Saturday, 9 January 2016

இங்கிலாந்து சிறுகதை- உடந்தைமை ( COMPLICITY)

 உடந்தைமை ( COMPLICITY) 

ஆங்கிலம் : ஜூலியன் பர்ன்ஸ் JULIAN BARNES, (England) 

தமிழில் : ச. ஆறுமுகம்

Image result for julian barnes


(ஜூலியன் பர்ன்ஸ் இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரத்தில் 19. 01. 1946ல் பிறந்தவர். , ஆக்ஸ்போர்டு, மகதலேன் கல்லூரியில் நவீன மொழிகளில் ஹானர்ஸ் பட்டம் பெற்றவர். கல்லூரிப் படிப்புக்குப் பின், ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதிப் பதிப்பில் மூன்று ஆண்டுகள் அகராதித் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார். பல இலக்கியப் பரிசுகளைப் பெற்ற இவர், The sense of Ending நாவலுக்காக 2011ல் மான் புக்கர் பரிசினை வென்றார். இந்தப் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நீதிபதிகள் குழுவின் தலைவர் இந்நூல் ‘’ அழகாக எழுதப்பட்ட நூல்’’ என்றும் ‘’ ‘’ 21ஆம் நூற்றாண்டு மனிதர்களோடு பேசுவதாகவும்’’ குறிப்பிட்டார்.
இவர் எண்ணற்ற நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் படைத்தவர். பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார். வரலாறு, நடப்பியல் உண்மை, யதார்த்தம் மற்றும் காதல் பற்றிப் பேசுகின்ற இவரது நூல்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
ஜூலியன் பர்ன்ஸ், Freedom from Torture , Dignity in Dying என்னும் இரு மனித உரிமை அமைப்புகளுக்குப் புரவலராகவும் இருக்கிறார். இவர் இப்போது லண்டன் நகரத்தில் வசிக்கிறார்.



சிறுவயதில் எனக்கு விக்கலெடுக்கும்போது, அம்மா பின்வாசற் கதவின் சாவியைக் கொண்டுவந்து, என் சட்டையின் கழுத்துப் பட்டையைப் பின்புறமாக இழுத்து, அந்தக் குளிர்ந்த உலோகம் என் முதுகில் படுமாறு நழுவவிடுவாள். அந்தக் காலத்தில் , நான் அதை ஒரு சாதாரண சிகிச்சை – அம்மா சிகிச்சை முறை – என எடுத்துக் கொண்டேன். பிற்காலத்தில் தான் அது, வெறும் கவனந்திருப்புதலிலேயே அந்தப் பலனளிக்கிறதா அல்லது கூடுதலாக வேறு ஏதேனும் மருத்துவ விளக்கம் இருக்கிறதா, ஒரு உணர்வு நேரடியாக மற்றொன்றைப் பாதிக்க முடியுமா என வியந்திருக்கிறேன்.
எனக்கு இருபது வயதிருக்கும்போது, எனது ஆவலையும் அன்புத்தளையையும் குறித்து எந்தக் கருத்தும் இல்லாத, திருமணமான ஒரு பெண்மீது நான் கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலால், எனக்கு இப்போது பெயர் மறந்துபோன தோல்வியாதி ஒன்று பரிசாகக் கிடைத்தது. மணிக்கட்டு முதல் கணுக்கால் வரையிலான என் உடம்பு மிகுசிவப்பாக மாறிப்போனது. முதலில் காலமைன் லோஷன் என்ற துத்தநாகக் கழுவுநீர்மத்துக்கும் அடங்காத ஒரு அரிப்பு இருந்துகொண்டே இருந்தது, பின் மெல்லச் செதில் செதில்களாகிப் பின்னர் முழுதுமாக உரிந்து, உருமாற்றங்கொள்ளும் ஊர்வன வகையைப்போல், நான் முழுவதுமாகத் தோல் உதிர்த்திருந்தேன். துளித் துளியான எனது செதில்கள் என் உள்ளாடைகள், காற்சட்டை, மேற்சட்டை, படுக்கை விரிப்புகள், கம்பள விரிப்புகளென எங்கும் உதிர்ந்து கிடந்தன. எனது முகம், முன்னங்கைகள், கவட்டுப் பகுதி மற்றும் பாதம் மட்டுமே அரிப்பில் எரிந்து தோலுரியாமலிருந்தன. அது ஏன் அப்படியானதென்று எனது மருத்துவரைக் கேட்கவோ அவரிடம் நான் காதல் கொண்டிருந்த பெண்ணைப் பற்றி எதுவும் கூறவோ இல்லை.
என் திருமணம் ரத்தானபோது, எனது மருத்துவ நண்பன் பென், என் உள்ளங்கைகளை விரித்துக் காட்டுமாறு கேட்டான். நான் அதற்கு, நவீன மருத்துவ முறை, கைரேகை சாஸ்திரத்துக்கும் அதைப்போன்ற அட்டைகள், ஒட்டுண்ணிகள் சாஸ்திரத்துக்கும் திரும்புகிறதா, என்ன! அப்படியானால், காந்தசக்தியும் தாதுநீர் கொள்கையும் எங்கேயோ காணாமற் போயிருக்குமே! எனத் துளாவினேன். அதற்குப் பதிலாக அவன், என் உள்ளங்கையையும், விரல் நுனிகளையும் பார்த்து, நான் அளவுக்கதிகம் குடிக்கிறேனா என அவனால் சொல்லிவிடமுடியும் என்றான்.
பின்னர், என்னை ஏமாற்றிக் குப்புறத் தள்ளுகிறானோ என நினைத்துக் கொண்டே, பகடி செய்கிறாயா அல்லது யூகத்தில் சொல்கிறாயா எனக் கேட்டேன். அவன் எனது உள்ளங்கைகளை முழுவதுமாகத் திருப்பி, உற்றுப் பார்த்துவிட்டு, ஆமோதிக்கும் பாவனையில் தலையசைத்து, என்னை அதிகமாக வெறுத்து நோக்க வாய்ப்பில்லாத, பிணைப்பில்லாத பெண் மருத்துவர்களில், எனக்காகத் தேடுவதாகச் சொன்னான்.
பென் கொடுத்த விருந்து ஒன்றில்தான் அவளை முதன் முதலாகச் சந்தித்தேன்; அம்மாவையும் கூடவே அழைத்து வந்திருந்தாள். விருந்துகளில் அம்மா, மகள்களை ஒருசேரக் கவனித்திருக்கிறீர்களா? அவர்களில் யார், யாரை அதிக அக்கறையாகக் கவனித்துக்கொள்கிறார்களெனக் கண்டுகொள்ள முயற்சித்திருக்கிறீர்களா? மகள், அம்மாவை சிறியதொரு சிற்றுலா மகிழ்வாக விருந்துக்கு அழைத்து வருகிறாளா? அல்லது, மகள் எந்த மாதிரியான ஆண்களைக் கவர்கிறாளெனக் கண்காணிக்க அம்மா வருகிறாளா? அல்லது இரண்டும் ஒரேநேரத்திலேயேவா? அவர்கள் நல்ல தோழிகளாகவே நடந்து கொண்டாலும் ஒருவருக்கொருவரான உறவில் சிறிது அதிகப்படியான கொஞ்சிக்கொள்ளுதலும் இருக்கும். மறுப்புகள் வெளிக்காட்டப்படுவதில்லை; அல்லது, சிலவேளைகளில் கண்களை உருட்டி விழித்து, நாடக பாவனையில் உதட்டைப் பிதுக்கி, ‘’அவள் எப்போதுமே இப்படித்தான், என்னைக் கண்டுகொள்வதே இல்லை.’’ என்ற முணுமுணுப்பில் மிகைப்படுத்தப்படுகின்றன.
நாங்கள் மூன்று பேரும் அங்கே, நான் சுத்தமாக மறந்தேபோன ஒரு நான்காவது மனிதருடன் ஒரு நெருக்கமான வட்டமாக நின்று கொண்டிருந்தோம். அவள் எனக்கு நேர் எதிராகவும் அவளது அம்மா எனது இடதுபக்கமாகவும் நின்றனர். நான் நானாக, எனது இயல்பிலேயே இருக்க, அந்த இயல்பு எப்படிப்பட்டதாயினும், அது இனிமையாக, திருப்திகரமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏற்கத்தக்க ஒன்றாக அமைத்துக்கொள்ள முயற்சித்தேன். திருப்திகரமென்றால், தோழமை கொடுப்பது என்றில்லை, அவளை நேரடியாகத் திருப்திப் படுத்த முயற்சிப்பதற்குப் போதிய துணிச்சல் எனக்கு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அவளது அம்மாவைத் திருப்திப்படுத்துவதாகவாவது இருப்பது. நாங்கள் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோமென எனக்கு நினைவில்லை, ஆனால், நான் சரியாக இருந்ததாகத்தான் தோன்றியது. அது ஒருவேளை அந்த நான்காவது நபர் உதவியதாலிருக்கலாம். எனது நினைவிலிருப்பதெல்லாம் இதுதான் : அவளது வலது கையைப் பக்கவாட்டில் தொங்கவிட்டிருந்தாள். அவளது திசையில் நான் பொதுவாகப் பார்ப்பதைக் கவனித்துவிட்ட அவள் வேறு யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி புகைக்கும் குறிப்பிலான சமிக்ஞை – அது உங்களுக்குத் தெரியுமா, முதலிரண்டு விரல்களையும் இலேசாக விரித்துநீட்டி, பெருவிரல் மற்றும் இதர விரல்களைப் பார்வையில் படாதவாறு மடித்துக்கொள்வது – காட்டினாள். ஒரு மருத்துவர் புகைப்பதென்பது நல்ல அடையாளம் தானே என நான் நினைத்தேன். எங்கள் பேச்சு தொடர்ந்தபோது, நான் எனது மார்ல்போரோ லைட்ஸ் பெட்டியை வேறு யாரும் கவனிக்காதவாறு, இடுப்புக்குக் கீழாகவே வெளியே எடுத்து, ஒரு சிகரெட்டை மட்டும் உருவிப் பெட்டியை மீண்டும் காற்சட்டைப் பைக்குள்ளேயே திணித்துவிட்டு, சிகரெட்டின் வடிகட்டு முனையை விரல்களுக்கிடையே பிடித்துக்கொண்டு, அவளது அம்மாவின் முதுகுக்குப் பின்புறமாகவே, யார் கண்ணிலும் படாமல் நீட்ட, அது என்கையிலிருந்தும் உருவப்படுவதை உணர்ந்தேன். மிகச்சிறியதான ஒரு இடைவெளியை, நேரங்கடத்தலை அவளிடம் கவனித்த நான், மீண்டும் எனது காற்சட்டைப் பைக்குள் சென்று, புத்தக வடிவ தீக்குச்சி அட்டையை எடுத்து உரசும் முனையைப் பிடித்தவாறே நீட்ட, அதுவும் என் விரல்களிலிருந்தும் உருவப்பட்டு, பின்னர், அதைப் பொருத்திப் புகையை வெளியாக்கியபின், தீக்குச்சி அட்டையை மூடி, அம்மாவின் பின்புறமாகவே என்னிடம் நீட்டினாள். நான் எந்தப்பகுதியை அவளுக்கு நீட்டினேனோ அதே பகுதியை, மிகமிக மென்மையாகப் பிடித்துப் பெற்றுக்கொண்டேன்.
நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோமென்பது, அவளுடைய அம்மாவுக்கு நன்கு தெரிந்திருந்ததென்பதையும் நான் இங்கே சொல்லித்தானாக வேண்டும். ஆனால், அம்மா எதையும் சொல்லாமல், பெருமூச்சுடன் ஒரு இணக்கமற்ற எதிர்ப் பார்வையை அல்லது நான் ஒரு போதைப்பொருள் சிறுவணிகனாக நடந்துகொண்டதைக் கண்டிக்கும் பார்வையைக் கொண்டிருந்தாள். அவளுடைய இந்தச் செய்கைக்காக, அவள் எனக்கும் அவளது மகளுக்குமிடையிலான துணைபோகும் உடந்தைமையைக் கண்டுகொண்டு, அங்கீகரித்ததான நினைப்பில், அவளை எனக்கு உடனேயே பிடித்துப் போயிற்று. அவள் மிகச் சூட்சுமமான காரணங்களுக்காகத்தான், சாமர்த்தியமாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால், நான் அவளது அந்த ஏற்பு பற்றியெல்லாம் அக்கறைப்படவில்லை, அவ்வளவுக்கு ஏன், அது குறித்துச் சிறிதளவுகூட நினைத்திருக்கவும் இல்லை. ஆனால், உங்களுக்கு நான் சொல்ல முயற்சிப்பது, அதைப்பற்றியல்ல. அவளது அம்மாவல்ல, முக்கியம். ஒருவரின் கைவிரல்களிலிருந்து இன்னொருவரின் கைவிரல்களுக்கு, ஏதோ ஒரு பொருள் நழுவிச்சென்ற, அந்த மூன்று நொடிகள்தாம் முக்கியமானதாகிறது.
அதுவே, அந்த மாலையில் மட்டுமல்ல, தொடர்ந்த சில வாரங்களுக்கும், அவளோடு என்னை, மிக நெருக்கமாகப் பிணைத்தது.
நீங்கள் ஒரு குழுவாகக் கண்களை மூடிக்கொண்டு அல்லது கட்டப்பட்ட கண்களோடு வட்டமாக அமர்ந்து, உங்கள் கையில் தரப்படும் பொருளை வெறுமனே தொடுவதன் மூலம் மட்டுமே என்னவென்று யூகித்துச் சொல்ல வேண்டும். பின்னர் நீங்கள் அதை அடுத்தவரிடம் அவர் யூகித்துச் சொல்லுமாறு தரவேண்டும். அல்லது, எல்லோரும் அவரவர் முறைக்குத் தொட்டுப் பார்த்து, மனத்தில் யூகித்ததை ஒரே நேரத்தில் அறிவிக்கும் விளையாட்டை விளையாடியிருக்கிறீர்களா?
அந்த விளையாட்டு விளையாடும்போது, ஒருமுறை மொசெரல்லா பாலாடைக்கட்டி சுற்றுக்கு வந்ததாகவும், மூன்று பேர்கள் அதனை மார்பகச் செய்மாதிரி என்றார்களென பென் கூறுகிறான். அவர்களெல்லோரும் மருத்துவ மாணவர்களென்பதால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். ஆனால், கண்கள் மூடப்பட்ட நிலையில், அது உங்களை அதிக ஆபத்தான நிலைக்காளாக்குகிறது, அல்லது, உங்கள் கற்பனையை `கதே` காலத்துக்குக் கொண்டு போய்விடும். அதிலும் தரப்படும் பொருள் மென்மையாகவும் வழுவழுப்பாக, பிசுபிசுப்புத் தன்மையோடுமிருந்தால், எங்கேயோ கொண்டுபோய்விடும். நான் அந்த விளையாட்டை விளையாடிய எல்லா நேர்வுகளிலும், மிகவும் வெற்றிகரமான புதிர்ப்பொருள், ஒருவரை நிச்சயமாக வீழ்த்திவிடக்கூடிய ஒன்று என்றால், அது தோலுரித்த லிச்சிப்பழம் தான்.
சில வருடங்களுக்கு முன்னால் – அது பத்தா, பதினைந்தா? –வெற்றுச் செங்கல்கட்டுச் சுவர்ப் பின்னணித்திரையாக, முரட்டுத்தனமாக நடிக்கப்பட்ட, ‘’கிங் லியர்’’ நாடக நிகழ்வு ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அதை யார் இயக்கியிருந்தார்கள், தலைமைப் பாத்திரமாக யார் நடித்திருந்தார்கள் என்பதெல்லாம் எனக்கு இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், கிளவ்ஸ்டர் குருடாக்கப்படும் காட்சி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது வழக்கமாக ஒரு நாற்காலியில் பின்பக்கமாகச் சாய்த்து அரசு காவலர்கள் பிடித்துக்கொள்ள நிகழும். கார்ன்வால், அவரது பணியாட்களிடம், ‘’ அடேய், நாற்காலியைப் பிடியுங்கள்,’’ என உத்தரவிட்டுவிட்டுப் பின்னர், கிளவ்ஸ்டரிடம், ‘’உனது இந்தக் கண்களின் மீது என் கால்களை வைத்து நசுக்குவேன்.’’ என்கிறார். ஒரு கண் முடிக்கப்பட்டதும், ரீகன் மிகவும் தன்மையாக, ‘’ அது இதைக் கேலிபேசுமே; அதையும்தான் எடுக்க வேண்டும்.’’ என மொழிகிறான். பின்னர், ஒரு நிமிடம் கழிந்ததும் தான் அந்தப் புகழ்பெற்ற, ‘’ அந்தக் கேடுகெட்ட முழியைப் பிதுக்கியெடு!’’ அதோடு, கிளவ்ஸ்டர் நேராக நிமிர்த்தப்படுவார். அவரது கண் பிடுங்கப்பட்ட காயக்குழிகளிலிருந்து வழியும் இரத்தம், முகம் தாண்டி மேடையில் சொட்டும்.
நான் பார்த்த அந்த நாடகத்தில், குருடாக்குதல், மேடையின் பின்னால் நிகழ்த்தப்பட்டது. அந்தச் செங்கல் மறைப்புகளில் ஒன்றின் ஊடாக, அது பிற்காலக் கண்டுபிடிப்பாக இணைக்கப்பட்டிருந்தாலும், துடிதுடித்து அடித்துக்கொள்ளும் கிளவ்ஸ்டரின் கால்களும் அவரது கதறல்களும் என் நினைவிலேயே இருக்கின்றன. அதிலும் அந்தக் காட்சி திரைக்குப் பின்னால் நிகழ்ந்ததாலேயே மிகப் பயங்கரமாக இருந்தது; நீங்கள் பார்க்க முடிகிற ஒன்றைவிட பார்க்க முடியாத ஒன்று உங்களை அதிகப் பயமுறுத்திவிடுகிறது. பின்னர், முதலாவது கண் பிடுங்கப்பட்ட பிறகு, அது மேடையில் உருளுமாறு வீசப்படுகிறது. என் நினைவில், மனக்கண்ணில், அது, மேடைப் பரப்பில் இலேசான பளபளப்போடு உருள்வதை நான் காண்கிறேன். மேற்கொண்டும் கதறல்கள்; இன்னொரு கண்ணும் திரைமறைவிலிருந்து வீசப்படுகிறது.
நீங்கள் யூகித்திருப்பீர்கள் – அவை தோலுரிக்கப்பட்ட லிச்சிப்பழங்கள் தாம். அதன் பின்னர் இப்படி நிகழ்ந்தது: நெடிது வளர்ந்த கார்ன்வால், கோரமாக, முரட்டுத்தனமாக, மேடை அதிர்ந்து குலுங்க நடந்துவந்து, லிச்சிகளைத் தேடி, அவற்றின் மீது கால் பதித்து, கிளவுஸ்டரின் கண்களை இரண்டாம் முறையாக நசுக்கினான்.
நான் தொடக்கப்பள்ளியில், விக்கலெடுக்கும் சிறுபையனாகப் படித்த காலத்திலிருந்த இன்னொரு விளையாட்டு : முற்பகல் இடைவேளையில், அஸ்ஃபால்ட் எனப்படும் கருங்காரைத் தளமிட்ட விளையாட்டு மைதானத்தில் வகைமாதிரி கார்ப் பந்தயம் நடத்துவது வழக்கம். அந்தக் கார்கள் நான்கு அங்குல நீளம் இருக்கும், உலோக வார்ப்பிலானவை; உண்மையான ரப்பர் காற்றுவட்டை பொருத்தியவை; ஏதாவது சிறு குழி போன்றவையென நினைத்து நிறுத்தவேண்டுமெனில் சக்கரங்களை உருளாமல் நிறுத்திக்கொள்ள முடியும். அந்தக் காலத்து பந்தயக் காரான மார்க்வெஸ் போல ஒளிமிகுந்த வண்ணம் தீட்டப்பட்டவை : ஒரு மிகுசிவப்பு மாசெரதி, ஒரு பச்சை வேன்வால், ஒரு நீல …. ஏதோ ஒரு பிரெஞ்சு வகை.
அந்த விளையாட்டு மிக எளிமையானது: அதிகத் தூரம் சென்ற கார் வெற்றி பெறும். வலதுகைப் பெருவிரலை காரின் நீண்ட கவிகை மூடி( பானெட்) யின் நடுப்பகுதியில் அழுத்திக்கொண்டு, விரல்களை, தளர்வான முஷ்டியாக மேலே தூக்கிப் பின் குறிப்பிட்ட அடையாளமுள்ள இடத்தில் கீழ்நோக்கிய அழுத்தத்தை முன்னோக்கிய திசைக்கு மாற்றுவதன் மூலம் காரை வெகுதூரத்துக்கு ஓடச்செய்ய முடியும். உச்சபட்ச வேகத்தில் செலுத்துவதற்கென வேறொரு நுட்பமும் இருந்தது. ஆனால், அதில் விளையாட்டு மைதானக் கருங்காரைத் தளத்துக்கு மேலாக ஒரு அங்குலத்தின் மீச்சிறுபின்ன அளவுக்கு வைத்துச் சுண்டும் உங்கள் நடுவிரல் முட்டி கருங்காரையில் உரசி, பந்தயத்துக்கு விலையாக தோலைக்கிழித்துக் காயமேற்படும் அபாயத்தைப் பெறுவதாக இருக்கும். காயம், செம்புண்ணாகிற நிலையில், நடுவிரலுக்குப் பதிலாக நான்காவது விரல் முட்டியை அபாயப் பகுதியில் வைத்து விளையாடுவீர்கள். ஆனால், அது அந்த அளவுக்கான வேகத்தைக் கொடுக்காதபோது, நீங்கள் வழக்கமான நடுவிரலைப் பயன்படுத்தத் தொடங்கி, ஏற்கெனவே செம்புண்ணாகியிருந்ததை மீண்டும் உரசிப் பெரிதாக்கிக்கொள்வீர்கள்.
எது உண்மையில் தேவையோ அது குறித்து உங்கள் பெற்றோர் உங்களை ஒருபோதும் எச்சரிப்பதில்லை, அப்படித்தானே? அல்லது, அவர்களால் உடனடித் தேவைக்குரிய சாதாரண விஷயங்கள் குறித்துத்தான் எச்சரிக்க முடியலாம். அவர்கள், உங்கள் வலது நடுவிரல் முட்டிமீது கட்டுப்போட்டு, அது மேலும் நோய்த்தொற்று கொள்வது குறித்து எச்சரிக்கிறார்கள்; பல்மருத்துவர் குறித்தும் வலியும் வேதனையும் குறைந்து, பின்னர் இல்லாமல் போவது குறித்தும் விளக்கமளிக்கிறார்கள். அவர்கள் நெடுஞ்சாலை விதிகளைக் குறைந்தபட்சம், இளம் நடைப்பயணிகளுக்கே பொருத்தமானதென்றாலும், கற்றுக்கொடுக்கிறார்கள். நானும் எனது சகோதரனும் ஒருமுறை சாலையைக் கடக்கவிருந்த நேரத்தில், எங்கள் தந்தை உறுதியான குரலில், நடைபாதை ஓரம் சிறிது நில்லுங்கள் என்ற பொருளில், “ pause on the curb.” எனக் கூறினார். மொழியைப் புரிந்துகொள்வதன் தொடக்கநிலையில், அதன் சாத்தியப்பாடுகள் குறித்த ஒருவகை மயக்கநிலை குறுக்கிடுவதான வயதிலிருந்த நாங்கள் ஒருவருக்கொருவர் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டு, ‘’ Paws on the curb! ‘’ எனக் கூவிப் பின்னர், எங்கள் உள்ளங்கைகளை நடைமேடை விளிம்பில் படுமாறு குந்தி உட்கார்ந்தோம். அது மிகவும் முட்டாள்தனமானதென எங்கள் அப்பா நினைத்தார். சந்தேகமேயில்லை, இந்த வேடிக்கை எவ்வளவு நாட்களுக்குத் தாங்குமென எங்கள் அப்பா ஏற்கெனவேயே கணக்கிடத் தொடங்கியிருந்தார்.
இயற்கை எங்களை எச்சரித்தது. எங்கள் பெற்றோர்கள் எச்சரித்தனர். விரல் முட்டி காயங்கள் குறித்தும் சாலைப் போக்குவரத்து குறித்தும் நாங்கள் புரிந்துகொண்டோம். படிக்கட்டுக் கம்பளம் தளர்வாக இருக்கிறதாவெனக் கவனிக்கக் கற்றுக்கொண்டோம்; ஏனெனில், வருடாந்திர மெருகேற்றலுக்காக அகற்றப்பட்ட பித்தளைத் தூண் ஒன்றைப் படிக்கட்டில் மீளச் சரியாக பொருத்தாமலிருந்ததில் ஒருமுறை எங்கள் பாட்டி படிகளில் உருண்டு விழவிருந்தாள். மென்பனிப் படலம் குறித்தும், உறைபனிக்கடிக் காயம் குறித்தும், சிறு கூழாங்கற்களை, சிலநேரங்களில் கூர்வாய்ச் சவரத் தகடுகளைக்கூட பனிப்பந்துகளுக்குள் மறைவாக வைக்கும் பொல்லாச் சிறுவர்கள் குறித்தும் – சம்பவங்கள் மூலம் இதுபோன்ற எச்சரிக்கைகள் ஒருபோதும் உறுதியாகவில்லையெனினும் – கற்றுக்கொண்டோம். செந்தட்டி, காஞ்சொறித் தளைகள், நாயுருவிச் செடிகளைப் பற்றியும் ஆபத்தற்றதாகத் தோன்றும் புற்கள் சில தொட்டதும் உப்புத்தாளை உரசியது போல எப்படி எரிகிறதென்றும் கற்றுக்கொண்டோம். கத்திகள், கத்திரிகள் பற்றியும் காலணிக் கயிற்றைக் கட்டாமலிருப்பதன் அபாயம் பற்றியும் நாங்கள் எச்சரிக்கப்பட்டோம். கார் அல்லது லாரியில் ஏறிக்கொள்ளும்படி ஆசைகாட்டும் அன்னிய மனிதர்கள் (strange men) குறித்தும் நாங்கள் எச்சரிக்கப்பட்டோம். ` `அன்னியம்` (strange) என்பது, விசித்திர உருவம், கூன்முதுகு, கோழை ஒழுக்கு, நாய்க்காது, பேய்க்கண் எனப் பொருள்படாதென்றும் அல்லது `அன்னியத்தன்மை` (strangeness) என்பதை எப்படி வரையறுத்தாலும், ` நமக்கு முன்பின் தெரியாத அல்லது அறிமுகமல்லாத` என்று மட்டுமே பொருள்படுமென்றும் புரிந்துகொள்ள வருடக்கணக்கானது. மோசமான பையன்கள் குறித்தும், சில வருடங்கள் கழித்து மோசமான பெண்கள் குறித்தும் எச்சரிக்கப்பட்டோம். நாண்மனத்தடையுற்ற ஒரு அறிவியல் ஆசிரியர், ‘’அளவற்ற உடலுறவு’’ பால்வினை நோயை ஏற்படுத்துவதாகத் தவறான தகவலைத் தந்து, எச்சரித்தார். பெருந்தீனியும் சோம்பலும் நமது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தல் பற்றியும், செல்வம், புகழ் என அனைத்திலுமான பேராசை நமது குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தல் பற்றியும், பொறாமை, சீற்றம் எனப் பகைமைகொண்டு நமது நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தல் பற்றியும் நாம் எச்சரிக்கப்பட்டோம்.
மனம் உடைந்துபோதல் பற்றி எப்போதாவது எச்சரிக்கப்பட்டிருக்கிறோமா? இல்லை. நாம் ஒருபோதுமே எச்சரிக்கப்பட்டதில்லை.
நான் `உடந்தைமை` என்ற சொல்லைச் சிறிது முன்னால் பயன்படுத்தியிருந்தேன். அந்தச் சொல்லை எனக்குப் பிடிக்கிறது. இரண்டு மனிதர்களுக்கிடையே வெளிப்படையாகப் பேசப்படாத ஒரு புரிதலுணர்வினை, நீங்கள் விரும்புகிற பட்சத்தில், ஒரு வகையான முன்னுணர்தலை அந்தச் சொல் எனக்கு அடையாளம் காட்டுகிறது. இருவரும் ‘’ ஒரே மாதிரியான விருப்பங்கள் கொண்டவர்களா,’’ ஒரே மாதிரியான உடலாக்க இயக்கம் கொண்டவர்களா, உடலுறவுக்கு இணக்கம் கொண்டவர்களா, இருவரும் மகப்பேறு விரும்புபவர்களா, அல்லது எப்படியிருந்தாலும் தமது தன்னுணர்வற்ற நனவிலி முடிவுகளைப் பற்றி உணர்வார்ந்த முறையில் விவாதிக்கும் மனநிலையுடையவர்களா எனக் கண்டுபிடிக்கும் நரம்புகளைப் பாதிக்கும் பேருளைச்சல்மிக்க பெருஞ்சிரமத்துக்கு முன்பாகவே நீங்கள் பொருத்தமுடையவராயிருக்கலாமென்ற முதற்குறிப்பு கிடைத்துவிடுகிறது. பின்னொரு காலத்தில் திரும்பிப் பார்த்து, முதல் மணநோக்குச் சந்திப்பு, முதல் முத்தம், சேர்ந்திருந்த முதல் விடுமுறைநாள் என மகிமைப்படுத்திக் கொண்டாடுவோம். ஆனால், எல்லோரும் பொதுவில் அறிந்த இந்த நிகழ்வுகளுக்கு முன்னால் நிகழ்ந்ததல்லவா, அந்த உடந்தைமை, அதுதான் உண்மையில் முக்கியமானது. அந்தக் கணம், நினைவுகளைவிடவும் அதிமுக்கியம் பெறுகின்ற அந்தத் துடிப்பு, ஆம், அது அவனுடையதாக இருக்கலாம், ஆம், ஒருவேளை அவளுடையதாகவுமிருக்கலாம்.
இதை, பென்னுக்கு, அவனது விருந்து முடிந்த சிலநாட்களுக்குப் பின் விளக்க முயற்சித்தேன். பென் ஒரு குறுக்கெழுத்துப் புதிர் விளையாட்டுக்காரன், அகராதி நேசிப்பதோடு நுணுக்கமாகப் பார்க்கும் தன் அறிவு நுட்பத்தை வெளிக்காட்டுவதில் விருப்பமுள்ள ரகம். ‘’ உடந்தைமை’’ என்பது ஒரு குற்றச் செயலில், அல்லது ஒரு பாவச்செயலில், அல்லது சட்டத்திற்கெதிரான கொடிய ஒரு செயலில் துணையாகப் பங்கேற்பதென அவன் என்னிடம் கூறினான். அதாவது, அது ஏதோ ஒரு மோசமானதைச் செய்வதற்கான திட்டமிடல் எனப் பொருளாகிறது.
நான் அந்தச் சொல்லை எப்படிப் புரிந்துகொண்டிருந்தேனோ, அதே நிலையை அப்படியே தொடர்கிறேன். பென் சொன்னானென்பதற்காக மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு, அது ஏதோ ஒரு நல்லதைச் செய்வதற்கான திட்டமிடலாகவே பொருள்படுகிறது. அவளும் நானும் அவரவர் சொந்த முடிவுகளை அவரவரே மேற்கொள்கிற திறமையும் தன்னுரிமையும் கொண்ட வயது வந்தவர்கள். அதிலும் அந்த நேரத்தில் மோசமான காரியம் செய்ய யாரும் திட்டமிடமாட்டார்கள், அப்படிச் செய்வார்களா என்ன?
நாங்கள் ஒரு திரைப்படத்துக்குப் போனோம். அந்த நேரம் வரையிலும் அவளது இயற்கையான மனப்போக்கு மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து எனக்கு ஒரு தெளிவான புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை. அவள் நேரந்தவறாமை கடைப்பிடிப்பவளா அல்லது அதுபற்றி அக்கறை இல்லாதவளா, எதையும் எளிதாக எடுத்துக்கொள்பவளா அல்லது சட்டென கோபம் கொள்பவளா, சகிப்புத்தன்மை கொண்டவளா அல்லது கண்டிப்பானவளா, மகிழ்ச்சியான சுபாவமா அல்லது சோர்வு கொள்ளும் சுபாவமா, விவேகமானவளா அல்லது கிறுக்குத்தனமுள்ளவளா? இது பண்பற்ற முறையில் சொல்லப்படுவதாகத் தோன்றலாம்; அதுவன்றியும், இன்னொரு மனிதரைப் புரிந்துகொள்வதென்பது பதில்களே பதில்களைத் தடுக்கும் விடைப்பெட்டிக்குள் ஏதாவதொன்றைத் தேர்வுசெய்து அடையாளமிடும் செயலாகத்தானே மாறியிருக்கிறது. மகிழ்ச்சியான சுபாவமாகவும் சோர்வுகொள்ளும் சுபாவமாகவும், அதுபோல எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கு மற்றும் சட்டென்று கோபம் கொள்ளும் மனப்போக்கும் கொண்டவராக ஒரு நபர் இருப்பதென்பது நூறு விழுக்காடுக்குச் சாத்தியமானதுதான். நான் சொல்ல வருவது, நான் அப்போதும் அவளுடைய பண்புநலன்களின் வெளிப்படாத உள்ளமைவு ( default setting) குறித்து ஒரு நிலைப்பாடு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் என்பதுதான்.
குளிர் மிகுந்த ஒரு டிசம்பர் மாத பிற்பகலில், அவள் அழைப்புக்குரிய பணியில் இருந்ததாலும், எந்நேரமும் மருத்துவ மனைக்குத் திரும்புமாறு `பீப்` அடையாள ஒலியெழும்பலாமென்பதாலும், நாங்கள் தனித்தனி கார்களில் திரையரங்கத்துக்கு வந்து சேர்ந்தோம். நான் அங்கே உட்கார்ந்து, திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேனென்றாலும் அதற்குச் சமளவில் அவளின் எதிர்வினைகளைக் கவனிக்கும் விழிப்போடுமிருந்தேன். ஒரு புன்சிரிப்பு, மவுனம், கண்ணீர், வன்முறைக்கெதிராக ஒரு சுழிப்புடனான பின்வாங்கல் – எல்லாமே எனக்குத் தகவல் தரும் `பீப்` அடையாள ஒலிகள். அரங்கத்தில் வெப்பக்கருவியின் சூடாக்கம், குறைந்த அளவிலானதாக இருந்தது. இருக்கைகளின் கைப்பிடிகளில் எங்கள் முழங்கை மூட்டுகளை வைத்தவாறு நாங்கள் இருவரும் அமர்ந்திருக்க, என் சிந்தனை என்னையறியாமலேயே அவளை நோக்கிச் சென்றதை உணர்ந்தேன். சட்டையின் தொங்கும் கைப்பகுதி, ஸ்வெட்டர், மேற்சட்டை, மழைக்கோட்டு, பெண்கள் அணியும் மேற்கோட்டு, கம்பளிச்சட்டை – அப்புறமென்ன? அதற்கும் அதிகமாக மேனி மீது வேறேதுமில்லை. ஆக, எங்களுக்கிடையே ஆறு அடுக்கு, ஒருவேளை அவள் ஸ்வெட்டருக்கு அடியில் கைவைத்த ஏதாவது அணிந்திருந்தால் ஏழு.
படம் ஓடியது; அவளது அலைபேசியில் எதுவும் துடிக்கவில்லை; அவள் சிரித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. நாங்கள் வெளிவந்தபோது, ஏற்கெனவேயே இருட்டியிருந்தது. நாங்கள் எங்கள் கார்களை நோக்கி பாதிதூரம் நடந்திருந்த போது, அவள் நின்று, அவளுடைய இடது கையைத் தூக்கி, உள்ளங்கையை என்பக்கமாகத் திருப்பினாள்.
‘’ இதைப் பாரேன்,’’ என்றாள், அவள்.
எதைப் பார்க்கச் சொல்கிறாளென எனக்குத் தெரியவில்லை. சாராய நிரூபணம், ஆயுள் ரேகை? நான் அவளருகே நெருங்கி, கடக்கும் கார்களின் முன்விளக்கு வெளிச்சத்தில், அவளது, முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களின் நுனிகள் வெளிறிய மஞ்சள் நிறத்துக்கு மாறியிருந்ததைக் கவனித்தேன்.
‘’ கையுறைகள் இல்லாமல் இருபது கஜங்கள். இது, இப்படித்தான் ஆகிறது.’’ என்றாள், அவள். அந்த நோய்த்தொகையின் பெயரை அவள் எனக்குச் சொன்னாள். இது இரத்த ஓட்டம் தொடர்பானது. குளிரினால் இரத்த நாளங்கள் சுருங்கி இரத்த ஓட்டம் தடைப்படுவதால் இப்படியாகிறது.
அவள் கையுறைகளுக்காக கைகளைப் பைகளுக்குள் நுழைத்து இழுத்தாள்.. எனக்கு ஞாபகம் அவை அடர் பழுப்பு நிறத்திலிருந்தன. அவற்றைச் சிறிது அரைகுறையாகவே இழுத்த அவள், பின்னர் விரல்களை நுழைத்து, நுனிவரை செல்லுமாறு கம்பளியைச் சரிசெய்தாள். நாங்கள் நடந்துகொண்டே, திரைப்படம் பற்றி விவாதித்துச் சிறிது நின்று, சிரித்துச் சிறிது நின்று, பிரிந்தோம். எனது கார் அவளது காரைத் தாண்டி பத்து கஜம் தூரத்திலிருந்தது. கார்க்கதவை, நான் திறக்க இருக்கும் நேரத்தில், அவள் தளத்திலேயே கீழே பார்த்துக்கொண்டு நிற்பதாக உணர்ந்தேன். ஒரு சில நொடிகள் காத்துநின்று, பின்னர் ஏதோ தவறாகியிருக்கிறதென நினைத்துத் திரும்பி நடந்தேன்.
அவள் என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே, ‘’ கார்ச் சாவி,’’ என்றாள். அங்கே அவ்வளவாக வெளிச்சம் இல்லை. சாவியைத் தேடி அவளது பைக்குள் துழாவிக்கொண்டிருந்தாள். பின்னர் திடீரென முரட்டுக் குரலில், ‘’ வாடா, முட்டாளே!’’ என்றாள்.
அவள் என்னோடு பேசுவதாகவே, ஒரு நிமிடம் நினைத்தேன். பின்னர்தான், அவள் சாவியைக் கண்டுபிடிக்க இயலாமை குறித்த தடுமாற்றத்தில் தனக்குத்தானே குழம்பி, செய்வதறியாத கோபத்தில் தன்னைத்தானே திட்டிக் கொள்கிறாளெனத் தெரிந்துகொண்டேன். ஒருவேளை, அவளது தடுமாற்றம் எனக்குத் தெரிந்துவிட்டதேயென்பதாலும் அதிக கோபமிருக்கலாம். ஆனால், நான் அவளுடைய பிரச்சினைகளுக்குள் செல்லவில்லை. அங்கே நின்று அவளது தத்தளிப்பினைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன: நான், அதை என்னவென்று விவரிப்பது! அது அவ்வளவு மூர்க்கமாக இல்லாததால், அதை மென்மையானதென்றே சொல்வேன்; அதோடு எனது உறுப்பும் திடீரென நீண்டு பருக்கத் தொடங்கியது.
ஒரு பல் வைத்தியர் ஊசி மருந்து ஒன்றைச் செலுத்திவிட்டு, உணர்வு மரத்துப்போகச் செய்யும் மருந்து அதன் வேலையைத் தொடங்குகையில், அறையை விட்டுச் சென்று, சுறுசுறுப்புடன் மீளத் திரும்பிவந்து, என் வாய்க்குள் அவரது விரலைவிட்டு, எந்தப் பற்குழியை நிரப்பப்போகிறாரோ, அந்தப் பல்லின் அடிப்பாகத்தில் தடவி, ஏதாவது உணர்வு தெரிகிறதாவெனக் கேட்டார். நீண்ட நேரம் கால்களைக் குறுக்காக மடக்கி உட்காரும்போது, ஒரு மரத்துப்போன தன்மை ஏற்படுமல்லவா, அது என் நினைவுக்கு வந்தது. எந்த எதிர்வினையும் இல்லாதபோதும், நோயாளியின் காலில் ஊசியைச் செருகிய மருத்துவர்களின் கதைகளை நான் நினைத்துக்கொண்டேன்.
நான் தெரிந்துகொள்ள விரும்பியது இதைத்தான்: நான் தைரியமாக, அவளது இடது கைக்கு எதிராக, எனது வலது கையை உயர்த்தி, அவளது உள்ளங்கையோடு எனது உள்ளங்கையை மென்மையாகப் பொருத்திச் சேர்த்து, ஒவ்வொரு விரலோடும் ஒவ்வொரு விரலைப் பொருத்திச் சில காதலர்களின் `உயரும் ஐந்து` போலச்செய்து, எனது முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல் நுனிகளால் அவளது விரல் நுனிகளை அழுத்தியிருந்தால், அவள் ஏதாவது உணர்ந்திருப்பாளா? அங்கே உணர்வு ஏதுமில்லாமலிருக்கும்போது, அவளுக்கும் சரி, எனக்கும் சரி, எந்த மாதிரி உணர்வு இருந்திருக்கும்? என் விரல்கள் அவளது விரல்கள் மீது மென்மையாக அழுத்துவதை அவள் பார்க்கிறாள். ஆனால், அவளுக்கு எந்த உணர்வும் இல்லை. அவளது விரல்கள் மீது என் விரல்களைப் பார்க்கும் நான் அவளது விரல்களை உணர்கிறேன். ஆனால், அவள் எதுவும் உணரவில்லையென்பதையும் அறிகிறேன்.
அதோடு, கிளறும் மேலதிகப் புரிதலுணர்வுடன், அந்தக் கேள்வியை இன்னும் விரிந்த அளவில் எனக்குள்ளாகவே எழுப்பிக்கொண்டேன்.
கையுறை அணிந்த ஒருவர், கையுறை அணியாத ஒருவர், தசை விரல் > கம்பளியை, கம்பளிவிரல் > தசை விரலை எப்படி உணருமென நினைத்துப் பார்த்தேன்.
இப்போதும் – நானும் அவளோடு உடனிருக்கும் ஒரு எதிர்காலமிருந்தால் – அந்த எதிர்காலத்திலும் அவள் அணிகிற கையுறைகள் எல்லாவற்றையும், கற்பனை செய்ய முயன்றேன்.
பழுப்புநிறக் கையுறைகளின் இணையொன்றை நான் கண்டேன். அவளுடைய நிலை இப்படியே தொடர்ந்தால், அவளுக்குப் பல்வேறு நிறங்களில் அதிகக் கையுறை இணைகளை வாங்கிக் கொடுக்கவேண்டுமென்று தீர்மானித்தேன். அப்போது, குளிர்காலத்தின் பகல்களுக்கும், இரவுகளுக்கும், சில கதகதப்பான, வெள்ளாட்டுக் குட்டியின் துறுதோல் கையுறைகள் : அவளது தலைமுடிக்குப் பொருத்தமாகக் கறுப்புநிறத்தில், விரல்களின் நீளம் முழுவதற்கும் ஓடுகின்ற அதிவெண்மையிலான தையல், சாயமிடாத கம்பளித்துணியில் முயற்தோல் முடியால் விளிம்புத் தையல் எனக் கற்பனை செய்தேன். அப்புறம், பெருவிரல் தனித்திருக்கவும், இதர விரல்களுக்கென அகலமான பை போன்ற அமைப்பும் கொண்டதுமான, உள்ளங்கைகளைப் போல் தோற்றமளிக்கின்ற ஓரிணை மிட்டன் எனப்படும் கையுறைகள்.
பணியிலிருக்கும்போது, அவள், மெல்லிய இரப்பர் பால்மத்தாலான, நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் அதிகபட்சமான மென்மையுடன் தடைக்காப்பினைத் தருகின்ற, அறுவை மருத்துவஞ் சார்ந்த கையுறைகளை அவள் அணிந்திருப்பாளென யூகிக்கலாம். ஒரு தடுப்பு எனில், அது எந்த வகையாக இருந்தாலும் உடல் மீதான உடல் தொடுகையில் கிடைக்கின்ற அத்தியந்த உணர்வைக் கொன்றுவிடுகிறது. அறுவை மருத்துவர்கள் இறுகப் பிடிக்கும் கையுறைகளையும், இதர மருத்துவப் பணியினர், சுழலும் கூர்வாய்த் தகடுகள் பயன்படுத்திப் பன்றித் தொடைகளிலிருந்து தசைப் பாளங்களை உரித்தெடுக்கும் சுவையுணவகப் பணியாளர்கள் அணிவதைப் போன்ற தளர்வானவற்றையும் அணிகின்றனர்.
அவள் ஒரு தோட்டப் பணியாளாக இருந்திருப்பாளோ, அல்லது எப்போதாவது தோட்டப்பணியாளாவாளோ என நினைத்து வியந்தேன். நன்கு உழப்பட்ட மண்ணில் எளிதான வேலைகளுக்கு, சிறுவேர், கிழங்குகளையும் இளநாற்றுகளையும், மெல்லிய இலைதழைகளையும் பிரித்தெடுக்க, இரப்பர் பால்ம கையுறைகளை அணியவேண்டியிருக்கும். ஆனால், தடிமனும் அழுத்தம் கூடியதுமான, அநேகமாக மெல்லிய தோலும் பட்டையிடப்பட்ட ஒருவகை மெழுகுக் கித்தானும் கலந்த கலவைத் துணி உறைகள், மண்ணை மேல்கீழாகக் கிளறுதல், வெட்டுதல், தறித்தல், மற்றும் படர்கொடிகள், புல் பூண்டுகள், செந்தட்டி, காஞ்சொறி, நாயுருவி வேர்களைப் பிடுங்குதல் போன்ற கடினமான வேலைகளுக்காக அவளுக்குத் தேவைப்படலாம்.
விரல்கள் இல்லாக் கையுறைகள் அவளுக்குப் பயன்படுமா என நினைத்துப் பார்த்தேன். அவற்றிற்கான எந்த உபயோகத்தையும் நான் கண்டதேயில்லை. ரஷ்யப் பனிச்சறுக்கு வண்டி ஓட்டுநர்களும் டிக்கன்ஸின் தொலைக்காட்சி வார்ப்புகளில் வரும் கஞ்சர்களையும் தவிர அவற்றை வேறு யார் அணிகிறார்கள்? அதிலும் அவள் விரல்களுக்கு என்ன நிகழ்ந்ததென்று தெரிந்த நிலையில் எக்காரணங்கொண்டும் அவை தேவைப்படாதுதான்.
அவள் கால் பாதங்களின் இரத்த ஓட்டம் குறைந்திருந்தால் எப்படியாக இருக்குமென வியந்தேன். அப்படியாக இருந்தால் : படுக்கைக் காலுறைகள். அதாவது தூங்கும்போதும் அணிந்திருக்கிற காலுறைகள். அவை எவற்றைப் போல இருக்கும்? பெரியதாக, முழுக்கக் கம்பளியாலானதாக, ஒருவேளை முன்னாள் ஆண் தோழனுடைய ரக்பி காலுறைகள், ( முட்டைவடிவப் பந்துடன் ஆடும் கால்பந்து விளையாட்டு) அவள் எழுந்து நிற்கும்போது தளர்வாகக் கீழிறங்கி, அவளது கணுக்கால்களைச் சுற்றியிருக்குமா? அல்லது பெண்களுக்கான இறுகப் பிடிக்கும் வகை? ஏதோ ஒரு செய்தித்தாளின் நவீன வாழ்க்கைப் பாங்கு – சிறப்பு மலரில் தனித்தனிக் கால்விரல்களுடனான வெற்றுப் பகட்டுமிக்க படுக்கைக் காலுறைகளைப் பார்த்தேன். நான் அவற்றை நடுநிலை அத்தியாவசியத் துணைப்பொருளென்றோ அல்லது வேடிக்கையானதென்றோ அல்லது ஏதோ ஒரு வகையில் பாலுணர்வுத் தூண்டலுடையதென்றோ கூறுவதென வியந்தேன்.
வேறென்ன? அவள் பனிச்சறுக்குவாளா? அப்படியானால், உப்பிய மேற்சட்டைக்குப் பொருத்தமாக உப்பிய கையுறைகள் அவளுக்கு வேண்டுமா? ஓ! அப்படியானால், சலவைக்கு வசதியான கையுறைகள் – எல்லாப் பெண்களும் அவற்றை வைத்திருக்கின்றனர். அதோடு, அவை, எப்போதுமே ஒரே மாதிரித் துண்டு துண்டுகளாக இணைத்தவை போல மஞ்சள், இளஞ்சிவப்பு, வெளிறிய பச்சை, வெளிறிய நீலம் என ஈர்ப்பில்லாத நிறங்களில் இருக்கின்றன. இரப்பர் கையுறைகள் பாலுணர்வைத் தூண்டுவதாகச் சொல்வீர்களென்றால் நீங்கள் வக்கிரம் பிடித்தவராகத்தான் இருக்கவேண்டும். அவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல், வேற்றுப்பண்புடைய – ஒண்சிவப்பு, ஆழ்கடல் நீலம், தேக்கு நிறம், மெல்லிய கோடிட்டவை, வேல்ஸ் இளவரசுக் குறுக்குக் கட்டங்களுடையவையென அமைத்துக்கொள்ளுங்கள் – அவை என்னை எதுவும் செய்வதில்லை.
‘’ இந்த பர்மேசன் வகையைத் தொட்டுணருங்கள்,’’ என எவரும் சொல்வதில்லை. அப்படிச் சொல்கிறார்களா, என்ன? பர்மேசன் தயாரிப்பாளர்களைத் தவிர. ( பர்மேசன் – சமைத்து மட்டுமே உருவாக்குகிற, குருணை, குருணையாகத் திரண்டிருக்கும் ஒரு வகைக் கடினமான பாலாடைக்கட்டி)
சிலவேளைகளில், மின்னேறியில் தனியாகச் செல்லும்போது, அதன் பொத்தான்களின் மீது என் விரல்களை ஓடவிட்டு மென்மையாகத் தடவிப்பார்ப்பேன். நான் போக வேண்டிய தளத்தை மாற்றுவதற்காக இல்லாமல், சும்மா, வெறுமனே, பிரெய்லியின் மெல்லப் புடைத்த சிறு புள்ளிகளைத் தொட்டுணருவதற்காகவும், அது எப்படியிருக்குமென வியப்பதற்கும் தான்.
பெருவிரலுக்கு மட்டும் உறை அணிந்த ஒருவரை நான் முதன் முதலாகப் பார்த்தபோது, அதற்குள் உண்மையாகவே ஒரு பெருவிரல் இருக்குமென என்னால் நம்பவே முடியவில்லை.
மிகக்குறைந்த முக்கியத்துவமுள்ள விரலுக்குச் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கை முழுவதுமே பாதிக்கப்படுகிறது. மிகமிகச் சிறிய வேலைகள் – ஒரு காலுறையை உருவுதல், பொத்தான் போடுதல் அல்லது கழற்றுதல், பற்சக்கரம் மாற்றுதல் – கூடப் பெரும் சிரமமாகி, தன்னுணர்வோடு செய்யவேண்டியதாகிவிடுகிறது. உறைக்குள் கை நுழையாது. கழுவும்போது கவனமாக இருக்க வேண்டியிருக்கும். இரவில் அதன் மீது உருண்டுவிடக்கூடாது, இப்படிப் பல.
ஒரு கை முறிந்த நிலையில் காதலில் ஈடுபட முயற்சிப்பதை நினைத்துப் பாருங்கள்.
அவளுக்கு எப்போதுமே, மோசமான எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாதென ஒரு திடீர் எண்ணம் தீவிரமாகத் தலைதூக்கியது.
ஒருமுறை தொடர்வண்டி ஒன்றில் ஒரு கைக்குப் பதிலாக ஒரு கொக்கியை மாட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தேன். அப்போது எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். நான் அந்தப் பெட்டியில் தனியாக இருந்தேன். அவன் நடைவழியிலிருந்து வந்து எட்டிப் பார்த்து, இருக்கையில் ஆளிருப்பதைப் பார்த்ததும், கடந்து போய்விட்டான். அந்த நேரத்தில் நான் கடற் கொள்ளையர்களைப் பற்றியும் பயங்கரச் செய்திகள் பற்றியுமே நினைத்தேன். பிறகும் அப்படியே நினைத்துக்கொண்டிருக்க முடியாது. இன்னும் பிற்காலத்தில் தான் கை துண்டிக்கப்பட்டவர்களின் கொடூரமான வலியும் வேதனையும் பற்றி நினைத்தேன்.
நமது விரல்கள் ஒன்றுக்கொன்று இணைந்து வேலைசெய்ய வேண்டும்; நமது உணர்வுகளுந்தான். அவை தமக்காகவே செயல்படுகின்றன. ஆனாலும், பிறவற்றுக்கான முன்னுணர்வாளராகவும் இருக்கின்றன. பழம் கனிந்திருக்கிறதா எனத் தொட்டுப்பார்க்கிறோம்; தசையும் எலும்பும் இணைந்தவொரு மூட்டினை அமுக்கி இறைச்சி வெந்துவிட்டதாவெனப் பார்க்கிறோம். அதிகபட்ச நன்மைக்காக நமது புலன்கள் இணைந்து வேலைசெய்கின்றன; அவை, நான் சொல்ல விரும்புவதைப் போலவே, ஒன்றுக்கொன்று உடந்தையாக இருக்கின்றன.
அன்று மாலையில் அவளது தலைமுடி, மேலே ஏற்றிக்கட்டி, ஆமையோட்டுச் சீப்புகள் இரண்டால் இறுக்கிப் பிடித்து, அதில் ஒரு தங்க ஊசியும் செருகப்பட்டிருந்தது. அவளது கண்கள் அளவுக்கு அது கறுப்பாக இல்லையெனினும், வெளிறிச் சிறிது கசங்கியுமிருந்த அவளது லினன் மேற்சட்டையைவிடக் கறுப்பாக இருந்தது. நாங்கள் அப்போது ஒரு சீன உணவுவிடுதியில் அமர்ந்திருந்தோம். பரிமாறும் பணியாளர்கள் அவளை உரியமுறையில் கவனித்துக்கொண்டிருந்ததனர், அவளது தலைமுடி சீன பாணியிலிருந்ததால் அவர்கள் அப்படிக் கவனித்திருக்கலாம். அல்லது என்னைத் திருப்திப்படுத்துவதை விட அவளைத் திருப்திப்படுத்துவதுதான் முக்கியமானதென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது அவளைத் திருப்திப்படுத்துவது என்னைத் திருப்திப்படுத்துவதாயிருக்குமென்றும் இருக்கலாம். நான், அடிக்கடி அங்கு வருபவன் என்ற அடிப்படையில், உணவுகளுக்கான உத்திரவுகளை, நானே கொடுக்குமாறு அவள் என்னிடம் கூறினாள். எனக்குப் பிடித்தமான, பாரம்பரிய உணவுவகைகளையே நான் தேர்ந்தெடுத்தேன். கடற்பாசி, ஸ்பிரிங் ரோல்ஸ், மஞ்சள் பீன்ஸ் சாறு கலந்த பச்சை பீன்ஸ், மொறுமொறுவென வறுத்த வாத்துக்கறி, கத்தரிக்காய்க் குழம்பு, எதுவும் கலக்காத வெள்ளைச் சோறு. ஜியுர்ஸ்ட்ராமினர் என்னும் லிச்சிப்பழ மணமுள்ளதும் இளஞ்சிவப்பிலிருந்து சிவப்பு நிறமாகும் திராட்சை வகையில் தயாரிக்கப்பட்ட வெள்ளைநிற ஒயின் ஒரு புட்டி மற்றும் சாதாரண குடிநீர்.
உணவுவிடுதிக்குள் அவளைத் தொடர்ந்து வரும்போதே, அவள் நறுமணத் தைலம் பூசியிருப்பதைக் கவனித்துவிட்டேனென்றாலும், அதன் பெயரைக் கேட்டீர்களானால், நான் அம்பேல். என்னுடைய விவரிப்புச் சொற்களெல்லாம் அவ்வளவாக உயர்த்திச் சொல்கிற செயற்கைப்பண்பு கொண்டவையல்ல : இனிய நயமுள்ள, விரும்பத்தகாத, புலப்படாத, பாலுறவுத் தூண்டலான, முடைநாற்றம் வீசுகிற, ஆக்கிரமிக்கிற –என்னுடைய சொற் தொகுதி அவ்வளவு தான், தீர்ந்துவிட்டது. எப்படியானாலும், எங்கள் மேஜையைக் கடந்து வேறு மேஜைக்குப் போய்க்கொண்டிருந்த, பளபளக்கும் வறுத்த மார்புக்கண்டங்களின் குவியலிலிருந்து எழுந்த சுவைமணமும் உணவுவிடுதியின் மணமும் சேர்ந்து நறுமணத்தைலத்தின் மணத்தை மூழ்கடித்துவிட்டது. சீன உணவுகள் மற்ற உணவுகளைவிட மணமுள்ளவையாயிருக்கலாம். நாம் உணவுக்கிண்ணத்தைத் தூக்கி, வாயருகே கொண்டுபோய் ருசிப்பதால் மற்ற மேஜைத் தட்டு உணவுகளைவிட சீன உணவுகள் அதிக மணமுள்ளவையாகத் தோன்றலாம். அந்த இரவில், எதுவும் சேர்க்காத வெள்ளைச் சாதம் கூட மண்ணின் மணம் போல ஒரு தனி மணத்தோடு இருந்தது.
பின்னணி இசை, சந்தை ஆராய்ச்சியில் கிடைத்ததாக இருக்கலாம்: சாதாரணமாக, கவனமற்றுக் கேட்கிற சீனம் மற்றும் பிரபலமற்ற மேலைநாட்டுப் பாணி. மிகப்பரவலாகத் தெரிந்த ஒன்றிரண்டைத்தவிர, மற்றபடி, பொருட்படுத்தாமல் விடத்தக்கது. “டாக்டர் ஷிவாகோ“வில் வருகிற `லாராஸ் தீம்` அந்த ஒலிநாடாவில் இசைக்கப்பட்டால், நாம் `உடற்கட்டாய ஆணை`( duress) கோரி நீதிமன்றத்துக்குத்தான் போகவேண்டுமென்றேன். அவள் புன்னகைத்து, `உடற்கட்டாயம்` என்பது உண்மையான சட்டப் பாதுகாப்பு தானா எனக் கேட்டாள். அதைப்பற்றி மிகமிக ஆழமாகச் சொல்லிக்கொண்டே போனேன். பின்னர், எங்கள் தொழில்முறைகள் எங்கெங்கே ஒன்றின்மேலொன்றாக இணைகிறதென, அதாவது மருத்துவத்தில் சட்டம் நுழைகிற இடம், மற்றும் சட்டத்துறையில் மருத்துவம் நுழைகிற இடம் பற்றிப் பேசினோம். பின்னர், நாங்கள் புகைப்பது பற்றிப் பேசினோம். பொது இடங்களில் புகைப்பது தடைசெய்யப்படாமலிருந்திருந்தால், எந்தவொரு துல்லியக் கருத்து குறித்து நாம், ஒளியேற்றவேண்டுமென்பது பற்றியும் பேசினோம். பிரதான உணவையும் காய்கறிகளையும் உண்டு முடித்தபின், `புட்டமுது` சாப்பிடும் முன் புட்டமுது வேண்டுமா, வேண்டாமா எனப் பேசி ஒத்துக்கொண்டோம். ஒரு சிகரெட் செரிமானத்துக்கு நல்லதுதான். சாப்பிட்டதைக் கீழே தள்ளுவதற்கு உபயோகமாகிறது. நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் கொஞ்சமாகப் புகைப்பவர்கள்தாமெனக் கருதினோம். பின்னர் நாங்கள் எங்கள் குழந்தைப்பருவம் குறித்து விழிப்புடன் சிறிது பேசினோம். குளிரில் விரல்நுனிகள் மஞ்சளாவது தொடங்கியபோது அவளுக்கு என்ன வயது என்றும் நிறைய இணைக் கையுறைகள் வைத்திருக்கிறாளாவென்றும் கேட்டேன். அது அவளுக்கு எதனாலேயோ சிரிப்பை உண்டாக்கிவிட்டது. நான் அதை விவரிக்கும்படி கேட்கவிருந்தேன். ஆனாலும், அவள் எதாவது தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாதென்று விட்டுவிட்டேன்.
உணவருந்தல் நிகழும்போதே, எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருப்பதாக நான் நினைத்தேன் – எல்லாம் என்பதற்கு அந்தப் பொழுது, `மாலை நேரம்` எனச் சொன்னேனே தவிர, அதற்கும் மேலாக எதுவுமில்லை. நாங்கள் இருவருமே திடீரெனக் கொட்டாவி விடவோ, அல்லது கிளம்பலாமென நினைக்கவோ, அல்லது, தொடர்வதற்கான முயற்யை – அது ஒரு முயற்சியாக உணரப்பட்டதென்றில்லை – நிறுத்த முயற்சிக்கவோ இல்லை. அவளும் அப்படித்தான் உணர்ந்திருக்க வேண்டும், ஏனென்றால், அது புட்டமுதுக்கு வருகையில், அவள் மனதை மாற்றிக்கொண்டு, ஏதாவது ஒன்று வேண்டும், ஆனால், அது பிசுபிசுப்பாக ஒட்டுவதாகவோ, வயிறு நிறைப்பதாகவோ இருக்கக்கூடாதென்றுசொல்லி, லிச்சி எடுத்துக்கொண்டாள். நான், அந்தப் பழைய விளையாட்டு பற்றி, அல்லது `கிங் லியர்` நாடகம் பற்றி அவளிடம் சொல்லக்கூடாதென முடிவெடுத்துவிட்டேன். ஆனாலும், நல்லது, நாங்கள் மீண்டும் இங்கு வந்தால் – அடுத்த சந்திப்பிலேயே இல்லை, பிற்காலத்தில் என்றாவதொரு நாள் – அப்போது அதைப்பற்றிச் சொல்லலாமென நினைத்தேன். அப்புறம், அந்த விளையாட்டை அவள் பென்னோடு சேர்ந்து, மொசரெல்லாவைத் தொட்டுப்பார்த்து, விளையாடியிருக்கமாட்டாளென எண்ணுகிறேன். எல்லாமே ஒரு நம்பிக்கைதான்.
நான் இப்படியாக நினைத்துக்கொண்டிருந்தபோது, ஒலிபெருக்கியிலிருந்து `லாராஸ் தீம்` கசிய, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்தோம். நாற்காலியைத் தள்ளிக்கொண்டு எழுந்திருப்பதைப் போல உடலசைத்த, அவள், என் கண்களில் தோன்றிய அவசர ஒளியைக் கவனித்திருக்க வேண்டும். ஏனென்றால், அப்படியே உட்கார்ந்து, விளையாட்டாக அவள் கைக்குட்டையை மேஜை மீது எறிந்தாள். அந்த அசைவில் அவளது கை துணியின் குறுக்காகப் பாதிக்கும் மேலாக உயர்ந்தது.
ஆனால், அவள் எழுந்திருக்கவோ, நாற்காலியைப் பின்தள்ளவோ, செய்யாமல் வெறுமனே சிரித்துக்கொண்டிருந்தாள். அவளது இடது கை, கைக்குட்டையின் மேலாக இருக்க, விரல் முட்டிகள் உயர்ந்து, விரல் நுனிகள் என்னை நோக்கி இருந்தன. அதன் பிறகு, நான் அவளைத் தொட்டேன்.
***

மலைகள் இணைய இதழ் ஜூன் 03, 2014, இதழ் 51 இல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment