Tuesday, 19 January 2016

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - வில்லியம் பர்ன்ஸ் - இராபர்ட்டோ பொலானோ William Burns By Roberto Bolano (Chile)

வில்லியம் பர்ன்ஸ் William Burns 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile) 

ஆங்கிலம் : க்ரிஸ் ஆண்ட்ரூஸ் Chris Andrews 

தமிழில் ச.ஆறுமுகம்

7748923_1060517197

இந்தக் கதையை, கலிபோர்னியாவின் வெஞ்சுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், சொனோராவின் சான்டா தெரேசாவிலிருக்கும் எனது நண்பர் பாஞ்ச்சோ மோங்கே என்ற காவல்துறை காவலருக்குச் சொல்ல, அதை அவர் எனக்குச் சொன்னார். மோங்கே சொன்னபடி, அந்த வட அமெரிக்கன் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத, ஒருபோதும் நிதானமிழந்துவிடாத ஒரு இளைஞன் என்ற விவரணை பின்வரும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது மாறுபாடாகத் தோன்றுகிறது. பின்தொடர்வது பர்ன்ஸின் வார்த்தைகள் :
என் வாழ்க்கையில் கவலைகொள்ளவைக்கிற இருண்ட காலமாக அது இருந்தது. வேலை விஷயத்தில் கடுமையான ஒரு கட்டத்தில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். அதுவரையிலும் எந்தவகைச் சலிப்பும் அண்டாதவாறு, காப்புக் கவசம் அணிந்தவனாக இருந்த நான், அப்போது, உச்ச அளவில் சலிப்படைந்திருந்தேன். இரண்டு பெண்களோடு வெளியூர் சென்றிருந்தேன். எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது. அவர்களில் ஒருத்திக்கு வயது சிறிது அதிகமிருக்கும் – என்னுடைய வயது இருப்பாள் – இன்னொருத்தி, ஒரு இளமங்கையைவிட அதிகமொன்றுமிருக்கமாட்டாள். சில நேரங்களில் அவர்கள் நோயில் சிக்கி, உயிர்வாழ அவதிப்படும், கூன்விழுந்த வயதான பெண்களைப் போலிருந்தார்கள்; மற்றநேரங்களில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளநங்கைகளைப் போலவே தோன்றினார்கள். அம்மாவும் மகளுமோ என நீங்கள் தவறாக நினைத்துவிடுமளவுக்கு வயதுவித்தியாசம் அப்படியொன்றும் அதிகமில்லை; அப்படியுங்கூடச் சொல்லலாம்தான். இருந்தாலும், இதைப்போன்ற விவகாரங்ளையெல்லாம் ஒரு மனிதர் யூகத்தில்தான் சொல்லமுடியுமே தவிர அது, நிச்சயமாகத் தெரிந்ததென்று கூறிவிடமுடியாது. எப்படியிருந்தாலும், அந்தப் பெண்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன. ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. அதில், எந்த நாய் எந்தப் பெண்ணுக்குச் சொந்தமானதென்று எனக்குத் தெரியாது. கோடை விடுமுறையை அனுபவிக்கச் செல்கின்ற மலை மீதிருந்த ஒரு நகரத்தின் புறநகர் எல்லையில் அமைந்திருந்த ஒரு வீட்டை, அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். தெரிந்தவர் அல்லது நண்பர், அல்லது ஏதோ ஒருவரிடம் இந்தக் கோடையில் நான் அங்கு செல்லவிருப்பது பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் மீன்பிடி தூண்டிலையும் கொண்டுசெல்லுமாறு கூறினார்; ஆனால் என்னிடம் தூண்டிற்கோல் எதுவுமில்லை. அதற்கு வேறு சிலர், அங்கிருக்கும் கடைகள் மற்றும் தங்கும் அறைகள் பற்றிச் சொல்லி, எளிதாக எடுத்துக்கொள்ளுமாறு தேறுதல் கூறினார்கள். ஆனால், நான் அங்கு விடுமுறை அனுபவிப்பதற்காகச் செல்லவில்லை; அந்தப் பெண்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வதற்காகப் போகிறேன். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளுமாறு ஏன் அவர்கள் கேட்கவேண்டும்? அவர்கள் சொன்னது, அவர்களைத் துன்புறுத்தும் யாரோ ஒரு இளைஞன் இருக்கிறான் என்பதுதான். அவனைக் கொலைகாரன் என்றுதான் அவர்கள் குறிப்பிட்டனர். அவனது நோக்கம் தான் என்னவென நான் கேட்டதற்கு, அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை என்னைத் தடுமாறச்செய்வதற்காக, இருட்டிலேயே வைத்திருக்க வேண்டுமென அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால், நானாகவே அதனைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர்கள் அபாயத்திலிருப்பதாக – அது ஒரு தவறான பயமாகவுமிருக்கலாம் – நம்பினார்கள். ஆனால், ஒருவர் என்ன நினைக்கவேண்டுமென, நான் எப்படி அவர்களுக்குக் கூற முடியும்? அதிலும் என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களிடம் போய்க் கூறமுடியுமா? இருந்தாலும், ஒரு வாரம், அல்லது அதுபோலக் கழிந்தபின்னர், அவர்கள் கடைசியில், என்னுடைய கருத்தோட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அதனால் நான் அவர்களோடும் அவர்களது நாய்களோடும் அந்த மலைகளுக்குச் சென்றேன். அங்கே, கல்லாலும் மரத்தாலும் கட்டியிருந்த ஒரு வீட்டில் குடிபுகுந்தோம். அந்த வீட்டை விட அதிகமான சாளரங்கள் கொண்டதாக, அதிலும் ஒவ்வொன்றும் பல்வேறு அளவுகளில் எந்தவொரு ஒழுங்குமற்றுப் பரவலாகச் சிதறியமைந்த சாளரங்களை நான் இதுவரையிலும் எந்த வீட்டிலும் பார்த்திருக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன். வெளியிலிருந்து பார்க்கும்போது, அந்த வீடு மூன்று தளங்கள் கொண்டது போன்ற தோற்றத்தை அந்தச் சாளரங்கள் ஏற்படுத்தின; ஆனால் உண்மையில் இரண்டு தளங்களே இருந்தன. உள்ளே, அதிலும் வசிப்பறையிலும் முதல் தளத்திலிருந்த சில படுக்கையறைகளிலும், அந்தச் சாளரங்கள் ஒரு மயக்கத்தை, மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு பித்துணர்வினை எழுப்பின. எனக்குத் தந்திருந்த படுக்கையறையில் இரண்டே சாளரங்கள் இருந்தன; இரண்டுமே மிகவும் சிறியனவாக, ஒன்று மேல் ஒன்றாக, மேலது கூரையைத் தொட்டுவிடுவதாகவும், கீழது தளத்திலிருந்து ஒரே ஒரு அடி உயரத்திலுமாகவும் இருந்தன. அதெல்லாம் எப்படியிருந்தாலும் வாழ்க்கை என்னவோ மகிழ்ச்சியாகவே இருந்தது. வயதில் மூத்த பெண் ஒவ்வொரு நாள் காலையிலும் எழுதினாள்; ஆனால் எல்லா எழுத்தாளர்களும் எழுதும்போது கதவை மூடிக்கொள்வதாகச் சொல்கிறார்களே, அதுபோல மூடுவதில்லை; அவளுடைய மடிக்கணினியை வசிப்பறை மேசை மேல்தான் பணிசெய்ய வசதியாக அமைத்திருந்தாள். இளைய பெண் தோட்டவேலையில் அல்லது நாய்களுடன் விளையாடி, அல்லது என்னுடன் பேசிக்கொண்டிருந்து நேரத்தைச் செலவிட்டாள். அநேகமாகச் சமையல் வேலை முழுவதையும் நானே செய்தேன்; நானொன்றும் அதில் திறமையானவனில்லை; ஆனாலும், என் சமையலை அந்தப் பெண்கள் புகழ்ந்தார்கள். என் வாழ்க்கையின் மீதிக்காலத்தை அப்படியே கழித்துவிட்டிருக்கலாம் தான். ஆனால் ஒருநாள் அந்த நாய்கள் வெளியே ஓடித் தொலைக்கவே, நான் அவற்றைத் தேடிப்போனேன். கையில் ஒரே ஒரு கைவிளக்குடன் பக்கத்துக் காடெங்கும், காலி வீடுகளின் ஒவ்வொரு முற்றத்திலுமாக உற்று உற்றுப் பார்த்துச் சென்றது இப்போதும் நினைவிருக்கிறது. அவற்றை எங்கேயும் காணமுடியவில்லை. வீட்டுக்குத் திரும்பியபோது, நாய்கள் காணாமல் போனதற்கு, நான்தான் காரணமென்பதுபோல, அந்தப் பெண்கள் பார்த்தார்கள். பின்னர், அவர்கள் ஒரு நபரின் பெயரைச் சொன்னார்கள்; அதுதான், அந்தக் கொலைகாரனின் பெயர். அவர்கள் முதலிலிருந்தே அவனைக் கொலைகாரனென்றே குறிப்பிட்டார்கள். நான் அவர்களை நம்பவில்லையென்றாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுவந்தேன். அவர்கள் பள்ளிப் பிராயக் காதல்கள், பணப்பிரச்னைகள் மற்றும் பகைக் காழ்ப்புகள் பற்றிப் பேசினார்கள். இருவருக்குமிடையில் அவ்வளவு வயது வித்தியாசமிருக்கும்போது, ஒரே நபருடன் இருவருக்கும் எப்படித் தொடர்புகள் அமையுமென என் தலைக்குள் சுழன்றதை என்னால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அதற்கும் மேலாக விவரங்கள் எதனையும் அவர்கள் சொல்வதாக இல்லை. அவர்கள் என்னைக் கடிந்திருந்த போதிலும் அன்று இரவில் அவர்களில் ஒருவள் என் அறைக்கு வந்தாள். நான் விளக்கினை எரியவிடவில்லை; அரைத் தூக்கத்தில்தான் இருந்தேன்; ஆனாலும் அது யாரெனத் தெரிந்துகொள்ளவே முடியவில்லை. முதல் கதிரின் வெளிச்சத்தில் விழித்தபோது, நான் தனியாகத்தான் இருந்தேன். நகரத்துக்குள் போய், அவர்கள் பயந்துசாகிற அந்த மனிதனைப் பார்த்துவிடுவதென்று தீர்மானித்தேன். அவனுடைய முகவரியை அவர்களிடம் கேட்டுவிட்டு, நான் திரும்பி வரும்வரையில் வீட்டுக் கதவினைத் திறக்கவேண்டாமெனச் சொல்லிவைத்தேன். வயதில் பெரியவளின் சிறிய டிரக்கினை நானே ஓட்டிக்கொண்டு, அடிவாரம் சென்றேன். நகரத்தைத் தொட்டுவிடுவதற்குச் சிறிது முன்னால், பழைய புட்டிநிரப்பும் தொழிற்சாலை முற்றத்தில் இரண்டு நாய்களையும் கண்டுவிட்டேன். அவை என்னைக் கண்டதும் பணிவோடு, வாலை ஆட்டிக்கொண்டு வந்தன. நான் அவற்றை டிரக்கின் முன் பகுதிக்குள்ளேயே அமரவைத்து, முந்தைய நாள் இரவில் எவ்வளவு கவலைப்பட்டேனென்பதை நினைத்துச் சிரித்துக்கொண்டே, சிறிது நேரத்துக்கு ஊருக்குள்ளாகவே சுற்றிவருகையில், அந்தப் பெண்கள் சொன்ன முகவரியை நோக்கி, நான் நெருங்கி வந்திருந்ததைக் கண்டேன். அந்த இளைஞனின் பெயரை பெட்லோ என்றே வைத்துக்கொள்வோம். விடுமுறை அனுபவிக்க வருபவர்களுக்காகவே, ஊரின் மையப்பகுதியில் தூண்டில்கள், தூண்டிற்கோல்கள் முதல் நிழற்கட்டமிட்ட சட்டைகள், சாக்லேட் பட்டைகள் வரையில் விற்கும் கடை வைத்திருந்தான். கொஞ்ச நேரத்துக்கு நிலையடுக்குகளைக் கண்களால் துளாவிக்கொண்டிருந்தேன். அந்த மனிதன் ஒரு திரைப்பட நடிகனைப் போலத் தோன்றினான்; முப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. திடமான உடற்கட்டு, அடர் கறுப்புத் தலைமுடி. செய்தித் தாள் ஒன்றினைக் கொடுக்கல் வாங்கல் மேடை மேல் பரப்பி, வாசித்துக் கொண்டிருந்தான். கித்தான் காற்சட்டையும் டி – சர்ட்டும் அணிந்திருந்தான். வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க வேண்டும்; டிராம்களும் கார்களும் வந்துபோய்க்கொண்டிருந்த மையத் தெரு ஒன்றில் கடை அமைந்திருந்தது. நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். பெட்லோவின் கடையில் விலை அதிகம்; கடையை விட்டுச் செல்லும்போது, எதனாலோ, எனக்கு அந்தப் பாவப்பட்ட இளைஞன் அவ்வளவுதான், தொலைந்தான், என ஒரு நினைப்பு தோன்றியது. அங்கிருந்து ஒரு பத்து அடி கூட வந்திருக்கமாட்டேன், அவனது நாய் என் பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். கடையில் கூட நான் அதைப் பார்த்திருக்கவில்லை; நல்ல, பெரிய ஒரு கறுப்பு நாய், ஜெர்மன் ஷெப்பர்டு வேறு ஏதோ ஒன்றுடன் இணைசேர்ந்த கலப்பினமாக இருக்கும். நான் ஒருபோதும் சொந்தமாக நாய் வளர்த்ததில்லை; என்றாலும் அந்தப் பாழாய்ப் போகிற சனியன்களுக்கு என்னிடம் எது பிடிக்கிறதென்று தெரியவில்லை; எதற்காகவோ பெட்லோவின் நாய் என் பின்னால் வந்தது. நான், அதை கடைக்குத் திரும்பிப் போகுமாறு துரத்தினேன் தான்; ஆனாலும் அது என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால், நான் அந்த நாய் என் பக்கமாக வர, டிரக்கை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்; பின்னர் ஒரு சீழ்க்கைச் சத்தத்தை என் பின்னால் கேட்டேன். கடைக்காரன் அவனது நாயைத் திரும்பிவருமாறு அழைத்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிப் பார்க்கவில்லையென்றாலும், அவன் எங்களைத் தேடி கடைக்கு வெளியே வந்துவிட்டானென்பது எனக்குத் தெரிந்தது. எனது பதில் நடவடிக்கை உடனடியானதாகவும் நான் நினைத்துப்பார்க்காததாவும் இருந்தது: அவன் என்னையும் நாயையும் கண்டுவிடாமலிருக்க முயற்சித்தேன். உறைந்து உலர்ந்த இரத்தத்தின் அடர்சிவப்பு நிறத்திலிருந்த டிராம் வண்டியின் பின்புறம் நாயை என் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு மறைவாக ஒளிந்து நின்றது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பாதுகாப்பான இடத்திலிருப்பதாக நான் உணருகின்ற கணத்தில், அந்த டிராம் நகர்ந்து தொலைக்கவும், எதிர்ப்பக்கம் நடைபாதையில் நின்ற கடைக்காரன் என்னைப் பார்த்து, ‘’நாயைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘’நன்றாகக் கயிற்றைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘அங்கேயே இரு, ’நான் வரும்வரையில்’’ என்றோ அர்த்தமாகும் வகையில் கைகளை ஆட்டிச் சைகை காட்டினான். ஆனால், அது எதையும் நான் செய்யவில்லை. நான் அப்படியே திரும்பி, கூட்டத்தில் மறையவும், அவன் ‘நில், என் நாய்! டேய், முட்டாள், என் நாய்!’’ என்பதுபோல் என்னவோ கத்தினான். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று எனக்குத் தெரியவில்லை. எப்படியோ, கடைக்காரனின் நாய் என்னைப் பின்தொடர்ந்து, டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்ததோடு, நான் கதவைத்திறந்ததுதான், தாமதம், எனக்கு நேரமே கொடுக்காமல், பொசுக்கென்று உள்ளே குதித்து உட்கார்ந்து கொண்டதோடு, பின்னர் அங்கிருந்து அசையவும் மறுத்துவிட்டது. மூன்று நாய்களோடு நான் வந்து சேர்ந்ததைக் கண்ட அந்தப் பெண்கள், என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நாய்களோடு விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரனின் நாய்க்கு அவர்களை நீண்ட நாட்ளாகவே தெரியும் போலிருக்கிறது. அன்று பிற்பகலில் நாங்கள் எல்லா விதமான விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் என்ன நடந்ததெனச் சொல்லிப் பேசத் தொடங்கினேன். பின்னர், அவர்கள் கடந்தகால வாழ்க்கை பற்றியும் அவர்களது வேலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்: ஒருவள் ஆசிரியையாகவும் மற்றவள் சிகையழகுக் கலைஞராகவும் இருந்து, இருவருமே வேலையை விட்டுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்கள் குழந்தைகளைப் பிரச்னைகளோடுதான் பார்த்துக்கொண்டதாக அவ்வப்போது பேசிக்கொண்டனர். ஏதோ ஒரு கட்டத்தில், இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டை எப்படிப் பாதுகாப்பது என்பதுபற்றி நானாகவே ஆரம்பித்துப் பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பெண்கள் இருவரும் புன்னகையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுச் சரியானதென இசைவும் தெரிவித்தனர். ஏன்தான் அப்படிச் சொன்னோமோ என்றும் நான் வருந்திக்கொண்டேன். பின்னர் நாங்கள் உணவு அருந்தினோம். அன்றைய இரவுக்கான உணவினை நான் சமைத்திருக்கவில்லை. பேச்சு மவுனமாக உறைந்தது. அந்த மவுனமும் எங்கள் தாடை அசைவு மற்றும் பற்களின் அரைவுச் சப்தத்தாலும் வெளியே வீட்டைச் சுற்றி ஓட்டப்பந்தயம் ஓடிக்கொண்டிருந்த நாய்களின் உரசல் மற்றும் விளையாடும் சப்தத்தாலுமே அவ்வப்போது உடைந்தது. வெகு நேரத்துக்குப் பின்னர் நாங்கள் குடிக்கத் தொடங்கினோம். பெண்களில் ஒருவள், யாரென்று நினைவில்லை, பூமியின் கோளத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்தும் மருத்துவர்களின் எச்சரிக்கைகள் குறித்தும் பேசினாள். என் மனம் எங்கோயிருந்தது; அவள் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருக்கவில்லை; மலைச் சரிவுகளில் முன்பொரு காலத்தில் வசித்த இந்தியர்களைப் பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தாளென நினைக்கிறேன். சிறிது நேரம் கழிந்ததும் அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமலாகி, எழுந்து மேசையைச் சுத்தம் செய்துவிட்டு, உணவுத் தட்டு மற்றும் கலங்களைக் கழுவுவதாகச் சமையலறைக்குள் அடைந்துகொண்டேன். அப்போதும் அவர்களின் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்துகொண்டு தானிருந்தது. நான் வசிப்பறைக்குத் திரும்பிச் சென்றபோது, இளைய பெண் கம்பளியால் பாதி மூடியபடி சாய்மெத்தையில் படுத்திருக்க, மற்றவள் ஒரு பெரிய நகரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்; அது, அவள் ஏதோ ஒரு பெரிய நகரத்தைப்பற்றி, அந்த நகரம் வாழ்க்கைக்கு எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் அவள் அதைப்பற்றி இகழ்வாகவே பேசிக்கொண்டிருந்தாள்; நான் எதைவைத்து அப்படிச் சொல்கிறேனென்றால், இருவரும் அவ்வப்போது கமுக்கப்புன்னகை பூக்கத் தொடங்கிவிடுவார்கள். எனக்கு இந்த இரண்டுபேரிடமும் புரியாத ஒன்று: அவர்களின் நகைச்சுவை உணர்வு தான். அவர்கள் அழகாக, என்னைக் கவர்பவர்களாக இருந்தார்கள்; எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது. ஆனால், அவர்களது நகைச்சுவை உணர்வு போலியானதாக, வலிந்து வரவழைக்கப்பட்டதாக, ஏதோ ஒன்று எப்போதுமே தோன்றிக்கொண்டிருந்தது. இரவு உணவுக்குப் பின்னர், நான் திறந்த விஸ்கிப்புட்டியில் பாதி காலியாகிவிட்டது. அது வேறு எனக்குள் கவலையாக இருந்தது. போதையாகிவிடவேண்டுமென நான் நினைக்கவில்லை; அவர்களும் போதையாகி என்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. அதனால், நான் அவர்களுடனேயே உட்கார்ந்ததோடு, நாம், இன்னும் ஒரு சில விஷயங்கள் பற்றிப் பேசவேண்டுமென்றேன். ‘’ என்ன விஷயங்கள்?’’ என வியப்புற்றுக் கேட்பதாகப் பாசாங்கு செய்தனர்; ஒருவேளை அது அப்படிப் பாசாங்காக இல்லாமலுமிருக்கலாம். ‘’இந்த வீட்டில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. நாம் அதற்குச் சில காரியங்கள் செய்யவேண்டும்,’’ என்றேன், நான். ‘’என்ன செய்யவேண்டும்?’’ என்றாள், ஒருவள். ஓ.கே. என்று நிலைமாற்றி, நிமிர்ந்து அமர்ந்த நான், அந்த வீடு ஊருக்குள்ளிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறது, பாதுகாப்பற்ற தன்மை எப்படி வெளிப்படையாகத் தெரிகிறது என்பது பற்றியெல்லாம் பேசத் தொடங்கி, நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்; ஆனால், சிறிதுநேரத்திலேயே அவர்கள் அதைக் கவனிக்கவில்லையென்பதை உணர்ந்துவிட்டேன். நான் ஒரு நாயாக இருந்தால், இந்தப் பெண்கள் என்மீது இன்னும் கொஞ்சம் கரிசனம் காட்டுவார்களாயிருக்கலாமென, எரிச்சலோடு எண்ணினேன். பின்னர், எங்களில் யாருக்குமே தூக்கம் துளி கூட வரவில்லையென்பதை நான் உணர்ந்தேன். பிறகு, அவர்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசத்தொடங்கினர்; அவர்களது பேச்சு எனது இதயத்தைப் புரட்டிப்போட்டது. எந்த ஒரு கடினமான மனிதனையும் உருக்கிவிடும் பயங்கரமான, தீயசெயல்கள், காட்சிகளை நான் கண்டிருக்கிறேனென்றாலும், அந்த இரவில் அந்தப் பெண்கள் பேசுவதைக் கேட்டு, எனது இதயம் அவ்வளவு வேகமாகத் துடித்துச் சுருண்டு, அநேகமாகக் கரைந்து, காணாமலாகிவிட்டது. அதைத் தடுத்துவிடும் முயற்சியில், அவர்களது குழந்தைப்பருவக் காட்சிகளை நினைவுகொண்டு பேசுகிறார்களா அல்லது தற்போதய குழந்தைகளின் உண்மையான நிலையைப் பேசுகிறார்களா எனக் கண்டுபிடிக்க முயன்றேன்; ஆனாலும் முடியவில்லை. என் தொண்டைக்குள் பஞ்சு மற்றும் பட்டைத் துணிகளால் கட்டிய உருண்டை ஒன்று எழுந்து அடைப்பது போலிருந்தது. உரையாடலின் நடுவே அல்லது இரட்டைக் குரல்களின் நடுவில் திடீரென்று எனக்குள் ஒரு முன்னுணர்வு ஏற்பட்டதில், நான் வசிப்பறையின் சாளரங்களில் பிரதான சாளரத்தின் மிக அருகிலிருந்த ஒரு மூலையில், எந்த ஒரு அவசரத்துக்கும் உதவியாக இருக்கட்டுமென அமைத்திருந்த காளைக்கண் வடிவச் சிறு சாளரம் ஒன்றினை நோக்கிப் பொய்நடையில் நகரத் தொடங்கினேன். அந்தப் பெண்களும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென உணர்ந்து என்னைப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கடைசி நிமிடத்தில் நானும் உணர்ந்துகொண்டேன். சாளரத் திரையை இழுத்து, பெட்லோவின் தலையை, அதுதான், அந்தக் கொலைகாரனின் தலையைச் சாளர வாசலில் கண்ட அந்த இக்கட்டான நேரத்தில், அந்தப் பெண்களுக்கு என் உதட்டில் ஒரு விரலை வைத்துக் காட்டுவதற்கு மட்டுந்தான் முடிந்தது. அடுத்து நிழ்ந்ததெல்லாமே குழப்பம் தான்; ஏனென்றால் பயமென்பது ஒரு தொற்றுநோய். வந்திருப்பது கொலைகாரனென்பதை நான் உடனடியாகப் புரிந்துகொண்டேன். அவன் வெளியே வீட்டைச் சுற்றி ஓடத்தொடங்கினான். அந்தப் பெண்களும் நானும் வீட்டுக்குள்ளாகவே சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கினோம். இரண்டு வட்டங்கள்: நாங்கள் திறந்துகிடக்கும் சாளரங்களை மூடுவதும், கதவுகளை இழுத்துப்பார்த்து அடைப்பதுமாக ஓடியபோது, அவன் வீட்டுக்குள் நுழைவதற்காகத் திறந்து கிடக்கும் சாளரம் ஒன்றைக் கண்டுபிடித்துவிடும் முயற்சியில் ஓடினான். நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்யவில்லையென்று எனக்குத் தெரியத்தான் செய்தது: என் அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, வெளியே சென்று, அவனைச் சரணடையச்செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நாய்கள் வெளியேதானிருப்பதாவும், அவற்றுக்கு எதுவும் ஆகியிருக்காதென்றும் எண்ணத் தொடங்கினேன்; நாய்களில் ஒன்று கருவுற்றிருந்ததென்று நினைக்கிறேன், அது நிச்சயமானதாவென்று எனக்குத் தெரியாது, அப்படி ஒரு பேச்சு இருந்தது. அது எப்படியோ போகட்டும், அப்போதும், நான் ஓடிக்கொண்டேயிருந்த அந்தக் கணத்தில் பெண்களில் ஒருவர் ‘’அய்யோ, சேசுவே, அந்தப் பெண் நாய், பெண் நாய்,’’ என அரற்றியது, என் காதில் விழுந்தது; நான் டெலிபதியைப் பற்றி, அதாவது அது நிகழ்வதுபற்றி, அந்த மகிழ்ச்சியைப் பற்றி நினைத்தேன். கூடவே, நாயைப் பற்றிப் பேசிய பெண், அவர்களில் மூத்தவளோ, இளையவளோ யாராக இருந்தாலும், அதைப் பார்ப்பதற்காக கதவைத் திறந்துவிடுவாளோ என்றும் பயந்தேன். நல்லவேளை, அவர்களில் யாரும் வெளியே நகர்வதான எந்த முயற்சியும் செய்யவில்லை. எல்லாம் நல்லது தான், நல்லதேதான் என நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர், (நான் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்) முதல் தளத்தில், அதுவரையிலும் நான், பார்த்தேயில்லாத ஒரு அறைக்குள் சென்றேன். அது, ஒடுக்கமாக, நீண்டு, இருட்டாக இருந்தது; நிலா வெளிச்சமும், முற்றத்து விளக்கிலிருந்து வந்த வெளிச்சமும் தான் மங்கலாகத் தெரிந்தது. அந்தவொரு கணத்தில், அந்த விதிதான் (அல்லது கெட்டநேரம் – இந்த விஷயத்தில், அதுவேதான்) என்னை அங்கே, அந்த அறைக்குக் கொண்டுவந்து சேர்த்ததென்று, பயந்துபோயிருந்த அந்தத் தெளிவற்ற மனநிலையிலும் எனக்கு உறுதிப்பாடாகத் தெரிந்தது. மறுமுனையில் சாளரத்துக்கு வெளியில் கடைக்காரனின் நிழலுருவத்தைப் பார்த்தேன். அப்படியே முழங்காலிட்டுக் குனிந்துகொண்டேன். என் உடம்பின் நடுக்கத்தை (என் உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வை ஊற்றோ ஊற்றென்று ஊற்றிக் கொண்டிருந்தது.) அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு, காத்திருந்தேன். கொலைகாரன் அநியாயத்துக்கு எளிதாகச் சாளரத்தைத் திறந்து அறைக்குள் நிதானமாக, நழுவி இறங்கினான். அறைக்குள் ஒடுங்கலான மூன்று மரக்கட்டில் படுக்கைகள், ஒவ்வொன்றின் அருகிலும் ஒரு மேசையோடு இருந்தன. படுக்கைகளுக்குச் சில அங்குலங்களே உயர்வில், சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த மூன்று அச்சுக் குறிப்புகள் தென்பட்டன. கொலைகாரன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவன் மூச்சுக்காற்றினை நான் உணர்ந்தேன்; அவனது மூச்சுக்குழலுக்குள் சுவாசம் எழுப்பிய சப்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. பின்னர், அவன், நான் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்தை நோக்கி நேரடியாகத் தடவித்தடவி, சுவருக்கும் படுக்கை விளிம்புகளுக்கும் நடுவிலான வழியில் வரத்தொடங்கினான். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், அவன் கண்களில், நான், படவில்லையென்பது, எனக்குத் தெரிந்தது. எனது அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றிசொல்லிவிட்டு, அவன் என்னருகில், எனக்கு வசதியாக நெருங்கிவந்ததும், அவனுடைய கரண்டைக் கால்களைப் பற்றிப்பிடித்துக் கீழே விழுமாறு இழுத்துத் தள்ளினேன். அவன் தரையில் விழுந்ததும் முடிந்த அளவுக்கு அதிகக் காயம் ஏற்படுத்திவிடவேண்டுமென்று வேகமாக உதைக்கத் தொடங்கினேன். ‘’இங்கேதான் இருக்கிறான், அவன் இங்கேதான் இருக்கிறான்! என்று கத்திக் கூச்சலிட்டேன். ஆனால், அந்தப் பெண்கள் என் சத்தத்தைக் கேட்ட மாதிரித் தெரியவில்லை, அல்லது, அவர்கள் வீட்டைச் சுற்றி ஓடும் சப்தமும் எனக்குக் கேட்கவில்லை. முன்,பின் அறியாத அந்த அறை எனது மூளை அதன் நீட்சியாகக் கண்டது போன்ற, ஒரு தனி வீடாக, ஒரே தங்குமிடமாகத் தோன்றியது. விழுந்து கிடந்த அந்த உடலை நான் எவ்வளவு நேரம் உதைத்துக்கொண்டிருந்தேனென்று எனக்கே தெரியவில்லை; யாரோ ஒருவர் என் பின்னாலிருந்த கதவைத் திறந்து, எனக்குப் புரியாத சொற்களைக் கூறி, ஒரு கையை என் தோளில் வைத்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பின்னர் பார்க்கும்போது, நான் தனியாளாகவே இருந்தேன்; உடனேயே உதைப்பதை நிறுத்தினேன். சில கணங்களுக்கு என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; திகைப்பாகவும் களைப்பாகவும் உணர்ந்தேன். நல்லவேளையாக, உடனேயே அதிலிருந்தும் விடுபட்டு, வசிப்பறைக்கு அந்த உடலை இழுத்துவந்தேன். அங்கே, சாய்மெத்தையில் அந்தப் பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்காத குறையாக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அந்தக் காட்சி எதனாலோ எனக்கு ஒரு பிறந்தநாள் விருந்தினை நினைக்கச் செய்தது. என்ன நிகழ்ந்ததோ என்பதைவிட, நான் கொடுத்த கொடையில் பெட்லோ கிடந்த நிலையைக் கண்டதும் ஏற்பட்ட பதற்றத்தையும், அவர்கள் கண்களில் குடிகொண்டிருந்த அச்சத்தின் தீப்பொறியையும் கண்டேன். அவர்கள் கண்களின் தோற்றம் தான் என் பிடியைத் தளர்த்தி, பெட்லோவின் உடலைத் தரைவிரிப்பின் மீது வீழ்த்தியது. பெட்லோவின் முகம் இரத்த முகமூடியாக வசிப்பறை வெளிச்சத்தில் பயங்கரமாகத் தோன்றியது. அவனது மூக்கு இருந்த இடத்தில் இரத்தக் கூழ் வழியும் ஒரு உருண்டைக்கட்டிதான் இருந்தது. அவனுடைய மார்பில் கைவைத்து இதயம் துடிக்கிறதா எனச் சோதித்துப் பார்த்தேன். அந்தப் பெண்கள் கொஞ்சம் கூட அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். ‘’செத்துவிட்டான்,’’ என்றேன், நான். முன்பக்கத் தாழ்வாரத்துக்கு, நான் நகர்ந்த போது, அவர்களில் ஒருவர் பெருமூச்சிடுவது என் காதுகளில் விழுந்தது. நகரத்து அதிகாரிகளை என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறோமென்ற சிந்தனையில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் புகைத்தேன்; திரும்பவும் உள்ளே நுழைந்தபோது, அந்தப் பெண்கள் மண்டியிட்டு, நான்கு கால்களிலுமாக நின்று, சடலத்தின் ஆடைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். எனக்குள் பீறிட்ட அழுகைச்சத்தத்தை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களோ என்னைப் பார்க்கக்கூட இல்லை. ஒரு கிளாஸ் விஸ்கியை அருந்திவிட்டு, மீண்டும் வெளியே சென்றேன்; கூடவே விஸ்கிப் புட்டியையும் எடுத்துக்கொண்டேனென்றுதான் நினைக்கிறேன். அந்தப் பெண்கள் அவர்கள் வேலையை முடிக்கட்டுமென்று வெளியில் எவ்வளவு நேரம் குடித்துக்கொண்டும், புகைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திரட்டி, ஒன்றுசேர்த்துப் பார்த்தேன். சாளரம் வழியாக, அவன் உள்ளே பார்த்ததை நினைத்தேன்; அவன் கண்களில் தெரிந்த பார்வையை நினைத்துப் பார்த்தபோது, அந்த அச்சத்தை இப்போது உணர்ந்தேன்; நாயை இழந்த தருணத்தில், அவனது கண்களை நினைத்துப் பார்த்தேன்; கடைசியாக கடைவாசலில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். முந்தைய பகலின் வெளிச்சத்தோடு, கடையின் உள்ளிருந்த வெளிச்சத்தையும், அவனைக் கொன்றபோது, அறைக்குள் தெரிந்த முன்பக்கத் தாழ்வார வெளிச்சத்தையும் நினைத்துப் பார்த்தேன். பின்னர், நாய்களைப் பார்க்கத் தொடங்கினேன்; அவை அப்போதும் தூங்காமல், முற்றத்தில் ஒரு மூலைக்கும் எதிர் மூலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. மரவேலி பல இடங்களில் இற்றுப்போய், உடைந்திருந்தது; என்றாவது ஒருநாள், யாராவது அதைச் சரிசெய்வார்கள், நிச்சயம், அது நானாக இருக்கப்போவதில்லை. மலைகளின் மறுபுறம், அன்றைய நாளின் விடியல் புலரத் தொடங்கியது. நாய்கள் தாழ்வாரத்தின் மேலேறி, இரவு முழுவதற்கும் விளையாடிக் களைத்ததற்கு, அன்பான ஒரு தட்டு மற்றும் தொடுகையை எதிர்பார்த்து நின்றன. வழக்கமான இரண்டு மட்டுமே வந்திருந்தன; மூன்றாவதற்காக நான் சீழ்க்கை அடித்தேன்; ஆனாலும் அது வரவில்லை. சட்டென்று எனக்குள் தோன்றிய அந்த வெளிச்சம் குளிரின் முதல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. இறந்தவன் கொலைகாரன் இல்லை. உண்மையான கொலைகாரனால், நாங்கள் ஏமாற்றப்பட்டிருந்தோம். அவன் விதிவசத்தால் தான் எங்கோ தூரத்தில் ஒளிந்துகொண்டிருக்க வேண்டும். பெட்லோ யாரையும் கொலைசெய்ய நினைக்கவில்லை – அவன் நாயைத்தான் தேடி வந்திருக்கிறான். பாவம், அந்த வேசிமகன், என நான் நினைத்தேன். நாய்கள், ஒன்றையொன்று துரத்தி விளையாட முற்றத்திற்குச் சென்றன. நான் கதவைத் திறந்து அந்தப் பெண்களைப் பார்த்தேன்; வசிப்பறைக்குள் என் கால்களால் நுழையவே முடியவில்லை. பெட்லோவின் சடலம் மீண்டும் ஆடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடைகள் முன்பைவிட நன்றாகவே இருந்தன. நான் எதையோ சொல்லப் புகுந்தவன் அதில் பயனெதுவும் இல்லையென்று, மீண்டும் தாழ்வாரத்துக்கே திரும்பி வந்தேன். பெண்களில் ஒருத்தி என் பின்னால் வந்தாள்; ‘’நாம் இப்போது சடலத்தை ஒழித்தாக வேண்டும்,’’ எனப் பின்னால் நின்றவாறே சொன்னாள். ‘’ஆமாம்,’’ என்றேன், நான். பின்னர், பெட்லோவைத் தூக்கி அந்த டிரக்கில் ஏற்ற உதவினேன். டிரக்கை நாங்கள் மலைப்பகுதிக்குள் ஓட்டிப் போனோம். ‘’வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை.’’ என்றாள், மூத்தவள். நான் பதில் சொல்லவில்லை; கல்லறை ஒன்றினைத் தோண்டினேன். நாங்கள் திரும்பி வந்து, அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, நான் டிரக்கைக் கழுவி முடித்து, எனது பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தேன். நாங்கள் தாழ்வாரத்தில் அமர்ந்து மேகங்களைப் பார்த்துக்கொண்டே காலை உணவு அருந்தும்போது, ‘’இப்போது என்ன செய்யப் போகிறாய்?’’ என அவர்கள் கேட்டார்கள். ‘’நான் நகரத்துக்கே மீண்டும் போய், எங்கே, எந்த இடத்தில் பாதையைத் தவறவிட்டேனென்று கண்டுபிடிக்கப் போகிறேன்.’’ என்றேன், நான்.
பாஞ்ச்சோ மோங்கோ சொன்னபடியென்றால், ஆறு மாதத்திற்குப் பின் வில்லியம் பர்ன்ஸ் அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்பதே கதையின் முடிவு.
நன்றி:- www.newyorker.com/magazine/2010/02/08/william-burns

மலைகள் இணைய இதழ், டிசம்பர், 03,  2015, இதழ் 87 இல் வெளியானது.

No comments:

Post a Comment