Tuesday 5 January 2016

சீனச் சிறுகதை - இங்கிலாந்தும் என் குல மக்களும் (யான் லியாங்கே)

இங்கிலாந்தும் என் குல மக்களும்
சீனம் : யான் லியாங்கே  
ஆங்கிலம் : சின்டி எம் கார்ட்டர்  
தமிழாக்கம் : ச. ஆறுமுகம்

யான் லியாங்கே (Yan Lianke)


 யான் லியாங்கே சீனாவின் ஹெனான் மாநிலத்தில் 1958ல் பிறந்தவர். பீய்ஜிங்கில் வசிப்பவர். பத்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளும் `மக்களுக்குச் சேவை செய்யுங்கள்`, `டிங் கிராமக் கனவுகள்` `மகிழ்ச்சி` உட்படப் பல நாவல்களையும் படைத்தவர். சீனாவின் புகழ்பெற்ற  லூ-சுன் விருதும் (2000)  லாவ் ஷி விருதும் (2004)   இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடுமையான எள்ளல் நிறைந்த இவரது படைப்புகளில் சில சீன அரசால் தடைசெய்யப்பட்டும் உள்ளன. 

**********
பிரித்தானியப் பேரரசு என்பது என் குல மக்களுக்கு வெளியே துப்பவே முடியாமல் தொண்டையில் இறுகி அடைத்துக் கொண்ட கபம், வாய் முழுக்க நிறைந்த கோழைச்சளி.
 என் அப்பா வழித் தாத்தாவை எடுத்துக்கொள்ளுங்களேன். தொண்ணூற்று இரண்டாவது வயதில் அவர் மரிக்கின்ற நாள் வரை, அந்தத் தூரத்து மேற்குத் தீவினை இங்கிலாந்து என்று வெறுமனே பெயரைச் சொன்னாலே போதும், அவர் முகம் போகிற போக்கைப் பார்க்கவேண்டுமே, அது என்னமோ ஒரு பொதுக்கழிப்பறை வாசலின் சகிக்க முடியாத துர்நாற்றத்தைச் சுவாசித்துவிட்டது போல, அந்தப் பெயரைச் சொல்கின்ற ஒவ்வொரு முறையும் அவர் தலையை வெடுக்கென்று திருப்பி ஏதாவது ஒரு வசவுடன் அங்கேயே `த்தூஊ` எனக் காறி உமிழ்ந்து தரையை அசிங்கப்படுத்தி விடுவார்.
முதல் முறையாக இங்கிலாந்துக்குச் செல்லும் முன்பு என்னுடைய சொந்த ஊருக்குப் போய்,  என்னுடைய வயது முதிர்ந்த தாத்தாவைப் பார்த்துவிட்டு வரவேண்டுமெனத் தீர்மானித்தேன். என் அப்பா நகரத்தில் பணி புரிகிறார்; ஆனால், எனது அம்மா, அவளுடைய வாழ்நாள் முழுவதையும், கடலோரச் சிறு கிராமமான எங்கள் ஊரில், நிலத்தைப் பார்த்துக்கொள்வதும், தாத்தாவை கவனித்துப் பேணுவதுமாகச் செலவிட்டார். நான் குழந்தையாக இருந்த காலத்திலேயே தாத்தா ஒரு பண்டுகிழமாகத் தான் தோன்றினார் : கரடு முரடாகப் புடைத்து வீங்கிக் கிளைகள் முடமாகிப் பாறி நிற்கும் ஒரு விவேக மரம்,  கூனி, வளைந்த உடற்கோலம், முதுமையில் வெடித்த மடிப்புகள். அவருடைய வளைந்த ஊன்றுகோலோடு கிராமத்தெருக்களில் தட்டுத் தடுமாறி நடந்து, கடற்கரையின் உப்புக்காற்றில், மற்ற கிராமத்தவர்களோடு பேசிக்கொண்டிருப்பதை ஒவ்வொரு பகற்பொழுதும் குறிப்பெடுத்துக் கொண்டது.   அருங்காட்சியக வகைமாதிரிக்கு ஈடான அவர், வரைபடக் குறிப்புகளுடனான உள்ளூர் வரலாற்று நினைவுப் பெட்டகம் ஒன்று உயிர் பெற்று வாழ வந்தது போன்றவர். காதுகொடுத்துக் கேட்பதற்கு யாராவது ஒருவர் கிடைத்தாலும் போதும், தாத்தா, அந்த வானத்துக்கும் இந்த பூமிக்கும் நடுவில் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசித்தீர்ப்பார். அதிலும் குறிப்பாக அந்தக் கிராமத்தில் எவருமே பார்த்திராத இங்கிலாந்தைப் பற்றியும், அந்தக் கிராமத்தில் எவருமே சந்தித்திராத – அப்படிச் சந்தித்திருந்தாலும் அவர்களில், குறைந்தபட்சம் ஒருவர் கூட உயிரோடில்லாத போதிலும், பெரிய மூக்கும் நீலக்கண்களுமான ஆங்கிலேயர்களைப்பற்றி மணிக்கணக்காக உரைநிகழ்த்துவதில் அவருக்குப் பேரானந்தம்.
நான் சின்னப்பையனாக இருந்தபோது, தாத்தா என் தலையைத்தடவி, வெகுதூரத்தில் சூழ்ந்து கிடக்கும் மலைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றினடியில்  குடைந்து செல்லும் குகைப்பாதை வழியாகக் கிராமத்தின் துறைமுகத்துக்குச் செல்லும்  ரயில்களைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருப்பார். அந்த ரயில்கள் பக்கத்துச் சுரங்கங்களிலிருந்து தங்கம், செம்புத் தாதுக்களைச் சுமந்து,  வெண்புகையைச் சுருள்சுருளாகக் கக்கிக்கொண்டு, கடவுள் சபித்த, கேடுகெட்ட பிரித்தானியப் பேரரசின் ஒழிந்த மூலைகளுக்கு, தாத்தா சொல்வார், நமக்குச் சொந்தமான தேசியச் சொத்து முழுவதையும் கொண்டுசெல்லக் கடலில் நங்கூரமிட்டுக் காத்திருக்கும் கப்பல்களில் ஏற்றுவதற்காக, எடுத்துச் செல்லும்.
  அந்தப் பிரித்தானியக் கப்பல்களின் எச்சில் துப்பும் புகைபோக்கிகள் மிகவும் உயரமாக இருந்ததாகவும் அந்நியக் கலங்களில் பரிச்சயமில்லாத கடற்பறவைகள் அவற்றுக்கு நேராகப்பறந்து மோதித் தலை சிதறுண்டதாகவும் தாத்தா சொல்கிறார்.  
 அந்தப் பறவைகள் இறந்ததிலும் ஒரு நேர்மை இருந்ததெனத் தாத்தா சொல்வார். சீன மக்களுக்கான ஒரு நீதிக்கோட்பாடு.
ஆனால், அந்தக்கதையின் அறக்கருத்துக்கு வரும்போதெல்லாம் தாத்தா சக்தி அனைத்தும் இழந்து சோர்ந்துவிடுவார்., வடக்குச்சீனத்தின் பெருவணிகரான அவரின் தாத்தாதான் அந்தக் கிராமத்தின் முதல் தாமிரச் சுரங்கத்தை நிறுவியவர். அபின் புகைக்கும் பழக்கமுள்ள அவர், அதற்கான பணத்துக்காகவே சுரங்கத்தை ஒரு பிரித்தானியருக்கு விற்க நேர்ந்தது. அதன்பின் என்னுடைய முப்பாட்டனார் குடும்ப வளங்களையெல்லாம் அபின் புகைத்தே தீர்ப்பதற்காக எங்கள் வீடுகள், தெருவை அடைத்து இருபுறமுமாக இருந்த கடைகள் எல்லாவற்றின் பத்திரங்களையும் கையெழுத்திட்டு ஒழித்தார். எங்கள் சொத்துக்களின் திறவுகோல்கள் ஒவ்வொன்றாகப் பிறர் கைக்குப் போய்ச் சேர்ந்தன.
துறைமுகம் விரிவடைந்து மலையின் தாதுக்கள் திருடப்பட்டு அதன் அடிவயிறு காலியானபோது, என் முப்பாட்டனாரின் சொத்துக்கள் படிப்படியாகக்  குறைந்து, ஒரு காலத்தில் வசதியாகத் தொழில்செய்த குடும்பம் -  அதன் முன்னோர்களைப்  பெருமைப்படுத்திய ஒரு குடும்பம் – கலகலத்துப்போய்த்  தெருவுக்கு வந்த ஒரு வாழ்க்கையாக இடிந்துபோனது.  சுரங்கங்களிலிருந்து செம்புத் தாதுக்களை எடுத்துவரும் குதிரைவண்டியைக் கடைசியாக விற்ற பிறகு, என் முப்பாட்டனார் அவருடைய உடம்பிலும் ஆன்மாவிலுமாக மிச்சமிருந்ததைப் புகைத்துத் தீர்ப்பதற்காக அருகிலிருந்த அபின் கடைக்குள் தான் முகாமிட்டார்.  அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பியதும் வீட்டின் முன் வாயில் உத்திரத்திலேயே தூக்குப்  போட்டுத் தொங்கினார்.
  * * *
இருபதாண்டுகளுக்கும் முன்,  நான் பீய்ஜிங்  பல்கலைக்கழகத்திற்குக் கிளம்பும் முன்பாகவே , தாத்தா என் கையைப் பிடித்து வீட்டுக்கு வெளியே தெருவுக்கு அழைத்து வந்து ஒருகாலத்தில் வண்ணச் சாயத் தொழில் நடைபெற்ற கட்டிடத்தைக் காட்டி, ‘’ உன் முப்பாட்டனார் மட்டும் அபினுக்கு அடிமையாகாமலிருந்தால் அந்த இடம் இன்றும் நம்முடைய கையைவிட்டுப் போயிருக்காது.’’ பின்னர்,  ஒருகாலத்தில் பெரிய கடையாக இருந்த ஒரு கட்டிடத்தைக் காட்டி, ‘’ பிரித்தானியர் மட்டும்  அபின் விற்பதற்காக நம்முடைய சீனாவிற்கு வராமலிருந்திருந்தால் அந்தக் கட்டிடம் நம்முடையதாக இருந்திருக்கும்.’’ என்றார். எங்கள் குடும்பத்தின் பெருமையாக இருந்த தெருவைக்காட்டிக் கையை அசைத்த தாத்தா, ‘’ நாய்க்குப் பிறந்த அந்தப் பெருமூக்குத் தேவடியா மகன்கள் ஒழிந்து போகட்டும் .’’ எனத் திட்டிக் கால்களால் தரையை உதைத்துத் தலையைத் திருப்பிக் காறி உமிழ்ந்தார்.   
 பின்னர், நாங்கள் ஒரு பழைய கற்பாலத்தின் மீது நின்றுகொண்டிருக்கையில், தாத்தா வெகுதூரத்தில் ஒரு கோடாகத் தெரிந்த மலை அடுக்குகளைக் காட்டி, ‘’ அங்கே, அங்கேதான் சுரங்கங்கள் இருந்தன. அந்த உயரமான சிகரம் தெரிகிறதா? பார். அதன் கீழாகத்தான் ரயில்கள் கடந்து போய்க் கொண்டிருந்தன.’’ என்றார்.  
 தாத்தா காட்டிய திசையை நோக்கிய நான் கண்டதெல்லாம் வயல்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பிசுசிசுக்கும் ஈரக் கடற்காற்றுந்தான். என்ன சொல்வதென்று தெரியாமல், முட்டாள்தனமென்றுகூடச் சொல்லலாம், ‘’ நீங்கள்… நீங்கள்… இங்கிலாந்தை வெறுக்கிறீர்களா?’’ என்றேன்.
  தாத்தா வியப்படைந்து என்னை நோக்கினார்; அது ஒரு நம்பிக்கை ஒளியாகத் தெரிந்தது.
‘’ இந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய வேதனை என்னவென்று உனக்குத் தெரியுமா?’’ எனக் கசந்த ஒரு இகழ்ச்சிப் புன்னகையுடன் என் தலைமுடியைக் கோதியவாறே, அவர் கேட்டார். ‘’ உன்னுடைய முப்பாட்டனார் அபின் புகைத்ததாலோ, அல்லது நம்முடைய தங்கத்தையும் தாமிரத்தையும் அந்த ஆங்கிலேயன் அள்ளிக்கொண்டு போனானே, அதனாலோ அல்ல. நம்மில் எவருக்கும் ஒரு ஆங்கிலேயனின் இதயத்தைக் கத்தியால் குத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லையென்பதுதான்.’’
     * * *  
இங்கிலாந்துக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு மூன்று நாட்கள்  முன்னதாக,  நான் என் சொந்த ஊருக்குச் சென்றேன். அந்த நாளின் கடல் கொள்முதல் முழுவதும் உயிரோடேயே பிடித்துக் கொண்டுவரப்பட்டதால், கிராமத்தின் தெருக்கள் முழுவதும் வரிசை வரிசையான நீர்க்கலங்களில் உயிரோட்டம் குன்றாத கடலுணவு, மற்றும் மீன் வகைகள் அளைந்து துள்ளிக்கொண்டிருந்தாலும், காற்று முழுவதும் அழுகும் மீன்களின் நாற்றம் நிறைந்து, மரணமும் அழுகியழிவதன் நாற்றமுமே நிலைத்திருந்தது.
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த பழைய கட்டிடங்களும் கிட்டங்கிகளும் அநேகமாகக் கடந்த இருபதாண்டுகளில் இடிக்கப்பட்டு மாற்றம் தந்த காற்றின் போக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அவற்றின் இடத்தைப் பிடித்துக்கொண்ட  உயரமான அடுக்கு மாடிக் குடியிருப்புகள், நவீன வணிகத் தலங்கள் அநேகமாக ஒரேமாதிரியான கண்ணாடித் தகடுகள் மற்றும் வெள்ளைப் பீங்கான் தரை ஓடுகளைப் பிரபலப்படுத்தின. அது,  எங்கள் பழமையான கிராமத்தை. எங்கள் பழமையான தேசத்தை முழுவதுமாகக் கண்ணாடித் தகடுகளாலும் சுகாதாரப் பீங்கான்களாலும் புதுப்பித்தது போலாயிற்று.
அதிர்ஷ்டவசமாக, சுற்றுக்கட்டு முற்றம் அமைந்த எங்கள் வீடு, அதன்  ஒழுங்கற்ற கற்கள் இப்போதும் நல்ல வலுவோடு ஒன்றோடொன்று பொருந்தியிருக்க, ஆடைக்கும் கோடைக்கும் தாக்குப் பிடித்து நிற்கிறது. அது கிராமத்தின் முடிவில் கிழக்கு ஓரமாகப் பெரிய, பெரிய மரங்களின் நிழலில் ஒரு பண்பாட்டு நினைவுச் சின்னமாக பெருமிதத்தோடு நிற்கிறது. என்னுடைய தொண்ணூற்றிரண்டு வயதான தாத்தா - இப்போது அவரும் ஒரு பண்பாட்டு நினைவுச் சின்னம் –  மதிப்பு மிக்கவராகத் தனித்ததொரு இடம் பிடித்து, எங்கள் முற்றத்து முன்னறையில்,  கடந்த மூன்றாண்டுகளாகப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்.
தாத்தா, என்னை யாரோ ஒரு அந்நியன் போல நினைத்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் நான் இங்கிலாந்துக்குச் செல்வதாகச் சொன்னதும், வெறித்த பார்வை மாறிவிடவில்லையென்றாலும், அவரது மங்கிய கண்கள் ஒளிபெற்றதாகத் தோற்றமளித்தன. அதன்பிறகுதான், பீய்ஜிங்குக்குப் போய் அங்கேயே தங்கிக் கதைகள் எழுதும் அவரது மூத்த பேரன்தான் படுக்கையருகில் நிற்கிறானெனச் சாளரம் வழியாக வந்த சூரிய வெளிச்சத்தின் `பளீர்` ஒளியில் பார்த்துத் தெரிந்துகொண்டார்.
‘’ நீ எங்கே போவதாகச் சொன்னாய்?’’ தாத்தா கேட்டார்.
‘’இங்கிலாந்துக்கு.’’
மீண்டும் ஒரு சுற்று, கேள்வி – பதில்களுக்குப் பிறகே நான் உண்மையிலேயே இங்கிலாந்துக்குச் செல்லவிருப்பதையும் நான் உண்மைதான் பேசுகிறேன் என்பதையும் அவர் நம்பத்தொடங்கினார். உண்மை உணர்ந்ததும் அவரது முகத்தின் நிறம் வற்றி, அசைவுகள் கடுமையாக, இறப்பு போன்றதாக மாறின. அவர் தலையணை மீது சாய்ந்து அமர்ந்திருப்பது, ஒரு வயதான மனிதனைப் போலன்றி,  இரத்தமும் சதையும் அற்ற ஒரு மெழுகுப் பொம்மை போல இருந்தது. அவர் அப்படியே அசையாமல், நீண்ட நேரம் அமர்ந்திருந்தார். கணங்கள் நொடித்துக் கொண்டே நகர்ந்தன.
பின்னர், அவர் உடம்பை நீட்டி, முறுக்கித் திரும்பி, எம்பிப் படுக்கையின் மேலாகச் சுவற்றிலிருந்த நிலையடுக்கைத் திறந்தார். நீண்ட காலமாக வீணாகக் கிடக்கும் துருப்பிடித்த ஒரு இயந்திரம் இயங்கினாற்போல அவரது எலும்பு மூட்டுகள் மொடுமொடுக்கும் சத்தத்தை நான் கேட்டேன். நிலையடுக்கிலிருந்து  சிவப்புநிறச் சந்தன மரப் பெட்டி ஒன்றை எடுத்த அவர், அதற்குள்ளிருந்து அதே மாதிரியான சிறிய பெட்டி ஒன்றை உருவி வெளியே எடுத்தார். அது சுமார்  எட்டு அங்குல நீளம், இரண்டு அங்குல அகலம்,  அதே இரண்டு அங்குலம் உயரமுமாகத் தோன்றியது. 
 அவர் என்கையைப்பற்றி இழுத்து, அந்தப்பெட்டியின் மேலாக வைத்தார். கண்கள் பளிச்சிட, நடுங்கும் குரலில் தாத்தா, ‘’ கடைசியாக நம் பரம்பரையில் ஒருவர் இங்கிலாந்துக்குப் போகிறார். தலைமுறை, தலைமுறைகளாக நாம் இறப்புக்காலக் கடைசி ஆசையாக, இப்படித்தான் சொல்லிவருகிறோம் : ‘’என்றாவது ஒருநாள் நம் குடும்பத்தில் ஒருவருக்கு ஆங்கிலேயன் ஒருவனை அவன் இதயத்திலேயே கத்தியால் குத்துகிற வாய்ப்பு கிடைக்கும்.’’   
 தாத்தா நடுக்கத்தின் உச்சத்திலிருந்தார். உருகும்  மெழுகுத்திரியில் எரியும் தீபமாக அவரது கைகள் படபடத்தன. அவரது தொய்ந்த நரம்புகள் சித்தாரின் கம்பிகள் போல முறுக்கேறி முதுகில் தெரிந்தன. அதோடு கூட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, வழிவழி வந்த நிலப்பிரபுக் குடிமரபுக்கு என்னை வாரிசாக்கி, மூதாதையர்களின் குரலை அவர் எதிரொலித்தார்  :  ‘’நீ அவர்கள் நாட்டுக்கு, இப்போது இங்கிலாந்துக்குச் செல்லப்போகிறாய். இது உன் கடமை …  அவர்களின் ஆங்கில இதயங்களுக்குள் இந்தக் கத்தியைக் குத்து!’’  
   * * *
இங்கிலாந்தில் எனது பயணம் பத்து நாட்களுக்கு நீடித்தது.
 லண்டன் தெற்கு வங்கி நிலையத்தின் `இன்றையச் சீனம்` விழாவில் உரைநிகழ்த்தியதோடு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஆசிய ஆய்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த இலக்கிய வட்ட மேஜை ஒன்றிலும் கலந்துகொண்டு உரையாற்றினேன். லண்டனில் என்னுடைய செயல்பாடுகள் எல்லாமே பண்பாட்டுப் பரிமாற்றத்தைச் சுற்றியே அமைந்தன. கூடவே இடங்களைச் சுற்றிப் பார்த்தல். அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானிய சமையலை ருசி பார்த்தேன். மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். வெளியே செல்லும்போது, ஒரு தொழில் முறை மொழிபெயர்ப்பாளர், எனது இலக்கிய மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், வெளியீட்டாளர் ஆகியோரும் உடன் வந்தனர். ஸ்டோன்ஹெஞ் அருகில் ஒரு கிராமப் பண்ணையில் இரு குழந்தைகளுடன் வசித்த ஒரு திறமை மிக்க  இலக்கியத் தம்பதியினரை - ஒருவர் கவிஞர், மற்றவர் நாவலாசிரியர் – அவர்கள் வீட்டிலேயே சந்தித்தேன். அவர்களின் விருந்தாளியாகத் தங்கி, பிரமிக்கவைக்கும் சிற்பம் செதுக்கப்பட்ட பெரும்பாறைகளினிடையே உலவும்போது சீனாவில் நான் அறிந்ததைப்போல் அல்லாமல் வேறுபட்ட வனப்புள்ள நிலப் பகுதிகளை நேரடியாகவும் பண்பாட்டுத் தளத்திலும் உணர்ந்தேன். பின்னர், அவர்கள் என்னை லண்டன் அருங்காட்சியகம், கலைக் கண்காட்சிகள், தேவாலயங்களுக்கு   சைனா டவுன், கார்ல் மார்க்ஸ் கல்லறை, அவரது நெருங்கிய நண்பரும் அவரது தாய்நாட்டைச் சேர்ந்தவருமான ஃப்ரடெரிக் ஏங்கெல்ஸ் கல்லறைகளில் நிறுத்தத்துடன் ஒரு வழிகாட்டிப் பயணமாக, அழைத்துச் சென்று காட்டினர். சுருக்கமாகச் சொல்வதென்றால், லண்டனுக்கு முதல்முறையாகச் செல்லும் ஒரு வகைமாதிரிச் சீனப்பயணி என்னென்ன செய்வாரோ அத்தனையும் செய்தேன். ஊ, ஆவென்று வியப்பதும் மகிழ்வதும் புகைப்படங்கள் எடுப்பதும் நினைவுப் பொருட்கள் வாங்குவதுமாக இருந்தேன். ஒரே வித்தியாசம், எனது தாத்தாவின் குரல் என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது : ‘’ ‘’நீ அவர்கள் நாட்டுக்கு, இப்போது இங்கிலாந்துக்குச் செல்கிறாய். இது உன் கடமை…..’’  
அந்த வார்த்தைகள் தாம் என்னை அங்கிருந்து கிளம்பும் முதல்நாள் இரவில் யாருக்கும் தெரியாமல், தனியாக ஹோட்டலைவிட்டும் நழுவி வெளிவரச் செய்தது. மக்கள் அயர்ந்து தூங்கவே, நகரம் இருளுக்குள் அமிழ்ந்து கிடந்தது. பல நூற்றாண்டுகளாக, ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மலைப்பையும் பணிவச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்ற கட்டிடங்களைப் பார்த்துக்கொண்டே நான் தெருக்களில் அலைந்துகொண்டிருந்தேன். எண்ணற்ற கால்களில் மிதிபட்டு, அம்மைத் தழும்புகளாக வடுக்கள் விழுந்து காலத்தைத் துச்சமாக எதிர்கொண்டு கிடக்கும் வட்டப் பாவுகற்களின் மீது அடியெடுத்து தேம்ஸ் நோக்கி எனது பாதையில் சென்றுகொண்டிருந்தேன். லண்டனின் பரந்த வீதிகளில் என் சொந்தக்கிராமம் போல அழுகிய மீன் நாற்றமோ, வடக்குச் சீன மண்ணுக்கே உரிய மரங்கள், வயல்களின் வாசமோ எதுவுமில்லை. தேம்ஸ் நதியின் ஈரப்பதத்திற்கும் பிசுபிசுக்கும் கடற் காற்றுக்கும் நடுவாக ஒரு மென்காற்றினை, அதில் யுகம் யுகமாகப் பதிந்திருக்கும் செங்கல் மற்றும் உளி செதுக்கிய கல்லின் வாசத்தையும் நான் கண்டுகொண்டதாக நினைத்தேன். எப்போதாவது ஒரு வாடகைக்கார் அல்லது பெருங்களியாட்ட விருந்தோ, காதல்விவகாரமோ முடிந்து வீடுநோக்கித் திரும்பும் பதின் இளைஞர் கூட்டம் தெரு வழியாகக் கடந்து செல்லும். அவர்கள் என்மீது பதிக்கும் நட்பற்ற  பார்வைகள், எனது அயல்நாட்டுத்தன்மை, அல்லது மாறுபட்ட  தன்மை வரவழைத்த வெறுப்பா அல்லது அவர்கள் நெருங்கிவரும்போது மெல்ல நடப்பதாலோ அல்லது எனது கற்பனையின் காரணமாகத்தானோ அப்படித் தெரிகின்றன?
தேம்ஸ் நதியின் மீது பரந்து படுத்திருக்கும் ஒரு பழைய கற்பாலத்துக்கு நான் வந்து சேரும் வரை அது அப்படித்தான் நிகழ்ந்தது. பாலத்தின் கைப்பிடிக் கம்பியில் தொற்றி, நான் அமர்ந்த இடத்திலிருந்து, லண்டனின் கண் என்றழைப்பதாக எனக்குச் சொல்லப்பட்ட ஒரு பெரிய இராட்சதச் சக்கர இராட்டினத்தை எதிர்க்கரையில்  பார்க்கமுடிந்தது, அந்தக் கண்ணுக்குள் வெறித்துப் பார்த்தவாறே, சிந்தனையில் ஆழ்ந்த நான் ரோஜாக்கள் விற்கும் ஒரு மத்திய கிழக்குப் பெண் மட்டும் என் சிந்தனையை இடைமறிக்கவில்லையென்றால் நான் யுகக்கணக்கில் அப்படியே அமர்ந்துவிட்டிருப்பேன். அவள் எங்கிருந்தோ  குதித்து வந்ததாகத்தான் தோன்றியது. அவளிடமிருந்த கடைசி ரோஜாக் கட்டுகளை என் முகத்திற்கு நேராக அசைத்து, அவற்றை வாங்குவீர்களா எனக்கேட்டாள். நான் கைப்பிடிக் கம்பியிலிருந்தும் மெதுவாக எழுந்து நின்றேன்.
தெருவிளக்கின் வெளிச்சத்தில் சைகை காட்டி அவளிடம் மீதியாகியிருக்கும் அத்தனை ரோஜாக்களையும் வாங்குவதாகத் தெரிவித்தேன். நான் அதற்கான தொகையைக் கொடுத்து, அவள் சென்ற பிறகு, பாலத்தின் மேலாக நின்று ரோஜாக்களைப் பிய்த்து, இதழ்களை ஒவ்வொன்றாக இருண்டு கறுத்த நீரில் விட்டுக்கொண்டிருந்தேன். அவை மிதந்து செல்வதை, தேம்ஸ் நதிக்குள் மூழ்கி மறைவதைக் கைப்பிடியில் சாய்ந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். அவற்றின் வாசம் என் சுவாசத்தில் இழைந்திருக்க,  இதழ்களின்  விளிம்புகள் மங்கலாகத் தோன்றத் தொடங்கி, சிவந்த இதழ்கள் கறுப்பாக மாறும். அவை எனக்கு மழை நாளில் பெருக்கெடுத்தோடும் சீனநதியில் மிதந்து செல்லும் மூடிய சிறு படகுகளாகத் தோற்றமளித்தன.
   * * *
நான் இங்கிலாந்துக்குக் கிளம்பிய  நாளிலேயே தாத்தா இறந்து போனார்.
தொண்ணூற்றிரண்டாவது வயதில், அவர் தூங்கும்போது அமைதியாக உயிர் பிரிந்தது. நான் பீய்ஜிங்கிற்குத் திரும்பியதும் என் சொந்த ஊருக்கு விமானத்தில் சென்றுவர ஏற்பாடுகள் மேற்கொண்டேன். நான் சிறுவனாக இருந்த போது தாத்தா எனக்குக் காட்டிய அதே மலையின் உயரமான சிகரத்தில்தான் அவர் புதைக்கப்பட்டிருந்தார். கடற்கரை ஓரமாக உடையாத ஒரு நீண்ட சங்கிலித் தொடராக, மலைகள் வளைந்தும் நெளிந்தும் தெரிந்தன. அவற்றின் மேற்கில் பெருங்கடல் எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த எங்கள் சிறு கிராமம் மலைகளுக்குக் கிழக்கில் அமைந்திருந்தது. அந்தக் கரடுமுரடான மலைகளுக்கடியில் தான் பிரித்தானியர்கள் அமைத்த பாதாளப் பாதைகளும், எதுவுமேயில்லாதபடிக்கு சுரண்டிப் பின் கைவிட்டுச்சென்ற தாமிரச் சுரங்கங்களும் இருந்தன.
அந்த மலைப்பகுதியின் படிப்படியான நிலச்சரிவில் தான் தாத்தாவின் கல்லறை இருந்தது. மஞ்சள் நிறத்தில் ஒரு மண் குவியல். அவ்வளவுதான். அது ஒரு சாதாரணமான எளிய சமாதி.  அதன் மீது முளைப்பதற்கு, புல்லுக்கு  இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
  நான் இங்கிலாந்துக்குச் செல்லும்போது தாத்தா என்னிடம் அளித்த ஒடுக்கமான அந்தச் சந்தனமரப் பெட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு,  சமாதியின் காலடியில் நான் அமர்ந்தேன். அந்தப் பெட்டியின் உள்ளே  தோலுறைக்குள் செருகப்பட்ட ஒரு குத்துவாள் இருந்தது. என்னுடைய முப்பாட்டனார், அவரது அப்பாவின் தற்கொலைக்குப் பிறகு  அந்தக் கத்தியை வைத்துக்கொண்டு ஒன்றோ இரண்டோ ஆங்கிலேயனைக் கொன்றுவிடுவதென்று எங்கள் கிராமம் முழுவதும் சுரங்கங்கள், கப்பல் தளங்கள் என அலைந்ததாகக் கூறினார்கள். ஒருவேளை அவரால் ஆங்கிலேயர்கள் எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லையோ அல்லது அந்தச் செயலைச் செய்து முடிக்கத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடியவில்லையோ, கடைசியில் அவர் வெறுங்கையோடுதான் வீட்டுக்குத் திரும்பினார். பல வருடங்களுக்குப் பிறகு முன்னாள் பாட்டனார், மரணப்படுக்கையில் அந்தக் கத்தியையும் குலப்பகையையும் அவரது மகனிடம், அதாவது என் தாத்தாவிடம் ஒப்படைத்தார். 
 அதன்பிறகு பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, தாத்தா அவற்றை,  ‘’நீ அவர்கள் நாட்டுக்கு, இப்போது இங்கிலாந்துக்குச் செல்லப்போகிறாய். இது உன் கடமை …  !’’   என்ற வார்த்தைகளுடன் எனது கைகளுக்கு மாற்றினார். அந்தக் குத்துவாளை என் கையோடு வைத்திருப்பதற்குப் பதிலாக அந்தக் குடும்ப வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில் ஒளித்துவிட்டு தாத்தாவிடம், ‘’ கவலைப்படாதீர்கள், நான் அதை என்னோடு இங்கிலாந்துக்கு எடுத்துப் போகிறேன். என் பயணத்தை வீணாக்கிவிடமாட்டேன்.’’ என்று பொய் கூறினேன். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாத்தா என் கைகளைப் பாசத்தோடு கிள்ளிக் கண்களை மூடிக்கொண்டார்.
நான் இங்கிலாந்துக்குக் கிளம்பிச் சென்ற இரவில் அவர் தூக்கத்திலேயே மரணித்தார்.
அவர் மிகுந்த திருப்தியோடு, அமைதியாக இந்த உலகை விட்டுச் சென்றார்.
என் தாத்தாவின் கல்லறையில் அமர்ந்து, பல மைல் தூரத்திலுள்ள கடலின் மணத்தைச் சுவாசித்துக்கொண்டு, ஒரு காலத்தில் கணக்கில்லாத, எங்கள் குடும்பத்தின் சொத்துக்களைக் கொண்டிருந்த கிராமத்தைப் பார்த்துக்கொண்டு, பழங்காலக் குத்துவாளையும் துருப்பிடித்த குலப்பகையையும் சுமந்திருக்கும் சிவப்புநிறச் சந்தனமரப் பெட்டியை மடியில் தாலாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரு கதையை எழுத வேண்டுமென நான் உணர்ந்தேன். ஒரு வரலாற்றுக் கற்பனை, என் குடும்பத்திற்கும் ஒரு வெகுதூர தேசத்திற்கும் இடையிலான பகைமையையும் இணக்கத்தையும் தெரிவிக்கிற ஒரு கதை. அதற்கு ஒரு பெயர்கூட வைத்துவிட்டேன். ‘’ இங்கிலாந்தும் என் குல மக்களும்.

நன்றி :            guardian.co.uk, Monday 22 March 2010 12.02 GMT 

திசை எட்டும் இதழில் ஜூலை - செப் - 2012 இதழில் வெளியானது.
 கோடையில் ஒரு மழை, ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014,முதல் பதிப்பில் இக்கதையும் சேர்க்கப்பட்டுள்ளது.
 



  

No comments:

Post a Comment