Tuesday 12 January 2016

ஸ்பானியச் சிறுகதை (மெக்சிகன்) - அலையுடன் எனது வாழ்க்கை -My Life with Wave by Octavia Paz

அலையுடன் எனது வாழ்க்கை - My life with Wave

ஸ்பானியம்  : ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ) ஆங்கிலம் : எலியட் வீன்பெர்கர் (Eliot Weinberger ) தமிழில் ச. ஆறுமுகம்.

download (31)
(1990ல் இலக்கியத்துக்கான  நோபல் விருது பெற்ற ஆக்டேவியா  பாஸ் மெக்சிகோ நகரில் 31. 03. 1914ல் பிறந்தார். அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். 
மெக்சிகன் அயல்நாட்டுப் பணியில் 1946ல் சேர்ந்த ஆக்டேவியா  பாஸ் 1962 முதல் 1968 வரை இந்தியாவுக்கான மெக்சிகன் தூதராகப் பணியாற்றினார். 1968 கோடைகால ஒலிம்பிக்கின் போது மெக்சிகோ நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை எதிர்த்துத் தன் பணியை இராஜினாமா செய்தார். அதன்பின் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் காம்பிரிட்ஜ், ஹார்வர்டு உள்ளிட்ட பல புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் இலத்தீன் அமெரிக்க இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
அவரது பத்தொன்பதாவது  வயதிலேயே `காட்டுநிலா` என்ற கவிதைத் தொகுதியை 1933ல் வெளியிட்டார். அடுத்த 65 ஆண்டுகளுக்கு எண்ணற்ற கவிதைத் தொகுதிகள், கட்டுரைகள் படைத்தார்.
தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள ` My Life with Wave ` ஒரு சிறுகதை என்ற போதிலும் இதனை உரைநடைக் கவிதை என்றும்  சில திறனாய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர். இப்படைப்பில் ஆக்டேவியா பாஸ் அலையை ஒரு காதலிக்கும் பெண்ணாக உருவகப்படுத்தி, பெண்மையை இயற்கை, பேரன்பு,  மற்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளோடு இணைக்கிறார். கதைசொல்லியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு, சிறையிலடைக்கும் நீதிமன்ற `அதிகாரிகளை`ப் பதிவுசெய்வதன் மூலம் மனித உரிமை மற்றும் அடக்குமுறை  மீதான விசாரணையும் மேற்கொள்கிறார். )
.

நான் அந்தக் கடலை விட்டு மேலேறியபோது, அலைப்பெண்  ஒருத்தி பிறர்  எல்லோரையும்  முந்திக்கொண்டு ஓடிவந்தாள். அவள் உயரமாக, ஆனால் எடை குறைவாக,  மென்மை மிக்கிருந்தாள். அவளது மிதக்கும் ஆடைகளைப் பற்றிக்கொண்டு பலர் ஆரவாரித்தாலும்  அவள் என் கையோடு கோர்த்துத் தொங்கிக்கொண்டு முன்புறமாக எம்பிக் குதித்தாள்.  நான் எதுவும் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை; தோழிகள் மத்தியில் அவள் அவமானப்படுவது எனக்குத் துன்பமாயிருக்குமே! அதுமட்டுமல்ல, அங்கிருந்த பெரியவர்களின் கொள்ளிக் கண்கள் வேறு என்னைக் கட்டுப்படுத்திவிட்டன. நாங்கள் நகருக்குள் வந்த போது, அதுவரையிலும் கடலைவிட்டு வெளியே வந்தேயிருக்காத, அவளது கற்பனையில் விரிந்திருக்கும் நகரவாழ்க்கை இயலாத ஒன்றென்பதை விளக்கமாகச் சொன்னேன். அவள் என்னைக் கடுமையாக நோக்கினாள்: ‘’ உங்கள் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. நீங்கள் அதிலிருந்தும் பின்வாங்க முடியாது.’’ நான் இனிமையாக, கடுமையாக, கேலியாக என எல்லா வகையிலும் முயன்று பார்த்துவிட்டேன். அவளோ, அழுது, அரற்றி, அணைத்துப் பயமுறுத்தினாள். கடைசியில் நான் மன்னிப்பு கோரவேண்டியதாயிற்று.
சிக்கல்கள் அடுத்த நாளிலேயே ஆரம்பமாகின. நடத்துநர், பயணிகள், காவலர்கள் கண்களில் படாமல், நாங்கள் எப்படி ரயிலில்  ஏற முடியும்? அலைகளை ரயிலில் கொண்டுசெல்வது தொடர்பாக, விதிகளில் நிச்சயமாக எதுவும் சொல்லப்படவில்லைதான்; ஆனால், அதுவே எங்கள் நடத்தை எப்படிக் கடுமையானதாகக் கருதப்படுமென்பதற்கான குறிப்புமாக உள்ளதே! நீண்ட யோசனைக்குப் பின் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே நிலையத்துக்குச் சென்று, ரயிலில் எனது இருக்கையில் அமர்ந்து யார் கண்ணிலும் படாமல் பயணிகள் குடிநீர்த் தொட்டியைத் திறந்து காலியாக்கிப் பின் மிகுந்த கவனத்தோடு என் தோழியை அதற்குள் ஒளித்துவைத்தேன்.
முதல் சம்பவம், என்  பக்கத்து இருக்கைத் தம்பதிகளின்  குழந்தைகள் அடங்காத தாகத்தைச்  சத்தமாகத் தெரிவித்ததில்  தொடங்கியது. நான் அவர்களைத் தடுத்து மிட்டாய்கள், லெமனேடுகள் தருவதாக ஆசைகாட்டினேன். அவர்கள் ஒப்புக்கொள்ளும் தருணத்தில், தாகமெடுத்த மற்றொரு பெண் குடிநீர்த்தொட்டியை நோக்கி எழுந்தாள். நான் அவளையும் அழைத்துச் சரிக்கட்ட நினைத்தேன். ஆனால், அவளுடனிருந்த கூட்டாளியின் முறைப்பு என்னைத் தடுத்துவிட்டது. அவள் ஒரு காகிதத் தம்ளரை எடுத்துக்கொண்டு குடிநீர்த் தொட்டிக்குச் சென்று குழாயைத் திருகித் திறந்தாள். என் தோழிக்கும் அந்தப் பெண்ணுக்கும் நடுவில் நான் தாவிப் புகுவதற்குள் அவளது தம்ளரில் பாதி நிறைந்துவிட்டது. அந்தப் பெண் என்னை வியப்புடன் நோக்கினாள். நான் மன்னிக்குமாறு முனகிக் கொண்டிருக்கும்போதே, குழந்தைகளில் ஒன்று குழாயை மறுபடியும் திறந்துவிட்டது. நான் அதை ஆவேசமாகத் திருகி அடைத்தேன். அந்தப் பெண் தம்ளரை இதழ்களுக்குக் கொண்டுசென்றாள்:
‘’ ஆ, இந்தத் தண்ணீர் உப்பாக இருக்கிறது.’’
அந்தப் பையனும்  அதையே தான் எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தார்கள். அந்தக் கணவன் நடத்துநரை அழைத்தான் :
‘’ இந்த மனிதன் தண்ணீரில் உப்பைப் போட்டுவிட்டான்.’’
நடத்துநர், ஆய்வாளரை அழைத்தார்:
‘’ அப்படியானால், நீதான் தண்ணீரில் எதையோ  ஊற்றியிருக்கிறாய்?’’
காவல் ஆய்வாளர், அவர் பங்குக்கு, காப்டனை  அழைத்தார்:
‘’ ஆக, நீதான் குடிநீரை நஞ்சாக்கியவன்?’’
காப்டன் மூன்று ஏஜெண்டுகளை அழைத்தார். பயணிகளின் நெருப்புப்பார்வை மற்றும் ரகசியக் குசுகுசுப்புகளுக்கு மத்தியில், ஏஜெண்டுகள் என்னை ஒரு காலிப்பெட்டிக்கு அழைத்துச் சென்றனர். அடுத்த நிலையத்தில் அவர்கள் என்னை உந்தித் தள்ளிக் கீழே இறக்கிச் சிறைக்கு இழுத்துச் சென்றனர். நீண்ட விசாரணைகள் தவிரப் பல நாட்களாக யாருமே என்னிடம் பேசவில்லை. நான் என்னுடைய கதையை விவரமாகச் சொன்னபோது, ஜெயிலர்கூட நம்பவில்லை. அந்த ஜெயிலர் உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்துச் சொன்னார்: ‘’ இது கொடுங்குற்றம். உண்மையிலேயே கடுமையானது. பாவம், குழந்தைகளைப் போய்க் கொல்லப் பார்த்திருக்கிறாயே?’’.
ஒருவழியாக, ஏதோ  ஒருநாளில் அவர்கள் என்னை  நீதித்துறை நடுவர் முன் நிறுத்தினார்கள். ‘’ உன் வழக்கு ரொம்பக் கஷ்டம்.’’ என  மறுபடியும் மறுபடியும் முனகிய அவர்,    ‘’  உன்னைத் தண்டனை நீதிபதிக்கு அனுப்புகிறேன்.’’ என்றார்.
ஒரு வருடம் கழிந்தது. கடைசியாக அவர்கள் என்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பு கூறினார்கள்.   யாருக்கும் பாதிப்பு இல்லாததால், தண்டனை குறைவாக இருந்தது. ஒரு சில நாட்களிலேயே என் விடுதலை நாள் வந்தது.
சிறைத் தலைவர் என்னை அவரது அறைக்குள்  அழைத்தார்:
‘’ நல்லது. இப்போது நீ விடுதலையாகிவிட்டாய். உனக்கு நல்லகாலம். நல்லகாலமாக இருந்ததால்தான் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால், மறுபடியும் இப்படிச் செய்துவிடாதே. ஏனென்றால், அடுத்த முறை இவ்வளவு குறுகிய தண்டனையாக இருக்காது.’’
எல்லோரும் என்னை  வெறுப்புற்று நோக்கியது  போலவே அவரும் கடுமையாக என்னைப்  பார்த்தார்.
அன்று பிற்பகலிலேயே, நான் ரயிலைப் பிடித்து பல மணி நேரம் எரிச்சல் மிகுந்த  பயணத்துக்குப் பின் மெக்சிகோ நகருக்கு வந்து, ஒரு வாடகைக்  காரில் வீட்டுக்குச் சென்று சேர்ந்தேன். என் அடுக்கக வாயிலில் சிரிப்பும் பாட்டும் கேட்டது. என் இதயத்தில் ஒரு வலியை உணர்ந்தேன். அது எப்படியிருந்தது தெரியுமா? வியப்பு நம்மைக் கடித்து முத்தமிடுகையில் வியப்பலையின் சவுக்கடியொன்று நம் இதயத்தின் குறுக்காக விழுமே அதுபோல இருந்தது: அங்கே என் தோழி, எப்போதும்போலப் பாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தாள்.
‘’ எப்படித் திரும்பவும் இங்கே வந்தாய்?’’
‘’ மிக எளிதாக: ரயிலில். நான் வெறும் உப்புத் தண்ணீர் தானென்று தெரிந்ததும் யாரோ ஒருவர் என்னைத் தூக்கி இஞ்சினுக்குள் ஊற்றினார். அது உயிரைக் கொல்கிற ஒரு பயணம்: ‘’மிகச் சீக்கிரத்திலேயே நான் வெண்ணிற ஆவியாகினாலும், கண்மூடித் திறப்பதற்குள் ஒரு அழகிய மழையில்  இஞ்சின் மேலாகவே விழுந்தேன். நான் மிகவும் மெலிந்துதான் போனேன். எண்ணற்ற துளிகளை இழந்துவிட்டேன்.’’
அவளின் பொலிவு, என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.  இருண்ட மூலைகளும் தூசு படிந்த நாற்காலி மேஜைகளுமான என் வீடு வெளிச்சமும் காற்றும் நிறைந்து தழுவல் ஒலிகளும் மரகதப் பச்சை மற்றும் நீலப் பிரதிபலிப்புகளும் எண்ணற்ற மகிழ்ச்சி தளும்பும் எதிரொளிப்புகளும் எதிரொலிகளும் நிறைந்தது.  ஒரு அலைக்குள் தான் எத்தனை அலைகள்! அந்த அலை ஒரு கடற்கரையை, அல்லது ஒரு பாறையை, அல்லது கடலுக்குள் நீளும் அணைக்கரையை, அல்லது ஒரு மார்பினை, ஒரு நெற்றியை எப்படியாக நுரைக் கிரீடம் சூட்டி ஜ்வலிக்கச் செய்துவிடுகிறது! கவனிப்பாரற்ற மூலைகள், தூசும் தும்பும் குப்பையும் நிறைந்த முழுமோசமான மூலைகளையுங்கூட அவளின் மென்கரங்கள் தீண்டின. எல்லாமே சிரிக்கத் தொடங்கின; எல்லா இடங்களிலும் வெண்பற்கள் ஒளிர்ந்தன. எனது பழைய அறைகளுக்குள் மகிழ்ச்சியோடு நுழைந்த வெயில், இதர வீடுகளை, மாவட்டத்தை, நகரத்தை ஏன் தேசத்தையே விட்டுவிட்டு என் வீட்டுக்குள்ளேயே மணிக்கணக்காகத் தங்கிவிட்டது. அது மட்டுமல்ல, சிலநாட்களில், ஒலியடங்கும் கடிய பின்னிரவுகளில், வெட்கங்கெட்ட விண்மீன்கள் கூரை இடுக்குகள் வழியே என் வீட்டுக்குள் கண் நுழைத்தன.
காதல், அது எப்போதும்  ஊற்றெடுக்கும் ஒரு படைப்பு  விளையாட்டாகவே இருந்தது.   எல்லாமே கடற்கரையாக, பொன்மணற் பரப்பாக,  மென்விரிப்புகளின் படுக்கையாகப்  புத்தம் புதிதாகின. நான் அவளைத் தழுவியணைத்தபோது, அவள் பெருமையில் பூரித்து, மென்தண்டுப் பாப்லாராக நம்பமுடியாத அளவுக்கு  உயரமானாள். உடனேயே அவளின் மென்மை, வெண்ணிறத் தூவிகள் பொழியும் நீரூற்றாகப் பொங்கிப் பூத்துப் புன்னகைத் துகள்களாகி, அதன் வெண்மை என் தலை உச்சியிலிருந்து உடல் முழுதும் பரந்து வழிந்து, என்னையே மூடி மறைத்தது. அல்லது அவள் என் முன்பாகவே தொடுவானம் போல முடிவற்றுப் பரந்து நீண்டு, நானும் ஒரு தொடுவானமாக மாறி அசைவற்று அமைதியாகும்வரையில் விரிந்தாள். அது, இசை அல்லது ஏதோ சில மாபெரும் இதழ்களின் வளைவு நெளிவுகள் கவிந்து என்னை முழுமையாக மூடியதாக இருந்தது. அவளது அணுக்கம், வந்து வந்து நனைக்கும் தழுவல்களாக, முனகல்களாக, முத்தங்களாக இருந்தது. அவளின் ஆழங்களுக்குள் அமிழ்ந்ததும் என் காலுறைகள் ஈரம்சொட்டுமளவுக்கு வியர்த்துவிட்டேன்; ஆனால், கண்மூடித்திறப்பதற்குள், நான் மீண்டும் மேற்பரப்பில், கிறுகிறுப்பின் உச்சத்தில், அந்தரத்தில் தொங்கும் கல்லைப் போலக் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன். என்றாலும் நான் ஈரமேயற்ற மென்பரப்பினுள் சுகமாகப் புதைந்திருக்கும் ஒரு இறகு போல உணர்ந்தேன். அந்த ஆழங்களுக்குள் உறங்குவதற்கு, சிரிப்பின் ஒலியை  உறிஞ்சிக்கொள்ளும் ஆயிரமாயிரம் தாக்குதல்களில், ஆயிரமாயிரம் இன்பக் கசையடிகளின் தாக்குதலில் விழிப்பதற்கு, ஈடு இணை எதுவுமில்லை.
ஆனால், அவளின் நடு ஆழத்தை, மையத்தை நான் ஒரு போதும் அடைந்ததில்லை. வலியின் வேதனையை, மரணத்தின் நிர்வாணத்தை நான் தொட்டதேயில்லை.  மனித இனந்தானெனப் பெண்மையை அடையாளப்படுத்துகிற, தொட்டதும் துடித்துப் போகிற, அந்த இரகசியப் புலம், அனைத்து உள் மதகுகளும் அசைச் சுழிப்புகளும்,  பின்னர் பெருமயக்கத்தில் ஆழ்த்தும் விரைப்பு நீட்சியும் பிணைக்கப்பட்டுள்ள அந்த மின் குமிழ்ப் பொத்தான், அலைகளுக்குள், ஒருவேளை,  இல்லாமலிருக்கலாம். அவளின்  உணர்வுமையம், எல்லாப் பெண்களையும் போலவே சிறுவட்ட அலைகளாக, என்ன, அவை பொதுமைய வட்டங்களாக இல்லாமல் பிறழ் மையங்கொண்டவையாகப் பரந்தது. ஒவ்வொருமுறையும் அது இன்னும் அகன்று பிற பால்வெளிகளைத் தொடும் வரையில் விரிவதாக இருந்தது. அவளைக் காதலிப்பது   வாய்ப்பேயில்லாத தொடுகைகளுக்கும் நீட்சியுற்று, நாம் எதிர்பார்த்தேயிராத நெடுந்தொலை விண்மீன்களுடன் அதிர்வதாக இருந்தது. ஆனால், அவளது மையம் … இல்லை, அவளுக்கு மையமென்ற ஒன்று இல்லை, சுழற்காற்றுப் போல வெற்றிடமே கொண்ட அது என்னை உள்ளிழுத்து மூச்சுத் திணற வைத்தது.
அருகருகாக நீட்டிப்பற்றிக்  கட்டிப்பிடித்து, நாங்கள்  ரகசிய முணுமுணுப்புகளை, புன்னகைகளை, நம்பிக்கைகளைப் பரிமாறிக்கொண்டோம். அவள் என் மார்பில் சுருண்டு விழுந்து, பின் முணுமுணுப்புகளின் பசுமையென விரிந்தாள். அவள் ஒரு சிப்பியாகச் சிறு நத்தைக்கூடாக என் காதுகளில் பாடல்களை இசைத்தாள். அவள் என் பாதங்களைக் கட்டிக்கொள்ளும் ஒரு சிற்றுயிராக, ஒளிவு மறைவற்று அனைத்தையும் தெளியக்காட்டும் சலனமற்ற தடாகமாக மாறிப் பணிந்து கிடந்தாள். அவளின் சிந்தனைகள் அனைத்தையும் நான், பார்வையிலேயே  தெரிந்துகொள்ளும் வகையில் அவ்வளவு தெள்ளத்தெளிந்திருந்தாள். சில குறிப்பிட்ட இரவுகளில் அவள் மேனி முழுதும் ஒளிப்புள்ளிகள் மினுங்க, அவளைத் தழுவுவதோ அக்னியைப் பச்சை குத்திய ஒரு துண்டு இரவினைத் தழுவுவதாக இருந்தது. அவளும் மேனி கறுத்துக் கசப்பாக மாறினாள். எதிர்பார்க்காத நேரங்களில் அவள் கர்ச்சித்து, முனகி, நெளிந்தாள். அவளின் வேதனைக் குரல் பக்கத்து வீட்டுக்காரர்களை எழுப்பியது. அவளது குரல் கேட்ட கடற்காற்று என் வீட்டின் வாசற்கதவைப் பிராண்டி, வீட்டுக் கூரை மீது கொந்தளித்துக் கூச்சலிட்டது. கருமேகங்கள் சூழ்ந்த நாட்கள் அவளின் எரிச்சலைக் கிளப்பின. அவள் பாத்திர பண்டங்களை உடைத்து, மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினாள். என்னை அவமானங்களாலும் பச்சை மற்றும் கரிய நுரைகளாலும் மூழ்கடித்தாள். அவள் அழுது அரற்றி, உமிழ்ந்து, தீது நடக்குமென மொழிந்து சாபமிட்டாள். நிலவு, விண்மீன்கள், கோள்கள், வேற்றுலக  ஒளிக் கிரணங்களின் பாதிப்பில் அவள் மனப்போக்கு மாறுவதாக, அவளது தோற்றத்தில் அற்புத அழகு உருவாகுவதாக நான் நினைக்க, அதுவோ பேரலையைப் போல் ஆபத்து விளைப்பதாக இருந்தது.
அவள் தனிமையைத்  தவிர்க்க ஏங்கித் தவித்தாள். வீடு முழுவதும் நத்தைகளும் சிப்பிகளும் சங்குகளும், அவள் கோபத்தில் மூழ்கடித்த சிறு துடுப்புப் படகுகளும் (என் தலைக்குள்ளிருந்து வெளிவந்த பிம்பங்களின் சுமையேற்றப்பட்டு, அவளது சீற்றத்தில் அல்லது பெருமகிழ்ச்சிச் சுழற்காற்றுகளால் மூழ்கடிக்கப்பட்டனவும், பிறவும்  சேர்ந்து) நிறைந்தன. அந்த நேரங்களில் தாம் எத்தனையெத்தனை சிறு மணிக்குவியல்கள் காணாமற் போயின!  ஆனால், எனது படகுகளும் நத்தைகளின் மவுனப் பாடல்களும் அவளுக்குப் போதுமானவையாக இல்லை. அதனால், நான் வீட்டுக்குள்ளேயே ஒரு மீன் கூட்டத்தைப் பராமரிக்கவேண்டியதாயிற்று. அந்த மீன்கள் என் தோழிக்குள் நீச்சலடித்து அவள் மார்பகங்களை வருடி, அவள் கால்களுக்கிடையே உறங்கி, வண்ணங்களின் மினுமினுப்பால் அவளது கூந்தலை அழகுபடுத்தியதை நான் பொறாமைக் கண்கொண்டுதான் நோக்கினேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அந்த மீன்களில்  குறிப்பான ஒருசில, எதிர்ப்பும்  மூர்க்கமும் நிறைந்தனவாக, நிலைகுத்தும் பெரிய கண்களும் இரத்த தாகமுள்ள கோரமான வாயும் கொண்டு மீன்கூட்டத்தின்  சிறு புலிகளாக இருந்தன. என்  தோழிக்கு என்ன பிறழ்வோ தெரியவில்லை, நான் அலட்சியப்படுத்த விரும்பிய  அந்தக் கோரமீன்களுக்கு, வெட்கமற்று முதனிலை வழங்கிய அவள் அவற்றோடு விளையாடுவதில் மகிழ்ச்சியும்  கொண்டாள். அந்தப் பயங்கரப் பிறவிகளோடு அவள் நெடுநேரங்களைச் செலவிட்டாள். அதை எவ்வளவு நாட்கள்தாம் பொறுத்துக் கொள்வது!  