Tuesday 5 January 2016

தென்கொரியச் சிறுதை - மோபியஸ் பட்டைச்சுருள் (The Möbius Strip)


மோபியஸ் பட்டைச்சுருள் (The Möbius Strip)
தென்கொரிய ஆங்கிலம் : சோ சே-ஹ்யு ஐ  (CHO SE-HU˘I) (தென் கொரியா)
தமிழில் ச. ஆறுமுகம்



சோ சே-ஹ்யு ஐ  (CHO SE-HU˘I)

சோ சே_ஹ்யு ஐ தென்கொரியாவில் கேப்யாங் கியாங்கி – தோ வில் 20.08.1942 ல் பிறந்தவர். சியோல் நகரில் கியாங்கி பல்கலைக் கழகத்தில் பயின்றவர். முதன் முதல் கொரிய மொழியில் பயின்ற தலைமுறையைச் சேர்ந்தவர்.
இவரது எழுத்து மீமெய்மையாகத் தோன்றுவதெனினும் வெளிப்படையாகவும் அடர்த்தியற்றுச் சிதறியதாகவும் உள்ளது. இவரது புகழ்பெற்ற படைப்பு குள்ளன் (The Dwarf) நாவலாகும். `குள்ளன்`  தனித்தனியாக வெளியிடப்பட்ட சிறுகதைகள் அடங்கிய ஒரு இணைப்பு நாவல். அதாவது தனியாக நிற்கும் சிறுகதைகள் ஒன்றுக்கொன்று துணைநிற்பதாகவும் அமையும்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள மோபியஸ் பட்டைச் சுருள், அவரது மிகச் சிறந்த கதைகளில் ஒன்று.
****************
கணித ஆசிரியர் வகுப்பில் நுழைந்தார். அவர் பாடப்புத்தகம் எடுத்துவராததை மாணவர்கள் கவனித்தனர். அவர்கள் அந்த ஆசிரியர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்தப் பள்ளியில் மாணவர்களின் நம்பிக்கையை வென்ற ஒரே ஆசிரியர், அவர் மட்டுமே.
‘’பெருந்தகையினரே’’, அவர் தொடங்கினார். ‘’இது உங்களுக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்துகொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே உண்மையாகவே உங்கள் கவனத்தைப் படிப்பின் மீதுதான் வைத்திருந்தீர்கள். அப்புறம், இந்த ஆண்டின் கடைசி வகுப்பான இன்று கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்பில்லாத சிலவற்றைப் பற்றிப் பேசப் போகிறேன். சில புத்தகங்களைப் படித்ததிலிருந்தும், நான் தெரிந்துகொண்ட சிலவற்றைப் பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் ஒரு கேள்வியை உங்கள் முன் எழுப்புவதன் மூலம் அதை நான் தொடங்க அனுமதியுங்கள்:
இரண்டு சிறுவர்கள் ஒரு புகைபோக்கியைச் சுத்தம் செய்து அப்போதுதான் முடித்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் அவனது முகத்தை இரவைப் போலக் கறுப்பாக்கிக்கொண்டு புகைபோக்கியிலிருந்தும் இறங்குகிறான். அடுத்தவன் முகத்தில் எந்தக் கறையும் இல்லாமல், கரியின் அடையாளம் எதுவுமில்லாமல் இறங்குகிறான். இப்போது, பெருந்தகையாளர்களே, அவர்களில் முகத்தைக் கழுவுபவன் யாராயிருக்குமென  நீங்கள் நினைக்கிறீர்கள்?’’  
மாணவர்கள் வகுப்பறையின் தலைவாசல் மேடையில் நின்றுகொண்டிருந்த ஆசிரியரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் பதிலளிக்க முந்துவதாகத் தெரியவில்லை.
கண நேர அமைதிக்குப் பின் மாணவர்களில் ஒருவர் எழுந்தார்.
-    அழுக்கடைந்த முகத்தினன்.
-    அது இல்லையே, என்றார் ஆசிரியர்
-    ஏன் இல்லை? மற்றொரு மாணவர் கேட்டார்.
ஆசிரியர் விளக்கினார்.
-    புகை போக்கியிலிருந்து இரண்டு சிறுவர்கள் இறங்கினர்; ஒருவன் சுத்தமான முகம்; மற்றொருவன் அழுக்கான முகம். அழுக்கான முகம் கொண்டவன் சுத்தமான முகமுடையவனைப் பார்த்து, தன் முகமும் சுத்தமாக இருக்குமென முடிவு செய்கிறான். சுத்தமான முகத்துடனிருப்பவனோ அழுக்கான முகத்தினனைப் பார்த்துத் தன் முகமும் அழுக்காக இருக்குமென முடிவுசெய்கிறான்.
மாணவர்கள் வியப்பில் மலைத்துப்போனார்கள். அனைத்துக் கண்களும் உயர் மேடையில் நின்ற ஆசிரியர் மீதே நிலைத்தன.
-நாம் அதையே இரண்டாம் முறையாக முயற்சித்துப் பார்ப்போம்: இரண்டு சிறுவர்கள் ஒரு புகைபோக்கியைச் சுத்தம் செய்து அப்போதுதான் முடித்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் அவனது முகத்தை இரவைப் போலக் கறுப்பாக்கிக்கொண்டு புகைபோக்கியிலிருந்தும் இறங்குகிறான். அடுத்தவன் முகத்தில் எந்தக் கறையும் இல்லாமல் கரியின் அடையாளம் எதுவுமில்லாமல் இறங்குகிறான். இப்போது, பெருந்தகையாளர்களே, அவர்களில் முகத்தைக் கழுவுபவன் யாராயிருக்குமென  நீங்கள் நினைக்கிறீர்கள்?’’  
அதே கேள்வி!
இப்போது ஒரு மாணவர் உடனேயே எழுந்தார்.
-    சுத்தமான முகமுடையவன் தான் என்று நாம் ஏற்கெனவேயே பார்த்துவிட்டோமே!
ஆசிரியர் என்ன மறுமொழி சொல்லப்போகிறாரென மாணவர்கள் எல்லோரும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
-    இல்லை, அது தவறு.
-    ஏன்?
-    அந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவேண்டிய அவசியமே எழவில்லை. அது எப்படியென்று தயவுசெய்து கவனமாகக் கேளுங்கள். அதே புகைபோக்கியை இரு சிறுவர்கள் சேர்ந்து சுத்தம் செய்தனர். அதனால், ஒருவன் சுத்தமான முகத்தோடும் மற்றவன் அழுக்கான முகத்தோடும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை.
ஆசிரியர், இப்போது, சாக்குத்துண்டு ஒன்றை எடுத்துக் கரும்பலகை மீது `மோபியஸ் பட்டைச்சுருள்` என எழுதினார்.
-பெருந்தகையினரே, இது உங்கள் பாடப்புத்தகத்தில் தெரிந்துகொண்ட ஒன்றுதான். ஆனால், கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்புடையதல்ல என்பதால், நான் என்ன சொல்லப்போகிறேனென்று, சற்று நிதானமாகக் கவனியுங்கள். இப்போது ஒரு பரப்பு என்பது உட்பரப்பாகவோ வெளிப்பரப்பாகவோ இருக்கலாம். இல்லையா? எடுத்துக் காட்டாக ஒரு காகிதத்திற்கு முன்பக்கமும் பின்பக்கமும் இருக்கிறது; பூமி உருண்டைக்கு உட்புறம் வெளிப்புறம் இருக்கிறது. நீங்கள் ஒரு வெற்றுத் தாளை எடுத்து ஒரு நீள் செவ்வகப் பட்டையாக வெட்டியெடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், அதன் இருமுனைகளையும் உட்பக்கம் வெளிப்பக்கம் எனப் பாகுபடுத்த முடியாதபடி இரண்டையும் திருகலாக இணைத்து ஒட்டிவிடுங்கள்.  இப்போது உங்களிடமிருப்பது ஒரு ஒற்றை வளைபரப்பு மட்டுமே. இதுதான் பெருந்தகையாளர்களே, உங்கள் பாடப்புத்தகத்திலிருந்தும் நீங்கள் தெரிந்துகொண்ட மோபியஸ் பட்டைச் சுருள். தனித்தனியான உட்புறம் மற்றும் வெளிப்புறம் என்றில்லாத இந்த வளைபரப்பு குறித்து இப்போது நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
சப்பாணி மொச்சை வயலுக்குள் நுழைந்தான். பகல் வெளிச்சம் அப்போதும் இருந்தது. அவனால் நன்கு முதிர்ந்த பல கொத்துகளைக் காம்போடு, நிறையவே பறிக்க முடிந்தது. களைகள் மிகவும் அதிகமாக இருந்தன. கொத்துக் காம்புகளை அக்குளுக்குள் அடக்கிக்கொண்டு ஊடுசால்களின் நடுவே கைகளாலும் அவனுடைய மடங்கிய கால்களாலும் ஊன்றி ஊன்றி விரைவாக நகர்ந்தான். களைகளிலிருந்து விதைகள் வெடித்து விழும் சப்தம் அவன் காதுகளில் கேட்குமளவுக்குப் பெருத்த  அமைதி நிலவியது. மொச்சை வயலா அது? களைகளின் காடாக அல்லவா இருந்தது. மொச்சை வயலுக்குள்ளிருந்து பழுப்புச் செங்காவி நிறத்தில் அழுக்காகிக் கிடந்த சாலைக்கு வந்து சேர்ந்த சப்பாணி மொச்சைக் கொத்துகளைக் கைளில் எடுத்தான். எரியும் விறகின் மணத்தை, ஒரு நல்ல, இனிய, மென் மணத்தை அவன் முகர்ந்தான். வானம் இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. மொச்சை வயலுக்குள் பாய்வதற்கு முன்பாகவே, அவன் பற்றவைத்திருந்த விறகு ஒளிரும் சிவப்பாக எரிந்துகொண்டிருந்தது. அவன், நெருப்பின் மேலாக உலோகத் தட்டு ஒன்றை வைத்தான். பின்னர் மொச்சைக்காய்களை உரித்து விதைகளை எடுத்து வறுக்கத் தொடங்கினான். விறகு எலும்புத்துண்டாக உலர்ந்திருந்தது. புகைக்கீற்றென்று ஒன்றுகூட இல்லாதபடி அது எரிந்தது. சில மணி நேரத்துக்கு முன்னால் அந்த மரம் தான் கூனன் வீட்டு வராந்தாவாக இருந்தது.
 கல்லுடைக்கும் பெரும்பூடச் சுத்தியல்(சம்மட்டி)களுடன் வந்த மனிதர்கள் கூனனின் வீட்டை உடைத்து நொறுக்கிவிட்டனர். அவர்கள் சுவர் ஒன்றைத் தூள் தூளாகச் சிதைத்து விட்டுப் பின்வாங்கியதும் வடக்குப் பார்த்த கூரை நொறுங்கி விழுந்தது. அவன் வீட்டை இடிப்பதற்கு அவர்கள் செய்யவேண்டியிருந்தது அவ்வளவேதான். பாப்லார் மரத்தின் அருகில் பூத்திருந்த கோழிக்கொண்டை1ச் செடிகள் நடுவே கூனன் உட்கார்ந்திருந்தான். அவன் எழுந்து வானத்தை வெற்றாக வெறித்துப் பார்த்தான். அவனது மனைவியும் நான்கு குழந்தைகளும் அவனது துண்டு நிலத்தைச் சுற்றி வரப்பு ஓரமாக, விதைக்கென விடப்பட்டிருந்த மக்காச் சோளக் கதிர்களிலிருந்தும் மணிகளை உதிர்த்து எடுத்துக்கொண்டிருந்தனர். சம்மட்டிக்காரர்கள் அடுத்த வீட்டுக்கு நகரும் முன்னர் அந்தப் பெண்ணையும் குழந்தைகளையும் அமைதியாக உற்றுப் பார்த்தனர். அவர்கள் அழவோ அல்லது சம்மட்டி நபர்களைத் தடுக்கவோ இல்லை. அதுவே நெஞ்சுக்குள் அல்லல் படுத்துவதாக அந்த நபர்கள் உணர்ந்தனர்.   
 இரவு நெருங்கிக்கொண்டிருந்தது. வயல்களில் சுழல் வட்டக் கூட்டமாகப் பறந்து, பூச்சி வேட்டை நிகழ்த்தும் ஆட்டுறிஞ்சி2களின் இறக்கை அசைவுகளில் ஏற்படும் ரகசிய ஒலியைச் சப்பாணி கேட்டான். அவன் மொச்சைக் காய்களை உரிப்பதும் விதைகளை உலோகத் தட்டின் மீது இடுவதுமாக இருந்தான்; விறகு எரிவதன் மணத்தையும், மொச்சை வறுபடும் மணத்தையும் ருசித்து அனுபவித்துக் கொண்டிருந்தான். புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வேலைசெய்யும் தொழிலாளர் குழு ஒன்று ஏரியின் மறுகரை ஓரமாகச் சென்றுகொண்டிருந்தது. அவர்களின் நிழலுருவங்கள் ஏரியின் அருகாக அமைந்த வயலின் குறுக்காகப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நகர்வதைச் சப்பாணி கவனித்துக் கொண்டிருந்தான்.
 கூனனின் காலடி ஓசைக்காகக் காத்திருக்கையில், சப்பாணி நெருப்பிலிருந்தும் உலோகத் தட்டினை வெளியே எடுத்தான். ஆனாலும் கூனனின் காலடிச் சத்தம் எதுவும் கேட்கவேயில்லை. கூனனின் மனைவி, அவர்களின் வளர்ந்த குழந்தை மற்றும் இதர குழந்தைகள் எல்லோருமே தங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அமர்ந்திருந்தனர். வெந்த மொச்சை ஒன்றினைச் சப்பாணி மென்று பார்த்தான். கூனனின் முன்பக்கத் தாழ்வாரம் வேகவேகமாக எரிந்துகொண்டிருந்தது. அண்டை  மற்றும் சுற்றுப்புற வீட்டுக்காரர்கள் கையைக் கட்டிக்கொண்டு அமைதியாக இருந்துவிடவில்லை. அவர்கள் சம்மட்டி ஆட்களை இறுகப்பற்றி, இழுத்துப் பிடித்துத் தடுத்து, ஓலமிட்டுக் கத்தினர். ஒரு கூட்டமாகச் சேர்ந்து செய்தால், அவர்களை எந்தக் குற்றத்துக்கும் பொறுப்பாக்க முடியாதென அவர்கள் நம்பினர். சம்மட்டி ஆட்களில் ஒருவரைப் பிடித்து உதைத்து, முட்டிக் கீழே தள்ளிவிட்டனர். சில நிமிடங்கள் கழிந்தபின்னர், எழுந்த அந்த மனிதனின் வாய் முழுவதும் இரத்தம். அவன் அவர்களைப் பார்த்து முட்டியை மடக்கிக்காட்டிக் கோபத்தோடு அசைத்தான். பின் வாயில் சேர்ந்த இரத்தத்தைத் துப்பினான். அவனது முன் பல் ஒன்று உடைந்து இரத்தமயமாக இருந்தது.     
 சம்மட்டி ஆட்கள் சப்பாணியை நெருங்கியபோது, அவன் அவர்களுக்கு வழிவிட்டு, அவனது வீட்டை நோக்கி விரலை நீட்டிச் சுட்டிக் காட்டினான். அவன் சாலையிலிருந்தும் இறங்கி காஸ்மஸ் பூக்கள் செழிப்பாக மலர்ந்திருந்த செடிகளுக்கிடையே அமர்ந்தான். அவனது குடும்பம் கூனனின் குடும்பத்தினரைப் போல் அமைதியாக இருந்துவிடவில்லை. அவனது மனைவி அடிகுழாயின் பின்புறமாகக் குத்துக்காலிட்டு அமர்ந்து  அழுக்காகிப்போன அவளது பாவாடை விளிம்பால் முகத்தை மூடிக்கொண்டாள். அவள் அருகிலேயே குழந்தைகள் கண்களைக் கசக்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கண்மூடித் திறப்பதற்குள்ளாகவே, கூரையும் சுவர்களும் தரைமட்டமாக்கப்பட்டதில், தூசுப்படலம் ஒன்று மட்டுமே அங்கு எஞ்சி நின்றது.
  கூனனின் காலடி ஓசை சப்பாணியின் காதுகளில் விழுந்தது. கூனன், கையிலிருந்த நெகிழிக்கலத்தை3 நெருப்பிலிருந்தும் தூரமாக அதன் சுவாலை கூடப் பட்டுவிடாத ஓரிடத்தில் வைத்தான். அதனுள் முழுவதுமாகப் பெட்ரோல் நிறைத்திருந்தது. அந்தக் கனத்த கலத்தை அவன் இரண்டு அல்லது மூன்று மைல் தூரத்துக்கு இருள் மண்டியிருந்த சாலை வழியே தலைச்சுமையாக எடுத்துவந்திருந்தான். அந்தச் சாலை முடிந்த வெட்டவெளியில், அலுமினியத் தாளில் சுற்றப்பட்டிருந்த குடற்புழு நீக்க மருந்தினைச் சிலர் கைச்சுமையாக விற்றுக்கொண்டிருந்தனர்.  
 மருந்து விற்பவர்கள் ஒரு வாகனக் கல்லறை4யில் வாங்கிய டப்பாவாகிப்போன பழங்காலத்து மகிழுந்தில் வந்திருந்தனர். அதனுள் லாவான்5 மரக்கட்டைகள், பெரும்பாறையின் குண்டுக்கற்கள், பீர் புட்டிகள், இரும்பு அல்லது உலோக முளைகள்6, சாணைக்கல்லில் நன்கு கூர்தீட்டப்பட்ட சாமுராய்7 வாட்கள் இருந்தன. இவைகளெல்லாம் மாஸ்டர் என அவர்கள் அழைத்துக்கொண்ட ஒருவனின் தொழிலுக்கான கருவிகள். அந்த மனிதனால் குண்டுக்கல்லை அல்லது பீர் புட்டியை வெறுங்கையால் ஒரே வெட்டில் உடைக்க முடியும். அவனால் லாவான் மரக்கட்டையை இரண்டாகப் பிளக்க முடியும். மரத்தினுள் அறைந்து இறுக்கப்பட்ட உலோக முளையை அதன் தலையைக் கடித்தே அவனால் வளைத்துவிட முடியும். வாட்களில் ஒன்றை  அவன் தனது உள் ளங்கையில் வைத்து நைலான் கயிற்றால் சுற்றிக் கட்டிக்கொண்டு, வாளின் கூர்முனையை அவனது வயிற்றில் வைத்துப் பலங்கொண்ட மட்டும் அழுத்த, சுற்றி நின்றிருந்த மக்கள் அவர்களின் தசைகள், தோல், உடல் முழுதும் வாளால் பிளக்கப்பட்டது போன்ற உணர்ச்சியில் தவித்தார்கள். ஆனால் மாஸ்டருக்கு எந்தக் காயமும் படவில்லை.
மாஸ்டரின் வலிமை அற்புதமானது. அவனிடமிருந்துதான் கூனன் பெட்ரோல் வாங்கினான். அந்த மகிழுந்தின் உட்பக்கத்தை கூனன் நன்கு கவனித்துப் பார்த்திருந்தான். இருள் மறைத்திருந்த அவர்களது கிராமத்தைக் கூனன் திரும்பி நோக்கியதைச் சப்பாணி கண்டான். கூனன் முதுகை முன்புறமாக வளைத்துக் கீழே அமர்ந்தான். சப்பாணி உலோகத் தட்டினை அவனை நோக்கித் தள்ளினான். கூனன் ஒரு மொச்சையை எடுத்தான். ஆனால், அதை வாய்க்குள் போடாமலேயே அடங்கிய குரலில் பேசத் தொடங்கினான்.
‘‘அது என்னது?’’
‘‘ம்ஹும்?’’
‘’என்னமோ சத்தங்கேட்ட மாதிரி இருந்தது.’’
கணநேரத்துக்கு இருவருமே மூச்சைப் பிடித்துக்கொண்டு, உன்னிக் கவனித்து உற்றுக் கேட்டனர்.
‘’பறவைகள். ஆட்டுறிஞ்சிகள் இரையைத்தேடிச் சுற்றிலும் பறக்கின்றன.’’ என்றான், சப்பாணி.
‘’இந்த இருட்டிலா?’’
‘’அதுகள் பகலில் தூங்கும். மரங்களில் ஒட்டிக்கொண்டு கிடக்கும்.’’
கூனன், தின்பதற்காக எடுத்த மொச்சையைத் திரும்பவும் வைத்துவிட்டான். நடுங்கும் கரங்களால் சிகரெட் பற்றவைத்துக்கொண்டிருந்த சப்பாணி அதைப் பார்த்தான்.
‘’என்ன விஷயம்?’’ சப்பாணி கேட்டான்.
‘‘ஒன்றுமில்லை.’’
 ‘பயமா?’’
‘’பயப்படுவதற்கு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லையே!’’
‘’வேண்டாமென்று நினைத்தால், இப்போதே திரும்பிப் போய் விடு.’’
 கூனன் தலையை அசைத்தான். அவனது குழந்தைகள் கூடாரத்துக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். தூங்குவதற்கு முன்னால், அவர்கள் கூடாரத்தின் முன்பாக ஒரு தீயை மூட்டியிருந்தனர். சப்பாணியின் குழந்தைகள் அவர்களின் சமையலறைக் கதவினை நெருப்புக்குத் தம் பங்காகக் கொடுத்திருந்தனர். அது விற்க முடியாதபடி துண்டு, துண்டுகளாகியிருந்தது.
கூடாரத்தினுள் அடர்த்தியான இருள் மண்டியிருந்தது. நெருப்பின் முன்னால் நின்றுகொண்டிருந்த கிராமத்து மக்கள் அவரவர் பாதைகளில் சென்றுவிட்டனர். அவர்களின் குடியிருப்பு வீடுகளைத்  தாங்கிச் சுமந்து, கலவரப்பட்டுப்போன நிலத்தை இருள் விழுங்கிவிட்டிருந்தது. வயதானவர்கள் சிலர் தூரத்து வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தனர்.
இரவுக் காவலர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த சோதனைத் தடுப்பின் முன்பக்கமாக இருந்த காலிப் பெருநிலத்தில் ஒரு மகிழுந்து நின்றுகொண்டிருந்தது. மகிழுந்தினுள் ஒரு மனிதன் உட்கார்ந்து விரல்ரேகைகள், கையொப்பங்கள், சாட்சிக் கையொப்பங்கள், சான்றுறுதி வழக்கறிஞர்களின் முத்திரைகள் பதித்திருந்த சில ஆவணங்களைப் பார்த்து, சன்னல் வழியாகப் பணம் கொடுத்துக்கொண்டிருந்தான். அவனிடம் ஆவணங்களைக் கொடுத்தவர்கள், மகிழுந்தின் முன்பாகக் குந்தியிருந்து, பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர்.
சப்பாணி உலோகத் தட்டை மீண்டும் நெருப்பில் வைத்து, மொச்சைகளை அதில் உரித்துப்போட்டுக் கொண்டிருந்தான். அவற்றில் கொஞ்சத்தையாவது, கூனன் சாப்பிட்டால், சப்பாணி நிறையவே மகிழ்ச்சிகொள்வான். கடந்த சில நாட்களாகவே, அவன் ஒரு வாய்கூடச் சாப்பிட்டுச் சப்பாணி பார்க்கவே இல்லை.
‘’இந்த நேரம் அவன் கிளம்பியிருப்பான், இல்லையா?’’ கூனன் கேட்டான். அநேகமும் சாம்பலாகிப் போயிருந்த சிகரெட் அவன் விரல்நுனிகளில் தொங்கிக்கொண்டிருந்தது.
‘’ஆமா, அவன் என்னைக் கொன்றுவிடாமல் பார்த்துக்கொள். அவன் பன்றி மாதிரி கொழுத்துப் போயிருக்கிறான். அவன் மட்டும் என் மேலே விழுந்தானோ,  அவ்வளவு தான், நசுங்கியே செத்துவிடுவேன்.’’ என்றான், சப்பாணி.
‘’அப்படியென்றால் எதற்காக என்னை வீட்டுக்குப் போகச் சொன்னாய்?’’
‘’ நீ இல்லையென்றால், நான் வேறே திட்டம் போடவேண்டும்.’’   
 ‘’வேறு திட்டமா?’’
‘‘அதை மறந்துவிடு.’’
சப்பாணி சுற்றிலும் பார்த்தான். அவன் பார்வையை அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மறைத்தன. கட்டிடங்களின் இருண்ட எலும்புக்கூட்டு நிழல்கள் கிழக்கிலிருந்து மேற்காகப் பரவியிருந்தன. கூனன் நெருப்பில் மணலைத் தள்ளினான். சப்பாணி உலோகத் தட்டை அகற்றி வைத்துவிட்டு, நெருப்பு அணையும் வரையில், அதனையே வெற்றாகப் பார்த்துக்கொண்டிருந்தான். கடைசிக் கங்கும் மணலுக்குள் அவிந்ததும் இருள் முழுமையாகச் சூழ்ந்தது. 
கூனன் சொன்னான், ‘’அவன் விளக்கு எரிந்துகொண்டுதானிருக்கிறது.’’
சப்பாணி கிராமத்தின் திசையில் நோக்கினான். மகிழுந்தின் விளக்கொளி இரண்டு பெருந்தூண்களைப் போன்று, இரவு வானத்தில் சுழன்று, பின்னர் மெல்ல அவர்களை நோக்கி வந்தது.
சப்பாணி உலோகத் தட்டினைக் கூனனை நோக்கித் தள்ளினான்.
‘‘சாப்பிடு’’
கூனன் அதை வயலுக்குள் எட்டி உதைத்தான். பெட்ரோல் கலத்தைத் தூக்கிக்கொண்டு நடக்கத் தொடங்கினான். சப்பாணி விரைந்து அவனைப் பின்தொடர்ந்தான். சாலையில் ஒரு பெரும் பள்ளமாகத் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் கால் வைத்துத் தாவுவதற்காக இரண்டு கற்கள் போடப்பட்டிருந்தன. கூனன்  வழி தெரிந்து, கற்களில் கால் வைத்துத் தாண்டிவிட்டுக் காத்திருந்தான். சப்பாணி பள்ளத்தைத் தவிர்த்துவிட்டு, அதைச் சுற்றி, சாலையோரக் களைச்செடிகள் மேலாகவே நடந்து கூனன் நின்றிருந்த இடத்துக்கு வந்துசேர்ந்தான். அவன் நடுச்சாலையில் அப்படியே உட்கார்ந்துகொண்டான். அவனது இரு புறக் காற்சட்டைப் பைக்குள்ளிருந்தும் நெகிழிக்காப்பிட்ட மின் கம்பிச் சுருள்களை எடுத்து நண்பனிடம் காட்டினான். கூனன் தலையாட்டிவிட்டு, சாலையின் குறுக்காகக் கடந்து வலது பக்கம் சென்று, மொச்சை வயலுக்குள் மறைந்துகொண்டான். எல்லாத் திசைகளிலும் அமைதி விரிந்து கிடந்தது. சப்பாணியைப் பயம் பிடித்துக் கொண்டது. அவன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பதுதான் நல்லதென எண்ணினான்.
‘’இன்றைக்கு விலையைப் பார்த்தாயா?
‘’ஹும்,’’ கூனனின் குரல் பிடிப்பற்று விழுந்தது.
‘’எவ்வளவு?’’
‘’மூன்று இலட்சத்து எண்பதாயிரம் வொன்8’’
சப்பாணி வேறு எதுவும் பேசவில்லை.
‘’அங்கே பார்.’’ மொச்சை வயலுக்குள்ளிருந்து கூனனின் குரல் கேட்டது.
இரண்டு ஒளித்தூண்கள் இரவு வானத்தின் கரிய இருளைக் குடைந்து, குடைந்து, கடைந்துகொண்டு, தன்னை நோக்கி வருவதைக் கண்டதும், சப்பாணி கண்களை மூடிக்கொண்டான். அந்தப் பிரகாசமான வெளிச்சத் தூண்கள் அவனது கண்களுக்குள் விழித்திரைகளின் மேலாக ஒரு தடித்த படலமாக எஞ்சிப்போனது. அந்த மகிழுந்து எழுப்பிய ஒலிப்பான் சத்தத்துக்கோ அல்லது அந்த மகிழுந்து சாலைப் பள்ளத்துக்குள் இறங்கிய போதுங்கூட, அவன் கொஞ்சமும் அசையவில்லை. மகிழுந்தின் முட்டுத்தாங்கி9 அவனது நாடியில் இடிப்பதுபோல் அதனைத் தொட்டுத்தான், வந்து நின்றது. மகிழுந்திற்குள் இருந்தவனிடமிருந்து ஓராயிரம் வசவுகள் பொங்கிப்பொங்கிக் கொட்டின.         
 கூனன் தரையோடு தரையாக ஒட்டிக்கொண்டான்.
அந்த மனிதன் மகிழுந்திற்குள்ளிருந்து வெளியே வந்தான். மகிழுந்தின் முன்விளக்கு வெளிச்சம், அப்போதும் கண்களைக் குருடாக்க, சப்பாணி இருந்த இடத்திலேயே ஆணியறைந்ததுபோல் இருந்தான். அவன், கண்களைச் சுருக்கி, ஒரு மாறுகண்ணனைப்போல் அந்த மனிதனை ஓரக்கண்ணால் பார்த்தான்.
‘’என்ன நினைப்பில், இப்படிச் செய்கிறாய்?’’
சப்பாணி, யாருக்கும் கேட்காத, மெல்லிய, ஒரு சிறு குரலில் எதையோ முணுமுணுத்தான்.
அந்த மனிதன், அவன் முன்பாகக் குனிந்தான்.
‘’என்னது?’’
‘’நான் சாக வேண்டும். நான் இங்கே இல்லையென்று நினைத்துக் கொள், என் மேலேயே ஓட்டிப்போ.’’ என்றான், சப்பாணி.  
அவன் சொல்வதைச் சரியாகக் கேட்க, அந்த மனிதன் ஒரு கூனனைப்போல் குனிய வேண்டியிருந்தது.
‘’என்ன இழவுக்கு இப்படி? எதற்கானாலும் ஒரு காரணம் வேண்டுமில்லையா?.’’
 ‘’உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா?’’
‘’ஏன் இல்லாமல்? நன்றாக நினைவிருக்கிறது. உன்னுடைய நிலத்தை எனக்கு விற்றுவிட்டாயில்லையா?’’
‘’ஆமாம், ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வொன்னுக்கு.’’
 ‘’உனக்கு அதில் ஏதாவது பிரச்னையா? நகருக்குள் கிடைப்பதைவிட, அதிகமாகப் பத்தாயிரம் வொன் உனக்குக் கொடுத்திருக்கிறேன்.’’
‘’இல்லை. எந்தப் பிரச்சினையும் இல்லை. குத்தகைக்காரர்கள் கொடுத்திருந்த முன்பணத்தைத் திருப்பிக்கொடுக்கவே, அது சரியாகப் போய்விட்டது.’’ என்றான், சப்பாணி.
‘’நல்லது. இப்போது வழியைவிட்டுத் தொலை.’’
சப்பாணி முகத்தைத் திருப்பிக்கொண்டு, வேறுபக்கம் பார்த்தான்.’’
‘’அந்தப் பணம் முழுவதையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். எங்களுக்கு எதுவுமே மிஞ்சவில்லை.’’
‘’குடியிருப்பு வீடு வாங்குவதற்கு, உன்னிடம் பணம் இல்லை. அதனால் குடியிருக்கும் அனுபவ உரிமையை விற்றுவிட்டாய். சரி. இப்போது அதற்கென்ன?’’
‘’எங்கள் வீடுகளுக்கு நேர்ந்த கதியை நீங்கள் பார்க்கவில்லையா?’’
‘’ஆமா, பார்த்தேன்.’’ அழுத்தம் திருத்தமாக வந்து விழுந்த அந்தக் குரலில் இப்போது ஒரு காட்டம் மிகுந்து தெரிந்தது.
‘’எங்கள் வீடு போய்விட்டது.’’ ‘’இன்னும் இருநூறு இலட்சம் நீ எனக்குத் தரவேண்டும், மிஸ்டர்?’’ - இப்போதும் அதே மெல்லிய குரல்தான்.
‘’என்னது?’’
‘’எனக்கு அவ்வளவாக விஷயம் தெரியாதென்பதாலேயே, நீங்கள் செய்வதைச் செய்துவிட்டுத் தப்பித்துவிட முடியாது. முந்நூற்று எண்பது மதிப்பு பெறுகிற ஒன்றை, நீங்கள் வெறும் நூற்று அறுபதுக்கு வாங்கி, பிறகு அதையே இருநூற்று இருபது லாபத்தில் விற்றுக் கைகழுவிவிட்டீர்கள். அப்படியே போய்விடமுடியாது. எனக்கு இரண்டு இலட்சத்தைக் கொடுத்துவிடுங்கள். அப்போதும் உங்களுக்கு இருபதாயிரம் நிற்கிறது, சரியா? நீங்கள் எல்லோருடைய அனுபோக உரிமையையும் வாங்கியிருக்கிறீர்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.’’
அந்த மனிதன் நிமிர்ந்து, எழுந்தான்.
‘’ஒதுங்கிப் போய்விடு! இல்லையென்றால் பார்த்துக்கொள், ஒரேயடியாக முடித்துவிடுவேன்.’’
‘’அப்படித்தான் செய்யுங்கள்.’’
ஒருகணம், சப்பாணி தன் நிலை மறந்து, அயர்ந்துவிட்டான். அந்த மனிதனின் அரணக்காலணி, சப்பாணியின் நெஞ்சில் உதைத்தது. டக்கென்று காலணியைப் பற்றிப் பிடித்த அவன் விடாப்பிடியாக, அந்த மனிதனின் கால்களைப் பிடித்துக்கொண்டு தொங்கினான். ஆனால், அவன் மிகமிக மெலிந்தவனாகப் பலமில்லாதவனாக இருந்தான். அவன் முகத்தில், அந்த மனிதன் அவனது பெரிய கைமூட்டினால் மாறி, மாறிக் குத்திப் பின்னர் அவனை அப்படியே எளிதாக உதறிச் சுழற்றி எறிந்துவிட்டான்.
சாலையோரப் புல்தரையில் தலைகுப்புற விழுந்த சப்பாணி, மீண்டும் தவழ்ந்து சாலைக்கு வந்துவிடப் பார்த்தான்.
அதைக்கண்ட அந்த மனிதன் மகிழுந்தை நோக்கித் திரும்பினான். கூட்டம் கூடிவிடுவதற்குள் அவன் இந்த இடத்தைத் தாண்டிப் போய்விடவேண்டும்.
அவன் மகிழுந்திற்குள் நுழைவதற்காகக் குனிந்தான். அந்த நேரத்தில் தான் இருண்ட நிழல் ஒன்று அவனது வயிற்றில் மிகச் சரியாகக் கொப்பூழ்க் குழியில் உதைத்தது. அவனது பெரிய உடல் தரையில் சாய்ந்தது. வயலுக்குள் மறைவாக ஒளிந்துகிடந்த கூனன்தான், வெளியே வந்து, அப்படியொரு கொலைவெறியோடு அந்த மனிதனை உதைத்திருந்தான்.
‘’நான் பணத்தைத் தந்துவிடுகிறேன்.’’ என்றுதான் அந்த மனிதன் சொல்ல நினைத்தான். ஆனால், அவனால் பேச முடியவில்லை. கூனன் அதற்குள்ளாகவே அந்த மனிதனின் வாயை இறுக மூடிக் கட்டியிருந்தான். அவனால் அசையவும் முடியவில்லை. நெகிழிக் காப்பு மின்கம்பிகளால் அவன் வலுவாகக் கட்டப்பட்டிருந்தான். சப்பாணி மகிழுந்தின் முன்னால் வந்துசேருவதற்கு கூனன் உதவுவதை அந்த மனிதன் பார்த்தான். சப்பாணியின் முகம் முழுவதும் இரத்தச்சேறாகியிருந்ததை மகிழுந்தின் முன்விளக்கு வெளிச்சம் காட்டியது. சப்பாணியின் முகத்தைக் கூனன் துடைத்து உதவினான். சப்பாணி அழுதுகொண்டிருந்தான்.
‘’நன்றாக அடிபடட்டுமென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாயா? ஏன் இவ்வளவு நேரம்? நான் அடிபடுவதைப் பார்ப்பதில் உனக்கு அவ்வளவு விருப்பம், அப்படித்தானே?’’
‘’அட, விட்டுத்தள்ளுப்பா,’’ என்றவாறே மகிழுந்தினை நோக்கித் திரும்பி நடக்கத் தொடங்கினான், கூனன். ‘’இந்த ஆளைத் தூக்கி மகிழுந்துக்குள் போடவேண்டும். அவன் கைப்பெட்டியை வேறு தேடவேண்டும்.’’
‘’சரி, அவனைத் தூக்கி உள்ளே போடு.’’
அந்த மனிதன் சிறிது திமிறினான்; முடியாமல் போய், பின்னர் அமைதியாகக் கிடந்தான்.
கூனன் உள்ளே ஏறினான். வானத்தின் இருட்டைக் கிழித்துக்கொண்டு சாய்வாகக் கிடந்த இரண்டு விளக்குத் தூண்களும் மறைந்தன. அவன் பொறியைத் தட்டி, இயந்திரத்தை நிறுத்தியிருந்தான். கறுப்புக் கைப்பெட்டி ஓட்டுநர் இருக்கைக்குக் கீழே இருந்தது.
வெளியில், சப்பாணி அந்த மனிதனைத் தூக்கி, உட்கார்ந்த நிலையில் அமர்த்திவைத்தான். மகிழுந்திற்குள்ளிருந்து வெளிவந்த கூனன் அந்த மனிதனின் இடுப்பைப் பிடித்துத் தூக்கி நிற்கச் செய்தான். இரண்டு நண்பர்களுமாகச் சேர்ந்த அவனை மகிழுந்துக்கு நடத்திக் கூட்டிச் சென்று, ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்தார்கள்.
‘’அவனுக்கு அடுத்தாற் போல் நான் உட்கார்கிறேன்.’’ என்றான், சப்பாணி.
கூனன் சப்பாணியைத் தூக்கி, முன்பக்கத்துப் பயண இருக்கையில் அமர வைத்தான். பின்னர், அவன் பின்பக்க இருக்கையில் ஏறி அமர்ந்து கறுப்புக் கைப்பெட்டியைத் திறந்தான். அந்த மனிதன் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘’பணமும் பத்திரங்களும்.’’ என்றான், கூனன்.
‘’எங்கே, நான் பார்க்கட்டும்.’’  
சப்பாணியும்  கூனனும் எல்லாவற்றையும் எடுத்துவிட்டார்கள் என்பதை அவன் உணர்ந்துகொண்டான்.
சப்பாணி கைப்பெட்டியை முழுவதுமாகக் குடைந்த பின்னர், ‘’அவன் நம்முடையது எல்லாவற்றையும் ஏற்கெனவே விற்றுவிட்டான்.’’ என்றான்.
அந்த மனிதன் அய்யோவென விழித்தான்.
‘’இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்.’’
நமது பெயர்களையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்திருக்கிறான். சில பெயர்களை அடித்திருக்கிறான். அதெல்லாம் அவன் விற்றதாக இருக்கும்.’’
சப்பாணி அவனைக் கடுமையாகப் பார்த்தான். அந்த மனிதன் ஆமெனத் தலையாட்டினான்.
‘’”மூன்று இலட்சத்து எண்பதாயிரத்துக்கு – சரிதானா?’’
மீண்டும் அந்த மனிதன் தலையாட்டினான்.
‘’பணத்தை எண்ணு.’’ என்றான், கூனன்.
சப்பாணி எண்ணத் தொடங்கினான். அவன் மிகச் சரியாக இரண்டு, இரண்டு இலட்சமாக இரண்டு கட்டுகளைக் கட்டித் தனியாக எடுத்து வைத்தான்.
‘’நமது பணம்.’’ என்றான், அவன்.
அந்த மனிதன் மீண்டுமொரு முறை தலையாட்டினான். ஒரு கட்டினை எடுத்து, பின்பக்க இருக்கையிலிருந்த அவனது நண்பனிடம் சப்பாணி கொடுப்பதை அந்த மனிதன் கவனித்தான்.
சப்பாணியின் கைகள் நடுங்கின. கூனன் கைகளும் கூட நடுங்கின. அவர்களின் இதயங்கள் வேகவேகமாகத் துடித்தன.  
சப்பாணி, அவனது சட்டைப் பொத்தான்களைக் கழற்றி, பணத்தை உட்புறப்பைக்குள் வைத்துப் பொத்தான்களைப் போட்டான். பின்னர் சட்டையை இழுத்துச் சரிசெய்துகொண்டான். கூனன் அவனது பணத்தை, அவனது சட்டையின் வலதுகைப்பக்க வெளிப்புறப் பைக்குள் வைத்தான். அவன் சட்டையில் உட்புறப் பைகள் இல்லை.
பணத்தைப் பத்திரப்படுத்தியபின், மறுநாள் செய்யவேண்டியிருந்த வேலை முழுவதையும் கூனன் நினைத்துப்பார்த்தான். சப்பாணியும் அப்படியே தான். அவன் குழந்தைகள் கூடாரத்துக்குள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
‘’அந்த நெகிழிக் கலத்தைக் கொண்டுவா.’’ என்றான் சப்பாணி. அவன் கையில் மீதமிருந்த நெகிழிக்காப்பு மின்கம்பிச் சுருள் இருந்தது.
கூனன் மொச்சை வயலுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நெகிழிக் கலத்தைத் தேடிப் பிடித்தான். அவனது நண்பனின் முகத்தை அங்கிருந்தே பார்த்தான். உண்மையில் அவன் வேறு ஏதேனும் விடுபட்டுப் போயிருக்கிறதா என்றுதான் பார்த்தான். பின்னர், அவன் கிராமத்தை நோக்கிப் புறப்பட்டான். இரவு, வழக்கத்துக்கு மாறாக அமைதியாக இருந்தது. அவனுடைய கிராமம் எங்கேயிருந்தது என்று அவனால் கூட நிச்சயித்து உணர முடியாத அளவுக்கு, வெளிச்சத்தின் ஒரு சிறு புள்ளியைக் கூடக் காணமுடியவில்லை. மெதுமெதுவாகக் கடந்துசென்ற அவன் காதுகளில் எந்தச் சத்தமும் கேட்காததால், பின்னால் சப்பாணி வந்து கொண்டிருக்கிறானா, இல்லையாவென என நினைத்து,  வியந்துகொண்டான்.
சப்பாணி தன்னைத் தானே சுருட்டிக் கொண்டு, மகிழுந்துக்குள்ளிருந்து கீழே குதித்திருப்பான்.  `தட்` என்ற சத்தத்தோடு கதவை மூடி, இருட்டு பரவிக்கிடந்த செங்காவி மண் சாலையில் அவனது கைகளைக் கொண்டு, வேகவேகமாகத் தாவித்தாவி வந்துகொண்டிருப்பான்.    
 நடந்துகொண்டிருக்கும்போதே, தனது வழக்கமான சொந்த வேகத்தை நினைத்த கூனன், சப்பாணி அவனது கைகளை அசுர வேகத்தில் இயக்கி, எவ்வளவு விரைவாகத் தவழமுடியுமென்பதை எண்ணிக்கொண்டான்.
கிராமத்தை அடைந்ததும் வழிமாறிக் கிடந்த வீட்டின் மிச்சம் மீதியை நோக்கிச் சென்ற கூனன், அடிகுழாயின் கைப்பிடிக் கோலினை அழுத்தி, தண்ணீரை இரு கைகளாலும் ஏந்தி, உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டான். சட்டைப் பையைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். மூசு மூசென்று இரைத்துக்கொண்டே, சப்பாணி அவனை நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான். கூனன், அவனருகில் போய், முகத்தைக் கூர்ந்து பார்த்தான். இருட்டில் எதுவும் தெரியவில்லை.   
 சப்பாணியின் உடல் முழுதும் ஒரே பெட்ரோல் நாற்றம். கூனன் அடிகுழாயில் தண்ணீர் பிடித்துச் சப்பாணியின் முகத்தைக் கழுவினான். முகம் எரியவே, சப்பாணி கண்களை மூடிக்கொண்டான். ஆனால், அவனுக்கு அந்த வலியெல்லாம் ஒன்றும் பெரிதில்லை. அவன் சட்டைக்குள்ளிருந்த பணத்தை நினைத்துக்கொண்டான்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டுமென்று நினைத்துப்பார்த்தான். அவன் கைகளால் தவழ்ந்து வந்திருந்த புழுதிச் சாலையின் தொடக்க எல்லையில் பிழம்புகள் இன்னும் மேலெழுந்துகொண்டிருந்தன. எழுந்து நிற்க முயற்சித்த நண்பனை அவன் பிடித்து இழுத்து உட்காரச் செய்தான்.    
 சம்மட்டி ஆட்கள் வந்தபோது, கூனனின் குடும்பம் தன்னைத் தானே, நிச்சயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டது. அவனது குடும்பம் அதுபோல் அமைதிப்படுத்திக் கொள்ளவில்லை. அவனது நண்பன் அதுபோல் இருப்புக்கொள்ளாமல் துடித்துக்கொண்டிருப்பதில் சப்பாணிக்கு விருப்பமில்லை. வெடித்த சத்தத்தில் அவனே அதிர்ந்துதான் போனான். ஆனால், இப்போது எல்லாமே முடிந்துவிட்டது. தூரத்துப் பிழம்புகள் தணிந்துவிட்டன. வெடித்த சப்தத்தின் அதிர்வுகள் முழுமையாக அடங்கிவிட்டன.
அந்த இருவரையும் இருளும் அமைதியும் சூழ்ந்தது. கூனன் புறப்பட்டான். சப்பாணியும் அவனைப் பின்தொடர்ந்தான்.
‘’;நிறையப் பொருட்கள் வாங்கவேண்டியிருக்கிறது.’’ என்றான், சப்பாணி. ‘’ஒரு இரு சக்கர வாகனம், ஒரு தள்ளுவண்டி, ஒரு சோளப்பொரியடுப்பு9. நீ செய்யவேண்டியதெல்லாம் ஓட்ட வேண்டியது தான். அப்புறம், நான் தவழ்வதை யாருக்கும் பார்க்கவேண்டியிருக்காது.’’
சப்பாணி அவன் நண்பனின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ஆனால், கூனன் எதுவுமே சொல்லவில்லை.
‘’என்னாச்சு? ஏய், உனக்கு என்ன ஆச்சு’’ சப்பாணி கூனனின் காற்சட்டைத் தொங்கலைப் பிடித்து இழுத்தான்.
‘’ஒன்றுமில்லை.’’
 ‘’பயந்துவிட்டாயா?’’  சப்பாணி கேட்டான்.
‘’அதற்கு வாய்ப்பேயில்லை.’’, ‘’ஆனால், இது வேறு மாதிரி இருக்கிறது. இதற்கு முன்னால், இது போல் எனக்கு எப்போதும் ஆனதேயில்லை.’’ என்றான், கூனன்.
‘’அப்படியென்றால்நான் சொன்னதெல்லாம் சரிதான்.’’
‘’இல்லையில்லை, அப்படியில்லை.’’
நண்பன் இவ்வளவு அமைதியாகப் பேசுவதை சப்பாணி கேட்டதேயில்லை.
‘’ நான் உன்னோடு வரப்போவதில்லை.’’ என்றான், கூனன்.
‘’ என்னது?’’
‘’ நான் உன்கூட வரப்போவதில்லை என்று சொன்னேன்.’’
‘’ ஏன் இப்படித் திடீரென்று? இங்கே பார், நாளைக்கு நாம் சம்யாங்-டாங் அல்லது கோயோ–டாங்குக்குப் போகலாம். அங்கே வாடகைக்குத் தாராளமாக அறைகள் கிடைக்கும். குடும்பத்தைக் கொண்டு போய் அங்கே வைத்துவிட்டு, நாம் சோளப்பொரியடுப்பைத் தூக்கிக்கொண்டு ஊரெங்கும் சுற்றவேண்டியதுதான். இருசக்கர வாகனம் மட்டும் வாங்கிவிட்டோமோ, எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஒரு முறை நாம் கார்ஹயோங்-டாங்குக்குப் போயிருந்தோமே, ஞாபகப்படுத்திப் பார். எல்லாக் குடும்பங்களுமே சோளப்பொரிக்கு எப்படி அலைமோதினார்கள்? இரவு ஒன்பது மணிவரைக்கும் கூட இடைவெளியில்லாமல் மக்காச்சோளத்தை வறுத்துக்கொண்டிருந்தோம். மக்காச்சோளப்பொரியையா அவர்கள் விரும்பினார்கள்? அவர்கள் பழங்காலத்து நினைவுகளை அசை போட்டுக்கொண்டே குழந்தைகளை வெளியே அழைத்துவர நினைக்கிறார்கள். அது மாதிரி ஒரு இடத்தைத் தேடிப் பிடிக்க வேண்டியது தான் நமது வேலை. அடிக்கடி என்றில்லை, சில நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்குக் கட்டுக்கட்டாக நோட்டுகளைக் கொண்டுவரவேண்டியதுதான். அந்தப் பணம் போதுமே, நம்முடைய சின்னப் பெண்டுகளின் வாய் பிளந்துவிடாதா? உன் மனதில் என்னதான் இருக்கிறது? சொல்லித் தொலையேன்?’’
‘’ என் யோசனை, மாஸ்டர் கூடப் போய்விட வேண்டும் என்பதுதான்.’’
‘’ அந்த மருந்து விற்கிறவனா?’’
‘’ ம்,...ம்.’’
‘’ மண்டைக்கு வெளியில்லையா? அல்லது, கிறுக்குப் பிடித்துவிட்டதா? இந்த வயதிலேயா? அலைந்து, திரிந்து, எவ்வளவுக்கு விற்றுவிடமுடியுமென்று நினைக்கிறாய்?’’
‘’ உலகத்தில் எல்லாமே சரியாக இருக்கிறவர்கள் ஒன்றும் அதிகமில்லை. அவர்களில் அவனும் ஒருவன். அவன் கத்தியைக் கொண்டு பயமுறுத்துகிற வித்தை காட்டிக் கூட்டத்தை இழுக்கிறான்; எலும்பு முறிய உடம்பை வருத்தித் தான் வேலைசெய்கிறான்; அந்த வருமானத்தில் வாழ்கிறான். ஆனால், ஒன்று தெரியுமா? அவன் விற்கிற குடற்புழு மருந்து உண்மையானது. என்னுடைய உடம்பு அதற்கு ஒரு கூடுதல் வாய்ப்பாக அமையுமென்று அவனுக்குத் தெரியாதா, என்ன?’’ சிறிது இடைநிறுத்திப் பெருமூச்சு ஒன்றினை வெளியேற்றிவிட்டு,  ‘’இப்போது நான் பயப்படுகிற ஒரே விஷயம் உன் மனநிலைதான்.’’
‘’ எனக்குப் புரிந்துவிட்டது. பிறகென்ன, போய்க்கொண்டே இரு. நான் ஒன்றும் உன்னை நிறுத்திவிடப்போவதில்லை. ஆனால், ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள். நான் யாரையும் கொலை செய்யவில்லை.’’
கூனன் பின்னால் திரும்பி, ‘’ அது எப்படியென்றாலும் சீக்கிரமோ அல்லது அப்புறமோ, நாம் ஒரு முடிவு கண்டேயாக வேண்டும்.’’ என்றான்.
அவனது நண்பனை இருள் சூழ்ந்துகொண்டபோது, அவனது காலடிச் சத்தம் தவிர வேறு எதையும் சப்பாணி கேட்கவில்லை. காலடிச் சப்தங்கள் முழுமையாக மறையும் முன்பாகவே, அவனது குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்த கூடாரத்தை நோக்கி சப்பாணி தத்தித் தத்தி நகரத்தொடங்கினான். அழுவதைத் தவிர்ப்பதற்காக, தாடைகளை இறுக்கிக்கொண்டான். ஆனாலும் அவன் கண்களிலிருந்தும் கண்ணீர் பொங்கிப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது.  மற்றுமொரு நீண்ட இரவு – இது எப்போதுதான் முடியுமோ?
  ஆசிரியர், அவரது கைகளை உரைமேடைச் சாய்மேசையின் மீது வைத்துக்கொண்டு, மாணவர்களோடு பேசத்தொடங்கினார்.
 உட்புறம் எது, வெளிப்புறம் எதுவென்று பிரித்துக் கூற முடியாதபடியான திடப்பொருள் ஏதாவதொன்று இருக்கிறதா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உட்புறம், வெளிப்புறம் எனப் பகுக்கமுடியாத மோபியஸ் திருகுபட்டை போன்றதொரு திடப்பொருளினைக் கற்பனைசெய்து பாருங்கள். முடிவற்ற பேரண்டம், முடிவேயில்லாதது – வெளிப்புறத்திலிருந்து, அதன் உட்புறத்தை நம்மால் கூறமுடியாது போலத்தான் தோன்றுகிறது. அந்த மிக எளிய மோபியஸ் திருகுபட்டை பல உண்மைகளைத் தனக்குள் மறைத்துவைத்துக் கொண்டுள்ளது, இல்லையா? பெருந்தகையாளர்களே, உங்களது கடைசி வகுப்பில் நான் எதற்காக புகைபோக்கிக் கதை குறித்தும், மோபியஸ் திருகுபட்டை குறித்தும்  கூறவேண்டுமென்று சிறிது சிந்தனை செய்து பாருங்கள். மனித அறிவு அவ்வப்போது என்றில்லை, அடிக்கடி அசாதாரணமான முறையில் தீயவழிகளில் பயன்படுத்தப்படுகிறதென்பது, மெல்ல மெல்ல உங்களுக்குத் தெரியவரும். விரைவிலேயே கல்லூரி செல்லவிருக்கும் நீங்கள் அங்கே நிறையக் கற்றுக்கொள்வீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகக் கொள்ளுங்கள், பெருந்தகையினரே, உங்கள் சுயநலத்துக்காக ஒருபோதும் உங்கள் அறிவினைச் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி, உங்களுக்குப் பாடங்களைக் கற்பிக்க முயற்சித்திருக்கிறேன். அதேநேரத்தில், விஷயங்களைச் சரியான கோணத்தில் காண்பதற்கும் கற்பிக்க முயற்சித்திருக்கிறேன். என்னுடைய முயற்சிகள் எவ்வளவு தூரத்துக்குப் பயனளித்துள்ளன என்பதை நீங்களே சோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இப்போதுதானென்று நான் நினைக்கிறேன். அதை அப்படியே விட்டுவிட்டு, இப்போதைக்கு நாம் எளிமையாக விடைபெற்றுக்கொள்ளலாமா?
வகுப்புத் தலைமை மாணவர் விரைந்தெழுந்தார்.
வகுப்பு, கவனம்! வணக்கம் தெரிவிப்போம்!
மாணவர்களின் வணக்கங்களை ஏற்ற ஆசிரியர், பதில் வணக்கங்களை உரித்தாக்கிவிட்டு, உரைமேடையிலிருந்தும் படியிறங்கி, வகுப்பிலிருந்தும் வெளியே சென்றார்.
குளிர்காலக் கதிர் சாயச் சாய, வகுப்பறையை இருள் சூழ்ந்தது.
********
குறிப்பு:
1 - prince`s feather – கோழிக்கொண்டைப் பூச்செடிகள்
2 - goatsuckers – இலத்தீன் தேவதைக் கதைகளில் ஆட்டின் மடுக்களில் பால் குடிக்கும் இனம், பூச்சி உண்ணும் இரவுப்பறவைகள்
3 – plastic container – நெகிழிக்கலன்
4 – auto graveyard- ஓட்டுவதற்கு லாயக்கற்றுப்போன பழைய வாகனங்களின் கிடங்கினை படைப்பாளர் வாகனக் கல்லறை எனக் குறிப்பிடுகிறார்.
5 – Lauan timbers – மலேசிய நாட்டுப் பெருமரங்களில் ஒரு இனம்.
6- spikes – உலோக முளைகள்
7- Samurai – ஜப்பானிய மெய்க்காவல் படை வீரர்
8- one won – 0.056 ரூ. அதாவது 5.6 காசு
9 – Popper – சோளப்பொரி(பாப்கார்ன்) அடுப்பு

நன்றி : http:/ /hompi.sogang.ac.kr/anthony/klt/98fall/chosehui.htm#Knifeblade

திசை எட்டும் செப்டம்பர் 2015 இதழில் வெளியானது.


 ச.ஆறுமுகம் - 9442944347
arumugompillai@gmail.com

No comments:

Post a Comment