Thursday, 21 January 2016

ஸ்பானியச் சிறுகதை (சிலி) - தொலைபேசி அழைப்பு - Phone Calls By Roberto Bolano

தொலைபேசி அழைப்பு ( Phone Calls ) 

ஸ்பானியம் : இராபர்ட்டோ பொலானோ (சிலி) Roberto Bolano 

ஆங்கிலம் : மார்க் ஸ்கேஃபர்  Mark Schafer 

தமிழில் ச. ஆறுமுகம்.

download (2)இராபர்ட்டோ பொலானோ (28, ஏப்ரல் 1953 – 15 ஜூலை 2003)
மரணம், நிச்சயமென்றபோதிலும், நாம் ஒருபோதும் வாழ்வதை நிறுத்துவதில்லை. அதுபோலத்தான், ஒவ்வொரு புத்தகமும் முடிவுக்கு வருகின்றபோதிலும், வாசிப்பினை நாம், ஒருபோதும் நிறுத்துவதில்லை.
இராபர்ட்டோ பொலானோ
இராபர்ட்டோ பொலானாவை வாசிப்பதென்பது, இரகசியக் கதையைக் கேட்டது போல், குறிப்பிட்ட ஒன்றின் இழை காட்சியாகி, கலை மற்றும் வாழ்க்கையின் பாதைகள் தொடுவானத்தில் இணைவதை, இணைந்து ஒரு கனவு போல் நின்றாடுவதைக் கண்டு, அங்கிருந்து நாம் விழித்தெழுந்து உலகத்தினை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவதாகும்.
– ப்ரான்கைன் ப்ரோஸ் (நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ)
*****


`பி` `எக்ஸ்` மீது காதலாகவே இருக்கிறான். அது ஒரு துரதிர்ஷ்டமான காதல்தான். காதலிக்கும் ஒவ்வொருவரும், நினைப்பது மற்றும் சொல்வது போலவே சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, `பி`யும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் `எக்ஸ்`சுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான். `எக்ஸ்` அவனிடமிருந்து துண்டித்துக் கொள்கிறாள்; ஆம், தொலைபேசி மூலமாகவே அவனிடமிருந்து துண்டித்துக்கொள்கிறாள். `பி` முதலில், உளைச்சலில் தான் இருக்கிறான். ஆனால், பின்னால், எல்லாவற்றையும் போலவே அதனையும் கடக்கிறான். ஆண்டுகள் பலவும் கடக்கின்றன.
செய்வதற்கு வேலையொன்றும் இல்லாத, ஒரு இரவில், இரண்டே தொலைபேசி அழைப்புகளில் `பி` `எக்ஸ்`சுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான். இருவரில் எவருமே இளமையாக இல்லை என்பதை ஸ்பெயினின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லையைக் கூடக் கடந்துவிடும் அவர்களது குரலிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். அவர்களது நட்பு மறுபடியும் பிறப்பெடுக்கிறது; சில நாட்களுக்குப் பின், அவர்கள் நேரில் சந்திப்பதெனத் தீர்மானிக்கின்றனர்.

இருவருமே மணவிலக்கு, புதிய நோய்கள், விரக்தி எனப் பலவற்றையும் சுமக்கின்றனர். எக்ஸின் நகரத்துக்குச் செல்லும் தொடரியில் ஏறும்போதுகூட, `பி`க்கு காதல் இல்லைதான். எக்ஸின் வீட்டிற்குள்ளேயே முதல் நாள் முழுவதும் அடைபட்டுக்கொண்டு அவரவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றனர். (உண்மையில் `எக்ஸ்` தான் பேசுகிறாள்; `பி` கவனித்துக் கேட்டு, அவ்வப்போது கேள்வி கேட்கிறான்.) இரவில் தன்னுடன் படுத்துக்கொள்ளுமாறு `எக்ஸ்` அழைக்கிறாள். எக்ஸுடன் படுக்கும் ஆர்வம் ஒன்றும் உள்ளூற இல்லையென்றாலும், அவன் ஒப்புக்கொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது `பி` மீண்டும் காதல்வயப்படுகிறான். ஆனால், அவன் எக்ஸ் மீது காதல்கொள்கிறானா அல்லது காதல்வயப்படுவது என்ற சிந்தனை மீது காதல்கொள்கிறானா? அவர்களுக்கிடையிலான உறவு சிக்கலாக இருந்தாலும், அது உணர்வு பூர்வமாக ஆழமாகிறது. நாளுக்கு நாள் எக்ஸ் தற்கொலையின் விளிம்புக்கே செல்கிறாள் – மாத்திரைகள், அவளுக்கு எந்தவிதத்திலும் உதவாத ஏராளமான பலவகை மாத்திரைகள் என மனநலச் சிகிச்சையிலிருக்கிறாள். அவள் அடிக்கடி அழுகிறாள்; எந்தக் காரணமும் இல்லாமலேயே அழுகிறாள். அதனால் `பி` எக்ஸுடனிருந்து, அவளைப் பார்த்துக்கொள்கிறான்.

அவன் அவளைக் கனிவுடன், மிகுந்த அக்கறையுடன், ஆனாலும் கூடவே அருவருப்பாகவும்தான் பார்த்துக்கொள்கிறான். அவனுடைய சேவைப்பணிகள் என்னவோ உண்மையாகக் காதல்கொண்ட நபரைப் போன்றதாகவே தோன்றுகின்றன. `பி` அதனை மனத்தாலேயே உணர்கிறான். மன அழுத்தத்திலிருந்தும் அவளை வெளியே கொண்டுவர அவன் முயற்சிக்கிறான்; ஆனால் அது, இன்னும் பாதாளத்திற்கு, அல்லது அதலபாதாளமென அவன் கருதியதொரு ஆழத்திற்கு அழுத்துவதில்தான் போய் முடிகிறது. அவன் தனியாக இருக்கும்போது அல்லது `எக்ஸ்` தூங்குவதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் எல்லாமே அதனதன் முடிவுக்குச் சென்றுவிட்டதாகவே உணர்கிறான். அதனை மாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக, அவனது இழந்த காதல்களை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறான்; எக்ஸ் இல்லாமலே, அவனால் தனியாக வாழமுடியுமெனத் தனக்குத்தானே நம்பிக்கை கொள்ள முயல்கிறான்.

ஒரு நாள் இரவில் எக்ஸ் அவனை வெளியேறச் சொல்கிறாள்; `பி`யும் தொடரியைப் பிடித்து நகரத்தை விட்டுப் புறப்படுகிறான். அவனை வழியனுப்ப `எக்ஸ்` தொடர்வண்டி நிலையத்திற்கு வருகிறாள். அவர்களது பிரியாவிடை பாசம் மிக்கதாகத் தாங்கொணாத் துயரம் மிக்கதாக இருக்கிறது. படுக்கை வசதிப் பெட்டியிலேயே `பி` பயணித்தும் வெகுநேரம் வரையில் அவனால் தூங்க இயலாமலாகிறது. கடைசியில் அவன் தூங்கும்போது, பனியில் உருவாக்கப்பட்ட ஒரு குரங்கு பாலைவனத்தில் நடந்துசெல்வதாக ஒரு கனவு காண்கிறான். குரங்கின் பாதை அடைபட்டு, அநேகமாகத் தோல்வி தென்படுகிறது. ஆனால், குரங்கு அதனை அலட்சியப்படுத்தவே விரும்புகிறது; அதன் தந்திரமே அதன் உறுதியாக மாறுகிறது. உறைந்த நட்சத்திரங்களே சாட்சியாக, அது, அந்தப் பாலையில் இரவெல்லாம் நடக்கிறது. அவன் கண்விழித்தபோது, (இப்போது அவன் பார்சிலோனாவின் சான்ட்ஸ் தொடர்வண்டி நிலையத்திலிருக்கிறான்.) அவனது கனவின் பொருளைப் புரிந்துகொள்வதாக, (அப்படியொன்று இருந்தால்) அவன் நம்புவதோடு, தன் பாதையே சரியெனத் தன்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறான்.

அன்று இரவு அவன் எக்ஸை அழைத்து, அவன் கண்ட கனவினைச் சொல்கிறான். எக்ஸ் எதுவுமே சொல்லவில்லை. அடுத்த நாள் அவன் மீண்டும் எக்ஸை அழைக்கிறான். அடுத்த நாளும் அழைக்கிறான். ஒவ்வொரு அழைப்பிலும் `பி` நேரத்தை வீணடிப்பது போல, எக்ஸின் நடவடிக்கைகள் இறுகிச் சுழியும் முகத்தைக் காட்டுகின்றன. நான் மறைந்துகொண்டிருக்கிறேன். அவள் என்னைத் துடைத்து, அழித்துக்கொண்டிருக்கிறாள், என `பி` நினைக்கிறான்.

அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளென்றும், ஏன் அப்படிச் செய்துகொண்டிருக்கிறாளென்றும் அவன் அறிவான். ஒரு நாள் இரவில், தொடரியைப் பிடித்து, மறுநாள் அவள் வாசலில் நிற்பதாக, `பி` எக்ஸை மிரட்டுகிறான். அந்தமாதிரி நினைப்புகளையெல்லாம் உன் மனத்திலிருந்து அழித்துவிடு என்கிறாள், எக்ஸ். நான் வந்தே விடுவேன். இனிமேலும் இந்தத் தொலைபேசிகளை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது, நான் பேசும்போது, எனக்கு, உன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிறான், `பி`. நீ வந்தால், நான் கதவைத் திறக்கவே மாட்டேன், எனச் சொல்கிற எக்ஸ் ஒலிவாங்கியை அப்படியே தொங்கலில் விடுகிறாள். `பி`க்கு ஒன்றினை மட்டும் விளங்கிக்கொள்ள இயலவில்லை. மிக நீண்ட காலமாக, அவன் நினைக்கிறான், ஒரு மானிடப் பெண்ணால், அவளது ஆசைகளை, அவளது உணர்வுகளை ஒரு உச்சத்திலிருந்து அதன் எதிர் உச்சத்திற்கு எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது? பின்னர் அவன் குடிபோதையில் ஆழ்ந்து, ஒரு புத்தகத்தில் ஆறுதலைத் தேட முயல்கிறான். நாட்கள் நகர்கின்றன.
ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின், ஒரு நாள் இரவில், `பி` தொலைபேசியில் எக்ஸை அழைக்கிறான். அவனது குரலை எக்ஸ் உணர்ந்துகொள்ளச் சிறிது நேரம் பிடிக்கிறது. ஓ, நீதானா, என அவள் சொல்கிறாள். அவன் மயிர்க்கால்களைக் குத்திடச் செய்வதற்கு, அந்த அலட்சியமே போதுமானதாக இருக்கிறது. என்றாலும், எக்ஸ் எதையோ அவனிடம் சொல்லவிரும்புவதாக அவன் நினைக்கிறான். நேற்றுத்தான் பேசியது போல, நேரம் போவதே தெரியாதது போல, அவள் கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் நினைக்கிறான். எப்படியிருக்கிறாயெனக் கேட்கிறான், `பி.` ஏதாவது பேசு, என்கிறான்.

ஓரசைச்சொற்களிலயே பதில் சொல்கிற எக்ஸ் சிறிது நேரத்துக்குப் பின் ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறாள். திகைத்துக் கடுப்பேறிய `பி` எக்ஸின் எண்ணுக்கு மீண்டும் சுழற்றுகிறான். எனினும், இணைப்பு கிடைத்தபோது, `பி` எதுவும் பேசாமலிருக்கவே விரும்புகிறான். மறுமுனையில் எக்ஸின் குரல் கேட்கிறது : ஹலோ, ஹலோ, யாரு? அமைதி. பின்னர் அவள் ஹலோ சொல்வதோடு அமைதியாகிறாள். எல்லாம், நேரம் – நேரம் தான் பியையும் எக்ஸையும் பிரித்தது. `பி`யால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை – தொலைபேசி இணைப்பு வழியாகக் கடக்கின்ற நேரம், இணைப்பின் தன்மையைக் காட்டும் விதமாக அழுத்தமாகி, நீண்டு கிடந்தது. `பி` அதை உணர்ந்துகொள்ளாமல், அழத் தொடங்குகிறான். அழைப்பது யாரென எக்ஸ் அறிவாள் என்பது `பி`க்குத் தெரியும். பின்னர், அவன் அமைதியாக, ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறான்.
இந்தக் கட்டம் வரையிலும், இது நன்குதெரிந்த ஒரு கதைதான் – சோகமானதென்றாலும் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். மேற்கொண்டு எக்ஸை ஒருபோதும் அழைக்கக்கூடாது என்பது `பி`க்குப் புரிகிறது. ஒருநாள், அவனது வாசற்கதவு தட்டப்படும் ஓசை அவனுக்குக் கேட்கிறது. அங்கே `ஏ`யும் `இசட்`டும் நிற்கின்றனர். அவர்கள் காவல்துறைப் பணியிலிருக்கும் காவலர்கள்; அவர்கள் அவனைச் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர். என்ன காரணமென `பி` கேட்கிறான். அதைச் சொல்வதற்கு `ஏ` தயாராக இல்லை. அருவருப்பாகச் சுற்றிவளைத்த பின், `இசட்` விவரிக்கிறான். ஸ்பெயினின் மறுமூலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் எக்ஸை யாரோ ஒருவர் கொலை செய்திருக்கிறார்.

முதலில், `பி` நிலைகுலைந்துவிட்டான்; பின்னர், அவனும் கூட, ஒரு சந்தேகத்திற்குரிய நபர் என்பதை உணர்கிறான்; உயிர்வாழும் இயல்பூக்கம் அவனை எச்சரிக்கைகொள்ளவைக்கிறது. காவலர்கள் குறிப்பான இரண்டு நாட்கள் பற்றி அவனைக் கேள்விகள் கேட்கின்றனர். அந்த இரண்டு நாட்களில் யார், யாரைப் பார்த்தான், என்னென்ன செய்தான் என்று `பி`க்கு ஞாபகம் இல்லை. அவனுக்குத் தெரியும் – எப்படித் தெரியாமலிருக்கமுடியும் – அவன் பார்சிலோனாவை விட்டு அகலவில்லை. உண்மையில் அவன், ஊரகப் பகுதியைவிட்டு, அவ்வளவுக்கு ஏன், வீட்டைவிட்டுக்கூட வெளியேறவில்லை; ஆனால், அதை அவனால் நிரூபிக்க இயலாது. காவல்துறை அவனைப் பிடித்துச் செல்கிறது.

காவல்நிலையத்திலேயே `பி` இரவைக் கழிக்கிறான். விசாரணையின் ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை எக்ஸின் நகரத்துக்கு அழைத்துச் செல்வார்களோவென்றும், அதன் சாத்தியக்கூறு, அவனுக்கு வினோதமான ஒரு மருட்டலாகவும் தோன்றியது; ஆனால், கடைசியில், அது நிகழவில்லை. அவர்கள் அவனுடைய கைரேகை அடையாளங்களை எடுத்துக்கொண்டதுடன் இரத்தப் பகுப்பாய்வு செய்வதற்கு அனுமதியும் கோரினர். `பி` ஒப்புக்கொண்டான். அடுத்த நாள் காலையில் அவர்கள் அவனை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். அலுவல்பூர்வமாக, `பி` கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கினை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, அவன் காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.

வீட்டிற்கு வந்ததும், `பி` படுக்கையில் விழுந்து, உடனேயே அயர்ந்து தூங்குகிறான். அவன் பாலைவனம் மற்றும் எக்ஸின் முகம் பற்றி, கனவுகள் காண்கிறான். விழிப்பதற்கு முன், அவை இரண்டும் ஒன்றே எனப் புரிந்துகொள்கிறான். அவன் அந்தப் பாலைவனத்தில் தொலைந்துபோனதான முடிவுக்கு வருவதில் அவனுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.
அன்று இரவில், அவன் சில ஆடைகளை பயணப்பையில் திணித்துக்கொண்டு, தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்று, கடைசிச் செல்லிடமாக எக்ஸின் நகரத்திற்கே செல்கின்ற தொடரியைப் பிடிக்கிறான். ஸ்பெயின் நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலுமான அந்த முழு இரவுப் பயணத்தின் போது, அவனால் தூங்கவே முடியவில்லை. எக்ஸுக்கு அவனால் கொடுக்க முடிந்திருக்கிற அனைத்தைப்பற்றியும், ஆனாலும் கொடுக்காமலிருந்ததைப்பற்றியும், அவனால் என்னவெல்லாம் செய்யமுடிந்திருக்குமென்பது பற்றியும், ஆனாலும் செய்யாமலிருந்தது பற்றியும் நினைத்துக்கொண்டே, நேரம் முழுவதையும் கழிக்கிறான்.

மேலும் அவன் நினைக்கிறான்: நான் இறந்த எக்ஸாக இருந்திருந்தால், இந்தப் பயணத்தை வேறு திசையில் மேற்கொண்டிருக்கமாட்டேன். மேலும் அவன் நினைக்கிறான்: அதுவேதான், நான் எப்படி இப்போதும் உயிரோடிருக்கிறேன் என்பதற்குத் மிகத்துல்லியமான பதிலாகும். தூக்கமற்ற அந்தப் பயணத்தில், அவன், கடைசி முறையாக, விருப்பமில்லாமலே, எக்ஸ் முதன்முதலாக எப்படித் தோற்றமளித்தாளோ, அதனை அப்படியே மனக்காட்சியாகப் பார்க்கிறான்; அவன் மீண்டும் அவள் மீதான காதலை உணர்கிறான்; தன் மீது வெறுப்பு கொள்கிறான். அதிகாலையிலேயே வந்துசேர்ந்துவிட்ட அவன், நேராக எக்ஸின் உடன்பிறந்தான் வீட்டுக்குச் செல்கிறான். எக்ஸின் உடன்பிறந்தான் வியப்புடன் குழப்பமுமடைந்தாலும், அவனை வரவேற்றதோடு, காபி சாப்பிடுமாறு உபசரிக்கத் தவறவில்லை.

அவன் அப்போதுதான் எழுந்து, முகம் கழுவியிருந்தான்; அரை ஆடையிலேயே இருந்தான். அவன் குளித்திருக்கவில்லையென்பதை `பி` கவனிக்கிறான். அவன் முகத்தை மட்டுமே கழுவிவிட்டு, தலையில் தண்ணீரைத் தெளித்துத் தடவியிருக்கிறான். அவனது காபி யோசனையினை `பி` ஏற்றுக்கொள்கிறான்; பின்னர், அவன், எக்ஸின் கொலை குறித்து அப்போதுதான் தெரியவந்ததாகவும், காவல்துறையினர் அவனை விசாரித்ததாகவும், அதனால் என்ன நடந்ததென்று அவனுக்குச் சொல்லவேண்டுமென்பதற்காகவே, வந்ததாகவும் சொல்கிறான். அது பயங்கரமான துயரம்தான். ஆனாலும் இதிலெல்லாம் நீங்கள் என்ன செய்துவிட முடியுமென்றுதான் நான் நினைக்கிறேனென்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான், சமையலறையில் காபி தயாரித்துக்கொண்டே.

நான்தான் கொலைசெய்திருப்பேனோ, என காவல்துறைக்குச் சந்தேகம், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் சிரிக்கிறான். உங்களுக்கு எப்போதுமே துரதிர்ஷ்டம் தான் என்று அவன் சொல்கிறான். நான்தான் உயிரோடிருக்கிறேனே, அப்படியும், அவன் அப்படிச் சொல்வது வேடிக்கைதானென `பி` நினைக்கிறான். ஆனால், அதே நேரத்தில், எக்ஸின் உடன்பிறந்தான் தன்னைச் சந்தேகிக்கவில்லையென்பதற்காக அவன் மீது நன்றிகொள்கிறான். பின்னர், எக்ஸின் உடன்பிறந்தான் வேலைக்குச் செல்கிறான். `பி` வீட்டிலேயே இருக்கிறான். சிறிது நேரமானதும் சோர்வடைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் விழுகிறான். எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே, `எக்ஸ்` அவன் கனவில் தோன்றுகிறாள்.
விழித்தபோது, கொலைகாரனைத் தனக்குத் தெரியுமென அவன் நினைக்கிறான். அவன் முகத்தை, `பி` பார்த்திருக்கிறான். அன்று இரவு, அவன் எக்ஸின் உடன்பிறந்தானோடு வெளியே செல்கிறான். அவர்கள் மதுவகங்களுக்குச் சென்று ஒன்றுமில்லாத, பொதுவான சில விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால், போதை வேண்டுமென்று எவ்வளவுதான் அதிகம் சிரமப்பட்டு, அதிகம் குடித்தாலும் போதை ஏறவில்லை.

வீட்டுக்குச் செல்வதற்காக, ஆளரவமற்ற தெருக்களில் அவர்கள் நடக்கும்போது, ‘’ஒருமுறை எக்ஸைத் தொலைபேசியில் அழைத்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டதாக, `பி` அவனிடம் சொல்கிறான். நாய்க்குப் பிறந்தவனே, என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். நான் அப்படி ஒரே ஒருமுறைதான் செய்தேன், ஆனால், அதுபோன்ற அழைப்புகள் எக்ஸுக்கு அடிக்கடி வருகின்றன என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஆனால், அது நான்தானென எக்ஸ் நினைத்தாள். என்கிறான், `பி`. நான் பேசுவதைக் கேட்கிறாயா? என்கிறான் `பி`. அந்தப் பெயர் தெரியாத அழைப்பாளிதான் கொலைகாரனா? எனக் கேட்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். அவனேதான்! ஆனால், அது நான்தான் என்று எக்ஸ் நினைத்தாள், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் கடுகடுத்தான்.

அவளுடைய பழைய காதலர்களில் ஒருவன்தான் கொலைகாரனென்றல்லவா நான் நினைத்தேன். அவளைப் பெண் கேட்டு, நிறையப் பேர் வந்தனர், என்கிறான், அவன். பதிலெதுவும் சொல்லாமலிருப்பதே நல்லதென்று (எக்ஸின் உடன்பிறந்தான், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்று தோன்றுகிறது) நினைக்கிறான். `பி`. வீடு சேரும்வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
மின்னேற்றியில் செல்லும்போது, வாந்தியெடுக்கவேண்டும் போல பி உணர்கிறான். வாந்தியெடுக்கப் போகிறேன், என்கிறான், அவன். கொஞ்சம் பொறுத்துக்கொள், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். பின்னர், அவர்கள் அறைக்கூடத்தில் விரைந்து கடக்க, எக்ஸின் உடன்பிறந்தான். கதவைத் திறக்கவும், அம்பு போலக் குளியலறை நோக்கிப் பாய்ந்தான், `பி`. ஆனால், அங்கு சென்றதும் வாந்தி வரவில்லை; வாந்தியெடுக்கவும் தோன்றவில்லை. அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது; வயிறு வலிக்கிறது; ஆனால் வாந்தியெடுக்க முடியவில்லை.

கழிப்பறைக் கோப்பையின் மூடி உயர்ந்து திறந்திருக்க, அது, அவனுக்குப் பொக்கை வாய் ஒன்று, ஈறுகளைக் காட்டிக் கேலியாகச் சிரிப்பது போலிருக்கிறது. முகத்தைக் கழுவியபின், கண்ணாடியில் பார்க்கிறான்: முகம் வெற்றுக் காகிதம் போல வெளுத்துப் போயிருக்கிறது. அந்த மீதி இரவில் அவனால் தூங்கவே முடியவில்லை. வாசிக்க முயற்சித்துக்கொண்டும், எக்ஸின் உடன்பிறந்தான் குறட்டை விடுவதைப் பார்த்துக்கொண்டும் நேரத்தைக் கடத்துகிறான். அடுத்த நாள் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விடைபெறும் நல்வாழ்த்து சொல்கின்றனர். `பி` பார்சிலோனாவுக்குப் புறப்படுகிறான். ‘’இங்கே எக்ஸ் இல்லை; அதனால் இந்த நகரத்திற்கு இனிமேல் எங்கே வரப்போகிறேன்? வரப்போவதேயில்லையென அவன் நினைக்கிறான்
ஒரு வாரத்திற்குப் பின்னர், காவல்துறையினர் கொலைகாரனைப் பிடித்துவிட்ட தகவலைச் சொல்வதற்காக எக்ஸின் உடன்பிறந்தான் அவனை அழைக்கிறான். அந்த ஆள், தொலைபேசி மூலம் எக்ஸைப் பெயர்சொல்லா அழைப்புகளால் அலைக்கழித்துத் தொல்லைப்படுத்தியிருக்கிறான் என்கிறான், உடன்பிறந்தான். `பி` பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு பழைய காதலன், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். இதைக் கேட்டதில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி, என்கிறான், `பி`. என்னை அழைத்துச் சொன்னதற்கு நன்றி. பின்னர் எக்ஸின் உடன்பிறந்தான் ஒலிவாங்கியைத் தொங்கலில் வைத்தான். `பி` தன்னந்தனியாக இருக்கிறான்.

•••

From Grand Street 68, in memory of Roberto Bolaño, 1953-2003 
மலைகள் இணைய இதழ் நவம்பர் 03, 2015 இதழ் எண் 85 இல் வெளியானது.

No comments:

Post a Comment