ஒருநாள் கதவைத் திறந்துகொண்டு அவற்றின் மீது பாய்ந்தேன். அவை துடித்து, என் கைகளிலிருந்தும் அசுர வேகத்தில் வழுக்கிக்கொண்டோடின. அவள் சிரித்து, நான் அரை மூர்ச்சையில் வீழும் வரை என்னைத் தாக்கினாள். நான் மூழ்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். நான் நீலம்பாய்ந்து, மரணிக்கும் தருவாயில் அவள் என்னைக் கரையில்  வீசியெறிந்து கிடத்தி, உனக்கு எதுவுமே புரியவில்லையென்று சொல்லிக்கொண்டே என்னை முத்தமிடத் தொடங்கினாள். நான் மிகவும் சோர்வாக, சக்தியனைத்தும் இழந்துவிட்டதாக, மீண்டெழமுடியாத அவமானத்துக்குள்ளானதாகவும்  உணர்ந்த அதே நேரத்தில் அவளின் ஆலிங்கனக் களியாட்டம் என் இமைகளை மூடச் செய்தது. அவளது குரல் அப்படியானதொரு இனிமை பாய்ந்ததாக இருந்தது. அவள் என்னிடம் நீரில் மூழ்கியவர்களின் இனிமையான மரணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். மெல்லத் தன்னுணர்வுக்குத் திரும்பியதும் நான் மிகவும் பயந்து போனேன்; அவளை வெறுக்கத் தொடங்கினேன்.
என் சொந்த விஷயங்கள்  அனைத்தையும் அப்படிக்கப்படியே விட்டுவிட்டிருந்தேன்.   இப்போது எனது நண்பர்களைச் சென்று பார்க்கத் தொடங்கிப் பழைய மற்றும் மனத்துக்கினிய உறவுகளைப் புதுப்பிக்கத் தொடங்கினேன். என்னுடைய நீண்டநாள் பெண்தோழி ஒருத்தியைச் சந்தித்தேன். ரகசியத்தைப் பாதுகாப்பதாகச் சத்தியம் வாங்கிக்கொண்டு அவளிடம் அலையுடனான என் வாழ்க்கையைப் பற்றிக் கூறினேன், ஆபத்திலிருந்து ஒரு ஆணை மீட்கும் வாய்ப்பைவிட வேறெதுவும் பெண்களை அவ்வளவாக ஈர்த்துவிடுவதில்லை. என் மீட்பர் அவளது திறமையை முழுமையாகப் பயன்படுத்தினாளென்ற போதிலும், குறிப்பிட்ட ஒருசில ஆன்மாக்கள் மற்றும் உடல்களுக்கு மட்டுமே அதிபதியான ஒரு பெண்ணால், எப்போதுமே தன்னை மாற்றிக்கொள்ளும் – இடைவிடாத உருமாற்றங்களுக்குள்ளாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் என் தோழியின் முன்னால் என்ன செய்துவிடமுடியும்!
குளிர்காலம் வந்தது. வானம் சாம்பல் நிறத்துக்கு மாறியது. நகரத்தை மூடுபனி கவ்வியது. பனித்துளிகள் உறைந்து இடைவிடாத் தூறலாக வீழ்ந்தன. என் தோழி ஒவ்வொரு இரவும் அழுதாள். பகலில், அவள் தனிமைப்பட்டு, மூலையில் முடங்கி முனகும் ஒரு வயதான கிழவியைப் போல, ஒற்றைச் சொல்லைத் திக்கித்திக்கி முணுமுணுத்து அமைதியாகப் படுத்திருக்கும் தீய வஞ்சனையெனக்  கிடந்தாள். அவள் குளிர்ந்து போனாள். அவளோடு படுத்துறங்குவதோ இரவு முழுதும் நடுங்குவதாக, உதிரம், எலும்பு பின்னர் சிந்தனை என எல்லாமே மெல்ல மெல்ல உறைந்து போவதாக இருந்தது. அவள் அமைதியற்றவளாக, ஆழம் மிக்கவளாக, துளைக்க முடியாதவளாக மாறிப்போனாள். நான் அடிக்கடி அவளைத் தனிமையில் விட்டுவிட்டு வெளியேறினேன். நான் வீட்டுக்குத் திரும்பும் நேரம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து நீண்டது. அவள் அவளுடைய மூலையில் சத்தமாக ஊளையிட்டு அவளின் எஃகுப் பற்கள் மற்றும் துருப்பிடித்த நாக்கால் சுவர்களைப் பிராண்டிக் கரம்பினாள். அவள் இரவுகளைத் துயரப் புலம்பலிலும் , என்னைக் குறைசொல்லித் திட்டுவதிலுமாகக் கடத்தினாள். வெப்பம் மிகுந்த கடற்கரைகளின் வெயில் மற்றும் வெப்பத்தாக்கலில் உணர்விழப்பெனத் திகில் கனவுகள் கண்டாள். அவள் துருவப் பகுதியில் ஒரு மாபெரும் பனித்திட்டாக மாறி, மாதங்கள் அளவுக்கு நீண்ட இரவுகளில் வானத்தில் கறுத்த மேகங்களின் கீழ் மிதந்து செல்வதாகவும் கனவு கண்டாள். அவள் என்னை அவமதித்துத் திட்டிச் சாபமிட்டாள்; பின்னர் சிரித்தாள். வீடு முழுவதையும் ஆவியாலும் பயங்கரச் சிரிப்பாலும் நிரப்பினாள். அவள் கண்மண் தெரியாத, எதையும் சிந்திக்காத, புயல்வேக ஆழங்களின் அரக்கர்களை நினைவு கொண்டு பெயர் சொல்லிப் புலம்பினாள். அவளுக்குள் மின்சாரம் பாய, தொட்ட எல்லாவற்றையும் தீய்த்துக் கருக்கினாள். அமிலமாகி அவளை உரசிய எல்லாவற்றையும் கரைத்து உள்ளிழுத்தாள். அவளது இனிய தழுவல்கள் சுருக்குக் கயிறுகளாகி என் கழுத்தை இறுக்கின. அவளது உடல் பச்சைநிற ரப்பராக மீண்டும் மீண்டுமாக விளாசுகிற இரக்கமற்ற சாட்டையானது. நான் தப்பி ஓடினேன். அந்தப் பயங்கரமான மீன்கள் அவற்றின் கோரப் புன்னகையுடன் சிரித்தன.
மலைகளில், உயரமான பைன் மற்றும் செங்குத்துப் பாறைகளின் நடுவில் விடுதலைச்  சிந்தனை போன்ற குளிர்ந்த  மென்காற்றைச் சுவாசித்தேன். அந்த மாதத்தின் முடிவில், நான் திரும்பி வந்தேன். ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். புகைபோக்கியின் பளிங்குக்கல்லையும் மீறிப் பரந்திருந்த கடுமையான குளிரில் அவிந்துபோன கணப்பின் அருகில் பனிச் சிற்பம் ஒன்று கிடப்பதைக் கண்டேன். அவளின் சோர்வுற்ற அழகினைக் கண்டு நானொன்றும் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. கித்தான் கோணி ஒன்றுக்குள் அவளைப் போட்டுக் கட்டி, தூங்கும் அவளைத் தோளில் சுமந்து தெருக்களைக் கடந்தேன். புறநகர் விடுதி ஒன்றில் பணிபுரிந்த மேசைப்பணியாளான என் நண்பனிடம் விற்றுவிட்டேன். அவன் உடனடியாக அவளைச் சிதைக்கத் தொடங்கினான்; சிறுசிறு துண்டுகளாக்கிப் புட்டிகளைக் குளிரவைக்கும் வாளிக்குள் கவனமாக அடுக்கினான்.
•••


மலைகள் இணைய இதழ், இதழ் 43, பிப்ரவரி 02, 2014 இல் வெளியானது.

No comments:

Post a Comment