Saturday 9 January 2016

ஜப்பானியச் சிறுகதை - ஒரு ஜன்னல் A window by Haruki Murakami

ஒரு ஜன்னல் A window

ஜப்பான்:  ஹாருகி முரகாமி Haruki Murakami 

ஆங்கிலம் : கிக்கி Kiki

தமிழில் ச. ஆறுமுகம்

Image result for haruki murakami quotes












அன்புள்ள ….,
குளிர்காலம் அதன் பிடியைத் தினமும் தளர்த்துகிறது. வசந்தகால வெயிலின் இதமான வெம்மையை என்னால் உணர முடிகிறது. உங்கள் நேற்றைய கடிதம் சுவைமிகுந்து ஆர்வமூட்டுவதாக உள்ளது. அதற்காக மீண்டும் மீண்டும் நன்றி.
வட்டரொட்டிகளுக்கு மத்தியில் இறைச்சிக் கண்டம் பதித்த ஹாம்பர்கர்களுக்கு சாதிக்காய் சேர்த்து மணமூட்டுவது பற்றிய உங்கள் கட்டுரைப் பகுதியை ரசித்தேன். அது எனக்கு உண்மையானதாகவே தோன்றியது. உங்கள் சமையலறைக்கத்தி லீக் தண்டுகளை அரிந்து தள்ளும் `சக் ச்சக்` சப்தத்தை என்னால் தெளிவாகக் கேட்க முடிகிறது. உங்கள் வீட்டுச் சமையலறையின் வெம்மையை என்னால் உணர முடிகிறது; அதன் வாசனையைக் கூட.
உங்கள் கடிதத்தை வாசித்ததில், உண்மையிலேயே ஒரு இறைச்சிக்கண்ட வட்டரொட்டிக்கான பசி  ஏற்பட்டுவிட்டது. அதனால் அப்படியே அதை ருசிப்பதற்காக ஒரு உணவகத்திற்குச் சென்றேன். அந்த உணவகத்தில் எட்டு வகையான இறைச்சிக் கண்ட வட்டரொட்டிகள் இருந்தன. நம்பினால் நம்புங்கள்; இல்லாவிட்டாலும், பரவாயில்லை! ஒரு டெக்சாஸ் பாணி, ஒரு கலிபோர்னிய பாணி, ஒரு ஹவாய் மணம். இன்னொன்று ஜப்பானியப் பாணி. டெக்சாஸ் இறைச்சிக் கண்டம் அளவில் கொஞ்சம் பெரிதாக இருந்தது, அவ்வளவுதான், குறிப்பிடுகிற மாதிரியில் வேறு ஒன்றும் இல்லை. ஹவாய் கண்டத்தின் மீது ஒரு அன்னாசிப் பழத்துண்டு வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். கலிபோர்னியா பாணி எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. ஜப்பானியக் கண்டத்தில் துருவிய காரட் தூவியிருந்தார்கள். அந்த உணவகத்தின் தற்கால நவநாகரீகம் எனக்கு உறைத்தது. பரிமாறும் பெண்கள் எல்லோரும் உண்மையிலேயே அழகும் துடிப்புமாக இருந்தார்கள். எல்லோருமே குட்டை இடையாடை அணிந்திருந்தனர்.
நானென்ன, அந்த உணவுவிடுதியின் உட்புற அலங்காரங்களை  ரசிக்க அல்லது அந்தப் பணிப்பெண்களைப் பார்க்கவா அங்கு போனேன். இல்லையே! அந்த விடுதியின் ஹாம்பர்கர் கண்டத்தை ருசிக்கத் தானே  போனேன். அதைத்தான் நான், அந்தப் பணிப்பெண்ணிடம் சொன்னேன். ஆனால் அவள் வெறும் இறைச்சிக் கண்டம் மட்டுமே உள்ள உணவு அவர்கள் விடுதியில் இல்லையெனத் தெரிவித்து மன்னிப்பும் கோரினாள். என்ன இருந்தாலும் நான் அந்தப் பணிப்பெண்ணைக் குறைகூற முடியாது. அவளா உணவுப் பட்டியலைத் தீர்மானிக்கிறாள்? கரண்டியைக் கீழே போட்டு அதை எடுக்கும் சாக்கில் அவளது உள்ளாடையைத் திருட்டுத்தனமாக நோக்குமளவுக்கு அவள் குட்டை ஆடை அணியவுமில்லை. அதனால் நான் ஒரு ஹவாய் ஹாம்பர்கர் கண்டம் கொண்டு வருமாறு சொன்னேன். நான் அதைத் தின்று கொண்டிருக்கும்போது, அவள் அன்னாசியை எடுத்துவிடுமாறு யோசனை சொன்னாள். இப்படியான ஒரு வினோத உலகம்! நான் கேட்டதெல்லாம் ஒரு எளிய, சாதாரண ஹாம்பர்கர் கண்டம். அது,சரி. உங்கள் ஹாம்பர்கர்களை நீங்கள் எப்படித் தயாரிக்கிறீர்கள்? உங்கள் கடிதத்தைப் படித்து முடித்த பிறகு, உங்கள் இறைச்சிக் கண்டங்களை ஒருநாளாவது சாப்பிட வேண்டுமென உண்மையில் ஆர்வமாக இருக்கிறேன்.
தானியங்கி டிக்கெட் இயந்திரம்  பற்றி நீங்கள் எழுதியிருந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. அது, முன்பைவிடக் கொஞ்சம் மேம்பட்டிருப்பதாகவும் நான் நினைத்தேன்.  உங்கள் பார்வைக் கோணம் நல்ல ஆர்வமூட்டுகிற ஒன்று. ஆனால், அந்த இயற்கைக் காட்சியை, சூழலை, உண்மையாக என்னால் உணர முடியவில்லை. நீங்கள் மிகமிகக் கடினமாக முயற்சித்திருக்கிறீர்கள். ஆனாலும், ஒரே வாக்கியத்தால் இந்த உலகை மாற்றிவிட முடியாதென்பது தெரிந்தது தானே!
உங்கள் எழுத்துக்கள் எல்லாவற்றையும் பார்க்க,  ஒரு 70 கொடுக்கலாம். மென்மேலும் உங்கள் திறமை மேம்படுகிறதென்றே எண்ணுகிறேன். வேக வேகமாகத் திணிக்காதீர்கள், பொறுமையாகக் கையாளுங்கள். நல்வாய்ப்பு கிட்டும். உங்கள் அடுத்த கடிதத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அப்புறம், வசந்தம் வாசலுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது, இல்லையா?
பி.கு. – பல்வகை இனிப்புக் குக்கிகளுக்கு  நன்றி. உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. என்றாலும் நமது கடிதங்களுக்கு அப்பாற்பட்டுத் நாம் தனியாகத் தோழமைகொள்வது தடை செய்யப்பட்டுள்ளதால்,  வருங்காலத்தில் கவனமாக இருக்கும்படியும், மேற்கொண்டு அதுமாதிரி கட்டுப்பொதிகள் எதுவும் அனுப்பவேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி உங்களுக்கு நன்றி.
பி.பி.கு. – இதற்கு முந்தைய கடிதத்தில் உங்கள் கணவரின் நரம்புப் பிரச்னைகள் பற்றி மிகவும் நன்றாக விவரித்திருந்தீர்கள் என நினைக்கிறேன்.
இருபத்திரண்டாவது வயதில் சுமார் ஒரு வருடத்துக்கு என்னுடைய பணி இப்படியானதாகத்தான் இருந்தது. “பேனா சங்கம்“ என்று ஒரு சிறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தேன். அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்களென்று தெரியவில்லை. நான் எழுதிய ஒவ்வொரு கடிதத்துக்கும் இரண்டாயிரம் யென் கிடைத்தது. சீக்கிரமே மாதம் முப்பது கடிதங்களுக்கும் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தேன். ‘’ உங்கள் நண்பரின் இதய அடித்தளத்தில் எதிரொலி கிளப்பும் கடிதங்களை நீங்களுங்கூட எழுதுவீர்கள்.’’ இதுவே அந்த நிறுவனத்தின் கோட்பாட்டு முத்திரை வாசகம். மாதக் கட்டணம் செலுத்தியபின்வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு நான்கு கடிதங்கள்  எழுதினர். “பேனா வல்லுநர்“ ? எங்களை அப்படித்தான் அழைத்தார்கள். கடிதங்களைத் திருத்தியமைப்பது, பின்னூட்டம் அளிப்பது, வழிகாட்டுவது மற்றும் மனத்தில் பதியுமாறு அழகூட்டுவது.
பெண் “பேனா வல்லுநர்“ ஆண்களுக்கும் ஆண் “பேனா வல்லுநர்“ பெண்களுக்குமாக எழுதினார்கள். என்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள். கிட்டத்தட்டப் பத்துப் பதினைந்து பேர் 40 முதல் 53 வயதுக்குட்பட்டவர்கள். ஆனால் அநேகம் பேர் 25க்கும் 35க்கும் இடைப்பட்டவர்கள். முதல் மாதம் என்னுடைய எழுத்து ஏனோதானோவெனச் சுவையற்றுத்தானிருந்தது. அப்போது என்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருமே என்னைவிட நன்றாக எழுதினார்கள். ஏனென்றால் அவர்களுக்குக் கடிதம் எழுதுவது பழகிப்போனதாக இருந்தது. என் வாழ்க்கையின் அந்தக் கட்டம் வரையில் நான் கடிதம் எழுதுவதை அவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதியிருக்கவில்லை.
எப்படியிருந்தாலும் என்னுடைய மதிப்பு, மரியாதை எல்லாம் கூடிக்கொண்டுதானிருந்தது. என்னுடைய வாடிக்கையாளர்கள் இதை எனக்குத் தெரிவித்தனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு எனது எழுத்துவன்மை, ஒரு “தலைமைப் பண்பு“ என்கிற அளவுக்கு முன்னேறியிருந்தது. இந்தப் பெண்களுக்கு உதவ முடிவதில் பெருமைகொள்வது வேறொருவிதத்தில் வினோத உணர்வாக இருந்தது. அவர்கள் என்மீதும் எனது வழிகாட்டல் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களெல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தனிமைப்பட்டிருந்தார்கள் என்பது, அந்த நேரத்தில், எனக்குச் சரியாகப்  புரியவில்லைதானென்றாலும் பிற்காலத்தில் தெளிவாகத் தெரிந்தது. அவர்களுக்கு, கடிதங்களை எழுதிய நபர் யாரென்பதோ அல்லது அவற்றில் என்ன எழுதியிருந்ததென்பதோ ஒரு பொருட்டேயல்ல. அது, ஒருவேளை, நாம் எல்லோரும்   பிறருக்கு அத்தியாவசியமானவர்களாக  இருக்கவேண்டுமென விரும்புகிறோமே, அதனாலிருக்கலாம்.  நாம் எல்லோருமே மன்னிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோமே அதனாலும் அப்படியிருக்கலாம்.  உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள நம் எல்லோருக்குமே யாராவது ஒருவர் தேவைப்படுகிறதே, அதனால் அப்படியிருக்கலாம். அது எப்படியோ, எனக்கு 21 முடிந்து 22 நடக்கும்போது  அந்த வேலையில்தான் குளிர்காலத்தையும் வசந்தத்தையும்  கழித்தேன். ஒற்றைக்கால் பாதிக்கப்பட்ட கடல் சிங்கத்தைப் பெண்கூட்டம் சுற்றியிருக்குமே, அதுபோலக் கடிதங்கள் மத்தியில்!
பல்வகைப்பட்ட வித்தியாசமான கடிதங்களுக்கு நான் பதில் எழுத வேண்டியிருந்தது. சலிப்பான கடிதங்களுக்கும் பதில் எழுதினேன். இனிமைதரும் கடிதங்களுக்கும் துயரக் கடிதங்களுக்கும் பதில் எழுதினேன். நான் அங்கே ஒரு வருடம் தான் பணிபுரிந்தேன். ஆனால், அதுவே மூன்று வருடம் போல இருந்தது. நான் வேலையைவிட்டு விலகப்போவதாக நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவித்தனர். நேர்மையாகச் சொல்வதெனில் நான் அந்த வேலையில் சோர்ந்து போயிருந்தேன். நான் வேலையிலிருந்து வெளியேறுவதற்கு அது ஒரு காரணமே ஆகாது. ஆனால், என்னுடைய சொந்த ஐயம் மற்றும் அச்ச உணர்வுகளே அதற்குக் காரணமாக இருந்தன. ஆனால், இவ்வளவு நேர்மையான மனிதர்களை அதிகமாகச் சந்திக்கும் மற்றொரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே போவதில்லையென்பதையும் நான் உணர்ந்திருந்தேன்.
ஹாம்பர்கர் இறைச்சிக் கண்டங்களைப் பற்றிச் சொன்னேனில்லையா, கடைசியாக அந்தப் பெண் ( என்னுடைய முதல் கடிதம்) தயாரித்த ஒன்றைச் சாப்பிடவே செய்தேன். அவருக்கு வயது 32, திருமணமானவர், ஆனால், குழந்தைகள் இல்லை. அவரது கணவர் உலகத்தின் மிகப் புகழ்பெற்ற  வர்த்தக நிறுவனங்களில் ஐந்தாவதான ஒன்றில்  பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த மாதக் கடைசியில் நான் வேலையைவிட்டுச் செல்லவிருப்பதைத் தெரிவித்து எழுதியபோது,  அவருடைய அடுக்ககத்துக்கு மதிய உணவு சாப்பிட வருமாறு என்னை அழைத்தார். அடிப்படைப் பாரம்பரிய ஹாம்பர்கர் இறைச்சிக் கண்டம் ஒன்றை எனக்காகத் தயாரிப்பதாக வாக்களித்தார். அது மாதிரியான தொடர்புகள் நிறுவனத்தின் தோழமைக் கொள்கைகளுக்கு எதிரானதென்றபோதிலும் நான் உடனேயே ஒப்புக்கொண்டேன். என்னால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. அவருடைய அடுக்ககம் ஒட்டாக்யு ரயில்பாதை அருகிலிருந்தது. அது குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மிகப் பொருத்தமாக, அழகாக, சுத்தமானதாக அமைந்த ஒரு அடுக்ககக் குடியிருப்பு. அங்கேயிருந்த அறைகலன், உட்புற அமைப்பு,  ஏன், அவரது ஸ்வெட்டருங்கூட விலைகூடியதாக இல்லாவிட்டாலும் நேர்த்தியான அழகுத் தோற்றத்துடனிருந்தது. நான் எதிர்பார்த்ததை விடவும் இளமையாக இருந்தார். நான் எவ்வளவு இளமையாகத் தெரிகிறேனென்று அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். எங்கள் வயதை வெளிப்படுத்துவதையும் நிறுவனக் கொள்கை தடை செய்திருந்தது.
முதலில் நாங்கள் வியப்பில் திகைப்புற்றிருந்தாலும் சீக்கிரமே விடுபட்டுத் தளர்த்திக்கொண்டோம். ஒரே ரயிலைத் தவறவிட்ட இருவர் நண்பர்களாகி, அடுத்த ரயிலுக்காகச் சேர்ந்து காத்திருப்பார்களில்லையா, அது போன்ற உணர்வு இருந்தது. நாங்கள் இறைச்சிக் கண்டங்களைச் சாப்பிட்டுக் காப்பியை அருந்தினோம். சூழல் இனிதாக இருந்தது. அவரது மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து ரயிலைப் பார்க்க முடியும். அதிலும் அன்று வானிலை வேறு அற்புதமாக இருந்தது. வராந்தாவில் நிறையச் சுருள்மெத்தைகள் காற்றுப்பட விரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீது இல்லத்தரசிகள் மூங்கில் துடைப்பங்களால் அடிக்கும் வாப்-வாப்-வாப் சப்தங்கூடக் கேட்டது. அந்த ஒலி ஏதோ வறண்ட கிணற்றுக்குள்ளிருந்து வருவது போலத் தோன்றினாலும் அந்தக் கிணறு எவ்வளவு தூரத்திலிருக்கிறதென்று உண்மையிலேயே சொல்ல முடியாத வாறிருந்தது. ஹாம்பர்கர் கண்டம் அருமையான ருசி. அது மிகச் சரியான அளவுக்கு மணம் சேர்ந்து, உண்மையிலேயே சுவையாக, மிகச் சரியான அளவுக்கு இறைச்சிச் சாறு தோய்ந்துமிருந்தது. காப்பி குடித்து முடித்தபின் பர்ட் பச்சராக் கேட்டுக்கொண்டே எங்கள் வாழ்க்கைக் கதைகளைப் பறிமாறிக்கொள்ளத் தொடங்கினோம். சொல்லிக் கொள்ளுமளவுக்குப் பெரிதாக எனக்கு வாழ்க்கை என்று ஏதுமில்லாமலிருந்ததால், அவரே அதிகமும் பேசினார். அவர் மாணவியாக இருந்தபோது ஒரு எழுத்தாளராக வேண்டுமென விரும்பியதாகச் சொன்னார். அவர் ஒரு ஃப்ரான்சியோஸ் சாகன் ஆர்வலர். அவரது “ டூ யூ லைக் ப்ராம்ஸ்?“ அவருக்கு மிகவும் பிடித்த கதைகளில் ஒன்று. எனக்கு சாகனைப் பிடிக்காதென்பதில்லை. சாகன்  சரியானவர்தான். அவர் சலிப்பூட்டுவதாகப் பலர் சொல்கின்ற போதிலும், நான் அதை உண்மையாகவே ஒத்துக்கொள்வதில்லை.
‘’ ஆனால், என்னால் எதையும்  எழுத முடியவில்லை.’’ என அவர் குறைப்பட்டுக்கொண்டார்.
‘’ இப்போதுங் கூட ஒன்றும் தாமதமாகிவிடவில்லை. நீங்கள் எழுதத் தொடங்கலாம்.’’ இது என் யோசனை.
‘’ சரி. ஆனால் ஒரு விஷயம். என்னால் மிக நன்றாக எழுத முடியாதெனச் சொன்னது நீங்களேதான்’’ அவர் அதைப் புன்னகையுடன் சொன்னார்.
நான் முகம் சிவந்து  போனேன். என்னுடைய 22 வது வயதில் அடிக்கடி  முகம் சிவந்துபோவது எனக்கு வழக்கமானதாக இருந்தது.
‘’ ஆனால், உங்கள் எழுத்துக்களில் நிறைய உண்மை இருக்கிறதென நினைக்கிறேன்.’’ அவர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், புன்னகைக்கீற்று ஒன்று அவர் முகத்தில் தோன்றி மறைந்தது. ‘’ உங்கள் கடிதம் என்னை உங்கள் ஹாம்பர்கர் கண்டம் ஒன்றைச் சாப்பிடுமாறு தூண்டிவிட்டது.’’
‘’நீங்கள் பசியோடிருந்திருப்பீர்கள்,’’ அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
அப்படியுமிருக்கலாமென  நான் நினைத்துக்கொண்டேன்.
ஜன்னலின் கீழே ஒரு ரயில், அதன் வறண்ட க்ளாக்-க்ளாக் சப்தத்துடன் கடந்தது.
எனக்குத் திடீரென்று 5.00 ஆகிவிட்டதேயென உறைத்தது. நான் போக வேண்டும். நான் மன்னிப்பு  தெரிவித்துவிட்டுக் கிளம்புவதற்கு  ஆயத்தமானேன். ‘’ உங்கள் கணவர்  இப்போது வந்துவிடுவார். அதனால் நீங்களும் இரவு உணவு தயாரிக்கவேண்டுமே.’’
‘’ அவர் எப்போதுமே மிகவும்  பிந்தித்தான் வருவார்,’’   முட்டுக்கொடுத்த கைகளின்  மீது தலையை வைத்தவாறே, அவர் சொன்னார். ‘’ அவர் எப்போதுமே  நடு இரவுக்கு முன்னால் வீட்டுக்கு வருவதில்லை.’’
‘’அவருக்கு அவ்வளவு வேலையா?’’
‘’ அப்படித்தான் நினைக்கிறேன்.’’ அவர் ஒரு நிமிடம் தயங்கினார். ‘’ நான் கடிதங்களில் குறிப்பிட்டிருந்தது  போல், நாங்கள் அவ்வளவு  நன்றாக இல்லை.’’ இதற்கு என்னிடம் எந்தப் பதிலும் இல்லை.
‘’ உம்.. அதனால் பரவாயில்லை, எல்லாம் சரியாகத்தான் போகிறது. அவ்வளவுதான்.’’ நானும் அப்படித்தான் நினைத்தேன். ‘’ உங்கள் கடிதங்களுக்காக மீண்டும் எனது நன்றி. உண்மையிலேயே அவற்றை நான் ரசித்தேன்.’’
‘’ நானுந்தான்,’’ என்றேன். ‘’ அப்புறம், ஹாம்பர்கர் கண்டத்துக்காக மிக்க நன்றி.’’
பத்து வருடங்களுக்குப்  பின்னும், அவரது அடுக்ககத்தை  ஒட்டிய ஒட்டாக்யு ரயில் பாதையில் பயணிக்கும் போதெல்லாம் அவருடைய ஹாம்பர்கர் கண்டத்தை நினைத்துக்கொள்வேன். அவர் வீட்டு ஜன்னல் எதுவென எனக்கு நினைவில்லை. ஆனால் இப்போதும், வீட்டுக்குள் பர்ட் பச்சராச் கேட்டுக்கொண்டு, அவர் தனிமையில் தான் இருப்பாரோ என நினைக்கிறேன்.
நான் அவரோடு படுத்துத் தூங்கியிருக்கவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா?
இதுதான் இந்தக் கதை கால்கொள்ளுமிடம். அதன் பதில் எனக்கும் தெரியவில்லை.
வருடங்கள் செல்லச் செல்ல, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் ஒன்றோடொன்றாகச் சேர்ந்து கூடிக்கொண்டே போகின்றன.

மலைள் இணைய இதழ் ஜனவரி 02, 2014 இதழ் 41 இல் வெளியானது.

No comments:

Post a Comment