என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள மனிதன் ஒருவன் இருக்கிறான்.There is a man in the habit of hitting me on the head with an umbrella
ஸ்பானியம் : ஃபெர்னாண்டோ சொரென்டினோ (அர்ஜென்டினா)
ஆங்கிலம் : க்ளார்க் எம். ஜ்லாட்சியூ
தமிழில் ச.ஆறுமுகம்
என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள மனிதன் ஒருவன் இருக்கிறான். இன்றோடு மிகச்சரியாக ஐந்து ஆண்டுகளாக அவனுடைய குடையைக்கொண்டு என் தலையில் அடித்துக்கொண்டேயிருக்கிறான். முதலில் அதை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை; இப்போது அதற்குப் பழக்கப்பட்டுவிட்டேன்.
அவன் பெயர் எனக்குத் தெரியாது. அவன் சராசரித் தோற்றமுள்ளவனாக, சாம்பல்நிறத்தில் முழுக்காற்சட்டை, மேற்சட்டை அணிபவனாக, காதோரம் நரைத்து சாதாரணமான முகம் கொண்டவனாக இருக்கிறான் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு வெக்கையான முற்பகலில்தான் அவனைச் சந்தித்தேன். பாலெர்மோ பூங்காவில், மரநிழல் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து, நான் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் தலையை எதுவோ தொட்டதாக உணர்ந்தேன். இப்போது எழுதிக்கொண்டிருக்கும்போதும், உணர்ச்சியற்று, இயந்திரகதியாக, குடையால் அடித்துக்கொண்டிருக்கும் இதே மனிதன்தான், அவன்.
அந்தநேரத்தில், நான் கொதித்துப் போய், அப்படியே சுழன்று திரும்பினேன்: அவன் இம்மியும் மாறாமல் என்னை அடித்துக்கொண்டேயிருந்தான். அவனுக்கென்ன பைத்தியமா, என்றுகூட நான் அவனைக் கேட்டேன் : அவன் என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பின்னர்தான், நான் காவல்துறை அலுவலரை அழைப்பேன் என்று மிரட்டினேன். அப்போதும், எந்தவிதமான சலனமும் காட்டாமல், ஒரு வெள்ளரிக்காயைப் போலக் குளிர்ந்த முகத்துடன் அவனுடைய வேலையில் கண்ணாக இருந்தான். தீர்மானம் ஏதுமின்றித் திகைத்த ஒரு சில கணங்களுக்குப் பிறகு, அவனுடைய மனநிலையை அவன் மாற்றிக்கொள்ளப் போவதில்லையென நான் உணர்ந்தபிறகு, எழுந்து நின்று அவன் மூக்கில் ஒரு குத்து விட்டேன். கீழே விழுந்த அந்த மனிதன் அநேகமாக யாராலுமே கேட்கமுடியாத ஒரு முனகலை வெளிப்படுத்தினான். உடனேயே, வெளிப்படையாகத் தெரிந்த பெரும் முயற்சியுடன் எழுந்து நின்று ஒரு வார்த்தை கூட முணுமுணுக்காமல் குடையால் என் தலையில் அடிக்கத் தொடங்கினான். அவனுடைய மூக்கில் ரத்தம் வந்துகொண்டிருந்தது. அந்தக் கணத்தில் அவனுக்காக நான் வருத்தப்பட்டேன். அவனை அப்படிக் கடுமையாக அடித்துவிட்டோமேயெனப் பெரும் கழிவிரக்கம் கொண்டேன். அந்த மனிதன் ஒன்றும் என்னைக் குண்டாந்தடியால் தாக்கிவிடவில்லை; எந்த வலியும் ஏற்படாதபடி சும்மா, வெறுமனே, அவனது குடையால் தட்டிக் கொண்டிருந்தான். அந்தத் தட்டல்கள் தீராத்தொல்லையாக, கவலைகொள்ள வைத்ததென்னவோ உண்மைதான். நெற்றியில் ஒரு ஈ வந்து உட்கார்ந்தால், எந்த வலியும் நாம் உணர்வதில்லை: அப்போது நாம் உணர்வது ஒரு தொந்தரவு அல்லது அமைதிக்குலைவு, அவ்வளவுதான். நல்லது, அப்புறம், அந்தக் குடை, சீரான இடைவெளியில் என் தலைமீது மீண்டும் மீண்டும் வந்தமர்கின்ற ஒரு மிகப்பெரிய அரக்க ஈயாகத்தான் இருந்தது.
நாம் ஒரு பைத்தியக்காரனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறோமென்பதை உணர்ந்ததும் நான், தப்பிக்க முயற்சித்தேன். ஆனால், அந்த மனிதன் எந்த வார்த்தையும் பேசாமல் தொடர்ந்து என் தலையிலடித்துக்கொண்டு என் பின்னாலேயே வந்தான். ஆகவே நான் ஓடத்தொடங்கினேன் ( இந்த இடத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று, நகரில் என்னைப் போல் அதிவேகமாக ஓடக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லை என்பதுதான்.) அந்த மனிதன் என் பின்னாலேயே ஓடிவந்து, ஒரு அடியையாவது என் தலையில் இறக்கிவிடவேண்டுமென வீணாக முயற்சித்தான். அந்த மனிதன் மேலும் கீழுமாக அப்படியொரு மூச்சு வாங்க, நான் அவனை அதே வேகத்தில் ஓடவேண்டிய கட்டாயத்தைத் தொடர்ச்சியாக உருவாக்கிவிட்டால், என்னுடைய வதைகாரன் அங்கேயே அப்படியே விழுந்து இறந்துவிடுவான் என நினைத்தேன்.
,
அதனால்தான் நான் ஓட்ட வேகத்தை ஒரு மித நடையாகக் குறைத்துவிட்டுப் பின்னர், அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முகத்தில் நன்றியோ அல்லது கடுகடுப்போ இம்மியளவும் இல்லை. அதன் தடயம் கூட இல்லை. அப்போதும் அவன் எதுவும் பேசாமல் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டிருந்தான். காவல் நிலையம் சென்று, அங்கு , ‘’ அதிகாரி அவர்களே, இந்த மனிதன் குடையை வைத்து என்னை அடித்துக் கொண்டேயிருக்கிறான்.’’ எனப் புகார் கொடுத்து விடலாமென நினைத்தேன். இது எப்போதும் இல்லாத ஒரு வழக்காக இருக்கும். அதிகாரி என்னைச் சந்தேகத்தோடு பார்த்து, என்னுடைய ஆவணங்களைக் கேட்பதோடு, தர்ம சங்கடமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கலாம். அவர் ஒருவேளை என்னைக் கைதுசெய்து சிறையில் தள்ளிவிடுகிற அளவுக்குக் கூடப் போய்விடலாம்.
வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிடுவதே நல்லதென நினைத்தேன். நான் 67 ம் எண் பேருந்தைப் பிடித்தேன். இவ்வளவு நேரமும் குடையால் என்னை அடித்துக்கொண்டிருந்த அவனும் என் பின்னாலேயே ஏறினான். நான் முதல் இருக்கையில் அமர்ந்தேன். என்னை ஒட்டி அருகிலேயே, பேருந்தின் பாதுகாப்புக் கம்பியை இடதுகையால் பற்றிக்கொண்டு நின்றான். அவனது வலது கையால் கொஞ்சங்கூடத் தளர்ச்சியில்லாமல் குடையால் என்னைத் தட்டிக்கொண்டிருந்தான். பயணிகள் முதலில் ஒருவருக்கொருவர் பயமும் மருட்சியுமான புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டனர். ஓட்டுநர், பின்பக்கம் தெரிகிற கண்ணாடியில் எங்களைக் கவனிக்கத் தொடங்கினார். அந்தப் பயணத்தில், பேருந்து முழுவதுமே சிறிது சிறிதாக ஒரு மாபெரும் சிரிப்புக் கூடமாக மாறி, ஆரவாரமும் பெருங்கூச்சலுமான முடிவேயில்லாத பெருஞ் சிரிப்பாகிப் போனது. நான் அவமானத்தில் செத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய வதைகாரன், அந்தச் சிரிப்பே காதில் விழாததுபோலத் தொடர்ந்து என்னை அடித்துக்கொண்டேயிருந்தான்.
பசிஃபிக்கோ பாலத்தில் நான் இறங்கினேன் – இருவரும் இறங்கினோம் என்று தானே சொல்லவேண்டும். நாங்கள் சான்டா ஃபெ அவென்யூ வழியாக நடந்தோம். எல்லோருமே முட்டாள்தனமாக எங்களையே பார்க்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து, ‘’ என்ன பார்க்கிறீர்கள்? முட்டாள்களே? ஒரு மனிதன் இன்னொருவனின் தலையில் குடையால் அடிப்பதை இதுவரை நீங்கள் பார்த்ததேயில்லையா, என்ன?’’ எனக் கேட்கவேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆனால், கூடவே அவர்கள் இதுபோன்ற ஒரு காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் தோன்றியது. பின்னர், ஐந்தாறு பையன்கள் வெறிபிடித்தது போலக் கூச்சலிட்டுக்கொண்டு எங்கள் பின்னாலேயே வந்து துரத்தத் தொடங்கினர்.
ஆனால், நான் ஒரு திட்டத்தோடேயே, கறுவிச் சென்றுகொண்டிருந்தேன். வீட்டுக்குப் போனதும், கதவை அவன் முகத்திலேயே அறைந்து சாத்த முயற்சித்தேன். ஆனால், அது முடியவில்லை. அவன் என் நினைப்பைத் தெரிந்துகொண்டிருக்கவேண்டும். என்னவென்றால், அவன் வாசல்கதவின் குமிழைத் திடமாகப் பற்றித் தள்ளிக்கொண்டு, என்னோடேயே வீட்டுக்குள் நுழைந்துவிட்டான்.
உடனேயே, அந்த நேரத்திலிருந்தே, என் தலையில் அவனது குடையால் அடிக்கத் தொடங்கிவிட்டான். நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ளமுடியும், அவன் தூங்கவோ, அல்லது எதையும் சாப்பிடவோ இல்லை. அவனுடைய ஒரே வேலை என்னை அடிப்பதாகவே இருந்தது. நான் எந்தக் காரியம் செய்யும்போதும், என்னுடைய அதிமுக்கிய, ரகசியச் செயல்பாடுகளின்போதும் கூட, அவன் என்னைவிட்டு விலகிவிடாமல், என்னோடேய இருந்தான். அந்த அடிகள் முதலில், என்னை இரவுகளிலும் தூங்கவிடாமல் செய்தன, என்பது எனக்கு நன்கு ஞாபகமிருக்கிறது. இப்போது, அந்த அடிகள் இல்லாமல் என்னால் தூங்க இயலாது என்றே நினைக்கிறேன்.
இந்தக் கணம் வரையில், எப்போதுமே எங்கள் உறவுகள் நன்றாக இருந்ததில்லைதான். பல சந்தர்ப்பங்களில், எப்படியெப்படி முடியுமோ அப்படியெல்லாம் தொனி மாற்றி, ஏன் இப்படி நடந்துகொள்கிறானென்பதற்கு விளக்கம் கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்தப் பயனுமில்லை : ஒரு வார்த்தைகூடப் பேசாமல் என் தலையில் அவனுடைய குடையால் தட்டுவதை அப்படியே தொடர்ந்தான். பலமுறை உதைத்தும், குத்தியும், ஏன் ஒருமுறை – கடவுள் என்னை மன்னிப்பாராக – குடையால் அடித்துத் துவைக்கவும் செய்தேன். அவன் வாயில்லா ஊமையாக அடிகளை அமைதியாக வாங்கிக் கொண்டான். அப்படி அடி வாங்குவதும், அவனுடைய பணியின் ஒரு பகுதி என்பதுபோல அவற்றைப் பெற்றுக்கொண்டான். அவனுடைய ஆளுமையின் துல்லியமிக்க, அருந்திறல் தன்மை என்பது எந்தவிதமான வெறுப்போ பகைமையோ இல்லாமல் அவனது பணியின் மீதான அசைக்கமுடியாத விசுவாசம் தான். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு மேலதிகாரியின் கட்டளைக்கிணங்க, அவரது இரகசியப் பணித்திட்டத்தை செயல்படுத்துவதான ஒரு பற்றுறுதி எனச் சொல்லலாம்.
அவனுக்கான உடலியல் தேவைகள் சரிவரப் பூர்த்தியாகவில்லையெனினும், நான் அவனைத் தாக்கும்போது, அவன் வலி, வேதனையை உணர்கிறான் என்பது எனக்குத் தெரிகிறது. அவன் மிகவும் மெலிந்து வலுக்குறைவானவன் என்பதும் எனக்குத் தெரிகிறது. எனக்குத் தெரியும், அவன் அழியுடல் கொண்ட ஒரு மானிடப்பிறவிதான். ஒரேயொரு தோட்டாவில் அவனை ஒழித்துக் கட்டிவிட என்னால் முடியுமென்பதும் எனக்குத் தெரிகிறது. அவனைக் கொல்வது அல்லது என்னைக்கொல்வது என்ற இரண்டில் எது தோட்டாவுக்கு நல்லதாயிருக்குமென்ற ஒன்று மட்டுமே எனக்குத் தெரியாதது. நாங்கள் இருவரும் இறந்தபிறகும், என் தலையில் அவனது குடையால் தொடர்ந்து தாக்காமலிருப்பானா என்பதும் எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும், இந்தச் சிந்தனைப் போக்கு எவ்வித அர்த்தமும் இல்லாதது. அவனையோ அல்லது என்னையோ கொல்வதற்கு ஒருபோதும் துணியமாட்டேன் என்பதை, நான் உணர்கிறேன்.
மாறாக, மிக அண்மையில் நான் வந்துசேர்ந்திருக்கிற ஒரு மெய்யுணர்வு என்ன, தெரியுமா? அந்த அடிகள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்பதுதான். இப்போதெல்லாம், அடிக்கொரு தரமாகக் குறிப்பிட்ட தீய அறிகுறி ஒன்று மீண்டும் மீண்டுமாக என்னை ஆட்கொள்கிறது. ஒரு புதிய கவலை என் ஆன்மாவைத் தின்றுகொண்டிருக்கிறது : இந்த மனிதன் எனக்கு மிகமிகத் தேவையாக இருக்கும் ஒரு கட்டத்தில் என்னைவிட்டுச் சென்றுவிடுவான் என்ற நினைப்பிலிருந்தும் அந்தக் குடையின் தட்டல்கள் எனக்கு மிக நல்ல தூக்கத்திற்கு உதவியதென நினைக்காமல் போய்விடுவேன் என்ற நினைப்பிலிருந்தும் கிளைத்தது, அந்தக் கவலை.
(இக்கதையின் ஆங்கில மூலமான There`s a man in the habit of hitting me on the head with an umbrella. என்ற சிறுகதை Red rattle Books 2013 வெளியிட்டுள்ள How to Defend Yourself Against Scorpions தொகுதியில் உள்ளது.)
மலைகள் இணைய இதழ் எண் 48, ஏப்ரல் 17, 2014 இல் வெளியானது.
No comments:
Post a Comment