Thursday 14 January 2016

அரபுச் சிறுகதை (எகிப்து) - நார்வே எலி (Norwegian Rat) - நகுய்ப் மாஃபூஸ் Naguib Mahfouse

நார்வே எலி (Norwegian Rat)
நகுய்ப் மாஃபூஸ்   Naguib Mahfouse
தமிழில் ச. ஆறுமுகம்



(நகுய்ப் மாஃபூஸ்  (11 டிசம்பர், 1911 – 30 ஆகஸ்ட் 2006) எகிப்து நாட்டைச் சேர்ந்த படைப்பாளர். கெய்ரோ நகரில் பிறந்து கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று எகிப்திய ஆட்சிப்பணியில் 1934 முதல் 1971 வரை பணிபுரிந்தவர். ஐம்பது நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள், 30 திரைக்கதைகள், பல நாடகங்கள் எழுதியவர். 1988ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் விருது வழங்கப்பட்டது. இவரே நோபல் விருது பெற்ற ஒரே அரபு எழுத்தாளர். இவரது நாவல் ஒன்று சா.தேவதாஸ் மொழிபெயர்ப்பில் `அரேபிய இரவுகளும் பகல்களும்` என்னும் நூலாக எதிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.)
 இந்த அல்லலில் நல்லவேளையாக, நாங்கள் மட்டுமே தனியாக இல்லை. அந்தக் கட்டிடத்திலுள்ள வீட்டு உரிமையாளர்களில் மிக மூத்தவரான திரு. ஏ. எம். ஒரு கருத்துப் பரிமாற்றத்திற்காக அவரது அடுக்ககத்தில் கூட்டியிருந்த அந்தக் கூட்டத்திற்கு எங்களை அழைத்திருந்தார். அங்கே வந்திருந்த எங்கள் எல்லோரிலும் வயதில் மூத்தவராக மட்டுமல்லாமல் மிகுந்த முதுநிலை உடையவரும் நல்ல பணவசதி படைத்தவருமான   திரு. ஏ. எம். அவர்களையும் சேர்த்து பத்துப் பேருக்கு அதிகமில்லை. கூட்டத்திற்கு ஒருவர்கூடத் தலைகாட்டாமல் இல்லை – கூட்டம் எலிகளைப் பற்றியதாக.  அதுவும் எங்கள் வீடுகளுக்கு, அவை படையெடுக்கலாமென்கிற நிலையில்,   எங்கள் பாதுகாப்புக்கு ஒரு பயமுறுத்தலாக இருக்கும்போது அவர்கள் எப்படி வராமலிருக்க முடியும்? திரு. ஏ. எம். மிகவும் அழுத்தமாக ஈர்க்கின்ற குரலில் ‘’ உங்கள் எல்லோருக்கும் தெரிந்தபடியே …’’ எனத் தொடங்கி, எலிகளின் தாக்குதல் வேகமாக நெருங்கிக்கொண்டிருப்பது குறித்து ஊடகங்கள் திரும்பத் திரும்பத் தெரிவித்திருந்ததை, எலிகளின் பெருத்த எண்ணிக்கை குறித்தும், அவற்றால் ஏற்படப்போகிற பயங்கரமான அழிவுகள் குறித்தும் முன்வைத்தார். உடனேயே குரல்கள் எழுந்து, அறை முழுவதும் வியாபித்தன.    
‘’ நம் காதில் விழுவது முற்றிலும் நம்பும்படியாக இல்லை.’’
‘’ நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?’’
‘’அவை சாதாரண எலிகளல்ல; பூனைகள் என்ன, மனிதர்களைக்கூட எதிர்த்துத் தாக்குகின்றன.’’
‘’ இதெல்லாம்  அதிகப்படுத்திச் சொல்கிறார்களெனத்  தெரியவில்லையா?’’
‘’ இல்லையில்லை, உண்மை நிலவரங்கள் அதற்கும் மேலாக இருக்கின்றன’’.
பின்னர், அமைதியாக, தலைவர் என்ற பெருமிதத்தோடு, திரு.ஏ.எம்., ‘’ அது ஒருவேளை நிகழ்ந்தாலும், நாமொன்றும் தன்னந்தனியாக விடப்பட்டுவிடவில்லை. ஆளுநரே, நேரடியாக என்னிடம் இதை உறுதியாகச் சொல்லிவிட்டார்.’’
 ‘’ இந்த மாதிரிக் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.’’
‘’ ஆகவே, இதில் நாம் செய்யவேண்டியதெல்லாம், நேரடியாக என் மூலமாக ஆனாலும் சரி, அதிகாரிகள் மூலமானாலும் சரி, வரக்கூடிய  உத்தரவுகளை  அப்படிக்கப்படியே கவனமாகச் செயல்படுத்துவதுதான்.’’
‘’ இது எங்களுக்கு ரொம்பவும் செலவு வைக்குமோ?’’ எங்களில் ஒருவருக்கு விவரங்கேட்கவேண்டுமென்று தோன்றியிருக்கிறது.
அவர், பதிலளிப்பதற்காக குரானுக்குள் புகுந்தார். ‘’ கடவுள் ஒரு ஆத்மாவிடம் அதன் தகுதிக்கு மீறி எந்த கட்டணத்தையும் வசூலிப்பதில்லை’’
‘’ இதில் முக்கியமானது, செலவு அளவு கடந்துவிடக்கூடாது.’’
இந்த முறை அவர் பொதுக் கோட்பாடு ஒன்றுக்குள் புகுந்தார். ‘’ ஒரு தீமை  அதைவிட மோசமான ஒன்றால் தடுக்கப்படுவதில்லை.’’
இதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட குரல்கள் ஒருசேர எழுந்து, ‘’ நாங்கள் கூட்டாக ஒத்துழைப்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என நம்பிக்கை கொள்வோம்.’’ என ஒலித்தன.
‘’ நாங்கள் உங்களோடு இருக்கிறோம்.’’ என்ற திரு. ஏ. எம். ‘’ ஆனால், முழுக்க முழுக்க எங்களையே நம்பிக்கொண்டிருக்காதீர்கள். குறைந்த பட்சம் வெளிப்படையான விஷயங்களிலாவது சொந்தக்காலில் நில்லுங்கள்.’’ என உரைத்தார்.
‘’ முற்றிலும் சரிதான், ஆனால், வெளிப்படையான விஷயங்கள் என்று நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?’’
‘’ பொறி வைப்பதும் பழங்கால முறையிலான எலி மருந்து வைப்பதும் தான்.’’
‘’ நல்லது.’’
‘’ மாடிப்படிகள், கூரைகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பூனைகளை அமர்த்துவது. சூழ்நிலை அனுமதிக்குமானால், அடுக்ககத்துக்குள்ளேயேகூட பூனைகளை வைத்துக்கொள்ளுங்கள்.’’
‘’ அது சரி, ஆனால், நார்வே எலி பூனைகளைக் கூடத் தாக்குவதாகச் சொல்கிறார்களே.’’
‘’  பூனைகள், அவற்றின் பயன்களை முற்றிலும் இழந்துவிடவில்லை. ‘’
நாங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் தீர்மானமான முடிவுடனும் எங்கள் வீடுகளுக்குத் திரும்பினோம். சீக்கிரத்திலேயே, எலிகள்  எங்கள் மனங்களில் இதர கவலைகளைப் பின்தள்ளிக்கொண்டு முன்வந்து ஆக்கிரமித்துக் கொண்டன. எங்கள் கனவுகளில் அவை அடிக்கடி வரத்தொடங்கின. எங்கள் உரையாடல்களில் அதிக நேரத்தை அவை எடுத்துக்கொண்டு. எங்கள் வாழ்க்கையின் முக்கியப் பிரச்சினையாக அவையே பெரும் உருவெடுத்தன. எதிரியின் வருகையை எதிர்நோக்கியிருந்த நாங்கள், ஏற்கெனவே வாக்களித்திருந்தபடி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினோம். எங்களில் சிலர், ரொம்பநாள் ஒன்றும் ஆகாது என்றபோது, வேறுசிலர் `எலி ஒன்று பாய்ந்தோடுவது, ஒருநாள் நம் கண்ணில் படும். அதுவே கெட்ட காலத்துக்கான உடனடி அறிகுறியாக இருக்கப்போகிறது.` என்றனர்.
எலிகளின் பெருக்கத்திற்குப் பல்வகை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. கால்வாய் நகரக் குடியிருப்புகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட பின் அவை காலியாக விடப்பட்டதே காரணமென ஒரு அபிப்பிராயம். பெரிய பெரிய அணைகளின் எதிர்மறை விளைவுகளே காரணமென மற்றொரு அபிப்பிராயம், வேறுசிலர் அரசு நிர்வாக நடைமுறையைக் குறைகூறினர். பலரும் கடவுளின் வழிகாட்டுதலை ஏற்க மறுக்கும் இறைப்பணியாளர்கள் மீதான கடவுளின் கோபத்தை இதில் கண்டனர். அறிவார்ந்த முன்தயாரிப்புகளைச் செய்து முடிப்பதில், அவற்றில் ஒன்றைக்கூடப் புறந்தள்ளி, விட்டுவிடாமல் நாங்கள் மிகுந்த முயற்சி மேற்கொண்டோம். மதிப்புக்குரிய திருவாளர் ஏ.எம். வீட்டில் நடந்த அடுத்த கூட்டத்தில், (கடவுள் அவருக்கு நீண்ட ஆயுள் அளித்துக் காப்பாராக.) அவர், ‘’ நீங்கள் மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.  நமது கட்டிட முன்வாயிலில் பூனைகள் மொய்த்து நிற்பதைக் காணும்போது எனக்குப் பெருமிதமாக இருக்கிறது. பூனைகளின் தீனிக்காகும் செலவு குறித்து முணுமுணுக்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், நமது பாதுகாப்பு மற்றும் கட்டிடக் காவல் குறித்து நினைக்கும்போது அது முக்கியத்துவமற்றதாகி விடுகிறது.’’ மிகுந்த திருப்தியும் பெருமையுமாக எங்கள் முகங்களைக் கூராய்ந்த அவர், ‘’பொறிகள் குறித்து என்ன செய்தி?’’ என வினவினார்.
எங்களில் ஒருவர் (மதிக்கத்தக்க கல்வியாளர்), ‘’ எலும்பும் தோலுமான மாதிரியில் ஒன்று எங்கள் வீட்டுப் பொறியில் மாட்டியது.  அது நமது உள்ளூர் எலிகளில் ஒன்று தான்.’’ எனப் பதிலளித்தார்.
அது எந்த வகை எலியாக இருந்தாலும், அது நமக்குத் தொல்லைதான். எதுவானாலும், எதிரி நம் முன் வாசலிலேயே நிற்கும்போது, உங்களின் அதிகபட்சப் பாதுகாப்புக்காக நான் இதை உங்களுக்கு அவசியம் சொல்லித்தானாக வேண்டும். மக்காச் சோள மணிகளோடு நஞ்சு கலந்து அரைத்த புதுவகை மருந்து, தேவையான அளவுக்கு நமக்குத் தருவார்கள். நடமாட்டம் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ள சமையலறை போன்ற முக்கியமான இடங்களில்  குழந்தைகள், கோழிகள், செல்லப் பிராணிகளுக்கு எட்டாமல் மிக்க கவனத்தோடு வைக்க வேண்டும்.’’
அந்த மனிதர் சொன்னதுபோலவே எல்லாம் நிகழ்ந்தது. இந்தக் கஷ்டத்தில்  நாம் தனித்துவிடப்படவில்லையென எங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டோம். எங்கள்மீது அக்கறையுள்ள அண்டைவீட்டுக்காரரும் எங்கள் மதிப்புக்குரியவருமான ஆளுநர் மீது எங்களுக்கு நன்றியுணர்வு பெருக்கெடுத்தது. எங்கள் அன்றாடக் கவலைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, நாங்கள் இந்தக் காரியங்களில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியிருந்தது. தவிர்க்கமுடியாத சில தவறுகளும் ஏற்படத்தான் செய்தன. ஒரு வீட்டில் பூனை ஒன்று இறந்துபோனது; மற்றொரு வீட்டில் சில கோழிகள் இறந்தன; இருந்தாலும் மனித உயிர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. நாட்கள் செல்லச் செல்ல மன அழுத்தம் அதிகமாகி மேலும் மேலும் பரபரப்பும் விழிப்புணர்வும் கொண்டோம். எந்த நிமிடம் என்ன நடக்குமோ என்ற திகில் எப்போதும் எங்கள் தலைமீது தொங்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தோம். ஒரு பேரழிவினை எதிர்பார்த்துத் தினமும் காத்திருப்பதைவிட, அது நிகழ்ந்து தொலைத்தாலே பரவாயில்லை போலத் தெரிகிறதென நாங்கள் பேசிக்கொண்டோம்.
பின்னர், ஒருநாள், பக்கத்துவீட்டுக்காரர் ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் சந்தித்தபோது, அவர், ‘’ எலிகள் ஒரு கிராமம் முழுவதையுமே கொன்று தீர்த்துவிட்டதாக நம்பத்தக்க தகவல் ஒன்றினைக் கேள்விப்பட்டேன்.’’ என்றார்.
‘’ பத்திரிக்கைகளில் அந்தமாதிரி ஒரு இம்மிகூட வரவில்லையே!’’
அவர் நெருப்புப் பார்வை ஒன்றை என்மீது வெறுப்பாக வீசிவிட்டு, எதுவுமே பேசாமல் நின்றார். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கும்பல் கும்பலாக எலிகள் பேரலைகளாகப் பொங்கிப்பொங்கி பூமி முழுவதையும் மூழ்கடிப்பதாகவும் அகதிகள் கூட்டங்கூட்டமாகப் பாலைவனம் முழுவதும் திக்குத் தெரியாமல் திரிந்து தவிப்பதாகவும் என் கண்முன் தோன்றியது. மாபேர் கடவுளே, அப்படி ஒரு நிலை வந்துவிடுமா? ஆனால், அப்படி நிகழ முடியாததாக ஏதாவது  இருக்கிறதா? ஏற்கெனவே கடவுள் புனித குரானில் அறிவித்தபடி பெருவெள்ளத்தையும் பறவைகள் கூட்டத்தையும் அனுப்பவில்லையா, என்ன? அன்றாட அலுவல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மக்கள், அவர்களது உடைமைகள் எல்லாவற்றையும் தூக்கிப் போராட்டப் பெருந்தீயில் எறிந்துவிடுவார்களா? இதில் மக்கள் வெற்றியடைவார்களா, அல்லது இதுவே முடிவின் தொடக்கமா?
மூன்றாவது கூட்டத்தில் திரு. ஏ. எம். மிகமிக மகிழ்ச்சியானவராகத் தோற்றமளித்தார். ‘’பாராட்டுக்கள், பெருந்தகை மக்களே,’’ எனத் தொடங்கியவர், ‘’நம்மால் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குத் துடிப்பாக இருக்கிறோம். இழப்புகள் மிகமிகக் குறைவு. மீண்டும் அவை தொடராதென நம்புவோம். எலிகளோடு போரிடும் விஷயங்களில் நிபுணர்களாகிவிட்டோம். இதுபோல ஒருவேளை, எதிர்காலத்தில் வேறிடங்களில் நிகழ்ந்தால், நம்மைத்தான் அழைப்பார்கள். மேதகு ஆளுநர் அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.’’ எனப் பேருரை நிகழ்த்தி முடித்தார்.
எங்களில் ஒருவர் முணுமுணுத்து, முறையிடத் தொடங்கினார். ‘’ உண்மை என்னவென்றால், நமது நரம்புகள்…..’’
ஆனால்,   திரு. ஏ.எம். அவர் மீது உடனடியாகப் பாய்ந்து அவர் வாயை அடைத்தார். ‘’ நமது நரம்புகள்? எதையும் யோசிக்காத ஒரு வார்த்தையைக் கொண்டு நமது வெற்றியைச் சிதைக்கப் பார்க்கிறீர்களா?’’
‘’ எலிகளின் தாக்குதல் எப்போது தொடங்கும்?’’
‘’இக்கேள்விக்குத்  திட்டவட்டமான பதில் ஒன்றை யாராலும் சொல்லிவிட முடியாது. அதிலும் யுத்தத்திற்கு, நாம் தயாராகிவிட்ட நிலையில் இந்தக் கேள்வி எந்த முக்கியத்துவமும் இல்லாததாகிவிடுகிறது.’’ பின்னர், சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு, அவர் தொடர்ந்து பேசினார். ‘’ கடைசியாகத் தற்போது வந்திருக்கிற அறிவுரைகள், ஜன்னல், கதவுகள், சுவர்கள் அல்லது  வேறெங்காயினுமுள்ள காற்று புகும் ஓட்டை, மற்றும் இடைவெளிகள் தொடர்பாக மிகவும் முக்கியமானவை. ஜன்னல்கள், கதவுகள் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு, எந்தக் கதவானாலும் அதன் அடிப்பகுதியைத் தீரக் கவனியுங்கள். ஏதாவது இடைவெளி, ஒரு துரும்பு அல்லது வைக்கோல் செல்வதாக இருந்தால்கூட மரப்பலகைகள் கொண்டு முழுவதுமாக அடைத்து மூடிவிடுங்கள். காலையில் வீடு சுத்தம் செய்யும்போது, ஒரு அறையின் ஜன்னல்களை மட்டும் திறந்து, ஒருவர் வீட்டைப் பெருக்கும்போது, இன்னொருவர் கையில் கம்புடன் தயாராக நிற்கவேண்டும். பின்னர், அந்த அறையின் ஜன்னல்களை அடைத்துவிட்டு, அடுத்த அறைக்குச் சென்று, அதே நடைமுறையை பின்பற்றவேண்டும். வீடு பெருக்கி முடித்ததும், பகலோ, இரவோ, ஆடை, கோடை அல்லது, அது எந்தமாதிரியான கால, நேரமென்றாலும், அடுக்ககம் இறுக்கி மூடப்பட்ட ஒரு பெட்டியைப் போலக் காட்சியளிக்க வேண்டும்.
சோர்வுற்ற அமைதியோடு, நாங்கள் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம்.
‘’ இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாது,’’ என்றது ஒரு குரல்.
‘’ இல்லை. அதைச் செயல்படுத்துவதில் நீங்கள் துளியும் தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்….’’
‘’ சிறைக் கொட்டடியில் கூட இப்படி ….’’
‘’ நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அதாவது அவசரநிலை மாதிரியான காலத்தில் இருக்கிறோம். அழிவு மட்டுமல்ல, பயங்கரக் கொள்ளை நோய்களும் நம்மைப் பயமுறுத்துகின்றன. கருணை மிக்க கடவுள் நம்மைக் காப்பாற்றுவாராக. நாம் அதை உணர்ந்துகொள்ளவேண்டும்.’’
எதைச் செய்யச் சொன்னார்களோ, அதைத் துளியும் பிசகாமல் நாங்கள் பணிவுடன் நிறைவேற்றிக்கொண்டேயிருந்தோம். கணமும் எதிர்பார்த்திருப்பு மற்றும் போர்க்கால விழிப்புடன் அதன் சலிப்பும் மன அழுத்தமும் சேர்ந்த புதைகுழிக்குள் நாங்கள் ஆழமாக மூழ்க, மூழ்க, நரம்புகளின் முறுக்கம் அதிகமாகி, அது வீட்டு ஆண்கள், மனைவிகள், குழந்தைகளோடான வாக்குவாதங்களாக மாற்றம்பெற்றுத் தீர்க்க முடியாத அளவுக்குப் பெரும் சண்டை சச்சரவுகளாகின. நாங்கள் செய்திகளைத் தொடர்ந்து கேட்டுக்கேட்டுப் பின்பற்றினோம். நார்வே எலி, அதன் பெரிய உடலும் நீண்ட மீசை முடிகளும்
எச்சரிக்கை மிக்கப் பளபளக்கும் பார்வையுடனும் எங்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் தீமையின் நட்சத்திரமாக உலா வந்ததோடு எங்கள் அன்றாடப் பேச்சின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டது.
கடைசி கூட்டத்தில் திரு.ஏ.எம்., ‘’ நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது.  -- அதிகமாக அபாயத்தை எதிர்நோக்கும் வாய்ப்புள்ள கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் இருப்பிடங்களை ஆய்வு செய்யும் பணி,  ஒரு நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் கூடுதல் வரி  ஏதும் இல்லாமலே.’’ என்றார்.
அது உண்மையிலேயே நல்ல செய்திதான். அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இன்னலில் ஒருசிறிதாவது குறையுமேயென, நாங்கள் அதை உலகம் முழுவதற்குமான பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். பின்னர் ஒருநாள் ஒரு அரசு அதிகாரி கட்டிடத்தின் முன் வாயில், படிக்கட்டுகள், மேற்கூரை, வாகனம் நிறுத்துமிடங்கள் அனைத்தையும் தணிக்கையிட்டு, ஆய்வு மேற்கொண்டதாகவும், பூனைகளின் பெரும்படை இங்கும் அங்குமாக உலவிக்கொண்டிருந்ததைக் கண்டு, அவர் மிகவும் திருப்தியுற்றுச் சாதகமாக உரைத்ததாகவும் எமது பாதுகாவலர் எங்களுக்குத் தகவலளித்தார். அந்த அரசு அலுவலர், பாதுகாவலரை மேலதிக விழிப்புடனிருக்குமாறும், எலி ஏதாவது தலைகாட்டினால், அது நார்வே எலியோ அல்லது எகிப்திய எலியோ எதுவாக இருந்தாலும் உடனடியாக அவருக்குத் தகவல் சொல்லுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
கூட்டம் நிகழ்ந்த ஒரு வாரத்திற்குப் பின்னர், எங்கள் அடுக்ககத்தின் வாயில் அழைப்புமணி ஒலித்தது. அரசு அலுவலர் வந்துகொண்டிருப்பதாகவும் ஆய்வு மேற்கொள்ளும் முன் எங்கள் அனுமதியைக் கோர விரும்புவதாகவும், பாதுகாவலர் எங்களுக்கு நற்செய்தியாக உரைத்தார். அது கொஞ்சம் வசதியற்ற நேரமாக, அப்போதுதான் எனது மனைவி மதிய உணவைத் தயாரித்து முடித்ததாக இருந்தாலும், உடனடியாக, நான் அவரை வரவேற்கத் தவறவில்லை. திடீரெனப் பார்க்கிறேன், ஒரு நடுத்தர வயதுடைய, திடமான உடற்கட்டும், அடர்த்தியான மீசையும் சதுரமுகமும் குட்டையான சப்பை மூக்கும் பளபளக்கும் பார்வையுமாக ஒரு பூனையை நினைவூட்டுகிற ஒருவரின் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். எனக்குள் தோன்றி, அகத்தில் ஒரு சிரிப்பாக மாறிவிட்ட புன்னகையை மறைத்துக்கொண்டே நான் அவரை வணக்கம் கூறி, வரவேற்றேன். பணிக்குத் தேவையான மனிதர்களைத் தேர்வுசெய்வதில் அவர்கள் உண்மையிலேயே எவ்வளவு திறமையுடன் செயல்பட்டிருக்கிறார்களென எனக்குள்ளேயே கூறி, வியந்துகொண்டே அவருக்கு வழிகாட்டி முன்னால் நடந்தேன். அவர் பொறிகள், நஞ்சு வைத்த இடங்கள், ஜன்னல் மற்றும் கதவுகளைத் தணிக்கையிடத் தொடங்கி, ஏற்புடன் தலையசைத்தார். எனினும், சிறுசிறுதுளைகளுடனான கம்பி வலையிட்டிருந்த சமையலறைச் சிறு ஜன்னல் ஒன்றைக் கண்டதும் அவர், உறுதியாகச் சொன்னார் ‘’ ஜன்னலை மூடுங்கள்.’’
என் மனைவி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாயைத் திறந்தாளோ இல்லையோ, அந்த அலுவலர், அவளது முகத்திலறைந்தாற்போல் கூறினார். ’’ நார்வே எலி வலைக்கம்பிகளையும் கடித்துக் குதறிவிடும்.’’
அவரது ஆணை செயல்படுத்தப்பட்டதில் நிறைவுகண்ட அவர், சாப்பாட்டு மணத்தை உள்ளிழுத்து, மிகுந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார். வேறுவழியில்லாமல், நான் அவரை உணவுக்கு அழைக்கவேண்டியதாயிற்று. ‘’ அற்பர்கள் மட்டுமே பெருந்தன்மையை மறுக்கிறார்கள்.’’  என மிகச் சாதாரணமாக பதிலளித்தார், அவர்.
உடனேயே, நாங்கள் ஏற்கெனவே உணவருந்திவிட்டதாகக் கூறி, அவருக்கென தனியாக உணவு மேஜையைத் தயார் செய்தோம். அவருடைய சொந்த வீட்டில் அமர்வதுபோல் அமர்ந்து எவ்விதக் குறைந்தபட்சக் கட்டுப்பாடோ, வெட்கமோ, தன்னடக்கமோ, இன்றி – அசாதரணமான வேகத்துடன் உணவை அள்ளி, அள்ளி விழுங்கத் தொடங்கினார். இன்முகப் பண்புடன்,  நாங்கள் அவரை அப்படியே தொடருமாறு விட்டுவிட்டோம். எனினும், சிறிது நேரம் சென்றதும், ஒருவேளை அவருக்கு மேலும் ஏதாவது தேவைப்படுமோவென்ற எண்ணத்தில், எதற்கும் அவரைக் கேட்டுவிடுவதே நல்லதென எனக்குத் தோன்றியது. இன்னொரு கரண்டி உணவெடுத்து அவருக்குப் பரிமாறினேன். அப்படிப் பரிமாறும்போதுதான், அவரது தோற்றத்தில் நாடக நிகழ்வு போல் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கவனித்தேன். அவரது முகம் ஒரு பூனையை நினைவூட்டுவதாக இல்லாமல் ஒரு எலியை, உண்மையைச் சொல்வதென்றால் ஒரு நார்வே எலியைப் போலவே இருந்தது. என் தலை ஒரு பம்பரமாகச் சுற்ற, நான் என் மனைவியிடம் திரும்பினேன். நான், என்ன கவனித்தேனென்பதை அவளுக்குச் சொல்லாமலேயே அவரிடம் கொஞ்சம் இன்முகம் காட்டி உபசாரமாகச் சில நல்வார்த்தைகள் கூறுமாறு வேண்டினேன். அவள் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு அங்கு சென்றவள், முகம் வெளுத்து, பெருந்திகைப்புடன் என்னை வெறித்து நோக்கியவாறு, விரிந்த கண்களுடன் திரும்பினாள். ‘’ சாப்பிடும்போது, அவர் என்ன மாதிரி இருக்கிறாரென்று  பார்த்தீர்களா? ‘’ எனக் கேட்டு, அவள் மூச்சிரைத்தாள்.
நான் ஆமெனத் தலையாட்ட, அவள், ‘’ நம்பவே முடியவில்லை, மிகப் பெரிய ஆச்சரியம்!’’ எனக் கிசுகிசுத்தாள்.
அப்படித்தானென்ற எனது ஒப்புதலைத் தெரிவிக்க, பம்பரமாகச் சுற்றும் என் தலையை ஒரு ஆட்டு, ஆட்டிக் காண்பித்தேன். எங்களது பெருவியப்பில் நேரம் போனதை மறந்து தொலைத்துவிட்டோம். அறைவழியிலிருந்து ‘’ உங்கள் வீடு எப்போதும் தழைத்தோங்கட்டும்!’’ என்ற மகிழ்ச்சியான குரலைக் கேட்டபோதுதான் நிதானத்துக்கு வந்துசேர்ந்தோம்.
நாங்கள் தாவிப் பாய்ந்தோம், என்றாலும் அவர் எங்களுக்கு முன்பாகவே முன் வாசலை அடைந்ததோடு, வெளியேயும் போய்விட்டார். நாங்கள் கண்டதெல்லாம் அப்படியும் இப்படியுமாக அசையும் அவரது பின்புறத்தைத் தான். பின்னர் சட்டென்று முகத்தைத் திருப்பிப் போய்வருகிறேன், வணக்கமென்ற போது தோன்றி மறைந்த ஒரு நார்வே இளிப்பு. மூடிய கதவின் பின்னால் நாங்கள் பெருந்திகைப்பில், மயங்கிவிழாத குறையாக ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டோம்.                
                                      


மலைகள் இணைய இதழ், மே 17, 2014, இதழ் 50 இல் வெளியானது.

No comments:

Post a Comment