Wednesday, 6 January 2016

அறிவியல் புனைகதை - வணக்கம் நிலவே, போய்வருகிறேன்.

வணக்கம் நிலவே, போய் வருகிறேன். (Farewell to Moon)

மோனிகா ஹ்யூக்ஸ் (Monica Hughes)

தமிழாக்கம்: ச. ஆறுமுகம்


Monica Hughes,  மோனிகா ஹ்யூக்ஸ்(நவம்பர் 3, 1925 – மார்ச் 7, 2003), இங்கிலாந்தில் பிறந்த ஆங்கில-கனடிய அறிவியல் புனைகதைப் படைப்பாளர். இவர் சீனாவிலிருந்து கனடாவில் குடியேறும் முன்பு எகிப்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் வாழ்ந்திருக்கிறார். இவர் பெண்கள் இராணுவக் கப்பற்படை ஊழியர், ஆடை தயாரிப்பாளர்,வங்கி ஊழியர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் எனப் பல பணிகளில் ஈடுபட்டுக் கடைசியாக எழுத்துப்பணியில் வெற்றியாளரானார். 35 நூற்களுக்கு மேல் படைத்துள்ள இவர் கனடாவின் மிகச் சிறந்த குழந்தைகளுக்கான அறிவியல் புனைகதைப் படைப்பாளர் எனக் கொண்டாடப்படுகிறார். இவருடைய ஐஸிஸ் என்ற முப்பெருநாவல் மிகவும் புகழ்பெற்றது. தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதை SCIENCE FICTION STORIES என்னும் தொகுப்பிலுள்ளது.

(கெப்ளர் மாமனிதனுக்குப் பதினைந்து வயது ஆகிறது. அவனது அப்பா ஆளுநராக இருக்கும் நிலவில் தான் அவன் பிறந்தான். இப்போது, முதன்முதலாக, அவனுக்குப் பரிச்சயமான நிலவை விட்டுப் புதிய இடத்திற்கு, நினைத்தாலே பரவசப்படுத்துகிற, ஆனால் அறிமுகமற்ற பூமிக்குப் பறந்து செல்லவிருக்கிறான்.)
விண்வெளி நிலையத்தின் இருள் மண்டிய காணறைக்குள் அமர்ந்து,  பூமியை நோக்கி நான் பார்க்கலானேன். எதிர்பாராவண்ணம், அது எனக்கு ஏற்கெனவே நன்கு தெரிந்ததாகத் தோன்றியது. முழுக்கக் கடைந்த பாலேட்டு நிற மேகச்சுருள்களுடனான நீலக்கோளத்தின் படம் ஒன்று நிலவக ஆய்வறை எண் 21ன் கட்டுப்பாட்டு மையத்தில் தொங்குகிறது. அந்தப் புகழ்பெற்ற படத்தின் சிறிய நகலொன்று எங்கள் வசிப்பகப் பிரிவுக்குள்ளும் இருக்கிறது. என் பெற்றோரைப் பொறுத்த வரையில் அதுதான் அவர்களின் வீடு.
இந்தப் பூமி எனக்கு என்னவாக இருந்தது? பூமி, எங்கள் நிலவக நீண்ட இரவுகளின் வானத்தில் பிறையிலிருந்து முழுமைக்கு வளர்வதும், முழுமையிலிருந்து பிறையாகத் தேய்வதுமாகப் பயணிக்கும் ஒரு வெள்ளித் தகடாகவே எங்களுக்குத் தோன்றியது. நிலவில் பிறந்த முதல் குழந்தையான எனக்கு, என் அம்மா பாடிய பாடல்:
              பூமியொளியே, பூமிப்பொலிவே,
              இன்றைய இரவுக் கொடையாக,
              நான் கேட்பதைத் தா! தா! தா!
ஆனால், அதெல்லாம் எப்போதோ முன்னொரு காலத்தில் நடந்தது போலிருக்கிறது. அம்மா இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது, நான், நிலவு ஆளுநரின் மகன், கெப்ளர் மாமனிதன், உண்மையிலேயே  பூமிக்குச் சென்றுகொண்டிருக்கிறேன். ஏற்கெனவே, அந்தப் பாடாவதி நிலவு ஓடத்தில் அலுப்பூட்டும் பயணத்தின் மூன்றுநாட்களை ஒருவழியாகக் கடத்தித் தொலைத்து, இங்கு, அதுதான், விண்வெளி நிலையத்துக்கு வந்து சேர்ந்து விட்டேன்.
நிலவு ஓடத்தின் உந்துவேக அழுத்தத்திலிருந்து விடுபட்டு, `அப்பாடா` எனக் கால்களை நீட்டி, விண்வெளி நிலையத்தின், வேகமற்ற தற்சுழற்சியின் மெல்லிய ஈர்ப்புவிசையை உணர்வது எவ்வளவு சுகமாக இருக்கிறது! நான் கீழ்நோக்கிப் பூமியைப் பார்த்தேன், கைநீட்டித் தொட்டுவிடமுடியும்போல், அவ்வளவு  அருகிலிருப்பதாகத் தோன்றியது. கீழே என்ன இருக்கிறது? ஸ்பிங்க்ஸ்…. தாஜ்மஹால்…. வானுயர் கட்டிடங்கள்! எல்லாமே நான் படித்திருந்த  அற்புதங்கள்! என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். இன்னும் பதினைந்து நிமிடங்கள்! காத்திருக்கத்தான் வேண்டும்!
பொறுமையற்ற நான் காணறையிலிருந்தும் வெளிவந்து, விண்வெளி நிலையத்தின் மையத்துக்குச் செல்லும் நீண்ட பயணியர் பாதையில் இறங்கி நடந்தேன். முக்கியப் பிரமுகர்கள் அறையில் செய்தியாளர்கள் மொய்த்து நிற்கும் அப்பாவைப் பார்க்கலாம். நிலவுக்கு வணக்கம் சொல்லிப் `போய் வருகிறே`னென விடைபெறும் நேரம்.
நீள்பாதைக்கு நேர்கீழாக நிற்கிறேன். காணறை காலியாக இருந்தது. மத்தியிலிருந்த முன்வரிசை இருக்கையில் சாய்ந்தேன். அறை இருட்டாக இருந்தது. இருக்கிறதோ, இல்லையோவெனக் கண்களை மயக்கும் விதத்தில் ஒருச்சாய்வாக சன்னல் அமைக்கப்பட்டிருந்தது. அது, நிலவிலிருந்தும் விண்வெளியின் முடிவில்லாக் கருமையிலிருந்தும் என்னைத் தனிமைப்படுத்தாதது போல இருந்தது. நிலவு மிகச் சிறியதாக, என் கழுத்தில் கிடக்கும் வெள்ளி அடையாளத் தகட்டைவிடப் பெரியதாக இல்லாமல், இருந்தது.
என் பார்வை வழக்கமான நிகழ்வுகளின் மீதே பதிந்தது. இரவுக்கும் பகலுக்கும் மத்தியிலான மென்தகட்டுக்கத்திமுனை போன்ற எல்லைக்கோடு, புயற்பெருங்கடலின் மேலாக வளைந்திருந்தது. கோபர்நிக்கஸின் கருநிழல் பெருவட்டத்தைச் சாய்வான சூரியக்கதிர்கள் துல்லியமாகச் செதுக்கியதையும், அதன் இடதுபுறத்தில் எல்லைக்கோட்டின் விளிம்பிலேயே நிலவுக்கோள் ஆய்வகம் எண் 21 அமைக்கப்பட்டிருந்த விண்கற்பள்ளமான கெப்ளரையும் பார்க்க முடிந்தது. எங்கள் குடியிருப்பு! அதற்கும் கீழாகப் புதிய நிலவு-நாள் உதயமாகிக் கொண்டிருந்தது. சூரியனின் கடுங்கூர் வெண்ணொளிக்கதிர்கள் விண்கற்பள்ளப் பாறைகளில் மோதித் தலைகுப்புறக் கவிழ்வதால், ஆய்வகங்களின் பார்வை முகத்துவாரங்களும் வசிப்பகப் பிரிவுகளும் மெல்லத் தாமாகவே இருண்டுபோகும். அடுத்த பதினைந்து நாட்களுக்கு நிலவுக்கோள் ஆய்வகம் எண் 21 ன் கீழாகவே சூரியன் பிரகாசிக்குமென்பதால், இருவாரங்களாகக் கட்டிடங்களைச் சூடேற்றிக் கொண்டிருந்த வெப்பப் பரிமாற்றக் கருவிகள் மெல்லத் தாமாகவே சரிசெய்துகொண்டு இன்னும் இரு வாரங்களுக்கு கட்டிடங்களைக் குளிர்விக்கத் தொடங்கும்.
கீழே வீட்டில் குழந்தைகள் விருந்துக்குத் தயாராகிக் கொண்டிருப்பார்கள்.. நிலவின் வயதுமூத்த குழந்தையான எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே, ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் விருந்து நடப்பது எப்போதுமே இருந்துவருகிறது. சில நேரங்களில் பெரியவர்கள், ‘’ தினமும் ஒரு விருந்து என்றால் எப்படி இருக்கும்?’’ எனக் கண் சிமிட்டிக் கிண்டல் செய்வதுண்டு. ஆனால், ச்சே, அது ஆண்டுக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று முறைதான் நிகழ்ந்தது.  சூரிய ஒளி, நிலவின் மேனியில் மெல்லப் படர்ந்து, அப்பென்னைன் சிகரங்களைத் தாக்கி, சைனஸ் ஏஸ்டமின் ( அப்பென்னைன் மலைகளுக்குத் தெற்கில் 290 கி.மீ. விட்டமுள்ள ஒரு தாழ்நிலப் பரப்பு) குறுக்காக  நிழல்களைத் துரத்தும் இருவார நீண்ட இரவு முடியும்வரை, ஒவ்வொரு பூமிப்பகலும்  எங்களுக்கு வெகு சீக்கிரம் மறைந்து போகும் ஒன்றுதான். அதன்பிறகுதான் எங்களுக்கு மீண்டும் சூரியக்குளியல். விண்வெளி நிபுணர்கள் அல்லாத வானியல் அறிஞர்கள் எல்லோரும் பகல் நேரத்தை வெறுத்தார்கள். அவர்களால் விண்மீன்களைப் பார்க்க முடியாது;  எழுத்துப்பணிகளைக் கட்டிக்கொண்டு அறைக்குள்ளேயே இருக்க வேண்டியதாகிவிடும். ஆனால் மற்றவர்கள் எல்லோருமே, குறிப்பாகக் குழந்தைகள்  பகலை வெகுவாக நேசித்தார்கள்.
நான் ஆன்னை நினைத்துப் பெருமூச்செறிந்தேன். பாவம், விருந்துக்கு அவளை யார் அழைத்துச் செல்வார்கள்? நாங்கள்  விடைபெற்றுக் கொள்வதற்காகக் காற்றுத் தடுப்பறையில் நின்றிருந்தோம். ஆன் அழுதுகொண்டிருந்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தன. ஆனாலும் எப்போதும் போலவே அவள் அழகாயிருந்தாள். நான் பேசுவதற்கு வாய்திறந்தேன். தொண்டைக்குள் எதுவோ அடைத்தது.                                      ‘’ சரி, ஆன், வந்ததும் உன்னைப் பார்க்கிறேன்.’’                                  ‘’ ஓ! கெப்ளர், உடம்பைப் பார்த்துக்கொள், பத்திரம்.’’                           ‘’ கட்டாயம்! நீயுந்தான், ஆன், நான் கடிதம் எழுதுகிறேன், கண்டிப்பாக, சத்தியமாகத்தான் சொல்கிறேன்.’’                                           அது ஒரு தாங்க முடியாத பிரிவாக இருந்தது. அந்த நேரத்தில் என்ன சொல்லிக்கொள்ள வேண்டுமென்று வெகுவாக யோசித்திருந்தேன். ஆனாலும் அது மிகவும் கடினமாக இருந்தது; அவளை முழுவதுமாகச் செயலிழக்கச் செய்திருந்தது. காற்றுத்தடுப்பிற்குள் நின்றிருந்த நான் அதையெல்லாம் மெல்ல மெல்ல மறந்தேன்.
நான் நினைவுகளை ஒதுக்கித் தள்ளினேன். அதையெல்லாம் அவள் பொருட்படுத்தமாட்டாளென நினைத்துச் சிரித்துக்கொண்டேன். நல்லது, என்னால் எழுதவாவது முடியும். ஆன்னிடமிருந்து கடிதங்களை எதிர்பார்க்க  முடியாதென்பது எனக்குத் தெரியும்தான்! பூமிக்கான அஞ்சல் செலவு கழுத்தை நெறித்துவிடும் – 2,40,000 மைல் இடைவெளி எல்லாவற்றையும் அவ்வளவு அதிகச்செலவுள்ளதாக்கியிருக்கிறது. ஆனால் என்னால் ஆன்னுக்கு அஞ்சல்கள் அனுப்ப முடியும். நிலவின் ஆளுநரான ஒரு அப்பாவைப் பெற்றிருப்பதனால் கிடைத்திருக்கிற நல்ல ஒரு வாய்ப்பு அது. என்னுடைய கடிதங்களை அரசாங்கப் பைக்குள் நுழைத்துவிட்டால் போதும்; எந்தக் கேள்வியுமில்லாமல் நிலவுக்கு ஏவுகணையாகச் சென்று சேர்ந்துவிடும். ஆனால், வீட்டைவிட்டு வெளியே ஆறு மாதங்கள் தங்குவதென்றால்….. ப்ச்,  இதனால், ஆன்னைப் பிரிந்து நான்தான் அதிகமாக இழக்கப்போகிறேன். ஆளுநராக ஒரு அப்பாவைப் பெற்றிருப்பதனால் கிடைக்கும் துன்பம் அது.
பின்பக்கக் கதவு திறந்ததில் ஒளிக்கீற்றுகள் புத்துணர்வுக் குரல்களின் சலசலப்போடு உள்நுழைந்தன. அயல்நாட்டுத்தைல நறுமணம் ஒன்று மெல்லப் பரந்தது. அருமையான பிரெஞ்சு வாசனைத்தைலம்!  
பூமியிலிருந்து வானோடம் வந்திருக்க வேண்டும். இவர்கள் நிலவுச்சுற்றுலா காண வந்த பயணிகளாகத்தான் இருக்கவேண்டும். இது மிகமிகப் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமேயான சுற்றுலா. உண்மையில் அமைதிக்கடல் பகுதியிலுள்ள சுற்றுலா மாளிகைதான், பூமியின் அசட்டையான நிதிநிர்வாகத்திடமிருந்து ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும் நிதியைக் கேட்டுவாங்கத் திராணியில்லாத நிலவு நிர்வாகத்துக்கு ஏதோ கொஞ்சம் கைகொடுக்கிறது.
சட்டென்று நெரிசல் மிகுந்துவிட்டது. அங்கிருந்து மத்திய கூடத்துக்கான பாதையில் இறங்கினேன். அப்பா அங்கேதான் நின்றிருந்தார். கடைசி நிமிட விடைபெறல்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன.
‘’ எல்லாம் நல்லதாக அமையும், ஜார்ஜ்’’
‘’ உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம், ஆளுநர் அவர்களே!’’
‘’ பார்க்கலாம், வருகிறேன், அதிகம் போனால் ஆறு மாதம்.’’
அப்பாவைப்போல் இயல்பாக இருக்க முயற்சித்தேன். அவரை ஒட்டி அவர் அருகிலேயே நடந்தேன். நான், பூமிக்குச் செல்லும் முதல் பயணம், இதுதான். இருந்தாலும், ஒரு நாட்டுப்புற `ரூப்` போலத் தெரிந்துவிடக்கூடாதே! ஆனால் பூமி-ஓடத்தின் முதல் காட்சியே என்னை வீழ்த்திவிட்டது. என் வாய் தானாகப் பிளந்தது. பெரிய பெரிய சரக்கு அடுக்குகளும் அழுக்கும் இருட்டுமாக நெருக்கிக் கிடக்கும் இருக்கைகளும் குறுகிய வழிகளுமாக எங்கள் பாடாவதி நிலவு-ஓடங்களைவிட மூன்று மடங்கு பெரியதாக, அது, அப்படி ஒரு மாட்சிமையோடிருந்தது. நிலவுக்குள்ளான பயணத்தை நீண்ட மூன்று நாட்கள் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது; இதுவோ, மூன்று மணி நேரம் தான்.
‘’ பூமியில் எல்லாமே இதுபோலப் பிரமாதமாகத் தான் இருக்குமா?’’ சாய்வு இருக்கையின் மென்பஞ்சுக்குள் வழுக்கி அமிழ்ந்துகொண்டே அப்பாவிடம் கிசுசிசுத்துக் உடற் கவசத்தில் என்னைச்சுற்றிக்கொண்டு வார்களை இழுத்து மாட்டிக் கொண்டேன்.
‘’ மிகமிக அழகானதுதான் – உலகத்தின் பல பகுதிகளில் நீயும் பார்க்கத்தானே போகிறாய்! ஆனால், வீட்டைவிட்டு நிரம்பவும் அதிகமான தூரம், இல்லையா?’’
இதெல்லாம் எப்போதாவது பார்த்திருக்கிறோமா, என்ன! ஒரே மாதிரியான பச்சை நெகிழோட்டுத் தரையும் பிளாஸ்டிக் நிறம் பூசிய இரும்புத்தகட்டுச் சுவர்களுக்குப் பதிலாக மெத்துமெத்தென்று ஆழ்நீலத் தரைவிரிப்பும் பாலேட்டுநிறத்தில் தங்கத் தெளிப்பில் வண்ணப்பூச்சுச் சுவர்களுமாக எங்கள் வசிப்பகப் பிரிவை கற்பனைக்குள் கொண்டுவர முயற்சித்தேன். குழந்தையாக இருந்தபோது நான் எப்போதுமே தவறான பிரிவுக்குள் புகுந்துவிடுவதாக இருந்தது. அவை எல்லாமே ஒரேமாதிரியான தோற்றத்தில் அமைந்தவை. அவற்றைக் குடியிருப்பு வீடுகளாக மாற்றம்  செய்யத் தேவையான பொருட்களை பூமியிலிருந்து வானோடத்தில் எடுத்து வருவதற்கான பணமில்லாமல் இருந்தது………..
………. வானோடம் மெல்ல நடுங்கிப் பின் அதன் பிடிமானத் தளத்திலிருந்து மெதுவாக நகர்ந்தது. ஓடம் புவிஈர்ப்புவிசையின் வட்டத்துக்குள் தன்னைத்தானே ஒப்புக்கொடுத்தபோது,  மெத்தையிட்ட சாய்மான இருக்கையில் என் உடல் மெல்ல அழுந்துவதை என்னால் உணர முடிந்தது.  வியக்கத்தக்க வகையில் அது அப்படியொரு மெதுமெதுவாக, இதமானதாக இருந்தது. நிலவிலிருந்து விண்வெளி நிலையத்துக்கான பயணத்தின் போது சரியாகத் தூங்கவே முடியவில்லை; இப்போது நான் விரும்பாமலேயே என் இமைகள் தாமாக மூடிக்கொள்வதை உணர்ந்தேன்.
ஒரு சில நிமிடங்களிலேயே அப்பாவின் குரல் எழுப்புவதுபோல் இருந்தது.    ‘’ கெப்ளர், நீ ஒரு சரியான தூங்குமூஞ்சிச் சுற்றுலாக்காரன்தான். ஆனால், நீ இந்தக் காட்சியைக் காணாமல் விட்டுவிடக்கூடாது  நாம் பூமிக்கோளத்தின் சுற்று வட்டத்துக்குள் இப்போதுதான் நுழைந்திருக்கிறோம். கவனித்துப்பார்!’’
நான் கழுத்தை ஆவலோடு நீட்டி, முகத்துவாரம் வழியாகப் பார்த்தேன். மத்திய அமெரிக்காவின் குறுகி நீளும் நிலக்கதிரையும், அதனோடு வெள்ளியாக மினுமினுக்கும் அட்லாண்டிக் எங்களுக்கு நேர்கீழாகப் பரந்துகிடப்பதையும் என்னால் கண்டுகொள்ள முடிந்தது. அது இப்படியாகப் போய்க்கொண்டே இருந்தது.
‘’இந்தக்கோள் முழுக்க முழுக்கத் தண்ணீர்தான் போல!’’ நான் மலைத்துக் கேட்டேன்.
‘’ஆமாமாம், அது, பத்தில் ஏழு பங்கு,’’  -- அப்பா இணக்கமாகச் சொன்னார்.
‘’ ஆனால் ……. ஆனால், ஓ, வாவ்!’’ இதெல்லாம் சும்மா, ஆனால், அதைச் சொல்வதற்கு எனக்கு வேறெந்த வார்த்தைகளும் இல்லையே! ஆஹா! பத்தில் ஏழு பங்கு தண்ணீர் கொண்ட ஒரு உலகம்! நிலவில் தண்ணீர் கிடைப்பது கடினமாக, அதை ஏன் கேட்கிறீர்கள், பிராணவாயு கிடைப்பதைவிட மிகமிகக் கடினம். சுவாசிப்பதற்குக் கட்டணம் ஏதும் இல்லை. நீங்கள் விருப்பம்போல் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆழ்ந்து சுவாசித்துக்கொள்ளலாம், அதுவும் இப்போது தாதுநீர்ப்பயிர்ச்சாகுபடி (Hydroponic gardens) இல்லாமலான பின்பு நாங்கள் பிராணவாயுவுக்குக் கட்டணம் செலுத்துவதில்லை. ஆனால், தண்ணீரின் கதை வேறுமாதிரி. நிலவுக் கனிமங்களில் தண்ணீரின் ஒவ்வொரு அவுன்ஸ் எடையும் காசுதான். ஆய்வுக்கூடங்களிலும் வசிப்பகப் பிரிவுகளிலும் மின்திறன் வடிகட்டிகள் மூலமாகவே அழுக்கு, தூசி, குப்பை எல்லாமே அகற்றப்படுகின்றன. கழுவிச் சுத்தம் செய்தல் என்பது அதிகப்படியான ஆடம்பரம்! தண்ணீர் அருந்துதலோ சிறப்புப் பெருமகிழ் நிகழ்வுதான்.
நிலவில் இலவசத் தண்ணீர் கிடையாது. நாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு அவுன்ஸ் தண்ணீரும் நிலவிலிருந்து பூமிக்கு அனுப்பப்படும் உலோகத் தாதுக்களிலிருந்து சுத்திகரிப்புசெய்து பெறப்படுவதுதான். அதற்காகச் சுரங்க நிறுவனங்கள் ஒவ்வொரு துளி நீருக்கும் எங்களிடம் வசூலித்துவிடுகின்றன. அண்டம் முழுவதிலுமே தண்ணீர்தான் விலை மதிப்பு மிகுந்த பொருளென்ற எண்ணத்திலேயே நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது என் கண்களாலேயே பூமியை அந்தப்பொருளே மூடியிருப்பதை – மேலேறிப் பரவிக்கிடப்பதைக் காண்கிறேன்.
வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவிற்கு நேராகச் சுழல்வட்டத்தில் நாங்கள் சுழன்றுகொண்டிருந்தோம். என்னுடைய முகத்துவாரத்தின் வழியாகச் சிதறிக்கிடந்த தீவுத்திட்டுக்களுடன் இந்தியப்பெருங்கடலின் விரிநீலத்தைக் காணமுடிந்தது. அடுத்து பசிபிக். திடீரென்று சோர்வாக, உடம்புக்கு ஒரு மாதிரியிருப்பது போல உணர்ந்தேன். இந்த பூமி எந்த வகையான ஊர்? அங்கே மக்கள் எதுபோல இருப்பார்கள்? உலகில் பாதிக்கு மேல் தண்ணீர், என்றாலும் எங்களிடம் ஒவ்வொரு கிண்ணம் தண்ணீருக்கும் காசு கேட்கிறார்கள். நான் முகத்துவாரத்திலிருந்தும் திரும்பிக் கண்களை மூடிக்கொண்டேன்.
‘’தலைசுற்றுகிறதா?’’ அப்பாவின் குரலில் பரிவு மிகுந்திருந்தது. ‘’சுற்றுக்கோளப் பாதையிலிருந்தும் விலகத் தொடங்கிவிட்டார்கள். எடை மாறுவதை நீ கவனித்திருப்பாயென்று நினைத்தேன். ஒன்றும் கவலைப்படாதே. நிலைமை சீராவதற்குள் இன்னும் மோசமாகும்; ஆனால் சரியாகிவிடும். கொஞ்சம் அப்படி இப்படி, அவ்வளவுதான்!’’
விண்வெளி நிலையத்திலிருந்து பூமி செல்லும் பயணிகளுக்கு மிகக் குறைந்த அளவிலான சிரமங்கள் என்றே நான் சொல்வேன். அவர்களின் பரும எடை இருமடங்காகி, உந்து வேக எடை அவர்களின் வழக்கமான எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகிறது. பூமியில் எனது எடையின் ஆறில் ஒரு பங்கு எனது பிறப்புரிமை. நான் வீட்டுக்குத் திரும்பும்போது எப்படியாகுமென்று இந்தக் கணம் வரை நினைத்துப்பார்க்கவில்லை. அதுதான் என்னை இங்கிருக்கிற மற்றவர்களோடு வேறுபடுத்துகின்ற இழை. நான் ஏற்கெனவே என்னுடைய வழக்கமான எடையைக் காட்டிலும் ஆறு மடங்கு இருக்கிறேன். விலகுதல் தொடரும்போது, என் எடை …பன்னிரண்டு மடங்காகக் கூடிக்கொண்டே… என் மார்புமீதான மொத்த எடை …. என்னால் மூச்சுவிட முடியவில்லை. என் மூளை வெடித்துச் சிதறப்போவது போலிருந்தது.
நான் உணர்வுநிலைக்குத் திரும்பியபோது, அதிகப்படியான எடைத் தாக்கம் இல்லாமலிருந்தது. நான் மிகவும் கனத்துவிட்டதாகவும் சோர்வாகவும் தோன்றியது. நான் தலையைத் தூக்கி மங்கிய கண்களோடு தெளிவற்றுச் சுற்றிலும் நோக்கினேன்.  தரையிறங்கிவிட்டோம்!  உடற்கவச வார்களைப் பிரிப்பதும் அவரவர் உடைமைகளை இழுப்பதுமான சப்தம் நிறைந்தது. நான் என்னுடைய பாதுகாப்பு வார்களைப் பிரிக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தேன். உதவுவதற்காக அப்பா என்பக்கமாகச் சாய்ந்தார்கள். நான் வழக்கம்போல இல்லையென்றே அவரது முகத்தோற்றம் காட்டியது.
‘’ படுத்துக்கொள், கெப்ளர், உன் மூக்கில் இரத்தம் வந்திருக்கிறது. உதவிப் பெண்ணைக் கூப்பிடுகிறேன்.’’
‘’ நான் நன்றாகத்தான் இருக்கிறேன், அப்பா.’’ என் நாக்கு தடித்திருப்பதாக உணர்ந்தேன். என் வார்த்தைகள் குழறின. உதவிப்பெண் விரைந்து வந்தாள். அவள் என் முகத்தைத் துடைக்கக் குனிந்தாள்.
‘’நானே, துடைத்துக் கொள்வேன்,’’ நான் குழறிக்கொண்டே அவள் கையிலிருந்து துணியைப் பறிக்க முயன்றேன்.
‘’ அப்படியே சும்மா படுத்திருங்கள், குட்டிப்பையனே, நான் போய்ப் பனிப்பை ஒன்றை உங்களுக்காகக் கொண்டுவருகிறேன். உண்மையில் நீங்கள் ஈர்ப்புவிசைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். காலையில் இரண்டு அழகிய ஒளிமங்களைப் பெறுவீர்கள்.
குட்டிப்பையன்! என்னதான் ஆனாலும், எனக்கு எத்தனை வயதென அவள் நினைக்கிறாள்? இரண்டு கறுப்பு விழிகள் ….. ஓ, உடன்பிறப்பே! அது சரியான பாதையில் அடியெடுப்பதன் தொடக்கம். பூமியே! இதோ, பார்! கெப்ளர் மாமனிதன் வருகிறான் …… வாழைப்பழத்தோலின் மீது!
பனிப்பையோடு அவள் இறங்கி வந்தாள். அதிசயமாக இருக்கிறது, இந்தக் கனத்த கோளில் எப்படி அவளால் இவ்வளவு இலகுவாக இயங்க  முடிகிறது! அவள் நிலவுத்துகளின் இம்மியளவு எடையே போலத் தோன்றினாள்.
அப்பாவிடம் அவள் பேசினாள். ‘’ஆளுநர் அவர்களே, பத்திரிகை, தொலைக்காட்சி எல்லோரும் உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். இப்போது நீங்கள் ஓடத்திலிருந்து இறங்கத் தயாராகிவிட்டீர்களா?’’
‘’ஓ, நிச்சயமாக, இப்போதே நேராக வந்துவிடுகிறேன்.’’ அவர் சாய்மான இருக்கையில் முன்நகர்ந்து அப்படியே நீட்டி நிமிர்ந்தார், அவர் ஒரு பெரிய மனிதர், என் அப்பா, திடகாத்திரமானவர். அவர்போல, எப்போதாவது, நான் அவரளவுக்கு, அவரை எட்டிப்பிடித்து விடுவேனா என நினைத்துப்பார்த்தேன். நான் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறேன், அறைக்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் உடற்கட்டுப் பயிற்சிகள் செய்தும் அதிகமாக எதுவும் முடியவில்லை.
‘’ மீண்டும் நீ 170 ராத்தலாகப் பெருத்துக்கொண்டு போவதாக ஒரு, அதீத உணர்வு,. நான் என்னமோ அதை விரும்புவது போல எண்ணிவிடாதே. கெப்ளர், நீட்டிப் படுத்துக்கொள், எவ்ளவு நேரமானாலும் பரவாயில்லை. எனக்குத் தெரியும், இந்த நங்கை உன்னை நன்கு கவனித்துக்கொள்வாள்.’’
மையப்பாதை வழியாக அவரது பரந்த முதுகினைத் தரையிறங்கும் படிக்கட்டு முகப்பில் பார்த்தேன். பனிப்பையை எடுத்துவிட்டுக் கால்களை முன்னும் பின்னுமாக அசைத்துத் தரைக்கு நீட்டினேன். நடுக்கம் கண்டுத் தலை சிறிது ஆடியது. ஆனால், அப்படியொன்றும் மோசமாக இல்லை. நிற்பது கடினமாக இருந்தது. நடப்பதோ, திகில்கனவுக்குள் தட்டுத்தடுமாறுவதாக இருந்தது. நான் பல்லைக் கடித்துக்கொண்டு, இருக்கைகளில் கையூன்றி மையப்பாதையில் முன்னும் பின்னுமாக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து நடைபழகிப் பார்த்தேன்.
இந்தக் கோளில் ஆறு மாதங்கள்! நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? உதவிப்பெண் முன்பகுதிக் கதவருகில் நின்று என்னைக் கவனிப்பதைக் கண்டேன். அவள் அங்கிருந்து போய்விடவேண்டுமென்று விரும்பினேன், ஆனால் அவளோ நான் அவளைப் பார்த்ததைக் கண்டு, மையப்பாதை வழியாக என்னை நோக்கி வந்தாள்.
‘’ஒரு சக்கர நாற்காலி கொண்டு வருகிறேன்.’’ அவளாகவே சொன்னாள்.      ‘’ இது ஒருவித நோய்க்கான அறிகுறி, குறை-ஈர்ப்புவிசை காரணமான ஒரு சிக்கலாக இருக்கும். இதுமாதிரி ஏற்கெனவேயே நிகழ்ந்திருக்கிறது, தெரியுமா, வாழ்க்கையில் பூமி-எடைக்குப் பழக்கமேயில்லாத முதல் நபர் நீங்கள்தானென்று நினைக்கிறேன்.
‘’ நன்றி, நான் சரியாகிவிடுவேன். கொஞ்சம் பழகவேண்டும், அவ்வளவுதான்.’’
‘’அது சரிதான், இங்கிருந்து கிளம்பும் முன் கைகால் கழுவிக்கொள்ள நினைப்பீர்கள், இல்லையா?’’ அவள் குறிப்பைப் புரிந்துகொண்டு, மையப்பாதையில் குளியலறையை நோக்கிப் பின் நகர்ந்தேன். நன்மை தரும் சிரமம் தான், நான் இயற்கைச்சீற்றப் பேரழிவுப் பகுதி போலாகியிருந்தேன். என்னுடைய மேற்சட்டையைக் கழற்றினேன். ஓடத்தில் பார்த்த பூமி-நாகரீகத்தோடு பார்த்தால், இது எவ்வளவு கனமான துணி, எப்படிக் காட்டுத்தனமாக வெட்டித் தைக்கப்பட்டிருக்கிறது? முகத்திலிருந்த  ரத்தக்கறையைக் கழுவி, இருக்கிற தலைமுடியைச் சீவிக்கொண்டேன். பூமித்தரத்தில் பார்த்தால் அது ஒரு தண்டனைக்கைதி வெட்டுதானென்றாலும், அது வளர்ந்துவிடும். கண்களுக்குக் கீழாகச் சில சிவப்புப்பொறிகள் தென்பட்டன. ஆனால் உதவிப்பெண் சொன்னதுபோல் ஒளிமங்கள் இன்னும் உருவாகத் தொடங்கவில்லை.
மேற்சட்டையை அணிந்துகொண்டு, தரையிறங்கும் படிக்கட்டை நோக்கி நகர்ந்தேன். சரிவாக இறங்கும் கம்பிகளைப் பற்றி நின்று கீழே பார்த்தேன். அயல்நாட்டு உயர்ரக ஆடைகளில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் வழக்கமாக வேடிக்கை பார்ப்பவர்கள் எனப் பெரிய கூட்டம் அப்பாவைச் சுற்றிநின்றது, எனக்குக் கீழே இறங்கத் தயக்கமாக இருந்தது. உண்மையிலேயே அந்தச் சரிவுப்பாதையின் முடிவில், ஒரு புதிய உலகமே தான்.
‘’நல்லதே நடக்கும்,’’ உதவிப்பெண் மென்மையாகக் கூறினாள். உண்மையில் அவள் மோசமானவள் அல்ல, புரிந்துகொள்வதில் கொஞ்சம் பழங்காலம், அவ்வளவுதான். நான் ஒரு புன்முறுவலோடு சமாளித்துவிட்டு, அப்பாவோடு சேர்ந்துகொள்ளச் சரிவில் இறங்கி நடந்தேன். குரல்களின் வேகப்புயல் மோதி என்னை மூழ்கடித்தது. ஒருவரையொருவர் கூச்சலிட்டே வீழ்த்திவிடலாம் என்பது போல இந்தப் பூமி மனிதர்கள் தாம் எவ்வளவு உரத்துப் பேசுகிறார்கள்!
‘’ ஆளுநர், அவர்களே, நிலவருக்கும் பூமியருக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகள் இணக்கம் காணமுடியாதவை என்கிறீர்களா?’’
‘’ நிச்சயமாக நான் அப்படிச் சொல்லவில்லை. மாறாக நமது சிக்கல்களை, மிகச்சரியாகத் தெளிவாகப் புரிந்துகொள்வதன் மூலம், நமக்கிடையிலான முரண்பாடுகளைச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியுமென்பதில் முழுமையாகக் கருத்தொருமிக்கிறேன்.’’
‘’ஐ.நா.வின் ஓட்டு உங்களுக்கெதிரானதாக அமைந்தால், என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?’’
‘’ அப்படியான ஒன்று நிகழும் சாத்தியம் இருப்பதாக இந்தக் கணத்தில்கூட நான் கருதவில்லை.’’
‘’ ஆளுநர் அவர்களே, இம்முறை பூமியில் எவ்வளவு நாட்கள் தங்குவதாக உத்தேசம்?’’
“ எங்கள் சிக்கல்களைப் பேசித்தீர்க்க ஆறு மாத காலம் ஆகலாமென நினைக்கிறேன், அப்படியே ஆனாலும் அது எங்களுக்கு அதிர்ஷ்.டம். ….’’
’கடைசி, கடைசியாக ஒரு கேள்வி, ஆளுநர் அவர்களே, இப்போது நீங்கள் மீண்டும் பூமிக்கு வந்திருக்கிறீர்கள், உங்களுக்கு உண்மையான வீடு என்பது, நிலவா அல்லது பூமியா? எங்கள் நேயர்களுக்காக இதைச் சொல்லுங்களேன்.’’
‘’ இது, பதில் சொல்ல மிகக் கடினமான கேள்வி. என்னுடைய பண்பாட்டு வேர்கள் எல்லாம் பூமியில் இருக்கிறது. ஆனால், புதிய உலகிற்குப் பறந்து, ஒரு தேசிய இனமாக உருவாகியுள்ள அனைத்துக் குடியேற்றவாசிகளையும் போல் புத்தம் புதிய உலகமான நிலவில்தான் எனது தற்காலமும் எதிர்காலமும் குடிகொண்டிருப்பதாகத்தான் கூறவேண்டுமென  நான் நினைக்கிறேன். என் மகன் அங்கேயேதான் பிறந்திருக்கிறான். என் மனைவி அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறாள். என்னுடைய பணி அங்கேதான் இருக்கிறது. ஆமாம், மேன்மக்களே, திரும்பவும் பூமிக்கு வந்திருப்பது நல்லதாக இருக்கிறது. ஆனால் நிலவுதான் எனது வீடு.’’
செய்தியாளர்களின் மத்தியில் நான் நசுங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அப்பா, வழக்கம்போலக் கையை நீட்டித் தன்னோடு இழுத்துக்கொண்டார். நாங்கள் இருவரும் சேர்ந்தாற்போல சூரியக்கதிர் பரந்த கான்கிரீட் இறங்குதளத்தில் நடந்தோம். சூரிய ஒளி என் உடல் மீது மெதுவான வெப்பத்தைப் பாய்ச்ச, எங்கள் நிழல்கள் எங்களுக்கும் முன்னால் மெல்லிய விளிம்புகளோடு நீண்டன. நான் மேல்நோக்கிப் பார்த்தேன். பொசுபொசு மேகங்களோடு வானம் மென்மையான இளநீலத்தில் என்னுடைய பழைய காணொளிச்சுருள்களில் இருந்தது போலவே தோற்றமளித்தது. அவை வானத்தின் குறுக்காக மெல்லப் பரந்து நகர்வது நம்பமுடியாத அழகோடிருந்தது. ஒரு வெள்ளை உருவம் திடீர் அம்பெனப்பாய்ந்து தோன்றி கிரீச்சிட்டது. நான் துள்ளி அப்பாவின் கையைப் பற்றிக்கொண்டேன்.
‘’ என்னது அது? . . . பறவை?’’
‘’ஆமாம், கெப்ளர், அது ஒரு கடற்பறவை, சீகல்’’
நான் உண்மையான காற்றை, புட்டிகளில் அடைக்கப்படாத ஒன்றைச் சுவாசித்துக்கொண்டு அப்பாவோடு நடந்தேன். விண்-ஆடை இல்லாமல் வெளியிலிருப்பது அற்புதமானது. அது சிறிது பயமளிப்பதாக இருந்தாலும் புத்துணர்வாக இருந்தது. பூமி முழுக்க வேடிக்கையாக, ஆர்வமூட்டுவதாக இருக்குமென்றே தோன்றியது. என் கால் மட்டும் இப்படி வலிக்காமல் இருந்தால் . . .
‘’ காந்தத்தொடர்வண்டிக்கு நிரம்பவும் தூரமா, அப்பா?’’
‘’ கொஞ்சம் பொறுத்துக்கொள், மகனே, இதோ நேராக இருக்கிறது,’’
காலைத்தூக்கி பெட்டிக்குள் ஏறியபின், இதன் நாட்டுப்புற மைத்துனிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதையும் நான் காணவில்லை. மரபுவழியான வாயுவேக விண்ணூர்தி, சுழல்விண்கலம், மற்றும் உள்ளக எரிசக்திப்பொறி என எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாதநிலையிலும் நிலவில்  காந்தத் தொடர்வண்டி உருவாக்கப்பட்டது. இதற்கும் மேலாக நாங்கள் காந்தப் பளுதூக்கி முறையில் முற்சுற்றிழுப்பு வேகத்தையும் மிகச்சரியாக அமைத்துள்ளதோடு நிலவின் மேற்பரப்பில் மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் எவ்வித ஒலிமாசும் ஏற்படுத்தாமல் எங்கள் தொடர்வண்டிகள் வலைப்பின்னல்களாகப் பரந்து இணைக்கின்றன.
அதே வழிமுறை உயிரிச்சமநிலை-அக்கறையுள்ள பூமியிலும் உற்சாகத்தோடு பின்பற்றப்பட்டது. அப்பாவின் செயற்பட்டியில் நிலவுக் கண்டுபிடிப்புகளுக்கு உரிமைத்தொகை கோரும் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஒரு பொருளாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நான் சாய்வாக அமர்ந்து பிரமிடுகள். தாஜ்மஹால், அங்கர்வாட் கோவில்கள் மற்றும் இன்காஸின் புதிர்நிறைந்த வனக்கல்லுருவாக்க அமைப்புகள் குறித்து சிந்தனையில் மூழ்கினேன். இவற்றையெல்லாம் பார்ப்பதற்கு ஆறு மாதங்கள் போதுமா?   திசை எட்டும் - இதழில் வெளிவந்துள்ளது.வேட்டைக்கத்தி, ஆதி பதிப்பகம், 2012, முதல் பதிப்பில் வெளிவந்துள்ளது. 
  

      
             


No comments:

Post a Comment