நீர்ப்பரப்பின் விளிம்பருகில் (Close to the Water`s Edge)
ஆங்கிலம் : க்ளேர் கீகன் (அயர்லாந்து) Claire Keegan
தமிழில் ச.ஆறுமுகம்.
ஹாருகி முரகாமி தொகுத்து வெளியிட்டுள்ள `பிறந்தநாள் கதைகள்` நூலில், Close to the Water`s Edge என்ற பெயரிலுள்ள இந்தக் கதையின் முன்னுரையில் செல்வி, கீகன் இந்தத் தொகுப்பில் அங்கம்வகிக்கும் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் மிகவும் இளையவரென்றும், அயர்லாந்தில் விக்லோ மாகாணத்தில் பிறந்து 17வது வயதில் அமெரிக்கா சென்று நியூ ஆர்லியன்ஸ் கல்லூரியில் ஆங்கில இலக்கியமும் அரசியல் அறிவியலும் கற்பதற்காக ஆறு ஆண்டுகள் கழித்தவரென்றும் 1994ல் எழுதத் தொடங்கி, 1998ல் வெளியாகியுள்ள `அட்லாண்டிக்` என்ற தொகுப்பிலிருந்து இந்தக் கதை பெறப்பட்டதென்றும், தற்போது இவர் இரண்டாவது தொகுதி வெளியிடுவதிலும் நாவல் ஒன்றினை எழுதுவதிலும் ஈடுபட்டுள்ளாரென்றும் முரகாமி குறிப்பிடுகிறார்.
கீகன் எளிய சொற்களில் அமைக்கும் எளிய தொடர்கள் எளிய, ஆனால் ஆழமும் ஈர்ப்புமுள்ள காட்சிகளைப் பின்னிக் காட்டுகின்றன. பெயரைக்கூடச் சொல்லாத, எளிதில் இலக்காகிற, ஒரு பத்தொன்பது வயது இளைஞனின் கண்களால், கீகன், இந்த உலகை நமக்குக் காட்டுகிறார். அவனும் சிந்தனை, மற்றும் உணர்வுகளை நமக்கு நேரடியாகச் சொல்ல முயற்சிக்கவில்லை; மாறாகச் சுற்றுப்புறக்காட்சிகளே அவனைப்பற்றி நமக்குச் சொல்லுமாறு விட்டுவிடுகிறான். நம் முன்னால் முழுவதுமாகக் காட்சிப்படுகிறவரையில், அவனுடைய உலகுக்குள்ளிருந்து மெல்ல எழுந்துகொண்டேயிருந்து, அவன் மீண்டும் அதற்குள்ளேயே அமிழ்ந்துபோவதாக உணர்கிறார், முரகாமி.)
அந்த இரவில், அவன் அணிந்திருந்த ஆடைகளின் அதிவெண்மைக் கெதிராக அவனது உடம்பின் அடர்நிறம் உறுத்தித் தெரியும்படியாக, வெளியே முன் மாடத்தில் நிற்கிறான். மாசெச்சூட்ஸின் காம்பிரிட்ஜிலிருந்து அவனுடைய அம்மாவின் கடற்கரைச் சாய்தளக்கூரைமுகப்பு வீட்டில் சில நாட்கள் தங்குவதற்காக அவன் வந்து பல நாட்களாகிவிட்டன. கூர்வாள்க் கொடுமீன் சுவர்ப்படங்கள் ஒட்டப்பட்ட, மற்றும் அவரவர் பிம்பங்களைப் பார்க்காமல் எந்தச் சிறிய வேலையையும் செய்யமுடியாதபடி கண்ணாடிகள் பொருத்தப்பட்டதுமான சுவர்களுள்ள அந்த அறைகள் அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
குளிப்பவர்களையும், கடலோரமாக நடந்து செல்லும் சலவைப்பலகைத் திண்தசைவயிற்று இளைஞர்களின் ஊர்வலத்தையும் அவன், வெளியே அவனது நிழல்கள் வழியே கவனிக்கிறான். உடம்பின் எல்லாப் பக்கமும் ஒருப்போல நிறம்மாற, மடிப்புச் சாய்வு நாற்காலிப் பெண்கள் வெயிலில் திரும்பித்திரும்பி அமர்கிறார்கள். அவர்கள் கோடை காலப் புத்தகங்கள், வெயிற்தொப்பி மற்றும் குளிர்விக்கும் பியர், காப்பர்டோன் களிம்புகள், தைலங்களோடு இங்கே வந்திருக்கிறார்கள். பிற்பகல்களில் வெப்பம் தாங்க முடியாமலாகும்போது, கரையிலிருந்து அரை மைல் தூரத்துக்குக் குறையாமலிருக்கும் மணல்திட்டுக்கு அவன் நீந்துகிறான். அந்த மணல் திட்டினை, அதன் ஆழமற்ற இடங்களில் சினங்கொண்டெழுந்த அலைத்தகடு ஒன்று சிதைந்துபோவதை, அவனால் காணமுடிகிறது. இப்போது அலை முன்னேறுகிறது, வெள்ளை மணலில் மிதிபட்ட தடங்களைக் கழுவிக் கரைக்கிறது, தவிட்டுநிறப் பெலிக்கன் ஒன்று, கடந்தகாலத்தின் ஒரு சிறு துண்டாக, டெக்சாஸ் காற்றில் மிதக்கிறது. துள்ளல் பயிற்சியாளர்கள், அவர்களின் நிழல்கள் அவர்களுக்கான காவலர்களைப் போல அவர்களை ஒட்டித் தெரியுமாறு நீரின் ஓரமாகவே துள்ளுகின்றனர்.
உள்ளே, அவனது அம்மா, இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் உரிமையாளரான அவனது கோடீசுவர வளர்ப்புத்தந்தையிடம் வாதம் புரிந்து கொண்டிருக்கிறார். காதல் கொண்டவர்கள் மீதான கட்டுப்பாட்டை மனிதர்கள் இழந்துவிடுகிறார்கள் எனத் திருமண விலக்கு பெற்றதும் கூறிய அவனது அம்மா, பின்னர் இந்தக் கோடீசுவரரை மணந்துகொண்டார். இப்போது அவர்கள் பேசுவதை, ரகசியக்குரலில் உரசிக்கொள்ளும் அவர்களது கிசுகிசுப்புகள், வாதத்தின் விரிவில் வேகம் கொள்வதை அவனால் கேட்கமுடிகிறது. இது பழங்கதையாகிப் போன ஒன்று.
‘’ நான் எச்சரிக்கிறேன், ரிச்சர்ட், நீங்கள் அந்தப் பேச்சை எடுக்காதீர்கள்!’’
‘’ யார் அந்தப் பேச்சை எடுத்ததென்கிறேன்? யாரு?’’
‘’ இது அவனுடைய பிறந்த நாள், சேசுவே!’’
‘’ யாராவது ஏதாவது சொன்னார்களா?’’
அந்த இளைஞன் கீழ் நோக்கிப் பார்க்கிறான். ஒரு தாய், தனக்குத்தானே இறுகக் கட்டிக்கொண்டு, ஆவி பறக்கும் வெந்நீர்த் தொட்டியில் இறங்குகிறாள். ஒன்றையொன்று துரத்தும் குழந்தைகளின் கூச்சல் காற்றைக் கிழிக்கிறது. குடும்ப நிகழ்வுகளின் போது அவன் உணர்கிற நடுக்கத்தை இப்போதும் உணர்ந்ததோடு காம்ப்ரிட்ஜில் அரைக்காற்சட்டையும் டி. உடுப்புமாக அவனது ஆஸ்திரேலியன் பியரைக் குடித்துக்கொண்டு, கணினியில் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருக்காமல், இங்கு ஏன் வந்தோமென நினைக்கிறான். அவனது பாட்டி, இறப்பதற்குக் கொஞ்சம் முன்னர், பரிசாகக் கொடுத்திருந்த கைவளைகளைச் சட்டைப்பையிலிருந்தும் வெளியே எடுக்கிறான். முலாம் பூசப்பட்ட அந்தக் கைவளைகளின் தங்கப் பூச்சு நாட்படத் தேய்ந்து, உள்ளிருந்த எஃகு உலோகத்தை வெளிக்காட்டியது.
அவனுடைய பாட்டி, திருமணமான புதிதில் பெருங்கடலுக்கு அழைத்துச் செல்லுமாறு கணவனைக் கெஞ்சினாள். அவர்கள் டென்னெஸ்ஸீ பகுதியின் கிராமத்து மனிதர்கள், பன்றி வளர்க்கும் விவசாயிகள். அட்லாண்டிக்கைப் பார்த்ததேயில்லையென்றாள்; பெருங்கடலைப் பார்த்தால், அங்கேயே தங்கிவிடுவேனென்றாள். அவளால் வேறெதையும் விளக்கிச் சொல்ல முடிந்திருக்காது. ஆனால், ஒவ்வொரு முறை கேட்டபோதும், கணவரின் பதில் ஒரே மாதிரித்தான் இருந்தது.
‘’ பன்றிகளுக்கு யார் தீனி போடுவார்கள்?’’
‘’ பக்கத்து வீட்டுக்காரர்களைக் கேட்டுப் பார்க்கலாம்…’’
‘’ அதெல்லாம் யாரையும் நம்பமுடியாது. அது நமக்கு வாழ்க்கை ஆயிற்றே, அப்புறம்.’’
மாதங்கள் கடந்தன; வயிற்றுக் குழந்தையோடு சேர்த்து அவளும் உடல் கனத்துவிட்டாள்; கடைசியில் பெருங்கடலைப் பார்க்கவேண்டுமெனக் கேட்பதை நிறுத்திவிட்டாள். பின்னர், ஒரு ஞாயிற்றுக்கிழமையில் கணவர் அவளை உசுப்பி எழுப்பினார்.
‘’ ஒரு பையில் தேவையானதையெல்லாம் எடுத்துக்கொள், மார்ஸீ, நாம் கடற்கரைக்குப் போகிறோம்.’’ என்றார்.
அவர்கள் சிற்றுந்தில் ஏறும்போது வெளிச்சம் வந்திருக்கவில்லை. அவர்கள் ஃப்ளோரிடாவை நோக்கி, டென்னெஸ்ஸீயின் குன்றுகளைத் குறுக்காகக் கடந்து நாளெல்லாம் பயணித்துக்கொண்டிருந்தனர். நிலக்காட்சியின் மலைப்பாங்கான வேளாண் பசுமை, உயர்ந்த பனை மரங்களும் பாம்பாஸ் புற்களுமான வறண்ட பெரும்பரப்பாக மாறியது. அவர்கள் அங்கே சென்ற பொழுதில், ஞாயிறு தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்தது. அவள் வண்டியிலிருந்தும் இறங்கி, முடிவற்றுத் தெரிந்த அட்லாண்டிக்கினை இரு கண்களும் விரியப் பார்த்தாள். மாலை ஒளியில் அது பச்சையாகத் தெரிந்தது. அவள் எதிர்பார்த்திருந்த ஒன்றாக அது இல்லை. மணற்கரையில் எஞ்சிக் கிடந்தவற்றுக்காகச் சண்டையிட்டுக்கொள்ளும் கடற்பறவைகளும் கடற்பாசிகளின் நாற்றமுமாக, அது ஒரு வளமற்றத் தனிமையான இடமாக அவளுக்குத் தோன்றியது.
பின்னர், அவளது கணவர் பைக்கடிகாரத்தை எடுத்தார்.
‘’ ஒருமணி நேரம், மார்ஸீ, உனக்கு ஒருமணி நேரம் தருகிறேன்.’’ என்ற அவர், ‘’ அந்த நேரத்துக்குள் வரவில்லையென்றால், வீட்டுக்கு நீயாகத்தான் வழிதெரிந்து வந்துகொள்ள வேண்டும்.’’ என்றும் சொன்னார்.
அவள் ஒரு அரை மணிநேரம் வெறுங்கால்களோடு, கடலின் நுரைபடர்ந்த ஓரமாகவே நடந்தாள். பின்னர், செங்குத்துப் பாதையில் திரும்பி நடக்கக் குறிப்பிட்ட நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் கடந்துவிட, சில மரங்கள் ஒன்றாகக் குடைவிரித்திருந்த ஒரு இடத்திலிருந்த அவள் கணவன் கார்க் கதவினை அறைந்து சார்த்தி, காரைக் கிளப்பியதைக் கண்டாள். அவர் வேகமெடுக்கவிருந்த, சரியான அந்தக் கணத்தில் அவள் சாலையில் குதித்துக் காரை நிறுத்தினாள்.
பின்னர் அவள் காருக்குள் ஏறி, அவளுடைய மீதி வாழ்வு முழுவதையும் அவளைத்தனியே விட்டுவிட்டுச் சென்றிருக்கக்கூடிய அந்த மனிதனோடேயே கழித்தாள்.
வளைகுடாவைப் பார்த்துக்கொண்டிருக்கும், அபாரமான கடலுணவுக்குப் பேர்பெற்ற விடுதியான `லியனார்டோ`வில் ஒரு விருந்தின் மூலம் அவனுடைய பத்தொன்பதாவது பிறந்த நாள், அடையாளப்படுத்தப்பட விருக்கிறது. அவனுடைய அம்மா, வெள்ளைக் காற்சட்டையும் கோட்டுமாகத் துப்பாக்கி உலோக வில்லையில் பளிங்குக்கல் பதித்த இடைக்கச்சும் அணிந்து பால்கனியில் அவனோடு வந்து சேர்கிறாள்.
‘’ உன்னைப் பார்க்க மிகவும் பெருமையாக இருக்கிறது, கண்ணா.’’
‘’ அம்மா.’’ அவன் அம்மாவைக் கட்டித் தழுவிக்கொள்கிறான். அவள் உருவத்தில் சிறியவளாலும், சினம் நிறைந்தவள். அவள் வெளியே, கடலை நோக்குகிறாள்.
‘’ இந்தப் பட்டியைக் கொஞ்சம் இறுக்கிவிடேன்?’’ அம்மாவைக் கேட்ட அவன், ‘’அதை எப்போதுமே என்னால் சரியாகக் கட்ட முடியவில்லை.’’ என்கிறான்.
அவள் இறுகியிருந்த கழுத்துப் பட்டியின் அணி முடிச்சில் பட்டுக்கயிற்றைத் தேவையில்லாமலேயே முடிச்சிடுகிறாள்.
‘’ஆஹா,’’ என்ற அவள் ‘’ விருந்தில் நீதான் அழகாக இருப்பாய். என் மகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறான் என்று எத்தனைத் தாய்களால் சொல்லிவிடமுடியும்? நான் டென்னெஸ்ஸீயின் பன்றி வளர்க்கும் விவசாயியின் மகள். என் மகன் ஹார்வர்டில் படிக்கிறான். சோர்வாக அல்லது கீழ்மையாக உணரும்போதெல்லாம், நான் அதைத்தான் நினைத்துக் கொள்வேன். அது எனக்கு எல்லையற்ற உற்சாகத்தைத் தருகிறது.’’ என்றாள்.
‘’அம்மா!’’
‘’ நீ, சீட்டைச் சரியாக விளையாடு, மகனே. இது எல்லாமே, ஒருநாள் உனக்குச் சொந்தமாகிவிடும். அவருக்குக் குழந்தைகள் இல்லை. நான் ஏன் அவரைத் திருமணம் செய்தேனென்று உனக்கு வியப்பாக இருக்கும். ஆனால், நான் எப்போதும் உன்னையே நினைத்துக்கொண்டிருந்தேன்.’’ என்றாள், அவள்.
அதன் பின்னர், கோடீசுவரர் புகையும் சுருட்டோடு வருகிறார். வாய்நிறைத்த புகையை இருட்டுக்குள் ஊதி வெளித்தள்ளுகிறார். அவர், பணத்தைக்கொண்டு வாங்க முடிகிற அதிவெண்மை நிறப்பற்களுடன், ஆனால், சாதாரணமாகத் தோற்றமளிக்கிறார்.
‘’ நீங்கள் எல்லோருமே தயார்தானா? நான் ஒரு சின்னக் குழந்தையையே சாப்பிட்டுவிடுவேன்.’’ என்கிறார், அவர்.
விடுதி உரிமையாளர் கோடீசுவரரை வரவேற்று, மேஜைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு மரப்பலகையில் நண்டின் கால்கள் கொண்டுவரப்பட, கோடீசுவரர் அதைத்தின்று முடித்து, பணியாளை நோக்கி விரல்களைச் சொடுக்க, அவர் சாம்பெயின் மூடியைத் திறக்கிறார். அவர் எப்போதும் சாம்பெயின் தான் குடிக்கிறார்.
‘’நீ அந்த ஆள், கிளிண்டனைப்பற்றிக் கேள்விப்படுகிறாயா? அவர் சொல்கிறார், அவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியாகிவிட்டால், இராணுவத்தில் ஒருபால் புணர்ச்சிக்காரன்களை அனுமதித்து விடுவாராம்.’’ என்றவர், ‘’ ‘’ஓ, ஹார்வர்டு, நீ அதைப்பற்றி என்ன நினைக்கிறாய்,?’’ எனக் கேட்டார்
‘’ரிச்சர்டு,’’ என்கிறார், அம்மா.
