Monday, 18 January 2016

நேர்காணல் - சினுவா ஆச்சிபி CHINUA ACHEBE, Nigeria

சினுவா ஆச்சிபி'யின் இரு நேர்காணல்கள் அதிகாரமற்றவர்களுக்காகப் பேசும் ஒரு படைப்பாளி. தமிழாக்கம் ச.ஆறுமுகம்

images (9) 
நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் சினுவா ஆச்சிபி ( 16. 11. 1930 – 21. 03. 2013) உலகின் சிறந்த நாவலாசிரியர், கவிஞர், பேராசிரியர், திறனாய்வாளர். இவரை ‘’ ஆப்பிரிக்காவின் அதிகம் வாசிக்கப்பட்ட நாவலாசிரியர்களில் ஒருவர் என்றும் அந்தக் கண்டத்தின் அறிவுத்துறை முன்னோடிகளில் ஒருவர்’’ என்றும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது.  இவர் நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இபோ மொழி பேசும் ஓகிடி நகரில் பிறந்து வளர்ந்தவர். கதை சொல்லுதல் இபோ மொழிப் பண்பாட்டின் முக்கியப் பாரம்பரியங்களில் ஒன்று. இருபத்தாறாவது வயதில் அவர் படைத்த முதல் நாவல் Things Fall Apart (1958) ஆப்பிரிக்க இலக்கியத்தின் மிகச்சிறந்த ஒன்றாகப் போற்றப்படுகிறது. உலகம் முழுவதுமாக எண்பது லட்சம் பிரதிகள் விற்பனையாகி,  50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட நூலாகவும் அதுவே அமைகிறது. இதைத் தொடர்ந்து  No Longer at Ease  (1960),   Arrow of God (1964), A Man of the People (1966), and Anthills of the Savannah (1987). என்ற நாவல்களைப் படைத்துள்ளார். அவரது தாய்மொழி `இபோ` என்ற போதிலும் அவருடைய படைப்புகள் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஏராளமான சிறுகதைகள், அரசியல் விமரிசனங்கள், கட்டுரைத்தொகுதிகள், குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ள அவர் காலனியாதிக்க மொழியான ஆங்கிலத்தில் ஆப்பிரிக்க இலக்கியம் படைக்கப்படுவதற்கு ஆதரவளிப்பவராகவே இருந்தார்.  அவர் 1975ல் ஆற்றிய An Image of Africa: Racism in Conrad’s “Heart of Darkness” உரையில் ஜோசப் கான்ராடின் படைப்பினை மறுஆய்வுக்குட்படுத்தி அவரை படுமோசமான இனவெறியர் எனக் குறிப்பிட்டதைச் சிலர் எதிர்த்தாலும் பின்னர் அதுவும் அச்சில் வெளியிடப்பட்டது.

நைஜீரியாவிலிருந்து 1967ல் பையஃப்ரா தனி நாடாகப் பிரிந்தபோது, அது ஒரு சுதந்திர நாடாகப்  பரிணமிக்க, ஆச்சிபி ஆதரவாக இருந்ததோடு அந்தப் புதிய  நாட்டின் மக்கள் தூதுவராகவும் செயலாற்றினார். அப்போது நடந்த போர் காரணமாக ஏற்பட்ட  பஞ்சம், பட்டினி பசி, வன்முறை வெறியாட்டங்களை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அவற்றை நிறுத்துவதற்கான உதவிசெய்யுமாறும் வேண்டினார். அப்பகுதியை நைஜீரியா மீண்டும் 1970ல் இணைத்துக்கொண்டபோது அவர் கட்சி அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் அங்கு நிலவிய ஊழல் மற்றும் மேட்டுக்குடி வாதங்களால் வெறுப்புற்று கட்சியிலிருந்தும் வெளியேறினார். 22.03.1990ல் ஒரு கார் விபத்தில் அவரது முதுகெலும்பு பாதிக்கப்பட்டு இடுப்புக்குக் கீழ் பக்கவாதம் ஏற்பட்டுச் சக்கர நாற்காலியிலேயே இறுதிவரை அமெரிக்காவிலேயே வசிக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் பார்ட் கல்லூரியில் பதினைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியைத் தொடர்ந்தார். 2009 முதல் இறக்கும் வரையிலும் அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.முப்பதுக்கும் மேற்பட்ட கல்விக்கழகங்கள் அவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கியுள்ளன. 2007ல் மான் புக்கர் பரிசும் 2010ல் டோரத்தி மற்றும் லில்லியான் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. அக்டோபர் 2012ல் ஆச்சிபியின் There was a country : A Personal History of Biafra  நூலினை பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது. இதுவே ஆச்சிபியின் கடைசி நூலாக ஆயிற்று. 21.03. 2013ல் அவர் மரணமடைந்தார்.

ஆச்சிபியின் நாவல்கள் காலனியத்துக்கு முன்பும் பின்புமான, இபோ  சமூக மரபுகள் மற்றும் பண்பாடுகள், கிறித்துவத்தினால் அப்பண்பாட்டில் ஏற்பட்ட விளைவுகள், மற்றும் ஆப்பிரிக்க சமூகமதிப்புகளுக்கும் மேலைநாகரீகத்துக்குமான மோதல்களை மையப்படுத்தி விரிவுகொள்பவை. அவரது இலக்கிய நடை பெருமளவுக்கு இபோ வாய்மொழி மரபினை அடிப்படையாகக் கொண்டு, நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், உரையாடல்களை நேரடி விவரிப்பாகச் சொல்லுவதாக இருக்கின்றன. நாவலாசிரியர் மார்கரெட் அட்உட் இவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘’ ஒரு மந்திரக்கலை எழுத்தாளர் – இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர்.’’ என்றார்.

ஆச்சிபியின் முதல் நாவலை  வெகுவாகப் பாராட்டிய கவிஞர் மாயா ஆஞ்சலோ,  ‘’ அந்த நாவலை வாசிப்பவர்கள் எல்லோரும் அவரவர் அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகள், பெற்றோர், உறவினர், நண்பர்கள், ஏன், தங்களையே கூட நைஜீரியப் பாதைகளில் சந்திக்கின்றனர்.’’ எனக் குறிப்பிடுகிறார். நெல்சன் மண்டேலா அவர் அரசியல் கைதியாகச் சிறையிருந்த காலத்தில் ஆச்சிபியின் படைப்புகளை வாசித்ததை நினைவுபடுத்தி, ‘’ ஆச்சிபியின்  துணையில் சிறைச் சுவர்கள் தகர்ந்தன.’’ எனக் குறிப்பிட்டார்.

2004லும் 2011லும் ஆச்சிபிக்கு  Commander of the Federal Republic என்ற உயர்  விருதினை நைஜீரிய அரசு  வழங்க முன்வந்ததை அவர்  பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ‘’ அதற்கு அவர் குறிப்பிட்ட காரணங்களில் ஒன்று : என்னுடைய தாய்மண்ணைத் திவாலாக்கி, சட்ட நடைமுறைகளற்ற ஒரு நிலப்பிரபுத்துவக்காடாக்கிய ஆட்சியமைப்பிடம் விருதினைப் பெற மாட்டேன்.

ஆச்சிபி 1988ல் அமெரிக்காவின் பப்ளிக் அஃபையர்ஸ் தொலைக்காட்சியில் பில் மோயர்ஸ் என்ற கேள்வியாளருக்கு அளித்த பேட்டியில் தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளின் தமிழாக்கம் :

பில் மோயர்ஸ் : உங்கள் மரபிலுள்ள ‘’ எங்கேயானாலும் ஏதோ ஒன்று நின்றால், அதனருகிலேயே அதைத்தவிர்த்த வேறு ஏதோ ஒன்றும் நிற்கும். ‘’ என்ற பழமொழியை நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள்?

ஆச்சிபி :  `எதற்கானாலும் ஒரே வழிதான் உண்டு என்பதில்லை` என்பதே அதன் பொருள். அந்தப் பழமொழியை உருவாக்கிய இபோ மக்கள் அதை மிகவும் அதிகமாக வலியுறுத்துகின்றனர். நல்லவையெனினுங்கூட அவற்றிலும் முழுமையான ஒன்று என எதுவும் இல்லை. அவர்கள் மிகை மற்றும் வரம்பு மீறலுக்கு எதிரானவர்கள். அவர்களின் உலகம் இருமைகளின் உலகம். அவர்கள் சொல்கிறார்கள்: துணிவுமிக்கவனாக இருப்பது நல்லது, ஆனால் கோழைதான், துணிவுமிக்கவனை அப்படியாகத் தொடர்ந்திருக்கச் செய்கிறான் என்பதை மறந்துவிடாதே. அந்தப் பழமொழி சொல்வதும் இதுவேதான்.

மோயர்ஸ் : ஆக, உங்களுக்கான கடவுளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், நல்லது, மிகவும்சரி. ஏனென்றால் அங்கே அதே நேரத்தில் வேறொரு கடவுளும் இருந்துதானாக வேண்டும்.

ஆச்சிபி :  ஆமாம், ஒரு கடவுள் இருக்கிறாரா, நல்லது, அதைப்போல வேறுகடவுள்களும் இருப்பார்கள்.

மோயர்ஸ் : – இரண்டு பண்பாடுகள்.

ஆச்சிபி :  ஒரு கண்ணோட்டம் நிலவுகிறதா, நல்லது, இரண்டாவதாக ஒரு கண்ணோட்டமும் அங்கே இருக்கத்தான் இருக்கும்.

மோயர்ஸ் : நீங்கள் இரண்டு உலகங்களுக்குள், இரண்டு உலகங்களுக்கு நடுவில் வாழ்கின்றீர்கள். எனவே இது உங்களுக்கெனக் குறிப்பாக ஏதேனும் பொருள்படுவதாக இருந்ததா?

ஆச்சிபி :  ஆமாம், அதுதான் எனது வாழ்க்கைக்கும் எனது படைப்புகளுக்குமான மையக் கருத்துகளில் ஒன்றெனவே நினைக்கிறேன்.

மோயர்ஸ் : – நிச்சயமாக, உங்கள் இலக்கியத்திற்கு.

ஆச்சிபி :  ஆமாம், இதுவே முதல் முரண்பாடு என நினைக்கிறேன். எங்களை மேம்பட்டவர்களாகச் சீர்திருத்த வந்தவர்கள் – கிறித்துவ சமயப்பரப்புக் குழு – ஒரே பாதை, ஒரே உண்மை, ஒரே வாழ்க்கை என்ற சிந்தனையோடு வந்தனர். உங்களுக்குத் தெரியும், `நானே வழியாகவும் உண்மையாகவும் வாழ்க்கையாகவும் இருக்கிறேன்` இது, என் மக்கள் மரபுரீதியாகவே மிகையானதாக, வெறித்தனமானதாகக் கருதி அதிலிருந்தும்  பின்வாங்கச் செய்கிற ஒன்று.

மோயர்ஸ் : கிறித்துவ சமயப்பரப்புக் குழுவினர், காலனிய ஆட்சியாளர்கள், மேலைப் பண்பாட்டினர் எல்லோருமே ஆப்பிரிக்க சமூகத்தின் உண்மையான இருப்புக்குள் புகமுடியாமற் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது, இல்லையா? ஏனென்றால், நீங்கள் – ஆப்பிரிக்கர்கள் மரபு ரீதியான பழைய கடவுள்களை விட்டுவிடாமலேயே, மற்றொருவராக கிறித்துவக் கடவுளையும் ஏற்றுக்கொள்ள இயலும், அப்படித்தானே?

ஆச்சிபி :  ஆமாம், அதோடு கிறித்துவம், அல்லது நாகரீகம் என்ற பெயரில் எல்லாவற்றையும் நிராகரிப்பது, இவ்வளவு அதிகபட்சமாக நிராகரிக்கப்படுவது அவசியமற்றதெனக் கருதுகிறேன். இவ்வளவுக்குத் தேவையில்லை. ஏற்கெனவேயே பண்பாட்டின் அடிப்படை மட்டுமல்ல மக்களின் மனங்களிலும் ஏராளமாக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவே நான் நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், நாம் எதையும் செய்துவிடவில்லை. நமது சிந்தனைகள் தீங்கு விளைவிப்பவை, நமது மதங்கள் உண்மையில் மதங்களாகவே இல்லை; தன்னலம் சார்ந்த துய்ப்பியலாக அல்லது சமயப் புறம்பானதாக இருக்கின்றன. அதனாலேயே மக்களின் மனத்தில் பெருத்த பிரச்னையைக் கிளப்பியிருக்கின்றன.

மோயர்ஸ் : `நீங்கள் ஆப்பிரிக்கராக இருந்தால் இந்த உலகமே தலைகீழாகிவிடு`மென ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

ஆச்சிபி :  இந்த உலகத்தையும், அது ஒழுங்கமைந்திருக்கிற பாணியில் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வெளியையும் நோக்கும்போது அது போதுமானதாக இல்லையென்பதையே – நான் எங்கெங்கே நோக்கினாலும், எந்தத்திசையில் நோக்கினாலும் – காண்கிறேன். அந்த வெளிக்குள் இருப்பதை நான் விரும்பவுமில்லை; ஏனெனில் அது என்னை மூச்சுத்திணறும்படியாக அழுத்துகிறது. எங்கள் கண்டத்திலேயே கூட, இனவாதம் என்பது ஒருவருக்கு அனைத்துவிதத் தவறான நடத்துமுறைகள்தாம். அதற்கு மிக அண்மைக்கால எடுத்துக்காட்டாக அமைவது தொழில்வளர்ச்சியுற்ற உலகம் அதன் நச்சுக்கழிவுகளை ஆப்பிரிக்காவில் கொட்டுவதுதான்.

மோயர்ஸ் : அநேக மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு இல்லையே -

ஆச்சிபி :  அவர்கள் இது குறித்து எதுவுமே அறியாதவர்கள்.

மோயர்ஸ் : அமெரிக்காவும் மேலைநாடுகளும் ஆப்பிரிக்க நாடுகளில் நச்சுக் கழிவுகளைக் கொட்ட அந்த அரசுகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்கின்றனர் என்பதுதான், தற்போது வெளியாகியுள்ள நிகழ்த்துமுறை.

ஆச்சிபி :  நீங்கள் சரியாகத்தான் கூறுகிறீர்கள். ஆமாம், அவர்கள் அதையும் செய்வார்கள். ஆக, உலகம் என்பது தலைகீழாக இருக்கிறது என நான் கூறுவதும் அதையேதான். உலகம் சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை, ஆம், சரியான ஒழுங்கமைவு இல்லை. அதனாலேயே நாம் எந்தவிதத்திலும் – எழுத்தாளர்களாகவுங்கூட – அதனோடு மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை. ஒருவேளை, நாம் அதிகபட்சச் செயல்முனைவாளராக, அதிக அக்கறைகொண்டவர்களாக இருப்பதாலேயே அப்படியெனச் சிலவேளைகளில் நமது மேற்குலகத்தின் சகபணியாளர்கள் கூறுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் ‘’ நீங்கள் ஏன் ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கூடாது?’’ எனக் கேட்கிறார்கள். ‘’கவிதையின் உண்மையான பணி இதுவல்ல.’’ எனச் சொல்கிறார்கள். ஆனால், இதில் கருது புள்ளியாகக் காணவேண்டியது – ஒரு கவிஞன், நான் கூறுகிறபடியான வெளிச்சத்தில் கவிதையைக் காணுகிறவனெனில் பேரரசனோடு கடுமையான மோதலில் ஈடுபடவேண்டியிருக்கிறது. மேலைக் கவிஞனைப் போல், ‘’ ஓ, கிடையாது. அரசியலோடு எங்களுக்கு எந்த உறவும் இல்லை; எங்களுக்கு வரலோற்றோடும் உறவுகள் இல்லை; எங்கள் மனம் தவிர வேறு எதனோடும் எந்தப் பணியுமில்லை.’’ எனச் சொல்பவனெனில், நல்லது, பேரரசர் மிகமிக மகிழ்ச்சியோடு இருப்பார்.

மோயர்ஸ் : ஆக, கதைசொல்வதென்பது தீங்கினைச் சுட்டுகிற ஒரு அச்சுறுத்தல் என ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டது இந்தப் பொருளில் தானா?

ஆச்சிபி :  அது ஒரு அச்சுறுத்தல், ஆமாம்.

மோயர்ஸ் : கட்டுப்படுத்துமிடத்தில் அமர்ந்திருக்கும் எவருக்கும் ஒரு அச்சுறுத்தல்.

ஆச்சிபி :  ஆமாம், ஏனென்றால், கதைசொல்லியின் வேலைத்திட்டம் வேறு; பேரரசரின் திட்டம் வேறு.

மோயர்ஸ் : நிச்சயமாக, நீங்கள் பேரரசரோடு மோதுகின்ற உங்கள் பங்கினைச் சரிவரச் செய்திருக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் ஆப்பிரிக்க அரசுகள் மக்களைச் சூறையாடும் பேரழிவுப்போக்குகளைத் தீட்டிக் காட்டியிருக்கிறீர்கள்; ஏழைக் குடியானவர்களும் தொழிலாளர்களும் குடிசைகளில் வசிக்க, அமைச்சர்கள் அரச மாளிகைகளில் வசிக்கின்றனர். உங்கள் படைப்புகளில் மக்களாட்சி என்ற பெயரில் நிகழும் ஊழல், கையூட்டு, வன்முறை, மனிதப் பண்பிழந்த இழிநிலை அநாகரீகங்கள், காட்டுமிராண்டித் தனம், மோசடியான மற்றும் கள்ளவாக்குத் தேர்தல்களைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். மேலை உலகத்தில் அதிகமான வாசகர்களை நாளும் பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நாவல்களால் நீங்கள் மேலைநாட்டினரைப்போலவே ஒரே மாதிரியான குற்றங்களை உங்கள் மக்கள்மீது சுமத்தும் போக்கு வலுப்படுவது குறித்து கவலை கொள்ளவில்லையா?

ஆச்சிபி :  நல்லது, அந்த அபாயத்தை என்னால் காண முடிகிறது. ஆனால், உண்மையில் அது என்னைக் கவலை கொள்ளச்செய்வதில்லை. ஏனெனில் எனக்கு அது குறித்து அடிப்படையிலேயே எந்த அக்கறையுமில்லை. நான் எந்த மக்களைப் பற்றிய கதைகளைச் சொல்கிறேனோ, அந்த மக்கள் மீதுதான் எனக்கு முழு அக்கறை; நான் சிறிது கடுமையாக இருக்கிறேனென்றால், அந்தக் கடுமை மக்கள் மீதான அந்த அக்கறையிலிருந்துதான் பிறப்பெடுப்பதாக நான் கருதுகிறேன். அதனால் நான் என் மக்களை வெறுக்கிறேனென்றோ அல்லது அந்த ஆட்சியாளர்களை வெறுக்கிறேனென்றோ பொருளில்லை. நான் ஆட்சியாளர்களைக்கூட வெறுக்கவில்லை. ஆனால், அது எனக்குத் தெரியவில்லை, நைஜீரியா போன்ற ஒரு நாட்டின் சாத்தியங்களையும் எவ்வளவு வாய்ப்புகளை வீணடித்திருக்கிறோமென்றும் பார்க்கும்போது மிகுந்த வருத்தமளிப்பதாக இருக்கிறது. ஏனெனில், எவ்வளவோ சாதித்திருக்க முடியும் என்பதுதான். எத்தனையோ நல்வாழ்வு உதவிகள் செய்திருக்க முடியும், நைஜீரியாவின் உள்நாட்டு ஏழைகளுக்கு மட்டுமல்ல, நைஜீரியாவுக்கு வெளியிலுங்கூட. ஏனெனில் நைஜீரியா போன்ற ஒரு நாட்டுக்குக் கிடைத்திருக்கும் கொடை, வளமென்பது அத்தனை மிகுந்த அளவிலானது. அந்த வாய்ப்புகளையும், என்ன சாதித்திருக்கிறோம் என்பதையும் ஒப்புநோக்கும்போது உண்மையில் மிகுந்த கசப்பாகத்தான் யாருக்கும், ஏன், உங்களாலும் உணரமுடியும்.

மோயர்ஸ் : ‘’ நம்மை முழுவதுமாக சுயநலத்துக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, நம்மைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமல்ல, அதைவிட ஆழமாக நம்மையே காயப்படுத்தியுள்ளோம் என்பதை மொக்கையான கற்பனையாகவாவது, ஒரு முழுக்க முழுக்க உளவியல் அடிப்படையிலான அபாயமாக ஒருவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’’ என எழுதும்போது நீங்கள் நிரம்பவுமே கடினமானவராகிறீர்கள். இது உங்களுக்கே நீங்கள் விதித்துக் கொள்கின்ற கடுமையான தீர்ப்பு..

ஆச்சிபி :  ஆமாம், உங்களுக்குத்தான் ஏராளமான எடுத்துக் காட்டுகள் தெரியுமே, தங்கள்,தங்கள் நாட்டுச்செல்வங்களை ஐரோப்பாவுக்கு, சுவிஸ் வங்கிக்கு எனக் கொள்ளை, கொள்ளையாக ஏற்றிச் சென்ற உதாரணங்கள்தாம் வண்டி, வண்டியாகக் கொட்டிக் கிடக்கின்றனவே. அவர்களின் நாட்டு எல்கைக்குள் நச்சுக்கழிவுகளைக் கொட்டுவதற்கு அனுமதித்துப் பணம் பெற்றுக்கொண்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாவதைத்தான் நீங்கள் அறிவீர்களே. நான் சொல்லவருவது, இதுபோன்ற விஷயங்களைத்தான் நான் படைப்புகளில் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதைத்தான். உண்மையாகவே இது உங்களால் முடியாத ஒன்று – தாங்கமுடியாத அளவுக்கு கசப்பு ஏற்படாமல்  இதுபோன்ற சூழ்நிலைகளை நினைப்பதோ, விவரிப்பதோ இயலாத ஒன்று.

மோயர்ஸ் : நைஜீரியாவும் ஆப்பிரிக்காவின் புதிய தேசங்களும் காலனியாதிக்கத்திலிருந்து விடுபடும்போது மக்களாட்சியைத் தழுவியது ஒரு துணிவுமிக்க மாபெரும் செயல்தான். ஏனென்றால், மக்களாட்சி, முடிவற்ற ஊழலுக்கான சாத்தியத்தை வழங்குவதாக இருக்கிறது. தலைவர்கள், தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்தாலே வாக்காளர்களுக்கு நன்மைகள் கிடைக்குமென வாக்குறுதி அளிக்கின்றனர். மக்களாட்சியை ஊழலற்றதாக வளர்த்தெடுப்பதில்  மிகப்பெரிய அளவுக்கான ஒழுக்கக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது, மரபுகளையும் நிறுவனங்களையும் கட்டியமைப்பது என மிகப்பெரிய பணிகள் உள்ளடங்கியிருக்கின்றன. அதிலும், ஊழலற்றதாக இங்கே எந்த மக்களாட்சியும் இல்லை என்பதே கண்கூடாகத் தெரிகிறது.

ஆச்சிபி :  ஆமாம், நல்லது. நீங்கள் சரியாகச் சொல்வதாகத்தான் நான் நினைக்கிறேன். அதோடு, அது இன்னும் தாண்டிச் செல்கிறதென எண்ணுகிறேன். ஏனெனில் உதாரணத்துக்கு, ஆப்பிரிக்காவில் நாங்கள் மக்களாட்சியைச் சீரழித்துவிட்டோமென மக்கள் சொல்வதாக வைத்துக்கொண்டால், காலனிய ஆட்சியின்போது எங்களுக்கு மக்களாட்சி முறை கற்பிக்கப்பட்டதாவும் நாங்கள் பெற்றுக்கொண்ட கல்விக்குத் துரோகம் செய்துவிட்டதாகவும் அர்த்தங் கொள்கின்றனர். ஆனால், அது அப்படி இல்லை. அது உண்மையுமல்ல. முதலாவதாகக் காலனிய ஆட்சிமுறையே மக்களாட்சி முறை அல்ல. அது சர்வாதிகாரத்தின் அதிகபட்சமான ஒரு நீட்சி வடிவம். காலனிய ஆளுநர் அந்த ஆட்சி எல்லைக்குள் எவருக்கும் பதில் சொல்லவேண்டியவராக இல்லை. பாரீசில் அல்லது லண்டனில் இருக்கிற ஒரு அமைச்சருக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவரே தவிர, அடிப்படை மக்களுக்கு நிச்சயமாகப் பதில் சொல்லவேண்டியதில்லையாக இருந்தது. அதனால் அங்கே மக்களாட்சியின் மாதிரியிலான ஒரு நடைமுறை கூட இல்லாமலிருந்தது. காலனிய ஆட்சியில் நாங்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியிலான நடைமுறையைப் புழக்கத்தில் கொண்டிருக்கவில்லை. மாறாகக் காலனிய எதேச்சதிகாரத்தை நடைமுறையில் கொண்டிருந்தோம். அதனால்தான் பாருங்கள், காலனிய மக்களுக்கு உண்மையில் அனுபவமில்லை, மற்றவர்கள் சொல்லிக்கொள்கிறார்களே, மக்களாட்சி முறையை சுவீகரித்துக்கொண்டார்களென, அதுபோன்றதான அனுபவம் கூட நிச்சயமாக இல்லை. அவர்கள் அதுமாதிரியான எதையும் சுவீகரித்துக்கொள்ளவில்லை. எனவே அது மீண்டும் மக்கள் எதிர்பார்ப்புக்குத் தக்கபடி நடந்துகொள்ளவில்லையென்ற கேள்விக்கும் மேலாகச் செல்கிறதென்பதை நீங்கள் பார்க்க முடிகிறது. உண்மையிலேயே அவர்கள் தயார்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதற்கான பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

மோயர்ஸ் : `தொடக்க காலத்தில் உலகம் சின்னஞ்சிறியதாக இருந்தபோது ` என்ற முதல் வரியுடன் உங்கள் குழந்தைக் கதை `டிரம்` தொடங்குகிறது. உங்களுக்குள்ளிருக்கும் கலைஞன் மொத்தக்கதையையும் நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டுமென, நீங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டுமென எப்போதாவது விரும்பினானா?

ஆச்சிபி :  ஆமாம், நல்லது. அதுதான் கதைகளின், அதிலும் குறிப்பாகக் குழந்தைக் கதைகளின் முழுமையான பலமென்று நான் நினைக்கிறேன். நீங்கள் இந்தக் கருத்தினை இங்கே எழுப்பியது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில், நாம், கற்க வேண்டியிருக்கிறது, நாமென்று  எல்லோரையுமே தான் சொல்கிறேன், நாம் அவ்வப்போது குழந்தையாக மாறுவதற்குக் கற்கவேண்டியிருக்கிறது. நாம் அந்த அளவுக்குக் கடினமாக விறைப்பாகிவிட்டிருக்கிறோம். குழந்தைகளால் இயல்கின்றவற்றை, வளையுந்தன்மையை  இழக்கும் விதமாக நாம் அதிகபட்ச அறிவினால், அதிகபட்ச உடைமைகளால் அதிகபட்சத் தனியார்வத்தால் அந்த அளவுக்குக் மிகையாகக் கனத்துவிட்டோம். குழந்தைகளால் பறக்க முடியும். ஒரு குழந்தைக்கு எல்லாமே, எதுவானாலும் இயலக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதனை, குழந்தைக் கதைகள் நமக்கு மீட்டுத்தரக்கூடும். இதைத்தான் நாம் மீண்டும் கற்கவேண்டுமென நினைக்கிறேன். அந்தக் குறிப்பிட்டதான வழியில் நம்மை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மோயர்ஸ் : நீங்கள் நாவல்கள் எழுதுவதிலிருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு விலகிக் குழந்தைக்கதைகளை எழுதினீர்கள். ஏன், அப்படி?

ஆச்சிபி :  ஆமாம். அது ஏனென்றால், குழந்தைக்கதை எழுதுவது மிகவும் முக்கியமானதென்று நான் நினைத்தேன். அது மிகமிக முக்கியமானதாக இருக்கிறது. நான் ஆர்வமூட்டுகிற, புதுமையானதாகவுங்கூடச் சில அனுபவங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. நாம் நம்முடைய குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லாமலிருப்பதன் அபாயமாக நான் உணர்ந்தவற்றை, நான் கணித்திருந்தவற்றை என் சொந்தக் குழந்தைகளை வளர்த்த போதான அனுபவம் உறுதிசெய்தது.   நம் தாத்தாக்கள் கதை கூறினர்;  நம் தந்தைகள் அதைத் தொடர்ந்தனர். ஆனால், எழுதுவதென்று வந்தபிறகு, குழந்தைகளுக்குக் கதை சொல்கிற அந்தக் கடமையை, நாம் கூடவோ, குறைவாகவோ, மறந்தேவிட்டோம்.

மோயர்ஸ் : அதனால் என்ன நிகழ்ந்துவிட்டதென்கிறீர்கள்? அப்படியென்ன மாறிப்போனது?

ஆச்சிபி :  அதனால் என்ன நிகழ்ந்ததென்றால், எல்லாவிதமான மோசமான கதைகளும் எல்லாவிதக் குப்பைகளும் – மீண்டும், இது, நச்சுக்கழிவுகளை மீண்டும் மீண்டும் கொட்டுவது போன்றது – என் மகளை நான் கவனித்திருக்கிறேன் – நாங்கள் அப்போது அனுபவங்களற்ற இளம் பெற்றோராக இருந்தோம். அப்போது, லாகோஸிலுள்ள அனைத்துப் பொருட் பேரங்காடிக்குள் நுழைந்து பார்வைக்கு அழகானதாகப் பளபளப்பாகப் பெரிதாகவும் வண்ணங்களுடனும் தெரியக்கூடிய கதைப்புத்தகத்தைத் தேடி எடுப்போம். அப்போது நாங்கள் குழந்தைக் கதைகளைப் படித்ததேயில்லையென்பதால் அதனுள் என்ன இருக்கிறதென்று எங்களுக்கும் தெரியாது. அப்புறமாகத்தான் என் மகள் வித்தியாசமான கருத்துக்களுள்ளவளாக இருப்பதை நானும் என் மனைவியும் கண்டுபிடித்தோம். அந்தக் குறிப்பிட்ட கட்டத்தில்தான், அவள் என்ன படிக்கிறாளென்று நாங்கள் கூர்ந்து கவனித்த போதுதான் அங்கே ஏராளமான நஞ்சு இருப்பதைக் கண்டோம். அங்கே நஞ்சு அதிகமாக, ஆம், முழுவதுமாக இனவாதக் கதைகள், ஆப்பிரிக்கா குறித்து, அது வேறு இடம் என்பதாக, அது உலகத்தின் பின்பக்கம் இருப்பதான கருத்துகள் இருந்தன. அப்போது நாங்கள் அத்தகைய உணர்வுகளோடுதான் இருந்தோம்.

மோயர்ஸ் : ஆகவே, நீங்கள், குழந்தைக்கதைகள் எழுதத் தீர்மானித்தீர்கள்.

ஆச்சிபி :  அதனால் நாங்கள் அப்போது தீர்மானித்தோம் – எழுதுவதென்றில்லை, ஆனால், குழந்தைக்கதைகளின் முக்கியத்துவம் தெரிந்தது. எங்கள் முன்னோர்களைப் போல இரவு உணவுக்குப் பின் குழந்தைகளைக் கதைசொல்லுங் களத்துக்கு அழைத்துவர ஒரு பெற்றோராகத் தவறியிருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டோம். நான் அப்போது   எதையும் எழுதியிருக்கவில்லை. அது எவ்வளவு தூரத்துக்கு வெற்றி பெறுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை, ஆனால், நான் முயற்சித்துப் பார்க்கத் தயாராக இருந்தேன். அதுவே என்னை அந்தத் திசையில் செலுத்தத் தொடங்கியது.

மோயர்ஸ் : கடந்தகாலத்தை நினைவுகொள்ளும் சக்தி உங்களுக்கு மிக முக்கியமானதாயிற்றே.ஆச்சிபி :  ஆமாம்,ஆமாமாம்.

மோயர்ஸ் : ஏன்?

ஆச்சிபி :  நல்லது,  கதைசொல்லுதல் அடிப்படையில் உலகை நோக்கினால், போர் வீரன் இருக்கிறான், போர்முரசு கொட்டுபவன் இருக்கிறான். அவன்தான் மனிதர்களுக்கு முதலில் சூடேற்றுகிறான், அவன்தான் மனிதர்களைக் கிளர்ச்சியுறச் செய்கிறான். அதனாலேயே நான் அவனை முரசறைபவன் என அழைக்கிறேன். பின்னர்தான், போர்வீரன் முன்னோக்கிச் செல்கிறான், பின்னர், போரிடுகிறான். அங்கே கதை சொல்பவனும் இருக்கிறான் என்பதை நீங்கள் காணவேண்டும். அவன் தான் சம்பவத்தைத் திரும்பவும் கதையாகச் சொல்வதற்காக உள்வாங்குகிறான். அவன்தான் உயிர்வாழ்கிற எல்லோரையும் தாண்டிச் செல்பவனாக இருக்கிறான். உண்மையில் சொல்வதென்றால், கதை சொல்பவன் தான் நாம் என்னவாக இருக்கிறோமோ அப்படிச் செய்கிறான். அதுவே வரலாற்றை உருவாக்குகிறது.

மோயர்ஸ் : நினைவுத்திறம். தலைமுறைகளின் தொடர்ச்சி.

ஆச்சிபி :  ஆமாம், அது சரியானது. உயிர்வாழ்பவர்களுக்கு நினைவுத்திறம் நிச்சயமாக அவசியம். இல்லையெனில் அவர்கள் உயிர்வாழ்ந்ததற்கே பொருள் இல்லாமற் போய் விடுகிறது.

மோயர்ஸ் : பிறர் எப்படித் துன்பப்பட்டு இறந்தனர் என்ற அறிவு

ஆச்சிபி :  – இங்கேயே துன்பமடைந்து, இங்கேயே போரிட்டதுமான அறிவு. அது மிகமிக முக்கியமானது. அதுதான் சாவன்னாவின் எறும்புப் புற்றுகளின் (Anthills of the savanna, novel) பொருள், உங்களுக்குத் தெரியுந்தானே. அது, அந்த நினைவுத்திறம், உயிர்வாழ்தல் என்பது சாரமற்ற ஒரு தொழிற்செயல்பாட்டுக்கும் மேலான ஒன்றாக அமையவேண்டுமெனில் அந்த நினைவுத்திறம் அவசியமானது.

மோயர்ஸ் : அது? அடுத்த வருடம் வரைக்குமாக எறும்புப்புற்று தாக்குப்பிடிக்கிறது–

ஆச்சிபி :  – அதனால், சாவன்னாவின் பேரழிவு குறித்த நினைவு புதிய புல்லுக்குக் கிடைக்கிறது.

மோயர்ஸ் : – தீயால் ஏற்பட்டது.

ஆச்சிபி :  ஆமாம், சாவன்னாவின் முந்தய வறட்சிப் பருவத்தில் நிகழ்ந்த அந்தப் பெருந்தீ.

மோயர்ஸ் : ஆக, எறும்புப்புற்று, அந்த நினைவைப் புதிய புல்லுக்காகச் சுமந்து நிற்கிறது, புதிய தலைமுறைக்குக் கடத்திச் செல்கிறது.

ஆச்சிபி :  ஆமாம்,

மோயர்ஸ் : — அப்படியே, ஒன்றிணைந்த கூட்டு நினைவாக்கத்தை நெய்கிறது

ஆச்சிபி :  ஆமாம்,

மோயர்ஸ் : ஆக, நீங்கள் சொல்வது, உயிர்வாழ்பவர் ஒவ்வொருவருக்கும் நினைவுகொள்ளும்  கடமை இருக்கிறது.

ஆச்சிபி :  ஆமாம். ஆமாமாம்.

மோயர்ஸ் : அந்தக்காலத்து யூதப் பழமொழி, என்ன? நினைவுகொள்ளுதலில்தான் மீட்சியின் ரகசியம் இருக்கிறது..

ஆச்சிபி :  ஆமாம். அது மிகச் சரியானதென்று சொல்வேன், ஆமாம்.

மோயர்ஸ் : அதனால்தான் அதை நீங்கள் எழுதுகிறீர்களா?

ஆச்சிபி :  நல்லது. ஆனால் நான் அதை இப்படிக்கூறுவேன். நான் சொல்ல வருவது, நான் எழுதுகிறேன் ஏனென்றால், அதில் ஒரு பகுதி, நான் மகிழ்ச்சி கொள்கிறேன். அதோடுங்கூட, நான் நினைப்பது, என்னுடைய கதையை யாராவது எழுதவேண்டு மென்பதையும் நான் தெரிந்திருந்தேன். அப்போது, எங்களுக்குத் தரக்கூடிய எந்தச் செய்தியையும் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டிய, நாங்கள் எதுவும் நிகழக்கூடிய, அதாவது நிகழ்வுகளுக்கு மாறான ஒரு வித்தியாசமான காலகட்டத்தில் இருந்தோம். நான் நைஜீரியாவின் முதல் பல்கலைக் கழகத்தில் சேர்ந்திருந்தேன்.  அங்கே ஆங்கில இலக்கியத்தில் ஒரு பாடத்திட்டத்தைப் பயின்றுகொண்டிருந்தோம். அங்கே பிரித்தானிய மாணவர்கள் அவர்களுக்குச் சொந்தமான பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிற அதே வகையான இலக்கியம் எங்களுக்கும் பயிற்றுவிக்கப்பட்டது. அவர்கள் எங்களுக்குச் சில நூல்களை வாசிக்குமாறு பரிந்துரைத்தனர். ஆனால், நான் அந்தப் புத்தகங்களை வேறு வெளிச்சத்தில் நோக்கத் தொடங்கினேன். உண்மையில், திடீரென ஒருநாள் காட்டுமிராண்டிகளில் ஒருவனாக நானும் இருப்பதாக உணர்ந்தேன். நான் இளமைக்காலத்தில், அந்த வீரதீரச் சாகசங்களைப் படித்திருந்தேன். அவற்றில் ஒரு நல்ல வெள்ளை மனிதர், காட்டுக்குள் அலைந்து திரிந்து அபாயங்களை எதிர்கொள்வார். காட்டுமிராண்டிகள் அவருக்கு ஆதரவாக இருப்பார்கள். நானும் அந்த நல்ல வெள்ளைமனிதனுக்கு ஆதரவாக இயல்பூக்கம் பெற்றிருப்பேன். இதுதான் கற்பனைப் படைப்புகள் செய்யக்கூடியது. நீங்கள் சரியானபடி வளர்ச்சியடையாதிருந்தால் இது உங்களைத் தவறான பாதையில் செலுத்திவிடும். பல்கலைக்கழகத்தில், திடீரென ஒருநாள், இந்த நூல்களையெல்லாம் வேறுவிதமான கோணத்தில் பார்க்கவேண்டுமென உணர்ந்தேன். உதாரணத்துக்கு, மிகமிக உயர்வாகப் பாராட்டப்பட்ட நூலான இருட்டின் இதயம் (Heart of Darkness) இப்போதுங்கூட வெகுவாகப் பாராட்டப்படுகின்ற ஒன்று, நான் சொல்லவருவது, அது, அத்தகையதல்ல.

மோயர்ஸ் : அது மேற்கின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது.

ஆச்சிபி :  நான் உணர்ந்தது, கடற்கரையில் மேலுங் கீழுமாகக் குதித்துக்கொண்டிருந்த காட்டுமிராண்டிகளில் நானும் ஒருவனாகத்தான். நான் முன்பு நினைத்திருந்தது போல் மார்லோவின் நீராவிப்படகுக்குள் இல்லை. அதுபோன்ற ஒரு வெளிச்சம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், வேறு மாதிரியான கதை ஒன்றை நீங்களோ அல்லது வேறு யாருமோ, எழுத வேண்டிய அவசியமிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். எப்படியானாலும் அதுபோன்ற ஒரு பார்வைக்குட்பட்ட பின் அது ஏன், நானாக இருக்கக்கூடாது? அதனால், நான் சொல்வது, கதை சொல்வதில், கதையைப் படைப்பதில் கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியோடுங்கூடவே, ஒரு கருத்தூன்றிய நோக்கமும் இருந்தது – ஆனால், அது  மிகவும் கருத்தூன்றியதான ஒரு நோக்கம். அதனாலேயே யாராவது எழுந்து, ‘’ ஓ, இலக்கியம், அல்லது கவிதை, சமூகம், அல்லது அரசியல் போன்ற கடினமான விஷயங்களோடு செயல்படுவதற்கு எதுவுமில்லை.’’ எனச் சொல்வதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

மோயர்ஸ் : நல்லது, இலக்கியங்கள் எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. சரியாகவோ, தப்பாகவோ அல்லது உண்மையாகவோ பொய்யாகவோ அவை நமக்குள் பிம்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒருமுறை, மேற்குலகம், குறிப்பாக அமெரிக்கா, ஆப்பிரிக்காவுக்குக் காது கொடுக்குமென நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். காது கொடுப்பதாக இருந்தால், நாங்கள் என்னென்ன கேட்போம்? ஆப்பிரிக்கா, உலகத்தின் இதர பகுதிக்கு எதைத் தெரிவிக்க இருக்கிறது?

ஆச்சிபி :  நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாங்கள் மனிதர்கள். நாங்கள் வேடிக்கைக்கான ஜீவராசிகளல்ல. ஆமாம், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் வேடிக்கை ஜீவராசிகளல்ல. இங்கேயுள்ள எந்தச் செய்தித்தாளை வேண்டுமானாலும், பாருங்கள், மாதக்கணக்கில் ஆப்பிரிக்கா பற்றி எந்தச் செய்தியுமிருக்காது. பின் ஏதாவது ஆண்டுக்கொரு நாளில், ஏதோ ஒரு வியப்பான செய்தி இருக்கும் – அது ஒரு விந்தைக் கதையாக இருக்கும். ஆக, நாம் ஆப்பிரிக்காவோடு இணைத்துப் பார்ப்பதற்கு அத்தகைய ஒரு விந்தைக்கதைதான் கிடைக்கும். நான் எளிமையாகச் சொல்வேன், ‘’ ஆப்பிரிக்காவை ஒரு கண்டத்தின் மக்களாகப் பாருங்கள்.’’ அங்கே மனிதர்கள் இருக்கிறார்கள் – வெறும் மனிதர்கள். அவர்கள் பேய்களல்ல; அவர்கள் தேவதைகளுமல்ல; அவர்கள் வெறும் மனிதர்கள்தாம். அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். நாம் நமக்குள்ளேயே ஏராளமாகச் செவிமடுக்கிறோம். வலுவான ஒருவரும் மெலிந்த ஒருவரும் இருக்கின்ற ஒரு சூழல் இது. மெலிந்த நபரே எப்போதும் கேட்கின்றவராக இருக்கின்றார். மெலிந்தவருக்கும் சொல்வதற்கு ஏதாவது இருக்குமென்பதைக்கூட, ஒரு கட்டத்தில் வலுவானவர் மறந்துவிடுகிறார். நீங்கள் பாருங்கள், அது ஏனென்றால், அந்த மெலிந்தவர் வெறுமனே இருக்கிறார், அவ்வளவுதான். அவர் அங்கே நிரந்தரமாக பொருத்தப்பட்டுவிட்டவர். நீங்கள் அவரிடம் வெறுமனே பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள். தெற்குரொடீஷியாவின் பிரித்தானிய ஆளுநர் ஒருவர் , ஒருமுறை, ‘’ வெள்ளையர்களுக்கும் கறுப்பர்களுக்கும் இடையிலான பங்குரிமை என்பது குதிரைக்கும், அதன்மீது சவாரிசெய்பவனுக்குமான பங்குரிமைதான்.’’ எனச் சொன்னார். அவர் ஒன்றும் வேடிக்கைக்காக இதைச் சொல்லவில்லை. அவர் அப்படி முழுதும் கருத்தூன்றியவராகவே  அவ்வாறு கருதினார். அதைத்தான் இப்போது மேலையுலகம் விட்டொழிக்கவேண்டுமென்று நாங்கள் நினைக்கிறோம், ஏனென்றால்,   அடக்கி ஒடுக்கப்படுபவர்களின்  பார்வையில் நம்மால் பார்க்கமுடியாதபோது, நம்மால் அவர்களுடைய வாழ்க்கையைக் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. நம்மால் அப்படி முடிந்தால், அவர்களின் பார்வையில் விஷயங்களைக் காணும் திறன் இருந்தால், நல்லவை நிகழத்தொடங்கும். ஆக, நாம், ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உங்களுடைய சொந்த சமூகத்துக்குள்ளுங்கூட, மெலிந்தவர்களைச் செவிமடுக்கவேண்டுமென்பதும், அத்தகைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதும்  முக்கியமானது. வலுவானவர்கள் மெலிந்தவர்களைச் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்.02. 08. 2000 அன்று ஆச்சிபி, நியூயார்க்கில் அவரது வீட்டில், அட்லாண்டிக் அன்பௌண்ட் இதழின் கேட்டீ பேக்கனுக்கு அளித்த நேர்காணலில் சில பகுதிகள்.

பேக்கன் : `நவீன ஆப்பிரிக்க நாவலின் தந்தை` என நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். Things Fall Apart எழுதப்பட்டுப் பல பத்தாண்டுகள் கழிந்துவிட்டபோதுங்கூட அந்த நாவல் இப்போதும் அதிர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அந்த நூல் ஏற்படுத்தியுள்ள தாக்கம், விளைவு கண்டு நீங்கள் வியப்படைகிறீர்களா?

ஆச்சிபி :  நான் வியப்புற்றேனா? ஆம், ஆரம்பத்தில். இன்று நாம் தெரிந்துகொண்டுள்ள ஆப்பிரிக்க இலக்கியம் எதுவும் அப்போது இல்லை. நான் அந்த நாவலை எழுதும்போது, அது வெளியிடப்படுமா, ஏற்கப்படுமா எனக்கூட எனக்கு எந்தவிதமான சிந்தனையுமில்லை. அது புதிதாக இருந்தது – அந்த நாவல் எந்தமுறையில் எடுத்துக்கொள்ளப்படப்போகிறதென என்னால் அப்போது கணிக்க முடியவில்லை.

ஒரு விஷயம் உங்களை என்றென்றைக்கும் தொடர்ந்து வியப்பேற்படுத்த முடியாதுதானே. சிறிது காலத்துக்குப் பின் அந்த நாவல் எப்படி எப்போதும் ஒத்திசைகிறதெனப் புரிந்துகொள்ளத் தாடங்கினேன். என்னுடைய வரலாற்றை இன்னும் சிறப்பாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன். இதை எழுதும்போது, நான் வரலாற்றில் நிபுணத்துவம் ஏதும் பெற்றவனாக இல்லை. நான் அப்போது மிகவும் இளையவனாக இருந்தேன். என்னிடம் ஒரு கதை இருந்ததென்பதை நான் தெரிந்திருந்தேன். ஆனால், அது எவ்வாறு உலகத்தின் கதையோடு பொருந்திப் போனதென்று உண்மையிலேயே அப்போது எனக்கு எந்தப் புரிதலும் இல்லை. இபோ மக்களுக்கு அந்த நாவல் என்னவாக இருக்குமென்று எனக்குத் தெளிவு இருந்தது. ஆனால், வேறு இடத்திலுள்ள இதர மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவார்களென எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அந்த மக்களுக்கும் பொருள்படுவதாக அல்லது அதிர்வேற்படுத்துவதாக நாவலில் ஏதேனும் இருந்ததா? அப்படி இருந்ததென்று ஒருகட்டத்தில், உங்களுக்கு ஒரு உதாரணம் காட்டுவதற்காகச் சொல்கிறேன், தென்கொரியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் ஒரு வகுப்பின் மொத்தப் பெண்களும் அந்த நாவல் குறித்த அபிப்பிராயத்தை ஒவ்வொருவரும் தெரிவித்திருந்தனர் –அதாவது அந்த நாவலின் கதையை ஒத்த ஒரு வரலாறு, காலனியத்தின் வரலாறு அவர்களுக்கும் இருந்ததென்பதை அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். அதை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை. அவர்களுடைய காலனியாதிக்கவாதி ஜப்பான். ஆக, கடல்களுக்கு அப்பாலிருக்கும் இதர மக்களாலும் ஆப்பிரிக்கா உடைமை பறிக்கப்பட்டு வறுமையாக்கப்பட்ட கதையை அவர்களுடையதோடு இணைத்துப்பார்க்க முடிந்தது. ஒரு கதை, உலகத்தின் வெவ்வேறு பகுதியிலுள்ள மக்களுடைய அனுபவங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி ஏதேனும் சொல்வதாக இருந்தால், மக்கள் அந்தக்கதைக்கு எதிர்வினையாற்ற முடியும்.

பேக்கன் : காலனியாதிக்கத்துக்குட்படாத நாடுகளிலும் மக்கள் அந்தக்கதைக்கு ஒரு நல்ல எதிர்வினையாற்றியுள்ளனரே.

ஆச்சிபி : உடைமைபறித்தலில் பலவிதங்கள் இருக்கின்றன. மக்கள் பல, பலப்பல வழிகளில் கொள்ளையடிக்கப்படுகின்றனர் அல்லது எல்லாவிதமான பழிவாங்கலுக்கும் உட்படுத்தப்படுகின்றனர் – அது காலனியாதிக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. நீங்கள் ஒரு கதைக்குள், மக்களோடு உங்களை அடையாளம் காண ஒருமுறை அனுமதித்துவிட்டால், மேலோட்டமான கதைச்சூழல் உங்களுக்கு வெகுதூரத்துக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலுங்கூட, அந்தக்கதைக்குள் நீங்களே இருப்பதைக் காணத் தொடங்கிவிடுவீர்கள். அதைத்தான் நான் எனது மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறேன். இலக்கியம் செய்யக்கூடிய ஒரு மிகப் பெரிய விஷயம், இது – இது வெகுதூரத்து மக்களோடும் அவர்களது சூழலோடும் நம்மை இனங்காணச் செய்யும். அது நிகழ்ந்துவிட்டால் அது ஒரு அற்புதம். உங்களைப்போன்ற ஒருவரோடு, பக்கத்து வீட்டில் உங்களைப்போல் தோற்றமளிக்கின்ற யாரோ ஒருவரோடு உங்களை அடையாளம் காண்பது கடினமானதல்லவென்று என் மாணவர்களுக்குச் சொல்கிறேன். இதில் அதிகக் கடினமாக இருப்பது, நீங்கள் பார்க்காத, வெகுதூரத்திலிருக்கிற, வேறு நிறங்கொண்ட, வேறுமாதிரியான உணவினை உண்கிற யாரோ ஒருவரோடு இனங்காண்பதுதான். நீங்கள் அவ்வாறு இனங்காணத் தொடங்கிவிட்டீர்களானால், இலக்கியம் உங்களிடம் அதன் அற்புதங்களை உண்மையாகவே நிகழ்த்திக் கொண்டிருக்கிறது, என்பது பொருள்.

பேக்கன் : Things Fall Apart நாவலின் ஒரு பாத்திரம், ‘’ நம்மை ஒன்றிணைத்துச் சேர்த்துப் பிடித்திருந்தவற்றின் மீது வெள்ளையன் கத்தியைச் செருகினான்; நாம் தனித்தனியாகப் பிரிந்து விழுந்தோம்.’’ எனக் குறிப்பிடுகிறது. அந்த விஷயங்கள் இப்போதும் துண்டிக்கப்பட்டேயிருக்கின்றனவா, அல்லது காயங்கள் குணமாகத் தொடங்கிவிட்டனவா?

ஆச்சிபி : நான் அங்கே குறிப்பிட்டது, அல்லது, நாவலில் அந்த உரை நிகழ்த்துபவர் நினைப்பது, ஒரு சமூகத்தை நிலைகுலையச் செய்வது, ஒரு சமூக அமைதியை, அதன் ஒழுங்கினைக் குலைப்பது பற்றியதாகும். ஐரோப்பிய அரசு, கிறித்துவப் பரப்புக்குழு, போன்றவற்றின் வருகையால், அந்த நாவலின் கிராமம், உமோஃபியா சமூகம் முழுவதுமாகச் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. அது தற்காலிகமானதல்ல; அது, அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டுவிட்ட நிரந்தரக் குளறுபடி.. …….

பேக்கன் : Home and Exile நாவலில் பிரித்தானிய எழுத்தாளர்கள் ஜோசப் கான்ராட், ஜாய்ஸ் கேரி போன்றவர்கள் பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்கர்களை எதிர்மறை வழிகளில் சித்தரித்துள்ளது குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். அப்படியான எதிர்மறைச் சித்தரிப்பினால் என்ன நோக்கம் நிறைவேறியிருக்கிறது?

ஆச்சிபி : இது, நாங்கள் ஏற்கெனவேயே எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை இருக்கச் செய்யும் செயலின் நேரடியான சாட்சி. கடந்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவுடனான ஐரோப்பியத் தொடர்பு உருவாக்கியுள்ள இலக்கியத் தொகுதிகள் ஆப்பிரிக்காவை மிக மோசமான கோணத்திலும் ஆப்பிரிக்கர்களைக் கோர உருவத்திலும் படைத்துக் காட்டியிருக்கின்றன. இதற்கான காரணம்,  அடிமை வியாபாரத்தையும் அடிமைப்படுத்துகின்ற முறையினையும் நியாயப்படுத்தியதோடு தொடர்புடையது. கொடிய அடிமை வியாபாரத்தின் குரூரம் மெல்ல மெல்லப் பல ஐரோப்பியர்களைக் குடையத் தொடங்கியது. சிலர் கேள்வி கேட்கவும் தொடங்கினர். ஆனால், அது ஒரு லாபகரமான வியாபாரம். அதனால் அதில் ஈடுபட்டிருந்தவர்கள், ஆதரவளிப்பவர்கள், அதை நியாயப்படுத்துபவர்கள், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஏற்பவர்கள் என ஒரு புறக்கூட்டம் அதனைத் தக்கவைக்க முனைந்தது. அதனை நியாயப்படுத்துவதும் போனால் போகட்டுமென ஏற்கவைப்பதும் கடினமானதாக இருந்தது. அதனால், அதனை நியாயப்படுத்த அனைத்து அதீத வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவர்களெல்லாம்(கறுப்பர்கள்) உண்மையில் மனிதர்களே அல்ல; அவர்கள் நம்மைப்போன்றவர்கள் இல்லையெனச் சிலர் பேசுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அல்லது, அடிமை வியாபாரம் என்பது உண்மையில் அவர்களுக்கு ஒரு நல்ல விஷயம், அது இல்லையெனில் அவர்களுக்குக் கிடைப்பது இன்னும் கொடுமையானது. என்பது போல.

அதனால்தான் ஆப்பிரிக்கர்கள்  பின்தங்கியிருப்பது அவர்களின்  விதியென இலக்கியத்தில்  ஆப்பிரிக்காவைச் சித்தரிக்கும் போக்கினை ஒரு நோக்கமாகவே கொண்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டபிறகும் கூட, ஆப்பிரிக்கா தொடர்பான ஐரோப்பாவின் புதிய ஏகபோகத் தேவைகளுக்காக, இலக்கியத்தில் இத்தகைய போக்கு தொடர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆப்பிரிக்கர்கள் கதை சொல்லுதலைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் வரை அந்தப் போக்கு தொடர்ந்திருந்தது.

பேக்கன் : நீங்கள் ஒரு அதிகார மாற்றம் பற்றிப் பேசுகிறீர்கள், அப்படியானால், பண்பாடுகளுக்கிடையில் இப்போதிருப்பதைக் காட்டிலும் அதிகாரச் சமநிலை இருக்குமா?

ஆச்சிபி : நல்லது,  அதிகாரக் கட்டமைப்பில் அல்ல, மாற்றம் வேண்டுவது. நான் வெறுமே அரசியல் அதிகாரத்தை மட்டும் நினைத்துக்கொண்டிருக்கவில்லை. அதிகாரத்தில் மாற்றமேற்படுவது கதைகளைப் படைக்கும்; கதைகளும் அதிகார மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே ஒன்றுக்கொன்று ஊட்டுவதாகிறது. அப்போது உலகம் இன்னும் வளமானதாக இருக்கும்.

பேக்கன் : உலகமயமாக்கலும் அமெரிக்கப் பண்பாட்டினைப் புகுத்துவதுமான  இந்த யுகத்தில், கதைகளின் சமநிலை தோன்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் காணுகிறீர்களா?

ஆச்சிபி : இது ஒரு உண்மையான பிரச்னை. அமெரிக்கச் சிந்தனை, பண்பாடுகளை அப்படியே எந்தச்சிந்தனையுமற்று உள்வாங்கும் போக்கும் உலகைச்சுற்றியுள்ள நடத்தை முறைகளும் கதைகளின் சமநிலைக்கு மட்டுமல்ல, இந்த உலகத்திற்கு எந்த வகையிலும் உதவிபுரிவதாக இல்லை. உலகைக் குறித்து எங்கிருந்தோ வருகிற ஒற்றைப் பார்வைக்குள் மக்கள் தங்கள் எல்லைகளைக் குறுக்கிக்கொள்கின்றனர். இது, நாம் எழுத்தாளர்களாகவும் குடிமக்களாகவும் ஒன்றிணைந்து போர் தொடுக்கவேண்டிய ஒரு பிரச்னை. ஏனென்றால் இது, வெறுமனே கலை மற்றும் இலக்கியப் பரப்பில் மட்டுமே அதன் விளைவைக் காட்டப்போவதில்லை. இந்த வரம்பு குறுகுதல், தங்களைத் தாங்களே கைவிட்டுக்கொண்டிருக்கிற சமூகங்களுக்கு நல்லதல்ல எனக்கூறலாமென நான் கருதுகிறேன்.

பேக்கன் : நைஜீரியாவைப் போன்ற ஒரு நாட்டின் எழுத்தாளர் அவரது சொந்த நாட்டைப்பற்றி எழுதும்போது, ஒரு குறிப்பிட்ட வகையில்தான் எழுத வேண்டுமென ஒரு தார்மீகக் கடமை இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஆச்சிபி : இல்லை. ஒரு குறிப்பிட்ட வகைமாதிரியில்தான் எழுதவேண்டுமென எந்தத் தார்மீகக் கடப்பாடும் இல்லை. ஆனால், அதிகாரமற்றவர்களுக்கு எதிரான அதிகாரத்தோடு நீங்கள் கூட்டுச்சேராமலிருப்பதற்கான தார்மீகக்கடமை ஒன்று இருப்பதாக நான் நினைக்கிறேன். கலை என்பதற்கான என்னுடைய வரையறையின்படி, ஒரு கலைஞன் அதிகாரமற்ற குடிகளுக்கெதிராக பேரரசனின் பக்கம் அணிசேரமாட்டான் என நான் கருதுகிறேன். இது, ஒரு எழுத்தாளன் என்ன எழுத வேண்டுமென விதிப்பதிலிருந்து வேறுபட்டது. ஆனால், மனிதப் பண்பாடும், கண்ணியமும் உங்களை அதிகாரமற்றவர்களோடு அணிசேர வலியுறுத்துமென்றே நான் நினைக்கிறேன்.

மலைகள் இணைய இதழ் ஏப்ரல் 03, 2013, இதழ் 23 இல் வெளியானது. 

  

No comments:

Post a Comment