண்டு, எனது ஆடை மடிப்புகளுக்குள் மூட்டைப் பூச்சி எதுவும் ஒளிந்துகொள்ளவில்லையென உறுதிசெய்தபின் ஆடைகளை அணிந்தேன். பச்சைநிறப் படிக்கட்டின் வழியே வேகவேகமாக இறங்கினேன். தங்கும்விடுதியின் வாசலில் அதிகம் பேசாத ஒற்றைக்கண் ஆசாமியான உரிமையாளன் மீது மோதாமல் விலகினேன். பிரம்பு முக்காலி ஒன்றின் மீது உட்கார்ந்து புகைத்துக்கொண்டிருந்த அவன் கண்கள் பாதி மூடியிருந்தன.
முரட்டுக் கரகரப்புக் குரலில், அவன் கேட்டான் :
“ எங்கே போகிறீர்கள்?’’
‘’ கொஞ்சம் நடக்கலாமென்றுதான். ரொம்ப வெக்கையாக இருக்கிறது.’’
‘’ ஹ்ம்ம்ம் – எல்லாம் மூடியாச்சு. தெருவில் விளக்கு எதுவும் இல்லை. பேசாமல் உள்ளுக்குள்ளேயே இருப்பதுதான் நல்லது.’’
நான் தோள்களைக் குலுக்கிக்கொண்டே, `சீக்கிரம் வந்துவிடுவேன்` என்று சொல்லி, இருட்டுக்குள் புகுந்தேன். முதலில் என்னால் எதையுமே பார்க்க முடியவில்லை. வட்டக்கற்கள் பாவிய தெருவழியே நான் தட்டுத்தடுமாறிச் சென்றேன். சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தேன். ஒரு கறுப்பு மேகத்தின் பின்னாலிருந்து, அங்கங்கே காரை பெயர்ந்து விழுந்திருந்த வெள்ளைச் சுவரின் மீது திடீரென வெளிச்சம் பீறிட, நிலவு தோன்றியது. அந்த வெளிச்ச வெண்மையில் கண்கள் கூசிப் பார்வை மறைய நான் சிறிது நின்றேன். காற்றின் ஊளை மெலிதாகக் கேட்டது. புளியமரக் காற்றினை நான் சுவாசித்தேன். இலைகளும் பூச்சிகளுமாக இரவு ஹும்,ஹும்மென ஒலித்தது. வளர்ந்த புற்களில் சிள் வண்டுகள் கறிச், கறிச்சிட்டன. நான் தலையை உயர்த்தி வானத்தைப் பார்த்தேன். விண்மீன்களுங்கூடக் கூட்டங்கூட்டமாகச் சிறுசிறு முகாம்களாகச் சேர்ந்தேயிருந்தன. மாபெரும் உருக்கள் உரையாடுவதன் அடையாளப் பேரியக்கமாகவே பிரபஞ்சம் இருப்பதாக நான் நினைத்தேன். எனது செயல்பாடுகள், சிள்வண்டுகள் கொறிக்கும் அறுவைச் சத்தம், விண்மீன்களின் கண்ணிமைப்பு, எல்லாமே அந்த உரையாடலின் ஒரு பகுதியாகச் சிதறுண்ட வாக்கியத் தொடர்கள், இடைவெளி மவுனங்கள் மற்றும் அசைகள்தாமே தவிர வேறல்ல. அது எந்தச் சொல்லாக இருந்தாலும் நான் அதனுடைய ஓர் அசையேதான். யார் அந்தச் சொல்லை மொழிந்தது? யாருக்கு அது உரைக்கப்பட்டது? சிகரெட்டை நடையோரப் பாதையில் விட்டெறிந்தேன். அது ஒரு சிறு வால்நட்சத்திரம் போல், பொறிகளைச் சிதறி, மினுமினுக்கும் ஒரு வட்டத்தை வரைந்தது.

நான் நீண்டநேரத்துக்கு, மெல்லவே நடந்தேன். இறுக்கம் விலகி விடுதலையானதாக நான் உணர்ந்த கணத்தில் என் உதடுகள் அப்படியொரு மகிழ்ச்சியைத் திரும்பப் பெற்றதை என்னோடு பகிர்ந்துகொண்டன. இரவு ஒரு தோட்டமாக, கண்களின் தோட்டமாகத் தெரிந்தது. நான் தெருவைக் குறுக்காகக் கடக்கையில் வாசலிலிருந்து யாரோ ஒருவர் வெளிவந்த சப்தம் கேட்டது. நான் அப்படியே சுழன்று திரும்பினேன். ஆனால், அப்படிக் குறிப்பாக எதையும் தனித்துப் பார்க்க முடியவில்லை. நான் வேகமாக நடந்தேன். ஒருசில கணங்களிலேயே சூடான கற்கள் மீது செருப்புகள் உரசும் சரட், சரட், ஒலியைக் கேட்டேன். ஒவ்வொரு காலடிக்கும் நிழல் என்னை நெருங்குவதாக உணர்ந்தாலும் நான் பின்னால் திரும்பிப் பார்க்க முயற்சிக்கவில்லை. நான் வேகமாக ஓடிவிட முயன்றேன். ஆனாலும் என்னால் முடியவில்லை. ஒருசில நிமிடங்களிலேயே திடீரென நான் நின்றேன். என் முதுகில் ஒரு கத்தியின் முனையை உணர்ந்த நேரத்தில் மெதுவாக ஒலிக்கும் குரலொன்றினையும் கேட்டேன் :
‘’ மிஸ்டர், அசையாதே, இல்லை, கத்தியை அப்படியே இறக்கிவிடுவேன்.’’
திரும்பாமலேயே நான் கேட்டேன் :
‘’ உங்களுக்கு என்ன வேண்டும்?’’
‘’ உன் கண்கள், மிஸ்டர்,’’ பதிலாக வந்த அந்த மென்மையான குரலில் வேதனையும் மிகுந்திருந்தது.
‘’ என் கண்களா? என் கண்களைக் கொண்டு என்னசெய்யப் போகிறீர்கள்? என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதிகமில்லையென்றாலும் ஏதோ கொஞ்சம் இருக்கிறது. என்னை விட்டுவிட்டால், என்னிடமிருக்கும் எல்லாவற்றையும் உங்களிடம் தந்துவிடுகிறேன். என்னைக் கொன்றுவிடாதீர்கள்.’’
‘’ பயப்படாதே, மிஸ்டர், உன்னைக் கொல்ல மாட்டேன். உன் கண்களை மட்டும் தான் எடுத்துக்கொள்ளப் போகிறேன்.’’
‘’ சரி, ஆனால், என் கண்களை எதற்காகக் கேட்கிறீர்கள்?’’ நான் மீண்டும் கேட்டேன்.
‘’ என்னுடைய பெண்தோழிக்கு அப்படியொரு ஆசை. நீலக் கண்களாலான ஒரு மலர்க்கொத்து கேட்கிறாள். இங்கே எல்லா இடங்களிலும் அது கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.’’
‘’ என் கண்கள் உங்களுக்குப் பயன்படாது. அவை நீலமல்ல; பழுப்பு நிறம்.’’

‘’ மிஸ்டர், என்னை முட்டாளாக்க முயற்சிக்காதே. எனக்கு நன்றாகத் தெரியும், உன் கண்கள் நீலநிறம் தான்.’’

‘’ ஒரு சக மனிதனின் கண்களைப் பிடுங்காதீர்கள். உங்களுக்கு வேறு ஏதாவது தருகிறேன்.’’

‘’ என்னிடம் இந்த நல்லபிள்ளை விளையாட்டெல்லாம் வேண்டாம்.’’ எனக் கடுமையாகக் கூறியவன், ‘’திரும்பு’’ என்றான்.
நான் திரும்பினேன். அவன் மெலிந்து இளைத்தவனாக இருந்தான். அவனது உள்ளங்கை அவன் முகத்தில் பாதியை மறைத்தது. நிலவு வெளிச்சத்தில் பளபளத்த நாட்டுக் குறுவாள் ஒன்றை அவன் வலது கையில் பிடித்திருந்தான்.
‘’ எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம்.’’
நான் ஒரு தீக்குச்சியைக் கிழித்து என் முகத்தருகே பிடித்தேன். அதன் வெளிச்சம் என் கண்களைக் கூசச்செய்தது. நான் கண்களைச் சுருக்கினேன். அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவன், காற்பெருவிரல்களில் உன்னி நின்று, தீவிரத்தோடு என்னை உற்றுப் பார்த்தான். நெருப்பு என் விரல்களைச் சுட்டது. நான் குச்சியைக் கீழேபோட்டேன். ஒரு கணம் அமைதியாகக் கழிந்தது.
‘’ இப்போதாவது உங்களுக்குத் திருப்தியா? அது நீலமில்லை.’’


‘’ ரொம்பச் சாமர்த்தியமென்ற நினைப்பு, இல்லையா?’’ என்ற அவன், ‘’ எங்கே, பார்ப்போம். இன்னொரு குச்சியைக் கொளுத்து.’’ என்றான்.

நான் அடுத்த குச்சியைக் கொளுத்தி, என் கண்கள் அருகே கொண்டுசென்றேன். என் சட்டைக் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவன் உத்திரவிட்டான் :
‘’ குனி, கீழே.’’

நான் குனிந்தேன். அவன், ஒரு கையால் என் தலைமுடியைப் பின்பக்கமாகப் பற்றி, என் தலையைப் பின்னால் இழுத்துப்பிடித்தான். ஆவலும் பதற்றமுமாக அவன் என் மேலாகக் குனிகையில், அவனது குறுவாள் என் கண்ணிமை மீது உரசி நின்றது. என் கண்கள் தாமாக மூடிக்கொண்டன.
‘’ நல்லத் திறந்த மாதிரி காட்டு, ’’ உத்திரவிட்டான், அவன். 
நான், கண்களை விரியத் திறந்தேன். சுடர் என் இமை மயிரைக் கருக்கியது. திடீரென்ற ஒரு கணத்தில் அவன், என்னை விட்டுவிட்டான்.
‘’ சரி, நீலமில்லை. இமைத்துக்கொள்.’’
அவன் மறைந்துபோனான். சுயத்துக்கு மீண்டு, தட்டுத் தடுமாறி வீழ்ந்து, மீண்டும் மேலெழ முயற்சித்து ஒருவழியாக நிமிர்ந்ததும் அந்த ஆளரவமற்ற ஊர் நடுவே ஒரு மணி நேரத்துக்கு ஓடினேன். தங்கும் விடுதிக்கு வந்தபோது அதன் உரிமையாளன், அப்போதும் வாசல் முன் உட்கார்ந்துகொண்டிருந்தான். ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நான் உள்ளே சென்றேன். மறுநாளே அந்த ஊரை விட்டு அகன்று சென்றேன்.
Source : http://creative.sulekha.com/the-blue-bouquet_482474_blog 

மலைகள் இணைய இதழ்,  இதழ் 47, ஏப்ரல் 02, 2014 இதழில் வெளியானது.

No comments:

Post a Comment