Friday, 8 January 2016

போலிஷ் சிறுகதை - சிங்கம், ஒரு நீதிக்கதை - Slawomir Mrozek

சிங்கம் – ஒரு நீதிக்கதை  –    The Lion – A Moral Tale – ஸ்லாவோமிர் மிரோஜெக் (போலிஷ்) - Slawomir Mrozek ஆங்கிலம் : எய்ன்ட் ஓ கல்லகன் ( Einde O’Callaghan ) தமிழில் ச. ஆறுமுகம்  

download (4)

ஸ்லாவோமிர் மிரோஜெக் போலந்து நாட்டைச் சேர்ந்த நாடகவியலாளர், புனைகதைப் படைப்பாளர் மற்றும் கேலிச்சித்திரக்காரர் ஆவார். 1930, ஜூன் 29 ல் பிறந்த இவர், 83 ஆம் வயதில் 2013, ஆகஸ்ட், 15 அன்று மறைந்தார்.
போலந்து மக்கள் குடியரசின் பொதுவுடைமை ஆட்சியின்போது, போலந்து ஐக்கிய தொழிலாளர் கட்சியில் இணைந்து அரசியல் செய்தியாளராக வாழ்க்கை நடத்தினார். 1963 ல் பொதுவுடைமைக் கட்சியிலிருந்தும் வெளியேறிய இவர் 1950 லேயே நாடகங்கள் எழுதத் தொடங்கினார். இவரது நாடகங்கள், அரசியல் மற்றும் வரலாற்றுத் தரவுகள், திரிபுகளுடன் யதார்த்தமற்ற தன்மையும் எள்ளல்களும் கலந்து பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உட்படுத்தும் `அபத்தப் புனைவுகள்` (absurdist fiction) வகைப்பட்டவை.
இச்சிறுகதை வெளியாகியுள்ள இவரது The Elephnt சிறுகதைத் தொகுதியில் 42 கதைள் உள்ளன. அனைத்துமே அரசியல் எள்ளலும் சமூக விமர்சனக் கிண்டலுமான உருவகக் கதைகள்.
********

சீசர் கையைக் காட்டினான். கூண்டின் வாயிற்கதவு மேலாக உயர்ந்தது. இருண்ட குகைக்குள்ளிருந்து இடியைப் போன்ற முழக்கம் எதிரொலித்தது. அரங்கத்தின் மையத்தில் நின்ற கிறித்துவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிக் கைகளைக் கோர்த்துக்கொண்டனர். கூட்டம் நன்கு பார்ப்பதற்கு வசதியாக எழுந்து நின்றது. மாபெரும் பனிப்பாறை  வீழும் கனத்த சத்தம் – என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்ற  எதிர்பார்ப்பில் எழுந்த ஆழப்பெருமூச்சுகளும் அச்சத்தின் கூக்குரல்களும் பரவிச் சூழ்ந்தது. மிகுந்த வேகம் கொண்ட முதல் சிங்கம், அதற்கு இசைவாக இயங்கும் உடலோடு அரங்கத்தில் குதித்தது. விளையாட்டு தொடங்கியது.
சிங்கக் காப்பாளன் போன்டனி கையஸ் நீண்ட கம்பும் கையுமாக, எல்லா விலங்குகளையும் களமிறக்குவதில் குறியாக நின்றான். அவன் `அப்பாடா` என நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிடும் நேரத்தில், கடைசிச் சிங்கம் மட்டும் அரங்கத்தில் குதிக்காமல், குகை வாயிலில் அமைதியாக அமர்ந்துகொண்டதோடு, காரட் ஒன்றை ருசித்துச் சுவைக்கவும் தொடங்கியது. கையஸ் வசவுகளைப் பொழிந்தான். எல்லா விலங்குகளையும் களத்திலிறக்குவது அவன் கடமையில்லையா, என்ன? அவன் அதனருகில், ஆனால், உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்புக்காகப் பணிவிதிகள் அனுமதிக்கும் குறைந்தளவு தூரத்தில் எட்டி, சிங்கத்தின் பின்னால் நின்று கையிலிருந்த நீளக்கம்பால்  குத்திக்குத்தி, அதை எழுப்பிவிடத் தூண்டினான். ஆனால், அதுவோ, ஆச்சரியப்படும்படியாகச் சுற்றிலும் ஒரு நோட்டமிட்டுப் பார்த்துவிட்டு அமைதியாக வாலைக் குழைத்தது. கையஸ் மீண்டும் கொஞ்சம் வலுவாகக் குத்தி எழுப்ப முயற்சித்தான்.
‘’ஷ்ஷூ, சும்மாயிரு’’ என்றது சிங்கம்.
கையஸ் தலையைச் சொறிந்தான். சிங்கம் அடியையோ வசவுகளையோ விரும்பவில்லையென்பதைத் தெளிவாகவே காட்டியது. கையஸ் ஒன்றும் மோசமான வேசிமகன் இல்லை. ஆனாலும் மேற்பார்வையாளன் பார்த்துத் தொலைத்துவிட்டால், வேலையில் அசட்டையென்று சொல்லி அரங்க மையத்தில் கிறித்துவர்களோடு கொண்டு போய் நிறுத்திவிடுவான். மேலும் சிறிது முயற்சிப்பதென அவன் தீர்மனித்தான்.
‘’நீ இதை எனக்காகச் செய்துதான் தீர வேண்டும்’’ என்றான் சிங்கத்திடம்.
‘’என்னைக் கழுதையென்று நினைத்துவிடாதே,’’ என்றது சிங்கம், காரட் சுவைப்பதை நிறுத்தாமலேயே.
போன்டனி குரலைத் தாழ்த்திக்கொண்டான். ‘’நீ ஒன்றும் யாரையும் தின்ன வேண்டாம். ஆனால், உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது, அது மாதிரி சும்மா, நடித்துக் காட்டேன்,’’. சிங்கம் திரும்பித் தன் வாலை, விழித்து நோக்கியது.
‘’இங்கே பார், கிழவா, நானொன்றும் முட்டாள் அல்ல. அவர்கள் எல்லோரும் தான் பார்ப்பார்கள்; மறந்து விடுவார்களா என்ன? நான் யாரையுமே சாப்பிடவில்லையென்று சொன்னால், பிற்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.’’
காப்பாளன் களைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், சிறிது வருந்தும் குரலில் கேட்டான். ‘’ என்ன இழவுக்குத் தான் இப்படி அடம் பிடிக்கிறாய்?’’
சிங்கம் சிந்தனை நோக்கோடு அவனை நேருக்கு நேராக அவன் கண்களில் பார்த்தது.
‘’உன்னைக் காப்பாற்றிக்கொள்ளவாவது’’ என்றாயில்லையா? இந்த ரோமாபுரிக் கோமான்கள் இறங்கி வந்து, அவர்களே இந்தக் கிறித்துவர்களைத் தின்ன வேண்டியதுதானே? ஏன் எங்களைத் தின்னச் சொல்கிறார்கள்?’’
‘’அது எனக்குத் தெரியாது. அவர்கள்  எல்லோருக்குமே மிகவும் வயதாகிவிட்டது…. போதாக்குறைக்கு ஆஸ்துமா வேறு …. உடம்பும் அவ்வளவுக்கு வளையாது…….’’
‘’ஆமாமா, ரொம்பத்தான் கிழவன்கள்!’ சிங்கம் இகழ்ச்சியும் சினமுமாக வார்த்தைகளைத் துப்பியது.
‘’உனக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் தங்கைளத் தற்காத்துக்கொள்கிறார்கள்.’’
‘’அது சரி, யாரிடமிருந்து?’’
 ‘’எதுவும் மாறி, எப்படியுமாகலாம் என்ற விதியிலிருந்து. வரலாற்றில் ஒருவன் எப்போதுமே மாற்றத்தின் செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். இந்த கிறித்துவர்களும் ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்று உனக்குத் தோன்றவேயில்லையா?
‘’அவர்களா? ஆட்சிக்கா?’’
‘’ஒருவிதத்தில் சரிதான். ஆனால், நீ வரிகளுக்கிடையில் வாசிக்கப் பழக வேண்டும். இன்றோ, நாளையோ என்றோ ஒருநாள், கிறித்துவர்களோடு, ரோமானியச் சக்கரவர்த்தி,  கான்ஸ்டன்டைன் தி கிரேட் சமரசமாகப் போவார். அப்புறம் என்னவாகும்? மறுவிசாரணை, வழக்கு, இழப்பீடு, மறுவாழ்வு என்று எல்லாமும். இன்றைக்கு மேடையில் இருப்பவர்கள் எல்லோருமே கையை விரித்துவிடுவார்கள். மிகவும் எளிதாகச் சொல்வார்கள், நாங்கள் எதுவும் செய்யவில்லை, எல்லாம் அந்தச் சிங்கங்கள்தான், என்று.’’
‘’உண்மையில் நான் இப்படியெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை.’’
‘’அதனால்தான் சொல்கிறேன், ஆனால், நானொன்றும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, என்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வதென்றுதான் பார்க்கிறேன். அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால், எல்லோருக்கும் தெரியும், நான் இங்கே தனியாக உட்கார்ந்து காரட் மட்டுந்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேனென்று. அப்புறம், மற்றொன்று, இது நமக்குள் மட்டும், அவர்கள் இரத்தத்தை விரும்பிச் சுவைக்கிறார்கள்.’’
‘’உன் நண்பர்கள், கிறித்துவர்களைப் பிறாண்டிப் பிறாண்டித் தின்றாலும், அவர்கள் தான் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.’’ என்றான், கையஸ் சிறிதும் இரக்கமின்றி.
சிங்கம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டது.
‘’அடிமைகள். அவர்களது மூக்குக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதைக்கூட அறியமாட்டாதவர்கள். அவர்கள் எதனோடு வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள். தந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. தொலை தூரக் கிராமங்களின் விவசாயிகள்.’’
‘’நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்…’’ திக்கித் திணறினான், கையஸ்.
‘’ம், சொல்லு, என்ன?’’
‘’கிறித்துவர்கள் ஒரு வேளை எப்போதாவது ….சரி, நல்லது…’’
‘’என்ன, நல்லது?’’
‘’இல்லை, நல்லது, அவர்கள் எப்போது அதிகாரத்துக்கு வந்து….?’’
‘’சரி?’’
‘’எது வேண்டுமானாலும் நடக்கலாமென்று நீ சொல்லவில்லையா? நானொன்றும் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை.’’
ஒருவரின் மிக முக்கிய கடமை நாட்டைப் பாதுகாப்பதுதான், நாட்டின் பாதுகாப்புக்கும் மேலானது எதுவுமில்லை.’’ எனத் தலையை நிமிர்த்திச் சொல்லிவிட்டு, மீண்டும் காரட்டைத் தின்னத் தொடங்கிவிட்டது.
மலைகள் இணைய இதழ்  அக்டோபர் 17 2015இதழ் 84 இல் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment