தோள்வார்க்காற்சட்டை (Lederhosen)
ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami
ஆங்கிலம் : ஆல்ஃப்ரெட் பர்ன்பாம்
தமிழில் ச.ஆறுமுகம்
‘’ அம்மா, அப்பாவைத் தள்ளிவைத்துவிட்டாள்.’’ என் மனைவியின் தோழி ஒருத்தி ஒருநாள் சொல்லிக்கொண்டிருந்தாள், ‘’ எல்லாம் ஒரு ஜோடி அரைக்காற்சட்டைக்காக.’’
‘’ ஒரு ஜோடி அரைக்காற்சட்டை? ’’ நான் கேட்டேன்.
‘’ இது வினோதமாக இருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஏனென்றால் அது ஒரு வினோதமான கதைதான்.’’ என்கிறாள், அவள்.
அவள், நல்ல வளர்த்தியும் பருமனுமான ஒரு பெண்; உயரமும் உடற்கட்டும் அநேகமாக என்னுடையதைப் போலவேதான். அவள் மின்னிசைக் கருவி இசைக்கக் கற்றுக்கொடுக்கிறாள், ஆனால் அவள் தன்னுடைய வேலையில்லா நேரத்தை நீச்சலுக்கும் பனிச்சறுக்குக்கும் வரிப்பந்துக்குமெனப் பிரித்துக்கொள்கிறாள். அதனாலேயே அவள் எப்போதும் கட்டான உடலும் வெயிலில் கன்றிய மேனி நிறமுமாக இருக்கிறாள். அவளை ஒரு விளையாட்டு வெறியள் என்றுதான் சொல்லவேண்டும். ஒருநாள் போலில்லாமல், மடக்கிமடக்கிப் பன்முறைக் கரைதொடும் நீச்சலுக்காக உள்ளூர் நீச்சல் குளத்துக்குச் செல்லும் முன் காலையில் ஒரு ஓட்டப் பயிற்சி முடித்துவிடுகிறாள். பின்னர் பிற்பகல் இரண்டு அல்லது மூன்று மணிக்கு வரிப்பந்து; அதைத் தொடர்ந்து உயிர்வளி நாட்டப் பயிற்சிகள் (aerobics). இப்போதும் என்னுடைய விளையாட்டு மற்றும் தடகளப் பயிற்சிகள் எனக்குப் பிடித்தமானவைதாம்; ஆனால், அவளுடையதற்குப் பக்கத்தில்கூட நெருங்க முடியாது.
நான் அவளைத் தீவிர வன்பிடிப்பு அல்லது கருத்து வெறிகொண்டவளென்று அர்த்தப்படுத்தவில்லை. முற்றிலும் மாறாக, அவள் உண்மையிலேயே ஒதுங்கிச்செல்லும் போக்குடையவள். எவரொருவர் மீதும் உணர்ச்சிகரமான அழுத்தத்தைப் பிரயோகிக்க அவள் கனவிலுங்கூடக் கருதமாட்டாள். அவள் அவ்வாறு செலுத்தப்படுகிறாள், அவ்வளவுதான். அவளுடைய உடல் – அந்த உடலோடு பிணைக்கப்பட்டுள்ள உயிர்த்துடிப்பு – அப்படியான ஒரு பெரும் செயல்பாட்டியக்கத்தை, ஒரு வால்நட்சத்திரத்தைப் போலத் தளர்வில்லாத் தொடர்ந்தியக்கத்தைக் கோருகிறது.
அவள் திருமணம் செய்துகொள்ளாமலிருப்பதற்கு அதுவுங்கூட ஏதாவது காரணமாக இருக்கலாம். ஓ, அவளுக்கென்றும் சில ரகசிய விவகாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன – அந்தப் பெண் கொஞ்சம் பெருத்த அளவென்றாலும் அழகானவள் – திருமணப் பேச்சுகள் கூட நடந்து, இருபக்கமும் ஒப்புக் கொண்டனர். ஆனால், திருமணம் முடிகிற நிலையில் தவிர்க்க முடியாத ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டு எல்லாமே தகர்ந்துவிட்டன.
என் மனைவி சொல்லுவதைப்போல, ‘’ அவள் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, அவ்வளவுதான்.’’
‘’ ஆமாம், அப்படித்தான் நானும் நினைத்தேன்.’’ நான் அனுதாபம் கொண்டேன்.
இதில் என் மனைவி சொல்வதில் எனக்கு முழுமையான உடன்பாடு என்பதில்லை. அதிர்ஷ்டம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சில பகுதிகளை ஆட்சி செய்யலாம்; அது நமது இருத்தலின் அடித்தளத்தின் மீது கருநிழற்திட்டுகளைப் பதிக்கவும் செய்யலாம் என்பது, உண்மைதான். ஆனால், திட்பமான மன உறுதி இருந்தால், மடக்கி, மடக்கி, முப்பது மடிகள் நீந்துவற்கு அல்லது இருபது கி.மீ. ஓட்டத்துக்குத் தேவைப்படுவதற்குக் குறைவில்லாமல் இருக்குமானால் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்வதற்கு ஒரு வழி கிடைக்கும். இல்லை, அவளது மனம் திருமணத்தின்மீது திடமாக உட்காரவில்லை என்றுதான் நான் அதைப் பார்க்கிறேன். திருமணம் அவளது கிரக எல்லைகளுக்குள் குறைந்தபட்சமாகக் கூட வரவில்லை. எனவேதான், அவள் மின்னிசைக் கருவி கற்பித்துக்கொண்டும் வேலையில்லாத பொழுதுகளை விளையாட்டுகளுக்கு அர்ப்பணித்துக் கொண்டும் அதிர்ஷ்டமற்ற காதலுக்குள் விழுவதும் வெளியேறுவதுமாக இருக்கிறாள்.
அது ஒரு மழை பெய்யும் ஞாயிறு பிற்பகல். எதிர்பார்த்ததற்கும் இரண்டு மணிநேரம் முன்பாகவே, என் மனைவி அப்போதும் கடைவீதியில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருக்கும்போதே, அவள் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
‘’ என்னை மன்னியுங்கள்.’’ அவள் மன்னிப்பு கோருகிறாள். ‘’ இன்றைய வரிப்பந்து மழைக்கால விடுப்பு எடுத்துக்கொண்டதால், எனக்கு இன்று இரண்டு மணி நேரம் இதர வேலைகளில் கவனம் செலுத்தக் கிடைத்தது. வீட்டில் தனியாக சலித்துப் போய்விட்டதால்தான், இங்கு, இப்போதுதான் நினைத்தேன்…….. நான் எதையேனும் இடையில் வந்து தடுத்துவிட்டேனா?
இல்லையில்லை, அப்படியெல்லாம் இல்லை. என்கிறேன், நான். பணிக்கான மனநிலை முற்றாக இல்லையெனத் தோன்றியதால் சும்மா, பூனையை மடியில் வைத்துக்கொண்டு காணொலிக் காட்சி ஒன்றைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். உள்ளே போகுமாறு கைகாட்டிவிட்டு, நான் சமையலறைக்குச் சென்று காப்பி தயாரித்தேன். இரண்டு கோப்பைகள். ஜாஸ் படத்தின் கடைசி இருபது நிமிடங்களைப் பார்த்துக்கொண்டு. இருவருமே அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தாலும், அநேகமாக ஒரு முறைக்கும் மேலாக? ஆகவே எங்களில் யாருமே திரையில் ஒட்டிக்கொண்டில்லை. ஆனால், அது எங்கள் கண்முன்னால் ஓடிக்கொண்டிருந்ததால், அதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
முடிவு. நன்றிகள் வரிசையாக மேலுயர்ந்து மறைகின்றன. மனைவி வருகிற அடையாளம் எதுவும் இல்லை. ஆகவே நாங்கள் அரட்டையாகச் சிறிது பேசினோம். சுறாக்கள், கடல்புறம், நீச்சல்….. அப்போதும் மனைவி இல்லை. நாங்கள் பேசிக்கொண்டே போனோம். இப்போது, நான் அந்தப் பெண்ணை போதுமான அளவுக்கு விரும்புவதாகத்தான் நினைக்கிறேன். ஆனால், ஒரு மணிநேரம் கழிந்த பின், எங்களுக்கிடையே இருந்த பொதுவான தடைகள் தெளிவாகின. உண்மை என்னவென்றால், அவள் என் மனைவியின் தோழி, எனக்கல்ல.
அடுத்த காணொலியைப் போடலாமாவென நினைத்து நான் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, அவள் திடீரென்று, அவளது பெற்றோரின் மணவிலக்குக் கதையை எடுத்துவிட்டாள். என்னால் அந்தத் தொடர்பின் (என் மனத்தளவில் கூட, நீச்சலுக்கும் அவளது பெற்றோர்களின் பிரிவுக்கும்) ஆழ அலகினைக் கணக்கிட முடியவில்லை. ஆனால், நான் யூகிக்கும் காரணத்தை நீங்கள் தேடினாலும் கிடைக்கும்.
‘’ அது, உண்மையில் அரைக் காற்சட்டை இல்லை.’’ அவள் சொல்கிறாள். ‘’ அது, தோள்வார்க் காற்சட்டை.’’
‘’ நீங்கள் சொல்வது ஜெர்மானியர் அணிகிற நீள்நடைப் பயணக் காற்சட்டையா? தோள்பட்டைக்கு வார் வைத்து, தோலில் செய்தது?’’
‘’ அதேதான். நீங்கள் `டக்`கென்று பிடித்துக்கொள்கிறீர்கள். அப்பா நினைவுப்பரிசாக ஒரு ஜோடி தோள்வார்க்காற்சட்டை கேட்டார். அவர் தலைமுறைக்கு அப்பா நல்ல உயரம். அது, அவருக்கு அழகாகத்தான் இருக்கும், அதனாலேயேகூட அதை அவர் கேட்டிருக்கலாம். ஆனால், ஒரு ஜப்பானியர் தோள்வார்க்காற்சட்டை அணிந்திருப்பதை, நீங்கள் கற்பனைசெய்து பார்க்க முடியுமா? உலகம் பலவிதமென்பார்களே, அதேதான்.
அப்போதும் நான் கதைக்கு நெருக்கமாகவில்லை. நான் கேட்கவேண்டியிருக்கிறது : அவளுடைய அப்பாவின் கோரிக்கைக்குப் பின்னாலிருந்த சூழ்நிலைகள் என்னென்ன? கூடவே அந்தத் தோள்வார் அரைக்காற்சட்டை யாருடைய நினைவுக்காக ?
‘’ ஓ, ஐயாம் சாரி. நான் எப்போதுமே விஷயங்களைக் கோர்வை இல்லாமல், மாற்றி மாற்றிச் சொல்லிவிடுகிறேன். விஷயங்கள் பொருத்தமாக இல்லை யென்றால் என்னை நிறுத்தச் சொல்லுங்கள். ‘’ என்கிறாள், அவள்.
‘’சரி,’’ என்கிறேன், நான்.
அம்மாவின் சகோதரி ஜெர்மனியில் வசிக்கிறாள். அம்மாவை அவள் ஒருநடை வந்து பார்த்துச் செல்லுமாறு அழைத்தாள். அம்மாவும் அந்த எண்ணத்திலேயே இருந்தாள், ஆனால், அம்மாவுக்கு ஜெர்மன் பேசத் தெரியாதுதான். அவள் வெளிநாட்டுக்குச் சென்றதேயில்லை. ஆனால், அவள் ஒரு ஆங்கில ஆசிரியையாக இருப்பதாலேயே, அவளுக்கு எப்போதுமே அந்த எண்ணம் இருப்பது, அவளது அழகுத்தொப்பி மீதமர்ந்திருக்கும் ஒரு ஈயைப் போல வெளிப்படையாகத் தெரிந்தது. அவள் என் சித்தியைப் பார்த்து எத்தனையோ யுகங்களாகியிருக்கும். அதனால், அம்மா அப்பாவிடம் – நாமிருவரும் பத்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு ஜெர்மனி போய்வரலாமா? எனக் கேட்டாள். அப்பாவின் வேலை அதற்கு இடமளிக்கவில்லை. அதனால் அம்மா, தனியாகவே போகவேண்டியதாயிற்று.
‘’ அப்போதுதான் உங்கள் அப்பா தோள்வார்க்காற்சட்டை கேட்டிருப்பாரென்று நினைக்கிறேன்?’’
‘’ சரியாகச் சொன்னீர்கள்.’’ என்ற அவள், ‘’ அப்பாவிடம், அம்மா, என்ன வாங்கி வரவேண்டுமென்று கேட்டார், அப்பா தோள்வார்க்காற்சட்டை என்றார்.’’ என்று விளக்கினாள்.
‘’ இதுவரைக்கும் சரி.’’
அவளது பெற்றோர்கள் நெருக்கமாகவே இருந்தனர். இரவுகளில் அவர்கள் மணிக்கணக்காக விவாதித்துச் சண்டை போடுவதில்லை; அவளது அப்பா வீட்டைவிட்டுப் புயலாகக் கிளம்பிப்போய்ப் பல நாட்கள் வீட்டுக்கு வராமலிருந்ததெல்லாம் கிடையாது. ஒருமுறைதான் என்றில்லை, பலமுறை அவருக்கும் வேறு சில பெண்களுக்கும் தொடர்பிருந்ததாக, வெளிப்படையாகவே பேசப்பட்டிருந்தாலும், அப்போதைக்கு இல்லை.
‘’ அவரொன்றும் கெட்டவரில்லை, கடும் உழைப்பாளி, ஆனால் ஒரு பாவாடையைக் கண்டாலும் வாய்பிளந்து பார்ப்பவர் என்பார்களே அந்த மாதிரியான ஒரு பெண்பித்து வகை,’’ அவள் பல விஷயங்களைக் கலவையாக அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தாள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலிருந்தன. ஒரு கட்டத்தில், அவளுடைய தந்தை இறந்துவிட்டிருந்ததாகவே நினைத்தேன். ஆனால், அப்படியில்லை, பின்னர் அவள் எனக்குச் சொன்னாள், அவர் உயிரோடு, நன்றாகவே இருக்கிறார்.
‘’ அப்பா எப்போதும் அப்படியேதான் இருந்தார், அப்போது அந்தப் பிரச்னைகள் எல்லாம் பின்னுக்குப் போய்விட்டிருந்தன. அவர்கள் இருவரும், நன்றாக ஒருவருக்கொருவர் ஒத்து வாழ்ந்ததாகவே தோன்றியது.’’
என்றாலும் ஏதோ ஒரு சம்பவம் நடைபெறாமல் இல்லை. அவளுடைய அம்மா பத்து நாள் ஜெர்மனி வாசமென்பதை ஒன்றரை மாதத்துக்கு நீட்டினாள். டோக்யோவுக்கு ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. கடைசியாக, ஜப்பானுக்கு வந்தபிறகும் கூட அவள் அவளுடைய இன்னொரு சகோதரியோடு ஒசாகாவில் தங்கிக்கொண்டாள். அதன்பிறகு அவள் வீட்டுக்குத் திரும்பி, வரவேயில்லை.
என்னதான் நடக்கிறதென மகளுக்கோ, அப்பாவுக்கோ எதுவும் புரியவில்லை. அதுவரையிலும் திருமணச் சிக்கல்கள் என ஏதாவது எழுந்தபோது, அம்மா தான் பொறுமையானவராக இருந்தார் – அப்படி இப்படி இல்லை, கடுமுயற்சியுடனான ஒரு பொறுமை – சிலநேரங்களில் மகளே கூட வியந்தாள், இந்தப் பெண்மணிக்கு, கற்பனை, புரிந்துகொள்ளல் என எதுவுமே கிடையாதோ என; குடும்பம் என்ற எண்ணம் எப்போதுமே முன்னுக்கு நின்றது. அம்மா மகளுக்காகத் தன்னலமற்று அர்ப்பணித்தாள். அதனால் அம்மா வராதபோது, பேசுவதற்குக்கூட முயற்சிக்காதபோது, அது அவர்களின் தெளிவுக்கு அப்பாற்பட்டதாக, புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. அவர்கள் ஒசாகாவிலிருந்த பெரியம்மா வீட்டை மறுபடி, மறுபடி தொலைபேசியில் தொடர்புகொண்டபோதும், அம்மாவைத் தொலைபேசிக்கு அருகேகூடக் கொண்டுவரமுடியாமலாகி, அவளது எண்ணம் என்ன என்பது தெரியவரலானது.
செப்டம்பர் மத்தியில், அம்மா ஜப்பானுக்குத் திரும்பி இருமாதங்களுக்குப் பின், அம்மா அவளின் எண்ணத்தை வெளிப்படுத்தினாள். ஒருநாள் திடீரென அம்மா மவுனத்தைக் கலைத்து, வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அப்பாவிடம், ‘’ விவாக ரத்துக்கான ஆவணங்களை விரைவில் பெறுவீர்கள். தயவுசெய்து அவற்றில் கையொப்பமிட்டு, முத்திரையிட்டு, மூடி, அவற்றை எனக்கு அனுப்புங்கள்.’’ என்றாள். ‘’என்ன காரணமென விளக்கக்கூடாதா?’’ என அவள் கணவர் கேட்டார். ‘’ உங்கள் மீதிருந்த காதலை – அனைத்து வகை, நிலை, முழுவதையும் எல்லா வழியிலும் இழந்துவிட்டேன். ‘ஓ?` என்றார், அப்பா. ‘’ விவாதிப்பதற்குக் கொஞ்சமும் இடமில்லையா?’’ ‘’ மன்னிக்கவும், இல்லை, முற்று முழுக்காக எதுவுமே இல்லை.’’
.‘’ இது எல்லாமே ஒரு பேரதிர்ச்சியாக வந்தது.’’ என்றாள், அவள், என்னிடம். ‘’ ஆனால், அது வெறுமனே ஒரு திருமண ரத்து அல்ல. என்பெற்றோர்கள் பிரிந்துசெல்வதை நான் பலமுறை கற்பனை செய்திருக்கிறேன். அதனால், அதற்கு, நான் மனத்தளவில் எப்போதுமே தயாராக இருந்தேன். அவர்கள் இருவரும் சாதாரணமாக விவாக ரத்து செய்துகொண்டிருந்தால், நான் இப்படி, நிலைகுலைந்திருக்கமாட்டேன். இதில் பிரச்னை, அம்மா அப்பாவைத் தள்ளி வைத்தது மட்டுமல்லாமல், என்னையும் ஓரங்கட்டிவிட்டாளென்பதுதான். அதுதான் என்னைத் துன்புறுத்துகிறது.’’
நான் தலையாட்டினேன்.
‘’அந்த நேரம் வரையிலும், நான் எப்போதுமே என் அம்மாவின் பக்கமே இருந்திருக்கிறேன். அம்மாவும் என்பக்கமே, எனக்கு ஆதரவாக நின்றிருக்கிறாள். இருந்தாலும் அப்பாவுடன் சேர்த்தே அம்மா என்னையும் ஒரு குப்பையைப் போல, விளக்கமாக எந்த ஒரு வார்த்தையும் சொல்லாமல், தூரமாக வீசியெறிந்துவிட்டாள். அது என்னை பயங்கரமாகத் தாக்கியது. அம்மாவை என்னால் வெகுநீண்ட நாட்களுக்கு மன்னிக்கவே முடியவில்லை. நான் எல்லாவற்றையும் சரிப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி அவளுக்கு எத்தனை கடிதங்கள் எழுதினேனென்று எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், அவள் என் கேள்விகளுக்குப் பதிலனுப்பவோ, என்னைப் பார்க்கவிரும்புவதாக ஒரு வார்த்தைகூடப் பேசவோ இல்லை.’’
மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் அவள் அம்மாவை நேரில் பார்த்தாள். அதற்கிடையில் ஒருமுறைகூடப் பார்த்திருக்கவில்லை. உலகில் வேறு இடமே கிடைக்கவில்லையா என்ன? ஒரு குடும்ப ஈமச்சடங்கில் போய்ப் பார்த்திருக்கிறாள். அதற்கிடையில் மகள் சொந்தக் காலில் தனியாக வசிக்கிறாள் – அவளது பெற்றோர் திருமணம் ரத்தானபோது, அவள் பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டிலிருந்து வெளியேறினாள் – இப்போது அவள் பட்டம் பெற்று மின்னிசைக் கருவி கற்பிக்கிறாள். இதற்கிடையில் அவள் அம்மா ஒரு தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கிறாள்.
என்ன சொல்வதென்று தெரியாமல்தான் அவளது அம்மா, தன் மகளோடு பேசமுடியாமலிருந்ததாக வருத்தம் தெரிவித்தாள். அவள் அம்மா சொன்னாள், ‘’ எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறதென்று என்னாலேயே விளங்கிக்கொள்ள முடியவில்லை, ஆனால் எல்லாமே அந்த அரைக்காற் சட்டையில்தான் ஆரம்பித்தது.’’
‘’ அரைக்காற்சட்டை?’’ அவளும் என்னைப் போலவே கேட்டுத் தொடங்கியிருக்கிறாள். அம்மாவோடு அவள் மீண்டும் பேசவேண்டுமென்று ஒருபோதும் விரும்பியிருக்கவில்லையென்றாலும் வியப்பு அவளை ஆட்கொண்டது. அவர்களது துக்க ஆடையில், அம்மாவும் மகளுமாக அருகிலிருந்த ஒரு காப்பிக் கடைக்குள் போய் அமர்ந்து ஐஸ் காபி கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். அவள் இந்தக் கதையை – இப்படிச் சொல்வதற்காக மன்னித்துக்கொள்ளுங்கள் – சிறுகதையைக் கேட்க வேண்டியிருந்திருக்கிறது.
தோள்வார்க் காற்சட்டை விற்கும் கடை ஹாம்பர்கிலிருந்து ஒரு மணி நேர ரயில் பயண தூரத்திலுள்ள ஒரு சிறுநகரத்தில் இருந்தது. அவளுடைய அம்மாவின் சகோதரிதான் அதை அவளுக்காகத் தேடிக்கண்டுபிடித்தாள்.
‘’ எனக்குத் தெரிந்த ஜெர்மானியர்கள் எல்லோருமே, தோள்வார்க்காற்சட்டை வாங்குவதாக இருந்தால், அதுதான் கடை எனச் சொல்கிறார்கள். கைவினைத் திறமும் செய்நேர்த்தியும் நன்றாக இருக்கிறது. விலையும் அதிகமில்லை என்கிறார்கள்,’’ என்றாள், அவளது சகோதரி.
அதனால், அம்மா அவளது கணவனுக்கு தோள்வார்க்காற்சட்டை நினைவுப் பரிசு வாங்குவதற்காக ரயில் ஏறினாள். அவளது ரயில்பெட்டியில், அவளோடு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிய ஒரு நடுவயது ஜெர்மன் தம்பதியர் இருந்தனர். ‘’ நான், நினைவுப்பரிசாக தோள்வார்க்காற்சட்டை வாங்குவதற்காகப் போய்க்கொண்டிருக்கிறேன்.’’ என்றாள், அம்மா. ‘’ வட் (வாட்) ஷாப் யூ கோ?’’ எனக்கேட்டனர், அந்தத் தம்பதியினர். அம்மா கடையின் பெயரைச் சொன்னாள். அந்த நடுவயதுத் தம்பதியினர் இருவரும் சேர்ந்து மணியடிப்பது போல ஒரே குரலாக, ‘’ ஜட் (தட்) இஸ் ஜி(தி) பிளேஸ், ஜா.(யா). ஜட்(தட்) இஸ் ஜி(தி) பெஸ்ட்.’’ என்றார்கள். அதைக் கேட்டதும் அம்மா மிகவும் நம்பிக்கை கொண்டவளானாள்.
அது ஒரு மகிழ்ச்சியான முன்கோடைப் பிற்பகல். அது பண்டை நலமிக்க, ஒரு பழங்கால நகரம். எல்லாத்திசைகளிலும் வட்ட நடைக்கற்கள் பாவிய தெருக்கள் நீண்டிருந்தன. எல்லா இடங்களிலும் பூனைகள் தென்பட்டன. அம்மா காசேகுச்சென் (ஜெர்மன் பாலேட்டுறை இனிப்புரொட்டி) ஒன்றை மென்று, காப்பியும் அருந்தலாமென ஒரு சிற்றுண்டியகத்துக்குள் நுழைந்தாள்.
காப்பியின் கடைசி உறிஞ்சலில், அம்மா அந்தக் கடைப்பூனையோடு விளையாடிக்கொண்டிருக்கையில், உரிமையாளர் வந்து அவர்களின் சிறுநகரத்துக்கு எதற்காக வந்திருக்கிறீர்களெனக் கேட்டார். அவள் தோள்வார்க் காற்சட்டை என்கவும், அவர் சிறுகுறிப்புப் புத்தகமொன்றை உருவி அந்தக் கடைக்குச் செல்லும் வரைபடத்தை வரைந்து காட்டினார்.
‘’ உங்களுக்கு மிக்க நன்றி.’’ என்றாள், அம்மா.
வட்ட நடைக்கற்கள் மீது கால் பதித்து நடந்து செல்லும்போது, தனியாக ஒருவர் பயணிப்பதென்பது எத்துணை அற்புதமாக இருக்கிறதென்று நினைத்தாள், அம்மா. உண்மையில் அவளது ஐம்பத்தைந்து வயது வாழ்க்கையில் இதுதான் முதல்முறையாக அவள் தனிமையில் பயணித்தது. அந்தப் பயணம் முழுவதிலும் ஒருமுறைகூட அவள் தனிமையையோ, பயத்தையோ, சலிப்பினையோ உணரவில்லை. அவள் கண்கள் கண்ட காட்சி ஒவ்வொன்றும் புத்தம் புதிதாகப் புதிய ஒன்றாக இருந்தது. அவள் சந்தித்த எல்லோருமே நட்புடனிருந்தனர். ஒவ்வொரு அனுபவமும், அவளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த அதுவரையிலும் பயன்படுத்தப்படாததும் தொடப்படாததுமான உணர்வெழுச்சியைக் கொண்டுவருவதாக இருந்தது. அவள் அதுவரையிலும் தனக்கு நெருக்கமானதாகவும் இனிமையானதாகவும் கருதிக்கொண்டிருந்த, அது – கணவன், வீடு, மகள் – பூமியின் மறுபக்கத்தில் இருந்தது. அவற்றைப் பற்றியெல்லாம் நினைத்து அலட்டிக்கொள்ள வேண்டியதில்லையென அவள் உணர்ந்தாள்.
தோள்வார்க்காற்சட்டைக் கடையை எவ்விதச் சிரமமுமில்லாமல் அவள் கண்டுபிடித்தாள். அது ஒரு சிறிய, பழைய கூட்டுறவுக்கடை. அதில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பெரிய விளம்பரப்பலகைகள் எதுவும் இல்லை. ஆனால், உள்ளே நூற்றுக்கணக்கான தோள்வார்க்காற்சட்டைகளை அவளால் பார்க்க முடிந்தது. அவள் கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.
இரண்டு வயதான மனிதர்கள் அங்கே வேலைசெய்துகொண்டிருந்தனர். அவர்கள் அளவெடுத்துக்கொண்டும் அதை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிந்துகொண்டும் ரகசியம் போல் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். கடையை இரண்டாகப் பிரித்த திரையின் பின்னால், பெரிய பணிக்கூடம் ஒன்று இருந்தது. தையல் இயந்திரங்கள் ஓடுகின்ற ஓசை ஒரே சீராக ஒற்றைத்தொனியில் கேட்டுக்கொண்டிருந்தது.
‘’ டார்ஃப் இச் இஹ்னென் ஹெல்ஃபென், மேடேம்?’’ அந்த இரண்டு வயதானவர்களில் வளர்த்தியும் சதையுமானவர் அம்மாவைக் கேட்டார்.
‘’ தோள்வார்க்காற்சட்டை வேண்டும்.’’ என அவள் ஆங்கிலத்தில் பதில் சொன்னாள்.
‘’ஃபார் மேடேம்?’’ அவர் திருப்பிக் கேட்டார்.
‘’ இல்லை, ஜப்பானிலிருக்கும் என் கணவருக்காக வாங்குகிறேன்.’’
‘’அச் ஸோ,’’ என்ற அந்த வயதானவர், ‘’ யுவர் ஹஸ்பண்ட். ஜென்(தென்) ஹி இஸ் நாட் ஹியர் விஸ்ஸ்(வித்) யூ?’’ எனக் கேட்டார்.
‘’ இல்லை. அவர் ஜப்பானில் இருக்கிறாரென்று நான்தான் ஏற்கெனவே சொன்னேனே,’’ என்று அவள் பதில் சொன்னாள்.
‘’ ஜிஸ்ஸ்(திஸ்) மேக் ப்ராப்ளம்.’’ அந்த வயதானவர் வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ‘’ வி(வீ) டு நாட் மேக் ஆர்ட்டிக்ள் ஃபார் கஸ்டமர் ஹூ நாட் எக்ஸிஸ்ட்.’’
‘’ என் கணவர் உயிரோடிருக்கிறார்.’’ அம்மா தன்னம்பிக்கையோடு சொன்னார்.
‘’ஜா, ஜா, (யா, யா) யுவர் ஹஸ்பண்ட் எக்ஸிஸ்ட், அஃப் கோர்ஸ், அஃப் கோர்ஸ், ‘’ அந்த வயதானவர் அவசர அவசரமாக முந்தினார். ‘’ எக்ஸ்க்யூஸ் மை நாட் குட் இங்க்லிஷ். வாட் ஐ வான்ட் ஸே, இஃப் யுவர் ஹஸ்பண்ட் நாட் எக்ஸிஸ்ட் ஹியர், வி(வீ) கென்னாட் ஸெல் ஜி(தி) லெடெர்ஹாசென்.’’
‘’ ஏன்?’’ அம்மா, திகைத்துப்போய்க் கேட்டாள்.
‘’இஸ் ஸ்டோர் பாலிஸி. இஸ் அன்ஸெர்(அவர்) ப்ரின்ஜிப்(பிரின்சிபிள்). வி மஸ்ட் ஸீ ஜி(தி) லெடெர்ஹாசென் ஹௌ இட் ஃபிட் கஸ்டமர், வி ஆல்ட்டெர் வெரி நைஸ், ஒன்லி ஜென்(தென்) வி(வீ) ஸெல். ஓவர் ஒன் ஹன்ட்ரெட் இயர்ஸ் வி(வீ) ஆர் இன் பிசினெஸ், வி(வீ) பில்ட் ரெபுடேஷன் ஆன் ஜிஸ்(திஸ்) பாலிஸி.’’
‘’ ஆனால், உங்கள் தோள்வார்க்காற்சட்டை வாங்குவதற்காக நான் ஹாம்பர்கிலிருந்து ஒரு அரைநாள் செலவழித்து வந்திருக்கிறேன்.’’
‘’வெரி ஸார்ரி, மேடேம், என்ற வயதானவர் உண்மையிலேயே வருத்தப்படுவதாகத் தோற்றமளித்தார். ‘’ வி மேக் நோ எக்செப்சன். ஜிஸ் (திஸ்) வொர்ல்ட் இஸ் வெரி அன்செர்ட்டன் வொர்ல்ட். ட்ரஸ்ட் இஸ் டிஃபிகல்ட் சிங்(திங்) டு எர்ன் பட் ஈஸி சிங்(திங்) டு லூஸ்.’’
அம்மா பெருமூச்சிட்டு வாசலில் போய் நின்றாள். இந்தச் சிக்கலை எப்படித் தீர்ப்பதென அம்மா மூளையைக் கசக்கிக்கொண்டாள். அந்தப் பெரிய வயதானவர், சிறிய வயதானவருக்கு நிலைமையை விளக்க, அவர் வருத்தத்தோடு தலையாட்டி, ஜா, ஜா (யா, யா) என்றார். அவர்கள் உருவத்தில் பருத்தும் சிறுத்துமாகப் பெரிய வேறுபாட்டோடு இருந்தாலும். இருவருமே ஒத்த உணர்வுச் சாயல்களைக் கொண்டிருந்தனர்.
‘’ நல்லது, ஒருவேளை, இப்படிச் செய்யலாமா?’’ அம்மா யோசனை ஒன்றை முன்வைத்தாள். ‘’ என் கணவரைப் போன்ற உருவமுள்ள ஒரு மனிதரை இங்கு அழைத்து வருகிறேன். அவர் தோள்வார்க்காற்சட்டையை அணியட்டும், நீங்கள் அதை மிக நன்றாகச் சரிசெய்து, எனக்குக் கொடுங்கள்.’’
அந்த முதல் வயதானவர் மிரண்டுபோய் அவள் முகத்தையே பார்த்தார்.
‘’ பட், மேடேம், ஜட்(தட்) இஸ் எகெய்ன்ஸ்ட் ரூல். இஸ் நாட் ஸேம் மேன் ஹூ ட்ரைஸ் ஜி(தி) லெடெர்ஹாசென் ஆன், யுவர் ஹஸ்பண்ட். அன்ட் வி (வீ) நோ ஜிஸ்ஸ்(திஸ்). வி (வீ) கென்னாட் டூ ஜிஸ்ஸ்(திஸ்).’’
‘’ உங்களுக்குத் தெரியாத மாதிரி நடித்துக்கொள்ளுங்களேன். நீங்கள் அந்த மனிதருக்கு தோள்வார்க்காற்சட்டையை விற்கிறீர்கள். அவர் அதை எனக்கு விற்கிறார். அந்த வகையில் உங்கள் கொள்கைக்கும் பங்கம் ஏதுமில்லை. தயவுசெய்யுங்கள், நான் உங்களை மிகவும் வேண்டிக் கேட்கிறேன். நான் இனிமேல் ஒருபோதும் ஜெர்மனிக்குத் திரும்பவும் வரப்போவதில்லை. இப்போது தோள்வார்க்காற்சட்டை வாங்கவில்லையெனில், இனிமேல் நான் எப்போதுமே வாங்கமுடியாது.’’
‘’ஹ்ம்ப்,’’ அந்த வயதானவர் உதட்டைப் பிதுக்கினார். அவர் ஒருசில நிமிடங்கள் யோசித்துவிட்டுப் பின் அடுத்த வயதானவரிடம் ஜெர்மனில் ஆற்றொழுக்காகப் பேசினார். அவர்கள் பலமுறை அப்படியும் இப்படியுமாகப் பேசிக்கொண்டார்கள். பின்னர், இறுதியாக, அந்தப் பெரிய வயதானவர் அம்மாவின் பக்கமாகத் திரும்பி, ‘’ வெரி வெல், மேடேம். ஆஸ் எக்செப்சன் – வெரி எக்செப்சன், யு ப்ளீஸ் அண்டர்ஸ்டான்ட் – வி (வீ) வில் நோ நஸ்ஸிங்க் (நத்திங்) ஆஃப் ஜிஸ்ஸ் (திஸ்) மேட்டர். நாட் ஸோ மெனி கம் ஃப்ரம் யப்பான் (ஜப்பான்) டு பை லெடெர்ஹாசென். ப்ளீஸ் ஃபைன்ட் மேன் வெரி லைக் யுவர் ஹஸ்பன்ட். மை ப்ரதர் ஹி சேய்ஸ் ஜிஸ்ஸ் (திஸ்).’’
‘’உங்களுக்கு நன்றி,’’ என்றாள், அவள். பின்னர் அவள் அந்த இன்னொரு சகோதரருக்கு நன்றிசொல்ல ‘’டாஸ் இஸ்ட் ஸோ நெட்ட் வோர் இஹ்னென்.’’ என ஜெர்மனிலேயே சமாளித்தாள். அவள் – இந்தக் கதையை எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் மகள் – மேஜைமீது கைகளை மடித்து வைத்துப் பெருமூச்சிடுகிறாள். எப்போதோ குளிர்ந்து போன காப்பியின் கடைசியை நான் குடித்தேன். அப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. மனைவி வரும் அடையாளம் தான் தெரியவில்லை. பேச்சு இப்படியான ஒரு திருப்பத்துக்கு வந்துசேருமென்று யார்தான் நினைத்திருக்கமுடியும்?
‘’ சரி, அப்புறம்?’’ முடிவைக் கேட்கும் ஆவலில் நான் இடையிட்டேன். ‘’ உங்கள் அப்பாவைப் போன்றே உடற்கட்டுள்ள ஒருவரை உங்கள் அம்மா கண்டுபிடித்தார்களா?’’
‘’ஆமாம்,’’ என்ற அவள் எந்த உணர்வுமின்றி அதை உச்சரித்தாள். ‘’ அம்மா ஒரு பெஞ்சில் அமர்ந்து அப்பாவின் உருவ அளவுக்குப் பொருந்துகிற யாராவது அந்த வழியே வருவார்களா எனப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படிப் பொருத்தமான ஒரு ஆள் வந்தார். அவரிடம் அனுமதி எதுவும் கேட்காமலேயே – அந்த மனிதரால் ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் பேசமுடியாதெனத் தோன்றியதால் – அவரைத் தோள்வார்க்காற்சட்டைக் கடைக்குள் இழுத்துச் சென்றாள்.’’
‘’ கை – செயல் அணுகுமுறை, ‘’ நான் விகடம் பேசினேன்.
‘’ எனக்குத் தெரியாது. வீட்டில் அம்மா எப்போதுமே ஒரு சாதாரணமான, பயன்பாட்டுக்குப் பொருத்தமான காலணி அணிகிற விவேகமுள்ள பெண்மணியாகத்தான் இருந்தாள்.’’ என இன்னொரு பெருமூச்சுடன் அவள் சொல்கிறாள். ‘’ கடைக்காரர்கள் நிலைமையை அந்த மனிதருக்கு விளக்கிச் சொல்ல, அந்த மனிதர் அப்பாவுக்கு மாற்றாக நிற்க மகிழ்ச்சியோடு சம்மதித்தார். அவர் தோள்வார்க்காற்சட்டையை அணிய, அவர்கள் அதை அங்கே இங்கே இழுத்து மடித்துக்கொண்டிருக்கும்போதே அந்த மூவரும் ஜெர்மனில் ஏதோ கிண்டலாகப் பேசிச் சிரித்துக்கொண்டனர். முப்பது நிமிடங்களில் வேலை முடிந்துவிட்டது, அந்த நேரத்தில்தான் அம்மா, அப்பாவை விவாக ரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறாள்.
‘’ பொறுங்கள்,’’ இடைமறித்த நான், ‘’ எனக்கு விளங்கவில்லை. அந்த முப்பது நிமிடங்களுக்குள் வேறு ஏதாவது நிகழ்ந்ததா?’’ எனக் கேட்டேன்.
‘’ எதுவும் இல்லை. அந்த மூன்று ஜெர்மன் மனிதர்களும் ஹ – ஹா என எருமைமாடு மாதிரி எக்காளமிட்டிருக்கிறார்கள்.’’
‘’ ஆனால், உங்கள் அம்மாவை அப்படிச் செய்யவைத்தது எது?’’
‘’ அது இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் கூட அம்மாவாலேயே புரிந்துகொள்ள இயலாத ஒன்று. அது அவளைக் குழப்பித் தற்காத்துக்கொள்ளச் செய்திருக்கிறது. அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அந்த மனிதரைத் தோள்வார்க்காற்சட்டையில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தாங்கமுடியாத வெறுப்பு அவளுக்குள் எழுவதை உணர்ந்திருக்கிறாள். அந்த வெறுப்பு அப்பாவை நோக்கியது. அதை அவளால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அம்மாவின் தோள்வார்க்காற்சட்டை மனிதர் அப்பாவைப் போலவே உடம்பு நிறம் மட்டுமல்லாமல் கால்களின் வடிவம், அடிவயிறு, பூஞ்சை முடி எல்லாமே ஒத்திருந்திருக்கின்றன. புதிய தோள்வார்க்காற்சட்டையை அணியும்போது அந்த மனிதர் மகிழ்ச்சியாக இருந்த நிலை, சிறு பையனைப் போல கெக்கே பிக்கேயெனச் சிரித்து, சேட்டை செய்வதாக இருந்தது. அந்த மனிதரை அம்மா பார்த்துக்கொண்டிருந்தபோது, எத்தனையோ எண்ணங்கள் அவளுக்குள் உருவாகி – அவை என்னென்னவென்று அவளாலேயே நிச்சயமாகக் கூறமுடியவில்லை – மெல்லமெல்ல அவளுக்குள் மாற்றத்தை நிகழ்த்திவிட்டன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அப்போதுதான் அம்மா, அப்பாவை வெறுக்கிறோமென்பதை உணர்ந்துகொண்டாள்.
என் மனைவி கடையிலிருந்தும் வீட்டுக்கு வரவே, இருவரும் அவர்களின் பெண்களுக்கேயுரிய பேச்சைத் தொடங்க, நான் தோள்வார்க்காற்சட்டையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
‘’ ஆக, நீங்கள் இப்போது உங்கள் அம்மாவை வெறுக்கவில்லை?’’ என் மனைவி அறையை விட்டு, உள்ளே சென்றபின் நான் கேட்டேன்.
‘’ இல்லை, உண்மையாகவே இல்லை. நாங்கள் நெருக்கமாக இல்லைதானென்றாலும் அவளுக்கு எதிராகக் குற்றம் சொல்ல என்னிடம் ஏதுமில்லை.’’
‘’ ஏனென்றால், தோள்வார்க்காற்சட்டையைப் பற்றி அவள் உங்களிடம் சொல்லியிருக்கிறாள்.’’
‘’ அப்படித்தான் நினைக்கிறேன். அவள் என்னிடம் விஷயங்களை விளக்கிச் சொன்னபின், அவள் மீதான வெறுப்பினை என்னால் தொடர்ந்து கடைப்பிடிக்க இயலவில்லை. அதற்காக, என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டதென்று என்னால் நிச்சயமாக விளக்கத்தெரியாது. ஆனால், அதற்கு, நாங்கள் பெண்களாக இருக்கும் இருப்பு தொடர்பான ஏதோ ஒன்றும் காரணமென்று சொல்வேன்.’’
‘’ இப்போதும், தோள்வார்க்காற்சட்டையை விலக்கிவிட்டால், அதாவது, ஒரு பெண் ஜெர்மனி சென்றபின், அங்கே தன்னைக் கண்டுகொள்கிறாள் என்கிற கதையாக மட்டும் கொண்டால், உங்களால் அவளை மன்னிக்க இயலுமா?’’
‘’ முடியாதுதான்,’’ அவள் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சொல்கிறாள். ‘’மொத்த விஷயமுமே தோள்வார்க்காற்சட்டைதான், சரியா?’’
அதற்குப் பதிலாக இன்னொரு தோள்வார்க்காற்சட்டையை, அவளுடைய அப்பா இப்போதுங்கூடப் பெற்றிருக்கமாட்டாரென நான் நினைத்துக்கொள்கிறேன்.
•••
http://www.geocities.jp/yoshio_osakabe/Haruki/Books/Lederhosen.html
மலைகள் இணைய இதழ், மார்ச் 17, 2014, இதழ் 46 இல் வெளியானது.
No comments:
Post a Comment