Tuesday 12 January 2016

ஒரு சொல் - தமிழ்ச்சொல் - முத்து

ஒரு சொல் – முத்து
இற்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டிய நாட்டு நெய்தல் தமிழர், கண்டெடுத்துப் பெயர் சூட்டிய முத்து உயிரிப்பொருளில் முகிழ்த்ததாக, முற்றாக முதிர்ந்து, மேற்கொண்டு முதிர்வதற்கில்லாததாக, முழுமையிலும் முழுமையாக ஒன்றுசேர்ந்து, உருண்டு, இறுகி, அழகியதாக, உறுதி மிக்கதாக, ஒளி மிக்கதாக, வழவழப்பு மேனியதாக, மதிப்பு மிக்கதாக, கிடைத்தற்கரியதாக, மேற்கொண்டு செப்பம் செய்யத் தேவையில்லாததாக, உடனடிப் பயன்கொள்ளத் தக்கதாகத் தெற்றென விளங்கித் தெரிவதாக இருந்தது. வெண்முத்து, கருமுத்து, பச்சைமுத்து, நல்முத்து, ஆணிமுத்து என முத்துவகை அறிந்த தமிழர் தேடிச் சேர்த்த கொற்கை முத்துக்கள் உலகெங்கும் மணிமுடிகளில், வெண்கொற்றக் குடைகளில் இடம் பிடித்தன. தமிழர் முத்து மண்டபம் கட்டினர்; முத்துப் பந்தல் அமைத்தனர்; முத்துப் பல்லக்கும் செய்தனர். முத்துக் கடுக்கன், முத்துத் தோடு, முத்துப் புல்லாக்கு, முத்து மாலை, முத்துச் சரம், முத்து வளையல் என அணிகலன்கள் ஆயிரமாயிரம் சமைத்தனர். ஆமணக்கினை முத்துச்செடி, முத்துக்கொட்டை என்று அழைத்தனர். தாவர விதைகளில் புளியமுத்து, வேப்பமுத்து, குன்னிமுத்து, ஆமணக்கு முத்து, மூங்கில் முத்து ஆகியவற்றை மட்டும்  முத்தாகக் குறித்தனர். முத்துச்சம்பா, முத்துச்சோளம் என்றும் தானிய முத்துக்களைச் செவ்வனே சுட்டிக் காட்டினர். எருது, மான் முதலியவற்றிற் பிறந்த கோரோசனையும் முத்துக்களாகப் பரிணமித்தன. முத்துப்பற்களை முத்து முத்தான பல்வரிசை என்றனர். சிந்தனை முத்து, சொல் முத்து, கவிதை முத்து எனக் கருத்தில் முகிழ்க்கும் முத்துக்களைக் குறித்தனர். தமிழை முத்து முத்தாக எழுதப் பழக்கினர். மழைத்துளி, பனித்துளியும் முத்துக்களாகின.  உழைப்பில் மட்டுமே வியர்வை முத்துக்கள் அரும்புவதை. கருணை நெஞ்சின் மாசற்ற அன்பில், கண்ணீர்  முத்துக்கள் முகிழ்ப்பதைக் கண்டு சொல்லினர். கடலில் மூழ்கி முத்தெடுப்பதால், முத்துக்குளித்தல் என்றனர். ஆருயிர் அன்பின் அழகிய வெளிப்பாட்டினை முத்தம் என்றே அழைத்தனர். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! மாற்றுச் சொல்வாரும் உளரோ?


 212 இயற்கை முத்துக்கள் பதித்த மணிமுடி. (பதினெட்டாம் நூற்றாண்டு)



கறுப்பு முத்து





No comments:

Post a Comment