Monday, 4 January 2016

புடாபெஸ்ட் நோ வயலெட் புலவாயோ      ( No Voilet Bulawayo ) – தமிழில் ச.ஆறுமுகம்.

நோ வயலெட் புலவாயோ ஜிம்பாப்வேயில் பிறந்து வளர்ந்தவர். அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் ஏ அண்டு எம் வணிகவியல் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், சதர்ன் மெத்தேடிஸ்ட் பல்கழைக்கழகத்தில் முதுகலைப்பட்டமும் பெற்ற இவர், கர்னேல் பல்கலைக்கழகத்தில் படைப்பிலக்கியப் பாடப்பிரிவில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். தற்போது அதே கல்லூரியில் இலக்கியம் கற்பிக்கிறார்.
அவரது Hitting Budapest என்ற தலைப்பிலான இச்சிறுகதை ஆப்பிரிக்கன் புக்கர்எனக் கருதப்படும் ஆப்பிரிக்கப் படைப்புகளுக்கான கெய்ன் விருதினை ஜூலை11, 2011ல் பெற்றது. கெய்ன் விருது ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கும் ஆப்பிரிக்க எழுத்தாளர்களைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. விருது பெறுபவருக்கு 10000 பவுண்டு தொகையும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில்( Writer in Residence) ஒரு குடியிருப்பு எழுத்தாளர் என்ற பதவியும் வழங்கப்படுகிறது.
எங்களுக்குப் புதிய பெயர்கள் வேண்டும்என்ற நாவலை இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
**********

நாங்கள் புடாபெஸ்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம்: வேசிமகன், சிப்போ, கடவுளறிவார், ஸ்போ, ஸ்டினா, நானும்.
ஜிலிக்காஜி சாலையைத்தாண்டிச் செல்லக்கூடாதென எங்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்களென்ற போதிலும், வேசிமகன் அவனது குட்டித் தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்ற போதிலும் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னைக் கொன்றேபோடுவார்களென்ற போதிலும் நாங்கள் போய்க்கொண்டிருந்தோம். புடாபெஸ்டில் களவாடுவதற்குக் கொய்யாக்கள் இருக்கின்றன. அதிலும், எது எப்படியானாலும், கொய்யாவுக்காக என்றால் நான் உயிரைக்கூட விட்டுவிடுவேன். அந்தநேரம் என்வயிற்றினுள்ளிருந்த எல்லாவற்றையும் யாரோஒருவர் மண்வெட்டியால் தோண்டியெடுத்துவிட்டது போலிருந்தது.
சொர்க்கத்தைவிட்டு வெளியேவருவதொன்றும் கடினமானதல்ல; அதிலும் அம்மாக்களெல்லாம் தலைமுடியைச் சிக்கெடுத்துக்கொண்டும் பேசிக்கொண்டுமிருக்கும்போது இன்னும் எளிது. நாங்கள் எல்லோரும் ஒவ்வொருவராகக் கூட்டமாக ஒன்றுசேரும்போது, அவர்கள் என்னமோ பார்க்கத்தான் செய்வார்கள். ஆனால், உடனேயே வேறுபக்கம் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஜகரண்டாமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கும் ஆண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதேயில்லை; அவர்கள் டிராட்ஸ் விளையாட்டிலிருந்து பார்வையைச் சிறிதுகூட அக்கம்பக்கம் திருப்புவதேயில்லை. குட்டிக் குளுவான்கள்தாம் எங்களைப் பார்த்துவிட்டு எங்கள் பின்னாலேயே வரப்பார்த்தன. அம்மணமாயிருந்த ஒன்றின் பெரியதலையில் வேசிமகன் ஒருகுத்துவிட்டதும் எல்லாம் பின்வாங்கிவிட்டன.
நாங்கள் புதர்களுக்குள்ளாகவே ஓடிக்கொண்டிருந்தோம். வேசிமகன்தான் முன்னால் சென்றான். இன்றைய உள்ளூர் விளையாட்டில் அவன்தான் ஜெயித்திருந்தான். அதனாலேயே இன்று அதிகாரம் செய்பவனாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் நானும், கடவுளறிவாரும் ஸ்டினாவும் ஓடினோம். கடைசியாக சிப்போ; சிப்போ எப்போதுமே சொர்க்கத்திலுள்ள எல்லோரையும் தோற்கடித்துவிடுவாள். ஆனால் இனிமேல் அது முடியாது. ஏனென்றால், அவளது தாத்தா அவளை கர்ப்பமாக்கிவிட்டார். ஜிலிக்காஜியைக் கடந்தபிறகு நாங்கள் வேறொரு புதர்ப்பாதை வழியாக `நம்பிக்கைவீதி`க்குள் குதிரையோட்டம் ஓடிக்கொண்டிருந்தோம். நாங்கள் ஒருபோதுமே உட்கார்ந்து பார்க்காத பளபள இருக்கைகள் கிடக்கும் பெரிய ஸ்டேடியத்தைக் கடந்து நாங்கள் ஒருவழியாக புடாபெஸ்டை அடைந்துவிட்டோம். இடையில், சிப்போ இளைப்பாறுவதற்காக நாங்கள் ஒருமுறை நிற்கவேண்டியிருந்தது.
நீ எப்போது குழந்தை பெறப்போகிறாய்?” என்று கேட்டான் வேசிமகன். அவளுக்காக நாங்கள் தாமதிப்பதை அவன் விரும்பவில்லை. நாங்கள் அவளோடு கலந்துவிளையாடுவதைக்கூடத் தடுக்க முயற்சித்தான்.
என்றைக்கோ ஒருநாள் பெற்றுப்போடுவேன்.
அது என்ன ஒருநாள்? நாளைக்கா? வியாழக்கிழமையா? அடுத்தவாரமா?”
அவளுடைய வயிறு சிறிதாக இருப்பது உனக்குத் தெரியவில்லையா, குழந்தை வளர வேண்டாமா?”
குழந்தை வெளியேதான் வளர்கிறது. அதனால்தான் அவை பிறக்கின்றன. அதனால் வளர்கின்றன.
சரிதான், இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. அதனால்தான் இன்னும் அது வயிறாகவே இருக்கிறது.
அது பையனா, பெண்ணா?”
அது பையன்தான். முதல் குழந்தை எப்போதும் ஆணாகத்தான் இருக்கும்.
ஆனால் நீ ஒரு பெண். நீ முதல் குழந்தைதானே?”
நான் சொன்னது அப்படிச் சொல்வார்கள் என்றுதான்.
நீ வாயைமூடு, அது ஒன்றும் உன்னுடைய வயிறல்ல.
அது பெண்குழந்தை என்றுதான் நினைக்கிறேன். அது உதைப்பதாகவே எனக்குத் தெரியவில்லை.
பையன்கள்தான், உதைப்பதும், குத்துவதும், தலையால் முட்டுவதும்.
உனக்குப் பையன்தான் வேண்டுமா?”
இல்லை, ஆமாம், இருக்கலாம், எனக்குத்தெரியாது.
குழந்தை உண்மையில் எந்தவழியாக வெளியே வருகிறது?”
அது எப்படி வயிற்றுக்குள் போனதோ, அதே வழியில்தான்.
அது எப்படிச் சரியாக வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்தது?”
முதலில் கடவுள்தான் அதற்குள் வைத்தார்.
இல்லை, கடவுள் இல்லை. ஒரு ஆண்தான் உள்ளே வைக்கிறான். என் மைத்துனன் மியூசா எனக்குச் சொன்னான். உன்வயிற்றில் உன்தாத்தாதானே குழந்தையை வைத்தார், சிப்போ?”
அவள் `ஆமாம்` எனத் தலையாட்டினாள்.
அப்படி ஒருமனிதன் உள்ளே வைத்தான் என்றால், ஏன் அவனால் அதை வெளியே எடுக்கமுடியவில்லை?”
மரமண்டை! அது ஏன் என்றால் பெண்கள்தான் குழந்தைபெறுகிறார்கள். அதனால் பால் கொடுக்க மார்பகங்கள் இருக்கின்றன.
ஆனால் சிப்போவின் மார்புகள் கல்மாதிரி சிறிதாகத்தானே இருக்கின்றன?”
குழந்தை பிறக்கும்போது அவைபெரிதாகும். அப்படித்தானே சிப்போ?”
எனக்கு மார்பு ஒன்றும் பெரிதாக வேண்டாம், எனக்குக் குழந்தையும் வேண்டாம், எனக்கு எதுவும் வேண்டாம், எனக்குக் கொய்யாதான் வேண்டும்சொல்லிக்கொண்டே சிப்போ ஓட்டமெடுத்தாள்.
நாங்கள் அவள் பின்னால் ஓடினோம். புடாபெஸ்டின் மத்தியில் வந்தபோது நாங்கள் நின்றோம். புடாபெஸ்ட் வேறுமாதிரியான பூமி. அது எங்களைப்போல் அல்லாதவர்கள் வாழும் தேசம்.
ஆனால் அது சாதாரண தேசம் அல்ல. அங்கே எல்லோரும் காலையில் கண்விழித்ததும், வாசல், கதவு, ஜன்னல்கள் எல்லாவற்றையும் மூடுகிறார்கள். கார்டுகள், கடவுச்சீட்டுகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, வேறு நல்ல நாடுகளுக்குக் கிளம்புகிறார்கள். காற்று கூட வெறுமையாக இருக்கிறது. எதுவும் எரிவதில்லை. சமையல்வாசனை இல்லை. ஏதாவது அழுகும்பொருள்கூட இல்லை. காற்றின் முதுகின்மேல் எதுவுமில்லை. அது எதையும் சுமந்துவரவில்லை.
புடாபெஸ்ட் பெரியது. பெரிய பெரிய வீடுகள். சுற்றுச்சுவர்கள். தளமிட்ட முற்றங்கள். உயர உயரமான வேலிகள். திடமான சுவர்கள். பூக்கள். நாங்கள் பறிப்பதற்காகவே பழங்கள் கனத்திருக்கும் பசுமை மரங்கள். பழங்கள் எதற்காக இருக்கின்றன என அங்கே யாருக்குமே தெரியாதுபோல. பழங்கள் மட்டும் இல்லையென்றால் நாங்கள் அங்கே வரத் துணிந்திருக்கவே மாட்டோம். தெருக்கள் எங்களைச் சந்தைக்குத் திரும்பிச்செல்லுமாறு துரத்திவிடுமென எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.
நாங்கள் வழக்கமாக சிப்போவின் மாமா மரத்தில்தான் திருடுவோம். ஆனால் அது திருடிச் சேர்த்ததைத் திருடுவது போன்றதாகாது. அவருடைய மரத்தில், கொய்யா பூராவையும் நாங்கள் காலிசெய்து விட்டோம். அதனால் வேற்று ஆட்களின் வீடுகளைத் தேடிப் போனோம். நாங்கள் நிறைய இடங்களில் இருந்து எக்கச்சக்கமாகத் திருடிவிட்டோம். என்னால் எண்ணக்கூட முடியாது. கடவுளறிவார்தான் அந்தத்தெருவுக்குப் போய் எல்லாவீடுகளையும் நாங்கள் முடிக்கும்வரை அங்கேயே இருப்பதெனத் தீர்மானம்செய்தான். அதனால்தான் நாங்கள் எங்கே இருக்கிறோம், எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்ற குழப்பங்களெல்லாம் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட வகைமாதிரி. இப்படிச் செய்தால்தான், நாங்கள் நல்ல திருடர்களாவோம் எனக் கடவுளறிவார் சொல்கிறான்.
இன்று நாங்கள் ஒரு புதுத்தெருவில் தொடங்கினோம். அதனால்தான் கவனமாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டோம். நாங்கள் எஸ்ஏடிசி(Southern African Development Community) தெருவைக் கடந்தோம். அங்கே இரண்டு வாரங்களுக்கு முன்புதான் எல்லா கொய்யாமரங்களையும் மொட்டையடித்திருந்தோம். இறக்கைகள் உள்ள சிறுநீர் கழிக்கும் ஒரு பையன்பொம்மை இருந்த, பாலேட்டுநிற வீட்டின் ஜன்னலின் வெள்ளைத் திரைகளை விலக்கி, எங்களை நிற்குமாறு ஒருமெல்லிய குரல் சொன்னது. அங்கே ஒருமுகம் எங்களை உற்றுப்பார்த்ததை நாங்கள் கண்டோம். அந்த முகம் எங்களை என்னசெய்துவிடுமென்று நாங்கள் ஒருநிமிடம் நின்று கவனித்துப் பார்த்தோம். அந்தக்குரல் நிற்கச் சொன்னதற்காக ஒன்றும் நாங்கள் நிற்கவில்லை. எங்களில் யாருமே ஓடத் தொடங்கவில்லை. அதோடு அந்தக்குரலும் அபாயகரமானதாகத் தோன்றவில்லை. அதனால் நாங்கள் அப்படியே நின்றோம். ஜன்னலுக்குள்ளிருந்து பாட்டு ஒன்று தெருவுக்குள் வந்துகொண்டிருந்தது. அது க்வைட்டோவும் இல்லை; நடனஅரங்கும் இல்லை. எங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்று.
வளர்ந்த ஒல்லியான ஒருபெண் கதவைத் திறந்து வெளியே வந்தாள். அவள் எதையோ தின்றுகொண்டிருந்தாள். எங்களை நோக்கிக் கையை அசைத்துக்கொண்டே வந்தாள். அவளின் ஒல்லியான உடம்பைக் கண்டே நாங்கள் ஓடவில்லை என்று சொல்லமுடியும். நாங்கள் அவளுக்காகக் காத்துநின்றோம். அவள் எதற்காகவோ எங்களை நோக்கிச் சிரித்ததை எங்களால் பார்க்கமுடிந்தது. எப்போதும் சிரிக்கும் எலும்பம்மா (எலும்பு அம்மா) தவிர, சொர்க்கத்தில் யாருமே எங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை. அந்தப்பெண் வாசலுக்கு வந்துவிட்டாள். வாசல் பூட்டியிருந்தது. அதைத் திறப்பதற்கான சாவியை அவள் கொண்டுவந்திருக்கவில்லை.
குட்டிகளா, இந்தக் கட்டாந்தரையில் என்னால் நிற்கக்கூட முடியவில்லை: தரை கொதித்துக் கிடக்கிறது; என்னால் தாங்கவே முடியவில்லை. நீங்கள் எப்படி நிற்கிறீர்கள்?” என்று அவள் கேட்டாள். அவளது குரலில் பயப்படும்படியாக எதுவுமில்லை.
அவள் கையிலிருந்ததைக் கௌவி மென்றுகொண்டே புன்னகைத்தாள். அவள் கழுத்தில் ஒரு அழகான இளஞ்சிவப்பு நிழற்படக்கருவி தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய நீண்ட பாவாடையின் அடியில் நீட்டிக்கொண்டிருந்த பாதங்களை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். ஒரு குழந்தையுடையதைப்போல எவ்வளவு அழகான பாதங்கள்! அவள் கால் பெருவிரல்களை அசைத்துக்கொண்டே இருந்தாள். அவள் பாதங்களைப் போல என்னுடையது எப்போதாவது இருந்ததா என எனக்கு நினைவில்லை. ஒருவேளை, நான் பிறந்தபோது அப்படி இருந்திருக்கலாம்.
நின்றுகொண்டிருந்த அந்தப்பெண்ணின் சிவந்தவாயைப் பார்த்தேன். அவள் கழுத்து நரம்பிலிருந்தும், பெரிய உதடுகளை அசைத்ததிலிருந்தும் அவள் நல்ல ருசியான ஒன்றைத் தின்றுகொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். அவளுடைய நீண்ட கையில் வைத்து அவள் தின்று கொண்டிருந்ததை நான் உன்னிப்பாகப் பார்த்தேன். அது தட்டையாக, வெளிப்பக்கம் மொறுமொறுப்பாக இருந்தது. மேற்புறம் பாலேட்டுப் பிசுபிசுப்புடன் மென்மையாகஇருந்தது. அதன்மீது நாணயங்கள் போல ஏதோ ஒட்டிக்கொண்டிருந்தன. அவை ஆழ்ந்த சிவப்பில் தீப்புண் நிறத்தில் இருந்தன. அதோடு மஞ்சள், பச்சை, சிவப்பு தூவியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. கடைசியாக முகப்பருக்கள் போலத் தவிட்டுநிறம் பொங்கியிருந்ததைக் கண்டேன்.
அதைநோக்கி ஒருகையை நீட்டி அதுஎன்ன?” என்று சிப்போ கேட்டாள். அவளுடைய மறு கை வயிற்றைத் தடவிக்கொண்டிருந்தது. இப்போது அவள் பிள்ளைத் தாய்ச்சியாக இருக்கிறாள். பேசும்போதெல்லாம் வயிற்றைத் தடவிக்கொண்டே இருக்க விரும்புகிறாள். வயிறு சாக்ஸர் விளையாட்டின் பந்து (கால்பந்து) போல, ஆனால் அந்த அளவுக்குப் பெரிதாக இல்லாமல் இருந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாளென நாங்கள் எல்லோரும் அவள் வாயையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘’, இதுவா? இது படம்பிடிக்கும்பெட்டி’’ என எங்களுக்குத் தெரிந்ததையே சொன்னாள். கையைச் சட்டையிலேயே துடைத்துக்கொண்டு நிழற்படக்கருவியைத் தடவிக் காட்டினாள். பின்னர் கையிலிருந்ததைக் கதவருகிலிருந்த குப்பைக்கூடையைக் குறிபார்த்து எறிந்தாள்; அது தவறிக் கீழே விழுந்தது; அவள் சிரித்தாள்; இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? அவள் எங்களைப் பார்த்தாள்; அவள் சிரிப்பதால் நாங்களும் சிரிக்கவேண்டுமென எதிர்பார்த்தாள்போல. ஆனால், நாங்கள் அவள் எறிந்த அது, இறந்த பறவை தரைநோக்கி விழுவதைப்போலக் கீழே விழுந்து சிதறிக் கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தோம். சாப்பிடுவதை இப்படித் தூக்கியெறிகிற யாரையும் நாங்கள் பார்த்ததேயில்லை. நான் சிப்போவை ஓரக்கண்ணால் பார்த்தேன்.
பிள்ளைத்தாய்ச்சிப் பெண் யாரையுமே பார்த்திராததுபோலச் சிப்போவின் வயிற்றைப் பார்த்துக்கொண்டே ‘’உனக்கு இப்போது வயது என்ன ஆகிறது?‘’என்றாள். ஆனால், சிப்போ அதைக் கவனிக்கவேயில்லை. அவள் தரையில் கிடந்த அதையே, சாப்பிடுகிற அதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
நான் புடாபெஸ்டில் வாழ்ந்தால் தினசரி உடம்புக்குக் குளித்துத் தலைசீவி, சரியான இடத்துக்குத் தக்கபடியான, சரியான நபர் எனக் காட்டிக்கொள்வேன்.
அவளுக்குப் பத்துவயதுசிப்போவுக்காக கடவுளறிவார் பதில் சொன்னான்.
நாங்கள் இரட்டைக் குழந்தைகள்போல, நானும் இவளும், ஒன்பது வயதுஎன்றான். என்னையும் அவனையும் சொல்கிற மாதிரி. ‘’ வேசிமகனுக்குப் பதினொன்று, ஸ்போவுக்குஎட்டு, ஸ்டினாவுக்கு எத்தனையென்று எங்களுக்குத் தெரியாது.’’
ஓ!என்றாள் அவள், காமிராவோடு விளையாடிக்கொண்டே.
உங்களுக்கு என்ன வயது?” என்று கேட்டான், கடவுளறிவார். உங்கள் சொந்த ஊர்?” கடவுளறிவார் எப்படி, இப்படி வாயாடலாமென்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.
எனக்கா, 33 வயது. நான், லண்டன். என் அப்பாவின் ஊருக்கு முதல்முறையாக இப்போதுதான் வந்திருக்கிறேன்.
நான் ஒருமுறை லண்டன் இனிப்புகளைத் தின்றிருக்கிறேன். `இனியவர்` மாமா அனுப்பியிருந்தார். ஆனால் அதெல்லாம் ரொம்பநாளைக்கு முன்னால் நடந்தகதை. இப்போதெல்லாம் அவர் கடிதம் கூட எழுதுவதில்லை.என்றான், கடவுளறிவார். அந்தப் பெண்ணின் வாய் மெல்லுவதை நிறுத்தியது. நான் அவளோடு சேர்ந்து விழுங்கினேன்.
நீங்கள் பதினைந்து வயதுக் குழந்தைபோல இருக்கிறீர்கள்என்றான், கடவுளறிவார். அவனுடைய பெரிய வாயிலேயே அடி வாங்கப்போகிறானென நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவள் ஏதோ பெருமைப்படத்தக்க ஒன்றை அவன் சொல்லிவிட்டது போலச் சிரித்துவிட்டு, “நன்றிஎன்றாள்.
இதில் நன்றி சொல்வதற்கு என்ன இருக்கிறதென்று அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மற்றவர்களைப் பார்த்தேன். அந்தப்பெண் வித்தியாசமானவளாக இருப்பதாகமற்றவர்களும் நினைப்பார்களென எனக்குத் தெரியும். அவள், சடைபிடித்தது போல் தெரிந்த அவளின் தலைமுடிக்குள் கையைவிட்டுச் சிக்கெடுப்பது போல் கோதினாள். நான் மட்டும் புடாபெஸ்டில் இருந்தால் தினசரி உடம்புக்குக் குளித்து, அழகாகத் தலைசீவி, சரியான இடத்தில் இருக்கும் சரியானநபர் எப்படி இருக்கவேண்டுமெனக் காட்டுவேன்.
நான் ஒரு படம் எடுத்துக்கொள்ள நீங்கள் சம்மதிப்பீர்கள்தானே?” நாங்கள் பதிலேதும் சொல்லவில்லை. பெரியவர்கள் எங்களை எதுவும் கேட்பது வழக்கமானதல்ல. அவள் பின்னோக்கிச் சில அடிகள் நகர்வதை, அந்தப் பயமுறுத்தும் தலைமுடியை, அவள் நடக்கும்போது தரையைப் பெருக்கும் பாவாடையை, அவளுடைய அழகிய பாதங்களை, அவள் அணிந்திருந்த அந்தப் பெரிய ஆபரணநகையை, அவளின் பெரிய கண்களை, உயிருள்ள மனுஷி என்பதற்கடையாளமாக ஒரு தழும்புகூட இல்லாத வழுவழுப்பான செம்பழுப்பு நிறத் தோலை, அவள் மூக்கில் அணிந்திருந்த காதுவளையத்தை, `Save Darfur` எனச் சொல்லிக்கொண்டிருந்த டி.சர்ட்டை, நாங்கள் பார்த்துக் கொண்டேயிருந்தோம்.
இங்கே பாருங்கள், `ச்சீஸ்` சொல்லுங்கள், ச்சீஈஈஸ்`. அவள் எங்களை உற்சாகப்படுத்தப் படுத்த, எல்லோரும் `ச்சீஸ்` என்றார்கள். நான்மட்டும் உண்மையில் சொல்லவில்லை. `ச்சீஸ்` என்றால் என்ன என்பதை நான் நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன். என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஒரு அர்த்தம் தெரியாத புதுப்பாடலைக் கற்றுக்கொண்டு, அதையே திரும்பத்திரும்பப் பாடிக்கொண்டிருந்த டூடூ பறவையின் கதையை எலும்பம்மா நேற்று சொன்னாள். அந்தப் பாட்டின் வார்த்தைகளின் பொருள்புரியாமலேயே அந்தப்பறவை பாடப்பாட, அதனைப் பிடித்துக் கொன்று சமைத்துவிட்டார்கள். ஏனென்றால், அந்தப்பாட்டில், அது எல்லோரிடமும் தன்னைப் பிடித்துக் கொன்று சமையுங்கள் என்று உண்மையாகவே கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தது.
அவள் என்னைச் சுட்டிக்காட்டித் தலையசைத்து, `ச்சீஈஈஈஸ்` எனச் சொல்லுமாறு சொன்னாள். அவள் என்னை நன்கு தெரிந்தது போலக்காட்டிச் சிரித்ததால். நானும் அப்படிச் சொன்னேன். முதலில் நான் மெதுவாகச் சொன்னேன். பிறகு, ச்சீஸ், ச்சீஸ் என்றேன். பின்னர் நான் `ச்சீஸ், ச்சீஈஈஈஸ் எனச்சொல்ல எல்லோரும் ச்சீஸ்ச்சீஸ் என்றார்கள். நாங்கள் எல்லோரும் அந்த வார்த்தையைப் பாடிக்கொண்டிருக்கக் காமிரா கிளிக்கிக் கிளிக்கிக் கிளிக்கிக் கொண்டேயிருந்தது. எப்போதும் எதுவுமே பேசாத ஸ்டினா கிளம்பி, நடக்கத்தொடங்கினாள். அந்தப்பெண் படம்பிடிப்பதை நிறுத்திவிட்டு, “எல்லோருக்கும் திருப்திதானே?”என்றுகேட்டாள். ஆனால், ஸ்டினோ நிற்கவில்லை. ஸ்டினோவைத் தொடர்ந்து சிப்போ வயிற்றைத் தடவிக்கொண்டே நடந்தாள். நாங்களும் அவர்களின் பின்னே நடந்தோம்.
அந்தப்பெண்ணை அங்கேயே படமெடுக்க விட்டுவிட்டு, நாங்கள் கிளம்பினோம். எஸ்.ஏ.டி.சி. முனையில் நின்றுகொண்டு வேசிமகன், அவளைப்பார்த்து, கெக்கெக்கே என வலிச்சம் காட்டிக் கூச்சலிட்டான். அவள், கையில் வைத்திருந்த மீதியை எங்களுக்கு வேண்டுமா எனக்கூடக் கேட்காமல் தூரஎறிந்ததை நான் நினைத்துக்கொண்டேன். நானும் கூச்சல் போட்டுக் கத்தினேன். எல்லோரும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். நாங்கள் கூச்சல்போட்டுக் கூச்சல்போட்டுக் கூச்சல்போட்டுக் கத்தினோம். அவள்தின்ற அதை, நாங்களும் தின்ன விரும்பினோம். நாங்கள் புடாபெஸ்டில் கூச்சலிட்டுக் கலகம் செய்ய விரும்பினோம். எங்கள் பசி இல்லாமலாக வேண்டும். அந்தப்பெண் எங்களை வெறுமனே பார்த்தாள்; திகிலடைந்து, அவசரமாக வீட்டைநோக்கித் திரும்பினாள். அப்போதும் நாங்கள் கூச்சலிட்டோம். நாங்கள் ஆங்காரமாகக் கத்தினோம். எங்கள் தொண்டை கரகரத்து வலித்தது. அவள் வீட்டுக் கதவைச் சார்த்தி, மறைந்ததும் எங்கள் கொய்யாவைத் தேடி மெல்ல நடக்கத் தொடங்கினோம்.
பெரியவர்களான பிறகு கொய்யா திருடுவதை விட்டுவிட்டு, வீடுகளுக்குள்ளிருக்கும் வேறு நல்லவற்றைத் திருடவேண்டுமென்று வேசிமகன் சொன்னான். அப்படிப்பட்ட ஒருகாலம் வரும்போது நான் இங்கேயே இருக்கமாட்டேன், போஸ்டாலினா அத்தையோடு அமெரிக்காவில் நல்லமுறையில் இருப்பேன். ஆனால், இப்போதைக்குக் கொய்யாதான்.ஐ.எம்.எப்.(IMF) தெருவில் மலையைப் போலத் தோற்றமளித்த ஒரு வெள்ளை மாளிகையைக் குறிவைத்தோம். காலியான இருக்கைகள் சுற்றிக்கிடக்க, ஒரு பெரிய நீச்சல்குளம் அந்தமாளிகை முன்னால் இருந்தது.
அந்த அழகான மாளிகையின் நல்லதொரு அம்சம் என்னவென்றால், மலை பின்பக்கமாக இருந்ததுதான். எங்கள் கொய்யாக்களோ, நாங்கள் வருவதை முன்னமேயே தெரிந்துகொண்டு, எங்களைச் சந்திக்க ஓடிவந்தவை போலக் கைக்கெட்டும் தூரத்திலேயே தொங்கின. சுற்றுச்சுவரில் கால்வைத்து மரம் மீதேறி எங்கள் பைகளை நல்ல குண்டுப்பழங்களாக நிரப்பிக்கொள்ள அதிக நேரமாகவில்லை. இந்தக் கொய்யாப்பழங்கள் மனிதர்களின் முட்டிக்கை அளவுக்குப் பெரிதானவை. அவை மற்றக் கொய்யாக்களைப் போல் முற்றினாலும் மஞ்சளாவதில்லை. வெளிப்பக்கம் பச்சையாகவே இருக்கும். ஆனால், உள்பக்கம் இளஞ்சிவப்பாக நல்ல சதைப்பற்றாக இருக்கும். அவை நல்ல ருசியாக இருக்கும். அந்த ருசியை விவரித்துச் சொல்ல என்னால் ஆகாது.
000
சொர்க்கத்துக்குத் திரும்பும்போது நாங்கள்ஓடுவதில்லை. புடாபெஸ்ட் என்னவோ எங்கள் சொந்த ஊர் மாதிரி, கொய்யாக்களைக் கடித்துத் தோலை வழியெல்லாம் துப்பிக் குப்பையாக்கிக் கொண்டு சாவதானமாக நடந்தோம். ஏ. யூ.(African Union) மூலையில், சிப்போ வாந்தியெடுப்பதற்காகச் சிறிது நின்றோம். வாந்தி சிறுநீரைப்போல, ஆனால், பிசுப்பிசுப்பாகத் தெரிந்தது. அதை மூடாமல் அப்படியே விட்டுவிட்டோம்.
ஒருநாள், இந்த வீடு மாதிரியே ஒன்றில் குடியிருப்பேன்என்றாள், கல்லுமாதிரி ஒரு கொய்யாவைக் கடித்துக்கொண்டிருந்த ஸ்போ. இடதுபக்கம் நீண்ட வரிசைப் படிக்கட்டுக்களுடன் சுற்றிலும் பூக்கள் பூத்துக்கிடந்த பெரிய நீலநிற வீடு ஒன்றை அவள் காட்டிக் கொண்டிருந்தாள். என்ன பேசுகிறோமெனத் தெரிந்து பேசுவது போலத்தான் அவள்குரல் இருந்தது.
அதை எப்படிச் செய்யப் போகிறாய்?”என்று நான் கேட்டேன்.
எனக்குத் தெரியும், அவ்வளவுதான்என்றாள், ஸ்போ, கொய்யாத் தோலைத் தெருவில் துப்பிக்கொண்டே. அவள்கண்கள் அகன்று விரிந்திருந்தன.
கனவில்தான் அப்படி நடக்கும்என்றான், வேசிமகன், வெயிலைப் பார்த்துக்கொண்டே. அப்படியே ஸ்போவின் வீட்டுச் சுற்றுச்சுவர்மீது ஒரு பழுத்த கொய்யாவை வேகமாக விட்டெறிந்தான். அது பிளந்து சிதறிச் சுவரில் இளஞ்சிவப்புக் கறைபடிந்தது.
நான் ஒரு இனிப்புக் கொய்யாவைக் கடித்தேன். நன்கு பழுத்த கொய்யாவின் விதைகளை மென்று தின்ன எனக்குப் பிடிப்பதில்லை. அது ரொம்பவும் கடினம். அதோடு அப்படித் தின்றால் நேரமாகும். அதனால், மெதுவாக உதப்பி மென்று சிலவேளைகளில் விதைகளை முழுதாக விழுங்கிவிடுவேன். அப்படிச் செய்வதால் என்ன ஆகுமென்றும் எனக்குத் தெரியும். இருந்தாலும் அப்படித்தான் விழுங்குவேன்.
கடவுளறிவாரின் பின்பக்கம் காற்சட்டைக் கிழிசலைப் பார்த்தேன். அவனுடைய கறுப்புப் புட்டங்கள் அழுக்கடைந்த வெள்ளைநூல் திரடுகளின் நடுவில் பெரிய கண்கள் போல வித்தியாசமாகத் தோன்றின.
ஏண்டா, அப்படிச் செய்தாய்?” சுவரின் கறையைப் பார்த்துவிட்டுப் பின் வேசிமகனைக் கேட்டாள் ஸ்போ. அவன் பகட்டாகச் சிரித்துக்கொண்டே இன்னொரு கொய்யாவை எறிந்தான். அது சுவற்றில் படாமல் முன்வாயில் இரும்புப் படலில் பட்டது. உண்மையான படலைப்போல் அது சத்தமிடவில்லை.
ஏனென்றால், என்னால் முடியும். நான் நினைத்ததைச் செய்யமுடியும். அது மட்டுமில்லை, இதனால் என்ன கெட்டுப் போயிற்று?”

அந்த வீட்டை எனக்குப் பிடிக்குமென்று நான் சொன்னதைக் கேட்டுத்தானே அப்படிச்செய்தாய், அதனால் நீ நினைத்ததையெல்லாம் செய்துவிடக்கூடாது. எனக்கு அக்கறையில்லாத வேறு வீடுமீது எறிய வேண்டியதுதானே?”
சரிதான், அது உன்வீடு மாதிரி ஆகுமா?”என்றான், வேசிமகன், ஒருபோதும் கழற்றவே கழற்றாத ஒரு கறுப்புமுழுநீளக் காற்சட்டையும் `கார்னல்` என எழுத்துக்கள் தெரிகிற வெளிறிய ஆரஞ்சுநிற டி-சர்ட்டும் அணிந்திருந்தான். அந்தக் கார்னல் டி-சர்ட்டைக் கழற்றித் தலையில் கட்டிக்கொண்டான். அது அவனுக்கு அழகாயிருந்ததா அல்லது அசிங்கமாயிருந்ததாவென்று எனக்குத் தெரியவில்லை. அவன் ஒரு ஆண்போலவும் தெரியவில்லை; பெண் போலவும் தெரியவில்லை. அவன் அப்படியே திரும்பி ஸ்போவை நேருக்கு நேராகப் பார்த்தவாறு பின்பக்கநடையாக நடக்கத் தொடங்கினான். அவன் எப்போதுமே, சண்டையிடுகிற எல்லோரையுமே நேருக்குநேராக, அப்படித்தான், பார்ப்பான். அவன் ஸ்டினாவைத் தவிர எங்கள் எல்லோரையும் அடித்தான்.
அது மட்டுமல்ல, புடாபெஸ்ட் என்ன, கழிப்பறையா? யார் வேண்டுமானாலும் உள்ளே போக, வெளியே வரவென்று, நீ இங்கு வசிக்கவே முடியாது.
புடாபெஸ்டிலிருந்து ஒருஆளைக் கல்யாணம் செய்துகொள்வேன், அவன் என்னைச் சொர்க்கத்திலிருந்து, சொர்க்கவாசல், பாம்பெகி, எல்லாவற்றிலிருந்தும் கூட்டிக்கொண்டு போய்விடுவான்என்றாள், ஸ்போ.
ஹஹ்ஹா, இந்த ஓட்டைப்பல்லோடு உன்னை ஒருவன் கல்யாணம் செய்வான் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நானேகூட உன்னைக் கலியாணம் செய்யமாட்டேன்என்று, அவள் தோளுக்கு மேலாக எம்பிக்கொண்டு கடவுளறிவார் கத்தினான்.
அவன், சிப்போ, ஸ்டினா மூவரும் எங்களுக்கு முன் வேகமாக நடக்கத் தொடங்கினார்கள். நான் கடவுளறிவாரின் காற்சட்டையைப் பார்த்தேன். பின்பக்கம் கிழிசலாகி, அழுக்கடைந்து, பிரிந்து கிடந்த வெள்ளை நூல்களின் நடுவே விசித்திரமான விழிகளைப்போல அவனது கறுத்தபுட்டங்கள் துருத்தியிருந்தன.
மரமண்டை, நான் உன்னிடம் பேசவில்லைஸ்போ, கடவுளறிவாரிடம் கத்தினாள். அது மட்டும் இல்லடா, என் பல் திரும்பவும் வளரும். நான் இன்னும் அழகாக ஆகிவிடுவேன் என்று அம்மா சொன்னாள்.
கடவுளறிவாருக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவன் கைகளை விரித்து, `அடேயப்பா, அப்படி ஆகிவிட்டாலும்` என்றவாறு ஒரு வலிச்சம் காட்டினான். எங்கள் எல்லோரைவிடவும், சொர்க்கத்திலுள்ள குழந்தைகள் எல்லோரையும் விட, ஸ்போதான் அழகு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எங்களுக்குத் தெரியாத மாதிரி அவள் பேசிக்கொண்டே போவதை நிறுத்தாதபோது அவளோடு நாங்கள் விளையாட மறுப்பதுண்டு.
சரி, இதிலெல்லாம் எனக்கு அக்கறையில்லை. நான், நானாகவே ஊரைவிட்டு, ஏன் நாட்டை விட்டே போகப் போகிறேன். நிறையச் சம்பாதித்துத் திரும்பவந்து இதே புடாபெஸ்டில் அல்லது லாஸ்ஏஞ்செல்ஸில், ஏன், பாரீஸில்கூட ஒருவீடு வாங்குவேன்என்றான், வேசிமகன்.
பணம் சம்பாதிக்கவேண்டுமெனால், படிக்க வேண்டுமென்று, நாம் பள்ளிக்கூடத்துக்குப் போனகாலத்தில், எங்க வாத்தியார், திரு. கோனா சார் சொன்னார்’’ வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னாள் சிப்போ, கோனா என்னவோ அவள் அப்பா மாதிரி, அவர் என்னமோ ஒரு தனிப்பட்ட முக்கியம் மாதிரி, அவள் வயிற்றுக்குள்ளிருப்பதே அவர்தான் என்கிற மாதிரி, அப்படியொரு பெருமையோடு திரு. கோனாவின் பெயரை உச்சரித்தாள்.
நாம் பள்ளிக்கூடம் போகாதபோது, நீ எப்படி அப்படிச் செய்யமுடியும்?”என்றாள். சிப்போ.
எனக்குப் பணம் சம்பாதிக்கப் பள்ளிக்கூடம் தேவையில்லை. நீ எந்த பைபிளில் அதைப் படித்தாய்?” சிப்போவின் மூக்கைக் கடித்துவிடுவது போல் அவள் முகத்தருகே போய்க் கூச்சலிட்டான் வேசிமகன். வயிற்றைத் தடவிக்கொண்டே, சிப்போ மீதியிருந்த கொய்யாவை அமைதியாகத் தின்றுமுடித்து எங்களை விட்டு வேகமாக நடந்தாள்.
போஸ்டாலினா அத்தையோடு நான் அமெரிக்காவில் போய் இருக்கப் போகிறேன். அதற்கு ரொம்பநாள் ஒன்றும் ஆகாது, வேண்டுமானால் பாருங்களேன்.எல்லோருக்கும் கேட்கிறமாதிரியில் நான்சத்தம் போட்டுச்சொன்னேன். நான் ஒரு புதுக் கொய்யாவைக் கடிக்கத் தொடங்கினேன். மூன்றேகடியில் அதைமுடித்துவிட்டேன். அது, அப்படியொருஇனிப்பு. அதன் விதைகளைக் கூடக் கடித்து அரைத்துத் தின்ன வேண்டுமென நான் கவலைப்படவில்லை.
வேசிமகன் சலித்துப் போயிருக்கவேண்டும். அவன், “அமெரிக்கா ரொம்பத்தூரம்’’ என்றான். வானத்தில் போகுமளவுக்குத் தூரமான எங்கும் நான் போகமாட்டேன். அது வழியிலேயே நின்றுபோனால், திரும்பிவர முடியவில்லையென்றால், நீங்கள் என்ன ஆவீர்கள்? நான் தென்னாப்பிரிக்கா அல்லது போஸ்ட்வானாவுக்குப் போவேன். நிலைமை மோசமானால், யாரிடமும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சாலை வழியாகவே திரும்பிவந்து விடுவேன். எங்கே வேண்டுமானாலும் போகலாம், ஆனால், அது எளிதில் திரும்பிவரக்கூடிய இடமாக இருக்கவேண்டும்.
நான் வலதுபக்கமாகத் திரும்பினேன். என்னுடைய அமெரிக்காவைப் பழித்துப் பேசிய வேசிமகனைக் கடித்துவிடலாமா என்று யோசித்தேன்.
வேசிமகனை மீண்டும் பார்த்தேன், அவனுக்கு என்ன பதில் சொல்லலாமென்று யோசித்தேன். ஒரு கொய்யா விதை ஈறுக்கும் கடைசிப்பல்லுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டது. அதை நாக்கால் தடவி எடுக்கப் பார்த்தேன். கடைசியில் ஒருவிரலை விட்டுத் தோண்டியெடுத்தேன். அது காதுக்குறும்பி போல ருசித்தது.
வேசிமகனோடு சேர்ந்துகொண்டு, சிப்போ, “அமெரிக்கா ரொம்பத்தூரம்என்றாள், வயிற்றைத் தடவிக்கொண்டே. எங்களுக்காகச் சிறிது நின்றாள்.நீ விமானத்திலிருக்கும் போது அதற்கு ஏதாவது ஆகிவிட்டால்? தீவிரவாதிகள் வேறு?” என்றாள்.
சப்பை முகத்துக் காரி, சாக்ஸர் பந்து வயிற்றுச் சிப்போ, அந்த வேசிமகனைச் சமாதானப்படுத்தவே அப்படிப்பேசினாள். அவன் ஏற்கெனவே அவளிடம் கூச்சலிட்டான், இல்லையா? நான் அவளை முறைத்துப் பார்த்தேன். அப்போதும் என் வாய் அரைத்துக்கொண்டே இருந்தது.
அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் போகத்தான் போகிறேன்என்று சொல்லிவிட்டு, கடவுளறிவாரையும் ஸ்டினாவையும் பிடித்துவிட வேகமாக நடக்கத் தொடங்கினேன். சிப்போவும் வேசிமகனும் சேர்ந்து என்னை மடக்கினால் பேச்சு எங்கு போய் முடியுமென்று எனக்குத் தெரியும்.
சரி,சரி, போ, அமெரிக்காவுக்குப் போய் மருத்துவமனையில் சேர்ந்து கழிப்பறைகளைக் கழுவு. அங்கே உள்ள கதை எல்லாம் எங்களுக்குத் தெரியாதென்று நினைத்தாயா?” வேசிமகன் என் முதுகுக்குப் பின்னால் கத்தினான். நான் எதுவும் பேசாமல் நடந்துகொண்டேயிருந்தேன்.
என்னுடைய அமெரிக்காபற்றிப் பேசியதற்காக வலதுபக்கம் திரும்பி வேசிமகனை அடித்துவிடலாமா என நினைத்தேன். அவனை அறைந்து, அந்தப் பெரியமண்டையில் குத்தி, அவன் வாயிலேயே என் மணிக்கட்டால் இடித்துப் பல்லைத் தட்டவேண்டும். அவன் தின்று முடித்த கொய்யா முழுவதையும் வாந்தியெடுக்கும்படி அவன் வயிற்றிலேயே குத்தவேண்டும். அவனைக் கீழேதள்ளி, முதுகில் என்கால் முட்டியைவைத்து இறுக்கி, இரண்டு கைகளையும் பின்பக்கமாக வளைத்துத் தலையைப்பிடித்து இழுத்து, அவனாகவே என்னைவிட்டுவிடு, விட்டுவிடுஎனக் கதறும்படி அடிக்கவேண்டும். ஆனாலும் நான் வாயை மூடிக்கொண்டு நடந்தேன். எனக்குத் தெரியும், அவனுக்குப் பொறாமை. அமெரிக்காவில் அவனுக்கு யாருமே இல்லை. அத்தை போஸ்டாலினா அவனுக்கு அத்தையில்லை. ஏனென்றால், அவன் வேசிமகன். நான் `கண்மணி`.
000
நாங்கள் சொர்க்கத்துக்குத் திரும்பும்போது கொய்யாக்களெல்லாம் தீர்ந்துவிட்டன. எங்கள் வயிறுகள் நிறைந்து உப்பி, நாங்கள் மெல்லத் தவழாக்குறையாக ஊர்ந்துகொண்டிருந்தோம். இரவுக்கு வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு எலும்பம்மாவிடம் கதை கேட்டுவிட்டுத் தூங்க வேண்டியதுதான். நாங்கள் புதர்மறைவில் மலம்கழிப்பதற்காக நின்றோம். நன்கு இருட்டும் முன்பே அதைச் செய்துவிடுவது நல்லது. இல்லையென்றால், உங்களுக்குத் துணைக்கு யாரும் வரமாட்டார்கள். நீங்கள் தனிமையில் இடுகாட்டுப்பாதையில் நடந்துவரவேண்டும். அங்கே நீங்கள் பேயைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
எல்லோரும் இடம் பிடித்து விட்டோம். நான் ஒரு பாறையின் பின்னால் குத்துக்காலிட்டேன். இந்தக் கொய்யாக்களில் மோசமான விஷயம் இதுதான். நீங்கள் அதிகமாகச் சாப்பிடும்போது விதைகள் எல்லாம் சேர்ந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். மலங்கழிக்கும்போது, ஒரு கிராமத்தையே பெற்றுப் போடுவது போல் ரொம்ப ரொம்ப வலிக்கும். நிமிடம் நிமிடமாக நேரம் கடந்துகொண்டிருந்தது. நான் முடித்துவிட்டேன். எல்லோரும் கிளம்புங்கள்என்று யாரும் கத்தவில்லை.
அப்படியாக எல்லோரும் வெவ்வேறு இடத்தில் குத்துக்காலிட்டிருக்கும்போது, நான் என் பின்பக்கத்தில் கடைசியாக ஒட்டிக்கொண்டிருந்ததை வீழ்த்திவிடத் தொடையைத் தட்டிய நேரத்தில். யாரோ கத்தும் குரல் கேட்டது. கொய்யாவிதை குதத்தில் சிக்கியதால் எழும் சப்தம்போல அந்தக்குரல் இல்லை. அது, “வா, வா, வந்துபாரு.’’ என்றது. நான் கழிப்பதை நிறுத்திவிட்டு, உள்ளாடையை இழுத்து மேலேற்றி என் பாறை மறைவிலிருந்து வெளியேவந்தேன். அங்கே குத்துக்காலிட்டுக் கிசுகிசுக்குரலில் கிறீச்சிட்டது, கடவுளறிவார்தான். அவன் அடர்ந்த மரங்களுக்குள் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான். அங்கே மரமொன்றிலிருந்து உயரமான ஏதோ ஒன்று தொங்கி அசைந்து கொண்டிருந்தது.
அது என்னது?” யாரோ கிசுகிசுத்தார்கள். அது யாரென்று எனக்குத் தெரியவில்லை. யாரும் பதில் சொல்லவில்லை. அது என்னவென்று எங்கள் எல்லோருக்கும் புரிந்தது. ஒரு பெண் பச்சைக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறாள். சூரிய வெளிச்சம் இலைகளை ஊடுருவி எல்லாவற்றையும் ஒரு வினோதமான நிறத்துக்கு மாற்றிக்கொண்டிருந்தது. அந்தப் பெண்ணுக்குள் கனலும் நெருப்புத்துண்டுகள் இருப்பதுபோல அவளின் மெல்லிய தோல் போர்த்த உடல் மின்னிக் கொண்டிருந்தது.
அந்தப் பெண்ணின் ஒடுங்கிய கைகள் இரு பக்கங்களிலுமாகத் தொங்கிக்கிடந்தன. அவளை யாரோ எதுவோ பாரமாக இழுப்பதுபோல அவள் கால்களும் கைகளும் தரையைப் பார்க்கத் தொங்கின. காற்றில் தொங்கும் ஒரு நேர்கோடு போல அது இருந்தது. அவள் வாய் பிளந்து, கண்கள் பளீர் வெள்ளையாகப் பயமுறுத்தியது. அவள் ஒரு மஞ்சள்நிற ஆடை அணிந்திருந்தாள். புற்கள் அவளது காலணியின் முனைகளைத் தொட்டு அசைந்து கொண்டிருந்தன.
நான் பயந்து விட்டேன். பிதுங்கிய வெள்ளைக் கண்களின் ஓரமாக அவள் என்னையே பார்ப்பது போலிருந்தது.
ஓடி விடலாம்என்றாள், ஸ்டினா. உள்ளூர் விளையாட்டுக்குப் பின் அவள் பேசிய முதல் வார்த்தை அதுதான். ஸ்டினா பேசினாளென்றால், அது முக்கியமானது. அதனால், நானும் ஓடத் தயாரானேன்.
கோழைகளா! அவளே தூக்குப் போட்டுத் தொங்கி, இப்போது செத்துப் போனது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்ற வேசிமகன் ஒரு கல்லையெடுத்து எறிந்தான். அது சரியாக அவளது தொடை மீது பட்டது. ஏதோ ஒன்று நடக்கப்போவதாக நான் பயந்துகொண்டிருந்தேன். ஆனால் அவள் அசையவே இல்லை.
பாரு, அவள் செத்துப்போனதாக நான் சொன்னேனில்லையா?”வேசிமகன் சொன்னான். அவன்தான் தலைவன் என்பதை நினைவுபடுத்துவதாக அவன்குரல் இருந்தது.
கடவுள் இதற்காக உன்னைத் தண்டிப்பார்’’ என்றான் கடவுளறிவார்.
வேசிமகன் இன்னொரு கல்லை எறிந்தான். அது அவள் கால்களை `க்கூ` என்ற சத்தத்துடன் தாக்கியது. ஆனாலும் அவள் அசையவில்லை. நான் அதிகம் பயந்துவிட்டேன். அவளுடைய பிதுங்கிய வெள்ளைவிழிகளின் ஓரங்கள் என்னையே பார்ப்பது போலிருந்தது. எனக்குத் தெரியாத ஏதோ ஒன்றை நான் செய்வேனென அது காத்திருப்பதுபோலத் தோன்றியது.
கடவுள் இங்கே எங்கும் வசிக்கவில்லை, முட்டாளே”’ என்றான், வேசிமகன். அவன் மீண்டும் ஒரு கல்லையெடுத்து எறிந்தான். அது அவள் மஞ்சள் ஆடையை உரசிச்சென்றது. அந்தக் குறி தவறியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.
நான் போக வேண்டும், அம்மாவிடம் சொல்ல வேண்டும்.என்றாள், ஸ்போ. அவள் அழுதுவிடுவாள் போலத் தோன்றியது.
ஸ்டினா கிளம்ப ஆயத்தமானாள். அப்படியே ஸ்போவும், கடவுளறிவாரும். நான் கடவுளறிவாரைப் பின் தொடர்ந்தேன். வேசிமகன் சிறிது நின்றான். ஆனால் நான் அவனை ஓரக்கண்ணால் என் தோளுக்கு மேலாகப் பார்த்தபோது, எனக்கு நேர் பின்னால் நின்றதைக் கண்டேன். சொர்க்கத்தின் பிரதமர்போல அவன் காட்டிக்கொள்ள விரும்பினாலும் இறந்த ஒரு பெண்ணுடன் அவனால் புதர்க்காட்டுக்குள் இருக்கமுடியாதென்று எனக்குத் தெரியும். நாங்கள் சேர்ந்து நடக்கத் தொடங்கினோம். வேசிமகன் திடீரென்று எங்கள் முன்னால் குதித்தான்.
கொஞ்சம் பொறுங்கள், யாருக்கு ரொட்டி வேண்டும்?”என்றான் அவன். கார்னல் டி-சர்ட்டைத் தலையில் இறுக்கிக் கொண்டான். வேசிமகனின் மார்புக்குறிக்கு நேர்கீழாக இருந்த காயத்தைப் பார்த்தேன். அது கொய்யாவின் உட்புறத்து இளஞ்சிவப்பு போலவே இருந்தது.
எங்கே? எப்படி?”என்றேன், நான்.
கேட்டுக்கொள், அந்தப் பெண்ணின் காலணிகள் புதிதாக இருந்ததை நீ கவனித்தாயா? அதைமட்டும் நாம் எடுத்துவிட்டால், அவற்றை விற்று ஒன்றோ, ஒருவேளை ஒன்றரையோகூட ரொட்டி வாங்கலாம். என்ன சொல்கிறாய்?”
நாங்கள் எல்லோரும் அப்படியே திரும்பினோம். வேசிமகனைத் தொடர்ந்து புதருக்குள் மீண்டும் புகுந்தோம். நாங்கள் வேகமாக ஓடினோம், ஓடினோம், சிரிப்பு, சிரிப்புதான், எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்.
0

நன்றி : http://bostonreview.net/bulawayo-hitting-budapest
மலைகள் இணைய இதழ் மற்றும் அடவி சிற்றிதழிலும் வெளியானது.
ச.ஆறுமுகம். 9442944347
arumughompillai@gmail.com.

No comments:

Post a Comment