Saturday, 16 January 2016

கனடா சிறுகதை - மலைமேல் வந்தது, கரடி. - THE BEAR CAME OVER THE MOUNTAIN BY ALICE ANN MUNRO

மலைமேல் வந்தது, கரடி. 

ஆங்கிலம் : ஆலிஸ் மன்றோ (கனடா) 

தமிழாக்கம் : ச. ஆறுமுகம்.

download (2)

(ஆலிஸ் ஆன் மன்றோ Alice Ann Munro   10 ஜூலை 1931 ல் பிறந்த கனடா நாட்டுப் பெண் புனைகதை எழுத்தாளர். கனடாவின்  புனைகதைகளுக்கான உயரிய பரிசான கவர்னர் ஜெனரல் அவார்டு இவருக்கு மூன்று முறை வழங்கப்பட்டுள்ளது. புனைகதைப் படைப்பில் அவருடைய வாழ்நாள் சாதனைக்காக 2009ல் மான் புக்கர் சர்வதேச விருது வழங்கப்பட்டது. நோபல் விருதுக்கான நிரந்தரப் போட்டியாளர் என்றும் குறிப்பிடப்படுகிறார். அவருடைய எளிதில் புரிகிற, வேகமாய் நகரும் கதைகள் மிகச் சாதாரண நடையில் மனிதச் சிக்கல்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்கின்றன. `மிகச் சிறந்த சமகாலப் புனைவு எழுத்தாளர்களில் மன்றோவும் ஒருவர்` என்பதை அவரது படைப்புகள் நிறுவியுள்ளன. இவர் `கனடாவின் செகாவ்` என அழைக்கப்படுகிறார். 1960 லிருந்து புனைகதைகள் படைக்கும் மன்றோ இதுவரையிலும் நாவல் எதையும் எழுதியதில்லை. அவரது சிறுகதைகள் குறைந்த பட்சம் முப்பது பக்கங்களுக்கும் அதிகமாகவே இருக்கின்றன. மன்றோவின் கதைகளில் நாவல்களுக்குரிய இலக்கிய ஆழமும் உணர்ச்சிப் பெருக்கும் இருப்பதாக பல திறனாய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர்.

வாழ்க்கையில் படைப்பாளர்கள் பலரும் காணாமல் விட்டுவிடுகிற சிறுசிறு நிகழ்வுகளையும் மன்றோ தனது படைப்புகளில் மிக நுட்பமாகப் பதிவு செய்கிறார். அவரது படைப்புகள் உலகத்தின் சிறந்த படைப்புகளோடு ஒப்புநோக்கப்படுகின்றன.



தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள The bear came over the mountain சிறுகதை `சாரா போல்லி ( Sarah Polley) என்ற பெண் இயக்குநரால் Away From Her என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டு 2006 டொரொன்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த திரைக்கதை வரிசையில் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

தமிழின் சிறந்த சிறுகதைப்  படைப்பாளர்களில் ஒருவரான  அ. முத்துலிங்கம் இவருடன்  நிகழ்த்திய நேர்காணல், காலச்சுவடு 83வது இதழில் (http://www.kalachuvadu.com/issue-83/interview.asp   வெளியாகியுள்ளது.)

******

ஃபியோனாவும் கிராண்ட்டும் பணிபுரிந்துகொண்டிருந்த நகரத்திலேயே  ஃபியோனா அவளது பெற்றோரின் வீட்டில் வசித்தாள். அது ஒரு விரியத்திறந்த சாளரங்கள் அமைந்த பெரிய வீடு. கிராண்ட்டுக்கு அந்த வீடு தேவைக்கதிகமான வசதிகளோடு, அதேநேரத்தில் மேஜை வார்னிஷின் மீது தம்ளர் அடிப்பாதங்களின் வட்டக்கறை படிந்து, மேடும்பள்ளமுமான தரைவிரிப்புகளுடன் ஒழுங்கற்றதாகத் தோன்றியது. அவளது அம்மா ஐஸ்லாந்து நாட்டுப்பெண். நுரைகளைப்போன்ற வெண்பஞ்சுத் தலைமுடி கொண்டவர். சீற்றம் கொள்ளும் தீவிர இடதுசாரி அரசியல்வாதியான அவர் ஒரு அதிகாரம் மிக்க பெண்ணாக இருந்தார். அப்பா  அதிமுக்கியமான இதயநோய் நிபுணராக மருத்துவமனையில் மிகவும் மதிக்கப்பட்டவராக, ஆனால், வீட்டில் மகிழ்ச்சியோடு அடங்கி, அடிபணிபவராக இருந்தார். அவரது மனைவியின் நீண்ட வசைமொழிகளைப் பொருட்படுத்தாத ஒரு புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பார்.

ஃபியோனாவுக்கு, அவளுக்கென  ஒரு சிறிய கார் இருந்தது. காஷ்மீரத்துக் கம்பளி ஆடைகளை ஒரு பேரடுக்காக வைத்திருந்தாள். ஆனாலும் அவள் எந்தப் பெண்கள் கழகத்திலும் உறுப்பினராக இல்லை. அதற்கு ஒருவேளை அவளது அம்மாவின் அரசியல் நடவடிக்கைகளே காரணமாக இருக்கலாம். அவள் அதுபற்றி அக்கறைகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மகளிர் கழகமென்பது அவளைப் பொறுத்தவரை ஒரு வேடிக்கையாக இருந்தது. அதுபோலவே அரசியலும் ஒரு வேடிக்கைதான். இத்தனைக்கும் அவள் தொலைபேசியில் `முற்றுகையிடும் நான்கு ஜெனரல்கள், ஏன், சிலநேரங்களில், பன்னாட்டினர்` விளையாட்டையும் விளையாடுவதுண்டு. அதிலும் யாராவது விருந்தினரை எரிச்சல்படுத்த நினைக்கும்போது அந்த விளையாட்டுகளை உரத்த குரலில் நிகழ்த்துவாள். அவளது சிகைக்கலைஞர் சுருள் முடிகளும் துயர முகமுமாகத் தோன்றும் ஒரு அயல்நாட்டவரென்றும் அவர் அங்கே அவ்வப்போது வந்து பணியாற்றுபவரென்றும் இரண்டோ மூன்றோ இளைஞர்கள் அங்கேயே தங்கிப் பணிபுரிவதாகவும் சொன்னாள். அவள் அவர்களை மட்டுமல்ல, கிராண்ட்டையும்கூடக் கேலி செய்வதுண்டு. அவருடைய சிறுநகர வார்த்தைகள் சிலவற்றைக் கோமாளித்தனமாகப் பேசிக்காட்டுவாள். போர்ட் ஸ்டேன்லி கடற்கரையில் ஒரு தணுப்பான பகல்வேளையில், இருவர் முகங்களிலும் மணற்துகள்கள் பிசுபிசுத்து ஒட்டியிருக்க, அவர்கள் காலடியில் நுண்ணிய கூழாங்கற்களை அலைகள்  கொணர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கையில், நாம் திருமணம் செய்துகொள்ளலாமாவென அவள் கேட்டபோது, அது ஒரு கிண்டலாக இருக்குமென்றுதான் அவர் நினைத்தார்.

‘’ இது ஒரு வேடிக்கை என்றா நினைக்கிறீர்கள்?’’ ஃபியோனா வெடித்தாள்.    ‘’ நாம் இருவரும் திருமணம் செய்துகொள்வது உங்களுக்குக் கிண்டலாகவா தெரிகிறது?’’

‘’ ஆமாம்,’’ அவர் அவளுக்குச் சரிசமமாகக் கத்தினார். அவளைப் பிரிந்திருக்க அவர் ஒருபோதுமே நினைத்ததில்லை. வாழ்க்கையின் பொறி, உயிர்த்துளி அவளிடமல்லவா, இருந்தது.

வீட்டைவிட்டுக் கிளம்புவதற்குச்  சற்றுமுன்பு, அவள் சமையலறைத்  தரையில் ஒரு கறையைக்  கண்டாள். அன்று அவள் முதன்முதலாக அணிந்திருந்த மலிவான கறுப்புநிறக் காலணிகளால்தான் அது ஏற்பட்டிருந்தது.

வர்ண மைதீட்டுங்கோல் பட்டது போலிருந்த அந்தக் கறையைத் துடைத்துக்கொண்டே, ‘’ அது இப்படியெல்லாம் ஆகாதென்று நினைத்தேன்’’ என வழக்கமான எரிச்சலும் புதிர்க்குழப்பமுமான குரலில் சொன்னாள். ‘’இதுமாதிரி இனிமேல் எப்போதுமே செய்யவேண்டியிருக்காது.’’ எனச்சொல்லிக்கொண்டே, அந்தக்காலணிகளை இனி  பயன்படுத்துவதில்லையென முடிவு செய்தாள்.

‘’எல்லாமே எப்போதும் நன்றாக இருக்கவேண்டுமென நினைப்பவள், நான்.’’ என்றவள், ‘’ பின்னே, அரைகுறையாகவா, உணவுவிடுதிகளில்  இருக்குமே அதுபோலவா.’’ என்றும்  சொல்லிக்கொண்டாள்.

துடைத்துக்கொண்டிருந்த கைத்துணியைப் பிழிந்து உதறி, அங்கணத்தொட்டியின் கீழிருந்த கதவைத்திறந்து, உள்ளிருந்த அடுக்குச் சட்டத்தில் தொங்கவிட்டாள். பின்னர் அவளுக்கென்றே அளவாகத் தைக்கப்பட்டிருந்த வெளிறிய மஞ்சள் அரைக்கைச்சட்டையை அணிந்து அதன் மேல் நீண்ட கழுத்துள்ள (turtled neck) வெள்ளை ஸ்வெட்டரும் அதன் மேல் உரோமக்குஞ்சம் தைத்த கழுத்துப்பட்டையுடனான பழுப்புச்செம்பொன் நிற மேற்சட்டையும் அணிந்தாள்.

அவள் நல்ல உயரம், ஒடுங்கிய தோள்கள். எழுபது வயதென்றாலும் உருண்டு நீண்ட கால்களும் ஒடுங்கி நீண்ட பாதங்களும், மென்மை பொருந்திய மணிக்கட்டுகளும், கணுக்கால் கரண்டைகளும், வேடிக்கையாகத் தோற்றமளிப்பதென்றாலும் அழகுச்சிறுகாதுகளுமாக நிமிர்ந்துநிற்கிற, அருமையாக வடிவமைந்த தோற்றம் கொண்டவள். அவளுடைய இளம்பொன்னிறத் தலைமுடி, நாணற்பூக்களின் மெல்லிழைக்கொத்தாக வெண்ணிறத்துக்கு எப்போது மாறியதென்றுதான் கிராண்ட்டால் கண்டுகொள்ள முடியவில்லை. அது இப்போதும் அவள் தோள்களில் படிந்து, நீண்டு, தொங்கிக்கொண்டிருக்கிறது, அவள் அம்மாவினுடையதைப் போலவே. (அதுதான் மருத்துவரின் வரவேற்பாளராகப் பணிபுரிந்த, சிறுநகர விதவையான அவரது அம்மாவுக்குச் சிறு கலக்கத்தைக் கொடுத்திருந்தது. ஃபியோனா அம்மாவின் நீண்ட வெண்ணிறத் தலைமுடி அவர்களின் வீட்டு நிலைமைக்கும் அதிகமாக, அவர்களின் மனநிலை, அணுகுமுறை பற்றியும் அரசியலைப்பற்றியும் நிச்சயித்துக்கொள்ளவேண்டுமென்று தோன்றியது.) மற்றபடி ஃபியோனா அழகிய உடலமைப்பும் சிறுநீலக்கண்களுமாக அவளது அம்மாவைப் போல் அல்லாமலிருந்தாள். அவளுடைய வாய் சிறிது கோணல் போலக் குவிந்திருக்கும். அதைச் சிவப்பு உதட்டுச்சாயம் தடவி கவனப்படுத்திக்கொள்வாள். வழக்கமாக வீட்டைவிட்டுக் கிளம்பும்போது,  அவள் கடைசியாகச் செய்வது, அதைத்தான்.

இன்று, அவள் எப்போதும் போலவே  இருந்தாள் – குறிப்பாக, நேரடியாகவும் பரந்துபட்டதாகவும்  உண்மையில் அவள் ஒரு இனிய முரணாக இருந்தாள்.

கடந்த ஒரு வருடமாகவே வீடு முழுதும் சிறுசிறு மஞ்சள்நிறக்  குறிப்புத் தாள்கள் பரவலாகக் கிடப்பதை கிராண்ட் கண்டார். அது ஒன்றும் முழுக்கமுழுக்கப் புதிதல்ல. எப்போதுமே ஃபியோனா, வானொலியில் கேட்கும் ஏதோ ஒரு புத்தகத்தின் பெயர் அல்லது அன்றைய தினத்தில் செய்து முடித்தேயாக வேண்டுமென்கிற சிலவேலைகளைக் குறிப்புகளாக எழுதிக்கொள்வதுண்டு. அவளது காலை வேலைகளைக்கூடக் குறித்துக் கொள்வதுண்டு.  அந்தக் குறிப்புகளில் தெளிவையும்  புதிர்த்தன்மையையும் அவர் ஒருசேரக் கண்டார் : 7.00 மணி – யோகா. 7.30 – 7.45 பல், முகம், தலைமுடி. 7.45 – 8.15 நடைப்பயிற்சி. 8.15 கிராண்ட் மற்றும் காலை உணவு.

இப்போதைய புதிய குறிப்புகள்  வேறுபட்டிருந்தன. அடுக்களையின் இழுப்பறைக்குள்ளிருப்பவற்றைத் தெரிவித்தன – கத்திரி, தட்டுகள் துடைக்கும் துணித்துண்டுகள், கத்திகள். இழுப்பறை மூடியை இழுத்துத் திறந்து, உள்ளே என்னென்ன இருக்கின்றனவென அவளால் பார்த்துக்கொள்ள முடியாதா, என்ன?

நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டிருந்தது. நகருக்குள்  சென்ற அவள், ஒரு தொலைபேசிக் கட்டண அறையிலிருந்து, வீட்டுக்கு எப்படி வரவேண்டுமென்று தொலைபேசியில் கிராண்டைக் கேட்டாள். வழக்கமான நடைப்பயிற்சிக்கு, வயல்களின் குறுக்காகச் சென்று, காட்டுக்குள் சென்றவள், மிக நீண்ட சுற்றுவழியில் வேலியோரமாக வந்தாள்; வேலிகள் உங்களை வேறெங்காவது கொண்டுபோய்விடுமென்பதால், கவனம் வைத்து,  ஒன்று, இரண்டு, என, எண்ணிக்கொண்டே வந்ததாகக் கூறினாள்.

அவளுடைய பிரச்னையைக் கண்டுகொள்வது மிகக் கடினமானதாக இருந்தது. அதிலும் வேலிபற்றியதைப் பெரிய வேடிக்கை போலக் கூறினாள். ஆனால், தொலைபேசி எண்களை எந்தச் சிக்கலுமில்லாமல் நினைவு வைத்திருந்தாள்.

‘’ இதில் கவலைப்படுவதற்கு  ஒன்றுமில்லையென்றுதான்  நினைக்கிறேன்.’’ என்றவள், ‘’கவனத்தைத்  தவறவிட்டு விடுகிறேனென்று நினைக்கிறேன்.’’ எனச் சமாதானம் சொன்னாள்.

தூக்கமாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறாளாவென அவர் கேட்டார்.

‘’ சாப்பிட்டேனா, எனக்குச் சரியாக நினைவில்லை.’’ என்றாள், அடுத்த கணம், மரியாதைக் குறைவாகப் பேசிவிட்டதாக வருத்தம் தெரிவித்தாள். ‘’நான் எந்த மாத்திரையும் சாப்பிடவில்லை. இனிமேல் சாப்பிடவேண்டும் போல. விட்டமின் மாத்திரைதான் சாப்பிட வேண்டும்.’’

வைட்டமின் மாத்திரைகளால்  பயன் ஒன்றும் இல்லை. அவள் கதவுநிலைகளினருகில் நின்றுகொண்டு எந்தப்பக்கம் போகவேண்டுமென்று யோசித்துக்கொண்டிருப்பாள். காப்பி தயாரிப்பானில்  தண்ணீர் ஊற்ற மறந்திருப்பாள். அல்லது காய்கறிகளை வேகவைப்பதற்காக அடுப்பில் வைத்த பின், நெருப்பேற்ற மறந்திருப்பாள். இந்த வீட்டுக்கு எப்போது வந்தோமென்று கிராண்டைக் கேட்பாள்.

‘’ அது போன வருடமா அல்லது அதற்கு முன் வருடமா?’’

‘’ ம்.. அது…. பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக.’’

‘’அப்படியா! ஆச்சரியமாக இருக்கிறதே.’’ அவள் அதிர்ந்தது போல் கேட்டாள்.

‘’ அவள் எப்போதுமே இதுமாதிரிதான்  எதையாவது செய்துவிடுகிறாள்.’’ என்றார், கிராண்ட் மருத்துவரிடம். ஃபியோனா ஆச்சரியப்படுவதும், வருத்தம் தெரிவிப்பதும், மன்னிப்பு கோருவதும் ஏதோ வழக்கமான கண்ணிய நடத்தை போல் தோன்றினாலும், ஏதோ ஒரு எதிர்பாராத தீரச்செயலைத் தற்செயலாகச் செய்துவிட்டது போன்ற, அல்லது உடனிருப்பவரும் சேர்ந்துகொள்வாரென்ற நம்பிக்கையில் ஒரு விளையாட்டைத் தொடங்குவது போன்ற தனிவகையான ஒரு களிப்புணர்வு, அவளுக்கு அதில் முற்றிலுமாக இல்லையென்று கூறிவிடமுடியாதென, அவர் மருத்துவருக்கு விளக்க முயன்றாலும், அவரால் அதில் வெற்றிபெற இயலவில்லை.

அவள் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குமாக, என்னபெயர் வைப்பதென்பது கடினமானதாகப் போய்விட்டது. தனியாகக் கடைகளுக்குப் போகாத ஃபியோனா, ஒருநாள் பேரங்காடி ஒன்றில், கிராண்ட் பின்னால் திரும்பிப் பார்ப்பதற்குள் காணாமற் போய்விட்டாள். சில மனைத்தொகுதிகள் தாண்டி சாலையின் நடுவில் நடந்துபோய்க்கொண்டிருக்கும்போது காவலர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டாள். அவளது பெயரை அவர் கேட்டபோது உடனேயே சொல்லிவிட்டாள். பின்னர் அவர் பிரதமரின் பெயரைக் கேட்டிருக்கிறார்.

‘’ அது தெரியாமல் நீயெல்லாம் இதுமாதிரியான பொறுப்புள்ள  பணியில் இருக்கக்கூடாது, இளைஞனே,’’ என்றிருக்கிறாள்.

அவர் பதிலுக்குச் சிரித்திருக்கிறார். ஆனால், அடுத்ததாக போரிசையும் நடாஷாவையும் அவர் பார்த்தாரா என்ற ஒரு கேள்வியைக் கேட்டுத் தவறு செய்தாள். அவையிரண்டும் அவள் பாதுகாப்பில் வளர்ந்து, இறந்துவிட்ட ருஷ்யவகை நாய்கள். ஒரு நண்பருக்கு உதவிசெய்வதற்காகப் பல வருடங்களுக்குமுன் அவற்றைத் தத்தெடுத்துப் பின்னர், அவற்றின் வாழ்நாள் முழுவதும் அவற்றுக்காகத் தன் நேரம், காலத்தையெல்லாம் செலவழித்தாள். அவளுடைய அம்மா இறந்தபிறகுதான், அவளுக்குக் குழந்தை பிறக்காதென்று தெரியவந்ததும் இந்த நாய்களைத் தத்தெடுத்ததும் ஒரேநேரத்தில் நிகழ்ந்தனவாகத் தோன்றுகின்றன. அவளுக்குக் கருப்பையில் ஏதோ ஒரு குழாயில் அடைப்பு இருந்ததோ அல்லது முறுக்கிக்கொண்டிருந்ததோ, கிராண்டுக்கு இப்போது சரிவர நினைவில்லை. அந்தப் பெண்ணின உறுப்பு குறித்து நினைத்துப் பார்ப்பதை அவர் எப்போதுமே தவிர்த்துவந்திருக்கிறார். அவள் அந்த நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும்போது, அவற்றின் நீண்ட கால்களும் பட்டுப்போல வழவழப்பான முடியும் ஒடுங்கி நீண்ட மூக்கும், மென்மையான ஆனால், சமரசத்துக்குத் தயாரில்லையென அறிவிக்கும் முகத்தோற்றமும் மிகப்பொருத்தமான இணைகளாக இருந்தன. பல்கலைக்கழகத்தில் கிராண்ட் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த அந்த நாட்களிலும் கிராண்ட்டைக்கூட சிலருக்கு அப்படித்தான் தோன்றியிருக்கும். (அரசியல் களங்கமிருந்த போதும் அவரது மாமனாரின் செல்வம் பெரிதும் வரவேற்கப்பட்டதாக இருந்தது) ஃபியோனாவின் அதீத உணர்ச்சிவசப்படுகிற சுபாவத்தினால் தேர்வுசெய்யப்பட்ட மற்றொன்றாக, அழகுபடுத்தி, கவனத்துடன் நன்கு பழக்கப்படுத்தி ஆதரவு காட்டப்படும் ஒன்றாகத்தான் சிலருக்குத் தோன்றியிருக்கக் கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக மிகப் பிற்காலம் வரையில் அவர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை.

டிசம்பர் மாதத்தில் மெடோலேக்கில் யாரையும் சேர்த்துக்கொள்வதில்லை  யென்று ஒரு விதிமுறை இருந்தது. விடுமுறைக்காலம் அதிகப்படியான உணர்ச்சிப் புதைகுழிகளாக இருந்தது. கடைசியாக சனவரியில் அவர்கள் இருபது நிமிட கார்ப்பயணம் மேற்கொண்டார்கள். நெடுஞ்சாலையை அவர்கள் அடையுமுன் ஊரகச்சாலை ஒரு சேற்றுப்பள்ளத்தில் மூழ்கிச் சென்றது. அது இப்போது உறைந்து கிடந்தது.

ஃபியோனா சொன்னாள், ‘’ ஓ, இப்போது  ஞாபகம் வருகிறது.’’

‘’ இப்போது நானும்கூட  அதைப்பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.’’ என்றார், கிராண்ட்.

‘’ அது, நல்ல நிலவு வெளிச்சத்தில்தான்  நடந்தது.’’ என்றாள், அவள்.

குளிர்காலத்தின் முதிர்ந்த  பருவத்தில் மட்டுமே சென்றடையக்கூடிய  இந்த இடத்தில் முழுநிலவொளியில்  கறுப்புக் கோடுகள் ஏற்பட்டிருக்கும் பனிப்படுகையில் நாங்கள் ஓரிரவு மேற்கொண்ட பனிச்சறுக்கினைப் பற்றித்தான் அவள் பேசிக்கொண்டிருந்தாள். குளிரின் தாக்கத்தில் மரக்கிளைகள் வெடித்துக் கீறும் சப்தத்தை, அவர்கள் அன்று கேட்டிருந்தனர்.

அவ்வளவு குறிப்பாகவும்  விபரமாகவும் மிகச்சரியாகவும்  அவளால் நினைவுகொள்ள முடிகிறதென்றால்  அவளிடம் பிரச்னை இருக்குமா, என்ன? இதனாலெல்லாம் அவர் அப்படியே திரும்பி காரை வீட்டைநோக்கிச் செலுத்திவிடமுடியாது.

அங்கேயிருந்த மற்றொரு  விதிமுறையைக் கண்காணிப்பாளர் அவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். முதல் முப்பதுநாட்களுக்கு அங்கே புதிதாகச் சேர்ந்தவர்களைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. (அந்த விதிமுறையைக் கொண்டுவருவதற்கு முன்) அவர்களாகவே விருப்பப்பட்டுச் சேர்ந்தவர்களிடம் கூட மன்றாட்டமும் கண்ணீரும் திடீர்க்கூச்சலும் இருந்தன. மூன்றாவது அல்லது நான்காவது நாளில் வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி இரங்கிக் கேட்பதும் விசனப்படுவதும் இருந்தது. சில உறவினர்களும் அதற்கு உடன்படுபவர்களாக இருப்பார்கள். ஆகக் கடைசியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் ஏற்கெனவேயிருந்ததைவிட எந்த ஒரு நல்லநிலையிலும் மீண்டும் அங்கு அழைத்துவரப்படுவதில்லை. ஆறுவாரம் அல்லது சில மாதங்களுக்குப் பிறகே அவர்களுடைய இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும்.

‘’ நாங்கள் பார்த்தவரையில், எங்களுக்குத் தெரிந்தது  அவர்களை முதல்மாதம் அவர்களே  கவனித்துக் கொள்ளுமாறு விட்டுவிட்டால், பின்னர் வழக்கமான அமைதிக்கும்  மகிழ்ச்சிக்கும் அவர்கள்  மீண்டுவிடுவார்கள்.’’

பல வருடங்களுக்கு முன் அவர்கள் மெடோலேக்குக்கு ஏற்கெனவே சிலமுறை திரு. ஃபார்குஹாரைப் பார்க்கச் சென்றிருக்கின்றனர். அவர், அவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரராக இருந்தார். அவர் ஒரு மணமாகாத விவசாயி. அவர், அந்தப் பழங்காலத்துச் செப்பனிடப்படாத செங்கல் கட்டு வீட்டில் தனியாக வசித்தார். அந்தவீடு, இருபதாம் நூற்றாண்டின் முதற் காலகட்டத்திலிருந்தே, ஒரு தொலைக்காட்சிப்பெட்டியும் குளிர்பதனப் பெட்டியும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருந்ததைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாதிருந்தது. இப்போது, திரு. ஃபார்குஹரின் வீடெல்லாம் போய்விட்டது. பதிலாகப் பகட்டுமிக்க ஆனால், உபயோகமற்ற ஒரு மாளிகை வந்திருந்தது. டொரோன்டோவிலிருந்து யாரோ சிலர் அதை வாரக்கடைசி வீடாக வைத்திருந்தனர். பழைய மெடோலேக் ஐம்பதுகளில் தான் ஆரம்பித்திருந்தாலும் ஃபார்குஹரின் வீட்டைப்போலவே, காணாமற் போய்விட்டது. ஆனால்,  இந்தப் புதிய கட்டிடம், நன்கு பரந்த இடவசதி, வளைவான மாடங்களோடு, இனிய `பைன்` மணம் மிக்க, மயக்கங்கொள்ளவைக்கிற காற்றோடும் இருந்தது. வழிக்கூடங்களில் பெரிய பெரிய சுடுமண் தொட்டிகளில் வளமான கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமை துளிர்த்திருந்தது.

அவளைப் பார்க்காதிருந்த, மிகநீண்ட, அந்த மாதத்தின் நாட்கள் முழுவதிலும் ஃபியோனாவோடு மெடோலேக்கை அவர் கண்டிருந்த காட்சிகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர் ஒவ்வொரு நாளும் கிரிஸ்டி என்ற அந்தச் செவிலியிடம் பேசிவிடலாமெனத் தொலைபேசியில் அழைப்பார். அவரது தொடர்ச்சியான விடா நம்பிக்கையும் உண்மையான அன்பும் கண்டு, அவள் சிறிது ஆச்சரியப்பட்டதாகத் தோன்றினாலும் அவள் மற்ற செவிலிகளைக் காட்டிலும் முழுமையான விபரங்களைத் தருபவளாக இருந்தாள்.

முதல் வாரத்தில் ஃபியோனாவுக்குத் தடுமன் பிடித்திருப்பதாகக் கிரிஸ்டி சொன்னாள். ஆனால் புதிதாக வந்தவர்களுக்கு அதொன்றும் வழக்கமற்றதல்ல என்றும் அவள் விளக்கமுரைத்தாள். ‘’ குழந்தைகள் முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்வதைப் போல,’’ என்றாள். ‘’ அங்கே மொத்தமாக நிறைந்திருக்கும் புதிய கிருமிகளின் கொட்டடிக்குள் அவர்கள் நுழையும்போது, கொஞ்சநாட்களுக்கு, அவர்கள் எல்லாவற்றையும் பற்றிக்கொள்கிறார்கள்.’’

அப்புறம் தடுமன் சரியாகப் போயிற்று. நுண்ணுயிர்க் கொல்லிகளிலிருந்து அவள் விலகிவிட்டாள். அங்கே வந்தபோது அவள் குழப்பமாக இருந்தது போலத் தெரிந்ததும் இப்போது இல்லையெனத் தோன்றுகிறது .(நுண்ணுயிர்க் கொல்லிகள் குறித்தும் குழப்பம் குறித்தும் கிராண்ட் இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறார்.) அவளுடைய செரிமானத் திறன் நன்றாகவே இருக்கிறது.   வெயில் விழும் திறந்த அறையில் அமர்வதில் அவள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதோடு, சிலரை நண்பர்களாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறாள் எனக் கிரிஸ்டி சொன்னாள்.

யாராவது தொலைபேசியில் அழைத்தாலும்  அவர் எடுப்பதில்லை. அதுவாகவே அடித்து ஓயட்டுமென விட்டுவிடுவார். அவர்  எப்போதாவது வெளிப்பழக்கத்தில் சந்திக்கின்றவர்கள், நெருக்கமான அண்டைவீட்டுக்காரர்கள் அல்ல; அவரைப் போலவே ஓய்வு பெற்றவர்கள்; அவர்கள் நாடு முழுவதும் வசித்தார்கள்; அவர்களும் தகவல் ஏதும் சொல்லாமலேயே வெளியூர் செல்பவர்கள்; அதுபோல, அவரும் ஃபியோனாவும் தற்போதைக்கு எங்காவது  வெளியூர்ப் பயணம் சென்றிருப்பார்களென அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.

கிராண்ட் உடற்பயிற்சிக்காகப் பனிச்சறுக்கு மேற்கொண்டார். நீலவிளிம்புப் பனி அலைகளால் சூழப்பட்ட கிராமப்புறமெனத் தோன்றுமாறு வானத்தை அழகுபடுத்திச் சிவக்கச்செய்துவிட்டு, கதிரொளி மறையும்வரையில் அவர் வீட்டுக்குப் பின்பக்கமிருந்த மைதானத்தில் பனிச்சறுக்கினார். பின்னர், இருண்டுகொண்டிருக்கும் வீட்டுக்குத் திரும்பிவந்து, தொலைக்காட்சியை இயக்கிச் செய்திகள் கேட்டுக்கொண்டே இரவு உணவு சமைப்பதில் ஈடுபடுவார். வழக்கமாக அவர்கள் இருவரும் சேர்ந்தே இரவு உணவைச் தயாரித்தனர். ஒருவர் பானங்களைத் தயார்செய்ய, மற்றவர் அடுப்பை கவனித்துக்கொள்ள, இருவரும் அவருடைய பணி ( அவர் நோர்ஸ் மதப் புராணங்களிலுள்ள ஓநாய்கள் பற்றி, அதிலும் குறிப்பாக உலக முடிவில் ஓடின் கடவுளை விழுங்கிவிட்ட மாபெரும் ஃபென்ரிர் ஓநாய் பற்றி ஆய்வு ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார்.) நாள் முழுதும் அவர்கள் இருவரும் சேர்ந்தே இருந்தாலும், ஃபியோனா வாசித்திருந்தவை, தனித்தனியாகச் சிந்தித்தவை, எனப் பேசிக்கொண்டேயிருப்பார்கள். அதுதான் அவர்களுடைய  உயிர்ப்புள்ள நெருக்கத்தின் பூரிப்பு மிக்க, உச்சநேரமாக இருந்தது. படுக்கைக்குச் சென்ற பின் ஐந்தோ, பத்தோ நிமிடங்கள் உடலின்ப சுகம் இருந்ததென்றாலும் அது எப்போதும் உடலுறவில் போய் முடிந்த தென்றில்லை; இருந்தாலும் பாலுணர்வு இன்னும் வற்றிவிடவில்லை யென்பதை அது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

கனவொன்றில் அவர், தன்னுடன் பணிபுரிபவர் ஒருவரிடம்  கடிதமொன்றைக் காட்டிக்கொண்டிருந்தார். அந்தக் கடிதம், கொஞ்சநாட்களாகவே அவர்  எந்த நினைவுமின்றி, முழுக்க மறந்திருந்த ஒரு பெண்ணின் அறைத் தோழியிடமிருந்து வந்திருந்தது.  அது புனிதத்தன்மையுடன்கூடிய அறவுணர்வு மிக்கிருப்பதான ஒரு போலித்தோற்றமும்,  குற்றம் சுமத்திப் பகையுணர்வுடனான மிரட்டலும்  கொண்டிருந்தது.  சிறந்த நாகரீகப்பண்புடன் அவரிடமிருந்து அவளாகவே பிரிந்து சென்ற ஒரு பெண்தான் அவள். என்றாலும் அவள் அப்படியாக இல்லையென்றும் அதையே ஒரு பெரும்பிரச்னையாக்கி, அதனாலேயே அவள் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாகவும் அதற்காக அவள் மேற்கொண்ட காரியங்களை அவருக்கு விலாவாரியாக எடுத்துரைக்கவும் முயற்சித்தது.

உடன் பணியாற்றும் அந்த நபரை நண்பராகவே அவர் நினைத்திருந்தார். பணிமுடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாகக் கழுத்துப்பட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, போதைமருந்தான டோப்பின் வாடையும் நறுமணத்திரியின் மணமும் கலந்து எழுமாறு கலைந்த தலைமுடியுடன் அலுவலகத்துக்கோ அல்லது வகுப்புக்கோ வந்த மயக்கும் இளம் காமக்கிழத்திகளுடன் தரையில் விரிக்கப்படும் மெத்தையில் இரவைக் கழிப்பதற்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் கணவன்மார்களில் அந்த நபரும் ஒருவராகவே இருந்தார். ஆனாலும் அவர் இப்போது அதை ஏற்காமல் மாற்று முடிவெடுத்தார்.

அந்த நபர் சிரித்ததாக கிராண்ட் நினைக்காதபோதும், ‘’ நானொன்றும் சிரிக்கமாட்டேன்.’’ எனக் கூறினார். அதோடு, ‘’ நானாக இருந்தால், ஃபியோனாவைத் தயார்படுத்த முயற்சிப்பேன்.’’ என்றும் சொன்னார்.

அதனால், கிராண்ட் மெடோலேக்கில் – பழைய மெடோலேக்கில் – ஃபியோனாவைக்  காணக் கிளம்பியவர், அதற்கு நேர்மாறாக ஒரு விரிவுரைக்  கூடத்துக்குச் சென்று சேர்ந்தார். அங்கே எல்லோரும் அவரது  வகுப்புக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அங்கே கடைசியாக இருந்த உயரமான வரிசையில்  கறுப்பு உடையணிந்து வெறுப்பு உமிழும் ஈட்டிக்கண்களுடன் அமர்ந்திருந்த துக்கம் அனுசரிக்கும் இளம் பெண்கள் அவரைக் கசப்புடன் வெறித்து நோக்குதலை அகற்றாமலிருந்ததோடு, அவர் சொல்கின்ற எதையுமே குறிப்பெடுக்காமல், அதுபற்றி எந்த அக்கறையும் இல்லையெனக் காட்டிக்கொள்வது போலிருந்தனர்.

ஃபியோனா முதல் வரிசையில்  எந்தச் சிக்கலுமின்றி அமர்ந்திருந்தாள். ‘’ அடப் …பூ, இவ்வளவுதானா,’’ என்றவள், ‘’ அந்த வயதில் பெண்கள் எல்லோருமே, அவர்கள் எப்படித் தற்கொலை செய்துகொள்ளப் போகிறார்கள் என்பதைத் தான் பேசித் திரிவார்கள்.’’ என்றாள்.

அவர் கனவிலிருந்தும் தன்னைத்தானே  வலிந்து இழுத்து, வெளியேறினார்; மாத்திரை எடுத்து விழுங்கினார்; கனவில் உண்மை எது, உண்மையில்லாத பகுதி எதுவென உட்கார்ந்து பகுத்துப் பார்த்தார்.

ஒரு கடிதம் என்னமோ வந்திருந்தது தான். அவரது அலுவலகக் கதவில் கறுப்புப் பெயிண்டில் `எலி` என்ற எழுத்துக்கள் திடீரெனத் தோன்றி, கூடவே அந்தக் கடிதமும் இருந்தது. ஒரு பெண் அவருடனான மோக உறவில் சிக்கி  தற்கொலை அவதிப்படுகிறாளென யாரோ ஃபியோனாவுக்குக் கூறியபோது, அவள் கனவில் கூறியது போன்றே கூறியிருந்தாள். அந்த உடன் பணியாற்றும் நபர் அங்கே வரவுமில்லை; யாரும் தற்கொலை செய்துகொள்ளவுமில்லை. கிராண்டுக்கு எந்த ஒரு அவமானமும் நிகழ்ந்துவிடவில்லை. ஒருசில வருடங்களுக்குப் பிறகு என்ன நிகழ்ந்திருக்குமென நீங்கள் எண்ணிக்கொள்வதுபோல் எதுவுமில்லை. அவர் எளிதாக, உண்மையில் மிக எளிதாக அதிலிருந்தும் விலக்கிக்கொண்டார். ஆனால், அந்தப் பேச்சு சுற்றிச் சுற்றி வந்ததுதான். உள்ளுக்குள் மறைந்திருந்தவை வெளிக்கிளம்பின. அவர்களுக்குள் கிறித்துமஸ் அழைப்புகள் இல்லை. புத்தாண்டு விழாக் காலமும் தனிமையில் கழிந்தது. கிராண்ட் குடிக்கத் தொடங்கினார். அவருக்கு அது தேவைப்படவில்லையெனினும் குடித்தார். நல்லவேளை, கடவுளுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும், பாவமன்னிப்பு என்ற தவறு ஏதும் நிகழாமலேயே ஃபியோனாவுக்கு ஒரு புதிய வாழ்க்கையை உறுதிசெய்தார்.

ஒரு காதல் பரத்தன், (அவருடைய கனவில் அவரைப் பழிகூறிய அந்த நபரைவிடப் பாதிதான் அவரது கதையென்றாலும், கிராண்ட் தன்னை அழைத்துக்கொள்வதெனில் அப்படித்தான் அழைத்துக்கொள்ள வேண்டும்) தனது வாழ்க்கையில் இத்தனை தியாகங்களும், பெருந்தன்மைச் செயல்களும் புரிந்ததாக இதுவரை வேறெந்தத் தகவலும் இல்லை. அவர் உணர்ந்த மற்றெல்லாவற்றையும்விட, அதிகமான அன்பை, அல்லது கண்மூடித்தனமான பாசத்தை ஃபியோனா மீது பொழிந்து, ஒரு பெண்ணின் பெருமைக்கு, அவளது எளிதில் உடையும் மென்மைக்கு ஒரு மகுடமாகப் பலமுறை திகழ்ந்திருக்கிறார். என்றாலும், அவர் தன்மானம் இழந்து, சுரண்டுவதாகவும், காயப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்படுவதையே கடைசியில் கண்டார். அவர் ஃபியோனாவை ஏமாற்றியது – அவர் அப்படிச் செய்திருக்கிறார்தான். ஆனால், மற்றவர்கள் அவர்களது மனைவிகளுக்குச் செய்திருப்பது போல, அவரும் செய்து, மேற்கொண்டும் அவளை விட்டுச் சென்றிருந்தால், நல்லதாக இருந்திருக்குமா? அதுபோன்ற ஒன்றை அவர் நினைத்ததே இல்லை. அவர் ஃபியோனாவைக் காதலிப்பதை என்றும் நிறுத்தவே இல்லை. அவர் ஒரு இரவுகூட, அவளை விட்டுத் தனியாகத் தங்கியதில்லை. வார இறுதி நாட்களில் சான்பிரான்ஸிஸ்கோவிலோ, அல்லது, மனிட்டோலின் தீவுக் கூடாரத்திலோ   கும்மாளமிட்டுக் கழிப்பதற்காகப் பொய்க்கதைகளை அவிழ்த்துவிட்டதில்லை. மது, டோப் எல்லாவற்றையும் அவர் மிக எளிதாகக் கடந்தார்; ஆய்வுகளைத் தொடர்ந்து வெளியிட்டார்; குழுக்களிலும் பணி புரிந்தார். அவரது பணியில் முன்னேறிக்கொண்டேயிருந்தார். மனைவி, குடும்பம், வேலை எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு, கிராமப்புறத்தில் போய்த் தச்சு வேலை, அல்லது தேனீ வளர்ப்பது போன்ற எண்ணங்கள் அவருக்குத் தோன்றியதேயில்லை.

ஆனால், கடைசியில் அதுபோன்ற ஒன்று நிகழ்ந்துவிட்டது. அவர் குறைந்த ஓய்வூதியத்துடன் முன் கூட்டியே ஓய்வு பெற்றார். ஃபியோனாவின் அப்பா, அந்தப் பெரிய வீட்டில் தனியாகக் குழப்பமும் விட்டேற்றியான ஒரு துறவு மனநிலையிலும் வாழ்ந்து, பின்னர், இறந்துபோனார். அவர், ஜார்ஜியன் குடா அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, வளர்ந்த அந்தப் பெரிய பண்ணை வீடு, சொத்துக்கள் எல்லாமும் ஃபியோனாவுக்கு உடைமையாகின.

அது ஒரு புதிய வாழ்க்கை. அவரும் ஃபியோனாவும் இணைந்து வீட்டைக் கவனித்தனர். அவர்கள் மராத்தான் பனிச்சறுக்கினார்கள். அவர்கள் எலலோரிடமும் மிக அதிகமாகப் பழகிவிடவில்லையென்றாலும் சிறிது சிறிதாக, நட்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். அங்கே தலைபிளக்கிற முகத்துதி இல்லை. விருந்துகளில் ஆணின் காற்சட்டைக்குள் காலைத் துளாவித்தடவி, மேலேறும் பெண்ணின் நிர்வாணக் காற்பெருவிரல்கள் இல்லை. ஒழுக்கங்கெட்ட மனைவிகளும் இல்லை.

சரியான நேரத்தில், அநியாய உணர்வு வடிந்துவிட்ட பொழுதில் கிராண்டால் சிந்திக்க முடிந்தது. பெண்ணியவாதிகளும், அவருடைய நண்பர்கள் என்றுசொல்லிக்கொள்ளும் அந்தக் கோழைகளும், (ஒருவேளை அந்தத் துயரமிக்க முட்டாள் பெண்ணும் அவர்களோடு சேர்ந்திருக்கலாம்.) அவரைச் சரியான நேரத்தில் பிடித்து இழுத்து வெளியே கொண்டுவந்துவிட்டனர். அந்த வாழ்க்கை உண்மையில் சொன்னால், நினைப்பதைவிடவும் மிகமிகத் தொந்தரவானது, இழிவானது. அதைத் தொடர்ந்திருந்தால், அதற்கு விலையாக அவர் ஃபியோனாவை இழக்க வேண்டியிருந்திருக்கும்.

அவர் மெடோலேக்குக்கு, ஃபியோனாவை  முதல்முறையாகப் பார்க்கப்  போகிற நாளில், அதிகாலையிலேயே விழித்துவிட்டார். இளமைக் காலத்தில், ஒரு புதிய பெண்ணை முதன் முதலாகச் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளின் காலைநேரத்தில் போல, அவர் உள்ளார்ந்த கிளர்ச்சி பொங்கும் உணர்வில் மிதந்திருந்தார். அந்த உணர்வு முழுக்க முழுக்கப் பாலுணர்வு மட்டுமே கொண்டதாக இல்லை. (பின்னாட்களில், அந்தச் சந்திப்புகள் வழக்கமானதாகிப் போனபின், முழுக்கமுழுக்க அதுவாகவே இருந்தது.) தேடலின் குறுகுறுப்பும் எதிர்பார்ப்பும், கூடவே தாழ்மை, நாணம் கலந்த மிரட்சி,  எச்சரிக்கை உணர்வும் இருந்தது. எல்லாமாகச் சேர்ந்து, அது ஒரு ஆன்மீக அனுபவத்தின் நீட்சியாகவே இருந்தது.

பனி இளகி இருந்தது. இன்னும் ஏராளமான பனி மீதமிருந்தாலும், முந்தையக் குளிர்காலத்தின் மினுமினுக்கும் கடினத்தரை நொறுங்கியிருந்தது. சாம்பல் நிற வானத்தின் கீழ் அந்தப் பொள்ளல் பனிக்குவியல்கள், வயல்களின் குப்பைகூளங்கள் போலத் தோன்றின.

மெடோலேக் அருகிலிருந்த நகரத்தில் அவர் ஒரு பூக்கடையைக்  கண்டுபிடித்து, ஒரு பெரிய  பூங்கொத்தை வாங்கினார். அதற்கு முன்பு அவர் ஒருபோதும் ஃபியோனாவுக்குப் பூக்களைப் பரிசளித்ததில்லை. வேறு எவருக்கும் கூடக் கிடையாது. அந்தக்கட்டிடத்தினுள் அவர் ஒரு நம்பிக்கையிழந்த காதலனைப்போல, அல்லது குற்ற உணர்வுள்ள கேலிச்சித்திரக் கணவனைப் போல நுழைந்தார்.

‘’ஆஹா, நார்சிஸ்சஸ்1, இவ்வளவு முன்னமேயேவா!’’ என்றாள், கிரிஸ்டி. ‘’ இருப்பதையெல்லாம் கொட்டிக் கொடுத்திருப்பீர்களே.’’ சொல்லிக்கொண்டே, அவள், அறைக்குள் அவரைத் தாண்டிச் சென்று, சமையல்கூடம் போன்றிருந்த ஒரு அறையில் பூங்கொத்துக் கிண்ணம் தேடி விளக்கைப் போட்டாள். அவள் மிகவும் குண்டான ஒரு இளம் பெண், தலைமுடியைத் தவிர மீதியெல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டுமென்று அசட்டையாக விட்டுவிட்டவள். அது பொன்னிறத்தில் அடர்த்திமிக்கதாக, காக்டெய்ல் பரிமாறும் பெண் அல்லது ஆடை கழற்றிக் கழற்றி ஆடும் பெண்ணின் ஒயிலுக்கும் மேலாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, நாளும் பணிபுரியும் முகமும் உடலுமாக இருந்தாள்.

‘’அங்கேதான்,’’ என்றவள், கூடத்தின்  கீழாகக் காட்டித் தலையசைத்து, ‘’பெயர்ப்பலகைக்கு வலது பக்கக் கதவு.’’ என்றாள்.

அது நீலப்பறவைகள் பொறித்து அலங்கரிக்கப்பட்ட பெயர்ப்பலகை. கதவைத் தட்டவேண்டுமா என நினைத்தவர், தட்டிவிட்டு, கதவைத் திறந்து, அவள் பெயரைச் சொல்லி அழைத்தார்.

அவள், அங்கே இல்லை. தனியறைக் கதவும் மூடியிருந்தது. படுக்கையும் தட்டிச் சீராக இருந்தது. படுக்கை அருகிலிருந்த மேஜையில் தண்ணீர் நிரம்பிய ஒரு தம்ளரும் ஒரு பெட்டி க்ளீனெக்ஸ்2 ( கைகால் துடைக்கப் பயன்படுத்தும் மென்தாள்கள்) தவிர வேறு எதுவுமில்லை. புகைப்படம் அல்லது வேறு படங்கள் மாதிரியான ஒன்றுகூட இல்லை. புத்தகம் அல்லது இதழ்கள் எதுவுமில்லை. ஒருவேளை அவற்றையெல்லாம் அதற்கான அலமாரியில் வைத்துக்கொள்ள வேண்டுமாக இருக்கலாம்.

அவர் செவிலியர் அறைக்குத் திரும்பிச் சென்றார். ‘’ இல்லையா?’’ என வியப்புடன் கிரிஸ்டி கேட்டது மேலெழுந்தவாரியானதென அவர் நினைத்தார். அவர் பூங்கொத்தைத் தாங்கிக் கொண்டு, தயங்கி நின்றார். அவள் ‘’சரி. நாம் பூங்கொத்தை இங்கேயே வைத்துவிடுவோம்.’’ என்றாள். அவர் என்னமோ முதல்நாளே பள்ளிக்குத் தாமதமாக வந்த குழந்தையென்பதைப்போல, ஒரு பெருமூச்சுவிட்டவள், அவரை அந்த அறைக்கும் கீழாக, பொதுக்கூட்ட இடம் போலக் கூரைவிளக்குகள் பொருத்தப்பட்டுப் பெரிதாக இருந்த  ஒரு மையமான பகுதிக்கு அழைத்துச் சென்றாள். அங்கு சிலர் சுவர் ஓரமாகச்  சாய்வு நாற்காலிகளிலும், மற்றவர்கள் தரைவிரிப்பு பரப்பியிருந்த பகுதியின் மத்தியிலிருந்த மேஜைகளிலுமாகவும் அமர்ந்திருந்தனர். அவர்களில் எவரும் மிக மோசமாகத் தோன்றவில்லை. வயதானவர்கள் – அதிலும் சிலர் சக்கர நாற்காலிகள் தேவைப்படுகிற அளவுக்கு மிகவும் தள்ளாதவர்கள் -  என்றாலும் நற்பாங்குடன் காணப்பட்டனர். ஃபியோனாவும் அவரும் திரு, ஃபார்குஹாரைப் பார்க்க அங்கு வந்திருந்தபோது, ஒரு முதிய பெண்ணின் கன்னத்தில் தாடி மயிர்கள், அழுகிய ப்ளம் பழம் போலத் துருத்திய கண்களுடன் ஒருவர், எச்சில் வழிதல், தலையாட்டம், பித்துப்பிடித்துத் தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் என நரம்புகளை உறையச்செய்யும் காட்சிகளைக் கண்டிருந்தனர். இப்போது வடிகட்டுகின்றனர்; மிக மோசமான நிலையிலுள்ளவர்களைச் சேர்ப்பதில்லை போலத் தெரிந்தது.

‘’ பார்த்தீர்களா?’’  என மெல்லிய குரலில் கேட்டாள், கிரிஸ்டி.‘’ மெல்ல அப்படியே போய் ஹலோ சொல்லுங்கள். அவளுக்குத் திடீர் அதிர்ச்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சும்மா, சாதாரணமாக அப்படியே போங்கள்.’’

சீட்டாட்ட மேஜை ஒன்றின்  மிக  அருகில், ஆனால், விளையாடாமல் அமர்ந்திருந்த ஃபியோனாவைப் பக்கவாட்டில் கண்டார், அவர். முகம் சிறிது உப்பித் தோன்றினாள்; கன்னத்து மடிப்பு ஒன்று அவள் வலதுபக்க வாயோரத்தை முன்னரில்லாத ஒரு கோணத்தில் மறைத்திருந்தது. அவள் நெருங்கியமர்ந்திருந்தவரின் விளையாட்டைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.  அவர், சீட்டுகள் அவளுக்கும் தெரியும்படியாகச் சாய்த்துப் பிடித்திருந்தார். கிராண்ட் மேஜையின் அருகில் சென்றபோது, அவள் தலையை உயர்த்திப் பார்த்தாள். அவர்கள் எல்லோருமே – மேஜையில் விளையாடிக் கொண்டிருந்த எல்லோருமே அதிருப்தியோடு தலையைத் தூக்கிப் பார்த்தார்கள். உடனேயே, எந்த இடையீட்டையும் அனுமதிக்க முடியாதென்பதுபோலச் சீட்டுகளை நோக்கிக் குனிந்தார்கள்.

ஆனால், ஃபியோனா அவளுடைய வழக்கமான வெட்கமும் திருட்டுத்தனமும் கலந்த, ஒரு பக்கமாகச் சாய்ந்த, இனிய புன்னகையோடு, அவளது நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, உதட்டின் மேல் ஒற்றைவிரலைக் காட்டிக்கொண்டே அவர் அருகே வந்தாள்; ‘’ ப்ரிட்ஜ்,’’ எனக் கண்கள் விரிய, அழுத்தமாக, ஆனால், ரகசியம்போல் சொன்னவள், ‘’ கொலைப் பழி. அவர்கள் அதில் வெறியோடிருக்கிறார்கள்.’’ என்றாள். அமர்ந்து பேசும் காபி மேஜையை நோக்கி அவரை அழைத்துச் சென்றவள், ‘’ கல்லூரியில் சிலநாட்கள் நான் அப்படியிருந்தது ஞாபகம் வருகிறது. நானும் தோழிகளும் வகுப்பைத் தவிர்த்துவிட்டுப் பொது அறையில் அமர்ந்து புகைத்துக்கொண்டே போக்கிரிகளைப் போலச் சீட்டாடுவோம். உங்களுக்கு என்ன கொண்டுவரச் சொல்லட்டும்? இங்கே காபி அவ்வளவு நல்லதாக இருக்காதேயென்றுதான் பார்க்கிறேன்.’’ என்றாள்.

க்ராண்ட் ஒருபோதும் தேநீர் குடிப்பதில்லை.

அவரால் எப்போதும்போல், இயல்பாக  அவளது தோளைச் சுற்றியணைக்க முடியவில்லை. அவளது புன்னகை மற்றும் குரல், அவருக்குப் பழக்கமானதைப் போலவேயிருந்தாலும், ஏதோ ஒன்று – அவள், அவரிடமிருந்து சீட்டாடுபவர்களைக் காக்க முயற்சித்ததும் அதுபோல, அவர்களின் அதிருப்தியிலிருந்து அவரைக் காக்க முயற்சித்ததும் – அதைச் செய்யமுடியாமலாக்கியது.

‘’ உனக்காகக் கொஞ்சம்  பூக்கள் கொண்டுவந்தேன்,’’ என்றவர். ‘’ அதைக் கொண்டு உன் அறையை அழகுபடுத்துவார்களென நினைத்தேன். உன்னுடைய அறைக்குச் சென்றேன், ஆனால், நீ இங்கிருக்கிறாய்.’’ என்றார்.

‘’ நல்லது, இல்லை. நான்தான் இங்கிருக்கிறேனே.’’ என்றவள், சீட்டாட்ட  மேஜையைத் திரும்பி நோக்கினாள்.

‘’ புதிதாக ஒரு நண்பரைக் கண்டு பிடித்துவிட்டாய்.’’ என்ற கிராண்ட், அவள் நெருக்கமாக உட்கார்ந்திருந்த நபரை நோக்கித் தலையசைத்தார். அந்த நேரத்தில் அந்த நபர் ஃபியோனாவின் பக்கம் நோக்கினார். கிராண்ட் குறிப்பிட்டதாலோ, அல்லது அந்த நபரின் பார்வையை முதுகில் உணர்ந்ததாலோ,  அவளும் திரும்பினாள்.

‘’ அது நம்ம ஆப்ரே, ‘’ என்றவள், ‘’ இதில் என்ன வேடிக்கையென்றால், அவரை வருடக்கணக்காக எனக்குத் தெரியும். அவர் கடையில் வேலை பார்த்தார். என் தாத்தா வழக்கமாக வாங்குகிற இரும்புச் சாமான்கள் கடை. நானும் அவரும் வழக்கமாகச் சுற்றிக்கொண்டிருப்போம். அவருக்கு, அதை என்னிடம் கேட்பதற்கான துணிச்சல் அப்போது இல்லை. கடைசி வாரமுடிவு வரைக்கும் அப்படியேதான். அவர் என்னைப் பந்து விளையாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அது முடிந்தபோது, என்னை வீட்டுக்குக் கூட்டிப் போகத் தாத்தா வந்துவிட்டார். நான் அப்போது கோடைகாலத்துக்காக அங்கே சென்றிருந்தேன். என் தாத்தா பாட்டியைப் பார்க்கப் போவது – அவர்கள் ஒரு பண்ணையில் வசித்தார்கள்.’’ என்ற போது கிராண்ட் இடையிட்டார்.

‘’ ஃபியோனா, உன் தாத்தா பாட்டி எங்கே வசித்தார்களென்று எனக்குத் தெரியும். அங்கேதான் நாம் வசிக்கிறோம். வசித்தோம்.’’

‘’ அப்படியா, உண்மையாகவா?’’ என்றாள், அவள் முழு கவனம் இல்லாமல். ஏனென்றால் அந்தச் சீட்டாட்ட நபர் அவளுக்குச் செய்திகளைக் கண்களால் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அது ஒரு பணிவான வேண்டுகோளாக இருக்கவில்லை; ஆனால், உத்திரவாக இருந்தது. அவர் கிராண்டின் ஒத்தவயதுடையவராக, அல்லது சிறிது மூத்தவராக இருந்தார். கத்தையான முரட்டு வெள்ளைமுடி அவரது நெற்றியில் படிந்துகிடந்தது. அவரது தோல் தடிப்பாக ஆனால் வெளிறி, மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் பழைய குழந்தைக் கையுறை போலச் சுருக்கங்களாகத் தோன்றியது. அவரது நீள முகம் மிகுந்த மதிப்போடு ஆனால், துயரத்துடன் காணப்பட்டது. வயதாகித் துணிவிழந்த ஒரு சக்திமிக்கதான குதிரையின் அழகு அவரிடம் இருந்தது. ஆனால், ஃபியோனா விஷயத்தில் அவர் துணிச்சலற்றவராக இல்லை.

‘’ நான் திரும்பிச் செல்வது  நல்லது,’’ என்ற ஃபியோனாவின்  முகத்தில்  புதிதாக உப்பிய கன்னங்களில் ஒரு கன்றிய சிவப்பு உதயமாகித் துலங்கித்தெரிந்தது. ‘’ நான் பக்கத்தில் இல்லாமல் அவரால் விளையாட முடியாதென்று நினைக்கிறார். அது முட்டாள்தனமானது; எனக்கு விளையாட்டு பற்றியெல்லாம் அவ்வளவாகத் தெரியாது. நான் போய்விட்டாலும் நீங்களே பார்த்துக்கொள்வீர்களில்லையா? இது எல்லாமே கொஞ்சம் வினோதமாகத்தான் தெரியும். ஆனால், இது எப்படிச் சீக்கிரம் பழகிப்போனதென்று, நீங்களே வியக்கப்போகிறீர்கள். ஒவ்வொருத்தரும் யார்யாரென்று தெரிந்துகொள்வீர்கள். ஒருசிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் மேகங்களுக்குள் புதைந்திருக்கிறார்கள், தெரிந்துகொள்ளுங்கள் – உங்களை அவர்கள் தெரிந்துகொள்வார்களென்று நீங்கள் எதிர்பார்க்கமுடியாது.’’

அவள் நாற்காலிக்குச் சென்று வழுக்கிய வாக்கில் அமர்ந்து ஆப்ரேயின் காதுகளில் எதையோ சொன்னாள். அவரது பின்னங்கை மீது அவள் விரல்களால் தட்டிக்கொண்டிருந்தாள்.

கிராண்ட் கிரிஸ்டியைச் தேடிச்சென்று கூடத்தில் சந்தித்தார். ஆப்பிள், திராட்சைப் பழச்சாறு நிரம்பிய பீங்கான் ஜாடிகள் இருந்த கைவண்டியைத் தள்ளிக்கொண்டிருந்தாள்.

‘’ நன்றாகத் தானே?’’ என்றாள், அவள்.

‘’ நான் யாரென்பதையாவது அவள் தெரிந்துகொண்டாளா?’’ என்றார், கிராண்ட். அவரால் தீர்மானிக்க முடியவில்லை. அவள் ஒருவேளை  வேடிக்கைக்காக அப்படி விளையாடியிருக்கலாம். அப்படிச் செய்யமாட்டாளென்றும் சொல்ல முடியாது. ஒருவேளை அவரை அங்குத் தங்கவந்திருக்கும் ஒரு புதிய நபரென்றே நினைத்துப் பேசிக்கொண்டிருந்து கடைசியில் அந்தப் பாவனை நினைப்பிலேயே தன்னைத்தானே தூரமாக விலக்கிக்கொண்டிருக்கலாம். அது ஒரு பாவனையாக இருந்தால்தான் அப்படி.

‘’ ஒன்றுமில்லை, நீங்கள்  அவளை ஒரு தவறான நேரத்தில்  சந்தித்தீர்கள். விளையாட்டில் மூழ்கியிருந்த நேரம்.’’

‘’ அவள் விளையாடக்கூட இல்லையே,’’ என்றார், கிராண்ட்.

‘’ ஆமாம். ஆனால், அவளுடைய நண்பர் ஆட்டத்தில் இருந்தாரே. ஆப்ரே.’’

‘’ யார் அந்த ஆப்ரே?’’

‘’ அதுதான் அங்கே இருந்தாரே. அவர்தான். ஆப்ரே. அவளுடைய நண்பர். உங்களுக்குப் பழச்சாறு பிடிக்குமா?’’

கிராண்ட் மறுத்துத் தலையசைத்தார்.

‘’ ஓ, பாருங்கள்,’’ என்ற கிரிஸ்டி, ‘’ இப்படியான ஒட்டுதல்களெல்லாம்  ஏற்படுவதுதான். கொஞ்ச நாட்களுக்கு அது அப்படிப் போகும். நல்ல உடன்பிறப்பு, தோழமை போன்ற வகையான ஒன்று. அது ஒரு காலகட்டம் மாதிரியான நிகழ்வு.’’

‘’ நீங்கள் சொல்வது, அவளுக்கு உண்மையிலேயே என்னை யாரென்று தெரியவில்லையென்கிறீர்களா?’’

‘’ அவளுக்குத் தெரியாமலிருக்கலாம். இன்று என்றில்லை. அப்புறம் நாளை – உங்களால் தெரிந்துகொள்ள முடியாது, முடியுமா? ஒருமுறைக்கு இரண்டு முறையென்று இங்கு வந்து போனீர்களானால், இது, இப்படித்தானென்று தெரிந்துகொள்வீர்கள். இதையெல்லாம் கவலைப்படும்படியாக எடுத்துக் கொள்ளாமலிருக்கப் பாருங்கள். நாளாக நாளாகப் பழகிவிடுவீர்கள்.’’

நாளாக, நாளாக. ஆனால் உண்மையில்  எதுவும் முன்னோ, பின்னோ மாறவில்லை. ஃபியோனா மற்றும் ஆப்ரேவின் நிலையை இயல்பான ஒன்றாக நினைக்கவும் முடியவில்லை. ஃபியோனா மட்டும் அவரது வருகைக்குப் பழகிக் கொண்டதாகத் தோன்றியது; அதுவும், அவள் மீது தனி அக்கறைகொண்ட யாரோ ஒரு விடாப்பிடியான பார்வையாளர் என்ற வகையில், அல்லது அவளது பழைய இணக்க உறவு விதிகளின் படி அவரைத் தடுக்கப்படவேண்டிய ஒரு தொந்தரவாகக்கூட ஒருவேளை நினைத்திருக்கலாம். அவர், ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக அவளது கணவராக இருப்பவரென அவள் புரிந்துகொள்கிறாளா? இப்படி ஒரு அவசியமான கேள்வியை அவர் கேட்டுவிட முடியாதபடி, ஒரு கவனந்திருப்புகிற, அதேநேரத்தில் சமூக இணக்கவகைப்பட்ட அன்புடன் நடந்துகொண்டாள். அப்படியான ஒரு கேள்வியைக் கேட்பதன் மூலம் அவளுக்கு இக்கட்டான நிலை – அவளுக்குமட்டுமல்ல, அவருக்குமேதான் – ஏற்பட்டுவிடுமென்ற எண்ணம் அவருக்குள் தோன்றியது.

விவசாயிகளுக்கு களைக்கொல்லி  மற்றும் அந்த வகைப்பட்ட  பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தின் உள்ளூர்ப்  பிரதிநிதியாக ஆப்ரே இருந்தாரென்றும், வயது முதிர்வுக்கு அல்லது பணிஓய்வுக்கு முன்பாகவே வழக்கமற்ற ஏதோ ஒரு உடல் பாதிப்புக்குள்ளானாரென்றும் கிரிஸ்டி கூறினாள்.

‘’வீட்டில், வழக்கமாக அவரது  மனைவிதான் அவரைப் பார்த்துக்கொள்கிறாள். ஒரு இடைவெளிக்காக, இங்கே தற்காலிக கவனிப்புக்காக விட்டுவைப்பாள். அவளுடைய சகோதரி, ஃபுளோரிடாவுக்கு வந்துவிடுமாறு அழைக்கிறார். பாருங்கள், அவளுக்கு ஒரு சரியில்லாத நேரம் – அவர்கள் இருவரும் விடுமுறைக்காகப் போயிருந்த ஏதோ ஒரு இடத்தில் இவர் ஏதோ ஒன்றை, பயமுறுத்துகிற மாதிரியான ஏதோ ஒன்றை வாங்கிக்கட்டி, கடுமையான பயங்கரக்காய்ச்சலில் கொண்டுபோய்விட்டிருக்கிறது? அப்படியே கோமாவில் கிடந்து, இப்படியாகிவிட்டார்.’’

பிற்பகல்களில் அநேகமாக  அவர்கள் இருவரையும் சீட்டாட்ட  மேஜையில் பார்க்கலாம். ஆப்ரேவுக்குத் தடித்த விரல்கள் கொண்ட பெரிய கைகள். அவரது கைகளில் சீட்டுகளை அடுக்காகப் பிடித்துக்கொள்வதில் அவருக்குச் சிரமம் இருந்தது. ஃபியோனா அவற்றைக் கலைத்துச் சரியாக வைக்க உதவினாள். சில நேரங்களில் அவரது பிடியிலிருந்து நழுவிச் சாய்கின்ற  சீட்டை நேராக்க அவள் விரைந்து பாய்ந்தாள். அறையின் குறுக்காக எதிர்ப்புறத்தில் அமர்ந்து, கிராண்ட், அவளது மீன்கொத்திப்  பாய்ச்சல்களையும் ஹிஹ்ஹி எனச் சிரித்து  மழுப்பி, மன்னிப்பு கோருதல்களையும் பார்த்துக்கொண்டிருப்பார். அவளின் முடிக்கற்றை ஆப்ரேயின் கன்னத்தை உரசும்போது கணவர்களைப்போன்ற அவரது  புருவச்சுழிப்புகளையும் அவர் பார்க்க நேர்ந்தது. அவள் தனக்கு நெருக்கமாக, அருகிலிருக்கும் வரையிலும், ஆப்ரே அவளைப் பொருட்படுத்தாமலே தான் இருந்தார்.

ஆனால் அவள் கிராண்டை முகமன் கூறி வரவேற்றுப் புன்னகைத்தால், அவருக்குத் தேநீர் வழங்குவதற்காக அவளது நாற்காலியைப் பின்தள்ளி எழுந்தால் – அவர் அங்கிருப்பதற்கான உரிமையை அவள் ஏற்பதாகக் காட்டுவது – ஆப்ரேயின் முகம் சுருங்கி ஒரு துயரங் கலந்த பீதியைக் காட்டத் தொடங்கிவிடும். அவர் கையிலிருந்து சீட்டுகள் நழுவித்  தரையில் விழுந்து ஆட்டத்தையே கெடுத்துவிடும். பின்னர் ஃபியோனாதான் விரைந்து சென்று எல்லாவற்றையும் சரிப்படுத்த வேண்டும்.

ஃபியோனாவும் ஆப்ரேயும்  சீட்டாட்ட மேஜையில் இல்லையென்றால். ஆப்ரே அறைக்கூடத்தின் கைப்பிடிக்கம்பியில் ஒரு கையும்  மறுகை ஃபியோனாவின் முழங்கை  அல்லது தோள்மீது பின்னிக்கொள்ளவுமாக  இருவரும் கூடத்திலேயே நடைப்பயிற்சி மேற்கொண்டிருப்பார்கள். சக்கர நாற்காலியிலிருந்து அவரை அவள் மீட்டுக்கொணர்ந்த விதம் அதிசயமானதென செவிலிகள் நினைத்தனர். கட்டிடத்தின்  ஒரு புறத்தில் செடிகொடிகள் வளர்க்கப்பட்டிருந்த கண்ணாடிக் காட்சியறைக்கு அல்லது மறுபுறமிருந்த தொலைக்காட்சி அறைக்கு, என அதிகத் தூரம் செல்லவேண்டியிருந்தால் மட்டும் சக்கர நாற்காலி தேவைப்பட்டது.

கண்ணாடிக் காட்சியறையில்  இருவரும் அதிகப் பசுமையும் அடர்த்தியுமான வெப்பமண்டலத் தோற்றமுள்ள செடிகள் – நீங்கள் விரும்பினால் ஒரு கொடிப்பந்தல் என்று வைத்துக்கொள்ளுங்களேன் – மத்தியில் ஒரு இருக்கையைக் கண்டுபிடித்து அமர்ந்திருப்பார்கள். சில நேரங்களில் அருகிலேயே பசுமையின் மறுபக்கம் கிராண்ட் நின்று கவனித்துக் கேட்டுக்கொண்டிருப்பார். ஃபியோனாவின் மெல்லிய பேச்சொலியும் சிரிப்பும் இலைகளின் சலசலப்பிலும் தண்ணீர் சிதறிவிழும் ஒலியிலும் கலந்து கேட்கும். பின்னர் ஒரு வகையான மகிழ்வொலி. ஆப்ரே பேசுவார், ஆனால் அநேகமாக அவரது வழக்கமான குரலாக ஒலிக்காது. அவர் இப்போது நெருக்கமான ஈரசைச்சொற்களாக ஏதாவது பேசுவார்.

உடம்பைப் பார்த்துக் கொள். அவர் இங்கேதான். என் அன்பே.

கிராண்ட் ஏதோ ஒன்றை  நினைத்து, அந்த முயற்சியில், அங்கு செல்வதை புதன்  மற்றும் சனிக்கிழமைகளாகக் குறைத்துக்கொண்டார். சனிக்கிழமைகளில்  விடுமுறை நாள் சந்தடியும் பதற்றமுமாக இருந்தது.. குடும்பம் குடும்பமாக வந்தனர். வழக்கமாக அம்மாக்கள் தாம் அவற்றுக்கெல்லாம் பொறுப்புத் தலைமை; அவர்கள் தாம் பேச்சுக்களை முன்னெடுத்துத் தொடரச் செய்தனர். ஆண்கள் அடக்க அடக்கப் பதின் பருவத்தினர் எதிர்த்துப் பேசினர். குழந்தைகளோ, பேரப்பிள்ளைகளோ எவருமே ஆப்ரேயைப் பார்க்க வந்ததாகத் தெரியவில்லை. பனிக்குழைம விருந்துகளுக்காக மேஜைகளை எடுத்துக்கொள்வதால் அவர்களால் சீட்டு விளையாடவும் முடியாது. அதனால் சனிக்கிழமை பகட்டுக்களில் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளாமல் தனித்திருந்தனர். கண்ணாடிக் காட்சியறை அவர்களுடைய இணக்கமான உரையாடல்களுக்குப் பொருத்தமில்லாமல் நெருக்கடி மிகுந்ததாக இருந்தது. ஆனாலும், அந்த உரையாடல்கள் ஃபியோனாவின் மூடிய அறைக்குள் தொடர்ந்துகொண்டுதானிருக்கும். கதவு சார்த்தியிருப்பதைக் காணும் கிராண்டுக்கு, சிலவேளைகளில் அங்கேயே அந்த டிஸ்னி – பாணி பெயர்ப்பலகையை உறுத்து, உண்மையில் சொல்வதானால் ஒரு கெட்டநோக்கமுடைய வெறுப்பில், பார்த்துக்கொண்டு நின்றாலும் கதவைத் தட்ட இயலவில்லை.

ஒருவேளை அவர்கள் ஆப்ரேவின்  அறையிலுமிருக்கலாம். ஆனால், அந்த அறை எங்கிருக்கிறதென்று அவருக்குத் தெரியவில்லை. இந்தக் கட்டிடத்தைச் சுற்றிவந்ததில் அவர் கண்டதெல்லாம் நடைபாதைக்கூடங்களும் அமர்வு வெளிகளும் சறுக்குப்பாதைகளுந்தான். அதோடு அங்கே அலைவதில் எங்காவது வழிதவறிவிடப்போகிறோமோவென அவர் நினைப்பதுண்டு. ஒரு சனிக்கிழமை சன்னல் வழியாக வெளியே பார்த்தபோது ஃபியோனா – அது அவளாகத்தான் இருக்கவேண்டும் -  ஆப்ரே அமர்ந்திருந்த சக்கரநாற்காலியை தற்போது பனிக்கட்டிகளும் துகள்களும் அப்புறப்படுத்தப்பட்டிருந்த நடைபாதை ஒன்றில் தள்ளிக்கொண்டிருந்ததைக் கண்டார். அவள் ஒரு  வேடிக்கையான கம்பளித் தொப்பியும் நீலமும் ஊதாவுமாகத் திரண்ட சுருள்களிட்ட  மேற்சட்டையும் அணிந்திருந்தாள். அதுபோன்றவற்றை பல்பொருள் அங்காடியில் உள்ளூர்ப் பெண்கள் அணிந்திருந்ததை அவர் கண்டிருக்கிறார். தங்களுடைய ஆடைகள் எவைஎவையென உணர்ந்துகொள்ள இயலாத பெண்கள் குறித்தும், சுமாராக ஒரே அளவிலான பெண்களின் துணியடுக்குகளைச் சரியாகப் பிரித்து வைப்பதிலும் இங்குள்ளவர்கள் அக்கறை கொள்ளாமலிருப்பதால்தான் இப்படியாகி யிருக்கவேண்டும். அவளுடைய தலைமுடியை வேறு வெட்டியிருந்தார்கள். அவளுக்கு தேவதைத்தோற்றம் தந்த சுருள்களை வெட்டியெறிந்து விட்டிருக்கின்றனர்.

ஒரு புதன்கிழமை, எல்லாமே  எப்போதும்போல் மிகச்சாதாரணமாக இருக்கும்போது, சீட்டாட்டம் மீண்டும் தொடர்ந்துகொண்டிருந்தபோது, கைவினைப் பொருட்கள் அறையில் பெண்கள் அழகுப்பொம்மைகளை அல்லது பட்டுப் பூக்களைச் செய்து கொண்டிருந்தபோது – ஆப்ரேயும் ஃபியோனாவும் மீண்டும் கண்ணில்படும்படியாகத் தெரியும்போது,  கிராண்டுக்கு அவரது மனைவியோடு இணக்கமான நட்புடன் நலம்விசாரித்துச் சாவதானமாகப் பேசுவதற்கு இயலும். அவர், ‘’ உன் தலைமுடியை ஏன் வெட்டிவிட்டார்கள்?’’ என அவளைக் கேட்டார்.

ஃபியோனா அப்படியாவெனத் தலையைத் தடவிப்பார்த்துவிட்டு, ‘’ ஏன் – நான் கவனிக்காமலிருக்க மாட்டேனே,’’ என்றாள்.

கிராண்ட் முதலில் ஆங்கிலோ – சாக்சன் மற்றும் நோர்டிக் இலக்கியம் கற்பிக்கத் தொடங்கியபோது அவரது வகுப்புகளுக்கெனத் தொடர்ச்சியாகப் பயிலுகிற  மாணவர்கள் இருந்தனர். ஆனால், சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு மாற்றத்தை அவர் கவனித்தார். திருமணமான பெண்கள் மீண்டும் கற்பதற்கு வரத்தொடங்கியிருந்தனர். ஏதாவது பணிக்காக, அல்லது இப்போதிருப்பதை விடவும் ஒரு சிறந்த பணிக்குத் தம்மைத் தகுதியாக்கிக்கொள்ளும் நோக்கமென்றெல்லாம் எதுவும் இல்லாமல் வழக்கமான வீட்டுவேலை மற்றும் பொழுதுபோக்கு தவிர்த்து வேறு ஏதாவது ஆர்வமூட்டுகிற ஒன்றைப்பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ளலாமே என்பதற்காக; வாழ்க்கையை மேலும் வளப்படுத்திக்கொள்வதற்காக; அது மட்டுமல்லாமல், ஒருவேளை அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த ஆண்கள், வழக்கமாக அவர்கள் சமைத்துக்கொடுத்து, கூடவே படுத்துக்கொண்டிருந்த ஆண்களைவிடவும் ஆர்வமூட்டுபவர்களாகவும் வியப்பூட்டுபவர்களாகவும் தோன்றி அவர்களுடைய வாழ்வை வளப்படுத்துவதில் பங்கெடுப்பவர்களாக மாறுவதும் இயற்கைதானே.

அவரது பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தவர்கள் ஸ்காண்டிநேவியப்  பின்புலம் கொண்டவர்களாக அல்லது வரலாற்று நாவல்களிலிருந்தோ வாக்னரிலிருந்தோ நோர்ஸ் மத புராணங்களைக் கற்றவர்களாக இருந்திருக்க வேண்டும். செல்டிக் தொடர்புள்ள எல்லாவற்றிலுமே ஒரு விசித்திர மயக்கம் கொண்ட ஒருசிலரும் அவர் செல்டிக் மொழி ஒன்றைக் கற்றுக் கொடுப்பதாக நினைத்துச் சேர்ந்திருந்தனர். அதுபோன்ற ஆர்வமுயற்சி கொண்டவர்களிடம் அவர் தனது நிலையிலிருந்து விட்டுக்கொடுக்காமல் கறாராகத் தீர்மானமாகப் பேசினார்.

‘’ ஒரு நல்ல அழகான மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமென நீங்கள் விரும்பினால் அதற்கான நபரிடம் ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் நீங்கள்   மெக்சிகோவுக்குப் போவதாக இருந்தால் அங்காவது அதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.’’

சிலர் அவரது எச்சரிக்கையை ஏற்றுக் கழன்றுகொண்டனர். மற்றவர்கள்,  அதிகாரத்துடன் கோரும் அவரது தொனியால், தனிப்பட்ட முறையில் கவரப்பட்டது போல் தோன்றியது. அவர்கள் உறுதியோடு உழைத்து, அவர்களது முழுமலர்ச்சியுற்ற பெண்மை இணக்கச் செயல்பாட்டின் மாபெரும் அற்புதப் படைப்பு மலர்களை அவரது அலுவலகத்திற்கு, அவரது ஒழுங்கு முறைப்பட்ட திருப்திகர வாழ்க்கைக்குள் ஏற்கப்படுமோவென்கிற நடுங்கும் நம்பிக்கையோடு எடுத்துவந்தனர்.

அவர் ஜேக்யி ஆடம்ஸ் என்ற பெண்ணைத் தெரிவுசெய்தார். அவள் ஃபியோனாவுக்கு நேர் எதிராக – கட்டை குட்டையாக, திண்டுத் தலையணை போல, கறுப்புக் கண்களில் உணர்ச்சிகளை வெளிக்கொட்டுகிறவளாக இருந்தாள். இது, முன்னர்த் தெரியாத ஒரு முரண்பாடுதான். இந்தத் தொடர்பு ஒரு வருடத்துக்கு, அவளது கணவர் இடமாறுதலாகும் வரையிலும் நீடித்தது. அவளுடைய காரிலிருந்து அவர்கள் விடைபெறல் வாழ்த்து தெரிவிக்கும் போது, அவள் கட்டுப்படுத்தமுடியாமல் குலுங்கத் தொடங்கினாள். அது  வெப்பக் குறைபாட்டு ஹைப்போதெர்மியா போல இருந்தது.  அவளிடமிருந்து அவருக்குச் சில கடிதங்கள் வந்தன. ஆனால், அவற்றின் தொனி அதிக உணர்ச்சிவசப்பட்டதாகத் தோன்றவே, என்ன பதிலெழுதுவதென அவரால் தீர்மானிக்க முடியாமலிருந்தது. அவள் அதிலிருந்தும் மீள்வதற்குக்  காலம் தான் பதில்சொல்ல வேண்டுமென அப்படியே விட்டுவிட்டார். ஆனால், அதற்கிடையில் ஏதோ மந்திரம்போல் எதிர்பாராதபடி ஜேக்யியின் மகள் வயதிருக்கக்கூடிய ஒரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுவிட்டது.

ஜேக்யியோடு அவர் நெருக்கமாக இருக்கும்போது, அதைவிட மோசமான மற்றொரு விரும்பத்தகாத குழப்பம் உருவாகியது. அவரது அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்த மலிவான ரப்பர் காலணிகள் அணிந்த, நீளத்தலைமுடி கொண்ட இளம் பெண்கள் தாங்களும் பாலுறவுக்குத் தயாரெனச் சமிக்ஞை காட்டினர். ஜேக்யியிடம் அவர் காட்டிய மென்மை கலந்த உணர்வுகளும் எச்சரிக்கையான அணுகுமுறையும் வெளியே கசிந்தது. பலருக்கும் நிகழ்ந்தது  போலவே அவரையும் ஒரு சுழற்காற்று தாக்கியது.

வேதனைமிக்கவகையில், நாடகபாணி அவதூறுகள் எங்கும் வெடித்துச் சிதறின. ஆனால், அதுவும் ஒருவகையில் நல்லதென்ற உணர்வும் ஏற்பட்டது. அதன் விளைவாகப் பழிவாங்கல்களும் வேலையை விட்டுத் துரத்துதலும் நிகழ்ந்தன. அப்படித் துரத்தப்பட்டவர்கள் இன்னும் சிறியதான, அதிக சகிப்புத் தன்மையுள்ள கல்லூரிகளுக்கோ திறந்தவெளிக் கல்வி நிலையங்களுக்கோ கற்பிக்கச் சென்றனர். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, அவர்களது ஆண்களைச் சபலத்துக்குள்ளாக்கிய பெண்களைப்போல நடை, உடை, பாவனையணிந்து  அவர்களைச் சவாலாக எதிர்கொள்ள விரும்பாத பல மனைவிகளும் பின்தங்கி விட்டனர். பல்கலைக் கழக விருந்துகள் வழக்கமாக எதிர்பார்த்ததைப் போலவே ஒரு சுரங்க வாய்ப்பானது. ஒரு தொற்றுநோய் வெடித்து, ஸ்பானிஷ் காய்ச்சலைப் போல எங்கும் பரந்தது. இம்முறை மக்கள் தொற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள், பதினாறுக்கும் அறுபதுக்கும் இடைப்பட்டவர்களில் யாருமே அது தொற்றாமலிருக்கவேண்டுமென விரும்பவில்லை போலவே தோன்றியது.

இது கொஞ்சம், அதிகப்படியான மிகைப்படுத்தல்தான். ஃபியோனா மிக்க ஆர்வத்தோடேயே இருந்தாள். கிராண்டும் எல்லைதாண்டிவிடவில்லை. வாழ்க்கை வசதிகளில் ஒரு மாபெரும் உயர்வினை அவர் முக்கியமானதாக உணர்ந்தார்.  பன்னிரண்டு வயதிலிருந்தே, அவருக்கிருந்த உப்பிப் பெருக்கும் ஆர்வம் மறைந்துவிட்டது. அவர் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டினார். முன்னெப்போதுமில்லாதபடி, அவர் அலுவகச் சாளரம் வழியே, குளிர்காலக்  கதிர் மறையும் அந்திவானத்தை, மேகங்களின் ஊர்வலத்தை, பக்கத்து வீட்டின் வசிப்பறைத் திரைகளினூடே மினுங்கும் பண்டைக்காலப் பாரம்பரிய விளக்குகளின் அழகினை, பூங்காவின் குன்றில், நாள் முழுதும் நீண்ட சறுக்குக் கட்டைகளில் சறுக்கிவிளையாடியும், இருட்டிய பின்னருங்கூட விட்டுச் செல்ல மறுத்து அழும் குழந்தைகளின் சப்தங்களை ரசித்தார். வசந்தகாலம் வந்தபோது பூக்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டார். தொண்டைப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு கிட்டத்தட்ட குரலிழந்துவிட்ட அவரது மாமியாரால் பயிற்சியளிக்கப்பட்ட பின்னர், அவர் தனது வகுப்பில், எரிக் பிளட்-ஆக்ஸ்3 அரசனை, அவனால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஸகால்டிக் வீரநிலைக் கவிஞன் புகழ்ந்து இயற்றிய `தலைக்கு விலை4` என்ற  கம்பீரம் மிக்கக் குருதிபடிந்த ஐஸ்லாந்து கவிதையினை வரிக்குவரி மனப்பாடமாகச் சொல்கின்ற சிக்கலான பணியையும் மேற்கொண்டார்.

ஃபியோனா ஐஸ்லாந்து மொழியினை ஒருபோதும் கற்கவில்லை; அந்த மொழி தனக்குள் போற்றிப் பாதுகாக்கிற கதைகளை-  கிராண்ட் கற்பிப்பதும் எவற்றைப்பற்றி எழுதுவதுமாயிருக்கிறாரோ, அதே கதைகளின் மீது  அவ்வளவாக மதிப்பினை வெளிக்காட்டியதுமில்லை. அந்தக் கதை நாயகர்களை அவள், `பழங்காலத்து என்ஜால்` அல்லது பழங்காலத்து ஸ்நோர்ரி` எனக் குறிப்பிடுவாள். ஆனால், கடைசிச் சில வருடங்களில் அந்த நாட்டின் மீது ஆர்வம்கொண்டு பயணக்குறிப்புகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டி நூற்களைப் படிக்கத் தொடங்கியிருந்தாள். அவள் வில்லியம் மோரீஸ் மற்றும் ஆடென் பயணங்கள் குறித்து வாசித்திருந்தாள். என்றாலும் அங்கே செல்லவேண்டுமென உண்மையில் திட்டமெதுவும் கொண்டிருக்கவில்லை. அவள் சொல்வாள் : உங்களுக்கு, ஒரு இடத்தைப்பற்றி எப்போதும் சிந்திக்கவும், தெரிந்துகொள்ளவும், அங்கே செல்வதற்கென நெடுநாள்  ஆவல்கொள்ளவும், ஆனால் அதை ஒருபோதும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காத மாதிரி மலை, கடல், பாலை, ஆறு, ஊர், நாடு என ஏதாவதொன்று இருந்தேயாக வேண்டும்.

அதற்கென்றில்லாவிட்டாலும், அடுத்த முறை கிராண்ட் மெடோலேக் சென்றபோது, அவர் கண்ணில் பட்டதும், ஐஸ்லாந்துப் பயணியான ஒரு பெண் படைத்ததும், பத்தொன்பதாம் நூற்றாண்டு நீர்வண்ணம் தீட்டியதுமான ஒரு புத்தகத்தை ஃபியோனாவுக்காக  எடுத்து வந்தார். அது ஒரு புதன்கிழமை. அவளைத் தேடிச் சீட்டாட்ட மேஜைக்குச் சென்றார். ஆனால், அவள் அங்கு இல்லை. ஒரு பெண் அவரை அழைத்து, ‘’ அவள் இங்கு இல்லை. அவளுக்கு உடம்பு சரியில்லை.’’ என்றாள்.

அவளது குரல் அதன் முக்கியத்தைத் தெரிவிப்பதாகவும் ஒரு எழுச்சியோடும் – அவருக்கு அவளைப்பற்றி எதுவும் தெரியாத போதும் அவரை இன்னாரெனக் கண்டுகொண்டதன் திருப்தியோடு ஒலித்தது. ஒருவேளை அவளுக்கு ஃபியோனாவைப் பற்றி, அங்கே அவளது வாழ்வைப்பற்றி, அவருக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரியுமென்றும் திருப்தி கொண்டிருக்கலாம்.

‘’ அவரும் இங்கே இல்லை,’’ என்றும் கூடுதலாகவும் தெரிவித்தாள்.

கிராண்ட் கிரிஸ்டியைப் பார்க்கக் கிளம்பினார்; அவளுக்கோ அதற்கான நேரம் இல்லை. அவள் அங்கே முதன் முதலாக வந்திருந்தது போலத்தோன்றிய  அழுது முகம்வீங்கிய ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருந்தாள்.

ஃபியோனாவுக்கு என்னவாயிற்றென  அவர் கிரிஸ்டியைக் கேட்டபோது,     ‘’உண்மையில் எதுவுமில்லை, ஒரு சின்னக் குழப்பத்தில், கொஞ்சம் கலங்கி, இன்று ஒரு நாள் மட்டும் படுத்திருக்கிறாள். ’’ என்றாள்.

ஃபியோனா படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். அந்த அறைக்கு வந்திருந்த சில தடவைகளிலும் அது ஒரு மருத்துவமனைப் படுக்கையென்றும் அதனை அப்படியாக மடக்கிக் கொள்ள முடியுமென்றும் அவர் கவனித்திருக்கவில்லை. உயரமான கழுத்துப் பட்டையுடன்  இளமையாகக் காட்டும் அவளுடைய கவுன்களில் ஒன்றை அணிந்திருந்தாள். ஏதோ ஒரு மாவு பூசியிருந்தது போல அவளது முகம் வெளிறியிருந்தது.

ஆப்ரே அவரது சக்கர நாற்காலியைப் படுக்கையை ஒட்டி எவ்வளவு  முடியுமோ அவ்வளவு அருகில்  கொண்டு நிறுத்தி அதில் உட்கார்ந்திருந்தார். அவர் வழக்கமாக அணிகிற கழுத்தேயில்லாமல் திறந்த சட்டைகளுக்குப் பதிலாகக், கழுத்துப் பட்டியும் மேற்சட்டையுமாக முக்கியமான வேலையாக வெளியே செல்லவிருப்பதுபோல் தோன்றினார். அவருடைய, நேர்த்தியாகத் தோற்றமளிக்கும் கனத்த கம்பளித்துணியாலான தொப்பி படுக்கைமீது ஓய்விலிருந்தது.

அவர் என்ன செய்துகொண்டிருந்தாரோ, அதனாலேயே தொய்ந்து போனவராகக் காணப்பட்டார். அவரது முகமுங்கூடக் கறுத்திருந்தது.

அவர்கள் இருவரும், கல்லாக இறுகிப்போனத் துயர முகத்துடன் கிராண்டை ஏறிட்டு நோக்கிய பயந்த தோற்றம், அவரை இன்னார்தானெனக் கண்டதும், வரவேற்பதாக இல்லாவிடினும்,  ஒரு ஆறுதல் உணர்வாக மாறியது. அவர்கள் நினைத்த நபராக அவர் இல்லாமலிருந்தார். அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு விட்டுவிடாமலிருந்தனர்.

தொப்பி படுக்கைமீதிருந்தது. கழுத்துப்பட்டி, மேற்சட்டை.

ஆப்ரே அங்கு இருக்கமாட்டார் என்பதல்ல, பிரச்னை. அவர் எங்கே, யாரைப்பார்க்கச் சென்றிருந்தாரென்பதும் கேள்வியல்ல. அவர் இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறார் என்பதுதான் முண்டிக்கொண்டுநிற்கிறது.

கிராண்ட் புத்தகத்தைப்  படுக்கையில் ஃபியோனாவின் வெறுமனேயிருந்த கையருகில் வைத்தார்.

‘’ இது ஐஸ்லாந்து பற்றியது.’’ என்ற அவர், ‘’ இது உனக்குப் பிடிக்குமே என்று நினைத்தேன்.’’ எனச்சொல்லிவிட்டு அவளை நோக்கினார்.

‘’ ஏன் அப்படி, நன்றி.’’ என்றாள், அவள். ஆனால் புத்தகத்தின் பக்கம் திரும்பவே இல்லை.

‘’ ஐஸ்லாந்து,’’ என்றார், மீண்டும்.

அவளும், ‘’ஐஸ் – லாந்து’’ என்றாள். முதல் அசையில் ஒரு துளியளவுக்கு உற்சாகம் இருந்தது; ஆனால், இரண்டாவது அசை சொத்தென விழுந்தது. அப்படியானது ஏனெனில், அப்போது, ஆப்ரே, அவரது பெரிய கனத்த கையை அவளிடமிருந்தும் இழுத்துக்கொண்டிருந்தார்.

‘’ ஏன் இப்படி?’’ என்றாள், அவள். ‘’ என்ன விஷயம், அன்பு இதயமே?’’

அவள் அப்படியான, ஒப்பனைத் தொடர்களைப் பயன்படுத்துவதை ஒருபோதும் கிராண்ட் கண்டதில்லை.

‘’ ஓ, சரி, சரி.’’ என்றாள், அவள். ‘ ஓ, இதோ, இங்கே.’’ என்றவள் படுக்கை அருகிலிருந்த பெட்டிக்குள்ளிருந்து ஒரு கைப்பிடி க்ளீனெக்ஸ் மென்தாள்களை உருவியெடுத்தாள். ஆப்ரே அழத்தொடங்கினார்.

‘’இங்கே. இங்கே பாருங்கள், இதோ,’’ என்றவளிடமிருந்து ஆப்ரே அவரால் இயன்ற அளவுக்கு க்ளீனெக்ஸ் தாள்களை எடுத்து அவரது முகத்தைக் கோணல்மாணலாக்கிச் சில முறை துடைத்துக்கொண்டார். அவர் அப்படி, அதில் ஈடுபட்டிருக்கும்போது, ஃபியோனா கிராண்டின் பக்கம் திரும்பினாள்.

‘’  இங்கே உங்களுக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமா? எதையாவது செய்யமுடியுமா? இங்கே உள்ளவர்களிடம் நீங்கள் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்….’’ எனக் கிசுகிசுத்தாள்.

ஆப்ரே, களைப்பின் காரணமாகவோ அல்லது வெறுப்பின் காரணமாகவோ ஒரு எதிர்ப்புச் சத்தம் எழுப்பினார். பின்னர், அவர் அவள் மீது தன்னை வீழ்த்திக்கொள்ள விரும்புவது போல அவரது உடலின் மேற்பகுதி முன்பக்கமாகச் சாய்ந்தது. அவள் படுக்கையைவிட்டுப் பாதியளவுக்கு முன்நகர்ந்து அவரைப் பிடித்துக்கொண்டாள். அவளுக்கு உதவுவது விவேகமல்ல என்பதுபோல கிராண்டுக்குத் தோன்றியது.

‘’உஷ்,’’ என்ற ஃபியோனா, ‘’ ஓ, தேனே. உஷ். நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வோம். அதை நாம் செய்தேயாக வேண்டும். நான் அங்கு வந்து உங்களைப் பார்ப்பேன். நீங்கள் இங்கு வந்து என்னைப் பார்ப்பீர்கள்.’’

ஆப்ரே அதே சப்தத்தை மீண்டும் எழுப்பி, அவள் மார்பில் அவரது முகத்தைப் புதைக்க, கிராண்டுக்கு அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறுவகையில் கண்ணியமாக நடந்துகொள்வதற்கு ஏதுமில்லாமலிருந்தது.

கிராண்ட் கிரிஸ்டியிடம் விரைந்து வந்தபோது, அவள் ‘’ அவருடைய மனைவி அவசரமாக இங்கு வந்துவிட்டால் போதுமென்றிருக்கிறது. அவள் சீக்கிரமாகவே அவரை இங்கிருந்து அழைத்துப் போய், இந்த அவசத்திலிருந்து விடுவித்துவிட்டால் பரவாயில்லை. இரவு உணவினை நாங்கள் அவளுக்கு முன்னரே கொடுத்திருக்க வேண்டும். அதிலும் அவர் இங்கே இப்படி அவளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும்போது, அவளை எப்படி, ஏதாவது கொஞ்சமாவது சாப்பிட வைப்பது?’’ என்றாள்.

‘’ நான் இங்கே தங்க வேண்டுமா?’’ என்றார், கிராண்ட்.

‘’ எதற்கு? அவளுக்கு  ஒன்றும் உடம்பு முடியாமல் இல்லை, உங்களுக்கும் தெரியும்தானே.’’

‘’ அவளுக்கு ஒரு துணையாகத்தான்.’’ என்றார், அவர்.

கிரிஸ்டி மறுத்துத் தலையை அசைத்தாள்.

‘’இந்த விஷயங்களிலிருந்தெல்லாம்  அவர்கள் தாமாகவே கரையேற வேண்டும். சாதாரணமாகவே அவர்களுக்கு   ஞாபகங்கள் குறைவாக உள்ளன. அது  மோசமானதென்றும் சொல்வதற்கில்லை.’’

ஃபியோனாவின் அறைக்கு மீண்டும் செல்லாமலேயே, கிராண்ட் அங்கிருந்து  கிளம்பினார். காற்று உண்மையில் இதமான வெப்பத்தோடிருந்ததையும் காகங்கள் உரக்கக் கத்திக் களேபரம் செய்துகொண்டிருந்ததையும் அவர் கவனித்தார். கார் நிறுத்தும் இடத்தில், அடர்நிறங்களில் பெரிய பெரிய கட்டங்களிட்ட ஸ்காட்லாந்து கம்பளித்துணிகளின் ஒரே வகையில் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்த ஒரு பெண் அவளுடைய கார் டிக்கியிலிருந்து மடிப்புச் சக்கர நாற்காலி ஒன்றை இறக்கிக்கொண்டிருந்தாள்.

ஃபியோனா அவளது துக்கத்திலிருந்தும்  மீண்டிருக்கவில்லை. உணவு நேரங்களில் அவள் சாப்பிடுவதான பாவனையில் உணவைக் கைத்துணிக்குள் மறைத்துக்கொண்டாளே தவிரச் சாப்பிடவில்லை. அதனாலேயே ஒரு நாளைக்கு இரண்டு முறை தனியாகச் சக்தி பானமும் கொடுத்து – அதையும் அவள் குடிப்பதை யாராவது ஒருவர் உடனிருந்து கவனித்துக்கொண்டனர். அவள் படுக்கையை விட்டும் எழுந்து அவளாகவே வேறு ஆடை மாற்றிக்கொள்வாள்; ஆனால் அவள் விரும்பியதெல்லாம் மீண்டும் அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பதைத்தான். கிரிஸ்டியோ, அல்லது பார்வை நேரங்களில் கிராண்டோ அவளை கட்டிடத்துக்குள்ளேயே மேலும் கீழுமாக அல்லது வெளிப்பக்கமாகவோ நடக்க வைக்கவில்லையெனில், எந்த உடற்பயிற்சியையும் செய்யவில்லை. அழுகை அவள் இமை ஓரங்களைக் கனக்கச் செய்தது; அவள் கண்கள் ஒளி மங்கித் தெரியத்தொடங்கின. அவளுடைய கம்பளி மேற்சட்டை – அவளுடையதுதானோ என்னமோ – கோணல் மாணலாக வரிசை மாற்றிப் பொத்தானிடப்பட்டிருக்கும். தலைமுடியை வாராமலோ நகங்களைச் சுத்தம் செய்யாமலோ இருக்கிற அளவுக்கு மோசமாகவில்லை யென்றாலும் அந்த நிலைமைகூட விரைவில் வந்துவிடுவதாக இருந்தது. அவளுடைய மூட்டுத்தசை இயக்கங்கள் முன்னேற்றமாகிச் சீரடையாமல் இப்படியே மோசமாகிக் கொண்டிருந்தால் அவளை நடைக்கருவியில்தான் பழக்கவேண்டியிருக்குமென்றாள், கிரிஸ்டி.

‘’ ஆனால், ஒரு விஷயம், கிராண்ட், உங்களுக்குத் தெரியுந்தானே, ஒரு முறை நடைக்கருவியில் பழகிவிட்டால், பிறகு அதைச்சார்ந்தேதான் இருப்பார்கள். மேற்கொண்டு எங்கு செல்வதானாலும் அவர்கள் நடப்பதேயில்லை, நடைக்கருவிதான் வேண்டுமென்பார்கள். நீங்கள் அவளை இன்னும் நன்றாகப் பார்த்து, கவனித்துக்கொள்ள வேண்டும் அவளுக்கு நிறையத் தைரியம் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.’’ என்றாள், கிரிஸ்டி.

ஆனால் அந்த விஷயத்தில் கிராண்டுக்கு நற்பேறு கிட்டவேயில்லை. ஃபியோனா, வெளிக்காட்டாமல் மூடி மறைத்தாலும், அவர் மீது ஒரு வெறுப்பு ஏற்படுத்திக் கொண்டதாகத் தோன்றியது. அவரைப் பார்க்கின்ற ஒவ்வொரு முறையும் ஆப்ரேயுடனான கடைசி நிமிடங்களும், அவள் கிராண்டிடம் உதவி கோரியதும் அவர் அதைச் செய்யாமலிருந்ததும் அவளுக்கு ஒருவேளை திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகிறதோ?

இப்போது அவளிடம், ` நான் உன்னைத் திருமணம் செய்து கொண்ட கணவன்` எனச் சொல்வது, அவ்வளவு உபயோகமாக இருக்குமென அவருக்குத் தோன்றவில்லை.

கண்காணிப்பாளர், அவளது அலுவலகத்துக்கு அவரை வரவழைத்துப் பேசினாள்; அதிகச் சக்திக்கான பானங்கள் கொடுத்தும் கூட ஃபியோனாவின் எடை குறைந்துகொண்டு போவதாகச் சொன்னாள்.

‘’ அதாவது, விஷயம் என்னவென்றால், உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன், முதல் தளத்தில் நாங்கள் நீண்ட நாட்களுக்குப் படுக்கையில் வைத்து கவனிப்பதில்லை. யாருக்காவது சாதாரணமாக உடம்பு சரியில்லை யென்றால்  தற்காலிகமாகக் கொஞ்சநாட்களுக்கு அப்படிச் செய்கிறோம் தான்; ஆனால் அங்கே இங்கே நடப்பதற்கே முடியாமல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்போது மேல்தளத்தில் வைத்துப் பராமரிக்கிறோம்.’’

அவள் ஒன்றும் அப்படி, அடிக்கடி படுக்கையில் இருந்ததாகத்  தெரியவில்லை என்றார், அவர்.

‘’இல்லைதான். ஆனால் அவசியமாகத் தேவைப்படும் சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவில்லையே. இப்போதும் கூட அவள் விளிம்பில்தான் இருக்கிறாள்.’’

‘’இரண்டாவது தளம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கானதென  நினைத்தேன்.’’ என்றார், கிராண்ட்.

‘’ அப்படியுந்தான்,’’ என்றாள், அவள்.

கிராண்ட் காரோட்டிச் சென்றுகொண்டிருந்த  தெருவின் பெயர் ப்ளாக்ஹாக்ஸ் வீதியென்பதைத் தெரிந்துகொண்டார். எல்லா வீடுகளும் ஒரே நேரத்தில் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவையாக இருக்கலாம். தெரு நல்ல அகலமாகவும் வளைவுகளோடுமிருந்தது. தெருவோரங்களில் நடைபாதை இல்லாமலிருந்தது. கிராண்ட் மற்றும் ஃபியோனாவின் நண்பர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது, இதுபோன்ற இடங்களுக்குத்தான் குடிபெயர்ந்தார்கள். இப்போதும் அங்கே இளந்தம்பதியர் குடும்பங்கள் இருந்தன. காரோடும் வழிகளில் பெரிய பெரிய வாசற்கதவுகளில் கூடைப்பந்து விளையாட்டுக்கான கூடைத்தாங்கிகள் இருந்தன. மூன்று சக்கர விளையாட்டு மிதிவண்டிகளும் இருந்தன. சில வீடுகள் குன்றின் சரிவுக்கே போய்விட்டிருந்தன. முற்றங்களில் சக்கரத் தடங்கள் கிடந்தன. சாளரங்கள் மெல்லிய தகரத்தகடால் மூடப்பட்டிருந்தன; அல்லது வெளிறிப்போன கொடித்துணிகள் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால், ஒரு சில வீடுகள் புதிதாக இருக்கும்போதே குடிவந்தவர்களால் முடிந்தவரை நன்கு பராமரிக்கப்பட்டிருந்தன. மற்றவர்கள் போதிய பணமில்லாமல் அல்லது அப்படியான நல்ல இடங்களில் குடியிருப்பது அவசியமானதென  நினைக்காமலுமிருக்கலாம்.

ஆப்ரே மற்றும் அவரது மனைவியுடையதெனத்  தொலைபேசிக் கையேட்டில் பட்டியலிடப்பட்டிருந்த வீடும் அப்படியான ஒன்றாக இருந்தது. முன்பக்க நடைவெளி முழுவதுமாக பன்னிறத் துண்டுத் தரையோடுகள் ஒட்டிப் பதித்து இரு ஓரங்களும் சீனப்பூக்களைப்போல் திடமாக நிமிர்ந்து நிற்கும் இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ணப் பூக்கள் கொண்ட ஹியாசின்த் என்ற பதுமராகப் பூச்செடிகளால் ஒன்று மாற்றி ஒன்று என நடப்பட்டு எல்லையிடப்பட்டிருந்தன.

ஆப்ரேயின் மனைவியைப் பற்றி, மெடோலேக்கின் கார் நிறுத்துமிடத்தில் அடர்நிறங்களில் பெரிய பெரிய கட்டங்களிட்ட ஸ்காட்லாந்து கம்பளித் துணிகளின் ஒரே வகையில் காற்சட்டையும் மேற்சட்டையும் அணிந்து பார்த்திருந்ததைத்தவிர கிராண்டுக்கு வேறு எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவள் காரின் டிக்கிக்குள் குனிந்து நின்றதில் அவளுடைய மேற்சட்டையின் அடிப்பகுதி விரியத் திறந்து தெரிந்திருந்தது. நேர்த்தியாக வடிவமைந்த இடுப்பும் அகன்ற பின்னழகும் தான் அடையாளமாக அவரது மனத்தில் பதிவாகியிருந்தது.

இன்று, அவள் அந்த ஸ்காட்லாந்து கம்பளியாடைக் காற்சட்டை மேற்சட்டை அணிந்திருக்கவில்லை. தவிட்டுநிற இடைக்கச்சுடன் கூடிய அரைக்கைச் சட்டையும் இளஞ்சிவப்பு ஸ்வெட்டரும் அணிந்திருந்தாள். அவளது இடுப்பு குறித்து அவர் நினைத்தது சரியே – இறுகிய கச்சு அதைத் தெளிவாகக் காட்டியது. அந்தக் கச்சினை அவள் அணியாமலே இருந்திருக்கலாம்; அதன் மேலும் கீழுமாகச் சதை பிதுங்கித் தெரிந்தது.

அவளுடைய கணவரைவிடவும் அவளுக்குப் பத்துப் பன்னிரண்டு வயது குறைவாகவே இருக்கும். அவளது தலைமுடி குட்டையாகச் சுருள்சுருளாக, செயற்கையாகச் சிவப்பாக்கப்பட்டிருந்தது. அவளுக்கு நீலக்கண்கள் – ஃபியோனாவைவிடவும் மென்மையான நீலம் – ராபின் பறவையின் முட்டையே கொஞ்சம் தட்டையாக, அல்லது நீலப்பச்சைக்கல், சரிவாகச் சிறிது உப்பினாற்போல. முகத்தில் அதிகமாகவே மடிப்புகள், சுருக்கங்கள் அதுவும் வாதுமை நிறத்தோற்றத்தில் கவனத்தை ஈர்ப்பதாகத் தெரிந்தன; அல்லது ஒரு வேளை, அது அவளுடைய ஃப்ளோரிடா நிறத்தோற்றமாகவும் இருக்கலாம்.

‘’என்னை எப்படி அறிமுகப்படுத்திக்கொள்வதென்றே எனக்குத் தெரியவில்லை’’  என்றார், அவர்.

‘’ உங்கள் கணவரை மெடோலேக்கில் பார்த்திருக்கிறேன். நான் அங்கே அடிக்கடி செல்லும் வழக்கமான பார்வையாளர்.’’

‘’சரி’’ என்றாள், அவள், ஒரு  இணக்கமற்ற தாடையசைப்போடு.

‘’அவர் இப்போது எப்படி இருக்கிறார்?’’

`இருக்கிறார்` என்பது கடைசி  நிமிடத்தில்தான் வந்து  விழுந்தது.

‘’ அவர் நன்றாக இருக்கிறார்.,’’ என்றாள், அவள்.

‘’ என் மனைவியும் அவருமாக  ஒரு நெருக்கமான நட்பினை  ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.’’

‘’ அதைப்பற்றி நானும் கேள்விப்பட்டேன்.’’

‘’ அதைப்பற்றிக் கொஞ்சம், ஒருநிமிடம் போதும், உங்களோடு பேசவேண்டும்.’’

‘’ நீங்கள் அதைப்பற்றியா பேசவேண்டுமென்கிறீர்கள், என் கணவர் ஒன்றும் உங்கள் மனைவியோடு எதையும் தொடங்க முயற்சிக்கவில்லை. அவளைக் கற்பழித்துவிடவில்லை. அது அவரால் இயலாத ஒன்று; எப்படியிருந்தாலும் அவரால் அதைச் செய்யமுடியாது. நான் கேள்விப்பட்டதெல்லாம் வேறுவகையில்தான்.’’ என்றாள், அவள்.

‘’ இல்லை. அப்படியானதைப்பற்றியெல்லாம் இல்லவே இல்லை. உங்களிடம் எதைப் பற்றியும் எந்தக் குற்றமும் சொல்வதற்காக நான் இங்கே வரவில்லை.’’ என்றார், கிராண்ட்.

‘’ ஓ,’’ என்ற அவள், ‘’ நல்லது, தவறிவிட்டேன். நீங்கள் அதற்காகத்தான் வந்திருக்கிறீர்கள் என்று நினைத்துவிட்டேன். நீங்கள் உள்ளே வந்துவிடுவதுதான் நல்லது, உள்ளே வந்துவிடுங்கள். வாசல் வழியாக உள்ளுக்குக் குளிர் வருகிறது. வெளிக்குத் தோன்றுவதுபோல் இன்று ஒன்றும் கதகதப்பாக இல்லை.’’

ஆக, வீட்டுக்குள் அனுமதித்ததே  கூட அவருக்கு ஒரு வெற்றியைப் போன்றது தான். ‘’ நாம் அடுக்களையில் தான்  உட்கார வேண்டியிருக்கிறது., அங்கேதான் ஆப்ரே கூப்பிட்டாலும் எனக்குக் கேட்கும்.’’ என்று சொல்லிக்கொண்டே அவள் அவரை வசிப்பறையைத் தாண்டி அழைத்துச் சென்றாள்.

முன்பக்கச் சாளரத்தில் இரண்டு மடிப்புத் திரைகள், இரண்டுமே நீலம், ஒன்று ஒளி ஊடுருவும் மிக மெலிதான வலைத்துணி, இன்னொன்று வளவளப்பான பட்டு, அதற்குப்பொருத்தமாக நீலநிறச் சாய்மெத்தை, அச்சுறுத்தி உங்களை ஊக்கமிழக்கச் செய்யும் வெளிறிய தரைவிரிப்பு, பல்வகைப்பட்ட ஒளிமிக்க கண்ணாடிகள் மற்றும் அலங்காரக் காட்சிப் பொருட்கள் கிராண்டின் கண்களில் பட்டன.

அதைப் போன்ற தொங்கும் திரைச்சீலைகளுக்கென ஃபியோனா ஒரு பெயர் வைத்திருந்தாள். அந்தப் பெயரை எந்தப் பெண்களிடமிருந்து அவள் கற்றுக்கொண்டாளோ, அந்தப்பெண்கள் அதனைப் பெரிதும் உள்ளார்ந்து  பயன்படுத்திய போதிலும் அவள் அதை ஒரு கேலிக்குறிப்பு போலவே உச்சரிப்பாள். அவள், எந்த அறையானாலும் அடைசல் இல்லாமல் பளிச்சென்று இருக்கும்படி பார்த்துக்கொள்வாள். இந்தக் காட்சிப் பொருட்களையெல்லாம் அவள் ஒரு குறைந்த அளவிலான இடத்துக்குள் நெருக்கி அடுக்குவதற்கான வழிவகைகளைக் கண்டுவிடுவாள். சமையலறைக்கு வெளியே உள்ள ஒரு அறையிலிருந்து – திறந்த வெளி வெயிற்படுகூடம் போன்றது. அடுக்களையின் சாளரக் கண்ணாடிகளெல்லாம் பிற்பகலின் பளீர், வெளிச்சத்தைத் தடுப்பதற்காக மூடியிருந்தாலும் – தொலைக்காட்சியின் ஒலியை அவரால் கேட்க முடிந்தது.

ஃபியோனாவின் பிரார்த்தனைகளுக்கான பதில் ஒரு சில அடிகளுக்கப்பால் உட்கார்ந்து பந்து விளையாட்டு போன்று ஒலித்த ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவரது மனைவி உள்ளே எட்டிப் பார்த்தாள்.

‘’உங்களுக்கு ஒன்றும் வசதிக்குறைவாக இல்லையே,  சரியாகத்தானே இருக்கிறீர்கள்?’’ என்ற அவள், கதவைப் பகுதியாகச்  சார்த்தினாள்.

‘’ நீங்கள் கொஞ்சம்  காப்பி அருந்தினால் நன்றாக இருக்குமே,’’ என்றாள், அவள். ‘’ கிறித்துமசுக்கு ஒரு வருடம் முன்னால் என் மகன் விளையாட்டு அலைவரிசைத் தொலைக்காட்சியில் சேர்ந்திருக்கிறான். அது இல்லாமல் நாங்கள் என்ன செய்யமுடியுமென்று எனக்குத் தெரியவில்லை.’’

சமையலறை நிலையடுக்குகளில் எல்லாவிதமான புதிய கண்டுபிடிப்புக் கருவிகள், உபகரணங்கள் – காபித் தயாரிப்பான், அரைவை, கலவை மற்றும் சாறுபிழி இயந்திரம், கத்தி கூராக்கும் அரம் மற்றும் கிராண்டுக்குப் பெயரோ அவற்றின் உபயோகமோ தெரியாத சிலவும் இருந்தன. எல்லாமே, தினமும் தேய்த்துப் பளபளப்பாக்கப்பட்டதாக அல்லது அப்போதுதான் உறை பிரித்த புதியதாகவும் அதிக விலையுள்ளதாகவும் தெரிந்தன.

அந்தப் பொருட்களை வியந்து  பாராட்டுவது உபயோகமாக இருக்குமென அவருக்குத் தோன்றியது. அவள் பயன்படுத்திக் கொண்டிருந்த காபித் தயாரிப்பானை வியந்து பாராட்டிவிட்டு ஃபியோனாவும் அவரும் அதுபோல் ஒன்றை வாங்க வேண்டுமென நினைத்திருந்ததாகக் கூறினார். அது முழுக்க முழுக்க உண்மையற்ற ஒன்று – ஒரு நேரத்தில் இரண்டு கோப்பை காபி மட்டும் வடிக்கின்ற ஒரு அபூர்வமான ஐரோப்பியக் கருவி மீதுதான் ஃபியோனா, மோகம் கொண்டிருந்தாள்.

‘’ அவர்கள்தான் கொடுத்தார்கள்.’’ என்ற அவள், ‘’என் மகனையும் அவன் மனைவியையும் தான் சொல்கிறேன். அவர்கள் காம்லூப்ஸ்.பி.சி.யில் இருக்கிறார்கள். எங்களால் கையாள இயலாதவற்றையெல்லாம் வாங்கி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் செலவுக்குப் பதிலாக,  இங்கே ஒரு நடை வந்து பார்த்து எங்களோடு இருந்துவிட்டுப் போனால் ஒன்றும் குறைந்துவிடாது.’’ என அலுத்துக் கொண்டாள்.

கிராண்ட் தத்துவார்த்தமாக, ‘’ அவர்கள் சொந்த வாழ்க்கையின் வேலை மும்முரத்தில்  இருப்பார்களென நினைக்கிறேன்.’’ என்றார்.

‘’ சென்ற குளிர்காலத்தில் ஹவாய்க்குச் செல்வதற்கு, அப்படியொன்றும் அதிகமான வேலை இல்லை போல. எங்களுக்குக் குடும்பத்தில் எட்டினாற்போல, நெருக்கமாக வேறு யாராவது இருந்தாலும் பரவாயில்லை. புரிந்துகொள்ளலாம். எங்களுக்கு அவன் ஒருவன் மட்டும் தானே இருக்கிறான்.’’

மேஜை மீது கிளைகள் தறிக்கப்பட்டு  மொட்டையாக நின்ற பீங்கான் மரத்தின் முண்டுகளிலிருந்து  செம்பழுப்பும் பச்சையுமான பீங்கான் கோப்பைகள் இரண்டினை எடுத்த அவள் அவற்றில் காப்பியை ஊற்றினாள்.

‘’ மனிதர்கள் தனிமைப்பட்டுவிடுகிறார்கள்,’’ என்றார், கிராண்ட். அவருக்குச் சரியான சந்தர்ப்பம் அதுதானென அவர் நினைத்தார். ‘’ அவர்கள் யார் மீது  அக்கறை கொள்கிறார்களோ, அவர்களைப் பார்க்க முடியாமலாகும்போது,  மிகவும் உடைந்து போகிறார்கள். உதாரணத்துக்கு ஃபியோனாவையே எடுத்துக் கொள்ளுங்களேன். என் மனைவியைத்தான் சொல்கிறேன்.’’

‘’ நீங்கள் அங்கு அடிக்கடி போய் அவளைப் பார்த்ததாகச் சொன்னீர்களே.’’

‘’ நான் போகிறேன். பார்க்கிறேன். ஆனால், அதுவல்ல இது.’’ என்றார், அவர்.

அப்படியே விஷயத்தை ஆழமாகக் கொண்டு போய், அவர் எந்த வேண்டுகோளுக்காக அங்கே வந்தாரோ, அதை விவரித்துக் கொண்டேயிருந்தார். வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் ஆப்ரேயை மெடோலேக்குக்கு அழைத்துச் செல்ல அவள் சம்மதிப்பாளா? காரில் செல்லும்போது அது ஒரு சில மைல்கள் தான். அல்லது ஒருவேளை அவளுக்கு அதற்கு நேரம் கிடைக்காது போலிருந்தால் – கிராண்ட் இதை முதலில் சிந்தித்திருக்கவில்லை. இதைச் சொல்லும்போது, அதைக்கேட்பதற்கு  அவருக்கே சிறிது குழப்பமாகத்தான் இருந்தது. – அவரே ஆப்ரேயை அழைத்துச் சென்று திரும்பக் கொண்டு வந்துவிடுவார். அதை ஒன்றும் அவர் கடினமாகக் கருதவில்லை. அவரால் சமாளித்துக்கொள்ள முடியுமென்று உறுதியாகச் சொன்னார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அவள் ஏதோ ஒரு வேண்டாத வாசனையைக் கண்டுபிடிக்க முயல்வது போலத் தன் உதடுகளையும் நாவையும் அசைத்தாள். அவருக்காக ஒரு தட்டில் இஞ்சி முரப்பாக்களும், காபிக்காக பாலும் எடுத்து வந்தாள்.

‘’ வீட்டில் செய்தது.’’ என்று சொல்லிக்கொண்டே தட்டைக் கீழே வைத்தாள். உபசரிப்பைக் காட்டிலும் ஒரு மறுப்பு தான் அவள் தொனியில் மிகுந்திருந்தது. பின்னர், அவள் அமர்ந்து அவளுடைய காபியில் பாலை ஊற்றிக் கலக்கும் வரையில் எதுவும் பேசவில்லை.

அப்புறமாக, அவள் முடியாதென்றாள்.

‘’ இல்லை. என்னால் அதைச் செய்ய முடியாது. அதற்குக் காரணம் என்னவென்றால், அவரை நான் குழப்பத்துக்காளாக்க மாட்டேன்.’’

‘’ அது அவரைக் குழப்பிவிடுமா?’’ கிராண்ட் உள்ளார்வத்தோடேயே கேட்டார்.

‘’ஆமாம், அது குழப்பிவிடும். அப்படித்தானாகும். அது செய்யக்கூடியதல்ல. வீட்டுக்கு அழைத்து வருவதும் மீண்டும் கொண்டு போய் அங்கே விடுவதும். அது அவரைக் குழப்பத்தான் செய்யும்.’’

‘’ ஆனால், அது ஒரு, சும்மா பார்த்துவிட்டு வருவதுதான் என்று அவர் புரிந்துகொள்ளமாட்டாரா? அவருக்கு, அது ஒரு பழக்கத்துக்கு வந்து விடாதா?’’

‘’அதெல்லாம், அவர் எல்லாவற்றையும் நன்றாகப் புரிந்துகொள்வார்தான்.’’ அவர் என்னவோ ஆப்ரேக்கு ஒரு இழிவை ஏற்படுத்திவிட்டாரென்பது போல அவள் சொன்னாள். ‘’ இருந்தாலும் அது ஒரு இடையீட்டுத் தொந்தரவுதான். அதோடுங்கூட நான் எல்லாவற்றையும் சரிப்படுத்தி, அவரைத் தயார்படுத்திக் காருக்கு அழைத்துச்சென்று, நீங்கள் நினைப்பது போல் அவரைச் சமாளிப்பதொன்றும் அவ்வளவு எளிதானதல்ல – அவர் ஒரு தாட்டியான ஆள். அவரைக் காருக்குள் உட்காரவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அவரது சக்கர நாற்காலியை வேறு கொண்டுசெல்ல வேண்டும். இதெல்லாம் எதற்காக? இவ்வளவு தொந்தரவுக்கு, நான் அவரை வேறெங்காவது நல்ல, வேடிக்கையாக நேரம் போகும் இடத்துக்கு அழைத்துச் செல்லலாம்.’’

‘’ஆமாம், உண்மைதான். உங்களுக்குத் தொந்தரவு இருக்கக் கூடாதென்பது நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால், அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறேனே.’’ – கிராண்ட் நம்பிக்கையோடும் நியாயமாகவும் பேசுவதான தொனியில் பேசினார்.

‘’ உங்களால் முடியாது,’’ என்றாள், அவள் கண்டிப்புடன். ‘’ உங்களுக்கு அவரைத் தெரியாது. உங்களால் அவரைச் சமாளிக்க முடியாது. நீங்கள் அவருக்காக எது செய்வதென்றாலும், அவரால் நிற்கக்கூட முடியாது. இவ்வளவு தொந்தரவுக்கும் அவருக்கு கிடைக்கப் போவது என்ன என்பதுதான் கேள்வி.’’



ஃபியோனா குறித்துத் திரும்பவும்  பேசலாமேயென, கிராண்ட் நினைக்கவில்லை.

‘’இதைவிட, அவரை இருபக்கமும் மரங்களடர்ந்த நிழற்பாதையில் அழைத்துச் சென்று வருவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.’’ என்றாள், அவள்.  ‘’ அல்லது, இப்போதுதான் ஏரியில் படகுகள் மீண்டும் ஓடத் தொடங்கியாயிற்றே, அங்கே சென்று வேடிக்கை பார்ப்பது அவருக்கு ஒரு மாறுதலாகவாவது இருக்கும்.’’

அவள் எழுந்து அங்கணத்  தொட்டிக்கு மேலிருந்த சாளரத்திலிருந்து அவளுடைய வெண்சுருட்டுகளையும்  தீப்பொருத்தியையும் எடுத்து வந்தாள்.

‘’நீங்கள் புகைபிடிக்கிறீர்களா?’’ என்று கேட்டாள், அவள்.

வெறுமனே ஒரு உபசரிப்புக்காக, வாய்வார்த்தைக்காகவாவது, அவரிடம், அவள் வெண்சுருட்டினை எடுத்துக்கொள்ளுமாறு சொன்னாளா எனத் தெரியாத போதும், அவர் இல்லை, நன்றியென்றார்.

‘’ எப்போதுமே பிடித்ததில்லையா? அல்லது விட்டுவிட்டீர்களா?’’

‘’ விட்டுவிட்டேன்.’’

‘’ எவ்வளவு நாளுக்கு முன்னால்?’’

அவர் அதை நினைத்துப் பார்த்தார்.

‘’ முப்பது வருடங்கள். அதற்கு அதிகமிருக்காது.’’

ஜாக்யியோடு தொடர்பு ஏற்படத் தொடங்கிய காலத்தில் சற்று முன்னோ, பின்னோ, அவர் புகைபிடிப்பதை விட்டுவிடவேண்டுமெனத் தீர்மானித்தார். அவர் முதலிலேயே விட்டு விட்டாரா, அல்லது அதை விட்டுவிடுவதால் ஏதேனும் பெரிய பரிசு கிடைக்குமென நினைத்தாரா, அல்லது அதற்கான நேரம் வந்துவிட்டதென விட்டுவிட்டாரா என்று அவரால் இப்போது நினைவுகொள்ள முடியாத அளவுக்கு அறுதியாக அதைவிட்டு விலகிவிட்டார்.

‘’ நான் விட்டுவிடுவதை  விட்டுவிட்டேன்.’’ என்றாள், வெண்சுருட்டைப் பற்றவைத்துக்கொண்டே. ‘’ விட்டுவிடுவதை விட்டுவிடுவதென ஒரு தீர்மானம், அவ்வளவுதான்.’’

முகத்தின் சுருக்கங்கள் அதனால்தானாக இருக்கலாம். யாரோ ஒருவர் – ஒரு பெண் – அவரிடம் புகைக்கும் பெண்களின் முகத்தில் அழகிய சுருக்கங்கள் ஏற்படுவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அது வெயில் காரணமாகவோ, அல்லது அவளது தோலின் இயற்கையான தன்மையாகவும் இருக்கலாம் – அவளது கழுத்திலும் மடிப்புகள் கவனிக்கும்படியாக இருந்தன. மடிப்புகளுடனான கழுத்துடன் முழுமையான இளமைப் பொலிவுடன் மேல் நோக்கும் மார்புகள்! வழக்கமாகவே,  அவள் வயதுப் பெண்களிடம் இத்தகைய அழகிய முரண்பாடுகள் தெரியத்தான் செய்கின்றன. இது நல்லதும்  கெட்டதுமாக, பிறப்பிலேயே ஈனியல்6 நற்பேறு அல்லது அதன் குறைபாடு, எல்லாம் கலந்ததாகத்தான் இருக்கிறது. மிகச் சிலர் தான் அவர்களின் அழகை முழுமையாக, அது நிழற்போன்றதாயினும், ஃபியோனாவைப் போல் பேணுகிறார்கள். ஒருவேளை அதுவும் கூட உண்மையில்லாமலிருக்கலாம். ஃபியோனா இளமையாக இருக்கும்போதிலிருந்தே, கிராண்ட் அவளைப் பார்த்துவந்திருப்பதால், ஒருவேளை அவர் மட்டுமே அப்படி நினைப்பதாக இருக்கலாம். ஆப்ரே அவரது மனைவிக்குள் வெறுப்பும் ஏளனமும் நிறைந்து, நீலக்கண்களில் ஒருக்கணித்த பார்வையும் பாழாய்ப்போன சிகரெட்டைச் சுற்றி மடித்த இதழ்களுமாக ஒரு உயர்நிலைப்பள்ளி மாணவியைப் பார்த்திருப்பாரா? ஆனால், கிராண்ட் அதைத்தான் கண்டார்.

‘’ஆக, உங்கள் மனைவி மன அழுத்தத்திலிருக்கிறார்?’’ ஆப்ரேயின் மனைவி கேட்டாள். ‘’ உங்கள் மனைவியின் பெயர் என்ன? நான் மறந்துவிட்டேன்.’’

‘’அது, ஃபியோனா.’’

‘’ஃபியோனா. உங்களுடையது? எனக்கு யாரும் உங்கள் பெயரைச் சொன்னதில்லையென நினைக்கிறேன்.’’

‘’ அது, என் பெயர் கிராண்ட்.’’ என்றார்.

எதிர்பார்க்காத நிலையில் அவள் மேஜையின் குறுக்காகக்  கையை நீட்டினாள். ‘’ ஹலோ, கிராண்ட், நான், மரியான்.’’

‘’ ஆக, இப்போது நாம் ஒவ்வொருவர் பெயரையும் தெரிந்துகொண்டோம்.’’ என்ற அவள், ‘’ நான் நினைப்பதை  நேரடியாகச் சொல்லாமலிருப்பதற்கு  எதுவும் தடை இல்லை. இப்போதும் அவர் உங்கள்.. – ஃபியோனாவைப் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வத்தோடிருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. நான் அவரைக் கேட்பதுமில்லை. அவர் சொல்வதுமில்லை. அது ஒரு கடந்துபோகிற ஒரு கற்பனையீர்ப்பாக இருக்கலாம். ஆனால், அது அதற்கும் அதிகமானதாக இருந்தாலும் அவரை மீண்டும் அங்கே கொண்டு செல்ல வேண்டிய அளவுக்கானதென நான் நினைக்கவில்லை அப்படியான அபாயம் இருக்கிற ஒரு காரியத்துக்கு நான் துணைபோக முடியாது. அங்கே கொண்டுசென்று அவரை நிலைகுலையச்செய்ய நான் விரும்பவில்லை. இப்போதிருக்கிற நிலையில், அவர் முழுவதுமாக என் கைக்குள்தான் இருக்கிறார். எனக்கு எந்த உதவியும் இல்லை. இங்கு நான் மட்டுமே இருக்கிறேன். நானேதான் எல்லாம் செய்கிறேன்.’’

‘’ எப்போதாவது நீங்கள் அப்படி நினைத்தால் – அது உங்களுக்கு மிகவும் கடினமானதென எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது – அவர் அங்கே செல்வது நல்லதாக இருக்குமென எப்போதாவது நினைத்தால்? ’’ என்றார், கிராண்ட்.

அவர், குரலை வெகுவாக ஒரு ரகசியம் பேசுவது போன்ற அளவுக்குத் தாழ்த்திக்கொண்டார். ஆனால், தானும் தன் குரலை அப்படிக் தாழ்த்திக்கொள்வது அவசியமென அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

‘’ இல்லை.’’ என்றாள், அவள். ‘’ அவரை இங்கேயே தான் வைத்துக்கொள்ளப் போகிறேன்.’’

கிராண்ட், ‘’ நல்லது. அது மிகவும் நல்லது. அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.’’ என்றார். `பெருந்தன்மை` என்ற சொல் நக்கலாக ஒலிக்கவில்லையென்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அப்படி நக்கலாக அவர் நினைக்கவுமில்லை.

‘’ நீங்கள் அப்படியா நினைக்கிறீர்கள்?’’ என்றவள், ‘’ பெருந்தன்மை – அப்படியெல்லாம் ஒன்றும் நான் நினைக்கவில்லை.’’ என்றாள்.

‘’ இப்போதும் இருக்கிறது. அது ஒன்றும் எளிதானதல்ல.’’

‘’இல்லை. அது அப்படியெல்லாமில்லை. ஆனால், இதுதான் எனக்கு வழி,  வேறு வாய்ப்புகள் ஏதும் பெரிதாக இல்லை. அவரை அங்கே கொண்டுபோய் விட வேண்டுமெனில் நான் என் வீட்டைத்தான் விற்க வேண்டும். வேறு பணம் கிடையாது. இந்த வீடு மட்டுந்தான் எங்களுக்கு முழுச் சொந்தமாக உள்ளது. இதை விற்காமல், வேறு வருமானத்துக்கென்று என்னிடம் எதுவுமில்லை. அடுத்த வருடம் அவருடைய ஓய்வூதியம், என்னுடைய ஓய்வூதியம் இரண்டும் கிடைக்கும். ஆனால், அப்போதுங்கூட என்னால் அவரை அங்கே வைத்துப் பார்த்துக் கொள்கிற அளவுக்கு முடியாது. வீட்டிலேயே தான் பார்த்துக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்த வரையில், எனக்கென்று பார்த்தால் இந்த வீடுதான். இது என்னோடு அதிகம் சம்பந்தப்பட்டது.’’

‘’ மிகவும் நன்றாக இருக்கிறது,’’ என்றார், கிராண்ட்.

‘’ நல்லது. பரவாயில்லை. நான் இந்த வீட்டுக்காக நிறையச் செலவழித்திருக்கிறேன். வாங்கியதற்கும் பராமரிப்பதற்குமாக. இதை இழந்துவிட எனக்குச் சம்மதமில்லை.’’

‘’ இல்லையில்லை. நான் உங்கள் கருத்தைப் புரிந்துகொண்டேன்.’’

‘’ நிர்வாகம் எங்களைச் சரியான கட்டத்தில் வெறுங்கையோடு அந்தரத்தில் நிறுத்திவிட்டது.’’ என்றாள், அவள். ‘’ அதைப்பற்றிய உள்ளும் வெளியுமான விவகாரங்கள் எல்லாமே எனக்குத் தெரியாதுதான்; ஆனால், முழுவதுமாக அங்கிருந்தும் தூக்கியெறியப்பட்டுவிட்டார். அது, கடைசியில் அவர்தான் நிர்வாகத்துக்குப் பணம் கட்டவேண்டுமென்பதில் போய் முடிந்தது. என்னதான் விவகாரமென்று நான் தெரிந்துகொள்ள முயற்சித்தபோது, அதில் தலையிடுவதற்கு உன்னுடைய வேலை எதுவுமில்லையென்று திரும்பத் திரும்பச் சொல்லுமளவுக்குப் போய்விட்டார். அவர் ஏதோ சரியாக மாட்டிக்கொள்கிற ஒரு முட்டாள்தனம் செய்துவிட்டார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், அதை நான் கேட்பது சரியாக இருக்காது; அதனால் வாயை மூடிக்கொண்டேன். நீங்களும் கல்யாணமானவர். நீங்களும் கல்யாணமாகியிருக்கிறீர்கள். அது எப்படியென்று, உங்களுக்கு தெரிந்திருக்கும். இதற்கிடையில் அந்த விவகாரம் பற்றி என்னவென்று தெரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கும்போதுதான் வெளியூருக்குப் போய் இதில் மாட்டிக்கொண்டு, வெளிவரமுடியாதபடி நேர்ந்துவிட்டது. வெளியூரில்தான் நீங்கள் கேள்விப்பட்டேயிருக்க முடியாத இந்த வைரஸ்நோய் தாக்கி அவர் நினைவு திரும்பாமலேயே `கோமா`வில் கிடந்தார். ஆக, கடைசியில் அதுவே  நிர்வாகத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்தும் அவரை விடுவித்தது.’’

கிராண்ட், ‘’ மிகமிக மோசமான துரதிர்ஷ்டம்.’’ என்றார்.

‘’ அவர் வேண்டுமென்றே நோயை ஏற்படுத்திக் கொண்டாரென்று நான் சொல்லவில்லை. அது அப்படியாக நிகழ்ந்துவிட்டது. அவருக்கு என்மேல் வருத்தமோ கோபமோ இல்லை; எனக்கும் அவர் மீது வருத்தம், கோபம் என்று எதுவுமில்லை. அது தான் வாழ்க்கை. வாழ்க்கையை யாரும் ஜெயித்துவிடமுடியாது.’’

வாய்க்குள் பூனை சுத்தப்படுத்திக்கொள்வதைப்  போல முரப்பாத் தூள்களை.  எடுத்துவிட, அவள் நாக்கை மேலண்ணத்துக்கு வளைத்துத் துளாவினாள். ‘’என்ன, தத்துவவாதியைப் போலப் பேசுகிறேனோ, இல்லையா? நீங்கள் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியராக இருப்பதாகச் சொன்னார்கள்.’’

‘’ அது ரொம்ப நாளுக்கு முன்னால்,’’ என்றார், கிராண்ட்.

‘’நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று  எனக்குத் தெரியும். நான் பந்தயம் கூடக் கட்டுகிறேன்.’’ என்றவள், ‘’ பணத்தாசை பிடித்த பேய் மாதிரியானவளென்றுதான் நினைத்துக்கொண்டிருப்பீர்கள்.’’ என்றாள்.

‘’ அப்படியெல்லாம் நான் முடிவுகளை உருவாக்கிக்கொள்வதில்லை.  இது உங்கள் வாழ்க்கை.’’

‘’ நீங்கள் அப்படியென்று நிச்சயமாக இருக்கிறீர்கள்.’’

அவர்களுக்குள்ளான இந்தப் பேச்சு இன்னும் ஒரு இணக்கமான நடுநிலை உணர்வுடன் முடிய வேண்டுமென கிராண்ட் நினைத்ததால், அவளுடைய கணவர் பள்ளிக்குச் சென்ற நாட்களில் கோடைகாலங்களில் இரும்புக்கடையில் வேலை பார்த்தாரா எனக் கேட்டார்.

‘’ அதுபோல நான் கேள்விப்பட்டதேயில்லை.’’ என்றாள், அவள். ‘’ நான் சின்ன வயதில் இங்கே  வசித்ததில்லை.’’

ஆப்ரேயின் மனைவி மரியானிடம், தான் தோற்றுப் போனதாக கிராண்ட் உணர்ந்தார்.  ஒரு பெண்ணின் இயற்கையான பாலுணர்வுப் பொறாமை, அல்லது, பாலுணர்வுப் பொறாமையின் இறுகிய மிச்சங்களாக எஞ்சிப்போயிருந்த மறுப்புணர்வு என்று தனக்குத்தானே சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியதுதானென, அவர் நினைத்துக்கொண்டார். பொதுவாக வாழ்க்கையை அவள் எப்படி அணுகுகிறாள், விஷயங்களை எப்படிப் பார்க்கிறாள் என்பது பற்றி அவருக்கு எந்தக் கருத்துமில்லை. இந்த உரையாடல், மனச்சோர்வளிப்பதாக இருந்தாலும் இதுபோன்ற ஒன்று அவருக்குத் தெரியாததல்ல. அவருடைய சொந்தக் குடும்பத்திலேயே இது போன்ற உரையாடல்கள் இருந்ததை அவருக்கு அது நினைவுபடுத்தியது. அவருடைய உறவினர்கள், அவரது அம்மாவேகூட மரியான் நினைப்பது போன்ற நினைப்பில் தான் இருந்தாள். அவர்களுக்குப் பணம் தான் முதலில். அவர்களைப் பொறுத்த வரையில் அப்படிப் பணம்தான் முதலென்று நினைக்காத நபர்களெல்லாம் உண்மையான நடப்பியலுடன் தொடர்பினை இழந்துவிட்டவர்கள். நிச்சயமாக மரியானும் அவரைப்பற்றி அப்படித்தான் நினைப்பாள். ஒரு முட்டாள் தனமான நபர், வாழ்க்கை பற்றி எப்போதோ நிகழ்கிற எதிர்பாராத சில உண்மைகளை அடிப்படையாகக்கொள்கிற ஒரு சலிப்பான அறிவு நிரம்பியவர். தன் வீட்டைத் தனதாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்ற கவலை ஏதும் இல்லாமல், இன்னொருவரை மகிழ்ச்சிப்படுத்துமென நம்பிக்கொண்டு பொதுவாக நல்லதாகப் படுகிற சில திட்டங்களைக் கனவில் கொண்டு திரிபவர்.  `என்ன மாதிரியான ஒரு முட்டாள்` என்றுதான்  அவரைப் பற்றி இப்போது அவள் நினைத்துக்கொண்டிருப்பாள்.

அதுபோன்ற ஒரு நபரின் கருத்துக்கு எதிராக நிற்கின்ற நிலை அவரை நம்பிக்கையிழக்கச் செய்து வேதனையும் வெறுப்புமாக்கிக் கடைசியில் கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டவராக உணரச்செய்துவிட்டது. ஏன்? அது போன்ற நபர்களுக்கெதிராகத் தாக்குப்பிடிக்கமுடியுமென்பதில் அவருக்கே நிச்சயமில்லாதிருப்பதேன்? கடைசியில் அவர்கள்தாம் சரி என்பதான முடிவுக்குச் சென்றுவிடுவோமோ எனப் பயப்படுவதேன்? அவர் அவளைத் திருமணம் செய்திருக்கவேண்டும்; அல்லது அதுபோன்ற ஒரு பெண்ணை. அவர் மட்டும் பழைய மாதிரியே இருந்திருந்தால், அவள் போதுமான அளவுக்குத் தீயைக் கிளறுபவளாக இருந்திருப்பாள். அவள் ஒரு மேனாமினுக்கியாகத்தான் இருப்பாள். சமையலறை நாற்காலியில் அவள் கால்களை மாற்றிமாற்றிப் புட்டங்களை அசைத்த பகட்டுத்தனம், அவளது மடிந்த வாய், சிறிதாக ஒரு சதித்திட்டமென அச்சுறுத்தும் பார்வைச் சூழல் – அதுதான், ஒரு சிறுநகர மேனாமினுக்கியிடம் கூடுதலாகவோ, குறைவாகவோ எஞ்சியிருக்கும் குற்றமென்றறியா இழிதன்மை.

ஆப்ரேயை அவள் தேர்ந்தெடுத்த  போது, அவளுக்குச் சில நம்பிக்கைகள் இருந்திருக்க வேண்டும். அவருடைய நல்ல தோற்றம், விற்பனையாளர் பணி, அவருடைய மேல்தட்டு எதிர்பார்ப்புகள். இப்போது இருக்கும் நிலையைக் காட்டிலும் ஒரு மேலான நிலைக்கு வந்திருக்கலாமென அவள் நம்பிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். நடப்பியல் நபர்களுக்குப் பல நேரங்களில் இப்படித்தான் நிகழ்ந்துவிடுகிறது. அவர்களுடைய கணக்கீடுகள், உயிர் வாழ் இயல்பூக்கங்கள் இப்படியிருந்தாலும் அவர்கள் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு மிகவும் எதிரான ஒன்றைப் பெறக்கூடாதுதான். இது, சந்தேகத்திற்கிடமின்றி அநியாயமாகத்தான் தோன்றுகிறது.

சமையலறைக்குள் நுழைந்ததும்  முதலில் அவர் பார்வையில் பட்டது,   அவரது பதிலளிப் பொறியில் மினுங்கிக்கொண்டிருந்த வெளிச்சம் தான். அவர் எப்போதும் நினைக்கிற அதையேதான் இப்போதும் நினைத்தார். ஃபியோனா. அவரது மேல் கோட்டைக் கழற்றும் முன்பாகவே பதிலளிப்பொறியின் பொத்தானை அமுக்கினார்.

‘’ஹலோ, கிராண்ட்,  சரியான நபரை நான் பிடித்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். இப்போதுதான் எதையோ நினைத்தேன். இங்கே நகரில் லெஜியானில் தனியர்களுக்கென்று சனிக்கிழமை இரவு ஒரு நடன நிகழ்ச்சி இருக்கிறது. நான் அங்கே உணவுக்குழுவில் ஒரு உறுப்பினர்; அதனால்  நான் இலவசமாக ஒரு விருந்தினரை அழைத்துச் செல்ல முடியும். நீங்கள் ஒருவேளை அதில் ஆர்வத்தோடிருப்பீர்களோவென நினைத்தேன். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது என்னைக் கூப்பிடுங்கள்.’’

ஒரு பெண்ணின் குரல் உள்ளூர்  எண் ஒன்றைக் கொடுத்தது. பின்னர் ஒரு `பீப்` ஒலியைத் தொடர்ந்து அதே குரல் மீண்டும் பேசத்தொடங்கியது.

‘’யாரென்று சொல்ல மறந்துவிட்டதை இப்போதுதான் உணர்ந்தேன். நல்லது, நீங்கள் அநேகமாகக் குரலை வைத்துக் கண்டுபிடித்திருப்பீர்களென்று நினைக்கிறேன். நான் மரியான். இந்தப் பொறிகளெல்லாம் இன்னும் எனக்குப் பழக்கமாகவில்லை. அப்புறம் நான் சொல்ல நினைத்தது, நீங்கள் ஒரு தனியாள் இல்லையென நான் உணர்ந்தேன். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நானும் அப்படியில்லைதான், ஆனால் எப்போதோ ஒருமுறை அப்படி வெளியே வருவது ஒன்றும் காயப்படுத்திவிடாது. உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைக் கூப்பிடுங்கள், இல்லையென்றால் அதற்காக ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வெளியே செல்கிற வாய்ப்பு கிடைப்பதை விரும்புவீர்கள் என நினைத்தேன், அவ்வளவுதான். நான் மரியான் பேசுகிறேன். ஏற்கெனவேயே சொல்லிவிட்டேனென்று நினைக்கிறேன். சரி. அப்புறம். நல்வாழ்த்துக்கள், விடைபெறுகிறேன்.’’

பதிலளிப்பொறியில் அவளது  குரல் சிறிது முன்பாக அவளது  வீட்டில் கேட்ட குரலைவிட வேறுபட்டிருந்தது. முதற் செய்தியில் மிகச்சிறிய வேறுபாடுதான், ஆனால் இரண்டாவதில் அதிகமிருந்தது. நரம்புகளில் ஒரு நடுக்கம், ஒரு அமைதிக்குலைவு, சீக்கிரம் சொல்லிமுடிக்கவேண்டுமென்கிற அவசரம், அப்படியே விட்டுவிட மனமில்லாமை என எல்லாமும் அந்தக் குரலில் தெரிந்தன.

அவளுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. ஆனால், அது எப்போது ஏற்பட்டது? அது உடனடியாக ஏற்பட்ட ஒன்றென்றால், அவர் அங்கிருந்த நேரம் முழுமைக்கும் அதை வெற்றிகரமாக மறைத்திருக்கிறாள். அவர் வெளியே வந்தபிறகு, மெல்லக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்படியாகத்தான் ஏற்பட்டிருக்கவேண்டும். இது கவர்ச்சி வேகத்தால்தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதில்லை. கூடவோ குறையவோ தன்னளவில், தன் காலில் நிற்கிற ஒரு மனிதன், என்பதால் கிடைப்பதற்கான வாய்ப்பிருப்பதை உணர்ந்ததால் இருக்கலாம். கிடைப்பதற்கான வாய்ப்பிருப்பதால் பின் தொடர்ந்து முயற்சித்திருக்கலாம்.

ஆனால், அவளுடைய முதல் நகர்விலேயே நடுக்கம் கொண்டுவிட்டாள். அவள் தன்னைத்தானே ஒரு அபாயத்துக்கு உட்படுத்தியிருக்கிறாள். அது எந்த அளவுக்கானதென்பதை இதுவரையிலும் அவரால் சொல்லவியலாது. இதுபோன்ற விஷயங்களில் மாட்டிக்கொள்ளும் போது, நேரம் தாமதமாகத் தாமதமாக பொதுவாக ஒரு பெண்ணின் அச்சமும் படபடப்பும் அதிகரிக்கிறது. அதனை ஒரு முடிவின் விளிம்புக்குக் கொண்டு செல்வதென்றால், இப்போதுதான் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில் சொல்ல முடிவதெல்லாம்,  இன்னும் தாமதப்படுத்த வேண்டுமென்பதுதான். அதில் அவருக்கு ஒரு திருப்தி – அதை ஏன் மறுக்கவேண்டும்? – அவளுக்குள்ளிருந்து அதைவெளிக் கொணர வேண்டும். அவளது ஆளுமை மேற்பரப்பின் மினுமினுப்பினை மங்கச் செய்வது போல, ஒரு தெளிவற்ற தன்மையை, மசமசப்பினை அவளுக்குள் ஏற்படுத்தவேண்டும். அவரது மெலிந்த கோரிக்கையை அவளது ஆழ்ந்தகன்ற எளிதில் வெற்றிகொள்ள முடியாத கடினத் தன்மை காட்டும் உயிரகங்கள் கேட்குமாறு செய்யவேண்டும்.

முட்டைகளையும் காளான்களையும்  ஆம்லெட் தயாரிப்பதற்காக அவர் சரிசெய்து வைத்தார். பின்னர் கொஞ்சம் மது அருந்தலாமேயென  நினைத்தார்.

எதுவும் சாத்தியமானதுதான். அது உண்மையா – எல்லாமே சாத்தியமாகுமா?. உதாரணத்துக்கு, அவர் விரும்பினால் அவளைத் தோற்கடித்து ஆப்ரேயை ஃபியோனாவிடம் திரும்பக் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கு அவளை இசையச்செய்யமுடியுமா? சும்மா பார்த்து வருவதற்கல்ல, ஆப்ரேயின் எஞ்சிய வாழ்க்கை முழுவதற்குமாக. அப்படி, ஆப்ரேயை ஃபியோனாவுக்கு அளித்தபின் அவர் என்ன ஆவார்? மரியான் என்ன ஆவாள்?

மரியான், இப்போது அவள் வீட்டில் உட்கார்ந்து அவரது தொலைபேசிக்காகக்  காத்துக்கொண்டிருப்பாள். அல்லது அப்படி உட்காராமல், அவளுடைய வேலைகளில் ஈடுபட்டு அதில் மும்முரமாக இருக்கலாம். கிராண்ட் காளான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் காரோட்டி வரும்போது, அவள் ஆப்ரேவுக்கு உணவு ஊட்டியிருக்கலாம். இப்போது அவள் ஆப்ரேக்காகப் படுக்கையைத் தயார் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், அப்போதும் தொலைபேசியின், அதன் அமைதியின் ஞாபகத்திலேயே தான், தன் வேலைகளைச் செய்துகொண்டிருப்பாள். காரில் அவரது வீட்டுக்குச் செல்ல கிராண்டுக்கு எவ்வளவு நேரமாகுமெனக் கணக்கிட்டிருக்கலாம். தொலைபேசிக் கையேட்டுப் புத்தகத்திலுள்ள அவரது முகவரி, அவளுக்கு, அவர் வீடு இருக்கும் இடத்தைப் பற்றி ஒரு தோராயமான கருத்தினை உருவாக்கியிருக்கும். அதற்கு ஆகும் நேரத்தோடு, இரவு உணவுக்குத் தேவையானவற்றைக் கடையில் வாங்குவதற்காகும் நேரத்தையும் ( தனியாக இருக்கும் நபர் அன்றாடம் பொருள் வாங்குபவராக இருப்பார் என்ற பொதுவான எண்ணம்) சேர்த்துக் கணக்கிட்டிருப்பாள். பின்னர், அவருக்கு வந்த செய்திகளை ஒரு சுற்றுப் பார்க்க அல்லது கேட்கச் சிறிது நேரமாகலாம். பின்னும் அமைதி நீடிக்கவே, அவள் வேறு விஷயங்கள் குறித்தும் சிந்திக்கத் தொடங்கலாம். வீட்டுக்குச் செல்லும் முன் அவருக்கு வேறு ஏதாவது சில்லறை வேலைகள் இருந்திருக்கலாம். அல்லது, ஒருவேளை, வெளியே ஏதாவது விருந்து நிகழ்ச்சி இருந்து, அதனால் இரவு உணவு நேரத்துக்கு வீட்டுக்குப் போகாமல் நேர்ந்திருக்கலாம்.

அவர் பங்குக்கு எப்படியான  ஒரு ஏமாற்று வேலை! எல்லாவற்றுக்கும் மேலாக அவள், விபரம் தெரிந்த ஒரு  பெண். பார்வைக்கு அவர் ஒன்றும் அவ்வளவு நல்ல நடனக்காரராக இல்லையே, அதிக பட்ச விறைப்பு, அதிகபட்சப் பேராசிரியத்தனம், என நினைத்துக்கொண்டே அவளது வழக்கமான படுக்கை நேரத்தில் உறங்கச் சென்றிருக்கலாம்.

அவர் இதழ்களைப் புரட்டிக்கொண்டு  தொலைபேசியின் அருகில்தான்  இருந்தார்; ஆனாலும் அது  மீண்டும் அடித்தபோதுகூட அவர் எடுக்கவில்லை.

‘’ கிராண்ட், நான் மரியான். துவைத்த துணியை உலர்த்து பொறிக்குள் போட நான் கீழ்த்தளத்துக்கு வந்தபோது தொலைபேசி அடிப்பதைக் கேட்டேன். ஆனால் நான் மாடிக்கு வந்து எடுப்பதற்குள் அது நின்றுவிட்டது. அதனால் நான் இங்குதான் இருக்கிறேனென்று சொல்ல நினைத்தேன். அது நீங்களாக இருந்தால், நீங்கள் வீட்டிலிருந்தால். ஏனென்றால், என்னிடம் குரல்பதிவுக்கருவி இல்லை. அதனால் நீங்கள் செய்தியைக்கூட அதில் சொல்ல முடியாது. அதனால்தான் நான் அப்படி நினைத்தேன். உங்களுக்கு விபரம் சொல்வதற்குத்தான்.’’ இப்போது நேரம் பத்து கழிந்து இருபத்தைந்து நிமிடங்கள்.

‘’ விடை பெறுகிறேன்.’’

அப்போதுதான் வீட்டுக்கு வந்ததாக  அவர் சொல்லியிருக்கலாம். அவர் அங்கே  அனுகூலப் பிரதிகூலங்களை எடைபோட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் பிம்பத்தை அவள் மனத்தில் ஏற்படுத்துவதில் எந்த நியாயமும் இல்லைதான்.

தொங்கல்கள். அந்த நீலத்திரைச்சீலைகளுக்கு ஃபியோனாவின் வார்த்தை அதுதான் – தொங்கல்கள். ஏன் கூடாது?  இஞ்சி முரப்பாக்களின் முழுமையான வட்ட வடிவமும் அவை வீட்டில் தயாரிக்கப்பட்டவையென்று அவள் பெருமையோடு சொன்னதை, பீங்கான் மரத்தில் பீங்கான் காபிக் கோப்பைகளை, அறையின் தரைவிரிப்பின் மீதான ஒரு நெகிழி விரிப்பினை, அது, தரைவிரிப்புக்கு நிச்சயமாக நல்ல பாதுகாப்புதான்,  அவர் நினைத்துப் பார்த்தார். ஒரு உயர் பளபளப்புத் துல்லியத்தையும் அந்த நடைமுறையையும் அவரது அம்மா வியந்து பாராட்டினாலும், அந்த இலக்கினை அவர், ஒருநாளும் அடைந்ததில்லை. அதனால்தானோ இயல்பு மீறியதும் நம்பத்தகாததுமான  இந்தத் திடீர் ஒட்டுதல் அவாவினை விருப்புடன் உணர்கிறாரோ? அல்லது,  முதற் கோப்பைக்குப் பின்னும்  இரண்டு கோப்பைகள் குடித்தாரே, அதனால் இருக்கலாமோ?.

அவளது முகம் மற்றும் கழுத்துத் தோலின் வாதுமைநிறத் தோற்றம் – இப்போது அது நிற மாற்றந்தான் என நம்பினார் – அவளது ஆழமான மார்புப் பிளவு வரைக்கும் பெரும்பாலும் படர்ந்திருக்கலாம். அந்தப்பிளவு, சுருக்கம் விழுந்த தோலுடன் நறுமணமாகவும் கதகதப்பாகவும் இருக்கலாம். அவர் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த தொலைபேசி எண்ணுக்குச் சுழற்றிக்கொண்டிருந்தபோது அதைத்தான் நினைத்தார். அவளது பூனை- நாக்கின் நடப்பியல் உணர்நிலை. அவளது பளபளக்கும் வைரக்கண்கள்.



ஃபியோனா, அவளது அறையில்  இருந்தாள்; ஆனால், படுக்கையில்  அல்ல. அந்தப் பருவத்துக்கேற்ற  ஆனால், வித்தியாசமாகக் குறுகிய  பளீர் ஆடை ஒன்றை அணிந்து  திறந்த சாளரத்தின் அருகில்  அமர்ந்திருந்தாள். சாளரம் வழியாக, இதழ் விரித்த லைலாக்5 பூக்களின் மயக்கும் நறுமணமும் வயல்களில் பரப்பியிருந்த இளவேனிற் கால எருவின் வாசமும் கலந்து வந்தது.

திறந்த புத்தகம் ஒன்று  அவள் மடியில் கிடந்தது.

‘’ எனக்குக் கிடைத்த இந்த அழகிய புத்தகத்தைப் பாருங்கள். இது ஐஸ்லாந்து பற்றியது. மதிப்பு மிக்க புத்தகங்களை இப்படி அறைகளில் விட்டுச் செல்வார்களென நீங்கள் நினைக்க மாட்டீர்கள். ஆனால், எனக்குத் தோன்றுவது, அவர்கள் ஆடைகளைக் கலந்து விடுகிறார்கள் – நான் ஒருபோதும் மஞ்சள் நிறம் அணிவதில்லை.’’ என்றாள், அவள்.

‘’ஃபியோனா,’’ என்றார், அவர்.

‘’ எல்லாவற்றையும் சரிபார்த்தாயிற்றா? நாம் கிளம்பலாமா?’’ என்றாள், அவள். அவளது குரலின் தெளிவில் சிறிது தடுமாற்றமிருந்ததாக அவர் நினைத்தார். ‘’ நீங்கள் போய் ரொம்ப நேரமாகிவிட்டது.’’

‘’ஃபியோனா, நீ எதிர்பார்க்காத ஒரு ஆச்சரியத்தை உனக்காகக்  கொண்டு வந்திருக்கிறேன். உனக்கு ஆப்ரேயை நினைவிருக்கிறதா?’’

அவள் ஒரு கணம் கிராண்ட்டை வெறித்துப் பார்த்தாள். அவள் முகத்தில் காற்றின் அலைகள் வீசித் தாக்குவதைப் போல, முகத்தினுள், அவளது தலைக்குள், எல்லாவற்றையும் கந்தைகளாக்கி இழுத்தெடுப்பது போலத் தோன்றியது.  எல்லாமே கந்தைகள்; பிரிந்த இழைகள்.

‘’ பெயர்கள் என்னிடமிருந்து நழுவி ஓடிவிடுகின்றன.’’ என்றாள், அவள் கடுமையாக.

பின்னர், சிறிது முயற்சித்து, வேடிக்கையும் இனிமையுமான சுபாவத்தை அவள் மீட்டெடுத்த பின்தான், அந்தப் பார்வை மறைந்தது. அவள் புத்தகத்தைக் கவனத்துடன் கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்று அவரைச் சுற்றிக்கொள்ள இரு கைகளையும் உயர்த்தினாள். அவள் மேனி அல்லது மூச்சுக்காற்று உறுத்தலான ஒரு புதிய மணத்தைக் கிளப்பியது. அது அழுக்குத் தண்ணீரில் கிடக்கும் பசுந்தண்டுகளின் வாசம் போன்றதாகக் கிராண்டுக்குத் தோன்றியது.

‘’ உங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’ என்றாள், அவள். அது இனிமையாகவும் அதே நேரத்தில் வழக்கமாகக் கூறும் முகமனாகவும் இருந்தது. அவள் அவரது காது மடல்களை அழுத்தமாகக் கிள்ளினாள்.

‘’ நீங்கள் அப்படியே கூட  காரில் போயிருக்க முடியும்.’’ என்றவள்,     ‘’உலகத்தைப்  பற்றிய கவலையில்லாமல் என்னை  அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்க முடியும். என்னைக் கைவிட்டுவிட்டு. விட்டுவிட்டு.’’

அவர் அவளுடைய வெண்ணிற  முடியில், அவளது, இளஞ்சிவப்பு  உச்சந்தலையில், இனிமையே  உருவான தலைமேட்டில் முகத்தைச் சாய்த்து நின்றார்.

‘’ வாய்ப்பே இல்லை.’’ என்றார், அவர்.





நன்றி :   http://www.newyorker.com/archive/1999/12/27/1999_12_27_110_TNY_LIBRY_000019900#ixzz2H9e54d4r


நார்சிஸ்சஸ்1     : மஞ்சள் நிறப் பேரரளிப் பூக்கள்
க்ளீனெக்ஸ்2            : கைதுடைக்கும் மென்தாள்கள் (நிறுவனப் பெயர்)
எரிக் பிளட்-ஆக்ஸ்3  : எரிக் ஹெரால்ட்சன் ( கி.பி 885 – 954) என்ற பத்தாம் நூற்றாண்டு நார்வே அரசன். கூடவே இருமுறை நார்தூம்பிரியாவின் அரசனாக ( கி.பி. 947 – 948 & 952-954 ) இருந்ததாகப் பதிவுகள் உள்ளன.
4.  தலைக்கு விலை4     ;      Höfuðlausn or the “Head’s Ransom”  ஐஸ்லாந்துக் கவிதை

5. லைலாக்5             : வெள்ளை நிறப்பூக்கள் – காதலைக் குறிப்பவை


குறிப்பு : The Bear Went Over the Mountain என்பது குழந்தைகள் பாடும் ஒரு நாட்டுப்புறப்பாடல். அந்தப் பாடல் – மலைமேல் சென்ற கரடி எதைப்பார்த்தது? மலையின் மறு பக்கத்தைப் பார்த்தது. மலையின் மறுபக்கம் போய் என்ன பார்த்தது? மீண்டும் மலையின் மறு பக்கம். இப்படியாக விரியும் இந்தப் பாடலின் தலைப்பை கதைத் தலைப்பாக மன்றோ பயன்படுத்தியிருக்கிறார். விக்கிப் பீடியாவில் இந்தப் பாடல் பதிவிடப்பட்டுள்ளது. 

மலைகள் இணைய இதழ் ஜூலை 02, 2013, இதழ் 29 இல் வெளியானது.

கோடையில் ஒரு மழை, ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014, முதல் பதிப்பில் இக்கதையும் சேர்க்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment