Wednesday, 13 January 2016

கென்யா சிறுகதை - அப்பாவின் தலை - My father`s Head by Okwiri Oduor

 அப்பாவின் தலை (My Father’s Head)  

ஆங்கிலம் : ஓக்விரி ஒடுவார், கென்யா (Okwiri Oduor  )   

தமிழில் ச. ஆறுமுகம்

download (10)
•••
(ஓக்விரி ஒடுவார் – கென்யாவின் நைரோபியில் பிறந்தவர். அவரது குறுநாவல் The Dream Chasers காமன்வெல்த் புத்தக விருது 2012 விழாவில் மிகச் சிறப்பாகப் புகழப்பட்டது. My father`s Head கெய்ன் 2014 விருது பெற்றது)

•••••••
என் அப்பாவை அழைக்கவேண்டுமென்று நான் நினைத்தது, அவருடைய தலை பார்ப்பதற்கு எப்படி இருக்குமென்று தெரிந்துகொள்வதற்காக மட்டுமே தான், ஆனால் அவரோ இப்போது இங்கேயே இருக்கிறார். அவரை எப்படித் திரும்ப அனுப்புவது என்றுதான் எனக்குத் தெரியவில்லை.
இது எல்லாமே, வியாழக்கிழமை கிட்கம் `விழுத்தூய்மைக் கருத்தாற்றல்` சமயத் தந்தை இக்னேஷியஸ் வந்ததிலிருந்துதான் தொடங்கியது. வயதான பெண்கள் அவர்களது ஞாயிற்றுக்கிழமை உடையான அகலக்கைப் பெண்டிர் உடையணிந்திருந்தனர். வயதான ஆண்கள் வேலியிலிருந்த போகன்வில்லாக்களில் பூங்கொத்துகளைப் பறித்து அவர்களது சட்டைகளின் மார்புப்பைகளில் செருகியிருந்தனர். ஒரு வயதான மனிதர் மட்டும் அவரது பேன் வாரும் சீப்பினைக் (scratch comb) காணவில்லையெனக் கூடத்திலிருந்தும் நகராமலிருந்தபோது, நான் அவரிடம் இணக்கமாகப் பேசி, அமரவைக்க முயற்சிக்க, அவர் தலையில் அடித்துக்கொண்டே, ‘’ அடக் கடவுளே, இது தேவையா? ஒவ்வொரு நாளும் நான் எப்படியிருக்க வேண்டுமென்று நினைத்துப் பார்ப்பதற்கு உகாண்டாவிலிருந்து ஒரு போதகர் வரவேண்டுமா?’’ எனக் கேட்டார்.
முற்றத்தில் நின்ற வெண்ணெய்ப்பழ மரத்தின் (அவொகடா மரம்) அடியில் நான் வரிசையாகப் போட்டிருந்த நாற்காலிகளில், வயதானவர்கள் அமர்ந்து அவர்களது விதவிதமான புன்முறுவல்களை மீண்டும் மீண்டுமாகச் செய்து பார்த்துப் பழகிக்கொண்டிருந்தனர்., வடக்கு மத்தாரி செல்லும் ஸ்டேஜ்கோச் பேருந்தில் மிட்டாய்கள் விற்கும் பெண் ஒருவர், ஒரே அறையுள்ள வீட்டினைப் பகலில் மழலையர் பள்ளியாகவும், இரவில் விபச்சாரக் கூடமாகவும் நடத்திக்கொண்டிருந்த ஆண் ஒருவர், ஜனவரி மாதத்தில் ஐந்து பேர்களின் கண்பார்வையைப் பறித்ததே, அந்தக் கள்ளச் சாராயத்தை வடித்த பெண் என இல்லத்தில் வசிக்காத ஒருசிலரும் வந்திருந்தனர்.
தந்தை இக்னேஷியஸ் போடபோடா இருசக்கர வாடகை வாகனத்தில் வந்து இறங்கி, எல்லோர் முன்பும் அவரது தொப்பியை நீட்ட, அதில் எல்லோரும் தலைக்கொரு நாணயம் போட்டபின், அவர் போடபோடாக்காரருக்கு ஐம்பது ஷில்லிங் கொடுத்தார். போடபோடாக்காரர் `கடவுளைப் புகழுங்கள்` எனச் சொல்லிவிட்டு, வந்த வழியே திரும்பி ஓட்டிச் சென்றார்.
தந்தை இக்னேஷியஸ், கோட்டினைக் கழற்றிவிட்டு, ‘‘ தந்தை இக்னேஷியஸ் ஒகெல்லோ, நியூ சேப்லின் ’’ என அடையாளமிட்டிருந்த நாற்காலியில் அமரவும் ஏற்கெனவே, வெண்ணெயென உருகும் புன்முறுவல் பழகிக்கொண்டிருந்த வயதானவர்கள், அந்தப் புன்முறுவலை அவருக்கு வழங்கினார்கள். அவர்கள் எதைக்கண்டு புன்னகைத்தார்களோ, அது முடைநாற்றமாகக் காற்றில் கலந்து, நெடுநேரமான பின்னர், அந்தப்புன்னகை, அவர்களது இதழ்க்கடை ஓரமாகக் கசிந்து ஒழுகி, அவர்களது மடிகளில் சொட்டி மறைந்தது. தந்தை இக்னேஷியஸ், ‘’ கடவுள் உங்களோடிருக்கட்டும்,’’ எனப் பகரவும், ‘’உங்களோடும் கூடத்தான்,’’ என்றார்கள், அவர்கள். பின்னர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்; பாடினார்கள்; பின்னர், விருந்துண்டார்கள்; ரொட்டித் துண்டுகளைத் தேநீரில் தோய்த்து உண்ணுகையில், அவர்களது கம்பளி சுவெட்டர்களின் கைப்பட்டைகளில் துகள்கள் விழுந்தபோது, ஆவிபறக்கும் ஏலக்காய் நாக்குகளால் நக்கி, அவற்றை உள்ளிழுத்துக் கொண்டார்கள்.
தந்தை இக்னேஷியஸின் முதல் போதனை அன்பைப் பற்றியதாக இருந்தது; ‘நீங்கள் உங்களை நேசிப்பது போல் அண்டைவீட்டாரையும் நேசியுங்கள்’ என்கிற வகையான தன்-ஒவ்வாமையுள்ள விருப்பமற்ற விஷயங்கள். வயதானவர்களுக்கு அன்பினால் எந்தப் பயனும் இல்லை; அவர்கள் தந்தை இக்னேஷியஸுக்கு ஏற்கெனவே நன்றிக்கடனாகப் புன்னகையைக் கொடுத்திருக்கும்போது, அவர்கள் உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்பியதெல்லாம், கிட்கம், எந்தமாதிரியான ஊர்? பாகிசு மக்கள் உண்மையிலேயே மனித மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் தானா? என்பதைத்தான்.
நான் என்ன தெரிந்துகொள்ள விரும்பினேன் என்றால், அன்பு என்னவோ கிலோக்கணக்கில் எடையிடக்கூடிய பருப்பொருள் போலவும், அதனை கண்ணாடி ஜாடிக்குள் வைத்து, மூடி, அண்டை வீட்டவர் விரும்பியபடி எடுத்துக்கொள்ளக் கூடியதாக, எல்லோரும் பார்க்கும்படியாக நிலையடுக்கில் வைக்க முடியும் என்பது போலவும், ‘’ இதோ, பாருங்கள் : என்னிடம் எல்லாமாகச் சேர்ந்து மொத்தத்தில் பத்து அன்புகள் இருக்கின்றன. அவற்றில் மூன்றினை என் நாட்டுக்காக இருப்பு வைத்துக்கொண்டு, மீதி எல்லாவற்றையும் அண்டை வீட்டவர்களுக்காகக் கொடுக்கிறேன்.’’ எனச் சொல்லமுடியுமென்பது போலவும் எல்லோருக்கும் அறிவுரைத்துக்கொண்டிருக்கும், தந்தை இக்னேஷியஸ், தன்னைப் பற்றி எந்த மாதிரியான மனிதர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார், என்பதைத்தான்.
கோப்பையின் மேல்விளிம்புக்கும் மேலாக வழிந்து முக்காலியின் கால் வழியாகச் சொட்டி, அவரது கான்வாஸ் காலணியை நனைத்துக் கொண்டிருந்த அளவுக்குத் தேநீரை நிரப்பிக் கொண்டிருந்த தந்தை இக்னேஷியஸின் செயல்தான் எனக்குள், அப்பாவைப் பற்றிய நினைவுகளைக் கிளறியிருக்கவேண்டும். ஒரு கணம், நான் அச்சோலி வீரக்கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்ததை அடுத்து, அவரது கை கால்கள் அசைவதாக, அவரது உதடுகள் வார்த்தைகளை உமிழ்வதாக, பிம்பங்களைக் கோர்த்து, இறுதியாக, அது ஒரு கனவுருப் பொம்மை போலத் தெரிவதில் முடிய, அவரைப் பற்றிய என் நினைவுகள் வெறுமனே நாடகக் காட்சிகளாகவே இருந்தன.
தந்தை இக்னேஷியசுக்கு அவருக்கான தனியறையைக் காட்டிவிட்டு, மேஜையைச் சுத்தம் செய்து, நாற்காலிகளை மீண்டும் உள்ளே கொண்டு போய் அதனதன் இடத்தில் போட்டுவிட்டு, எனது பணப்பையை எடுத்துக் கொண்டு, `உதிரு`வுக்குப் போகும் மெட்டட்டு(வாடகை வேன்)வைப் பிடிக்க ஓடியானுக்கு அவசரமாக ஓடிக்கொண்டிருந்த போதுங்கூட, அப்பாவின் கண்ணில் தெரிகிற சோளநிறப் புள்ளிமச்சத்தையும், கோட்டுப் பைகளில் எப்போதும் அவர் மறந்து விட்டுவிடுகிற ஐம்பது சென்ட் நாணயத்தையும், ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் எங்கள் முன்கதவினைத் தட்டி, ‘’ ஜான்சன், நீங்கள் இப்போதே வரவேண்டும்; தண்ணீர்க் குழாய் உடைந்துவிட்டது; நாங்கள் சாக்கடைத் தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறோம்!’’, ‘’ ஜான்சன், சட்டையெல்லாம் போடுவதற்கு நேரமில்லை; அப்படியே வா; உடனே போகவேண்டும், அந்த வேலைக்காரப்பெண் குழந்தையைப் பெற்று கழிவறைக் கோப்பைக்குள் தள்ளிவிட்டாள்!’’ என்றவாறு வருகிறவர்களைப் பற்றியும் நினைத்துக்கொண்டேயிருந்தேன்.
ஒவ்வொரு நாளும் வேலை முடிந்ததும், தீயில் வாட்டித் தெருவில் விற்கும் மக்காச் சோளக்கதிர் ஒன்றை வாங்கி, ஒவ்வொரு மணியாகக் கடித்துச் சுவைத்துக்கொண்டே, வீட்டுக்குச் சென்றதும் உடையிலிருந்து வளைந்து நெளிந்து ஒருவழியாக மஸ்லின் உடையைக் களைந்துவிட்டு டுங்கரி(பருத்தி நூல் காற்சட்டை, மேற்சட்டைத் துள்ளலுடை) அணிந்து, மசாலாத் தேநீர் குடிப்பேன். அதன் பின்னர், ஒருநாள் அப்பாவின் ஆயுதங்கள் பையைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தேன். சுவரில் ஒட்டியிருந்த பழைய தள ஓடுகளை உளியால் கொத்தி, உடைக்க, அவை என் காலணிகள் மீது விழுந்தன; கொழுந்து விட்டெரியும் தீநாக்குகளின் புகை மண்டலமாகத் தூசு எழுந்து, கவிந்து கறைபடிந்த கண்ணாடிச் சுவர்களின் துளைகள் வழியே வெடித்துச் சிதறியது.
அதுபோன்ற செய்கைகளில் ஈடுபட்டிருந்த நான், இம்முறை, அப்பாவின் காலடியில் உட்கார்ந்திருக்க, அப்பா ஒரு கை வேர்க்கடலையை அள்ளி, உள்ளங்கைகளில் அரக்கி, வாயில் போட்டு மென்று கூழாக்கிப் பின்னர், அதனை எனக்கு ஊட்டியதை நினைத்தேன். அப்படியான கூரிய அறிவார்வ வயதிலிருந்த என்னால் அப்போது என் பற்களாலேயே வேர்க்கடலையை மென்று விழுங்கமுடியும்; இருந்தாலும் அப்படியான மென்மைமிக்க, வெதுவெதுப்பான அன்புக்கு ஆசைகொள்ளும் இளையவளாக இருந்தேன். அந்த அன்பிற்கு சித்தாந்த விளக்கமளிக்கவோ அல்லது இருமல் மருந்துக் குப்பியின் மூடியால் அளக்கவோ தேவையில்லை.
கிட்கத்திலிருந்து தந்தை இக்னேஷியஸ் வந்திருந்த வியாழக்கிழமை இரவு முழுவதும் வரவேற்பு அறையின் தரையில் குப்புறப் படுத்து, அப்பாவை வரைவதில் கழித்தேன். உள்ளுக்குள் அப்பாவின் முகம் தெரிந்தது; அவரது முகவாயைச் சுற்றியிருக்கும் மடிப்புக்கோடுகள் தெரிந்தன; அவரது கண்களுக்குள் ஒளிர்ந்து மின்னுகிற, அந்தச் சிறு மென் குமிழ்களை, பக்கவாட்டுக் கன்னத்தில் காது இணையும் செவித்தடத்தைப் பார்க்க முடிந்தது. அவரது சட்டையின் கழுத்துப்பட்டையில் எண்ணெயும் வியர்வையும் படிந்த அழுத்தமான கோட்டினை, அழுந்தப் படிந்த அழுக்குக் கோட்டிலிருந்தும் கிளை பிரிந்து அதனதன் விருப்பப்படிச் செல்கிற மெல்லிய, தவிட்டுநிறச் சிறு நரம்புகளைக் கூடக் காணமுடிந்தது; இது எல்லாவற்றையும் பார்க்க முடிந்தாலும், நான் என்னதான் முயன்றாலும், காகித எல்லைக்குள் அவரது தலை மட்டும் வரவே மாட்டேனென்றது. அவரது பாதத்திலிருந்து தொடங்கி, நான் மேலாகப் போகப்போக, இறுதியில் அப்பாவின் தலை காகித எல்லைகளுக்கப்பால் பரந்து, நெகிழித் தக்கை மீது மெருகிட்ட மெழுகுத் துணியின் பிடரிப்பகுதியையும் கடந்து, நெகிழித் தரைவிரிப்பையும் தாண்டிக் குளியலறைச் செருப்பு வரையிலும் கூட நீண்டது. நான் வரைந்த படங்களை விபோவிடம் காட்டினேன். விபோ, அந்த முதியோர் இல்லத்தில் சமையல் வேலை செய்பவள்; நான் எளிதில் தோழமை கொள்பவளாக இருந்தாள்.
‘’ கடவுளே!’’ என்ற விபோ உதடுகளைக் கடித்துப் பின் அவற்றைவிடுவித்து, ‘’ சிம்பி, இது ரொம்ப அசாதாரணம்.’’ என்றாள். `அசாதாரணம்` என்ற சொல் துண்டு,துண்டுகளாக வெளிவந்து, மேஜையின் கூரான விளிம்பின் மேலாக விழுந்து உடைந்து, நெகிழித்தரைவிரிப்பின் மீது வண்டல் துகள்களானது. விபோ, அவளின் தாடையை இருபுறமும் உள்ளங்கைகளால் தாங்கி அமர்ந்திருக்க, அவளது பாலேட்டுநிற `கஃப்தான்` உடையின் மணிவாய்க் கைகள் அவற்றுக்குள் பூசணிக்காய்களை வைத்திருந்ததுபோல் கூம்பாக விரிந்தன.
என்தந்தைக்கு ஒருவேளை முகம் மட்டுமே இருந்து, தலை இல்லாமலிருந்திருக்குமோவென நான் நம்பத் தொடங்கியிருந்ததை அவளிடம் கூறினேன். மேற்கொண்டு, எனது அப்பாவுக்கு ஒரு தலை இருந்திருந்தாலும், நான் அதைப் பார்த்திருந்திருக்கவில்லை; ஒருவர் அடிக்கடி பார்க்கிற பொருளாக மனிதர்களின் தலைகள் இல்லை. ஒருவர் சாதாரணமாக ஒரு மனிதரைப் பார்க்கிறாரென்றால், அவர் பார்ப்பது, முகத்தை மட்டுமே; வழக்கமான இயல்பில் முகவடிவிலான ஒரு முகம், அதாவது, வழக்கமான இயல்பில் தலைவடிவிலான ஒரு தலையை மூடிமறைத்திருக்கும் முகம்; அந்த முகம் குறிப்பிடத்தக்கதாக இருந்தால் இருமுறை பார்க்கிறார். ஒருவரின் கண்களை ஈர்க்குமளவுக்கு, மற்றவரின் தலையில் பொதுவான அம்சமாக என்னதான் இருக்கிறது? ஒருவர் ஒரு மனிதரைப் பார்க்கின்ற அநேக தருணங்களிலும், அவரது தலையைக் கண்களால் காண்பதேயில்லை.
விபோ இடுப்பளவு உயரமுள்ள சமையல் மேடையில் நின்று, தண்ணீர் கொதிக்கும் பானைக்குள் மரச்சீனிக் கிழங்கு மாவினைக் கொட்டித் துடுப்பு போன்ற பெரிய சட்டுவத்தால் கலக்கிக்கொண்டிருந்தாள். ‘’ குட்டீ, ‘’ என்ற அவள், ‘’ அந்தப் படங்களிலிருப்பது, உன் அப்பாதானென்று எப்படிச் சொல்லமுடியும்?’’ அதில் முகம் இல்லை; தலை! இல்லவேயில்லை.’’ என்றாள்.
அவருடைய ஆடைகளை எனக்குத் தெரிகின்றது. அவர் எப்போதும் சிவப்பு நிறத்தில் குர்துராய் (முறுக்கு நூலிழைகளால் நெய்யப்பட்ட) காற்சட்டைக்கு ஜோடியாக மஞ்சள் மேற்சட்டைதான் அணிவார்.’’
விபோ தலையை அசைத்தாள். ‘’ இலேசான கூடை ஒன்றாவது வைத்துக்கொண்டால்தான் யாரும் மழையிலிருந்து தப்பிக்க முடியும்.’’ என்றாள்.
அது, வயதானவர்கள் அவர்களது மரத்தாலான குமிழ்மணிகளை உருட்டிக்கொண்டே ஜெப மந்திர முணுமுணுப்புகளுக்கிடையே தூக்கத்தில் தலையாடும் நேரமாக இருந்தது. பாராயணஞ்செய்த ஜெபமாலை முழுவதையும் ஒப்பித்துவிட்டதாக அவர்கள் நம்பிக்கை கொள்ளப் போதுமான அளவு நேரத்துக்கு, அவர்களின் கறைபட்ட மதியத்தூக்கத்தை நான் அனுமதித்தேன். பின்னர், நான் கயிறுகளை இழுக்க, மதிய உணவுக்கான மணி கணகணவென ஒலித்தது. மேஜைக்கு எட்டு, எட்டுப் பேர்களாக அமர்ந்த அந்த முதியவர்கள், மக்காச்சோளக் களியைப் புளிக்கும் பயறு மற்றும் வெண்டைக்காய் சூப்புடன் சேர்த்து வாய்க்குள் திணித்துக்கொண்டே, ‘’கடிமாவின் கடையில் சப்பாத்தி வாங்காதே – கடிமாவின் மனைவி, மாவின் மீது உட்கார்ந்து, புட்டத்தாலேயே சப்பாத்தி தேய்க்கிறாள்’’ அல்லது ‘’ வாம்புவாவைப் பற்றி உங்களுக்குச் சொன்னேனா? குழந்தை ஒன்று அதன் அழுகையை நிறுத்தாததால், அவளுடைய பசு, அந்தக் குழந்தையைத் தின்றுவிட்டதாம்.’’ போன்றவற்றைப் பேசிக்கொண்டிருந்தார்கள். பிற்பகலில், அவர்களின் கழிகலன்(bedpans)களைச் சுத்தம் செய்துவிட்டு, அவர்களின் பாதங்களை, சமையல் சோடா கலந்த வெந்நீரில் ஊறவைத்துக் கழுவிவிட்டு, அவர்கள் இயேசுவின் இறுதி உணவு விழா இசைக்காகக் குழுமி, ஒன்றுசேர்ந்தபோது, நான், என் பணப்பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.
கரும்பு டிராக்டர் என் அப்பாவைக் கொல்வதற்கு முந்தைய கிறித்துமசின் போது, அப்பா அவருடைய தேநீரை வட்டத்தட்டில் ஊற்றிக் குடித்துக்கொண்டு, முட்டைகளைக் காப்பிக் குடுவையின் மூடியில் சூடுபடுத்தித் தின்றுவிட்டுப் பின்னர், வீட்டின் பின்புறமிருந்த இருண்ட, பயமுறுத்தும் பல்லிகளின் அறையிலிருந்து அவருடைய யமகா முரசுக்கணத்(drum-set)தை மீட்டுவந்து வராந்தாவில் உட்கார்ந்து புகைத்துக்கொண்டே, விரல் முட்டிகளில் ரத்தம் கொப்புளிக்கும்வரையில் தாளம் இசைத்துக்கொண்டிருந்தார்.
ஒருநாள், அப்பா, அவருடைய முக்காலியையும் கையிலெடுத்துச் செல்லும் வானொலிப்பெட்டியையும் கொண்டுவந்து, வராந்தாவில் அமர்ந்தார். நான் அவருடைய காலடியில் அமர்ந்து, காலணிகளின் இழைக்கயிற்றை அவிழ்த்துவிட்டு, திரட்டுநூற் காலுறைகளைச் சுருட்டியிழுத்துக் கழற்றிக்கொண்டிருந்தேன். அவர் கால்விரல்களைச் சுழற்றி அசைத்து, மடக்கி நிமிர்த்தார். அவை புளித்த பாலேடு போன்று சிறிது புழுங்கிய நாற்றத்துடன் இருந்தன. அப்பா புகைத்துக்கொண்டு, ஆப்பிரிக்காவின் கொம்பி( சோமாலியத் தீபகற்பம்)ல் ஆழமாகப்பீடித்த பஞ்சத்தைப்பற்றிய விவரணைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர், எட்டு மணி அடித்த சப்தம் கேட்டதும், குமிழைத் திருகி, மரணச் செய்திகளைக் கேட்டார். அவருக்குத் தெரிந்த யாரோ ஒருவரின் பெயர், அவர் காதுகளுக்குள் நுழையும்போதே, நெஞ்சில் புகை முட்டித் திரண்டு, மூச்சடைக்கத்தொடங்கியது.
‘’ அதைக் கேட்டாயா?, சோஸ்பீட்டர் போய்ச் சேர்ந்துவிட்டான்! மில்காவின் மகன் சோஸ்பீட்டர், மிரேர் செகண்டரியில் வேளாண்மை கற்பித்துக் கொண்டிருந்தவன். அட கடவுளே, நான் சொல்கிறேன், எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள், நானுந்தான், என்னுடைய சாவுச் செய்தியையும் நீ சீக்கிரமே கேட்கப்போகிறாய்!’’
அவருடைய மாலைத் தேநீரை, நான் எடுத்துவந்தேன். அவர், சிகரெட்டை வராந்தாவிலேயே நசுக்கியெறிந்துவிட்டு, பின் கோப்பையை மெதுவாக இதழ்களுக்குக் கொண்டுசென்றார். அவர் விரும்புகிறபடியே, சிறிது அசைந்தால்கூட அவரது கைவிரல்களும், தொடையும் வெந்து விடும்படியான சூட்டில், விளிம்பு முட்ட, முட்ட, தேநீர் ஊற்றியிருந்தது.
அப்பா, ஒரு வாய் தேநீரை உறிஞ்சிக்கொண்டே, ‘’ சோஸ்பீட்டர், எனக்கு ஒரு உடன்பிறப்பு போன்றவன். அவனுடைய இறப்பினை, வானொலியில் மரணச் செய்தி வாயிலாகவா நான் கேட்கவேண்டும்?’’ என்றார்.
பின்னர், சிறிது நேரத்திலேயே, மடக்கு சாய்மெத்தையில், அவர் படுத்திருக்க, நான் முக்காலியில் அமர்ந்து, என் பார்வையைச் சிறிது நகர்த்தினால், கூட அவரும் போய்விடுவாரோ என்ற பயத்தில், அவரையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவருடைய மரணத்தை நான் முதன்முறையாகக் கற்பனை செய்தது அப்போதுதான்; முதன்முறையாகத் துக்கம்கொண்டதும் அப்போதேதான்.
இருப்பினும், என் அப்பாவின் மரணத்துக்கல்ல, அப்போது நான் துக்கம் கொண்டது; அப்பாவின் மரணம் பற்றிய மிக மோசமான இனம்புரியாத முன்னுணர்வில், எனது நிலை குறித்தே நான் துக்கமுற்றிருந்தேன். அது எப்படியாகவிருக்குமென்று எனக்குள் தோன்றியிருந்த கற்பனை: அந்த மரணச்செய்தி, அப்பா ஏதோ ஒரு கழிவுநீர்க்குழிக்குள் மூழ்கிவிட்டதாகச் சொல்ல, எல்லோரும் என்னைச் பாதாளச் சாக்கடையின் ஆள்நுழைபுழைக்குள் மாட்டிக்கொண்ட பெரும் பல்லி ஒன்றைப் பார்ப்பது போல அய்யோ பாவமென நோக்க, அந்தச் செய்தியைக் கேட்கும்போது, நான் பச்சை நிற ஆடை – ரவிக்கைப் பகுதியில் சிவப்புப் பூக்கள் கொண்ட தையல் வேலைப்பாடு இருக்குமே, அது – அணிந்திருந்ததாகவும், என்னைப் பார்க்க வருபவர்கள் என் தோளைத் தட்டி வெதுவெதுப்பான கோக-கோலா குடுவைகளைத் தந்துவிட்டு, ‘’ செய்தியைக் கேட்ட உடன், என் துக்கத்தையெல்லாம், இந்தக் கூடைக்குள் போட்டு, நிரப்பிக் கொண்டுவந்திருக்கிறேன். பிறகெப்படி, நான், உன் அப்பாவின் மரணம் பற்றித் தெரியாத ஒரு அப்பாவியென்று, அவருடைய ஆவிக்குத் தெரியும்?’’ என்றெல்லாம் பேசுவதாகக் கற்பனை செய்திருந்தேன்.
அப்பாவின் தலை வடிவத்தை என்னால், எதனால் நினைவில் கொண்டுவரமுடியவில்லையென்பதற்கு, விபோவிடம் ஒரு விளக்கம் இருந்தது. அவள் சொன்னாள்:
‘’எல்லோருக்குமே முகத்தின் பின்னால் ஒரு தலை இருந்தாலும், சிலர் அவர்களுடையதை எளிதில் காட்டுகிறார்கள்; அவர்கள் திரும்பிக்கொண்டு, அவர்களின் பின்புறத்தை உனக்குக் காட்டுவதால், அவர்களின் தலைகளை நீ பார்க்க முடியும். உன் அப்பா ஒரு நல்ல மனிதர்; நல்லவர்கள் அவர்களின் தலைகளைக் காட்டுவதில்லை; அவர்கள் உங்களுக்கு முகங்களையே காட்டுவார்கள்.’’
ஒருவேளை, அவள் சரியாகச் சொல்வதாக இருக்கலாம். சிபலேவுக்குச் செல்லும் சாலையில், ஒரு கரும்பு டிராக்டர் எனது அப்பாவைத் தரையோடு தரையாக நசுக்கிச் சதைத்துவிட்டதென்று என் அப்பாவின் ஆட்கள் தொலைபேசியில் சொன்ன நாளில்கூட, அவரது தலையைப் பார்த்ததாக யாருமே எதுவும் சொல்லவில்லை. அவரது உடலைப்பற்றி மட்டுமே, சிறிது நொய்மை உணர்வின் அவதியோடு, கொஞ்சம் மிகைப்படுத்தி விவரித்தார்கள்:
‘அவரது கால்கள் எப்படிச் சாலை முழுதும் துகள்,துகள்களாகச் சிதறி, புதிய தார் மீது ஒட்டிக்கொண்டு, பளபளப்பாகக் கிடந்தன, அவரது ஒரு பாதம் மட்டும் அவரது எப்போதும் அணியும் டயர் செருப்புக்குள் செருகியபடியே, அவரது மிதிவண்டியை விடாமல் எப்படி உதைத்துக்கொண்டிருந்தது, என்பதோடு, கரும்புச்சாறு அவரது வாயில் நிறைந்து வழிந்து அவரது பாலியஸ்டர் சட்டையின் கழுத்துப்பட்டையை நனைத்து எந்த அளவுக்கு ஊறச்செய்திருந்தது, அவரது கண்கள் தெறித்து மழைநீர் தேங்கிய சேற்றுக் குட்டைகளுக்குள் விழுந்துவிட்டிருந்த போதிலும், அவரது முகத்தில் எப்படியான ஒரு அமைதி நிலவியிருந்தது – போன்ற விஷயங்கள்.
இவற்றையெல்லாம் கேட்ட உடனேயே, வெடித்து அழுவதற்குப்பதிலாக, நான், உண்மையிலேயே என் அப்பா நீண்ட ஒபவாமி வரிசையில் வந்தவர் தானா என்றும் அவரது ஆட்கள், அவரைக் கல்லறைக்குள் உட்கார்த்தி வைத்து, அவரது கழுத்தைச் சுற்றி அரசவம்சத்துச் சோளிமாலை அணிவிப்பார்களா என்றும் வியந்துகொண்டிருந்தேன்.
‘’அது என்னவாக இருந்தாலும்,’’ என்ற விபோ, ‘’உன் அப்பாவைப்பற்றி நினைப்பதற்கு அதிகமாக என்ன இருக்கிறது? ஊம்,…, பால் எப்போதோ கொட்டிப்போய்விட்டது. அது தயிராகி இப்போது மண்ணுக்குள் போயிருக்கும்.’’ என, நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே போனாள்.
நான் அன்று முழுதும் துயிற்கூடப் படுக்கைகளின் உறைகளைக் களைவதிலும், மெத்தைகளை வெயிலில் உலர்த்துவதிலும், மெத்தைகளின் நெகிழி(பிவிசி)உறைகளைச் சுரண்டித் தேய்த்துக் கழுவுவதிலுமாகக் கழித்தேன். முதியவர்களில் ஒருவர் எனக்குத் துணையாக இருந்தார். அவருடைய கடைசி காலத்தை, ஒளி மங்கும் வருடங்களை, முதியோர் இல்லத்தில் செலவழிக்க எப்படி வந்துசேர்ந்தாரெனக் கூறினார். 1998, ஆகஸ்டு மாதத்தில், மொம்பசாவிலுள்ள அவரது வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்காக, மாலை நேரத் தொடர் வண்டியைப் பிடித்துவிடலாமென, அவர் நிலையத்தில் நின்றிருக்கிறார். அமெரிக்கத் தூதரகத்தில் குண்டு வெடித்ததும், அரபு இனக்கூறு கொண்ட எல்லாநபர்களையும் காவல்துறை வலைவீசிப்பிடித்தது. அப்போது, அவருக்கு வயது 72 என்பதாலோ அல்லது ஏற்கெனவேயே முதுமையில் அதிகமாகத் தளர்ந்து தொய்ந்திருந்ததாலோ, அவரை இந்த முதியோர் இல்லத்தில் வீசியெறிந்துவிட்டுப் போய்விட்டார்கள்; அன்றிலிருந்து அவர் இங்கேதான் இருக்கிறார்.
‘‘ உங்கள் ஆட்கள் யாரும் இவர் எங்களவர்தான் என உரிமை கோரி வரவில்லையா?’’ நான் கொதித்துப்போய்க் கேட்டேன்.
அந்த முதியவர் திக்கிச் செருமிக்கொண்டார். ‘’ என் ஆட்கள்?’’
‘’ ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிமையானவர்கள் இருக்கிறார்களே!.’’
அந்த முதியவர் சிரித்தார். ‘’ நீங்கள் ஏற்கெனவே சாப்பிட்ட உணவு மட்டுமே உங்களுக்குச் சொந்தமானது.’’
பின்னர், மைதானத்தில் அங்கங்கே குடைகளாகத் தெரிந்த புதர்க்கூட்டங்களுக்குள் முதியவர்கள் உட்கார்ந்தார்கள். நானும் விபோவும் சமையலறைப் பின்படிக்கட்டில் நின்று கவனித்துக்கொண்டிருந்தோம். புல் பரப்பில் எறும்புகள் நெளிந்து துடிக்கும் கம்பளிப்புழு ஒன்றை அரித்து விழுங்கிக்கொண்டிருந்தன. நாய் படுத்துக்கிடந்தது. அதன் ஒளி கசியும் இளஞ்சிவப்பில் பச்சை நரம்புகள் கிறுக்கல்,கிறுக்கலாகத் தெரிகின்ற மூக்கு வெட்டிவெட்டியிழுப்பது போல விரிந்து, சுருங்கியது. ப்ளுமேரியா பேரரளி(frangipani) மரத்தின் மேலாக பறவைகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுப் பறந்தன. அவற்றில் ஒன்று மின்கம்பியில் பட்டுத் தெறித்து, பாசி படர்ந்த மின்கம்பத்தில் மோதித் தலை நசுங்கியது.
குளவிகள் தாழ்ந்து புற்களின் மேலாகப் பறந்தன. அடுக்கியிருந்த மரக்கட்டைகள் மீது அடர்ந்து படர்ந்திருந்த பூஞ்சைக்காளான் மீது பல்லி ஒன்று ஊர்ந்தது. நாய் அதன் முன்கால் ஒன்றின் பாதத்தின் உட்புறத்தை நக்கியது. அரசவம்சத்து வண்ணத்துப்பூச்சி நடனக் கலைஞர்கள் குழு ஒன்று லில்லி மலர்க்கூட்டம் மீது பறந்து திரிய, அவர்களுடைய வண்ண வண்ண நடன உடைகள் காதில் விழாத முரசுத்தாளத்திற்கேற்பப் படபடத்தன. துடித்து நெளியும் கம்பளிப்புழுவும் அதை அரிக்கும் எறும்புகளும் திகைத்துத் திணறிப் பதைத்து ஓடும்படி நாய் புல்லின் மீது புரண்டு படுத்தது. நாயின் மார்புக்காம்புகள் அதன் முடியடர்ந்த அடிப்பக்கத்தில் ஆட்டுப் புழுக்கைகளை ஒட்டிவைத்தது போலிருந்தன.
’’ உன் அப்பாவின் தலை வடிவத்தை உன் ஞாபகத்துக்குக் கொண்டுவர நான் உனக்கு உதவ முடியும்.’’ என்றாள் விபோ.
‘’இப்போது, என்ன மண்ணாங்கட்டிப் பேச்சை நீ ஆரம்பிக்கிறாய்?’’ என்றேன், நான்.
விபோ அவளுடைய ஆட்காட்டி விரலை எச்சில்படுத்திவிட்டு, உறுதியான வீராப்பாக நிமிர்த்திக் காட்டினாள். ‘’ நான் உறுதியாகச் சொல்கிறேன், பைபிள் வாசகம்! நான் உனக்கு உதவ முடியும்! நான் உனக்கு உதவ முடியும்!!’’
நான் இப்போது சொல்கிறேன், கேட்டுக்கொள்: ஒருநாள் தன்னைத்தானே நாடுகடத்திக்கொள்ளும் இந்த அயலக வாழ்க்கையை விட்டுவிட்டு, உன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வாய். அங்கு உன் அம்மா மிக உயர்ந்த சீனத் தட்டினை உனக்காகவே வெளியே எடுப்பாள். உன் அப்பா உனக்காகவே கொழுத்த விடைச் சேவலைப் பிடித்துக் கொல்வார். அக்கம் பக்கத்து வீட்டவர்கள், உன்னோடு சேர்ந்து சாப்பிட விருந்து கொண்டு வருவார்கள். உன் சகோதரி அவளுடைய முழுநீளக் கடல்நீல ஆடையை அணிவாள். உன் சகோதரன் அரிசிச் சோற்றையும் குழம்பையும் கையால் பிசைந்து விரல்களில் கோரி உறிஞ்சாமல், கரண்டியால் சாப்பிடுவான். நீயோ, இங்குள்ளவர்களைப் பற்றிய கதை அல்லாமல், உணவு நேரக் கைத்துண்டுகளை `ஜிக் ப்ளீச்`சில் ஊறவைத்துத் துவைத்துப் பயன்படுத்துபவர்களைப்பற்றியும் லண்டன் என்னமோ, `அகாம்பா பேருந்தில் ஒருவர் ஏறிவிட்டால் போதும், நகுரு, கிசுமு, காகமேகா ஊர்களைத் தாண்டியதும் லண்டன் போய் விழுந்துவிடலாம்!` என்பது போல லண்டனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பாய்.
முலாம் பழங்களைத் துண்டு துண்டுகளாக அரிந்து சாப்பிடும் மனிதர்களைப் பற்றியல்லாமல், இரண்டாகப் பிளந்து இரண்டு பாதிகளையுமே கரண்டியால் தின்று முடிக்கும் மனிதர்களைப்பற்றிப் பேசுவாய். நகரத்தில் தெருவிளக்குகளைச் சுற்றி, ஒருவரோடொருவர் கைகளைக் கோர்த்துக்கொண்டு, அம்மாக்களின் சங்க(Mothers` union )ச் சாம்பல் நிறக் குறும்பாவாடைகள் சுழல,
பேனாக்கத்தியை ஒரு முகவர், சுற்று! சுற்று!!
ஆசிரியருக்குக் கொடுத்தார், சுற்று! சுற்று!! என்று பாடிக்கொண்டே கயிறாடும் பெண்களைப்பற்றிப் பேசுவாய்.
உன்னுடைய ஆட்களெல்லாம் உனக்குச் சொந்தமானவர்களென்றும், அவர்களின் நெஞ்சுக்குள்ளும் எண்ணங்களிலும் உனக்கு இடம் இருப்பதாக நீ நினைக்கிறாய். நீ எப்போது திரும்பி வருவாயென அவர்கள் காத்திருப்பதாக நீ நினைக்கிறாய்.
உன் வீட்டுக்கு, உன் ஆட்களிடம் திரும்பும் நாளில், வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் தனியாக உட்கார்ந்து புகைத்துக்கொண்டிருப்பாய். ஏனென்றால், நீ திரும்பி வரவேண்டுமென்று விரும்பியதென்னவோ, உண்மைதான், ஆனால், நீ அங்கேயே தங்கிவிடவேண்டுமென்று யாரும் நினைப்பதில்லை.
பழைய நாட்களில் போலவே, அப்பா, வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் புகைபிடித்துக்கொண்டே கை-வானொலி கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். வானொலியிலிருந்து இறப்புச்செய்திகள் எழுந்து, பனி மூட்டம் போலாகித் தாழ்ந்து தவழ்ந்து இருக்கை அறையின் குளிர்ந்த கண்ணாடிகளின் மீது பரந்து நின்றது. அப்பாவின் சட்டை காற்றில் படபடக்க, புகைச்சுருள்கள் அவர் முன் குறுக நடனமாடிக்கொண்டிருந்தன. அவர் தனக்குள்ளாகவே விசில் அடித்த்தார். அதன் இசை முதலில் முகமற்றதாக. பாதையில் கண்ட வெற்றுப்புட்டி ஒன்றை யாரோ வீடு வரைக்கும் உதைத்து, உதைத்துக் கொண்டுவந்தது போல இரங்கத்தக்கதாக இருந்தது. பின்னர், அந்த இசை வேற்று இராகங்கள் பலவற்றின் துணுக்குகளை உட்கொண்டு, அது தன்போக்கில் ஏறுவதும் இறங்குவதுமான அதன் விடுதலை உணர்வை இழந்தது.
அப்பவுக்குத் தலை இருந்தது. அதைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்ததை என்னால் உணரமுடிந்தது. அவரது தலை நீளவாக்கிலான மஞ்சள் பூசணிக்காய் (Butternut squash) வடிவத்தில் இருந்தது. அதனால்தானோ என்னவோ நான் அதைப்பற்றி முழுமையாக மறந்திருந்தேன்; அதைப்பார்ப்பது வெறுப்பூட்டுகிற, என் மனவுறுதியைக் குலைக்கிற விஷயமாக இருந்தது.
அப்பா ஒரு குழாய்ப்பணியாளராக இருந்தார். அப்பாவின் விரல்கள் அவர் பழுது பார்த்து, துளைகள் அடைத்து ஒட்டவைக்கும் கழிவுநீர்க் குழாய்களில் ஒட்டியிருக்கும் மிச்ச சொச்சங்கள் தாம் அவரது கைவிரல் நகக்கண்களில் விளிம்புகட்டியிருந்தன. சமையலறை அங்கணத் தொட்டிகளின் இன்னவென்று கூற முடியாத கழிவுகளின் சேற்றுக்களிதான் அவரது காலணிகளை இப்போதும் இஷ்க்,இஷ்க் எனச் சத்தமிடச் செய்கிறது. அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அவர் ஒருநாள் யாருடைய மலத்திலோ மறைந்துகிடந்த ஒரு தங்கச்சங்கிலியை அவருடைய குர்துராய் காற்சட்டையிலேயே மலத்தைத் துடைத்துவிட்டு, நாகின் பாட்னி (நைரோபியின் கவுண்டா தெருவில் அமைந்துள்ள, புகழ்பெற்ற ஒரு நகைக்கடை)யில் சங்கிலியை விற்றுவிட்டு வந்ததும் அன்று மாலையே, அவர், ஒரு சிவப்பு கிரேட் வால்(Great Wall) தொலைக்காட்சிப்பெட்டியை அவருடைய தோள்களில் உயரத் தூக்கிச் சுமந்து, வீட்டுக்குக் கொண்டு வந்ததும் எனக்கு ஞாபகம் வந்தது. இருக்கை அறையின் மூலையில் அதை உட்கார்த்தி, இயங்கவைத்துவிட்டு, ‘’ பாரேன், அது எப்படிப் பளபளக்கிறதென்று, எனக்குள் மலம் எதுவும் இல்லை என்பதுபோல்.’’
அன்றிலிருந்து, ஒவ்வொரு நாளும் நான் காரனேஷன் மலர்க்கொத்து ஒன்றைப் பறித்து அதன் தண்டுப்பகுதியை ஒரு கண்ணாடிக் கிண்ணத்துக்குள் நிறுத்திவைத்து, தொலைக்காட்சிப்பெட்டியின் உச்சியில் வைத்தேன். அப்படியாவது, மாலைச் செய்திகள் பார்க்கும்போது என் அப்பாவுக்கு மலத்தின் நினைவு வராமலிருக்கட்டுமே என்றுதான் அப்படிச் செய்தேன்.
நான் விபோவிடம், ‘’ நாம், அவரைத்திருப்பி அனுப்பிவிடவேண்டும்.’’ என்றேன். விபா சொன்னாள்:
“ஆமாம், ஈரல் சாப்பிடவேண்டுமென்று நினைத்தாய், அது கிடைத்துச் சாப்பிட்டும் ஆயிற்றே.’’
‘‘ஆனால், நானொன்றும் அவர் உண்மையிலேயே இங்கு திரும்பி வந்துவிடவேண்டுமென நினைக்கவில்லை; அவருடைய தலையைப் பார்க்க நினைத்தேன், அவ்வளவுதான்.’’
விபோ சொன்னாள்: “ எப்படியோ, முடிவில், அவர் உன்னிடம் திரும்பி வந்துவிட்டாரில்லையா, அதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருக்கவேண்டுமே, அதைக் கணக்கில்கொள்ள வேண்டுமில்லையா?
ஒருவேளை, என்னுடைய அப்பாவின் வருகைக்கு காரணமொன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், வீடு ஏற்கெனவேயே அவருடைய வாசனைகளால்தான் நிரம்பியிருக்கிறது – தீய்ந்த பயறு, உரிந்து உதிரும் நகம், சிங்கோனா மரப்பட்டையின் கசப்பு, அழுத்தி, அணைத்த சிகரெட் நுனிகளிலிருந்து எழும் ஈரக்கந்தல்களின் கெட்ட வாடை.
அப்பா மீது பூண்டு, நறுமணத்திரிகள், உப்பு, பன்றி இறைச்சியென எதையெல்லாமோ விட்டெறிந்து பார்த்தேன்; எதுவுமே அவரைத் துரத்தவில்லையே என்று கடைசியில் தந்தை இக்னேஷியசை அழைத்தேன். அவர் ஒரு சிறிய புட்டியில் புனித நீர் கொண்டுவந்து தெளித்தார். எனக்கு மேற்கொண்டும் பாதுகாப்பு தேவையென்றும், ஆனால், அதற்காக நான் முதலில் அவர் பெயருக்கு ஒரு காசோலை கிழிக்க வேண்டுமென்றார்.
ஒருநாள், தெரு முனையில் நான் தீயில் வாட்டிய மக்காச்சோளக்கதிர் வாங்கிக்கொண்டிருந்த போது, அதை விற்பவர் கேட்டார்: ‘’ காய்கறி விற்பவர்களெல்லாம் சொல்கிறார்கள், கடைசியில் உன்னை விரும்புகிற ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டாலும், உன் வாசல் வழியாக நுழையவிடாமல் இருக்கிறாயாமே?’’
அன்று மாலை, நான், அப்பாவை உள்ளுக்கு வருமாறு அழைத்தேன். மடக்கு சாய்மெத்தையில் நாங்கள் அருகருகே உட்கார்ந்திருந்தோம். கம்பி அளிக்கும் ஜன்னல் கண்ணாடிக்கும் நடுவிலிருந்த அழுக்கடைந்த திரைச்சீலையில் ஈ ஒன்று நகர்ந்து, நகர்ந்து ஏறுவதைக் கவனித்துக் கொண்டிருந்தோம். ஏறும்போதே, அது ஒரு சத்தம் எழுப்பிக் கொண்டுமிருந்தது. மேற்கூரை மின்விசிறி க்ரீக், க்ரீக் எனச் சத்தமிட்டு, அறை மூலையில் மீண்டும் மீண்டுமாக விட்டெறிந்த நிழல்கள் உயர்ந்து எழுந்து கதவில் ஏறிச் சுவரிலிருந்த காற்றுத் துளைகள் வழியாக வெளியே எட்டிப்பார்த்தன.
காற்று ஒரு தம்ளரைக் கீழே தள்ளியது. தம்ளர் ஒரு சில நொடிகளுக்கு சன்னல் தளத்தின் மேலாக உருண்டுவிட்டுப் பின்னர் பக்கவாட்டில் நகர்ந்து, கீழே விழுந்து தரை முழுதும் குறுந்துள்ளலோடு உருண்டோடியது. நான், தாழ்ப்பாளை இழுத்து ஜன்னலை மூடினேன். காற்று அதன் ஈர இதழ்களால் ஜன்னல் கண்ணாடியை முழுவதுமாகக் கவ்வித் துழாவி, தூசியும் இதழ்நீருமாக எச்சிற்குமிழி ஒன்றை அங்கே பதித்தது. அது, மெதுமெதுவாகக் கண்ணாடியின் விளிம்பு வரையிலும் கீழிறங்கியது. காற்றுக்கு, எச்சில் ஊறிக்கொண்டேயிருக்கிற அவ்வளவு பெரிய வாய். விரைவிலேயே அதன் எச்சில் ஜன்னல் கண்ணாடி முழுவதும் பரந்து, வெளியே நின்ற ரோஸ்மேரி புதர் மங்கித் தெரியுமளவுக்கு அடர்ந்தது. வெளியே நின்ற ஜகரண்டா ஊதாப்பூமரம் வெகுவாகக் குனிந்து கூரையை உரசியது. அடுத்த அறையில் கதவுகளும் ஜன்னல்களும் படபடவென அடித்துக்கொண்டன.
நான், அப்பாவைக் கூர்ந்து பார்த்தேன். ஒருசமயம் பார்க்கும்போது பழக்கமில்லாத ஏதோ அந்நியராகத் தோன்றிய அவர் இன்னொரு நேரத்தில் மிகவும் அறிமுகமானவராகத் தோன்றினார்; இன்முகம் கொண்டவராகவும் தோன்றினார்; சிலசமயம் பயமுறுத்துவதாகவும் தோன்றியது. அவர் எளிதில் உடைந்து போகிற, பீங்கான் தேநீர்க்கோப்பையின் கைப்பிடியாக, ஆந்தையின் வெறுப்பூட்டுகிற உறுத்தும் மஞ்சள் பார்வையாகத் தெரிந்தார்.
அப்பா எப்போதும் போல மெதுவாக, மிக மென்மையாக, ஏதோ பயத்தில் திடுக்கிட்டு, நான் கையை இழுத்துக்கொள்வேனோ என்பது போல, என் கையைப் பற்றினார். என் கண்களை உயர்த்தி அவரைப்பார்க்கும் துணிச்சல் எனக்கு இல்லை. ஆனால், அவர் என் நாடியை மெல்லத் தாங்கி, மேலே தூக்கவே, நான், வேறு வழியில்லாமல், அவரைப் பார்த்தே தீரவேண்டியதாயிற்று.
நான் சிறிய குழந்தையாக இருந்தபோது, அவர் கண்களுக்குள் கூர்ந்து அதே மாதிரிப் பார்த்த பார்வை எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. அவருடைய கண்களுக்குள் நான் பல வடிவங்களைக் கண்டேன்; எந்தப் பயனுமற்ற போதிய திறமையின்றி வரையப்பட்ட வட்டங்களும் சதுரங்களும் முக்கோணங்களும் நிறைந்த ஒரு கதம்பத்திரள். அந்த வடிவங்கள் எப்படி அப்பாவின் கண்களுக்குள் வந்தனவென்று நான் வியந்திருக்கிறேன். அவர் மேஜையில் அமர்ந்து, வண்ணப் புத்தகங்களிலிருந்து பளபளப்பான படங்களை வெட்டி, அடுக்கிப் பசையிட்டு, அவருடைய கண்மணிகளுக்குள் தற்செயல் வரிசையில் குளறுபடியான ஒட்டுப்படங்களாகத் தெரியுமாறு கண்களுக்குள் ஒட்டிக்கொண்டிருப்பாரோவென நான் கற்பனை செய்திருந்ததுண்டு.
அப்பா கேட்டார் : “சிம்பி, கொஞ்சம் தேநீர் ஏதாவது இருக்குமா?’’
நான் கொஞ்சம் தேநீர் எடுத்து வந்தேன். அவரது பழைய நண்பர் ஒபோட் சனிக்கிழமைகளில் வீட்டுக்கு வருகிறாரா என்றும் இப்போதும் வேர்க்கடலை சூப்பும் பூசணி இலைகளும், அஞ்சல் அலுவலகத்தில் பெற்ற கடிதக் குவியலையும் எடுத்து வருகிறாவென்றும் அப்பா, கேட்டார்.
நான் சொன்னேன் : ‘’ அவர் தான், பயஸ் ஒபோட், செத்து நான்கு வருடங்கள் ஆயிற்று!’’
அப்பா தேநீர்க் கோப்பையைத் தள்ளி, ஒதுக்கிவைத்தார். ‘’ நான், உன் தேநீரைக் குடிப்பதை நீ விரும்பவில்லையென்றால், சொல்லிவிடு, அதற்காக இப்படி, உன் வாயாலேயே எல்லோரையும் கொன்று-கொன்று போடாதே.’’ என்று கோப ப்பட்டார், அவர்.
பயஸ் ஒபோட்டுக்காகத் துக்கங்கொண்டு அப்பா சிறிது நேரம் அமைதியாக இருந்தார். இந்த பயஸ் ஒபோட்டை நினைத்ததும், ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் அவருடைய முட்டிக்கால் தான் எனக்கு எப்போதும் ஞாபகத்துக்கு வரும். பயஸ் ஒபோட் எப்போதும் பரக்கப்பரக்க விழிக்கிற ஒரு நபர். ஒரு முறை அவருடைய `பிரோ` பந்துமுனைப்பேனாவை, அவரது சட்டைப்பைக்குள் தேடியவர், அப்போதும் சிவப்பாக ஈரமாக இருந்த ஒரு கோழி எலும்புத் துண்டை எடுத்தார்.
அப்பா, என்னிடம், ‘’ உன்னைப் பார்த்து விட்டேன். நீ தேநீர் கொடுத்தாய். நான் இப்போது போகிறேன்.’’ என்றார்.
‘’ எங்கேயப்பா போவீர்கள்?’’
‘’ இங்கிருந்து ரொம்ப தூஊரத்திலுள்ள நகரம் ஒன்றில் வேலை தேடுவேன். அது எல்டோரெட்டாகவும் இருக்கலாம். அங்கே எனக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்.’’
‘’ என்னோடு கூட இரண்டு நாட்கள் தங்கக்கூடாதா, பாபா.’’ என்றேன், நான்.
***
குறிப்புகள்:
போடபோடா – பயணி ஒருவரை மிதிவண்டி அல்லது இருசக்கரவாகனத்தில் அமர்த்தி, பயணி விரும்பும் இடத்துக்கு அழைத்துச்சென்று வாடகை வாங்குபவர். அந்த வாகனமும் போடபோடா என அழைக்கப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் கொம்பு – சோமாலியத் தீபகற்பம்
ஜிக் ப்ளீச் – நிறுவனப் பெயர்
அகாம்பா – பேருந்து நிறுவனம்
அம்மாக்களின் சங்கம் – விற்பனையிலும் ஈடுபட்டுள்ள அறக்கட்டளை
கிட்கம் ஒரு நகரம்
எல்டோரெட் ஒரு நகரத்தின் பெயர் 
source : http://www.caineprize.com/pdf/2014_Oduor.pdf
மலைகள் இணைய இதழ், இதழ் 60, அக்டோபர் 17, 2014 இல் வெளியானது.

No comments:

Post a Comment