Sunday, 3 January 2016

அமெரிக்கச் சிறுகதை - பதிலித் திருமணம்

பதிலித் திருமணம்
ஆங்கிலம் : மெய்லிமெலாய் (அமெரிக்கா)
தமிழில் ச.ஆறுமுகம்
வில்லியம் நெடுநெடுவென, ஒல்லியாக, வெட்கப்படுபவனாக, பள்ளியில் அழகற்றவனாகவே இருந்தான். அவன் பியானோ இசைத்தான் என்பது மட்டுமே அவனுக்கு ஒரு நல்ல சமூக அடையாளமாக இருந்தது. அதனாலேயே அவன் பள்ளி இசைக்குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டதோடு, ஒத்திகைக்கும் அடிக்கடி அழைக்கப்பட்டான். அவனுக்கு அறிமுகமாகும் வாய்ப்பே இல்லாத குழந்தைகள் குழுவிலும் இணைக்கப்பட்டான். அவன் ஒரு பியானோக்கலைஞனாக அல்லது இயற்பியல் துறை வல்லுநராக ஆகப்போவதாக நினைத்தான். மான்டனாவில் அது போன்ற தொழில் புரியும் எவரையும் அவன் தெரிந்திருக்கவில்லை. இருந்தாலும் அவன் அப்படி நினைத்தான். அவனது பியானோ ஆசிரியை ஒரு வங்கியாளரின் விதவை. பின்னல்பட்டிக் குஞ்சமிட்ட திரை தொங்கும் அவளுடைய வீட்டில்தான் அவள் கற்றுக் கொடுத்தாள். அவனுடைய இயற்பியல் ஆசிரியர், அடிப்படையில் ஒரு மல்யுத்தப் பயிற்றுநராகவே இருந்தார். ஆனால் வில்லியம் வேறொரு  வகையான வாழ்க்கைக் கற்பனையில் இருந்தான்.
இசைக்குழு வாயிலாகவே  அவன் பிரைடி டெய்லரோடு நண்பனானான். அவள் போட்டிசெல்லி தீட்டும் தேவதையைப்போல பொன்னிறச் சுருள்முடி கொண்டவள். ஆனால் அவளுடைய முகம் அதற்குப் பொருத்தமாக இல்லை; நீண்ட முகம், நேரான மூக்கு, இருண்ட கண்கள். அவளுக்குத் தெளிவான, கணீரென மெஸ்ஸோ-சொப்ரானோ இசைக்குரல் இருந்தது. அவள் ஒரு நடிகையாகிவிட வேண்டுமென விரும்பினாள். பிரைடிக்கு ஒன்பது வயது இருக்கும் போது அவள் அம்மா அவளைவிட்டுச் சென்றுவிட்டாள். வழக்கறிஞரான அவளுடைய அப்பாவிடமே அவள் வளர்ந்தாள். அவரும் அவளைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார். பிரைடி கொஞ்சம் தற்பெருமை கொண்டவள்தான்; இருந்தாலும் நல்ல தன்னம்பிக்கை உடையவள். பள்ளியில் அவள் கணிதம் தவிர மற்றவற்றில் நன்கு ஒளிந்ந்தாள். கணிதம் அவளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இல்லை. வில்லியம் திரிகோணமிதியின் கருத்தியல்களைக் கற்றுக்கொடுத்து உதவினான். தேர்வுக்கு முன் மதிய உணவின்போது, கற்றுக்கொண்டதாலேயே அதனை அவள் பிற்பாடு மறந்துவிடவும் முடிந்தது.
உயர்நிலைப்பள்ளியில் வில்லியத்திற்கெனத் தோழிகள் யாரும் இல்லை. ஒருநாள் அவனுடைய அம்மா அழுக்குகள் ஏதுமற்ற அவளுடைய அடுக்களையில் அவனை மேஜையின் மீது உட்கார்த்தி வைத்து, அவன் ஒரு `ஒருபால் புணர்ச்சிக்காரனா` எனக் கேட்டாள். அப்படியிருந்தாலும் அவளுக்கு ஒன்றும் குறை இல்லை என்றாள். அவள் நிபந்தனை ஏதுமின்றி அவனை நேசித்தாள். இருவருமாகச் சேர்ந்து இதை எப்படி அப்பாவிடம் சொல்வது எனப் பலவாறு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். ஆனால், வில்லியம் ஒருபால் புணர்ச்சிக்காரன் அல்ல. அவன் பியானோ இசைக்கும்போது, அதன் மீதே சாய்ந்து நின்று பாடும் பிரைடி டெய்லர் மீது தாங்க முடியாதபடி அளவற்ற காதல் கொண்டிருந்தான். அதை அவளிடம் சொல்வதற்குத்தான் அவனால் முடியவில்லை. மற்ற பெண்களோடு முயற்சிக்கவும் அவனுக்கு வெட்கமாக இருந்தது. அப்படியே முயற்சித்தாலும், விளைவு விரும்பத்தக்கதாக அல்லது பயன் அளிப்பதாக இருக்குமா என்றே தோன்றிற்று. ஆனால் அவன் அதை அம்மாவிடம் தெரிவிக்கவில்லை. அது அவனுக்கு மிகுந்த உளைச்சலாக, வேதனையளிப்பதாகவே இருந்தது. அவன் ஏதோ திக்கித்திக்கிப் பேசிப் பொருத்தமற்ற ஒரு மறுப்பைக் கூறினான்.
வேறு பையன்கள் பிரைடிக்கு அழைப்பு விடுத்தார்கள். அதனாலும் வில்லியம் வேதனைப்பட்டான். அவள் அவர்களை வேடிக்கையாகப் பார்த்தாள். ஆனாலும் எல்லா அழைப்புகளையும் அநேகமாக ஏற்றுக்கொண்டாள். இதனாலேயே தைரியத்தை வரவழைத்துக்கொண்ட வில்லியம் இளநிலை வகுப்பிலிருக்கும்போது அவளைக் குளிர்காலச் சம்பிரதாயமாகத் தன்வீட்டுக்கு அழைக்கத் தீர்மானித்தான். குறுகுறுப்பும் மிகுந்த எதிர்பார்ப்புமாக அவன், அவளை அழைக்கத் தயாராகிய போதுதான் வரிப்பந்து விளையாடும் முதுநிலை மாணவன் மாண்ட்டி, அவளை அழைத்திருப்பதாக அவள் தெரிவித்தாள்.
‘’ நீ என்ன சொன்னாய்?’’ என்று அவன் கேட்டான்.
‘’ ஓ! சரி, நான் நினைத்தது போலத்தான்..’’
வில்லியம் அவனுடைய  வீட்டின் அறையிலிருந்து  மெல்ல வெளியே வந்து, பூச்சிகொல்லித் திரவ வீச்சமடிக்கும் பளிங்குத்தளமிட்ட கழிப்பறைக்குள் சென்றான். அங்கு வேறு யாரும் இல்லையென உறுதிப்படுத்திக்கொள்ளச் சிறிது காத்திருந்தான். பின்னர் அந்தச் சுவர் வாசகம் பொறித்த பச்சைநிறத் தடுப்பறைக்குள் வாந்தியெடுத்தான். அவனுடைய ஆறாவது வயதில் ஃப்ளூ காய்ச்சலின்போது தவிர அவன் வாந்தியெடுத்ததில்லை. அது மிகமிகக் கொடுமையாக, வேதனையளிப்பதாக இருந்தது. அவன் உடம்புக்குள் வேறு ஏதோ ஒரு வேண்டாத சக்தி புகுந்துகொண்டது போலிருந்தது.
ஆனால், மான்ட்டி ஒரு தவறு செய்தான். நாட்டியம்  முடிந்து இரண்டு நாட்களுக்குப்  பிறகு, அவன் ப்ரைடியை அவனுடைய  அப்பா,அம்மா அறைக்குள்  உட்காரவைத்து, பள்ளிப்படிப்பு முடிவதற்குள் மூன்று இலட்சியங்களை அடைந்துவிட ஆசைப்படுவதாகக் கூறினான். வரிப்பந்துக் குழுவின் தலைவனாவது, பெர்க்கிலிக்குச் சென்று சேர்வது, மனப்பூர்வமாக, உண்மையிலேயே நேசிக்கும் ஒரு பெண்தோழியைக் கொண்டிருப்பது. இவற்றில் முதல் இரண்டும் ஏற்கெனவே நிகழ்ந்து விட்டது. மூன்றாவதற்கு ப்ரைடி மிகமிகப் பொருத்தமானவள். அவர்கள் பேசிக்கொண்டதையெல்லாம் அவள் வில்லியத்திடம் சிரித்துக்கொண்டே கூறினாள். ‘’அவனுடைய குறிக்கோள்களில், அவன் மிகுந்த சிரத்தை கொண்டவன்’’ என்றாள், அவள்.
இனிமேல் எப்போதுமே  பிரைடிமீது சிரத்தை கொள்ளக்கூடாதென்று, வில்லியம் அப்போதே மனதில் குறித்துக்கொண்டான்.
அவர்களின் முதுநிலை வருட செப்டம்பர் மாதத்தில் உலக வர்த்தக நிலையமும் பெண்டகனும் தாக்குதலுக்குள்ளாகி, இரட்டைக் கோபுரக் கட்டிடங்களும் தகர்ந்து விழுந்தன. வில்லியத்தின் பெற்றோர்கள் அப்போது ஊரில் இல்லை. ப்ரைடி அவனை எழுப்பியபோது அவன் பெருந்தூக்கத்தில் இருந்தான்.
‘’எழுந்திரு. எழுந்திரு,’’ என்று அசைத்த அவள் சொன்னாள். ‘’ பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.’’
‘’ எங்கே?’’ தூக்கக்  கலக்கத்தில் அவன் கேட்டான்.
‘’ எல்லா இடங்களிலும்.’’ என்றாள், அவள்.
பள்ளியில் ஆசிரியர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளைச் சக்கரம்பொருத்திய இழுவையோடு கொண்டுவந்தார்கள். எல்லோரும் திகைப்பும் மவுனமுமாக ஒளிபரப்புச் செய்திகளைப் பார்த்தார்கள். நவம்பர் மாதத்தில், துருப்புகள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டன. டிசம்பர் மாதத்தில் ப்ரைடியின் தந்தை வில்லியத்திடமும் அவளிடமுமாக ஒரு கோரிக்கையோடு வந்தார். கந்தஹாரில் இருக்கும் ஒரு கப்பற்படை கார்ப்பொரலுக்கும் வடக்கு கரோலினாவில் கருவுற்றிருக்கும் அவனுடைய பிரியமான, அவளுக்குமாக ஒரு பதிலித் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு அவர் கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தார். ஒருவேளை ஏதாவது நிகழ்ந்துவிட்டால், மரணப்பயன்களைப் பெற வசதியாக அந்தக் குழந்தைக்கு அதன் தகப்பனார் பெயரைச் சூட்ட விரும்பினார்கள். அநேக மாநிலங்களிலும் பதிலித் திருமணங்களை அனுமதிப்பதில்லை. மான்டனாவில் மட்டுமே சம்பந்தப்பட்ட இருவருமே முன்னிலையாகாதபோதும் இரட்டைப் பதிலித் திருமணங்கள் அனுமதிக்கப்பட்டன. மான்டனா மாநிலத்தகுதி பெறுவதற்கு முன்னமேயே இந்த வழக்கம் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது இராணுவத்தினருக்காக இது பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடைமுறை எதனால் உருவானதென்பதற்குச் சரியான அடிப்படைக் காரணம் யாருக்கும் தெரியவில்லை. ஒருவேளை, மாநிலத்திற்கு வெளியிலிருக்கும் அன்புக் கண்ணாட்டியை மணப்பதற்கு நீதிமன்றக் கட்டிடம் செல்ல, வெகுதூரம் பயணிக்கக் கடினமாக இருந்திருக்கலாம். ப்ரைடியையும் வில்லியத்தையும் பதிலிகளாக இருக்குமாறு திரு. டெய்லர், கேட்டார். அவருடைய சட்ட உதவியாளரையும் செயலரையும்தான் முதலில் கேட்டிருந்தார்; ஆனால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை.
வில்லியத்தின் அம்மாவுக்கு இது ஒரு  நல்ல யோசனையாகத் தோன்றியது. நாட்டுக்காக எதுவும் செய்யமுடியவில்லையே என ஒவ்வொருவரும் ஏங்கித் தயங்கி நிற்கும்போது நாட்டுக்கு அர்ப்பணமாகச் செய்யக்கூடிய ஒரு சிறுபணி என நினைத்தாள். எதிர்பால் புணர்ச்சிக்குத் தகுதியானவனென முன்பு அவன் கூறியதை நம்பாத அவன் அம்மா, ஒரு பெண்ணோடு திருமணம் என்பதால் மகிழ்கிறாள் போலுமென வில்லியம் நினைத்துக் கொண்டான். ப்ரைடியின் அப்பாவும் அவனை ஒருபால் புணர்ச்சிக்காரன், அல்லது ஆண்குறி அற்றவன் அல்லது மிரட்டல் தொந்தரவற்றவனென்று கருதியிருப்பாரோ என அவன் அதை ஒரு புதிராகவே கருதினான்.
ஆனாலும், அந்தப் பதிலித் திருமணத்தில் உண்மையான அக்கறை கொள்ளாமலிருக்க அவனால் முடியவில்லை. போலித் திருமணம் என்றாலும், அது ப்ரைடி டெயிலருடனென்பதால், அது அவன் இதயத்தில் கொள்ளை மகிழ்ச்சியை நிரப்பியது. பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுக்குச் சென்றான். இசைநிகழ்ச்சியின் போது அணியும் அழுத்தமான சாம்பல்நிறமுள்ள `சூட்` உடையும் கழுத்துப் பட்டையும் அணிந்துகொண்டான். அவனும் ப்ரைடியும் தலா ஐம்பது டாலர்கள் பெற்றிருந்தனர். அதனால், அந்தப் பணிக்குப் பொருத்தமான ஆடை அணிய வேண்டுமென அவன் நினைத்தான்.
அந்த நாட்டுப்புற  நீதிமன்றக் கட்டிடத்தினுள் ஒரு கனமான மரமேஜை மீது கான்வாஸ் ஷூக்கள் அணிந்த கால்களைத் தூக்கிவைத்து  அமர்ந்திருந்த ப்ரைடியை அவன் பார்த்தான். அவள் தலைமுடி பின்பக்கமாக இழுத்துச் சுருண்டு தடித்த ஒரு குதிரைவாலாகக் கட்டப்பட்டிருந்தது. அவள் பள்ளியில் அணிந்திருந்த ஜீன்ஸும் ஸ்வெட்சட்டையுமே அணிந்திருந்தாள். அவள் பார்வையை வில்லியத்தின் முகத்திலிருந்து அவனுடைய `சூட்` மீது இறக்கினாள்.
‘’ ரொம்பத்தான் அழகாக இருக்கிறாய்.’’ என்றாள், அவள் குரலில் ஒரு சீண்டல் இருந்தது.
‘’தங்களுக்கு மிக்க நன்றி’’, என்றான், உறுத்தும்விதமாக.
ப்ரைடி, எவருடைய  வாழ்க்கையையும் நேசிக்க  விரும்பாமல், பிடிவாதமாகச் சிடுசிடுக்கும் ஒரு சாதாரணப் பெண் போல இருந்தாள். நம்பிக்கையின் சிறு ரேகை ஒன்றை அவன் உணர்ந்தான் – எப்போதாவது அவள் அவனை விரும்பி வருவாள் என்றல்ல. ஏதோ ஒருநாளில், அவள் மீதான கட்டற்ற ஈர்ப்பின் பிடியிலிருந்தும் அவன் விட்டு விடுதலையாகிவிடுவான். அவள் சூயிங்கம், மென்கோந்தினை மென்று கொண்டிருந்தாள்.
‘’ இன்று நிச்சயம் நமக்கு சாம்பெய்ன் கிடைக்கும். இல்லையா?’’ ‘’ இது கல்யாணம் ஆயிற்றே.’’ என்றாள், அவள், கோட்டு, ஜாக்கெட் எதுவும் இல்லாமல் மேல்சட்டை மட்டும் அணிந்திருந்த அப்பாவிடம்.
‘’ அதற்கு இன்னும்  வயதாகவில்லை, உனக்கு.’’ என்றார், அப்பா. அவர் ஒரு திடகாத்திரமான மனிதர். முரட்டுத்தனமானவர்தான், ஆனால் அன்பானவர். அவரது தோற்றம் முதலில் வில்லியத்தைப் பயமுறுத்தியதென்றாலும் பிற்பாடு அவன் பயப்படவில்லை.
‘’கல்யாணம் கட்டிக்கொள்ளும்  வயது தான், எனக்கு.’’ என்றாள், ப்ரைடி.
‘’இல்லை, நிச்சயமாக  இல்லை.’’ என்றார், அவள் அப்பா.
திருமணத் தம்பதியர்  அவர்களின் புகைப்படங்களை  அனுப்பியிருந்தனர். ப்ரைடி மேஜையிலிருந்தும் கால்களைக்  கீழே இறக்கி, மேஜை மீது தண்ணீர்  வைக்கப்பட்டிருந்த இரு  கண்ணாடிப் புட்டிகளின் மீது புகைப்படங்களைச் சாய்வாக நிறுத்தினாள். மணப்பெண்ணுக்கு இலேசான தவிட்டு நிறமுள்ள கூந்தலும் விரியத்திறந்த வெளிறிய முகத்தில் மச்சங்களாகத் தவிட்டுநிறப் புள்ளிகளும் இருந்தன. மணமகன் சீருடையில் இருந்தார். ‘’ இவர்கள் கடைசிவரை ஒன்றாக இருக்கப் போவதில்லை. நான் நிச்சயமாகச் சொல்வேன்.’’ என்றாள், அவள்.
‘’ப்ரைடி!’’ என அழைத்த அவள் அப்பா, கண்ணாடிகளுக்கு மேலாகக் கண்களை உயர்த்தி, ‘’ இந்த மனிதர் எந்த நேரத்திலும்  கொல்லப்படலாம். கொஞ்சமாவது மரியாதை காட்டு. முதலில்  அந்தச் சூயிங்கத்தைத் துப்பித் தொலை.’’ என்றார்.
ப்ரைடி கண்களை உருட்டிக்கொண்டே, கோந்தை ஒரு  துண்டுத் தாளில் மடித்து, கதவருகில்  இருந்த குப்பைக்கூடையில் விட்டெறிந்தாள். அவள் அப்பாவின்  செயலர், பாம், சாட்சிக்கான  ஆளாக வந்திருந்தாள். சாம்பல் நிறக் குட்டைத்தலைமுடியுடன் இருந்த அவள், வில்லியம் நன்றியோடு நினைவு கொள்ளும்படியாக அழகும் நேர்த்தியும் மிக்க ஆடை அணிந்திருந்தாள்.
திரு. டெய்லர், ஒரு தாளைப் பார்த்து வாசிக்கத்  தொடங்கினார். “ புனிதத் திருமணத்தின் வாயிலாக அரசிடமிருந்து ஒரு திருமண உரிமச் சான்றினைப் பெற மனுச் செய்துள்ள இந்தத் தம்பதியரோடு இன்று இணைந்துகொள்ள நாம் இங்கே கூடியிருக்கிறோம். ப்ரைடி! கடவுளின் விதிகள் மற்றும் இந்த மாநில அரசுச் சட்டங்களுக்குட்பட்டு இந்த மனிதரைச் சட்டப்படி திருமணமான உங்கள் கணவராகப் பதிலி முறையில் ஏற்கிறீர்களா?’’
அங்கே ஒரு நிமிடம்  அமைதி நிலவியது. விழித்துக்கொண்ட  ப்ரைடி, ‘’ ஓ! மன்னியுங்கள், நான் ஏற்கிறேன்.’’
‘’ நீங்கள்  இருவரும் வாழுங்காலம் வரையிலும், வறுமையிலும் வறுமை, அல்லது, மிகுந்த செல்வநிலையிலும்  அவரை நேசித்து, நோயின்போதும் நல்வாழ்விலும் அவரைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறீர்களா?’
ப்ரைடி, ‘’ அப்படியே செய்கிறேன்.’’ என்றாள். வில்லியத்தின்  இதயம் அடுத்தடுத்து இருமுறைத் தடதடத்தது. அவளது சட்டைக்கைகள் முழங்கைவரை மேலேறியிருந்தன. அவளது ஒடுங்கிய மணிக்கட்டுகளையும் அவள் கைகளின் மீதிருந்த அழகான மென்மயிர்ப் பரப்பையும் தன் கண்கள் நோக்குவதை அவன் உணர்ந்தான். அவன் ஆவலால் உந்தப்பட்டான். அந்த அளவுக்கு அவன் இயல்பாக, சுதந்திரமாக இருந்தான்.
அவளது அப்பா, ‘’ வில்லியம்! கடவுளின் விதிகள்  மற்றும் இந்த மாநில அரசுச் சட்டங்களுக்குட்பட்டு இந்தப் பெண்மணியைச் சட்டப்படி  திருமணமான உங்கள் மனைவியாகப் பதிலி முறையில் ஏற்கிறீர்களா?’’ எனக் கேட்டார்.
‘’ நான் ஏற்கிறேன்.’’
‘’ நீங்கள்  இருவரும் வாழுங்காலம் வரையிலும், வறுமையிலும் வறுமை, அல்லது, மிகுந்த செல்வநிலையிலும்  அவரை நேசித்து, நோயின்போதும் நல்வாழ்விலும் அவரைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறீர்களா?’’
வில்லியத்தின் குரல் உரத்து ஒலித்தது. ‘’ அப்படியே செய்கிறேன்.’’
‘’ அப்படியானால், ஷெல்லி ஜீன் ஜாக்சன் மற்றும்  அந்தோணி ஜேம்ஸ் இருவரையும் கணவனும் மனைவியுமாக நான் இப்போதே அறிவிக்கிறேன்.’’
திரு. டெய்லர் தாளைக் கீழே வைத்தார்.
‘’இவ்வளவுதானா?’’ ப்ரைடி கேட்டாள்.
‘’அவ்வளவுதான்,’’ என்ற அவளது அப்பா, ‘’ மேற்கொண்டு நீங்கள் ஒப்பமிட வேண்டும்.’’ என்றார்.
வில்லியம் ஒப்பமிட்டான், அவன் கை ஒரு சிறிது நடுங்கியது. ப்ரைடி அவளது ஒப்பத்தை இட்டாள். பாம் சாட்சியாகக் கையொப்பமிட்டாள். பின்னர், ப்ரைடியின் அப்பா  மடிக்கப்பட்டிருந்த நோட்டுக்கற்றை  ஒன்றை எடுத்து அதிலிருந்து  ஐம்பது டாலர் நோட்டு ஒன்றை  ப்ரைடிக்கும் மற்றொன்றை  வில்லியத்துக்கும் கொடுத்தார்.
‘’ நாம் பணக்காரர்கள்.’’ என்று சொல்லிக்கொண்டே,  ப்ரைடி, ‘’ நாம் சாப்பிடப் போகலாம்.’’ என்றாள்.
அவர்கள் நகரின் மையப்பகுதியிலிருந்த ஒரு  பசுமைக் கூடத்தில் மிளகுத்தூள்  கிண்ணங்களை உருட்டிக்கொண்டிருந்தபோதும் வில்லியம் அவனது சூட் உடையின்  மீது கண்ணாகவே இருந்தான். ‘’ ஏன்? ஒரு மாதிரி, மனம் தொய்ந்தது போல?’’ என்று அவளிடம் கேட்டான்.
‘’ அம்மாவிடம் இசைக்கழகத்துக்கு மனுச்  செய்யப்போவதாகச் சொன்னேன்.’’    என்ற ப்ரைடி தொடர்ந்தாள். ‘’ இசை நாடகத்துறை படிக்கத்தான். அதெல்லாம் வழக்கத்தில் இல்லாமல் நைந்து ஆழமற்றுப் போனதென்றும், அது எப்படியிருந்தாலும் அதற்குப் போதுமான அளவு எனக்கு அழகில்லையென்றும் முற்றிலும் அழகில்லாமல் இல்லையென்றும் அவள் சொல்கிறாள். நான் பின்னால் ஏமாறக் கூடாதென்பதற்காக அவள் அப்படிச் சொல்கிறாள். அது அவளுடைய பெருந்தன்மை.’’
‘’அதுதான் அவருடைய  அருமை.’’ என்ற அவன், ‘’ உனக்கு அவர்களோடு தொடர்பு இல்லையென்று நினைத்தேனே.’’ என்றான்.
‘’அதிகமாக இல்லைதான்.’’ என்ற ப்ரைடி, ‘’ வருஷத்துக்கொருமுறை போய்ப் பார்ப்பது வழக்கம். ஆனால், அவளுக்கொரு குழப்பம். நான் இன்னும் ஒரு சிறுமியாக இருக்க முடியாதென்று. அதனால் இப்போது பார்க்கப் போவதில்லை. அவள் இப்போது தாய்வழி உரிமையில் தட்டிக்கேட்கும் தகுதியைக்கூட இழந்துவிட்டாளென்று, நினைத்தேன், தெரியுமா? `நீ உண்மையில் அந்த உடையா அணிந்திருந்தாய்?` என்பது போன்றதைச் சொல்கிறேன். ஆனாலும் அவள் அதை இழக்கவில்லையென்றே நினைக்கிறேன். அவள் ஏன் எங்களை விட்டுப் போனாளென்று உனக்குத் தெரியுமா?’’
வில்லியம் தலையை  உதறி அசைத்தான். ப்ரைடி அதைப்பற்றிப் பேசியதேயில்லை. சில வதந்திகள் மட்டுமே அவன் காதுகளுக்கு வந்தன.
அவளுடைய பூர்வகாலப்பிறப்பு வாழ்க்கைகளோடு தொடர்புபடுத்திக்கொடுத்த ஒரு மனக்கூற்று வசியக்காரனைச் சந்தித்திருந்தாள். அவள் எப்போதும் முற்பிறப்புகளிலேயே இருந்தாள். அதனாலேயே எனக்கு ப்ரைடி எனப் பெயர் வைத்தாள். வசியத்துக்காளாகியிருந்த யாரோ ஒருத்தி ரொம்ப நாட்களுக்கு முன்னால் எப்போதோ சொல்லியிருந்தாளாம் – என் அம்மா முற்பிறவியில் ப்ரைடி மர்ஃபி என்ற ஐரிஷ் பெண்ணாக இருந்து இறந்துவிட்டதாக – இந்த விபரங்களெல்லாம் ஒரு புத்தகமாக அவளிடம் இருந்தது. ஆனால் செய்தியாளர்கள் போய் விசாரித்துவிட்டனர். அப்படி இறந்துபோன பெண் யாரும் உயிரோடு வாழ்ந்திருக்கவில்லை. என் அம்மா மட்டும் அதை இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த மனவசியக்காரனுக்கு அருகில் இருக்கவேண்டுமென்றே அவள் ஓக்லாந்துக்குச் சென்று வசித்தாள். அவளுடைய இதர முற்பிறவிகள் ஒன்றில் அவள் உருளைக்கிழங்குகளைக் கையாலேயே தோண்டியெடுக்கும் ஒரு உழைப்பாளிப் பெண்ணாக இருந்தாள். இன்னொன்றில் அவள் புரட்சிக்கு முந்தைய பிரான்சு நாட்டில் ஒரு நாட்டியக்காரி – அதனாலேயே அவளுடைய பிரெஞ்சு அவ்வளவு சிறப்பாக இருப்பதாக நினைத்தாள். அவள் இந்தப்பிறவியிலான வாழ்க்கையை ஒரு நேசிப்போடு வாழவேண்டுமென எவ்வளவு ஆசைப்படுகிறேன், தெரியுமா? அவளுக்கு இந்தப் பிறவி வாழ்க்கைக்கென்று ஒரு தொடர்புக் கயிறு இருக்கிறது, ஒரு மகள் இருக்கிறாள். ஆனால் அவளோ முற்பிறவி வாழ்க்கைகளையே நேசிக்கிறாள்.’’ ப்ரைடி மூக்கைத் தேய்த்துக்கொண்டாள்.   ‘’ அப்படியே விட்டுவிடலாமென்றுதான் நினைக்கிறேன்.’’
‘’இல்லை, நீ அக்கறை காட்டத்தான் ஆகவேண்டும். அவர் உன் அம்மாவாயிற்றே.’’ என்றான், வில்லியம்.
‘’ரொம்பக் கஷ்டம்.’’
‘’ இப்போதும்  அவர் உன்னுடைய அம்மாதானே.’’
ப்ரைடி, மேஜைமீது முழங்கையை ஊன்றி, உள்ளங்கையில் தலைசாய்த்துக் காதோரம் படிந்திருந்த, சுருண்ட தலைமயிர்க்கற்றை ஒன்றை விரலால் இன்னும் சுருட்டிக்கொண்டிருந்தாள். ‘’ அந்தத் தம்பதிகள் இருவரும் அப்படியே திருமணத்தில் இருப்பார்கள் என்றா நினைக்கிறாய்?’’ அவள் கேட்டாள். ‘’ இன்றைக்குச் செய்துகொண்டார்களே, அவர்கள்தான்.’’
‘’ அப்படித்தான் நம்புகிறேன்.’’
‘’ உண்மைக்  காதல், அது, இது மாதிரியானதிலெல்லாம்  உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?’
வில்லியம் சிறிது இருமித் தொண்டையைச் சரிசெய்து  ‘’ நான் அப்படித்தான் நினைக்கிறேன்.’’ என்றான்.
ப்ரைடி கரண்டியை மிளகுத்தூளுக்குள் அமிழ்த்தி, அள்ளி, அப்படியே கிண்ணத்தின் வெள்ளை விளிம்பில் `கிளிங்` எனச் சத்தம் எழுமாறு, கீழே போட்டாள். ‘’ அப்படியென்றாலும், எனக்குத் தெரியவில்லை., அதற்கான வாய்ப்புகள் இருக்குமா? அப்படியான ஒரு நபரைச் சந்திப்போமா?’’
‘’இறந்துபோன ஒரு  உழைப்பாளிப் பெண்ணோடு தொடர்புகொள்வதைவிட  அதிகமான வாய்ப்புகள் உண்டே.’’
அவள் புன்னகைத்தாள். ஆனால், அவள் கண்கள் கண்ணீரில்  பளபளத்தன.         ‘’நான் நினைத்தேன்.’’
‘’ உன்னுடைய புதிய வேலைக்கு ஒரு நல்ல பெயரை அவர் தந்திருக்கிறார்.’’ என்றான், அவன். ‘’ பதிலி மணமகள்.’’ (Proxy Bride-y)
ப்ரைடி சிரித்துவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.’’ ஆக, நான் அவளுக்கு இன்னும்  அதிகமான மரியாதை கொடுக்க  வேண்டுமென்கிறாயா?’’
‘’இல்லை,’’ என்ற வில்லியம், ‘’ இப்போதும்  அதிகமாகத்தான் கொடுக்கிறாய்.’’ என்றான்.
அந்தக் குளிர்காலப்  பருவத்திலேயே, ப்ரைடியின் அப்பா மற்றொரு பதிலித் திருமணக் கோரிக்கையோடு வந்தார். அவர்கள் நீதிமன்ற அறையில் சந்தித்துக் கொண்டபோது, ப்ரைடி சிகாகோ இசைக்கழகத்தின் இசைவுக் கடிதம் பெற்றுக் கொண்டுவந்திருந்ததை வில்லியத்திடம் காண்பித்தாள். அவள் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் மனநிலையிலிருந்தாள். அவளது அப்பா வந்தபோது அணைத்துக்கொண்டாள். சடங்கின்போது வில்லியத்தைக் காதலிப்பதுபோல விளையாட்டுக் காட்டினாள். அவன் நல்ல விபரமானவன்; அவள் தன்னோடு உண்மையான காதல் விளையாட்டில் ஈடுபட்டதாக நினைப்பதற்கு, அவன் ஒன்றும் அறியாதவனல்ல. அது, அவளிடம் கிளர்ந்து பொங்கிய மகிழ்ச்சி. அவ்வளவுதான்.
பதிலித் திருமணச் சட்டம் பற்றி வேறு பல படைவீரர்களும்  கேள்விப்பட்டனர். அந்த வசந்த  காலத்தில் வில்லியமும் பிரைடியும் ஒரே நாளில் மூன்று திருமணங்கள் செய்தனர். கல்லூரிப் பட்டம் முடித்தபின் கோடை காலத்தில் மேலும் மூன்று திருமணங்கள் செய்துகொண்டனர். சடங்குகள் அவனுக்கு மிகத்தெரிந்தவையாகிப் போனதால் வில்லியத்திற்கு அது இலகுவாகவும் இருந்தது. ‘’நான் ஏற்கிறேன்’’ எனச் சொல்லும்போது, முன்பு போல அவன் இதயத்துடிப்பு அதிகமாகிவிடவில்லை.
ப்ரைடி சிகாகோ சென்றாள். அவன் பியானோ கற்பதற்காக ஓபர்லினுக்குச் சென்றான். கல்லூரியில் நாட்கள் சுறுசுறுப்பாகின. அவர்கள் எப்போதாவது தான் பேசிக்கொண்டார்கள். ஆனால், கிறிஸ்துமஸின் போது, அவர்கள் மீண்டும் ஒரு திருமணத்துக்காக நீதிமன்ற அறையில் சந்தித்தனர். ப்ரைடியின் அப்பா அங்கு இன்னும் வந்திருக்கவில்லை. வில்லியமும் ப்ரைடியும் அந்தக் கனத்த மரத்தாலான மேஜை முன் அமர்ந்தனர். அவள் மெலிந்திருந்தாள். அது அவனை அதிர்ச்சியடையச் செய்தது. அவள் ஒருபோதும் குண்டாக இருந்ததில்லை; ஆனாலும் ஒரு சிறு திரட்சியோடு தோன்றுவாள். இப்போது அந்தத் திரட்சி காணாமற் போயிருந்தது.
‘’ஒன்றும் முடியவில்லை, ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.’’ என்றாள், அவள். ‘’அங்கிருக்கும் பெண்கள் உண்மையிலேயே நடனக்காரிகள். அவர்களுக்கு ஈடுகொடுக்க நான் செத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லோரும் – எப்படியென்றே தெரியவில்லை. எஃகு மாதிரி. கொஞ்சம்கூடத் தளர்வதில்லை. அவர்கள் நாடகம் மட்டுமே குறிக்கோளாகப் பல்வேறு இடங்களிலிருந்து வருகிறார்கள். அதில் ஒருவராக நீடிக்க, முந்நூறு பெண்களைவிடத் திறமை தேவை. இங்கே மூன்றே பெண்கள்தான். அவர்களைக் காட்டிலும் கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தாலே போதுமானதாயிருந்தது. அதனால், அவர்கள் இலட்சியத்திற்காக இப்படி, வளைந்து கொடுக்கும் நாணல்களாகின்றனர். ஆனால், நான் – தெரியவில்லை. இந்த முட்டாள் பெண் பாடவும் ஆடவுமே விரும்புகிறாள்.’’
‘’அது நல்ல விஷயம்தானே.’’ வில்லியம், கல்லூரியில் செலவுக்கு வேண்டிய கூடுதல் பணத்துக்காக, பாலே வகுப்புகளுக்கு பியானோ வாசிப்பதுண்டு. அதனால், அவள் சொல்வதை, நடனப்பெண்களின் வன்மை – மென்மை இயல்புகளை, இன்னல்களை, அவன் அறிவான். ‘’ நீ மலர்ச்சியாக, இன்னும் கொஞ்சம் நன்றாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.’’
‘’நான் அப்படி நினைக்கவில்லை.’’ என்றாள், ப்ரைடி.
‘’அங்கே உனக்கென்று நண்பர்கள் இருக்கிறார்களா?’’
‘’ஆமாமா, உண்டு. ஆனால் அவர்கள் – இங்கே  எப்படியென்றுதான் உனக்குத் தெரியுமே, மோசமானவர்கள்! பீப்பாய், பீப்பாயாகப் பீர் குடித்து, வலுச்சண்டை போட்டு, குடியிலேயே புணர்ந்து புரள்வார்கள்?’’
வில்லியம் மெல்லப்  புன்னகைத்தான். அவன் மிகுந்த  மகிழ்ச்சியோடு விலகியிருக்கும்  விஷயங்களில் அதுவும் ஒன்று.
“அங்கே, லியோனார்டு கோஹெனுடைய `எல்லோரும் அறிவார்` பாட்டுக்குக்கூட ஆடை கழற்றிக் களியாட்டம் போடுகிறார்கள்.  அது என்றில்லை, எந்தப்பாட்டாக இருந்தாலும். உண்மையாகத்தான் சொல்கிறேன். ஆட்டம் முடிந்ததும், அங்கே யார் கிடைக்கிறார்களோ அவர்களோடேயே படுத்துக்கொள்கிறார்கள். அது, என்னமோ உலகத்திலேயே இல்லாத உடம்பு அவர்களுக்குக் கிடைத்துவிட்ட மாதிரி, அதை ஒருநிமிடம் கூட வீணாக்க விரும்பாதது போல. ` அங்கே ஒரு சாதாரணமான விஷயத்திற்குக்கூட, அநேகம் பேரை  ஆடையில்லாமல் சந்திக்க வேண்டியிருக்கிறது. – அது மாதிரியான ஒன்றைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.`
‘’நீ’’, வில்லியத்தின்  குரல், அதைக் கற்பனைசெய்திருந்தது, ‘’ஆடை கழற்றி?’’
‘’ கடவுளே, இல்லை.’’ அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள். அந்தப் பழைய  சிரிப்பு, அவன் நேசித்த, தேவதைச் சுருள்முடிகள் முகத்தைச்சுற்றிக் கிடக்கக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் அந்தப் பழைய சிரிப்பு.
‘’ எனக்கு வெட்கம். அப்படியொரு கூச்சம் மிகுந்த நாணம். அடக்கமாக, எப்போதும் ஆடையோடுதான், ஆனால், மிரண்டு போய் பயத்தோடேயே இருக்கிறேன்.’’
அவர்களுக்குப் பழகிப்போன சடங்குகளைச்  செய்து முடித்தனர். ஆனால்  ப்ரைடி அவனுக்கு இன்னும்  நெருக்கமாகவில்லை. ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்கிற, காயம்படப்போவதான, நிச்சயமற்ற தன்மை அவள் கண்களில் தோன்றியது. அதுதான் அவன் இதயத்தைத் துளைத்தது.
இரண்டு நாட்களுக்குப்  பின், அவனுடைய பெற்றோர் அளித்த கிறிஸ்துமஸ் விருந்துக்கு அவள் இறுக்கமான சிவப்பு  உடையில் வந்திருந்தாள். கிறிஸ்துமஸ் விளக்குகளின் ஒளியில் பொன்னிறத் தலைமுடியோடு சாம்பெய்ன் கோப்பையும் கையுமாக, அவளுடைய பழைய தன்னம்பிக்கை மீண்டுவிட்டதான தோற்றத்தோடு, மரத்தடியில் நின்றாள். வில்லியத்தின் அப்பா, சம்மதம் தெரிவிக்கும் விதமான கேள்வி தொனிக்க, அவனை நோக்கிப் புருவங்களை உயர்த்தினார்.
வில்லியம் தலையை  மட்டும் அசைத்தான். அதிகபட்ச அக்கறையாகத் தோன்றாமல், அவளைப் பயமுறுத்தி எல்லாவற்றையும் கெடுத்துவிடாமல், அவன் அவளிடம் என்ன சொல்ல முடியும்? வில்லியத்தின் அப்பா அவளிடம் இப்போது எதைக் காண்கிறாரோ அதை ஏற்கெனவே கண்டிருந்த அந்தப் பாவப்பட்ட மான்ட்டி அவளால் மறுத்து ஒதுக்கப்பட்டதை அவன் நினைத்தான். மான்ட்டி அவளைக் கைப்பற்ற, நயமற்ற முயற்சிகளை மேற்கொண்டான்; குறிக்கோள்கள் பற்றி உற்சாகமற்ற பேச்சுக்களைப் பேச, ப்ரைடி சிரித்துக்கொண்டே அவன் பிடியிலிருந்தும் நழுவிவிட்டாள்.
ஜனவரியில், வில்லியம்  பள்ளிக்குத் திரும்பி, கடினமான இசைப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான். அவன் இசைக்குறிப்புகளைத் தோராயமாக எழுதத் தொடங்கினான்; பாலே வகுப்புகளுக்கு வாசிப்பதை நிறுத்திக்கொண்டு பியானோக்களின் சேர்ந்திசை ஒன்றைத் தயாரித்தான். அது மிகவும் சிரமமாக இருந்ததோடு, இயற்பியல் மீது அவனுக்கிருந்த பழைய விருப்பத்தினை, சிக்கலான கணக்குகள், கடுவினாக்களுக்குத் தீர்வுகாணப் போராடியதை, பன்மடங்கு எண்ணிக்கையில் கருத்துக்களை ஒரே நேரத்தில் தலைக்குள் திணித்துவைத்துக்கொள்ள முயற்சித்ததையும் நினைவுபடுத்தியது. அன்றைய இரவு வேறு மாணவர்களால் அவனது சேர்ந்திசை நிகழ்த்தப்பட்டதைக் கண்டதும், இசை நிகழ்த்துவதிலிருந்தும் இசைக்கோர்ப்புக்கு மாற்றிக்கொள்ளவேண்டுமெனத் தீர்மானித்தான்.
ஈராக் படையெடுப்பு, பதிலித் திருமணம் செய்துகொள்ள  விரும்பிய மேலும் சில படைவீரர்களைக்  கொணர்ந்தது. அந்தப்போரினால் ப்ரைடியின் தந்தை மன அழுத்தத்தில் இருந்தபோதிலும் திருமணங்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டுதான் இருந்தார்; போர் தவறாக இருந்தாலும் அது படைவீரர்களின் தவறல்ல எனக்கூறினார். ஆனால் இளவேனில் காலத்தில், அபுகாரிஃப் படங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கியபோது, திரு டெய்லர், பதிலித் திருமண வேலைகளை நிறுத்திவிட்டார். ‘’ நாம் முடித்துவிட்டோம்…… அவ்வளவுதான்! ஏறக்கட்டிவிட்டேன்.’’ என்றார், அவர்.
வெளியுலகில் நடக்கும் பெருநிகழ்வுகள் உங்கள் தனிவாழ்க்கையைப் பாதிப்பதைக் குறிக்க நீளமான கூட்டுச்சொல் ஒன்று ஜெர்மன் மொழியில் இருப்பதாக வில்லியம் நினைவுகூர்ந்தான். அதன் தாக்கம் வெகுவாகக் குறைந்து முக்கியமற்றதாகிவிட்டாலும், தினசரி வாழ்க்கையில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. பதிலித் திருமணங்கள் இனிமேல் இல்லை என்றால், ப்ரைடியோடு தொடர்பு அருகிப் போனதாகிவிடுகிறது. அவர்கள் இருவரும் வேறுவேறு பள்ளிகளில் பயின்றனர். விடுப்புகளில் அவன், என்று, எப்போது வீட்டுக்கு வருகிறானென்பது குறித்து அவள் அக்கறைப்படவில்லை.
அவன் நேரங்காலமின்றிக் கடுமையாக உழைத்தான். பியானோவின் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்ததில் அவன் முதுகு வலித்தது. முதுகெலும்பை வலுவாக்க அவன் உடற்பயிற்சி நிலையம் சென்றதில் அவன் உடல் மாற்றமடைந்தது. அவன் மார்பு விரிந்து, தோள்கள் மேலும் மேலும் வலுப்பெற்றன. கடைசியில் அவனுக்கும் ஒரு பெண்தோழி கிடைத்தாள். அவளொரு கறுப்புநிறத் தலைமுடி கொண்ட ஒபோய் (க்ளாரினெட் அமைப்பில் மரத்தாலான காற்றுத் துளை இசைக்கருவி) இசைக்கும் கலைஞர். அவள் பெயர் கில்லியான். அவன் உருவாக்கியிருந்த, இசைப்பதற்கு இரட்டை மின்மூச்சு தேவைப்படுகின்ற ஒரு இசைக்குறிப்பினை அவளிடம் காட்டியபோது, அவள்தான் ஒரு மரத்துளைக் காற்றுக்கருவி மூலம் எதை இசைக்கமுடியும், எதை இசைக்க முடியாதென்று விவரித்தாள்.
கில்லியான், பள்ளி  முடித்து, இசைக்குழுவில்  வேலை தேடும்போது, ஒபோயிக்கு  ஒரு காலியிடம் இருக்காதென்றும், அப்படியே இருந்தாலும் அதற்குப் போட்டிபோட அநேகம் பேர் இருப்பார்களென்றும் அவளுக்குத் தெரிந்திருந்தது. அவள் ஒன்றும் சீவாளிகளைச் செய்வதற்காக மேஜைமீது கூனிக் குறுகி மணிக்கணக்காக உட்கார்ந்து செலவிட்டிருக்கவில்லை. முக்கியமான ஒபோயிக் கலைஞர்களுக்கெல்லாம் என்ன வயதாகிறது, அவர்கள் யாரைக் கலியாணம் செய்து அதனால் வேலைக்காக வேற்று நகரங்களுக்கு எப்படிச் சென்றார்கள், அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதா, என்பது குறித்தெல்லாம் அவளுக்குத் தெரியும். எந்த மாதிரியான வேலை வந்தாலும் ஏற்றுக்கொள்ள அவள் தயாராக இருந்தாள்; அது மட்டுமல்ல, வில்லியத்திற்காக எதற்கும் உடன்படும் நிலையிலிருந்தாள். வில்லியத்தின் பெற்றோர் அல்லது அவனது பழைய பியானோ ஆசிரியை யாருமே அந்த அளவுக்குக் குறிப்பாக இருந்ததில்லை. அவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென அவர்கள் விரும்பினார்கள்; ஆனால், கில்லியானோ, அவன் பிரபலமாகப் புகழ்பெற வேண்டுமென்றும் விரும்பினாள்.
‘’தம்பாவில் கண்டிப்பாக ஒரு வழி கிடைக்கும்,’’ அவன் படுக்கையில் இருந்தவாறே அவள் மீண்டும் கூறினாள். ‘’ நீங்கள் தம்பாவிற்கு வருவீர்களா? வேறெங்கும் வேலை பார்ப்பது  மாதிரியே நீங்கள் அங்கும்  பார்க்கலாம்.’’
தலையணையில் அழகிய  கருங்கூந்தல் விரியத் தன்னருகில் படுத்திருக்கும் அவளின் ஒரு கண்ணின் அடியில் தெரிந்த கண்ணிமைப்பூச்சு மையின் தடத்தைப் பார்த்துக்கொண்டே, ஒருவேளை யாராவது ஒரு ஒபோய்க் கலைஞர் இறந்து காலியாகும் வேலை கில்லியானுக்குக் கிடைத்தாலுங்கூட அவனால் தம்பாவுக்குச் செல்லமுடியாதென அவன் உணர்ந்தான். ‘’ நீங்கள் தம்பாவுக்குச் செல்வீர்களா?’’ போன்று கேள்விகேட்டு அவரவர் உள்ளக்கிடக்கையை அடுத்தவரிடம் எப்படியெல்லாம் தீட்டிப்பார்க்கிறார்களென அவன் வியந்தான்.
‘’ பட்டக்கல்விப்  பள்ளிக்கு நான் போகிறேன்.’’ என்றான், அவன்.
கில்லியான் புருவம்  சுருங்கிச் சுழித்தது. ‘’எங்கே?’’ என்று கேட்டாள், அவள்.
அவள் தலைக்குள்  ஓபோய்ப் பட்டியலோடு, வாழ்க்கை எதிர்பார்ப்புகள், திருமண வாய்ப்புகள் என அனைத்தும்  ஓடுவதை அவனால் காண முடிந்தது.
‘’ இந்த நிமிடம்  வரை எனக்கும் தெரியாது.’’ என்ற அவன் தொடர்ந்து சொன்னான். ‘’ ஓகியோ எனக்கு அலுத்துவிட்டது. எனக்கு இங்கே அதிகமாக எதுவும் கிடைத்துவிடவில்லை.’’ அது உண்மைதான்; ஆனால் எங்கே போனாலும் அவனுக்கு அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அவளின் எளிய குறிக்கோள், இணக்கமான துணை, தாராளமான பாலுறவு என எல்லாவற்றுக்குமாக அவன் கில்லியானிடம் நன்றியோடிருந்தான் என்பதற்காக, அவன் அவளோடு தம்பாவுக்கு வருவான் என அவள் நினைக்கும்படி செய்வது நல்லதில்லையே. ப்ரைடி டெயிலராக இல்லாதது அவளுடைய தவறல்லதான்.
பதிலித் திருமணம் கோருபவர்கள் ப்ரைடியின் அப்பாவை வேண்டி, விரும்பி, நச்சரிக்க, கடைசியில் அவரும் விட்டுக்கொடுத்துச் சம்மதித்தார். கிறிஸ்துமஸின்போது ப்ரைடியும் வில்லியமும் ஐந்து திருமணங்களை  ஒரே தொடராகச் செய்து முடித்தனர். பட்டம் பெற்றபோது அவர்களுக்காக ஏழு திருமணங்கள் வரிசையில் இருந்தன. முதல் இணையர் வாசிக்கவேண்டிய உறுதிமொழிகளை அவர்களே எழுதியனுப்பியிருப்பதாகவும் அதனைப் பதிலிகள் வாசிக்கமுடியுமாவெனக் கேட்டிருப்பதாகவும் செயலாளர் பாம் தெரிவித்தாள். அவள் இருவரிடமும் தட்டச்சு செய்யப்பட்டிருந்த தாள் ஒவ்வொன்றைக் கொடுத்தாள்.
‘’உங்களுக்குச்  சரியென்றால் எனக்கும் சரிதான்.’’ என்றார், ப்ரைடியின் தந்தை.
ப்ரைடி தாளை எடுத்துக்கொண்டு, வில்லியத்தின்  பக்கம் திரும்பி வாசிக்கத் தொடங்கினாள். ‘’ உனக்காக நான் மழையிலும் நனைவேன்,’’ அவளுக்குள் எழுந்த கேலிச் சிரிப்பினைத் தாளால் மறைத்துக்கொண்டு தொடர்ந்தாள்.      ‘’ உன் கால் சுண்டுவிரல் நகமற்று விகாரமாயிருந்தாலும், நான் உன் பாதங்களைத் தொழுவேன். எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்காத செயல்களை நீ செய்தால்கூட, உன்னுடைய மகிழ்ச்சிக்காக என்னை அர்ப்பணிப்பேனென்று உறுதியளிக்கிறேன். உனக்கு மாற்றாக, இந்த பூமியில் எவரும் இருக்கமுடியாது என்பதை நான் எப்போதும் நினைக்கிறேன்; ஏனெனில் என்னிடமிருந்து பிரிக்கவே இயலாத ஒன்றாக நீ இருக்கிறாய். என் வாழ்நாள் முழுவதையும் யாரோடு செலவிடப்போகிறேனோ, அந்த மனிதனாக நீ மட்டுமே இருக்கிறாய். நான், இங்கேயே, இப்போதே, இதன் மூலம், எனது இதயத்தை உன் கைகளில் காணிக்கையாக்குகிறேன்.’’ அவள் தாளைக் கீழே வைத்துவிட்டு, ‘’ ஓ! இது உண்மையானது – நான் சிரித்தது தவறு. தவறுதான், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றாள்.
ப்ரைடியைச் சிறுவயதிலிருந்தே தெரிந்த செயலாளர், இருவரையும் கூர்ந்து நோக்குவதை வில்லியம் கவனித்தான். நேருக்கு நேராக அவரது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
ஜூலையில், நேரடிக்காட்சித்தேர்வுக்காக, ப்ரைடி நியூயார்க் சென்றாள். தானும் கூடத்தான் நியூயார்க்குக்குப் போகலாமென்று வில்லியம், தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். பட்டக்கல்விப் பள்ளிகள் அங்கே நிறைய இருக்கின்றன இந்தியானா பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால், ப்ரைடி அவனிடம் அப்படிக் கேட்கவில்லையே!
‘’ உங்களுக்கு ஓகியோ அலுத்துவிட்டது, அதனால்தான் இந்தியானாவுக்குப் போகிறீர்கள்! இல்லையா?’’ தொலேபேசியில் கேட்டாள், கில்லியான்.         ‘’ இங்கிற்கும் அங்கிற்கும் என்ன எழவுதான் வித்தியாசம்?’’ அவளுடனான தொடர்பை அவன் முறித்துக்கொண்ட செயல், அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டதாக இருந்தாலும், அதனை அவள் இன்னும் மன்னிக்கவில்லை. அவளுக்கு எப்படியாவது ஒரு வேலை –ரத்தப்புற்று நோய், எங்கேயுமிருக்கிற மணமுறிவு போன்ற பயங்கரங்கள் எதுவும் எந்த ஒரு ஒபோயிஸ்டுக்கும் நேராமலேயே – கிடைத்துவிடுமென்று அவன் நம்பினான். எப்படி இருந்தாலும், எது நேர்ந்தாலும் கில்லியான் மகிழ்ச்சியாக இருப்பாளென அவனுக்குத் தெரியும்.
வில்லியத்திற்கு ப்ளூமிங்டன் நகரினை, அதன் பசுமைப் புதர்கள், கூம்புக் கோபுர மரங்கள், கருக்கிருட்டில் மின்மினிப் பூச்சிகள், துறவுச் சாம்பல்நிறப் பல்கலைக்கழகக் கட்டிடங்கள், என  மிகவும் பிடித்திருந்தது. ஆங்கிலத்தைக் கிறுக்கி எழுதும் கொரிய நாட்டுத் திறமையான வயலின் கலைஞர்களுக்குக் கற்பிக்கவும், இசைக்கோட்பாட்டுப் பாடங்களை எழுத உதவுவதுமான பயிற்றுநர் வேலை அவனுக்குக் கிடைத்தது. அவன் அதிலேயே மூழ்கித் தங்கிவிட்டான். விடுதி ஒன்றில் காப்பிக்காகக் காத்திருக்கையில், அவன் செய்தித்தாள் ஒன்றினை எடுத்துப் புரட்டியபோது, அவனும் ப்ரைடியும் பதிலிகளாகத் திருமணம் செய்வித்திருந்த படைத்துறை அலுவலர் ஒருவரின் பெயரைக் கண்டான்; அவர் சாலையோர வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் இறந்திருந்தார். நிச்சயமாக அந்த மனிதர்தானென வில்லியத்திற்குத் தெரிந்தது. அன்றிலிருந்து செய்தித்தாள் பார்ப்பதை அவன் தவிர்த்தான். பள்ளியில் அது அவனுக்கு வசதியாகவும் இருந்தது.
ப்ரைடி, சிலவேளைகளில், அநேகமாகப் பள்ளியிலிருந்து  வந்தபின், அடிக்கடி நியூயார்க்கிலிருந்து அவனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள். அவள் இரவுகளில் கிராமப்புறத்திலிருந்த ஒரு உணவுவிடுதியில் வேலை செய்தாள். அங்கு வேலை முடித்தபின் ப்ரூக்ளினிலுள்ள வீட்டுக்குப்போய், விடியும் முன்பே எழுந்து முழு ஒப்பனை அலங்காரத்தோடு மன்ஹாட்டனில் குழுநடன அழைப்புக்கான வரிசையில் அதிகாலையிலேயே நிற்கவேண்டும். அவளுக்குத் துணைப்பாத்திரங்கள்கூட கிடைக்கவில்லை. அதனாலேயே முழுவதுமாகச் சோர்வுற்றிருந்தாள். அந்த படைத்துறை அலுவலரைப்பற்றி அவன் அவளுக்குச் சொல்லவில்லை.
‘’எனக்கு எளிமை கொஞ்சும் இனியமுகம் இல்லையென்று கடைசியாகப் பார்த்த நடிக, நடிகைத் தேர்வு இயக்குநர் என்னிடம் சொன்னாள்.’’ என்றாள், அவள். ‘’ எனக்கு அப்படியான தலைமுடி இருப்பதாகவும், ஆனால் அதற்கு இப்போது செயற்கைமுடிக் கவசங்கள் இருப்பதாகவும் எனக்குப் பொருத்தமான முகம் இல்லையென்றும் அவள் சொன்னாள். நான், உண்மையில் ஒரு குணசித்திர நடிகை என்றும் ஆனால்  அந்தப் பாத்திரங்களுக்கான வயது எனக்கு இன்னும் ஆகவில்லையென்றும் அவள் சொன்னாள். என் முகத்துக்கான வயதை நான் இன்னும் அடையவில்லை. அப்படியென்றால் நான் என்ன செய்யவேண்டும்? எனக்குப் பிடிக்கிற தொழிலுக்காக, பிழைப்புக்காக நான் இன்னும் முப்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா?’’
‘’ ஏதாவதொன்று தானாக வரும். அவர்கள் உன்னுடைய தோற்றத்தில் வேறு யாரையோ தேடுகிறார்கள்.’’ என்றான், வில்லியம்.
‘’எனக்குப் புரியவில்லை. நான் உண்மையான நடனப்பெண் இல்லை.’’ –ப்ரைடி.
‘’ கடவுளுக்கு நன்றி.’’
‘’நான் நிரம்பவும் அலுத்துவிட்டேன்.’’
‘’ நீ நன்கு தூங்கவேண்டும். இல்லாவிட்டால் சீக்கிரமே குணசித்திரப் பாத்திரங்களுக்கான வயதாகிவிட்டது போலாகிவிடுவாய்.’’ என்றான், அவன்.
ப்ரைடி சிரித்தாள், ஆனால், அது அப்படியே தேம்பல் போன்ற ஒன்றாக மாற்றம் கொண்டது. ‘’ ப்ச், ஒருவேளை, அம்மா சொன்னதுதான் சரி. நான் அதற்கான அழகு இல்லை, அவ்வளவுதான்.’’ பெருமூச்சிட்டாள், அவள்.
‘’ ப்ரைடி’’, என அழைத்த அவன். ‘’ நீ எட்டு மாதங்களாக அங்கே இருந்திருக்கிறாய்.’’ என்றான்.
ஆனால், இரண்டு வருடங்களுக்குப்  பிறகும், ஏன் மூன்று வருடங்களான போதுங்கூட, அவர்கள் இதே மாதிரிதான் பேசிக்கொண்டார்கள். தொலைபேசி அழைப்பு, சில நேரங்களில் வேலை குறித்து, ஒரு பூனைத்தீவன நிறுவன விளம்பரத்தில் பணம் கிடைத்தது, இந்தியானாவுக்கு வரவே வராத சுற்றுலா நிறுவனம் என உற்சாகமானதாக இருந்தது. ஆனால் நிராகரிப்பு அவளைச் சோர்வுறச் செய்து வீழ்த்தியது. அவன், சிலவேளைகளில் ப்ரைடியைப்பற்றிய நினைவே இல்லாமல் பல வாரங்கள் கழித்திருக்கிறான். சிலநாட்களில் அவளே அவனைக் கொன்றுகொண்டிருந்தாள். பின்னர் ஒரு வருடமாக தொலைபேசி, மின்னஞ்சல் என எந்தச்செய்தியுமில்லாமலிருந்தது.
முதல் செய்தி அவனுடைய  அம்மாவிடமிருந்து வந்தது. அவர் ப்ரைடியின் பாட்டியை மளிகைக்கடையில் சந்தித்திருந்தாள். தற்பெருமை பேசும் அந்த முதியவர், ‘’ நடிகையாகப்போகிறேனென்று சொல்லி ப்ரைடி என்ன செய்கிறாளென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் இப்போதுதான் ஒரு அழகிய இளைஞனை மணந்து கொண்டிருக்கிறாள், உனக்குத் தெரியுமா? நல்லது, அப்படியொன்றும் இளமையாக இல்லாமலிருக்கலாம், ஆனால், அவன் அழகாயிருப்பதாகச் சொன்னார்கள்.’’ என்றிருக்கிறார்.
வில்லியத்திற்குக் குடல் அறுந்தது போலிருந்தது. அம்மாவிடம் இயல்பாகப் பேசமுடியாமல் மூச்சுமுட்டுவதாக அவன் உணர்ந்தான், ஆனால், அம்மா அதைத் தெரிந்துகொண்டாள்.
‘’ ஏண்டா சொன்னோமென்றிருக்கிறது, வில்லியம்,’’ என்றாள், அவள்.
‘’ இல்லை, இல்லை, சொன்னதற்கு நன்றி.’’ வார்த்தைகளை எப்படியோ சமாளித்துக்கொண்டான்.
ப்ரைடியே கூப்பிடட்டுமென, அவன் காத்திருந்தான், ஆனால், அவள் கூப்பிடவேயில்லை. கடைசியில்  அவனாகப் ` புதிதாக ஏதாவது?` எனச்  செய்தியனுப்பினான். அவளிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
அவன் தீர்மானத்தோடுதான்  பணிபுரிந்தான், ஆனால், அவன் கண்ணெதிரேயே இசைக்குறிப்புகள் கடந்து சென்றன. அவனுடைய அடுக்ககத்துக்குள்ளேயே  பியானோ முன் அமர்ந்திருப்பான். ஆனால் அவன் மூளை வேறுமாதிரியாக  அவன் என்ன செய்திருக்கவேண்டுமெனப் பல சிந்தனைகளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும். ப்ரைடிக்கு ஆண் நண்பர்கள்  உண்டென்பது அவனுக்குத் தெரியும், ஆனால் அவர்களில் ஒருவனை அவள் திருமணம் செய்துகொள்வாளென  அவன் எப்போதுமே நினைத்திருக்கவில்லை. அவர்கள் இருவரும் உள்ளூரில் இருந்தபோதெல்லாம், அவள் அவனை, வில்லியத்தைப் பலமுறை திருமணம் செய்திருக்கிறாள். அதனாலேயே  உண்மையான ஒரு திருமணம் செய்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்குமோ?  தனக்கு எந்த விளைவும் ஏற்படுத்தாத திருமணத்தில் பலமுறை ஈடுபட்டிருந்ததே அவளை ஒரு தவறான திருமணத்தில் இப்படிக் கண்மூடித்தனமாக விழுந்துவிடச் செய்ததோ? அது தவறான திருமணமேதான், அவன் உறுதியாக நம்பினான். அப்படியில்லாமல் வேறெப்படி இருக்க முடியும்?
கடைசியில், அவன் மீண்டும் பணியில் ஈடுபடத்  தொடங்கினான். ப்ரைடி பற்றி  நம்பிக்கைகொள்ள எந்தப்பிடிப்புமில்லாமல், அவன் ஒரு நேரங்காலமற்ற உலகிலிருப்பதாக உணர்ந்தான். அது ஒருவிதமான விட்டுவிடுதலையாகும் நிலை. அவன் உருவாக்கிய இசை நல்லதா, கெட்டதாவெனக் கவலைப்படவில்லை. சிலவேளைகளில் அவன் அதை ஒரு முறைப்படுத்துவதாவே கருதினான். கடந்தகால வாழ்வை மீண்டும் ஏற்படுத்திக்கொள்வதான ப்ரைடியின் அம்மா, மனநிலையை நினைத்துக்கொண்டு, இசை எங்கிருந்தோ தன்னிடம் வந்து சேர்கிறதோ என அவன் கருதினான். சிலநேரங்களில் இசைக்கோர்ப்பில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பதாக – மரத்துளைக்குழல் எந்த அளவுக்குப் பயனாகுமென்று, ஒரு இசைக்குறிப்பினை எவ்வளவு நேரம் நீட்டிக்க அல்லது தக்கவைக்க முடியுமென, இனிமைக்கு மாறும் சுருதிபேதத்தை எவ்வளவு நேரம் சகித்துக்கொள்ளமுடியுமென்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக – அவனுக்கே புரிந்தது. ஆனாலும், தன்னுடைய பிரித்தறியும் உணர்விலிருந்து அவ்வப்போது விலகிவிடுவதாக உணர்ந்தான். அவன் ஏதோ ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தான்; அது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. அது அவனுடைய குடியிருப்புக்கு வெளியே சென்றதா, அல்லது அவன்தான் வெளியே சென்றானா என்பதை அவன் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வெளியே செல்லாதிருந்தவரையில், அவனுடைய ஆக்கத்தன்னுணர்வு உடைபடவில்லை; வெளியுலகம் பற்றிய எண்ணமும் இல்லை.
ஆனால், காலம்  கடந்தே சென்றது, கிறித்துமசும்  வந்தது. கிறித்துமசுக்கு  வீட்டுக்கு வர இயலாதென்று பெற்றோர்களிடம் தெரிவித்துவிட்டு இந்தியானாவிலேயே இருந்தான். ஏற்கெனவே திருமணமான பிரைடியோடு, இன்னொரு திருமணம் செய்துகொள்வதென்பது அவனால் முடியாத ஒன்று.  அதுவும், அவளது புதிய கணவன் பதிலியாகும் போது தான் அருகில் இருப்பது இன்னும் மோசமானது.
ப்ரைடியும் கிறித்துமசுக்கு  வரவில்லையென, ஜனவரியில் அம்மா தகவல் சொன்னாள். ப்ரைடி விவாகரத்து வாங்கிக்கொண்டு ஊருக்கு வரப்போவதாகச் சொல்வதற்கென்றே பெப்ருவரியில் அம்மா அவனைத் தொலைபேசியில் கூப்பிட்டாள். இணைப்பில் அமைதியாகக் கேட்டுக்கொண்டே, இது கனவா, அல்லது தன்னுடைய கற்பனையா, அல்லது தன்னுடைய வேண்டுதலின் நிறைவேற்றமா என நினைத்தான்.
இறுதியாக, ‘’ நீ அவளைக்கூப்பிட்டுப் பேசவேண்டுமென்று, நான் நினைக்கிறேன்,’’ என்றாள், அம்மா.
‘’உம், என்ன சொல்லவேண்டும்?’’
‘’ நீ அவள் மீது காதலாக இருக்கிறாயென்று  அவளுக்குத் தெரியாது.’’
‘’ நானொன்றும் அப்படி இல்லை.’’
‘’ ஓ, வில்லியம், நான் உன்னுடைய அம்மாப்பா,’’ என்றவள், ‘’எனக்கும் கொஞ்சம்  தெரியுமென்று நான் நினைக்கிறேன்.’’ என்றாள்.
‘’ என்னால்  அவளைக் கூப்பிட முடியாது.’’
‘’ நீங்கள்  இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லையென்று முடிவுசெய்துவிட்டீர்கள் போலச் சிலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது.’’
‘’ அவள் ஒன்றும்  மகிழ்ச்சியில்லாமலில்லை.’’ என்றான், அவன்.
‘’ அதுதான்  நான் கேள்விப்பட்டது.’’
‘’ அப்படியானால், கேட்காதீர்கள், கேட்பதை நிறுத்திவிடுங்கள்.’’
மற்றுமொரு அமைதி  நிலவியது. ‘’ இந்தக் கோடையில் வீட்டுக்கு வா,’’ என்ற அம்மா, ‘’ நானே உனக்கு டிக்கெட் வாங்கிவிடுகிறேன்.’’ என்று சொல்லிமுடித்தாள்.
ஏற்கெனவே, வேலைக்குள் மூழ்கியிருந்த, அந்தப் பெருமயக்கப் பேரின்பநிலையை மீண்டும் கொணர வில்லியம் முயற்சித்தான்; ஆனால் அது இப்போது முடியாததாக இருந்தது. அவன் கவனம் சிதறியது. இழை முழுவதுமாக அறுந்துபோனது.
அந்தச் சிறுநகரில் புகையென எழும் ஒலிக்குறிகள் இந்தியானாவுக்கு ஒலிபரப்பப்பட்டு, ப்ரைடி குறித்த தகவல்கள் வில்லியத்திற்கு அவ்வப்போது வந்துகொண்டேயிருந்தன. ப்ரைடி, அவள் அப்பாவின் அலுவலகத்தில் கோப்புகளை அடுக்கிக்கொண்டும் நகரத்தின் மையப் பகுதியிலிருந்த ஒரு உணவுவிடுதியில் பரிமாறும் பணியாளாக வேலைசெய்துகொண்டுமிருந்தாள். அவனைப்பற்றிய செய்திகள் அவளுக்குத் தெரிந்திருக்குமா என அவன் ஐயம் கொண்டான். அம்மா என்ற ஒரு ஒலிவாங்கி இல்லாமல் புகையென எழும் ஒலிக்குறிகளுக்குப் பயனுண்டா?
ஜூன் மாதம்  வீடு சென்றபோது அதற்கான  பதில் கிடைத்தது; அவன் பெற்றோரின் வீட்டுக்கு வந்த அதே நாளில் தொலைபேசி சிணுங்கியது. திரையில் ப்ரைடியின் பெயர் தெரிந்தது. அவன் ஒலிவாங்கியை எடுத்தான். அவள் பேசும் குரலின் ஒலி. அவன் விரும்பாமலேயே அவன் நாடி நரம்புகளில், அடிவயிற்றின் ஆழத்தில் ஏதோ ஒரு சிலிர்ப்பு.
‘’ நீ இன்னொரு  திருமணம் செய்வாயா என்று  அப்பா கேட்கச் சொன்னார், ஒன்றே ஒன்றுதான்.’’ என்றாள், அவள்.
அவன் எதுவும்  பேசவில்லை.
‘’வில்லியம்?’’
‘’ நாம் இல்லாமலிருக்கும் போது யார் அதைச் செய்துகொண்டிருந்தார்கள்?’’
‘’யாரும் இல்லை. அவர் அதைச் செய்யாமலேதான்  இருந்தார்.’’
‘’உனக்கு உண்மையிலேயே கலியாணம் ஆயிற்றென்று கேள்விப்பட்டேனே.’’
‘’ஆமா.’’ அவள் குரலை  இயல்பாக வைத்துக்கொள்ள  முயல்வதை அவனால் கேட்க முடிந்தது. ‘’மாறிப்போனது, உண்மையான காரியத்தைச் செய்வதில் நான் அவ்வளவு சரியாக இல்லை.’’
‘’யார் அவன்?’’
‘’நான் வேலை பார்த்த உணவுவிடுதியின் சொந்தக்காரன்,’’ என்றாள். ‘’ உனக்கு வனப் புத்தகம், அதுதான், JUNGLE BOOK நினைவிருக்கிறதா? மௌக்ளியை மலைப்பாம்பு மயக்கும்போது அவன் கண்கள் பளபளக்கும், பாம்பு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அதைப் பின்தொடர்வான், அவனே அதில் மாட்டிக்கொள்வானே? அதேதான் நானும். நான் மௌக்லியாகத்தான் இருந்தேன். ஆனால் அதன் பிடிக்குள்ளிருந்து நழுவி வந்துவிட்டேன்.’’
‘’ஏன்?’’
‘’ஓ,’’ அவள் களைப்புற்றுச்  சொன்னாள். ‘’ அவன் வேறு இரண்டு மேஜைப் பணிப்பெண்களோடு படுத்துக்கொண்டிருந்தான், போதுமா? இங்கே பார், உன்னால் முடியாதென்று அப்பாவிடம் சொல்லிவிடுகிறேன்.’’
‘’ நான் செய்கிறேன்.’’ என்றான், அவன்.
வில்லியம் அம்மாவின்  காரை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு நிறுத்தும்போது அவனருகில் நின்றிருந்த ஒரு திறந்த வெளிச் சிவப்புநிற டிரக்கினுள் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள். அங்கு காற்று முதல் எல்லாமே சுறுசுறுப்பாக இருந்தன. அந்தப் பழைய, உயரமான கற்கட்டிடம், அதனருகில், அதன் நீள்வாடையிலேயே புதிய சிறைக்கட்டிடம் ஒன்று திணிக்கப்பட்டதாக நின்றிருந்தது.
நீதிமன்றத்திற்குள்  அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும்  அறை பூட்டியிருக்கவே, வில்லியம்  அப்படியே பின்வாங்கி, எழுத்தரின் அலுவலகத்துக்கு வந்தான். அவன் முன் வரிசையில் நின்ற பதினேழு வயது போல் தோன்றிய பெண் ஒருத்தி தடையாணையை வாங்கிக்கொண்டிருந்தாள்.   பருத்த மார்புகளுடனான ஒரு பெண்-எழுத்தர், இருக்கையில் அமர்ந்தவாறே, கையில் பிடித்திருந்த தொலைபேசியின் ஒலிவாங்கியைத் தோளில் சாய்த்துக்கொண்டு கேட்டாள், ‘’ கணவர் ஆப்கானிஸ்தானில் இருக்கும்போது திருமணத்தை எப்படி நாங்கள் ரத்துசெய்ய முடியும்?’’
ரத்து கோரும் திருமணம் அவனும் ப்ரைடியும் செய்தவொரு  திருமணமாக இருக்குமோ என அவனுக்குத் தன்னிச்சையாகத் தோன்றியது. பிற மனிதர்களின்  வலி, துயரம். நீதிமன்றம் முழுக்க  அதுவே நிறைந்திருந்தது.
ஒரு எழுத்தர் அவனைப் பூட்டிய அறைக்குள் மறுபக்கமாக அனுப்பினாள். வில்லியம் அவனது முதுகுப்பையை அந்தக் கனத்த மர மேஜைமீது இறக்கிவிட்டு அங்கிருந்த ஒரு நாற்காலியில் அவனது உயரமான உடலைச் சாய்த்து மடித்துக்கொண்டான். அவன் நிரம்பவும் முன்னதாக வந்துவிட்டிருந்தான். ப்ரைடியைப் பார்க்காமலிருக்க ஒரு கவசம் போல், அவன் தன் கைகளை முகத்தின் முன்புறம் கூம்புக்கூடாரமாக்கிக்கொண்டான். ‘’சம அளவில் அன்பாயிருக்க முடியாதெனில், அதிக அன்பு காட்டுகிற ஒருவர் நானாகவே இருக்கட்டும்.’’ என்கிறார் ஆடென். வில்லியம் பள்ளியில் ஆர்ப்பாட்டமான ஒரு உச்சக்குரலில் அந்தப்பாடலுக்கு இசையமைத்திருந்தான். ஆனால், அழுக்கடைந்த தரைவிரிப்பில் காலணிகளோடு மெல்லமெல்லக் காலெடுத்துச் சுற்றிச்சுற்றி வருவதைப்பற்றி, தேநீர்க்கோப்பையை சிகரெட் அடிக்கட்டைகளால் நிரப்புவது பற்றி, ஆடெனுக்கு என்ன தெரியும்? ஆடென், அவரது இயல்பின் காரணமாக, எப்போதுமே அதிகம் நேசிக்கிற ஒருவராக இருக்க விரும்பினார். அதனால் அந்தப் பேராவலைப் போற்றத்தக்கதாக்க, பெரிதும் விரும்பத்தக்கதாக்க முயற்சித்தார். அது அப்படியல்லவென்று வில்லியம் தன் அநுபவத்தில் தெரிந்துகொண்டான். துன்பத்துக்கெல்லாம் நியாயங்காட்டி விளக்கமளிப்பதே மனிதமூளையின் வேலையாகப் போயிற்று.
ப்ரைடி அறைக்குள்  வந்தாள். ஜீன்ஸோடு மேலிருந்து கீழ்வரைக்கும் நெருக்கமாகப் பொத்தான்கள் வைத்த சட்டையணிந்து, அதன் ஒரு பக்கத்தை மட்டும் காற்சட்டைக்குள் திணித்திருந்தாள். அவளை, அவன் பார்த்து இரண்டு வருடங்களாகிவிட்டன. அவளுடைய முகத்தின் இறுக்கம் அவனுக்குப் பரிதாபத்திற்குரிய ஆச்சரியமாக இருந்தது. அவள் மிகவும் களைப்பாக, அடித்து வீழ்த்தப்பட்டவளாக, கண்களுக்கடியில் கருவளையங்களோடு காணப்பட்டாள். ஆனாலும் காதைச் சுற்றி ஆடும் அதே வளையங்களை அணிந்திருந்தாள். அதே இனிய நீள முகம். வில்லியத்தின் கைக்கூடாரம் அவனைப் பாதுகாக்கவில்லை. அவளைக் கண்டதுமே அவன் இதயம் வலிக்கத் தொடங்கியது. அவள் அமர்ந்து, ஒற்றைக்காலை நாற்காலியின் மேல் கான்வாஸ் ஷூவோடு தூக்கிவைத்து மூட்டை அணைத்துக் கட்டிக்கொண்டாள்.
‘’ இசைக் கோர்ப்பெல்லாம் எப்படி இருக்கிறது?’’ அவள் கேட்டாள்.
‘’அதெல்லாம் நன்றாகத் தான் போகிறது.’’ தான் வந்திருக்கக் கூடாதெனத் திடீரென அவனுக்குத் தோன்றியது. அவன் தீர்மானமாகக் கடுமையாக முயன்று தைத்து மூடியிருந்த காயங்களெல்லாம் அவளைக்கண்டதும், அவள் குரலைக் கேட்டதும் திறந்துகொண்டன. ‘’ சொந்த ஊர் எப்படி இருக்கிறது?’’
அவள் புன்னகைத்தாள். ‘’கொஞ்சம் பரவாயில்லை.’’ என்றாள். ‘’ மேஜையில் பரிமாறுபவளாக என்னைப் பார்ப்பதில் சிலிர்க்கிற  சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பச்சடி கொண்டுவரச் சொல்லிவிட்டு,’’ நல்லது, நீ என்னமோ, பெரிய நடிப்புத்தாரகையாகப் போவதாகச் சொல்லிவிட்டுப் போனாய், திரும்பியும் இங்கேயே வந்துவிட்டாயே, ஹூம்..’’ என்பார்கள்.  வேற்றிடம் செல்வதன் உபயோகமற்ற தன்மை மீதான அவர்களின் நம்பிக்கையை அது  மேற்கொண்டும் உறுதியாக்குகிறது. ஆக, உனக்குத் தெரிகிறதா, நான் எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்துகிறேன். அதுதான் முக்கியமானது.’’
அவள் அப்பா  உள்ளே வந்தார். அவன் தோள்களைத்  தட்டினார். ‘’ சொந்த ஊரில் உன்னைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.’’ என்றார்,  ‘’ அந்த இணையர்கள் வீடியோ கான்ஃபரென்சிங் வேண்டுமென்கிறார்கள். நீ ஒன்றும் சொல்லமாட்டாயென்று நான் சொன்னேன்.’’
‘’வீடியோ!’’ தலைமுடியைக்  கோதிக்கொண்டே, ப்ரைடி சொன்னாள், ‘’ இதை நீங்கள் முன்பே சொல்லியிருக்கவேண்டும்.’’
‘’அவர்கள் இப்போதுதான் சொன்னார்கள். அவர் பைக்குள்ளிருந்து ஒரு மடிக்கணினியை எடுத்து, இரண்டு பயனர் பெயர்களுடனான அட்டையையும் நேர்த்து ப்ரைடியிடம் கொடுத்தார். ‘’ அவர்கள் `ஸ்கைப்` வேண்டுமென்கிறார்கள். என்ன இருக்கிறதோ அது.’’
‘’முதலிலேயே தெரிந்திருந்தால், தலைக்குக் குளித்திருப்பேன்.’’ என்றாள், ப்ரைடி..’’ அவர்கள்  உங்களைப் பார்க்க வேண்டுமா அல்லது எங்களை மட்டுமா?’’
‘’நீங்கள் இருவர் மட்டுந்தான், நான் உங்கள் பின்னாலேயே இருப்பேன்.’’ என்றார், அப்பா.
ப்ரைடி, அப்பாவுக்காக `ஸ்கைப்` கணக்கு ஒன்றைத் திறக்கும்போது, வில்லியம் நாற்காலியை இழுத்துப்  போட்டு அவள் அருகில் அமர்ந்தான். அவர்களின் முகங்கள் மடிக்கணினித் திரையில் தோன்றின. ப்ரைடி அவள் நாற்காலியை இன்னும் முன்நகர்த்தியபோது  அவளின் மூட்டு தன்காலில்  உரசுவதாக வில்லியம் உணர்ந்தான். அவன் கீழ்நோக்கி விசைப்பலகையைப் பார்த்தான். அவன் தன்னுடைய முகத்தைப் பார்க்கவே விரும்பவில்லை. அதிலும் ப்ரைடியின் முகத்தைப்  பார்க்கமுடியுமென அவன் நம்பவில்லை.
அவள் தன் சுருட்டை முடிகளைப் பின்தள்ளிக்  கோதினாள். ‘’ இதில் உங்களுக்குச் சம்மதந்தானே? உங்களைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.’’
‘’ சரி, நன்றாகத்தான் இருக்கிறது.’’ அவன் குரலின் கடுமையை அவனே வெறுத்தான். ‘’ ஆனால், இதற்குப்பிறகு நீங்கள் வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.’’
ப்ரைடி திடுக்கிட்டு அவனை நோக்கினாள். ‘’உண்மையாகவா?’’
‘’இது எனக்கு நிரம்பவும் கடினமாக இருக்கிறது. இனிமேல்  என்னால் முடியாது.’’
‘’ ஏன் முடியாது?’’
‘’நீ அவர்களைக்  கூப்பிடு.’’என்றான், அவன்.’’முதலில்  இதைச் செய்து முடித்துக் கைகழுவி விடுவோம்.’’
ப்ரைடி அப்படியே செய்தாள். அருவருப்பும் எரிச்சலுமாக  வில்லியம் காத்திருந்தான். அவன் ஒரு அழகற்ற சிறுவனாகவே இப்போதும் உணர்ந்தான். ப்ரைடிக்கு எப்போதுமே அவனை அப்படித்தான் தெரியும். வந்த வேலை முடிவதற்கு முன், அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. அவர்கள் திருமணம் செய்துவைக்கும் அந்த இணையை அவன் பார்க்கவிரும்பவில்லை; அந்தச் சடங்கு அவனையும் ப்ரைடியையும் பொறுத்தவரையில் எதுவுமே இல்லாததென்பதும் அவன் நினைவுக்கு வந்தது.
பின்னர் மணமகனும் மணமகளும் திரையின் உச்சியில் தனித்தனிச் சாளரத்தில் இளமையான ஒரு கறுப்பு இணையராக இருந்தனர். மணப்பெண் அகன்ற விழிகளும் அழகிய மார்புகளுமாக இருந்தாள். அவள் பின்புலத்தில் வர்ஜீனியாவின் ஒரு வசிப்பறை இருந்தது. மணமகன் ஈராக்கிலிருந்தார்; இராணுவப் பாலைவனக் காப்பு உடை அணிந்திருந்தார். அவர்களின் பெயர்கள் — நட்டாலி, டார்ரென்
‘’ஹை’’ என்றாள், ப்ரைடி. ‘’நான் ப்ரைடி, இது  வில்லியம். நாங்கள் தாம் உங்கள் பதிலிகள்.’’
மணப்பெண் சீறிக் கடுகடுத்தாள். ‘’நான் கறுப்பினப் பதிலிகளைக் கேட்டேன். ஆனால் வழக்கறிஞர், நீங்கள் மான்டனாவில் இருப்பதாகச் சொன்னார். அங்கே அதிகமும் வெள்ளையர்கள் தான் இருப்பார்கள் போலிருக்கிறது.’’
ப்ரைடி மன்னிப்புக் கோரும் பாவனையில் ‘’அப்படித்தான்,’’ என்றாள். ‘’ நான் அவருடைய மகள் — வழக்கறிஞரின் மகள். எப்போதும் நாங்கள் தான் திருமணங்களைச் செய்கிறோம்.’’
‘’ பரவாயில்லை. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.’’ என்றாள், நட்டாலி.
டார்ரென் கேட்டார், ‘’ உங்கள் வெற்றி விகிதம் என்ன?’’
‘’நல்லது, எல்லோரும்  திருமணம் செய்துகொண்டார்கள்.’’ என்றாள், ப்ரைடி.   ‘’நீங்கள், அவர்கள் திருமணத்தில் தொடர்ந்திருக்கிறார்களா என்று கேட்கிறீர்களா?’’
‘’ஆம், அதுதான்.’’
‘’அது எனக்கு தெரியாது.’’ என்றாள், ப்ரைடி.
நாளிதழில் பார்த்த, இறந்த படைத்துறை அலுவலரின் பெயரை வில்லியம் நினைவுகூர்ந்தான். உடனேயே அந்த நினைவுகளைப் புறந்தள்ளினான்.
‘’ சரியான வழிமுறையாக இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.’’ என்றார், டார்ரென். ‘’ அதாவது எங்கள் ஊரில் நடப்பதைப்போல.’’
‘’இது சட்டப்படியானது.’’ என்றாள், ப்ரைடி. ‘’நீங்கள் திருமணமாகிவிடுவீர்கள்.’’
‘’இங்கே பார், பேபி,’’ நட்டாலி அவளுக்கு நிச்சயிக்கப்பட்டவரிடம் சொன்னாள்.       ’’எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.’’
‘’ ஏதோ ஒன்று  தவறுவது போலத் தோன்றுகிறது.’’ என்றார், அவர்.
‘’அப்படியென்றால் வருத்தம் தெரிவிக்கிறோம்,’’ என்றாள், ப்ரைடி. ‘’ உங்கள் இராணுவச் சேவைக்காக நன்றி.’’
அந்தப் படைத்துறை  வீரர் அதை ஏற்றுத் தலையசைத்தார். வியப்பில் ப்ரைடியைப் பார்க்கத்தூண்டிய ஆவலை வில்லியம் அடக்கிக்கொண்டான். உங்கள் சேவைக்காக நன்றி தெரிவிக்கிறேன்? இப்படிச் சொல்வதற்கு அவள் எங்கே கற்றுக்கொண்டாள்?
திரு. டெய்லர், பூப்போட்ட ஆடையணிந்த பாமோடு அறைக்குள் திரும்பி வந்தார். அவர்கள் இருவரும் அமர்ந்தனர். ‘’தயாரா?’’ என அவர் கேட்டார்.
வில்லியமும் ப்ரைடியும் தலையசைத்தனர். பழக்கமாகிப்போன சடங்கினை அப்பா தொடங்கினார்.  ‘’நீங்கள், ப்ரைடி! கடவுளின் விதிகள் மற்றும் இந்த மாநில  அரசுச் சட்டங்களுக்குட்பட்டு இந்த மனிதரைச் சட்டப்படி  திருமணமான உங்கள் கணவராகப் பதிலி முறையில் ஏற்கிறீர்களா?’’
‘’நான் ஏற்கிறேன்.’’ என்றாள், ப்ரைடி,
திரையில் நட்டாலி  அழத்தொடங்கினாள்.
வில்லியம், அவன் முறைக்குப் பதிலளித்தான். அவனோடு இணைந்து   , அதே வார்த்தைகளை அமைதியாக ஆனால், ஒரு இறுகிய முகத்தோடு, டார்ரெனின் உதடுகள் அசைப்பதை அவன் கண்டான். ப்ரைடியின் அப்பா அவர்களைக் கணவன், மனைவியெனப் பிரகடனம் செய்தார். நட்டாலி கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சித்தாள்.
கையொப்பத்துடன்  தேதியிட்ட போது, வில்லியம்  அந்த இணையர் இருவரும் மகிழ்ச்சியோடிருப்பார்களென நம்பினான். டார்ரென் நல்ல இல்லறத்தைக் கட்டுவாரென அவன் நம்பினான். ப்ரைடியின் அப்பாவும் பாமும் மேஜையைச் சுற்றி வந்து புகைப்படக்கருவியின் முன் கையசைத்துப் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துப் பின்னர் ஆவணங்களுடன் வெளியே சென்றனர். திரையில் இணையர் பார்த்திருக்க வில்லியமும் ப்ரைடியும் தனிமையில் விடப்பட்டனர்.
‘’நீங்கள் இப்போது  திருமணமானவர்கள்.’’ ப்ரைடி கூறினாள். ‘’ நீங்கள் இப்போது  மணப்பெண்ணை முத்தமிடலாமெனக்  கூற விரும்புகிறேன்.’’
நட்டாலி தன்  கண் ஒப்பனையைக் கண்ணீரிலிருந்து  மீட்டுக்கொண்டிருந்தாள். ‘’என்ன, அந்தச் சேவையை நீங்கள் செய்வதில்லையா?’’
‘’இல்லை,’’ வில்லியம்  உறுதியாகச் சொன்னான்.
‘’ஓ, உம், அதைச்  செய்யுங்கள்,’’ என்றாள், நட்டாலி. ‘’ அதை முடித்துவிடுங்கள். நான் வழக்கமான நம்பிக்கைகளுடைய  ஒரு பெண். நல்லவேளை, நீங்கள்  அதிர்ஷ்டம் செய்தவர்கள், துடைப்பத்தைத்  தாண்டிக் குதிக்கச் சொல்லவில்லை.’’
வில்லியம் குழப்பத்துடன்  ப்ரைடியின் பக்கம் திரும்பி. ‘’ நாம் வேண்டுமானால் தாண்டிக் குதித்து……’’ என ஆரம்பித்தான்.
ஆனால், அது அப்படித்தான் நிகழ்ந்தது, காந்தத்தின்  ஈர்ப்புவிசை போல, மனித இதழ்கள்  அப்படி ஒரு நெருக்கத்தில்  இணைந்திராதது போல. வில்லியத்தின் கண்கள் மூடியிருந்தன. ஆம், அவன் ப்ரைடி டெய்லரை முத்தமிட்டுக்கொண்டிருந்தான். அது சொல்வதற்கு இயலாதது. அவள் இதழ்கள் மென்மையாக, வெதுவெதுப்பாக, ஏதோ ஒரு இனிய வாசனைப்பொருளொத்ததான மணத்துடன், ஒருவேளை, இஞ்சியாக இருக்கலாம். அவள் தலைமுடி….. .
‘’ முத்தம்  முடிந்தது. ப்ரைடி ஒரு குழப்பமான புதிர் போன்ற தோற்றத்துடன் அவனை நோக்கினாள். அவள் நாணத்திலிருந்தாள். அவளது கன்னங்களில் இளஞ்சிவப்பு பரவிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் காதுகள் சூடாகி, வேதனைமிக்க எரிச்சலளித்தன. அவை கடுஞ்சிவப்பாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியும்.
ஒரு மகிழ்ச்சிக்  கூக்குரல், கைதட்டும் ஒலியோடு எழுந்தது. வில்லியம் திரும்பிய போது, நட்டாலி அவர்களைப் பாராட்டிக்கொண்டிருந்ததைக் கண்டான். டார்ரென் முதல்முறையாகப் பல்லைக்காட்டிச் சிரித்தான். ப்ரைடி புகைப்படக்கருவி முன் சிறிது தலைவணக்கம் காட்டினாள்.
அவளுடைய அப்பா  உள்ளே வந்தார். இருவரும் ஏதோ குறும்பு செய்து மாட்டிக்கொண்ட  குழந்தைகளைப்போலத் தாமாகவே  எழுந்து நின்றார்கள். அவர்களின் நாற்காலிகள் மரத்தளமிட்ட தரையில் உரசிக் கிறீச்சிட்டன. அவர்கள் புதுமணத்தம்பதிகளிடம் போய்வருவதாகச் சொன்னார்கள், நன்றி, நல்வாழ்த்து அனைத்தும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ப்ரைடி கணினியை மூடத்தொடங்கினாள்,
திரு.டெய்லர்  வில்லியத்திடம் சிடுசிடுத்தார். ‘’ உன் காதுகளில் ஏதாவது பிரச்னையா?’’
வில்லியம் காதுகளைத்  தட்டிவிட்டுக்கொண்டான். ‘’ சில வேளைகளில் இப்படித்தான் சூடாகிவிடுகின்றன.’’ என்றான்.
திரு.டெய்லர்  ஏதோ சந்தேகப்படுவதுபோலத்  தோன்றினார். ஆனால், கணினியை  அவரது பைக்குள் வைத்துக்கொண்டு அகன்றார்.
அவர்கள் இருவரும் தனிமையிலானதும், ‘’உன் காதுகள்  இரண்டும் உண்மையிலேயே சிவந்துவிட்டன.’’ என்றாள், ப்ரைடி.
‘’அது அப்படித்தான் ஆகிறது.’’
‘’ எனக்கு நினைவிருக்கிறது.’’ என்றாள், அவள்.
‘’உனக்கு நினைவிருக்கிறதா?’’
அவள் தலையசைத்தாள். அவள் கைகளை உயர்த்தி சூடான  அவன் காது மடல்களில் அவளின் குளிர்ந்த விரல்நுனிகளை ஓடவிட்டாள்.
‘’தயவுசெய்து  அப்படிச் செய்யாதே, ப்ரைடி, என்னைப் பொம்மையாக்கி விளையாடாதே.’’ என்றான், அவன்.
‘’நானொன்றும்  அப்படியில்லையே.’’
‘’ நீ அப்படித்தான்.’’
‘’இதை நீ முதலிலேயே உணர்ந்தாயா?’’ அவள் கேட்டாள். ‘’ நாம் முதலில் …. அவர்கள் முத்தமிடுங்கள் எனக் கேட்டபோது?’’
‘’என்ன உணர்ந்தேன்?’’
‘’ ஏதோ ஒன்று, திடீரென்று! அப்படியாகிப் போனது..’’ அவள் சொன்னாள்.              ‘’ அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது போல.’’
‘’எனக்கொன்றுமில்லை..’’ அவன் குரல் கடுகடுப்பாக  ஒலித்தது.
‘’இல்லையா?’’ ஏமாற்றத்தைப் பிரதிபலிப்பதுபோலத் தோன்றினாள், அவள்.
அவன் தலையை  அசைத்து மறுத்தான். ‘’ அது  என்னோடு எப்போதுமே இருக்கிறது.’’ அவன் கால்கள் நடுங்கிக்  கொண்டிருந்தன.
அவள் சந்தேகத்தோடு சீறினாள். அம்மா சொன்னது  அவனுக்கு நினைவுக்கு வந்தது. ‘’ நீ அவள் மீது காதலாக இருக்கிறாயென்று  அவளுக்குத் தெரியாது.’’ அவன் கடுமை, ப்ரைடியை ஆத்திரம்கொள்ளச் செய்திருக்கலாம்.
‘’உண்மைதான்.’’ என்றான், அவன்.
அவள் கண்கள் உணர்ச்சிகளின் தாண்டவத்தில் உருண்டன. வியப்பு, பின் அன்பு, துக்கம், பின்னர் ஏதோ ஒன்று, மகிழ்ச்சி போலத்தோன்றியது. இளஞ்சிவப்பு `குப்`பென்று அவள் முகத்தில் மீண்டும் படர்ந்து, அவன் காதலில் விழுந்த அந்தப் பழைய ப்ரைடி டெய்லராகத் தோன்றினாள்.
‘’ நீ எப்படி யாரோ ஒருவனைத் திருமணம் செய்யலாம்?’’ அவன் கேட்டான்.
‘’நான்தான் சொன்னேனே’’ என்றாள், அவள். ’’ ஒரு பாம்பு என்னை மயக்கிவிட்டது.’’
‘’இதெல்லாம் மன்னிக்கக் கூடிய ஒன்றல்ல.’’
‘’எனக்கு அப்போது தெரியாதே.’’ அவள் சொன்னாள். ‘’ நான்…., எனக்கு…., வேறொன்றுமில்லை, எனக்குத் தெரியாது, அவ்வளவுதான்.’’
‘’ஆனால் இப்போது  தெரியுமா?’’
‘’ உம், தெரியும்.’’
‘’ நிச்சயமாகத்  தெரியுமா?’’
பதிலாக, அவள் அவனை அருகில் இழுத்தாள், மணப்பெண்ணை முத்தமிடுவதற்காக. வில்லியம் கைகளை அவள் பிடரிச்சுருள்களுக்குள் புதைத்தபோது, அதற்காகவே ஏங்கிக் காத்திருந்த அவள், அவனை அணைத்து நெருக்குவதை உணர்ந்தான். அவன் இதழ்கள் மீது அவளின் மெல்லிய இதழ்கள். இஞ்சி வாசம். நீண்ட காத்திருப்பு. அடக்கப்பட்ட துயரங்களுடன் எத்தனை வருடங்கள், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை. அழுதுவிடுவான் போலத் தோன்றியது. ஒருவருக்கொருவர் இணையாகச் சமமான அன்பு. இதுதானா அது? அது சரிக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதில்லை. அவன் எல்லாவற்றையும் நெருக்கமாக்கிக் கொள்வான்.
*
.
மெய்லி மெலாய்   (Maile Meloy)

இவர் ஒரு அமெரிக்கப் புனைகதைப் படைப்பாளர். மான்டனா  மாநிலம், ஹெலனாவில் 1972ல் பிறந்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புனைகதைப் படிப்பில் எம்.எப்,ஏ. பட்டமும் பெற்றவர். அவருடைய Aqua Boulevard என்ற கதைக்காக முதன் முதலில் பாரீஸ் ரெவ்யூவின் `ஆகா கான் விருதினை 2001ல் பெற்றார். இவரது படைப்புகள்:
1. Half in love : short stories, 2002.
2. Liars and Saints. Novel 2003.
3. A Family Daughter Novel, 2006.
4. Both ways is the only way I want it : Short stories 2009
5. The Apothecary : Novel, 2011.
இவரது முதல்  சிறுகதைத் தொகுப்பு Half in love பென் / மலாமட் விருதினை 2003ல் பெற்றது. 2007ல்  கிரந்தா இவரைச் சிறந்த அமெரிக்க நாவலாசிரியர்கள்  இருபத்தொருவர்` பட்டியலில் ஒருவராகச் சேர்த்தது. தற்போது  லாஸ் ஏஞ்செல்ஸில் வசிக்கிறார். இவரது கதைகள் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியாகின்றன. www.newyorker.com இணைய இதழில் 21. 05. 2012ல் THE PROXY MARRIAGE என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அவரது கதையே தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது..
மலைகள் இணைய இதழ் 2012, செப்டம்பர் 03 இல் வெளியானது. 

நூல் - வேட்டைக்கத்தி, ஆதி பதிப்பகம், தமிழில் ச.ஆறுமுகம் டிசம்பர், 2012 முதல் பதிப்பில் இக்கதையும் உள்ளது.  

No comments:

Post a Comment