Saturday 9 January 2016

ஸ்பானியச் சிறுகதை (அர்ஜென்டினா) -மிகையூக்கப் போட்டி (The Spirit of Emulation)

 

மிகையூக்கப் போட்டி (The Spirit of Emulation)

ஸ்பானியம் : ஃபெர்னாண்டோ சொரென்டினோ  Fernando Sorrentino (Argentina)

ஆங்கிலம் : தாமஸ் சி. மீஹன் 

தமிழில் ச.ஆறுமுகம்

download (10)







நான் வசிக்கின்ற பராகுவே தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலிருப்போர் மத்தியில் தன்னூக்கப் போட்டி என்பது மிகத் தீவிரமாகவே தலைதூக்கியிருந்தது.நீண்ட நாட்களாகவே அவர்கள் தங்கள் போட்டியை நாய், பூனை, மஞ்சள் வண்ணப் பாடும் பறவை அல்லது கிளிகளோடு நிறுத்திக்கொண்டனர் என்பதுதான் உண்மை.  அயல்நாட்டு இனமென்று பார்த்தால் சிறிய அணில்கள் அல்லது ஒரு ஆமை; அதற்கு மேல் சென்றதில்லை.   என்னிடம் ஜோயி என்ற பெயரில் அழகான ஒரு ஜெர்மன் ஷெப்பர்டு இருந்தது. அது எங்கள் அடுக்கக அளவுக்குக் கொஞ்சம் தான் சிறியதாக இருந்தது. ஆனாலும் ஜோயி தவிர  அங்கே நானும் என் மனைவியும் – யாருக்குமே தெரியாத அளவில் – சிலந்திகளில் அழகான லூக்கோசா பாம்பியானா இனத்தில் ஒன்றுமாக வசித்தோம்.ஒருநாள் காலை 9.00 மணிக்கு, நான் என்னுடைய செல்லத்துக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது பக்கத்து 7 சி வீட்டுக்காரர் – நான் அவரை அதற்குமுன் பார்த்ததேயில்லை – என்னுடைய செய்தித்தாளை ஒரு நிமிடம் இரவல் வாங்கிச் செல்ல வந்தவர் சொன்ன குழப்பமான காரணத்தை யாரால் தான் புரிந்துகொள்ள முடியும்? பின்னர், கொஞ்சம்கூட வீட்டுக்குச் செல்கிற வழியாக இல்லாமல், அங்கேயேநிரம்ப நேரம் செய்தித் தாளும் கையுமாக நின்றிருந்தார். அவர் ஜெர்ட்ரூடை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது பார்வையிலிருந்த ஏதோ ஒன்று எனக்குள் உறுத்தியது. ஆம். அதுதான் அவருக்குள் துடித்த மிகையூக்கம்.
அடுத்த நாள், அவர் அப்போதுதான் வாங்கியிருந்த தேள் ஒன்றினைஎன்னிடம் காட்டுவதற்காக வந்தார். எங்கள் வாழ்க்கை முறை, சிலந்தி, தேள், உண்ணிகளுக்கு உணவளிக்கும் எங்கள் பழக்க வழக்கம் பற்றி நாங்கள் ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்ததை, வழிக்கூடத்தில் நின்றிருந்த 7-டி வேலைக்காரப் பெண் ஒட்டுக் கேட்பது போலத்  தோன்றியது. அன்று பிற்பகலே அவளுடைய முதலாளிகள் நண்டு ஒன்றை வாங்கிக் கொண்டு வந்துவிட்டனர்.
பின்னர், ஒரு நாள் மாலை மூன்றாம் மாடியிலிருந்த பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரை மின்னேற்றியில் சந்திக்கும் வரையில் ஒரு வாரத்திற்குப் புதியதாக ஒன்றும் தென்படவில்லை. அவள் பொன்னிறமும் தளர்ச்சியும் கண்களில் வெற்றுப் பார்வையுமாகத் தோற்றமளிக்கும் ஒரு இள மங்கை. அவள் கையில் மஞ்சள் நிறமுள்ள பெரிய ஒரு பணப்பை; அதன் பல்லிணைப்பட்டிகை (ஜிப்) முனையில் ஒரு பகுதி உடைந்து இலேசாகத் திறந்திருந்தது. அந்த உடைவுப் பகுதிக்குள்ளிருந்து பொன் மஞ்சள் நிறத்தில் பல்லி ஒன்றின் சிறிய தலை அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் மதியம், நான் மளிகைக் கடையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த போது, வாயிற் காப்பவனின் அறை முன்பாகச் சுமை ஊர்தியிலிருந்து இறக்கப்பட்ட எறும்புக் கரடி  (எறும்பு தின்னி) ஒன்றைக் கண்டபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் என் கையிலிருந்த பைகள் நழுவி, அநேகமாகக் கீழே விழவிருந்தன. நல்ல வேளையாகச் சுதாரித்துக் கொண்டேன். அங்கே வேடிக்கை பார்க்கக் கூடியிருந்தவர்களில் ஒருவர், ‘’ஓ, அப்படீன்னா எறும்புக் கரடிங்கிறது உண்மையான கரடியில்லையா’’என முணுமுணுத்தது எங்கள் எல்லோர் காதுகளிலும் விழும்படியாகத் தான் இருந்தது. இதைப் பார்த்துத் திகைத்துப்போன வழக்கறிஞரின் மனைவி, நடுக்கமும் ஓட்டமுமாக அவரது குடியிருப்புக்கு ஓடிக் கதவைச் சார்த்திக் கொண்டார். அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு அவர் அந்தப் பக்கமாக நடமாடி நான் பார்க்கவேயில்லை; அவருக்காக அமெரிக்கச் செம்பழுப்பு நிறக் கரடி ஒன்றினைக் கொண்டு வந்து இறக்கிய சுமை ஊர்திக்காரனின் பற்றுச் சீட்டில் கையொப்பமிட, ஏளனம் தொனிக்கும் பிரகாசமான முகத்துடன் அவர் கீழிறங்கி வந்த போதுதான் அவரைப்பார்த்தேன்.
என்னுடைய நிலைமை இப்போது அவலத்திலும் அவலமாகிப் போனது. என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எனக்கு வணக்கம் சொல்வதைக்கூட நிறுத்திவிட்டனர். கறிக்கடைக்காரன் எனக்குக் கடன் தர மறுத்தான். அது மட்டுமில்லை; ஒவ்வொரு நாளும் என்னை அவமதிக்கும் பெயர், முகவரியற்ற கடிதங்கள் வேறு எனக்கு வந்துகொண்டேயிருந்தன கடைசியாக என் மனைவி என்னை விட்டுப் போய்விடுவதாக மிரட்டிய கணத்தில்தான் முக்கியத்துவமற்றுப்போன ஒரு லூக்கோசா பாம்பியானாவை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாதென்பதை நான் உணர்ந்தேன். அதன் பிறகுதான் முன்னெப்போதும் ஈடுபடாத நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். பலநண்பர்களிடமும் கடன் வாங்கினேன். சொல்ல முடியாத அளவுக்குச் சிக்கனமாகி விட்டேன். புகைப்பதைக்கூட நிறுத்திவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இப்படியாக, ஒரு அதியற்புதமான இளஞ் சிறுத்தை ஒன்றை வாங்கிவிட்டேன். அவ்வளவுதான், என் பின்னால் என் காலடித் தடத்திலேயே நடக்கிற  7-சி பேர்வழி அமெரிக்கச் சிறுத்தையான ஜாகுவார் ஒன்றை வாங்கி என்னை முந்திவிட முயற்சித்தார். `இது  எந்தத் தர்க்கத்துக்கும் பொருந்தவில்லைதான். இருந்தாலும், அவர் அதில் வெற்றி பெற்றுவிட்டார்.
அழகியல் உணர்வு என்பதே இல்லாமல், தரத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல், வெறுமனே அளவில் பெரியதை மதிக்கிறார்களே இந்த ஆட்கள் என்பதுதான் எனக்கு மிகவும் உளைச்சல் தருவதாக இருக்கிறது. என்னுடைய இளஞ் சிறுத்தையின் உயர்ந்து மேம்பட்ட கம்பீர அழகினை உணர்ந்து, அதை வழிபட்டு வியக்கின்றவனாகப்  பக்கத்து வீட்டுக்காரன் ஒருவன் கூட இல்லை; ஜாகுவாரின் மிகப் பெரும் பரும அளவு அவர்களுடைய புரிதல் பார்வையைக் குருடாக்கிவிட்டதென்றுதான் சொல்லவேண்டும்.
உடனேயே, ஜாகுவார்காரரின் பெருமிதம் இடித்த இடியில் என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அவரவர் செல்லப் பிராணிகளை மாற்றிக்கொள்ளத் தலைப்பட்டனர். என்னுடைய எளிய சிறுத்தை எனக்கு முன்னர் இருந்த பெருமித நிலையை இப்போது அளிக்கவில்லையென்பதை நான் உணரவேண்டியதாயிற்று. யாரோ பெயர் தெரியாத ஒரு அனாமதேய மனிதனோடு என் மனைவி நிகழ்த்திய திருட்டுத்தனமான தொலைபேசி உரையாடல்களைக் கேட்டதிலிருந்து, என்னுடைய ஒரே மாற்றான இரும்புக்கவசம் எது  என்பது எனக்கு உறுதியாகிவிட்டது. நெஞ்சம் கொள்ளாத் துயருடன் குளிர் பெட்டி, சலவை எந்திரம், தரை மெருகேற்றுக் கருவி, இன்னும் நாற்காலி போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாவற்றையும் ஏன், தொலைக்காட்சிப்பெட்டியையும் கூட விற்றுவிட்டேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், விற்கமுடிகிற எல்லாவற்றையும் விற்றுவிட்டு சுற்றிச் சுருண்டு நீளும் பெரிய ஆனைகொண்டான் (அனகோண்டா) பாம்பு ஒன்றை வாங்கினேன்.
ஒரு ஏழையின் வாழ்க்கை என்பது மிகவும் கடினம்; என் நாயக வாழ்க்கை மூன்று நாட்களுக்கே நீடித்தது.
என்னுடைய அனகோண்டா எல்லாத் தடைகளையும் உடைத்து நொறுக்கியது; சமநிலைப்படுத்தும் அனைத்து மனித உணர்வுகளையும் அழித்தது; மதிக்கத்தக்கதும் மாண்பு மிக்கதுமான மரபுகளையெல்லாம் தகர்த்தெறிந்தது. அனைத்து அடுக்ககங்களிலும் சிங்கம், புலி, மனிதக் குரங்கு, முதலைகள் எனப் பல்கிப் பெருகின. நகராட்சி உயிர்க் காட்சியகத்தில் கூட இல்லாத கருஞ்சிறுத்தைகளை ஒரு சிலர் வாங்கி வந்தனர். அந்தக் கட்டிடம் முழுவதும் ஊளைகள், முழக்கங்கள் மற்றும் சளசளப்புகள் நிறைந்து, அவற்றின் எதிரொலிகளால் அதிர்ந்தது. நாங்கள் இரவுகளை விழித்துக்கொண்டே கடத்தினோம்; எங்களால் தூங்கவே முடியவில்லை. பூனையினங்கள், பெரும் மனிதக் குரங்கினங்கள், ஊர்வன மற்றும் அசை போடும் விலங்கினங்கள் அனைத்தின் விதவிதமான நாற்றங்கள் ஒன்றோடொன்று கலந்து, அந்தச் சூழலையே சுவாசிக்க முடியாததாக்கிவிட்டன. பெரிய பெரிய  சுமைஊர்திகள் டன் கணக்கில் இறைச்சி, மீன் காய்கறிகளைக் கொண்டு வந்து இறக்கின. பராகுவே தெருவில் உயிர் வாழ்வதே கொஞ்சம் சிக்கலானதுதான் என்றானது.


மிக நீண்ட காலத்திற்குப்பின், மூன்றாவது தளத்திலிருக்கும் அண்டைவீட்டுக்காரரான அந்தத் தளர்ச்சித் தோற்றப் பொன்னிற இளமங்கையை மீண்டும் ஒரு நாள் மின்னேற்றியில் சந்தித்தபோது மிகமிக நெருடலான ஒரு தருணத்தை உணர்ந்தேன்; வேறொன்றுமில்லை; அவள் அப்போது வங்காளப்புலி ஒன்றை எங்கள் வளாகத்தைச் சுற்றி ஒரு நடை நடக்க, சூச்சூ போவதற்காக அழைத்துச் சென்றுகொண்டிருந்தாள். பல்லிணைப் பட்டிகைத் திறப்பிலிருந்து சிறிய தலையை நீட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய பல்லியை நினைத்துப் பார்த்தேன். நான் மிகவும் தளர்ந்து இளகிப்போவதாக உணர்ந்தேன். தேள்களும் நண்டுகளுமான அந்த முதன்முதல் கற்பனையுலகின் கடினக் காலகட்ட நாட்களைக் கடந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டோம்! ஹூம்!
இறுதியாக, யார் எதைச் செய்வார்களென்று நம்பமுடியாத ஒரு நிலை தோன்றிவிட்டது. வாயிற்காவலன், பல அடுக்கக உரிமையாளர்கள் பதைபதைத்துப் பார்த்திருக்க, அவனது இரட்டைக்கொம்புக் காண்டாமிருகத்தை கட்டிட ஓரத்தின் சுற்று நடைபாதையில் நிறுத்தி, வழலைக்கட்டி தேய்த்துக் குளிப்பாட்டி, எதுவுமே நிகழாதது போல், ஏதோ எருமை மாட்டை ஓட்டுவது போல அவனது அடுக்ககக் குடியிருப்புக்குள் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தான். இது 5-ஏ ஆள் வழக்கமாகச் செய்வதைவிட அதிகமானதுதான்; மிகச் சில மணி நேரந்தான் கடந்திருக்கும், அந்த ஆள் அவரது நீர்யானையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, அதை மாடிப்படிமேல் ஏற்றிச் சென்றார்.
கட்டிடம் இப்போது வெள்ளக்காடாகி பாதி அழிந்த நிலைமையாகிப் போனது. நான் இந்த அறிக்கையைக் கூட கூரை மீது சாதகமற்ற நிலைமையில் அமர்ந்து தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 7-ஏ ஆட்களுடன் வசிக்கும் யானையின் துயரார்ந்த பிளிறல் சப்தத்தில் அடிக்கொரு தரம் திடுக்கிட்டு அதிர்ந்துபோகிறேன். என்  கைக்கடிகாரத்தை எடுத்துக் கண்முன்னாலேயே பார்வையில் படும்படியாக வைத்திருக்கிறேன்; எட்டு நிமிடத்துக்கொரு முறை நான் படிக்கட்டு இடிபாடுகளுக்கு ஓடி என்னையும் இந்தப்பக்கங்களையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்; வேறொன்றுமில்லை, 7-சியிலிருக்கும் நீலத் திமிங்கிலம் ஜெட் வேகத்தில் பீச்சியடிக்கும் நீர்த்தாரையின் திவலைகள்தாம். அது மட்டுமல்ல, நான் தாங்கவியலாத ஒரு அழுத்தத்துடன் தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதாவது, 7 – `டி`யிலிருக்கும் ஒட்டகச் சிவிங்கி அதன் தலையைச் சுவர் மேல் வைத்து, ஏதாவது நொறுக்குத் தீனி கொடு என்று என்னையே துளைக்கும் மாளாப் பார்வையை நிறுத்தவேமாட்டேனென்கிறது.
[ பார்சிலோனாவிலிருந்து பேரரசுகள் மற்றும் அடிமைகளுக்காக, தலையங்கம், சீக்ஸ் பார்ரல், 1972.]

மலைகள் இணைய இதழ் 83, அக்டோபர் 2, 2015 இல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment