Tuesday 5 January 2016

ஸ்பானியச் சிறுகதை - செவ்வாய்க்கிழமை நண்பகல் தூக்கம் - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (கொலம்பியா)

செவ்வாய்க்கிழமை நண்பகல் தூக்கம் / ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (கொலம்பியா) / ஆங்கிலம் : கிரிகோரி ரபாசா மற்றும் ஜே. எஸ். பெர்ன் ஸ்டீய்ன் / தமிழில் ச. ஆறுமுகம்

download (25)



மணற்பாறைகள் அதிர, குகைப்பாதைக்குள்ளிருந்து வெளிப்பட்ட தொடர்வண்டி ஒரேமாதிரியான, முடிவற்ற வாழைத்தோட்டங்களைக் கடக்கத் தொடங்கியது. காற்று ஈரப்பதம் மிக்கதாகியது. அவர்களால் கடற்காற்றினை மேற்கொண்டும் அனுபவிக்க முடியாது. மூச்சுத் திணறடிக்கும் புகைச்சுருளொன்று ஜன்னல் வழியாகப் பெட்டிக்குள் நுழைந்தது. தொடர்வண்டிப்பாதைக்கு இணையான சாலையில் பச்சைநிற வாழைக் குலைகள் ஏற்றிய மாட்டு வண்டிகள் வரிசையாகச் சென்றன. சாலைக்கு அந்தப் பக்கமாக சாகுபடியற்ற இடங்களில் அங்கும் இங்குமாக இடைவெளி விட்டு,விட்டு சிவப்புச் செங்கல் கட்டிடங்கள், மின்விசிறிகள் சுழலும் அலுவலகங்கள் மற்றும் திறந்த மாடிகளில் சிறுவெண்மேசைகளும் நாற்காலிகளுடனுமான குடியிருப்புகள், தூசுபடிந்த பனை, தென்னை வகை ஒற்றைத்தடி மரங்கள் மற்றும் ரோஜாப் புதர்கள் சூழத் தெரிந்தன. அப்போது, வெக்கை இன்னும் தொடங்காத முற்பகல் பதினொரு மணியாக இருந்தது.
‘’ஜன்னலைச் சாத்திவிடு, அதுதான் நல்லது.’’ என்ற அந்தப் பெண், ‘’ தலை முழுவதுமாகப் புகைக்கரி படிந்துவிடும்.’’ என்றும் சொன்னார். அந்தச் சிறுமி முயற்சித்தாளானாலும் துருப்பிடித்திருந்த ஜன்னல் கதவு அசைய மறுத்தது.
தனித்திருந்த அந்த ஒரே மூன்றாம் வகுப்புப் பெட்டியில் அவர்கள் மட்டுமே பயணிகளாக இருந்தனர். என்ஜின் புகை ஜன்னல் வழியாக வந்து கொண்டேயிருந்தது. அந்தச் சிறுமி எழுந்து அவர்கள் சாப்பிடுவதற்காகக் கொண்டுவந்திருந்த ஏதோ சில உணவுகள் அடங்கிய ஒரே நெகிழிக் கித்தான்பையையும் செய்தித்தாளில் சுருட்டியிருந்த பூங்கொத்தினையும் கீழே வைத்தாள். எதிர் இருக்கையில் அவளின் அம்மாவைப் பார்த்தமாதிரி அமர்ந்தாள். அவர்கள் இருவரும் நாட்பட்டு, வெளிறிப்போன துக்க ஆடைகளிலிருந்தனர்.
அந்தச் சிறுமிக்குப் பன்னிரண்டு வயது. அவள் முதன்முதலாக அப்போதுதான் தொடர்வண்டியில் பயணிக்கிறாள். அந்தப் பெண், அவளது அம்மா தானென்றாலும் நீல நரம்புகள் புடைத்துத் தெரியும் கண் இமைகளும் நீண்ட அங்கி போலத் தைக்கப்பட்டிருந்த ஆடைக்குள் சிறுத்து மெலிந்து, உருவிழந்த உடலுமாக, மிகவும் முதியவளாகத் தோன்றினாள். இருக்கையின் சாய்மானப் பலகையோடு, தண்டுவடம் பொருந்துமாறு விறைப்பாக, நிமிர்ந்து அமர்ந்து, பயணித்துக்கொண்டிருந்த அவள், மேற்புறம் உரிந்துகொண்டிருந்த, பெண்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட தோற் கைப்பையை மடியில் வைத்து இருகைகளாலும் பற்றிக்கொண்டிருந்தாள். வறுமை பழகிப்போய், அதை ஏற்றுக்கொண்டவரிடம் காணப்படும் மன அமைதி அந்தப்பெண்ணின் முகத்திலுமிருந்தது.
பன்னிரண்டு மணிக்கு வெக்கை தொடங்கியது. ஊர் என்று எதுவுமில்லாத ஒரு நிலையத்தில், தொடர்வண்டி, தண்ணீர் நிரப்பிக்கொள்வதற்காகப் பத்து நிமிடம் நின்றது. வெளியே, மர்மங்கள் நிறைந்ததாகக் காணப்படும் அமைதியான வாழைத் தோட்டங்களுக்குள் நிழல்கள் தெளிவாகத் தெரிந்தன. ஆனால், பெட்டிக்குள்ளிருந்த அசைவற்ற காற்று, பதனிடப்படாத தோலைப் போல நாற்றம் வீசியது. தொடர்வண்டி வேகமெடுக்கவில்லை. பிரகாசமான வண்ணங்கள் தீட்டப்பட்ட மர இல்லங்களுடன் ஒரேமாதிரியான தோற்றங் கொண்ட இரண்டு நகரங்களில் அது நின்று புறப்பட்டது. அந்தப்பெண்ணின் தலை ஆட்டம் கண்டது. அவள் தூக்கத்தில் ஆழ்ந்துபோனாள். சிறுமி அவளுடைய அரணக்காலணிகளைக் கழற்றிவிட்டுப் பூங்கொத்தில் தண்ணீர் தெளிப்பதற்காகக் குளியலறைக்குச் சென்றாள்.
அவள் இருக்கைக்குத் திரும்பிவந்தபோது, அம்மா சாப்பிடுவதற்காகக் காத்திருந்தாள். அம்மா, சிறுமிக்கு ஒரு துண்டு பாலாடைக்கட்டி, மக்காச்சோள அடை ஒன்றில் பாதி மற்றும் ஒரு இனிப்பு அப்பம் கொடுத்தாள். பின்னர், தனக்காகவும் அதே மாதிரியான அளவுக்கு, அந்த நெகிழிப்பையிலிருந்து எடுத்துக்கொண்டாள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தொடர் வண்டி, இரும்புப் பாலம் ஒன்றை மெதுவாகக் கடந்து, அங்காடி முற்றத்தில் கூட்டம் இருந்ததைத் தவிர, ஏற்கெனவே கடந்த ஊர்களைப் போன்றேயிருந்த ஒரு நகரத்தைக் கடந்தது. பாண்டு வாத்தியக்குழு ஒன்று, சுட்டெரிக்கும் வெயிலில் இனிய இராகம் ஒன்றினை இசைத்துக்கொண்டிருந்தது. நகரத்தின் மறுபக்கத்தில் வாழைத்தோட்டங்கள் வறட்சியில் வெடித்துக் கிடந்த ஒரு நிலவெளியோடு முடிந்தன.
அந்தப் பெண் சாப்பிடுவதை நிறுத்தினாள்.
‘’ பாதணிகளை அணிந்துகொள்.’’ என்றாள்.
சிறுமி வெளிப்பக்கம் பார்த்தாள். வறண்ட பாழ்நிலத்தைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. தொடர்வண்டி மீண்டும் வேகமெடுத்தது. அவள் இனிப்பு அப்பத்தின் கடைசித் துண்டினை நெகிழிப்பைக்குள் போட்டுவிட்டு, அரணக் காலணிகளை விரைவாக அணிந்துகொண்டாள். அவளிடம் அம்மா, சீப்பு ஒன்றினைக் கொடுத்து, ‘’தலையை வாரிக்கொள்.’’ என்றாள்.
சிறுமி தலைவாரிக்கொண்டிருந்தபோது தொடர்வண்டியின் ஊதல் ஒலிக்கத் தொடங்கியது. அந்தப் பெண் அவளது கழுத்தில் துளிர்த்திருந்த வியர்வை மற்றும் முகத்திலிருந்த எண்ணெய்ப் பிசுக்கினை அவளது உள்ளங்கை விரல்களாலேயே துடைத்துக்கொண்டாள். சிறுமி தலைவாரி முடிக்கையில், தொடர்வண்டி ஏற்கெனவே கடந்த நகரங்களைவிடப் பெரியதாக, ஆனால் சோகமாகத் தோன்றிய நகரம் ஒன்றின் புறநகர் வீடுகளைக் கடந்துகொண்டிருந்தது.
‘’ எதாவது செய்யவேண்டும் போலத் தோன்றினால், இப்போதே செய்துகொள்.’’ என்ற அந்தப் பெண், ‘’ பிறகு, உயிர் போகும் தாகமென்றாலும், ஒரு சொட்டுகூட எங்கேயும் குடிக்கக்கூடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அழவேகூடாது.’’ எனக் கண்டிப்புடன் சொன்னாள்.
சிறுமி சரியெனத் தலையாட்டிக்கொண்டாள். எரிக்கும் வறண்ட காற்று பழைய பெட்டிகள் தடதடக்கும் ஒலியோடு, என்ஜின் எழுப்பிய ஊதல் ஒலியையும் சேர்த்து ஜன்னலுக்கு இழுத்துக்கொண்டு வந்தது. அந்தப் பெண் மீதி உணவை நெகிழிப்பைக்குள் போட்டு மூடி, கைப்பைக்குள் திணித்தாள். அந்தப் பிரகாசமான ஆகஸ்டு மாதச் செவ்வாய்க்கிழமையில் அந்த நகரத்தின் முழு வடிவமும் ஜன்னலில் ஒரு கணம், காட்சியாகி ஒளிர்ந்தது. ஊறி நனைந்த செய்தித்தாளில், சிறுமி, பூக்களைச் சுற்றிக்கொண்டு, ஜன்னலிலிருந்தும் சிறிது நகர்ந்து அம்மாவின் முகத்தை முனைப்புடன் நோக்கினாள். அதற்குப் பிரதியாக, கனிவும் பாராட்டுமான ஒரு பார்வையைப் பெற்றாள். ஊதலை ஒலிக்கத் தொடங்கிய தொடர்வண்டி வேகத்தைக் குறைத்தது. சிறிது நேரத்திலேயே நிற்கவும் செய்தது.
நிலையத்தில் யாருமே இல்லை. தெருவின் மறுபக்கத்தில் வாதுமை மரங்களின் நிழல் செறிந்த நடைமேடைக்கப்பால் மேசைக்கோல் பந்து விளையாட்டுக் கூடம் மட்டுமே திறந்திருந்தது. நகரம் வெம்மையில் மிதந்து கொண்டிருந்தது. பெண்ணும் சிறுமியும் தொடர்வண்டியிலிருந்து இறங்கி, வெறிச்சோடிக்கிடந்த நிலையத்தை, தரை ஓடுகளினூடே வளர்ந்திருந்த புற்களாலேயே கட்டம், கட்டமாகப் பிரிந்துதெரிந்த தளத்தைக் குறுக்காகக் கடந்து தெருவின் நிழலான பகுதியில் நடந்தனர்.
அப்போது மணி அநேகமாக இரண்டு ஆகியிருந்தது. அந்த நேரத்தில் உண்ட மயக்கத்தில் ஆழ்ந்த நகரம் மதியத் தூக்கத்திலிருந்தது. விற்பனையகங்கள், நகர அலுவலகங்கள், அரசுப் பள்ளிகள் எல்லாம் பதினோரு மணிக்கே மூடப்பட்டுவிட்டன. நான்கு மணிக்குச் சிறிது முன்பாக, தொடர்வண்டி திரும்பிச் செல்லும் வரையிலும் அவை மூடியேயிருக்கும். நிலையத்தின் எதிர்பக்கத்தில், அருந்தகமும் கேளிக்கைக்கூடமும் இணைந்த ஒரு உணவகமும் அங்காடி முற்றத்தின் ஒருபக்கத்திலிருந்த தந்தி அலுவலகமும் மட்டுமே திறந்திருந்தன. அநேக வீடுகள் வாழைத்தோட்ட நிறுவனத்தின் அமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தாலும், எல்லா வீடுகளின் கதவுகளும் உட்பக்கமாகத் தாழிடப்பட்டு, மறைப்புத் திரைகளும் இறக்கிவிடப்பட்டிருந்தன. சில வீடுகளில் ஆட்கள் முற்றத்தில் அமர்ந்து மதிய உணவினைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்த வீடுகளினுள்ளே அவ்வளவு வெக்கை. சிலர் வாதுமை மர நிழலில் நாற்காலிகளைச் சுவரோடு சேர்த்துப் போட்டு, தெருவிலேயே நண்பகல் தூக்கத்திலிருந்தனர்.
வாதுமை மரங்களின் பாதுகாப்பான நிழலிலேயே நடந்து, நகரத்தின் நண்பகல் தூக்கத்தைச் சிறிதும் கலைத்துவிடாமல் அந்தப் பெண்ணும் சிறுமியும் நகருக்குள் நுழைந்தனர். அவர்கள் நேராக திருச்சபை இல்லத்துக்குச் சென்றார்கள். முன்வாசற்கதவின் கம்பி வலையில் அந்தப்பெண், தன் கைவிரல் நகத்தால் பிராண்டி, ஒரு கணம் காத்திருந்து, மீண்டும் பிராண்டினாள். உள்ளே ஒரு மின்விசிறி சீராக இரைந்துகொண்டிருந்தது. காலடிச் சப்தம் எதுவும் கேட்கவில்லை. வாசல் கதவின் மெதுவான அசைவொலியை அவர்கள் மிகமிக மெலிதாகக் கேட்ட நேரத்திலேயே கம்பிவலையை அடுத்து மிகமிக அருகிலேயே, ‘’ யார் அது?’’ என்ற எச்சரிக்கை மிகுந்த குரலொன்று கேட்டது. அந்தப் பெண் கம்பி வலைக்குள்ளாகப் பார்க்க முயற்சித்தாள்.
‘’ மதகுரு வேண்டும்.’’ என்றாள், அவள்.
‘’ அவர் இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறார்.
‘’ அவசரம்,’’ என அந்தப் பெண் அழுத்தமாகக் கூறினாள். அவளது குரல் சிறிதும் அசைவில்லாத ஒரு உறுதியைக் காட்டியது.
எந்தச் சப்தமும் இல்லாமல் கதவைச் சிறிதாகத் திறந்து, இரும்புநிறத் தலைமுடியும் மிக வெளிறிய தோலுமாகத் தெரிந்த, அளவுக்கு மீறிப் பருத்த ஒரு வயதான பெண் தோன்றினாள். தடித்த கண்ணாடிக்குள் அவளது கண்கள் மிகச் சிறியனவாகத் தெரிந்தன.
‘’ உள்ளே வாருங்கள்,’’ என்ற அந்தப் பெண் கதவினை முழுவதுமாகத் திறந்தார்.
மலர்களின் பழைய வாசனை நிலைத்திருந்த ஒரு அறைக்குள் அவர்கள் நுழைந்தனர். அந்த வீட்டின் பெண் அவர்களை ஒரு மரபெஞ்சுக்கு அழைத்துச் சென்று, அதில் அமருமாறு கைகாட்டினார். சிறுமி அப்படியே அமர்ந்தாள். ஆனால், அவளது அம்மா, கைப்பையை இருகைகளாலும் பற்றியவாறு, சிந்தனை இழந்தவளாக, நின்றுகொண்டேயிருந்தாள். மின்விசிறியின் ஓசையை மீறி எந்தச் சப்தமும் கேட்டுவிடவில்லை.
அறைக்கோடியிலிருந்த வாசலில் அந்த வீட்டுப் பெண், மறுபடியும் தோன்றித் தாழ்ந்த குரலில், ‘’மூன்று மணிக்குப் பிறகு வருமாறு அவர் சொல்கிறார்.’’ என்றாள். ‘’ அவர் இப்போதுதான், ஐந்து நிமிடத்துக்கு முன்புதான் படுத்தார்.’’ என்று விளக்கமும் அளித்தாள்.
‘’ தொடர்வண்டி மூன்று முப்பதுக்குக் கிளம்புகிறது.’’ என்றாள், அந்தப் பெண்.
அது ஒரு சுருக்கமான, தன்னம்பிக்கை மிக்க பதில். ஆனாலும் அவளது குரல் கனிவாக, தாழ்ந்த தொனியிலேயே இருந்தது. அந்த வீட்டுப்பெண் முதல் முறையாகப் புன்னகைத்தாள்.
‘’அப்படியானால் சரி,’’ என்றாள்.
அந்த அறைக்கோடிக் கதவு மீண்டும் மூடப்பட்டபோது, அந்தப்பெண் அவளது மகள் அருகில் அவளை ஒட்டி அமர்ந்திருந்தாள். ஒடுக்கமான அந்தக் காத்திருப்பு அறை, போதாத ஒன்றானாலும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அந்த அறையை இரண்டாகப் பிரித்த மரத்தடுப்புக்கு மறுபுறம் நீர் ஒட்டாத விரிப்புடனான அலுவல் மேஜை ஒன்றும் அதன் மீது பூங்கொத்துக் கிண்ணமும் அதையடுத்து மிகப் பழங்காலத் தட்டச்சுப்பொறி ஒன்றும் இருந்தன. அதற்கும் அப்பால் திருச்சபை ஆவணங்கள் இருந்தன. அந்த அலுவலகம், திருமணமாகாத ஒரு பெண்ணால் முறையாகப் பராமரிக்கப்படுவதென்பதை யாரும் தெரிந்துகொள்ள முடியும்.
அறைக்கோடிக்கதவு திறந்தது. இம்முறை, கண்ணாடியைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே மதகுரு தோன்றினார். அவர், முதலில் கதவைத்திறந்த பெண்ணின் சகோதரர்தான் என்பது, அவர், அந்தக் கண்ணாடியை அணிந்த பிறகே, தெரிந்தது.
‘’ நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?’’ எனக்கேட்டார், அவர்.
‘’ இடுகாட்டுச் சாவி.’’ என்றார், அந்தப்பெண்.
அந்தச் சிறுமி, மடியில் பூக்களை வைத்துக்கொண்டு, கால்களைப் பெஞ்சுக்கு அடியில் பின்னலிட்டு, அமர்ந்திருந்தாள். மதகுரு சிறுமியைப் பார்த்து விட்டுப் பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்தார். பின்னர், ஜன்னல் கம்பிவலையின் வழியாக, மேகங்களற்றுத் தெளிவாகத் தெரிந்த வானத்தைப் பார்த்தார்.
‘’ இந்த வெக்கையிலா,’’ என்ற அவர், ‘’ வெயில் இறங்கும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.’’ என்றார்.
அந்தப் பெண் மறுத்து, அமைதியாகத் தலையை அசைத்தாள். மதகுரு தடுப்புக்கு மறுபுறம் சென்று, இழுப்பறைகொண்ட நிலையடுக்கிலிருந்து, நீரொட்டா அட்டையிட்ட நோட்டுப்புத்தகம் ஒன்றினையும் மரக்கைப்பிடி எழுதுகோல் ஒன்றினையும், மைப்புட்டி ஒன்றினையும் எடுத்துக்கொண்டு மேசைமுன் அமர்ந்தார். அவரது தலை இழந்திருந்த முடியை ஈடு செய்வதற்கும் அதிகமாக, அவரது கைகளில் முடி அடர்ந்திருந்தது.
‘’ நீங்கள், எந்தக் கல்லறையைப் பார்க்கப் போகிறீர்கள்?’’ எனக்கேட்டார், அவர்.
‘’ கார்லோஸ் சென்டெனோ,’’ என்றார், அந்தப் பெண்.
‘’ யார்?’’
‘’ கார்லோஸ் சென்டெனோ,’’ என மீண்டும் உரைத்தார், அந்தப் பெண்.
அப்போதும் மதகுருவுக்குப் புரியவில்லை.
‘’ சென்ற வாரம், இங்கே கொலைசெய்யப்பட்டானே, ஒரு திருடன், அவன்தான்.’’ என மாற்றமில்லாத அதே குரலில் சொன்னார், அந்தப் பெண். ‘’ நான், அவனது அம்மா.’’
மதகுரு, அவளைக் கூர்ந்து பார்த்தார். அவள் அமைதியாக, மிகுந்த தன்னடக்கத்துடன் அவரையே பார்க்கவும், அவர் முகம் சிவந்துபோனார். அவர் தலையைத் தாழ்த்திக்கொண்டு, எழுதத் தொடங்கினார். பக்கத்தை நிரப்பிக்கொண்டே, அவர் அவளுடைய அடையாளங் குறித்த தகவல்களைக் கேட்கவும், எவ்விதத் தயக்கமும் இல்லாமல், பார்த்து வாசிப்பதைப் போன்ற தெளிவுடன் அவள் சுருக்கமாகச் சொன்னாள். மதகுரு வியர்க்கத் தொடங்கினார். சிறுமி, அவளது இடது அரணக்காலணியின் வார்க் கொக்கியைக் கழற்றி, கரண்டைக் காலை இழுத்து, பெஞ்சின் அடியில் பொருத்தப்பட்டிருந்த மரக்கட்டையின் மீது வைத்தாள். பிறகு, அதையே வலது பக்கமும் செய்தாள்.
சென்ற வாரம் திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு, இங்கிருந்து சில மனைத்தொகுதிகள் தாண்டித்தான், அது தொடங்கியது. உபயோகமற்ற தட்டுமுட்டுச் சாமான்கள் நிறைந்த வீட்டில் தனிமையில் வசிக்கும் விதவை ரெபேக்காள், முன்கதவை யாரோ வெளியிலிருந்து தள்ளித் திறக்க முயற்சிக்கும் சத்தத்தை மழைத்தூறலையும் மீறிக் கேட்டிருக்கிறாள். அவள் எழுந்து, தனியறைக்குள் கர்னல் அவுரேலியானா புயுந்தியாவுக்குப் பின்னர் யாருமே பயன்படுத்தாத பழங்காலக் கைத்துப்பாக்கி ஒன்றைத் தேடியெடுத்துக்கொண்டு, விளக்கினைப் பொருத்தாமலேயே வசிப்பறைக்குச் சென்றாள். பூட்டில் கேட்ட சத்தத்தால் அதிகம் பாதிக்கப்படாவிட்டாலும், அவளது இருபத்தெட்டு ஆண்டுத் தனிமை தோற்றுவித்திருந்த பெருந்திகில் காரணமாகவே, கதவு இருக்குமிடம் மட்டுமல்ல, அதன் சாவித்துவாரம் இருந்த சரியான உயரத்தைக் கூட, அவள் கவனத்தில் ஏற்றியிருந்தாள். அவள் அந்த ஆயுதத்தை இருகைகளாலும் இறுகப்பற்றிப் பிடித்துக்கொண்டு, கண்களை மூடி, விசையினை அழுத்தமாகப் பிடித்திழுத்தாள். அவள் வாழ்நாளில், முதல்முறையாக ஒரு துப்பாக்கியால் சுட்ட நிகழ்வு அதுவே. துப்பாக்கி வெடித்த உடனடிக்கணத்தில், துத்தநாகப் பூச்சிட்ட தகட்டுக்கூரை மீது மழைத்தூறல் முணுமுணுத்ததைத் தவிர வேறெந்த சத்தத்தையும் அவள் கேட்கவில்லை. பின்னர் முற்றத்தின் சிமென்ட் தரை மீது உலோகம் விழுந்த, ஒரு சிறிய சத்தம் கேட்டது. கூடவே, ‘’ஆ, அம்மா.‘’ என்ற மெல்லிய, இனிய, ஆனால், மிகச் சோர்ந்த ஒரு குரலும் கேட்டது. காலையில் அந்த வீட்டின் முன் இறந்து கிடந்த மனிதனின் மூக்கு துகள்களாகச் சிதறியிருந்ததையும், அவன் வண்ணப் பட்டைகள் கொண்ட சணல் துணியாலான சட்டை அணிந்து தினசரிக் காற்சட்டையில் இடுப்பு வார்க்கச்சுக்குப் பதிலாக ஒரு கயிறு கட்டியிருந்ததையும், வெறுங்காலாக இருந்ததையும் கண்டனர். நகரத்தில் யாருக்குமே அவனைத் தெரிந்திருக்கவில்லை.
எழுதி முடித்தபின், மதகுரு, ‘’ ஆக, அவன் பெயர் கார்லோஸ் சென்டெனா,’’ என முணுமுணுத்தார்.
‘’ சென்டெனோ ஆயலா,’’ என்ற அந்தப்பெண், ‘’ அவன் என் ஒரே மகன்.’’ என அழுத்தமாகக் கூறினாள்.
மதகுரு மீண்டும் இழுப்பறைகொண்ட நிலையடுக்குக்குச் சென்றார். கதவின் உட்புறமாக இரண்டு பெரிய துருப்பிடித்த சாவிகள் தொங்கின. அந்தச் சிறுமி, அவள் அம்மா அவளைப்போலச் சிறுமியாக இருந்த காலத்தில் நினைத்த மாதிரி, ஏன், அந்த மதகுருவுங்கூட ஏதோ ஒரு வயதில் அப்படி நினைத்திருக்கக்கூடிய வகையில், அந்தச் சாவிகள் புனித பீட்டருடையவை என நினைத்தாள். அவற்றை எடுத்த அவர், மரத்தடுப்பில் திறந்திருந்த நோட்டுப் புத்தகத்தின் மீது வைத்துவிட்டு, அவர் அப்போதுதான் எழுதி முடித்திருந்த பக்கத்தில் ஒரு இடத்தைச் சுட்டுவிரலால் காட்டி, அந்தப் பெண்ணைப் பார்த்து ‘’ இங்கே கையொப்பமிடு.’’ என்றார்.
அந்தப் பெண் கைப்பையை முழங்கையின் கீழாக வைத்துப் பிடித்துக்கொண்டு, அவள் பெயரைக் கிறுக்கினாள். சிறுமி பூக்களை எடுத்துக்கொண்டு, கால்களைத் தேய்த்தவாறு மரத்தடுப்புக்கு வந்து அம்மாவை முனைப்புடன் கவனித்துக்கொண்டிருந்தாள்.
மதகுரு பெருமூச்செறிந்தார்.
‘’ நீங்கள் அவனைச் சரியான பாதைக்குத் திருப்ப முயற்சிக்கவேயில்லையா?’’
கையொப்பமிட்டு முடித்தபின், அந்தப் பெண் பதில் சொன்னாள்.
‘’ அவன் ஒரு மிக நல்ல மனிதன்.’’
மதகுரு முதலில் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டுப் பின் சிறுமியைப் பார்த்தார். அவர்கள் அழப்போவதில்லையென்பதை மதம்சார்ந்த ஒரு வியப்பாக உணர்ந்தார். அந்தப் பெண் அதே தொனியில் தொடர்ந்து கூறினார்:
‘’ யாரொருவருக்கும் உணவுக்குத் தேவைப்படும் எதையும் ஒருபோதும் திருடாதே என்று நான் அவனுக்குச் சொல்லியிருந்தேன். அவனும் அதை மனதில் கொண்டிருந்தான். இன்னொரு பக்கத்தில், முன்பு அவன் குத்துச் சண்டையிடும்போது, வன்திறக் குத்துதலில் அடிபட்டு, சோர்வுற்று, மூன்று நாட்கள் வரை எழ முடியாமல் படுக்கையில் கிடப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.’’
‘’ அவரது பற்கள் எல்லாவற்றையும் பிடுங்க வேண்டியதாயிற்று.’’ என இடையிட்டாள், சிறுமி.
‘’ ஆமாம், அது அப்படித்தான்,’’ என அந்தப் பெண்ணும் ஒத்துரைத்தாள். ‘’ அந்த நாட்களில் நான் சாப்பிட்ட ஒவ்வொரு வாய் உணவும், சனிக்கிழமை இரவுகளில் என் மகன் தாங்கிய அடிகளாகத்தான் சுவைத்தது.
‘’ கடவுளின் விருப்பம் ஆராயத்தக்கதல்ல.’’ என்றார், மதகுரு. ஆனால், அவர் அதை அவ்வளவு தீர்க்கமாகச் சொல்லாததற்கு, அனுபவம் ஒரு பாதிக்கு அவரைச் சிறிது ஐயுறவுக்குட்படுத்தியிருந்ததும் ஒருபாதி வெப்பத்தின் கடுமையுமே ஆகும்.
வெயிற்தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ள தலையை மூடிக்கொள்ளுமாறு அவர் யோசனை கூறினார். கொட்டாவி விட்டுக்கொண்டு, இப்போது முற்றிலுமான தூக்கக் கலக்கத்தில், கார்லோஸ் சென்டெனோவின் கல்லறையை அவர்கள் எப்படிக் கண்டுபிடிப்பதென வழிசொல்லிக் கொண்டிருந்தார். திரும்பி வரும்போது, அவர்கள் கதவைத் தட்டவேண்டியதில்லை. சாவியைக் கதவின் கீழ் வைத்துவிட்டால் போதும்; அதே இடத்திலேயே, அவர்களால் முடிந்தால் தேவாலாயத்துக்கான காணிக்கையை வைத்துவிடலாம். அந்தப் பெண் அவரது வழிகாட்டுதல்களை மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டு நன்றி தெரிவித்தாள். ஆனால் அவள் முகத்தில் புன்னகை ஏதும் இல்லை.
தெருப்பக்கமான வெளிப்புறக் கதவைத் திறப்பதற்கு முன்பே யாரோ ஒருவர் உள்ளே பார்த்துக்கொண்டிருப்பதையும் அவரது மூக்கு கம்பிவலை மீது அழுந்திக்கொண்டிருப்பதையும் மதகுரு கவனித்தார். வெளியே குழந்தைகளின் கும்பல் ஒன்று நின்றுகொண்டிருந்தது. கதவு விரியத் திறக்கப்பட்டதும் குழந்தைகள் சிதறி ஓடினர். சாதாரணமாக அந்த நேரத்தில் தெருவில் எவருமே இருப்பதில்லை. இப்போதோ குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் வாதுமை மரங்களின் அடியில் குழு, குழுவாக நின்றனர். வெப்பத்தில் நீந்திக்கொண்டிருந்த தெருவினை மதகுரு துருவித் துருவிப் பார்த்துவிட்டுப் பின்னர் புரிந்துகொண்டார். கதவினை மெல்லச் சாத்தினார்.
‘’ ஒரு நிமிடம் பொறுங்கள்,’’ அந்தப் பெண்ணைப் பார்க்காமலேயே, அவர் சொன்னார். அவரது சகோதரி, அறைக்கோடிக் கதவில் தோன்றினார். அவரது இரவு உடையின் மீது ஒரு கறுப்புச் சட்டை அணிந்து தலைமுடியை தோள்களில் விரிந்துபடுமாறு அவிழ்த்திருந்தார்.
அவர் மதகுருவை அமைதியாக நோக்கினார்.
‘’ என்னவாம்?’’ என அவர் கேட்டார்.
‘’ ஜனங்கள் கவனித்துவிட்டார்கள்.’’ என அவரது சகோதரி முணுமுணுத்தார்.
‘’ நீங்கள் உள்முற்ற வாசல் வழியாக வெளியே செல்வதுதான் நல்லது.’’ என்றார், மதகுரு.
‘’ அங்கேயும் அப்படித்தான்’’ என்றார், அவரது சகோதரி. ‘’ எல்லோரும் ஜன்னலில் நிற்கிறார்கள்.’’
நிலைமையை, அந்த நிமிடம் வரையிலுங்கூட, அந்தப் பெண் புரிந்து கொள்ளவில்லையென்றே தோன்றியது. அவள் கம்பிவலை வழியாக தெருவைப் பார்க்க முயன்றாள். பின்னர், அவள் சிறுமியிடமிருந்து பூங்கொத்தினை எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நகர்ந்தாள். சிறுமி அவளைத் தொடர்ந்தாள்.
‘’ வெயில் இறங்கும் வரைக்கும் பொறுங்களேன்,’’ என்றார், மதகுரு.
‘’ வெயிலில் உருகிப்போய்விடுவீர்கள்,’’ எனச் சொன்ன சகோதரி, அறைக்கோடியில் அசைவற்று நின்றுகொண்டே ‘’ பொறுங்கள், உங்களுக்கு ஒரு குடை தருகிறேன்.’’ என்றார்.
‘’ நன்றி,’’ எனப் பதிலளித்த அந்தப் பெண், ‘’ இப்படிச் செல்வதில் எங்களுக்கு ஒன்றுமில்லை. எல்லாம் பழக்கமானதுதான்..’’ என்றாள்.
அவள், சிறுமியின் கையைப் பிடித்துக்கொண்டு, தெருவில் இறங்கினாள்.
••••

 மலைகள் இணைய இதழ் மே2, 2014 இல் வெளியானது.

No comments:

Post a Comment