இருபதாவது பிறந்தநாளில் அவள்
ஜப்பான் : ஹாருகி முரகாமி Haruki Murakami
ஆங்கிலம் : ஜே. ரூபின் J.Rubin
தமிழில் ச.ஆறுமுகம்
ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்ப்பு : ஜே ரூபின்.
(திரு. ஹாருகி முரகாமி, பிறந்தநாள் கருவை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆங்கிலச் சிறுகதைகளில் அவருக்குப் பிடித்தமானவற்றைத் தொகுத்து ஜப்பானிய மொழியில் வெளியிடும் போது அவருடைய பங்களிப்பாக ஒரு கதையை ஜப்பானிய மொழியில் எழுதிச் சேர்த்துள்ளார். அந்தக்கதையை ஜே ரூபின் Birthday Girl என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் தொகுத்ததைப் பின்னர் ஆங்கிலத்திலும் முரகாமியே பிறந்தநாள் கதைகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பிலுள்ள இக்கதை அதற்கான முரகாமியின் அறிமுகத்துடன் இப்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.)
முரகாமியின் அறிமுகம் :
உங்கள் இருபதாவது வயது பூர்த்தியான நாளில் (அல்லது இருபத்தொன்று, பல நாடுகளிலும் மிக முக்கியமான பிறந்தநாளாயிற்றே) நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய இருபதாவது பிறந்தநாளை நான் நன்கு ஞாபகம் வைத்திருக்கிறேன். ஜனவரி, 12, 1969 டோக்யோவில் (இப்போது அதை நம்பமுடியாவிட்டாலும்) இலேசான மேகமூட்டத்தோடு கூடிய பசுமையான ஒரு நாள். கல்லூரி விரிவுரைகள் கேட்டு முடித்தபின், ஒரு உணவு விடுதியின் பரிமாறும் பணியாளனாக மேஜைகளின் முன்பு காத்துநின்றேன். நான் அன்று விடுமுறையை விரும்பினேன். ஆனால் என் பணியைச்செய்யப் பதிலிநபர் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்தநாளில் கைகூடும் மகிழ்ச்சி, வரப்போகின்ற ஆண்டுகளுக்கு ஒரு நல்ல சகுனமாகக் (அந்தக் காலத்தில்) கருதப்பட்ட போதிலும், அந்த நாள் முடிகிறவரையிலும்கூட எனக்கு மகிழ்ச்சியாக எதுவுமே நடக்கவில்லை. என்னைப் போலவே இந்தக்கதையின் பிறந்தநாள் மங்கையும் இருபதாவது பிறந்தநாளைப் போலன்றித் தனிமையாக விடப்படுவது போலத் தோன்றுகிறாள். கதிரவன் சாய்கிறான்; மழை வேறு, பெய்யத் தொடங்கிவிட்டது. கிரேஸ் பாலீ சொல்வதைப்போல ‘’கடைசி நிமிடப் பெரும் மாற்றம்’’ ஏதேனும் அவளுக்காகக் காத்திருக்கிறதா?
•
அவளுடைய இருபதாவது பிறந்த நாளிலும் , அவள் வழக்கம் போலவே மேஜைகளின் முன் காத்துநின்றாள். அவள் எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் பணிசெய்பவள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடியென்றால் அன்றைய இரவு அவளுக்குப் பணியில்லாமல் இருந்திருக்கும். இன்னொரு பகுதிநேரப் பெண் பணியாளர் அன்றைய இரவுப்பணியை மாற்றிக்கொள்ள இசைந்திருந்தார் : பின்னே பூசணிக்காய் நோச்சியையும் தீர வறுத்த கடற்பாசி உணவையும் வாடிக்கையாளர் மேஜைகளுக்குத் தடுமாறி எடுத்துச் செல்கையில், எரிச்சல்படும் சமையலரின் கூச்சலிலா இருபதாவது பிறந்தநாளைக் கொண்டாட முடியும்? ஆனால், அந்த மாற்றுப்பணியாளர் கடுமையான நீர்க்கோவையோடு, நிற்காத வயிற்றுப்போக்கும் 104 டிகிரி காய்ச்சலுமாகப் படுக்கையில் விழுந்து கிடந்தார். அதனால் கடைசிநேரத் தகவலில் அவள் வேலையைத் தொடர வேண்டியதாயிற்று.
மன்னிப்பு கோரிய அந்தத் திடீர் நோயாளியை இவள் சமாதானப்படுத்த முயற்சித்து, ‘’ அதற்காக நீங்கள் கவலைப் படாதீர்கள். இது என்னுடைய இருபதாவது பிறந்தநாள்தானென்றாலும் அதற்காக நான் விசேஷமாக எதையும் திட்டமிட்டிருக்கவில்லை.’’ என்றாள்.
மேலும், உண்மையில் அதனால் அவளுக்கொன்றும் ஏமாற்றமில்லை. அதற்கு ஒரு காரணம், அவள் அந்த இரவில் யாரோடு இருந்திருப்பாளோ, அந்த நெருக்கமான நண்பனோடு சில நாட்களுக்கு முன்பு, கடுமையான வாக்குவாதம் செய்திருந்தாள். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே இருவரும் சேர்ந்துதான் வெளியில் சுற்றினார்கள். ஒன்றுமில்லாததிலிருந்துதான் வாக்குவாதம் தொடங்கியது. ஆனால், அதுவே எதிர்பாராத விதமாக மோசமான போட்டியாகிக் கசப்பாகப் போதும் போதுமென்ற அளவுக்கு வாய்ச்சண்டையாக நீடித்து, அவனோடிருந்த நெருக்கத்தைத் துண்டித்துக் கொள்வதென்று நிச்சயமாகிவிட்டாள். அவளுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று பாறையாக இறுகிக் கடைசியில் மாண்டுபோனது. அந்த வெடிப்புக்குப் பிறகு அவன் அவளைச் சந்திக்கவே இல்லை; அவளும் அவனைச் சந்திப்பதாக இல்லை.
அவள் வேலை செய்வது டோக்கியோவின் டோனி ரோப்பாஞ்சி மாவட்டத்திலுள்ள இத்தாலிய உணவுவிடுதிகளில் நன்கறியப்பட்ட ஒன்று. அறுபதுகளின் பிற்காலத்திலிருந்தே அது விடுதித்தொழிலைத் தொடர்ந்து செய்கிறது. அதன் சமையலும் உணவு வகைகளும் எதிர்பார்ப்பை மீறிச் சிறந்திருப்பதால் அதன் நற்பெயர் மிகவும் நியாயமானது. அதற்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் எப்போதுமே ஏமாற்றப்பட்டதில்லை. உணவுக்கூடத்தில் அவசரத்தின் சிறு சுவடு கூடத் தெரியாத அளவுக்கு அமைதியான, ஓய்வுச் சூழல் இருந்தது. அந்த விடுதி, இளைஞர் குழுக்களை மட்டுமல்ல, புகழ்பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட வயதான வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது.
அங்கு பரிமாறும் பணியாளர்கள் இருவர் முழுநேர அடிப்படையில் வாரத்தில் ஆறு நாட்களுக்குப் பணியாற்றினர். அவளும் இதரப் பகுதிநேரப் பணியாளர்களும் மூன்று நாட்கள் வீதம் மாற்றி மாற்றிப் பணிபுரிந்தனர். கூடவே, தள மேலாளர் ஒருவர் இருந்தார். மேலும், பதிவுகள் பராமரிக்கும் இடத்திற்கு மிகவும் மெலிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி,– அவர் அந்த விடுதி தொடங்கிய காலத்திலிருந்தே அங்கே காணப்படுகிறார் – சொல்லப்போனால், ஒரே இடத்தில் அமர்ந்து லிட்டில் டோரிட்டின் சோகம் மிக்க வயது முதிர்ந்த கதாபாத்திரம் போலத் தெரிந்தார். அவருடைய வேலைகள் இரண்டே இரண்டுதான் :வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதும் தொலைபேசிக்குப் பதிலளிப்பதும். தேவைப்படும்போது மட்டுமே பேசிய அவர் எப்போதும் கறுப்பு ஆடையையே அணிந்திருந்தார். அவரைப்பற்றி விரும்பத்தகாத கடூரமான ஏதோ ஒன்று இருந்தது : இரவு நேரத்தில் நீங்கள் அவரைக் கடலில் தூக்கிப்போட்டாலும் அவரை மோத வரும் எந்தப் படகையும் மூழ்கடித்துவிடுவார். (அவரா, சரியான கல்லுளி மங்கனாச்சே, மலையைக்கூட விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவாரே என்பது போன்ற தொடர்)
தள மேலாளர் அவரது நாற்பதுகளின் பிந்தைய வயதுகளில் இருக்கலாம். உயரமும் அகன்று விரிந்த தோள்களுமான உடலமைப்பு அவர் இளமையில் விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டுமென்று அமைதியாகச் சொல்கிறது; ஆனால் இப்போது தாடைகளிலும் அடிவயிற்றிலும் அதிகச் சதை பிடிக்கத் தொடங்கிவிட்டது. அவரது தலைமுடி குட்டையாகக் குத்திட்டு நிற்கும். அதுவும் உச்சந்தலையில் உதிரத் தொடங்கிவிட்டது.. மேலும் வயதாகிக்கொண்டிருக்கிற ஒரு பிரம்மச்சாரியின் வாசனை – செய்தித் தாள்களை இருமல் மருந்துப் புட்டியோடு சேர்த்து இழுப்பறையில் வைத்தது போன்றது - அவரைப் பீடிக்கத் தொடங்கிவிட்டது. அதுபோன்ற வாசனையுள்ள பிரம்மச்சாரி மாமா ஒருவர் அவளுக்கு ஏற்கெனவே இருந்தார்.
மேலாளர் எப்போதும் கறுப்பு முழுநீளக் காற்சட்டையும் வெள்ளை உடுப்பும் `போ` கழுத்துப் பட்டையும் அணிந்திருப்பார். `போ` பட்டை என்றால் பொருத்திக்கொள்வதல்ல; உண்மையாகவே கையால் முடிச்சிடுகிற ஒன்று. அதைக் கண்ணாடி பார்க்காமலேயே மிகச் செம்மையாக முடிச்சிட அவரால் முடியும் என்பது அவர் தற்பெருமை கொண்டாடுகின்ற ஒன்றாக இருந்தது. அவருடைய வேலைகளை ஒவ்வொரு நாளும் திறம்படச் செய்தார். விருந்தினர்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை மேற்பார்வையிடுவது, முன்பதிவு அட்டவணைகளை மிகச் சரியாகப் பராமரிப்பது, வழக்கமான வாடிக்கையாளர்களைத் தெரிந்து அவர்களை இன்முறுவலோடு வரவேற்பது, ஏதாவது புகார்கள் வரப்பெற்றால் மிக்க மரியாதையோடு கேட்பது, ஒயின் வகைகள் குறித்து நிபுணத்துவக் கருத்து சொல்வது, மேஜைகளில் பரிமாறும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் வேலைகளைக் கண்காணிப்பது என்பவையெல்லாம் அவரது வேலைகளில் அடக்கம். விடுதி உரிமையாளருக்கு இரவு உணவினை நேரடியாகக் கொண்டுபோய்க் கொடுப்பதென்பது அவருடைய அன்றாடப்பணிகளில் மிகமிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
•
‘’விடுதி இருந்த அதே கட்டிடத்தின் ஆறாவது தளத்தின் ஒரு அறையில் உரிமையாளர் இருந்தார்.’’. என்றாள், அவள். ‘’ அது அவருடைய வசிப்பறையோ, அலுவலகமோ அல்லது அது மாதிரி ஏதோ ஒன்று.’’
எப்படியோ அவளும் நானும் இருபதாவது பிறந்த நாள் பற்றியதான பேச்சுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அது எங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நாளாக வந்து வாய்த்திருந்தது. அநேகமாக எல்லோருமே அவர்களின் இருபதாவது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருப்பார்கள். அவளுடையது பத்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.
‘’இருந்தாலும், விடுதிக்குள் அவர் முகத்தைக் காட்டியதென்பது கிடையவே கிடையாது. அவரைப் பார்க்கிற ஒரே ஆள், மேலாளர் மட்டும்தான். உரிமையாளருக்கான இரவு உணவை அவரிடம் கொண்டு சேர்ப்பது அவருக்கே அவருக்கான, அவர் மட்டுமே செய்கிற வேலையாக இருந்தது. வேறு எந்தப் பணியாளருக்கும், உரிமையாளர், எப்படி இருப்பார் என்றுகூடத் தெரியாது.’’
‘’ஆக, அடிப்படையில், அந்த உரிமையாளர் அவருடைய சொந்த விடுதியிலிருந்தே ஹோம் டெலிவரி பெற்றுக்கொண்டார்.’’
‘’ஆமாம். ரொம்பச் சரிதான்.’’ என்றாள், அவள். ‘’ ஒவ்வொரு இரவும் சரியாக எட்டு மணிக்கு மேலாளர் இரவு உணவை உரிமையாளர் அறைக்குக் கொண்டுபோக வேண்டும். அது விடுதியின் பரபரப்பான அலுவல் நேரம். திடீரென்று மேலாளர் காணாமல் போய்விடுவதென்பது எங்களுக்கு ஒரு பெரிய சிரமம். ஆனாலும் அதற்கு ஒரு தீர்வும் இல்லை. ஏனென்றால் எல்லாநாளும் அது அப்படித்தான் நடந்தது. விடுதிகளில் அறைப் பணிகளுக்காக உபயோகப்படும் தள்ளுவண்டி ஒன்றில் இரவு உணவை அடுக்கி வைப்பார்கள். மேலாளர் அதற்கென மரியாதை மிக்க ஒரு தோற்றத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு உணவுவண்டியை மின்னேற்றிக்குள் தள்ளிச்செல்வார்; பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெறுங்கையோடு திரும்புவார். பிறகு ஒரு மணிநேரம் கழிந்ததும் மீண்டும் மேலே சென்று காலித்தட்டுகள், கிண்ணங்களோடு தள்ளுவண்டியை எடுத்து வருவார். ஒவ்வொரு நாளும் இப்படித்தான், கடிகாரத்தின் இயக்கம் போல. முதல் நாள் பார்த்தபோது இது எனக்கு ஒரு மாயமந்திர வித்தையாகத் தோன்றியது. ஏதோ ஒரு மதச்சடங்கு போல நிகழ்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இருந்தாலும் கொஞ்ச நாட்களானதும் அது எனக்குப் பழகிப்போய்விட்டது; அப்புறம் அது வேறுமாதிரியாகத் தோன்றவில்லை.
உரிமையாளர் எப்போதுமே கோழிக்கறி தான் சாப்பிட்டார். செய்முறைப் பக்குவமும் உடன் உண்ணும் காய்கறிகளுந்தான் ஒவ்வொருநாளும் வேறுவேறாக இருக்கும். ஆனால், கோழிக்கறிதான், எப்போதுமே, பிரதானம். ஒரு இளம் சமையல்காரர் தினமும் ஒரே மாதிரியான வறுத்த கோழியை ஒரு வாரம் முழுவதும் எல்லா நாளிலும் அனுப்பிப் பார்த்தாராம்; உரிமையாளர் எந்தக் குறைபாடும் சொல்லவில்லையாம். அந்தச் சமையல்காரரே அதை அவளிடம் சொன்னார். ஒவ்வொரு சமையலரும் வெவ்வேறு பக்குவங்களில் சமைத்துக் காட்ட விரும்புவார் என்பது எப்போதும் உள்ளதுதான். ஒவ்வொரு புதிய சமையலரும் அவர் நினைக்கின்ற மாதிரியில் எல்லா பக்குவத்திலும் சமைக்க முயற்சிப்பது வழக்கந்தான். அவர்கள் சுவைமிக்க குழம்பு வகைகளைச் செய்வார்கள்; வெவ்வேறு முகவர்களிடமிருந்து கறியை வாங்குவார்கள்; ஆனால் அவர்களின் முயற்சிகளுக்கெல்லாம் எந்த எதிர்வினைகளும் இல்லை. அவை கைவிடப்பட்ட குகைக்குள் எறியப்பட்ட கூழாங்கற்களாகவே ஆயின. அவர்கள் எல்லோருமே சலிப்பாகி அவரவர் முயற்சிகளைக் கைவிட்டு உண்மையிலுமே நல்ல தரமான கோழிக்கறி வகைகளை தினமும் அந்த உரிமையாளருக்கு அனுப்பினர். அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதும் அதுதானே.
நவம்பர், 17ல் அவளுடைய இருபதாவது பிறந்த நாளில் வழக்கம் போலவே வேலை தொடங்கியது. அன்று பிற்பகலிலிருந்தே விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்த மழை, மாலையின் தொடக்கத்தில் கனத்து, ஊற்றிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு அன்றைக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகைகளைப் பற்றிய விளக்கம் கொடுப்பதற்காக மேலாளர் அனைத்துப் பணியாளர்களையும் ஒருசேர அழைத்தார். பரிமாறுபவர்கள் சிறு குறிப்புப் புத்தகம் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தாமலேயே சிறப்பு உணவுகளின் பெயர்களை வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடமாக வியால் மிலனீஸ், மத்தி – முட்டைக்கோஸ் – பாஸ்தா, கஷ்கொட்டை மௌஸ்ஸே என்று கடகடவென்று ஒப்பிக்கவேண்டும் . சிலவேளைகளில் மேலாளர் வாடிக்கையாளர் பாத்திரத்தை ஏற்று அவர்களைக் கேள்வி கேட்டு ஒரு வாய்மொழித் தேர்வே நடத்துவார். தொடர்ந்து பணியாளர்களுக்கான உணவு வழங்கப்படும். இந்த விடுதியில் பரிமாறும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளும்போது இரைச்சலிடும் காலி வயிறோடு நிற்க வேண்டியதில்லை.
விடுதியின் கதவுகள் ஆறு மணிக்குத் திறக்கப்பட்டதென்றாலும் மழை காரணமாக விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே வரத் தொடங்கினர். பல முன்பதிவுகளும் எளிதில் ரத்தாகின. தங்களின் ஆடைகள் மழையில் நனைந்துபோவதைப் பெண்கள் விரும்பவில்லை. மேலாளர் வாயை இறுக்க மூடிக் `கம்`மென்று சுற்றிச்சுற்றி வந்து நடைபயின்றார். பரிமாறுபவர்கள் உப்பு, மிளகுப்பொடிக் கிண்ணங்களை மீண்டும் மீண்டும் துடைத்துப் பளபளப்பாக்கி, அல்லது சமையலர்களோடு உணவுப் பக்குவங்கள் குறித்து அரட்டையடித்துக் கொண்டு, எப்படியோ நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். விருந்தினர் கூடத்தில் ஒரே ஒரு தம்பதி மட்டும் மேஜை முன் உட்கார்ந்து, மேற்கூரை ஒலிபெருக்கிகளிலிருந்து பெருகிக் கொண்டிருந்த யாழிசையை ரசித்துக் கொண்டிருந்ததை அவள் மேலோட்டமிட்டாள். வாடைக்காலத்தின் பிந்தியபருவத்தில் பெய்த மழையின் ஆழ்ந்த மணம் விடுதிக்குள்ளும் வந்துவிட்டது.
மேலாளர் உடம்புக்கு ஏதோ ஒரு மாதிரி இருப்பதாக உணரத் தொடங்கியபோது, ஏழரை மணி இருக்கும். திடீரெனச் சுட்டு வீழ்த்தப்பட்டதுபோல் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவர் ஒரு நாற்காலியில் சரிந்து, அப்படியே உட்கார்ந்தார். அவர் நெற்றியில் கனத்த ஒரு வியர்வை படர்ந்தது. அவர், ‘’எதுவானாலும் மருத்துவமனைக்குப் போய்விடுவதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.’’ என்று முணுமுணுத்தார். அவரைப் பொறுத்தவரை உடம்புக்கு ஏதாவதென்பது ஒரு வழக்கமற்ற நிகழ்வு. பத்தாண்டுகளுக்கும் முன்பு அவர் இந்த விடுதியில் சேர்ந்ததிலிருந்து இதுவரையிலும் ஒருநாள் கூட அவர் பணிக்கு வராமல் நின்றதே இல்லை. அவர் இதுவரையிலும் நோய்வாய்ப்பட்டதோ அல்லது காயம்பட்டதோ இல்லையென்பது அவரது தற்பெருமைக்குரிய மற்றொரு விஷயமாக இருந்தது. ஆனாலும் இப்போது, வலி மிகுந்த அவருடைய முகச்சுழிப்பு அவர் மோசமான நிலையிலிருந்தாரெனக் காட்டுகிறது.
அவள் குடையைப்பிடித்துக்கொண்டு வெளியில் நின்று ஒரு வாடகைக் காரை அழைத்தாள். பரிமாறும் பணியாளர்களில் ஒருவர் பக்கத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவரோடு காரில் ஏறினார். வாடகைக் காரில் ஏறுமுன் மேலாளர், அவளிடம் கரகரத்த குரலில், ‘’ சரியாக எட்டு மணிக்கு அறை எண் 604க்கு நீங்கள் இரவு உணவைக் கொண்டு செல்லவேண்டும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அறையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு, உங்கள் இரவு உணவு இங்கே இருக்கிறதென்று சொல்லி அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவதுதான்.’’ என்றார்.
அது, 604ஆம் எண் அறை, சரிதானே?’’ என்றாள், அவள்.
‘’எட்டு மணிக்கு.’’ என்றவர்,. ‘’மிகச்சரியாக டாணென்று அடித்ததும்’’ என்றும் திருப்பிச் சொன்னார். அவர் மீண்டும் முகத்தைச் சுழித்துக் கொண்டு ஏறியதும் கார் அவரைச் சுமந்து சென்றது.
மேலாளர் சென்ற பிறகும் மழை விட்ட பாடில்லை. வாடிக்கையாளர்கள் ஒருவர், இருவரென நீண்ட நேரத்துக்கொருமுறையாக வந்தனர். ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு மேஜைகளே நிறைந்திருந்தன. மேலாளரும் ஒரு பரிமாறும் நபரும் பணியில் இல்லாத நேரத்தில் இப்படி நிகழ்வதும் ஒருவிதத்தில் நல்லதுதான். முழுமையாக எல்லாப் பணியாளர்களும் வேலைக்கு வந்து எது வந்தாலும் சமாளிக்கமுடியும் என்கிற நாட்களில் கூட சில நேரங்களில் பரபரப்பாகிவிடுவது உண்டு. அதுவும் வழக்கமானதுதான்.
எட்டு மணிக்கு உரிமையாளருக்கான உணவு தயாரானதும், அவள் அறைப்பணி வண்டியைத் தள்ளி மின்னேற்றிக்குள் கொண்டுவந்து ஆறாவது தளத்துக்காக, உயரஉயரச் சென்றுகொண்டிருந்தாள். எப்போதும்போல அவருக்கான திட்டமிட்ட உணவுதான் : திறந்து மூடிய அரைப்புட்டி சிவப்பு ஒயின், மாச்சுருள்கள், வெண்ணெய், கோழிக்கறி – ஆவியில் வேகவைத்த காய்கறிகள், ஒரு சுடுநீர்க்குடுவையில் காப்பி. அந்தச் சிறு மின்னேற்றிக்குள் கோழிக்கறியின் அதிமசாலா மணம் நிறைந்தது. அது மழையின் வாசத்தோடும் கலந்தது. நனைந்த குடையோடு யாரோ ஒருவர் அந்த மின்னேற்றியில் அப்போதுதான் சென்றிருக்கவேண்டுமென்பதை மின்னேற்றியின் தளத்தில் சொட்டியிருந்த நீர்த்துளிகள் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
அவள் வண்டியை நடைக்கூடம் வழியாகத் தள்ளிக்கொண்டு 604 என எண்ணிடப்பட்டிருந்த அறையின் முன் நிறுத்தினாள். அவள் இருமுறைத் தன் நினைவைச் சரிபார்த்துக்கொண்டாள் : 604. இது அந்த அறைதான். அவள் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, கதவின் அருகிலிருந்த பொத்தானை அழுத்தினாள்.
எந்தப் பதிலும் இல்லை. முழுமையாக ஒரு இருபது நொடிகள் அங்கேயே நின்றாள். மணியை மீண்டும் அழுத்தலாமென நினைத்தபோது, கதவு உட்பக்கமாகத் திறந்தது. மெலிந்த வயதான மனிதர் ஒருவர் காட்சியளித்தார். அவளைவிடவும் அவர் ஒரு நான்கு அல்லது, ஐந்தங்குல உயரம் குறைவாக இருந்தார். அவர் ஒரு இருண்ட நிறத்தில் முழுநீளக் காற்சட்டையும் வெள்ளை உடுப்பும் கழுத்துப்பட்டையும் அணிந்திருந்தார். வெள்ளைச் சட்டை மீது உதிர்ந்த இலையின் நிறம் போன்ற பழுப்பு மஞ்சள் கழுத்துப் பட்டை தனியாக, எடுப்பாகத் தெரிந்தது. தலையில் படிய வாரிய நரைத்த வெண்முடிகளும் நன்கு அழுத்தித் தேய்க்கப்பட்ட சுத்தமான உடைகளுமாய் அவர் ஒரு அருமையான தோற்றத்தை வெளிப்படுத்தினார். அப்போதே ஏதோ ஒரு இரவுக்கூட்டத்துக்குச் செல்லவிருப்பது போன்று அவர் தோன்றினார். அவரது புருவங்களுக்கு மேலிருந்த நெற்றிச் சுருக்கங்கள் வானமண்டலத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரியும் பள்ளத்தாக்குகளைப் போலிருப்பதாக அவளை நினைக்கவைத்தன.
‘’ஐயா, உங்கள் இரவுச் சாப்பாடு’’, என்று கரகரப்புக் குரலில் சொன்ன அவள் மீண்டும் அமைதியாகத் தொண்டையைச் செருமிச் சரிசெய்துகொண்டாள். பதட்டமாகும்போதெல்லாம் அவள் குரல் கரகரத்துவிடுகிறது.
‘’இரவுச் சாப்பாடு?’’
‘’ஆமாம், ஐயா. மேலாளர் திடீரென்று உடல் நலம் சரியில்லாமலாகி விட்டார். இன்று அவரது இடத்துக்கு நான் வரவேண்டியதாகிவிட்டது. உங்கள் உணவு, ஐயா.’’
‘’ அப்படியா, அதுதானே பார்த்தேன்,’’ அநேகமாக அவருக்குள்ளேயே பேசிக்கொள்வதுபோலப் பேசிய அந்த வயதான மனிதர் கதவுக்குமிழின் மீதிருந்த கையை எடுக்காமலேயே. ‘’ உடம்பு சரியில்லையா? என்ன அவருக்கு? நீங்கள் சொல்லவில்லையே.’’ என்றார்.
‘’திடீரென்று அவருக்கு வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது. அவர் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். குடல்வாலில் கட்டி ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார்.’’
‘’ ஆஹ், அது மோசமாயிற்றே,’’ என்ற அவர் நெற்றிச் சுருக்கங்களிடையே விரல்களை ஓடவிட்டுத் தேய்த்துக் கொண்டே, ‘’ எப்படியும் அது மிக மோசமானதுதான்.’’ என்றார்.
அவள் மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, ‘’ உங்களுடைய சாப்பாட்டை உள்ளே கொண்டு வரட்டுமா? ஐயா,’’ எனக் கேட்டாள்.
‘’ஆங், ஆமாம், அப்படித்தான்,’’ என்ற அந்த வயதான மனிதர், ‘’ஆமாமாம், இருந்தாலும் நீங்கள் விரும்பினால்தான். அது எனக்கு நல்லதாக இருக்கும்.’’ என்றார்.
நான் விரும்பினாலா? அவள் நினைத்தாள். என்ன ஒரு புதுமையாகச் சொல்கிறார். அப்படி விரும்புவதற்கு எனக்கு என்ன இருக்கிறது?
அந்த வயதான மனிதர் கதவை முழுமையாகத் திறந்தார். அவள் வண்டியை உள்ளே உருட்டினாள். காலணிகளைக் கழற்றி வைப்பதற்குக் கூட இடமின்றி அறையின் தளம் முழுதும் சாம்பல் நிற விரிப்பு போர்த்தப்பட்டிருந்தது. அந்த அப்பார்ட்மென்ட் முழுவதுமே வசிப்பிடமாக இல்லாமல் ஒரு பணி நடக்கும் இடமாகவே தோற்றமளித்தாலும் முன்னறை ஒரு பெரிய வாசிப்பு அறையாக இருந்தது. அதன் சன்னல், அருகிலுள்ள டோக்கியோ கோபுரத்தை, நோக்கிப் பார்த்தவாறு வெளியே திறந்திருந்தது. கோபுரத்தின் உருக்குக் கட்டமைப்பு, விளக்குகளால் எல்லைக்கோடிடப்பட்டிருந்தது. சன்னலின் அருகில் ஒரு பெரிய சாய்வு மேஜை இருந்தது. அதன் அருகில் கச்சிதமாக ஒரு சாய்வுமெத்தையும் அதன் இணை இருக்கையும் கிடந்தன. சாய்வுமெத்தையின் முன்பிருந்த பிளாஸ்டிக் தகட்டுறையிட்ட காபிமேஜையை அந்த வயதான மனிதர் சுட்டிக் காட்டினார். அதன் மீது உணவுவகைகளைப் பரப்பி சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள் : வெள்ளை மடித்துணி மற்றும் கரண்டி முதலிய சில்வர்பொருட்கள், காபிக்குடுவையும் தம்ளரும், ஒயின் மற்றும் ஒயினருந்தும் கண்ணாடித் தம்ளர், மாச்சுருள், ரொட்டி மற்றும் வெண்ணெய், கோழிக்கறியும் காய்வகைகளும் இருந்த கிண்ணம்.
‘’ தாங்கள் தயவுகூர்ந்து வழக்கம்போலத் தட்டுகளை நடைக்கூடத்தில் வைத்துவிட்டால். அவற்றை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரத்தில் நான் வந்துவிடுவேன், ஐயா.’’
அவருடைய உணவைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுத்து வைத்ததோடு அவளது வார்த்தைகளும் அவரைச் திருப்திப்படுத்தியதாகத் தோன்றியது. ‘’ஆமாம்,, அது சரி. உங்கள் விருப்பம் போல், அவற்றை நான் கூடத்தில் வைத்துவிடுகிறேன். வண்டியில்தான், ஒரு மணி நேரத்தில்.’’
நிச்சயமாக, நான் விரும்புவது அதுதான், என ஒரு கணம் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும், சரி எனப் பதிலளித்தாள், அவள். ‘’ நான் உங்களுக்காக வேறு ஏதாவது செய்யவேண்டுமா, ஐயா.’’ என்றாள்.
‘’இல்லை, நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை,’’ என்று கணநேர யோசனைக்குப் பின் அவர் சொன்னார். அவர் பளிச்சென்று மின்னும்படி பளபளவென மெருகிடப்பட்ட கறுப்புக் காலணிகளை அணிந்திருந்தார். அவை சிறியனவாக, ஆனால், கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. அவர் அலங்காரமாக உடையணிபவர் என்றும். அந்த வயதிலும், நிமிர்ந்து நேராக நிற்கிறாரே என்றும் அவள் நினைத்தாள்.
‘’ நல்லது ஐயா, அப்புறம், நான் என் வேலைக்குத் திரும்புகிறேன்.’’
‘’இல்லை, இல்லை, ஒரு நிமிடம் பொறுங்கள்.’’ என்றார், அவர்.
‘’ஐயா,’’
‘’மிஸ், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கமுடியுமென்று நீங்கள் கருதுவீர்களா? உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது.’’
அவர் அப்படி இனிமையும் மென்மையுமாகக் கோரியது, வெட்கத்தில் அவளைச் சிவக்க வைத்தது. ‘’ம்….அதற்கென்ன, எல்லாம் நல்லதற்குத்தான் இருக்குமென நினைக்கிறேன்.’’ என்ற அவள், ‘’ நான் சொல்ல வருவது, அது ஐந்து நிமிடங்கள் என்றால் தான்.’’ எதுவானாலும், அவர் அவளுடைய முதலாளி. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அவர் சம்பளம் கொடுக்கிறார். அப்படி இருக்கும்போது அவள் நேரத்தைக் கொடுப்பதோ அல்லது அவர் எடுத்துக்கொள்வதோ என்பது ஒரு கேள்வியே இல்லை. மேலும் இந்த வயதான மனிதர் அவளுக்கு ஏதேனும் கெடுதல் செய்துவிடுபவராகத் தெரியவில்லை.
‘’அப்புறம், உங்களுக்கு என்ன வயது ஆகிறது?’’ அவர், கைகளைக் கட்டிக்கொண்டு மேஜை அருகில் நின்று அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவாறே கேட்டார்.
‘’ இப்போது எனக்கு இருபது’’ என்றாள்.
‘’ இப்போது இருபது,’’ என்று திருப்பிச் சொன்ன அவர் ஏதோ ஒரு வெடிப்பு வழியாகத் துருவிப் பார்ப்பதைப்போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு, ‘’ இப்போது இருபது. எப்போதிலிருந்து?’’ என்று கேட்டார்.
‘’நல்லது. இப்போதுதான் எனக்கு இருபது ஆகியிருக்கிறது,’’ என்றாள், அவள். ஒரு கணம் தயங்கிப் பின், ‘’ இன்றுதான் எனக்குப் பிறந்த நாள், ஐயா.’’ என்றாள்.
என்னவோ மிகப்பெரிய அளவில் விளக்கமளிக்கவிருப்பது போலத் தாடையைத் தேய்த்துக்கொண்டே, “”அப்படியா?’’ என்றவர், ‘’ இன்று, மிகச்சரியாக, இன்றைக்குத்தான் உங்களின் இருபதாவது பிறந்தநாள், இல்லையா?’’ என்றும் கேட்டார்.
அவள் அமைதியாகத் தலையாட்டினாள்.
‘’உங்கள் வாழ்க்கை இன்றைக்கு மிகச்சரியாக இருபது வருடங்களுக்கு முன்புதான் தொடங்கியது.’’
‘’ஆமாம் ஐயா, அதுதான் உண்மை.’’ என்றாள்.
‘’ ஓ! எனக்குத் தெரிகிறது, புரிகிறது.’’ என்றார். ‘’அது அற்புதமானது. நல்லது, அப்படியானால், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’
‘’மிக்க நன்றி, மிக்க நன்றி’’ என்றாள். பிறகுதான், அவளுக்கு, இன்று முழுவதற்குமேகூட முதல் முறையாக ஒருவர் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வது இப்போதுதானென்று அவளுக்குள் தோன்றி உதித்தது. அநேகமாக, அவளது பெற்றோர் ஒய்ட்டாவிலிருந்து அழைத்திருந்தால், வேலையெல்லாம் முடிந்து அவள் வீட்டுக்குப் போய் அவளது பதிலளிக்கும் கருவியைத் திறந்து பார்த்தால் அவர்களின் வாழ்த்துச் செய்தியை அவள் பார்க்கலாம்.
‘’நன்று, நன்று. இது நிச்சயமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று.’’ என்ற அவர், ‘’ வாழ்த்தும் சடங்காகக் கொஞ்சம் குடிக்கலாமே, நாம் இந்தச் சிவப்பு ஒயினை அருந்தலாம்.’’ என்றார்.
‘’மிக்க நன்றி ஐயா, ஆனால், அது என்னால் முடியாது. நான் இப்போது பணியிலிருக்கிறேன்.’’
‘’ஓ, ஒரு சின்ன மிடறு அளவுக்கு, ஒரு வாய் உட்கொள்வதால் என்னவாகிவிடும்? அதெல்லாம் சரிதானென்று நான் சொல்லிவிட்டால், உங்களை யாரும் குறைசொல்ல மாட்டார்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஒரு சிறியப் பகிர்வு, அவ்வளவுதான்.’’
அந்த வயதான மனிதர் ஒயின் புட்டியின் மூடியைத் திறந்து ஒயின் கோப்பையில் அவளுக்காகச் சிறிது ஒயினைச் சரித்தார். பின் கண்ணாடிக் கதவுகளிட்ட மாடத்திறப்பிலிருந்து ஒரு சாதாரணத் தம்ளரை எடுத்து அதில் அவருக்காகக் கொஞ்சம் ஒயினை ஊற்றினார்.
‘’இனிய பிறந்தநாள்’’ என்று வாழ்த்திய, அவர்,’’ பயன்மிக்க ஒரு செல்வ வாழ்க்கை வாழ்வீர்களாக; இருண்ட நிழல்கள் எதுவும் அதன் மீது விழாமலிருக்கட்டும்’’ என்றார்.
அவர்கள் மதுக்கிண்ணங்களை உரசிக்கொண்டார்கள்.
இருண்ட நிழல்கள் எதுவும் அதன் மீது விழாமலிருக்கட்டும் : அவரது வார்த்தைகளை அவள் அமைதியாக உள்ளுக்குள் மீண்டும் சொல்லிக்கொண்டாள். அவளுடைய பிறந்தநாள் வாழ்த்தாக அவர் ஏன் அப்படியொரு வழக்கமற்ற தொடரைத் தேர்வுசெய்தார்?
மிஸ், வாழ்க்கையில் ஒரே ஒருமுறை மட்டுமே உங்கள் இருபதாவது பிறந்தநாள் வருகிறது. அது ஒரு மாற்றிக்கொள்ளமுடியாத அதாவது மீண்டும் நிகழமுடியாத ஒரு நாள்.’’
‘’ ஆமாம் ஐயா, அதை நான் அறிவேன்.’’ என்ற அவள் கோப்பையில் இதழ் பதித்து மிகுந்த எச்சரிக்கையோடு ஒரு மிடறு ஒயினை மட்டும் எடுத்துக்கொண்டாள்.
‘’ இங்கே, இப்போது, உங்களுக்கேயான சிறந்த ஒரு நாளில், நீங்கள் ஒரு கருணைமிக்க தேவதையைப் போல் எனக்கான உணவை எடுத்து வரும் தொல்லையை மேற்கொண்டிருக்கிறீர்கள்.’’
‘’நான் என் கடமையைச் செய்கிறேன், அவ்வளவுதான், ஐயா.’’
‘’இருந்தாலும்,’’ என்ற அந்த வயதான மனிதர் அவரது தலையை ஒருசில முறை வேகமாக அசைத்துக்கொண்டார். ‘’ இருந்தாலும், இளமையான, அன்புள்ள, மிஸ்.’’
அந்தச் சாய்வு மேஜை அருகிலிருந்த ஒரு தோல் நாற்காலியில் அவர் அமர்ந்து, அவளைச் சாய்வு மெத்தையில் அமருமாறு கையைக் காட்டி அசைத்தார். அவள் முன்னெச்சரிக்கையோடு அந்தச் சாய்வு மெத்தையின் விளிம்பில் ஒயின் கோப்பையும் கையுமாக உட்கார்ந்தாள். மூட்டுகளை ஒருங்கமைத்து, உடுப்பினை இழுத்து விட்டுக்கொண்டு மீண்டும் தொண்டையைச் செருமி சரிசெய்தாள். சன்னல் கதவில் மழைத்துளிகள் கோடிழுப்பதை அவள் பார்த்தாள். அறையில் வினோதமான ஒரு அமைதி நிலவியது.
‘’இன்று உங்கள் இருபதாவது பிறந்த நாள் இப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதிலும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அற்புதமான சுவையான உணவை நீங்கள் எனக்காகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.’’ நிலைமையை மீண்டும் உறுதிசெய்வது போல அவர் பேசினார். பின்னர் அவர் அவரது தம்ளரை மேஜையின் உயரமான இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக ஓசை எழும்படியாக வைத்தார். ‘’இது ஒரு வகையான எல்லாம் கூடிவந்த நல்ல நேரம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?’’
முழுவதுமாக ஏற்காவிட்டாலும் அவள் எப்படியோ ஒரு தலையசைப்பைச் செய்துவைத்தாள்.
‘’அது ஏனென்றால்’’ என்று உதிர்ந்த இலை நிறக் கழுத்துப்பட்டையின் முடிச்சினைத் தொட்டவாறே, அவர் சொன்னார், ‘’உங்களுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு கொடுப்பது முக்கியமென நான் உணர்கிறேன். ஒரு சிறப்பு வாய்ந்த பிறந்த நாள் என்றால் ஒரு நினைவுப் பரிசு இருக்கவேண்டும்.’’
குழம்பிப் போன அவள் தலையசைத்து மறுத்து,’’இல்லை, இல்லை, ஐயா, தயவுசெய்து இன்னொரு முறை அப்படி நினைக்கவேண்டாம். அவர்கள் சொன்னதன்படியே நான் உங்களுக்கான உணவை எடுத்து வந்தேன்.’’
அந்த வயதான மனிதர் உள்ளங்கைகள் இரண்டையும் அவளை நோக்கி விரித்து நீட்டி, இரு கரங்களையும் உயர்த்தினார்.’’ அப்படி இல்லை, மிஸ், நீங்கள் அதனை வேறுமாதிரி நினைக்காதீர்கள். நான் உங்களுக்குக் கொடுக்க நினைக்கும் பரிசு தொட்டு உணரக்கூடிய ஒரு பொருளல்ல, விலைபெறுமானமுள்ள எதுவுமல்ல. இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால்’’ அவர் கைகளைச் சாய்வு மேஜை மீது வைத்துக்கொண்டு மெதுவாக, ஆனால் நீண்ட ஒரு மூச்செடுத்தார். தொடர்ந்து, ’’உங்களைப் போன்ற ஒரு அழகிய இளம் தேவதைக்கு என்ன செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன் என்றால், உங்கள் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவது, உங்கள் வேண்டுதலை நனவாக்குவது. நீங்கள் எதை, எதை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம் – அப்படியொரு வேண்டுதல் உங்களுக்கிருப்பதாக நினைத்துக்கொள்ளுங்களேன்.’’
‘’ ஒரு வேண்டுதலா?’’ தொண்டை வறள, அவள் கேட்டாள்.
‘’ மிஸ், உங்களுக்கு நிகழ வேண்டுமென்று அல்லது வாய்க்க வேண்டுமென்று எதையாவது விரும்புங்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை இருந்தால் – ஒன்றே ஒன்று, அதை நான் உண்மையாக்கித் தருவேன். அப்படிப்பட்ட ஒரு பிறந்தநாள் பரிசுதான் நான் உங்களுக்குக் கொடுக்கக் கூடியது. ஆனால், நீங்கள் மிக கவனமாக அதைப்பற்றிச் சிந்தனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நான் ஒன்றே ஒன்றுதான் தரமுடியும்.’’ அவர் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டினார். ‘’ஒன்று மட்டும் தான். அதைச் சொன்னபிறகு உங்கள் மனதை மாற்றிக்கொண்டு அதை வேண்டாமென்று சொல்லக்கூடாது.’’
அவளுக்கு என்ன சொல்வதென்று வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஒரு வேண்டுதல்? காற்றின் சவுக்கடியால் மழைத்துளிகள் சன்னல் கதவைத் தட்டி ஒழுங்கற்று ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் அமைதியாக இருந்த நேரம் முழுவதும் அவர் எதுவும் பேசாமல் அவள் கண்களுக்குள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தார். நேரம் அதன் ஒழுங்கற்ற துடிப்பை அவள் காதுகளுக்குள் பதித்தது.
‘’ நான் ஏதாவதொன்றுக்கு ஆசைப்பட்டு வேண்டிக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்படும், அப்படித்தானே?’’
அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல், இன்னும் சாய்வு மேஜை மீதே கைகளை அருகருகே வைத்திருந்த அவர் வெறுமனே புன்னகைத்தார். ஆனால், அவர் அதை மிகவும் இயற்கையாக, நேசத்தோடு செய்தார்.
‘’ உங்களுக்கு ஒரு வேண்டுதல் உள்ளதா, மிஸ், அல்லது அப்படி எதுவும் இல்லையா? அவர் மிக மென்மையாக வினவினார்.
‘’இப்படித்தான் உண்மையிலேயே நிகழ்ந்தது’’, என்ற அவள் என்னை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’நான் ஒன்றும் இதை இட்டுக்கட்டிச் சொல்லவில்லை.’’ என்றாள்.
‘’ஆமாம், இருக்காது’’ என்றேன், நான். அவள் ஒன்றுமில்லாததைக் கதையாகத் திரிக்கும் ரகத்தைச் சேர்ந்தவளல்ல. ‘’ஆக…..கடைசியில் நீங்கள் ஒரு வேண்டுதலைச் சொன்னீர்களா?’’
அவள் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சிறிதாக ஒரு பெருமூச்சினை வெளியிட்டாள். ‘’ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.’’ என்றாள். ‘’நானே அவரை நூறு சதவீதம் ஏற்புடையவராகக் கருதியிருக்கவில்லை. நான் சொல்வது, இருபதாவது வயதில் நீங்கள் மேற்கொண்டும் தேவதைக்கதை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. இது அவருடைய கிண்டலுக்கான அடிப்படையாக இருக்குமானால், அப்படி இருந்தாலும் நான் அங்கேயே அப்போதே ஒரு பதிலடி கொடுக்கவேண்டியிருந்தது. அவர் ஒரு வயதான கிழவராக இருந்தாலும் அவர் கண்களில் ஒரு மினுக்கம் தெரிந்தது. அதனால் நான் அவரோடு ஒரு விளையாட்டை நடத்தத் தீர்மானித்தேன். என்ன இருந்தாலும் அன்று என்னுடைய இருபதாவது பிறந்தநாள் : அந்த நாளில் சாதாரண நிகழ்வாக இல்லாமல் ஏதாவது இருக்கவேண்டுமென நான் எண்ணினேன். அதை நம்புவதா அல்லது நம்பாமலிருப்பதா என்பது ஒரு கேள்வியல்ல.’’
நான் எதுவும் சொல்லாமல் தலையாட்டினேன்.
‘’ எனக்கு நிச்சயமாகத் தெரியும், நான் எப்படி உணர்ந்தேனென்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். என்னுடைய இருபதாவது பிறந்தநாள் எந்த ஒரு சிறப்பு நிகழ்வுமில்லாமல் யாருடைய வாழ்த்துமில்லாமல், ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்று நான் செய்துகொண்டிருந்ததெல்லாம் விருந்தினர் மேஜைகளுக்கு டோர்ட்டெலினியை அன்கோவி சாஸுடன் எடுத்துச் சென்றதுதான்.
நான் மீண்டும் தலையசைத்தேன். ‘’கவலைப்படாதீர்கள் எனக்குப் புரிகிறது’’ என்றேன், நான்.
‘’அதனால் நான் ஒரு வேண்டுதலைச் சொன்னேன்.’’
அந்த வயதான மனிதர் பார்வையை அவள் மீதே பதித்திருந்தார். எதுவும் பேசவில்லை. அவரது கைகள் அப்போதும் சாய்வு மேஜை மீதே இருந்தன. அந்த மேஜையில் இன்னும் கணக்குப் பேரேடுகள், எழுதுபொருட்கள், ஒரு நாட்காட்டி,பச்சைநிற மேற்தட்டுடன் கூடிய ஒரு விளக்கு ஆகியனவும் இருந்தன. அவற்றின் இடையே கிடந்த அவரது கரங்களும் ஏதோ ஓரிணை மேஜைப் பொருட்கள் போலவே தோற்றமளித்தன. கண்ணாடியின் மீது மழை அப்போதும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. தெறித்த துளிகளின் வழியே டோக்கியோ கோபுர விளக்குகளின் வெளிச்சம் வடிகட்டித் தெரிந்தது.
அந்த வயதான மனிதரின் நெற்றிச் சுருக்கங்கள் மேலும் கொஞ்சம் ஆழமாகின. ‘’ அதுவா உங்கள் வேண்டுதல்?’’
‘’ஆமாம்,’’ என்ற அவள் ‘’அதுதான் என் விருப்பம்,’’ என்றாள்.
‘’உங்கள் வயதுப் பெண்ணுக்கு இது கொஞ்சம் அபூர்வமானதுதான்,’’ என்றார், அவர். .கூடவே, ‘’நான் வேறு மாதிரி ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன்.’’ என்றும் சொன்னார்.
’’ இது நன்றாகயில்லையென்றால், வேறு எதையாவது விரும்பி வேண்டிக்கொள்கிறேன்.’’ என்ற அவள், தொண்டையைச் சரிசெய்துகொண்டாள். ‘’ எனக்கொன்றுமில்லை. நான் வேறு எதையாவது யோசித்துப் பார்க்கிறேன்’’. என்றாள்.
‘’இல்லையில்லை,’’ என்று கைகளை உயர்த்திக் கொடிகளைப்போல அசைத்துக்கொண்டு சொன்னார். ‘’இதில் எதுவும் தவறு இல்லை. எதுவுமே இல்லை. இது எனக்குச் சிறிது ஆச்சரியமாக இருக்கிறது, மிஸ், உங்களுக்கு வேறு எதுவும் இல்லையா? அதாவது அழகு, நேர்த்தி, கூர்த்த மதி, பணம், இது மாதிரி ஏதாவது? ஒரு சாதாரணப் பெண் கேட்கும் எது போலவும் நீங்கள் ஆசைப்படாமலிருப்பது ஒருவகையில் சரிதான்’’.
அவள் பொருத்தமான வார்த்தைகளைத் தேடிச் சில கணங்கள் தாமதித்தாள். அந்த வயதான மனிதர் எதுவும் பேசாமல் வெறுமனே காத்திருந்தார். அவரது கைகள் இரண்டும் மீண்டும் இணைந்து சாய்வுமேஜையின் மீது படுத்துக்கிடந்தன.
‘’ ஒருவகையில் சரிதான், நான் இன்னும் அழகாக, இன்னும் நேர்த்தியாகக் கூடுதல் அறிவுள்ளவளாக, அல்லது பணக்காரியாக ஆசைப்பட்டு வேண்டிக்கொள்ளலாம்தான். ஆனால் அதுபோல ஏதாவதொன்று உண்மையில் எனக்குக் கிடைத்துவிட்டால் எனக்கு என்ன நிகழுமென்று என்னால் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை. அவை என்னால் கையாள்வதற்கும் அதிகப்படியானவையாகத்தான் அமையும். வாழ்க்கை என்பது எது பற்றியதானதென உண்மையில் நான் இன்னும் அறியாதவளாகத்தான் இருக்கிறேன். அது எப்படிச் செயல்படுகிறதென எனக்குத் தெரியவில்லை.’’
‘’ம்..ஹூம். ம்….’’ என்ற அந்த வயதானவர் கைவிரல்களை ஒன்றுசேர்ப்பதும், பிரிப்பதுமாக மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார், ‘’ம்..ஹூம். ம்….’’
‘’அப்படியானல், எனது வேண்டுதல் சரியானதுதானா?’’
‘’ ம்… அப்படியுந்தான்,’’ என்றவர், ‘’ அந்தவகையில் சரிதான். அதனால் எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.’’ என்றார்.
அந்த வயதானவர் திடீரெனக் கண்கள் திறந்தது திறந்தபடியே வெட்டவெளியில் ஏதோ ஒரு புள்ளியை நோக்கினார். அவரது முன் நெற்றியின் சுருக்கங்கள், இன்னும் ஆழமாகின : அவை சிந்தனைகளின் அடர்த்தி மிகுதியால் அவரது மூளைக்குள் ஏற்பட்ட மடிப்புகளாகத்தான் இருக்கவேண்டும். அவர் எதையோ – ஒருவேளை காற்றில் மிதந்து கீழிறங்கும் கண்ணுக்குத் தெரியாத எல்லாவற்றையும் வெறிப்பது போலிருந்தார். அவரது இரு கரங்களையும் அகல விரித்து, நாற்காலியிலிருந்தும் சிறிது எழும்பி, உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து மிகமெல்லிய ஓசையில் தட்டிக்கொண்டார். மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, நெற்றிச் சுருக்கங்களை அமைதிப்படுத்துவதுபோல் அவற்றின் மீது விரல் நுனிகளை மெதுவாக ஓடவிட்டு, மீண்டும் அவளை நோக்கி மெல்லிய புன்முறுவலுடன் திரும்பினார்.
‘’ அது நிகழ்ந்துவிட்டது.’’ என்றார், அவர். ‘’ உங்கள் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.’’
‘’ ஏற்கெனவேயா?’’
‘’ஆமாம், அதில் பிரச்னை எதுவும் இல்லை. அழகு மங்கையே, உங்கள் வேண்டுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இப்போது உங்கள் பணிக்குத் திரும்பலாம். கவலைப்பட வேண்டாம், நான் வண்டியைக் கூடத்தில் நிறுத்திவிடுகிறேன்.’’
அவள் மின்னேற்றியை அழுத்தி விடுதிக்கு இறங்கினாள். இப்போது வெறுங்கையோடு, ஏதோ ஒருவகைப் புதிர்த்தன்மைகொண்ட மென்மையான ஒன்றின் மீது நடப்பது போலவும் எல்லாத் தொந்தரவுகளும் விலகிவிட்டது போலவும் உணர்ந்தாள்.
‘’ நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்களா? இந்த உலகத்திலேயே இல்லாதது போலத் தோன்றுகிறீர்கள்?’’ என்று அவளை விட இளையவரான அந்தப் பரிமாறும் பணியாளர் கேட்டார்.
அவள், அவருக்கு ஒரு இரண்டுங்கெட்டான் புன்னகையைப் பரிசளித்து, தலையைக் குலுக்கி அசைத்துக்கொண்டாள். ‘’ ஊம்… ,அப்படியா? உண்மையாகவா? இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.’’
‘’ உரிமையாளரைப் பற்றிச் சொல்லுங்கள். அவர் என்ன மாதிரி இருக்கிறார்?’’
‘’ எனக்கும் தெரியாது. நான் அவரைச் சரியாகப் பார்க்கவில்லை.’’ என்று பேச்சை முறிக்கும் பாவனையில் சொன்னாள்.
.
ஒரு மணி நேரம் கழித்து வண்டியைக் கொண்டுவரச் சென்றாள். அது கூடத்தில் நின்றது. பாத்திரங்கள் அதனதன் இடத்தில் இருந்தன,. கோழிக்கறியும் காய்கறிகளும் பறந்து சென்றிருப்பதைப் பார்க்கவே, அவள் மூடியைத் தூக்கினாள். ஒயின் புட்டியும் காப்பிக் குடுவையும் காலியாக இருந்தன. 604 ஆம் எண் அறையின் கதவு உணர்ச்சிகள் எவற்றையும் வெளிப்படுத்தாமல் மூடியவாறே இருந்தது. அந்தக் கதவு எந்தக் கணத்திலும் திறந்துவிடும் என்பது போன்ற உணர்வுடன் அதையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அது திறக்கவேயில்லை. அவள் வண்டியை மின்னேற்றியில் ஏற்றித் தளத்துக்கு இறக்கி, பாத்திரம் கழுவும் இயந்திரத்துக்கு உருட்டிவந்தாள். சமையல்காரர், தட்டின் மீது பார்வையை வீசினார். எப்போதும் போலக் காலியாக இருந்தது. வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டார்.
‘’திரும்பவும் அந்த உரிமையாளரை நான் பார்க்கவே இல்லை.’’ என்றாள், அவள். ‘’ ஒருதடவை கூடப் பார்க்கவில்லை. மேலாளருக்குச் சாதாரண வயிற்றுவலிதான் வந்திருந்தது. அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார். மறுநாளிலிருந்து அவரேதான் உரிமையாளருக்கான உணவைக் கொண்டுசென்றார். புது வருடம் பிறந்ததும் நான் அந்த வேலையை விட்டுவிட்டேன். பிறகு, அந்தப் பக்கம் நான் தலை காட்டியதே இல்லை. அது ஏனென்று எனக்குத் தெரியாது. அங்கே போகாமலிருப்பதே நல்லதென்று, முன்னெச்சரிக்கை போல ஏதோ ஒரு உள்ளுணர்வு என்று வைத்துக்கொள்ளுங்களேன்.’’
அவள், தன் சிந்தனையில் மூழ்கிக் காகிதத்தட்டு ஒன்றைச் சுழலவிட்டு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள். ‘’ என்னுடைய இருபதாவது பிறந்த நாளில் எனக்கு நேர்ந்ததெல்லாம் ஏதோ ஒருவகையான மாயை அல்லது கனவில் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. அதாவது, அது எப்படியென்றால், எனக்கு நிகழ்ந்தனவெல்லாம் உண்மையிலேயே நிகழாதவை போன்ற உணர்வை ஏற்படுத்த ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது போன்றது. ஆனால் அது, எனக்கு நிச்சயமாகத் தெரியும், அது நிகழ்ந்ததுதான். 604 -ம் எண் அறைக்குள் இருந்த சாய்வுமேஜை, நாற்காலி முதல் எல்லாச் சாமான்கள் பொருட்கள்ள் மட்டுமல்ல, சின்னச் சின்ன அழகுப்பொருட்களின் பிம்பங்களையும் என்னால் இப்போதுகூடச் சரியாகச் சொல்லமுடியும். அங்கே எனக்கு நேர்ந்தவை எல்லாம் உண்மையாக நிகழ்ந்தவை மட்டுமல்ல, அவை எனக்கு மிக முக்கியமானவையாகவுங்கூட இருக்கின்றன.
நாங்கள் இருவரும் சிறிது நேரம் அமைதியாக அவரவர் பானங்களை அருந்திக்கொண்டு எங்கள் தனியான எண்ணங்களில் மூழ்கியிருந்தோம்.
‘’நான் உங்களை ஒரு விஷயம் கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்களே?’’ நான் கேட்டேன். ‘’ இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், இரண்டு விஷயங்கள்.’’
‘’ம்.. மேலே, மேலே செல்லுங்கள். எதுவானாலும் நேரடியாகக் கேளுங்கள்,’’ என்றவள், ‘’ அந்த நேரத்தில் நான் என்ன வேண்டிக்கொண்டேன் என்று கேட்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் அதுவாகத்தான் இருக்கும்.’’ என்றாள்.
‘’ ஆமாம், ஆனால், அதைப்பற்றி நீங்கள் பேசவிரும்பவில்லை போல் தெரிகிறதே.’’
‘’அப்படியா?’’
நான் தலையாட்டினேன்.
அவள் காகிதத்தட்டைக் கீழே வைத்துவிட்டு, தூரத்தில் தெரியும் எதையோ கூர்ந்து நோக்குவது போல் கண்களைச் சுருக்கினாள். ‘’ என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாதென்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இல்லையா?.’’
‘’நான் ஒன்றும் கிண்டிக் கிளறி அதை வெளியே இழுத்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அது உண்மையில் நிறைவேறியதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன், அவ்வளவுதான். அதுமட்டுமல்ல, உங்கள் வேண்டுதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படி ஒரு வேண்டுதலைச் செய்து கொண்டதற்காக பின்னால் எப்போதாவது வருத்தம் கொண்டீர்களா, இல்லையா? வேறு எதையாவது வேண்டிக்கொண்டிருந்திருக்கலாமே என்று எப்போதாவது வருத்தப்பட்டீர்களா?’’ என்றேன், நான்.
‘’முதல் கேள்விக்கான பதில் ஆமாம் என்பதுதான், இல்லையென்றும் சொல்லலாம். நான் வாழவேண்டிய நாட்கள் இன்னும் நிறைய மீதி இருக்கிறதே. அது முடிவில் எப்படியாகுமென்று எனக்குத் தெரியவில்லை.’’
‘’ஆக, அந்த வேண்டுதல் நிறைவேற இன்னும் காலம் இருக்கிறது என்கிறீர்கள்.’’
‘’ நீங்கள் அப்படியும் சொல்ல முடியும். காலம் அதன் முக்கிய பணியினைச் செய்யவிருக்கிறது.’’
‘’ குறிப்பிட்ட சிலவகை உணவுத் தயாரிப்பின்போது ஏற்படுமே அது போல் என்கிறீர்கள்.’’
அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள்.
நான் அது பற்றி ஒரு கணம் சிந்தித்தேன். ஆனால் என் மனத்தில் தோன்றியதெல்லாம் மலைக்கத்தக்க அளவில் மிகப்பெரிய அப்பம் ஒன்று அடுப்பில் மெல்லிய நெருப்பில் மெதுவாக வெந்துகொண்டிருப்பதான ஒரு பிம்பம் மட்டுமே.
‘’ சரி, எனது இரண்டாவது கேள்விக்கான பதில்?’’
‘’மறுபடியும் என்ன இருக்கிறது, அதில்?’’
‘’ நீங்கள் வேண்டிக்கொண்ட அதைப்போய்த் தேர்ந்தெடுத்தோமேயென்று எப்போதாவது வருந்தினீர்களா?’’
சில கணங்கள் அமைதியாகக் கடந்தன. என் பக்கம் திரும்பிய அவளது கண்கள் வெறுமையாகத் தோற்றமளித்தன. அவள் இதழ்களின் ஓரங்களில் மினுங்கிய வறண்ட புன்னகையின் நிழல், அவளின் விட்டேற்றியான மனநிலையை ரகசியமாக உணர்த்தியது.
‘’இப்போது, எனக்கு என்னைவிட மூன்று வயது மூத்த ஒரு கணக்காயருடன் திருமணமாகியிருக்கிறது. இரண்டு குழந்தைகள், ஒரு பையனும் பெண்ணும். அயர்லாந்து வேட்டை நாய் ஒன்று வைத்திருக்கிறோம். எனக்கென்று அவ்டி கார் இருக்கிறது. நான் என்னுடைய தோழிகளோடு வாரம் இருமுறை வரிப்பந்து விளையாட்டயர்கிறேன். இப்படியான ஒரு வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.’’
‘’ எங்கேயோ போய்விட்டீர்கள்.’’ என்றேன், நான்.
‘’ என்னுடைய அவ்டியின் முட்டுத்தாங்கியில் கூட இரண்டு இடங்களில் அடிபட்டிருக்கிறது.’’
‘’ஹே, முட்டுத்தாங்கிகள் அடிபடுவதற்கென்றே உருவாக்கப்பட்டவை.’’
‘’ ஆஹா, இது எழுதி ஒட்ட வேண்டிய ஒரு, அருமையான தொடர்.’’ என்றாள், அவள். ‘’ முட்டுத்தாங்கிகள் அடிபடுவதற்காகவே இருக்கின்றன.’’
அவள் அதைச் சொன்ன போது நான் அவள் இதழ்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
‘’ நான் சொல்ல முயற்சிப்பது இதுதான்.’’ என்ற அவள் காது மடலைச் சொறிந்துகொண்டே இன்னும் மென்மையாகச் பேசினாள். அது மிக அழகாக அமைந்த ஒரு காது மடல். ‘’ ஜனங்கள் என்ன வேண்டுகிறார்கள் என்பதோ, அதற்காக எவ்வளவு முயற்சிக்கிறார்கள் என்பதோ ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அவர்களாகவே இருப்பதைத் தவிர வேறு எதுவாகவும் ஆகிவிடமுடியாது.’’
‘’ இதுவும் ஒட்டி வைக்க வேண்டிய, இன்னொரு அருமையான தொடராக இருக்கிறதே,’’ என்றேன், நான். ‘’ எவ்வளவு உயரப் போனாலும், ஜனங்கள், அவர்களாக இருப்பதைத் தவிர வேறு எதுவாகவும் ஆக முடியாது.’’
அவள் மகிழ்ச்சியின் உச்சமாகச் சத்தமாகச் சிரித்தாள். துயரத்தின் நிழல் காணாமற் போயிற்று.
அவள், தன் முழங்கை மூட்டினைக் கம்பியின் மீது வைத்தவாறே என்னைப் பார்த்தாள். ‘’ என்னிடம் சொல்லுங்கள், என் நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால், அப்போது நீங்கள் என்ன வேண்டிக்கொண்டிருந்திருப்பீர்கள்?’’
‘’ அதாவது, இருபதாவது பிறந்தநாளின் இரவில் என்கிறீர்கள்.’’
‘’ஹூம், ம்..ம்’’
நான் அதுபற்றி யோசிக்கச் சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டேன். என்றாலும் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே வேண்டுதலாக என்னால் சொல்ல முடியவில்லை.
‘’என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை.’’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டேன். ‘’ என்னுடைய இருபதாவது பிறந்தநாளிலிருந்து வெகுதொலைவுக்கு வந்து விட்டேனில்லையா?’’
‘’ உண்மையில், நீங்கள் எதையுமே நினைக்கமுடியாது. இல்லையா?’’
நான் தலையாட்டினேன்.
‘’ஒன்று கூடவா இல்லை?’’
‘’ ம்… ஒன்று கூட இல்லை.’’
அவள், என் கண்களுக்குள் ஊடுருவிக்கொண்டே, ‘’ அது ஏனென்றால், நீங்கள் உங்கள் வேண்டுதலை ஏற்கெனவே நிறைவேற்றி முடித்துவிட்டீர்கள்.’’ என்றாள்.
மலைகள் இணைய இதழ் மே18, 2012 இதழில் வெளியானது.
தமிழாக்கம் ; ச.ஆறுமுகம், வேலூர்.
வேட்டைக்கத்தி, ஆதி பதிப்பகம், டிசம்பர், 2012 முதல் பதிப்பில் இக்கதையும் சேர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment