Tuesday 12 January 2016

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - இட்லி


ஒரு சொல் - இட்லி
`உழுந்து தலைப்பெய்து கொழுங்களி மிதவை பெருஞ்சோறு` - உடையாத அரிசியையும் முழு உழுந்தையும் ஒன்றாகக் கலந்து  உழுந்தஞ்சோறு, உழுந்தங்கஞ்சி சமைத்து விருந்து படைப்பது சங்க காலத் திருமணங்களில் பழக்கமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் சமையல் கலைகளில் மாற்றம் பெறப்பெற, அரிசி மாவையும் உழுந்து மாவையும் கலந்து, புளிக்கவைத்து, தட்டில் `இட்டு` நீராவியில் `அவி`க்கும் `இட்டவி` மச்சபுராணத்தில் இட்டலியாகிப் பின்னர் நவீனத் தமிழில் `இட்லி`யாகி பேச்சுத் தமிழிலும் இட்லி என்றே  நிலைத்துவிட்டது. அதற்குத் துணையாக சாம்பார், சட்னி, மிளகாய்ப்பொடி என விதவிதமாகத் துணை வகைகளும் பெருகிப்போயின. மிகப் பழங்காலத்தில் இட்லி தயாரிப்பதற்கான நீராவிப் பாத்திரம், இட்லித்தட்டு எல்லாமே மண் பாண்டமாகவே இருந்து, பின்னர் செம்பு, பித்தளை, அலுமினியம், எவர்சில்வர், இண்டாலியம் என படிப்படியாக மாறி இப்போது குக்கர் ஆகிவிட்டது. இட்லி குட்டுவம், இட்லி குண்டான், இட்லித்தட்டு மீது விரிக்கும் இட்லித்துணி எல்லாம் இப்போது இல்லை. இட்லிக்கு மாவு ஆட்டும் ஆட்டுரல் அல்லது ஆட்டுக்கல் இப்போது மிக்சி, கிரைண்டர் ஆகிப்போனது. ஆனாலும் இட்லி வடை, சாம்பார், தோசை என்ற தமிழர் உணவில் குறிப்பாக இட்லி, அதன், மல்லிகைப் பூவின் நிறத்தோடு, மென்மையும் கொண்டமையால், எளிமையான ருசிக்கும் தன்மையால், எளிதில் செரிக்கும் தன்மையால் உண்டவர் எல்லோரையும் கவர்ந்தது. அது பிடித்துப்போக, தென்னிந்திய உணவாகிப் பின்னர் அனைத்திந்திய அளவில், உலக அளவில் காலை உணவுக்கு அருமையான உணவென்ற பெயரையும் பெற்றது. தமிழ்ப் பண்டிதர் சிலர் இட்லியை ஆங்கிலத்தில் steamed cake என்றும் தோசையை  roasted cake என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பரிந்துரை செய்ய,  ஆங்கிலேயரோ, ‘’அப்படியெல்லாம் வேண்டாம், idli, vada, dosa, sambar என்ற தமிழ்ப் பெயர்களே போதும்` எனக்கூறி, ஆங்கிலத்திலும் அப்படியே பயன்பட்டுவருகிறது.     






No comments:

Post a Comment