Sunday, 31 January 2016

இந்தோனேசியன் சிறுகதை - சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven) -ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy)

சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven)

இந்தோனேசியன் : ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy)
ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn)
தமிழில் ச. ஆறுமுகம்

Image result for abidah el khalieqy
Image result for abidah el khalieqy
ஆபிதா எல் காலிக்கி, கிழக்கு ஜாவாவில் ஜோம்பங் நகரில் 1965ல் பிறந்தவர். இளமையிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி 1997 ல் வெளிவந்தது. இந்தோனேசிய மொழியில் இதுவரை ஒன்பது நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். அவரது Perempuan Berkalung Sorban  என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. Genijora  என்ற நாவல் 2003ல் ஜாகர்த்தா கலைக் கவுன்சில் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  இந்தோனேசிய சமூகத்தில் தற்போதும் பலதார மணம், குடும்ப வன்முறை எனப் பலவகையிலும் ஒடுக்கப்படுவதாக, ஆபிதா கருதும் பெண்களின் குரலாகவே, அவரது படைப்புகள் உள்ளன.*******
என் அம்மா இறந்தபோது, அவளது முகம் மாறியது. நான் தான் அதை முதலில் கவனித்தேன். உறவினர்களும் நண்பர்களும் மரியாதை செலுத்துவதற்காக வந்தபோது, அவர்கள் கண்களில் நான் சந்தேகத்தைக் கண்டேன்; இறந்தது, என் அம்மாதானென யாராலும் நம்பமுடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்காத என் உடன்பிறந்த சகோதரன் கூட, அவள் பிணத்தைப் பார்த்ததும், இறந்தது, அம்மா அல்ல, அவளது கடைசித் தங்கையான எங்கள் சித்தி என்று அறிவித்தான். அம்மாவுக்குச் சிகிச்சையளித்துக் கவனித்துவந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்; அவரவர் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.
நான், அந்த அறையின் தொலைவான ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இறந்த அம்மாவைப் பார்க்கவந்தவர்களின் முகங்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்களில் யார், யார் அம்மாவை உண்மையில் நேசித்தார்கள், யார், யார் நேசிக்கவில்லையென்பதை, உடனடியான அவர்களது முகக்குறிப்பு, எனக்கு எளிதில் காட்டிக்கொடுத்தது. நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவைப் பார்த்த உடனேயே தனது உதடுகளைக் கடித்துக்கொண்ட ஒரே ஆள் – வேறுயாருமில்லை, என் அப்பாவேதான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.
தொலைபேசி ஒன்று எனக்குள் கிணுகிணுத்தது. ‘’அவர் பொறாமைப்படுகிறார், கடுமையான அளவுக்கு, உச்ச கட்டத்திலான பொறாமை.’’ என்று தொடர்பு துண்டித்துக்கொண்ட ஒரு குரல் சொன்னது. முகத்தில் ஒரு தேவதையின் புன்னகையைத் தாங்கியிருந்த அம்மா மிகமிக இளமையாக, இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நாளில் போல, அவளது இளமைத் தோற்றத்திற்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றினாள்.
‘’இதுதான் என் உண்மையான முகம்,’’ என மென்மையாக இரகசியம் போல் என் காதில் பேசிய அம்மா, ‘’மணநாள் இரவில் புதுமணப்பெண் போல்.’’ என்றாள். அவள் உறுதியாகத் தீர்மானத்தோடு சொன்னாள். ‘’அமைதியான மசூதியைப் பார்த்திருந்த எங்கள் வீட்டில், ஒரு மலைப்பூட்டும் விருந்துடன் தொடங்கி, முடிவில் உடல் முழுவதும் ரணமும் வேதனைமிக்க நினைவுகளுமாகிப்போன ஒரு இரவு.’’
வலியும் வேதனையும் அவளது வாழ்க்கையில் நிரந்தரமாகிப்போனதை நினைவுபடுத்திக்கொண்டு, அவள், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தாள் : ‘’என் முகத்திலிருக்கும் இந்தத் தோற்றம் தான், அவருக்குள் மாளாத பெரும் பொறாமையைக் கிளப்பி, என்னைத் திட்டவும்,  உதைக்கவும்  அந்தத் திருமண இரவில் வன்முறையாக, வலிந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்தது – இதற்கெல்லாம் காரணம், என் வீட்டின் முன்னாலிருந்த மசூதியில் நிகழ்ந்த நடு இரவுத் தொழுகையின் போது நானும் தஹாஜுத் பிரார்த்தனை செய்தேன் என்பது மட்டுமே தான்.’’
என் உணர்வுகள் கட்டுப்பாடின்றி மேலெழும்போதெல்லாம் நான் உணர்கின்ற, மேடை நடுக்கம் போன்ற ஒன்றினை உணர்ந்து, என் உடல் தானாகவே நடுங்கியதைக் கண்டேன். உடல் முழுதும் திடீரென வெப்பம் அதிகமாகி, இரத்த நாளங்களில் ஒரு வேதனையின் ஓட்டத்தை, மார்புக்கூட்டுக்குள்    தொடர்ந்த ஒரு உலக்கை இடிப்பினைத் தாங்க முடியாமல் அம்மாவுக்கான என் முதல் கண்ணீரைச் சிந்தினேன்.
குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில், நான் மட்டுமே பெண். அதனால்தானோ, என்னவோ, நாங்கள் ஐந்து பேருமே, பெரும்பணக்காரரான ஹாஜி கமீலின் நான்காவது மனைவியின் ஒரே கருப்பையிலிருந்து உதித்திருந்தாலும், அம்மாவுடன் ஒரு ஒத்த உணர்வினை, நான் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.
ஊர்மக்கள் என் அப்பாவைப் பெரும் சொத்துக்காரர் என்றுதான் அழைத்தார்கள். நாங்கள், அவரது குழந்தைகள், அவரது செல்வத்தில் மூழ்கிக் குளித்தோம். ஒரு மனிதனை, அவன் மனைவி  மற்றும் குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காத சமூக உணர்வில் மூழ்கடிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் எல்லோருமே அதிகாரம் பொருந்திய, வலிமையும் ஆண்மையழகும் மிக்கவராகப் புகழ்பெற்ற எங்கள் அப்பாவின் உடைமைகளின் ஒரு பகுதியாகவே எல்லோராலும் கருதப்பட்டோம்.
நான் அப்பாவின் அருகில் சென்றேன். ‘’ வித்தியாசமாக, எதையாவது பார்த்தீர்களா, அப்பா? புருவத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?’’
‘’ஆமாம், பார்த்தேன், உன் அம்மாவின் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அவளது சுகக்கேடுதான்  உடல் தோற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.’’
அம்மாவுக்கு மூளையில் இரத்தக் கசிவு என்று மருத்துவர் சொன்னார். உறுதியாக அதுதானா, அப்பா? நிறையப் பேர் இரத்தக்கசிவினால் சாகிறார்கள், ஆனால், அதனாலேயே நோயாளியின் தோற்றத் தன்மைகள் மாறுவதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.’’
‘’யாருக்குத் தெரியும்? உன் அம்மா வித்தியாசமானவள் … சாவில் கூட இப்படியொரு சிரிப்பு, சிரிக்கிறாள்.’’
‘’எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அம்மாவின் மரணம் பொருத்தமானதாக, துயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மரணம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறதென்றுகூடச் சொல்லலாம். அவளது சிரிப்பைப் பாருங்கள். இப்படி ஒரு அழகான சிரிப்பினை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? திரைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.’’
‘’என்ன பேசுகிறாய்? அதுவுமில்லால் உனக்கு என்னதான் தெரியும்? மூக்கு வடிக்கிற குழந்தை, நீ!’’
‘’நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவுக்கு இது ஒரு நல்ல சாவு – எல்லோரும் சொல்வார்களே ஹூஸ்னுல் காத்திமா, அது.’’
‘’உஷ்! போய் ஏதாவது வேலையைப் பாரு; சித்திக்கு உதவி செய்! போ, போ!’’
‘’நான் அம்மா கூடத்தான் இருக்கப் போகிறேன். அவளோடு கூட இருக்கப்போகிற கடைசி வாய்ப்பு, இது. அவளுக்காக, நான் பிரார்த்தனை செய்ய வேண்டும், அப்பா.’’
நோயர் ஊர்தி வந்த போது, எல்லோருமே இன்னும் பரபரப்பானோம்; ஆனால், நான், அம்மாவிடமிருந்து யாரும், என்னைப் பிரிக்க, என் அப்பாவாக இருந்தாலும் கூட,  அனுமதிக்கப்போவதில்லை.
‘’நீ ஒரு பெண்; உனக்குப் போதிய பலம் கிடையாது; ஆம்புலன்சில் நான் கூடப் போகிறேன்.’’ என்றார், என் அண்ணன்.
‘’ நல்ல திடமாகத்தான் இருக்கிறேன்,’’ நான் வலியுறுத்தினேன். ‘’அம்மா மருத்துவ மனையிலிருந்த காலமெல்லாம், நான் தான் அவள் பக்கத்திலேயே காத்துக் கிடந்தேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அம்மாவின் நெருக்கத்திலிருப்பதுதான் எனக்கு நிம்மதி.’’
‘’உன் ஒப்பாரியையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.’’
அழத்தேவையில்லாத காரணங்களுக்கு, ஆண்களும் கூடத்தான் அழுகிறார்கள். அம்மாவின் இறப்புக்காக நான் அழ மாட்டேன். அவள் அவரின் மாளிகைக்குப் போய்ச்சேரும்வரையில் அவளுடனேயே இருந்து, அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருப்பேன்.
‘’யாருடைய மாளிகை?’’ வாயை மூடிக்கொண்டிருந்த என் அண்ணன் கேட்டார்.
‘’நல்லது, நிச்சயமாக, அது, நீங்கள் நினைக்கும் இடமல்ல!’’
‘’நீயும் உன் முட்டாள்தனமும்!’’ என முணுமுணுத்தவாறே அகன்று சென்றார்.
‘’என் முட்டாள்தனம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும், அதைவிடவும் முட்டாள்தனமானவன் நீ’’ சிரிப்பினை அடக்கிக்கொண்டு, எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.
முடிவில், நானும் எனது சித்தியும் தான், நோயர் ஊர்தியில் அம்மாவுடன் சென்றோம். அப்போது இரவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலை எளிதாக, வசதியாக இருந்தது; யோக்யகார்ட்டாவிலிருந்து ஜோம்பங் சென்று சேர ஐந்து மணி நேரமே ஆனது. பயணத்தின் போது சித்தி, இருக்கையிலேயே தூங்கிவிட்டாள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில், நான் பிரார்த்தனை செய்தேன்.
ஒரு கட்டத்தில், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, நடு இரவு பன்னிரண்டு தாண்டி அதிகாலை முப்பது நிமிடமாகியிருந்தது.
‘’ஆமாம்! இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அதிகாலை பன்னிரண்டு முப்பதுக்குத்(00.30)தான், நான் வீட்டிலிருந்தும் வெளியே வந்தேன்,’’ என்றாள், அம்மா. ‘’அன்று இரவில் மசூதியின் வாசலை மிதிக்கும் தீராத பேராவலினை உணர்ந்தேன். என் இதயம் முழுவதுமாக ரோஜாக்கள் நிறைந்து, என் முகம் எதுவும் அறியாத்தன்மையில் ஒளிவீசியது. அவர் மிஹ்ரபில், நான் மெக்காவின் திசை நோக்கித் தொழுகின்ற இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல, விரைந்து செல்ல முயற்சித்தேன். என்னுடைய தாமதத்தை நினைத்து, என்னையே நொந்துகொண்டு, நான் மசூதியின் மாடிப்படிகளில் ஏறினேன். தொழுகையின் போது, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையில் தலையால் அடிபணிந்து வணங்கினேன். ஒன்றின் பின் ஒன்றாக, ஒவ்வொரு முறையும் என் நெற்றி அவரது பார்வையில் தரையைத் தொட்டு வணங்கியது. அப்படியாக எவ்வளவு நேரம் என்னை அர்ப்பணித்திருந்தேனென்று என்னால் சொல்ல இயலாது, ஆனால், அவரோடு செலவழிக்கின்ற நேரத்தை ஒருவர் எத்தனை மணி நேரமெனக் கணக்கிட்டு  எண்ணுவதில்லை. ஆனால், நான், அதன் பின்னர், எனது புதிய வீட்டிற்குத் திரும்பி, முன்வாசலில் என் காலை வைத்தேனோ இல்லையோ, அடிவயிற்றில் விழுந்த உதையில் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுபோயிற்று – அதுவே முதல் அடி, அதைத் தொடர்ந்து, தீவிரமாக வளர்ந்த வெறுப்பில் கனத்த எத்தனையோ அடிகள்.’’
என் முகம் தொங்கிப்போயிற்று. அம்மாவின் தலைவிதிப் புத்தகத்திலுள்ள அனைத்துப் புனிதங்களையும் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தேன், ஆனால், என் கண்கள் பனித்து என் அம்மாவின் இரகசியத் தொகுப்புகளின் முழுமை அனைத்துக்குள்ளும் என் பார்வையைச் செலுத்தும் நிலையில் நான் இல்லையென்பதும் தெளிவாகவே புரிந்தது. அம்மா, மிக நெருக்கமானவள், ஆனால், அதே நேரத்தில் மிகத் தொலைவானவளுமாக…….. அவளுடைய இரகசியக் காயத்தை, அதன் வலியை, எல்லோருக்கும் நன்கு தெரிந்த அவளது பொறுமையாலும், எக்கணமும் பொழிகிற வற்றாத அன்பாலும், எவ்வளவு சுத்தமாக மறைத்திருக்கிறாள்!
‘’ உதைப்பதற்கு வசதியாகக் காலை மாற்றிக்கொண்ட உன் அப்பா, ‘’ஏய், நீ மட்டும்தான் உண்மையான முஸ்லிமென்று நினைக்கிறாயா! நீ ஒருத்திதான் விசுவாசமுள்ள ஒரே ஆளென்று நினைக்கிறாயா! நல்லது, கேட்டுக்கொள்! இன்றையிலிருந்து, நான் உனது கணவன். வேறு எவரையும் விட, எனக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடைய உத்திரவுகளுக்குத் தான் கீழ்ப்படியவேண்டும், அதற்கும் மேலாக, வேறு எவருக்குமல்ல. உன்னுடைய விசுவாசம், நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அதுவும் எனக்கு மட்டுமேதான். புரிந்ததா?’’
‘’நான் மசூதிக்குப் புறப்படும்போது, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தீர்கள்….’’
‘’வாயை மூடு! ஒரு பொம்பளை, உன்னோடு நான் பேசத் தயாரில்லை!’’
‘’அதனால் நானும் வாயை மூடிக்கொண்டேன்,’’ அம்மா மிக எளிதாகச் சொன்னாள். ‘’அன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு என் வாயை மூடிக்கொண்டேன். பேசுகிற உரிமை உன் அப்பாவுக்கு மட்டும் தான் இருந்தது. மரணக் கூர்முனைக்கத்தியின் கீழான அச்சுறுத்தலில் உறைந்து, இறுக்கமாகி, மவுனமாகிப்போன ஒரு உலகத்தில், வாழ்க்கையின் கனவுகள் கண்ணெதிரே கடந்து செல்வதை, வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊமையாக, நான் இருந்தேன். நான், உன் அப்பாவின் பலிப்பொருள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும், ஒவ்வொரு நொடிக்குமான பொருள், ஒரு முன்மாதிரிப் பலியாக எப்படி இருக்கவேண்டுமென்பதான அவரது வார்த்தைகளைக் கேட்டு, மனப்பாடம் செய்வது - இணக்கமான ஒரு சிரித்த முகத்துடன் பலிபீடத்துக்குச் செல்வதுதான். இப்போது, நான் அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டேன். நான், உன் அப்பாவுடைய தியாகப் பலி; நான் அவருக்காகவே இறந்ததாக எல்லோரும் நினைக்கிறார்கள்.’’
‘’நான், திடீரென்று இப்படிச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், இதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூதியிலிருந்து திரும்பிவரும்போது – அவர் என்னை அடிக்கத் தொடங்குவதற்கு முன், என் முகத்திலிருந்ததும் ஒன்றுதானென உணர்ந்திருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளிலும், அவர் அந்தச் சிரிப்பை, நான் இப்போது என் இதழ்களில் அணிந்திருக்கிறேனே, இதே சிரிப்பினைத்தான் தேடினார்; ஒவ்வொரு இரவிலும், பகலிலும், அவர் அதைத் தேடித்தேடிப் பெரும் ஆசைகொண்டு, அதையே கனவாக்கிக்கொண்டார். ஆனால், அவர் கண்டதெல்லாம் வெறும் கானல்தான்; என் இதழ்கள் தாம் உறைந்த இரத்தத்தால் – அவரது முரட்டு விரல்கள் என் வாயைப்பற்றிக் கீறியதில் கசிந்த இரத்தம் – மூடிக்கிடந்தனவே.’’
அம்மா, மீண்டும் பேசத் தொடங்கும் முன், ஆழ்ந்து ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டார். ‘’இப்போது நேரம் என்ன, தெரியுமா? ஆம். இப்போது காலை பன்னிரண்டு முப்பது. புதுமணப் பெண்ணாக            அதைத் தொடர்ந்த முதல் மாதம் முழுவதும், எந்த அளவுக்கு முயன்றாலும், அடக்கமுடியாத, அவரது முன்னிலையில் அவரை அடிபணிந்து, வணங்கித் தொழுகை செய்கின்ற அந்தத் தணியாத பேராவலை உணர்ந்தேன். என்னுடைய ஆவல், எல்லைகள் அனைத்தையும் கடந்தது; என் பிரார்த்தனைகளுக்கும், என்னுடைய அடிபணிந்து, வணங்கல்களுக்குமான அவரது  புன்னகையே   அந்தத் தீராத பேராவலைப் பெருகச்செய்தது. எங்கள் புதுமண அறையின் ஒரு மூலையிலேயே, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையைத் தலையால் தொட்டு வணங்கி, நம்மைப் படைத்தவருடன் ஒன்றும் தீவிர எண்ணத்தின் இராகத்தில் என் மாலையின் மணிகளை உருட்டினேன்.
‘’ஒரு வேளை, நான், என்னை அறியாமலேயே சத்தமாகப் பெருமூச்சிட்டிருக்கலாம், ஆனால், அந்தப் பெருமூச்சு உன் அப்பாவின் செவிகளைத் துளைத்ததோடு, அவரது நரம்புகள், இதயம், மனம்……. எல்லாவற்றுக்குள்ளும் கொழுந்து விட்டெரிந்த பொறாமையின் தீநாக்குகளால் என் செவிகள் கருகிப்போயின. அப்புறம், அந்த அறையில் அத்தனை குரூரமாக, உறுதியாக, கனமாகத் தொங்கிக்கொண்டிருந்த முதலைத் தோல் கச்சினை நான் எப்படி மறக்க முடியும்! அவர் கச்சினை எடுத்து, உயர்த்தி என் முதுகில் பத்துப் பத்தாக இல்லை, நூற்றுக்கணக்கான முறைகள் விளாசினார். என் அமைதி அவருக்குள் இன்னும் முரட்டுத்தனமாக, பொறாமையின் தீ நாக்குகளை எழுப்பின. நான் மயங்கி விழுந்தேன்; காலைத் தொழுகைக்கான அழைப்பு என் காதுகளில் விழும்வரையில் என் நினைவு திரும்பவேயில்லை.’’
சிறிது நேரம் அம்மா எதுவுமே பேசவில்லை. அவளது கண்கள் தொலைதூரத்து வானத்தில் பதிந்திருக்க, சுவர்க்கத்தின் தேவதைக்கே பொருத்தமான அந்தச் சிரிப்பு அவள் இதழ்களில் மலர்ந்து, முகம் முழுவதும் பரந்தது.
‘’எனக்குத் தெரியும், அப்புறம் என்ன நடந்ததெனத் தெரிந்துகொள்ள விரும்புவாய்,’’ என்ற அம்மா, ‘’ எனக்குப் பைத்தியம் என்று உண்மையிலேயே உன் அப்பா நினைத்திருக்கலாம். ஏன் அப்படி? முடிவில்லாத வலியும் வேதனையும் எனக்குள் எழுந்தாலும், புதுமையான விஷயம் என்னவென்றால், அவர் மீதான என் தணியாப் பேராவல் இன்னும் தீவிரமானதுதான். அது என்னால், பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு நாடித் துடிப்புக்கும், அவரது முகம் என்னை நெருங்கிவந்துகொண்டேயிருந்தது.
அடிக்கடி நினைவுகள் தடுமாறி நான், எளிதில் குழப்பத்துக்காளானேன்.  சமைத்துக்கொண்டிருக்கும் போது, நான் பொரிக்கும் அத்தனை மீனும் வாணலியில் கரியாகப் போகிற அளவுக்குக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது, இரவில் ஏதோ கதவு தட்டிய சத்தம் கேட்டது போல, வீட்டின் முன்கதவைத் திறந்து பார்ப்பேன்; ஆனால் அங்கு, எதுவுமே இருக்காது. என் நடத்தையும் செயல்பாடுகளும், நான் சபிக்கப்பட்டவளென உன் அப்பாவை நம்பச்செய்துவிட்டன. ஆவிகள் தாம் என்னைப் பீடித்திருப்பதாக அவர் நினைத்தார்.’’
அம்மாவின் கையைத் தடவித் தட்டிக்கொடுக்கவேண்டுமென நான் நினைத்தேன்; ஆனால், தூக்கக்கலக்கம் என்னை வீழ்த்திவிட்டது.
‘’இப்படியாக இருக்க, அன்றைக்கு உன் அப்பா ஏதோ வியாபார விஷயம் அல்லது வேறு ஏதோ ஒன்றுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது காலை ஒன்பது மணி இருக்கும். அதனால், தொழுகைக்கான சுத்தப்படுத்தல் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவருடன் ஒன்றுவதான என் ஆவலை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன்.  என் தொழுகை மிகத் தீவிர ஈடுபாடாகி, நான் ஆழ்ந்த பணிவுடன் அடிபணிந்து, தலைவணங்கியிருந்ததில், உன் அப்பாவின் மகிழுந்து வந்த சப்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் உண்மையிலேயே அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முந்தைய எனது, கடைசித் தலைவணங்கல் அதுவாகவே அமைந்துவிட்டது. என் தலையில் விழுந்த அடியில் என்னுடைய திடமற்ற மண்டையோடு பளபளக்கும் கடினப் பீங்கான் தரை ஓடுகளில் மிகுந்த வேகமாக மோதியது; அது திடீரென ஒரு மின்னல் வெடித்தது போல அவ்வளவு கடினமாக இருந்தது; வெறிகொண்ட பார்வையைப் பிரதிபலித்த கண்களுடன் என் தலையைப் பின்னுக்கு இழுத்து என் குரல்வளையைப் பிடித்து இறுக்கிய உன் அப்பாவின் கைகள், நான் மூச்சற்றுத் தரையில் விழும்வரையில் விடவேயில்லை.’’
‘’அப்புறம் என்ன நடந்தது, அம்மா?’’
‘’திடீரென்று, எல்லாமே இருட்டாகிவிட்டது. எங்கும் ஒரே மைக்கறுப்பு! உலகம் முழுவதுமே அமைதியாகிவிட்டது. அதன் பின்னர், வெகுதூரத்தில் கண்ணைப்பறிக்கும் ஒரு  ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் தோன்றி, நிலைத்த ஒளிப்பாதை ஒன்றை வீசியது. அது – குழந்தையின் கனவில் தோன்றுவதைப் போல - என்னை வரவேற்க வந்துகொண்டிருந்த, ஏழு நிலவுகளின் பிரகாசத்தைக் கொண்ட ஒரு ஒளித்தேர். மந்திரவாதியின் அற்புதம் போன்ற, ஒரு கோடி கவிஞர்களால் கூட விவரிக்கமுடியாத பரவசத்தில்  நான் புன்னகைத்தேன். அவரது அரியணைக்கு என்னை இட்டுச் சென்ற தேர் பயணித்த தூரம் அநேகமாக மிகமிகக் குறைந்ததாகத்தான்  – எனது திருமண அறையிலிருந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு முன்புள்ள மசூதிக்குக் கடந்து சென்றேனே அதைவிட அதிக தூரமில்லாமல்தான் – தோன்றியது. அங்குதான், நான் பரிபூரண அன்பினைக் கண்டேன்; அதுவே, என் இதழ்களின் புன்னகையிலும் தெரிகிறது.
‘’உன் அப்பா, அவர் மீது பொறாமை கொள்ளலாமா?’’ அம்மா நயமாகக் கேட்டாள்.
நூறு தேவதைகள் ஒன்றுசேர்ந்து இழுக்க, நோயர் ஊர்தி பறந்துகொண்டேயிருந்தது, நீர் கோர்த்த வானத்தின் கீழான மேகமூட்டத்தில், நான் என் கண்ணீரைக் கழுவ முயற்சித்தேன். பின்னர், அன்பின் ரோஜாக்கள் என் இதயத்தில் பெருமிதத்துடன் இதழ்விரித்தன. என் அம்மா, அன்பின் பெருங்கடல், சுவர்க்கத்தின் மிக அருகில் – உங்கள் ஆன்மாவின் காலடிக்குச் சற்றே கீழாகக் காணப்படுகிறாள். நல்வணக்கம், சென்று வா, அம்மா. அன்பான கடவுளே! உங்கள் நேசக்கரத்தால் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.     
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தோனேசியா மற்றும் மலேயாவில் பெண்களும் தொழுகைக்காக, மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இருபது ஆண்டுகளாக முதலைத் தோல் கச்சினால் அடிவாங்கி, கடைசியில் கணவனின் கையாலேயே மரணமடையும் குடும்ப வன்முறையினைப் படித்து முடித்த நேரத்தில்,  முகமது மீரானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முஸ்தபாக்கண்ணு, மனைவி மரியத்தை அடிப்பதற்காகவே, உத்தரத்தில் எப்போதும் வைத்திருந்த அந்தப் பிரம்பு நினைவுக்கு வந்து தொலைந்தது.   நல்லவேளையாக, வறுமையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்த புதுமைப்பித்தனின் செல்லம்மாளும் பிரமநாயகம் பிள்ளையும், அவர்களைத் தொடர்ந்து ஆலீஸ் மன்றோவின் கிராண்ட்டும் (மலை மேல் வந்தது, கரடி) ஆறுதலுக்கு வந்தனர்
    
ச.ஆறுமுகம். 9442944347 arumughompillai@gmail.com  
மலைகள் இணைய இதழ் டிசம்பர் 18, 2015ல் வெளியாகியுள்ளது.  
No comments:

Post a Comment