Sunday, 3 January 2016

ஜப்பானியச் சிறுகதை -யானை காணாமலாகிறது (The Elephant Vanishes)

ஹாருகி முரகாமி யானை காணாமலாகிறது தமிழாக்கம் – ச. ஆறுமுகம்.

download (1)
எங்கள் நகர யானைக் கொட்டாரத்திலிருந்த யானை காணாமல் போனதாக நாளிதழில் படித்தேன். எப்போதும் போல 6.13க்கு என் அலாரம் கடிகாரம் என்னை எழுப்பியது. நான் சமையலறைக்குச் சென்று டோஸ்டும் காப்பியும் தயாரித்துவிட்டு வானொலியைத் திருப்பி, செய்தித்தாளை உணவுமேஜை மீதே பரப்பி, மென்றுகொண்டே படித்தேன். நான், நாளிதழைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை படிக்கின்ற ரகம். அதனால் மறைகின்ற யானையைப் பற்றிய செய்தியை வந்தடைவதற்குச் சிறிது அதிகமாகவே நேரமாகிவிட்டது. முதல் பக்கம் முழுவதும் எஸ்.டி.ஐ. ( ஸ்டீல் டைனமிக்ஸ் இன்கார்பொரேட்டட்) பற்றியும் அமெரிக்காவின் தொழில், வணிகச் சிக்கல்கள் பற்றியுமே இருந்தன. பின்னர் நான் தேசியச் செய்திகள், பன்னாட்டு அரசியல், பொருளாதாரம், ஆசிரியருக்குக் கடிதம், நூல் விமர்சனங்கள், வீட்டுமனை விளம்பரங்கள், விளையாட்டுச் செய்திகள் என உழுதுவிட்டுக் கடைசியாகப் பிராந்தியச் செய்திகளுக்கு வந்துசேர்ந்தேன்.
யானைக் கதை,  பிராந்தியப் பக்கத்தில் முக்கியச் செய்தியாக இருந்தது. வழக்கத்திற்கு மாறான தலைப்பு என் கண்களைப் பிடித்திழுத்தது. ‘’ டோக்கியோ ஊரகத்தில் யானை காணாமற்போனது’’, அதன் கீழாக அதைவிட ஒரு அலகுத் தடிமன் குறைவாக, அச்சத்தில் மக்கள், பீதியின் உச்சம், புலன்விசாரணை கோரிக்கை.’’ காலியாகக் கிடந்த யானைக் கொட்டாரத்தை ஆய்வு செய்துகொண்டிருக்கின்ற காவலர்கள் புகைப்படமொன்றும் அங்கேயிருந்தது. யானை இல்லாமல் அந்த இடம் என்னமோ போல ஏதோ தவறாகிப்போனது போல இருந்தது. அது தேவைக்கதிகமாகப் பெரியதாக, காலியாகிப்போய் வெற்றிடமாக,  உள்ளுறுப்புகளெல்லாம் பிடுங்கப்பட்டு வற்றி வதங்கிப்போன ஒரு பெரிய மிருகம் போலக் காணப்பட்டது.
டோஸ்ட் தூள்களையெல்லாம்  தட்டிவிட்டு, ஒருவரி விடாமல் அந்தச் செய்தியைப் படித்தேன். கொட்டாரத்தில் யானை இல்லாமலிருந்ததை மே- 18 அதாவது முந்தைய நாள், பிற்பகல் இரண்டு மணிக்கு, பள்ளிக்கு மதிய உணவு வழங்கும் நிறுவனம்,  வழக்கம்போல லாரியில் உணவை (உள்ளூர்த் தொடக்கப்பள்ளிச் சிறுவர்கள் உண்டு மீதமான மதிய உணவைத்தான் யானை அநேகமாகத் தின்றது) வழங்க வந்தபோதுதான் முதன்முதலாகத் தெரியவந்திருக்கிறது. தறியோடு இணைக்கப்பட்ட பின்காற் சங்கிலி வளை, பூட்டியது பூட்டியவாறே தரையில் கிடக்க,. யானை அதினின்றும் நழுவியிருக்கிறது. யானை மட்டுமே காணாமல் போகவில்லை; அதன் பாகனையும் காணவில்லை. அந்தப்பாகன்தான் முதலிலிருந்தே அந்த யானையைக் கவனிப்பதற்கும் உணவுகொடுப்பதற்குமான பொறுப்பிலுமிருந்தார்.
செய்திப் பத்தியின் படி அதற்கும் முதல் நாள் (மே-17) மாலை 5.00 மணியாகிக் கொஞ்சம் கழிந்து, சாயத் தீட்டுக்கோல் வரைபடம் தயாரிக்க அந்தக் கொட்டாரத்துக்குச் சென்றிருந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஒரு சிலர்தாம் யானையையும் பாகனையும் கடைசியாகப் பார்த்திருக்கிறார்கள். ஆறு மணிச் சங்கு ஊதியதும் அந்தப் பாகன் யானைக்கூடத்தின் வாயில்கதவுகளைச் சார்த்திப் பூட்டிவிடுவதால், அந்த மாணவர்கள் தாம் யானையைக் கடைசியாகப் பார்த்திருக்கவேண்டுமென அந்த நாளிதழ் கூறுகிறது.
மாணவர்களின் ஒன்றுபட்ட வாக்குமூலத்தின் படி அந்த நேரத்தில் யானை அல்லது பாகன் இருவரிடத்திலும் வழக்கத்துக்கு மாறான எதுவும் காணப்படவில்லை. யானை எப்போதும் நிற்பது போலவே, கூடத்தின் நடுவில் அப்போதைக்கப்போது, அதன் தும்பிக்கையை அங்கும் இங்குமாக அசைத்துக்கொண்டு அல்லது சுருக்கங்கள்  மடிப்புக்களாகிப்போன கண்ணிமைகளை ஒருக்கணித்துச் சாய்த்து நோக்கிக்கொண்டு, நின்றுகொண்டிருந்திருக்கிறது. அது மட்டுமீறி வயதான ஒரு யானை. அதன் ஒவ்வொரு அசைவுமே  மிகுந்த கடினம் மேற்கொண்ட முயற்சியெனத் தோன்றும் –அதனாலேயே முதன்முதலாக அதைப் பார்க்கின்றவர்கள் அது எந்தக்கணமும் பட்டென்று விழுந்து, அதன் கடைசி மூச்சை விட்டுவிடுமென்று பயம் கொண்டனர்.
download (2)


அதன் முதுமையே ஒரு ஆண்டுக்கு  முன்பு அதனை எங்கள் நகரம்  தத்தெடுக்கச் செய்தது. நகர  எல்லை விளிம்பில் ஒட்டிக்கொண்டிருந்த சிறிய தனியார் மிருகக் காட்சிச் சாலை, கொடுக்கல் வாங்கல் சிக்கல்களால் மூடவேண்டியேற்பட்டபோது, வனவிலங்குகள் வணிகத்திலிருந்த ஒருவர் அந்தக் காட்சிச் சாலையிலிருந்த இதர மிருகங்களுக்கெல்லாம் நாடு முழுக்கத் தேடி ஏதோ ஒரு இடம் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார். ஆனால் எல்லா மிருகக் காட்சிச்சாலைகளும் நிறையவே யானைகளைக் கொண்டிருந்தன.  அவர்களில் ஒருவர்கூட, கிழடுதட்டி மெலிந்துபோய், எந்த நொடியிலும் மாரடைத்து இறந்துவிடக்கூடிய ஒன்றைக் கண்ணுக்குத் தெரிந்து, வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால்தான், அதன் கூட்டாளிகள் எல்லோரும் சென்றபின்னும் அந்தப் பாழடைந்துகொண்டிருந்த காட்சிச் சாலையில் நான்கு மாதங்கள் செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் – அதற்காக முன்னர் ஏதோ செய்வதற்கென வேலை இருந்ததென்றில்லை – தனிமையில் தங்கியிருந்தது.
அது அந்த மிருகக் காட்சிச் சாலைக்கும் சரி, நகரத்துக்கும்  சரி, பல்வேறு தொந்தரவுகளைக் கொண்டு வந்தது. காட்சிச் சாலை, அதன் நிலத்தை, மனைபோட்டுவிற்கும் ஒருவருக்கு விற்றுவிட்டது. அவர் அந்த இடத்தில் மிக உயரமான அடுக்ககக் குடியிருப்புகள் கட்டத் தீர்மானித்திருந்தார். அதற்கு நகர மன்றம் ஏற்கெனவேயே அனுமதி வழங்கியிருந்தது. யானைச் சிக்கல் முடிவுபெறாமல் நீளுகின்ற காலம் வரைக்கும் மனை விஸ்தரிப்பாளர், எந்தப் பயனும் இல்லாமல் வட்டி செலுத்தவேண்டியிருந்தது. பேசாமல் அந்த இழவைச் சாகடித்துவிடுவதுதானே என்ற கேள்விக்கு இடமேயில்லை.
ஒரு சிலந்திக்குரங்கென்றாலோ, வௌவாலென்றாலோ அப்படித் தூக்கியெறிந்துவிடலாம்; ஆனால், ஒரு யானையைக் கொன்று மூடிமறைப்பதென்பது முடிகிற காரியமா? அதிலும் பின்னால் எப்போதாவது தெரியவந்தால் விளைவுகள் பயங்கரமானதாக இருக்குமே! அதனால்  பல்வேறு தரப்பினரும் கூடி விவாதித்து அந்த முதிய யானை குறித்துத் தீர்மானமாக முடிவு செய்கின்ற ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்கள் :
யானையை நகரம் விலைகொடுக்காமலே தனதாக்கிக் கொள்வது.
யானையை வைத்துப் பராமரிப்பதற்கான இடத்தை,  இழப்பீட்டுத்தொகை ஏதும் பெற்றுக்கொள்ளாமலேயே மனை விஸ்தரிப்பாளர் கொடுப்பார்.
காட்சிச் சாலையின் முன்னாள் உரிமையாளர்கள் பாகனுக்கான ஊதியத்தை வழங்குவர்.
இந்த யானைச் சிக்கல்  குறித்து அதன் தொடக்க காலத்திலிருந்தே எனக்குத் தனிப்பட்ட வகையில் ஒரு ஆர்வம் இருந்துவருகிறது. அதோடு, என் கையில் கிடைத்த செய்தி நறுக்குகள் எல்லாவற்றையும் என்னுடைய ஒட்டுப்பட சேகரப் புத்தகத்தில் ஒட்டி வைத்திருக்கிறேன். இது தொடர்பான நகரமன்றக் கூட்டத்திற்குச் சென்று விவாதங்களையும் கேட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அதனால்தான் இது குறித்து இவ்வளவு துல்லியமான முழு விபரங்களை என்னால் அடுக்கிக் கூறமுடிகிறது. என்னுடைய விபரக்குறிப்புகள் மிக நீளமாகத் தோன்றுவதாக இருந்தாலும், அவற்றை நான் இங்கே தொகுத்துக் கூறுவதற்குக் காரணம், யானை காணாமல் போனதற்கு அந்த யானைச்சிக்கலைக் கையாண்டவிதமும் அடிப்படையாகலாம் என்பதற்காகத்தான்.
நகரம் யானைக்கான  பொறுப்பினை ஏற்றுக்கொள்வதென்ற வழிவகை ஏற்பாட்டுடன் ஒப்பந்தத்தைப் பேசி மேயர் இறுதியாக்கியபோது, எதிர்க்கட்சி வரிசை உறுப்பினர்களின் தரப்பில் கொதித்தெழுந்த எதிர்ப்பு  அலை ( அவர்களின் இருப்பை அதுகாறும் நான் கற்பனையில்கூடக் கண்டதில்லை) ‘’எதனால் யானையின் உரிமையை நகரம் ஏற்கவேண்டும்?’’ என மேயரைக் கேட்டு அவர்கள் கீழ்க்கண்ட வாதங்களை ( அந்தப் புளுகு மூட்டைகளுக்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், என்றாலும் எளிதில் புரிந்துகொள்வதற்காக அவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.) எழுப்பினர்.
யானை விவகாரம் ஒரு தனியார் நிறுவனத்துக்கான – மிருகக் காட்சிச் சாலைக்கும் மனை விஸ்தரிப்பாளருக்குமான தனிநபர் பிரச்னையாக இருக்கும்போது, அதில் நகரம் ஈடுபடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
பராமரிப்பு மற்றும் தீவனச் செலவு மிக அதிகமாகக் கையைக் கடிக்கும்.
பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு மேயர் என்ன உத்தேசங்களைக் கொண்டிருக்கிறார்?
நகரம் அதற்கெனச் சொந்தமாக ஒரு யானை வைத்திருப்பதனால் என்ன பெரிய பெருமை ஏற்பட்டு விடப்போகிறது?
‘’ஒரு யானையைப் பராமரிக்கும் வேலையைத் தலையில் போட்டுக்கொள்வதைவிட அதிமுக்கியத் தேவைகளாக – கழிவுநீர்க்கால்வாய் சீரமைப்பு, புதிய தீயணைப்பு இயந்திரம் வாங்குதல் எனப்  பலவகைப் பணிகள் ஏற்கெனவே நிலுவையில் கிடக்கின்றன.’’ என எதிரணியினர் அறிவித்தனர். மேயருக்கும் மனை விஸ்தரிப்பாளருக்கும் இடையில் ரகசியப் பேரம் ஒன்று நடந்திருக்க வாய்ப்புள்ளதெனக் கறாராக இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பு தோன்றுமாறு அவர்கள் பேசினார்கள்.
அதற்குப் பதிலாக மேயர் இப்படித் தெரிவிக்க வேண்டியிருந்தது -
(1) உயரமான அடுக்ககங்கள் கட்டுவதற்கு அனுமதிப்பதன் மூலம் நகரத்தின் வரி வருவாய் கணிசமாக அதிகரிக்கவிருக்கும் பட்சத்தில் ஒரு யானையை வைத்துப் பராமரிப்பதற்காகும் செலவினம் ஒப்பு நோக்குப் பார்வையில் முக்கியத்துவமற்றதாகிறது. அந்தவகையில்   யானையின் பராமரிப்பை ஏற்றுக்கொள்வதே நகரத்துக்கு விவேகமானதாகிறது.
(2) யானை மிகவும் வயதானதென்பதால் அது      முரட்டுத்தனமுடையதாகவோ, அல்லது யாருக்கும் அபாயம் ஏற்படுத்திவிடக்கூடிய ஒன்றாகவோ இருக்கப்போவதில்லை.
(3) யானை இறந்ததும் மனை விஸ்தரிப்பாளர்  கொடையாக வழங்கியிருக்கும்  நிலம் நகரத்துக்கு முழுமையாகச்  சொந்தமாகிவிடும்.
(4) நகரத்தின் அடையாளம்  யானையாகிவிடும்.
மிக நீண்ட விவாதம், இறுதியாக, யானையை நகரமே பொறுப்பேற்றுக் கொள்வதென்ற முடிவுக்கு இட்டுச்சென்றது. நகரம் பழமை வாய்ந்தது; நல்ல குடியிருப்பு வசதிகள் ஏற்பட்டுவிட்ட ஊரக நகரம். அதோடு ஓரளவு செழிப்பும் வசதியுமான குடிமக்களைக் கொண்டு, வலுவான பொருளாதார நிலையில் இருந்தது. ஒரு திக்கற்ற யானையைத் தத்தெடுக்கின்ற நடவடிக்கையை நகர மக்கள் ஆதரவுக்கண்களோடேயே நோக்குவார்கள். சாதாரணப் பொதுமக்கள் கழிவுநீர்க் கால்வாய்கள், தீயணைப்பு இயந்திரங்கள் போன்றவற்றை விடவும் வயதான யானைகளையே  விரும்புவார்கள்.
images
நகரம், யானையைப் பொறுப்பெடுத்துக் கவனிக்கவேண்டும் என்பதற்கு நானும் ஆதரவுநிலையில்தான் இருந்தேன். உண்மை, எனக்கு வானுயர அடுக்ககங்கள் மீது வெறுப்பு இருந்தது; ஆனால், நகரம், தனக்குச் சொந்தமாக ஒரு யானை வைத்துக்கொள்கின்ற பெருமிதம் எனக்குப் பிடித்திருந்தது.
மரங்கள் அடர்ந்த ஒரு பகுதி வெட்டித் தூய்மையாக்கப்பட்டது. தொடக்கப்பள்ளியின் பழைய உடற்பயிற்சி மையம் அங்கே யானைக்கூடமாகப் போய் அமர்ந்தது. யானையைப் பல ஆண்டுகளாகக் கவனித்துவந்த பாகனும் அந்தக் கூடத்திற்கு யானையுடன் வசிப்பதற்காக வருவார். குழந்தைகளின் மதிய உணவு மிச்சம் மீதிகள் யானைக்கு உணவாகும். இறுதியில், மீதியிருக்கும் அதன் வாழ்நாளைக் கழிப்பதற்காக, யானை அந்தக் கட்டிடத்திற்கு ஒரு டிரெயிலரில் வந்துசேர்ந்தது.
யானைக்கூட அர்ப்பணிப்பு விழாச் சடங்குகளில் மக்களோடு மக்களாக நானும் கலந்துகொண்டேன். யானையின் முன்பாக நின்றுகொண்டு, மேயர் சொற்பொழிவு ஒன்றினை ( நகர முன்னேற்றம் மற்றும் கலைப் பண்பாட்டு வளங்களைப் பெருக்குதல் தொடர்பாக) ஆற்றினார். மொத்தப் பள்ளிமாணவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் ஒரு தொடக்கப்பள்ளி மாணவன், கட்டுரை ( திரு. யானையார் அவர்களே, ஒரு ஆரோக்கியமான நீண்ட வாழ்வைக் கனிவுடன் வாழுங்கள்) ஒன்றை வாசிப்பதற்காக எழுந்து நின்றான். அங்கே  ஓவியப் போட்டி ( அதன் பின்னர், யானையை வரைவதென்பது மாணவர்களின் கலைக்கல்வியில் ஒரு ஒன்றிணைந்த அம்சமாகிவிட்டது) ஒன்று நிகழ்ந்தது. கண்ணைப் பறிக்கும் ஆடைகளில்   இளநங்கையர் இருவர் ( இருவரில் ஒருவருக்குக் கூட அழகான தோற்றம் இல்லை என்பது வேறுவிஷயம்.) யானைக்கு வாழைப்பழக் குலை ஒன்றைக் கொடுத்தனர். எந்த வகையிலும் அர்த்தமற்ற ( அதிலும் யானைக்கு முழுக்க முழுக்க அர்த்தமற்ற) இந்தச் சடங்குகளையெல்லாம் தாங்கிக்கொண்ட அந்த யானை, பழக்குலையை வெடுக்கென்று ஒரு இழுப்போடு பற்றிக்கொண்டு பழங்களைச் சீப்புகளாகக் காயமின்றிப் பிய்க்கத்தொடங்கியது. அது பழங்களைத் தின்று முடித்ததும் எல்லோரும் கைகளைத் தட்டிப் பாராட்டினார்கள்.
யானையின் வலதுபக்கப் பின்னங்காலில் மிகத் தடிமனாகத் தோற்றமளித்த, திடமான ஒரு மரச்சட்டம் பொருத்திய இரும்புக் காப்பு மாட்டி, அதில் கோர்க்கப்பட்டிருந்த தடித்த சங்கிலி ( ஒரு முப்பது அடி நீளமிருக்கலாம்) ஒரு காங்கிரீட் தூணோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. பாவம், என்ன ஒரு வலுவான, முரட்டு நங்கூரம்,  அந்தப் பிராணியை அந்த இடத்தோடு சேர்த்துப் பிணைத்திருக்கிறதென்றும் யானை ஒரு நூறு வருடத்துக்கு, அதன் சக்தியெல்லாம் திரட்டி இழுத்துத் தேய்த்து உரசினாலும் அதை உடைத்துவிடமுடியாதென்றும், அதைப் பார்க்கின்ற ஒவ்வொருவரும் உணர்வார்கள்.
அப்படியொரு விலங்குச் சிறைக்குள் மாட்டிக் கொண்டிருப்பது குறித்து அந்த யானை வருத்தப்பட்டதாவென என்னால் சொல்லமுடியாது. அதன் காலில் உலோகம் மறைத்த பெரிய பெரிய பள்ளங்கள் போல் தோன்றிய காயங்கள் குறித்து, யானைக்கு எந்த உணர்வும் இல்லாதது போல்தான் மேலோட்டமாகத் தெரிந்தது. அதன் காதுகளும் உடம்பிலிருந்த ஒரு சில வெள்ளை முடிகளும் மெல்லிய காற்றில் மென்மையாக அசைந்துகொண்டிருக்க, அதனுடைய வெற்று யோசனையை அண்டவெளியில் திட்டவட்டமற்ற ஏதோ ஒரு புள்ளியில் பொருத்திவைத்திருந்தது.
murakami
யானைப்பாகன், ஒல்லியாக, எலும்புந்தோலுமே போலக் காட்சியளிக்கும் வயதான மனிதர். அவர் வயது அறுபதுகளின் தொடக்கத்திலும் இருக்கலாம், எழுபதுகளின் பிற்பகுதியிலும் இருக்கலாம். அதை யூகித்து நிர்ணயிப்பது மிகமிகக் கடினம்.   வாழ்க்கையின் ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்குப்பின் உடலமைப்பில், வயது எந்த மாறுதலையும் ஏற்படுத்தாத வகையினரில் அவரும் ஒருவர். அவரது  தோல் வெயிலில் கறுத்து ஒரு இருண்ட செம்பவள நிறமாகிக் கோடை, குளிர் இருபருவங்களிலும் ஒரேமாதிரியாகவே தோற்றமளித்தது. அவரது தலைமுடி குட்டையாக, எப்போதும் விறைப்பாகக் குத்திட்டு நின்றது. கண்கள் சிறிதாக இருந்தன. அவரது முகத்துக்கெனத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்கிற மாதிரியான தன்மை எதுவும் இல்லை. ஆனால், அநேகமாக மிகச்சரியான வட்டவடிவக் காதுகள் இருபக்கமும் துருத்திக்கொண்டு, `நானிருக்கிறேன் பார்` எனக் காட்டிக்கொண்டிருந்தன.
அவர் ஒன்றும்  நட்பற்ற மனிதராக இல்லை. யாராவது அவரிடம் பேசினால், பதில் சொல்வார்; அதோடு மிகத் தெளிவாகவும் பேசினார். பார்ப்பதற்கு அவர் எப்போதும் ஏதோ ஒரு நோயாளி போலத்  தோன்றினாலும் அவர் விரும்பினால் முழு மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய, அப்படி இருக்க முடிகிறவர்தான். பொதுவாக அவர் ஒரு மௌனப்போக்குடன், தனிமைவிரும்பும் தோற்றமுள்ள முதியவராக இருந்தார். யானைக்கூடத்துக்கு வரும் குழந்தைகளை அவர் நேசித்ததாக, அவர்களுக்கு இனியவராக இருக்கத்தான் முயற்சித்தாரெனத் தோன்றியதென்றாலும், உண்மையில் குழந்தைகள் ஒருபோதும் அவரால் மகிழ்ச்சி பெற்றிடவில்லை.
அப்படிச் செய்த ஒரே நபர் யானை மட்டும் தான். அவர் யானைக்கூடத்தை ஒட்டிய ஒரு சிறு முன்னறையில் தங்கினார். நாள் முழுதும் அவர் யானையின் பக்கத்திலிருந்து அதற்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டிருப்பார். அவர் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக அதே யானையோடேயே  இருந்து வருகிறார். அதனால் யானைக்கும் அவருக்குமிடையேயான பார்வைக் கனிவு மற்றும் மெய்ப்பாட்டுணர்வு நெருக்கத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளமுடியும். யானை வெறுமனே நின்றுகொண்டிருக்கும் போது, அதனை நகரச்செய்ய வேண்டுமென அவர் விரும்பினால், அவர் செய்வதெல்லாம், யானையின் அருகில் போய் நின்று, அதன் முன்கால் ஒன்றில் சும்மா இலேசாக ஒரு தட்டுத் தட்டி, அதன் காதில் எதையோ கிசுகிசுப்பார். அவ்வளவுதான், அதன் பெரிய உடலை அசைத்துக்கொண்டு, அவர் எங்கே சுட்டிக்காட்டுகிறாரோ அங்கே போய்ச் சரியாக நின்று, புதிய நிலைமேற்கொண்டு, அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை வெறித்து நோக்கத் தொடங்கிவிடும்.
வார விடுமுறைகளில்  நான் யானைக்கூடம் அருகே  இறங்கி, இந்தச் செயல்பாடுகளையெல்லாம் கவனித்துக்கொண்டிருப்பேன். ஆனாலும் யானைக்கும் பாகனுக்குமான தகவல் பரிமாற்ற அடிப்படையின் கொள்கையைப் பிரித்தறிய என்னால் ஒருபோதும் இயலவில்லை. யானை ஒரு சில எளிய சொற்களைப் புரிந்துகொள்ளுமாக இருக்கலாம்.( நிச்சயமாக, அது அவ்வளவு நீண்ட காலமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.) அல்லது, அதன் காலில் தட்டப்படும் தட்டல்களின் மாற்ற வேறுபாடுகளிலிருந்து உரிய செய்தியைப் பெறுமாக இருக்கலாம். அல்லது அடுத்தவர் மனத்திலிருப்பதைத் தெரிந்து கொள்ளும் டெலிபதி, வசியத்திறன் போன்ற ஏதாவதொரு தனிப்பட்ட சக்தி ஒருவேளை அதற்கிருந்து, அதன் மூலம் பாகனின் மனத்தை அது புரிந்துகொண்டிருந்திருக்கலாம். ஒருமுறை நான், பாகனை எப்படி யானைக்கு உத்திரவிடுகிறீர்கள் எனக் கேட்டபோது, அவர் மிகச் சாதாரணமான ஒரு புன்முறுவலைச் சிந்திவிட்டு,‘’ நாங்கள் நிரம்பக் காலமாக ஒன்றாக இருக்கிறோம்.’’ என்றார்.
இப்படியாக ஒரு வருடம் கடந்தது. பின்னர், எந்தவிதமான முன்னறிவிப்புமில்லாமல் யானை காணாமலாகிறது. முதல் நாள் அது அங்கேயிருந்தது. மறுநாள் அது இல்லாமலாகி முடிந்த முடிவாகிவிட்டது.
நான் இரண்டாவது கப் காப்பியை ஊற்றிக்கொண்டு, கதையை மறுபடியும் தொடக்கத்திலிருந்து முடிவு வரை படித்தேன். மெய்யாகவே, அது ஒரு மிகவும் புதுமைவாய்ந்த வரைவுச்செய்தி – ஷெர்லாக் ஹோம்ஸைக்கூட ஆர்வமூட்டிவிடுகின்ற வகை.
‘’இதைப் பாருங்கள்,  வாட்சன்,’’ என புகையிலைக்குழாயைத்  தட்டிக்கொண்டே அவர் சொல்வார். ‘’ மிக்க ஆர்வமூட்டுமொரு வரைவு. உண்மையிலேயே மிக்க ஆர்வமூட்டுகிறது.’’
அந்த வரைவுக்கு  ஒரு வினோதத்தன்மையை செய்தியாளரின் தடுமாற்றமும் குழப்பமும்தான் ஏற்படுத்துகிறதெனத் தெளிவாகத் தெரிகிறது, தடுமாற்றமும் குழப்பமும் அபத்தத்திலிருந்து எழுந்த ஒன்றுதான். ஒரு `சாதாரணமான` வரைவினை எழுதுவதற்காக அபத்தத்தை ஏற்படுத்துகிற சூழ்ச்சி வழிமுறைகளைக் கண்டடைய அந்தச் செய்தியாளர் எவ்வளவு சிரமம் மேற்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் எளிதில் கண்டுகொள்ளலாம். ஆனால் அந்தச் சிரமங்களெல்லாம் அவரைத்  தடுமாற்றம் மற்றும் குழப்பத்தின் எதிர்பாராத உச்சத்தில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ‘’யானை தப்பிச்சென்றது’’ போன்ற தொடர்களை அந்த வரைவு கையாளுகிறது. ஆனால், அந்த வரைவு முழுவதையும் கவனமாகப் படிக்கும்போது யானை ‘’தப்பித்துச்சென்றது’’ எனக்கூறுவதற்கு  எந்த வழியுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது மெல்லிய காற்றினுள் கலந்து காணாமலாகியிருக்கிறது. ஒருசில `விபரங்கள்` இன்னும் `தெளிவற்றதாகவே` உள்ளனவென்று சிறுகுறிப்புக் காட்டி அவரது சிக்கல் நிறைந்த மனநிலையை வெளிப்படுத்திவிட்டார், ஆனால்,   `விபரங்கள்`, `தெளிவற்று` போன்ற மிகச் சாதாரணமான சொற்களைப் பயன்படுத்தி முடிவுசெய்கிற விவகாரம் இதுவல்ல என்றே நான் கருதுகிறேன்
முதலாவதாக, யானையின் காலில் மாட்டப்பட்டிருந்த இரும்புக் காப்பு குறித்த சிக்கல் முன்னே நிற்கிறது. காப்பு இப்போதும் பூட்டியது பூட்டியவாறே காணப்படுகிறது. இதற்கு மிகப் பொருத்தமான ஒரே விளக்கம், யானைப்பாகன் பூட்டைத்திறந்து காப்பினை யானையின் காலிலிருந்தும் கழற்றிப் பின் மீண்டும் பூட்டிவிட்டு, யானையோடு ஓடிப்போயிருக்கவேண்டும் – அப்படியான ஒரு கருதுகோளுக்கு வாய்ப்பற்ற நிலையிலும் அந்த இதழ் அதை விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தது. உண்மை என்னவென்றால் யானைப்பாகனிடம் அந்தச் சாவி இருந்திருக்கவில்லையென்பதுதான்! இரண்டு சாவிகள் மட்டுமே இருந்தன. பாதுகாப்பை உத்தேசித்து, அவை பூட்டிய இரும்புப்பெட்டகங்களுக்குள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று காவல் தலைமையகத்திலும் மற்றொன்று தீயணைப்பு நிலையத்திலும் இருந்தது. இரண்டுமே பாகனின் கைக்கு, அல்லது அதைத் திருடமுயற்சிக்கின்ற எவருக்கும் கிடைக்க வாய்ப்பற்ற நிலையிலிருந்தன. அப்படியே யாராவது ஒருவர் அவற்றில் ஒரு சாவியை வெற்றிகரமாகத் திருடிவிட்டாரென்றாலும், அதைப்பயன்படுத்திவிட்டுப் பின் திரும்பவும் அதே இடத்தில் கொண்டுபோய் வைக்குமளவுக்கு, அவசியம் ஏதும் இருந்ததாகக் கருத எந்தத் தடயமும் இல்லை. இருந்தாலும் மறுநாள் காலையில் சாவிகள் இரண்டும் அததற்குரிய இடத்தில், காவல் தலைமையகத்திலும் தீயணைப்பு நிலையத்திலும், பாதுகாப்புப் பெட்டகத்தினுள் வைத்தது வைத்தபடி இருந்தன. அதனால்தான், சாவி பயன்படுத்தாமலேயே, இரும்பு வளையத்துக்குள்ளிருந்து யானை, தானாகவே அதன் காலை இழுத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு நாம் வருகிறோம் – அது முழுக்கமுழுக்க இயலாத ஒன்றென்றால் யாராவது அதன் கால் பாதத்தைத் தனியாக அறுத்தெடுத்திருக்க வேண்டும்.
இரண்டாவது சிக்கல், யானை தப்பிச் சென்ற வழி குறித்தது. யானைக்கூடத்தையும் மைதானத்தையும் சுற்றிக் கிட்டத்தட்டப் பத்தடி உயரமுள்ள திடமான பெரிய வேலி அமைக்கப்பட்டுள்ளது. நகர்மன்றக் கூட்டத்தில் பாதுகாப்பு குறித்து கடுமையான விவாதங்களுக்குப் பின், ஒரு நடைமுறைத் திட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அது ஒரு கிழட்டு யானையைப் பராமரிப்பதற்கு எந்த வகையில் பார்த்தாலும் கொஞ்சம் அதிகபட்சமானதாகவே கருதப்படும். கனத்த இரும்புக்கம்பிகள் உறுதியான காங்க்ரீட் அஸ்திவாரத்துடன் அசைக்க முடியாதபடி, நிலையாகச் சுற்றிவர அமைக்கப்பட்டிருந்தன (வேலிக்கான செலவு மனை விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்தது.) ஒரே ஒரு நுழைவாயில், அதுவும் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கோட்டை மதில் மாதிரியான அந்தச் சுற்று வேலிக்குள்ளிருந்து யானை தப்பிச் செல்ல எந்த வழியும் இல்லை.
மூன்றாவது சிக்கல் யானையின்  கால் தடங்கள். யானைக்கூடச் சுற்றுவேலிக்குப் பின்புறமாகச் செங்குத்துப் பாறைகளுடன் ஒரு குன்று இருக்கிறது. அதன் மீது நிச்சயமாக யானை ஏறிச் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. யானை, எப்படியோ சமாளித்து அதன் இரும்பு வளையத்திலிருந்து காலை உருவி, அந்தப் பத்தடி உயர வேலியையும் எம்பித் தாண்டி, முன்புற வாயில் வழியாகவே சென்றிருக்க வேண்டுமெனக் கருதினாலும் அந்த வழியின் மிகக் குழைவான மண்ணில் யானையின் கால் தடமென்று ஒரே ஒரு அடையாளம் கூடக் காணப்படவில்லை.
இப்படியான திகில் குழப்பங்களும், வேண்டுமென்றே சிரமப்பட்டு சுற்றிவளைக்கும் போக்குமாகப் பெரும்புதிராகிப்போன அந்தச் செய்தி வரைவு கடைசியாக நம்மை இட்டுச்செல்கிற ஒரே முடிவு, யானை தப்பிச் செல்லவில்லை, அது காற்றில் கரைந்து காணாமற்போய்விட்டது என்பதுதான்.
அது எப்படியிருந்தாலும், அந்த நாளிதழோ, காவல் துறையோ, அல்லது மேயரோ கூடத் திறந்த மனத்துடன், குறைந்த பட்சம், யானை காற்றில் கரைந்துபோனதென்றாவது ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டுமா, என்ன?
காவல்துறை புலன்  விசாரணையை விடாமல் தொடர்ந்து  கொண்டிருந்தனர். காவல்துறையின் தகவல் தெரிவிக்கும் அதிகாரி ஒரே கருத்தாக, ‘’ மிகத் தந்திரமான முறையில் முன்கூட்டியே திட்டமிட்டு, யானை கடத்தப்பட்டிருக்கிறது அல்லது தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது எனத் தெளிவாகத் தெரியவருகிறது. ஒரு யானையை மறைத்து வைப்பதிலிருக்கின்ற சிரமங்களைக் கணக்கிடுகையில், இந்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதில் எங்களுக்குக் கொஞ்சம்  நேரமாகிறது என்பது மட்டுமே பிரச்னை.’’ எனத் தெரிவித்திருந்தார்.  நல்நோக்குக் கணிப்பினை உறுதிப்படுத்தும் விதமாக, உள்ளூர் வேட்டைக் கழகம் மற்றும் தேசிய தற்காப்புப் படையின் துல்லியமாகச் சுடும் வீரர் அணி உதவியுடன் காட்டுப் பகுதி முழுவதும் அலசித் தேடுவதற்குத் திட்டம் வகுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேயர், உடனடியாகச் செய்தியாளர் – கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் நகரத்தின் காவல் கண்காணிப்புக்கான ஆதார வசதிகள் போதிய அளவுக்கு இல்லாமலிருப்பதற்காக மன்னிப்பு தெரிவித்துக் கொண்டார். அதே நேரத்தில், அவர், ‘’ நம்முடைய யானைப் பாதுகாப்பு முறை, நாட்டிலுள்ள வேறெந்தக் காட்சிச் சாலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள  இதையொத்த வசதிகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. உண்மையில், அது, வழக்கமான கூண்டு முறையைக் காட்டிலும் அதிகத் திடமான, பாதுகாப்புத் தோல்வி வாய்ப்புகள் மிகக் குறைவான  ஒன்று.’’ என அறிவித்தார். கூடவே, ‘’ இது, சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அபாயகரமான, குரோதத்தில் பழிதீர்க்கும் வகைப்பட்ட மிக மோசமான, அறிவுகெட்ட, நாசகரச் செயல்.   இத்தகைய செயல்கள் தண்டிக்கப்படாமல் விடுபடுவதை நாம் அனுமதிக்க முடியாது.’’ என்றும் கருத்து தெரிவித்தார்.      .
கடந்த வருடம்  போலவே, நகர்மன்றக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்  குற்றம் சுமத்தினார்கள் : ‘’ மேயரின் அரசியல் பொறுப்புணர்வு குறித்துக் கவலை கொள்கிறோம்; அவர், யானைச் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொல்லி நகர மக்களின் நலன்களை விற்பதற்காகவே தனியார் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்.’’
`கவலை தோய்ந்த முக`த்துடனான முப்பத்தேழு வயதுள்ள ஒரு தாயை, அந்த நாளிதழ் பேட்டி கண்டிருந்தது. ‘’ இப்போது, என் குழந்தைகளை, வெளியில் விளையாட அனுப்பப் பயமாக இருக்கிறது.’’ என்றிருந்தார், அவர்.
யானையைத் தத்தெடுக்கும் முடிவுக்கு நகரத்தை இட்டுச் சென்ற சூழ்நிலையைப் படிப்படியாகக் குறிப்பிடும் ஒரு சுருக்க விவரணை, யானைக்கூடம் மற்றும் மைதானத்தை வான்வழிக் காட்டும் வரைபடம் ஒன்று, காற்றில் கரைந்து போன யானை மற்றும் அதன் பாகனின் வரலாறு, எனப் பலவற்றையும்  அந்தச் செய்தி உள்ளடக்கியிருந்தது. அறுபத்து மூன்று வயதுள்ள நொபொரு வட்டனாபே என்ற அந்தப் பாகன், சிபா மாநிலத்தின் தட்டெயாமாவைச் சேர்ந்தவர்.  காட்சிச்சாலையின் பாலூட்டிகள் பிரிவினைப் பல வருடங்களாகப் பராமரித்து வந்திருக்கிற அவர், ‘’ அந்த மிருகங்களைப் பற்றி மேலதிகமாகப் பல நல்ல தகவல்கள் தெரிந்தவர் என்பதிலும்   நட்பார்ந்த அவரது சுறுசுறுப்பு மற்றும்   நேர்மையிலும் காட்சிச்சாலை அதிகாரிகளின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்.‘’ அந்த யானை இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறது. அதன் சரியான வயது குறித்தும் அதன் `ஆளுமைப் பண்பு` குறித்தும் எதுவும் தெரியவில்லை.  யானையைப் பற்றி எந்த ஒரு சிறு தகவல் கிடைத்தாலும் அதனைக் காவல்துறைக்கு அளிக்கும்படியான காவல் துறையின் வேண்டுகோளோடு அந்த வரைவு முடிவுபெற்றிருந்தது.
நான் இரண்டாவது தம்ளர் காபியை உறிஞ்சிக்கொண்டே அந்த வேண்டுகோள் பற்றிச் சிறிது யோசித்தேன். ஆனாலும் காவல்துறைக்குத் தெரிவிப்பதில்லையென்றே முடிவு செய்தேன். என்னால் அவர்களுக்கு உதவ முடிந்தாலும் காவல்துறையின் தகவல் எல்லைக்குள் நான் இல்லாமலிருப்பதற்கே முதன்மை கொடுத்தேன். ஏனென்றால், நான் சொல்லப்போவதில் காவல் துறைக்கு நம்பிக்கை இருக்காதென்றே நான் கருதினேன்.  யானை மிகச் சாதாரணமாகக் காற்றில் காணாமல் போயிருப்பதற்கான சாத்தியத்தைச் சிறிதும்  கருதிப்பார்க்காத அந்த மாதிரி நபர்களோடு பேசுவதால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது?
நாளிதழிலிருந்து யானைச்செய்தி வரைவினை வெட்டியெடுத்து, அலமாரியிலிருந்த என்னுடைய ஒட்டுப்படச் சேகரப் புத்தகத்தில் ஒட்டி வைத்தேன். பின்னர் தட்டு, தம்ளர்களைக் கழுவிவிட்டு, அலுவலகத்திற்குக் கிளம்பினேன்.
ஏழு மணிச் செய்தியில் யானையைத் தேடும் காட்சியைக் கவனமாகப் பார்த்தேன். நகரை ஒட்டியிருந்த குன்று மற்றும் காடுகளில் ஹெலிகாப்டர்கள் தலைக்கு மேலே பறந்து வட்டமிட்டுக்கொண்டிருக்க, நினைவிழக்கச் செய்யும் மருந்து நிரப்பப்பட்ட தோட்டாக்கள் நிரப்பிய பெரிய துப்பாக்கிகளைச் சுமந்தவாறு வேட்டைக்காரர்கள், தேசீய தற்காப்புப் படை வீரர்கள், காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஒரு மில்லி மீட்டர் கூட விடாமல் தேடிக்கொண்டிருந்தார்கள். டோக்கியோவுக்கு வெளியே ஊரகப்பகுதிகளில் காணப்படுகிற காடுகள் மற்றும் குன்றுகள் வகைப்பட்டவற்றைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதனால், அவர்கள்  ஒன்றும் மிகப்பெரிய பரப்பில் தேடவேண்டியிருக்கவில்லை. அத்தனை கூடுதலான நபர்கள் ஈடுபட்டிருக்கும்போது, அந்தப்பணியை முடிக்க ஒருநாள் என்பதே அதிகம். அவர்கள் ஒன்றும் ஏதோ ஒரு சின்னஞ்சிறு ஆட்கொல்லி வகைப் பிராணிகளைத் தேடிக்கொண்டிருக்கவில்லை. ஒரு பெரிய ஆப்பிரிக்க யானையைத் தேடுகிறார்கள். அது மாதிரியான ஒன்று மறைவாக ஒளிந்துகொள்ளக் கூடிய இடங்களின் எண்ணிக்கை ஒரு வரையறைக்குட்பட்டதுதான். ஆனாலும் அவர்களால் இன்னும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையின் தலைவர் திரையில் தோன்றி, ‘’ நாங்கள் இன்னும் தீவிரமாகத் தேடும்பணியில் தொடர்வோம்.’’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளர், ‘’ யானையை யார் திறந்துவிட்டார்கள்? எப்படித் திறந்தார்கள்? எங்கே மறைத்து வைத்திருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? எல்லாமே புதிருக்குள் மண்மூடிக் கிடக்கின்றன.’’ எனச் செய்தியை முடித்துவைத்தார்.
தேடும்பணி பல நாட்களாகத் தொடர்ந்தது. ஆனாலும் அதிகாரிகளால் யானையின் இருப்பிடம் பற்றி எந்த ஒரு சிறு தகவல் அல்லது யூகத்தைக்கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை. நான் நாளிதழ்ச் செய்திகளைப் படித்துவிட்டு, எல்லாவற்றையும், அதாவது யானை காணாமல் போனது தொடர்பான செய்திகளைத் தலையங்கம், கேலிச்சித்திரம் உட்பட வெட்டி, என்னுடைய ஒட்டுப்படச் சேகரப்புத்தகத்தில் ஒட்டிவைத்தேன். அந்த ஆல்பம் விரைவிலேயே தீர்ந்துபோய், இன்னொன்று வாங்க வேண்டியதாயிற்று. செய்தி நறுக்குகளின் தொகுப்பு பெருத்துப் போயிருந்தாலும் நான் எதிர்பார்ப்பது மாதிரியான மெய்ம்மைச் செய்தி ஒன்றுகூட இல்லை. செய்திகள் எவ்விதக் கருத்துமின்றி இருந்தன; அல்லது தரத்துக்கப்பாற்பட்டிருந்தன. ‘’ யானையை இன்னும் காணவில்லை,’’ தேடும் தலைமையிடத்தில் இருள் வலுக்கிறது,’’ ‘’ காணமற்போனதன் பின்னணியில் கும்பலின் கைவேலை?’’ இதைப்போன்ற செய்திகளும் குறைந்து, ஒரு வாரத்திற்குப்பின் அருகிக் காணாமற் போய், பின் எதுவுமே இல்லாமலானது கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஒரு சில வார இதழ்கள் பரபரப்பூட்டும் கதைகளைக் கொண்டிருந்தன; அவற்றில் ஒன்று ஆவியுலகத்தொடர்பாளர் ஒருவரைக்கூட நியமித்ததென்றாலும் அவர்களாலும் நெருப்புத் தலைப்புகளைக் கொணர முடியவில்லை. யானைச் சிக்கலையும் மக்கள் ‘’தீர்வு காண இயலாத புதிர்கள் ‘’ என்ற பெரும்வரிசையில் சேர்த்துப் பரணில் தூக்கிப்போட்டுவிட்டதாகத் தோன்றியது. ஒரு கிழட்டு யானையும் அதன் பாகனும் காணாமல் போனது சமூகத்தின் போக்கில் எந்த விளைவினையும் ஏற்படுத்தாது. பூமி உருண்டை அதன் சலிப்புமிக்க தற்சுழற்சியைத் தொடரும். அரசியல்வாதிகள் நம்பமுடியாத அறிக்கைகள் பட்டியலிட்டு, வாக்குறுதிகள்  அள்ளிவீசுவதைத் தொடர்வார்கள். மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லுகையில் கொட்டாவி விடுவதையும் குழந்தைகள் கல்லூரி நுழைவுத்தேர்வுகளுக்காகப் படிப்பதையும் தொடர்வார்கள். வாழ்க்கையின் முடிவற்ற ஏற்ற இறக்கங்களில்  ஒரு யானை காணாமல் போனதன் மீதான கவனமும் ஆர்வமும் எப்போதுமே நீடித்திருக்க முடியாது. அப்படியாகவே குறிப்பிடத்தக்கவாறு எதுவுமில்லாத பல மாதங்கள், ஒரு களைத்துப்போன படைப்பிரிவு சாளரத்தைக் கடந்து போவது போலச் சென்று முடிந்தன.
எப்போதாவது எனக்கு நேரம் கிடைக்கின்ற ஒரு பொழுதில் நான், யானை இல்லாத அந்தக் கொட்டாரத்தைப் போய்ப் பார்ப்பேன். மக்கள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக அந்த முற்றத்தின் இரும்பு வாயிற்கதவின் கம்பிகளை ஒரு கனமான சங்கிலியால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டியிருந்தது. கம்பிகளின் ஊடாக உள்ளே பார்த்தபோது, யானைக்கூடத்தின் கதவும் சங்கிலியால் சுற்றிப் பூட்டப்பட்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. யானையைத் தேடுவதில் தோல்வியுற்றிருந்த காவல்துறை அதைச் சரிக்கட்டுவதற்காகக் காலியாக இருந்த யானைக்கூடத்தின் காவலைப் பல்வேறு அடுக்குகளில் மேலதிகப்படுத்துவதாகத் தோன்றியது. அந்தப் பகுதி முழுவதுமே காலியாகிக் கிடந்தது. முன்னர் அங்கே கூடியிருந்த கூட்டம் இல்லாமலாகி, இப்போது கூரையின் மீது புறாக்கூட்டம் ஒன்று, இறங்கி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. மைதானத்தை யாருமே பராமரிக்கவில்லை. அந்த வாய்ப்புக்காகக் காத்திருந்தது போல கோடைகாலத்தின் தடிப்பான வகைப் பசும்புல் துளிர்த்திருந்தது. யானைக் கூடத்தின் கதவைச் சுற்றிக்கிடந்த சங்கிலி எனக்கு இருண்ட காட்டுக்குள் பாழடைந்த மாளிகைக்குக் காவலாக விடப்பட்ட ஒரு பெரிய பாம்பினை நினைவுபடுத்தியது. ஒரு சில குறுகிய மாதங்களேயானாலும் யானை இல்லாமல் அந்த இடத்தில் கனத்த, பெரிய கருமேகம் போலப் பேரழிவும் பாழ்நிலையும் மிதந்துகொண்டிருந்தது
செப்டம்பர் மாதத்தின் இறுதிவாக்கில் அவளை நான் சந்தித்தேன். அன்று முழுதும் காலை முதல் இரவுவரை மழை – வருடத்தின் அந்தப் பருவத்தில் அடிக்கடி பெய்கிற, சலிப்பூட்டுவதாக, மெல்லியதாக, பனிப்படல வகைப்பட்ட மழை, பூமிக்குள் கோடைகாலம் எரித்துச் செலுத்தியிருந்த நினைவுகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துச் செல்கிற மழை – பெய்துகொண்டிருந்தது. அந்த நினைவுகளெல்லாம் ஆழ்நீலக் கடலுக்குள் அடித்துச் செல்லப்படுவதற்காக வடிகுழாய்களின் வழியாகக் கழிவுநீர்க் கால்வாய்கள், மற்றும் ஆறுகளில் பாய்ந்து கொண்டிருந்தன.
என்னுடைய நிறுவனம் அதன் புதிய தீவிர விளம்பரத்திட்டத்தின் தொடக்கமாக ஏற்படுத்தியிருந்த ஒரு விருந்தில்தான் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். மின் பயன்பாட்டு, வீட்டு உபயோகப் பொருட்களைப் பெருமளவில் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு நிறுவனத்தின் மக்கள் தொடர்புப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த நான், அப்போது, இலையுதிர்காலத் திருமணங்கள் மற்றும் குளிர்கால போனஸ் பருவங்களில் சந்தைப்படுத்தும் திட்டத்திலிருந்த ஒருங்கிணைந்த சமையலறைக் கருவிகளின் வரிசை ஒன்றை விளம்பரப்படுத்தும் பொறுப்பிலிருந்தேன். என்னுடைய வேலை பல மகளிர் இதழ்களைத் தொடர்பு கொண்டு படைப்புகளில் எங்கள் நிறுவனத்துக்கு ஒரு பிணைப்பினை– மிகப்பெரிய அளவுக்குப் புத்திசாலித்தனமெல்லாம் ஒன்றும் தேவைப்படாத ஒரு வேலை, ஆனால், அவர்கள் வெளியிடுகின்ற வரைவுகளில் விளம்பரத்தின் சிறுசுவடு கூடத் தெரியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதழ்கள் எங்களைப் பிரபலப்படுத்தும்போது நாங்கள் அவர்கள் பக்கங்களை விளம்பரங்களால் நிரப்பிப் பரிசளிப்போம். அவர்கள் எங்கள் முதுகைச் சொரிந்துகொடுப்பார்கள், நாங்கள் அவர்கள் முதுகைச் சொரிந்துகொடுப்போம்.
இளம் இல்லத்தரசிகளுக்கான இதழ் ஒன்றின் ஆசிரியரான  அவள் அதுபோன்ற ஒரு வரைவுக்கான மூலப்பொருள் தேடி, அந்த விருந்துக்கு வந்திருந்தாள். எதேச்சையாக நான், ஒரு புகழ்பெற்ற இத்தாலிய வடிவமைப்பாளர் எங்களுக்காகத் தயாரித்திருந்த வண்ணமயமான குளிர்பதனப்பெட்டிகள், காபிதயாரிப்பான்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் பழரசப் பிழிவான்களின் சிறப்பினை அவளுக்குச் சொல்லிச் சுற்றிக்காட்டும் பணியில் இருந்தேன்.
‘’மிக மிக முக்கியமான கருத்து – ஒருங்கிணைவு’’ என நான் அவளுக்கு விளக்கிக்கொண்டிருந்தேன். ‘’ மிகமிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒன்றுகூட அதன் சுற்றுப்புறத்தோடு சமநிலையில் இல்லாதிருந்தால் மாண்டு மறைந்து போகும். வடிவ ஒருங்கிணைவு, வண்ண ஒருங்கிணைவு, இயக்க ஒருங்கிணைவு : இதுதான் இன்றைய கிச்-சினுக்கு எல்லாவற்றுக்கும் மேலாகத் தேவைப்படுவது. இல்லத்தரசி அவருடைய நாளின் பெரும்பகுதியை கிச்-சினில் தான் செலவிடுகிறாரென ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கிச்-சின் தான் அவருடைய பணி இடம், அவருடைய வசிப்பிடம், அவருடைய வாசிப்பிடம் என எல்லாமாகவும் இருக்கிறது. அதனாலேயே அவர் கிச்-சினை ஒரு மகிழ்ச்சியான இடமாக மாற்ற என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்கிறார். பெரியதோ, சிறியதோ, ஒவ்வொரு வெற்றிகரமான கிச்-சினையும் இயக்குகிற அடிப்படையான கொள்கை ஒன்று உள்ளது. அது  ஒருங்கிணைவு என்ற கொள்கைதான்.   உருவ, பரும அளவு வேறுபாடெல்லாம் அதற்கு முன் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. எங்கள் புதிய வரவுகளின் வடிவமைப்பின் அடிப்படைக் கருத்து இதுதான். இந்தப் பானைமூடியைப் பாருங்களேன், ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன்,………..’’
அவள் ஆமெனத் தலையசைத்தாள். ஒரு சிறிய குறிப்புப் புத்தகத்தில் கிறுக்கிக்கொண்டாள். ஆனால், அவளுக்கு அந்த மூலப்பொருட்கள் குறித்து ஆர்வமெதுவும் இருக்கவில்லை என்பதும் அல்லது எங்களுடைய புதிய பானைமூடி மீது எனக்கும் சொந்த விருப்பமென்று எதுவும் இருக்கவில்லை என்பதும் தெளிவாகத் தெரியும் விஷயந்தானே! நாங்கள் இருவரும் எங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தோம், அவ்வளவுதான்.
நான் சொல்லி முடித்தபோது, ‘’உங்களுக்குச் சமையலறைகளைப் பற்றி நிறையத் தெரிகிறது,’’ என்றாள். அவள் கிச்-சின் என்பதை ஏற்றுக்கொள்ளாதது போல், சமையலறை என்பதற்கான ஜப்பானியச் சொல்லையே பயன்படுத்தினாள்.
‘’அதுதானே, என் புவி-வாழ்வுக்கான (பூவாவுக்கான) தொழில்,’’ என ஒரு தொழிற் புன்னகையோடு பதிலுரைத்தேன்.’’ அதுவும் தவிர, சமைப்பதை நான் விரும்புகிறேன். சும்மா, ஆடம்பரத்துக்காகச் சொல்லவில்லை. தினசரி என் உணவை நானே தான் சமைத்துக் கொள்கிறேன்.’’
‘’ இப்போதுங்கூட, ஒருங்கிணைவு தான் சமையலறைக்குத் தேவையான ஒன்றாவென எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.’’
‘’ நாங்கள் கிச்-சின் என்றுதான் சொல்வோம்.’’ என அவளுக்குத் திருத்தமாகக் கூறினேன். ‘’ அதில் பெரிதாக எதுவுமில்லை, என்னவென்றால், நிறுவனம் எங்களை அப்படி ஆங்கிலத்தைப் பயன்படுத்தச் சொல்கிறது.’’
‘’ ஓ, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இப்போதுங்கூட எனக்கு வியப்புதான். ஒரு கிச்-சினுக்கு ஒருங்கிணைவு  என்பது அவ்வளவு முக்கியமானதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’
‘’ என்னுடைய சொந்தக்  கருத்தா? என் கழுத்துப்பட்டையைக் கழற்றி வைக்கும் வரை அது  வெளிவராது,’’ என்றேன் ஒரு  முனகலோடு. ‘’ ஆனால், இன்று  மட்டும் அதனை ஒரு விதிவிலக்காக வைத்துக்கொள்கிறேன். ஒரு  சமையலறைக்கு, அதற்குத் தேவைப்படுகின்ற ஒருங்கிணைவுக்கும் அதிகமாகச் சில விஷயங்கள் தேவைப்படலாம் தான். ஆனால் அந்த இதர சமாச்சாரங்களையெல்லாம் விற்க முடியாதே. அதோடு, நமக்கான இன்றைய நடப்பியல் உலகத்தில் விற்பனைக்கல்லாத பொருட்கள் எல்லாம் அவ்வளவாக மதிக்கப்படுவதில்லை.’’
‘’ உலகம் என்ன, அப்படியொரு சுயநலச் செயல்பாடுள்ளதாகவா இருக்கிறது?’’
நான் ஒரு வெண்பூஞ்சுருட்டை எடுத்து என்னுடைய தீக்கொளுவியால் பற்றவைத்தேன்.
‘’ எனக்குத் தெரியாது – சும்மா, ஒரு வாய்வார்த்தையாக, அது அப்படித்தான் வந்து விழுந்தது,’’ என்றேன், நான். ‘’ ஆனால், அது ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்கிறது. அது நமது பணியைக்கூட எளிதாக்கிவிடுகிறது. நீங்கள் அதை வைத்துக்கொண்டு விளையாட்டுகளை மேற்கொள்ளலாம். அருமையான சொற்கோவைகளை உருவாக்கலாம் : ` அவசியப் பயன்தேடுகிற நடப்பியல்`, அல்லது ` சாராம்சத்தில் பயன்தேடுகிற நடப்பியல்`. நீங்கள் விஷயங்களை அந்தமுறையில் பார்த்தால், நீங்கள் எல்லாவிதமான சிக்கல் மிகுந்த பிரச்சினைகளையும் தவிர்த்துவிடலாம்.’’
‘’ ஆஹா, ஆர்வமூட்டுகிற, என்னவொரு அருமையான பார்வை!’’
‘’ அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படி இல்லை. ஓ, அப்புறம், நமக்குக் கொஞ்சம் நல்ல, தரமான சாம்பெய்ன் கிடைத்திருக்கிறது. கொஞ்சம் சாப்பிடுங்களேன்?’’
‘’ நன்றி. எனக்குப் பிடித்தமானது.’’
நாங்கள் சாம்பெய்ன் சாப்பிட்டுப் பேசும்போது, எங்கள் இரண்டு பேருக்கும் பல விஷயங்களில் ஒத்த பார்வை இருப்பதை உணர்ந்தோம். வியாபார உலகத்திற்குள் நாங்கள், மிகப் பெரிய தடாகமாக இல்லாமலிருப்பதால், ஒருசில கூழாங்கற்களை விட்டெறிந்தாலே, ஒன்றோ இரண்டோ, அந்த ஒத்த பார்வையில் பட்டுவிடும். அதுவும் காணாதென்று, அவளும் என் தங்கையும் ஒரே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தார்கள். இதுபோன்ற அடையாளங்களைத் தொடர்ந்து எங்கள் உரையாடல் சுமுகமாக நகர்ந்துகொண்டிருந்தது.
அவளுக்குத் திருமணமாகியிருக்கவில்லை; எனக்கும் தான். அவளுக்கு இருபத்தாறு; எனக்கு முப்பத்தொன்று. அவள் கருவிழித் தொடுவில்லை அணிந்திருந்தாள்; நான் கண்ணாடி. அவள் என் கழுத்துப் பட்டையைப் புகழ்ந்தாள். நான், அவள் மேற்சட்டையை மெச்சிப் புகழ்ந்தேன். நாங்கள் வாடகைத் தொகைகளை ஒப்பிட்டுப் பார்த்த்தோம்; எங்கள் பணி, சம்பளம் பற்றிக் குறைகூறிக்கொண்டோம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கியிருந்தோம். அவள் கவனத்தை ஈர்க்கிற ஒரு பெண்; ஆனால் ஆபாசமாக, இல்லவே இல்லை. பாறை போன்று இறுகியிருந்த ஒரு இருபது நிமிடங்களுக்கு மேல் அவளோடு பேசிக்கொண்டே, அவளைப்பற்றிக் கெட்டதாக நினைக்க ஒரேயொரு காரணத்தைக்கூடக் கண்டுபிடிக்க இயலாமலிருந்தேன், நான்.
விருந்து முடிந்துகொண்டிருக்கும் தறுவாயில், நான், அவளை  உணவுவிடுதியின் காக்டெய்ல் அமர்வுக்கு என்னோடு வருமாறு அழைத்தேன். இருவரும் அங்கேயே சென்றமர்ந்து எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். அந்தக்கூடத்தின் அகலத்திறந்த, அழகிய சாளரத்திற்கு வெளியே சத்தமில்லாத மழையொன்று பெய்துகொண்டேயிருக்க, நகரத்தின் ஒளிவிளக்குகள் மூடுபனியினூடாக மங்கலான செய்திக்குறிப்புகளை அனுப்பிக்கொண்டிருந்தன. காலியென்றே சொல்லிவிடக்கூடிய  அந்தக் காக்டெய்ல் கூடத்தில் ஈரமான ஒரு கிசுகிசுப்பு மெல்ல அசைந்தாடிக்கொண்டிருந்தது. அவள் ஒரு தயார்நிலை `டெய்க்குய்ரி` கேட்க, நான் பனிப்பாறைகள் மீதான ஸ்காட்ச் வாங்கினேன்.
அப்போதுதான் சந்தித்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்  விரும்பத் தொடங்கும் நிலையில் ஒரு மதுக்கூடத்தில் என்ன பேசிக்கொள்வார்களோ அந்த வகைப்பட்டதொரு உரையாடலில்  நாங்கள் மதுவை ருசித்துக்கொண்டே ஈடுபட்டோம். எங்கள் கல்லூரி நாட்களைப் பற்றி, இசை, விளையாட்டுகளில் எங்களுக்குப் பிடித்தமானவை பற்றி, எங்கள் அன்றாட நடவடிக்கைகள் பற்றிப் பேசினோம்.
பின்னர், அவளிடம்  யானையைப்பற்றிப் பேசினேன். அது எப்படி நிகழ்ந்ததென்று மிகச்சரியாக என்னால் இப்போது  கூற முடியவில்லை. பிராணிகளை வைத்துக்கொண்டு என்ன செய்யலாமெனப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம், அதுதான் தொடர்பு இழையாக இருக்கவேண்டும். அல்லது யானை காணாமற்போனதைக் குறித்த என்னுடைய தனிவகைப்பட்ட கருத்தினைக் காதுகொடுத்துக் கேட்கக்கூடிய ஒரு நல்ல செவியரைத் தன்னுணர்வில்லாமலேயே, நான்  தேடிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது, மீண்டும், மீண்டுமாக மதுதான் என்னைப் பேசச் செய்திருக்கவேண்டும்.
எப்படியிருந்தாலும், வார்த்தை என் வாயிலிருந்து வெளியேறிய மறுகணமே, அந்தச் சந்தர்ப்பத்திற்கென நான் தேடிக்கண்டுபிடிக்கக் கூடிய பேசுபொருட்களில் மிகமிகக் குறைந்த பொருத்தமுடையதொன்றைத் தொட்டுவிட்டேன் என்பதைத் தெரிந்துகொண்டேன். இல்லை, யானையைப் பற்றி நான் குறிப்பிட்டே இருக்கக்கூடாது. அந்தத் தலைப்பு – என்ன? – முடிந்துபோன ஒன்று, அடைபட்ட ஒன்று.
நான் அதைவிட்டு வேறு ஏதாவது ஒன்றுக்குத் தாவ முயற்சித்தேன். ஆனால், அதர்ஷ்டம் அப்படியாக இருந்தது. மறைகின்ற யானை பற்றி அவள் அதிகபட்ச ஆர்வம் காட்டினாள். அதிலும் நான் அந்த யானையைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்றதும் அவள் கேள்விகளாக – அது எந்த மாதிரியான யானை, அது தப்பிச் சென்றதென நான் எப்படி நினைக்கிறேன், அது எதைத் தின்றது, அது சமுதாயத்திற்கு ஒரு அபாயமாக இல்லையா, மற்றும் அதுபோன்றவற்றைப் பொழிந்துவிட்டாள்.
ஊடகங்களில் வெளியான செய்திகளிலிருந்து, எல்லோரும் தெரிந்துகொண்டதற்கு மேலாக நான் எதையும் அவளுக்குச் சொல்லிவிடவில்லை. ஆனால், எனது குரலின் தொனி மாறுபட்டிருப்பதை அவள் உணர்ந்துவிட்டதாகவே தோன்றியது. எப்போதுமே நான் பொய் சொல்வதில் வல்லவனாக இல்லை.
என்னுடைய நடத்தையில் எந்தவிதப் புதுமையுமில்லையெனக் கண்ட அவள், அவளுடைய இரண்டாவது டெய்க்குய்ரியை மெல்ல உறிஞ்சிவிட்டு, ‘’ யானை மறைந்த போது உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா? அப்படியாக, யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாத வகைப்பட்ட ஒன்றாயிற்றே. ’’
‘’ இல்லை, அநேகமாக இல்லை.’’ என்றேன், நான். மேஜையில் என் முன்னால் கண்ணாடித் தட்டிலிருந்த ப்ரெட்ஜெல் குவியலிலிருந்து ஒன்றை எடுத்துப் படக்கென்று ஒடித்துப் பாதியைத் தின்று முடித்தேன். பரிமாறும் பணியாளர் எங்கள் சாம்பல் கிண்ணத்தை மாற்றிக் காலியான ஒன்றை வைத்தார்.

அவள் என்னை மிகுந்த  எதிர்பார்ப்புடன் நோக்கினாள். நான் இன்னொரு வெண்பூஞ்சுருட்டை எடுத்துப் பற்றவைத்தேன். மூன்று வருடங்களுக்கு முன்பே புகைப்பழக்கத்தை விட்டொழித்திருந்தேன். ஆனாலும் யானை காணாமற்போனபோது மீண்டும் ஆரம்பித்துவிட்டேன்.
‘’ ஏன் ` அநேகமாக  இல்லை`? அப்படியாகுமென்று நீங்கள்  ஏற்கெனவே கணித்திருந்ததான  அர்த்தத்தில் சொல்கிறீர்களா?’’
‘’ இல்லை, உண்மையில் நான் அப்படிக் கணித்திருக்கவும் முடியாது.’’ என்றொரு புன்னகையுடன் கூறினேன். ‘’ யானை ஒன்று திடீரென்றொரு நாள் காணாமல் போவதென்பது – அதுமாதிரியான முன்நிகழ்வு உதாரணங்கள் ஏதுமில்லை, அதுமட்டுமல்லாமல், அப்படியான ஒன்று நிகழ்வதற்கான அவசியமும் கிடையாது. அதற்கு எந்தவிதமான தர்க்கப் பொருத்தமும் இல்லாமலாகிவிடுகிறது.’’
‘’ ஆனால், இப்போதும், உங்கள் பதில் மிகவும் புதுமையாகத்தான்  இருக்கிறது. `யாரும் நினைத்துக்கூடப்  பார்க்க முடியாத வகைப்பட்ட`தென்று நான் சொன்னபோது, நீங்கள், `இல்லை, அநேகமாக இல்லை`யென்றீர்கள். அநேகமாக எல்லோரும், `நீங்கள் சொல்வது சரிதான்` அல்லது `யா, அது விசித்திரமானதுதான், அல்லது அதுமாதிரி ஏதாவது சொல்லியிருப்பார்கள். நான் சொல்வது என்னவென்று தெரிகிறதில்லையா?’’
நான், அவள் இருந்த திசையில் வெற்றாக ஒரு தலையசைப்பைச் செய்துவிட்டு, பரிமாறுபவரை அழைப்பதற்காகக் கையை உயர்த்தித் தூக்கினேன். என்னுடைய அடுத்த ஸ்காட்ச்சை அவர் கொண்டுவருவதற்காக நான் காத்திருந்தபோது ஒருவிதமான தற்காலிக அமைதி நிலவியது.
‘’ இதைக் கிரகிப்பதைச் சிறிது கடினமாக நினைக்கிறேன். என்றாள், அவள் மென்மையாக. ‘’ சில நிமிடங்களுக்கு முன்புவரை  நீங்கள் மிகமிகச்சரியான, வழக்கமான ஒரு உரையாடலை – குறைந்தபட்சம் அந்த யானை குறித்த விஷயம் மேலுக்கு வரும்வரை,  என்னுடன் மேற்கொண்டிருந்தீர்கள். பின்னர் ஏதோ ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. அதற்கு மேல் நீங்கள் பேசுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. அது, அந்த யானையா? அல்லது என் செவிகளே என்னை ஏமாற்றுகின்றனவா?’’
‘’உங்கள் செவிகளில் எந்தக் கோளாறும் இல்லை’’ என்றேன், நான்.
‘’ அப்படியென்றால் நீங்கள், சிக்கல் உங்களிடம்தான்  இருக்கிறது.’’
நான் என்னுடைய தம்ளரில் விரலால் தட்டி பனிக்கட்டிகளில் அசைவேற்படுத்தி உருளச்செய்தேன். விஸ்கித் தம்ளருக்குள் பனிக்கட்டியின் ஓசையைக் கேட்பது எனக்குப் பிடித்தமானது.
‘’ நான் நிச்சயமாக அதை  ஒரு சிக்கல் என்று கூறமாட்டேன். அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நான் எதையும் மறைக்கவில்லை. என்னால் அதைப்பற்றி நல்ல விவரமாகக் கூறமுடியுமாவென்று, எனக்கே நிச்சயமில்லை. அதனால்தான் அதைப்பற்றி எதுவுமே சொல்ல முயற்சிக்காமலிருக்கிறேன். ஆனால், நீங்கள் சரியாகத்தான் – அது மிகவும் வியப்பானதெனக் கூறுகிறீர்கள்.’’
‘’ நீங்கள் என்ன சொல்ல  வருகிறீர்கள்?’’
அதில் எந்தப் பயனும் இல்லை. அவளுக்கு நான் அந்தக் கதையைச்  சொல்ல வேண்டும். ஒரு மடக்கு விஸ்கியை விழுங்கிவிட்டு, அதைத் தொடங்கினேன்.
‘’ அதில் விசேஷம் என்னவென்றால், அந்த யானை காணாமல் போவதற்கு முன்பு கடைசி, கடைசியாகப் பார்த்த  நபர் அநேகமாக நானாகத்தான்  இருக்கவேண்டும். மே,17, மாலை ஏழு மணிக்கு அதை நான் பார்த்தேன். அது காணாமற்போய்விட்டதென்பதை  பதினெட்டாம் தேதி பிற்பகலில்தான் அவர்கள் கவனித்தார்கள். இடையில் அதை யாருமே பார்க்கவில்லை. ஏன் தெரியுமா? யானைக்கூடத்தை ஆறுமணிக்குப் பூட்டிவிடுவார்கள்.’’
‘’ இதை என்னால் விளங்கிக்கொள்ள இயலவில்லை. கூடத்தை ஆறுமணிக்கே பூட்டிவிடுவார்களென்றால், நீங்கள் எப்படி ஏழுமணிக்குப் பிறகு பார்த்தீர்கள்?’’
‘’ அங்கே, யானைக்கூடத்தின்  பின்னால் ஒரு வகையான குத்துப்பாறை ஒன்று இருந்தது. தனியாருக்குச் சொந்தமான ஒரு செங்குத்தான குன்று அது. அதற்குச் சாலைவசதி ஏதும் இல்லை. அந்தக் குன்றிலிருந்து யானைக்கூடத்தினுள்ளே பார்க்க வசதியான ஒரு இடம் இருக்கிறது. அநேகமாக அதைப்பற்றித் தெரிந்த ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.’’
நான் அந்த இடத்தை முழுக்க  முழுக்கத் தற்செயலாகத்தான் கண்டுபிடித்தேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் அந்தப் பகுதியில் சும்மாக் காலாறச் சுற்றியலைந்த நான், பாதையைத் தவற விட்டு, அந்தச் செங்குத்துப்பாறையின் உச்சிக்கு வந்து சேர்ந்தேன். சிறிய திறந்த வெளி ஒன்று, ஒரு ஆள் நீட்டிப்படுக்குமளவுக்குப் பெரிதாக நீண்டிருந்ததைக் கண்டேன். அங்கிருந்து கீழ்நோக்கிப் புதர்களினூடாகப் பார்த்தபோது யானைக்கூடத்தின் கூரை தெரிந்தது. கூரை விளிம்பின் கீழாக ஓரளவுக்குப் பெரிதாக  ஒரு காற்றுத்திறப்பு தென்பட்டது. அது வழியாக யானைக்கூடத்தின் உட்பக்கம் தெளிவாகத் தெரிந்தது.
அதன்பின் அடிக்கடி அங்கே  சென்று கூடத்தின் உள்ளேயிருக்கும் யானையைப் பார்ப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தேன். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று யாராவது என்னைக் கேட்டால் சொல்வதற்கு என்னிடம் நாகரீகமான எந்தப் பதிலும் இல்லை. யானையை அதன் தனிப்பட்ட சொந்த நேரத்தில் பார்ப்பதை நான் விரும்பினேன், அவ்வளவுதான். அதைவிட அதிகமாக அதைப்பற்றிச் சொல்ல எதுவுமில்லை. கூடத்தினுள் இருட்டாக இருக்கும்போது என்னால் யானையைப் பார்க்க முடியாது. ஆனாலும் மாலையின் முன் நேரங்களில் பாகன் அந்த யானைக்குத் தேவையானவற்றைச் செய்கின்ற நேரம் முழுவதும் விளக்குகளை ஏற்றியிருப்பார். அதனாலேயே என்னால் அந்தக் காட்சியை நுணுக்கமாகக் கண்டு ஆராய முடிந்தது.
தனிமையில் யானையையும் பாகனையும்  ஒருசேரப் பார்த்தபோது  சட்டென்று என் கண்ணிற்பட்டது, அவர்கள் இருவருக்கும் இடையில் காணப்பட்ட ஒருவர் மீதொருவருக்கான நெருக்கமும் விருப்பமும் தான் – அத்தகைய ஒன்றை அவர்கள் பொதுவாக மற்றவர்களின் பார்வையிலிருக்கும்போது வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அவர்களுடைய பாசம் ஒவ்வொரு அசைவிலும் காணக்கிடந்தது. பகலெல்லாம் அவர்கள் உணர்வுகளைக் கட்டுக்குள் சேமிப்பாக, வேறுயார் கண்ணிலும் பட்டுவிடாமல், சேர்த்து வைத்திருந்து, இரவில் தனிமையிலிருக்கும்போது கொட்டிக்கொண்டது போலவே தோன்றியது. அதற்காக அவர்கள் உள்ளே தனியாக இருக்கும்போது வித்தியாசமானதாக ஏதோ செய்வதாகச் சொல்ல முடியாது. யானை அங்கேயே எப்போதும் போல வெற்றாக, நின்றுகொண்டிருக்க, ஒரு பாகன் என்னென்ன வேலைகளைச் செய்வாரென்று சாதாரணமாக எதிர்பார்ப்போமோ, அத்தகைய வேலைகளைச் செய்துகொண்டிருப்பார் : தேய்ப்பான் கொண்டு யானையை முழுவதுமாகத் தூசு, தும்பு தட்டித் தேய்த்துவிடுவது, யானையின் பெரிய பெரிய லத்திகளை அகற்றுவது, யானை தின்ற மிச்சம் மீதிகளைச் சுத்தம் செய்வது. ஆனால், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட நட்பினையும் நம்பிக்கை உணர்வினையும் தவறாகக்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. பாகன் தரையைப் பெருக்கும்போது யானை அதன் தும்பிக்கையை அசைப்பதோடு பாகனின் முதுகைத் தட்டுவதும் தடவிக்கொடுப்பதுமாக இருக்கும். யானை அப்படிச் செய்வதைப் பார்க்க எனக்கு மிகவும் விருப்பமாக இருந்தது.
‘’உங்களுக்கு யானைகள் மீது எப்போதுமே அதிகப் பிரியமோ?’’ எனக் கேட்டாள், அவள். ’’ நான் சொல்வது, அந்தக் குறிப்பிட்ட யானை மட்டுமென்றில்லை.’’ என்றும் குறிப்பிட்டாள்.
‘’ ம்….ஹ்ம்….. அதைப்பற்றி நினைக்கும்போது, நான் யானைகளை விரும்புகிறேன் என்றுதான் சொல்லவேண்டும்.’’ என்றேன்.        ‘’அவற்றில் ஏதோ ஒன்று என்னை ஈர்ப்பதாக இருக்கிறது, அவைகளை நான் எப்போதுமே விரும்பித்தான் இருக்கிறேன். அது ஏனென்றுதான் வியப்பாக இருக்கிறது.’’
‘’ அப்புறம், அன்றைக்கும் சூரியன் மறைந்தபின், நீங்கள் குன்றின் மீது ஏறி, யானையைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மே மாதம் – அன்றைக்கு என்ன தேதி?’’
‘’பதினேழு. மே, 17, பிற்கல் 7.00 மணி. அப்போது, பகற்பொழுதுகள்  நீண்டவையாக இருந்தன. வானம் சிவப்பாக மினுமினுத்திருந்தது.  யானைக் கூடத்திற்குள் வெளிச்சம் இருந்தது.’’
‘’ அப்புறம், அங்கே யானை அல்லது பாகன் குறித்து வழக்கமான வழக்கமில்லாமல் ஏதாவது நிகழ்ந்திருந்ததா?’’
‘’ நல்லது, ஆமாம். இல்லையென்றும்  சொல்லலாம். என்னால் நிச்சயமாகச்  சொல்ல முடியவில்லை. அதற்காக அவர்கள் நேரடியாக என் கண் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள் என்பதல்ல. அநேகமாக, நான் நம்புதற்குரிய ஒரு சாட்சியென்று சொல்ல முடியாது.’’
‘’ அப்படி என்னதான் நிகழ்ந்தது, அங்கே?’’
அப்போதைக்கு ஓரளவு நீர்த்துப்போன ஸ்காட்ச்சில் ஒரு மிடறினை விழுங்கினேன். சாளரத்துக்கு வெளியே வலுக்கவுமில்லாமல், குறையவுமில்லாமல்,  மாற்றமேயில்லாத வனப்புள்ள நிலப்பகுதியில் என்றும் நிலைத்த ஒரு கூறாக மழை அப்போதும் பெய்துகொண்டிருந்தது.
‘’ உண்மையில், எதுவும்  நிகழ்ந்திருக்கவில்லை. யானையும் பாகனும் எப்போதும் செய்துகொண்டிருப்பதையே – சுத்தம் செய்வது, சாப்பிடுவது, அவர்களின் நட்பார்ந்த முறையில் ஒருவருக்கொருவர் தொட்டு விளையாடிக்கொள்வது – செய்துகொண்டிருந்தனர். அவர்கள் செய்துகொண்டிருந்ததல்ல வித்தியாசமானது. அது தோன்றியவிதந்தான் அப்படியானது. அது, அவர்களுக்கிடையேயான சமநிலை குறித்த ஏதோ ஒன்று.’’
‘’சமநிலை?’’
‘’ பரும அளவில். அவர்களின்  உடல்கள் குறித்தது. யானையினுடையதும்  பாகனுடையதும். சமநிலை சிறிது மாறுபட்டிருந்ததாகத் தோன்றியது. அவர்கள் இருவருக்கும் இடையிலான வேறுபாடு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சுருங்கிப்போனதாக எனக்கு ஒரு உணர்வு.’’
அவள் பார்வையை டெய்க்குய்ரி கோப்பையின் மீதே சிறிது நேரத்துக்குப் பதித்திருந்தாள். பனிக்கட்டி உருகிய தண்ணீர் காக்டெயிலில் அதன் வேலையை, கடலினுள் ஒரு சிறு நீரோட்டம் போலச் செய்துகொண்டிருந்தது.
‘’ அதாவது, அந்த யானை சிறியதாகிவிட்டிருந்தது என அர்த்தப்படுத்துகிறீர்களா?’’
‘’ அல்லது பாகன் உருப்பெருக்கடைந்திருக்கலாம். அல்லது இருவருமே ஒரே நேரத்தில்.’’
‘’ நீங்கள் இதைக் காவல்துறைக்குச்  சொல்லவில்லையா?’’
‘’ இல்லை. ஆமாம், சொல்லவில்லை. அவர்கள் என்னை நம்பமாட்டார்களென்று  எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. மேலும், பாறையிலிருந்து யானையைப் பார்த்துக்கொண்டிருந்தேனென்று, அதுமாதிரியான ஒரு நேரத்தில் சொல்லியிருந்தால் நான்தான் அவர்களின் `சந்தேகத்திற்குரிய முதல் நபர்` ஆகியிருப்பேன்.’’
‘’ அவர்களுக்கிடையேயான சமநிலை மாறியிருந்ததென்பது உங்களுக்கு இப்போதும் நிச்சயமாகத் தோன்றுகிறதா?’’
‘’ அநேகமாக அப்படித்தான். `அநேகமாக` என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். என்னிடம் நிரூபணம் எதுவுமில்லை. நான் சொல்லவருவதெல்லாம், அந்தக் காற்றுத்திறப்பின் வழியாக நான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதைத்தான். ஆனால், அதற்கு முன்னால் எத்தனை தடவைகள் அவர்களை அப்படிப் பார்த்திருந்தேனென்று எனக்குத் தெரியாது. அதனால் நான் இதில் தவறு செய்ய வாய்ப்புண்டு என நம்புவதற்கு எனக்குக் கடினமாக இருக்கிறது. அதாவது, அவர்களது பரும அளவு குறித்த தொடர்பு நிலைக்கான அடிப்படை போன்றதைத்தான் குறிப்பிடுகிறேன்.’’
உண்மையில் அப்போது, என்  கண்கள் என்னையே ஏமாற்றுகின்றனவோ என நினைத்து வியப்பாகிவிட்டேன். அதனால் தலையை உலுக்கிக் கண்களை மீண்டும் மீண்டும் மூடிமூடித் திறந்து பார்த்தேன். ஆனாலும் யானையின் உருவம் அப்படியேதான் இருந்தது.   நிச்சயமாக, அது சிறிய ஒன்றாகச் சுருங்கிவிட்டது போல – எந்த அளவுக்கென்றால், நகரம் புதிதாக ஒரு சிறிய யானையை வாங்கியுள்ளது போல முதலில் நினைத்தேனென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஆனால், அதுபோன்ற எதையும் நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. அதிலும் யானைகளைப்பற்றிய எந்தவொரு செய்தியையும் என்றுமே நான் தவறவிட்டிருக்க மாட்டேன். இது ஒரு புதிய யானையாக இல்லாவிட்டால், இது, அதுவென்று ஏதோ ஒரு காரணத்துக்காக அந்த வயது முதிர்ந்த யானைதான் சுருங்கிப்போயிருக்கும் என்ற முடிவுக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகிறது. நான் அதைப் பார்க்கப் பார்க்க, அந்தச் சிறிய யானை, பழைய வயதான யானையைப் போலவே அசப்பிலிருந்தது மட்டுமல்ல, அதன் உடலசைவுகளும் அப்படியே இருந்தன என்பது தெளிவாகத் தெரிய வந்தது. அதைக் குளிப்பாட்டும்போது, அது வலதுகாலைத் தரையில் மகிழ்ச்சியுடன் பலமாக ஊன்றி நின்று, அதனுடைய, இப்போது ஒடுங்கிச் சுருங்கிப்போன தும்பிக்கையால் பாகனின் முதுகை வருடிக்கொடுக்கும்.
அது ஒரு திகைக்கவைக்கும் புதிர்க்காட்சியாக இருந்தது. திறப்பின் வழியாகப் பார்க்கும்போது அந்த யானைக்கூடத்தினுள் ஏதோ ஒன்று வித்தியாசமாக, எலும்புகளை உறையவைக்கும்படியாக வீசிக்கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன் – ஆனால், வெளியே வேறெங்கும் அது போல் இல்லை. மேலும், அந்தப் புதிய நிகழ்வு, அவர்களை முழுவதுமாகச் சுற்றிச்சூழ்ந்து ஆட்கொள்ள  முயற்சிக்கின்ற – அல்லது  அந்த முயற்சியில் ஏற்கெனவே ஒரு பாதி வெற்றி பெற்றுவிட்ட அந்த நிகழ்வுக்கு,  யானையும் பாகனும் மகிழ்ச்சியோடு தம்மை ஒப்புக்கொடுப்பது போல  எனக்குத் தோன்றியது.
எல்லாமாகச் சேர்ந்து, அந்த யானைக்கூட நிகழ்வினை அநேகமாக ஒரு அரை மணி நேரத்துக்குக் குறையாமல் கவனித்திருப்பேன். ஏழரை மணிக்கு, வழக்கத்துக்கு மிக முன்னதாகவே  விளக்குகள் அணைந்தன. அந்தக் கணத்திலிருந்து எல்லாமே இருளுக்குள் புதைந்துவிட்டன. நான், என்னுடைய இடத்திலேயே நின்று மறுபடியும் விளக்குகள் வருமென்று நம்பிக் காத்திருந்தேன். ஆனால், அப்படி நடக்கவேயில்லை. அதுதான் நான் கடைசி, கடைசியாக யானையைப் பார்த்தது.
‘’  ஆக, அப்படியே அந்த யானை, கம்பிகளுக்கு ஊடாகத் தப்பிச் செல்லுமளவுக்குச் சிறிதாகும்வரை அல்லது எதுவுமற்றதாகக் கரைந்துபோகும்வரை சுருங்கிக்கொண்டேயிருந்திருக்குமென நீங்கள் நம்புகிறீர்கள். அப்படித்தானே?’’
‘’எனக்குத்  தெரியவில்லையென்கிறேன். என் இரண்டு கண்ணாலும், பார்த்ததை முடிந்தவரை, மிகச்சரியாக அப்படிக்கப்படியே திருப்பிச் சொல்ல முயற்சிக்கிறேன், அவ்வளவுதான். ஏழரைக்குப் பின்னால் என்ன நிகழ்ந்ததென்று எந்தச் சிந்தனையும் எனக்கு இல்லை. எனக்குள் படிந்து கிடக்கும் காட்சிப் படிமம், அத்தனை வலுவானது; நேர்மையாகச் சொல்வதென்றால், அதைத் தாண்டிச் செல்வதென்பது நடைமுறையில் என்னால் இயலாததொன்று.
யானை  காணாமற் போனது குறித்து அவ்வளவுதான் என்னால் சொல்ல  முடியும். மேலும், அப்போதுதான்  சந்தித்திருந்த இளைஞர்களான ஒரு ஆணும் பெண்ணும் உரையாடுகையில் யானையின் கதை மிகவும் குறிப்பான தனித்த ஒன்றாக, முடிவுபெறாத ஒன்றாக இருக்குமோ என நான் பயந்திருந்தேன்.  நான் கதையைச் சொல்லி முடித்த பின், ஒரு மவுனம் எங்கள் மீது கவிந்தது. கரைந்து, காணாமலாகிப் போன ஒரு யானையைப் பற்றிய கதைக்கு – அதுவும் தொடர் உரையாடலுக்கான வேறெந்த ஒரு திறப்பையும் கொண்டிராத கதைக்குப் பின்னர் எங்களில் எவரொருவரும் வேறென்ன பொருள் பற்றிப் பேச்சைத் தொடர முடியும்? அவள் காக்டெய்ல் கோப்பையின் விளிம்பைச் சுற்றி விரலை  ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மேஜைமீது மதுக்கோப்பையின் அடியில் வைப்பதற்கான வட்டத்தட்டில் முத்திரையிடப்பட்டிருந்த வார்த்தைகளை நான் வாசித்து, வாசித்து, மறுபடியும் வாசித்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். யானையைப் பற்றி நான் அவளிடம் பேசியே இருக்கக்கூடாது. எல்லோரிடமும் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வகையிலான கதையா, அது? இல்லவே இல்லை.
நீண்ட அமைதிக்குப் பின், ‘’ நான் சின்னப் பெண்ணாக இருக்கும்போது, எங்கள் வீட்டுப்பூனை காணாமல் போய்விட்டது.’’ என அவள் தொடங்கி, ‘’ஆனால், இப்போதும் ஒரு பூனை காணாமல் போவதற்கும் ஒரு யானை காணாமல் போவதற்கும் – அவை இரண்டு வெவ்வேறு கதைகள்.’’ என முடித்தாள்.
‘’  ஆமாம். உண்மைதான். அதில் ஒப்புநோக்குவதற்கு  இடமில்லை. இரண்டுக்குமான  உருவத்தை நினைத்துப் பாருங்கள்.’’
ஒரு முப்பது நிமிடங்களுக்குப் பின்னால், நாங்கள் அந்த உணவுவிடுதிக்கு வெளியே விடைபெற்றுக்கொண்டிருந்தோம். காக்டெய்ல் கூடத்திலேயே குடையை விட்டுவிட்டதை, அவள், திடீரென்று நினைவுகொண்டாள். அதனால், நான் மின்னேற்றியில் மேலே போய் அவளுக்காக அதைக் கீழே எடுத்து வந்தேன். அது ஒரு நீண்ட கைப்பிடி கொண்ட செங்கல்நிறச் சிவப்புக் குடை.
‘’ நன்றி,’’ என்றாள், அவள்.
‘’  வணக்கம், நல்லிரவு’’ என்றேன், நான்.
அதுவே கடைசியாக அவளை நான் பார்த்தது. அதன் பின்னர் ஒருமுறை தொலைபேசியில் நாங்கள் அந்தக் கூட்டு வரைவு விபரங்கள் குறித்துப் பேசிக்கொண்டோம். அவளோடு பேசும்போது, அவளை ஒரு இரவு விருந்துக்கு அழைப்பது குறித்துத் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனாலும், அப்படி அழைக்காமலேயே பேச்சை முடித்துநின்றேன். அது இப்படியோ அல்லது அப்படியோ, எந்தவகையிலும் ஒரு பெரிய விஷயமல்ல என்றுதான் தோன்றுகிறது. இதுமாதிரி நிறையத் தோன்றுவதாக, காணாமலான யானை அனுபவங்களுக்குப் பிறகு, அடிக்கடி தோன்றுவதாக உணர்ந்தேன். ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைக்கத் தொடங்குவேன்; ஆனால், அப்புறமாக அதைச் செய்வதனால் அல்லது செய்யாமல் விடுவதால் ஏற்படப்போகும் விளைவுகளை இனம்பிரித்துப்பார்க்க இயலாதவனாகிவிடுவேன். அது மட்டுமல்ல, என்னைச் சுற்றியுள்ள விஷயங்கள் அவற்றின் சமநிலையை இழந்துவிட்டாக அடிக்கடி உணரத்தொடங்கினேன். அது, ஒருவேளை,  என்னுடைய  கூருணர்வே என்னை ஏமாற்றுவதாக இருக்கலாம். யானை விவகாரத்துக்குப் பிறகு, எனக்குள்ளே இருக்கின்ற ஏதோ ஒரு வகைச் சமநிலை, சிதறி உடைந்துவிட்டது. அதன் காரணமான வெளி விளைவுகளே என் கண்களை வேறுவிதமாகத் தாக்கியிருக்கலாம். அது அநேகமாக எனக்குள்ளேயே இருக்கின்ற ஏதோ ஒன்று.
செய்தித்தாள்கள் யானையைப்பற்றி அநேகமாக எதையும் அச்சிட்டு வெளியிடவில்லை. நகரம் ஒரு யானையைச் சொந்தமாக வைத்திருந்ததென்பதையே மக்கள் மறந்துவிட்டதாகத் தோன்றியது. யானைக்கொட்டாரச் சுற்றுவேலி மைதானத்தை ஆக்கிரமித்துக்கொண்ட புற்கள் மொத்தமும் இப்போது உதிர்ந்து, அந்தப் பகுதி இப்போது குளிர் காலத் தூக்க மயக்கத்திலுள்ளது.
***

யானை  காணாமலாகிறது (The Elephant Vanishes)

ஜப்பான் -  ஹாருகி முரகாமி (Haruki Murakami)

ஆங்கிலம் – ஜே ரூபின். (J.Rubin)

தமிழாக்கம் – ச. ஆறுமுகம்.
மலைகள் இணைய இதழ்.  2013இதழ் 19பிப்ரவரி - 2 ல் வெளியாகியுள்ளது.

நூல் - யானை காணாமலாகிறது - தொகுப்பாசிரியர் - சிபிச்செல்வன் முதல் பதிப்பு டிசம்பர் 2013, வெளியிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment