Thursday, 7 January 2016

அமெரிக்கச் சிறுகதை - அரசனுக்காக ஒரு மூக்கு - ஜாக் லண்டன்


அரசனுக்காக ஒரு மூக்கு (A Nose for the King)
ஆங்கிலம்: ஜாக் லண்டன்(அமெரிக்கா)
தமிழில் ச.ஆறுமுகம்
      Jack London (January 12, 1876 – November 22, 1916)[

அதிகாலை அமைதி நாடான கொரியாவில், அதன் அமைதியும் நெஞ்சை அள்ளும் மோன அழகும் அதன் தொன்மைமிகுந்த பெயரான `சோ-சென்` என்பதற்கு உண்மையிலேயே புகழ் சேர்ப்பதாக இருந்த காலத்தில், யீ சின் ஹோ என்ற பெயரில் ஒரு அரசியல்வாதி வாழ்ந்தான். ஆய கலை அறுபத்து நான்கும் தெரிந்த அவன் ஒரு பல்துறை வித்தகன் - யாருக்குத் தெரியும்? – ஒருவேளை உலகம் முழுவதிலுமிருக்கிற அரசியல்வாதிகளில் மோசத்திலும் மோசமான அறிவாளி அவன் தானோ என்னமோ! ஆனால், இதர நாடுகளிலிருந்த அவனது அரசியல் உடன்பிறப்புகளைப் போலில்லாமல், அவன் சிறைக்குள் அகப்பட்டிருந்தான். அது, பொதுப்பணத்தைக் கவனக் குறைவாகக் கையாண்டு அவனது கணக்கில் சேர்த்துக்கொண்டு விட்டதனாலல்ல, அவன் கவனக்குறைவாக மடைதிருப்பிக்கொண்ட தொகை மிகமிக அதிகம் என்பதுதான். மிகை மிஞ்சிய செயல் என்பது எல்லாவற்றிலும், கையூட்டு எனச்சொல்லிப் பறித்துக் கொள்வதிலுங்கூடத்தான், மிகவும் வருந்தத்தக்கது; யீ சின் ஹோவின் மிகை மிகமிக வருந்தத்தக்க விதங்களில் அவனைக் கொண்டுவந்து தள்ளிவிட்டது.    
    அவன் கையாடிய வகையில் அரசுக்குச் செலுத்த வேண்டிய பாக்கி, ஒரு மாலைக்கு ஆயிரம் காசுகள் வீதமெனக் கோர்த்த மாலையில் பத்தாயிரம் மாலைகள்; அதனால் தான் மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் கிடந்தான். அதிலும் அவனுக்கு ஒரு நன்மை இருந்தது – சிந்திப்பதற்குக் கொள்ளை கொள்ளையாக நேரம் கிடைத்தது. அவனும் மீண்டும் மீண்டுமாகச் சிந்தித்தான். பின்னர் சிறைக் காவலரை அழைத்தான்.

‘‘மிகவும் மதிப்பு மிக்க மனிதன், நான், உங்கள் முன்னிலையில் மிகவும் இழிந்தவனாக நிற்பதை நீங்கள் காண்கிறீர்கள்,’’ எனத் தொடங்கியவன், ‘’இப்போதும் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடவில்லை; எல்லாமே நல்லபடியாகிவிடும்.; நீங்கள் மட்டும் இன்று இரவு ஒரே ஒரு மணி நேரத்துக்கு என்னை வெளியே விட்டால் போதும். உங்களுக்கும் எல்லாம் நல்லபடியாகும்; ஆண்டாண்டுக்கும் மேற்பதவி; போகப்போக, இந்தச் சோ-சென் நாட்டிலுள்ள எல்லாச் சிறைகளுக்கும் அதிகாரியான இயக்குநராக வருவீர்கள்; அதை நான் கவனித்துக்கொள்கிறேன்.’’ எனச் சொல்லிவிட்டு அவரது முகத்தை நோட்டமிட்டான்.

‘’அதெப்படி?’’ கேலித்தொனியிலேயே சிறைக்காவலர் கேட்டார். ‘‘இது என்னய்யா முட்டாள் தனம்? ஒரே ஒரு மணி நேரந்தான், ஆனால் உனக்கென்னய்யா, நீ சாகப் போகிறவன்; வெட்டரிவாளுக்குத் தலையை நீட்டத்தானே, வதைத்துக் கிடக்கிறாய்? ஆனால் எனக்கு, மிகமிக மரியாதைக்குரிய வயது முதிர்ந்த என் அம்மா, அதிலும், என் மனைவி, மக்கள், பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை! அதெல்லாம் உனக்கு ஏது? உதவாக்கரைப் போக்கிரி!’’

‘’புனிதத் தலைநகரிலிருந்து எட்டு மாநிலக் கடற்கரை முடிவிலுங்கூட எனக்கு ஒளிவதற்கு இடம் கிடையாது,’’  யீ சின் ஹோ, அவன் பதிலைத் தொடர்ந்தான். ‘’அறிவு நுட்பம் தெரிந்தவன் நான்; ஆனால் சிறைக்குள் என் அறிவு நுட்பத்துக்கு ஏது மரியாதை? நான் மட்டும் வெளியே இருந்தால், அரசுக்குத் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகையை எப்படிச் சம்பாதித்து, எப்படிச் செலுத்தவேண்டுமென்று எனக்குத் தெரியும். என்னுடைய எல்லாத் துன்பங்களிலிருந்தும் என்னைக் கரைசேர்க்கக்கூடிய மூக்கு ஒன்றை எனக்குத் தெரியும்.’’

‘‘என்னது? மூக்கா?’’ அதிர்ச்சியில் சிறைக்காவலர் கத்தியேவிட்டார்.

‘‘ஆமாம், ஒரு மூக்குதான்,’’ என்றான் யீ சின் ஹோ, நிதானமாக. ‘‘விசேஷமான மூக்கு, இன்னும் சொல்லப்போனால் அதிவிசேஷமான மூக்கு.’’

‘’ஹூம், சரியான கேலிக்காரன்யா நீ, அதிலும் என்ன மாதிரியான கேலிக்காரன்!’’ அவர் அவனை நோக்கி இரு கைகளையும் நீட்டி, விரித்துக் காட்டி ஆட்டிச் சிரித்தார். ‘’உன் கேலியும் கிண்டல் திறமையும் வெட்டு மேடைக்குப் பலியாகப் போவதை நினைத்தால், கொஞ்சமென்ன ரொம்பவே வருத்தம் தான்யா!!’’ சொல்லிக் கொண்டே திரும்பியவர், சென்றுவிட்டார். ஆனால், தலை மட்டுமல்ல இதயமுங்கூட மென்மையான அவர் கடைசியில், கடும் இரவில் யீ சின் ஹோ வெளியில் செல்ல அனுமதித்துவிட்டார். 

நேராக ஆளுநரிடம் சென்ற அவன், தூக்கத்திலிருந்தும், அவரை எழுப்பித் தனிமையில் மடக்கிப் பிடித்துக் கொண்டான்.

‘‘யீ சின் ஹோவா!’’ அதிரக் கத்திய ஆளுநர், ‘’நான் இப்போதும் ஆளுநர் தானா? இல்லையா?’’ என ஒரு நிமிடம் மருண்டார். ‘’இங்கே என்ன செய்கிறாய்? வெட்டு மேடைக்காகச் சிறையிலிருப்பது யார்?’’

‘’வணக்கத்துக்குரிய அய்யா அவர்கள் நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்க வேண்டும்.’’ என்ற யீ சின் ஹோ, பின்தொடையைப் படுக்கை ஓரமாக இருத்தி அவனது புகைக்குழாயை எடுத்து, வாயில் வைத்துக்கொண்டு தீக்குச்சியை உரசிப் பற்றவைத்தான். ‘‘இறந்துவிட்ட ஒரு மனிதனுக்கு விலைமதிப்பு என்று எதுவும் கிடையாது. உண்மை, நான் ஒரு இறந்துவிட்ட மனிதன். அரசுக்கோ, மதிப்புக்குரிய தங்களுக்கோ அல்லது  எனக்குமே கூடத்தான் எந்த மதிப்புமில்லாதவன். ஆனால், மதிப்புக்குரிய தாங்கள் மட்டும் எனக்கு விடுதலையளித்துவிட்டால் ...’’

‘’முடியவே முடியாது!’’ உரக்கக் கத்தினார், ஆளுநர். ‘’அது மட்டுமல்ல, மரண தண்டனை விதிக்கப்பட்டவன் நீ.’’  

‘’மதிப்புக்குரிய தாங்கள் அறியாததா, அரசுக்குச் செலுத்தவேண்டிய பத்தாயிரம் காசு மாலைகளை நான் திருப்பிக் கொடுத்துவிட்டால், அரசு எனக்கு மன்னிப்பு வழங்கும்.’’ யீ சின் ஹோ தொடர்ந்து பேசினான். ‘‘அதனால் தான் சொல்கிறேன், நான் சொல்வது போல், மதிப்புக்குரிய தாங்கள் மட்டும் எனக்கு ஒரு சில நாட்களுக்கு விடுதலை வழங்கினால், விபரம் தெரிந்தவன் என்ற முறையில் அரசுக்குத் தொகையைச் செலுத்திவிட்டுத் மதிப்புக்குரிய தங்களின் காலடிக்குச் சேவை செய்யும் பணிக்கு மீண்டும் வந்துவிடுவேன்.’’

‘’பணத்தை எப்படிப் பெறுவதென்பதற்குக் கைவசம் ஏதேனும் திட்டம் உள்ளதா?’’ ஆளுநர் கேட்டார்.

‘’ஆமாம், அய்யா, இருக்கிறது,’’ என்றான், யீ சின் ஹோ.

‘’அப்படியென்றால், நாளை இரவு அதைக் கொண்டு வா; இப்போது நான் தூங்க வேண்டும்,’’ என்ற ஆளுநர், அவரது குறட்டைக்கு எந்த இடத்தில் தடங்கல் ஏற்பட்டதோ அதே இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிவிட்டார்.

மறுநாள் இரவில், சிறைக்காவலரிடம் மீண்டும் அனுமதி வாங்கிக்கொண்டு, யீ சின் ஹோ, ஆளுநரின் படுக்கைக்கருகே காட்சியானான்.

‘’யீ சின் ஹோ, எப்படியப்பா இது? நீ தானா?’’ ஆச்சரியமாகக் கேட்டார் ஆளுநர், ‘’திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறாயா?’ என்றும் கேட்டார்.

‘’;நானே தான், மதிப்புக்குரிய ஆளுநர் அவர்களே,’’ எனப் பதில் கூறிய யீ சின் ஹோ, ‘’இதோ திட்டம்.’’ என்றான்.

‘’சொல்லு,’’ ஆணையிட்டார், ஆளுநர்.

‘’இதுதான் திட்டம், என் கையிலேயே இருக்கிறது,’’ என மறுபடியும் சொன்னான், அவன்.
ஆளுநர் எழுந்து உட்கார்ந்து கண்களைத் திறந்தார். யீ சின் ஹோ அவர் கைக்கு நேராகத் தாள் ஒன்றை நீட்டினான். ஆளுநர் அதை வாங்கி வெளிச்சத்துக்கு நேராகப் பிடித்தார்.

‘’மூக்கு ஒன்றைத் தவிர வேறு எதுவுமில்லை,’’ என்றார் அவர்.
Image result for Nose

‘’அங்கங்கே கொஞ்சம் கிள்ளியெடுக்கப்பட்டதாக, மதிப்புக்குரிய அய்யா,’’
‘’ஆமாம், நீ சொல்கிற மாதிரிதான், அங்கங்கே கொஞ்சம் கிள்ளப்பட்டதாகக் குண்டும் குழியுமாக’’ என்றார் ஆளுநர்.
‘’இருந்தாலும், அது ஒரு அளவு மீறிப் பருத்த மூக்கு, அப்படியும் இப்படியுமாக, எல்லாம் ஒரே இடத்தில் வந்து முடிவதாக,’’ யீ சின் ஹோ தொடர்ந்தான். ‘’மதிப்புக்குரிய தாங்கள் இந்த மூக்குக்காக எத்தனை நாட்கள், உலகமெல்லாம் சுற்றி அலைந்தாலும் இப்படி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியாது.’’

‘’ஆமாம், வழக்கத்துக்கு மாறான மூக்குதான்,’’ ஒப்புக்கொண்டார், ஆளுநர்.
‘’அதன் மீது மரு ஒன்று இருக்கிறது, கவனித்தீர்களா?’’ என்றான், யீ சின் ஹோ.

‘’வழக்கத்துக்கு மிகமிக மாறான ஒரு மூக்கு,’’ என்ற ஆளுநர், ‘’இதைப் போன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை, ஆமாம், இதை வைத்துக்கொண்டு என்னதான் செய்யப்போகிறாய், யீ சின் ஹோ? எனக் கேட்டார்.
‘’அதைக்கொண்டுதான் அரசுக்குச் செலுத்த வேண்டிய பணத்தை மீட்கப்போகிறேன்,’’ என்றான், யீ சின் ஹோ. ‘‘மதிப்புக்குரிய தங்களுக்குச் சேவை செய்வதற்காகவே, நான் அதை நாடுகிறேன். அதைக்கொண்டுதான் சல்லிக்காசுகூடப் பெறாத எனது தலையைக் காப்பாற்றப் போகிறேன். மேலும், இப்போது, மதிப்புக்குரிய தங்களின் முத்திரையை அந்த மூக்கின் மீது ஒரே ஒரு குத்து, குத்தியருள வேண்டுமென்றும் கோருகிறேன்.’’

அடக்கமாட்டாமல் சிரித்த ஆளுநர், அரசு முத்திரையை அதன் மீது பதித்தாரோ இல்லையோ, அவர் கையிலிருந்தும் அதைப் பிடுங்காத குறையாக வெட்டெனப் பற்றியிழுத்துக்கொண்டு ஓட்டமாக ஓடி அங்கிருந்தும் மறைந்தான், யீ சின் ஹோ.

ஒரு மாதமும் ஒரு முழுநாளுமாக, கிழக்குக் கடலை நோக்கிச் செல்லும் ‘ராஜ பாட்டை’ யில் யீ சின் ஹோ பயணித்தான்; அங்கே ஒரு நாள் இரவில், பெருஞ்செல்வமிக்க நகர் ஒன்றின் ஆகப் பெரும் மாளிகை ஒன்றின் வாயிலில் நின்று, ‘’யார் அங்கே? கதவைத் திற,’’ என உரத்துத் தட்டினான்.

பயந்து போய்க் கதவைத்திறந்த பணியாளர்களிடம், ‘’வீட்டு உரிமையாளரை வரச் சொல், வேறு யாரோடும் நான் பேசத் தயாரில்லை,’’ எனச் சினம் மிக்க அதிகார தோரணையில், ‘’அரசரின் வேலையாக இவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறேன்.’’ என்றான்.

அவ்வளவுதான். நேராக உள்ளறை ஒன்றுக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். அங்கே தூக்கத்திலிருந்து எழுப்பிக் கசக்கிய கண்ணும் கையுமாக, ஏதும் புரியாமல் விழித்து நின்ற வீட்டு உரிமையாளரைக் கொண்டு வந்து அவன் முன் நிறுத்தினார்கள்.

‘’நீ தானே பாக் சுங் சங், ஹூம், இந்த நகரத்தின் தலைவன்.’’ யீ சின் ஹோ குற்றம் சுமத்தும் குரலில் கேட்டான். ‘’நான் அரசரின் வேலையாக வந்திருக்கிறேன்.’’

பாக் சுங் சங் நடுங்கினான். அரசரின் வேலை என்றால் அது எப்போதுமே பயங்கரமானது என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அவனது கால் மூட்டுகள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டன. அவன் தரையில் வீழ்ந்துவிடாத குறையாக நின்றான்.

‘’இரவு மிகவும் பிந்திவிட்டது,’’ அவன் நாக் குழறினான். ‘’இப்போது பேசுவது நல்லதாயிருக்........‘’

‘’ அரசரின் பணி எதற்காகவும் காத்திருக்காது.’’ இடியாக முழங்கினான், யீ சின் ஹோ. ‘’உடனடியாக என்னோடு தனியாக வா.  உன்னிடம் பேசி இப்போதே முடிக்கவேண்டிய விவகாரம் ஒன்று இருக்கிறது.’’ 
கூடவே, அவன், ‘’அதிலும் அரசர் சம்பந்தப்பட்ட விவகாரம்,’’ என்று இன்னும் மிரட்டலோடு சொன்னான். அதனாலேயே பாக் சுங் சங்கின் நரம்புகளற்ற கைவிரல்களிலிருந்தும் அவனது வெள்ளிப் புகைக்குழாய் கீழே விழுந்து `டொங்`கென ஒலியெழுப்பித் துள்ளி மீண்டும் விழுந்தது.

அவர்களைத் தனிமையில் விட்டு அனைவரும் அகன்றபோது, ’’அப்புறம், ஒரு விஷயம்,’’ என்ற யீ சின் ஹோ, ‘’அரசர் ஒரு கடும் நோயால் பீடிக்கப்பட்டு அல்லற்படுகிறார். மிகவும் பயங்கரமான நோய். அதை மட்டும் குணப்படுத்தவில்லையென்றால் அரண்மனை மருத்துவரின் தலை சீவப்படுவது நிச்சயம். அரசருக்கு சிகிச்சையளிக்க எட்டு மாநிலங்களிலிருந்தும் மருத்துவர்கள் அங்கே வந்து கூடியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து உலகத்து அறிவுகளையெல்லாம் திரட்டிக் கொண்டுவந்து, விவாதித்து, அரசரின் நோயைத் தீர்ப்பற்கு ஒன்றே தான் வழியென்றும் அதற்கு ஒரு மூக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மூக்கு, மிகவும் வித்தியாசமான ஒரு வகை மூக்கு தேவையென்றும் அதைத் தவிர வேறு சிகிச்சை இல்லையென்றும் முடிவெடுத்துள்ளனர்.’’
‘’அப்புறம், என்னை யார் கூப்பிட்டனுப்பியது என்கிறாய்? மாண்புமிகு பிரதமர் அவர்களேதான்! அவர் என்னிடம் ஒரு தாளை நீட்டினார். அந்தத் தாளில்தான், எட்டு மாநிலங்களின் மருத்துவர்களும் சேர்ந்து வரைந்திருந்த அந்த மிகவும் வித்தியாசமான வகைப்பட்ட மூக்கும் அதன் மீது அரசாங்க முத்திரையும் இருந்தது.’’
‘’போ,’’ என்றார், மாண்புமிகு பிரதமர். ‘’அரசரின் நோய் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த மூக்கை உடனே தேடிக் கண்டுபிடியுங்கள். எந்தவொரு மனிதனின் முகத்திலும் அவர், யாராக இருந்தாலும், இப்படியான மூக்கு இருந்தால், உடனடியாக அதைச் சீவி, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக, அரசவைக்குக் கொண்டு வா. போ, போய்த் தேடு, கிடைக்கும் வரை தேடு.’’
‘’அதனால்தான், நான் என்னுடைய தேடுதல் வேட்டைக்காக ஊர்விட்டு ஊராக அலைந்தேன்,’’ என்றான், யீ சின் ஹோ. ‘’நம்முடைய நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிப்பார்த்துவிட்டேன்; எட்டு பெருவழிச் சாலைகளிலும் பயணித்து எட்டு மாநிலங்களிலும் தேடினேன்; எட்டு கடல்களிலும் கடற்கரைகளிலும் அலைந்து தேடிவிட்டேன். கடைசியாகத்தான் இங்கே வந்து நிற்கிறேன்.’’

ஒரு பெரும் ஆர்ப்பாட்டமான அசைவில் அவனது இடுப்புக் கச்சையிலிருந்தும் சுருட்டிய தாள் ஒன்றினை உருவிச் `சடசட` மற்றும் `மொறுமொறு`ப்பொலிகளோடு அதனை விரித்து பாக் சுங் சங் முகத்துக்கு நேராக, அவன் முகத்தில் திணித்து அப்புவது போலப் பிடித்தான். அந்தத் தாளில் இருந்தது, மூக்கின் படம்!!!

பாக் சுங் சங் பிதுங்கிய கண்களோடு அதை உற்றுப் பார்த்தான்.
‘’கிடையாது, இது மாதிரி ஒரு மூக்கு எப்போதுமே எனக்கு இருந்ததில்லை.’’ எனப் பேசத் தொடங்கினான், அவன்.
‘’அதன் மீது ஒரு மரு இருக்கிறது.’’ என இடைமறித்தான், யீ சின் ஹோ.
‘’கிடையாது, எப்போதுமே எனக்கு இல்லை......’’ பாக் சுங் சங் மீண்டும் பேசத் தொடங்கினான்.
‘’உன் அப்பாவை என் முன்னால் கொண்டுவந்து நிறுத்து,’’ மேலும் பொறுக்க முடியாதென்பது போல், யீ சின் ஹோ இறுகிய குரலில் உத்திரவிட்டான்.
‘’என்னுடைய மிக வயதான மிகமிக மதிக்கப்படவேண்டிய முதுபெருந் தந்தை தூங்குகிறார்,’’ என்றான், பாக் சுங் சங்.
‘’ஏன் மறைக்கப்பார்க்கிறாய்?’’ திட்டவட்டமாகக் கேட்டான், யீ சின் ஹோ. ‘’இது உன் அப்பாவின் மூக்கு என்று உனக்குத் தெரியும். அவரைக் கொண்டுவா. நான் மூக்கை அறுத்துக்கொண்டு, போய்க்கொண்டேயிருப்பேன். போ, உடனே அழைத்து வா, இல்லையென்றால் உன்னைப்பற்றி நான், மோசமான அறிக்கை அனுப்பவேண்டியிருக்கும்.’’
‘’கருணை வையுங்கள்!’’ பாக் சுங் சங் மண்டியிட்டு அழுதான். ‘’ கூடாது! கூடவே கூடாது! என் அப்பாவின் மூக்கை நீங்கள் அரியக் கூடாது. மூக்கு இல்லாமல் அவர் எப்படி கல்லறைக்குள் செல்வார். அவர் சிரிப்புக்கு இடமாகிவிடுவார். அது சிரிப்பாய்ச் சிரித்து, ஒரு பேச்சுக்கும் இடமாகி விடும். அந்த வேதனை என்னை அல்லும் பகலுமாகக் கொன்றுவிடும். அதிகாரி அவர்களே! உங்கள் பயணம் முழுவதிலுமே அப்படியொரு மூக்கினைக் காணமுடியவில்லையென அறிக்கை அனுப்புங்கள். உங்களுக்கும் தானே ஒரு அப்பா உண்டு.’’

பாக் சுங் சங், யீ சின் ஹோவின் கால் மூட்டுகளைப் பற்றிக்கொண்டு, அவன் காலடிகளில் வீழ்ந்து கண்ணீர் விட்டு அழுதான்.
‘’உன் கண்ணீரைக் கண்டதும் எதனாலோ, என் இதயம் கரைந்து உருகிப்போகிறது,’’ என்றான், யீ சின் ஹோ. ‘’பெற்றோர் மீதான பாசம், அவர்களைப் பேணவேண்டிய கடமை எல்லாமும் எனக்கும் தெரியும். ஆனாலும்....’’ அவன் தயங்குவது போல் சிறிது தயங்கிப் பின்னர் ஆழ்ந்து சிந்தித்துச் சொல்வது போல், ‘’அது என் தலையின் விலைக்குச் சமமானது.’’ என்றன்.
‘’உங்கள்.... தலையின்... விலை... என்ன?’’ மெல்ல, மிகமிக மெதுவாக, இழுத்துக் கேட்டான், பாக் சுங் சங்.
‘’அப்படியொன்றும் விசேஷமான தலை இல்லை,’’ என்றான், யீ சின் ஹோ. ‘’அபத்தமான எந்த விதமான முக்கியத்துவமும் இல்லாத தலை; ஆனால், அது என் முட்டாள் தனம்தான், அது எப்படியானதென்றால், ஒரு இலட்சம் காசு மாலைகளுக்கு ஒன்று கூடக் குறையக் கூடாதது என் தலையென நான் நினைக்கிறேன்.’’

‘’அதுவாகவே இருக்கட்டும்.’’ என்றவாறே, எழுந்தான், பாக் சுங் சங்.

‘’அவ்வளவு காசு மூட்டைகளையும் கொண்டுசெல்ல குதிரைகள் வேண்டும்,’’ என்ற யீ சின் ஹோ, ‘’அதோடு, மலைக்காடுகளின் ஊடாக நான் போக வேண்டியிருக்கிறது. அதனால், காவலுக்கு ஆட்கள் வேண்டும். நாடு முழுக்கக் கொள்ளைக்காரர்கள் பயம் வேறு.’’ என்றான்.

‘’ஆமாமாம். நாடு முழுக்கக் கொள்ளையர்கள் தான்.’’  என்று சோகமாகச் சொன்னான் பாக் சங் சங். ‘’நீங்கள் கேட்டபடி எல்லாமும் தருகிறேன். ஆனால், என்னுடைய மிக வயதான மிகமிக மதிக்கப்படவேண்டிய முதுபெருந் தந்தையின் மூக்கு அதற்கான இடத்தில் விட்டுவிடப்பட வேண்டும்.’’

‘’நடந்தது எதைப் பற்றியும் யாரிடமும் பேசிவிடாதே. மூச்சு கூட விட்டுவிடாதே.’’ என்றான் யீ சின் ஹோ. ‘’இல்லையென்றால், என்னை விடவும் விசுவாசம் மிக்க யாரையாவது அனுப்பி உன் அப்பாவின் மூக்கை அறுத்துக்கொண்டுபோய் விடுவார்கள்.’’

இப்படியாகக் காசுமூட்டைகள் ஏற்றிய அவனது குதிரைகளின் கழுத்து மணிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, இதயம் முழுக்க மகிழ்ச்சியும் பாட்டும் சீட்டியுமாக, யீ சின் ஹோ மலைகளின் ஊடாகச் சென்றான்.

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதைத் தொடர்ந்த வருடங்கள் ஒவ்வொன்றிலும் யீ சின் ஹோ செழித்துக் கொண்டேயிருந்தான். அவனது முயற்சியால், சிறைக் காவலர், சோ-சென் நாட்டுச் சிறைகள் அனைத்துக்குமான இயக்குனர் பதவி வரையிலும் உயர்ந்தார்.; ஆளுநர், அரசரின் மாண்புமிகு பிரதமராக, புனித நகரத்திற்கு, அழைத்துக் கொள்ளப்பட்டார்; யீ சின் ஹோ வளமான வாழ்க்கையில், அரசரின் மிகச்சிறந்த நண்பராக ஆனது மட்டுமல்லாமல்லாமல், அரசருடன் ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்ணும் அளவுக்குப் பெருமை மிகு வாழ்க்கைக்கு அதிபரானார். ஆனால், பாக் சுங் சங், பெருத்த செலவு வைத்த அவரது   மிக வயதான மிகமிக மதிக்கப்படவேண்டிய முதுபெருந் தந்தையின் மூக்கின் நினைவோடு, மிகுந்த துயரத்துடன், அடிக்கடி தலையை வெட்டி இழுத்து அசைத்து, நீர் மிகும் கண்களுடன் காணப்படும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்.

நன்றி :- https://www.gutenberg.org/cache/epub/12336/pg12336.html.  

அடவி சிற்றிதழில் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment