ஒரு சொல் – மா
தமிழில்
`மா` ஓரெழுத்து ஒரு மொழியாகவும் பிற எழுத்துக்களுடன்
இணைந்து மாமன், மாமி, மானம், மாரி, மாடு, மான், மாமை, மாலை, மாதம், மாடம், மாடி, மாண்பு,
மாட்சிமை, மாணவன், மாதர், மாந்தர், மாப்பு, மாருதம், மாணிக்கம், மாளிகை எனப் பல தனிமொழிகளை
ஏற்படுத்தியும் செயற்படுகிறது. சிறப்பு, உயர்வு, பெருமை, மாட்சிமை, தலைமைசாலும் தகைமை,
போன்றவை விளங்க, மாமனிதர், மாமணி, மாமன்னர், மாமேதை, மாசாத்தன், மாநாய்கன், மாமேனி, மாமுனி,
மாமழை, மாமயில், மாங்குயில், மாக்குரல், மாக்கடல், மாப்பொன், மாயிருள், மாவிளம், மாவிளக்கு, மாவீரம், மாநகர், மாமலை, என அடைமொழியாகவும் மாபேர்
மனிதர், மாபேருலகு, மாபெருங்கலை, மாபெரும் ஊர்வலம் மா+இருங்கூந்தல் = மாயிருங்கூந்தல்,
மா+இருஞ்சோலை = மாயிருஞ்சோலை, மா+தண்ணிழல் = மாந்தண்ணிழல், என அடைமொழித் தொடராகவும்
செயற்படுகிறது. மா என்பது விலங்குகளுக்கான
பொதுப்பெயர் என்ற போதிலும் அரிமா, கலைமா, பாய்மா, கைமா எனக்குறிப்பிடும்போது, அந்தந்த
விலங்குகளின் சிறப்பு தோன்ற நிற்பதையும் மருதமா என்னும் போது மிகப்பெரிய மருத மரம்
என்றும் பொருள்விளங்க நிற்பதையும்
காணுகிறோம். எனவே தமிழில் மா எனப்படுவது
மிகச்சிறப்பானதைக் குறிப்பிடுவதென்பது தெரியவரும். இத்தன்மைய ஒரு மொழியில் ஒரு குறிப்பிட்ட
மரம் மாமரம் என அழைக்கப்படுகிறதென்றால் அதன் பெருமை விரித்துரைக்காமலே விளங்கும். 60
அடி விட்டம் கொண்ட வட்டக்குடையொத்துத் தழைத்துப் பரவி, 100 – 130 அடி உயரத்துக்கு வளர்ந்து, 15 – 35 செ.மீ
நீளமும் 6 – 16 செ.மீ அகலமும் கொண்ட கருஞ்சிவப்புத் தளிர் இலைகள் வளர வளர, பசுமை மாறாப்
பச்சையாகி, ஆண்டுக்கு 2000 – 2500 சுவைமிக்க பழங்கள் தருகின்ற பல நூறு
ஆண்டுகளுக்குப் பின்னும் காய்க்குந் திறனோடு நீடித்து நின்று, பிஞ்சு, காய், பழம் அனைத்துமே
உண்ணத்தக்கதாய், மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள், யாழ் வகை இசைக்கருவிகள் தளப்பலகை,
மெல்லொட்டுப் பலகை எனப் பல்வகைப் பயன்பாட்டுக்கு மூலப்பொருள் தருகின்ற மரத்தை மாமரமென்று குறித்துள்ளனர். மாந்தளிர், மாம்பூ, மாவடு, மாம்பிஞ்சு, மாங்காய்,
மாம்பழம், புளிமா, தேமா, மாங்கொட்டை, மாங்கிளை, மாங்குழை, மாம்பட்டை, மாம்பால்
என்றும் வழங்குதல் தமிழின் வழக்காறு. தமிழின் மாம்பழமும், மாங்காயும் மலையாளத்தில்
மாம்பழம், மாங்கா என்றும் கன்னடத்தில் `மாவின`, மாவு என்றும் தெலுங்கில் மாமிடி என்றும் வடமொழியில் `ஆம்` (आम) என்றும், சீனத்தில் மாங்குயோ என்றும் கொரிய மொழியில்
மாங்க்–கோ என்றும் ஜப்பானிய மொழியில் மாங்கோ என்றும்
அழைக்கப்படுகிறது. தமிழ் மாங்காய் மலையாளத்தில் மாங்கா ஆகி, போர்த்துக்கீசிய
மொழியில் மாங்கா என்றே அழைக்கப்பட்டு, ஆங்கிலத்தில் மாங்கோ என ஆகியிருக்கிறது.
முதல் ஐரோப்பிய மொழிப்பதிவாக ஒரு இத்தாலிய வணிக
ஒப்பந்தத்தில் மாங்கா (manga)
1500களில் பதிவாகிய போதும் ஆங்கிலத்தில் மாங்கோ எனத் திரிந்திருக்கிறது.
இப்படியாக மாங்காய் மாங்கோ ஆகி அதுவே மரத்துக்கும், காய்க்கும் இலைக்கும்
ஆகிவிட்டது. தமிழில் மரத்துக்கான பெயரிலிருந்து அதன் இலை, பூ, காய், பழம் எனப்
பெயர் உருவாகியிருக்க, பிற மொழிகளிலோ, மாங்காயின் பெயராலேயே அதன் மரம், பழம், பூ,
காய், இலை என அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆங்கிலத்தில் ஊறுகாய் போடுவது (To pickle) என்ற வினைச்
சொல்லிலும் மாங்கோ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment