Saturday 9 January 2016

கொங்கணிச் சிறுகதை - காய்சான்வின் மாடுகள் Coisanv`s cattle


காய்சான்வின் மாடுகள் Coisanv`s cattle
                 கொங்கணி : தாமோதர் மௌசோ  DAMODAR MAUZO                         
ஆங்கிலம் : அகஸ்டோ பின்டோ AUGUSTO PINTO
தமிழில் ச. ஆறுமுகம்.
images (24)

(கொங்கணியின் தாமோதர் மௌசோ, மனிதநேய முகமற்ற வளர்ச்சிப் போக்கினால் சிதைகின்ற வாழ்க்கை, மற்றும் சமகால வாழ்க்கை அவலங்களையும் சுற்றுச் சூழலியக் கருக்களையும் படைப்புகளாக்குவதில் வெற்றி கண்டவர்.   மீனவர்களின் வாழ்க்கைச் சிக்கல்களைப் பேசும் அவரது `சுனாமி சைமன்`   நாவலுக்காக,  2011ல் விமலா வி பை விசுவ கொங்கணி சாகித்ய புரஸ்கார் விருது பெற்றவர். தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள  ஆங்கில மொழியாக்கம் நவ இந்து டைம்ஸ் 2012 ஜூலை இதழ்களில் இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.)
*********  
   
இரவில், மாடுகளைக் கொட்டிலில் அடைத்துக் கட்டிய பின், இனாசி, பின்வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந்தான். அடுப்பில்  குனிந்து புகையும் சுள்ளிகளை ஊதி எரியவைக்க முயன்றுகொண்டிருந்த காய்சான்வ், இனாசி நுழையும் சத்தம் கேட்டதும், ஆச்சரியப்பட்டாள்.
‘’ இனாசி, இன்னுமா மாடுகளைக் கட்டாமலிருக்கிறாய்!’’
“இப்போதுதான் கட்டிவிட்டு வருகிறேன்.’’ என முணுமுணுத்த இனாசி சுவரோரமிருந்த மரப்பெட்டியில் உட்காரப்போனான். காதில் செருகியிருந்த பீடியின் அடிக்கட்டையை எடுத்து வாயில் வைத்து தீக்குச்சியைக் கிழித்தான்.
‘’அப்படியா! அப்படியென்றால் ஏன் இன்னும் கத்தாமலிருக்கின்றன?’’ வியப்பில் கேட்டாள், காய்சான்வ்.
வழக்கமாக, மாடுகளைக் கட்டிய கணத்திலேயே, கத்தத் தொடங்கிவிடும். இன்று, இனாசி வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டான். ஆனாலும் மாடுகள் அமைதியாக இருக்கின்றன.
‘’ ஏனென்றால், அப்படிக் கத்துவதற்கு அதுகளுக்கு இன்று மூஞ்சியில்லை!’’
‘’என்ன நடந்தது?’’ காய்சான்வைப் பயம் பற்றிக்கொண்டது. ‘’ யார் வயலிலாவது மேய்ந்துவிட்டதா?...... அல்லது?’’
‘’வயலில் இல்லை – பாவ்லோவ் பட்கரின் தென்னந்தோப்புக்குள்! ஒன்றிரண்டு வாய் கடித்திருக்கும் போல. மாடுகளை விட்டுவிடச் சொல்லிக் கெஞ்சினேன், ஆனால் அவர் பதினைந்து ரூபாய் கொடுத்தால்தான் விடுவேனென்று மறுத்துவிட்டார். கடைசியில் அவர் வயலில் அரை நாள்  வேலைசெய்கிறேன் என்று தலையிலடித்துச் சத்தியம் செய்தபிறகுதான் அதுகளை விடுவதற்குச் சம்மதித்தார்.’’
காய்சான்வ் எதுவும் சொல்லவில்லை. அவள் காலையில் போட்ட கடுந் தேயிலையைச் சுடவைத்து, ஒரு தம்ளரை இனாசி முன் வைத்தாள். மாடுகள் அப்போதும் அமைதியாக இருந்தன.
‘’கசப்பு……ஒரே கசப்பு!’’ புகைநாற்றம் அடித்துக் கெட்டுப் போயிருந்த அந்தக் கறுப்புத்தேநீரை ஒரு வாய் குடித்த இனாசி முகம் சுழித்தான்.
ஆனால் காய்சான்வின் நினைப்பெல்லாம் வேறெங்கோ இருந்தது. ‘’மாடுகள் கத்திக் கூப்பிடவில்லை! இன்று அதுகளுக்குப் பசிக்கவில்லையா?’’
‘’அப்படியா நிறையத் தென்னங்கன்றுகளைத் தின்றுவிட்டன?’’
‘’நிறையக் கன்றுகளா? ஒன்று கூட இல்லை! அதுகள் செடிகளுக்குப் பக்கத்தில் கூட வாய் வைத்திருக்காதென்றுதான் நினைக்கிறேன். அது  எனக்கு இப்போதும் சந்தேகம் தான்.’’     
`என்ன!` காய்சான்வுக்கு அது திடீரென்று உறைத்துவிட்டது. ‘’அப்படியென்றால் பட்கர் மேலிருந்த கோபத்தையெல்லாம் மாடுகள் மேல் காட்டிவிட்டாயா?’’
அவள் கைக்காரியத்தை அப்படியே போட்டுவிட்டு பசுவும் காளையும் ஊமையாக நின்றிருந்த தொழுவத்தை நோக்கி ஓடினாள். வழக்கமாக அவளை நக்குவதற்காக அவற்றின் சொரசொரப்பான முரட்டு ரப்பர் நாக்குகளை நீட்டி வளைக்கும். ஆனால், இன்று இரண்டும் அமைதியாக நின்றன.
அவளின் பார்வையை அவை தவிர்க்க முயல்வதாக காய்சான்வ் உணர்ந்தாள். மாடுகளுக்குக் கூட கோபமா? என அவள் வியந்தாள். அவற்றின் முதுகில் கைகளை வைத்தாள். அவற்றின் உடல்கள் நடுங்குவதற்கு அதுவே போதுமானதாக இருந்தது. பசு முதலில் கனைக்கக் காளை அதைத் தொடர்ந்தது. அவள் பசுவின் கழுத்தில் ஒரு கையால் மெல்லச் சொரிந்து, `கிச்சு கிச்சு` மூட்டி, மறுகையால் காளையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். பசு அவளின் கையை நக்கத் தொடங்கியது. அவள் இலேசாகக் குனிந்து நெருக்கமாகப் பார்த்தாள். என்ன நடந்ததென்று சொல்ல அவற்றின் முதுகில் அடி விழுந்த தடம் எதுவுமில்லை. ஆனால் எந்த எந்த இடங்களில் கம்பு பாய்ந்து,பாய்ந்து அடித்திருக்குமென்று மிகச்சரியாக அவள் கைகள் சொல்லும்.
மாடுகள் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு, விடாமல் கத்தின. அவற்றுக்குப் பசி! அவற்றின் வயிற்றில்  எரிக்கின்ற நெருப்பு! அவற்றின் முதுகுகளைத் தட்டிக் கொடுத்த காய்சான்வ், ‘’சரி, சரி, அமைதியாகுங்கள்!’’ என்றாள்.
பின்னர், அவள் உள்ளே சென்றாள். இனாசி விறகு பிளந்து கொண்டிருந்தான்.
‘’இனாசி, புண்ணாக்கு தீர்ந்து போனது.’’
இனாசி பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் சொல்வதற்கு என்ன இருக்கிறது அல்லது செய்வதற்குத்தான் என்ன இருக்கிறது? மூன்று குழந்தைகள்…..கைக்கும் வாய்க்குமே  சரியாகப் போகிறது……. பசு பால் கொடுத்துக் கொண்டிருக்கும்போது புண்ணாக்கு வாங்க முடிந்தது. போன வருடம் அவர்களிடம்  ஏர் பூட்ட, இணையாக இரண்டு உழவு காளைகள் இருந்தன. அவற்றில் கறுப்புக் காளை கிறித்துமசின் போது இறந்து விட்டது. இல்லையென்றால், அவர்கள் உழவு மூலம் ஏதாவது கொஞ்சம் சம்பாதித்திருப்பார்கள். இப்போது பால் வற்றிப் போன ஒற்றைப் பசுவுக்கும் உபயோகமில்லாத காளைக்கும் அவன் எப்படி புண்ணாக்கு வாங்கிப் போட முடியும்?
`வீட்டில் கொஞ்சம் தவிடு இருக்கிறது. இனாசி, நான் போய்க் கொஞ்சம் கழுநீர் கிடைக்குமாவென்று பார்க்கிறேன்.’’
பக்கத்து வீட்டுக்காரர்களான நான்கு இந்துக் குடும்பத்தினர் அரிசி கழுவிக் களைந்த கழுநீரை அவளுக்காகத் தனியாக எடுத்து வைத்திருந்ததைக் கொண்டுவருவதற்குள் அநேகமாக ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்கான நேரமாகிவிட்டது. அவள் கழுநீர்ப்பானையுடன் வந்தாளோ இல்லையோ, மாடுகள் மீண்டும் கத்தத் தொடங்கிவிட்டன. காய்சான்வ் கழுநீர்ப்பானையை இறக்கிவைத்துவிட்டு, துணிப்பையில் தனியாக வைத்திருந்த தவிட்டை எடுத்து வந்தாள். தவிட்டை இரண்டு சமபங்காகப் பிரித்து மண் பானைகளில் கொட்டிக் கழுநீர் முழுவதையும் அதற்குள் கொட்டி, தவிடு நனைந்து, நன்கு ஊறிச் சேரும் வரை கையாலேயே கலக்கிப் பிசைந்தாள்.
இனாசி தொழுவத்துக்குள் வரும்போதும் மாடுகள் கத்திக் கொண்டேயிருந்தன. அவன் பீடித்துண்டை வீசியெறிந்துவிட்டு, மாடுகள் கட்டியிருந்த  இடத்தைச் சுத்தம் செய்தான். அவள் கழுநீர்த் தவிட்டைப் பிசைந்து முடித்ததும், இனாசி அந்தப் பானைகளைத் தூக்கிவந்து மாடுகளின் முன்பு வைத்தான். அவை, பேராவலோடு தீனியை விழுங்கத் தொடங்கின.           
காய்சான்வ் ஒரு பானைத் தண்ணீர் மொண்டுவர, கிணற்றுக்குச் சென்றாள். அதற்கிடையில் மாடுகள் பானையை நக்கிச் சுத்தமாகத் துடைத்துவிட்டன. பானைத் தண்ணீரை மாட்டுத் தொட்டியில் ஊற்றிவிட்டு, வீட்டுக்குள் சென்றாள். குழந்தைகள் வீட்டுக்கு வெளியே கச்சக்காலடித்துக் கொண்டிருந்ததைக் கேட்க முடிந்தது. அடுப்பில் கஞ்சி கொதித்துக் குமிழியிட்டது. அவள் தண்ணீருக்காகப் போயிருந்தபோது, இனாசி அதை அடுப்பில் வைத்திருக்கவேண்டும். அவனுக்காக உள்ளுக்குள்ளாகவே நன்றி சொல்லிக்கொண்டு, அவள் அவளது கைக் காரியங்களுக்குத் திரும்பினாள்.
அவள் கொஞ்சம் கருவாட்டைக் கங்குகளின் மீது வைத்துச் சுட்டாள். அவற்றை வெளியே எடுத்து, குப்பியின் அடியில் ஒட்டிக்கொண்டிருந்த கடைசி எண்ணெய்த் துளிகளை வெந்த கருவாட்டின் மீது ஊற்றினாள். உடனேயே அதிலிருந்து மூக்கைத் துளைக்கும் வாசம் கிளம்பியது.
‘’ஓ, இனாசோ!’’ வெளியிலிருந்து யாரோ கூப்பிட்டார்கள்.
‘’ வந்துகொண்டேயிருக்கிறேன்.’’ பதில் சத்தம் கொடுத்தான், இனாசி. அது பேதுரு. வீட்டின் வெளியே முகப்புத்திண்ணையில் உட்கார்ந்திருந்தான்.  உப்புக் கருவாட்டின் வாசத்தை இழுத்துக்கொண்டே கேலியாக, ‘’ ஓ, காய்சான்வ்! நான் விருந்துக்கு வந்திருக்கிறேன்.’’ என்றான்.
‘’வா,வா! இன்றைக்கு ரெம்ப விசேஷமான மீன்தான்!’’ எனப் பதில் கொடுத்தாள், காய்சான்வ்.
‘’ வாசம் சொல்கிறதே, எல்லாக் கதையையும்!’’ என்று சிரித்த பேதுரு ஒரு பீடியைப் பற்றவைத்தான். இதற்குள் இனாசியும் வெளியே வந்தான்.
‘’ மாடுகள் எங்கே, இனாசி?’’ பேதுருவின் கேள்வி காய்சான்வின் முதுகெலும்பில் நடுக்கத்தை ஏற்படுத்தியது. அதுகள் வேறு யாருடைய நிலத்துக்குள்ளும் போயிருக்காதே, ஒருவேளை போயிருக்குமோ? இல்லை. பேதுருவின் அடுத்த பேச்சு அவள் பயத்தை அகற்றியது.
‘’நாளை மறுநாள் மார்கோவில் புருமெந்து சந்தை. அதில்தான் சனங்கள் மழைக்காலத்துக்கு வேண்டிய மளிகை, விதை, உரம் எல்லாவற்றையும் வாங்குவார்கள். அங்கே என் எருமையை விற்றுவிடப் போகிறேன். நீயும் வருகிறாயா என்று கேட்கத்தான் வந்தேன்.’’
அத்தனை கவலைகள் இருந்தாலும், அவன் வெறுமையாக, ‘’ இல்லை, தாத்தா, இல்லை.’’ எனப் பதில் சொன்னான்.
ஆனாலும், அவனுக்குள் ஏதோ ஒன்று மாடுகளை விற்றுவிடச் சொன்னது. ஒற்றைக் காளை உழவுக்குப் பயன்படாது. பால் வற்றிய பசுவைப் பராமரிப்பது கடினம். ஆனால், காய்சான்வை உத்தேசித்து அப்படிச் செய்யவிடாமல், வேறு ஏதோ ஒன்று அவனை எச்சரித்தது. அவள் மாடுகளை, தான் பெற்ற     பிள்ளைகளைப் போலவே நேசித்தாள்.
‘’ இனாசி, கொஞ்சம் விவரமாக இருக்கப் பாரப்பா! நாளாக, நாளாகக் காளைக்கு வயது ஒன்றும் குறைந்துகொண்டே போகாது. நாளைக்கே அது செத்துப்போனால், என்ன செய்வாய்?’’. பீடிப்புகையை ஊதிக்கொண்டே, பேதுரு சொன்னான்.
இனாசி பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். பேதுரு சொல்வதைக் கேட்கக் கேட்க, உள்ளேயிருந்த காய்சான்வுக்கு எரிச்சல் மிகுந்தது.
‘’ நான் எருமைக்கடாவை விற்க வேண்டும். இந்த வருடம் விளைச்சல் நன்றாக இருந்ததென்று வை, அப்படியே ஒரு பால் எருமை வாங்கி விடுவேன். ஆனால், நீ என்ன செய்யவேண்டுமென்று நீயேதான் முடிவெடுக்க வேண்டும். ஒன்று மட்டும் நிச்சயம். இந்தச் சந்தையில் கிடைப்பதற்கும் மேலாகப் பின்னாடி, அதிகமொன்றும் கிடைத்துவிடாது. என் யோசனை, பசுவையும் காளையையும் விற்றுவிடுவதுதான் நல்லது. பின்னால் வேண்டுமானால், வாங்கிக்கொள்ளலாம்.’’
பேதுரு போய்விட்டான். ஆனாலும், இனாசி வீட்டுக்குள் நுழையவில்லை. பேதுரு சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் காய்சான்வ் கேட்டிருப்பாளென்று அவனுக்கு நன்கு தெரியும். ஆனால், இதை அவளிடம் சொல்வதற்கான தைரியம் அவனுக்கு இல்லையென்று அவன் நம்பினான்.
காய்சான்வ், குழந்தைகளை இரவுச் சாப்பாட்டுக்கு அழைத்தாள். கஞ்சியையும் சில கருவாட்டுத் துண்டுகளையும் அவர்களுக்குப் பரிமாறினாள்.
‘’ காய்சான்வ், ஒரு நிமிடத்தில் வந்துவிடுவேன்….’’
இனாசி எங்கே போகப் போகிறானென்று அவளுக்கு மிகச் சரியாகத் தெரியும் அவள் அடுப்பின் பக்கத்தில் அமர்ந்து, பேதுரு சொன்னவற்றை யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பசுவும் இரண்டு காளைகளும். அவள்தான் அதுகளை எவ்வளவு நேசித்தாள்! அவைகளுக்காக அவள், ஏன் இனாசியும் கூடத்தான், எவ்வளவு தியாகம் செய்திருக்கிறார்கள்? மாடுகளின் வயிறு நிறையவேண்டுமே என்பதற்காக எத்தனையோ நாட்கள் அவர்கள் சாப்பிடாமல், பசியோடு கழித்திருக்கிறார்கள். இந்தக் கஷ்டமெல்லாம், கிறித்துமசுக்குக் கொஞ்சம் முன்னால், பாம்பு கடித்து ஒரு காளை இறந்ததால்தான். கார்னிவலுக்குப் பிறகு பசுவும் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இப்போது …
அவர்களுடைய உழைப்பெல்லாம் அவர்களுக்கும் மூன்று குழந்தைகளுக்குமே சரியாகப் போகும்போது, அவர்கள் மாடுகளைப்பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? விலைவாசி உயர, உயரப் போய்க்கொண்டேயிருக்கிறது. இப்போது மே மாதம் முடியப் போகிறது. நிலத்தில் விதைப்பதற்கென அவர்கள் குன்றிமணியளவுக்குக் கூட எந்த ஒரு  பொருளையும் வாங்கியிருக்கவில்லை. அநேகமாகச் சனங்கள் எல்லோரும் விதை வாங்கிவிட்டார்கள். ஒருசிலர் மழையை இன்னும் முன்பாகவே எதிர்பார்த்து விதைக்கக்கூடச் செய்துவிட்டார்கள் ஆனால், அவளது நிலம் தரிசாகவே கிடக்கிறது. அக்கம் பக்க, நிலத்துக்காரர்கள், ‘’எப்போது விதைக்கப்போகிறீர்கள்? எப்போது ….?’’  என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால், விதை, உரம், கூலியாட்கள், எல்லாவற்றுக்கும் பணம், பணம் வேண்டுமே! பணம் எங்கேயிருந்து வரப் போகிறது? எப்படியானாலும், நிலத்தில் பயிர் செய்தாக வேண்டும்.  போன வருடம் அந்த நிலத்தைப் பயிரிட்டதால்தான், இந்தக் கடைசி மாதங்கள் வரையிலும் குழந்தைகள் கஞ்சித் தண்ணீரைக் கண்ணாலேயாவது பார்க்க முடிகிறது, இல்லையென்றால்……. நிலத்தை எப்படியாவது பயிரிட்டாக வேண்டும். பருவ மழை எப்போது வேண்டுமானாலும், இப்போதே கூடத் தொடங்கிவிடும்….. நாளை மறுநாள் புருமந்து சந்தை…….
இனாசி மதுக்கடையில் கொஞ்சமாக, ஒரு கிண்ணம் மட்டும் குடித்துவிட்டுத் திரும்பியிருந்தான். காய்சான்வ் கஞ்சியை ஊற்றும்போது, அவன் கண்கள் கஞ்சிப்பானைக்குள் கணநேர நோட்டமிட்டன. அவள் இன்னும் கொஞ்சம் ஊற்ற அகப்பையை எடுத்தபோது, ‘’ இல்லை, வயிறு நிறைந்துவிட்டது.’’ என்றான்.
அவன் ஏன் கஞ்சியைப் போதுமென மறுத்தானென்று காய்சான்வுக்குத் தெரியும், இல்லையென்றால் அவளுக்கு எதுவும் மிஞ்சியிருக்காது. ஆனால், பசி, சாப்பிடும் ஆசை, அவளைவிட்டு எப்போதோ போயிருந்தது. அவள், ‘’ நான் சாப்பிட்டுவிட்டேன் இனாசி, நீ இதை முழுவதும் குடித்துவிடு. நாளைக்கு நீ வேலை செய்ய வேண்டாமா?’’ என்றாள்.
‘’என்னிடம் பொய் சொல்லாதே. அதைச் சாப்பிடு.’’ இனாசி எழுந்துவிட்டான்.
அவள், வேண்டாவெறுப்பாகக் கஞ்சியை விழுங்கி, அடுப்பின் தணலை அவித்துவிட்டு, வெளியே சென்றாள். குழந்தைகள் நல்ல தூக்கத்திலிருந்தனர். இனாசி சுவரில் சாய்ந்து அமர்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்தான்.
‘’இனாசி, நாளை மறுநாள் புருமந்து சந்தை.’’
இனாசி பீடியை உதட்டிலிருந்தும் எடுத்துச் சிறிது  புகையை ஊதி, வெளியேற்றினான், ஆனால், எதுவும் பேசவில்லை. அவன் நெஞ்சுக்குள்ளும் அதே சிந்தனைதான் வதைத்துக்கொண்டிருந்தது.
‘’ நீ மாடுகளைக் கொண்டு போகத்தானே போகிறாய், இல்லையா?’’ இனாசி அதிர்ந்துவிட்டான். காய்சான்வ் கிண்டல் செய்கிறாளா அல்லது அவனை வதைக்கிறாளா அல்லது நோட்டம் பார்க்கிறாளா …… அவன் முழுத் தீர்மானமாக முடியவே முடியாதெனத் தலையை அசைத்து மறுத்தான்.
‘’என்ன? `இல்லையா`! முட்டாள் தனமாகப் பேசாதே’’ அவள் இனாசியிடம் பேசிக்கொண்டுதானிருக்கிறாள். ஆனால், உண்மையில் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்கிறாள்.
‘’மாடுகளை விற்காமல், வேறென்ன செய்ய முடியும்? நீ நிலத்தில் பயிரிடப் போகிறாயா, இல்லையா? நமக்குப் பணம் வேண்டும். இல்லையென்றால், விதையும் உரமும் எங்கிருந்து வரும்? உங்க அப்பனிடமிருந்தா?’’
இனாசி வியப்பில் திகைத்துப் போனான். இவ்ளவு நேரமும் அவனும் இதே மாதிரியே தான், ஆனால், சொல்லப் பயந்துகொண்டிருந்ததை, அவள் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
‘’ என்ன, கிண்டலா!’’ என்று உள்ளடங்கிய குரலில் அவன் கேட்டான்.
‘’ கிண்டலடிக்கிற நேரமா, இது? நாளை கழிந்ததும், விடிகாலைக் கருக்கலிலேயே மாடுகளோடு புறப்பட்டுவிடு. நானும் வரவா?’’
‘’நீ வரவேண்டுமென்றில்லை.’’ எனப் பதில் சொன்னான், இனாசி. அவனுக்கு அப்பாடா என்றிருந்தது. அவள் ஒத்துக்கொள்ளமாட்டாளோ என்று தான் அவன் இந்தப் பேச்சையே தொடாமல் இருந்தான். இப்போது காய்சான்வ், அவளாகவே, விற்குமாறு யோசனை சொல்லிவிட்டாள். இனாசி படுத்ததும் அயர்ந்து தூங்கிவிட்டான். விளக்கை அணைத்துவிட்டு, காய்சான்வும் படுத்தாள். அவளது விம்மல்களை, அழுகைப் பெருமூச்சுகளை இனாசி அறியவில்லை.
அடுத்த நாளுக்கு முடிவேயில்லையென்பது போல, நகரவே நகராதது போலத் தோன்றியது. மேரி சாந்தன் அதிகாலையில் வந்தார்.
‘’ஓ காய்சான்வ்! வானத்தில் மூட்டம் போட்டிருப்பதை நீ இன்னும் பார்க்கவில்லையா? நான் நிச்சயமாக அடித்துச் சொல்வேன், இந்த வருடம் முன்கூட்டியே மழை  வந்துவிடும்.’’
‘’ ஆமாம், இருக்கும்.’’
‘’நீ விதைக்கப் போவதில்லையா?’’
‘’புருமெந்து சந்தைக்குப் பிறகு…..’’
‘’ சீக்கிரம் செய்தால் நல்லது, என் பொன்னு மக்களே! மழை எப்போது வேண்டுமானாலும், இப்போதே கூடத் தொடங்கிவிடும். சிலர் ஏற்கெனவே விதைத்துவிட்டார்கள். கேள்விப்பட்டாயா, எல்லோரும் உரத்துக்கு அலைமோதிக்கொண்டிருக்கிறார்கள். அநேகமாகத் தட்டுப்பாடு வரும். நீ இப்போதே கொஞ்சம் வாங்கி வைத்துக்கொள்.’’
காலையில் மேரி சாந்தன், மாலையில் கேய்ற்றனோ வந்தாள்.
‘’ நாற்று வாங்கிவிட்டாயா, காய்சான்வ்?’’
‘’ இன்னும் வாங்கவில்லை.’’
‘’ உனக்குக் கொஞ்சம் வேண்டுமா?’’
‘’ உங்களிடம் இருக்கிறதா?’’
‘’ என்னிடம் இல்லை, பெப்தோ சாந்தனிடம் இருக்கிறது. உனக்கு வேண்டுமென்றால், இப்போதே போய் அவரிடம் கொஞ்சத்தைத் தனியாக வைக்கும்படி சொல்லிவிடுவது நல்லது.’’
‘’ முதலில், இனாசி என்ன சொல்கிறார்னு பார்க்கவேண்டுமே, ‘’ என்றாள், காய்சான்வ்.
அன்று காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை. மாலையில் காய்சான்வ், அவளாகவே அழைத்துச் சென்று, மாடுகள் மேய்வதை வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர், அவள், ஒரு சிறிய மரப்பெட்டியில் ஒளித்துவைத்திருந்த சில நாணயங்களைத் திரட்டி, ஒரு கிலோ புண்ணாக்கு வாங்கினாள். முன்காலத்திலெல்லாம் ஒரு ரூபாய் கொடுத்தால் ஒரு கிலோ புண்ணாக்கு போக உடம்புக்கான ஒரு சோப்பு வாங்குவதற்கும் மிச்சமிருக்கும். இப்போது, சோப்பை விடுங்கள், அந்த ஒரு ரூபாய், ஒரு கிலோ புண்ணாக்குக்கே பற்றாது. ஏறிக்கொண்டே போகும் விலைவாசிக்காக கடைக்காரனைத் திட்டிச் சாபமிட்டுக்கொண்டே, அவள் புண்ணாக்கைத் தண்ணீரில் ஊறவைத்தாள். இனாசியை வீட்டில் தனியே விட்டுவிட்டு, அவள் கழுநீர் கொண்டுவர பக்கத்து இந்து குடும்பங்களின் வீடுகளுக்குச் சென்றாள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவள், ‘’ இனிமேல் எனக்குக் கழுநீர் வேண்டாம். நாங்கள் மாடுகளை  நாளைக்கு விற்கப் போகிறோம்.’’ எனக் கண்ணீர் மல்கச்  சொல்கிறாள்.
அன்று மாலை, மாடுகள் வயிறு நிறையத் தின்றன. பின்னர், இனாசியும் காய்சான்வும் வீட்டுக்குத் திரும்பினர். இருவருமே மனம் தளர்ந்திருந்தனர். அவர்கள், அந்த வாயில்லாப் பிராணிகள் இரண்டையும், அவர்களது சொந்தக் குழந்தைகளைப் போல அத்துணை அன்பும், அக்கறையுமாக வளர்த்திருந்தனர். எஞ்சியிருப்பதைக் காப்பாற்றுவதற்காக, இப்போது அவற்றை விற்கவேண்டியிருக்கிறது………
அன்று இரவு முழுவதும் அவள் கண்ணிமைக்கும் நேரம் கூடத் தூங்கவில்லை. விடிகாலைக் கருக்கலிலேயே அவள் எழுந்து அடுப்பு மூட்டி, தேநீர்க் கெட்டிலைக் கொதிக்கவைத்தாள். தொழுவுக்குச் சென்று இரண்டு மாடுகளுக்கிடையிலுமாக அமர்ந்து அழுதாள். இனாசி எழுந்துவிட்ட சப்தம் கேட்டதும், உள்ளே சென்று தேநீர் தயாரித்தாள். அவர்கள் அடுப்பின் பக்கத்திலேயே அமர்ந்து அமைதியாகத் தேநீரை அருந்தினர்.
வெளியே, ரோட்டில் ஏற்கெனவேயே சிலர் சென்றுகொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. பிலிப், ஹரியோடு பேதுருவும் சந்தைக்கு அவரவர்  மாடுகளை ஓட்டிக்கொண்டு போகின்றனர். இனாசி சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டே, ‘’ வயலுக்குப் போய், வரப்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று இன்னும் ஒருமுறை பார்த்து சரிப்படுத்து. நமக்கு நாற்று வேண்டுமென பெப்தோ சாந்தனுக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்பிவிடு. நாளைக்கு மழை பெய்தாலும், நாம் மறுநாளே நடவு செய்துவிடலாம்.’’ என்றான்.
காய்சான்வ் கேட்டுக்கொண்டுதானிருந்தாள்; ஆனால், அவள் நெஞ்சு முழுவதும் தொழுவத்தில் இருந்தது.
பேதுரு கூப்பிட்டான், ‘’ ஓ இனாசோ!’’
தொழுவுக்குப் போய், இனாசி மாடுகளை அவிழ்த்து வெளியே கொண்டு வந்தான். காய்சான்வால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அவள் மாடுகளை நோக்கி ஓடிச்சென்று பசுவைக் கட்டிக்கொண்டாள். காளை அவளை நெருங்கிவந்து நக்கத் தொடங்கியது. அதனாலேயே அவள் கண்களில் கண்ணீர் முட்டி, அணை உடைந்து ஆறாகப் பாய்வது போல் அவள் அழுதாள். அவள் அடக்க முடியாமல் விம்மித் தேம்பினாள்.
‘’காய்சான்வ், தயவுசெய்து நீ முதலில் உள்ளே போ,’’ என்று இனாசி வெடுக்கென விழுந்தான்.
காய்சான்வ் ஒருசில தப்படிகள் முன்வைத்தாள். பின் அப்படியே நின்றுவிட்டாள். இனாசி மாடுகளை இழுத்தான். பேதுரு ஏற்கெனவே கொஞ்ச தூரம் சென்றுவிட்டிருந்தான். இனாசி அவசரப்பட்டான். மாடுகளை இழுக்க, அவன் கயிற்றைக் கஷ்டப்பட்டு இழுக்கவேண்டியிருந்தது. அவை தங்களைக் கூட்டிச் செல்ல வேண்டாமென்று ஊமையைப்போல் இரங்குவதாக காய்சான்வ் உணர்ந்தாள். இனாசி அவனது வலிமையையெல்லாம் திரட்டி இழுத்தான். காய்சான்வ், ‘’வேண்டாம். இனாசி அவைகளை விட்டுவிடு, கொண்டு செல்லவேண்டாம்……’’ எனச் சொல்ல நினைத்தாள். ஆனால், அவள் தொண்டையிலிருந்து விம்மல்களைத் தவிர வேறெந்தச் சத்தமும் வரவில்லை. அவளது கால் மூட்டுகள் வலுவிழந்து மடிய அவள் அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள்.
இப்போது நல்ல பகல் வெளிச்சமாகிவிட்டது. காய்சான்வ் எல்லாவற்றையும்  மறக்க,   இதயத்தை இரும்பாக்கிக் கொண்டாள். குழந்தைகளுக்குத் தேநீர் கொடுத்துவிட்டு வயலுக்குச் சென்றாள். மண்ணைக் கொத்தி மிருதுவாக்கிப் பின் வரப்புகளில் அணைத்துச் செம்மைப்படுத்தினாள். அரைநாள் அங்கு வேலை செய்த பிறகு, மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்குத் திரும்பினாள். பிற்பகலில் அவள் கேய்ற்றனோவின் வீட்டுக்குப் போய், அவளுக்கு நாற்று வேண்டுமெனச் சொல்லிவிட்டு, உரம் பற்றி விசாரிக்க, உரக்கடைக்குப் போனாள். உரம் சீக்கிரம் தீர்ந்துவிடுமோ என்ற பயத்தில் தனக்கெனக் கொஞ்சத்தைத் தனியாக எடுத்து வைக்குமாறும் மறுநாள் கண்டிப்பாக வந்து வாங்கிக்கொள்வதாகவும் உரக்கடைக்காரரிடம் வேண்டிக்கொண்டாள்.
வீட்டுக்குத் திரும்பியதும் அவள் மாடுகளை நினைக்கத் தொடங்கினாள். மனம் அலைவுற்றதில் தொழுவுக்குப் போனாள். காலியான தொழுவைப் பார்க்கச் சகிக்காமல் வீட்டுக்கே திரும்பினாள். ‘’அப்படியொரு நல்ல பிராணிகள். அதுகளைப்போய் விற்பதற்கு எப்படிச் சம்மதித்தேன்? அதுகள் மனிதர்களைப் போல எவ்வளவு பிரியமாக ………. பேதுரு மட்டும் அன்று வராமலிருந்திருந்தால் நாங்கள் இதைப்பற்றி நினைத்துக்கூட இருக்கமாட்டோம்.’’ அவள் பேதுருவைத் திட்டிச் சாபமிட்டாள். பின் இனாசியையும் திட்டி, பின் தன்னைத் தானே நொந்துகொண்டாள். பின்னர் எழுந்து கொஞ்சம் கஞ்சி காய்ச்சத் தொடங்கினாள்.
கஞ்சிக்காக அரிசியைப் பானையிலிட்டுக்கொண்டே ‘அப்படித்தான் ஆகட்டும். மாடுகள் தொலையட்டும். அப்படியாவது இந்த வருடத்துக்கு கொஞ்சமாவது சாப்பிடலாம்.’’ என முணுமுணுத்தாள். கதிரொளி மறைந்து, வீட்டுக்குள் இருட்டு பரவத் தொடங்கியது. காய்சான்வின் நினைவுகளே அவளை வதைக்கத் தொடங்கின. ‘’ அந்தப் பசு கொடுத்த பாலில்தானே குழந்தைகளை வளர்த்தோம்! பால் விற்றதில்தான் குடும்பத்தை ஏதோ கொஞ்சம், பார்த்துக்கொள்ள முடிந்தது.  கஷ்ட காலத்திலெல்லாம் காளை உழுத பணம்தான் கைகொடுத்தது. இப்போது, நாமே அதைக் கொடுமையிலும் கொடுமையாக விற்கப்போகிறோம். எவ்வளவு அன்பான பிராணிகள்! கடவுள் மன்னிப்பார்! ஏதோ ஒரு நம்பிக்கை, சந்தையில் அதுகளை வாங்குவதற்கு யாரும் வரமாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். அதுகள் வீட்டுக்கு வந்துவிடும்….’’ காய்சான்வ் பிரார்த்தனை செய்து, செய்து தன்னைத் தேற்றிக்கொண்டாள்.
ஏஞ்செலசும் கடந்து நெடுநேரமாகி விட்டது. இனாசி திரும்புகிற நேரம்தான். ஆனால், காய்சான்வுக்கு வெளியே உட்காரப் பிடிக்கவில்லை. விளக்கைப் பொருத்தவும் தோன்றவில்லை. அவள் இருட்டிலேயே உட்கார்ந்திருந்தாள்.
மாடுகள் விற்காமல் திரும்பி வருவதொன்றும் அபூர்வமல்ல. ஆனால், நம்முடைய மாடுகள் கதையே தனி. அவ்வளவு அன்பானவை. அதைப் பார்க்கின்ற யாரும் உடனே வாங்கிவிடுவார்கள். நான் எப்படிச் சம்மதித்தேன்?..... ‘’ இந்த நினைவுகள் அவள் நெஞ்சைக் கடித்துக் குதறின. தூரத்தில் மணிகளின் டிங், டிங் சத்தம் அவள் காதில் விழுந்தது. காய்சான்வ் வெடுக்கென வெளியே வந்தாள். பேதுரு வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால், இனாசி வந்துகொண்டிருந்தான். பேதுருவின் எருமைதான் திரும்பி வருகிறதென இருட்டில் அவள் நினைத்துக்கொண்டாள். ஆனால், பேதுருவின் எருமை கழுத்தில் மணி இல்லையென்பதை அவள் மறந்திருந்தாள்.
மாடுகளை வாங்க வாடிக்கையாளர் யாரும் இல்லையென்பது, காய்சான்வுக்கு மகிழ்ச்சியளிக்குமென, இனாசி மாடுகளுடன் வீட்டுக்கு விரைந்துவந்தான்.
காய்சான்வ் அமைதியாக மாடுகளைப் பார்த்தாள். வயல், நாற்று, உரம் எல்லாம் அவளைச் சுற்றிச்சுற்றி வந்தன. அவளை நக்குவதற்குப் பசு நாக்கை நீட்டியது.
‘’ அடத், தேவ்டியா! தேவ்டியாப் பசங்களா! இப்ப எங்களுக்கு என்னாகும்னே தெரியலையே, எப்படிப் பயிர் செய்யப் போறோம்? என்னத்தைத் திங்கப் போறோம்? செத்தாவது தொலையக்கூடாதா? உங்களுக்கு வேறே யார் தீனி போடுவது?’’ வெடித்த காய்சான்வ், மாடுகளைக்  காட்டுத்தனமாக இரு கைகளாலும் குத்திக் குத்தித் தாக்கினாள்.                                                                
           ’
     








The Navhind Times, July 2012, retrieved from URL http://www.navhindtimes.in/zest/coisanvs-cattle)


 மலைகள் இணைய இதழ் 37 (நவம்பர்) இல் வெளியானது.
மக்கள் புதுமுரசு  (சனவரி 2014) பொங்கல் இதழிலும் வெளியானது. 

No comments:

Post a Comment