‘’பரவாயில்லை, அம்மா. நல்லது. நான் எதுவும் நினைக்கவில்லை…’’
‘’அடுத்தது என்ன? செனட்டுக்காக நடத்தும் நீச்சல் குழுவுக்கு ஒருபால் புணர்ச்சிப் பெண்கள் பயிற்சியளிப்பார்களா?’’
‘’ரிச்சர்டு!’’
‘’ அது என்ன மாதிரியான பாதுகாப்பாக இருக்கும்? ஒருபால் புணர்ச்சிக் கூட்டம்! இரண்டு உலகப்போர்களிலும் அந்த வழியிலா நாம் வெற்றி பெற்றோம்?. இந்த நாடு என்னவாகிக் கொண்டிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.’’
சமையலறையிலிருந்து குதிரைமுள்ளங்கி மற்றும் வெந்தய வாசனை பரவியது. தொட்டியிலிருந்து ஒரு லாப்ஸ்டர் நண்டு வெளியேற, பணியாள் ஒரு வலையை அமிழ்த்தி அதைப்பிடிக்கிறான்.
‘’ மேற்கொண்டும் அரசியல் வேண்டாம்.’’ என்ற அம்மா, ‘’ இது என் பையனின் நாள். அவன் கடந்த அரையாண்டுப் பருவத்தில் சராசரியாக 3.75 கிரேடு வாங்கியிருக்கிறான். அதைப்பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள், ரிச்சர்டு?’’ எனப் பேச்சை மாற்றுகிறாள்.
‘’3.75? மோசமில்லை.’’
‘’மோசமில்லையா? நல்லது, நான் அதை உங்களுக்குச் சொல்லக் கூடாது. ஹார்வர்டில் வகுப்பிலேயே அவன் தான் முதல் மாணவன்.’’
‘’ அம்மா,’’
‘’ இல்லை, இந்தத் தடவை நான் அதை ரகசியமாக வைக்கப்போவதில்லை. அவன் தான் வகுப்பிலேயே முதல் மாணவன்! இன்று அவனுக்குப் பத்தொன்பது வயதாகிறது. நன்றாக வளர்ந்துவிட்ட ஆண்மகன். நாம் வாட்டிய ரொட்டி சாப்பிடலாமே.’’
‘’ இப்போது ஒன்று தோன்றுகிறது.’’ என்ற கோடீசுவரர் சாம்பெய்ன் கிண்ணத்தை மறுபடி நிரப்புகிறார். ‘’ இங்கே, ஃப்ளோரிடா மாநிலம் முழுவதற்குமான புத்திசாலியான இளைஞனுக்கு,’’ என்கிறார். ( அவர்களுக்கு இப்போது, எல்லாமே எளிதாகிப் புன்னகைக்கிறார்கள். இந்த விருந்து எப்போதும்போலில்லாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.) ‘’.…. அப்புறம் இராணுவத்தில் ஒருபால் புணர்ச்சிக்காரர்கள் இல்லாமலிருப்பதற்கும்!’’
அம்மாவின் புன்னகை மறைகிறது. ‘’ நாசமாய்ப் போகட்டும், கடவுளே, ரிச்சர்டு!’’
‘’ஏன்? என்னாயிற்று? இது சும்மா, ஒரு, சின்னக் கிண்டல். இங்கே. இருப்பவர்களுக்கு, ஒரு கேலிப் பேச்சை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தெரியாதா, என்ன?’’
பணியாள் ஒரு எஃகுத் தட்டில் சிறப்பு உணவுகளுடன் வருகிறான். பெண்மணிக்கு டர்போட் எனப்படும் திருக்கை மீன், இளைஞனுக்கு சால்மன் மீன், கோடீசுவரருக்கு லாப்ஸ்டர் நண்டு. கோடீசுவரர் மீண்டும் சாம்பெய்ன் கேட்கிறார்.
‘’ஹார்வர்டில் அழகான பெண்கள் கொஞ்சமாகவாவது இருப்பார்களே. சிலர் உண்மையிலேயே கீழே விழத்தட்டுகிற மாதிரி.’’ என்கிறார், அவர்.
‘’ அங்கே அறிவுத்திறம் அடிப்படையில் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள், அழகைப் பார்த்தல்ல,.’’
‘’ இருக்கட்டுமே, மிகச்சிறந்தவளும் மின்னலடிப்பவளுமாக. நீ ஒரு பெண்ணைக்கூடக் கூட்டிவரவில்லையே, அது எப்படி?’’ கோடீசுவரர் கை துடைக்கும் குறுந்துணி ஒன்றைக் கழுத்தைச் சுற்றிக் கட்டிக்கொள்கிறார். இடுக்கி ஒன்றை எடுத்து, கொடுக்கு ஒன்றை உடைத்து உள்ளிருக்கும் சதைப்பற்றை இழுத்தெடுக்கிறார். ‘’ அவர்கள் உன்னை, அதுவும் உன் போன்ற இளைஞனைச் சுற்றி ஈக்களாக மொய்ப்பார்களே, ஏன், நான் உன் வயதில் ஒவ்வொரு வாரத்துக்கும் ஒவ்வொரு பெண்ணோடு வருவேன்.’’ என்கிறார், அவர்.
‘’ இந்தக் கிளிஞ்சல்கள்,’’ என்ற அம்மா, ‘’ மிகவும் ருசியானவை’’ என்கிறார்.
கோடீசுவரர் உண்பதில் ஆழ்ந்து விடவே, எல்லோரும் அமைதியாக, மீதி உணவை உண்ணுகின்றனர். பின்னர், தலைமைப் பணியாளர் கோடீசுவரரின் அருகில் வந்து அவர் காதில் சில வார்த்தைகளைக் கிசுகிசுக்கிறார். அவர்களின் மேஜையைச் சுற்றிலும் வெளிச்சம் குறைக்கப்படுகிறது. மெழுகுத்திரிகள் ஒளிர்கின்ற கேக். சமையலறையிலிருந்து `ஹேப்பி பர்த்டே` பாட்டுடன், உடல் திண்மைமிக்க ஒரு மெக்சிகன் பரிமாறும் பணியாளரால் கொண்டுவரப்படுகிறது. அது ஒரு இளஞ்சிவப்பு நிற கேக்; அந்த இளைஞன் இதுவரை பார்த்திருந்ததிலேயே மிக அதிகமான இளஞ்சிவப்பு நிற கேக்; இரட்டைச் சிறுமிகளின் கிறித்துவப் பெயர் சூட்டு விழாவின் போது பார்த்திருப்பீர்களே, அது மாதிரியான கேக். கோடீசுவரர் அசட்டுச் சிரிப்புடன் பல்லைக் காட்டிக்கொண்டிருந்தார்.
‘’ ஏதாவது ஒன்றை வேண்டிக்கொள், கண்ணா!’’- அம்மா சொல்கிறாள்.
அந்த இளைஞன் கண்களை மூடி ஒரு வேண்டுதலைச் செய்து முடித்துப் பின்னர் வேகமாக ஊதித் திரிகளை அணைக்கிறான். கோடீசுவரர் கத்தியை எடுத்து, ஒரு வட்ட விளக்க வரைபடத்தின் ஆரப்பரப்புகள் தெரிவதைப்போல சமமற்ற துண்டுகளாக நறுக்கியமைக்கிறார். இளைஞன் ஒரு துண்டை எடுத்துத் தன் வாயில் திணித்து, ஒட்டியிருக்கும் பாகினை நக்குகிறான். கோடீசுவரர் தன் உள்ளங்கையை அம்மாவின் நகைகள் மின்னும் விரல்களில் சேர்த்துக் கைதட்டுகிறார்.
‘’ இனிய பிறந்தநாள், மகனே!’’ என வாழ்த்தி, அம்மா, அவன் இதழ்களில் முத்தமிடுகிறார். அவரது உதட்டுச்சாயம் பட்ட இடத்தை நாக்கால் தடவுகிறான். மகிழ்ச்சியான பிறந்தநாளுக்காக அவன் எல்லோருக்கும் நன்றி சொல்வதை, அவன் தன்காதாலேயே கேட்டுக்கொண்டு நிற்கிறான். அவனது அம்மா அவன் பெயர் சொல்லி அழைப்பது அவன் காதில் விழ, பரிமாறும் பணியாளர், ‘’ மாலை வணக்கம், அய்யா’’ என வாசலில் கூறுகிறான்.
விரையும் கார்களுக்கு நடுவே, அவன் தன் வழியைக் கண்டுபிடித்து நெடுஞ் சாலையைக் கடந்துகொண்டிருக்கிறான். இதர கல்லூரிக் குழந்தைகள் நடைப் பயிற்சித் தளத்தில் அமர்ந்து, பியர் அருந்திக்கொண்டு, மிக உயரத்திலிருந்து குதிக்கும் அதிசாகச நீச்சல் வீரர்கள் (bungee jumpers) தம்மைத்தாமே காற்றில் வீசியெறிந்துகொள்வதைக் கவனித்துக் கிறீச்சிடுவதுமாக இருக்கின்றனர்.
காலியாகிப்போன கடற்கரையின் கோடுகளை அலைகள் மீட்டெடுக்கின்றன. இரவுக்காற்றில் கடல் சீற்றம் கொள்கிறது. அவன் கழுத்து முடிச்சைத் தளர்த்திக்கொண்டு, கால உணர்வினை இழந்து, நடந்துகொண்டேயிருக்கிறான். அலையிடைச் சுவர்த்தூண்களில் கட்டப்பட்ட உல்லாசப்படகுகள் கடலின் மீது நடுங்கிக்கொண்டே மிதக்கின்றன. அவனுடைய பாட்டி பெருங்கடலைப் பார்க்க வந்ததைப் பற்றி நினைக்கிறான். தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழ விரும்பியிருந்தால், அந்தக்காரில் திரும்பி, ஏறியே இருக்கமாட்டேனென அவள் சொன்னாள். அவள் வீட்டுக்குச் சென்றதைவிட, அங்கேயே நின்றிருந்து, தெருவோரப் பிச்சைக்காரியாக வாழ்ந்திருக்கலாம். அவருக்காக ஒன்பது குழந்தைகளை, அவள் சுமந்து, பெற்றாள். அவளைக் காரில் மீண்டும் ஏறச் செய்தது, எதுவென அவள் பேரன் கேட்டதற்கு, ‘’ அதெல்லாம் நான் வாழ்ந்த அந்தக்காலம். அதைத்தான் நான் நம்பினேன். எனக்கு வேறு வழி எதுவும் இல்லையென்று நினைத்தேன்.’’ என அவள் பதில் சொல்லியிருந்தாள்.
திருமணம் ரத்தாகி, அவன் பெற்றோர் பிரிந்தபோது, யாரோடு வாழ்ந்தானோ, அந்தப்பாட்டி, அவன் இரத்தம் கன்றிப்போகுமாறு அவனைக் கட்டித் தழுவிய பாட்டி இப்போது இல்லை; இறந்துவிட்டாள். அவள் இல்லையே என நினைத்து வருந்தாமல் ஒருநாள்கூடக் கழிவதில்லை. அவள் இறந்துவிட்டாள், ஆனால், அவன் பத்தொன்பது வயதாகி, பூமியில் தனக்கான இடத்தைத் தக்கவைத்து, ஒரு ஹார்வர்டாகப் பெயர் வாங்கி, கால நேரம் ஏதுமின்றிக் கடற்கரை நிலவொளியில் உயிரோடு, நடந்துகொண்டிருக்கிறான். அவன் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை; அதை அவன் இப்போது தான் புரிந்துகொண்டான். கடல், வெள்ளீயக் காரீயக் கலவைத் திரவமாகக் காட்சிப்படுகிறது. அவன் காலணிகளை உதறி எறிகிறான்; வெறுங்கால்களோடு உப்புநீருக்குள் நிற்கிறான். அந்த இருட்டிலும் வெள்ளிய அலைகள் அடையாளமிடும் அந்த மணற்திட்டு தெளிவாகப் புலனாகிறது. தன் உடல் அழுக்காகி, ஆடைகளில் சுருட்டுப் புகைநாற்றம் வீசுவதாக உணர்கிறான். அவன் ஆடைகளைக் கழற்றி நிர்வாணமாகிறான்; ஞாபகமாகக் கைவளைகளைக் காற்சட்டைப் பைக்குள் பத்திரப்படுத்திக் கடற்கரையில் வைக்கிறான். வெண்பட்டுக்குஞ்ச அலைகளுக்குள் அவன் நடந்தபோது, தண்ணீர், குளிர்கிற ஒரு அற்புதமாகிறது. அவன் நீந்துகிறான்; மீண்டும் சுத்தமாகிவிட்டதாக உணர்கிறான். ஒருவேளை நாளை அவன் கிளம்பலாம், வானூர்தி நிறுவனத்தை அழைத்து, காம்பிரிட்ஜுக்குப் போகும் பயணத்தை நாளைக்கு மாற்றவும் கூறலாம்.
அவன் வெள்ளிய அலைகளை அடைந்தபோது, மனச்சுமை அகன்றது. தண்ணீர் ஆழமாக இருந்தது. இரவல்லவா; அலைகள் சினம் கொண்டிருந்தன. அவன் கரைக்குத் திரும்பும் வரை அங்கேயே நின்று ஓய்வெடுக்கலாம். அடி மணலைத் தொட்டுப் பார்க்கக் கால்களைத் தாழ்த்தித் துளாவுகிறான். அலைகள் அவன் தலைக்கு மேலாக அடித்து, ஆழத்துக்குள் அவனை வீழ்த்துகின்றன. அவனால் அடிநிலத்தைத் தொட முடியவில்லை. அவன் இதயம் வேகவேகமாகத் துடிக்கிறது; தண்ணீரை வேறு குடித்துவிட்டான்; ஆழமற்ற பகுதியைத் தேடி நீந்துகிறான். அந்தச் சாம்பெய்னைக் குடிக்க வேண்டுமென எப்போதுமே அவன் நினைத்ததில்லை; நீச்சலுக்கு வரவேண்டுமென்றும் நினைத்திருக்கவில்லை. அவன் விரும்பியதெல்லாம், அந்த மாலைநேரத்தைத் தன் உடம்பிலிருந்தும் சுத்தமாகக் கழுவிவிட வேண்டுமென்பதுதான். அவன் நீண்ட நேரமாகப் போராடுகிறான்; மூச்சு வாங்க மட்டும் மேலே வந்தால் போதும்; அது எளிதாயிருக்குமென்று ஆழத்துக்குச் செல்கிறான். விளக்குகள் பளீரிடும் அடுக்கக வீடுகளைக் கரையில் காண்கிறான். ஒரு மணிநேரம் மட்டுமே செலவிட அவ்வளவு தூரம் வந்தும், ஆற்றில் நன்கு நீந்துபவளாக இருந்தும், கடலுக்குள் இறங்காமலேயே சென்ற பாட்டியின் நினைவு எங்கிருந்தோ முளைவிடுகிறது. அது ஏன், அப்படி யென அவன் பாட்டியைக் கேட்டதற்கு, அது எவ்வளவு ஆழமென, அது எங்கே தொடங்குகிறது அல்லது எங்கே முடிகிறதென, அவளுக்குத் தெரியாதது தானென்றாள். அந்த இளையவன் மேலோட்டமாகவே மிதந்து, பின்னர் விளக்குகள் மின்னும் அடுக்கக வீடுகளுக்குச் செல்வதான தனது பாதைக்கு மெல்லத் திரும்புகிறான். அது நெடுந்தூரந்தான், ஆனால் அந்தச் சாய்தளக் கூரை வீட்டு விளக்குகளின் வெளிச்சம் இருட்டு வானத்தின் பின்னணியில் தெளிவாகவே தெரிகின்றது. ஆழமற்ற இடத்துக்கு வந்தபின் அவன் அடிவயிற்றிலேயே ஊர்ந்து, கடைசியாக மணலில் விழுந்து கிடக்கிறான். அவன் மேல்மூச்சு வாங்க, ஆடைகளுக்காகச் சுற்றிலும் பார்க்கிறான். ஆனால், அலைகள் அவனது ஆடைகளை அடித்துச் சென்றுவிட்டிருந்தன. முதன் முதலாகக் கடலை விட்டு ஊர்ந்து வெளியேறிய உயிர்ப்பிராணியை, நிலத்தில் அதன் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்ள அது கொண்டிருந்த நெஞ்சுரத்தின் திண்மையை நினைத்துப்பார்க்கிறான். காம்பிரிட்ஜின் இளைஞர்களை, அவன் பெயர் என்னவோ ஹார்வர்டு என்பது போலத் தன்னை ஹார்வர்டு என அழைக்கும் வளர்ப்புத் தந்தையை, அவனது அம்மாவின் வைரக்கற்கள் போலி விண்மீன்களாகக் கண்சிமிட்டுவதைப் பிறந்த நாள் வேண்டுதலாகத் தான் சாதாரண வாழ்க்கையை விரும்பி வேண்டியதை நினைக்கிறான்.
wash-board : சலவைப் பலகை. அயர்லாந்து போன்ற நாடுகளில் கையால் துணி துவைப்பதற்கான சொரசொரப்பான பலகை.
No comments:
Post a Comment