Friday 8 January 2016

போர்த்துகீசியச் சிறுகதை- ரியோ டி ஜெனிராவுக்கு, கான்சலோ எம். டவாரெஸ் Gonçalo M. Tavares

ரியோ டி ஜெனிராவுக்கு 

போர்த்துகீசியம் : கான்சலோ எம். டவாரெஸ் Gonçalo M. Tavares 

ஆங்கிலம் : ஃபிரான்சிஸ்கோ வில்ஹெனா Francisco Vilhena

தமிழில் ச.ஆறுமுகம்


GoncaloMTavares2905
கான்சலோ டவாரெஸ் 1970ல் பிறந்தவர். 2001லிருந்து போர்த்துகீசிய மொழியில் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் பல நாவல்களை வெளியிட்டு வருகிறார். இலக்கிய மேதைகள் பலரும் புகழும் இவரது படைப்புகளைப் படித்துவிட்டு நோபல் விருதாளரான ஜோஸ் சரமாகோ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘’போர்த்துகீசிய இலக்கிய வானில் வெடித்துக் கிளம்பியுள்ள கான்சலோ எம். டவாரெஸ் உண்மையான அசல் கற்பனைத் திறனோடு, மரபார்ந்த கற்பனையின் எல்லைகள் அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டார். இத் திறன், அவருக்கே சொந்தமான மொழியுடன், துணிவார்ந்த கண்டறிதல்களுமாக இணைந்து பேச்சுவழக்கின் திறமையாகி – இன்று எழுதிக்கொண்டிருக்கும் இளம் போர்த்துகீசிய நாவலாசிரியர்கள் மீது எந்த அவதூறும் சொல்லாமல் – கான்சலோ எம். டவாரெஸுக்கு முன்னும், டவாரெஸுக்குப் பின்னும் எனக்குறிப்பிடப்படுவது மிகைப்படுத்துவதாகாது. அதற்கு முன்பாகவே நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும், இன்னும் முப்பதாண்டுகளுக்குள், அவர் நோபல் விருதினை வெல்வார் என நான் கணிக்கிறேன். என்னுடைய வாக்கு பலிக்கும் என்பதிலும் நான் நிச்சயமாக இருக்கிறேன். என் ஒரே வருத்தம், அந்த நேரத்தில் உடனிருந்து அவரைப் பாராட்டி உச்சி முகர்வதற்கு நான் இருக்க மாட்டேனேயென்பதுதான்.’’
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் படைப்பு போர்த்துக்கீசிய மொழியில் பப்ளிகோ என்ற பெயரில் வெளியாகிப் பின்னர் ஆங்கிலத்தில் அதன் மொழியாக்கம் To Rio De Janeira என்ற பெயரில் கிரந்தாவில் வெளியானது.
*********
என் தாய் மிகச்சரியாகச் சமைத்தாள்;
சோறு, சிவப்புக் காராமணி, உருளைக்கிழங்கு பொரியல்
ஆனால், அவள் பாடினாள்
அட்லியா ப்ராடோ
1
இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரி தூரம் அளக்கப்படுகிறது. அளவுநாடாக்கள் துளைத்துச் செல்பவை அல்ல, இருப்பினும் கண்கள் அளக்கின்றன, மதிப்பிடுகின்றன, அது அதிர்ச்சியடையச்செய்கிறது, ஆவலைத் தூண்டுகிறது. கண்கள் மட்டுமே உணர்வினை அளக்கும் கருவி, அது நிச்சயம் என்பது மட்டுமல்ல, மிகத் துல்லியமான ஒன்றாகவும் இருக்கிறது.
மற்றும் அது அங்கே மட்டும்தான் அப்படியிருக்கிறது : ரியோ டி ஜெனிராவில் மனிதர்களுக்கிடையிலான தூரம் குறைவானதாக இருக்கிறது, அதுவன்றியும் அது, மகத்தான விளைவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
நான் ரியோ டி ஜெனிராவுக்குள் நடந்து செல்லும்போது, நகரும் மனிதத் திடல்களைக் காணுகிறேன். தோலின் நிறம் உண்மையிலேயே இல்லாமற்போகும் ஒரே நகரம் இதுதான், பிரேசிலிலும் கூட. மற்ற நகரங்களில் வெள்ளை மனிதன் ஒருவனும் கறுப்பு மனிதன் ஒருவனும் அருகருகாக நடக்கும்போது, அவர்கள் உறுதியான, மிக உயர்ந்த தோழமையிலிருந்தாலும் கூட, நான் கறுப்பு மனிதனையும் வெள்ளை மனிதனையும்தான் காண்கிறேன். ரியோவில் அப்படியில்லை. ரியோவில் மனிதர்களின் திட்டுகள் உள்ளன. இருவர் திட்டுக்குப் பிறகு, நால்வர் திடல், ஆறுபேர் கொண்ட மற்றொன்று, பெரும் முயற்சிக்குப் பிறகே, என்னால் நிறங்களை வேறுபடுத்திக் காண முடிகிறது. ( ஒரு தொழில்சாராக் கலை விமரிசகனைப் போல) அந்தத் திடல்களிலிருந்து ஒரு கறுப்பு மனிதர், ஒரு கலப்பின மனிதர் மற்றும் ஒரு வெள்ளை மனிதர் (எடுத்துக் காட்டுக்காக) வருகின்றனர் – அதுவும் பெரும் முயற்சிக்குப் பிறகு, பெரும்பான்மைச் செயற்கையாக நாம் அதனை உணர்கிறோம்.
அப்போது, இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரித் தூரம் : உலகிலேயே மிகக் குறுகியதாகிறது.
2
ரியோ டி ஜெனிராவில் மனிதர்கள் அருகருகாக நடப்பதில்லை, அவர்கள் தனிநபர் அதிகாரங்கள் குறித்தான புரிதல் மீது விடாமல் கேள்விக்கணைகள் தொடுக்கும் தடைகளற்று நகரும் பெருந்திரள் இயக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நடக்கிறார்கள். கேரியோக்கா1 ஒருவரின் பாதமும் தலையும் ஒரே அச்சில் எப்போதும் நிற்பதில்லை. ரியோவிலுள்ள உடல்கள் சாய்ந்து நடக்கும் உயிரினங்களுடையவை, தலை ஒருபோதுமே பாதங்களின் மேலாக அமைவதில்லை – எப்போதுமே சற்று, அல்லது அதிகமாக, அல்லது மிக அதிகமாக இடது அல்லது வலது பக்கமாகச் சாய்பவை. தலை முதல் பாதம் வரையிலான நேர்கோடுகள் அங்கு இல்லை; வளைகோடுகள் மட்டுமே உள்ளன. அதுவும் மகிழ்ச்சியில் திளைப்பனவாக உள்ளன.
(ஒரு கேரியாக்கோவின் உடல் நேராக நிமிர்ந்து நிற்பதில்லை, படுத்திருக்கும்போதுங்கூட; எல்லாமே தற்காலிகமாகச் சாய்வதற்கு வளைந்துகொடுப்பதற்கு, ஆர்வத்தோடு முந்துவதாக உள்ளன.)
3
கேரியோக்கோ யாருடனும் நான் போர்க்கப்பல் விளையாடியதில்லை. ஆனால், நிச்சயமாக இங்கு, அந்த விளையாட்டுக்கு விதிகள் வேறாக இருக்கும். கப்பல்களை ஒரேநிலையில் அப்படியே நிலையாக நிறுத்திவைப்பதைப்பற்றி நினைக்கவே முடியாது: a4.d5,a5,d8. அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வழியிலிருந்து இன்னொன்றின் வழிக்குள் (குறைந்தபட்சம் மாலைநேரங்களிலாவது) நுழைந்துவிடும். தலை ஓரிடமும், பாதம் வேறிடமுமாக.
ரியோவில், ஒருவரை அசையாமல் நிமிர்ந்து அமருமாறு கேட்டுக்கொள்வது – அது குழந்தையாக இருந்தாலும் சரி, நன்கு வளர்ந்துவிட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி – அது சொற்களாலானதும் உடலளவிலானதுமான வன்முறையின் வடிவமேதான். அறிவான கேரியாக்கோ பெற்றோர் எவரும் அவர்களுடைய குழந்தைகளை அசையாமல் அமைதியாக இருக்குமாறு கற்றுக்கொடுப்பதில்லை; மாறாக அவர்கள் இயங்குதலின் சில வேகங்கள் மற்றும் தீவிரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இடதுபுறமாகவா, வலதுபுறமாகவா, மேலாகவா அல்லது கீழாகவா – என்பதுதான் கேள்வி.
எந்த அமைதியான மனிதனும் சொர்க்கத்தின் அரசுக்குள் (சொர்க்கத்தின் அரசு ரியோ டி ஜெனிரா மாதிரியான ஏதாவது ஒன்றாக இருந்தால்) நுழையமாட்டான்.
4
அது பூமியிலிருந்து அல்லது வனங்களிலிருந்து அல்லது மலைகளிலிருந்து அல்லது தண்ணீரிலிருந்து கிளைத்ததாகவே கூட இருக்கட்டும், ஆனால், உண்மையென்னவென்றால், ரியோ டி ஜெனிராவில் மனிதர்களிடம் நடப்பதை நடனத்திற்கு மிக அருகிலான ஒன்றாக, நடனத்தை பகுதிப் பாலுணர்வினதாக, பகுதி மந்திர அசைவுகள் அவற்றால் முடிகிற அளவுக்கு நட்சத்திரங்களின் இயல்பான போக்கினை (அல்லது, குறைந்த பட்சம், மற்றொரு மனிதனின் இயல்பான திசையினை) மாற்றுவதான, அதிகப்படியான ஒரு சக்தி பிறக்கிறது.
பருவகாலத்தின் மகத்தான சக்தியினை ஒவ்வொரு மனிதரும் ஒரு மின்கலத்தைப் போலச் சக்தியேற்றப்படுவதாக வைத்துக்கொண்டால், `ஏ` க்கும் `பி`க்கும் இடையே நூறு மீட்டரே கூட இருந்தாலும், அந்த வழி மிகச்சிறந்ததாகவும் நேரானதாகவும் இருந்தாலும்கூட, யாரும் `ஏ`யிடமிருந்து `பி`க்குச் (எந்தவொரு நோர்டிக் அல்லது ஜெர்மானியரும் போல) சென்றுவிடுவதில்லை. செல்வதில்லை; ஏ மற்றும் பி இடையே கேரியாக்கோ குதித்தும் பகுதி முழுவதுமாகவும் செல்கிறார்; துடிப்பான நடன நடையென்பது சக்தியை வெளிக்காட்டுவதாகும்: என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு சக்தி இருக்கிறது, நான் நேர்கோட்டில் நடக்கவேண்டிய அவசியமில்லை. இதுவே, முடிவில், பொதுவான கொடைப்பொருளாகிறது. நகரம் கொடுக்கிறது, உடல் திருப்பி அளிக்கிறது.
5
(ரியோ, என்னவோ, வக்கிரம் மற்றும் வன்முறை போன்ற மிகப்பெரும் முரண்பாடுகளுக்கிடையே சிக்கியிருக்கும், மிகப்பெரும் அவலங்கள் கொதித்துக்கொண்டிருக்கும் நகரம் தானென்றாலும், இப்போது, இந்தக் கணத்தில், அதன் ஆர்வத் தனித்தன்மையை, உற்சாகத்தைக் கொண்டாடுவோம்.)
முடிவாக நாம் இதைச் சொல்வோம்: மகிழ்ச்சி என்பது சக்தியற்றது. அல்லது நாம் இப்படிச் சொல்வோம் : திறமையின் மீது எப்போதுமே திண்ணமாக உறைந்த ஒரு துயரம் படிந்திருக்கிறது. திறமை துள்ளிக்குதிப்பதில்லை.
முடிவாக, ரியோ டி ஜெனிராவில் ஒருவர் புரிந்துகொள்வது என்னவெனில் மகிழ்ச்சி மட்டுமே ஒரு உயிரின் இசைவிணக்கமாகிறது. கடல், காடு, மலைகளுக்கு இணையாக மனித நிலையும் அனைத்து இயந்திரங்களுக்கும் முந்தையதாக உள்ளது.
ஒரு சதுர மீட்டர் பெருமகிழ்ச்சியின் விலை : நிர்ணயிக்கப்பட்ட அளவை அலகு
வயதான மாடுகளுக்குச் சோகக் கண்களா?
கடவுளின் தண்டனைக்குப் பெயர் துயரம்
மற்றும், துறவியாவதென்பது மகிழ்ச்சியிலிருந்தும் ஒதுங்கிக்கொள்வது.
இதுவே நான் விரும்புவது.
அட்லியா ப்ராடோ
குறிப்பு
கேரியாக்கோ – ரியோ டி ஜெனிராவின் உள்ளூர் மக்கள் 
நன்றி : www.granta.com
மலைகள் இணைய இதழ்  டிசம்பர் 17 2015,  இதழ் 88 ல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment