கொதிப்பு (Soaring)
சீனம் : மோ யான்
ஆங்கிலம் : ஹோவார்ட் கோல்டுபிளாட்
தமிழாக்கம் : ச.ஆறுமுகம்.
( மோ யான் சீனாவின் காவ்மி பகுதியில் 1956ல் பிறந்தவர். 2012 ம் ஆண்டின் இலக்கியத்திற்கான
நோபல் பரிசினை வென்றவர். இக்கதை அவரது `ஷிஃபு, ஒரு சிரிப்புக்காக நீ எதை வேண்டுமானாலும்
செய்வாய்` என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ளது.)
பூமிக்கும் இறைவானத்துக்கும் வணக்கம் செலுத்தியபின், ஹாங்க்சீக்கு ஆவலை அடக்கமுடியவில்லை.
கரிய நிறங்கொண்ட அவன் ஒரு தாட்டியான மனிதன்.
அவனது மணப்பெண்ணின் முகம் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது; ஆனால், அவளுடைய வடிவமைந்த,
நீண்ட கைகளும், வில்லோ மர வழவழப்பில் இடுப்பும்,
வடக்கு ஜியாவ்சூ நகருக்குள் அவள்தான் அழகான
பெண்களிலேயே மிக அழகானவள் எனச் சொல்லிக்கொண்டிருந்தன. நாற்பது வயதில் மோசமான பெரியம்மைத்
தழும்பு முகத்துடன் ஹாங்க்சீ வடகிழக்கு காவ்மி நகரில் எல்லோரும் நன்கறிந்த பிரம்மச்சாரிகளில்
ஒருவனாக இருந்தான். அவனுடைய வயதான தாய் அவனுக்கு யான்யானைத் திருமணம் செய்ய ஏற்பாடு
செய்திருந்தாள். பதிலாக, வடகிழக்கு காவ்மியின் உண்மையான அழகுப்பெண்களில் ஒருத்தியான
அவன் தங்கை யாங்குவா, யான்யானின் மூத்த அண்ணனான ஒரு ஊமையைத் திருமணம் செய்யவேண்டும்.
தங்கையின் தியாகத்தால் நெகிழ்ந்து, அவள் ஒரு
ஊமைக்குக் குழந்தைகள் பெற்றுத்தர வேண்டுமேயெனக்
குழப்பமான உணர்வுகள் மத்தியில், ஹாங்க்சீ மணப்பெண் மீதும் சிறிது பகையுணர்வு கொண்டான்.
‘’டேய், ஊமையா, நீ மட்டும் என் தங்கையைச் சரியாக வைத்துக்கொள்ளவில்லையென்றால், நான்
உன் தங்கையைப் பதம் பார்த்துவிடுவேன்.’’
மணப்பந்தலுக்குள் புதுப்பெண் நுழையும்போது நடுமதியம் ஆகிவிட்டது. செங்கல் மேடையின்
விளிம்பில் அமரும் மணப்பெண்ணை, `ஆ` வென யாரும் வாய்பிளந்து பார்த்துவிடக்கூடாதென வைக்கப்பட்டிருந்த
இளஞ்சிவப்பு மறைப்புத் தட்டியில் குறும்புக்காரச்
சிறுவர்கள் துளையிட்டு நிறைய ஓட்டைகளைச் செய்திருந்தனர். பக்கத்து வீட்டுக்காரி ஒருத்தி
ஹாங்க்சீயின் தோளைத் தட்டி,’’ ஹேய், அம்மைத் தழும்பா, நீ, யோகக்காரன்தான்! உனக்குக்
கிடைத்திருப்பது ஒரு சின்னத் தாமரை இளமொட்டு. அதனால், பார்த்துப் பதனமாக, வைத்துக்கொள்.’’
எனக் கிளுகிளுத்தாள். ஹாங்க்சீ அவனது காற்சட்டையைத் இழுத்துவிட்டுக்கொண்டு பல்லை இளித்தான்.
அவன் முகத்திலிருந்த தழும்புகள் சிவப்பாகத் தெரிந்தன.
சூரியன் வானத்தில் அசையாமல் நின்றிருந்தான். இரவாகட்டுமென ஹாங்க்சீ, முற்றத்தில்
முன்னும் பின்னுமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். அவன் அம்மா தடியை ஊன்றிக்கொண்டு, கூனிக்கூனி
நடந்து வந்தவள், ‘’க்சீ, ஏதோ ஒன்று, எனக்குள் பயமாகவேயிருக்கிறது. என் மருமகள் ஓடிவிடாமல்
பார்த்துக்கொள், கவனமாக இரு.’’ என்றாள். ‘’கவலைப்படாதே, அம்மா. யாங்குவா அங்கிருக்கும்போது,
இது எங்கும் ஓடிவிடாது. இரண்டும் ஒரே நூலில்
கட்டப்பட்ட வெட்டுக்கிளிகள். ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்று போய்விடமுடியாது.’’
அம்மாவும் மகனும் பேசிக்கொண்டிருக்கும்போது, புது மருமகள் மணமேடைத்தோழிகள் இருவரோடு முற்றத்துக்குள் வந்தாள்.
ஹாங்க் சீயின் அம்மா மறுப்புக்குரலில், ‘’ஒரு புதுப்பெண் இருட்டு முன்பே மேடையை விட்டு
எழுந்து கொல்லைப்புறம் போவதை, யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? இது ஒன்றே போதும்,
இந்தக் கலியாணம் நிலைக்காது. அவள் ஏதோ செய்யப்போகிறாள், அப்படித்தான் நினைக்கிறேன்.’’
எனக் கிசுகிசுத்தாள். ஆனால், ஹாங்க்சீ, அம்மாவின் கவலையை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை.
மனைவியின் அழகில் சொக்கிப் போயிருந்தான், அவன். அவளுக்கு நீள முகம், அழகான புருவங்கள்,
சற்றுத் தூக்கலான மூக்கு, பீனிக்ஸ் பறவையைப் போலச் சாய்வான கண்கள். ஹாங்க்சீயின் முகத்தைப்
பார்த்ததும், அவள் சிறிது நின்றாள்; அமைதியாக நீண்ட ஒரு கணத்தில் கிறீச்சென்று கத்தி,
ஓட்டம் பிடித்தாள். மணமேடைத் தோழிகள் அவளைப் பற்றிப்பிடித்து இழுத்ததில், அவளுடைய சிவப்பு
கவுன் கிழிந்து, உள்ளாடையாக அணிந்திருந்த சிவப்புக் கமிசோலின் முன்புறமும், ஒடுங்கிய
கழுத்தும் பனிவெண்கைகளும் வெளித்தெரிந்தன. ஹாங்க் சீ அதிர்ந்துவிட்டான். அவனது அம்மா,
கைத்தடியால் அவன் தலையிலேயே அடித்தாள். ‘’முட்டாள்
பயலே, ஓடு, அவள் பின்னாலேயே ஓடுடா!’’ என்று கத்தினாள். அது அவனை அதிர்ச்சியிலிருந்தும்
மீட்டது. அவன் அவளைப் பிடிக்க ஓடினான். யான்யானின் தலைமுடி அவிழ்ந்து பறவையின் வாலாகப்
பரந்து விரிந்து நீண்டது. அவள் தெருவில் பறந்துகொண்டிருந்தாள்.
‘’அவளைப் பிடியுங்கள்!’’ ‘’அவளைப் பிடியுங்கள்!’’ என ஹாங்க்சீ கத்திக் கூச்சலிட்டான்.
அவன் கூச்சலில், வீடுகளுக்குள்ளிருந்த கிராமம்
தேனீக்களாகத் தெருவில் மொய்த்துக் கூடியது.
அதோடு, கடும் மூர்க்கமான, பத்துப் பன்னிரண்டு பெரிய, பெரிய நாய்கள் விடாப்பிடியாகக்
குரைக்கத் தொடங்கின.
யான்யான் ஒரு சந்தில் திரும்பினாள்; தெற்காகக் கோதுமைத் தாள்கள் காற்றில் சரிந்து,
அவற்றின் கதிர்கள் பச்சைக் கடலில் அலைகளென அசைந்துகொண்டிருந்த வயல்களுக்கு ஓடினாள்.
இடுப்பளவுக் கோதுமைப் பயிரலைகளுக்குள், பசுமைக்கு முரணாகச் சிவப்பு உள்ளாடையும் பால்வண்ணக்
கைகளுமாக அவள் வேகவேகமாக, ஒரு அழகான ஓவியம் உயிர்பெற்றோடுவது போல ஓடிக்கொண்டிருந்தாள்.
ஒரு புதுமணப்பெண் திருமணத்திலிருந்தும் ஓடுவதென்பது வடகிழக்கு காவ்மி நகரத்துக்கே
அவமானம். அதனால் கிராமம் முழுவதும் பழியுணர்வோடு அவளைப் பிடிக்க எல்லாத் திசைகளிலும் சூழ்ந்து துரத்தியது. நாய்களும் கூடவே துள்ளி விழுந்து பசும்
அலைகளுக்குள் வளையம் கட்டின.
மனித வலை நெருங்க,நெருங்க யான்யான் கோதுமை அலைகளுக்குள் தலைகுப்புறப் பாய்ந்தாள்.
ஹாங்க்சீ நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
துரத்தியவர்கள் வேகம் குறைத்து, மேலும் கீழுமாக இளைத்தனர்; ஒருவரோடொருவர் கைகளைக்கோர்த்து,
மீன் பிடிப்பவர்கள் வலையைச் சிறு வட்டமாகக் குறுக்குவது போலக் கவனமாக அடியெடுத்து முன்
நகர்ந்தனர்.
ஹாங்க்சீக்குக் கோபம் தலைக்கேறியது. ஆனாலும், ‘’அவள் மட்டும் கையில் கிடைக்கட்டும், அப்புறம் பாருங்கள், நான்
கொடுக்கப்போகிற அடி, உதைகளை’’ என்று மட்டுமே நினைக்க முடிந்தது.
திடீரெனக் கோதுமை வயலுக்குள்ளிருந்து ஒரு சிவப்பு ஒளிக்கற்றை மேல்நோக்கி எழுந்ததும்,
கூட்டம் திகைத்துக் குப்புற விழுந்தது. அந்த வட்டத்துக்குள்ளிருந்து, கைகளைச் சிறகசைத்து,
இரு கால்களையும் ஒருசேர இணைத்து, ஒரு பிரமாண்ட வண்ணத்துப் பூச்சியைப்போலக் காற்றில்,
யான்யான் அழகாக மேலெழுவதை அவர்கள் கண்டனர்.
அவள் கைகளை அசைத்து, அசைத்து, அவர்களின் தலைக்கு மேல் வட்டமிட்டுப் பின்னர்,
பறக்கத் தொடங்கியதைக் கண்டதும், அவர்கள் களிமண் பொம்மைகளாக உறைந்துவிட்டனர். அவர்கள்,
அவளைத் தொடர்ந்து ஓடியிருந்தால் அவளின் நிழல் மீது கால்வைத்துச் செல்லுகிற மாதிரியில் அவள் மெதுவாகத்தான் பறந்தாள். அவர்களின் தலைக்கு
மேலாக ஆறு அல்லது ஏழு மீட்டர் உயரத்தில்தான், ஆனால், அழகாக, அப்படியொரு அற்புத அழகோடு
அவள் பறந்துகொண்டிருந்தாள். வடகிழக்கு காவ்மி நகரில் நடக்கும் எல்லாப் புதுமையும் போல
இதுவுமொன்று என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அங்கும்கூட ஒரு பெண் வானத்தில் பறப்பதென்பது
இதுதான் முதல்முறை.
அதிர்ச்சி ஒருவாறு நீங்கியதும், அவளைப்பிடிக்கும் முயற்சியை அவர்கள் மீண்டும்
தொடங்கினர். அவள் நிழலின் பின்னாலேயே துரத்திச் சென்று, அவள் தரையிறங்கும்போது, பிடித்துவிடலாமென,
சிலர் வீடுகளுக்கு ஓடி, மிதிவண்டிகளுடன் திரும்பிவந்தனர். வயல்களெங்குமாக மக்களின்
கூச்சல் நடுவே, பறக்கும் அவளும் கீழே நின்றவர்களுமாக அவரவர் முயற்சியில் பெரும் நாடகம்
நடிப்பது போலிருந்தது.
ஊர்மக்களோடு, வழிநடைப்பயணிகளும் வானத்தில் நடந்த அந்தப் புதுமையான நிகழ்ச்சியைக்
காணக் கொக்குகளைப்போலக் கழுத்தைத் தூக்கி அண்ணாந்து நின்றனர். பெண்ணின் பறத்தல், மனதைக் கவர்ந்து மயக்கம்
தருவதாயிருந்தது. அவளைத் தொடர்ந்து தரையில் ஓடுபவர்கள், மேலே பார்த்துக்கொண்டே வயல்
வரப்புகளில் ஓடியதில் தடுக்கி ஒருவர் மீது ஒருவராகச் சாயும் படையைப்போலச் சரிந்து விழுந்தனர்.
யான்யானோ, நகரின் கிழக்கோரத்துப் பழைய இடுகாட்டைச் சூழ்ந்து நின்ற பைன் மரத்தோப்புக்குள்
போய்த் தரையிறங்கினாள். ஒரு ஏக்கர் பரப்பிலிருந்த அந்தக் கருநிறப் பைன் மரங்கள் வடகிழக்கு
காவ்மி நகர முன்னோர்களின் புதைமேடுகளை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் காவல் காத்துக்கொண்டிருந்தன.
அந்த மரங்கள் வயதாகி மிகவும் முதிர்ந்தவை; நிமிர்ந்து நேராக வளர்ந்து உயர்ந்திருந்த
அவற்றின் உச்சிக்கிளைகள் தாழப் பறக்கும் மேகங்களைக் கிழித்துக் கொண்டிருந்தன. அந்தப்
பழைய இடுகாடும் கருநிற பைன் மரத்தோப்பும் சேர்ந்து நகரத்தின் அதிபயங்கரமான இடமாக, அதேசமயம்,
புனிதமான ஒன்றாகவும் இருந்தது. நகரத்தின் முன்னோர்கள் ஓய்வெடுக்கும் இடமென்பதால் புனிதமானது;
பயங்கரம் ஏனென்றால், எல்லாப் பேய் நிகழ்ச்சிகளும் அங்குதான் நிகழ்ந்திருந்தன.
அங்கிருந்த மரங்களிலேயே, இடுகாட்டின்
நடுமத்தியில் மிகமிக உயரமாக வளர்ந்திருந்த முதிர்ந்த மரத்தின் உச்சியில் போய் யான்யான்
அமர்ந்திருந்தாள். அதுவும் அந்த மரத்திலேயே உயரமான உச்சிக்கிளையின் மெல்லிளந் தண்டு
மீது, அவள் ஒரு நூறு பவுண்டு எடை கொண்டவளென்றாலும் அந்தத் தண்டு மிக எளிதாக அவளைத்
தாங்கியிருந்தது. அவளைப் பின்தொடர்ந்து வந்தவர்கள் அங்கு நின்று மேல்நோக்கி அவளைப் பார்த்தனர்.
எல்லோருக்குமே அது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.
பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாய்கள் தலையைத்தூக்கி, அந்தரத்தில் மிதக்கும்
யான்யானை நோக்கிக் கூட்டமாகக் குரைத்தன. ‘’கீழே இறங்கு, இந்த நிமிடமே கீழே இறங்கி வா’’
என்று ஹாங்க் சீ கத்திக் கூப்பிட்டான்.
நாய்களின் குரைப்பும், ஹாங்க் சீயின் கத்தலும் செவிடன் காதுச் சங்காயின. யான்யான்
எந்தக்குறிப்பும் காட்டாமல் காற்றுக்குத் தக்கபடி மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தாள்.
கீழே
நின்ற கூட்டம், எதுவும் செய்ய இயலாமல்
களைத்துப்போக, வீண்கூச்சலிடும் குழந்தைகள் மட்டும், ‘’ புதுப் பெண்ணே, ஹே!
புதுப்பெண்ணே, எங்கே பார்ப்போம், இன்னும்
கொஞ்சம் பறந்து காட்டு!’’ எனக்
கத்தினர். யான்யான் கைகளை உயர்த்தினாள். ‘’ பற,
பற, அவள் பறக்கப்போகிறாள்.’’ எனக்
குழந்தைகள் கூப்பாடு போட்டுப் பரபரத்தனர். ஆனால், அவள் பறக்கவில்லை.
மாறாகக் கூர்நகங்கள் போன்ற விரல்களால், தன்
தலைமுடியைப் பறவைகள் இறகுகளைக் கோதிக்கொள்ளுமே,
அது போல அளைந்து, சீவிக்கொண்டாள்.
ஹாங்க்சீ முழங்காலில் மண்டியிட்டுப் புலம்பலும் ஒப்பாரியுமாக ஓலமிட்டான். ‘’
என் உயிருக்குயிரான ஊர்மக்களே, அண்ணன்களே, தம்பிகளே, சித்தப்பா, மாமா, பெரியப்பாக்களே,
எனக்கு ஒரு மனைவி கிடைப்பது எவ்வளவு அபூர்வமென்று உங்களுக்குத் தெரிந்தது தானே. அவளைக்
கீழே இறக்கிக் கொண்டுவருவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்.’’
அப்போதுதான், அவனுடைய அம்மா ஒரு கழுதையின் மீது அங்கு வந்தாள். அந்தத் தள்ளாத
வயதில், கழுதையின் முதுகிலிருந்து இறங்கத் தடுமாறித் தரையில் விழுந்து, வலியில் முனகிக்கொண்டே,
‘’ எங்கே? அவள் எங்கே? அவள் எங்கே போனாள்?’’ என்று கேட்டாள்.
ஹாங்க்சீ மர உச்சியைக் காட்டி, ‘’ மேலே உட்கார்ந்திருக்கிறாள், பார்.’’ என்றான்.
கையைப் புருவங்களின் மேல் திரையாக வைத்து, தன் மருமகள் மர உச்சியில் எங்கே கூடுகட்டி
அமர்ந்திருக்கிறாளென , மேல் நோக்கிப் பார்த்த அந்த முதியவள், ‘’பேய்! அவள் ஒரு பேயேதான்!’’
என்று அலறினாள்.
கிராமத் தலைவர் எஃகுமலை, ’’ அவள் மாயமந்திரக்காரியோ, இல்லையோ, அவளைக் கீழே இறக்க
ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும். எல்லாவற்றையும் போல, இதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.’’
என்றார்.
‘’அண்ணா,’’ என அழைத்த முதியவள், ‘’தயவுசெய்து, நீங்களே பொறுப்பேற்று, நடத்துங்கள், ஏதாவது செய்யுங்கள், உங்களைக் கெஞ்சிக் கெஞ்சிக்கேட்கிறேன்.’’
என்றாள்.
அதற்குப்
பதிலாக, எஃகுமலை, ‘’ நாம் செய்யப்போவது, இதுதான்.
முதலில் அவளுடைய அம்மா, அண்ணன்,
யாங்குவா எல்லோரையும் இங்கே கூட்டிவரச்சொல்லி யாராவது
ஒருவரை வடக்கு ஜியாவ்சூ நகருக்கு
அனுப்புவோம். அவள் அப்படியும் கீழே
இறங்காவிட்டால், யாங்குவாவைத் திரும்பிப் போகவிடாமல், இங்கேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
அடுத்துச் சிலரை வீட்டுக்கு அனுப்பி
வில்,அம்புகள் செய்ய வேண்டும். கூடவே
கொஞ்சம் நல்ல நீளமான கழிகளும்
வெட்ட வேண்டும். அப்படியும் வேலையாகவில்லையென்றால், வேறென்ன
செய்வது, அந்தக் கடினமான
வழியில்தான் அவளைக்
கீழே கொண்டுவர வேண்டும். எப்படியிருந்தாலும் உள்ளூர் ஊராட்சிக்குச் சொல்லிவிடுவோம்.
அவளும் ஹாங்க்சீயும் கணவன், மனைவி என்பதால்,
திருமணச் சட்டங்களை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
அப்புறம், ஹாங்க்சீ, நீ மரத்தடியிலேயே இருந்து
கவனமாகப் பார்த்துக்கொள். யாராவது ஒருவரிடம் சேகண்டி
கொடுத்தனுப்புகிறோம்.
ஏதாவது ஒன்று என்றால், ஒரே
அடி, பொளித்துக் கிடத்தி விடு, இது, உயிர்ப்பிரச்னை.
அவள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்தால், எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது,
அவளுக்குப் பேய்தான் பிடித்திருக்கிறது. ஊருக்குள் போய் ஒரு நாயைக்கொல்ல
வேண்டும். நமக்கு
நாய் ரத்தம் வேண்டும். ஒருவேளை
தேவைப்பட்டால், கைவசம் இருக்கவேண்டுமே.'’
என்றார்.
தயாரிப்பு
வேலைகளைச் செய்ய, கூட்டம் தலைக்கொன்றாகப்
பிரிந்தது. ஹாங்க் சீயின் அம்மா
மகனோடேயே இருக்கப்போவதாகச் சொன்னாள். ஆனால் எஃகுமலை, ‘’ முட்டாள்தனமாகப்
பேசாதே. இங்கே இருந்து நீ
என்ன கிழிக்கமுடியுமென்று நினைக்கிறாய்? ஏதாவது அசம்பாவிதமானால், நீயும் நடுவில் மாட்டிக்
கொள்வாய். வீட்டுக்குப் போய்ச் சேர்.’’ என்று
கண்டிப்பும் கறாருமாகச் சொல்லிவிட்டார். மாறிப் பேசி வாதம்
செய்வதற்கு எதுவுமில்லையென்று கண்ட அந்த முதியவள்
அழுது, புலம்பிக் கழுதையின் மீது ஏறி, அந்த இடத்தை விட்டகன்றாள்.
இப்போது
சந்தடியெல்லாம் ஓய்ந்து, அடங்கிவிட்டது. வடகிழக்கு காவ்மி நகரின் தைரியம்
மிக்க ஆத்மாக்களில் ஒருவனான ஹாங்க் சீயால்
அமைதியாக இருக்கமுடியவில்லை. கதிரவன் மேற்கில் மறைய,
காற்று சுழன்றடித்து மரங்களுக்கிடையே ஊளையிட்டது. ஹாங்க் சீ தலையைத்
தொங்கவிட்டு, வலிக்கும்
கழுத்தைத் தடவித் தேய்த்துக்கொண்டே அங்கிருந்த
நடுகல் ஒன்றின் மீது அமர்ந்தான்.
அவன் சிகரெட்டைப் பற்றவைத்தபோது மேலிருந்து அதிபயங்கரச் சிரிப்பொன்று கேட்டது. அவனது மயிர்கள் குத்திட்டன;
உடம்பெல்லாம் நடுங்கிப்போனது. தீக்குச்சியை உதறி அணைத்துவிட்டு, எழுந்து,
சில அடிகள் பின்னோக்கி நடந்து
மர உச்சியை நோக்கினான். ‘’ இந்தப்
பிசாசு வேலைகளெல்லாம் என்னிடம் வேண்டாம். இரு. இரு. என்கையால் நன்றாக வாங்கப்போகிறாய், அதுவரைக்கும் இரு.’’ எனக் கறுவினான்.
மறைகின்ற
கதிரவனின் பின்னணியில் யான்யானின் சிவப்புக் கமிசோல் தீப்பிடித்தெரிவதுபோல, அவள் முகம்
தங்க முலாமிட்டது போலப் பளீரெனத் தோன்றியது.
கூடுகளுக்குத் திரும்பிய காக்கைக்கூட்டமொன்றின் எச்சம் மழையென வீழ்ந்தது.
பல எச்சங்கள் சூடாக அவன் தலை
மீதே விழுந்தன. தரையில் காறித்துப்பிக்கொண்டே, அதிர்ஷ்டம் திரும்பிப்
பாய்கிறதோ, என்னவோ, என நினைத்தான்.
பைன் மரத்தோப்பு இருட்டாக
உருமாறிக்கொண்டிருந்தது. வௌவால்கள் மரங்களுக்கிடையில் உள்ளும் வெளியுமாக விர், விர்ரெனப் பறந்து
திரியத் தொடங்கின. அப்போதுங்கூட, மரத்தின் உச்சி ஒளிமயமாக
மிளிர்ந்துகொண்டிருந்தது. இடுகாட்டுக்குள் நரிகள் ஊளையிட்டன. அவனைப்
பயம் மீண்டும் பற்றிக்கொண்டது.
தோப்புக்குள்
எல்லா இடங்களிலும் ஆவிகள் இருந்ததை அவனால்
உணர முடிந்தது; அவன் காதுகளில் விதவிதமான
சத்தங்கள் விழுந்து, விழுந்து நிரம்பிக்கொண்டேயிருந்தன.
அதிபயங்கரச் சிரிப்பு மீண்டும் மீண்டும் கேட்டது. அது ஒவ்வொருமுறை வெடிக்கும்போதும்
அவனுக்கு மிக மோசமாக வியர்த்துக்
கொட்டியது. கெட்ட ஆவிகளை நெருங்கவிடாமல் செய்ய,
நடுவிரல் நுனியைக் கடிக்கவேண்டுமெனக் கேள்விப்பட்டிருந்ததை அவன் இப்போது நினைத்தான்; அப்படியே
நறுக்கென்று கடித்தான். கடிபட்ட வேதனை, மூளையைச்
சரிப்படுத்தியது.
கணநேரத்துக்கு
முன்போல் பைன்மரத்தோப்பு
அவ்வளவு இருட்டாக இப்போது இல்லையென்பதை அவன்
கண்டான். கல்லறை மேடுகளின் வரிசைகளும்
அவற்றின் தலைக்கற்களும் தனியாகத் தெரிந்தன. மறையும் சூரியக் கதிரொளியில்
அடிமரங்கள் நீண்டு தெரிந்ததை அவனால்
கண்டுகொள்ள முடிந்தது. குள்ளநரிக் குட்டிகள் சில கல்லறை மேடுகளுக்கிடையில்
துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததைத் தாய் நரி,
புதர்களின் மறைவில் குனிந்து நின்று,
கண்காணித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது அது, பல்லைக் கடித்து,
உறுமி அவனின் இருப்பையும் காட்டி எச்சரித்தது. அடுத்தாற்போல், அவன் வானத்தைப் பார்த்த
போது, காகங்களால் சூழப்பட்டு, அசையாமல் அமர்ந்திருந்த யான்யானைக் கண்டான்.
இரண்டு
மரங்களுக்கு நடுவிலிருந்து வெளுத்த ஒரு சிறு
பையன் வெளிப்பட்டு, சேகண்டி,
அதை அடிக்கிற மரக்கொட்டாப்புளி, கைக்கோடரி,
ஒரு பெரிய தட்டையான கேக்
ஆகியவற்றை அவனிடம் கொடுத்தான். வில்
அம்புகள் தயாரிப்பினை எஃகுமலை மேற்பார்வையிடுவதாகவும், வடக்கு ஜியாவ்சூவுக்கு
ஆட்கள் போயிருப்பதாகவும் இரண்டு நகரியத் தலைவர்களுமே
விஷயத்தை மிகவும் கடுமையானதாகக் கருதுவதாகவும்
அவர்கள் விரைவிலேயே யாரையாவது அனுப்புவார்களென்றும் அந்தப் பையன் சொன்னான்.
அந்தத் தட்டையான கேக்கைச் சாப்பிட்டுப் பசியாறி, ஊக்கத்தோடிருக்க வேண்டும். ஏதாவது நிகழ்ந்தால், அவன்
சேகண்டியைத்
தட்டவேண்டும்.
அந்தப்பையன்
கிளம்பிப் போனதும் ஹாங்க்சீ, சேகண்டியை
நினைவுக்கல் மீது வைத்தான்; கைக்கோடரியை
இடைவார்க் கச்சில் செருகிவிட்டு, கேக்கை
மென்று விழுங்கத் தொடங்கினான். அதைத் தின்று தீர்த்தானோ,
இல்லையோ, உடனேயே கோடரியை உருவிக்
கையில் பிடித்துக்கொண்டு, ‘’ இப்போது நீ கீழே
இறங்கி வரப்போகிறாயா, இல்லையா? இல்லையென்றால், இந்த மரத்தை வெட்டித்
தள்ளிவிடுவேன்.’’ எனக் கத்தினான்.
யான்யானிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. அதனால், ஹாங்க்சீ
கோடரியை ஓங்கி மரத்தில் புதைத்தான்; அது அவன் வேகத்தில்
அதிர்ந்தது. மரமே ஆடியது. அப்போதும் யான்யானிடம் எந்த அசைவும் இல்லை.
கோடரி ஆழத்தில் பதிந்துவிட்டது. அதை அவனால் இழுத்தெடுக்க
முடியவில்லை.
அவள்
செத்துவிட்டாளா? அவன் வியந்தான். இடைவாரை
இறுக்கிக்கொண்டு, காலணிகளைக் கழற்றிவிட்டு, மரத்தின் மேல் ஏறத் தொடங்கினான்.
கரடுமுரடாக இருந்த மேற்பகுதி ஏறுவதற்கு
எளிதாக இருந்தது. அவன் பாதித் தூரம்
ஏறியதும் மேலே பார்த்தான். அவன்
கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரிந்ததெல்லாம், தொங்கிக்கொண்டிருந்த அவளின் கால்களும், கிளைமேல்
அவள் பிட்டமும் தான். இந்த நேரத்தில்
உன்னோடு படுக்கையில் இருக்கவேண்டிய என்னை இப்படி மரம்
ஏற வைத்துவிட்டாயே, எனக் கோபம் கொண்டான். கோபம்
வலிமையாக மாற்றம் கண்டது. அடிமரம் ஒடுங்கிப் பலப்பல
உறுப்புகளாகக் கிளைத்தன. அவனால் உச்சிமாடத்துக்கு எளிதாக
ஏறமுடிந்தது. அதில் காலை வைத்து
அவள் காற் பெருவிரலை பற்றிப்பிடிக்கவும்
அவன் ஒரு நீண்ட பெருமூச்சினைக்
கேட்டான்; கூடவே, மேலிருக்கும் கிளைகள்
சலசலப்பதை உணர்ந்தான். தங்கத்தின் மின்னலொன்று பொன்வண்ணச் செதில், கார்ப் மீன்
போலக் காற்றில் பாய்ந்தது. யான்யான் கைகளைக் காற்றில் அடித்து, அந்த உச்சி விதானத்திலிருந்தும் உயர்ந்தாள்; கைகால்கள்
நான்காலும் அடித்து அவள் தலைமுடி
நடுக்காற்றில் பறக்க, மற்றொரு மரத்தின்
உச்சியில் போய் இறங்கினாள். கோதுமை
வயலிலிருந்ததைவிட இப்போது அவளின் பறக்கும்
திறமை அதிகப்பட்டிருப்பதை ஹாங்க் சீ கண்டான்.
அவள்
புதிய மரத்தின் உச்சியிலும் முதல் மரத்திலமர்ந்த அதே மாதிரியில் அமர்ந்தாள். இளஞ்சிவப்புக் கதிர் மறைவை வியந்துநோக்கும்
ஒரு புத்தம் புதிய ரோஜா
மலரைப்போல அருமையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாள்.
‘’யான்யான், என் அன்பான மனைவியே,
வீட்டுக்கு வா, என்னோடு சேர்ந்து
வாழ். இல்லையென்றால், உன் ஊமை அண்ணனுடன்
யாங்குவாவைப் படுக்கைக்குப்
போகவிடமாட்டேன், ஆமா, ’’ எனக் கண்ணீர்
பீறிடக் கூவினான்.
அவனுடைய
கூச்சல் ஒலி காற்றிலிருந்து மறையும்
முன்பாகவே, பயங்கரமாகக் கிளை முறியும் சத்தமொன்று கிளம்பியது.
அவன் நின்றிருந்த கிளை முறிந்து, அவனை ஒரு மாமிசப் பிண்டம் போல் தரையில் வீழ்த்தியது.
சதசதத்து, அழுகிக்கொண்டிருந்த பைன்மர ஊசியிலைக் குப்பை மேல் நீண்ட நேரம் விழுந்துகிடந்த
அவன் முட்டுக்காலிட்டு, மெல்ல எழுந்து, சில தப்படிகள் தள்ளாடி, ஒருவாறாக, அடிமரத்தில்
சாய்ந்து நின்றான். எதிர்பார்த்த வலியும் வேதனையும் தவிர வேறொன்றும் இல்லை. எலும்புகள்
எதுவும் முறியவில்லை; அவன் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. அவன் மேல்நோக்கிப் பார்த்து,
யான்யானைத் தேடினான். வானத்தில் நிலவைக் கண்டான். அது தண்மை பொருந்திய கதிர்களை பைன்
கிளைகளில் வடிகட்டி கல்லறை மேட்டின் ஒரு பகுதியில் இங்கும், தலைக்கல்லின்
ஒரு மூலையில் அங்குமெனச் சில இடங்களில் பாசியடர்ந்த ஏதாவதொரு புதர் மீதெனப் படுமாறு செய்து விளையாடிக்கொண்டிருந்தது. மரத்தின் உச்சியில் இரவுக்கென அமர்ந்திருக்கும்
ஒரு பெரிய பறவையென யான்யான் நிலவொளியில் நனைந்துகொண்டிருந்தாள்.
பைன்
தோப்புக்கப்பாலிருந்து யாரோ அவன் பெயரைச் சொல்லி அழைத்தனர். அவனும் பதிலுக்குக் கத்தினான்.
சேகண்டி நினைவுக்கல் மீதிருந்தது நினைவுக்கு வந்து அதை எடுத்துக்கொண்டான்.
ஆனால், அதை அடிக்கும் கொட்டாப்புளியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பெருத்த
ஒலி கிளப்பும் ஒரு கூட்டம் பைன் மரத் தோப்புக்குள்
அரிக்கன் விளக்குகள், கைமின் விளக்குகள், மின்னல்விளக்குகளோடு நுழைந்து, மரங்களின் இடைவெளிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சி,
நிலவின் கதிர்களைப் பின்னுக்குத்தள்ளி, வந்துகொண்டிருந்தது.
அந்தக்
கூட்டத்தில் அவன் தங்கை யாங்குவாவோடு யான்யானின் வயதான தாயாரும், ஊமைச் சகோதரனும் தெரிந்தனர். எஃகுமலை, வில், அம்புகளை
முதுகில் தொங்கவிட்டிருக்கும் ஏழெட்டு திடகாத்திர மனிதர்களோடு வந்துகொண்டிருப்பதை ஹாங்க்
சீ கண்டான். மற்றவர்கள் நீளக்கழிகளை வைத்திருந்தனர். சிலர் வேட்டைத் துப்பாக்கிகளோடு
வந்தனர். வேறு சிலர் பறவை பிடிக்கும் வலைகளைக் கூடக் கொண்டுவந்தனர். மங்கிய பழுப்புநிற
ஆலிவ் சீருடையும் இடுப்பில் ஒரு அகன்ற தோல்வார்க் கச்சும் அதில் செருகிய ஒரு கைத்துப்பாக்கியுமாக
ஒரு அழகான இளைஞனும் வந்துகொண்டிருந்தான். ஹாங்க்
சீ அவனைக் காவல்துறையின் உள்ளூர்க் காவலராக அடையாளம் கண்டுகொண்டான்.
ஹாங்க்சீயின்
முகத்திலிருந்த சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் கண்ட எஃகுமலை, ‘’ இது ஏன்? எப்படி?’’ எனக் கேட்டார்.
‘’ அது ஒன்றுமில்லை,’’ என்றான்,
அவன்.
‘’அவளை எங்கே?’’ என்று ஆத்திரம்
பொங்கக் கேட்டாள், யான்யானின் தாயார்.
யாரோ
ஒருவர் மரத்தின் உச்சியை நோக்கி மின்னல் விளக்கை உயர்த்தி, அவள் முகத்தின் மீது நேராகப்
பிரகாசிக்குமாறு பிடித்தார். உச்சிக்கிளைகள் சலசலப்பதை எல்லோரும் கேட்டனர். பின்னர்,
அந்த மரத்திலிருந்து ஒரு இருண்ட நிழல் சத்தமின்றி மற்றொரு மரத்தின் உச்சிக்குத் நழுவிச்
சென்றதைக் கண்டனர்.
‘’
அட, விபச்சாரி மகன்களா!’’ யான்யானின் தாயார் திட்டித் தீர்த்தாள். ‘’ எனக்குத் தெரிந்துவிட்டது.
என் மகளைக் கொன்றுவிட்டீர்கள். இந்தக் கிழட்டு விதவையையும் அவளின் ஆதரவற்ற மகனையும்
ஏமாற்றுவதற்காக இப்படிக் கதை கட்டுகிறீர்கள். ஒரு பெண்பிள்ளை எப்படி ஒரு ஆந்தை மாதிரிப்
பறக்க முடியும்?’’
‘’
அமைதி, அமைதியாகுங்கள், அத்தை,’’ என்றார், எஃகுமலை. ‘’ எங்கள் கண்ணாலேயே பார்த்ததனால்தான்
நம்புகிறோம்; இல்லாவிட்டால், நாங்களும் உங்களைப்போல, நம்பியிருக்கமாட்டோம் தான். உங்களை
ஒரு விபரம் கேட்க வேண்டும், உங்கள் மகள் எப்போதாவது, ஆசான்கள் யாரிடமாவது பாடம் படித்தாளா?
அசாத்திய வித்தை ஏதாவது கற்றாளா? மாய மந்திரக் காரிகளோடு இருந்தாளா? இந்த மாந்த்ரீகம்,
பேய், பிசாசு ஓட்டுபவர்கள்? அந்த மாதிரிக் கேட்கிறேன்.’’
‘’
என் மகள் எந்த ஆசானிடமும் படிக்கவில்லை.’’ என்றாள், யான்யானின் தாயார், கொதிப்புடன்.
‘’ அவள் எந்த வித்தையும் படிக்கவில்லை. மாய மந்திரக்காரிகள், பேய்பிசாசு ஓட்டுபவர்களோடு
நிச்சயமாக அவளுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவளைக் கண்ணுக்குள்ளேயே வைத்து வளர்த்தேன்.
அவள் பெரியவளாகும்வரை ஒருநாள்கூட என் பார்வை
அங்கிங்கு என்று எங்கும் போனதில்லை. அவளும் என் சொல்லைத் தட்டியது கிடையாது. நான் என்ன
சொன்னேனோ அதைத்தான் செய்தாள். என் அக்கம் பக்கத்துக்காரர்களெல்லாம், ஒரு நல்ல பெண்
உனக்கு மகளாகக் கிடைத்திருக்கிறாளென்றுதான் சொல்வார்கள். அப்படி ஒரு அருமையான பெண்
ஒரு பகற்பொழுது தான் உங்கள் வீட்டில் இருந்திருக்கிறாள், இப்போது, பாருங்கள், கழுகாக
மாறி மர உச்சியில் இருக்கிறாள். எப்படி? எப்படி? இப்படி ஆனது? நீங்கள் அவளை என்ன செய்தீர்களென்று
கண்டுபிடிக்காமல் விடமாட்டேன், ஆமா, ஓயமாட்டேன். என்னுடைய யான்யானை என்னிடம் ஒப்படைக்காத
வரையில், உங்களுக்கு யாங்குவா கிடைக்க மாட்டாள். ஆமாம், அவளை நான் தரமாட்டேன்!’’
‘’போதும்,
கலகமெல்லாம் போதும், வயதான அத்தையே,’’ என்ற காவலர், ‘’மரத்து உச்சியையே பார்’’ எனச்சொல்லிவிட்டு,
பளீர் விளக்கை மர உச்சியில் தெரிந்த நிழலை நோக்கியிருக்குமாறு பிடித்தார்; பின் ஒருமுறை
அணைத்து, ஒளிக்கதிர் யான்யானின் முகத்தில் விழுமாறு விளக்கைத் திருப்பினார். அவள் கைகளை
ஒருமுறை சிறகசைத்ததிலேயே காற்றில் எழும்பி
மற்றுமொரு மரத்தின் உச்சிக்குத் தாவியமர்ந்தாள்.
‘’
அவளைப் பார்த்தீர்களா?, வயதான அத்தையே,’’ என்று அந்தக் காவலர் கேட்டார்.
‘’
ஆமாம்.’’ என்றாள், யான்யானின் தாயார்.
‘’
அது உங்கள் மகள்தானா?’’
‘’
ஆமாம், என் மகள்தான்.’’
‘’அவளைக்
கீழே இறங்கி வருமாறு நீங்கள் சொன்னால், கேட்பாள்.
அவசியப்படாமல்
கடும் நடவடிக்கைகள் வேண்டாமேயென்று பார்க்கிறோம்.’’
என்றார், காவலர்.
யான்யானின்
ஊமைச் சகோதரன் உற்சாகத்தில் கீச்சிட்டு, அவன் தங்கையின் பறத்தல் அசைவுகளைப் போலச்செய்து
காண்பிப்பதாகக் கைகளைச் சிறகசைத்துக்கொண்டிருந்தான்.
யான்யானின்
அம்மா கண்ணீர் விட்டுப் புலம்பினாள். ‘’ போன பிறவியில் என்ன செய்தேனோ தெரியவில்லை,
இப்போது என் தலையில் இப்படி வந்து விடிந்திருக்கிறது.’’
‘’சும்மா
அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே, வயதான அத்தையே. அங்கேயிருந்து உன் மகளைக் கீழே இறக்குகிற
வழியைப் பார்.’’ என்றார், காவலர். ’’ அவள் எப்போதுமே மன உறுதியான பெண். நான் சொல்வதை
அவள் கேட்பாளோ, என்னமோ, கேட்காமலும் போகலாம்.’’ என்று சோகமாகக் கூறினாள், யான்யானின்
அம்மா.
‘’அடக்கம்,
பணிவு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை, வயதான அத்தையே, அவளைக் கீழே வா
என்று கூப்பிடுங்கள்.’’என்றார், காவலர்.
தள்ளாடும்
சிறிய கால்களால் மெல்ல நடந்து, யான்யானின் அம்மா, அவள் மகள் தொற்றி அமர்ந்திருந்த மரத்துக்கு
நகர்ந்து தலையைப் பின்னுக்கிழுத்து அண்ணார்ந்து
நோக்கிக் கண்ணீரோடு, ‘’ யான்யான், நல்ல பிள்ளை
இல்லையா, அம்மா சொல்வதைக் கேளும்மா. தயவுசெய்து இறங்கி விடு. எனக்குத் தெரியும், உன்னை
மோசம் செய்துவிட்டதாக நீ நினைக்கிறாய். ஆனால், அதற்கு ஒன்றும் செய்ய முடியாதம்மா. நீ
இறங்கி வரவில்லையென்றால், நம்மால் யாங்குவாவை இருத்திக்கொள்ள முடியாது. அப்படி மட்டும்
நடந்துவிட்டதென்றால் அதோடு நம் குடும்பம் அவ்வளவுதான், முடிந்துவிடும்….’’ அந்த வயதான தாயார் `ஓ`வென அழுது, அடிமரத்தில் தலையை
முட்டி முட்டிப் புலம்பினாள். பறவை தன் சிறகுகளைச் சிலிர்த்துக்கொள்வதுபோன்று ஒரு கீறல்
சப்தம் மர உச்சியிலிருந்து கீழிறங்கியது.
‘’
பேசாமல் இருங்களேனய்யா,’’ எனக் காவலர் உறுமினார்.
ஊமை,
கைகளை மேலே தூக்கி அசைத்து, அவன் தங்கையை நோக்கிக் கிறீச்சிட்டான்.
‘’யான்யான்,’’
என அழைத்த ஹாங்க்சீ, ‘’ நீ இப்போதும் மனுஷிதான், இல்லையா? உன்னிடம் துளியாவது மனிதநேயமென்று
ஒன்று மிச்சமிருந்தால், உடனே இறங்கிவிடு.’’ என்றான்.
யாங்குவாவும்
சேர்ந்து அழுதாள். ‘’ அண்ணி, தயவுசெய்து வந்துவிடுங்கள். இந்த உலகத்தில் நாம் இரண்டு
பேருமே கஷ்டப்படுபவர்கள்தான். என் அண்ணன் அசிங்கமாக இருக்கிறான், ஆனால் அவனால் பேச
முடியும். ஆனால், உங்கள் அண்ணனோ, ஊமை…. தயவுசெய்து வந்துவிடுங்கள்……. இதெல்லாம் நமக்கு
விதி…..’’ என்றாள், அவள்.
யான்யான்
மீண்டும் காற்றில் மிதந்து, கூட்டத்திற்கு மேலாக வானில் வட்டமிட்டாள். குளிர்ந்த பனித்துளிகள்
தரையில் விழுந்தன, அது அவளது கண்ணீராகவும் இருக்கலாம்.
‘’
வழியைவிட்டு விலகி நில்லுங்கள், அவளுக்கு இடம்
விடுங்கள். அவள் தரைக்கு வரட்டும்,’’ என்று அதிகாரக்குரலில் மிரட்டலாகச் சொன்னார்,
எஃகுமலை.
அந்த
வயதான தாயையும், யாங்குவாவையும் தவிர எல்லோரும் சில அடிகள் பின்வாங்கினர்.
ஆனால்,
எஃகுமலை எதிர்பார்த்தது போல விஷயம் அவ்வளவு எளிதாகிவிடவில்லை; காற்றில் வட்டமிட்டபின்,
யான்யான் மீண்டும் மர உச்சியிலேயே அமர்ந்துவிட்டாள்.
நிலவு
மேற்கு வானுக்குள் நழுவியது. இருள் மேலும் மேலும் அடர்ந்துகொண்டிருந்தது. தரையில் நின்றிருந்தவர்களைக்
குளிர் தாக்கத் தொடங்கியது. அவர்களுக்கிடையில் சோர்வும் தலைதூக்கியது. ‘’ ஏது, அந்தக்
கடினமான வழியில்தான் இதை முடிக்கமுடியும் போலத் தெரிகிறது.’’ என்றார், காவலர்.
எஃகுமலை,
‘’ எனக்கு என்ன கவலையென்றால், இந்தக் கூட்டம் அவளைத் தோப்பிலிருந்தும் விரட்டிவிடுமோ
என்பதுதான். இந்த இரவுக்குள் நாம் அவளைப் பிடிக்க முடியவில்லையென்றால், மிகமிகக் கடினமாகிவிடும்.’’
என்று விசனப்பட்டார்.
‘’
நான் என்ன நினைக்கிறேனென்றால், ‘’ என்ற காவலர், ‘’ அவளால் நிரம்பத் தூரத்துக்குப் பறக்க
முடியாது. அதனால், அவள் தோப்பை விட்டு வெளிவந்துவிட்டால், அவளைப் பிடிக்க எளிதாக இருக்கும்.’’
என அவர் யோசனையைக் கூறினார். ‘’ அவள் குடும்பம் நம்முடைய திட்டத்துக்கு ஒத்துவரவில்லையென்றால்
என்ன செய்வது?’’ என்றார், எஃகுமலை.
‘’
விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.’’ என்றார், காவலர்.
அவர்
நகர்ந்து சென்று இளைஞர்கள் சிலரிடம், அந்த
ஊமையையும், அவன் அம்மாவையும் தோப்புக்கு வெளியே அழைத்துச் செல்லுமாறு கூறினார். அந்த
வயதான தாய் இயல்பு மீறிக் கத்தி அழுதுகொண்டிருந்தாலும் அவள் எதிர்ப்பெதுவும் காட்டவில்லை.
ஆனால், ஊமை, மறுத்து, உறுமினாலும், பளபளக்கும் கைத்துப்பாக்கியை எடுத்துக் காவலர் காட்டியதும்
அமைதியாகச் சென்றுவிட்டான். இப்போது அங்கே நின்றிருந்தவர்கள், காவலர், எஃகுமலை, ஹாங்க்சீ,
வில், அம்பு சுமந்திருந்த இருவர், தவிர வேறிரண்டு இளைஞர்களுந்தான். அந்த இளைஞர்களில்
ஒருவன் நீளக்கழி ஒன்றை வைத்திருந்தான். இன்னொருவன் கையில் வலை இருந்தது.
‘’துப்பாக்கிச்
சத்தம் கூட்டத்தைக் கூட்டிவிடும். அதனால், வில், அம்புகளைக் கொண்டு பார்த்துக் கொள்வோம்.’’
என்றார், காவலர்.
‘’
எனக்குப் பார்வை வேறு சரியில்லை. என்னால் இதைச்
செய்ய முடியாது. இதைச் செய்ய வேண்டிய ஆளும் நான் இல்லை. என் குறி கொஞ்சம் தப்பிவிட்டாலும்
அவள் இறந்துவிடலாம். அதனால் ஹாங்க்சீதான் இதைச் செய்ய வேண்டும்.’’ என்று சொல்லிக்கொண்டே
வில்லையும் நன்கு கூர் தீட்டிய அம்பு ஒன்றையும் ஹாங்க்சீயிடம் கொடுத்தார், எஃகுமலை.
அதை வாங்கிக்கொண்ட ஹாங்க்சீ சிந்தனையில் ஆழ்ந்து வெறுமனே நின்றான். அவர்கள் அவனை என்ன
செய்யச் சொல்கிறார்களென்று உறைத்ததும் திடீரென்று,
‘’ என்னால் முடியாது’’ என்றான். ‘’ என்னால் முடியாது, நான் செய்ய மாட்டேன். அவள் என்னுடைய
மனைவி. இல்லையா? என் மனைவி.’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
‘’ஹாங்க்சீ’’
என அழைத்த எஃகுமலை, ‘’ முட்டாள் தனமாகப் பேசாதே! உன் கைக்குள் இருந்தால், உன் மனைவிதான்.
ஆனால், மரத்தில் தொற்றிக் கொண்டிருந்தால், அது ஏதோ ஒரு வினோதப் பறவை.’’ என்றார்.
‘’ நீங்கள்
எல்லாம்,’’ என்று எரிச்சல்பட்ட காவலர்,
‘’ உங்களால் எந்த ஒரு காரியத்தையாவது
செய்ய முடியுமா? வெறுமனே சும்மா நின்று,
`ஆ`, `ஊ`
வென்று கத்திக்கொண்டுதான் இருப்பீர்கள். வில்லை என்னிடம் கொடுங்கள்.’’
என்று சிடுசிடுத்தார்.
அவர்
துப்பாக்கியை இடுப்பு உறைக்குள் செருகிவிட்டு வில், அம்பை எடுத்து மரத்தின் உச்சியில்
தெரிந்த, அந்த உருவமைப்பினைக் குறிபார்த்து, ஒரு அம்பினை எய்தார். `சதக்` என்ற மெல்லிய
சப்தம், அவர் இலக்கைத் தாக்கிவிட்டாரென்பதைத் தெரிவித்தது. மரத்தின் உச்சி சலசலத்தது.
அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அடிவயிற்றில் தாக்கிய அம்புடன், யான்யான் நிலவொளியில்
உயர்ந்து எழுந்தாலும், அருகிலிருந்த சற்றுஉயரம் குறைந்த மரத்தின் உச்சியில் வேகமாக
விழுந்தாள். அவளால் நீண்ட நேரத்துக்குச் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையென்பது
தெளிவாகத் தெரிந்தது. காவலர், மற்றொரு அம்பை எடுத்து வில்லில் பொருத்திக் குட்டையான
பைன் மரத்தின் உச்சியில் கைகால் பரப்பிக்கிடந்த யான்யானைக் குறிவைத்து, ‘’ வா, கீழே
இறங்கு!’’ எனக்கத்தினார். அந்தச் சப்தம் மறையுமுன்னரே
அவரது அம்பு வில்லிலிருந்தும் பறந்தது. வலியின் கத்தல் கேட்டது; யான்யான் தலைகீழாக
விழுந்தாள்.
‘’
அட வேசிப்பயல்களா,’’ என அலறிய ஹாங்க்சீ, ‘’ என் மனைவியைக் கொன்றுவிட்டீர்களே, பாவிகளா…..’’
எனக் கத்தினான்.
தோப்பிலிருந்தும்
அகன்றிருந்தவர்கள் அரிக்கன்களோடும் கைமின் விளக்குகளோடும் வந்தார்கள். ‘’ அவள் செத்துவிட்டாளா?’’
பெருத்த ஆவலோடு கேட்டவர்கள், ‘’ அவள் உடம்பில் இறகுகள் இருக்கின்றதா?’’ என்றனர்.
எதுவும்
பேசாமல், எஃகுமலை நாய் இரத்தமிருந்த வாளியை எடுத்து, யான்யானின் உடல் மீது வாரியடித்தார்.
Source: www.ou.edu/uschina/newman/MoYan.Soaring.DoubleSidedBooklet.pdf
மலைகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது.
கோடையில் ஒரு மழை - ஆதி பதிப்பகம், ஏப்ரல் 2014 முதல் பதிப்பு நூலிலும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment