Saturday 16 January 2016

டென்மார்க் தேவதைக்கதை - தீக்குச்சி விற்கும் சிறுமி The Little Match Girl Hans Christian Anderson

தீக்குச்சி விற்கும் சிறுமி The Little Match Girl
ஆங்கிலம் : ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் Hans Christian Anderson
தமிழாக்கம் : ச.ஆறுமுகம்.



  342994



  அது, அந்த வருடத்தின் கடைசி, கடைசி மாலை. அந்த மாலை, அநேகமாக முழுமையான இருட்டாகியிருந்தது. அதிபயங்கரக் குத்தீட்டியாகக் குளிர் குத்திக் கிழித்தது; பனி பெய்துகொண்டே இருந்தது. அந்தக் குளிரிலும் இருட்டிலும் தலையை மூட எதுவுமின்றிப் பாவம், ஒரு ஏழைச் சிறுமி வெறுங்கால்களுடன் தெருவழியே போய்க்கொண்டிருக்கிறாள். வீட்டிலிருந்து கிளம்பும்போது அவள் செருப்பு அணிந்திருந்தாள். அது உண்மைதான். ஆனால், அதனால் ஒரு நன்மையும் இல்லை. அவை மிகப்பெரியவை; இதுவரை அவளது அம்மா அணிந்திருந்தவை; அவ்வளவு பெரியவை. அதோடு, பாவம் அந்தப் பிஞ்சு தெருவைக் கடக்கும்போது, இரண்டு லாரிகள் அவள் மீது மோதுவது போலக் கடும் வேகத்தில் வரவே, நிகழ்ந்த  அமளியில் காலணிகளைத் தொலைத்துவிட்டாள். அவற்றில் ஒன்றைக் காணவேயில்லை. மற்றொன்று ஒரு கோட்டிக்காரச் சிறுவன் கையில் மாட்டிக்கொண்டது. அது என்றாவது ஒரு நாள், அவனுக்குக் குழந்தை பிறக்கும்போது தொட்டிலாகப் பயன்படுமென்ற நினைப்பில் அதைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். அதனால் அந்தக் குட்டி தேவதை குளிரில் நீலம்பாரித்துப்போன சிவந்த சிறுபாதங்களுக்குச் செருப்பு ஏதுமின்றி வெறுங்கால்களோடு நடந்தாள். அவள் ஒரு கந்தல் ஆடையில் தீக்குச்சிகளைக் கட்டுகளாகக் கட்டிக் கையில் பிடித்திருந்தாள். அன்று முழுவதும் யாருமே அவளிடம் எதுவுமே வாங்கவில்லை. ஒரு சல்லிக்காசு கூட எவரும் கொடுக்கவுமில்லை. அவள் குளிரிலும் பசியிலும் நடுங்கி, ஊர்ந்துகொண்டிருந்தாள். அது துயரமிக்க காட்சி, பாவம் அந்தச் சிறுபெண்.
அவள் பின்கழுத்தைச் சுற்றி அழகாகக் கவிந்து, சுருண்டு கிடக்கும் நீண்ட தலைமுடியை பனித்துகள்கள் மூடிமறைத்துவிட்டிருந்தன. ஆனால், அவள் அதுபற்றிய நினைப்பிலெல்லாம் இல்லை. எல்லாச் சாளரங்களிலிருந்தும் மெழுகுத்திரிகளின் ஒளிவெள்ளம்; கூடவே வறுத்த வாத்துக்கறியின் அபார மணம், அது புது வருடப் பிறப்பின் விழாக்காலம் என உங்களுக்குத் தெரிந்திருக்குமே, ஆம். அவள் அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு வீடுகளின் சுவர்கள் முட்டிக்கொண்டு, அவற்றிலொன்று நீட்டிக்கொண்டிருந்த  ஒரு மூலையில்,  அவளாகவே தாழ்ந்து, அமர்ந்து, கூனிக்குறுகிச் சுருண்டுகொண்டாள். அவள் தன் குட்டிப் பாதங்களை நெருக்கி, நெருக்கியணைத்துச் சேர்த்துக்கொண்டாள். என்றாலும் அவள் குளிரில் விறைத்துக்கொண்டிருந்தாள். அவள் வீட்டுக்குப் போக முனையவேயில்லை. அவள் தீக்குச்சி ஏதும் விற்றிருக்கவில்லை. அவளால் சல்லிக்காசைக்கூட வீட்டுக்குக் கொண்டுசெல்ல முடியவில்லை. நிச்சயமாக அவள் தந்தையிடம் அடிபடத்தான் போகிறாள். வீட்டிலும் குளிரத் தான் போகிறது. அவள் வீட்டுக்குக்  கூரையென்று ஒன்று இருக்கத்தான் செய்தது. அதன் பெரிய வெடிப்புகளில் வைக்கோலும் கந்தைகளையும் திணித்து அடைத்தாலும் அது வழியாகத்தான் காற்று ஊளையிட்டுக்கொண்டு வீட்டுக்குள் வருகிறது.
அவளுடைய சின்னஞ்சிறு விரல்கள் குளிரில் விறைத்து அநேகமாக உணர்ச்சியற்றுவிட்டன. ஓ! தீக்குச்சி இப்போது அவளுக்கு  இதமான ஒரு  உலகத்தைக் கதகதப்பாக அளிக்க முடியும். அவள் மட்டும் ஒரு தீக்குச்சியைச் சுவற்றில் உரசிவிட்டால், அவள் கைகளுக்கு வெதுவெதுப்பு கிடைத்துவிடும். அவள் துணிந்து கட்டு ஒன்றை வெளியே உருவி விட்டாள். ‘’க்ரிஸ்ச்!’’ அடேயப்பா, என்ன வெளிச்சம், எப்படி எரிகிறது!  வெதுவெதுப்பாகப் பளிச்சென்று மெழுகுத்திரி போல, அவள் கைகளை அதன் மேலாக வைத்துக்கொண்டாள். அது ஒரு அற்புதமான ஒளி. பித்தளைப் பாதமும் பித்தளை ஆபரணக் குமிழுமிட்ட ஒரு பெரிய இரும்புக் கணப்படுப்பின்  முன் உண்மையாக அமர்ந்திருப்பதுபோலவே அந்தச் சிறு பெண்ணுக்குத் தோன்றுகிறது. நெருப்பு அப்படியொரு அற்புதமாக எரிகிறது. அது மகிழ்ச்சியான கதகதப்பாக இருக்கிறது. அந்தச்சிறுமி இப்போது கால் பாதங்களையும் வெதுவெதுப்பாக்கிக்கொள்ளக் கால்களை நீட்டுகிறாள். ஆனால் அந்தச் சிறுநெருப்பு அணைந்துபோனது, உடனேயே கணப்படுப்பும் மறைந்துவிட்டது. அவள் கையில் அணைந்த தீக்குச்சியின் அடிக்கட்டைதான் மிச்சமாக நின்றுகொண்டிருந்தது.
அவள் இன்னொன்றை எடுத்துச் சுவற்றில் உரசினாள். அது இன்னும் பிரகாசமாக ஒளிவிட்டது. அதன் வெளிச்சம் சுவரில் விழுந்த இடம் அறையினுள்ளிருப்பதைக் காட்டும் ஒரு ஒளிபுகுந்திரையாக மாறியது. அறைக்குள் வெண்பனி நிறத்தில் விரிப்பு பரப்பியிருந்த மேசை மீது  ஆப்பிளும் உலர்ந்த பிளம் பழங்களும் உள் நிரப்பிப் பொதிந்து, மிகுந்த சுவையென்று புகழ்ந்து பேசப்படும் வறுத்த ஆவிபறக்கும் வாத்துக்கறி நிறைந்த பீங்கான் தட்டுகள் இருந்தன. அதிலும் சிறப்பாகக் குறிப்பிட்டுச்  சொல்லப்போனால், அந்தக் கறித்தட்டிலிருந்து ஒரு வாத்து குதித்தது. அது தன் மார்போடு  ஒரு முள் கரண்டியையும் கத்தியையும் சேர்த்தணைத்து, ஒரு சுற்று வட்டமடித்துக் கிறங்கிக்கொண்டே, பாவம் அந்த ஏழைச் சிறுமியை நோக்கி வந்துகொண்டிருந்தது. தீக்குச்சி அணைந்ததும், இருட்டையும் குளிரையும் ஈரச்சுவற்றையும் மிச்சமாக விட்டுவிட்டு வாத்து மறைந்து போனது. அவள் இன்னொரு குச்சியைப் பொருத்தினாள். இப்போது அவள் உலகின் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கிறித்துமஸ் மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அது மிகப்பெரியதாகவும், அந்தப்பெரும் பணக்கார வணிகரின் வீட்டில் கண்ணாடிக் கதவின் வழியாக அவள் பார்த்ததைவிடவும் பலமடங்கு சிறப்பாக அழகுபடுத்தப்பட்டிருந்தது.
அதன் பசுமைக் கிளைகளில், அங்காடிச் சாளரங்களில் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதாக, அவள் கண்டதைப் போன்ற மகிழ்ச்சியூட்டும் வண்ணப் படங்களுடன் ஆயிரக்கணக்கான விளக்குகள் மின்னிக்கொண்டிருந்தன.  அவற்றை நோக்கி அவள் கைகளை நீட்டிக்கொண்டிருக்கையில் தீக்குச்சி அணைந்துபோனது. ஆனாலும் கிறித்துமஸ் மரத்தின் விளக்குகள் வானத்தை நோக்கி உயர உயரச் சென்றுகொண்டிருந்தன. அவற்றைச் சொர்க்கத்தின் நட்சத்திரங்களாக  அந்தச் சிறு பெண்  கண்டாள்; அவற்றில் ஒன்று நீளமான நெருப்பு வழி ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு உருகிக் கீழே விழுந்தது.
‘’ யாரோ ஒருவர் இறந்துவிட்டார்!’’ என்றாள், அந்தச் சிறுமி. இந்த உலகத்தில் அவளை நேசித்த ஒரே மானிடப்பிறவியாக, இறந்துபோன அவளுடைய வயதான பாட்டி அவளிடம் ஒரு நட்சத்திரம் வீழும்போது, ஒரு ஆத்மா கடவுளைச் சென்றடைகிறதெனச் சொல்லியிருக்கிறாள்.
அவள் இன்னொரு குச்சியை சுவற்றில் உரசுகிறாள்; மீண்டும் வெளிச்சம். அந்த ஒளிவட்டத்தில் அவளுடைய வயதான பாட்டி, அப்படியொரு கனிந்த பார்வையோடு, தகதகவென ஒளிவீசி, நிற்கிறாள்.
‘’பாட்டீய்’’ கத்திக் கதறியது, அந்தச் சின்னப்பிஞ்சு. ‘’ஓ, என்னையும் கூட்டிப் போய்விடு! தீக்குச்சி அணையும்போது நீயும் போய்விடுவாய்; கணப்படுப்பு   போல, வறுத்த வாத்துக்கறியைப் போல, அழகான கிறித்துமஸ் மரம் போல, நீயும் மறைந்துவிடுவாய்!’’  கையிலிருந்த கட்டுத் தீக்குச்சிகள் மொத்தத்தையும் வேகவேகமாக சுவற்றில் உரசித் தேய்த்தாள். அவளுக்குப் பாட்டி அருகிலேயே இருக்க வேண்டும். அந்தத் தீக்குச்சிகள்  நடு மதிய வெயிலைக்காட்டிலும் அதிக வெளிச்சத்தோடு பிரகாசமாக ஒளிர்ந்தன. பாட்டி இவ்வளவு உயரமாகவும் அழகாகவும் இருந்ததேயில்லை. அந்தச் சிறு பெண்ணைத் தேவதையெனத் தூக்கிய பாட்டி கைகளில் ஏந்திக்கொண்டாள். இருவரும் ஒளிவானத்தில், மகிழ்ச்சியென்றால் அப்படியொரு அதிமகிழ்ச்சியாக மிதந்து, பறந்துகொண்டிருந்தனர். அதன்பிறகு, குளிர் இல்லை, பசியில்லை. ஏக்கம், கவலை எதுவுமேயில்லை. ஆம். அவர்கள் கடவுளிடம் சேர்ந்துவிட்டனர்.
ஆனால், சென்ற ஆண்டின் கடைசிக் கடைசி மாலையில் குளிரில் உறைந்து மாண்டுபோன, அவள், பாவம், அந்த ஏழைச் சிறுமி, ரோஜாவாகச் சிவந்த கன்னங்களும், இதழ்களில் புன்னகையுமாக, வெகுவாகக் குளிர்ந்த, அந்த விடிகாலைப்பொழுதில் அதேமூலையில் சுவரில் சாய்ந்து  அமர்ந்திருக்கிறாள்.  ஒரு கட்டு மட்டும் எரிந்துபோக, மீதியுள்ள தீக்குச்சிக் கட்டுமூட்டையும் கையுமாக அந்தக் குழந்தை, கல்லாக நிமிர்ந்து, அமர்ந்திருக்கிறாள். ‘’ அவள் தன்னைச் சூடுபடுத்திக் கொள்ள நினைத்திருக்கிறாள்.’’ என்றனர், சுற்றி நின்றவர்கள். அவள் கண்ட அழகிய காட்சிகள் குறித்து அவர்களுக்கு ஒரு சிறிதும் தோன்றியிருக்கவில்லை. புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சி உலகில், அவள் தன் பாட்டியோடு நுழைந்தபோதிருந்த ஒளிவானத்தை அவர்களில் ஒருவர் கூடக் கனவிலும் கண்டதில்லை.

நன்றி : http://www.worldoftales.com/fairy_tales/Andersen_fairy_tales.html




No comments:

Post a Comment